புதிய காவியம் - சினிமா விமர்சனம்

28-12-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டிஜிட்டல் யுகத்தில் செய்யப்பட்டிருக்கும் புது முயற்சிகளில் இதுவும் ஒன்று..! 

வேலை வெட்டியில்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோ. இந்த ஹீரோவை லவ்வும் ஒரு ஹீரோயின்.. வழக்கமான கரித்துக் கொட்டும் அப்பா.. வாய்ப்பந்தல் போட்டே ஊரை ஏமாற்றும் வில்லன்.. மாற்று விவசாய முறையைக் கையாண்டு பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு கும்பல்.. விவசாயத்தை அழிக்க நினைக்கும் மரபணு விதைகளை எதிர்க்கும் ஒரு பேராசிரியர்.. இவர்களைச் சுற்றியே வருகிறது கதை..!


மரபணு விதைகளை எதிர்க்கும் பேராசிரியர் ஊருக்குள் வந்த அன்றே தூக்கில் தொங்குகிறார். அந்த ஊரில் இருக்கும் சிலரது விளைநிலங்களை அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் விஞ்ஞானி ஒருத்தர் பணத்தைக் கொடுத்து வாங்கி அதில் எதையோ செய்திருக்கிறார். அவர் செய்யும் ஆராய்ச்சினால் அந்த மண் பாழாய்ப் போகப் போகிறது என்பதை சொல்லத்தான் பேராசிரியர் அந்த ஊருக்கு வந்ததாக ஹீரோவுக்குத் தகவல் தெரிகிறது.. எப்படியாவது உண்மையை ஊராரிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். வில்லன் பணத்தைக் கொடுத்தே ஊராரை ஏமாற்ற.. ஒரு நாள் உண்மை அம்மக்களுக்கே தெரிய வருகிறது.. பின்பு என்ன என்பதுதான் கதை..!

திலீப் என்ற புதுமுகம் ஹீரோ. தன்னால் இயன்ற அளவுக்கு நடித்திருக்கிறார். ஜானவி என்ற புதுமுகம் ஹீரோயின். ஹீரோ முன்னால் பல்லைக் காட்டுவதும், ஸ்கிரீன் முன்பாக சிரிப்பதுமாக கடைசிவரையிலும் வந்து போய்க் கொண்டிருக்கிறார். ரொம்ப நாள் கழித்து பாவாடை, தாவணியில் ஒரு ஹீரோயினை கடைசிவரையில் பார்த்த திருப்தி மட்டுமே கிடைத்தது..!

காமெடிக்கு அல்வா வாசு.. 45 வயசாகியும் கல்யாணமாகவில்லையே என்ற இவரது கவலையை வைத்து தனித் தனி டிராக்கில் காமெடியை சுட்டிருக்கிறார்கள். இதுவும் ரொம்பப் பழசுதான்..! எதுவும் மனதில் ஒட்டவில்லை..!


விவசாய மண்ணை பாழாக்கும் விவசாய முறைகளை எதிர்த்து நிறைய பேசப்பட்டிருக்க வேண்டிய இப்படம், இடையிடையே காதல், பாசம் என்று ரவுண்டடிக்க போய் கோட்டை விட்டிருக்கிறது..! இறுதிக் காட்சியில் மட்டுமே மக்கள் பார்த்து கொதித்தெழுவதோடு படத்தை முடித்திருக்கிறார்கள். அதில் இருக்கும் தீமைகளைப் பற்றியும் கொஞ்சம் எடுத்துச் சொல்லியிருந்தால் படத்திற்கு ஒரு கனமாவது கிடைத்திருக்கும். இத்தனைக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரையெல்லாம் அழைத்து வந்திருந்தார்கள்..! அவரும் அப்போது இது குறித்து விளக்கமாக பேட்டி கொடுத்துவிட்டுத்தான் போனார்..! ஆனால் படத்தில்தான் சொதப்பிவிட்டார்கள்..!

தஷியின் இசையில் 2 பாடல்கள் கேட்கும் நிலையில் இருந்தும் பாடல் காட்சிகளைப் பார்த்து வெறுப்பாகிவிட்டது..! டிஜிட்டலே என்றாலும் வழக்கு எண் படம் போல வேறு எந்தப் படத்திலும் அவ்வளவு துல்லியமான காட்சிகளை அதற்குப் பின் நான் பார்க்கவே இல்லை..! ரெட் ஒன் கேமிராவில் 45 நாட்கள் ஷூட் செய்து, கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் இதற்காகவே செலவு செய்தோம் என்றார்கள்.. மொத்தமாக 35 லட்சம் செலவு ஆகியிருக்கலாம்..! கடைசி நேரத்தில் தியேட்டர்கள் கிடைக்காமல் அல்லலோகப்பட்டு  எப்படியோ ரிலீஸ் செய்திருக்கிறார்கள்..! 

எல்லாம் செஞ்சு என்ன புண்ணியம்..? அழுத்தமான இயக்கம் இல்லையே..? இதன் இயக்குநர் சிறந்த கதாசிரியராக இருக்கிறார்..! அதை மட்டுமே தொடர்ந்தால் அவருக்கும் நல்லது.. நமக்கும் நல்லது..!


0 comments: