எஸ்.எஸ்.சந்திரன் - அரசியலால் அலைக்கழிக்கப்பட்ட கலைஞன்..!


12-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எந்தக் கட்சித் தொண்டனுக்கும் கிடைக்காத பெரும்பேறு மரணத்தின் மூலம் கிடைத்திருக்கிறது எஸ்.எஸ்.சந்திரன் என்னும் தொண்டனுக்கு. அதே சமயத்தில் எந்தவொரு கலைஞனுக்கும் கிடைக்கக் கூடாத அவமரியாதை, அதே மரணத்தின் மூலம் எஸ்.எஸ்.சந்திரனுக்குக் கிடைத்திருப்பது அவரது துரதிருஷ்டம்தான்..!

கட்சிக்காகப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக முழங்கிவிட்டு, அறைக்கு வந்து படுத்தவரை கொள்ளை கொண்டு போனது சாவு.. சாவோடு ஊர் திரும்பியவரை தனது மகவு என்றொரு மரியாதையோடு அனுப்பி வைக்கத் தவறிவிட்டது கலையுலகம்..!

இத்தனைக்கும் நான்காண்டு காலம் தென்னிந்தியத் திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்தவர் எஸ்.எஸ்.சந்திரன். நடிகர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு சிறிய மாலைகூட அவருக்கு அணிவிக்கப்படாதது நிச்சயம் அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கு மிகப் பெரும் சோகமே..!


பொதுவாகவே கலையுலகில் மிகப் பிரபலமானவர்கள் இறந்தால் அந்தத் துறையினர் அதிக அளவில் கூடுவது வாடிக்கை. அதில் சந்திரனுக்கு மட்டும் அவர்களது சக கலைஞர்களே விதிவிலக்கை அளித்துள்ளார்கள் அ.தி.மு.க. சார்பு நடிகர்களும், சத்யராஜ், கவுண்டமணி, விவேக் தவிர மற்ற பெரிய நடிகர்களும், நகைச்சுவை நடிகர்களும் திரும்பிப் பார்க்காதது அவருக்குக் கிடைத்தத் துர்பாக்கியம்தான்.

இத்தனைக்கும் காரணம் அவரது அரசியல் பேச்சுக்கள்தான். எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு உண்மையானவராக இருப்பார் சந்திரன். இது அவரது குணம். அதுவே அவருக்கு எமனாகவும் ஆகிவிட்டது.

13 ஆண்டு கால வனவாசத்தை முடித்து கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்ற அன்று மாலையே சென்னை கடற்கரை சீரணி அரங்கத்தில் நடைபெற்ற நன்றியறிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலைஞருக்கு முன்பாக கடைசி நபராகப் பேசினார் எஸ்.எஸ்.சந்திரன்.

“13 வருஷம் கழிச்சு ஆட்சிக் கட்டில்ல உக்காந்திருக்கோம். இனிமே இங்க எல்லாமே நாமதான்.. நமக்குத்தான் தொண்டர்களே.. அருமை உடன்பிறப்புக்களே நாம் வாழப் போவது இனிமேல்தான்.. நாம பட்ட கஷ்டமெல்லாம் தீர்ந்து போச்சு.. இனி நமக்கு நல்ல வாழ்க்கைதான்.. வேட்டைதான். விட்ராதீங்க” என்று பேசிவிட்டு மொத்தக் கை தட்டலையும் அள்ளிக் கொண்டு போனார்.

பின்னாலேயே பேச வந்த கலைஞர் எடுத்த எடுப்பிலேயே எஸ்.எஸ்.சந்திரனைக் கண்டித்து, “நாம் இதற்காக ஆட்சிப் பொறுப்புக்கு வரவில்லை. மக்களும், தொண்டர்களும் நமக்கு ஒன்றுதான்.. சந்திரன் அந்த நினைப்பை தன் மனதில் இருந்து நீக்க வேண்டும்” என்று அட்வைஸ் செய்தார்.

இப்படித்தான் தன் மனதில் பட்டதை பளி்சசென்று சொன்னாலும் அவருக்குத் தேவை தன் பேச்சில் நகைச்சுவையும், கை தட்டலும்தான். இதனாலேயே அ.தி.மு.க.வுக்கு வந்த பின்பு, தீப்பொறி ஆறுமுகத்தின் இடத்தைப் பிடித்து சில மாதங்களில் அவரையே மிஞ்சிவிட்டார்.

“ராதிகாவை இப்ப சரத்குமார் வைச்சிருக்கார். நாளைக்கு யார் வேண்ணாலும் வைச்சுக்குவாங்க. ஆனாலும் நான்கூட ராதிகாவுக்கு மாமாதான்..” என்று போகிற போக்கில் அவர் பேசிய பேச்சால்தான், நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் வரவில்லை.

“ராதாரவியை எம்.எல்.ஏ. ஆக்கினது அம்மாதான். ராதாரவிக்கு இதய ஆபரேஷன் நடந்தப்போ இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவி செஞ்சது அம்மாதான். இப்போ ராதாரவிக்கு எம்.எல்.ஏ. பென்ஷனும் வருது. அதைச் சாப்பிடறாருல்ல.. ஏன் அம்மாவே வேணாம்ன்னா அந்தப் பென்ஷன் மட்டும் எதுக்காம்?” என்று பத்திரிகைகளிடம் கேட்டதற்குப் பலனாக ராதாரவியும் வரவில்லை.

ம.தி.மு.க.வுக்கு எஸ்.எஸ்.சந்திரன் சென்றபோது கருணாநிதியையும், அவர் குடும்பத்தையும் சாட ஆரம்பித்தவர் ஒரு கட்டத்தில் கருணாநிதியை ஒருமையிலேயே அழைக்க ஆரம்பித்தார். இதனை ஒரு பொதுக்கூட்டத்தில் வைகோ மேடையிலேயே நேருக்கு நேராகக் கண்டித்தார்.

அடுத்தப் பொதுக்கூட்டத்தில் வைகோ முன்பாகவே பேச வந்த சந்திரன், “இந்த ஊர் நல்லாயிருக்கு.. ஊர் ஜனங்களும் நல்லாயிருக்காங்க.. மேடை பிரமாதமா போட்டிருக்காங்க.. கலர் சோடா எனக்கு மட்டும் 2 வாங்கிக் கொடுத்தாங்க. வட்டமும், மாவட்டமும் நல்ல சாப்பாடு வாங்கித் தந்தாங்க.. சீரியல் லைட்டெல்லாம் நல்லாவே போட்டிருக்காங்க.. நம்ம தலைவர் வைகோ உச்சி வகிடெடுத்து கச்சிதமா தலையைச் சீவிட்டு வந்திருக்காரு.. அவரை மாதிரியே நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க. எல்லோரும் நல்லாயிருங்க.. எதுவுமே பேசக் கூடாதுன்னா இப்படித்தான் பேசணும்.. நன்றி..” என்று சொல்லிவிட்டுப் போய் அமர.. இந்தக் கூத்தை அனைத்துப் பத்திரிகைகளும் 'ஏழு காலம்' அளவுக்கு போட்டுச் சிரித்தன.

சந்திரன், ம.தி.மு.க.வில் இருந்தபோது அவ்வப்போது தி.மு.க.வை  சீண்டுவதைப் போல் “அங்கே என் மாப்ளை ராதாரவியை விட்டு வைச்சிருக்கேன். எதுக்குத் தெரியுமா? உளவு சொல்லத்தான். டெய்லி ராத்திரி பத்து மணிக்கு மேல நானும் அவனும்தான் புருஷன், பொண்டாட்டி மாதிரி மணிக்கணக்கா பேசுறோம்.. தெரியும்ல்ல..” என்று பேசித் தொலைக்க இதனாலேயே ராதாரவிக்கு பல்வேறு தொல்லைகள்..

அதுவரையிலும், செயற்குழுக் கூட்டம், பொதுக்குழுக் கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்று கொண்டிருந்த ராதாரவிக்கு அதன் பின்பு அழைப்பு வராமல் போக.. தி.மு.க.வில் இருந்து ஒதுங்க வேண்டிய கட்டாயம் வந்தது.

தி.மு.க.வில் இருக்கின்றவரையில் “மாமா.. மாமா..” என்று சந்திரனை செல்லமாக அழைத்து வந்த சந்திரசேகர், சந்திரன் கட்சி மாறி, தி.மு.க.வையும், கலைஞரையும் தாக்கத் துவங்கியவுடன், “அவனை நேர்ல பார்த்தா அடிச்சிருவேன் தம்பி.. அவனையும், என்னையும் ஒண்ணா கூப்பிடாதீங்க.. விட்ருங்க” என்று தேர்தல் நேரத்து விவாதங்களுக்கு அழைக்கப் போனவர்களுக்கு பதில் சொல்லி அனுப்பி வைத்தார்.

ஏதோ ஒரு மாநாட்டின் முடிவுக்குப் பின்புதான் சந்திரன் தி.மு.க.வில் இருந்து ம.தி.மு.க.வுக்கு தாவினார் என்பது எனது நினைவு. அப்போது அந்த மாநாட்டில் சந்திரன் பேச வேண்டிய குறிப்புகளுக்காக 'முரசொலி'யின் கட்டுரைச் சேமிப்புகளை கலைஞரே, சந்திரனை அழைத்துக் கொடுத்திருந்தார்.

“அவர் போனா போகட்டும். அந்தக் கட்டுரை புத்தகத்தை மட்டும் வாங்கிட்டு வந்திருங்கப்பா...” என்று சந்திரசேகரிடமும், தியாகுவிடமும் கலைஞரே சொல்லியனுப்ப.. சந்திரசேகர் தான் வர முடியாது என்று சொல்லிவிட்டதால் தியாகுதான் மிகப் பிரயத்தனப்பட்டு சந்திரனிடம் இருந்து அதனை வாங்கி வந்து கலைஞரிடம் கொடுத்ததாக பின்னாட்களில் பேட்டியளித்திருந்தார்.

“சிவகங்கைச் சிங்கமே..! நீ இருக்க வேண்டிய இடம் என் பக்கத்தில்தான். வந்து விடு..!” என்று மேடைப் பேச்சைப் போலவே போனிலும் பேசி வைகோ, சந்திரசேகருக்கு அழைப்பு விடுத்தும் அவர் அங்கு செல்ல மறுத்திருந்தார். அதனை சந்திரன் தனக்கே உரித்தான பாணியில் ஆடு, மாடு, கோழி பண்ணைகளில் அவைகளைப் பார்த்து பண்ணை உரிமையாளன் எப்படிப் பேசுவான் என்பதைப் போல் மேடைகளில் பேசித் தொலைக்க அன்றோடு சந்திரசேகரின் சகவாசமும் முடிவுக்கு வந்தது.

தி.மு.க.வின் சார்பாக அப்போது இருந்த பிரபலங்களில்  விஜயகாந்த், சந்திரசேகர், தியாகு, இராம.நாராயணன், என்று அனைவரையும் சமீப காலங்களில் வறுத்தெடுத்துவிட்டார் எஸ்.எஸ்.சந்திரன்.

விஜயகாந்த் பற்றி மிகச் சமீபத்தில் அவர் பேசிய பேச்சு மிகக் கலவரமானது.

“குஷ்பு என்ன நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கஸ்தூரிபாயா? குஷ்பு எப்படின்னு எம் மாப்ள கார்த்திக்கிட்ட கேளு. இல்லன்னா மாப்ள விஜயகாந்த்கிட்ட கேளு. நெறயச் சொல்லுவான். நான்கூட விஜயகாந்த்கிட்ட கேட்டேன். 'தமிழ்நாட்டுல அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்தான் பெரிய கட்சி. கூட்டணிக்கு வாங்கன்னு ரெண்டு கட்சியும் கூப்பிட்டா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. நீ ஒரு துக்கடா கட்சிய வச்சிக்கிட்டு என்கிட்ட வா கூட்டணிக்குன்னு கூப்பிடறியே... உனக்கே இது ஓவராத் தெரியலியா?'ன்னு கேட்டேன். அதுக்கு விஜயகாந்த் மாப்ளே, 'ஜாதகத்துல நான் முதலமைச்சராவேன்னு இருக்கு. அத யாரும் தடுக்க முடியாது. அதான், என் தலைமைல கூட்டணின்னு துணிஞ்சு சொல்றேன்'னு வாய் கூசாம சொல்லுறான். அட.. ஜாதகத்த நம்புற மூதேவி. நீ பாட்டுக்கு ஜாதகப் பைய கக்கத்துல வச்சிக்கிட்டு திரிய வேண்டியதுதானே. அரசியலுக்கு ஏன் வந்து மக்களக் குழப்புற..? பண்ருட்டி ராமச்சந்திரன் உன்ன இம்சை பண்றான்னு நல்லாத் தெரியுது. என் ஜாதகப்படி இந்நேரம் நான் பிரதமரா இருக்கணும். நானே கம்முன்னு இருக்கேன். நீ ஏன் துடிக்குற...?''

அ.தி.மு.க.வின் சாதாரணத் தொண்டனால்கூட இப்படி பேசிவிட முடியாது. என்ன தைரியம்..? ஆனாலும் விஜயகாந்த் நேரில் வந்து அஞ்சலியைத் தெரிவித்துவிட்டுத்தான் போனார்.

இதுதான் அவரது குணம் என்கிறார்கள் திரையுலகில். அவருக்கு யாராவது உதவி செய்துவிட்டால் உடனேயே அவர்களை அங்கேயே இயேசுநாதர் ரேஞ்ச்சுக்கு உயர்த்திப் பேசிவிடுவார். பின் விளைவுகளைப் பற்றி யோசிக்கவே மாட்டார்.

தான் மருத்துவமனையில் பைபாஸ் ஆபரேஷனுக்காக இருந்தபோது தனக்கு ரத்தம் கொடுத்த ஒரு இளைஞரை, “இனி்மே.. என்னோட பையனுகள்ல இவனும் ஒருத்தன்யா.. எனக்கு உசிர் கொடு்ததவனே இவன்தாம்பா..” என்று பத்திரிகையாளர்களை அழைத்து ஒரு மீட்டிங் வைத்து அறிமுகம் செய்து வைத்தார்.

ம.தி.மு.க.வில் அவருடைய 'கனமான' பேச்சுக்கு அடிக்கடி தடை போடுவதும், பேச்சுச் சுதந்திரம் தராமல் வைத்திருந்ததும்தான் அவர் அங்கிருந்து விலகிச் செல்ல காரணமாக இருந்தது என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

அ.தி.மு.க.வில் அவர் சேர்ந்தவுடன், ஜெயலலிதாவுடனான தனது முதல் சந்திப்பிலேயே, 'அம்மா'வின் தலையில் தென்பட்டிருந்த சில வெள்ளி முடிகளைப் பார்த்துவிட்டு, “டை அடிக்க வேண்டியதானம்மா.. பளிச்சுன்னு வெளில வாங்கம்மா. அப்போத்தான் மங்களகரமா இருக்கும்..” என்று தைரியமாகச் சொன்ன ஒரே மனிதன் சந்திரன் மாமாதான்.


இதையே ஒரு முறை ஜெயலலிதாவை மேடையில் வைத்துக் கொண்டே பேசினார். “எங்கம்மா மட்டும் தலைக்கு டை அடிச்சு, மேக்கப் போட்டுட்டு வந்து தேர்தல் களத்துல குதிக்கட்டும்.. தமிழ்நாட்டுல அத்தனை பேரும் அம்மாவைப் பார்த்து அசந்து போய் நமக்கு ஓட்டை நச்.. நச்சுன்னு குத்திருவாங்க..” என்றும் சொன்னவர் சந்திரன்.

“நான் தி.மு.க.வில் இருந்தப்போ என்னைத் தூரத்துல பார்த்தவுடனேயே கருணாநிதி திடீர்ன்னு ‘பாசமலர்’ சிவாஜி மாதிரி துண்டை வாய்ல வைச்சுக்கிட்டு அழுற ஸ்டேஜூக்கு போயிருவாரு. நான் பக்கத்துல போனவுடனேயே 'தம்பி'ன்னு சொல்லி உதடு துடிக்க நடிச்சு தோள்ல கை போட்டு 'என் இதயத்துல உனக்கும் இடம் இருக்கு'ன்னு சொல்லாம சொல்லி அனுப்பிருவாரு. ஆனா இங்க 'அம்மா' மட்டும்தான் அ.தி.மு.க.வுக்கு வந்த ரெண்டாவது வருஷமே என்னை எம்.பி.யாக்கிட்டாங்க. நான் தி.மு.க.வுல இருந்தவரைக்கும் தம்பிதான். ஆனா அ.தி.மு.க.வுக்கு வந்த பின்பு நான் எந்த எம்பும் எம்பாமலேயே எம்.பி.யாயிட்டேன். இதுதான் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் வித்தியாசம்..” என்றார்.

இந்த எம்.பி. பதவி கொடுத்த பாசத்தை ஒரு காரணமாக வைத்துக் கொண்டாலும், பைபாஸ் ஆபரேஷனுக்காக சந்திரன், ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து செல்வுகளையும் ஜெயலலிதாவே ஏற்றுக் கொண்டு அதன் பின்பும் மாதந்தோறும் 25000 ரூபாய் நிதியுதவியாக வழங்கிக் கொண்டிருந்ததும்தான் அவரது கண்மூடித்தனமான அ.தி.மு.க. பக்திக்குக் காரணமாக ஆகிவிட்டது. கூடவே அவர் மீது தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் போடப்பட்டிருந்த அவதூறு வழக்குகளும் அவரை அ.தி.மு.க.வில் புடம் போட்டத் தங்கமாக காட்சியளிக்க வைத்திருந்தது.

இதனால்தான் “ரெஸ்ட் எடுங்கள். மீட்டிங்குக்கெல்லாம் போக வேண்டாம்...” என்று ஜெயலலிதா தடுத்தும், மருத்துவர்களிடத்திலெல்லாம் சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு போய் நேரில் கொடுத்து கூட்டங்களுக்குச் செல்ல அனுமதி வாங்கி வந்தாராம்..!

இதற்கு முன்பாக கடந்த லோக்சபா தேர்தலின்போதே மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக தயாநிதி மாறனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டவர் சந்திரன்தான். அறிவிப்பு வந்த மறுநாளே ஓட்டு வேட்டையில் இறங்கியும்விட்டார்.

அதன் பின்பு  அவருடைய குடும்பத்தினரின் ரகசிய வேண்டுகோளுக்கிணங்க “ச்சும்மா போயஸ் கார்டனுக்கு வந்துட்டுப் போங்க” என்று அவரை அழைத்து வந்து ஜெயலலிதா முன்பு நிறுத்தியிருக்கிறார்கள். அவரிடம் பக்குவமாக விஷயத்தைச் சொன்ன ஜெயலலிதா, “அந்தத் தொகுதியை முஸ்லீம் லீக் கட்சிக்குக் கொடுக்குறதா இப்ப முடிவு பண்ணிட்டேன். உங்களுக்கும் உடம்பு சரியில்லை. மொதல்ல உடம்பை கவனிங்க.. இந்த நேரத்துல இது வேண்டாம். வெளில இருந்தீங்கன்னா வேற மாதிரி பேசுவாங்க. அதுனால நீங்க ராமச்சந்திரா மருத்துவனையில் அட்மிட் ஆயிருங்க.. ரெண்டு நாள் அங்க இருந்துட்டு வாங்க..” என்று சொன்ன தனது தலைவியின் வேண்டுகோளை அப்போது தட்டாமல் கேட்டவர், இப்போது கேட்க மறுத்து, தனது சாவுக்குத் தானே வழி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பொதுவாக 'பைபாஸ் ஆபரேஷன் செய்தவர்கள் அதிகம் பேசக் கூடாது..' 'டிராவல் செய்யக் கூடாது..' 'டென்ஷன்படக் கூடாது.' 'உடம்பு அதிரும்வண்ணம் எதையும் செய்யக் கூடாது' என்பார்கள். இது அத்தனையையும் கடந்த 3 மாதங்களில் செய்துவிட்டார் சந்திரன். 

கடந்த ஜூலை மாதத்தில்தான் அ.தி.மு.க.வில் கொள்கை பரப்புத் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் சந்திரன். இதன் பின்புதான் தனது சூறாவளி சுற்றுப்பயணத்தைத் துவக்கினார் சந்திரன். மரணத் தூதுவன் அருகில் இருக்கிறான் என்பது தெரிந்தும் நன்றிக் கடனுக்காக தனது உயிரையே கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

பொதுவாகவே அனைத்துக் கட்சிகளிலுமே ஆபாசப் பேச்சாளர்கள் நிறைய பேர் இருந்தாலும், காலப்போக்கில் அவர்கள் அத்தனை பேருக்குமே கிளாஸ் எடுக்கும் அளவுக்கு திறமைசாலியாகிவிட்டார் சந்திரன். ஆனாலும் அது எதுவுமே இல்லாமலும் அவரால் வெறும் வார்த்தை ஜாலத்தாலேயே பேசவும் முடியும்.

உதாரணத்திற்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஜெயலலிதாவுக்கு, தமிழ்த் திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் சந்திரனின் பேச்சைக் கேட்டுப் பாருங்கள்.. எந்தவிதக் குறிப்புகளும் வைத்துக் கொள்ளாமல் அடுக்கு மொழியில் துளியும் ஆபாசமில்லாமல் வெளுத்துக் கட்டியிருப்பார்.

அதேபோல் இப்போதைய தி.மு.க.வின் ஆட்சிக் காலம் துவங்கிய நேரத்தில் எம்.ஜி.ஆர். சமாதியை தி.மு.க.வினர் புனரமைப்பு செய்தது பற்றி ஒரு சர்ச்சை எழுந்தது. அப்போது ஜெயா டிவிக்காக தயாரிக்கப்பட்ட அரை மணி நேர நிகழ்ச்சியில் 20 நிமிடங்கள் நான் ஸ்டாப்பாக எம்.ஜி.ஆரைப் பற்றி அவர் பேசிய பேச்சு அசத்தல்..! எப்படியோ திராவிட  இயக்கக் கட்சிகளில் தலை சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டியவர்.. திசை மாறியது சோகம்தான்..!

இப்போது ரொம்பவே சோகத்தில் இருப்பவர்கள் அ.தி.மு.க.வினர்தான். அவர்களது கட்சியில் கூட்டத்தைக் கூட்டம் சேர்க்கும் வல்லமை ஜெயலலிதாவைத் தவிர சந்திரனுக்கு மட்டுமே இருந்தது. இப்போது அதுவும் தகர்ந்துவிட்டது. இனிமேல் அந்தப் பொறு்பபை பழையபடி வளர்மதிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

"சந்திரன் தனது இரட்டை அர்த்த பேச்சுக்களை  தனது பிற்காலத்திய சினிமாவில்தான் ஆரம்பித்தார்.." என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். ஆரம்பக் காலத்தில் சிவகங்கையில் பிறந்து வளர்ந்து  அங்கேயே  சின்ன சின்ன நாடகங்களில் நடித்து வந்திருக்கிறார். சிவகங்கைச் சீமைப் பக்கமிருந்து இலங்கைக்கு தொழில் செய்யச் சென்ற ஒரு செட்டியார் குடும்பத்தின் உதவியோடு இலங்கைக்குத் தானும் பயணமாகியிருக்கிறார். அங்கே கொழும்பில் இருக்கும் தமிழ்ச் சங்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுடன்  நாடகங்களில் நடித்து வந்திருக்கிறார்.

தனது வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்தை அடைய வேண்டித்தான் இதன் பின்பு சென்னைக்கு படையெடுத்திருக்கிறார். சென்னை வந்த பின்பு பல்வேறு நாடக சபாக்களில் எடுபிடி வேலைகள் செய்து கொண்டே சிறிய சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். நாடகங்களில் படுதாவை ஏற்றி, இறக்குவது முதல், பாடுவது வரையிலும் பல வேலைகளையும் செய்து வந்திருக்கிறார் சந்திரன்.
 
'முத்துவேல் ஸ்டேஜ் நாடக சபா' என்ற குழுவில் பிரதானமாக பல வேடங்களைச் செய்து வந்திருக்கிறார். நகைச்சுவை நடிகர்களுக்கு பிரதானமே அவர்களது வித்தியாசமான குரலும், மாடுலேஷனும்தான். இதனை வைத்துத்தான் அவர்கள் முதல் போட முடியும். 'காசி யாத்திரை' என்றொரு நாடகத்தில் சந்திரன் போட்ட அப்பா வேஷம், நாடகத்தைப் பார்த்த பல சினிமா பிரபலங்களையும் அசத்திவிட்டது. ஆனால் அப்போது அவர் இளைஞர்.

இந்த நாடகத்தின் மூலம்தான் பிரபல மலையாள இயக்குநர் ஜோஸப் தளியத்தின் 'காதல் படுத்தும் பாடு' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தோன்றியிருக்கிறார்.

எனக்கு அவருடைய முகம் முதலில் தென்பட்டது 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில்தான். அந்தப் படத்தில் கவுண்டமணி வீட்டு ஓனராகவும், எஸ்.எஸ்.சந்திரன் ஒரு வீட்டில் குடியிருப்பவராகவும் நடித்திருந்தார். அதில்  அவருடைய வித்தியாசமான ஹேர்ஸ்டைல் இன்றைக்கும் எனக்கு ஞாபகமிருக்கிறது.

'பூக்காரி', 'சிவப்பு மல்லி', 'அவன்', 'சகாதேவன் மகாதேவன்', 'தங்கமணி ரங்கமணி', 'தைப்பூசம்', 'உழவன் மகன்', 'என்னை விட்டு போகாதே', 'பொங்கி வரும் காவேரி', 'கூட்டுப் புழுக்கள்', 'கனம் கோர்ட்டார் அவர்களே..' 'பாட்டி சொல்லைத் தட்டாதே', 'ஒன்ஸ்மோர்', 'அமைதிப்படை', 'ஒரு முறை சொல்லிவிடு', 'எங்கள் குரல்', 'புருஷன் எனக்கு அரசன்', என்று அவர் நடித்த 800 திரைப்படங்களில் சிலவற்றை மட்டுமே கூகிளாண்டவர் துணையுடன் என்னால் சொல்ல முடிகிறது.

இதில் 'கூட்டுப் புழுக்கள்' படமும், 'கனம் கோர்ட்டார் அவர்களே' படமும் அவருடைய கேரக்டர்களுக்காக கவனிக்கத்தக்கவை போல் எனக்குத் தோன்றுகிறது.

'கூட்டுப் புழுக்கள்' படத்தில் வயதுக்கு வந்த மகளை வீட்டில் வைத்துக் கொண்டு இள வயது வாலிபனைப் போல் நடந்து கொள்வதும் பெண்களைத் தேடிச் செல்வதுமான ஒரு குற்றவியல் நடிப்பில் அசத்தியிருந்தார் மனிதர். ஒரு முறை சுகம் தேடிச் செல்லும் இடத்தில் தனது மகளைப் பார்க்கும் தருணம்தான் மிக அற்புதமானது. 

'கனம் கோர்ட்டார் அவர்களே' படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்திருப்பார். பயிற்சி வக்கீல்களை பெரிய வக்கீல்கள் என்ன பாடுபடுத்துகிறார்கள் என்பதை இந்தப் படத்தில் காமெடியாகவே சொல்லியிருந்தாலும், சந்திரன் மட்டும் இப்படத்தில் சீரியஸாகவே நடித்திருந்தார்.

'திருடா திருடா' படத்தில் லாரி டிரைவராக வந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கொண்டு போக உதவி செய்யும் கேரக்டரில் வரும் சந்திரன், பிரசாந்த் லாரி ஓட்டும் அழகைப் பார்த்து, “மாப்ளை என்ன அழகா வண்டியை ஓட்டுற..? என் பொண்ணு உனக்குத்தான் மாப்ளை..!” என்று அவர் பேசும்  பேமஸான டயலாக்கும் மறக்க முடியாதது..

'ஒரு முறை சொல்லி விடு' படத்தில்தான் தனது மகன் ரோஹித்தை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார். தனது சொந்த சம்பாத்தியம் அனைத்தையும் இந்த ஒரு படத்தில் தொலைத்துவிட்டார் சந்திரன். இதன் பின்பு அவரது வருமானமே கட்சிக் கூட்டங்களில் பேசுவதற்காக தரப்படும் சன்மானம்தான் என்றாகிவிட்டது.  

பைபாஸ் ஆபரேஷன் செய்த பின்பு படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்ட சந்திரன் இதன் பின்பு கட்சியை சார்ந்தே தனது பொழைப்பை நடத்தி வந்திருக்கிறார். கட்சிக் கூட்டங்களில் பேசுவதற்கு மிகப் பெரும் தொகையை வாங்கும் ஒரே நபர் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கின்றேன்.

 

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதினாலும், தி.மு.க. சார்பானவர்கள் என்பதாலும் ஆரம்பக் கட்டங்களில் இராம.நாராயணன் தயாரித்து இயக்கிய திரைப்படங்களிலும், சங்கிலி முருகன் தயாரித்த அனைத்துப் படங்களிலும் சந்திரன் தவறாமல் இடம் பெற்று வந்தார்.

இராம.நாராயணன் காமெடி திரைப்படங்களிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியபோது சந்திரன்தான் அவருடைய பெஸ்ட் சாய்ஸ்.. முதலில் சாதாரணமாகவே டயலாக்கை எடுத்துவிட ஆரம்பித்து பிற்பாடு அதில் டபுள் மீனிங்கையும் சேர்த்து அடிக்க ஆரம்பித்தது இங்குதான் என்று நினைக்கிறேன். ஆனாலும் இதற்கு ஒரு பக்கம் இயக்குநர்களும் பொறுப்பேற்கத்தான் வேண்டும்.

தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவார் என்று முன்பே சொல்லியிருந்தேன். அதே வேகத்தில்தான் இந்தக் காலக்கட்டத்தில் கோவை சரளாவுடனான தனது வாழ்க்கையையும் வெளிப்படையாகப் போட்டுத் தாக்க சினிமாவுலகம் கொஞ்சம் பதைபதைத்துப் போனதென்னவோ உண்மை. 

கோவை சரளா-சந்திரன் ஜோடி மகத்தான காமெடியை கொண்டு வந்ததாலோ என்னவோ, அது அபாரமாக வொர்க் அவுட்டாகிவிட்டது. கோவை சரளாவை அ.தி.மு.க.விற்கு அழைத்து வந்ததும் சந்திரன்தான்..!

தனது குடும்பத்தினரின் நெருக்கடித் தாக்குதல்கள், நண்பர்களின் அறிவுரை, மேலிடத்தின் கோபம் என்று எல்லாவற்றாலும் சரளாவிடமிருந்து விலகினார். பிற்பாடு அதனை வெளியில் பகிரங்கமாக ஒத்துக் கொள்ளவும் செய்தார். இதுதான் எஸ்.எஸ்.சந்திரன். இருந்தும் கோவை சரளா இறுதியஞ்சலிக்கு வரவில்லை என்பதில்  அவருக்கு நிச்சயம் வருத்தமாகத்தான் இருந்திருக்கும்.

சினிமாவுலகமாகட்டும்.. அரசியல் உலகமாகட்டும்.. இரண்டிலுமே 'மாமா' என்றே அனைவராலும் அழைக்கப்பட்ட  எஸ்.எஸ்.சந்திரன், அரசியலில் இரட்டை அர்த்தப் பேச்சு வியாபாரியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.. ஆனாலும் வெளிப்படைத்தன்மையான பேச்சு.. கண்மூடித்தனமான கட்சிப் பாசம்.. வெறித்தனமான அரசியல்.. இது அனைத்திற்கும் தனது வாழ்க்கையையும், தனது குடும்பத்தினரையும் பலிகடாவாக்கிவிட்டார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : கூகிளாண்டவர்

92 comments:

Unmaivirumpi said...

எஸ் எஸ் சந்திரனை பற்றி இவ்வளவு விஷயம் இருக்குதான்னு இதை படிச்சிதான் தெரிஞ்சிகிட்டேன். மிக அற்புதமான தொகுப்பு, பல இடங்களில் சென்று தேடி படிக்கவேண்டியதை, இங்கே ஒரே இடத்தில் காண முடிகிறது. மீண்டும் நீங்கள் திறமையான எழுத்தாளர் என்று நிருபணம் செய்து விட்டீர்கள், வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

ஜெய்லானி said...

// Unmaivirumpi said...

எஸ் எஸ் சந்திரனை பற்றி இவ்வளவு விஷயம் இருக்குதான்னு இதை படிச்சிதான் தெரிஞ்சிகிட்டேன். மிக அற்புதமான தொகுப்பு, பல இடங்களில் சென்று தேடி படிக்கவேண்டியதை, இங்கே ஒரே இடத்தில் காண முடிகிறது. மீண்டும் நீங்கள் திறமையான எழுத்தாளர் என்று நிருபணம் செய்து விட்டீர்கள், வாழ்த்துக்கள் மற்றும் நன்றி //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்

ஜெய்லானி said...

ஒரு மனுஷன் உண்மையாளரா ,விசுவாசமா இருப்பதில் உள்ள சிக்கலை சொன்ன விதம்...நெஞ்சை தொட்டு விட்டது...!!

கதிர்கா said...

S.S.சந்திரனை பற்றி நல்ல ஆழமான அலசல்.

உண்மை said...

ராஜீவ் கொலையுண்டபோது எல்லா திமுக வினரின் விடுகளும் அடித்து நொறுக்க பட்ட பொது, இவர் வீடும் தப்ப வில்லை. அப்பவும் கலங்காமல் இருந்தார்.

எம் பி பதவி கிடைத்த பொது "நான் இத்தனை வருசமா அங்க இருந்தப்ப என்னக்கு ஒரு வார்ட் கவுன்சிலர் பதவி கூட குடுக்கல. ஆனா, அம்மா என்னை எம் பி ஆக்கி அழகு பார்த்தார்கள்" என்று கூறியவர்.

Dubukku said...

Very nice compilation and a lot of info about S.S.Chandran !!!

a said...

எஸ். எஸ் பத்தி எவளவு விவரங்கள்................ நல்ல மனிதர்..............

இதுவரை தெரியாத பல குறிப்புக்களுடன், சிறந்த பதிவு............

தமிழன்பன் said...

//சிவகங்கைச் சீமைப் பக்கமிருந்து இலங்கைக்கு தொழில் செய்யச் சென்ற ஒரு செட்டியார் குடும்பத்தின் உதவியோடு இலங்கைக்குத் தானும் பயணமாகியிருக்கிறார்.//
இவர் முன்னர் கொழும்பில் கிங்ஸ்லி தியேட்டரின் பின்னால் உள்ள சேரிப் பகுதியில் வாழ்ந்தவர்.

raja said...

மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.. தங்களது முக்கியமான படித்திருக்கிறேன்.. சரளமான நடையும்..தகவலும் அபராமான திறமை.அதற்கேற்ற சன்மானம் இருக்காது என்று நிணைக்கிறேன். நல்ல பத்திரிகை ஒன்றில் பணிபுரியுங்கள்..வருமானத்துக்கு முதலில் ஏற்பாடு செய்யுங்கள். நன்றி வணக்கங்களும்.

pichaikaaran said...

சிறந்த அஞ்சலி கட்டுரை . நன்றி..
ஜெயல்லிதாவை இவர் பேசாத பேச்சா.. ஆனாலும் ஜெ மறந்து விட்டார்.. மற்றவர்கலும் மறந்திருக்கலாம்..
சினிமாவில் அரசியல்/ ஆபாச ஜோக் இவரது தனிதன்மை..
“ ஊர்ல பன்னு , ரொட்டி வித்தவன்.. பன் ரொட்டி.. பன்ரொட்டி.. ப்ன்ருட்டி..இவனை நமப கூடாது,, துரோகம் செஞ்சுடுவான் “
“ உங்களை தலைவினு சொல்றாங்க..என்னை பொறுத்தவரை நீங்க ஃபர்ஸ்ட் கிளாஸ்...... நடிகை “
“ உடம்புல பல ஊர் தண்ணி ஓடுது “
” பேனாவை வச்சுட்டு போ.. வை கோ.... வைகோ... அட நல்லா இருக்கே ,,, “
அந்த காலத்தில் எல்லாப் பட்த்திலும் உதய சூரியன் சின்னத்தை காட்டுவார்

R. Gopi said...

சிறந்த அஞ்சலி கட்டுரை . நன்றி..

pichaikaaran said...

" நல்ல பத்திரிகை ஒன்றில் பணிபுரியுங்கள்.."


என்னது ?!!!! வேலையா ?? !! யாரிடமும் கை கட்டி வேலை செய்ய நாங்க தயார் இல்லை.. ஆயிரம் பேருக்கு நாங்க வேலை கொடுப்போம்

"வருமானத்துக்கு முதலில் ஏற்பாடு செய்யுங்கள்"

வருமானம்.. எங்களுக்கேவா? திண்டுக்கல் ல எங்களை பத்தி விசாரிச்சு பாருங்க...
இலக்கியத்துக்கு சேவை செய்ய எழுதுறோம்... வேலை செஞ்சுதான் சம்பாதிக்கணும்க்ற தலை எழுத்து எங்களுக்கு இல்லை....

உண்மைத்தமிழன் said...

[[[Unmaivirumpi said...
எஸ் எஸ் சந்திரனை பற்றி இவ்வளவு விஷயம் இருக்குதான்னு இதை படிச்சிதான் தெரிஞ்சிகிட்டேன். மிக அற்புதமான தொகுப்பு, பல இடங்களில் சென்று தேடிப் படிக்க வேண்டியதை, இங்கே ஒரே இடத்தில் காண முடிகிறது. மீண்டும் நீங்கள் திறமையான எழுத்தாளர் என்று நிருபணம் செய்து விட்டீர்கள், வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.]]]

மிக்க நன்றி உண்மைவிரும்பி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெய்லானி said...
ஒரு மனுஷன் உண்மையாளரா, விசுவாசமா இருப்பதில் உள்ள சிக்கலை சொன்ன விதம். நெஞ்சை தொட்டுவிட்டது...!!]]]

எல்லோருக்குள்ளும் இந்தக் குழப்பம் இருக்கு.. ஒருத்தருக்கு அவருடைய அரசியல் பாதை தவறாக இருந்தாலும், மற்றொருவரின் பார்வைக்கு அது சரியாகத்தான் இருக்கும்..!

எல்லாவற்றிற்கும் இன்னொரு பக்கம் இருக்கிறது என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[கதிர்கா said...
S.S.சந்திரனை பற்றி நல்ல ஆழமான அலசல்.]]]

நன்றி கதிர்கா..!

உண்மைத்தமிழன் said...

[[[உண்மை said...

ராஜீவ் கொலையுண்டபோது எல்லா திமுகவினரின் விடுகளும் அடித்து நொறுக்கபட்ட பொது, இவர் வீடும் தப்ப வில்லை. அப்பவும் கலங்காமல் இருந்தார்.

எம்.பி. பதவி கிடைத்தபொது "நான் இத்தனை வருசமா அங்க இருந்தப்ப என்னக்கு ஒரு வார்ட் கவுன்சிலர் பதவிகூட குடுக்கல. ஆனா, அம்மா என்னை எம்.பி. ஆக்கி அழகு பார்த்தார்கள்" என்று கூறியவர்.]]]

இந்தப் பாசவுணர்ச்சி, நன்றியுணர்ச்சி.. இந்த இரண்டுக்குமிடையில்தான் அவருடைய அரசியல் வாழ்க்கைப் பயணம் இருந்தது..!

உண்மைத்தமிழன் said...

[[[Dubukku said...
Very nice compilation and a lot of info about S.S.Chandran!!!]]]

வாங்கோ டுபுக்கு அண்ணே..! எத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கீங்க..? நன்றிங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
எஸ்.எஸ். பத்தி எவளவு விவரங்கள். நல்ல மனிதர். இதுவரை தெரியாத பல குறிப்புக்களுடன்... சிறந்த பதிவு.]]]

வருகைக்கு நன்றி யோகேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழன்பன் said...

//சிவகங்கைச் சீமைப் பக்கமிருந்து இலங்கைக்கு தொழில் செய்யச் சென்ற ஒரு செட்டியார் குடும்பத்தின் உதவியோடு இலங்கைக்குத் தானும் பயணமாகியிருக்கிறார்.//

இவர் முன்னர் கொழும்பில் கிங்ஸ்லி தியேட்டரின் பின்னால் உள்ள சேரிப் பகுதியில் வாழ்ந்தவர்.]]]

அப்படியா? தகவலுக்கு நன்றிகள் ஸார்..!

அவருடைய இலங்கை வாழ்க்கை பற்றி ஒரு முறை குமுதம் பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார். அதனைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை..! இருந்திருந்தால் இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[raja said...
மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.. தங்களது முக்கியமான படித்திருக்கிறேன். சரளமான நடையும், தகவலும் அபராமான திறமை.. அதற்கேற்ற சன்மானம் இருக்காது என்று நிணைக்கிறேன். நல்ல பத்திரிகை ஒன்றில் பணி புரியுங்கள். வருமானத்துக்கு முதலில் ஏற்பாடு செய்யுங்கள். நன்றி வணக்கங்களும்.]]]

ஆலோசனைக்கு மிக்க நன்றி ராஜா..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

சிறந்த அஞ்சலி கட்டுரை. நன்றி..

ஜெயல்லிதாவை இவர் பேசாத பேச்சா..? ஆனாலும் ஜெ மறந்து விட்டார். மற்றவர்கலும் மறந்திருக்கலாம்..

சினிமாவில் அரசியல் / ஆபாச ஜோக் இவரது தனிதன்மை..

“ஊர்ல பன்னு, ரொட்டி வித்தவன்.. பன் ரொட்டி.. பன்ரொட்டி.. ப்ன்ருட்டி.. இவனை நமப கூடாது,, துரோகம் செஞ்சுடுவான் “

“உங்களை தலைவினு சொல்றாங்க. என்னை பொறுத்தவரை நீங்க ஃபர்ஸ்ட் கிளாஸ் நடிகை “

“ உடம்புல பல ஊர் தண்ணி ஓடுது “

”பேனாவை வச்சுட்டு போ.. வை கோ.... வைகோ... அட நல்லா இருக்கே ,,, “

அந்த காலத்தில் எல்லாப் பட்த்திலும் உதயசூரியன் சின்னத்தை காட்டுவார்]]]

உண்மைதான்.. தி.மு.க.வில் இருந்தவரையில் தான் நடித்த அத்தனை திரைப்படங்களிலும் ஏதேனும் ஒரு காட்சியில் தி.மு.க. பற்றிய அடையாளத்தைப் பதிவு செய்துவிடுவார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Gopi Ramamoorthy said...
சிறந்த அஞ்சலி கட்டுரை. நன்றி..]]]

நன்றி கோபி..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"நல்ல பத்திரிகை ஒன்றில் பணிபுரியுங்கள்.."

என்னது ?!!!! வேலையா ?? !! யாரிடமும் கை கட்டி வேலை செய்ய நாங்க தயார் இல்லை.. ஆயிரம் பேருக்கு நாங்க வேலை கொடுப்போம்

"வருமானத்துக்கு முதலில் ஏற்பாடு செய்யுங்கள்"

வருமானம். எங்களுக்கேவா? திண்டுக்கல்ல எங்களை பத்தி விசாரிச்சு பாருங்க.

இலக்கியத்துக்கு சேவை செய்ய எழுதுறோம். வேலை செஞ்சுதான் சம்பாதிக்கணும்க்ற தலை எழுத்து எங்களுக்கு இல்லை.]]]

பார்வையாளன் ஸார்.. ஏன் இந்தக் கொலை வெறி..?

ஏதோ உண்மையா ஒரு அக்கறையில் நண்பர் ராஜா சொல்லியிருக்கிறார்..!

நல்ல விஷயந்தானே.. நம்மளைப் பத்தியும் வருத்தப்படறதுக்கு நாலு பேர் இருக்காங்கன்னு நினைச்சு சந்தோஷப்பட வேண்டியதுதான்..!

sowri said...

உண்மை.....தமிழரே

தமிழ் குமார் said...

எஸ்.எஸ் சந்திரனை பற்றி யாரும் எழுதவில்லையே என்று நினைத்து கொண்டு இருந்தேன்.நீங்கள் நான் எதிர்பார்த்ததை விட மிக அழகாக,அவரின் குண இயல்புகளை பற்றி எழுதியுள்ளீர்கள் .உங்களது அனைத்து கட்டுரைகளும் அருமை...வாழ்த்துக்கள்.

எஸ்.கே said...

அவரைப் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன், அவர் எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். எஸ்.வி சேகருடன் பல படங்களில் அவரின் காமெடி நன்றாக இருக்கும்,

Madurai pandi said...

naanum avar pechai oru katchi meeting la kettu iruken.. .chumma veluthu vaangunaar... neenga sonna pala thagaval romba pudusu...konja naal munnadi vijay tv la "vaanga pesalam" nigalchi pannunaar... avoroda aadham saandhi adaiya prarthikiren..

சிதம்பரம் said...

வேறு எங்கும் படித்திராத பல செய்திகளுடன் இருந்தது பதிவு. சிறந்த அஞ்சலி கட்டுரை. நன்றி..

ஜோ/Joe said...

அண்ணே , வழக்கம் போல பல தகவல்களை திரட்டித் தந்திருக்கீங்க ..உங்க திறமைக்கு நீங்க நல்ல உயரத்துக்கு போக உங்க அப்பன் முருகன் அருள் புரியட்டும்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

அண்ணா ,
விரிவான அலசல் ...,பல தகவல்களை திரட்டித் தந்திருக்கீங்க .

போலவே ..,நீங்கள் மிக வேகமாக தமிழில் தட்டச்சு செய்வீர்களாமே ..,என்ன சாப்ட்வேர் use பண்றீங்க சார் ...,கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

Selva said...

really good information ..keep it up by selva

Selva said...

really good information ..keep it up by selva

தமிழ் உதயன் said...

அவரை பற்றிய பிம்பத்தை இந்த பதிவை படித்த பின்பு மாற்றிக்கொண்டேன்.. நல்ல பதிவு

Trails of a Traveler said...

Hats off to you Saravana...
I am not a great fan of SS Chandran, but the obituary you have given through blog is a good deed!

Ram

விஷாலி said...

செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து ஊர் பழி ஏற்றயாட - கர்ணா

NAGA INTHU said...

S.S சந்திரன் அவர்களுக்கு தங்களது அஞ்சலி செலுத்தும் இந்த பதிவு அவருக்கு இறுதி மரியாதை செலுத்திய அஇஅதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அவர்களின் நேரடியான அஞ்சலிக்கு நிகரானது.அடேங்கப்பா SSசந்திரனை பற்றி இவ்வளவு தகவல்களை தங்களின்அருவியென கொட்டும் இதமான,இனிய தமிழ் நடையில் படித்த ஒவ்வொருவரும் தாங்களே நேரில் அவருக்குஅஞ்சலி செலுத்திய உணர்வை பெறவைத்ததே தங்களின் எழுத்தின் மாபெரும் சக்தி
அரவரசன்

மணிஜி said...

நல்ல அஞ்சலி தொகுப்பு அண்ணே...(உங்க பொறுமைக்கு ஒரு சல்யூட்)

DR.K.S.BALASUBRAMANIAN said...

மிக அருமையான கட்டுரை.
எத்தனை தகவல்கள்.!. எஸ்.எஸ்.சந்திரனுக்கு இக்கட்டுரை ஒரு அஞ்ச‌லி

உண்மைத்தமிழன் said...

[[[sowri said...
உண்மை. தமிழரே]]]

ம்.. ம்.. ம்..

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் குமார் said...
எஸ்.எஸ் சந்திரனை பற்றி யாரும் எழுதவில்லையே என்று நினைத்து கொண்டு இருந்தேன். நீங்கள் நான் எதிர்பார்த்ததைவிட மிக அழகாக, அவரின் குண இயல்புகளை பற்றி எழுதியுள்ளீர்கள். உங்களது அனைத்து கட்டுரைகளும் அருமை. வாழ்த்துக்கள்.]]]

நன்றி தமிழ்குமார்..

வர வர நம்ம பக்கத்துக்கு புது விருந்தாளிகளின் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது..! சந்தோஷமா இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
அவரைப் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன், அவர் எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். எஸ்.வி.சேகருடன் பல படங்களில் அவரின் காமெடி நன்றாக இருக்கும்.]]]

அதுதான் அவரது உச்சபட்ச நடிப்புக் காலம்.. அவரில்லாமல் மீடியம், லோ பட்ஜெட் திரைப்படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது..!

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை பாண்டி said...
naanum avar pechai oru katchi meeting la kettu iruken. chumma veluthu vaangunaar. neenga sonna pala thagaval romba pudusu. konja naal munnadi vijay tv la "vaanga pesalam" nigalchi pannunaar... avoroda aadham saandhi adaiya prarthikiren..]]]

விஜய் டிவி நிகழ்ச்சிதான் அவர் கடைசியாக செய்து வந்த அயல் பணி..! அதுலேயும் நிறைவாக செய்து வந்ததாக பலரிடம் தெரிவித்து வந்தார். சேனல் வட்டாரமும் அவரால் திருப்தியடைந்ததாகவே எனக்கு நியூஸ் கிடைத்தது..!

உண்மைத்தமிழன் said...

[[[சிதம்பரம் said...
வேறு எங்கும் படித்திராத பல செய்திகளுடன் இருந்தது பதிவு. சிறந்த அஞ்சலி கட்டுரை. நன்றி..]]]

கருத்துக்கு மிக்க நன்றி சிதம்பரம் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோ/Joe said...
அண்ணே, வழக்கம் போல பல தகவல்களை திரட்டித் தந்திருக்கீங்க . உங்க திறமைக்கு நீங்க நல்ல உயரத்துக்கு போக உங்க அப்பன் முருகன் அருள் புரியட்டும்.]]]

அன்புக்கும், பண்புக்கும், ஆசிக்கும் மிக்க நன்றிகள் ஜோ..!

எத்துனை கருத்து வேறுபாடுகள் இருப்பினும் உம்மைப் போன்ற அன்பானவர்கள் இருப்பதால்தான் என்னைப் போன்றவர்களால் இங்கே நீடித்து இருக்க முடிகிறது..! நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[பனங்காட்டு நரி said...

அண்ணா, விரிவான அலசல். பல தகவல்களை திரட்டித் தந்திருக்கீங்க.
போலவே, நீங்கள் மிக வேகமாக தமிழில் தட்டச்சு செய்வீர்களாமே.. என்ன சாப்ட்வேர் use பண்றீங்க சார்., கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்]]]

கருத்துக்கு நன்றி நரி ஸார்..

நானும் மற்றவர்களைப் போல NHM Writer-ஐத்தான் பயன்படுத்துகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Selva said...
really good information. keep it up by selva.]]]

நன்றி செல்வா..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் உதயன் said...
அவரை பற்றிய பிம்பத்தை இந்த பதிவை படித்த பின்பு மாற்றிக் கொண்டேன்.. நல்ல பதிவு]]]

இப்படித்தான் எல்லாருமே ஒரு விஷயத்தை மட்டுமே வைத்து அவரை எடை போட்டுப் பேசுகிறார்கள்..!

ஆனால் வாழ்க்கையில் மிக அடித்தட்டு நிலைமையில் இருந்து படாதபாடுபட்டு முன்னுக்கு வந்திருக்கிறார். அவருடைய உழைப்பின் பயனை அவருக்குக் கொடுக்க விடாமல் செய்துவிட்டது பாழாய்ப் போன அரசியல்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ram said...
Hats off to you Saravana... I am not a great fan of SS Chandran, but the obituary you have given through blog is a good deed!]]]

நன்றி ராம் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[மனசாட்சியே நண்பன் said...
செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து ஊர் பழி ஏற்றயாட - கர்ணா]]]

தாராளமாக பாடலாம்.. பொருத்தமான இடமும் கூட..!

தனக்கு வயிற்றுப் பசியைத் தீர்த்தவர்களை என்றென்றைக்கும் யாராலும் மறக்க முடியாது..! நன்றியைத் திருப்பிச் செய்தால் நமக்கு நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். இல்லாவிடில் வாழ்நாள் முழுவதும் அந்தக் குற்றவுணர்வு இருந்து கொண்டேதான் இருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[NAGA said...

S.S.சந்திரன் அவர்களுக்கு தங்களது அஞ்சலி செலுத்தும் இந்த பதிவு அவருக்கு இறுதி மரியாதை செலுத்திய அஇஅதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அவர்களின் நேரடியான அஞ்சலிக்கு நிகரானது. அடேங்கப்பா S.S.சந்திரனை பற்றி இவ்வளவு தகவல்களை தங்களின் அருவியென கொட்டும் இதமான, இனிய தமிழ் நடையில் படித்த ஒவ்வொருவரும் தாங்களே நேரில் அவருக்கு அஞ்சலி செலுத்திய உணர்வை பெற வைத்ததே தங்களின் எழுத்தின் மாபெரும் சக்தி.

அரவரசன்]]]

அரவரசன்.. தங்களுடைய எழுத்து என்னை மென்மேலும் யோசிக்க வைக்கிறது..!

இந்த அளவுக்கா எனது எழுத்துக்கள் இருக்கின்றன..? எனக்கே ஆச்சரியமாக உள்ளது..!

தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[மணிஜீ...... said...
நல்ல அஞ்சலி தொகுப்பு அண்ணே... (உங்க பொறுமைக்கு ஒரு சல்யூட்)]]]

சரிங்கண்ணே..! இப்படி அடிக்கடி வந்துட்டுப் போனாத்தான் என்னையும் நாலு பேரு பிளாக்கர்ன்னு மதிப்பாய்ங்கண்ணா..!

உண்மைத்தமிழன் said...

[[[drbalas said...
மிக அருமையான கட்டுரை. எத்தனை தகவல்கள்.!. எஸ்.எஸ்.சந்திரனுக்கு இக்கட்டுரை ஒரு அஞ்ச‌லி]]]

நன்றிகள் பாலா ஸார்..!

gkrishna said...

ச.ச.சந்திரன் அவர்கள் பற்றி பல நல்ல தகவல்கள் கொடுத்து உள்ளீர்கள். மிக சிறந்த கட்டுரை . கோவை சரளா - சந்திரன் தொடர்பு பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன்
ஒருவருடைய தனிப்பட்ட வாழ்கையை கேலி செய்வது எனது நோக்கம் அல்ல தெரிந்து கொள்ள தான்
தனி கட்டுரை எழுதுவீர்களா

என்றும் அன்புடன்

கிருஷ்ணா

கானா பிரபா said...

பதிவு மிகவும் காத்திரமாக அமைந்திருந்தது, முழுதையும் படித்து முடித்தேன்

Anonymous said...

இவ்வளவு சிறப்பாக தொகுத்து எழுத முடியுமா என அசந்து போனேன்...சிறந்த எழுத்தாளர் நீங்கள்...சந்திரன் எனக்கு பிடித்த நடிகர்..அரசியலால் சினிமாவில் அவர் நிலைக்க முடிய வில்லை..அவரை பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் தங்களுக்கு என் நன்றி..தமிழ்மணத்தில் குறைவான ஓட்டுக்களே கிடைத்தது வருத்தம் தருகிறது இதை விட சிறப்பான பதிவு இல்லை..மகுடத்தில் வர வேண்டிய பதிவு...

உண்மைத்தமிழன் said...

[[[gkrishna said...

ச.ச.சந்திரன் அவர்கள் பற்றி பல நல்ல தகவல்கள் கொடுத்து உள்ளீர்கள். மிக சிறந்த கட்டுரை . கோவை சரளா - சந்திரன் தொடர்பு பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஒருவருடைய தனிப்பட்ட வாழ்கையை கேலி செய்வது எனது நோக்கம் அல்ல தெரிந்து கொள்ளதான். தனி கட்டுரை எழுதுவீர்களா

என்றும் அன்புடன்
கிருஷ்ணா]]]

வேண்டாம் கிருஷ்ணா.. அது முடிந்து போன ஒரு விஷயம்.. அதில் ஒருவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார். யாருக்கும் நம்மால் எந்தப் பிரச்சினையும் வேண்டாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[கானா பிரபா said...
பதிவு மிகவும் காத்திரமாக அமைந்திருந்தது.. முழுதையும் படித்து முடித்தேன்.]]]

முதலில் உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தேன் தம்பி..!

நன்றி..!

Ganpat said...

Brilliant
simply
BRILLIANT

What a tribute, man!

Not only Shri.SSC but ALSO YOU Mr.UNMAITHAMIZHAN

நீங்கள் எங்கேயோ இருக்கவேண்டியவர்

Best regards,

உண்மைத்தமிழன் said...

[[[ஆர்.கே.சதீஷ்குமார் said...

இவ்வளவு சிறப்பாக தொகுத்து எழுத முடியுமா என அசந்து போனேன். சிறந்த எழுத்தாளர் நீங்கள். சந்திரன் எனக்கு பிடித்த நடிகர். அரசியலால் சினிமாவில் அவர் நிலைக்க முடியவில்லை. அவரை பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் தங்களுக்கு என் நன்றி. தமிழ்மணத்தில் குறைவான ஓட்டுக்களே கிடைத்தது வருத்தம் தருகிறது இதைவிட சிறப்பான பதிவு இல்லை. மகுடத்தில் வர வேண்டிய பதிவு.]]]

நன்றி சதீஷ்குமார்..!

சினிமா பற்றிய செய்திகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அங்கேதான் இது இடம் பெற வேண்டிய கட்டாயம்..! வேறு வழியில்லை..!

ஓட்டளிப்பது என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது..!

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...

Brilliant
simply
BRILLIANT

What a tribute, man! Not only Shri.SSC but ALSO YOU Mr.UNMAITHAMIZHAN

நீங்கள் எங்கேயோ இருக்க வேண்டியவர்
Best regards]]]

வருகைக்கு மிக்க நன்றி கண்பத்..!

சில மாத இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..!

வாழ்க வளமுடன்..!

ராம்ஜி_யாஹூ said...

அருமையான பதிவு, அறிய தகவல்களுக்கு நன்றி.

கண்பட் பின்னூட்டம் அருமை

idroos said...

Arumaiyana padhivu

idhu chandranukku samarpanam

eppadi sir neenda katturaigalai type seygireegal

Sundar Padmanaban said...

உண்மைத் தமிழன்

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நான் அறிந்திராத பல தகவல்கள்.

எஸ்.எஸ்.சந்திரன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலிகள்.

நன்றி.

IKrishs said...

இந்த அஞ்சலி பதிவு உங்களிடமிருந்து நான் ஆவலுடன் எதிர்பார்த்தது... மறைந்த SS சந்திரன் அவர்களின் நிறை குறைகளை மிக அழகாக ,அவரது மரியாதைக்கு எந்த வித பங்கமும் ஏற்படா வண்ணம் எழுதி இருப்பதை சிலாகிக்காமல் எப்படி இருக்க முடியும்?
காலையில் அலுவலகத்தில் படித்த உடனே கமெண்ட் போட நினைத்தேன்..தமிழில் டைப் பண்ணி பாராட்டவே சற்று தாமதித்தேன்..

varagan said...

எவ்வளவு தெளிவான வார்த்தைகள்

அருமையான மொழிகள்

சிறப்பான நேர்த்தியான செய்திகள்.

அதனை சொல்லிய விதமும்

சொன்ன தருணமும்

அவரை எதிர்த்தோரும் அவரை புகழும் விதத்தில் என்ன

அருமையான கட்டுரை.

நன்றி

வராகன்

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...
அருமையான பதிவு, அறிய தகவல்களுக்கு நன்றி. கண்பட் பின்னூட்டம் அருமை.]]]

அடுத்தவர் பி்ன்னூட்டத்தை அருமைன்னு சொல்ற அளவுக்கு நல்ல மனசுக்காரர்ண்ணே நீங்க..!

வணங்குகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[முசமில் இத்ரூஸ் said...
Arumaiyana padhivu. idhu chandranukku samarpanam. eppadi sir neenda katturaigalai type seygireegal.]]]

நன்றி முசமில்..

தட்டச்சு வருடக் கணக்காக செய்வதால் எந்தக் கஷ்டமும் இல்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[வற்றாயிருப்பு சுந்தர் said...
உண்மைத் தமிழன்.. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நான் அறிந்திராத பல தகவல்கள். எஸ்.எஸ்.சந்திரன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலிகள். நன்றி.]]]]

வருத்தங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சுந்தர்..!

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்குமார் said...

இந்த அஞ்சலி பதிவு உங்களிடமிருந்து நான் ஆவலுடன் எதிர்பார்த்தது. மறைந்த SS சந்திரன் அவர்களின் நிறை குறைகளை மிக அழகாக, அவரது மரியாதைக்கு எந்தவித பங்கமும் ஏற்படா வண்ணம் எழுதி இருப்பதை சிலாகிக்காமல் எப்படி இருக்க முடியும்?

காலையில் அலுவலகத்தில் படித்த உடனே கமெண்ட் போட நினைத்தேன். தமிழில் டைப் பண்ணி பாராட்டவே சற்று தாமதித்தேன்.]]]

உங்களுடைய ஆர்வத்திற்கு எனது சல்யூட் கிருஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[varagan said...
எவ்வளவு தெளிவான வார்த்தைகள்
அருமையான மொழிகள். சிறப்பான நேர்த்தியான செய்திகள். அதனை சொல்லிய விதமும், சொன்ன தருணமும். அவரை எதிர்த்தோரும் அவரை புகழும் விதத்தில் என்ன. அருமையான கட்டுரை.
நன்றி
வராகன்]]]

நன்றி வராகன் ஸார்..!

Anonymous said...

//பைபாஸ் ஆபரேஷனுக்காக சந்திரன், ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து செல்வுகளையும் ஜெயலலிதாவே ஏற்றுக் கொண்டு//

"இதய அறுவைச் சிகிச்சை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் செய்யப்பட்டது. முழுச் செல வையும் வைகோதான் செய்து கொடுத்தார். ''எல்லார்க்கும் இதயம் லப் டப்னுதான் அடிக்கும். எனக்கு மட்டும் வைகோ... வைகோன்னு அடிக்கும்!'' என்பார் எஸ்.எஸ்" - ஜூனியர் விகடன்

எது சரியான தகவல்???

Anonymous said...

பின்தொடர்வுக்கு

உண்மைத்தமிழன் said...

[[[ஜூனியர் தருமி said...

//பைபாஸ் ஆபரேஷனுக்காக சந்திரன், ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து செல்வுகளையும் ஜெயலலிதாவே ஏற்றுக் கொண்டு//

"இதய அறுவைச் சிகிச்சை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் செய்யப்பட்டது. முழுச் செல வையும் வைகோதான் செய்து கொடுத்தார். ''எல்லார்க்கும் இதயம் லப் டப்னுதான் அடிக்கும். எனக்கு மட்டும் வைகோ... வைகோன்னு அடிக்கும்!'' என்பார் எஸ்.எஸ்" - ஜூனியர் விகடன்

எது சரியான தகவல்???]]]

நானும் படித்தேன் தோழர். விசாரித்துச் சொல்கிறேன்..!

ஸ்ரீராம். said...

சந்திரன் இறந்து போனது இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் தெரியும். டிவி, மற்றும் செய்தித் தாள்கள் கூட இவர் மறைவை அடக்கியே வாசித்தது என்று நினைக்கிறேன்.

Unknown said...

எம்ஜிஆர் பற்றி இவர் பேசாத பேச்சா!? நோய்வாய்ப்பட்டு தேறி வந்து ஆட்சி செய்து கொண்டிருந்தபோது இந்த சந்திரன் ஒரு மேடையில் மைக் முன்னாடி போய் நின்று கொண்டு 5 நிமிஷம் பேசாமல் சைகை காண்பித்துக்கொண்டிருந்தார். பொதுமக்களிடமிருந்து கூச்சல் எழும்ப, 5 நிமிஷம் நான் பேசலன்னவுடனே இப்படி கத்தறீங்களே ஆறு மாசமா ஒரு முதலமைச்சர் பேசாம ஆட்சி நடத்துறத மட்டும் வேடிக்கை பார்க்கறீங்களே ஏன்? கேட்டார் இந்த ஆள். வயோதிகத்தையும் உடல் நலக்குறைவு, ஊனம் போன்றவற்றக்கூட விட்டுவைக்காத தரங்கெட்ட பிழைப்பு நடத்தியவர் இவர். இவருடைய மாப்பிள்ளையாகிய ராதாரவியோ 'எங்கப்பனுக்கு சரியா சுடத்தெரியலை'ன்னு சொன்னவர். அது சரி இந்த ஜெயலலிதாவுக்கோ கருணாநிதியை திட்டுபவர்கள் மட்டும் பிடிப்பதில்லை, எம்ஜிஆரை திட்டுபவர்களையும் பிடிக்கும். என்ன கேவலமான மனிதாபிமானமற்ற அரசியல்.

Prakaash Duraisamy said...

மிகவும் அற்புதமான தொகுப்பு , தான் உண்ட வீட்டுக்கு உண்மையாக உழைத்த மாமனிதன் .

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...
சந்திரன் இறந்து போனது இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் தெரியும். டிவி, மற்றும் செய்தித் தாள்கள்கூட இவர் மறைவை அடக்கியே வாசித்தது என்று நினைக்கிறேன்.]]]

சன், கலைஞர் டிவிக்கள்ல காட்டலை. ஆனால் மற்ற சேனல்களில் காட்டினார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[எம்.ஞானசேகரன் said...
எம்ஜிஆர் பற்றி இவர் பேசாத பேச்சா!? நோய்வாய்ப்பட்டு தேறி வந்து ஆட்சி செய்து கொண்டிருந்தபோது இந்த சந்திரன் ஒரு மேடையில் மைக் முன்னாடி போய் நின்று கொண்டு 5 நிமிஷம் பேசாமல் சைகை காண்பித்துக்கொண்டிருந்தார். பொதுமக்களிடமிருந்து கூச்சல் எழும்ப, 5 நிமிஷம் நான் பேசலன்னவுடனே இப்படி கத்தறீங்களே ஆறு மாசமா ஒரு முதலமைச்சர் பேசாம ஆட்சி நடத்துறத மட்டும் வேடிக்கை பார்க்கறீங்களே ஏன்? கேட்டார் இந்த ஆள். வயோதிகத்தையும் உடல் நலக்குறைவு, ஊனம் போன்றவற்றக்கூட விட்டுவைக்காத தரங்கெட்ட பிழைப்பு நடத்தியவர் இவர். இவருடைய மாப்பிள்ளையாகிய ராதாரவியோ 'எங்கப்பனுக்கு சரியா சுடத்தெரியலை'ன்னு சொன்னவர். அது சரி இந்த ஜெயலலிதாவுக்கோ கருணாநிதியை திட்டுபவர்கள் மட்டும் பிடிப்பதில்லை, எம்ஜிஆரை திட்டுபவர்களையும் பிடிக்கும். என்ன கேவலமான மனிதாபிமானமற்ற அரசியல்.]]]

இதுதான் அரசியல்..!

தி.மு.க. மேடைகளில் அதிமுகவையும், அதிமுக மேடையில் திமுகவையும் வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாமல் பேசித் தீர்த்திருக்கிறார். அதன் பலனைத்தான் இறந்த அன்று அவரது குடும்பம் அனுபவித்தது..!

உண்மைத்தமிழன் said...

[[[Prakaash Duraisamy said...
மிகவும் அற்புதமான தொகுப்பு , தான் உண்ட வீட்டுக்கு உண்மையாக உழைத்த மாமனிதன்.]]]

மாமனிதன் அல்ல... நன்றியுணர்ச்சி அதிகமிருந்த சாதாரணமான மனிதர்தான்..!

Indian said...

திரைப்படங்களின் மூலம் எஸ்.எஸ். சந்திரன் மேல் பெரிய ஆர்வமோ, விருப்பமோ இருந்ததில்லை. அதற்குக் காரணம் அவர் எனக்கு அறிமுகமானது அவரின் மொக்கை நகைச்சுவை படங்களினால் ஆகவும் இருக்கலாம். விஜய் டிவி வாங்க-பேசலாம்-வாங்க நிகழ்ச்சியில் ஸ்பாண்டேனியஸாக நகைச்சுவையை அள்ளித் தெளிக்கும்போது விரும்ப ஆரம்பித்தேன். அது குறுகிய காலமே நீடித்தது என்பதில் வருத்தமே.

இவ்விடுகை எஸ்.எஸ். சந்திரன் அவர்களுக்கு ஒரு நல்ல அஞ்சலி.
கட்டுரைக்கான உங்களின் உழைப்பு விளங்குகிறது.

தீப்பெட்டி said...

நீங்க தான் பாஸ், சாதாரண மனிதர்களை பதிவு செய்யும் யதார்த்த பதிவர்..

உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...

திரைப்படங்களின் மூலம் எஸ்.எஸ்.சந்திரன் மேல் பெரிய ஆர்வமோ, விருப்பமோ இருந்ததில்லை. அதற்குக் காரணம் அவர் எனக்கு அறிமுகமானது அவரின் மொக்கை நகைச்சுவை படங்களினால் ஆகவும் இருக்கலாம். விஜய் டிவி வாங்க-பேசலாம்-வாங்க நிகழ்ச்சியில் ஸ்பாண்டேனியஸாக நகைச்சுவையை அள்ளித் தெளிக்கும்போது விரும்ப ஆரம்பித்தேன். அது குறுகிய காலமே நீடித்தது என்பதில் வருத்தமே.

இவ்விடுகை எஸ்.எஸ். சந்திரன் அவர்களுக்கு ஒரு நல்ல அஞ்சலி.
கட்டுரைக்கான உங்களின் உழைப்பு விளங்குகிறது.]]]

நன்றி நண்பரே..!

சம்பாதிக்க வேண்டும் என்கிற காரணத்தாலும், திரைப்படங்களில் தன்னை அனைவரும் புறக்கணிக்கிறார்கள் என்பதாலும்தான் அந்த டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் வந்தார்.. அதுவே பாதியில் நிராசையாகிவிட்டது.

நித்யன் said...

அண்ணா...

மிகவும் அற்புதமான தொகுப்பு.

சிறப்பு.

அன்பு நித்யன்

Rafeek said...

நகைச்சுவை நடிகராக திரைப்படங்களில் நடித்ததை மக்களும் மீடியாவும் மறந்த நிலையில்..சமீபமாக அவர் விஜய் டிவியில் கலந்து கொண்ட ”வாங்க பேசலாம்” அவரை மக்களுக்கு நெருக்கமாக்கியது.அதனால் அவருக்கு விஜய் டிவியில் ஒரு கௌரவமும் அளிக்கப்பட்டது.அது போல் இப்பதிவும் எஸ்.எஸ். சந்திரன் அவர்களுக்கு ஒரு நல்ல அஞ்சலி. சாதாரண சாதனை மனிதர்களையும் பதிவு செய்யும் உங்கள் பணி தொடரட்டும்.

முரளிகண்ணன் said...

அருமையான கட்டுரை அண்ணே. கலக்கிட்டீங்க.

முரளிகண்ணன் said...

அருமையான கட்டுரை அண்ணே. கலக்கிட்டீங்க.

sriram said...

உ.த அண்ணே
சந்திரன் மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு இருந்ததில்லை, உங்க கட்டுரை அதை கொஞ்சம் மாத்தியிருக்கு.
கட்டுரையின் பின்னாலிருக்கும் உழைப்பு தெரிகிறது.

கட்சி பேதமில்லாமல் விஜயகாந்த் பழகும் விதம் (ஸ்டாலினுக்கு வாழ்த்தாகட்டும், மாறனிடம் பேசுவதாகட்டும், சந்திரனின் மறைவுக்கு வந்ததாகட்டும்) இதமளிக்கிறது.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...
நீங்கதான் பாஸ், சாதாரண மனிதர்களை பதிவு செய்யும் யதார்த்த பதிவர். உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..]]]

ஹி.. ஹி.. நன்றி தீப்பெட்டியண்ணே..! இந்தப் பக்கம் வர்ற அளவுக்கெல்லாம் உங்களுக்கு இப்போ நேரம் இருக்கா..?

உண்மைத்தமிழன் said...

[[[நித்யகுமாரன் said...

அண்ணா... மிகவும் அற்புதமான தொகுப்பு. சிறப்பு.

அன்பு நித்யன்]]]

அன்பு நித்யா.. தாமதமான நன்றிகள்..! ஆனாலும் நீ இந்தப் பக்கம் அடிக்கடி வராதது எனக்கு பெரும் குறையே..!

உண்மைத்தமிழன் said...

[[[Rafeek said...
நகைச்சுவை நடிகராக திரைப்படங்களில் நடித்ததை மக்களும் மீடியாவும் மறந்த நிலையில். சமீபமாக அவர் விஜய் டிவியில் கலந்து கொண்ட ”வாங்க பேசலாம்” அவரை மக்களுக்கு நெருக்கமாக்கியது. அதனால் அவருக்கு விஜய் டிவியில் ஒரு கௌரவமும் அளிக்கப்பட்டது. அது போல் இப்பதிவும் எஸ்.எஸ். சந்திரன் அவர்களுக்கு ஒரு நல்ல அஞ்சலி. சாதாரண சாதனை மனிதர்களையும் பதிவு செய்யும் உங்கள் பணி தொடரட்டும்.]]]

நன்றி ரபீக்..

அவர் ஒரு சிறந்த நடிகர் என்ற முறையில் மட்டுமே என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடிந்தது. அரசியலுக்குள் மட்டும் அவர் போகாமல் இருந்திருந்தால் அவருடைய திரையுலக வாழ்க்கை நன்றாகவே இருந்திருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[முரளிகண்ணன் said...
அருமையான கட்டுரை அண்ணே. கலக்கிட்டீங்க.]]]

ஆஹா.. பேராசிரியர் அண்ணே வந்திருக்காரு.. சவுக்கியமா அண்ணே.. அப்பப்ப வந்து போங்கண்ணே..

உண்மைத்தமிழன் said...

[[[sriram said...

உ.த அண்ணே சந்திரன் மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு இருந்ததில்லை. உங்க கட்டுரை அதை கொஞ்சம் மாத்தியிருக்கு.
கட்டுரையின் பின்னாலிருக்கும் உழைப்பு தெரிகிறது.]]]

உங்களைப் போலவேதான் பலரும் சொல்கிறார்கள். இதற்குக் காரணமே அவருடைய அரசியல் மேடைப் பேச்சுக்கள்தான்..!

கட்சி பேதமில்லாமல் விஜயகாந்த் பழகும் விதம் (ஸ்டாலினுக்கு வாழ்த்தாகட்டும், மாறனிடம் பேசுவதாகட்டும், சந்திரனின் மறைவுக்கு வந்ததாகட்டும்) இதமளிக்கிறது.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்]]]

அரசியல்வாதியாயிட்டா சில விஷயங்களுக்கு வளைஞ்சு கொடுக்கணும்ண்ணே..!