சென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா


05-09-08

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

உலகத் திரைப்பட ஆர்வலர்களுக்கு மற்றுமொரு இனிப்பான செய்தி.

வருடாவருடம் ICAF அமைப்பு சென்னையில் நடத்தி வரும் உலகத் திரைப்பட விழா இந்த வருடமும் நடைபெற இருக்கிறது.

வருகின்ற டிசம்பர் மாதம் 17-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை சென்னையில் இந்த விழா நடைபெறும் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக 6-வது ஆண்டாக அந்த அமைப்பு நடத்தும் இந்த விழாவின் மூலம்தான் உலக சினிமா பற்றிய ஒரு புரிதலே எனக்குக் கிடைத்தது.

முழுக்க, முழுக்க ICAF என்னும் இந்தத் திரைப்பட அமைப்பு மற்றும் சினிமா ஆர்வலர்களின் கூட்டு முயற்சியால் நடைபெறும் இந்த விழா வருடா வருடம் மெருகேறிக் கொண்டே செல்கிறது.

முதல் 3 திரைப்பட விழாக்கள் சென்னை அண்ணா சாலையில் இருந்த ஆனந்த் திரையரங்கத்திலும், பிலிம் சேம்பர் திரையரங்கத்திலும் நடந்தது. அந்தத் திரையரங்கம் வணிக வளாகம் கட்ட வேண்டி இடிக்கப்பட்டதால் அடுத்த 2 திரைப்பட விழாக்கள் பைலட் திரையரங்கம், உட்லண்ட்ஸ் திரையரங்கம், பிலிம் சேம்பர் திரையரங்கம் என்று 3 இடங்களிலும் நடந்தது.

இந்த முறையும் சென்ற ஆண்டு போலவே அதே இடங்களில்தான் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நுழைவுக் கட்டணம் ICAF அமைப்பில் ஏற்கெனவே அங்கத்தினர்களாக உள்ளவர்களுக்கு மட்டும் 300 ரூபாய் என்றும் மற்றவர்களுக்கு 500 ரூபாய் என்றும் சென்ற ஆண்டு வசூலிக்கப்பட்டது. இந்தாண்டும் அதே அளவு இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு நாளைக்கு 5 படங்கள் என மூன்று திரையரங்குகளிலும் சேர்த்து 15 திரைப்படங்களாக.. 9 நாட்களில் கிட்டத்தட்ட 136 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

இந்தாண்டு கோவா, திருவனந்தபுரம் திரைப்பட விழாக்களில் இடம் பெறவிருக்கும் புதிய திரைப்படங்களில் அதிமான படங்கள் சென்னை திரைப்பட விழாவிலும் பங்கு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகத் திரைப்படங்களில் ஆர்வம் உள்ள வலைப்பதிவர்கள் இப்போதே தங்களது நிகழ்ச்சி நிரலை இதற்கேற்றாற்போல் மாற்றி வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு http://www.chennaifilmfest.org/ என்ற முகவரிக்குச் செல்லவும்.

நன்றி


உண்மைத்தமிழன்