பெண்மையே நீ வாழ்க!

10-08-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே!

திரைப்படங்கள் பெரும்பாலும் மக்களை மகிழ்விக்கத்தான் என்ற கூற்றை ஊடகங்கள் நுணுக்கமாக தங்களுடைய தொழில் தர்மத்திற்காக, ஊடகப் பார்வையாளர்கள் மனதில் வடித்துக் கட்டிய கஞ்சியாகக் கொட்டி வைத்திருக்கின்றன.

மக்களை மகிழ்வித்த காலம்போய் மக்களிடம் தூங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் காலமும் போய், நிஜத்தை அப்படியே உள்ளங்கையில் வைத்துக் காட்டுகிறோம்.. பார் என்று ஐயந்திரிபுற ஒருவனது வாழ்க்கையை அவனே பார்க்கும்படியாக வடிவமைத்து வருகின்ற திரைப்படங்கள்தான் அதிகமாகி வருகின்றன.

போராகட்டும், நோயாகட்டும், வேதனையாகட்டும், கஷ்டமாகட்டும், பெருங்கடல் கொண்ட ஆழிப் பேரலையாகட்டும்.. முதலில் இதில் தாக்குண்டு போய் செயல் இழந்து போவது பெண்கள்தான். முன்னேறிய நாடுகளாக இருந்தாலும் சரி.. முக்கி, முக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளாக இருந்தாலும் சரி.. ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் ஒரு பெண்ணின் கஷ்டப் பெருமூச்சு தன் கனலை பரப்பி எங்கெங்கும் வியாபித்திருக்கும். இதில் யாருக்கும், எந்த நாட்டுக்கும் விதிவிலக்கு அளிக்க முடியாது.

அப்படியரு துன்பத்தை அனுபவிக்கும் அபலைப் பெண் ஒருத்தியின் மனதை ரம்மியமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் UDAYAKANTHA WARNASURIYA. இவர் இயக்கிய 'SHOWER OF GOLD' என்கின்ற சிங்கள மொழித் திரைப்படத்தை சமீபத்தில் காண நேர்ந்தது.

நோய் தாக்கினால் மரணம் ஒரு ஆண்டோ, இரண்டாண்டுகளோ.. நொடியில் மரணம் என்றால் அனைவருக்கும் சந்தோஷம்தான்.. ஆனால் 50 ஆண்டுகளாக ஒரு நாட்டையே பிணியில் தள்ளி எட்ட நின்று கை கட்டி வேடிக்கை பார்க்கிறது விதி. இந்த விதியின் விளையாட்டில் உருட்டப்பட்ட சோழிகளாக சில சமயம் வானம் பார்த்தும், பல சமயங்கள் கவிழ்ந்தும் பரிதாபப்பட்டுப் போய் நிற்கிறார்கள் இரு தரப்பையும் சேர்ந்த பெண்கள்.

சூழ்நிலைதான் ஒரு மனிதனை குற்றவாளியாக்குகிறது. இதை உலகின் எந்தவொரு நாட்டின் சட்ட மாமேதையும் ஒத்துக் கொள்வான். அந்தச் சூழ்நிலைக்கு அவனைத் தள்ளுவது அவன் சார்ந்த சமூகம்தானே ஒழிய அவனல்ல.. அந்தச் சமூகத்தின் குற்றச் செயலுக்கு யாரும் பொறுப்பேற்க முன் வருவதில்லை என்பதுதான் துரதிருஷ்டவசமான செயல்.

அப்படிப்பட்ட சூழ்நிலை கைதியான ஒரு பெண்ணின் கதைதான் இந்தப் படம். அமெலி என்ற அந்த சிங்களப் பெண்ணுக்கு 4 வயதில் ஒரு மகன் உண்டு. கணவன் என்ற பெயரில் காதலன் உண்டு. ஆனால் இன்னமும் அவளை முறைப்படி திருமணம் செய்து கொள்ள மறுக்கிறான். காரணம், அவனுக்கு சட்ட ரீதியான மனைவி ஒருத்தி ஏற்கெனவே இருக்கிறாள்.

அமெலியின் காதலன் அடியாள் வேலையை செய்து கொண்டிருக்கிறான். அவ்வப்போது தனது உடல் பசிக்கும், களைப்புக்கும் அமெலியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். அமெலிக்கு திருமண வயதில் ஒரு தங்கையும், வயதான தாயாரும் உண்டு.

எங்கோ ஓரிடத்தில் புலிகளின் தாக்குதலில் உயிரிழந்த சிங்கள ராணுவ வீரர்களின் உடல்கள் கொழும்புக்கு கொண்டு வரப்படுகின்றன. அந்த உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனை பொறுப்பாளரிடம் பிணங்கள் ஒப்படைக்கப்பட்டு, தூக்கி வந்த ராணுவ அதிகாரிகளின் தலை மறைந்தவுடன் ஒரு புரோக்கரின் தலை தென்படுகிறது. மருத்துவமனையின் மார்ச்சுவரி அறையின் பொறுப்பாளரும், புரோக்கரும் ஏற்கெனவே ஒரு 'தொழில்' காரணமாக நெருக்கமாகத்தான் இருக்கிறார்கள்.

போரில் இறந்து, அடையாளம் காணாத ராணுவ வீரர்களின் உடல்கள் மருத்துவமனையில் சில காலம் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். அப்படி உரிமை கோராத வீரர்களின் உடலுக்கு உடனடியாக ஒரு சொந்தத்தை உருவாக்கி, அவர்களின் மூலம் வீர சொர்க்கம் அடைந்ததற்காக அரசு நிதியுதவியாக கொடுக்கும் பணத்தை வாங்கி அதில் ஒரு பங்கை தான் எடுத்துக் கொண்டு இன்னொரு பங்கை அரசுத் தரப்பு உயரதிகாரிகளுக்கு கொடுத்துவிட்டு இரண்டு பங்கை போனால் போகிறதென்று திடீர் சொந்தக்காரர்களுக்குப் பிரித்துக் கொடுத்து 'தேச சேவை' செய்வதுதான் அந்த புரோக்கரின் வேலை.

இந்தப் பக்கம் அமெலி தன்னைத் திருமணம் செய்து கொள் என்று தனது காதலனை நச்சரிக்கிறாள். அவனோ முடியாது என்று மறுக்க.. வீட்டிற்கு மூத்தவள்; கல்யாணம் ஆகாமலேயே பிள்ளை வேறு இருக்கிறான். இங்கே இருந்தால் அவமானமும், பரிகாசமும் தொடரும். வெளிநாட்டுக்காவது சென்று பிழைக்கலாம் என்ற எண்ணத்தில் சைப்ரஸ் நாட்டுக்குச் செல்ல ஆயத்தமாகிறாள் அமெலி. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அந்த புரோக்கரின் கண்ணில் படுகிறாள் அமெலி.

சைப்ரஸ் நாட்டுக்கு கூலி வேலைக்கு ஆளனுப்பும் நிறுவனம் 80,000 ரூபாய் பணம் கேட்க, அந்தப் பணத்துக்கு தான் என்ன செய்வது என்ற குழப்பத்தில் அமெலி இருக்கும்போது, புரோக்கர் அவளிடத்தில் நெருங்கி விடுகிறான்.

சாதாரணமாக உதவுவதைப் போல் ஆரம்பித்து வலையை விரிக்கிறான் புரோக்கர். "ஒரே ஒரு முறை செய்யும் வேலைதான்.. நீ தேடிக் கொண்டிருக்கும் பணம் கையில் கிடைக்கும். பணம் கைக்கு வந்த அடுத்த நாளே நீ வெளிநாட்டுக்கு ஓடிவிடலாம்.. உன்னை யார் கேட்கப் போறா..? தேடப் போறா..?" என்று புறா கூண்டை விரித்து வைக்கிறான் புரோக்கர். அமெலியின் அரை பாதி மனசு, "இப்ப நான் என்ன செய்யணும்?" என்று கேட்கிறது.. "ஒண்ணும் வேணாம்.. ஒரு அனாதை பொணத்துக்கு நீ மனைவியா நடிக்கணும்.. அவ்ளோதான்.. சிம்பிள்.. கை மேல காசு.." என்கிறான் புரோக்கர்.

இரவெல்லாம் யோசிக்கிறாள் அமெலி. தான் இறுக்கி அணைத்திருக்கும் தன் மகனின் எதிர்கால வாழ்க்கைக்காவது தான் உழைத்தாக வேண்டுமே என்று எண்ணுகிறாள். உடன்படுகிறாள் விதியின் விளையாட்டுக்கு..

போட்டோ ஸ்டூடியோவில் ஒரு வாலிபனின் அருகில் மணமகள் உடையில் அமர்ந்து போஸ் கொடுக்கிறாள் அமெலி. படம் எடுத்தவுடன் உயிரோடு போஸ் கொடுத்தவனின் தலை, கம்ப்யூட்டரின் உதவியால் வெட்டப்பட்டு, மார்ச்சுவரியில் பிணமாக இருக்கும் ஒரு ராணுவ வீரனின் தலை கனகச்சிதமாகப் பொருத்தப்பட, புரோக்கர் புல்லரித்துப் போகிறான். கூடவே, இருவருக்கும் திருமணம் நடந்ததாக ஒரு பொய் சர்டிபிகேட்டும் பெறப்படுகிறது.

மிக, மிக கண்டிப்பான தோற்றமுள்ள ஒரு கர்னலின் முன்னால் சென்று நிறுத்தப்படுகிறாள் அமெலி. அவர் தீவிரமாக விசாரித்துவிட்டுத்தான் பணம் தருவேன் என்கிறார். புரோக்கரின் ஆலோசனைப்படியே அங்கேயே மயக்கம் போட்டு விழுந்து, கண்ணீர் விட்டு கதறி அழுது தீர்க்கிறாள் அமெலி. இந்த நடிப்பை அப்படியே நம்பி விடுகிறார்கள் கர்னலும், அவருடைய சக அலுவலரான ஒரு மேஜரும். இறந்துபோன சமந்தா என்ற அந்த வீரனின் பெற்றோருடன் வந்தால், பணத்தை உடனே தருவதாகச் சொல்கிறார் கர்னல்.

தாமதமே இல்லாமல் புரோக்கர் அமெலியையும் அவளது மகனையும் அழைத்துக் கொண்டு கொழும்புவில் இருந்து ரயிலில் பயணமாகிறான். தொலைதூர கிராமத்தில் இருக்கும் சமந்தாவின் வீட்டிற்குச் சென்று தன்னுடைய தங்கையான இந்த அமெலியை உங்கள் பையன் காந்தர்வ திருமணம் செய்து கொண்டான். அதன் விளைவாகத்தான் இந்தப் பையன் பிறந்தான்.. என்று அறிமுகம் செய்து வைக்கிறான் புரோக்கர்.

நம்ப முடியவில்லை சமந்தாவின் பெற்றோரால். ஆனால் நாகரிகமாக அவர்களை நடத்துகிறார்கள். இவர்களும் விட்டுப் பிடிக்க வேண்டும் என்பதால் கொட்டும் மழையில் அந்த இரவிலேயே கொழும்பு திரும்புவதாகச் சொல்லிக் கிளம்ப.. அது பாதுகாப்பில்லை என்று சொல்லி பையனையும், அவளையும் இரவில் அங்கேயே தங்கிவிட்டு காலையில் போகச் சொல்கிறார் சமந்தாவின் அப்பா. அப்படியே செய்கிறார்கள் திடீர் உடன்பிறப்புக்களான புரோக்கரும், அமெலியும்.

அங்கே அமெலியின் காதலன் அவளைத் தேடி வீட்டிற்கு வருகிறான். அவள் இல்லை என்றதும் எங்கே என்று தேடிவிட்டுச் செல்கிறான். அமெலியின் தங்கையைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்க அந்நேரத்தில் குடித்துவிட்டு வந்து குடிபோதையில் கலாட்டா செய்ய மாப்பிள்ளை குடும்பத்துடன் எஸ்கேப்பாகிறான். கோபமான அமெலி அவனைத் திட்ட அவன் இன்னும் கோபமாகி, அவளுடைய பாஸ்போர்ட் புத்தகத்தை எடுத்துக் கிழித்துப் போடுகிறான்.

மறுபடியும் அமெலி தன் பையனுடன் அந்தக் கிராமத்திற்கு படையெடுக்கிறாள். முதல் பையனை ஜே.வி.பி.யின் இயக்கத்திற்காக பலி கொடுத்து, அடுத்த பையனை விடுதலைப்புலிகளிடம் பலி கொடுத்து அவ்வளவு பெரிய வெறிச்சோடிக் கிடக்கும் வீட்டில் அடைபட்டு கிடந்த முதியவர்களுக்கு அந்தச் சிறுவனின் வருகை ஒரு நம்பிக்கையைத் தருகிறது.

அரசு கொடுக்கும் நிதியுதவியை அவளுடன் பகிர்ந்து கொள்ள ஒத்துக் கொள்கிறார்கள் சமந்தாவின் பெற்றோர். அமெலியின் கையில் செக் கிடைக்கிறது. புரோக்கரின் பங்கை அவனுக்குத் தருகிறாள் அமெலி. அவனோ, "உடனே கிளம்பு.. என்னுடன் வா. ஓடிப் போய் விடலாம்.." என்கிறான். இப்போதுதான் அமெலி ஒரு தீர்மானமாகச் சொல்கிறாள். "இனிமேல் நான் கொழும்புக்கு வர மாட்டேன். இங்கேயே இவர்களுடனேயே இவர்களுடைய மருமகளாகவே இருக்கப் போகிறேன்.." என்கிறாள். புரோக்கர் கத்துகிறான். ஆனால் மருமகள் பித்தம் அமெலிக்கு தலைக்கேறியிருப்பதால் அவள் உதாசீனப்படுத்துகிறாள். "எக்கேடும் கெட்டுப் போ.." என்று சொல்லிவிட்டு புரோக்கர் செல்கிறான்.

களையிழந்து போயிருந்த வீட்டை அமெலி அழகுபடுத்துகிறாள். இனி தனக்கு வாழ்க்கை இங்கேதான் என்று அவள் நினைத்திருக்க.. திடீரென்று ஒரு நாள் கர்னல் அழைத்து வரச் சொன்னதாகச் சொல்லி ராணுவ வீரர்கள் வந்து நிற்கிறார்கள்.

என்னவோ ஏதோ என்ற பய உணர்வுடன் அமெலி தன் மகன், மாமியாருடன் கர்னல் முன்னால் போய் நிற்க.. கர்னல் வாய் கொள்ளாச் சிரிப்புடன் "உங்கள் கணவன் கேப்டன் சமந்தா சாகவில்லை. உயிருடன்தான் இருக்கிறார்.." என்று ஒரு வெடிகுண்டைத் தூக்கி அமெலியின் தலையில் போடுகிறார்.

அதன்பின் அமெலி நடைப்பிணமாகவே அவருடன் மருத்துவமனைக்குச் செல்கிறாள். அங்கே தன் அம்மாவையே அடையாளம் காண முடியாத அளவுக்கு மனச்சிதைவுக்குள்ளாகி மனநோயாளியாக கிடக்கிறான் கேப்டன் சமந்தா. பெண் புலிகளின் கையில் சிக்கி அவர்கள் செய்த சித்ரவதையால் இப்படி ஆகிவிட்டதாகவும், மருத்துவச் சிகிச்சையை முறைப்படி செய்தால் சமந்தாவை குணப்படுத்த முடியும் என்றும் சொல்கிறார் கர்னல்.

தாய்மை உணர்வு மேலோங்க சமந்தாவின் அருகில் சென்று அவனது தலையைக் கோதி, கண்ணீர் விட்டு தன் அன்பைத் தெரிவிக்கிறாள் அமெலி. மருத்துவரும், ராணுவ உயர் அதிகாரிகளும் அவளை அங்கேயே உடன் இருந்து கவனித்துக் கொள்ளும்படி சொல்ல மறுக்க முடியாமல் தவிக்கிறாள் அமெலி.

அன்றிலிருந்து தினமும் அவளுடைய டூட்டி மருத்துவமனையில். வீட்டிலிருந்தே உணவு எடுத்து வந்து தனது கணவனாக இருக்கும் சமந்தாவுக்கு ஊட்டிவிடுகிறாள். அங்கே இருக்கும் போரில் காயமடைந்த மற்ற ராணுவ வீரர்களைப் பற்றி மேஜர் பட்டியலிட்டுச் சொல்லும்போது அமெலிக்கு தன் மீதே ஒரு வெறுப்பு ஏற்படுகிறது.

"இவர்கள் அனைவரும் தங்கள் நாட்டுக்காக போரிடச் சென்று இப்போது தனது குடும்பத்திற்கே பாரமாக இருக்கிறார்கள். உண்மையான தியாகி இவர்கள்தான்" என்கிறார் மேஜர். அதுவரையிலும் தான் உழைத்துத்தான் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருவதால், தன்னைவிட பெரிய தியாகி யாருமில்லை என்ற தோரணையிலேயே உலா வந்த அமெலிக்கு, இது மிகப் பெரிய தோல்வியைத் தருகிறது.

அந்தத் தோல்வியை அவள் ஏற்றுக் கொள்ளும் முன் இவள் மருத்துவமனைக்கு வந்து செல்வது அவளுடைய காதலனின் கூட்டாளி மூலம் காதலனுக்குத் தெரிகிறது. அவன் வீட்டுக்கு வந்து அவளை அடித்து, உதைத்துவிட்டுச் செல்கிறான். அந்தக் கணம்.. அந்தக் கணம்தான்.. அவளை மருத்துவமனைக்கு திரும்பவும் வேகமாக ஓடச் செய்கிறது. இனி தான் மனைவியாக நடிப்பதில்லை. நிஜ மனைவியாகவே ஆக விரும்புகிறேன் என்று உறுதி எடுக்கிறாள்.

சமந்தா ஓரளவுக்கு குணமடைந்ததும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். தன் மகனுடன் அந்தக் கிராமத்துக்கே சென்றுவிடுகிறாள் அமெலி. சமந்தாவைக் குளிப்பாட்டுவதில் இருந்து அவனுக்கு சோறு ஊட்டி, பணிவிடை செய்வதுவரையிலும் முகம் சுழிக்காமல் செய்யத் துவங்குகிறாள் அமெலி.

அந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரையில் அமெலி நிஜமாகவே தங்களது மருமகள்தான் என்று நம்புகிறார்கள். சமந்தாவோ அவளது அனுசரணையால் அவளது பேச்சுக்கே கட்டுப்படுகிறான். தனக்கு தாயாகவோ, தெய்வமாகவோ இவள்தான் இருக்கிறாள் என்பதை உணர்ந்து, பேச முடியாத நிலையிலும் அவளை விட்டுப் பிரிய முடியாத நிலைக்கு ஆளாகிறான் சமந்தா.

ஏற்கெனவே மனம் சார்ந்து தன் கணவன் என்று தான் பொய் சொன்ன சமந்தாவுடன் நெருங்கிப் போன அமெலி, மெல்ல மெல்ல அவனுடைய படுக்கையிலேயே படுத்துறங்கும் நிலைமைக்கு வருகிறாள். இதைப் பார்க்கும் மாமியார் மகன் பழைய நிலைமைக்கு வந்துவிட்டான் என்ற ஒரு சிறிய சந்தோஷத்தை அடையும்போது..

அங்கே கொழும்புவில் அமெலியின் காதலன், மேஜரின் முன்னால் உட்கார்ந்து அமெலி கேப்டன் சமந்தாவின் மனைவி அல்ல. தன்னுடைய மனைவி என்கிறான். மேஜர் அதிர்ந்து போய் கர்னலிடம் சொல்ல.. கர்னலின் உத்தரவில் ஒரு ராணுவ டீம் அமெலியை அழைத்துப் போக கிராமத்துக்கு வருகிறது.

வீட்டில் அனைவரும் இருக்கும் சூழ்நிலையில் ராணுவ வீரர்கள் அமெலியிடம் "உங்களுடைய கணவர் என்று சொல்லி ஒருவர் கர்னல் முன்னிலையில் உள்ளார். அதனால் நீங்கள் அங்கு அழைக்கப்பட்டுள்ளீர்கள்.." என்கிறான். கட்டையின் துணையுடன் ஊன்றி நடக்கும் அளவுக்கு தயாராகிவிட்ட சமந்தா, தன்னுடைய துணையான அமெலிக்கு என்னவோ என்று நினைத்து அவளை அனுப்ப முடியாது என்று மன நோயாளியாகவே கத்துகிறான். அவனுடைய பரிதாப நிலையைக் கண்டு பரிதாபப்படும் ராணுவ அதிகாரி செய்வதறியாமல் திரும்பிப் போகிறான்.

கர்னலிடமும், மேஜரிடமும் நடந்ததைச் சொல்லி.. "இதில் ஏதோ விஷயம் உள்ளது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. ஆனால் சமந்தா தன் மனைவி என்கிறானே.. விட மறுக்கிறானே.." என்று சொல்ல.. கர்னல் அதுதான் நிஜமோ என்று நினைத்து உணர்ச்சிவசப்பட்டு வெளியே காத்திருக்கும் காதலனை அழைக்கும்படி சொல்கிறார். அதற்குள் காதலன் கிராமத்திற்கு எஸ்கேப்பாகிறான்.

மாமியாரும், மாமனாரும் வெளியே சென்றிருக்க.. காதலன் அமெலியைத் தேடி கிராமத்து வீட்டிற்கு வருகிறான். அவளைத் தன்னுடன் வரும்படி கட்டாயப்படுத்துகிறான். அமெலி அவனுடன் வர முடியாது என்கிறாள். அவள் தலைமுடியைப் பிடித்தபடியே வெளியே காருக்கு இழுத்து வருகிறான் காதலன். சமந்தா தட்டுத் தடுமாறி நடந்து வந்தவன் தான் ஊன்றி நடக்கும் கட்டையால் அவனது பின்னந்தலையில் அடித்துவிடுகிறான்.

ரத்தம் சொட்டுச் சொட்டாக வடியத் துவங்க, தடுமாறி விழும் காதலன் மிகப் பிரயாசைப்பட்டு எழுகிறான். தன் மகனைத் தூக்கித் தன் காரில் வைத்து கிளம்ப எத்தனிக்க.. மகன் உடன் வர மாட்டேன் என்று சொல்லித் தன் தாயை நோக்கி ஓடிவிட.. காதலன் அதற்கு மேல் அங்கு இருந்து பிரயோசனமில்லை என்பதால் காரை எடுத்துக் கொண்டு திரும்பிச் செல்கிறான்.. வழியில் மாமியாரும், மாமனாரும் யார் இவன் என்பது புரியாமல் பார்க்க..

தன் அமெலி இனி தனக்குத்தான் என்று சமந்தா சந்தோஷமாக அவளை அணைத்துக் கொள்ள.. அமெலியின் முகத்தில் அவளுடைய திருமணத்தை எதிர்பார்த்திருந்தபோது இருந்த சந்தோஷத்தைவிட பெரிய சந்தோஷம் தென்பட...

இதற்கு மூன்று மாதங்கள் கழித்து ஒரு என்கவுன்ட்டரில் அந்தக் காதலன் கொல்லப்பட்டான் என்ற தகவலோடு படம் நிறைவடைகிறது.

படம் முழுவதும் நிரம்பியிருக்கும் இயற்கையான காட்சியமைப்புகள் படத்தை நிரம்ப சுவாரசியமாக கொண்டு செல்கின்றன.

பெண் என்றாலும் அவளுடைய சோதனையை அவளேதான் இழுத்துக் கொள்கிறாள் என்பதை திருமணமாகமலேயே காதலனுடன் இணைந்து ஒரு பையனை பெற்றுக் கொள்வதைக் காட்டி, இன்னமும் அவனுடன் தாலி கட்டாமல் வாழ்ந்து வருவதை அந்தப் பெண் வேறு வழியில்லாமல் ஏற்று வருவதை நிஜத்துடன் ஒத்த கருத்தியல் அமைப்புடன் சொல்கிறார் இயக்குநர்.

கூடி முயங்கி முடித்த நேரத்தில் களைப்புடன் காதலன் படுக்கையில் அமர்ந்திருக்க, அமெலி தன் காலால் அவன் முதுகைத் தேய்த்தபடியே தன்னைத் திருமணம் செய்து கொள் என்று கேட்க அவன் அதை மறுக்க கோபத்துடன் அவனை காலால் உதைத்து தள்ளிவிடுகின்ற காட்சியில், எவ்வளவுதான் புத்திசாலியான பெண்களாக இருந்தாலும், உணர்வுப்பூர்வமாக மாறும்போது எப்படியெல்லாம் காட்சிப் பதுமைகளாக மாற வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

அதே போல் போலியான நபருடன் போட்டோ ஸ்டூடியோவில் திருமண புகைப்படம் எடுத்துக் கொண்டு வெள்ளை கவுனை கழட்ட முற்படும்போது, அந்த உடையின் மீது திருமணமாகாத பெண்களுக்கு இருக்கும் சின்னஞ்சிறிய கனவோடையில் கனவு கண்டு கொண்டே கண்ணாடி முன் நின்று அந்த உடையைத் தடவிக் கொடுக்கின்ற காட்சி ஒரு சிறிய கவிதை உணர்வை எனக்குத் தந்தது.

சமந்தாவுடன் உடல் சார்ந்து இணைந்த நிலையில் அவனைக் குளிப்பாட்டும் போதும், சோறு ஊட்டும்போதும், ஷேவிங் செய்துவிடும்போதும் அவன் தன்னையறியாமல் அவளை நெருக்கும்போது அமெலி காட்டும் போலித்தனமில்லாத வெட்கம் இதுவரையிலும் தன் காதலனான கயவனிடம்கூட காட்டியிருக்க மாட்டாள். அமெலியாக நடித்தவர் பரிபூரணமான, சுதந்திரமான ஒரு நடிப்பு வேட்கையுள்ள நடிகைபோல் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்திருப்பதைப் போல் எனக்குத் தோன்றுகிறது.

கதை என்னவோ நிஜமாகவே நடந்த கதை என்று சொல்லியிருந்தாலும், சிங்கள ராணுவ வீரர்களின் தேசபக்தியை வெளிச்சம் போட்டுக் காட்ட எடுக்கப்பட்ட படமா அல்லது அறியாப் பருவத்தில் செய்த தவறில் இருந்து விடுபட முடியாமல் திக்குத் தெரியாமல் தவிக்கும் அமெலி போன்ற பெண்களின் அபலை நிலைமையை வெளிப்படுத்த உருவானத் திரைப்படமா என்கிற சந்தேக வித்தியாசத்திற்கு கொஞ்சம் அதிகமாகவே இடம் கொடுத்திருப்பது போல் எனக்குத் தெரிகிறது.

பெண்ணிய மொழியில் அம்மா என்ற ஸ்தானமும், மனைவி என்ற பதவியும் ஒரே நேர்க்கோட்டில்தான் இருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லும்படமாக இது அமைந்துள்ளது.

வாய்ப்பு கிடைத்தால் காணத் தவறாதீர்கள்..