29-08-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
'பார்ப்பான் பத்திரிக்கை'.. 'அவாள்கள் பேப்பர்ஸ்'.. 'தினமலம்' என்றெல்லாம் இழித்தும், பழித்தும் பேசப்பட்டு வந்த 'தினமலர்' பத்திரிகையைப் பற்றி சமீபகாலமாக உடன்பிறப்புகள் அதிகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே.. என்ன விஷயம் என்று பார்த்தால்.. 'கவுத்துட்டோம்ல' என்று கையை விரித்து கடவாய்ப்பல்வரைக்கும் வாயைப் பொளந்து சிரிக்கிறார்கள் எதற்கும் அஞ்சாத உடன்பிறப்புக்கள்.
அந்தப் பத்திரிகையின் குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பாகப்பிரிவினை, பங்காளி சண்டைகள்.. நீதிமன்ற வழக்குகள் என்று பலவற்றாலும் பத்திரிகையின் நிறம் இப்போது அடியோடு மாறிவிட்டதாக அங்கு பணியாற்றும் பத்திரிகையாளர்களே சொல்கிறார்கள்.
மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டபோது மறுநாள் வந்த தினமலரின் முதல் பக்கத் தலைப்புச் செய்தியான 'நாய்த்தொல்லை'யை இன்றைக்கும் மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ முடியவில்லை..
ஆனால் இன்றைக்கு முழுக்க, முழுக்க தி.மு.க. சார்பு பத்திரிகையாகவே மாறிவிட்டது 'தினமலர்'. முன்பெல்லாம் 'டீக்கடை பெஞ்சில்' தி.மு.க.வும், அதன் தலைவர்களும் உருட்டப்படாத நாட்களே இல்லை.. ஆனால் இப்போது காவல்துறை செய்திகளும், அரசு அதிகாரிகளுமே வறுக்கப்படுகிறார்கள். அரசுத் தரப்பை கூல் செய்ய வேண்டி, தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் தினம் ஒருவர் என்கிற கணக்கில் கொலைக்குற்றவாளியைப் போல் எழுதி வருகிறது.
கோர்ட்டு வழக்குகளிலும், பங்காளிச் சண்டையிலும் அரசுத் தரப்பின் ஆதரவு தங்களுக்கு மிகவும் வேண்டும் என்கிற ஆசையும், ஆவலும் இருப்பதால் சென்னை நிர்வாகம் தனது கொள்கையில் இருந்து அந்தர்பல்டி அடித்துவிட்டதாம்.
ம்.. சொத்துக்கு முன்னாடி கொள்கையாவது.. மண்ணாவது..!