10-12-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
“வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திற்கும்.. வீட்டில் மின் விசிறி இருப்பினும், காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்து பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள்போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?”
- இத்தனையாண்டு காலமும் இந்தத் தமிழ்ச் சினிமாவுக்கே தனித்த அடையாளமாக இருந்துவரும் தனக்கே திரையுலகத்தில் தடை உத்தரவா என்ற ஆதங்கத்தில் அண்ணன் கமல்ஹாசன் இன்று சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை..!
கேபிள் டிவிக்கு மாதந்தோறும் 100 ரூபாய் கொடுக்கவே யோசிக்கும் நடுத்தர மக்களினும் பொருளாதாரத்தில் உயர்ந்த மனிதர்களான, மாதந்தோறும் 1700 ரூபாய் கொடுத்து செட்டப் பாக்ஸ் கனெக்சன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி என்பதால் மற்றவர்கள் நிச்சயம் திரையரங்கத்தை நாடி வருவார்கள் என்று அண்ணன் கமல் தரப்பில் 3 நாட்களாக கூக்குரலிட்டும் தியேட்டர் அதிபர்களின் மனதில் அச்சம் நீங்கியபாடில்லை.
திரைத்துறையினர் இது விஷயமாக மீண்டும் நாளை காலையில் கூடிப் பேசப் போகிறார்கள்..! இவர்களது பயமும், அவசரமும் சினிமாத் துறையினரில் பெரும்பாலோருக்கு தெரியும் என்றாலும், பலராலும் எதையும் வெளிப்படையாகச் சொல்லத்தான் முடியவில்லை. சங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்கிற வாடிக்கையான மனநிலை அவர்களைத் தடுத்து வருகிறது..!
ஒரே ஒரு முறைதான் காட்டப் போகிறார்கள். அதுவும் 1000 ரூபாய்க்கு.. ஏழரை கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் இதில் 1 சதவிகிதமான ஏழு லட்சம் பேர் மட்டுமே பார்க்க வாய்ப்பு இருந்தும், இதில் எத்தனை பேர் பார்க்கப் போகிறார்கள் என்றும் தெரியாமலும் இதன் பிரதிபலிப்பு தியேட்டர் வசூலில் எதிரொலிக்கும் என்று கலங்குகிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
“நாங்கள் தியேட்டர் வைத்திருப்பதே சினிமாக்களை வெளியிடத்தான். இப்போதைக்கு பெரிய படங்களையும், சின்ன படங்களையும், மீடியம் பட்ஜெட் படங்களையும் படங்களுக்கேற்றவாறு திரையிட்டு வருகிறோம். ஒரு படத்தில் பெறுகின்ற நஷ்டத்தை மற்றொரு படத்தில் ஈடுகட்டும் வகையில்தான் எங்களது தியேட்டர்களில் திரையிடப்படும் படங்களின் தேர்வும் இருக்கிறது. 2 பெரிய பட்ஜெட் படங்களை நாங்களே வாங்கி வெளியிட்டு நஷ்டம் ஏற்பட்டால், அந்த மெகா நஷ்டத்தை ஈடுகட்ட அடுத்த பெரிய படம்தான் தேவை.. அப்போதுதான் எங்களால் விட்ட பணத்தை குறுகிய காலத்தில் உடனேயே மீட்டெடுக்க முடியும்..!
கமல் சொல்வது போலவே இது பெரிய பணக்காரர்களின் வீட்டு வரவேற்பறையில் தெரியட்டும். ஆனால் அப்போது அந்தக் குடும்பத்தினர் மட்டுமே பார்க்கப் போவதில்லை. குறைந்தபட்சம் தங்களது ஒட்டு மொத்தக் குடும்பத்தையாவது பார்க்க வைத்துவிடுவார்கள். இவர்கள் மல்டிபிளெக்ஸ்களுக்கு வரும் வாடிக்கையான ரசிகர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவர்கள் வீட்டில் பார்த்துவிட்டால், பிறகெப்படி தியேட்டருக்கு வருவார்கள்? மல்டிபிளெக்ஸ்களுக்கும் இதனால் நஷ்டம் வருமே..?
சரி.. கமல் தன் படத்தின் விநியோகத்தை தானே பொறுப்பேற்று தியேட்டர்களை வாடகைக்கு எடுத்து படத்தை ஓட்டினாலும், டிடிஹெச்சில் படத்தை பார்த்துவிட்ட ரசிகர்கள் தாண்டிய பொதுமக்கள் கண்டிப்பாக தியேட்டருக்கு வர மாட்டார்கள். அப்போது டிக்கெட் கட்டண வசூல் குறையும்.. தியேட்டர் கேண்டீன்களுக்கு இழப்பு ஏற்படும்.. அனைத்து படங்களுமே இது போன்றே வெளியிடப்பட்டு, அனைவருமே வாடகைக்கு தியேட்டரை எடுத்து ஓட்டினால், எங்களுக்கு எப்படி லாபம் கிடைக்கும்..? தியேட்டரில் கிடைக்கும் வாடகை அந்த கட்டிடத்தின் நிலைப்பாட்டுக்கு மட்டுமே பயன்படும்.. ஆனால் நாங்களும் லாபம் பார்க்க வேண்டாமா..? தயாரிப்பாளர் மட்டும்தானே இதில் லாபம் பார்க்க முடியும்..? வெறுமனே வாடகையை மட்டும் வைத்துக் கொண்டு தியேட்டர் ஊழியர்களுக்குச் சம்பளத்தைக் கொடுத்துவிட்டு மிச்சம், மீதியை கவர்ன்மெண்டு எம்ப்ளாயிஸ் மாதிரி வீட்டுக்குக் கொண்டு போவதற்கா நாங்கள் தியேட்டர் நடத்துகிறோம்...?” என்கிறார்கள்.
இன்னொரு தரப்பினரோ, “தற்போது ஒரு பெரிய படம் வெளியிடப்பட்டால்.. நன்றாக இருக்கும்பட்சத்தில் அந்தப் படம் குறைந்தபட்சம் 4 வாரங்களாவது பெரிய தியேட்டர்களில் ஓட்டப்படுகிறது. இப்படி டிடிஹெச்சில் போட்டுவிட்டு தியேட்டருக்கு வரும்போது கூட்டம் குறைவாகி அந்தப் படம் 2 வாரங்கள் மட்டுமே ஓடும் சூழல் வரும்.. மிச்சம் இருக்கும் 2 வாரத்தில் வேறு படங்கள், குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்குமே..?” என்கிறார்கள்.
ஆனால் இதையும் மறுக்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். “இப்போதும் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் வாடகைக்கும், பெர்சண்டேஜுக்கும்தான் படத்தை திரையிடுகிறார்கள். இதில் எங்களுக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது..? வர்றதுக்கு வாய்க்கும், வயித்துக்குமே போதும்ன்னா நாங்க எதுக்கு இவ்ளோ பெரிய கட்டிடத்தை கோடிக்கணக்குல செலவு பண்ணி கட்டி நடத்தணும்..? பேசாம கல்யாண மண்டபமா மாத்திட்டு வீட்ல ஹாயா உக்காருவோமே..?” என்கிறார்கள்..!
“சினிமாக்களை மட்டுமே நம்பி.. அவர்களுக்காகவே நாங்கள் தியேட்டர்களை நடத்தி வருகிறோம். சினிமா தியேட்டர்களில் வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் முடியாது..! கமலை போலவே அடுத்து வரக் கூடியவர்களும் தங்களது படங்களை டிடிஹெச்சில் கொடுத்துவிட்டு பின்பு தியேட்டருக்கு வழங்கி, கூட்டத்தை குறைத்துவிட்டால், தியேட்டருக்கு ரெகுலராக வந்துபோகும் பார்வையாளர்களின் கூட்டம் குறையுமே..” என்று திரும்பத் திரும்ப அதே கோணத்திலேயே தங்களது பார்வையைச் செலுத்துகிறார்கள் தியேட்டர் அதிபர்கள்..!
“டிடிஹெச் சந்தாத்தாரர்கள் வெறும் 7 லட்சம் பேர் என்று கணக்கிட்டாலும், இதில் 3.5 லட்சம் பேர் 1000 ரூபாய் கொடுத்துவிட்டாலே, அதில் 35 கோடி வசூலாகிவிடும்..! கமலுக்கு இப்போதைக்கு இது போதுமானதுதான்..! கமல் நடித்த படம் என்பதால்தான் 1000 ரூபாயை வசூல் செய்கிறது டிடிஹெச் நிறுவனம். இதையே வேறொரு தயாரிப்பாளர் மீடியம் பட்ஜெட் நாயகர்களைக் கொண்டு படமெடுத்து அதனை வெறும் 100 ரூபாய் கட்டணத்திற்கு காட்டினால், அப்போதும் மூன்றரை கோடி ரூபாய் சுளையாகக் கிடைத்துவிடும்..!
ஒரே நாளில், ஒரே செக்கில் 3.5 கோடி ரூபாய் கிடைத்துவிடும் என்று நினைத்து பலரும் இது போன்று மீடியம் பட்ஜெட் படங்களை எடுத்து டிடிஹெச்சுக்கே கொடுத்துவிட்டு காலப்போக்கில் தியேட்டர்களில் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்ற சூழலை உருவாக்கிவிட்டால், அப்போது நாங்களெல்லாம் என்ன செய்வது..?” என்கிறார்கள்..!
“இது இப்படியே தொடர்ந்து…… தமிழ்நாட்டில் கேபிள் கனெக்சன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடி என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வீட்டுக்கு 50 ரூபாய் என்று வாங்கிக் கொண்டு புத்தம் புதிய படங்களை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒளிபரப்புகிறோம் என்று சொன்னால் வாரத்துக்கு 50 ரூபாய்தானே என்ற எண்ணத்தில் மக்கள் தானாகவே முன் வந்து பணம் கொடுப்பார்கள். அப்போது இந்தத் தொகை 10 கோடி சுளையாகக் தயாரிப்பாளருக்குக் கிடைக்கும். இப்போதெல்லாம் மீடியம் பட்ஜெட் படங்களை 3.5 கோடியில் சுலபமாக தயாரித்துவிடலாம்.. கேபிள் ஆபரேட்டர்களுக்கு கொஞ்சம் தொகையைக் கமிஷனாகக் கொடுத்துவிட்டு இது போன்று மறுபடியும், மறுபடியும் டிடிஹெச்சுகளுக்காகவே படமெடுக்க துவங்கினால் சினிமாக்களை மட்டுமே நம்பி தியேட்டர்களை நடத்தி வரும் நாங்களெல்லாம் என்ன செய்ய..?” என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்..! இந்த பயம்தான் இப்போது தியேட்டர் அதிபர்களை பேயாய் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது..!
கமல் மட்டுமே இப்போதைக்கு கலக்ககுரலை எழுப்பியிருந்தாலும், மற்றவர்கள் இந்தப் படத்தின் ரிசல்ட்டை பார்த்துவிட்டு பின்பு யோசிக்கலாம் என்று காத்திருக்கிறார்கள். ஏற்கெனவே தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மாதந்தோறும் குறைந்து கொண்டே செல்கிறது. சமீபத்தில் வெளியான துப்பாக்கி படத்தின் வசூல் ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை. ஏதோ போட்ட காசு கிடைத்துவிட்டது என்று ஜெமினியும், தாணுவும் பெருமூச்சுவிட்டு ஓய்ந்திருக்கிறார்கள்.
தியேட்டர்களுக்கு கூட்டம் வராததற்கு தியேட்டர்களில் நடக்கும் அநியாயக் கொள்ளையான கட்டண உயர்வு மட்டுமே காரணம் அல்ல.. மக்களுக்கும் நாள்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் பல புதுவித பிரச்சினைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. தியேட்டர்களுக்கு சென்று ரிலாக்ஸ் செய்யும் எண்ணம் வராத அளவுக்கு ஓட வேண்டிய நிலைமை இப்போது..!
குடும்பப் பிரச்சினை.. குழந்தைகளின் படிப்புப் பிரச்சினை.. அலைச்சல் என்று பலதையும் மனதில் வைத்துக் கொண்டுதான் “வீட்டோடு ஓய்வை கொண்டாடுவோம்.. டிவியில் நிகழ்ச்சிகளை பார்த்து டென்ஷன் இல்லாமல் இருப்போம்..” என்ற மனநிலை அநேகம் நடுத்தர வர்க்கத்தினருக்கு வந்துவிட்டது..!
புதுவசந்தம் படம் ரிலீஸான அன்று திண்டுக்கல் லஷ்மி தியேட்டரில் நான் காலை காட்சி படம் பார்த்துவிட்டு அந்த நாள் முழுவதுமான 5 ஷோக்களையும் தொடர்ந்து பார்த்தேன். அதே நேரம் அரசு அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கும் அண்ணன் ஒருவர், தனது மனைவியுடன் படம் பார்க்க வந்திருந்தவர்.. மதியம், மாலை, இரவு காட்சிகளையும் தொடர்ச்சியாக என்னுடன் இருந்து பார்த்தார்.. அப்போது அவருக்கும், அவரது மனைவிக்கும் அந்தப் படம் மிகப் பெரிய இளைப்பாறுதலை தந்தது.. ரிலாக்ஸை தந்திருந்தது..! இப்போது இப்படி யாராவது படம் பார்க்கிறார்கள் என்று கேள்விப்பட முடியுமா..?
முந்தானை முடிச்சு படத்திற்கு தினமும் புதுமையான விளம்பரங்கள் தினத்தந்தியில் வந்து கொண்டேயிருந்தன..! ஏதாவது ஒரு ஊரில் தொடர்ச்சியாக 4 ஷோ பார்த்த பெண்கள் புகைப்படத்துடன் பேட்டி கொடுத்திருப்பார்கள். 100 நாட்களும் தொடர்ச்சியாக பார்த்ததாகக்கூட சில பெண்கள் பேட்டியளித்திருந்தார்கள்.. அப்போதைக்கு அது சினிமாவின் விளம்பரத் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இன்றைக்கு அப்படியொரு விளம்பரத்திற்குக்கூட ஆட்கள் கிடைக்காது என்பதுதான் உண்மை.!
மக்களுக்கு ஓய்வெடுக்கும் நேரம் குறைந்துபோய் அந்த நேரத்திலும் உழைத்து, உழைத்து பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆவலும், ஆசையும் வெறியாகிவிட்டிருப்பதை கண்கூடாக உணர முடிகிறது..! இதில் அநாவசியமாக சினிமாவுக்காக ஆயிரம் ரூபாய் தனியாக செலவழிக்க வேண்டுமா என்ற அவர்களது சிந்தனை நியாயமானதுதான். அதே நேரம் தியேட்டர்காரர்களும் தங்களது டிக்கெட் கட்டணத்தைக் குறைத்து 10, 20, 30 என்று வைத்தால் பெரிய பட்ஜெட் படங்களைவிடவும், சின்ன பட்ஜெட் படங்களுக்கு அதிகக் கூட்டம் கூடும் என்பது நிஜம்..!
முதலில் தியேட்டருக்கு வரும் மக்கள் கூட்டத்தை அதிகப்படுத்த வேண்டும். அதற்கான ஒரே வழி தியேட்டர் கட்டணத்தைக் குறைப்பதுதான்.. இதனைச் செய்யாமல் இப்போது இருக்கும் கட்டணம்தான் நியாயமானது என்று தியேட்டர் அதிபர்கள் சொன்னால், அதற்கான பலனையும் அவர்கள்தான் அனுபவிக்க வேண்டும்..! வேறு வழியே இல்லை..! திருட்டு விசிடி பிரச்சினைக்கும் முழு முதற் காரணம் இந்தக் கட்டண உயர்வுதான்.. மிகப் பெரிய பட்ஜெட் படங்களுக்கும், மிக முக்கியமான படங்களுக்கு மட்டுமே திருட்டு விசிடி வெளிவந்து கொண்டிருக்கிறது.. அதிகம் அறியப்படாத.. வெளிநாட்டு உரிமை கொடுக்கப்படாத சில சின்ன பட்ஜெட் படங்களை திருட்டு விசிடியில் கொடுத்தால்கூட வாங்கவோ, பார்க்கவோ ஆளில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை..! டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்தி, குறைத்துவிட்டால் திருட்டு விசிடிகள் குறையும் வாய்ப்பு உண்டு.
போட்டியாக ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டிருந்த 2 திரையரங்கு உரிமையாளர் சங்கங்களும் இப்போது ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தில் கை கோர்த்துக் கொண்டிருப்பது கமலே எதிர்பார்க்காத ஒரு விஷயம்..! தற்போது கமல் யாருக்கும் நஷ்டமில்லாமல் தியேட்டருக்கு வாடகை கொடுத்தே படத்தை ஓட்டிக் கொள்கிறேன் என்று சொன்னாலும், டிடிஹெச்சில் படத்தைக் கொடுத்தால், அந்தப் படத்தை நாங்கள் எங்கள் தியேட்டரில் காட்ட மாட்டோம் என்பதுதான் இப்போதுவரையிலும் தியேட்டர் அதிபர்களின் ஒருமித்த முடிவாகவே இருக்கிறது..! கமலும் அவர் கருத்தில் பிடிவாதமாகவே இருக்கிறார்..!
என்னைப் பொறுத்தவரையில் இதில் திரையுலகத்தினருக்கு சாதகமும் உண்டு.. பாதகமும் உண்டு என்றே நம்புகிறேன்..! முன்பே சொன்னதுபோல கேபிள் டிவிக்காரர்கள் மூலமாக பொதுமக்களிடம் 50 அல்லது 100 ரூபாய் வாங்கி படத்தைத் தயாரித்து அவர்களுக்கு மட்டுமே காண்பித்துவிடும் திட்டம் வந்துவிட்டால் அப்போது தியேட்டர்களின் கதி அதோ கதிதான்..! கமல், ஷங்கர், மணிரத்னம் படங்கள் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்து எடுக்கப்படும் படங்களை மட்டுமே தியேட்டருக்கு சென்று பார்க்க அவரவர் ரசிகர்கள் விருப்பப்படுவார்கள். குடும்பக் கதைகளையும், காமெடி படங்களையும் வீட்டு தியேட்டரிலேயே பார்த்துவிடலாம் என்று பொதுமக்கள் முடிவெடுத்துவிட்டால் தியேட்டர்கள் முற்றாக அழியும் நிலை ஏற்படும்..!
இன்னொரு பக்கம் படம் நல்லாயிருக்கோ.. இல்லையோ.. நல்ல டைரக்டர்.. நல்ல பேனர்.. நமக்குத் தெரிந்த நடிகர், நடிகைகள், சிறந்த இயக்குநர் என்ற நினைப்பில் மக்கள் 50 ரூபாயைக் கொடுத்துவிட்டு ஒரு மொக்கை படத்தை பார்த்துவிட்டு நொந்து போனாலும் பணம் போட்ட தயாரிப்பாளருக்கு முழுத் தொகையும் ஒரே நாளில் கிடைத்துவிடும் சூழல் உருவாகும் என்பதால் நிறைய தயாரிப்பாளர்கள் உடனுக்குடன் தமிழ்ச் சினிமாவில் நுழைவார்கள் என்பதிலும் எனக்கு ஐயமில்லை..!
ஆக.. இதில் இருக்கும் பாதகங்களை திரையுலகத்தினர் அனைவருமே தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளும்வகையில் ஒரு கட்டுப்பாடுடன் கூடியவகையில் தியேட்டர்காரர்களுடன் இணைந்து செயல்படுவதுதான் மிகச் சிறந்தது.. இதில் ஈகோ பார்க்காமல், சினிமா என்னும் துறையை மென்மேலும் வளர்ச்சியடைய வைக்க வேண்டியது கமல் போன்ற மகா கலைஞனின் கையிலும் இருக்கிறது..!
|
|
Tweet |
