Showing posts with label சிறைக்கைதிகள். Show all posts
Showing posts with label சிறைக்கைதிகள். Show all posts

ஆட்டோ சங்கர் சிறையில் இருந்து தப்பிய கதை..!

16-06-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 17: 29.8.1990
   

1990, ஆகஸ்ட் 30-ம் தேதி தனது 35-வது பிறந்த நாள் காணும் ஆட்டோ சங்கரின் மீதான வழக்கு செப்டம்பர் 12-ம் தேதி விசாரணைக்கு வரும் அன்றுதான், இந்த வழக்கின் அப்ரூவர் பாபுவிடம் குறுக்கு விசாரணையும் ஆரம்பிக்க இருந்தது.

'பாபுவை எப்படியெல்லாம் விசாரிக்க வேண்டும்... எந்த பாயின்ட்​டில் மடக்க வேண்டும்’ என்றெல்லாம் தன் வக்கீலான நடராஜனிடம் டிஸ்கஸ் பண்ணிக் கொண்டிருந்த ஆட்டோ சங்கருக்கு, கடந்த ஜூலை மாதம் இரண்டாம் வாரம் வரையில் ஜெயிலில் இருந்து தப்பி ஓட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவே இல்லை.

பெயிலில் வெளியே வர இரண்டு முறை மனுத் தாக்கல் செய்த சங்கர், மூன்றாம் முறையாக, சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். அதில், முந்தைய சில தீர்ப்புகளின் அடிப்படையில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். எப்போதும் நம்முடன் தொடர்பு வைத்திருந்த சங்கர், பல சட்ட விஷயங்களை எடுத்துக்​ கூறி, ''மேக்ஸிமம் எனக்கு லைஃப்தான் கொடுப்பாங்க. லைஃப் தண்டனைங்கறது பன்னிரண்டு வருஷம். அதுல காந்தி, அண்ணா, காமராஜ் பிறந்த நாட்களையட்டி கிடைக்கும் சலுகைகள், நன்னடத்தையுடன் நடந்து கொள்ளும்போது கிடைக்கும் தண்டனைக் குறைப்பு எல்லாம் போக ஏழெட்டு வருஷம் உள்ளே இருக்க வேண்டியதிருக்கும். அப்புறம் வெளியே வந்து யோக்கியமா இருக்கப் போறேன்...'' என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

அடிக்கடி தன் மனைவியையும், குழந்தைகளையும் நினைத்துக் கவலைப்​படும் சங்கருக்கு, நாமறிந்த வரையில்... ஜெயிலில் இருந்து தப்பி ஓட வேண்டும் என்ற எண்ணம் மிக சமீபத்தில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

காரணம் - சங்கர் நம்மிடம் ஒரு முறை, ''உங்கள மாதிரி பத்திரிகைக்காரங்கதான் எப்பவும் என்னை வாட்ச் பண்ணிக்கிட்டிருக்காங்க. மத்தபடி போலீஸால் பெரிய பிரச்னை ஏதும் இல்லை. உங்களுக்குக்கூடத் தெரிஞ்சிருக்குமே... ஒரு தடவை நான் செங்கல்பட்டு கோர்ட்டுக்குப் போறப்போ, என் கோட்டூர்புரம் ஹவுஸிங் போர்டு வீட்டுக்குப் போய் டிபன் சாப்பிட்டுப் போனேன். அவ்வளவு ஃப்ரீ!'' என்று சொன்னார்.

இது உண்மைதான். சங்கர் கோர்ட்டுக்குப் போகும்போதும் சரி... ஜி.ஹெச்-சுக்கு ஏதாவது சிகிச்சைக்குப் போகும் போதும் சரி... கூட வரும் எஸ்கார்டுகள் அலட்சியமாகவே இருப்​பார்கள்.

சங்கர் தப்பியோட முன்பே எண்ணியிருக்கும் பட்சத்தில் அதற்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன.

அதையெல்லாம் உபயோகிக்காத சங்கர், கடந்த திங்கள் நள்ளிரவு அவ்வளவாக அறிமுகமில்லாத ராஜா மற்றும் குமார் என்ற நபர்களுடன் ஜெயிலுக்குள் இருந்து தப்பி ஓடியது ஏன்? எதற்கு? எப்படி?

மேற்படி கேள்விகளுக்கு விடை தெரியும் முன்பு சில விஷயங்களை மட்டும் அறிந்து கொள்வது நல்லது.

ஆட்டோ சங்கர் எளிதில் எவரையும் நண்பராக்கிக் கொள்ளும் சுபாவம் உடையவர். அந்த வகையில் சிறையில் பலரையும் நண்பர்களாக்கித் தனக்கென ஒரு 'தாதா’தனத்தையும் உருவாக்கிக் கொண்டார். சங்கர் வருவதற்கு முன்பு வரையில் ஜெயிலுக்குள் இருந்த தாதா, சென்னையின் பிரபல கேடி அகரம் நாராயணன்தான். சில தமிழ் சினிமாக்களில்(கூட) வருவது மாதிரி நாராயணனின் காலைப் பிடித்துவிட ஒருவர், கையைப் பிடித்துவிட ஒருவர் என்று இருந்த நாராயணன், சில முறை காவலிலிருந்து தப்பியோடி இருக்கிறார். சங்கர் ஜெயிலுக்குள் வந்த பிறகு நாராயணன் மகிமை குறைந்து விட்டது. அகரக்காரன், ஆட்டோக்காரன் என்று இரு அணிகள் உருவாயின.

இந்தச் சூழ்நிலையில்தான் சங்கருக்கு மிக நெருக்கமான போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயிலுக்கு உள்ளேயும் சங்கரின் கை ஓங்க வழி செய்தார். அந்த போலீஸ் அதிகாரியின் ஆலோசனைப்படி, சென்னை ஜெயிலின் உயர் அதிகாரி ஜெயிலுக்குள் தினசரி சென்று சங்கரை ஓர் அறையில் சமமாக உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருப்பார். வாரம் ஒரு முறை உயர் அதிகாரி வீட்டிலிருந்தே சங்கருக்கு உணவு வர ஆரம்பித்தது. இதனால், ஜெயிலில் உள்ள மற்ற அதிகாரிகள், சங்கரின் போக்கை எந்த விதத்திலும் கண்டிக்க முடியாமல் போய்... ஒரு கட்டத்தில் எல்லா அதிகாரிகளும் சங்கருக்கு 'குட்மார்னிங்... குட் நைட்’ சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

விளைவு...? சங்கரே ஓர் அதிகாரி போல ஆகிவிட்டார். அகரத்தார் அம்பேல்! தினசரி காலை எழுந்தவுடன் பார்வையாளர் இடத்தருகே வந்து சங்கர் அமர்ந்து கொள்வார். சங்கரைப் பார்க்க வாரம் இரு முறை அவர் மனைவி ஜெகதீஸ்வரி வருவார். மற்றபடி குறிப்பிடத்தக்க நபர்கள் யாரும் வர மாட்டார்கள். என்றாலும், தன் சக கைதிகளின் உறவினர்களிடம் பேசிக் கொண்டு இருப்பார்.

இப்படித்தான்... கணபதி என்ற கைதியின் மனைவியான தேவி என்பவருடன் பேச ஆரம்பித்தார் சங்கர். பிறந்தது என்னவோ தனுர் ராசியில்தான் ஆனாலும் ஏகப்பட்ட கன்னிராசி உண்டே! தேவி, சங்கரின் அபிமானி ஆகிவிட்டார். தொடர்ந்து, தேவி தன் கணவரான கணபதியைக்கூட பார்ப்பதைத் தவிர்த்து, சங்கரை மட்டுமே சந்தித்துப் பேச ஆரம்பித்து விட்டார். இதனால், சங்கரும் நண்பர்களிடையே இருக்கும்போது, திடீரென்று, 'தேவி... ஸ்ரீதேவி... உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா.. பாவி... அப்பாவி... உன் தரிசனம் கிடைத்திட வழி கொடம்மா...’ என்ற 'வாழ்வே மாயம்’ படப் பாடலை அடிக்கடி பாட ஆரம்​பித்து விடுவார்.

இதனால் மனம் உடைந்துபோன கணபதி, சங்கரைக் கை நீட்டி அடித்துவிட... பதிலுக்கு சங்கர் அடிக்கவில்லை. கணபதியை வேலூர் ஜெயிலுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண ஏற்பாடு செய்து விட்டார். பிறகு... நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தேவி - சங்கர் காதல்(?) வளர்ந்தது.

இந்த நிலையில்தான் ஒரு முறை சங்கரைப் பார்க்க தேவி வந்திருந்தார். அதே நேரம் முதல் மனைவி ஜெகதீஸ்வரியும் வந்து விட்டார். முன்பே ஜெகதீஸ்வரிக்கு யாரோ தேவி சமாசாரத்தைச் சொல்லியிருக்கிறார்கள். இதனால், தேவியிடம், ''.......'' என்று ஆபாச வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்துச் சண்டை பிடிக்க, தேவியும் பதிலுக்குக் கத்த... ஜெயிலுக்கு உள்ளேயே இரு பெண்களுக்கும் அடிதடி தகராறு நடந்தது. சங்கர் ரொம்ப கஷ்டப்பட்டு இருவரையும் பிரித்து அனுப்ப... தேவி போகும்போது ''அவ என்னை இப்படித் திட்டினதாலே மானமே போச்சு... இனிமே நான் உயிரோட இருக்க மாட்டேன். தற்கொலை பண்ணிக்கப் போறேன்...'' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

அவ்வளவுதான்... சங்கர் அப்செட்?! தேவியை தாஜா பண்ண உயர் அதிகாரியின் உதவியை நாடினார். உதவியும் கிடைத்தது... எப்படி? ''நீ தேவியுடன் சேர்ந்து எங்காவது போய் வாழ்க்கை நடத்த வேண்டும்... சம்மதம் என்றால் தேவியை சமாதானம் செய்கிறோம்...'' என்ற (வீக்னஸ் தெரிந்த) நிபந்தனை விதிக்கப்பட்டது. இது எப்படி இருக்கு?

சங்கர் நிறைய யோசித்தார். 'ஊட்டியில் ஒரு கான்வெட்டில் படிக்கும் தன் குழந்தைகளைப் பார்க்க வேண்டும்... ஒரிஸ்ஸாவில் இருக்கும் தன் தந்தையை காண வேண்டும்... தான் தங்கியிருந்த திருவான்மியூர் வீட்டை வாங்கிய பார்ட்டியிடம் தானே போய் முழுப் பணத்தையும் (சுமார் ஒண்ணரை லட்ச ரூபாய்) வாங்க வேண்டும்...’ இப்படி நிறைய யோசித்தார். யோசித்ததை உயர் அதிகாரியிடம் தெரிவித்தார்.

அதிகாரிகளுக்கு ரொம்ப சந்தோஷம். ''எப்போது சங்கர் வெளியேறுவது... எப்படி வெளியேறுவது... கூட எவரெல்லாம் வெளியேறுவது...?’ என்று அதிகாரிகள் முன்னிலையில் திட்டம் இடப்பட்டது.

நாளும் குறிக்கப்பட்டது. சனி, ஞாயிறு அல்லது திங்கள் ஆகிய மூன்று நாட்களில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிவெடுத்தார்கள்.

இந்த முடிவு எடுத்த பிறகு சங்கரின் சந்தோ​ஷத்துக்கு எல்லையே இல்லை. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து தினசரி அதிகாரி வீட்டிலிருந்தே நான்-வெஜ் சாப்பாடு! ''இதை ஒரு வகையில் பிரிவு உபசார விருந்து என்றுதான் சொல்ல வேண்டும்'' என்று கூறினார் நமக்குப் பல தகவல்கள் கொடுத்த வார்டன் ஒருவர்.

அவர் மேலும், ''பிரச்னை என்னவென்றால், இந்தச் சதி(?) உயர் அதிகாரிகள் அளவில் நடந்தது. ஆனால், அவர்கள் நேரடியாகத் தலையிட முடியாது. அதே சமயத்தில் கீழ்மட்ட அலுவலர்களின் உதவியைப் பெற முடியாது. இதற்காகவே கடந்த இருபது நாட்களாக பந்தோபஸ்து குறித்தான விஷயங்களில் 'அலட்சியம்’ காட்ட ஆரம்பித்தார்கள்...'' என்றும் கூறினார்.
இந்த நிலையில்தான் மற்றோர் உயர் அதிகாரிக்கு இந்த விஷயம் ஓரளவு தெரிய வந்தது. உடனே அவர், இது குறித்து தனக்கு மேலே இருப்பவர்களுக்கு ஒரு பிரத்தியேகக் கடிதம் எழுதி, அதில் தான் கேள்விப்பட்ட விஷயம் பற்றியும் குறிப்பிட்டார். அதுவும் அலட்சியப்படுத்தப்பட்டது!

ஆனாலும், கடந்த 17-ம் தேதி திடீரென்று சிறைச்சாலைக்கு வந்த ஐ.ஜி. வைகுந்த், காவலர்​களின் எண்ணிக்கை, பாதுகாப்பு குறித்து விசாரித்தார். நேர்மையான அதிகாரியான அவருக்கு ஏதோ நெருடியது போலும்! ''ஸ்ட்ரென்த் காணாது போலிருக்கு, மேலும் கொஞ்சம் ஆட்களை அனுப்புகிறேன்...'' என்று சொல்லிவிட்டுப் போனவர் மறுநாளே வேலூரில் இருந்து இருபத்தைந்து வார்டன்களைத் சென்னை சிறைச்சாலைக்கு அனுப்பினார்.

ஆனால்...

அந்த இருபத்தைந்து பேருக்கும் பகல் டியூட்டி மட்டும் கொடுக்கப்பட்டது. இரவில், சாதாரணமாகப் பதினைந்து கன்விக்ட் வார்டன்​களாவது டியூட்டி பார்ப்பது வழக்கம். அன்றைய தினங்களில் மூன்றே மூன்று கன்விக்ட்களுக்கு மட்டும் டியூட்டி போடப்பட்டது. அதேபோல பூட்டு, லைட் எரியாமை போன்ற எல்லா விஷயங்களும் தயார்படுத்தப்பட்டன. சங்கர், மோகன், செல்வராஜ் ஆகிய மூவர் மட்டும் தப்பித்துச் செல்வது அவ்வளவு உசித​மல்ல என்பதால், நட்பு அடிப்படையில் சங்கரின் 'செல’வில் தங்கியிருந்த ராஜா மற்றும் குமார் ஆகியோரையும் சேர்த்து தப்பிக்கவிடவும் முடிவு செய்யப்பட்டதாகக் கடைசித் தகவல் கூறுகிறது.

1990, ஆகஸ்ட் 20-ம் தேதியன்று சங்கர் இருந்த 10-ம் நம்பர் 'செல்’லிலிருந்து நள்ளிரவு சுமார் மணி 2.30-க்கு வெளியேறி காம்​பவுண்ட் சுவரை அடைய... இடையே தகரத்தாலான தடுப்பு ஒன்று உண்டு. அதை நீக்கிச் சுமார் 13 அடி உயரமே காணப்படும் சுவரில் ஒரு கயிற்றின் மூலம் ஏறிச் செல்ல...

அது பூங்கா நகர் ரயில் நிலையப் பகுதி!

ஜன நடமாட்டமே இல்லாத பகுதி. அதுவும் இரவு நேரம் யார் தலைகாட்டப் போகிறார்கள்?

அங்கே... தேவி தயாராக கொண்டு வந்திருந்த ஒரு காரில் ஏறித் தப்பி இருக்கிறார்கள். அந்தக் கார் சென்னை நகர எல்லையை விட்டு தாண்டி இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் குறைவு. காரணம் - இப்போது நகரின் முக்கிய முனைகள் ஒவ்வொன்றிலும் செக்-போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. செக்-போஸ்ட்டைத் தாண்டிச் செல்லும் ஒவ்வொரு காரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் காரோ அல்லது சங்கர் கோஷ்டியோ நகரை விட்டு வெளியே செல்ல வாய்ப்பும் இல்லை!

சரி... சென்னையில்தான் இந்த கோஷ்டி பதுங்கி இருக்கிறது என்றால், எங்கு?

இதைக் கண்டுபிடிக்க மொத்தம் மூன்று போலீஸ் டீம்கள் பாடுபட்டு(?) வருகின்றன. சிட்டி போலீஸ் டீம், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டீம், சிறைத்துறை போலீஸ் டீம்... ஆகிய மூன்று டீம்களும் தனித்தனியே அலசுகின்றன.

இதிலும் சோகம் என்னவென்றால் - இந்த மூன்று டீம்களுக்குள் கூட ஒற்றுமை இல்லாமல் இஷ்டப்படி சுற்றிக் கொண்டிருப்பதுதான். ஒருவருக்கு ஒருவர் தகவல் பரிமாறிக் கொள்வதுகூட இல்லை.

இவர்கள் கண்களில் சங்கர் கோஷ்டி சிக்குமா என்பது சந்தேகமே! சென்னை நகர மக்கள் ஒரேயடியாக நிம்மதி இழந்திருப்பது உண்மை!

- வி.குமார்

நன்றி : ஜூனியர்விகடன்-15-06-2011

மூன்று போலீஸ் படையினரின் விசாரணையில் பல தகவல்கள் சிறையில் இருந்தே அவர்களுக்குக் கிடைத்தது. தேவி, ஆட்டோ சங்கர் காதல், தேவி, ஆட்டோ சங்கரின் மனைவி மோதல் இதெல்லாம் வார்டன்கள், சிறைக் காவலர்கள் முன்னிலையிலேயே நடந்திருந்ததால் அனைத்தையும் ஆதி முதல் அந்தம் வரை ஒப்பித்துவிட்டார்கள். தேவியின் வீட்டைச் சோதனை செய்து, தேவியின் கணவர் தரப்பைத் தூக்கி வந்து விசாரித்து யார், யாருக்கு எங்கெல்லாம் நண்பர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் லிஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தபோது ஆட்டோ சங்கர் தனது தந்தையைப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி சிறையில் பலரிடமும் சொன்னது காவல்துறையினரின் காதில் பட்டது.

தொடர்ந்த விசாரணையில் ஆட்டோ சங்கரின் தந்தை இருக்கும் ஒரிஸ்ஸாவில் அவன் இருக்கலாம் என்ற ஐயமும் எழுந்தது. இதற்கிடையில் தப்பிச் சென்ற ஒரே வாரத்தில் வக்கீல் ராஜாவும், சுண்டல்குமாரும் பெங்களூரில் வைத்து போலீஸில் சிக்கினார்கள். இவர்களை 'பெண்டு' கழட்டியதில் ஆட்டோ சங்கர், தேவியுடன் ஒரிஸ்ஸாவுக்கு சென்றது உறுதியானது.

பெங்களூரில் சிக்கியவர்களையும் அழைத்துக் கொண்டு ஒரிஸ்ஸா விரைந்தது தமிழக போலீஸ். அங்கே இரும்பு எஃகு தொழிற்சாலைக்கு பெயர் போன ரூர்கேலாவின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் தனி குடிசை வீட்டில் புதுமணத் தம்பதிகளாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்த சங்கரையும், தேவியையும் பிடித்தார்கள். தப்பித்த 12 நாட்களில் இப்படி மாநிலம் விட்டு மாநிலம்  தேடி வந்து தன்னைக் கைப்பற்றுவார்கள் என்று சங்கர் நினைக்கவேயில்லை. பின்பு ஒரு சமயம் தன்னை கோர்ட் வளாகத்தில் சந்தித்த நிருபர்களிடம் "எப்படி என்னை ஒரிஸ்ஸாவுக்கே தேடி வந்து பிடிச்சாங்க..?" என்று ஆச்சரியப்பட்டார்.

தொடர்ந்து இவர்களிடத்தில் நடத்திய விசாரணைக்குப் பின்பு பாட்னாவில் பதுங்கியிருந்த ஆட்டோ சங்கரின் தம்பி மோகனும், செல்வராஜூம் போலீஸின் கையில் சிக்கினார்கள். ஒரிஸ்ஸாவில் இருந்து ஆட்டோ சங்கரும், தேவியும் விமானத்தில் கொண்டு வரப்பட்டதுதான் இதில் விசேஷம்..!

இதற்குப் பிறகு இந்தத் தப்பிச் சென்ற வழக்கிற்காகவும் ஆட்டோ சங்கருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் சென்னை மத்தியச் சிறையில் ரொம்ப நாளைக்கு விட்டு வைக்கக் கூடாது என்று சொல்லி சேலம் சிறைக்கு இடம் மாற்றினார்கள். கடைசியில் ஆட்டோ சங்கர் தூக்கில் தொங்கவிடப்பட்டவரையிலும் சேலம் மத்திய சிறையில்தான் இருந்தார்..!

தயவு செய்து எங்களைக் கருணைக் கொலை செய்யுங்கள் - சிறையில் வாடும் அப்பாவி கைதிகளின் கோரிக்கை

13-10-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

24 மணி நேரமாகிய ஒரு நாளில் 20 மணி நேரம் இணையத்தின் முன்பாக அமர்ந்திருக்கும், என்னால் ஒரு நாளைய ஜெயில் வாழ்க்கையை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

ஆனால் சிறைக்கைதிகளாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வரும் ஜெயில்வாசிகளை ஒரு கணம் நினைத்தாலும் நமக்குள் சோகப் படலம் பரவுகிறது.

உண்மையில் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருபவர்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம்  விசாரணைக் கைதியாகவே 15, 20 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடும் அப்பாவிகளை(குற்றம் நிரூபிக்கப்படும்வரையில் அவர்கள் அப்பாவிகள்தானே) பார்த்து என்னவென்று பரிதாபப்படுவது.

இந்தத் துயரக் கதைகளைப் பற்றி இந்த வார நக்கீரன் இதழில் பத்திரிகையாளர் சோலை ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இருந்து சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இனி சோலை அவர்களின் எழுத்து :

“எங்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள். நாங்கள் மகிழ்ச்சியாக மரணத்தை ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் சிந்துவதும் நின்று போகும்..” -  இப்படிச் சொன்ன புழல் சிறையிலும், இதர சிறைகளிலும் உள்ள கைதிகள் 45 பேர் முதல்வர் முதல் பிரதமர், குடியரசுத் தலைவர்வரை அனைவருக்கும் துயரம் தோய்ந்த கடிதம் எழுதியனுப்பியிருக்கிறார்கள்.

இவர்கள் பயங்கரவாதிகளா இல்லை.. அவர்கள் வெடிகுண்டு வீசியவர்களா இல்லை.. வங்கியைக் கொள்ளையடித்தவர்களா இல்லை. ரயிலைக் கவிழ்த்தவர்களா? கள்ள நோட்டு அடித்தவர்களா? இல்லவே இல்லை.

அவர்கள் சூழ்நிலையில் காரணமாக குற்றம் புரிந்தவர்கள். தவறு என்று தெரிந்து அவர்கள் தவறு செய்யவில்லை.

வேலூர் சிறையில் தமிழ்மாறன் என்பவர் 22 ஆண்டுகளாக அடைபட்டிருக்கிறார். அதே சிறையில் மாடசாமி என்பவர் 19 ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். சென்னை புழல் சிறையில் முத்து, புஷ்பராஜ் என்பவர்கள் 18 வருடங்களாக சிறைவாசம் இருக்கிறாகள். குமார், சரவணன் என்பவர்கள் 19 ஆண்டு கால கைதிகள். ஜெயபால், திருப்பத்தூர் ஏழுமலை என்பவர்களும் 18 ஆண்டு காலமாக சிறையில் குடியிருக்கிறார்கள்.  சத்தீஷ், நரேந்திரன், ரமேஷ், அய்யப்பன் என்பவர்கள் 13 ஆண்டு கால சிறைவாசம் முடித்து 14-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள்.

இப்படி தமிழகத்துச் சிறைகளில் மட்டும் ஏறத்தாழ 230 பேர் கூண்டுப் பறவைகளாக அடைபட்டிருக்கிறார்கள். அரசுக்கு மனு போட்டு மனு போட்டு ஓய்ந்து விட்டார்கள். இன்றைக்கு மவுனம்தான் அவர்களின் மொழி. ஒவ்வொரு நாளும் பொழுது புலரத்தான் செய்கிறது. ஆனால் இவர்களைப் பொறுத்தவரையில் தண்டனைக் காலம் முடிந்தும் அடிவானம் சிவக்கவே இல்லை.

ஆதாயத்திற்காக கொலை செய்தவர்கள். பரோலில் சென்று திரும்பி வராதவர்கள், வரதட்சணை, ஆள் கடத்தல் போன்ற வழக்குகளில் இவர்கள் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டார்கள். விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தையும் அனுபவித்துவிட்டார்கள். ஆனாலும் இவர்களுக்கு மட்டும் ஏன் சிறைக்கதவு திறக்க மறுக்கிறது என்று சிந்தித்து சிந்தித்து உயிரோடு மாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் அடிக்கடி குற்றம் புரிந்து சிறைப் பறவையானவர்கள் இல்லை. இவர்கள் முதன்முதலாக ஒரே ஒரு முறைதான் குற்றம் புரிந்தவர்கள். ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது சட்டத்தின் ஒரு பிரிவை மாற்றிக் குறிப்பிட்டுவிட்டார்கள்.

அதனால் அவருக்கு ஆயுள் தண்டனை. பதினான்கு ஆண்டுகள் சிறைவாசத்தை அவர் முடித்துவிட்டார். இதன் பின்னர் ஆண்டுகள் பல கடந்தும் அவர் கைதியாகவே இருக்கிறார். மனித குமாரனாக முடியவில்லை.

ஐம்பது ரூபாய் ஆதாயத்திற்காக ஒருவரை கொலை செய்தததாக சுப்ரமணி என்பவர் மீதும், அவரது மனைவி மீதும் வழக்கு வந்தது. தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் வேலூர் சிறையில் அவர்கள் பதினைந்து ஆண்டுகளைக் கடந்துவிட்டார்கள். இதைப் போன்ற குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்ற திருவல்லிக்கேணி சாகின்சா ராஜா என்பவர் 22 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.

காலத்தின் கடைசி நாள்வரை இவர்கள் இருள் சிறையில் வெந்து கொண்டுதான் இருக்க வேண்டுமா? வெளியுலகை எட்டிப் பார்த்து சுதந்திரக் காற்றை இவர்கள் சுவாசிக்கவே முடியதா..?

அண்மையில் சென்னை புழல் சிறையில் ஒரு கைதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு தாக்கினார். அதனால் அந்தப் பெண் மரணமடைந்தார் என்பது வழக்கு. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பத்தாண்டுகளை அவர் சிறையில் கழித்துவிட்டார். விடுதலைக்கான வெடிவெள்ளி இனி பூக்கவே பூக்காதா என்ற கவலை அவரை உருக்கியிருக்கும்.

முன்னர் இருபதாண்டுகள் சிறையில் இருநதவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் 15 ஆண்டுகள், 10 ஆண்டுகள் சிறைவாசம் கண்டவர்களுக்கு சிறைக்கதவுகள் திறந்தன.

முன்னர் அறிவுரைக் குழு கூடியது. காவல்துறை, சிறைத்துறை அதிகாரிகளுக்கும் கைதிகளின் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அந்தக் குழுவில் அங்கம் பெற்றனர். நீண்ட நாள் சிறைத்தண்டனை பெற்றவர்கள் நன்னடத்தை, இதர அம்சங்களை அந்தக் குழு ஆராய்ந்தது. அந்தக் குழு அளித்த தீர்ப்பின்படி 14 ஆண்டு சிறைத்தண்டனையோடு பலர் விடுதலையானார்கள்.

அந்தக் குழுவின் பரிந்துரையில்லாது எந்தக் கைதியையும் விடுதலை செய்ய முடியாது. ஆயுள் தண்டனையை அனுபவித்துவிட்ட கைதிகள் விடுதலையாவதற்குக்கூட அந்தக் குழுவின் பரிந்துரை தேவை. ஆனால் அந்தக் குழு அண்மைக் காலமாகக் கூடுவதில்லை என்கிறார்கள். எனவே 20 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை அனுபவித்தவர்களுக்குக்கூட கதவு திறக்கப்படுவதில்லை.

இவர்கள் தேச விரோதிகள், தீவிரவாதிகள் என்றால் வெளியே வந்தால் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்றால், இவர்கள் பழைய தாதாக்கள் என்றால் அவர்கள் இறுதிநாள்வரை சிறையில் இருக்க வேண்டியவர்கள்தான்.

ஆனால் இவர்கள் விளைவுகளை அறியாது கோபத்தில் அறிவு மழுங்கிப் போய் குற்றம் செய்தவர்கள். இதயமும், ஆன்மாவும் மரத்துப் போய் இவர்கள் குற்றம் புரிந்தவர்கள் அல்ல. ஒரு விநாடி சிந்தனை சிதறியதால் செய்வது அறியாது குற்றங்களைச் செய்தவர்கள்.

அண்ணா முதல்வராக இருந்தபோது உலகத் தமிழ் மாநாட்டினையொட்டி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம் ஒரு ஆண்டு முதல்வராக இருந்தபோது 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் இருந்த 400 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அடுத்த நான்காண்டுகள் செல்வி.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எவரும் விடுதலை செய்யப்படவில்லை. அறிவுரைக் கழகமும் கூட்டப்படவில்லை.

அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 1405 பேர்களை விடுதலை செய்தார் கலைஞர். அதில் மதுரையில் விடுதலை செய்யப்பட்டவர்களை எதிர்த்து சுப்பிரமணியசுவாமி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. எனவே தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது.

70 வயதுக் கடந்தவர்களை விடுதலை செய்ய கலைஞர் ஆணையிட்டார். அதன் மூலம் 13 பேர் விடுதலையானார்கள். ஆனால் 85 வயதைக் கடந்தவர்கள்கூட இன்னும் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் ஆதாயத்திற்காகக் கொலை குற்றம் செய்தவர்கள், பரோலில் சென்று திரும்பாது மீண்டும் கைது செய்யப்பட்டவர்கள் என்று பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே அவர்களை விடுதலை செய்ய இயலாது என்று சட்டமும், அரசு ஆணையும் சொல்கின்றன. சட்டத்திற்காக மனிதர்களா? மனிதர்களுக்காக சட்டமா?

ஒரே ஒரு முறை குற்றம் செய்துவிட்டு தண்டனைக்கு மேல் தண்டனையையும் நிறைவு செய்துவிட்டு எழுபது வயதை எட்டியவர்கள் இன்னும் சிறைகளில் இருக்கிறார்கள். அவர்களை நம்முடைய தந்தையராகவோ, அன்னையராகவோ கற்பனை செய்து பாருங்கள். அனல்பட்ட மெழுகாய் இதயம் அழுதுவிடும். அவர்கள் பழுத்த பழங்கள். இறுதிக் காலத்திலாவது உற்றார், உறவினர்கள் மடியில் இருக்கக் கூடாதா?

தண்டிக்கப்பட்ட அவர்கள் மேல்முறையீடு செய்யத் தெரியாதவர்கள். அதற்கான வசதியும் இல்லாதவர்கள். அவர்களுக்கு வழிகாட்ட நாதியும் இல்லாதவர்கள். எனவேதான் தினம், தினம் சிறைக்கொட்டடியின் நான்கு சுவர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உதவிக்காக மனித இதயங்கள் கண்ணீர் சிந்துகின்றன. ஆனால் அதன் அவலக் குரல் சட்டத்தின் காதுகளுக்கு எட்டுவதில்லை.

பீகார் சட்டமன்றத்தைப் பாருங்கள். ஏற்கெனவே அந்த மன்றத்தில் இருந்த அனைத்துக் கட்சியினரில் 60 சதவிகிதம் பேர் கிரிமினல்கள். தண்டனை பெற்றவர்கள். இனியும் தண்டனையை எதிர்பார்க்க வேண்டியவர்கள். அங்கே தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவர்களில் பலரும் போட்டியிடுகிறார்கள். பல புதிய கிரிமினல்களும் தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இதே அரசியல் சட்ட விதிகள் வளைந்து கொடுக்கின்றன. அவர்களோடு ஒப்பிடும்போது தமிழகச் சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் வாடுகிறவர்கள் மிக மிகச் சாமானியர்கள். கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு உத்திரப்பிரதேசம், பீகாரில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக டெல்லிக்கு வந்தவர்களையும் பார்த்துவிட்டோம்.

சிறைக்கு வந்த பின்னர் படித்து எம்.சி.ஏ., எம்.காம், எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். கணினிக் கல்வி, தட்டச்சில் தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் கல்விக்கு தமிழக அரசு ஆண்டிற்கு சராசரியாக 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறது. ஆனால் அவர்கள் பட்டம் பெற்று பயன் என்ன? அவர்கள் பெற்ற பட்டங்கள் நூலறுந்த பட்டங்கள்தானா? பத்தாண்டுகளுக்கு மேலாகியும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்று சட்டத்தின் சந்து பொந்துகள் சத்தம் போடுகின்றன. அவர்கள் பட்டம் பெற்றது பாலையில் பெய்த நிலவொளிதானா?

பொதுவாக அறிவுரைக் குழுதான் சிறைவாசிகளுக்கு மலை முகட்டில் மின்னும் சுடராகத் தெரிந்தது. அந்தச் சுடரும் சூறைக் காற்றில் அலை மோதிக் கொண்டிருக்கிறது. எனவே அந்தக் குழு மீண்டும் குறிப்பிட்ட காலங்களில் கூட வேண்டும். குற்றம் புரிந்தவர்களின் தண்டனைக் காலம் முடிந்திருந்தால் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஏழரை ஆண்டு கால தண்டனை முடித்தவர்களுக்கு சிறைக்கதவுகள் திறக்கக் கூடாதா? அவர்களும் மனிதர்கள்தானே?

நன்றி : நக்கீரன் வார இதழ்

இனி நான்..

இந்தக் கைதிகளெல்லாம் சாதாரண குற்றப் பிரிவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தாலும், இவர்கள் செய்த ஒரேயொரு தவறால் சிறையில் இருந்து அனுப்பப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். இதற்கு அடிப்படையான காரணம் இவர்களுக்கு கல்வியறிவோ, செல்வாக்கோ இல்லை என்பதுதான்.

ஊரை அடித்து உலையில் போட்ட மாயா வெங்கடேசன் என்னும் புரோக்கருக்கு ஒரே நாளில் 24-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஜாமீன் கிடைத்து அன்று முதல் ஜாலியாக வீட்டில்தான் இருக்கிறார். நினைத்துப் பாருங்கள். கலைஞர் ஆட்சிக்கு வந்து அடுத்த மாதத்தில் என்று நினைக்கிறேன். ஒரே நாளில் இத்தனை வழக்குகளில். அதுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில்.. எப்பேர்ப்பட்ட சாதனை இது..? பணம் பத்தும் செய்யும் என்பதற்கு இதையும் ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.

ஆனால் இந்த அப்பாவிகளுக்கு பணமும் இல்லை. சரியான சட்ட உதவிகள் செய்ய ஆட்களும் இல்லை. ஒரு முறை சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்தாலோ அல்லது பரோலில் சென்று திரும்பி வராமல் இருந்து பிடிபட்டாலோ அவருக்கு வழக்கு முடியும்வரையில் ஜாமீன் கொடுக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவாம். அதனை இவர்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள்.

சரி.. தண்டனைதான் அடைந்துவிட்டார்களே.. விடுவிக்கலாமே என்றால்.. இப்போதுதான் நன்னடத்தை விதியைக் கொண்டு வந்து காட்டி தடைக்கல் போடுகிறார்கள்.

வழக்கு விசாரணைக்கே வராமல் பல கைதிகள் வருடக்கணக்கில் சிறையில் உள்ளார்கள். இதோ இப்போது மிகச் சமீபத்தில் குணங்குடி ஹனீபா என்பவர் பத்தாண்டுகளாக சிறையில் இருந்தார். பல மட்டங்களில் ஜாமீன் கேட்டும் அவரை விடுவிக்க அரசுத் தரப்பு எதிர்த்தே வந்தது. கடைசியில் தீர்ப்பும் வந்தேவிட்டது. அவர் நிரபாரதி என்று. இப்போது இவர் அனுபவித்த அந்த பத்தாண்டு காலத்தை அரசால் திருப்பித் தர முடியுமா? முடியாதல்லவா..?

தா.கிருஷ்ணன் கொலை வழக்கும் ஒரு படு பயங்கரமான கொலை வழக்குதான். குற்றவாளிகள் 5 ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்பட்டார்களே எப்படிங்க..? அப்போது இந்த மனிதர்கள் செய்தது அவர்களைவிடவும் கொடுஞ் செயலா? கொலையில் திட்டமிட்ட கொலையும், பணத்துக்காக செய்கின்ற கொலைகளும்தான் படு பயங்கரமானவை. ஆனால் உணர்ச்சி வேகத்தில், கோபத்தில் செய்வதையெல்லாம் இந்த வகுப்பில் சேர்க்க முடியாது.

தினகரன் பத்திரிகை தாக்கப்பட்ட வழக்கு என்ன ஆனது..? குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து கொண்டிருந்தபோதே ஜாமீனில்  வெளியில்தான் இருந்தார்கள். இதோ நிரபராதி என்றும் அறிவிக்கப்பட்டுவிட.. அந்தக் கொலையை யார் செய்தது என்று இன்னமும் நமது ஸ்காட்லாண்டு போலீஸாராலும், சிபிஐயினராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தினகரன் அலுவலகத்தில் உயிரோடு கொளுத்தப்பட்ட இரண்டு பேரும் தங்களுக்குத் தாங்களே தீ வைத்து செத்துவிட்டதால் அப்பீல் செய்யவும் மாட்டோம் என்று மனுநீதிச் சோழன் சூளுரைத்துவிட்டார். அவர் குடும்பத்தில் ஒருவர் செத்திருந்தால் இதுபோல் சொல்லியிருப்பாரோ.. சொல்ல மாட்டார். ஏனெனில் அவருக்கு அவரது குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களெல்லாம் சோற்றால் அடித்த பிண்டங்கள்தான்.

நடு இரவில் வீட்டுக்கு எதிரே மரத்தில் கட்டிப் போடப்பட்டு உடம்பு முழுவதும் வரி, வரியாக தழும்புகள் பதியும் அளவுக்கு ஒரு முன்னாள் அமைச்சரும், அவரது செல்லக் கிழத்தியும் மாறி மாறி அடித்துத் துவைத்திருக்கிறார்கள் சிவபாலன் என்ற தமிழரை.. இதோ வழக்கு ஜெட் வேகத்தில் நடந்து முடிந்து தீர்ப்பே வந்துவிட்டது. நிரபராதிகள் என்று.. எப்படிங்க..? 20 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டேயிருக்கும் வழக்குகள் எல்லாம் நீதிமன்றங்களில் நீடித்திருக்க.. ஆளும் கட்சியினர், முன்னாள் அமைச்சர்கள், செல்வாக்கானவர்கள் என்று பலரது வழக்குகள் மட்டும் ஒன்றுமில்லாமல் போகும் மர்மம்தான் என்ன..?

ஏதோ தேவதூதனே ஆட்சி செய்வதைப் போல் தங்களது கசடுகளையும், அசிங்கங்களையும், மக்களின் ஒப்பாரியையும், ஓலங்களையும் மறைத்துவிட்டு காசு கொடுத்து சந்தோஷக் கூச்சல்களை மட்டுமே ஒலிபரப்பி வரும் இந்த ஆட்சியாளர்களின் செவிட்டுக் காதுகளுக்கு இந்த அப்பாவிகளின் குரல் என்றைக்கு கேட்கப் போகிறது..?