Showing posts with label எம்.எல்.ஏ. பதவி. Show all posts
Showing posts with label எம்.எல்.ஏ. பதவி. Show all posts

இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன..? விளைவுகள் என்ன..?

21-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்றைய இடைத்தேர்தல் முடிவுகள் தெரிந்து கலைஞரும், அவர் தம் பரிவாரங்களும் அடைந்திருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியில், ஒரு சதவிகிதம்கூட குறையாத அளவிற்கு இதே நேரத்தில் கொடநாடு எஸ்டேட்டில் இருக்கும் புரட்சித்தலைவியும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்திருப்பார்.

தன்னுடைய தலைமையில் ஒரு அணியில் இருந்து கொண்டே தன் பேச்சை மீறி தேர்தலில் நின்றிருக்கும் கம்யூனிஸ்ட்கள் மீது அளவற்ற கோபத்தில் இருந்தாலும், இருப்பவர்களையும் விரட்டிவிட்டு பின்பு என்ன செய்வது என்று அடக்கிக் கொண்டிருந்த அம்மாவுக்கு இப்போது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.


ஐயாவின் சந்தோஷத்திற்கு காரணம் ஐந்து தொகுதிகளும் அவருடைய கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பது.



அம்மாவின் சந்தோஷத்திற்கு காரணம், தன் வார்த்தையை மீறி தேர்தலில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட்கள் போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலுமே டெபாசிட் தொகையை இழந்து மரண அடி வாங்கியிருப்பதுதான்.

கொஞ்சம் புள்ளி விபரத்தைப் பாருங்கள்..

தொண்டாமுத்தூரில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.என்.கந்தசாமி பெற்ற வாக்குகள் 112350. தே.மு.தி.க. வேட்பாளர் தங்கவேலு பெற்ற வாக்குகள் 40863. இடது கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெருமாள் பெற்ற வாக்குகள் 9126.

கம்பம் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 81516. தே.மு.தி.க. வேட்பாளர் அருண்குமார் பெற்ற வாக்குகள் 24142. இடது கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராஜப்பன் பெற்ற வாக்குகள் 2303.

பர்கூர் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.கே.நரசிம்மன் பெற்ற வாக்குகள் 89401. தே.மு.தி.க. வேட்பாளர் வீ.சந்திரன் பெற்ற ஓட்டுக்கள் 30378. வலது கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.கண்ணு பெற்ற வாக்குகள் 1640.

திருவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுடலையாண்டி பெற்ற வாக்குகள் 53827. தே.மு.தி.க. வேட்பாளர் சவுந்திரபாண்டியன் பெற்ற வாக்குகள் 22468. போட்டியிட்ட வலது கம்யூனிஸ்ட் வேட்பாளர் தனலட்சுமி பெற்ற வாக்குகள் 3407.

இளையான்குடி தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் சுப.மதியரசன் பெற்ற வாக்குகள் 61084. தே.மு.தி.க. வேட்பாளர் அழகு பாலகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 19628.

தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடது கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 11429.

பர்கூர், திருவைகுண்டம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வலது கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 5407.

இந்த இரு கட்சிகளும் சேர்ந்து நான்கு தொகுதிகளிலும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 16836-தான்.

இவர்கள் இப்படியென்றால், தாமரைக் கட்சிக்காரர்களும் இவர்களுக்கு சளைக்காமல் தேர்தலில் போட்டியிட்டு தங்களது செல்வாக்கை நிலை நாட்டியுள்ளார்கள்.


இளையான்குடி தொகுதியில் 1487 வாக்குகளும், பர்கூரில் 1482 வாக்குகளும், தொண்டாமுத்தூரில் 9045 வாக்குகளும், திருவைகுண்டத்தில் 1794 வாக்குகளும், கம்பம் தொகுதியில் 946 வாக்குகளையும் பெற்று அசுர சாதனை படைத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. ஐந்து தொகுதிகளிலும் பெற்ற மொத்த வாக்குகள் 14754.

இதில் என்னை யோசிக்கவும், சிரிக்கவும் வைத்தது கம்பம் தொகுதிதான். இத்தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளாரான சசிகுமார் கூடலூரில் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு கம்பம் திரும்பும் வழியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அண்ணன் அழகிரியைப் பார்த்து அவரிடம் திடீரென்று சரண்டரானதுதான்..

பாவம் பா.ஜ.க. தொண்டர்கள்.. இப்படி இவர் செய்வார் என்பது தெரியாமல் காசை அள்ளி வீசிய வயித்தெரிச்சலில் அன்றைய இரவில் டாஸ்மாக் கடையையே காலி செய்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள்.

"தேர்தலை எங்கள் கட்சி புறக்கணிக்கிறது. எங்களைப் பின்பற்றி மக்களும் புறக்கணிக்க வேண்டும்.." என்று புரட்சித்தலைவி சொல்லியும் பொதுமக்கள் கேட்காமல் சராசரியாக 65 சதவிகிதத்திற்கும் மேலாக ஓட்டுக்களை மக்கள் பதிவு செய்திருப்பதும் ஆச்சரியமான ஒன்றுதான்.

தொகுதிக்குள் ஓட்டளிக்காமல் இருந்தவர்கள்தான் அ.தி.மு.க.வினர் என்றால், அ.தி.மு.க.வின் உறுப்பினர்கள் பட்டியல் கணக்கும் இடிக்கிறது.


இதில் மொட்டை அடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தும் தைரியமாகத் தலையைக் கொடுத்திருக்கும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தினரை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

இந்த முறை அ.தி.மு.க.வும் போட்டியிடாததால் அவர்களுக்கு மிகவும் வசதியாகவும் அமைந்துவிட்டது. ஓட்டுக்களைக் கூடவே அள்ளிவிடலாம் என்று நினைத்து உழைத்திருக்கிறார்கள். அந்த உழைப்புக்கேற்ற வாக்குகள் கிடைத்திருக்கிறது.. பாராட்டுவோம்..


தோல்வி என்றிருந்தால்கூட கொஞ்சம் கவுரவமாக இருந்திருக்கும்.. ஆனால் ஒரு இடைத்தேர்தலில் நான்கு தொகுதியிலும் டெபாஸிட் காலி என்பது சிவப்புக் கொடி தோழர்களுக்கு புதுமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


கேள்விப்பட்டவுடன் எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. காம்ரேடுகளுக்கு இந்த அளவுக்குக்கூடவா தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் பஞ்சம்..? கட்சி மாநாடு எனில் சிவப்புக் கொடியேந்தி வரும் கூட்டத்தினை பார்க்கவே திருவிழா கணக்காக இருக்கும். குடும்பம், குடும்பமாக இருக்கும் இந்த தோழர்கள், இந்த முறை சுணங்கியதற்கு என்ன காரணம் என்று முழுமையாகத் தெரியவில்லை.

ஆனாலும் தொகுதிகளில் மெஜாரிட்டியாக இருக்கக் கூடிய ஜாதிக்காரர்களை நிறுத்தாமல், கட்சிக்கு நீண்ட நாள் உழைத்தவர்கள் என்ற ரீதியில் வேட்பாளர்களை நிறுத்தியதுதான் முதல் காரணம் என்கிறார்கள் அக்கட்சித் தோழர்கள்.

எது எப்படியோ இந்த இடைத்தேர்தலின் மூலம் தேர்தல் நடந்த தொகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்க தொண்டர்களும், பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது இந்தத் தேர்தலில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துபோய்விட்டது. இனி என்ன ஆகும்..?

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தோழர்களின் கதி அதோகதிதான்.. அம்மா எத்தனை தொகுதிகள் தருகிறார்களோ, அதனை கையது, வாயது பொத்தி அமைதியாக வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போக வேண்டியதுதான்.

இல்லை.. இப்போதே கூட்டணியை முறித்துக் கொண்டு ஐயா பக்கம் போனாலும் ஐயாவும் அம்மாவின் பாணியைத்தான் கடைப்பிடிப்பார். என்ன.. ஐயா கொஞ்சம் தட்டிக் கொடுத்து மென்மையாகச் சொல்லுவார்.. அம்மா தட்டாமல் அதட்டிச் சொல்லப் போகிறார். இதுதான் வித்தியாசமாக இருக்கப் போகிறது..

"மக்கள் சேவையில் இருப்பவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் தேர்தலை புறக்கணிக்கக் கூடாது.. அது மக்களை உதாசீனப்படுத்துவது போல.." என்று சொல்லித்தான் இரண்டு கம்யூனிஸ்டு இயக்கங்களும் வரிந்து கட்டிக் கொண்டு அம்மாவின் பேச்சையும் மீறி களத்தில் இறங்கின.

இந்த ஒரு வரி கொள்கைக்காகவே நான் இவர்களுக்கு சல்யூட் செய்கிறேன். அதே நேரத்தில் ஊழல், லஞ்சம், முறைகேடுகள், மக்கள் பணிகளில் அக்கறையின்மை ஆகிய நோய்களைத் தாங்கிக் கொள்ளாத இந்த கம்யூனிஸ்டு இயக்கங்களை, மக்கள் இந்த அளவுக்குப் புறந்தள்ளியிருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் வருகின்ற விடை சுயநலம்.

நம் மக்கள் இந்த அளவுக்கா சுயநல விரும்பிகளாக இருப்பார்கள்..?

எல்லாத்தையும் ஓசில சாப்பிட்டே பழகிட்டோமா..? அதான்.. வீடு எப்படி இருக்குமோ அப்படித்தாங்க நாடும் இருக்கு.. வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாம வந்து குத்திட்டாங்க.. இந்த ஐந்து தொகுதிகளிலுமே ஓட்டுக்குக் குறைந்தபட்சம் 300 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

"யார் எப்படி வேண்ணாலும் போங்க..? என்ன வேண்ணாலும் பண்ணிக்குங்க..? எவ்வளவு வேண்ணாலும் கொள்ளையடிச்சுக்குங்க..? ஆனா எலெக்ஷனப்போ மட்டும் எங்களுக்கு கொஞ்சம் பிச்சை போடுங்க.. வெட்கமில்லாம நாங்க அதை வாங்கிட்டு உங்களுக்குத் தயக்கமில்லாம ஓட்டைக் குத்திருவோம்.."னு சொல்லாம சொல்லிக் குத்திட்டாங்க..

மக்களும் இந்த விஷயத்தில் தெளிவாகிவிட்டதாகவே தெரிகிறது. "நமக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. நம்மால் இந்த அரசியல்வியாதிகளை ஒன்று சேர்ந்து கவிழ்ப்பது என்பது நமக்குள் இருக்கின்ற ஒற்றுமையின்மையால் முடியவே முடியாது.. ஸோ, வருவதை வாங்கிக் கொண்டு ஓட்டைப் போட்டுக் குத்திவிடுவோம்.. பின்பு அவர்கள் நம்மைக் குத்தினால் 'முருகா.. முருகா..' என்று அவன் மீது பாரத்தைப் போட்டுவிடுவோம்.. வேறென்ன செய்வது..?" என்ற மக்களின் சுயநலமான, பொதுநலமில்லாத, பயந்த குணத்தைத்தான் இது காட்டுகிறது.

நமக்கு எதிரிகள் நாம்தானே ஒழிய, அரசியல்வியாதிகள் அல்ல என்பது இதிலிருந்தும் நன்கு தெரிகிறது.

ஒன்வேயில் போலீஸ் நிற்பதை பார்த்தவுடன் சைக்கிளை விட்டு இறங்கித் தள்ளிக் கொண்டு போய் தப்பிக்கும் பொதுஜனமே..

அடுத்த முறையாவது பணம் வாங்காமல், இப்படி பணம் கொடுப்பதே தவறு என்று நெற்றியில் அடித்தாற்போல் சொல்லாமல் சொல்லி, ஓட்டை எதிரணிக்குக் குத்திவிடு.

உனக்கு நீயே சவக்குழி தோண்டிக் கொள்ளாதே.

வாழ்க இந்திய ஜனநாயகம்..!

வாழ்க பொதுஜனம்..!!

வாழ்க தமிழகம்..!!!

இடைத்தேர்தல் அவசியமா..? இளிச்சவாயர்கள் மக்கள்தானே..!

21-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகத்தை ஆளும் அரசப் பரம்பரையினர் ஆவலோடு காத்திருந்த ரிசல்ட் வந்துவிட்டது. ஐந்து தொகுதிகளையும் அப்படியே தூக்கிக் கையில் கொடுத்துவிட்டார்கள். இப்போது தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 99ஆக உயர்ந்து சதமடிக்க ஒரு ஆள் குறைகிறது.

இந்த 99-க்கு ஏதாவது புதுமையான அர்த்தம் கண்டுபிடித்து முரசொலி, விடுதலை, மக்கள் குரல், நமது எம்.ஜி.ஆர்., தினமணிகளில் நாளையே கார்ட்டூன்கள் வரக்கூடும்.

கம்பம், தொண்டாமுத்தூர், இளையான்குடி, பர்கூர், திருவைகுண்டம் ஆகிய ஐந்து தொகுதிகளில் திருவைகுண்டம் தொகுதியின் வேட்பாளர் இறந்து போனதால், தேர்தல் வர வேண்டிய கட்டாயம் இருந்தது. தேவைதான்.. ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் மற்ற தொகுதிகள்..

இளையான்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கண்ணப்பன் தி.மு.க. சார்பாகத்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் பதவி ஏற்க அவசரம், அவசரமாக சென்னைக்கு படையெடுத்து வந்து புது வேஷ்டி, சட்டைகளைக்கூட வாங்கி வைத்திருந்து விழிமேல் விழி வைத்து காத்திருந்தார்.


தலைவர் தரவில்லை. தன் இதயத்தில் அதிகபட்சமாக தான் பிடித்து வைத்திருந்த அயல்நாட்டு உடன்பிறப்புகள் வரிசையில் கண்ணப்பனுக்கும் ஒரு இடம் கொடுத்து அமர வைத்துவிட்டார். பாவம் கண்ணப்பன்.. பிட்டு படம் பார்க்க வந்து எதிர்பார்த்த காட்சியை ஓட்டாத கோபத்தில் சீட்டைக் கிழித்துவிட்டுப் போகும் சாதாரண ரசிகனாக மாறிப் போனார்.

சிவகங்கை மாவட்ட அமைச்சரான பெரியகருப்பனுடன் அன்றிலிருந்து மோதலோ மோதல்.. கான்ட்ராக்ட் கேட்டு சண்டை.. நிதியுதவி கேட்டு சண்டை.. தன்னுடன் தி.மு.க.விற்கு வந்த முன்னாள் இரத்தத்தின் இரத்தங்களுக்கு பதவி கேட்டு சண்டை.. என்று பொழுது விடிந்து பொழுது போனால் சண்டை போட்டே தனது இருப்பை கோபாலபுரத்திற்கு தெரியப்படுத்தினார்.

இந்திராகாந்திக்கே அல்வா கொடுத்த வீடு அது.. இந்த சாதாரண சுள்ளானுக்கா பயப்படும்..? “போடா ங்கொக்காமக்கா” என்று பெப்பே காட்டியதால் கோபப்பட்டு மீண்டும் அவர் வாயாலேயே உச்சரித்த சூர்ப்பனகை, மண்டோதிரியிடம் போய் சரணடைந்துவிட்டார். இது அவருடைய சொந்த நலனுக்காக நடத்தப்பட்ட ஒரு நாடகம்.

அடுத்தது பர்கூர்.. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிகாரப்பூர்வமாக அதிகமான சொத்துக்கள் வைத்திருப்பதாக அறிவிக்க காத்திருந்த வேட்பாளரான கரூர் கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக சவுண்ட் கொடுக்கக்கூட அந்த கரூர் பெல்ட்டில் அ.தி.மு.க.வில் ஆள் இல்லை..


அவரை எதிர்க்க வேண்டுமெனில் அந்த அளவுக்குச் செல்வாக்கும், சூட்கேஸ் திறக்கும் சக்தியும் உள்ளவரைத்தான் களத்தில் இறக்க வேண்டும் என்று போயஸ் தோட்ட அம்மா நினைத்ததால், தம்பித்துரை தனது பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கரூர் பாராளுமன்றத் தொகுதியில் நின்றார்.

அவர் நல்ல நேரம்.. ஜெயித்துத் தொலைந்துவிட்டார். ஆனால் தொகுதி மக்களின் கெட்ட நேரம் ஆரம்பமாகிவிட்டது.. இதுவும் அவருடைய சொந்த நலனுக்காக நடத்தப்பட்ட ஒரு நாடகம்தான்.

அடுத்தது தொண்டாமுத்தூர். காரோட்டி கண்ணப்பன் என்று கலைஞரால் செல்லமாக அழைக்கப்பட்ட இந்தத் தொகுதியின் ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் மூத்தத் தலைவருமான கண்ணப்பனுக்கு வினை கலைஞராலேயே வந்தது.


கண்ணப்பன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கலைஞர் அவரை வந்து பார்த்து நலம் விசாரித்தார். அதேபோல் கலைஞர் மருத்துவமனையில் இருக்கும்போது தான் போய் பார்ப்பதுதான் நாகரிகம் என்று நினைத்தவர் மருத்துவமனைக்கு தன்னுடைய செக்கப்புக்காக சென்ற வேளையில் அப்படியே கலைஞரையும் பார்த்துவிட்டு வந்தார். இதில் இவர் செய்த தவறு என்று இவரை சொல்வது வைகோவிடம் அதனை முன்கூட்டியே சொல்லவில்லை என்பதுதான்.

இது விஷயமாக வைகோகவும், அவருக்குமான நட்பு முறிவு கடைசியில் அந்தக் கட்சியில் இருந்து விலகும் சூழலுக்குச் சென்றது.. விலகினார். விலகி வீட்டில் உட்கார்ந்து சீரியல்களா பார்க்க முடியும்..? எப்பேர்ப்பட்ட அரசியல் தியாகி இவர்..? நாட்டுக்காக எத்தனை, எத்தனை தியாகங்களை செய்திருக்கிறார்? உடனேயே வேறொரு கட்சியில் சேர்ந்தால்தானே அடுத்து ஏதாவது பதவி கிடைத்து அள்ள முடியும்..

உடனேயே தி.மு.க.வில் சேர முடிவெடுத்து மின்னல் வேகத்தில் அறிவாலயத்தில் தனது பழைய அண்ணனிடம் சென்று அடைக்கலமாகிவிட்டார். ஆக இவரும் தனது சொந்த நலனுக்காகவே பதவியை ராஜினாமா செய்தார்.

அடுத்தது கம்பம். கம்பம் நகரின் தெருக்கள் கிட்டத்தட்ட சென்னை மாநகரின் மேல்தட்டு வர்க்கத்தினர் இருக்கும் தெருக்கள் போலத்தான். அங்கிருக்கும் ஒக்கலிக கவுடர் இனத்தினர் அப்படியே அச்சுப் பிசகாமல் நம்ம சென்னைவாசிகள் போலத்தான்..

ஊர் முழுக்க, தெருவுக்குத் தெரு சொந்தக்காரர்கள்தான்.. அந்தத் தொகுதியில் தடுக்கி விழுந்தால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சொந்தக்காரர்கள் இருப்பார்கள். கவுரவம்.. கவுரவம்.. கவுரவம்.. இதைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை என்பார்கள்.

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலும், தேனிக்கு இங்கிட்டு இருக்கும் பகுதியிலும் தி.மு.க. என்கிற பெயரையும், கலைஞர் என்கிற பெயரையும் சந்து பொந்திலெல்லாம் பரப்பி வைத்தவர் கம்பம் நடராஜன் என்கிற உண்மையான உடன்பிறப்பு. அவருடைய சொந்த உடன்பிறப்பான அண்ணன் ராமகிருஷ்ணன் வைகோவுடன் இணைந்து போன போது மிக, மிக கோபப்பட்டவர் ஸ்டாலின்தான்.


இதே ராமகிருஷ்ணன் பொன்.முத்துராமலிங்கத்தோடு இணைந்து தி.மு.க.வுக்கு திரும்புவதைப் போல் ஒரு செய்தி வந்தபோது, உலக அதிசயமாக ஸ்டாலினே அனைத்து பத்திரிகைகளுக்கும் ஒரு செய்தி கொடுத்தார். ராமகிருஷ்ணன் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. அது வதந்தி என்று.. அந்த அளவுக்கு அதை நம்பிக்கை துரோகமாக எடுத்துக் கொண்டது தி.மு.க. தலைமை.

ஆனால் அதையே நினைத்துக் கொண்டிருந்தால் அரசாட்சியை எப்படித் தக்க வைத்துக் கொள்வது..? காலத்திற்கேற்றாற்போல் மாற வேண்டாமா..? மாறிவிட்டார் ஸ்டாலின்.

தனக்குக் கட்டுப்பட மறுக்கிறார்கள் என்று சில கட்சிக்காரர்கள் பற்றி வைகோவிடம் புகார் சொல்லியும் அவர்களை கட்சியில் இருந்து நீக்காமல் வைத்திருந்ததால் கோபப்பட்டு கொஞ்ச நாட்கள் பேசாமல் இருந்த ராமகிருஷ்ணன் அப்போதே கட்சி மாறப் போவது உறுதியாகத் தெரிந்தது. இந்த சிக்னல் பேசலைன்னா போயிருவேன் என்ற மிரட்டலாகத் தெரிய வைகோவும் அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார் என்றார்கள்.

அந்தப் பகுதிக்கே தங்களது குடும்பம்தானே வைகோவை அடையாளம் காட்டியது.. தங்களுக்கே ஆப்பா என்று கோபப்பட்ட ராமகிருஷ்ணன் தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் அறிவாலயத்துக்கு படையெடுத்து தனது அண்ணனிடம் ஐக்கியமாகிவிட்டார். ஸோ, இதுவும் அப்பட்டமான சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு நாடகம்தான்..

தேர்தலில் வென்று தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அடிக்கடி கட்சி மாறி தங்களைக் கவிழ்க்கிறார்களே என்பதால், அவர்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டித்தான் கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் கொண்டு வந்தார்கள்.

கட்சியில் இருந்து விலக்கப்பட்டாலோ, அல்லது விலகினாலோ வேறொரு கட்சியில் சேர முடியாது.. கூடாது. அப்படி சேர்ந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும் என்ற விதிமுறையையும் தங்களது சுயநலத்துக்காகவே கொண்டு வந்தார்கள்.

இப்படி கட்சி மாறுபவர்கள் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்காக இருந்தால் அதனை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம் என்பதுகூட அவர்களுக்கு இருந்த ஒரு நப்பாசைதான். நாளைக்கு இதை வைத்தே நமக்கு யாராவது ஆப்பு வைச்சிட்டா என்கிற பயத்தில் அவர்கள் கொண்டு வந்ததுதான் இந்த உட்பிரிவு விதிவிலக்கு.

இப்படி நால்வரும் போனதுதான் போனார்கள். அப்படியே எம்.எல்.ஏ.வாகவே இருந்துவிட்டுப் போயிருக்கலாமே.. எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்று சபாநாயகரால் சொல்லிவிட்டுப் போகட்டுமே.. அடுத்தத் தேர்தலின்போது பிடித்தமான கட்சியில் சேர்ந்துத் தொலையட்டுமே.. செய்தார்களா..?

பொழுது விடிந்து பொழுது போனால் அம்மாவின் டிவியில் மைனாரிட்டி அரசு என்ற வர்ணனையைக் கேட்டு, கேட்டு ஐயாவுக்கு மனம் கொதித்துப் போனது.. எப்படியாவது தங்களது கட்சியின் எண்ணிக்கையைக் கூட்டி வருங்காலப் புள்ளிவிவரத்தில் ஒரு மாறுதலைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார் கலைஞர். அதன் விளைவுதான்.. மூவரின் ராஜினாமாவும்.. அதன் பின்னரான இடைத்தேர்தலும்.

ஆக, இதுவும் அப்பட்டமான சொந்த நலனுக்காக நடத்தப்பட்ட ஒரு நாடகம்.

இந்த நாடகங்களுக்காக செலவான தொகை நிச்சயம் 20 கோடி ரூபாய் இருக்கும். இது ஐயாவின் சொந்தப் பணமல்ல.. கட்சி மாறி வந்த பொதுநல சேவைக்காரர்களின் பணமும் அல்ல.. மக்களின் பணம்.. நம்முடைய பணம்..

இப்போது மூன்று தொகுதிகளுக்கும் அமைச்சர்கள் பட்டாளம் அணி வகுத்தது. ஒரு தெருவுக்கு ஒரு அமைச்சர் என்று நியமிக்கப்பட்டு பட்டுவாடாக்கள் நடந்தேறியுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் ஓட்டுக்கள் குறைந்தால் அவரவர் பதவிகள் பறிபோகும் அபாயம் உண்டு என்பதால் அனைத்து அமைச்சர்களும் தங்களது அதிகார, பண, அரசியல் பலத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது..

இப்படி கோட்டையில் இருந்து ஒட்டு மொத்த அமைச்சர்களும் வெளியேறி தொகுதிக்குள் சென்று அடைக்கலமாகியதில் அரசு வேலைகளில் கண்டிப்பாக சுணக்கம் ஏற்பட்டிருக்கும்.. இதை யார் கேட்பது..? இப்போது அமைச்சர்களின் வாகனச் செலவு, அவர்கூட வந்திருக்கும் அடிப்பொடிகளுக்கான செலவு.. டி.ஏ. பில் என்று ஏகத்துக்கும் பில்லை போட்டுத் தாளித்திருப்பார்களே.. இதெல்லாம் யார் செலவு..? அமைச்சர்களின் மாமனார் வீட்டுச் செலவோ..?

அரசு செலவழித்திருக்கும் 20 கோடி ரூபாயில் என்னென்ன செய்திருக்கலாம் என்று அதே தோகுதிகளில் வீடு, வாசல் இல்லாமல் ரோட்டோரங்களில் தங்கி கூலி வேலை செய்து கொண்டிருக்கும் அப்பாவி மக்களைக் கேட்டால் சொல்லியிருப்பார்கள்.

இதைப் பத்தி யாருக்கு என்ன கவலை..? பொதுமக்களின் பணம் என்பதாலும், அரசியலமைப்புச் சட்டப்படி ஆறு மாதங்களுக்குள் புதிய சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதாலும்தான் தேர்தல் அவசியமாகிறது என்று சொல்லலாம்.

இந்த உளுத்துப் போன சட்டங்களை முதலில் தூக்கியெறிய வேண்டும். காலத்துக்கேற்றாற்போல இப்போது சட்டங்களைத் திருத்தத்தான் வேண்டும். ஒவ்வொரு முறையும் இது போல மக்கள் பணத்தில் மஞ்சள் குளிப்பதைத் தவிர்த்து கொஞ்சமாவது படித்த, நாகரிக மனிதர்களைப் போல நடந்து கொள்ள நமது அரசியல்வியாதிகள் முன் வர வேண்டும்.

ஒரு தொகுதியின் உறுப்பினர் இறந்துவிட்டாலோ, அல்லது கட்சி மாறியதால் பதவியை விட்டாலோ முந்தைய தேர்தலில் யார் இரண்டாவதாக வந்தார்களோ அவர்களையே அந்தத் தொகுதி உறுப்பினராக நியமனம் செய்துவிடலாம்..

நமக்கு காசும் மிச்சம்.. அரசியல்வியாதிகளுக்கு அலைச்சலும் மிச்சம்.. கட்சிக்காரர்களும் கத்துவதும் மிச்சம்.. வியாபாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதும் மிச்சம்.. அப்பாவி பொதுமக்களுக்கு ஒரு கரைச்சலும் மிச்சமாகும்.

யார் கேட்பது..?

மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை இவர்களுக்கு மட்டும் இல்லையா..?

18-08-2009


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



சென்ற மாதத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களும்,, மேற்படிப்பு படிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பயிற்சிக்கான உதவித் தொகையை உயர்த்திக் கொடுக்கும்படி தினம்தோறும் பல்வேறு வகையான போராட்டங்களை அறிவித்து நடத்தியபோதிலும் அசைந்து கொடுக்காமல் அரசிடம் அந்த அளவுக்கு நிதி இல்லை என்று கூலாக கை விரித்துச் சொன்ன அதே தமிழக அரசுதான், நடந்து முடிந்த சட்டமன்றத் தொடரின் இறுதி நாட்களில் ஒரு சின்ன முணுமுணுப்பு, கோரிக்கைகள், கேள்விகள்கூட எழாத நிலையிலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்தது.

சம்பளத்தை உயர்த்த வேண்டிய நிலைமையிலா பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைமை உள்ளது.? கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்றக் கட்சி எம்.எல்.ஏ.க்களில் முக்கால்வாசி பேர் இப்போதே கோடீஸ்வரர்கள்தான்.

கட்சி அவர்களை தேர்தலில் நிறுத்தியபோதே "எத்தனை வருடங்களாக மக்கள் சேவை செய்து வருகிறீர்கள்..?" என்றா கேட்டார்கள்..? "எவ்வளவு செலவு பண்ண முடியும்..?" என்றுதானே சட்டையைப் பிடிக்காத குறையாகக் கேட்டிருக்கிறார்கள். நின்றார்கள்.. ஜெயித்தார்கள். இதோ இந்த ஐந்தாண்டு காலத்தில் கூட, குறைய என்றாலும்கூட தேர்தலுக்காக செலவழித்த தொகையைவிட பத்து மடங்கு சம்பாதித்துவிடுவார்கள். போதாதா..?

சம்பள உயர்வு.. சம்பள உயர்வு என்கிறார்களே.. இவர்களுடைய சம்பளக் கதையை பாருங்கள்..

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகச் சம்பளம் வழங்கப்படுகின்றது.

மகாராஷ்டிராவில் மாதம் 52 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் எம்.எல்.ஏ.க்களின் உதவியாளர்களுக்கான சம்பளம் 8000 ஆயிரம் ரூபாயும் அடக்கம். ஆனால் இதன்படி பார்த்தால் தமிழக எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் நாட்டிலேயே அதிக சம்பளம். தமிழகத்துக்கு அடுத்தபடியாக கோவா மாநிலத்தில் 45 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

ஆரம்பத்தில் 250 ரூபாய் சம்பளமாக இருந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இன்று 50 ஆயிரம் ரூபாயைத் தொட்டுள்ளது. அதுவும் 2006-ல் அமைந்த இந்த தி.மு.க. ஆட்சியின் துவக்கத்தில் 16 ஆயிரம் ரூபாய் மட்டுமே எம்.எல்.ஏ.க்கள் வாங்கிய நிலையில், மூன்றாண்டுகளில் மூன்று மடங்கு சம்பளம் மற்றும் இதரப் படிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு 1964-ம் ஆண்டு 250 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது. எவ்வித படிகளும் கிடையாது.

இதுவே 1971-ல் ஈட்டுப்படியாக 100 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. 1978-ல் ஈட்டுப்படி 350 ரூபாயாகவும், தொலைபேசி படியாக 150 ரூபாயும் சேர்த்து மொத்தம் 750 ரூபாய் வழங்கப்பட்டது.

கடந்த 2007-ம் ஆண்டு வரை 2000 ரூபாய் வரை என்ற அளவிலேயே இருந்தது. எனினும் 1997-ல் ஈட்டுப்படி 3500 ரூபாயாகவும், தொகுதி படி 625 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

1998-ல் தொகுதிபடி, தபால்படி ஆகியவை தலா 875 ரூபாயாகவும், தொலைபேசிபடி 1750 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1999-ல் தொலைபேசிபடி மட்டும் 1000 ரூபாய் உயர்த்தப்பட்டு 2750 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. அப்போதுதான் மொத்தச் சம்பளம் பத்தாயிரம் ரூபாயைத் தாண்டியது.

பின்னர் 2002-ம் ஆண்டு புதிதாக தொகுப்புபடி என 2000 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. 2001-ல் ஈட்டுப்படி 4000 ரூபாயாகவும், தபால்படி 2000 ரூபாயாகவும், தொலைபேசிபடி 4000 ரூபாயாகவும், தொகுப்பு படி 2500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இதனால் மொத்தச் சம்பளம் 16 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.

அதிமுக ஆட்சி அமைந்த 2001-ல் உயர்த்தப்பட்ட இந்த 4000 ரூபாய் உயர்வைத் தவிர அந்த ஆட்சி முடியும்வரை எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பளம் மற்றும் படிகள் உயர்த்தப்படவில்லை.

தி.மு.க. ஆட்சி 2006-ல் வந்ததும் ஈட்டுப்படியில் 2000 ரூபாய், தொகுதி படியில் 2000 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றனர்.

இதற்கு அடுத்த ஆண்டான 2007-ல் புதிதாக வாகனப்படி என 5000 ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் 2008-ல் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் 2000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக கடந்தாண்டு உயர்த்தப்பட்டது. அப்போது ஈட்டுப்படி, தொகுதிபடி, தபால்படி, தொலைபேசிபடி ஆகியவை தலா ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு மொத்தம் 30 ஆயிரம் ரூபாயாக மாறியது.

இந்த ஆண்டு ஏப்ரலில் வாகனப்படி 5000 ரூபாயில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சம்பளம் 3000 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதால் மொத்தச் சம்பளம் 50 ஆயிரமாக மாறியுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 1.21 கோடி ரூபாய் செலவாகும்.

இப்போது ஆட்சியில் அள்ளிக் கொண்டிருப்பவர்களை மட்டும் கவனித்தால் போதுமா..? ஏற்கெனவே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களைக் கவனிக்க வேண்டாமா..?

இதன்படி முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் 8 ஆயிரம் ரூபாயில் இருந்து பத்தாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. நான்காயிரம் ரூபாய் ஓய்வூதியமாகப் பெறும் அல்லது ஒரு ஆண்டுக்குக் குறைவாக எம்.எல்.ஏ. பதவி வகித்தவர்களுக்கும் இந்த உயர்வு நீட்டிக்கப்படும். இதனால் அரசுக்கு 2.25 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

மறைந்த எம்.எல்.ஏ.க்களின் வாரிசுகளுக்குக் குடும்ப ஓய்வூதியமாக 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம் என மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது. இந்த வேறுபாடுகளைப் போக்கி அனைவருக்கும் ஒரே வீதத்தில் குடும்ப ஓய்வூதியமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தும்போது குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் அதில் 50 சதவிகிதம் உயர்த்தப்படும்.

அரசு மருத்துவமனைகளில் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இலவச சிகிச்சையளிப்பதைப் போல மறைந்த எம்.எல்.ஏ.க்களின் வாரிசுகளுக்கும் இலவச சிகிச்சையளிக்கப்படும். இந்த ஊதிய உயர்வுகள் அனைத்தும் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலாக்கப்படும்.

முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வாகனங்களை அரசே கொடுப்பதால் வாகனப்படி கிடையாது. தொலைபேசிபடி, தபால்படி போன்றவையும் கிடையாது. எனினும் இவற்றை பயன்படுத்த வரம்பு ஏதும் இல்லாததால் எவ்வளவு வேண்டுமானாலும் அமைச்சர்கள் பயன்படுத்தலாமாம்.. இதனால் அமைச்சர்களைப் பொறுத்தவரையில் 28 ஆயிரம் ரூபாய்தான் சம்பளமாகப் பெறுவார்களாம்.

தமிழ்நாட்டில் ஒரு தமிழனின் சராசரி மாத வருமானம் 2 ஆயிரம் ரூபாயைக்கூடத் தொடவில்லை. ஆனால் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் 50000 ரூபாயைத் தொட்டுவிட்டது..

இதோ இன்றைக்கு அங்கன்வாடி பணியாளர்களும், சத்துணவு பணியாளர்களும் ஊதிய உயர்வு கேட்டு கோட்டைவரை ஊர்வலம் நடத்தப் போவதாக அறிவித்தவுடன் அரசே பத்திரிகைகளில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதன்படி பார்த்தால் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கான மாதச் சம்பளம் குறைந்தபட்சம் 3180 என்றும், அதிகப்பட்சம் 4134 என்றும் அரசே ஒத்துக் கொண்டுள்ளது.

இதை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்..? ஒரு குடும்பத்துக்கு மாதம் 4000 ரூபாய் போதும். அதிலேயே அவர்களால் குடும்பம் நடத்த முடியும் என்று அரசே முடிவு செய்தால், இதே அளவு சம்பளத்தை எம்.எல்.ஏ.க்களுக்கும் கொடுக்கலாமே.. அவர்களுக்கு மட்டும் ஏன் 50000 ரூபாய் சம்பளம்..?

ஏற்கெனவே எம்.எல்.ஏ.க்களுக்கான நிதியில் கமிஷன்.. மணல் கொள்ளையைக் கண்டு கொள்ளாமல் இருக்க கமிஷன்.. அந்தத் தொகுதிக்குட்பட்ட போக்குவரத்து கழகங்களில் ஆள் சேர்க்க கமிஷன்.. ரோடு, காண்ட்ராக்ட் பணிகளில் கொள்ளை கமிஷன்.. என்று சகலவிதங்களிலும் பணம் சேர்த்துக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு சம்பளம் கொடுப்பதே வேஸ்ட்.. இதுல இன்னும் சம்பள உயர்வு வேறயா..?

இப்போது விலைவாசி விற்கின்ற விலையில் பருப்பையும், புளியையும் கடையில் கண்ணால் பார்த்துவிட்டு பேசாமல் வீட்டுக்கு வரலாம் போலிருக்கிறது. இந்த லட்சணத்தில் கடைநிலைப் பணியாளர்களான இவர்களுக்கே இது போதும்.. அடங்கிட்டுப் போங்க என்று எச்சரிக்கும் அரசு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து பணத்தை நீட்டுவதன் காரணம் என்ன..?

கூட்டுக் கொள்ளைதானே..? "நான் நிறைய அடிக்கிறேன்.. அதுல உனக்கும் கொஞ்சம் கொடுக்குறேன்.. சத்தம் போடாம இரு.." என்று அன்பாக பணத்தால் அடித்து வெளிப்படையாகச் சொன்னால் லஞ்சமாக அரசு செலவிலேயே கொடுத்து அற்புதம் செய்திருக்கிறது இந்த அரசு.

இந்த லட்சணத்தில் கூடவே இன்னொரு கொடுமையும் அன்றைக்கு நடந்தது.. சென்னையை அடுத்த சோளிங்கநல்லூரில் தலா இரண்டரை கிரவுண்டு நிலத்தினை எம்.எல்.ஏ.க்களுக்கு ஒதுக்கீடு செய்யவும் அரசு முடிவெடுத்துள்ளதாக அன்றைக்கு சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்தார்.

மக்களுக்காக ஒரு கக்கூஸ் கட்ட வேண்டுமென்றால்கூட "அடுத்த வருஷம் கட்டலாம். கைல காசு இல்லை.. பட்ஜெட்ல துண்டு விழுகுது.." என்றெல்லாம் வசனம் பேசி சமாளிக்கும் இந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அச்செய்தியைக் கேட்டவுடன் நிமிட நேரத்தில் முதல்வர் பேசிக் கொண்டிருக்கும் அந்த நேரத்திலேயே, அவர்களுக்குள்ளேயே கையெழுத்து வேட்டை நடத்தி முதல்வரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்துள்ளார்கள்.

இந்தக் கூத்தை எங்க போய் சொல்றது..?

இது மாதிரியான மின்னல் வேக நடவடிக்கைகளை என்றைக்காவது இவர்கள் மக்கள் நலப் பணிகளில் காட்டியிருக்கிறார்களா..?

இன்றைக்குக்கூட காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரப்பாக்கம் ஏரிக்குள் புத்தகப் பையைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு இடுப்பளவு தண்ணீரில் நடந்து வந்து கரையில் ஏறியவுடன் மாற்று உடை அணிந்து கொண்டு பள்ளிக்குச் செல்லும் நிலைமையில் மாணவர்களும், மாணவிகளும், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் இருக்கிறார்கள்.

இதனைப் பற்றி இவர்கள் ஏன் இவ்வளவு அக்கறையாகக் கவலைப்படவில்லை.. தங்களுக்கு என்றவுடன் இந்த அயோக்கியர்களுக்கு எவ்வளவு வேகம் பிறக்கிறது பாருங்கள்.. இவர்களெல்லாம் மக்கள் பணி செய்யவா வந்திருக்கிறார்கள்?

எதிர்ப்புகள் எழுந்தவுடன் "அப்படியொரு பேச்சுதான் இருக்கிறது.. சும்மா தர மாட்டோம்.. காசு வாங்கிட்டுத்தான் தருவோம். அதுக்கும் அவங்க ஒத்துக்கிட்டாங்க.." என்றெல்லாம் பூசி, மெழுகியிருக்கிறார் முதல்வர்.

தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி அந்தப் பகுதியில் ஒரு கிரவுண்டு நிலம் 30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இரண்டரை கிரவுண்ட் என்றால் 75 லட்சம் ரூபாய் வருகிறது.. இந்த அளவுக்கு பெரும் தொகையில் நிலத்தை விற்றாலும், வாங்குவதற்கு எம்.எல்.ஏ.க்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு எதற்கு சம்பள உயர்வு..?

தெரியாமல்தான் கேட்கிறேன்.. இந்த எம்.எல்.ஏ.க்களும், இவர்கள் சார்ந்த கட்சிக்காரர்களும் மேடைதோறும் "நான் மக்களுக்காக உழைப்பவன்.. ஓய்வு, உறக்கம் இன்றி உழைப்பவர்கள், போராடுபவர்கள்.. மக்கள் சேவையே மகேசன் சேவை.. கொள்கை குன்றுகள் நாங்கள்.. மக்களுக்காக உயிரைக்கூட விடுவேன்.. அதை செய்வேன்.. இதைச் செய்வேன்.. அப்படி பிடுங்குவேன். இப்படி கிழிப்பேன்.." என்றெல்லாம் வாய் கிழிய வக்கனை பேசுகிறார்களே..

இந்த சம்பளத்தை மட்டும் எப்படி வெட்கமில்லாமல் கை நீட்டி வாங்கிக் கொள்கிறார்கள்..?

மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணையெல்லாம் எங்களுக்கு இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார்களோ..?

வாழ்க இந்திய ஜனநாயகம்..