உலகளவில் ‘கொரோனா வைரஸ்’ தொற்று பரவிய வரலாறு..!

25-03-2020

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் இருக்கும் வுகான் நகரில் ஒரு நபரிடமிருந்து துவங்கிய கொரோனா நோய்த் தொற்று.. மூன்றே மாதங்களில் உலக அளவில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பரவியது எப்படி..?



2019 டிசம்பர் 19

சீனாவின் வுகான் நகரில் உள்ள ஹூனான் கடல் உணவு மொத்த விற்பனையகத்தின் உரிமையாளரான வெய் கிக்சியானின் உடல் நலம் திடீரென்று பெயர் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்த 3 வாரங்களில் அதே வுகான் நகரின் வர்த்தகர்கள் பலரது உடல் நலனும் இதேபோல் பாதிக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு டிசம்பர் மாத இறுதியில் இது ஒரு தொற்று நோய் என்பது கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

2019 டிசம்பர் 29

வுகான் நகரத்தில் பலருக்கும் நிமோனியா தாக்கம் இருப்பதை அந்த நகரின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் டிசம்பர் 31-ம் தேதியன்று உலக சுகாதார அமைப்பிடம் சீனா இது பற்றி எச்சரிக்கை செய்தியை அனுப்பியது.

2020 ஜனவரி 1

வுகான் நகரில் இருக்கும் அனைத்து கடல் உணவு விற்பனை செய்யும் சந்தைகளும் மூடப்பட்டன.

2020 ஜனவரி 7

மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கிய வைரஸ் ‘சார்ஸ் வைரஸை உள்ளடக்கிய கோரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது’ என்று சீன விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதற்கு ‘2019 என்கோவிட்’ என்று பெயரிட்டனர்.

2020 ஜனவரி 9

கொரோனா வைரஸ் 44 பேருக்கு பரவியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

2020 ஜனவரி 11

கொரோனா வைரஸால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டதாக சீனா அறிவித்தது. ஹூனான் மார்க்கெட்டில் இருந்து உணவுப் பொருட்களை வாங்கிய 61 வயது முதியவர் கொரோனா வைரஸிற்கு முதல் பலியானார்.

2020 ஜனவரி 13

தாய்லாந்தில் முதன்முதலாக கொரோனா வாரஸ் ஒருவரைத் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. சீனாவிற்கு வெளியில் கண்டறியப்பட்ட முதல் கொரோனா வைரஸ் தொற்று இதுவாகும்.

2020 ஜனவரி 16

ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

2020 ஜனவரி 20

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

2020 ஜனவரி 21

அமெரிக்காவில் நோய்த் தடுப்புக் கட்டுப்பாட்டு அமைப்பு கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்தது.

2020 ஜனவரி 23

வுகான் நகரில் விமானம், ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

2020 ஜனவரி 25

ஹூபெய் மாகாணத்தில் மேலும் 5 நகரங்களில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 3.6 கோடி மக்கள் தங்களது வீடுகளில் முடக்கப்பட்டனர்.

2020 ஜனவரி 25

சர்வதேச அளவில் 1000 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக கண்டறியப்பட்டது.

2020 ஜனவரி 30

இந்த நாளில்தான் இந்தியாவின் முதல் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. வுகான் நகரில் இருந்து இந்தியா திரும்பிய ஒரு கேரள மாணவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார்.

உலக அளவில் இன்றைய தேதியில் 8234 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச எமெர்ஜென்ஸியாக சர்வதேச சுகாதார அமைப்பு அறிவித்தது.

2020 ஜனவரி 31

ரஷ்யா, ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் வைரஸ் பரவியிருப்பது உறுதியானது.

2020 பிப்ரவரி 1

சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259 ஆனது. 11791 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐக்கிய அரபுக் குடியரசு, வியட்நாம் ஆகிய நாடுகளில் வைரஸ் தொற்றுள்ளவர்கள் கண்டறியப்பட்டனர்.

2020 பிப்ரவரி 2, 3

வுகான் நகரில் இருந்து கேரளாவுக்கு வந்த மேலும் 2 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

2020 பிப்ரவரி 4

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முறையான மருத்துவ சிகிச்சை முறைகள் இல்லை என்று உலகச் சுகாதார அமைப்பு அறிவித்தது.

2020 பிப்ரவரி 5

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்து டைமண்ட் பிரின்சஸ் கப்பல் யோகோமாவில் நகர துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இந்தக் கப்பலில் இருந்தவர்களில் 15 இந்தியர்கள் உட்பட 175 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கப்பலில் இருந்த 138 இந்தியர்கள் உட்பட 3177 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

2020 பிப்ரவரி 6

ஐரோப்பாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சீனாவில் கொரோனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 563 ஆக உயர்ந்தது. மேலும் 28 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரிந்தது.

2020 பிப்ரவரி 7

கொரோனா வைரஸின் அபாயம் குறித்து மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முயன்று சீன அதிகாரிகளால் மிரட்டப்பட்ட மருத்துவர் லிவென்லியாங் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.

2020 பிப்ரவரி 8

இந்த நாளில் 2002-2003-ல் உலக அளவில் சார்ஸ் நோயால் இறந்தவர்களைவிடவும் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை கூடியது.

சீனாவில் 811 பேர் இறந்தனர். 37198 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். உலக அளவில் 40,150 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

2020 பிப்ரவரி 14

ஆப்பிரிக்க நாடுகளில் முதன்முறையாக எகிப்தில் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக கண்டறியப்பட்டது.

இதே நாளில் முதல்முறையாக பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸுக்கு ஒருவர் பலியானார்.

2020 பிப்ரவரி 15

ஏராளமான ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் கொரோனா வைரஸின் பரவல் இந்தியாவில் இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்தது.

2020 பிப்ரவரி 18

சீனாவில் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் கீழே குறையத் துவங்கியது.

2020 பிப்ரவரி 19

ஈரானில் முதல்முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் 2 பேர் உயிரிழந்தனர்.

2020 பிப்ரவரி 21

இத்தாலியின் லோம்பர்டி நகரத்தில் வைரஸ் தொற்று அதிகமானது. அங்கு முதலில் 6 பேருக்கு வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டது.

2020 பிப்ரவரி 24

தென்கொரியாவில் வைரஸ் பாதிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். 833 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

குவைத், பக்ரைன், ஈராக், ஆப்கானிஸ்தான், ஓமனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டார்கள்.

2020 பிப்ரவரி 25

ஈரான் சுகாதாரத் துறையின் துணை அமைச்சரான ஜராஜ் ஹரிர்சி தான் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பகிரங்கமாக தெரிவித்தார்.

2020 பிப்ரவரி 27

எஸ்டோனியா, டென்மார்க், வடக்கு அயர்லாந்து மற்றும் தெதர்லாந்து நாட்டில் முதல் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டனர்.

உலகளாவிய அளவில் 2500 பேர் உயிரிழந்த நிலையில் 82000 பேர் நோய் தொற்றிய நிலையில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

2020 மார்ச் 2

இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்தது.

இத்தாலியில் இருந்து டெல்லிக்கு வந்த 45 வயது நபருக்கும், துபாயில் இருந்து ஐதராபாத் வந்த 24 வயது வாலிபர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியிருந்தது.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

2020 மார்ச் 3

இத்தாலியில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு வந்த சுற்றுலா பயணிக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிந்தது.

டெல்லியில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த 21 இத்தாலியர்கள் மற்றும் 3 இந்தியர்கள் வைரஸ் தொற்று சோதனைக்காக முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இத்தாலியில் இன்றைய தினத்தில் கொரோனாவிற்கு 77 பேர் பலியானார்கள்.

2020 மார்ச் 4

இந்திய பரிசோதனை முகாமில் சோதிக்கப்பட்டவர்களில் 14 இத்தாலியர்கள் மற்றும் இந்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இத்தாலி சென்று வந்த குர்கானைச் சேரந்த ஒருவரும் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

2020 மார்ச் 7

உலகளாவிய அளவில் 1 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

ஈரானுக்கு சென்ற லடாக்கை சேர்ந்த 2 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது.
சீன சுகாதார ஆணையம் புதிதாக 99 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக அறிவித்தது.

2020 மார்ச் 9

கொரோனா வைரஸ் எதிரொலியால் பங்கு மார்க்கெட்டில் சென்செக்ஸ் 1941.67 புள்ளிகள் சரிந்தன. சர்வதேச சந்தையிலும் சரிவு ஏற்படத் துவங்கியது. இது வர்த்தகர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.

2020 மார்ச் 11

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று அதிவேகத்தில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாக்ஸ் மற்றும் அவரது மனைவிக்கும் நோய்த் தொற்று இருப்பது தெரிந்தது.

2020 மார்ச் 12

26 ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. 

சவூதி அரேபியாவுக்கு சென்று வந்த கர்நாடக மாநிலம் காலாபர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தார்.

2020 மார்ச் 13

டெல்லியில் கோவிட்-19 நோய் தொற்று ஒழுங்கு முறை விதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டது.

2020 மார்ச் 15

உலகளாவிய அளவில் 1 லட்சத்து 50 பேருக்கு கொரோனா நோய் தொற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

2020 மார்ச் 16

அமெரிக்காவில் வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முதல் தடுப்பூசி சோதனைகள் தொடங்கின.

2020 மார்ச் 18

சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகள் யாரும் இல்லை.

இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2978 ஆக உயர்ந்தது.

இந்தியாவிற்குள் வெளிநாட்டினர் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. சர்வதேசப் பயணிகள் இங்கிலாந்து, துருக்கி, ஐரோப்பா முழுவதும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மார்ச் 31-ம் தேதிவரையிலும் இந்தியாவுக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

2020 மார்ச் 19

இதுவரையிலும் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவித்தது.

இந்தியாவில் இதுவரையிலும் 3 பேர் வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியிருந்தார்கள். 169 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

2020 மார்ச் 22-ம் தேதி துவங்கி ஒரு வாரத்திற்கு சர்வதேச பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அமெரிக்கா, கனடாவை போன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இங்கிலாந்து 30 லட்சம் கோடி ரூபாயை அறிவித்தது.

நியூஸிலாந்து 96960 கோடி ரூபாயை வைரஸ் தொற்று பிரச்சினைக்காக செலவிடப் போவதாக அறிவித்தது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10000-ஐ தாண்டியது.

2020 மார்ச் 20

உலகளாவிய அளவில் 2,66,175 பேருக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

1 comments:

JaY Reborn @ Jaes said...

அண்ணா அருமை. எங்க பேஸ்புக்ல காணாம போய்விட்டீர்கள்...