மேயாத மான் - சினிமா விமர்சனம்

23-10-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

Stone Bench Films நிறுவனத்தின் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
படத்தில் வைபவ் ஹீரோவாகவும், பிரியா பவானி சங்கர், இந்துஜா இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் விவேக் பிரசன்னா, அருண் பிரசாத், அம்ருதா சீனிவாசன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
விளம்பர வடிவமைப்பு – அமுதன் பிரியன், மக்கள் தொடர்பு – நிகில், விளம்பரம் – பவன் நரேந்திரா, தயாரிப்பு மேற்பார்வை – மதன் சண்முகம், தயாரிப்பு நிர்வாகம் – சி.அனந்தபத்மநாபன், நிர்வாகத் தயாரிப்பாளர் – சாருகேஷ் சேகர், தயாரிப்பு வடிவமைப்பு – அசோக் நாராயணன், உடை வடிவமைப்பு – பிரவின் ராஜா, ஒலி சேர்ப்பு – அருண் சீனு, ஒலி வடிவமைப்பு – சூரன் ஜி.அழகியகூத்தன், எஸ்.நாகாவெங்கட், பாடல்கள் – விவேக், நடனம் – எம்.ஷெரீப், சந்தோஷ், கலை இயக்கம் – குமார் கங்கப்பன், இசை – பிரதீப் குமார், சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – ஷபீக் முகமது அலி, ஒளிப்பதிவு – வித்யு அய்யன்னா, இணை தயாரிப்பு – கல் ராமன், எஸ்.சோமசேகர், கல்யாண் சுப்ரமணியன், தயாரிப்பு – கார்த்திகேயன் சந்தானம், எழுத்து, இயக்கம் – ரத்னகுமார்.

நாயகன் வைபவ் தாய், தந்தையை இழந்தவர். கல்லூரியில் படித்து வரும் தனது ஒரே தங்கையான இந்துஜாவுடன் வாழ்ந்து வருகிறார். சராசரிக்கும் கீழான குடும்பம். ‘மேயாத மான்’ என்கிற பெயரில் ஒரு மெல்லிசை குழுவை நடத்தி வருகிறார்.
இவருடைய நண்பர்கள் விவேக் பிரசன்னா, அருண் பிரசாத். வைபவ் தன்னுடன் கல்லூரியில் படித்த பிரியா பவானி சங்கரை ஒருதலையாய் காதலித்து வந்திருக்கிறார். ஆனால் கடைசிவரையிலும் காதலை சொல்லவே இல்லை என்பதால் இப்போது பிரியா இன்னொருவருடன் திருமணத்திற்கு தயாராகி நிச்சயத்தார்த்தம்வரையிலும் சென்றுவிட்டார்.
இந்த நேரத்தில் பிரியாவின் நிச்சயத்தார்த்தம் பற்றி தெரிந்து கொண்ட வைபவ் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது நண்பர்களுக்கு போன் மூலம் தெரிவிக்கிறார். இதனால் பயந்து போன நண்பர்கள் விவேக்கும், அருணும் பிரியாவின் வீட்டிற்கு போய் அவரிடம் பேசுகிறார்கள்.
வைபவ்வை திட்டி உசுப்பேற்றிவிடும்படியாக பேசினால்தான் அவன் தற்கொலை முடிவை கைவிடுவான் என்கிறார்கள். பிரியாவும் இதற்கு உடன்பட்டு நண்பர்கள் எழுதிக் கொடுத்தது போலவே வைபவ்விடம் போனில் பேச, இதனால் கோபப்படும் வைபவ் தற்கொலை முடிவை கைவிட்டுவிட்டு தான் அவள் கண் முன்பாகவே வாழ்ந்து காட்டுவதாகச் சொல்கிறார். இந்த போன் உரையாடலின்போது வைபவ் தன்னை எப்படியெல்லாம் காதலித்தார் என்பதை பிரியா தெரிந்து கொள்கிறார்.
இதன் பின்பு நடக்கும் நண்பன் அருணின் திருமணத்தின்போது பிரியாவை பார்த்துவிடும் வைபவ் அவளை தன்னால் மறக்க முடியவில்லை என்கிறார் நண்பர்களிடம். இப்போது பிரியா தன் வீட்டாரிடம் தனது திருமணத்திற்கு 1 வருட அவகாசம் கேட்டு ஒத்தி வைக்கிறார். இடையில் ஏற்படும் ஒரு அசம்பாவிதத்தின்போது பிரியாவுக்கு கல்யாணமே நடக்கவில்லை என்பது வைபவுக்கு தெரிய வர.. தான் அவளை காதலிப்பதாகவே நினைத்து சந்தோஷப்படுகிறார்.
இன்னொரு பக்கம் வைபவின் நண்பனான விவேக்கை, வைபவ்வின் தங்கை இந்துஜா ஒரு தலையாய் காதலிக்கிறார். இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால் பிரியா வைபவை உண்மையாகவே காதலிக்கத் துவங்குகிறார். பிரியாவின் வீட்டில் அவளது கல்யாணத்திற்காக வற்புறுத்த, பிரியா இதற்காக ஒரு திட்டத்தை வைபவ்விடம் சொல்கிறாள். இந்தப் பிரச்சனையின்போது ஏற்படும் வாக்குவாதத்தால் பிரியாவும், வைபவ்வும் பிரிகிறார்கள்.
விவேக்-இந்துஜா திருமணம் நடந்தேறும் அதே தினத்தில் பிரியாவுக்கும் வேறு மாப்பிள்ளைக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் சுவையான திரைக்கதை.
‘இறைவி’ கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் தனது குடும்பத்தினரின் பெயரில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். ‘இறைவி’யின் பார்மெட்டில் இன்றைய இளைஞர்களின் மனப்போக்கை முற்றிலுமாக அறிந்து கொண்டு அவர்களுக்காகவே எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம்.
வைபவ்வுக்கு நிச்சயமாக இந்தப் படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுத் தரும். பக்காவான லோக்கல் பையனாக நடித்திருக்கிறார். மருத்துவமனையில் விவேக்கையும், பிரியாவையும் ஒன்றாக பார்த்துவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்து நண்பனை சாத்து, சாத்தென்று சாத்திவிட்டு ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை’ என்ற பிரியாவின் வார்த்தையைக் கேட்டுவிட்டு அதே நண்பனை கட்டியணைத்து நடனமாடும் அந்தச் சந்தோஷ காதலனின் முகத்தை அழகுபட நடிப்பில் காட்டியிருக்கிறார் வைபவ். வெல்டன் ஸார்.
தற்கொலை முயற்சியில் ஈடுபடும் இரண்டு காட்சிகளிலும் சீரியஸ்ஸை குறைத்து காமெடியாக்கி படம் தற்கொலை முயற்சிக்குள்ளாதவகையில் காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர். இதற்கு தனது நடிப்பினால் உதவியிருக்கும் வைபவுக்கு நன்றிகள்.
ஒரேயொரு டிவி சீரியிலில் நடித்த கையோடு தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனக்கென தனியான ரசிகர் மன்றக் கூட்டத்தினை உருவாக்கிய பிரியா பவானி சங்கருக்கு இது முதல் படம். ஆனால் அவருடைய நடிப்பில் அப்படி தெரியவில்லை.
மிகச் சாதாரணமாக அறிமுகமாகி போகப் போக அந்தக் கேரக்டருக்கே தனியான ஒரு அடையாளத்தையே தந்திருக்கிறார் பிரியா. மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏறும் நிலையில் அலட்சியமாகவும், அவசரமாகவும்  ‘எனக்கு கல்யாணமே நடக்கலை’ என்று வெடுக்கென்று சொல்லும் பாவனையில் ‘அதான் சொல்லிட்டாங்கள்ல.. காதலிச்சு தொலைங்கேளாப்பா’ என்று பார்ப்பவர்களையும் சொல்ல வைத்திருக்கிறார்.
திருமணத்திற்கான தந்திர ஏற்பாடாக நடக்கும் அந்த சம்பவத்தின்போது தன்னுடைய இயலாமையினால் புலம்பித் தள்ளும் வைபவ்விடம் “நீயா செஞ்ச…?” என்று பிரியா சட்டென்று கேட்கும் தருணத்தில் தியேட்டரே அதிர்கிறது..!
நல்லதொரு டைமிங்சென்ஸ் டயலாக் டெலிவரியுடன் கூடிய நடிப்பாற்றல் பிரியாவிடம் உள்ளது. நல்ல கதைகளையும், கேரக்டர்களையும் செலக்ட் செய்து நடித்தால் ஒரு ரவுண்டு வரலாம். இனிமேல் எல்லாமே அவர் கையில்தான் உள்ளது.
படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலம் வைபவ்வின் தங்கையாக நடித்திருக்கும் இந்துஜா. இதுதான் முதல் படம் என்று நினைக்கிறோம். மிக அழகாகவும், கவரும்விதத்திலும் நடித்திருக்கிறார். அறிமுகக் காட்சியே அடிதடியில் இருக்க.. போகப் போக குடும்பப் பாங்கான பெண்ணாக துணிச்சலான கதாபாத்திரத்தில் யதார்த்தமாக நடித்து மனதில் பதிகிறார்.
இதுவரையிலும் அடியாளாகவும், ரவுடிக் கும்பலில் ஒருவனாகவும் முகம் காட்டியிருந்த வைபவ்வின் நண்பராக நடித்திருக்கும் விவேக் பிரசன்னாவுக்கு இந்தப் படம் முழு அடையாளம் கொடுத்திருக்கிறது. படம் முழுக்க வைபவ் கூடவே வந்து, நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். பாராட்டுக்கள் பிரதர்.
படத்தின் இடையிடையே வரும் மெல்லிய நகைச்சுவையே படத்தை நகர்த்தியிருக்கின்றன. தீவிர அய்யர் குடும்பமாக தோன்றும் பிரியாவின் வீட்டிற்கு வந்து சொம்பில் தண்ணீர் குடிக்கும் வைபவ் அதைக் கவ்விக் குடிக்க.. இதைப் பார்த்து கோபமாகும் அவரது அம்மா, “அடுத்தவங்க வீட்ல இப்படித்தான் குடிப்பீங்களா…?” என்று கேட்க, “நீங்க எதை வைச்சுக் குடிப்பீங்க..?” என்று வைபவ் பட்டென்று திருப்பிக் கேட்பதும் ஒரு மிகப் பெரிய குறியீடுதான். சர்ச்சைகள் வேண்டாம் என்பதால் விட்டுவிடுவோம்.
ஒளிப்பதிவு, இசையெல்லாம் படத்திற்கு பெரிய பலத்தையெல்லாம் தரவில்லை. குறிப்பாக இசையில் ஒன்றுமேயில்லை. இப்போதும் இந்தப் படத்திற்கும் இளையராஜாதான் உதவியிருக்கிறார் என்பதிலேயே இப்போதைய இசையமைப்பாளர்களின் திறமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது புரிகிறது.
வைபவ் – பிரியாவின் கிளைமாக்ஸ் காட்சி சொல்லும் கதையைவிடவும், விவேக்-இந்துஜாவின் காதல் கதைதான் படத்தில் அதிகம் பேசப்படுகிறது என்பதுதான் உண்மை..!
இப்போது 21-ம் நூற்றாண்டுதான் என்றாலும் திருமணத்திற்கு தங்களது குடும்பத்தினரிடம் சம்மதம் வாங்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்திற்கு முன்பாகவே குழந்தை பெற்றுக் கொள்ளத் துடிக்கும் மனோபாவத்தை இன்றைய வளரும் இளைய சமுதாயத்தினரின் மத்தியில் விதைக்க வேண்டாம் என்பதையும் இயக்குநருக்கு சொல்லிக் கொள்கிறோம்.
குறும்படமாக பேசப்பட்ட ஒரு விஷயத்தை முழு படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். முழு திரைப்படத்திற்கான திரைக்கதை விரிவாக்கத்தில் கொஞ்சம் பிசிறு தட்டுவதால் இடையில் போரடிக்கிறது. பின்பு வேகமெடுக்கிறது. ஆனாலும் ஒட்டு மொத்தமாய் படம் பார்த்து ரசிக்கும்படிதான் உள்ளது.
மேயாத மான் – பார்க்கலாம்தான்..!

0 comments: