சிங்கம்-3 - சினிமா விமர்சனம்

12-02-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள படம் இது. இதில் சூர்யா ஹீரோவாக நடிக்க, இவருக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன் இருவரும் நடித்துள்ளனர்.
மற்றும் நாசர், சரத்பாபு, சுமன், சூரி, ராதிகா சரத்குமார், ராதாரவி, அனூப் தாக்கூர் சிங், சரத் சக்சேனா, ஜெயப்பிரகாஷ், விஜயகுமார், ரோபோ சங்கர், ஜோ மல்லூரி, டெல்லி குமார், யுவராணி, சுமித்ரா, நிதின் சத்யா, இமான் அண்ணாச்சி, இளவரசன், கிரேன் மனோகர், மோகன்ராம், கமலேஷ், எமி சந்த்ரா என்று மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
சண்டை பயிற்சி – கனல் கண்ணன், உடைகள் – நேகா ஞானவேல்ராஜா, சாய், நடனம் – பிருந்தா, ஷோபி, பாஸ்கர், ஒப்பனை – பாரி வள்ளல், விஷுவல் எபெக்ட்ஸ் – VFX, ஒலிப்பதிவு – டி.உதயகுமார், ஸ்டில்ஸ் – முருகன், கலை – கே.கதிர் ஒளிப்பதிவு – ப்ரியன், இசை – ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் – விஜய், தாமரை, விவேகா, படத் தொகுப்பு – வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய், இணை தயாரிப்பு – ஜித்தின், தயாரிப்பு நிர்வாகம் – ஏ.ஆர்.சின்ன ராஜேந்திரன், தயாரிப்பு – கே.ஈ.ஞானவேல்ராஜா, தவால் ஜெயந்திலால் காடா, எழுத்து, இயக்கம் – ஹரி.

உண்மையாக ஆந்திராவில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவத்தை மையமாக வைத்தே, இந்தப் படத்தின் கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் ஹரி.
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என்று இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் விசாகப்பட்டிணம் மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சசிகுமார் என்ற 30 வயது இளம் போலீஸ் அதிகாரி ஒரு நாள் காலையில் திடீரென்று துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார்.
இது நடந்தது 2015-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று. தனது போலீஸ் குவார்ட்டர்ஸில் தங்கியிருந்தார் சசிகுமார். அன்றைய தினம் காலை 6 மணிக்கு வீட்டிற்குள்ளேயிருந்து திடீரென்று எழுந்த துப்பாக்கி சத்தம் கேட்டு வாசலில் இருந்த பாதுகாப்பு போலீஸார் உள்ளே ஓடிச் சென்று பார்த்தபோது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்தம் பாய்ந்தோடிய நிலையில் சசிகுமார் விழுந்து கிடந்தார். உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை தூக்கிச் சென்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
அது தற்கொலையா அல்லது கொலையா.. அல்லது விபத்தா என்பதே தெரியாமல் குழம்பிப் போனது ஆந்திர மாநில அரசு. விசாரணையை லோக்கல் போலீஸில் இருந்து ஆந்திர மாநில சி.ஐ.டி. போலீஸ் பிரிவுக்கு மாற்றினார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. தற்கொலை செய்யும் அளவுக்கு அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் சொன்னதையடுத்து விசாரணை வேறு கோணத்தில் திரும்பியது.
விபத்தாக இருக்குமோ என்று நினைத்தால்… பாதுகாப்பு போலீஸார் வீட்டிற்குள் ஓடி வந்து பார்த்தபோது அவரது கைத்துப்பாக்கி டேபிள் மீது கிடக்க.. சசிகுமார் தரையில் விழுந்து கிடந்தது எப்படி என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்தது. ஸோ.. சசிகுமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் ஆந்திர சி.ஐ.டி. போலீஸ் விசாரணையைத் துவக்கியது.
இந்த விசாரணைக்காக தமிழக போலீஸின் உதவியையும் நாடியது ஆந்திர போலீஸ். ஆனாலும் இதுவரையிலும் இந்த வழக்கில் துப்பு துலங்கவில்லை. சசிகுமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கு காரணமாக அவர் தனது பணிக் காலத்தில் சமூக விரோதிகளுக்கெதிராக எடுத்த பல நடவடிக்கைகளை சுட்டிக் காட்டுகின்றன ஆந்திராவின் மீடியாக்கள்.
சசிகுமார் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2012-ம் ஆண்டின் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பேட்ச். ஆந்திராவிலேயே போஸ்டிங் கிடைத்து அங்கேயே இதற்கு முன்பு 2 இடங்களில் வேலை பார்த்து இறுதியாகத்தான் விசாகப்பட்டிணம் நகருக்கு மாற்றலாகி வந்திருந்தார்.
அவர் விசாகப்பட்டிணத்தில் பணியில் சேர்ந்ததில் இருந்து அந்த ஊரில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த கஞ்சா வியாபாரத்தை முற்றிலும் ஒடுக்கியிருந்தார். பல கஞ்சா வியாபாரிகளை கைது செய்து சிறையில் தள்ளினார். விசாகப்பட்டிணம் துறைமுகம் வாயிலாக ஊருக்குள் வந்த போதைப் பொருட்கள் நடமாட்டத்தை அடியோடு ஒழித்தார்.
இப்படி போதைப் பொருட்கள் தடுப்பு விஷயத்தில் சசிகுமார் காட்டிய தீவிரமே அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று ஆந்திராவின் பல பத்திரிகைகள் சுட்டிக் காட்டின. ஆனாலும் இப்போதுவரையிலும் சசிகுமாரின் மரணம் ஒரு மர்ம மரணமாகத்தான் பதிவாகியிருக்கிறது.
இந்தக் கொலையை மட்டுமே தனது கதைக்கான மையப்புள்ளியாக எடுத்துக் கொண்ட இயக்குநர் ஹரி.. கொலைக்கான காரணத்தையும், பின்னணியில் இருந்தவர்களையும் முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைக்கதையில் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் போலீஸ் கமிஷனரான ஜெயப்பிரகாஷ் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலை பற்றி துப்பு துலக்குவதற்காக சி.பி.ஐ.யின் சிறப்பு டெபுடேஷனில் தமிழகத்து ஐ.பி.எஸ். அதிகாரியான துரைசிங்கம் என்கிற சூர்யா நியமிக்கப்படுகிறார்.
விசாகப்பட்டினத்தின் மிகப் பெரிய ரவுடித் தலைவனான விட்டல் தனது ஆட்கள் மூலமாக சூர்யாவை விசாகப்பட்டினத்தில் கால் வைக்கும்போதே போட்டுத் தள்ள ஆள் அனுப்புகிறார். சூர்யா அந்தக் கண்டத்தில் இருந்து தப்பித்து பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
விசாரணையைத் துவக்குகிறார். இந்த நேரத்தில் ஸ்ருதிஹாசன் ‘இந்தியா டுடே ரிப்போர்ட்டர்’ என்கிற உண்மையை மறைத்து சூர்யாவின் பின்னாலேயே போய் உண்மையை அறிய முயல்கிறார்.
ஜெயப்பிரகாஷ் கொலையில் மிகப் பெரிய திமிங்கிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தாலும், உள்ளூரில் இருப்பதெல்லாம் வெறும் ஆடுகள்தான் என்றும் ஏவிவிட்ட பெரும் புள்ளி ஆஸ்திரேலியாவில் இருப்பதையும் சூர்யா கண்டுபிடிக்கிறார்.
மத்திய அமைச்சரான சுமனின் மகனான அனூப் தாக்கூர் சிங் ஆஸ்திரேலியாவில் தொழில் நடத்தி வருகிறார். பழைய இரும்புப் பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி ஏற்றுமதி செய்யும் தொழில் என்கிற போர்வையில்… ஆஸ்திரேலியாவின் காலாவதியாகிப் போன மருந்துகள்.. பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள், மாத்திரைகள்.. என்று பலவற்றையும் கப்பல் மூலமாக தமிழகத்துக்குக் கொண்டு வருகிறார்.
இங்கே அவைகளை மருந்து கடைகளின் மூலமாக விற்பனை செய்து பல கோடிகளை சம்பாதித்து வருகிறான். இந்த காலாவதியான மருந்துகளை உட்கொண்டதன் மூலமாக சில குழந்தைகளின் உயிர்கள் பறி போயிருக்கின்றன. அதே நேரம் கெட்டுப் போன மாத்திரைகளையும், மருத்துவ சாதனங்களையும் எரிக்கும்போது ஏற்பட்ட விஷ வாயு புகையினால் ஒரு பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 32 குழந்தைகள் ஸ்தலத்திலேயே மாண்டு போயிருக்கிறார்கள்.
இது பற்றி விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனரிடம் புகார்கள் வந்த நிலையில்தான் கமிஷனர் ஜெயப்பிரகாஷ் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை கண்டறிகிறார் சூர்யா. அனூப் தாக்கூரை பிடிக்க வலை வீசுகிறார் சூர்யா. இதற்காக ஆஸ்திரேலியாவரை சென்றும் முயல்கிறார். மேலும், இந்த அனூப், சரத் சக்சேனா கும்பல்களுக்கு பின்னால் மிகப் பெரிய அரசியல் புள்ளிகளும், பெரிய பண முதலைகளும் இருப்பது சூர்யாவுக்கு தெரிய வருகிறது.
ஆதாரம் இல்லாமல் அவனை நெருங்க முடியாமல் இருக்கும்போது அரசியல் சூழ்ச்சியால் சூர்யா சி.பி.ஐ.யில் இருந்து வெளியேற வேண்டி வருகிறது. உடனேயே தன்னை ஆந்திர மாநிலத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டு அதன்படி விசாகப்பட்டினம் கமிஷனராக பதவியேற்கும் சூர்யா உண்மையான குற்றவாளிகளை கண்டறிய முனைகிறார்.
அவருடைய இந்த முயற்சி வெற்றியடைந்ததா இல்லையா என்பதைத்தான் விறுவிறுப்பான திரைக்கதையில், மசாலா கலந்த இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஹரி.
பாடல் காட்சிகளைத் தவிர மற்றபடி தான் இருக்கும் அனைத்துக் காட்சிகளிலும் ஆக்ரோஷமாக நடிப்பைக் கொட்டியிருக்கிறார் சூர்யா. வீரமான போலீஸ் அதிகாரி என்பதால் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் ஒரே மாதிரியான ஆக்சனை காட்டினால் எப்படி..? இதையெல்லாம் நினைக்கவே முடியாத அளவுக்கு சூர்யா படபடவென பேசிவிட்டுப் போக காட்சிகள் அடுத்தடுத்து ரேஸ் குதிரைகள் போல போய்க் கொண்டேயிருக்க.. தியேட்டரைவிட்டு வெளியில் வந்த பின்புதான் இப்படி யோசிக்கவே முடிகிறது.
ஸ்ருதிஹாசன் உளவு வேலை பார்க்க வந்துவிட்டு சட்டென இரண்டாம் ஹீரோயினுக்கே உரித்தான குணத்தோடு ‘ஐ லவ் யூ’ சொல்லிவிட்டு பின்பு சூர்யாவுக்கு மணமாகி மனைவியும் இருக்கிறார் என்பதை உணர்ந்து ‘ஸாரி’ சொல்லிவிட்டு தன்னால் முடிந்த உதவியை திரைக்கதையில் செய்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்.
அனுஷ்கா ஷெட்டி.. யாரோ எவரோ என்பது போல திரையில் அறிமுகமாகி பின்பு ஊடலை விளக்கி.. அதைக் கூடலாக்கி.. பாடல் காட்சிகளில் ரசிகர்களை காதலாக்கி.. கதற விட்டிருக்கிறார். நன்று..!
சரத் சக்சேனாவை தமிழ்ச் சினிமாவில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டது.  இவரும், புதுமுக நடிகர் அனூப் தாக்கூரும், சேர்ந்து வில்லன்களுக்கே உரித்தான குணத்தோடு திரையை மணக்க வைத்திருக்கிறார்கள்., ஜோ மல்லூரி, சுமன், சரத்பாபு, விஜயகுமார், நாசர் என்று பலரும் அவர்கள் வரும் காட்சிகளில் கதையை பயணப்பட உதவியிருக்கிறார்கள்.
இத்தனை பெரிய டெம்போ ஏற்றும் படத்தில் தலையும், இல்லாமல் வாலும் இல்லாமல் காமெடி காட்சிகளை வைப்பதற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும். இயக்குநர் ஹரியிடம் அது இருக்கிறது. சூரி, இமான் அண்ணாச்சி, ரோபோ சங்கர் மூவரையும் வைத்து அவர் செய்திருக்கும் இந்த 2 நிமிட காமெடிகளெல்லாம் சற்றே நம் மூளையையும், கண்களையும் ஓய்வெடுக்க வைக்கத்தான் என்பதை உணர்ந்து கொண்டு சற்றே நிம்மதிப் பெருமூச்சுவிடலாம்.
ஒளிப்பதிவாளர் பிரியனின் கேமிராவில் ஆஸ்திரேலியாவின் காட்சிகள் அனைத்தும் குளுமை. பாடல் காட்சிகளில் அனுஷ்காவும், ஸ்ருதியும் போட்டி போட்டு கிளாமரை காட்டியிருக்கிறார்கள். ஆனாலும் அசத்தியிருப்பது அனுஷ்காதான். சண்டை காட்சிகளில் கேமிராவின் வேலை அதிகம்தான். அதையும் ரசிக்க வைப்பது போல படமாக்கியிருக்கும் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு ஒரு ஷொட்டு..!
இத்தனை சீரியஸ் ப்ளஸ் ராக்கெட் வேக படத்திற்கு படத் தொகுப்புதான் மிகப் பெரிய பலமாக இருக்க வேண்டும். இருந்திருக்கிறது. படத்தின் காட்சிகள் கிட்டத்தட்ட 300-ஐ தாண்டும் என்று உறுதியாகச் சொல்ல்லாம். அத்தனை சின்னச் சின்ன ஷாட்டுகளையெல்லாம் எப்படி தொகுத்து இத்தனை அழகுற.. கொஞ்சமும் ஸ்லிப்பாகாமல் அடுத்தடுத்து வருவது போல அமைத்திருக்கும் படத் தொகுப்புப் பணியில் நீண்ட, நெடிய அனுபவசாலியான வி.டி.விஜயனுக்கும், அவரது உதவியாளர் ஜாய் அவர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்திருக்கும் பாடல்கள்தான் படத்தின் மிகப் பெரிய குறை. ஒரு பாடல்கூட ரசிக்கும்படி இல்லை. பாடல் காட்சிகளை பார்ப்பதுபோல படமாக்கியிருந்தாலும், பாடல்கள் முணுமுணுக்க வைக்காததால் பெரிதும் ஏமாற்றமே..!
ஏற்கெனவே வெளிவந்த ‘சிங்கம்-1’, ‘சிங்கம்-2’ படங்கள் வெற்றி பெற்ற நிலையில் இந்த ‘சிங்கம்-3’ படமும் நிறைய எதிர்பார்ப்புகளுடன்தான் திரைக்கு வந்திருக்கிறது. ஆனால் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும்வகையில் இயக்குநர் ஹரிக்கே உரித்தான பரபர திரைக்கதையினால் மசாலா பட விரும்பிகளை முழுவதுமாக திருப்திப்படுத்தியிருப்பதால் இந்த ‘சிங்கம்-3’ படமும் வெற்றிப் படம் என்றே சொல்லலாம்.
முந்தைய இரண்டு பாகங்களை போலவே இந்தப் படத்திலும் வலுவான கதைக் களனை வைத்துக் கொண்டு திரைக்கதையாக்கம் செய்திருக்கிறார் ஹரி. எந்த ஒரு காட்சியுமே 3 நிமிடங்களுக்கு மேல் இல்லை. அடுத்தடுத்த காட்சிகளில் படம் நகர்ந்து கொண்டேயிருப்பதுதான் இந்தப் படத்தின் ஸ்பெஷலாட்டி.
படத்தின் துவக்கத்தில் இருந்தே பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் கொண்டு போயிருக்கிறார். இதுவரையிலும் தன் படத்தில் இல்லாத அளவுக்கான சமூக அக்கறையுடனான கதை தேர்வுக்காக தனி பாராட்டைப் பெறுகிறார் இயக்குநர் ஹரி.
பழைய இயக்குநர்கள் புதியவைகளை ஏற்றுக் கொள்ளாமலும், கற்றுக் கொள்ளாமலும், பழைய பாணியிலேயே படங்களை உருவாக்கினால் தோல்விதான் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டு, ஹரி தனது கதைத் தேர்வில் மாற்றத்தைக் கொண்டு வந்து அதே நேரம் தனது ஸ்பீடு திரைக்கதையில் மாற்றம் செய்யாமல் இயக்கியிருப்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.
ஹரியின் இந்த மாற்றத்தை இயக்குநர்கள் பேரரசு, ஏ.வெங்கடேஷ், ஆர்.கே.செல்வமணி போன்றோர் புரிந்து கொள்வது அவர்களுக்கும் நல்லது. தமிழ்த் திரையுலகத்திற்கும் நல்லது.
‘சிங்கம்-3’ நிச்சயமாக சிங்கமாகத்தான் திரும்பி வந்திருக்கிறது. பார்க்கலாம்தான்..!

0 comments: