29-07-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
படத்தின் கதையும் சத்தியமா சொன்னா புரியாதுதான்..!
கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிட்டு டெய்லி பப், தண்ணி, கிளப்புன்னு சுத்துற ஆளு சிவா. வோல்ஸ்வேகன் கார் ஒண்ணு வாங்கி அதுல ஜம்முன்னு போகணும்ன்றதுதான் ஐயாவோட நீண்ட நாள் கனவு. அம்மாவோட நச்சரிப்பு தாங்காம கல்யாணத்துக்கு ஒத்துக்கப் போய்.. ஒரு பொண்ணு சிக்குது. அந்தப் பொண்ணுக்கும் கல்யாணத்துல இஷ்டமில்லை.. ரெண்டு பேருக்குமே இது தெரிஞ்சு ஆளுக்கு ஒரு பொய் சொல்லி கல்யாணத்தை நிறுத்திர்றாங்க.. ஆனா விதி விடலை. அதுக்கப்புறமும் ரெண்டு பேரையும் 50 லட்சம் பரிசு ஒரு போட்டிக்காக ஒண்ணு சேர்க்குது..! தான் விரும்பிய கார் வாங்குறதுக்காகவே போட்டில கலந்துக்கிட்டதா சிவா சொன்னாலும், ரெண்டு பேருக்குள்ளேயும் காதல் இருக்காம்.. அது பாருங்க.. நம்ம கண்ணுக்குத் தெரியலை.. அவங்களுக்கும் தெரியலை.. இயக்குநருக்கு மட்டுமே தெரிஞ்சிருக்கு..! இதையே கடைசி 3 ரீல்ல இழுத்துவைச்சு கடைசீல ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சு சுபம் போட்டு முடிச்சிட்டாங்க. அவ்ளோதான் கதை..!
சிவா அண்ணன் இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் ஆனாத்தான் அடுத்தடுத்த வருடங்களில் மேலும் ஒரு படி போக முடியும்..! எப்போதும் பிரச்சினை என்றவுடனேயே நெற்றிப் பொட்டைத் தொட்டுவிட்டு குனிந்து கொள்வதும்.. கேமிராவுக்கு மேலே பார்த்து பேசுவதுமாகவே இருக்கிறார். இந்த மேனரிஸம் இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை. ஆனாலும் சிற்சில இடங்களில் நகைச்சுவை தூள் பறக்கிறது..!
நண்பனின் திருமணத்தின்போது ஹீரோயின் வசுந்தரா அனுப்பிய பெண் வந்து செய்யும் கலாட்டாவை சமாளிப்பது.. சிவாஜியிடம் தன்னுடைய குறையைச் சொல்லி திருமணத்தை நிறுத்துவது.. வசுந்தராவின் பெட்ரூமூக்குள் சென்று வசனத்தைக் கொட்டுவது. பின்பு வெளியில் வந்து சிவாஜியை சமாளிப்பது.. மனோபாலாவை இந்தக் கதைக்குள் இழுத்துவிடுவது என்று இவர் செய்திருக்கும் சிற்சில காமெடிகள் மட்டுமே படத்தினை தொடர்ந்து பார்க்க வைத்திருக்கிறது..!
இவருக்கு அடுத்து சிவாஜியும், மனோபாலாவும்தான்..! தெரியாத்தனமாக ஒரு பொய் சொன்னதற்காக மேட்டர் இல்லம்மா என்ற ஒற்றை வரியை அசால்ட்டாகச் சொல்லி அனைத்து கைதட்டல்களையும் வாங்கிக் கொண்டார் சிவாஜி. எப்போதும் காமெடிக்கு டயலாக் டெலிவரிதான் முக்கியம் என்பார்கள். அதற்கு இந்த ஒரேயொரு ஷாட்டையே உதாரணமாகச் சொல்லலாம்..! ஆனாலும் இதையே காரணமாக வைத்து அவ்வப்போது அந்த இடத்தை பார்த்தபடியே சிலேடை பேசுவது கொஞ்சம் ஓவரோ என்று சொல்லத் தோன்றுகிறது..!
வசுந்தரா.. சிரிக்கும்போது பளீச்சென இருக்கிறார் எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய்..! பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போகிறது..! பட்டுச் சேலையில் பாந்தமாக காட்சியளித்து இவரே பிற்பாடு பப்பில் பீர் அடித்து வாந்தி எடுத்த கேரக்டர் என்ற திருப்பம் வரும்போது இன்னும் கொஞ்சம் பிடித்துப் போகிறது..! சிவாவுடன் ஒத்துப் போய் கல்யாணத்தை நிறுத்திவிட்டு பின்பு சிவா மீதே காதலாகி தன் காதலை ஒத்துக் கொள்ளும்படி கெஞ்சும் அந்தக் காட்சியில் மட்டுமே காமெடியே இல்லாது சிறிது நேரம் உதடுகளை மூட வேண்டியிருக்கிறது..! நச் என்ற நடிப்பு.. இந்தப் பாப்பாவுக்கு ஏன் அதிக வாய்ப்புகள் வரலைன்னு தெரியலை.. இந்த இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் வேற என்னதான் வேணுமாம்..?
இயக்குநர் புதுமுகம். எம்.ராஜேஷின் பட்டறையில் இருந்து வெளி வந்திருக்கிறவர்.. அதே பார்முலாவின்படி கதையை சிறிதும் போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார்..! எந்த நேரமும் கையில் டேப்லட்டுடன் திரியும் சிவாவின் பாட்டி அவ்வப்போது எடுத்துக் கொடுக்கும் இணைய ஹிண்ட்ஸ்கள்.. மகனை கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ள வைப்பதற்காக அம்மா எடுக்கும் ஆன்மீகப் பயணம்.. பிளாஷ்பேக் சிச்சுவேஷனை உருவாக்க அனைவருமே நெற்றியைத் தடவிக் கொண்டு தலையைக் குனிந்து தரையைப் பார்ப்பது..! சிவாஜி-மனோபாலா கேரக்டர் ஸ்கெட்ச்.. வசுந்தரா மனம் மாறி தனக்குள் காதல் இருப்பதை ஒத்துக் கொண்டு சிவாவை பார்க்க வருவது.. ஆள் மாறாட்டக் காட்சிகளில் குழப்பமில்லாமல் தெளிவாக நம்மைக் குழப்பியிருப்பது.. டப்பிங் வாய்ஸ் கொடுப்பதை வைத்தே சிற்சில இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர்.. அதிலும் குரங்குகளின் லைப்புக்கு வசுந்தராவின் பெயரைச் சூட்டி அவரே பார்த்து காதலைத் தெரிந்து கொள்வது - இதெல்லாம் திரைக்கதைக்காக ரொம்பவே ரூம் போட்டு யோசித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது..!
யாரோ ஒரு புதுமுக புண்ணியவான்தான் இசையமைப்பாளர்.. நல்லாயிருக்கட்டும். அடுத்தப் படத்தில் நன்றாகவே இசையமைக்கட்டும். காமெடிதான் ஓடிக்கிட்டே இருக்குல்ல.. அப்புறம் எதுக்கு அதுக்காகவெல்லாம் மெனக்கெடணும்னு விட்டுட்டாங்க போலிருக்கு..!
இந்த வாரம் வந்த படங்களில் இதுவே தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்க்கும்வகையில் இருப்பதால் இப்போதைக்கு கல்லா கட்டி போட்ட காசு கைக்கு வரும் என்று நினைக்கிறேன்.. பட்டத்து யானையால் பலன் பெற்றிருக்கிறது இந்த சொன்னா புரியாது.. டைட்டில் மட்டும் ஏன் இப்படி வைத்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை காதல் சொன்னா புரியாது.. அனுபவிச்சாத்தான் புரியும்ன்னு சொல்றாங்களோ என்னவோ..!
அடிக்கடி சினிமா பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புரியும்.. எப்போதாவது பார்ப்பவர்களுக்கு இடைவேளைக்கு பின்பு நடப்பது புரியுமா என்பது சந்தேகம்தான்..! ஆனாலும் கிளைமாக்ஸ் பரபரப்பு.. ஆள் மாறாட்ட காட்சிகள்.. அந்த சென்டிமெண்ட் திருப்பங்கள் எல்லாம் சேர்ந்து 1980-களின் ஒரு சினிமாவா இதைக் காட்டிவிட்டன.. வாழ்க இயக்குநர்..!
சொன்னா புரியாது - பார்த்தால்தான் புரியும்..!
|
Tweet |
2 comments:
பாத்ததுக்கப்புறமும் புரியலையே...
[[[ஸ்கூல் பையன் said...
பாத்ததுக்கப்புறமும் புரியலையே...]]]
அப்போ.. ஏதோ டைம் பாஸாச்சுன்னு நினைச்சுக்குங்க..!
Post a Comment