கடல் - சினிமா விமர்சனம்

03-02-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மணிரத்னத்தின் ரசிகர்களை பிரமாதமான முறையில் ஏமாற்றியிருக்கும் படம். மணி இது போல் அழகாக ஏமாற்றத் தெரிந்த வித்தகர்தான் என்பது 'ஆயுத எழுத்து' படத்திலேயே தெரிந்துவிட்டது. இப்போது 'ராவணனி'ல் கொஞ்சத்தை காட்டி மிச்சம் மீதியை இதில் கொட்டிவிட்டார். இப்போது மணியிடம் ‘மணி’ மட்டுமே மிச்சமிருக்கிறது என்று வருத்தத்துடன் சொல்ல வைக்கிறது இந்தப் படம்..!

பெரிய இயக்குநர்கள் தங்களுடைய படங்களின் கதைகளை வெளியில் சொல்லாமல் இருப்பதற்கு விஸ்வரூபத்தை வைத்து சரியென்றும் சொல்லலாம். இப்போது இந்தப் படத்தின் கதையும் முன்பே சொல்லப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்குமோ என்ற திகில் உணர்வும் வருகிறது. மணி மூச்சுவிடாமல் தன் படத்தைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டார்..! இயக்குநர் சீனுராமசாமியும், பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்துவும் 'நீர்ப்பறவை' படத்தைப் பற்றி விலாவாரியாக வெளியில் சொல்லிவிட கிறித்துவ மத தீவிரவாதிகளும், லோக்கல் சென்சார்ஷிப் ஆபீஸர்களும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்து பாடல் வரிகளிலேயே திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் வந்தது..! அநேகமாக வைரமுத்து வெளியில் ஒருவர் சொல்லி திருத்தம் செய்தது இதுதான் முதல் முறையாக இருந்திருக்கும்..!

அதுபோல ஆகக் கூடிய பல விஷயங்கள் இப்படத்தில் இருந்தும்.. தென்மண்டல திருச்சபை, பாதிரியார்கள் சங்கம், கிறித்தவர்கள் சங்கம், மீனவர்கள் சங்கம், கன்னியாகுமரி, நாகர்கோவில் வட்டார மக்கள் என்று அனைவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருந்தும், இந்தப் படம் நிச்சயமாக யாருக்குமே புரியாது என்பதால் மணிரத்னம் தப்பித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்..!


பாதிரியார் பயிற்சி பெற கல்லூரிக்கு வரும் அரவிந்தசாமி, அங்கே உடன் படிக்கும் அர்ஜூனின் அஜால்குஜால் வேலையை ஒரு நாள் பார்த்துவிட்டு மேலிடத்தில் பற்ற வைத்துவிட அர்ஜூன் வெளியேற்றப்படுகிறார். இதனால் கடுப்பான அர்ஜூன் பின்னாளில் அரவிந்த்சாமியையும் இதே போன்ற ஒரு வில்லங்கத்தில் சிக்க வைத்து பழி வாங்குகிறார். தொடர்ந்து இவர்களது ஆட்டம் என்ன ஆனது என்பதுதான் மிச்சம், மீதிக் கதை..! 

இதனுடேயே ஒரு கிளைக்கதை.. படத்தின் ஹீரோவாகச் சொல்லப்படும் புதுமுக நடிகர் கெளதமின் கதை..! வேசி என்று ஊராரால் இகழப்படும் கெளதமின் தாய் இறந்தவுடன்  அங்கேயே அனாதையாக்கப்பட்டு ஊரில் ரவுடியாகவே வளர்த்தெடுக்கப்படும் இவர், அரவிந்த்சாமியால் உருமாற்றப்பட்டு ஒழுங்கான பையனாக மாறுகிறார்..  வழக்கமான சினிமாவுக்கான காதல் கதையாய் துளசி ஊடே வருகிறார்.. கொஞ்சம் மனநலம் பிந்திய இந்தப் பெண்ணை சந்தித்து, பேசி, பழகி காதலித்தும் வருகிறார். அந்தக் காதல் முற்றும்போது காதலியின் தந்தை யார் என்பதும் தெரிய வர.. அங்கேயும் சிக்கல்.. இது இரண்டையும் முடிச்சுப் போட்டு அண்ணன் ஜெயமோகனின் உதவியோடு விலாவாரியாக வட்டார வழக்கில் மூழ்கி, துய்த்து, துன்பித்து நம்மையும் கடுப்படித்து அனுப்பி வைக்கிறார்கள்..!

என்றைக்கு 'பம்பாய்' படம் இந்திய அளவில் பேசப்பட்டு அவர் தலையில் கிரீடம் சூட்டப்பட்டதோ அன்றைக்கே அவருக்குள் விருது பைத்தியம் பிடித்துப்போய்விட்டது.. அதற்குப் பின் வந்த அவருடைய படங்களிலெல்லாம் விருதுகளுக்கான சூட்சுமங்கள்தான் அடங்கியிருந்தன.. வழக்கமான தமிழ்ச் சினிமாவைப் பார்த்து சலிப்படைந்த நிலையில் இருந்த தமிழ்ச் சினிமா ரசிகர்களை விசித்திரமாக சிலிர்ப்பூட்டிய மணிரத்னம் இதற்குள்ளாக பிளாஷ்லைட்டுகளின் ஒளி வெள்ளத்திலும், விருதுகள், விழாக்களின் பட்டோபடத்திலும் தன்னைத் தொலைத்துக் கொண்டுவிட்டார்..!

அஞ்சலியிலாவது பரவாயில்லை.. இவருடைய ஒலிப்பதிவு டெக்னிக்.. அதற்குப் பின் வந்த அத்தனை படங்களிலும் மெல்லிய ஒலிப்பதிவு.. இருப்பதுபோலவே தெரியாத அளவுக்கு வசனத்தின் ஒலியைக் குறைத்து.. காட்சிகளிடையே ஜம்ப் செய்துபோகும் அளவுக்கான வசனத் தொகுப்பு இவருடைய பல படங்களை முழுமையாக ரசிக்க முடியாமல் செய்தது.. இதிலும் அப்படியே..! 

கூடவே ஜெயமோகனின் எழுத்தார்வம் வேறு.. அவருடைய பிளாக்கில்.. புத்தகங்களில் எழுத நினைத்த, எழுதிக் கொண்டிருந்த பிரதிகளின் மறு பிரதியையெல்லாம் இதில் திணித்து வைக்க.. அவர் கொடுத்ததை, இயக்குநர் சிரத்தையாக தன்னுடைய வித்தையைக் காட்டி எடுத்திருக்கிறார் என்றாலும் அது வீண் என்றே நினைக்கிறேன்..!

காஸ்மாபாலிட்டன் சிட்டிகளைத் தவிர மற்ற இடங்களில் பெரும்பாலும் சவுண்ட் சிஸ்டம் அனைத்து தியேட்டர்களிலும் ரொம்பவே சுமார்தான்.. இது மாதிரியான இடங்களில் இருந்துதான் வசனம் புரியவில்லை.. சரிவரக் கேட்கவில்லை என்றே புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.  என் படம் இப்படித்தான் என்ற ரீதியில் மணி ஸார்.. இதுவரைக்கும் இதைப் பற்றி கண்டு கொண்டதில்லை.. இப்போது வட்டார வழக்கு மொழியாக தூத்துக்குடி பகுதி பேச்சுக்களையும் திணித்து வைக்க வசனங்களை புரிந்து அந்தப் படத்தில் ஆழ்ந்துபோக மக்களுக்கும் நேரமில்லை.. வாய்ப்புமில்லை.. படத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளும் சூழலும் இல்லாமல் போய்விட்டது..!

ஏதோ சினிமா விமர்சனம் எழுதுபவர்களுக்கு மட்டுமே இது காவியமாகவும், மணியின் ரசிகர்களுக்கு பெரும் காவியமாகவும் தென்படலாம்.. என்னுடைய சொந்த ஊரில் இருந்துகூட பேசிய நண்பர்கள் அனைவருமே இதைத்தான் சொல்கிறார்கள்.. “ரசிச்சு பார்க்க முடியலை.. என்னய்யா டயலாக்கு இது.. புரியவே இல்லை.. கேட்கவும் இல்லை..” என்றார்கள். கேட்க வேண்டியவர்களின் காதுகளுக்கு இது சென்றடைந்தால் நல்லதுதான்..!

என்ன மொக்கைக் கதையாக இருந்தாலும் மேக்கிங்கில் எப்போதும் தனித்த இடம் மணி ஸாருக்கு..! அர்ஜூன் மாட்டிக் கொண்டு சொல்லிவிடாதே என்று கெஞ்சுவதில் துவங்கி, அரவிந்த் சாமியை மிரட்டுகின்றவரையிலும் காட்சியோடு ஒன்றிப் போக வைத்திருக்கிறார். அடுத்தக் காட்சியில் அவர் வைத்திருக்கும் ஷாட், மணி ஸாருக்கே உரித்தான லாங்ஷாட்.. இதையே ரோஜா படத்திலும் அற்புதமாக வைத்திருப்பார்..! அரவிந்த்சாமியின் கோபப்பட தன்மை.. ஊராரின் கேலியை ஏற்பது.. மீன் விற்கும் பெண்ணிடம் பேச முடியாமல் சிரித்தபடியே வழி கேட்பது என்றெல்லாம் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதே அரவிந்த்சாமி கெளமிதின் சேட்டைத்தனத்தை பார்த்து பளார் அறைவிடுவதும், அவனை டேப்ரிக்கார்டரில் பேச வைத்து அவனது கோபத்தை வெளியே கொண்டு வருவதுமாக திரைக்கதையில் இந்த இடம் புதுமையும்கூட.. மிக அழகு..! இரண்டாம் முறையாக வெளிப்படும் அர்ஜூன்-லஷ்மி மஞ்சு சம்பந்தப்பட்ட காட்சியில் அடுத்து ஏதோ நடக்கப் போகுது என்பதை மட்டும் காட்டாமலேயே பொன்வண்ணன் மூலமாகச் செய்வதும், இதனை பிற்காட்சியில் இணைத்திருப்பதும் மணி ஸாரின் டச்சுதான்..! 

அர்ஜூன்-லஷ்மி மஞ்சு பாடல் காட்சிகள்கூட நேரமின்மையால் படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.. இதுதான் அந்த இடத்தில் குழப்படியை கொஞ்சம் ஓவராகவே காட்டிவிட்டது.. இதனை பிற்பாடு வசனத்தில் நிரப்பியிருந்தாலும் அந்த வசனம் கேட்க முடியாத அளவுக்கு போய்விட்டதால் படம் பார்த்தவர் பெரிதும் குழம்பியது இங்கேதான்..!

துளசியின் அறிமுகக் காட்சியிலேயே அவளது லேசான மனநிலை பிறழ்ந்த நிலை அறிமுகப்பட்டிருந்தாலும் பின்னாளில் கலைராணி சொல்லும்போதுதான் நமக்கு உணர முடிகிறது.. படம் பார்த்து 2 நாட்கள் கழித்துதான் இந்தக் காட்சியை மணி ஏன் வைத்திருக்கிறார் என்பதே புரிகிறது..! அவுக ஆத்தாவை போலவே பேசுகிறார்.. நடிக்கிறார்.. டயலாக் டெலிவரி தங்கு தடையில்லாமல் வருகிறது.. ஆனால் ஆள்தான் காலேஜ் படிக்கும் பொண்ணு போல இருக்கிறார்..! நல்லவேளையாக அந்த முத்தக் காட்சியை நீக்கிவிட்டதால் இன்னொரு சர்ச்சையிலிருந்தும் தப்பித்திருக்கிறார் மணி ஸார்..!

அசத்தலான அறிமுகம் கெளதமுக்கு..! முதல் படத்திலேயே இந்த அளவுக்கு நடிப்பை காண்பித்துவிடும்படியான கதையும், இயக்குநரும் கிடைத்து அவருடைய அதிர்ஷ்டம்தான்..! இவருக்கும் பொருத்தமான ஒரு வருஷம் 16 கிடைத்துவிட்டால் ஏணியில் நிச்சயம் ஏறிவிடுவார்..!

அர்ஜூன் இந்தக் கேரக்டரில் நடிக்க முந்திருப்பதே ஆச்சரியம்தான்..! இப்படி கெளதமிடம் அடிவாங்கும் காட்சியிருக்கிறதே என்று தயங்கியிருந்தால் அவருடைய நடிப்பு கேரியருக்கு மிக முக்கியமான இந்தப் படம் கிடைத்திருக்காது..! ஹீரோக்களெல்லாம் வில்லன்களாக நடிக்கும்போதுதான் நமக்கு ரொம்பவே பிடிக்கிறது..! ஆட்டமே இனிமேல்தான் என்று துவங்கி, சிறையில் அரவிந்த்சாமியை சந்தித்து பேசும் அந்தத் தெனாவெட்டு பேச்சும், தனது மகளை எதிர்பாராமல் பார்த்துவிட்டு திகைத்து பின் விரட்டும்போதும், பொன்வண்ணனை கைமா செய்யும்போது அவருடைய ஆக்சனையும் பார்க்கணுமே..! மனுஷன் ஹீரோவா வேணாம்.. இது மாதிரியே செஞ்சா நல்லாத்தான் இருக்கும்..!

கடலின் ஒரிஜினல் ஹீரோ ராஜீவ்மேனன்தான்.. கடல் பிரதேசத்தைக் காட்டுகின்ற முதல் காட்சி முதல் இறுதிவரையிலும் அவருடைய கேமிராவே இன்னொரு கேரக்டராகவே இருக்கிறது.. இத்தனை குளறுபடியிலும் படத்தை ரசிக்க முடிந்தது எனில் கேமிராவின் அழகினால்தான்..! இத்தனையையும் செய்துவிட்டு டிஐ, கலரிங்கிற்காக மாதக்கணக்கில் வேலை செய்திருக்கும் மணி ஸாரின் பெர்பெக்ஷனை என்னவென்று சொல்வது..?

எல்லாம் இருந்தும், எல்லாம் இருந்தும் என்பார்களே அது மாதிரி ஏதோ ஒன்று குறைகிறது.. அதுதான் மனதில் நிறுத்திவைக்கும் ஒரு காட்சி.. கெளதமின் தாய் இறப்புக் காட்சியை எப்பாடுபட்டாவது நம் மனதுக்குள் திணிக்க பெரும் முயற்சிதான் செய்திருக்கிறார் இயக்குநர். ஆனால் நிற்கவில்லை..! பரிதாபமும் வரவில்லை..! வளவளவென்ற வசனங்கள்.. சட்.. சட்டென்று ஜம்ப்பாகும் காட்சிகள்.. அரவிந்த்சாமியை சர்ச்சுக்குள் விசாரிக்கும் காட்சியில்கூட லட்சுமியின் மெளனத்தாலேயே காட்சியை நகர்த்தியிருப்பதால் என்னதான நடந்துச்சு என்ற பாமர ரசிகனின் கேள்விக்கு பதில் சொல்லத்தான் ஆளில்லை..!

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த 'நெஞ்சுக்குள்ளே' பாடல் காட்சி இப்படியா இருக்கணும்..? அதோடு 'எங்கடி போற' பாடல் காட்சி வித்தியாசம்தான் என்றாலும் பாடல்களின் துவக்கத்தில் வரும் அந்த ரிதம்கள் அரதப் பழசு.. எங்கயோ ஆரம்பித்து எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்று தெரியாமல் இருக்கின்ற இன்ஸ்ட்ரூமெண்ட்டைஸையெல்லாம் தட்டி, தட்டி சரணத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் ரஹ்மான்.. பெரும் ஏமாற்றம் தந்தவர்களில் இரண்டாமவர் ரஹ்மான்தான்..  நல்ல பாடலையும் கேட்க முடியாமல் இரைச்சலையும் சேர்த்து இறுதிக் காட்சியில் டைட்டில் ரோலுக்குக் கீழேயே இன்னொரு பாடலைச் சேர்த்து ஏமாற்றியிருக்கிறார் மணி ஸார்..! இனிமேல் பாடல்களை எண்ட் டைட்டிலில் காட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்.. நல்லதொரு பாடலைக்கூட ரசிக்க வைக்க முடியாமல் போய் யாருக்குமே பயனில்லாமல் போகிறது..!

புதிய இயக்குநர்களெல்லாம் பழைய கதைகளை டிங்கரிங் செய்து கொடுத்தே பேர் வாங்கி வரும் வேளையில் எங்க மணி இருக்காரே என்ற பெருமை பேசியவர்களெல்லாம் இன்றைக்கு வருத்தப்படுகிறார்கள்.. எங்கே போனார் எங்களது இயக்குநரென்று..? இந்தப் படத்தின் காட்சிகளெல்லாம் விருதுகளுக்காகவே தொகுக்கப்பட்டுள்ளன என்று நான் அடித்துச் சொல்லுவேன்.. மணிரத்தினத்தைப் பொறுத்தவரையில் பல உலகப் பட விழாக்களில் பங்கேற்க முழுத் தகுதியுடைய படம் இது என்பதால், அவராவது இந்தப் படத்தின் மூலம் நிம்மதிபடட்டும்..!

12 comments:

maithriim said...

மிக நல்ல அலசல். நல்ல விமர்சனம். நான் இந்தப் படம் பார்க்கப் போவதில்லை என்று முடிவு செய்து விட்டேன். அதனால் உங்கள் விமர்சனம் மூலம் படத்தின் நிறை குறைகளைத் தெரிந்து கொண்டேன். நன்றி!

amas32

? said...

//மணியிடம் ‘மணி’ மட்டுமே மிச்சமிருக்கிறது என்று வருத்தத்துடன் சொல்ல வைக்கிறது இந்தப் படம்..!//

கடுப்படித்து விட்டார் எனபதற்காக, உங்க ரேஞ்சுக்கு நீங்கெல்லாம் மணிரத்னத்தை டபுள் மீனிங்கில் திட்டலாமா அண்ணாத்தை?

உண்மைத்தமிழன் said...

[[[amas said...

மிக நல்ல அலசல். நல்ல விமர்சனம். நான் இந்தப் படம் பார்க்கப் போவதில்லை என்று முடிவு செய்து விட்டேன். அதனால் உங்கள் விமர்சனம் மூலம் படத்தின் நிறை குறைகளைத் தெரிந்து கொண்டேன். நன்றி!]]]

பார்க்க மாட்டீங்களா..? இது தப்பு அமஸ்.. ஒரு தடவை பார்க்கலாம்.. பார்க்கவே கூடாத படமில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[நந்தவனத்தான் said...

//மணியிடம் ‘மணி’ மட்டுமே மிச்சமிருக்கிறது என்று வருத்தத்துடன் சொல்ல வைக்கிறது இந்தப் படம்..!//

கடுப்படித்து விட்டார் எனபதற்காக, உங்க ரேஞ்சுக்கு நீங்கெல்லாம் மணிரத்னத்தை டபுள் மீனிங்கில் திட்டலாமா அண்ணாத்தை?]]]

ஹலோ நந்தவனத்தான்.. நான் சொன்னது "MONEY"-யை..!

AAR said...

After Aadukalam, this is the movie where I couldn't understand one word.

உண்மைத்தமிழன் said...

[[[AAR said...

After Aadukalam, this is the movie where I couldn't understand one word.]]]

உண்மைதான் ஸார்.. ஆடுகளம் படத்திலும் இதே போன்ற ஒலிப்பதிவு பிரச்சினைதான்..! நம்ம கஷ்டம் நமக்கு..!

வவ்வால் said...

அண்ணாச்சி,

//காஸ்மாபாலிட்டன் சிட்டிகளைத் தவிர மற்ற இடங்களில் பெரும்பாலும் சவுண்ட் சிஸ்டம் அனைத்து தியேட்டர்களிலும் ரொம்பவே சுமார்தான்..//

ஆரோ 3டி சவுண்டு எல்லா கொட்டாயிலும் இருக்காம்லே :-))

//இப்போது வட்டார வழக்கு மொழியாக தூத்துக்குடி பகுதி பேச்சுக்களையும் திணித்து வைக்க வசனங்களை புரிந்து அந்தப் படத்தில் ஆழ்ந்துபோக மக்களுக்கும் நேரமில்லை.. வாய்ப்புமில்லை.. படத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளும் சூழலும் இல்லாமல் போய்விட்டது..//

ஆப்கானில் தலிபான்கள் பாஷ்தூன் மொழியில் பேசி,சப்டைட்டில் போட்டால் மட்டும் ஒன்றிப்போய் பார்க்க முடிகிறதா?

திரைப்படம் என்பது காட்சி ஊடகம், தேவையான இடத்தில் தான் பேசணும் என்ற உலக திரைப்பட நியதிகளை புரிந்து கொள்ளாமல் கடல் பார்க்கலாமா?

ஏன் எனில் கடல் ஒரு ஒலகப்படம், தமிழ் திரையுலகை ஹாலிவுட் தரத்துக்கு கொண்டு சென்றுள்ளார்,இதனை வைத்து மணிரத்னம் ஹாலிவுட்டுக்கு போக திட்டம் போட்டுள்ளார், ஒரு தமிழனின் உலகப்பட ஆசையை கேலி செய்யும் தமிழ் உலகம் எப்படி விளங்கும் அய்யகோ?

கடல் ஒரு உலக மகா காவியம் , அதனை புரிந்து கொள்ள கொஞ்சம் உலக அறிவும், இலக்கிய ரசனையும் தேவை :-))

கடலினக்கற போனீரோ காணாப்பொன்னிர் போனீரோ

போய் வரும்போல் என்ன கொண்டு வரும் ... அய்லேசா அய்லேசா :-))

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//காஸ்மாபாலிட்டன் சிட்டிகளைத் தவிர மற்ற இடங்களில் பெரும்பாலும் சவுண்ட் சிஸ்டம் அனைத்து தியேட்டர்களிலும் ரொம்பவே சுமார்தான்..//

ஆரோ 3டி சவுண்டு எல்லா கொட்டாயிலும் இருக்காம்லே :-))]]]

அது இல்லாத தியேட்டர்களுக்கும் தனி பிரிண்ட் போகுதாம்..!

//இப்போது வட்டார வழக்கு மொழியாக தூத்துக்குடி பகுதி பேச்சுக்களையும் திணித்து வைக்க வசனங்களை புரிந்து அந்தப் படத்தில் ஆழ்ந்துபோக மக்களுக்கும் நேரமில்லை.. வாய்ப்புமில்லை.. படத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளும் சூழலும் இல்லாமல் போய்விட்டது..//

ஆப்கானில் தலிபான்கள் பாஷ்தூன் மொழியில் பேசி, சப்டைட்டில் போட்டால் மட்டும் ஒன்றிப்போய் பார்க்க முடிகிறதா?]]]

முடியலைதான்.. ஆனா சொந்த மொழியையே புரிஞ்சுக்க முடியாம படம் பார்க்குறது எவ்வளவு கொடுமை..?

[[[திரைப்படம் என்பது காட்சி ஊடகம், தேவையான இடத்தில்தான் பேசணும் என்ற உலக திரைப்பட நியதிகளை புரிந்து கொள்ளாமல் கடல் பார்க்கலாமா? ஏன் எனில் கடல் ஒரு ஒலகப் படம், தமிழ் திரையுலகை ஹாலிவுட் தரத்துக்கு கொண்டு சென்றுள்ளார், இதனை வைத்து மணிரத்னம் ஹாலிவுட்டுக்கு போக திட்டம் போட்டுள்ளார், ஒரு தமிழனின் உலகப் பட ஆசையை கேலி செய்யும் தமிழ் உலகம் எப்படி விளங்கும் அய்யகோ?]]]

உருப்படாது.. நாசமாப் போகும்..! ஒத்துக்குறேன்..!

[[[கடல் ஒரு உலக மகா காவியம் , அதனை புரிந்து கொள்ள கொஞ்சம் உலக அறிவும், இலக்கிய ரசனையும் தேவை :-))]]]

சந்தோஷம்..! அது எனக்கில்லைதான்..!

[[[கடலினக்கற போனீரோ காணாப்பொன்னிர் போனீரோ
போய் வரும்போல் என்ன கொண்டு வரும். அய்லேசா அய்லேசா :-))]]]

எத்தனை பேர் இந்தப் பாட்டை பாடுவீங்க..? செம்மீனின் புகழ் இதுதானோ..?

Subramanian said...

the last film which I liked from mani was kaanathil muthamittal. somehow he seems to have lost touch. the basic theme of good triumphing over evil is ok but somehow it does not affect us in anyway. i saw the first show and hereafter i am not going to invest money and time on any movie before reading the review

எல் கே said...

போகனும், சித்துவும் படம் பாக்க சொல்றாங்க... என்ன பண்ணலாம்

உண்மைத்தமிழன் said...

[[[Subramanian said...

the last film which I liked from mani was kaanathil muthamittal. somehow he seems to have lost touch. the basic theme of good triumphing over evil is ok but somehow it does not affect us in anyway. i saw the first show and hereafter i am not going to invest money and time on any movie before reading the review.]]]

அதுலேயும் ஒரு சிக்கல் இருக்கு ஸார்.. சில நேரங்கள்ல எனக்குப் பிடிச்ச படம் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.. உங்களுக்குப் பிடிச்சது எனக்குப் பிடிக்காமலும் இருக்கலாம்.. அதுனால நிறைய விமர்சனங்களை வாசித்துவிட்டு பின்பு முடிவெடுங்கள்..!

வருகைக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[எல் கே said...

போகனும், சித்துவும் படம் பாக்க சொல்றாங்க... என்ன பண்ணலாம்..?]]]

ஒரு முறை பார்க்கலாம்ன்னுதான் நானும் சொல்றேன்..!