மன்மோகன்சிங் ஆடப் போகும் 'கில்லி!'

09-07-2008

என் இனிய வலைத் தமிழ் மக்களே..!

‘அதோ வர்றான் பூச்சாண்டி’, ‘இதோ தெரியறான் பூச்சாண்டி’ என்று தெருக்கூத்தாடி ஸ்டைலில் மாதா, மாதம் அறிக்கை கொடுத்துக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட்கள் ஒரு வழியாக முடிவெடுத்துவிட்டார்கள். மன்மோகனை விலக்குவது அல்லது அவரிடமிருந்து விலகுவது என்று..!

4 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் தலைமையாலும், சுற்றுப்புற கட்சிகளாலும் பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்ட மன்மோகன்சிங்கிற்கு இருந்த ஒரேயொரு தகுதி, யாரிடமும் அவருக்குப் பிரச்சினையில்லை என்பதுதான்.

கூடவே, அப்துல்கலாம் அளவுக்கு இல்லையென்றாலும்கூட, கிட்டத்தட்ட ஒப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இந்திய இளைய தலைமுறையினரிடம் மன்மோகனுக்கு ஒரு நல்ல பெயர் இருந்தது. அதனை இன்றுவரையிலும் அவர் கட்டிக் காப்பாற்றித்தான் வருகிறார். அதேபோல் தன்னை பிரதமராக நியமித்தவர்களிடத்திலும் பிரச்சினை வராமல் பார்த்துக் கொண்டு, ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் நண்பன்’ என்பதற்கு உதாரண புருஷராகத் திகழ்ந்து வருகிறார் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

யாரோ ஹரியானா மாநில போலீஸ்காரர் ஒருவர் சப்பர மிட்டாய் சாப்பிட்டபடியே காங்கிரஸ் கட்சி அலுவலக வாசலில் நின்றதைப் பார்த்து “ஐயோ, குய்யோ..” என்று சந்திரசேகர் ஆட்சிக் காலத்தில் கத்திக் கூப்பாடு போட்டு கடைசியில் ராஜீவ்காந்தியையே பரலோகத்திற்கு அனுப்பி வைத்த அரசியலும் நடந்த இந்தியாவில், எத்தனையோ தடவை ராஜினாமா முடிவை சொல்லியும், விடாமல் அவரைத் தக்க வைத்திருக்கும் காங்கிரஸ் தலைமையை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

தன் பெயரை இந்திய அரசியல் சரித்திரத்தில் பொன் எழுத்தில் பொறித்து வைக்க மன்மோகன்சிங் எடுத்த முடிவே இந்த அணு ஆயுத ஒப்பந்தம் என்று நான் நினைக்கிறேன். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் சமாளிப்போம் என்று இதய ஆபரேஷன் செய்து கொண்டும் தைரியமாக குடைச்சலை சமாளிக்கிறார் என்றால் ரொம்பத்தான் தில்லு நம்ம சிங்கிற்கு..

மன்மோகன்சிங் என்ற மனிதரைவிட காங்கிரஸ் ஒன்றும் பெரிய கட்சியல்ல என்று என்றைக்கோ ஜோதிபாசு வாயால் சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு மன்மோகன்சிங்கை அடையாளம் காட்டி இன்றுவரை கோலோச்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை கடைசியாக பதவியிலிருந்து இறக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள் கம்யூனிஸ்ட்கள்.

ஏதோ நேற்று, முந்தாநாளைக்குத்தான் இந்த அணு ஆயுத ஒப்பந்தம் தயாராகி தங்களது காதுக்கு வந்ததைப் போல் அவர்கள் நடிக்கின்ற நடிப்புதான் தாங்க முடியவில்லை.

ஒப்பந்தம் பற்றிய முதல் கட்டப் பேச்சுவார்த்தையும், அறிவிப்பும், அதனைத் தொடர்ந்த புஷ்ஷின் சுற்றுப்பயணத்திலேயே மன்மோகன்சிங்கின் கடைசி விருப்பமாக எழுதப்பட்டு முடிவாக்கப்பட்டுவிட்டது. இது கம்யூனிஸ்ட்களுக்கும் தெரியும். ஆனாலும் அன்றைக்கே இது போன்று வாபஸ் என்ற முடிவை உச்சரிக்க கம்யூனிஸ்ட்டுகளுக்கு தைரியம் இல்லை. காரணம், அன்றைக்கு அடுத்தத் தேர்தலுக்கு 3 வருடங்கள் பாக்கி இருந்தன.

அன்றைக்கே வாபஸ் சொல்லியிருந்தால் மறு தேர்தலோ அல்லது மதவாத சக்திகளோ ஆட்சிப் பொறுப்பிற்கு வரக்கூடிய சூழல் ஏற்படலாம் என்பதனால் அமைதி காத்தோம் என்கிறது கம்யூனிஸ்ட். இல்லை என்கிறேன் நான். அன்றைக்கே இவர்களது உறுதியான எதிர்ப்பை காட்டியிருந்தால் மன்மோகன்சிங் அப்போதே இதனை கைகழுவியிருப்பார். ஏனெனில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு போதும், முட்டையிடும் வாத்தை கொலை செய்ய விரும்ப மாட்டார்கள்.

இப்போது அடுத்தத் தேர்தலுக்கு இன்னும் 1 வருடமே பாக்கியிருக்கும் சூழல் உள்ளது.. சுற்றி சுற்றிப் பார்த்தாலும் மத்திய அரசை அனுசரித்துப் போகக்கூடிய அளவுக்குத்தான் மற்ற பிராந்திய அரசியல் கட்சிகளின் நிலைமையும் உள்ளது. இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் நினைப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஏனெனில் இதுதான் அரசியல் ராஜதந்திரம்.

இதோ இப்போது வாபஸ் என்று சொல்லிவிட்டார்கள். இனி என்ன? குதிரை பேரம்தான்.. இருக்கவே இருக்கிறது ஆட்சி கடிவாளம்.. வா என்றால் வருவதற்கு கோடிகள் அடங்கிய சூட்கேஸ்கள் இருக்கின்றபோது, வேறென்ன வேண்டும் கழுதைகளை இழுப்பதற்கு..?

மக்களவையில் மொத்த இடங்களான 545-ல் கம்யூனிஸ்டுகள் நீங்கலான காங்கிரஸ் கூட்டணியின் பலம் 225. பாரதிய ஜனதா கூட்டணியின் பலம் 171. கம்யூனிஸ்ட்களின் பலம் 59. இதர கட்சிகள் 37. தங்க வாத்துக்களாக மாறவிருக்கும் அதிர்ஷ்டக்கார சுயேச்சைகள் 6 பேர். இதில் 2 மக்களவை இடங்கள் காலியாக உள்ளன. மெஜாரிட்டிக்குத் தேவையான அந்த கோல்டன் நம்பர் 272.

இதில் காங்கிரஸிற்கு இன்றைய தேதியில் பகிரங்க ஆதரவு அளிக்க முன் வந்திருக்கும் சமாஜ்வாதி கட்சியின் பலம் 39. கூடவே கை கொடுக்க முன் வந்திருக்கும் அஜித்சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளத்தின் பலம் 3. கர்நாடகாவில் சமீபத்தில் மண்ணைக் கவ்விய கிழட்டுச் சிங்கம் தேவேகவுடா “ஓட்டெடுப்பு நடத்தப்பட்டால் அதற்கு முதல்நாள்தான் நாங்கள் எதையும் முடிவு செய்வோம்” என்று வழக்கம்போல சொல்லியிருக்கிறார். ஸோ, இவர் வைக்கப் போகின்ற டிமாண்டையும் அதனை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளப் போகும் வழியிலும்தான் இவருடைய 3 ஓட்டுக்கள் கிடைக்கும்.

ஏற்கெனவே உபியின் ‘புரட்சித் தலைவி’ மாயாவதியின் புண்ணியத்தால் ஓட, ஓட விரட்டப்பட்ட முலாயம்சிங்கிற்கு இன்றைக்கு இருக்கின்ற ஒரேயொரு மருத்துவம், மன்மோகனும், காங்கிரஸ¤ம் அளிக்கப் போகும் உத்தரவாதங்கள்தான்.

தன் மீது மாயாவதி போட்டிருக்கும் வழக்குகளிலிருந்து பாதுகாப்பு.. தன்னுடைய கிருஷ்ண பரமாத்மாவான அனில் அம்பானிக்கு ஏதுவான கொள்கைகளை வகுத்துக் கொடுப்பதற்காக தகவல் தொழில் நுட்பத் துறை, தன்னுடைய இன்னுமொரு சகாவான சகாரா குரூப் கம்பெனிகள் மீது கை வைக்காமல் இருப்பதற்கான உத்தரவாதம்.. தன்னுடைய கட்சியின் பிராண்ட் அம்பாசிடரான அமிதாப்பச்சன் குடும்பத்தினர் மீதான மத்திய, மாநில அரசுகளின் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவது.. என்று ஏகப்பட்ட உள்ளடி கோரிக்கைகளோடு மத்திய அரசை ஆதரிக்க முன் வந்துள்ளார் முலாயம்சிங்..
அவருக்கும் வேறு வழியில்லை. சாக்கடையில் இறங்கிய பின்பு நாறுதே என்று மூக்கைப் பொத்திக் கொள்ள முடியுமா என்ன..?

இருந்தாலும், அவருடைய கட்சியிலேயே எதிர்ப்பாளர்கள் கிளம்பியிருப்பதாகத் தகவல்கள் பரவியுள்ளன. தமது மதத்தையே விரோதியாக நினைக்கின்ற அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு நாம் ஏன் தரவு தெரிவிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியில் இருக்கும் முஸ்லீம் எம்.பி.க்கள் எதிர்ப்பதாகத் தகவல்கள். இந்த எதிர்ப்பாளர்களை அன்பால் திருத்த முடியாமல், சட்டத்தின் அடிப்படையில் மிரட்டி வைக்க கொறடா உத்தரவைப் பயன்படுத்துவார் முலாயம் என்பது வெளிப்படையாகிவிட்டது.

கொறடா உத்தரவையும் மீறி அவர்கள் ஓட்டளித்து ஆட்சியைக் கவிழ்த்துவிட்டார்களெனில் அதன் பின்பு உடனடி பொதுத்தேர்தல்தான் வரும் என்பதால் அதற்குள்ளாக முலாயம் தனது கட்சிக்காரர்களுக்கு என்ன மாதிரியான சாக்லெட்டும், ஐஸ்கிரீமும் கொடுத்து தாஜா செய்வாரென்று தெரியவில்லை.

இவர்கள் மூவரும் ஆதரித்துத் தொலைத்தாலும் இன்னும் இரண்டு பேர் வேண்டும். இந்த இரண்டு என்ற நம்பரினால்தான் இத்தனை நாட்களும் மன்மோகன்சிங் காலத்தை கடத்திக் கொண்டிருந்தார். இப்போது அந்த உதவி தானாகவே அவருடைய மடியில் விழுந்த அதிசயத்தைப் பார்த்துத்தான் இதுவரையிலும் கழுதைப்புலியாக பயம் காட்டிக் கொண்டிருந்த நமது சிங், சிங்கமாக உருமியிருக்கிறார்.

காங்கிரஸின் ஒரே வில்லனான பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கும் சிவசேனா, தனது கூட்டணி தர்மத்தை மீறி கொள்கையடிப்படையில் தனக்கு இந்த ஒப்பந்தத் திட்டம் பிடித்திருக்கிறது என்று சொல்லி மன்மோகனின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது. இவர்களின் பலம் 12. ஸோ.. மன்மோகன்சிங் கவலைப்பட வேண்டியதில்லை.

ஒருவேளை கடைசிக் கட்டத்தில் இவர்கள் கைவிட்டாலும், இருக்கவே இருக்கிறார்கள் நமது அதிர்ஷ்டக்கார மச்சான்கள் சுயேச்சைகள்.. இவர்களின் எண்ணிக்கை 6. சூட்கேஸோ அல்லது பதவியோ.. இரண்டில் ஒன்று.. கேட்டதை கொடுத்துவிட்டால் போதாது.. தப்பித்துவிடலாம்.

இதிலும் குழப்பம் ஏற்பட்டு ஓட்டு குறைந்தாலும், ம.தி.மு.க.வும், தெலுங்கானா ராஷ்டிர சமதியும், தேசிய மாநாட்டு கட்சியும் கடைசி நேரத்தில் கை கொடுத்து உதவிகள் செய்யும் என்ற அசாத்திய நம்பிக்கையில் காங்கிரஸ் இருக்கிறது.

ம.தி.மு.க.வில் இருக்கின்ற நான்கு உறுப்பினர்களும் இரு குழுக்களாக பிரிந்துள்ளனர். எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் நிச்சயம் மன்மோகன்சிங்கை ஆதரித்துத்தான் ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம். இதே போலத்தான் வைகோவும். வைகோவுக்கு கொள்கை ரீதியாக காங்கிரஸ¤டன் பெரிய முரண்பாடுகள் இல்லை என்றாலும், தன்னுடைய இதயத்தில் அவருக்கென தனியிடம் கொடுத்து வைத்திருக்கும் மன்மோகன்சிங்கை ஆதரிக்க வைகோ தயங்க மாட்டார் என்றே தெரிகிறது..

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு தேவைப்பட்ட நேரத்தில் பதவி கொடுத்து காப்பாற்றி வைத்திருந்த நன்றிக் கடன் செலுத்த வேண்டிய கட்டாயம் உண்டு. இல்லையென்றாலும் தற்போது சந்திரபாபு நாயுடுவும் தனித்தெலுங்கானாவிற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கிவிட்டதால் காங்கிரஸின் உதவி நிச்சயம் இவர்களுக்குத் தேவை என்பதால் இவர்களும் ஆதரிக்கக் கூடும்.

தேசிய மாநாட்டுக் கட்சியைப் பொறுத்தமட்டில் கரண்சிங்கின் மூலமாகவோ, அல்லது லண்டனில் கோல்ப் கிரவுண்ட்டில் ரெஸ்ட்டில் இருக்கும் பரூக் அப்துல்லாவுடன் போனில் பேசினாலே போதும்.. தற்போதைக்கு ஓட்டு கிடைக்கும்.

மன்மோகன் தனக்கான ஆதரவை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எந்த அரசியல் கட்சியும் இப்போதைக்கு உடனடித் தேர்தலை சந்திக்க விரும்பவில்லை. மிச்சமிருக்கும் 1 வருட காலத்தையும் முழுமையாக அனுபவிப்போம் என்ற முடிவுக்குத்தான் வந்திருக்கிறார்கள்.

நாட்டில் இப்போதைக்கு அணு ஒப்பந்தத்தைவிடவும் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கும் விலைவாசி உயர்வும், பெட்ரோல் விலை உயர்வும் மக்களை கொதிப்பில் வைத்திருப்பதை அறிந்துதான் இருக்கிறார்கள் நமது அரசியல்வாதிகள்.

இதைத்தான் மன்மோகனும் கச்சிதமாக அனைவருக்கும் குத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு தெலுங்கானா கட்சிக்கு இடைத்தேர்தலில் கிடைத்த சீட்டு குறைப்பும், மக்களின் மீது ஒரு பய உணர்வை கட்சிகளுக்குத் தோற்றுவித்துள்ளன.

நேற்றைய அறிவிப்பின்படி அடுத்த மாதம்தான் மழைக்கால கூட்டத் தொடர் துவங்குகிறது. ஆனால் இன்றைக்கு கம்யூனிஸ்ட்கள் ஜனாதிபதியிடம் கொடுத்துள்ள மனுவையொட்டி ஒருவேளை இந்த மாதத்திலேயே ஒரு நாள் மன்மோகன்சிங்கிற்கு ‘கில்லி’ விளையாட பாராளுமன்றம் ரெடியாகலாம்.

ஸோ, மன்மோகன் இந்த மாதத்தில் நடத்தவிருக்கும் அந்த ஒரு நாள் ‘கில்லி’யில் ஜெயிப்பது உறுதிதான்.. ஆனால் அதன் பின் என்ன நடக்கும்?

அடுத்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் யாருடைய தோளில் ஏறி அம்பாரியில் அமர்ந்து வெண்சாமர காற்றை வாங்கிக் கொண்டு ஜெகஜோதியாக டெல்லி ராஜபாட்டையில் நடப்பார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

மன்மோகனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு இந்தக் கட்சிகள் வாக்களித்தாலும், இருக்கப் போகின்ற 1 வருட காலத்தில் எதையாவது ‘தேற்ற’ முடியுமா என்று பார்ப்பார்கள்.. அல்லது அடுத்தத் தேர்தலுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்று தேடுவார்கள். கிடைக்காதபட்சத்தில், ‘மன்மோகன்சிங் நல்லவர்தான். ஆனால் அவரைச் சுற்றியிருப்பவர்கள்தான் கெட்டவர்கள்’ என்று ஒரு அறிக்கைவிட்டுவிட்டு கூடுவிட்டு கூடு தாவுவார்கள்.

தேர்தலின் போது, சீட்டுக்காக கட்சி மாறுவதையோ, அணி மாறுவதையோ எந்த இந்திய வாக்காளன், ‘மானம்’, மரியாதை போனது’ என்று கருதுகிறான்..? ‘மயிரு போச்சு!’ என்றுதானே நினைக்கிறான்..

இதனை இன்னொரு முறையும் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்..!

9 comments:

கோவை விஜய் said...

உண்மைத்தமிழன் அண்ணா,இன்றய அரசியல் நடப்பை படம் பிடித்து காட்டியது போலுள்ளது.வரப் போகும் இந்தக் சிங்கின் கில்லிக்கு தயாராகட்டும் மக்கள் மாமன்றம்

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

Anonymous said...

செவிட்டு மூதி நாடு எப்படி போனா உனக்கென்னடா மயிறு போச்சி. நீ ஜெயா டிவியில் என்ன பிடுங்கிகிட்டிருக்கியோ அதை தான் மன்மோகன்சிங்கும் பிடுங்கிகிட்டிருக்காரு

Anonymous said...

\\யாரோ ஹரியானா மாநில போலீஸ்காரர் ஒருவர் சப்பர மிட்டாய் சாப்பிட்டபடியே காங்கிரஸ் கட்சி அலுவலக வாசலில் நின்றதைப் பார்த்து “ஐயோ, குய்யோ..” என்று சந்திரசேகர் ஆட்சிக் காலத்தில் கத்திக் கூப்பாடு போட்டு கடைசியில் ராஜீவ்காந்தியையே பரலோகத்திற்கு அனுப்பி வைத்த அரசியலும் நடந்த இந்தியாவில்,//

More information please!

உண்மைத்தமிழன் said...

//உண்மைத்தமிழன் அண்ணா, இன்றய அரசியல் நடப்பை படம் பிடித்து காட்டியது போலுள்ளது. வரப் போகும் இந்தக் சிங்கின் கில்லிக்கு தயாராகட்டும் மக்கள் மாமன்றம்.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com//

நன்றி தம்பி விஜய் அவர்களே.. உங்களுடைய வலைப்பூ பக்கமும் வந்து பார்த்தேன். புகைப்படங்களும், தள வடிவமைப்பும் அருமையாக உள்ளன. தொடரட்டும் உங்களது எழுத்துப் பணி.

வாழ்க வளமுடன்

உண்மைத்தமிழன் said...

//செவிட்டு மூதி நாடு எப்படி போனா உனக்கென்னடா மயிறு போச்சி. நீ ஜெயா டிவியில் என்ன பிடுங்கிகிட்டிருக்கியோ, அதை தான் மன்மோகன்சிங்கும் பிடுங்கிகிட்டிருக்காரு.//

முருகா என்ன இது? திடீர்ன்னு நம்ம சிங்குக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறீர்கள்.. உங்களுக்கும் அவருக்கும்தான் ஆகாதே..

உண்மைத்தமிழன் said...

///Anonymous said
\\யாரோ ஹரியானா மாநில போலீஸ்காரர் ஒருவர் சப்பர மிட்டாய் சாப்பிட்டபடியே காங்கிரஸ் கட்சி அலுவலக வாசலில் நின்றதைப் பார்த்து “ஐயோ, குய்யோ..” என்று சந்திரசேகர் ஆட்சிக் காலத்தில் கத்திக் கூப்பாடு போட்டு கடைசியில் ராஜீவ்காந்தியையே பரலோகத்திற்கு அனுப்பி வைத்த அரசியலும் நடந்த இந்தியாவில்,//
More information please!///

ராஜீவ்காந்தி இறந்த சம்பவத்திலிருந்து அனைத்தையும் ரீவைண்ட் செய்து பாருங்கள்.. புரியும்..

Athisha said...

அண்ணா கலக்கிட்டீங்க

நாலே வரில சும்மா நச்சுனு சொல்லிட்டீங்க


இப்படிலாம் பின்னூட்டம் போடலாம்னு ஆசைதான் என்ன பண்ண உங்க பதிவ பாதி படிக்கும் போதே மாலைகண் வந்த கவுண்டமணி கண் மாதிரி ஆகிடுது
அதுக்கும் மேல படிச்சா காசி விக்ரம் மாதிரி ஆனாலும் ஆகலாம்

இந்த பதிவுல சொன்ன மேட்டர சிம்பிளா நாலே வரில நச்சுனு சொல்லுங்க .... ப்ளீஸ்ணா..............

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

Hi Saravanan,
Lucid writing,kudos.
But why you are not paying much attention on state political happenings?
Are you employed in Jaya Tv & hence want to keep aloof from state political issues?

abeer ahmed said...

See who owns webrank.biz or any other website:
http://whois.domaintasks.com/webrank.biz