என்ன ஜனநாயகம் இது..?

01-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


நமது அரசியல்வியாதிகளுக்கு அரசுப் பணம் என்பது தங்களது சொந்த வீட்டுப் பணம் என்பதாகத்தான் நினைப்பு.. அரசு என்பதே தங்களுக்காகத்தான் என்கிற கருத்தில் அத்தனை பேரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறீர்கள்.

அதற்கு இன்னுமொரு உதாரணம்.. தற்போது மூன்று தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து அங்கே தேர்தலுக்கு வழி வகுத்திருப்பதுதான்.

திருமங்கலம் தொகுதி ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வீர. இளவரசன் அகால மரணமடைந்தார். அதனால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம். இது தவிர்க்க முடியாதது. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. ஒத்துக் கொள்ளலாம்.

"தனக்கு கட்சியில் மரியாதை இல்லை. தனக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை.. தான் சொன்ன நபர்களுக்கு கான்ட்ராக்ட் கிடைக்கவில்லை. அரசுப் பணிகளில் தன் ஆதரவாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. தான் கை காட்டியவர்களுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கவில்லை"- இப்படி பலவித பொதுநல கோரிக்கைகளை வைத்து அவை நிறைவேறாத கோபத்தில், இளையான்குடி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கண்ணப்பன்.

மேலே சொன்னவைகளெல்லாம் என்ன மக்களின் கண்ணீரைத் துடைக்கும் பொது நலச் சேவைகளா..? அக்கிரமமான ஜனநாயக விரோதமான நடவடிக்கைகள், செயல்கள்.. ஆனால் இவை அத்தனையையும் பகிரங்கமாக பத்திரிகைகளில் தெரிவித்துவிட்டு தனது தாய்க்கழகத்தில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்யப் போகிறாராம் இந்த நல்லவர்..

அடுத்தவர் இன்னுமொரு கண்ணப்பன். கோவை மாவட்டம் தொண்டாமுத்துர் தொகுதியின் ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்.

இவருக்கும் இவருடைய கட்சித் தலைமைக்கும் இடையில் வாய்க்கால், வரப்பு பிரச்சினை. நேரில் சந்தித்துப் பேசித் தீர்த்திருக்கலாம். முடியவில்லையாம். அதனால் கட்சியைவிட்டு விலகுகிறாராம். கூடவே பெரும் சுமையாக இருக்கிற எம்.எல்.ஏ. பதவியையும் சேர்த்து ராஜினாமா செய்துவிட்டார்.. ஏற்கெனவே மக்கள் சேவை செஞ்சு ரொம்பக் களைச்சுட்டார் போலிருக்கு..

மூன்றாமவர் கம்பம் ராமகிருஷ்ணன். இவருக்கும் கண்ணப்பனுக்கு வந்த அதே நோய்தான்.. அவருடைய கட்சித் தலைமையுடன் ஒத்துப்போகவில்லையாம். உடனே கட்சி தாவுதல்.. பதவியை ராஜினாமா செய்யுதல்..!

அந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி என்ன கடையில் வாங்கிய கருவேப்பிலையா. பிடிக்கவில்லையென்றவுடன் தூக்கியெறிந்துவிட்டுப் போக..?

ஒரு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய்வரையில் செலவு செய்கிறது. இது அத்தனையும் இந்திய மக்களின் பணம்.. நம்முடைய பணம்..

தேர்தலில் நிற்கும்போது அதைப் பிடுங்குவேன்.. இதைக் கிழிப்பேன்.. என்று வாய்கிழியப் பேசிவிட்டு முடியாதபட்சத்தில் எதையும் செய்யாமல் வீட்டில் படுத்துத் தூங்கித்தான் தொலைய வேண்டியதுதானே.. எதற்கு ராஜினாமா செய்து இன்னொரு 5 கோடி ரூபாயை காலி செய்ய வேண்டும்..?

இவர்களுடைய சொந்தக் காசு என்றால் இது போல் போனால் போகுது என்று விட்டுவிடுவார்களா..? என்ன முட்டாள்தனம் இது..? கேட்பாரே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது இந்த முட்டாள்தனமான நமது நாட்டு ஜனநாயகம்..

அடுத்தக் கட்சியில் இப்போதே சேர்ந்தால்தான் அடுத்த தேர்தலில் சீட் பிடிக்க முடியும் என்கிற வெறி.. வேறு ஒண்ணுமேயில்லை.. பதவி வெறிதான்.. இப்படித்தான்யா அத்தனை பேரும் அலையறாங்க அத்தனைக் கட்சியிலேயும்.. ஒருத்தன் பாக்கியில்லை.. என்னத்த வெச்சு இவனுகளை அடிச்சா புத்தி வரும்னு தெரியலை..!

ஆளும்கட்சிக்கு என்னவென்றால் எதிர்க்கட்சியின் டிவி 'அல்லேலூயா' சொல்வதைப் போல் 'மைனாரிட்டி ஆட்சி; மைனாரிட்டி ஆட்சி' என்று அலறுவதை நிறுத்த வேண்டுமாம்.. கூடுதலாக 3 எம்.எல்.ஏ.க்களைக் கூட்டிக் கொண்டு தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கும் புள்ளிவிபரத்தில் ஏற்றம் பெற வேண்டும் என்கிற அவர்களுடைய பதவி வெறிக்காகத்தான் நமது பணம் 15 கோடி ரூபாய் வெட்டியாகச் செலவாகப் போகிறது..!

இதையெல்லாம் எப்படி சகித்துக் கொள்வது..?

இந்த 15 கோடி ரூபாயில் எத்தனை, எத்தனை நல்லத் திட்டங்களை மேற்கொள்ளலாம்.

இன்றைக்கும்..................... ரொம்ப தூரம் போக வேண்டாம்..

நம்ம மாநிலத் தலைநகரமாம் சிங்கார சென்னைக்குப் பக்கத்தில் பொன்னேரி பக்கத்துல இருக்குற ஒரு ஊர்ல இருந்து மெயின் ரோட்டுக்கு வர்றதுக்கு பாதையே கிடையாது.. நடுவுல ஓடுற ஆத்தைக் கடந்துதான் வரணுமாம்.. அந்தக் கிராமத்துல இருந்து பொன்னேரி ஸ்கூலுக்கு படிக்க வர்ற பிள்ளைக புத்தகத்தைத் தூக்கி தலைல வைச்சுக்கிட்டு, இடுப்பு அளவு தண்ணில நடந்து வர்றாங்க.. கரைக்கு வந்தவுடனேயே கையோடு கொண்டு வந்த துண்டால உடம்பைத் துடைச்சிட்டு, அப்படியே யூனிபார்ம் டிரெஸ்ஸை எடுத்து அங்கனதான் மாத்திட்டு ஸ்கூலுக்குப் போறாங்க. இது இன்னிக்கும் நடக்குது.. அன்னிக்கு பேப்பர்ல போட்டோவ பார்க்கும்போது நாட்டை நினைச்சு வெறுப்பா இருந்தது.

இன்னிக்கு ஒருத்தருக்கு மரியாதை இல்லையாம்.. இன்னும் ரெண்டு பேருக்கு தன்னை யாரும் சந்தேகப்படக் கூடாதாம்.. அவ்ளோதான் மக்கள் பணி செய்ய மாட்டாங்களாம்..! என்ன எழவு மக்கள் சேவையோ இது..! இவுங்களையெல்லாம் அரசியல்ல இருந்து தொலைச்சாத்தான் வெளங்கும்..!

எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவை பாரு.. அதைப் பாரு.. இதைப் பாருன்னு வீர வசனம் மட்டும் பேசத் தெரிந்த சண்டியருங்க இவுக.. அமெரிக்கால இருக்குற மாதிரியான ஜனநாயகத்தையாவது நமக்குக் கொடுக்கக் கூடாதா..?

ஒரு பிரதிநிதி பிடிக்கலைன்னா தொகுதி மக்கள்ல 3-ல 2 பங்கு பேர் ஓட்டுப் போட்டா, அவரை வீட்டுக்கும் அனுப்ப முடியுமாம்.. மறுபடியும் தேர்தல் வைங்கன்னு சொல்லவும் முடியுமாம்..

அது ஜனநாயகம்யா.. இது..!?????????????