'என்னுயிர்த் தோழன்' பாபு 'விடுதலை' பெற்றுவிட்டான்..!

 19-09-2023

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்றைய நாளின் துவக்கத்திலேயே 2 மரணச் செய்திகள். ஒன்று துர்மரணம். இன்னொன்று ஒரு மனிதனைக் காப்பாற்றிய மரணம்.

இரண்டாவது மரணத்தைப் பற்றிப் பேசுவோம். 1990-களில் வெளியான ‘என்னுயிர்த் தோழன்’ படத்தின் நாயகன் பாபு நேற்று இரவில், தான் 30 வருடங்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விடுதலையை கடைசியாகப் பெற்றுவிட்டான். இத்தனை நாள் தாமதத்திற்காக இயற்கையோ, இறைவனோ.. இருவருமே நம் கண்டனத்துக்குரியவர்கள்.

‘என்னுயிர்த் தோழன்’ படத்தில் நாயகன் கிடைக்காமல் தேடுதல் வேட்டையில் இருந்த இயக்குநர் இமயத்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவன் இந்த பாபு.

படத்தில் நடிப்பவர்களிடம் டெஸ்ட் சூட் எடுத்தபோது மெட்ராஸ் பாஷையை சொல்லிக் கொடுக்கும் பொறுப்பு இவனிடம் இருந்தது. இவன் சொல்லிக் கொடுத்த பாங்கும், ஸ்டைலும் தான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதே நாயகனைப் போலவே இருக்க.. பாபுவையே நாயகனாக்கிவிட்டார் பாரதிராஜா.

முதல் படம் வெற்றியானவுடன், அடுத்தப் பட வாய்ப்பு வந்தவுடன் அதை எப்படி குருவிடம் சொல்வது என்று தெரியாமல் சொல்லி குருவிடமிருந்து கோபத்தையும், சாபத்தையும் ஒரு சேர சம்பாதித்தான். அந்த சாபம்தான் அவனை இந்த அளவுக்கும் ஆட்டிப் படைத்தது என்பது அவனது இதயத்தில் கடைசிவரையிலும் இருந்த குமுறல்.

‘பெரும் புள்ளி’, ‘தாயம்மா’ என்று 2 படங்களை முடித்துவிட்டு மூன்றாவதாக ‘மனசார வாழ்த்துங்களேன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான், அந்தக் கொடூரம் நிகழ்ந்தது.

படத்திற்காக தயாரான ஒரு சண்டை காட்சியில் மாடியில் இருந்து கீழே குதிக்க வேண்டியிருந்தது. அந்தக் காட்சியில் யார் சொல்லியும் கேட்காமல், ஆர்வக் கோளாறில் “நானே குதிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, கீழே பெட்டை போடக்கூட நேரம் கொடுக்காமல் குதித்ததன் விளைவுதான் இந்த 30 வருடங்களாக அவன் பட்ட துயரத்தின் முதல் புள்ளி.

கீழே விழும்போது தவறியதில் முதுகுத் தண்டில் அடிபட்டு எலும்புகள் உள்ளுக்குள்ளேயே சில்லுகளாக சிதறியதை அடுத்து படுத்தப் படுக்கையானான் பாபு.





இவனது வளர்ச்சியை நம்பி நல்ல சம்பளம் வந்து கொண்டிருந்த வங்கி வேலையைக்கூட இவனது அப்பா கைவிட்டுவிட்டு “இவன் கூடவே இருந்து தேதி பார்த்துக் கொள்கிறேன்…” என்று வந்துவிட்டதால் மருத்துவமனையில் இருந்த ஒரே மாதத்தில் குடும்பமே தெருவுக்கு வந்த நிலைமை.

இவனது சொந்தத் தாய் மாமாவான முன்னாள் அமைச்சர் க.ராசாராமின் உதவியோடு பெரும் பொருளாதார செலவுகளை முதலில் கடந்தாலும் சில நாட்களிலேயே அவருடனும் நடந்த மனஸ்தாபத்தில் அதன் பிறகு அவரை அணுகவும் முடியாத சூழல் ஏற்பட்டது.

இதன் பின்பு திரையுலகத்தில் பலரிடமும் உதவி கேட்டு, உதவி கேட்டுத்தான் இத்தனையாண்டுகளாக தனது முடமான வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறான் பாபு.

இடையில் 1 வருடம் அவனால் எழுந்து நடக்க முடிந்திருக்கிறது.. ஓடியாட முடிந்திருக்கிறது.. குடும்பம் பெருமூச்சுவிட்டது. “அப்பாடா இனிமேல் நிம்மதிடா…” என்று குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீர்விட்டனர்.

அப்போதைய குடும்பச் சூழலை சமாளிக்கும் பொருட்டு தனக்குத் தெரிந்த வேலையான இணை இயக்குநர் வேலைக்கே திரும்பச் சென்றான் பாபு. 1998-ம் வருடம் ‘காதல் மன்னன்’ படத்தில் இயக்குநர் சரணிடம் இணை இயக்குநராக வேலைக்கு சேர்ந்தான்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடிகர், நடிகையருக்கு வசனம் சொல்லிக் கொடுக்கும் பணி கிடைத்தது. முதல் 3 நாட்கள் அமைதியாக கடக்க.. 4-வது நாள் அவனது சிறுநீர் அவனையறியாமலேயே, அவனால் கட்டுப்படுத்த முடியாமலேயே வெளியேற.. அப்படியே அந்த ஸ்கிரிப்ட் பேடை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தவன்தான். திரும்பவும் ஷூட்டிங் பக்கமே போகவில்லை.

இதன் பின்பு இன்னமும் முழுமையாக சரியாக வேண்டும் என்று நினைத்த பாபு செய்த ஒரு செயல்தான் அவனை அடுத்தக் கட்டமாக பெரிய அளவுக்கு முடக்கிப் போட்டது.

காரைக்குடியில் இருக்கும் ஒரு சித்த மருத்துவமனையில் சேர்ந்தால் ஒரு மாத சிகிச்சையில் முழுமையாக நலம் பெற்றுத் திரும்பலாம் என்று யாரோ இவனது காதில் போட.. அதையே வேதவாக்காக எடுத்துக் கொண்டு தனது குடும்பத்தினருடன் காரைக்குடி விரைந்தான் பாபு.

காரைக்குடி சித்த மருத்துவமனையில் முதல் நாள் காலையிலேயே தலையில் எண்ணெய்யைத் தடவி தட்டித் தட்டி ஆட்டியிருக்கிறார்கள். குளிப்பாட்டியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் திடீரென்று மயங்கி விழுந்தவன்.. விழுந்தவன்தான்.. கடைசிவரையிலும் எழுந்திருக்கவேயில்லை.

நடக்க முடிந்தவரையிலும் அப்படியே இருந்திருக்கலாமே என்று நேற்றைக்கு முதல் நாள் வரையிலும் நிச்சயமாக வருத்தப்பட்டிருப்பான். என்னிடம் சொன்னபோதும் இதைத்தான் சொன்னான்.

“என்னோட பேராசை சரவணா.. உடனே சரியாகணும்.. உடனே திரும்பவும் நடிக்கப் போகணும்னு பேராசை.. திரும்பவும் படுத்திட்டேன்..” என்று கதறலுடன் சொன்னபோது என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை.

2000-களில் நான் ‘மின் பிம்பங்கள்’ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் காலையில் கைலாசம் ஸார் என்னை அழைத்து, “ராஜேந்திரகுமாரோட ஒரு இடத்துக்குப் போ. அங்க ‘பாபு’ன்ற ரைட்டர் இருப்பார். அவங்க கதை டிஸ்கஷன் பேசுவாங்க. அதைக் குறிப்பெடுத்துட்டு வந்து டைப் பண்ணிக் கொடு..” என்றார்.

யாரோ ஒரு பாபு.. ரைட்டராம்ல என்று நினைத்துதான் அந்த வீட்டுக்குள் நுழைந்தேன். ஆச்சரியமாக நுழைந்தவுடனேயே பெட்ரூமுக்குள் அழைத்துச் சென்றார் பாபுவின் அம்மா. உள்ளே படுக்கையில் படுத்தபடியே “வாங்க ஸார்.. வாங்க ஸார்” என்றான் பாபு.

திகைப்பில் இருந்து வெளியில் வரவே எனக்கு ஒரு மணி நேரமானது. அவர்கள் பேச்சில் அன்றைக்கு என்னால் கலந்து கொள்ள முடியாத நிலைமை. தினமும் 3 மணி நேரம் பாபவுடன் அமர்ந்து கதை டிஸ்கஷன் செய்தார் ராஜேந்திர குமார்.

நான்காவது நாள்.. “இல்ல ஸார்.. முடியல.. அது ஆஸ்பத்திரி வார்டு மாதிரியிருக்கு. சங்கடமா இருக்கு ஸார்.. எனக்கு கதை மூடே வரலை..” என்று சொல்லி ராஜேந்திரகுமார் விலகிக் கொள்ள.. முழுப் பணியும் என் மீது விழுந்தது. “நீயே போய் உட்காந்து அவன் சொல்றதை கேட்டு எழுதிட்டு வந்திரு..” என்றார் கைலாசம் ஸார்.

மறுபேச்சில்லாமல் தொடர்ந்து சுமார் 1 மாத காலமும் அந்த வீட்டில் அந்த நோயாளியுடன் இருந்து மருந்து, மாத்திரகளைவிடவும் அவனது சிரமத்தை, இருக்க முடியாத சூழலில், நரகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொடுமையை நேரில் பார்த்தேன். அது இன்றைக்கும் மறக்க முடியாதது..!

திடீரென்று “ஒரு நிமிடம்” என்று சொல்லிவிட்டு படுக்கையில் இருந்து அப்படியே இறங்கி தவழ்ந்தபடியே பாத்ரூமுக்குள் செல்வான். திரும்பி வருவான். “எங்க விட்டேன்…” என்று மீண்டும் பேசத் துவங்குவான். திடீரென்று வாந்தியெடுப்பான். அவனது அம்மா ஓடி வந்து “தம்பி.. கொஞ்சம் வெளில நில்லுப்பா…” என்று சொல்லி என்னை வெளியேற்றிவிட்டு அறையை பெனாயில் போட்டுத் துடைத்துவிட்டு திரும்பவும் வந்து என்னை அழைப்பார்.

வாழ்க்கையில் தாங்க முடியாத வேதனையைக் கொடுக்கும் தருணங்கள் பலவற்றையும் பாபு நான் அனுபவிக்காமலேயே எனக்குக் காட்டிவிட்டான். தன்னுடைய சுமைகளை அவன் இறக்கி வைக்கும் விதத்தில் அவன் சொல்லிய உண்மைகள் திரையுலகம் பற்றிய கசப்புகளையும், உண்மைகளையும் காட்டியது.

சரத்குமாரும், விஜயகாந்தும் பல முறை பாபுவுக்கு பலவிதமான உதவிகளை செய்திருப்பதாகச் சொன்னான். அவன் வைத்திருந்த டிரெட் மில்லைகூட சரத்குமார்தான் வாங்கிக் கொடுத்ததாகச் சொன்னான். விஜயகாந்த் மாதாமாதம் ஒரு தொகையைக் கொடுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று அது நின்றுவிட்டதாக வருத்தப்பட்டான்.

திராவிட இயக்கத்தை சேலத்து மண்ணில் வளர்த்தெடுத்த பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்து, கடைசியாக மாதச் செலவுக்காகவே பலரிடம் போன் செய்து உதவி கேட்கும் துர்பாக்கிய நிலைமையை எண்ணி அழுவான். “என் அம்மாவையும், அப்பாவையும் இப்படி கஷ்டப்படுத்தறனே என்ற இம்சைதான் என்னை தூங்கவிட மாட்டேங்குது…” என்றழுதான்.

சரியாக ஒரு மாதத்திற்கும் மேல் என்னாலும் அவனுடன் சேர்ந்து பயணிக்க முடியவில்லை. என்னால் முடிந்த அளவிற்கு ஒரு தொகையை  மின் பிம்பங்களில் இருந்து பெற்றுக் கொடுத்தேன்.

அதன் பிறகு திடீர், திடீரென்று அலுவலக போனில் அழைத்து, “வேற வேலையிருந்தா சொல்லு சரவணா.. எழுதலாம்.. எழுதுறேன்.. என்னால முடியும். எனக்கு வேலை வேணும்.. பணம் வேணும்.. மாத்திரை, மருந்து வாங்கணும்..” என்பான்.

இந்த போன் தொடர்புகளும் மின் பிம்பங்களில் நான் இருந்தவரையிலும் தொடர்ந்து. பின்பு அதுவும் கட்டானது. ஆனாலும் சில ஆண்டுகள் கழித்து செல்போனின் வருகைக்குப் பின்பு மின் பிம்பங்கள் அலுவலகத்தில் எனது நம்பரை வாங்கி, போன் செய்து மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டான்.

அவ்வப்போது தொடர்பு கொண்டு யாராவது ஒரு பிரபலத்தின் தொடர்பு எண் கேட்பான். கொடுப்பேன். அவனது குரலும் கொஞ்சம், கொஞ்சமாக மாறி சில வருடங்களுக்கு முன்பு போனில் அவன் பேசுவதுகூட புரியாத நிலைமைக்குப் போய்விட்டது.

இதனாலேயே அவனை நேரில் போய் பார்க்க மனம் ஒப்பாமல், தயங்கி நின்றேன். இடையில் அவனது குடும்பத்தில் அவன் சந்தித்த மரணங்களும் சேர்ந்து அவனை பாதி உயிரை இழந்தவனாக்கிவிட்டது.

கடைசியாக சென்ற ஆண்டு ஒரு முறை பார்க்கச் சென்றேன். கைகளைப் பிடித்தபடியே தலையில் அடித்துக் கொண்டு அழுதான். என்னால் அப்படி அழுக முடியவில்லை. “எனக்கு ஏன் சாவு வர மாட்டேங்குது…?” என்றான். இந்த வார்த்தைகளைக்கூட அவனால் சரியாகச் சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு இருந்தது அவனது உடல்நிலை. பிரியாமலேயே பிரிந்து வந்தேன்.

4 மாதங்களுக்கு முன்னாள் ஒரு சினிமா பிரபலத்தின் தொடர்பு எண்ணை கேட்டான். கொடுத்தேன். அதுதான் கடைசியாகப் பேசியது. இன்றைக்குக் காலையில் அவனது இறப்பு செய்தி கிடைத்தவுடன் அப்பாடா.. நல்ல செய்தி.. பாபு விடுதலை பெற்றுவிட்டான்…” என்ற மனம் சந்தோஷப்பட்டது..!

மரணங்கள் பொதுவாக பிரிவைச் சொல்லி அழுகையைக் கொடுக்கும். ஆனால் பாபுவின் பிரிவோ எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. இந்தக் கொடுமையான வாழ்க்கை வேறு எவருக்கும் கிடைக்கக் கூடாது..!

கிட்டத்தட்ட 30 வருடங்களாக  ஒரு மனிதன் அனுபவித்த சித்ரவதை வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள்.. இந்த மனிதன் என்ன பாவம் செய்திருப்பான்.. எத்தனை, எத்தனை கனவுகளோடு சினிமாவுலக வாழ்க்கையில் காலடியெடுத்து வைத்தவனுக்கு கிடைத்ததுதான் என்ன..?

எப்போதும் அவனுடைய அறை சுத்தமாக இருக்கும். நறுமணம் கமழும். ஆனால் கட்டிலில் படுத்தப் படுக்கையாக இருக்கும் அந்த ஒடிசலான தேகத்தைப் பார்க்கும்போது நமக்குக் கண்களில்தான் அந்த பயமும், பாவமும், பரிதாபமும் தெரியும்.

அதைக்கூட எதிர்கொள்ள விரும்பாமல், “ஏதாவது வேலை கொடுங்கப்பா.. கதை சொல்றேன். திரைக்கதை சொல்றேன்.. வசனம் சொல்றேன்.. வேலை வேணும்பா..” என்று கதறிய அந்த மனிதனின் தன்னம்பிக்கைதான் இத்தனையாண்டுகளாக அவனை இருக்க வைத்திருக்கிறது.

கடைசியாக அவன் விடை பெற்றுவிட்டான். இத்தனையாண்டுகளாக அவனைத் தூக்கிச் சுமந்த அவனது குடும்பத்தாருக்கு என்ன ஆறுதலை, யாரால் சொல்ல முடியும்..?!

சென்று வா பாபு..!

மேலுலகம் உன்னால் பெருமையடையட்டும்…!