தேர்தல் ஸ்பெஷல்-10-03-2009-தேர்தல் கமிஷன் அறிவிப்புகள்

10-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தா நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த செய்திகள்..

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை

தமிழ்நாட்டில் புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் முடிவடைந்துவிட்டதாம். சென்னையில் 96 சதவீதமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 98 சதவீதமும் முடிந்துள்ளன. தேர்தலுக்கு முன் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிடுமாம். விடுபட்டவர்கள் தேர்தல் வேட்பு மனு தாக்கல் தேதிக்கு முதல் நாள் வரையிலும் மனு செய்யலாமாம்.. ஆனால் எப்போது கொடுப்பார்கள் என்பது தெரியாது..

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறதாம். வேட்பாளர்களோ, அரசியல் கட்சிகளோ, தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு தமிழக இணை தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர், சென்னை தொலைக்காட்சி நிலைய உதவி இயக்குநர், சென்னை வானொலி நிலைய உதவி இயக்குநர் ஆகியோர் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கப் போகிறார்கள்.

வேட்பாளர் தங்களது விளம்பரங்களை வெளியிடும் முன், இந்தக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். பதிவு பெற்றக் கட்சியினர் விளம்பரம் வெளியிடுவதற்கு 3 நாட்களுக்கு முன்பும், மற்றவர்கள் 7 நாட்களுக்கு முன்பும் தங்கள் விளம்பரங்களுக்கு இந்த அனுமதியைப் பெற வேண்டுமாம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி இந்தக் குழுவின் அனுமதியின்றி எந்த ஒரு விளம்பரமும் ஒலி, ஒளிபரப்பு செய்யக்கூடாதாம்.

வேட்பாளர்கள் தனியாக செய்யும் விளம்பரங்களுக்கு சான்றிதழ் வழங்கும் அதிகாரியாக அந்தந்த லோக்சபா தொகுதியின் தேர்தல் அதிகாரி செயல்படுவாராம்.

வெளியிடப்படும் விளம்பரங்கள் தொடர்பான புகார்கள், குறைகளை தெரிவிப்பதற்காக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் மற்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளதாம். இந்தக் குழுவில் மத்தியத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பார்வையாளர், சென்னை தொலைக்காட்சி நிலைய அதிகாரி ராம், சென்னை வானொலி நிலைய வர்த்தக ஒலிபரப்பு சேவையின் இயக்குநர் ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

பார்வையற்றவர்களுக்கான ஒரு வசதி

பார்வையற்றவர்கள் ஓட்டுப் போடுவதற்காக தனியாக எலெக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாம். பார்வையற்றவர்களுக்காக பிரெய்லி எழுத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் எண்கள் ஆங்கிலத்தில் இடம் பெறவும் வகை செய்யப்பட்டுள்ளது. இது தவிர, துணைக்கு ஒருவரை அழைத்து வருவதற்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டு வந்த வசதியும் தொடர்ந்து அளிக்கப்படும்.

தேர்தல் தகவல்களுக்காக புதிய இணைய தளங்கள்

இந்தத் தேர்தலுக்காக www.elections.tn.gov.in, www.ceotamilnadu.nic.in என்ற பெயரில் இரண்டு புதிய இணைய தளங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இவற்றில் தேர்தல் தொடர்பான அதிகாரிகள், தமிழ்நாட்டில் உள்ள தொகுதி வாரியான வாக்காளர் பட்டியல்கள், வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பம், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பம், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் பட்டியல்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவித் தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடிகளுக்கான அதிகாரிகள், மறு சீரமைப்புக்குப்பின் தொகுதிகளின் பெயர் விவரம் மற்றும் தொகுதிகளில் அடங்கிய ஊர்கள், அந்தந்த தொகுதிகளின் வரைபடங்கள், தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் தாக்கல் செய்வதற்கான விண்ணப்ப மனு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், விவரங்கள் உட்பட தேர்தல் தொடர்பான அனைத்து A To Z தகவல்கள் அனைத்தும் இந்த இணைய தளங்களில் உள்ளன. பயன்படுத்திக் கொள்ளலாம்.

6 comments:

அபி அப்பா said...

சரவணா! உன் கிட்ட இருந்து இதை எதிர் பார்க்கலைப்பா! அழகா தேர்தலை என்ன நடக்குதோ அதை சொல்லு! பதிவின் எண்ணிக்கை முக்கியம் இல்லை! ஒரு ரிப்போர்ட்டரா இருப்பா! நாங்க தூர தேசத்திலே இருக்கோம் இல்லியா அதான்! நீ சொன்னா சரியா இருக்கும்ன்னு ஒரு நம்பிக்கை!!

வால்பையன் said...

ஒரு வாக்காளனுக்கு தலைக்கு எவ்வளவு வரை கொடுக்கலாம் என்ற தகவல் இல்லையே! நாங்க எப்படி டிமாண்ட் பண்றது?

உண்மைத்தமிழன் said...

//அபி அப்பா said...

சரவணா! உன்கிட்ட இருந்து இதை எதிர் பார்க்கலைப்பா! அழகா தேர்தலை என்ன நடக்குதோ அதை சொல்லு! பதிவின் எண்ணிக்கை முக்கியம் இல்லை! ஒரு ரிப்போர்ட்டரா இருப்பா! நாங்க தூர தேசத்திலே இருக்கோம் இல்லியா அதான்! நீ சொன்னா சரியா இருக்கும்ன்னு ஒரு நம்பிக்கை!!//

அபிப்பா.. இது அடிப்படையான சில தகவல்கள். பின்னாளில் இதுவே பெரிய பிரச்சினையானால் உங்களுக்கும் இது மிக எளிதாகத் தெரிந்துவிடுமே.. அதற்காகத்தான்..

என் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்புக்கும், பாசத்திற்கும், பார்வைக்கும் எனது நன்றிங்கோண்ணா..

உண்மைத்தமிழன் said...

//வால்பையன் said...
ஒரு வாக்காளனுக்கு தலைக்கு எவ்வளவு வரை கொடுக்கலாம் என்ற தகவல் இல்லையே! நாங்க எப்படி டிமாண்ட் பண்றது?//

இதையெல்லாம் வெளிப்படையா சொல்லணும்னு எதிர்பார்த்தா எப்படி வாலு..?

அதெல்லாம் கூடிய சீக்கிரமே வீடு தேடி வரும் பாருங்க.. கிடைச்சா விட்ராதீங்க.. வாங்கிப் போட்டுக்குங்க.. ரெண்டு மாச இண்டர்நெட் செலவுக்காச்சும் ஆகும்..!

Anonymous said...

//தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி இந்தக் குழுவின் அனுமதியின்றி எந்த ஒரு விளம்பரமும் ஒலி, ஒளிபரப்பு செய்யக்கூடாதாம்.//

அப்ப தெருத்தெருவா ஆட்டோல மைக் கட்டி பிரச்சாரம் பண்றாங்களே.. அதுக்கெல்லாம் பெர்மிஷன் வாங்கிட்டுத்தான் பண்றானுவளோ..! என்ன காமெடி சரவணன் இது..!

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...

//தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி இந்தக் குழுவின் அனுமதியின்றி எந்த ஒரு விளம்பரமும் ஒலி, ஒளிபரப்பு செய்யக்கூடாதாம்.//

அப்ப தெருத்தெருவா ஆட்டோல மைக் கட்டி பிரச்சாரம் பண்றாங்களே.. அதுக்கெல்லாம் பெர்மிஷன் வாங்கிட்டுத்தான் பண்றானுவளோ..! என்ன காமெடி சரவணன் இது..!///

அந்த அளவுக்கு என்ன எல்லா அரசியல் கட்சிக்காரர்களும் முட்டாள்களா..?

ஏதோ பேருக்கு சும்மா ரெண்டே ரெண்டு ஸ்கிரிப்ட்டுக்கு பெர்மிஷன் வாங்கிட்டு பத்து ஸ்கிரிப்ட் எழுதி ஓட்டப் போறாங்க.. அவ்வளவுதான் மேட்டரு..!