புதுமுகங்கள் தேவை - சினிமா விமர்சனம்

31-12-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வருடத்தின் இறுதி நாளில் பார்த்த சுவையான படம்..! தமிழின் பரீட்சார்த்த முயற்சிகளுக்காக இந்தாண்டு பாராட்டை பெறும் ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படங்களுக்கு அடுத்து இந்தப் படத்தை நிச்சயம் சொல்லலாம்..!


ஹீரோ சிவாஜிதேவ் சினிமாவில் உதவி இயக்குநர். எப்படியாவது இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு கதை பைலோடு தயாரிப்பாளரை தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார். சென்னையில் பெரிய தயாரிப்பாளர்களை பிடிப்பதைவிட லோக்கல் ஊர்களில் இருக்கும் சிறிய தொழிலதிபர்களை கவர்ந்து படம் செய்யலாம் என்று நினைத்து நாகர்கோவில் வட்டாரத்தில் தனது தேடுதல் வேட்டையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். 

சுப்பு அவரது ரூம்மேட்.  கல்லூரி தோழன். இவருக்கு பணப் பிரச்சினை வந்து அதனால் தற்கொலை அளவுக்கு போகும்போது, சிவாஜிதான் சுப்புவை காப்பாற்றுகிறார். விஷயமறிந்து சுப்புவின் ஊருக்கே  அவனை அழைத்து வருகிறார் சிவாஜி. அங்கே சுப்புவின் மாமாவின் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள். சுப்புவின் மாமா மகன் ராஜேஷ்யாதவ்.. எப்படியாவது பெரும் பணக்காரனாகிவிட வேண்டும் என்ற குறிக்கோளில் இருப்பவன்.  

சுப்பு ஊருக்கு வந்திருப்பதை அறிந்த சுப்புவுக்கு கடன் கொடு்த்து வசூலிக்க முடியாமல் தவிக்கும் எம்.எஸ்.பாஸ்கர் கடைக்கே வந்து சுப்புவைத் தூக்குகிறார். இப்போது இடையில் நுழையும் ராஜேஷ்யாதவ்.. முதல் பொய்யை சொல்ல துவங்குகிறார். சுப்பு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறான். அதனை சிவாஜிதான் டைரக்ட் செய்யப் போகிறான் என்பதுதான் அந்த மகா மகா பொய்.. இதிலிருந்து ஆரம்பிக்கிறது பொய்யின் விளையாட்டு..!

பைசா காசு இல்லாமல் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கி எப்படி சிவாஜி தனது கனவு படத்தை இயக்கி முடிக்கிறான் என்பதுதான் மிச்சம், மீதிக் கதை.. இதில் கிளைமாக்ஸில் வரும் டிவிஸ்ட்டுகள் சொல்லி மாளாது..! நினைக்கவே இல்லை..! இப்படியெல்லாம் திருப்பங்கள் வருமென்று..! எது சினிமா.. எது நிஜம் என்கின்ற குழப்பத்தில் பார்வையாளர்களை சிறிது நேரம் அல்லலோகப்பட வைத்துவிட்டார்கள்..! சினிமாவுக்குள் ஒரு சினிமாவாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் தமிழின் உலக சினிமாக்கள் வரிசையில் நிச்சயமாக இடம் பிடிக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை..!

சிவாஜிதேவ் கொஞ்சம், கொஞ்சமாக நடிப்பில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். இதில்  பெரிய அளவுக்கு அடிதடி இல்லை.. காதல் கசமுசாக்கள் இல்லை.. ஆனாலும் காதல் இருக்கிறது..! காதலை எந்தவிடத்திலும் அவர் சொல்லவில்லை. ஆனால் டூயட்டுகள் உள்ளன..! இப்படி எதையுமே லாஜிக் மீறலாக பார்க்க முடியாத அளவுக்கு திரைக்கதையை பின்னியிருக்கிறார் கதை மற்றும் திரைக்கதை ஆசிரியரான எஸ்.ஏ.அபிமன். முதலில் இவருக்கு எனது வாழ்த்துகள்..! 

ஷூட்டிங்கின்போது ஒவ்வொரு முறையும் பல பிரச்சினைகள் வந்து குவிந்து கொண்டேயிருக்க டென்ஷனில் அனைத்தையும் சமாளித்து, முடியாமல் கத்தித் தீர்த்துவிட்டு பின்பு தீர்வு நெருங்கும் சமயம், ராஜேஷிடம் சமாதானமாவதுமாக இவரது உதவி இயக்குநர் கேரக்டரை நிஜமாகவே ஹோம்வொர்க் செய்துதான் மெயின் பிக்சரில் நடித்திருக்கிறார் என்று தெரிகிறது..!

ஷூட்டிங்கின்போது ஹீரோவின் தெனாவெட்டை பார்த்து பொறுமுவது.. காட்சிகளில் திருத்தம் சொல்லும்போது ஹீரோவின் சட்டையைப் பிடித்து உலுக்கியெடுப்பது.. கோபத்தின் உச்சிக்கே போய் பேக்கப் சொல்லிவிட்டு ஓடும் காட்சியில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.. 

ஹீரோயினாக இருவர். பானு, விஷ்ணு பிரியா. இருவருக்குமே அதிகம் ஸ்கோப் இல்லை..  பார்த்தவுடன் காதல் டைப்பில் விஷ்ணுபிரியா, சிவாஜியின் மீது காதலாவதும்.. 4 வது சீனிலேயே தனது அப்பாவிடம் மரியாதையாக பேசினால்தான் கல்யாணத்துக்கு ஒத்துவார் என்ற ரீதியில் இந்த காதல் டிராக்கை செம ஸ்பீடில் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்..!  விஷ்ணு பிரியா அழகாயிருக்கிறார். 2 பாடல் காட்சிகளில் ஆடியிருக்கிறார். அவ்வளவுதான்..

இதேபோல் ‘தாமிரபரணி’ பானு. நடிகையாகவே இதில் நடித்திருக்கிறார். இவருடைய அறிமுகக் காட்சியில் மாடிப் படிக்கட்டில் ஸ்டைலாக நின்று பேசும் அந்த ஒரு காட்சியே இந்தப் படத்தின் இயக்குநரான மனீஷ்பாபுவின் முன் அனுபவத்தைக் காட்டுகிறது..! அந்த இடத்தில் ராஜேஷ்யாதவ் அடிக்கும் டிவிஸ்ட்டு எதிர்பாராதது..! ஆனால் அசத்தல்..!  இவரும் இறுதியில் ஒரு டூயட் பாடலை பாடிவிட்டு, படத்துக்கு மங்களம் பாடும்போது சாந்தமாக காட்சியளிக்கிறார். 

பிரபல ஒளிப்பதிவாளரான ராஜேஷ்யாதவ்தான் இதில் முக்கியமான கீ கேரக்டர். இவர்தான் இப்படத்தின் பின்னணியில் இருந்திருக்கிறார். “இந்த ஒரு படத்தோட மரியாதையா நின்னுக்கணும்.. இல்லைன்னா நடக்குறதே வேற..!!” என்று அவருடைய நெருங்கிய இயக்குநர்களால் ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் மிரட்டப்பட்டவர். ஆனாலும் அண்ணன் சசிகுமாரை போல இவரும் முயற்சி செய்தால் கஷ்டப்படாமல் நடித்து சம்பாதிக்கலாம்..!

சுப்புவாக நடித்த ஆதீஷின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸ்.. அதனை இங்கே உடைக்க விரும்பவில்லை. நினைக்கவே இல்லை.. இப்படியிருக்கும் என்று.. ஆனால் அந்த சஸ்பென்ஸை அவர்கள் உடைத்த இடமும் சபாஷ் போட வைக்கிறது.. வெல்டன் டைரக்டர்..!

கிரேன் மனோகருக்கு இப்படத்தில் ரொம்ப நாள் கழித்து வெயிட்டான வேடம்..! பகலில் ஹோட்டல் சப்ளையராகவும், இரவில் தண்ணியடித்துவிட்டு முதலாளியை கலாய்த்துவிட்டு மறுநாள் காலையில் மன்னிப்பு கேட்டு வழியும் நகைச்சுவைத்தனமும் சரி இருக்கட்டும் என்று சொல்ல வைத்த்து. ஆனால் கொஞ்ச நேரம்தான். கறுப்பு பையை மாட்டிக் கொண்டு படத்தின் புரொடெக்ஷன் மேனேஜர் வேலை பார்க்கத் துவங்கியவுடன் இன்னமும் களை கட்டுகிறது ஸ்கிரீன்..!  ராஜேஷ், கதையை மாற்றி, மாற்றிச் சொல்லும்போது இவரது மெளனமான ஆக்சனே செம கலகலப்பு..! 

இவரைப் போலவே இன்னொரு கலகலப்பு முகம் எம்.எஸ்.பாஸ்கர்.. “ஒரு படத்துல ஹீரோவா நடிக்கப் போறான்.. அது ஹிட்டாகப் போவுது.. 4, 5 படத்துல தொடர்ந்து நடிச்சு பெரிய பணக்காரனாகப் போறான்.. ரசிகர் மன்றங்கள் கூடப் போவது.. அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறான்.. எம்.பி., எம்.எல்.ஏ.வாகக் கூட ஆவான். மினிஸ்டரா இந்த ஊருக்குள்ளாற வரப் போறான்...” என்று ராஜேஷ் ஏத்திவிடும் அளப்பரையை அப்படியே நம்பி திரும்பிப் போகும் அளவுக்கு அப்பாவி கேரக்டர் அவருக்குப் பொருந்துகிறது..! டயலாக் டெலிவரியில் தானும் வடிவேலுக்கு சளைத்தவனில்லை என்பதை இந்தப் படத்திலேயும் நிரூபித்திருக்கிறார் பாஸ்கர்..!

நாகர்கோவில் வட்டாரத்திலேயே அனைத்துக் காட்சிகளையும் படமாக்கியிருப்பதாலும், அதுவும் தான் நடிக்கும் படம் என்பதாலும் ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு வழக்கம்போல வண்ணமயம்தான்..! இசைதான் கொஞ்சம் இடிக்கிறது.. பாடல்கள் மனதில் ஒட்டவில்லை என்பது ஒரு வருத்தமான விஷயம்..!

முதலில் இந்த இயக்குநரை ஒரு விஷயத்துக்காக எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாங்களே இயக்கவும் செய்வோம் என்ற இயக்குநர்களுக்கு மத்தியில் நல்ல கதை கிடைத்தால் அதனை தான் இயக்குவேன் என்பதை இதில் செய்து காண்பித்திருக்கிறார். இவரைப் பின்பற்றி மற்ற இயக்குநர்களும் சிறந்த கதை, திரைக்கதையாசிரியர்களை  உடன் வைத்துக் கொண்டு இயக்கத்தை மட்டுமே தொடர்ந்தால் இது போன்ற சிறந்த படைப்புகள் வரும் வாய்ப்புகள் உள்ளது..! படத்தின் பல காட்சிகளிலும் மெல்லிய நகைச்சுவை இழைந்து ஓடுகிறது.. இந்த நகைச்சுவையை  தேனாக ஓட விட்டிருந்தால் இந்நேரம் இப்படம் பெரிய அளவுக்குப் பேசப்பட்டிருக்கும்..!

சிவாஜி-விஷ்ணு பிரியா காதல் டாபிக்கை தவிர படத்தில் மற்றவைகளில் எந்தக் குறையையும் சொல்ல முடியாது. இயக்குநருக்கு முதல் படம் என்பதாலும், நகைச்சுவை காட்சிகளை இயக்கிய அனுபவம் இல்லாததாலும், காமெடி ஸ்கோப் உள்ள அனைத்து காட்சிகளிலும் லைட்டான காமெடிகளே வெளிப்பட்டிருக்கின்றன என்பது இப்படத்தில் நான் கண்ட குறை..! அடுத்த படத்தில் இயக்குநர் இதனை சரி செய்துவிடுவார் என்று நம்புகிறேன்..!

வசனங்களை அண்ணன் கவிதாபாரதி எழுதியிருக்கிறார்..! சினிமா தொடர்பான படம் என்பதால் அதில் பணியாற்றியவரே எழுதினால் நன்றாக இருக்கும் என்று விட்டுக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இதற்கும் அவருக்கு ஒரு பாராட்டு..! கவிதாபாரதியின் வசனங்கள் ஷூட்டிங் காட்சிகளில் இயல்பான நகைச்சுவைக்கும்,  வேகமான திரைக்கதைக்கும் பெரும் உதவி செய்திருக்கிறது..! வல்லத்து ராஜாவிடம் சிவாஜி வாய்ப்பு கேட்பதும், அவர் பதில் சொல்வதும்.. பானு முதல் முறையாக ராஜேஷிடம் பேசும்போது பேசுகின்ற வார்த்தைகளும் நிச்சயம் முன் அனுபவமாகத்தான் இருக்கும். அவ்வளவு உண்மை அதில் இருக்கிறது..! வெல்டன் கவிதாண்ணே..!

சென்ற வெள்ளியன்று ரிலீஸான இப்படத்தை இன்றுதான் பார்க்க நேர்ந்த்து.. போன வியாழக்கிழமையே இதனை பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருந்தால் ‘கோழி கூவுது’ படத்துக்கு முன்பாகவே இப்படத்தை பிரச்சாரம் செய்திருக்கலாம்..! நல்ல வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது..! படத்தை தயாரிப்பது முக்கியமல்ல.. அதனை விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதுதான் மிக முக்கியமானது..  இப்படம் சம்பந்தப்பட்டவர்கள் எப்படி இதனை மிஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை..! 

இருப்பது 3 நாட்கள்.. அதற்குள்ளாக எத்தனை பேருக்கு இப்படம் பற்றி தெரிந்து எப்படி பார்ப்பார்கள் என்று தெரியவில்லை..? எப்படி பார்க்க வைப்பது என்றும் தெரியவில்லை..! ‘ஏவி.எம்.ராஜேஸ்வரி’யில் ‘துப்பாக்கி’யையும், ‘கும்கி’யையும் தூக்கிவிட்டு ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தை இப்போது போட்டிருக்கிறார்கள். அதுபோல ஷிப்டிங் முறையில்கூட இப்படத்தை  ரிலீஸ் செய்ய தியேட்டர்காரர்கள் முன் வர வேண்டும்..!

சினிமாவுக்குள் சினிமா.. கிளைமாக்ஸுக்குள் ஒரு கிளைமாக்ஸ். படம் முடிந்துவிட்டது என்று எழுந்தால் இன்னுமொரு கிளைமாக்ஸ்.. அட என்று அப்படியே நிற்க வைத்துவிடுகிறார்கள்.. கண்டிப்பாக தமிழ்ச் சினிமாவுக்கு இதுவொரு புதுமைதான்.. இது போன்ற படங்களையும், இயக்குநர்களையும் ஊக்கப்படுத்த வேண்டியதும், பாராட்ட வேண்டியதும் நமது கடமை என்பதால், வாய்ப்பு உள்ள அன்பர்கள் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று இப்படத்தைக் கண்டு களிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..!

நன்றி..

அகிலன் - சினிமா விமர்சனம்



28-12-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு திரைப்படம் தோல்வியடைந்தால் அதன் தயாரிப்பாளரை பாவம் என்போம். அதே தயாரிப்பாளர் படம் தோல்வியாகும் என்பது தெரிந்தே படத் தயாரிப்பில் நுழைந்திருக்கிறார் என்றால், அது அவரது விதி என்று சொல்லிவிட்டுப் போகலாம்..! இந்தப் படமும் அந்த விதி கணக்கில்தான் சேரும்..!

மதுரையைச் சேர்ந்த அக்மார்க் ஒரிஜினல் எம்.பி.பி.எஸ். டாக்டரான சரவணனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று மிகப் பெரிய ஆவல். முகத் தோற்றம் அழகாக இருப்பதால் இந்த எண்ணம் அவருக்கு வந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தனக்கான கதையைத் தேர்வு செய்ய வேண்டி, வசதியான இயக்குநரைத் தேடிப் பிடித்திருக்கிறார். அந்த இயக்குநரும் எப்படியாவது ஒரு படத்தை இயக்கம் செய்துவிட்டால் போதும். ஒருவேளை படம் ஹிட்டானால் நமக்கும் வாழ்க்கை கிடைக்கும். கூடவே, இப்போது வாழ்க்கையை ஓட்ட பணமாவது கிடைக்குமே என்ற ஆர்வத்திலும், எண்ணத்திலும் இதற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார் போலும்..!

மதுரையைக் களமாகக் கொண்ட இந்தப் படத்தின் கதைக் கரு நிஜமாகவே ஒரு கமர்ஷியல் படத்திற்கு பொருத்தமானது..! வித்தியாசமானதும்கூட..! 


நகரில் 2 இளம் பெண்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையால் அவர்களைக் கண்டறிய முடியவில்லை. ஆனால் எப்படியாவது மக்களைச் சமாதானப்படுத்த நினைக்கிறார்கள். தீயணைப்புப் படையினர் தீ விபத்தில் இருந்து மக்களைக் காப்பது எப்படி என்று டெமான்ஸ்ட்ரேஷன் செய்து காண்பிப்பார்களே.. அதுபோல் காவல்துறையும் ஒரு கடத்தல் சம்பவத்தை கிரியேட் செய்து, அதனை அவர்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதை பொதுமக்களுக்கு காட்டி அவர்களைச் சாந்தப்படுத்த நினைக்கிறார்கள்.

மதுரையின் துணை கமிஷனர் ராஜ்கபூரின் ஏற்பாட்டில் ஹீரோவான சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் கடத்தல்காரராக நடிக்கிறார். ஒரு கான்ஸ்டபிளின் மகள் திருமணத்தன்று அந்தக் கல்யாண மண்டபத்தில் மணமக்களோடு மேலும் சிலரை பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்துக் கொண்டு 1 கோடி ரூபாய் கேட்டு நாடகத்தைத் துவக்குகிறார் அகிலன். ஆனால் போகப் போக அது ஒரிஜினல் கடத்தலாகிறது. போதாக்குறைக்கு ராஜ்கபூரின் மகளையும் பிணைக் கைதியாக்கிக் கொள்கிறார் அகிலன். 10 நிமிடத்தில் முடிந்துவிடும் என்று நினைத்த இந்த கடத்தல் நாடகம் இரவு வரையிலும் நீடிக்க ஒரு பக்கம் மீடியாக்கள்.. இன்னொரு பக்கம் உயரதிகாரிகள்.. இவர்களைச் சமாளித்து எப்படி இந்தக் கடத்தல் நாடகத்தை சுமூகமாக முடிக்கிறார்கள் என்பதுதான் படம்..!

தயாரிப்பாளர் சரவணன் தான் ஹீரோவாக நடித்ததற்குப் பதிலாக வேறு பெரிய ஹீரோக்களை வைத்து, கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுத்திருந்தால் நிச்சயமாக பெரிய அளவுக்குப் பேசப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு கதையில் ஒரு நம்பகத் தன்மையும், வித்தியாசமும் இருக்கிறது.. இப்படிச் செய்திருந்தால் ஒரு சிறந்த புதுமுக  தயாரிப்பாளர் என்ற பெயராவது சரவணனுக்குக் கிடைத்திருக்கும்..!


நடிப்பென்று பார்த்தால் யாருக்குமே பெரிய ஸ்கோப் இல்லை. அகிலன் இன்னமும் போக வேண்டிய பாதையும், கற்றுக் கொள்ள வேண்டியதும் நிறைய இருக்கு.. அம்ரீத் என்ற புதுமுகம் ஹீரோயின். ஹீரோவுக்கே ஸ்கோப் இல்லைன்னும்போது, அம்மணிக்கு என்ன இருந்திரப் போகுது..? வழக்கம்போல் ஹீரோவின் உதவும் கணத்தைப் பார்த்தவுடனேயே கண்ணில் லவ்வைக் காட்டிவிட்டு, பாடல் காட்சிகளிலும் ஆடிவிட்டு தனது பணியைச் செவ்வனே செய்திருக்கிறார்..!

கல்யாண மண்டபத்தில் சிங்கம்புலி கொஞ்சம் காமெடி செய்து உதவியிருக்கிறார். கஞ்சா கருப்பு, போண்டாமணி காமெடியெல்லாம் 1980-களிலேயே பார்த்து, பார்த்து சலித்துப் போன விஷயம்..! ஒரே ஆறுதல் ராஜ்கபூரின் அலட்டல் இல்லாத நடிப்பு..! இந்தப் படத்தில் சவுண்ட்விடாமலேயே வந்து போயிருக்கிறார்..! டிஜிட்டல் உதவியால், உள்ளூரிலேயே ஷூட்டிங்கை வைத்து, நடிகர், நடிகையர்களுக்குக்கூட சர்வீஸ் அபார்ட்மெண்ட்டை வாடகைக்கு எடுத்து முடிந்த அளவுக்கு சுருக்கமாக எடுத்திருக்கிறார்கள். 

ஒரு கடத்தல் விஷயம் என்றால் அதில் கொஞ்சமாவது பரபரப்பு வேண்டாமா..? அகிலன் திடீரென்று மனம் மாறுவதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. அவர் மனம் மாறுவது அவரது வேலைக்கே உலை வைக்கிற விஷயம் என்பது தெரிந்தும் அவர் செய்வாரா..? வழக்கம்போல போலீஸை எவ்வளவு காமெடியாக காட்ட வேண்டுமோ அத்தனையையும் காட்டியிருக்கிறார்கள்.  

பல இடங்களில் லாஜீக் மீறல்.. காட்சிகளின் முன், பின் தவறுதலான சேர்க்கைகள்.. ஒரு காட்சிகூட மனதில் ஒட்டாத அளவுக்கு இருக்கும் லைட்டான இயக்கம்.. வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் பாடல் காட்சிகள்.. ஒரு புதுமுக நடிகரின் படத்தில் இருக்கக் கூடாத அத்தனையையும் வைத்துக் கொண்டு பெரிய படம் போல் காட்டியிருக்கிறார்கள்..! வேறென்ன சொல்ல..? 

திரு.சரவணன் அடுத்து தானே நடிக்காமல் ஒரு நல்ல இயக்குநரின் உதவியோடு  தயாரிப்புப் பணியை மட்டும் செய்தால், இத்திரையுலகம் நிச்சயம் அவரை அரவணைக்கும்..!

கோழி கூவுது - சினிமா விமர்சனம்

28-12-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தாண்டின் இறுதியில் தமிழ்ச் சினிமாவிற்குக் கிடைத்திருக்கும் மற்றுமொரு குறிப்பிடத்தக்க படம் இது..! அட்டக்கத்தியை போன்றே இந்த கோழி கூவுது-ம் ஒரு காதல் கதைதான்.. ஆனால் முன்னது நகரம் சார்ந்தது.. பின்னது முழுக்க, முழுக்க கிராமியத்தனம் சார்ந்தது..!

நீங்கள் ஏற்கெனவே பார்த்த அதே சலிப்பான காதல்தான் என்றாலும், அது தோன்றுகின்ற விதம், காதலர்களுக்குள் ஏற்படுகின்ற ஈர்ப்பு, அது காதலாக மாறுகின்ற தருணம், காதலுக்கு எப்போதும் வரும் எதிர்ப்பு.. காதலர்களின் பரிதவிப்பு.. இது அனைத்துமே இந்தப் படத்திலும் உண்டு.. ஆனால் புதிதாக..!


கோழி விற்கும் சாதாரணமானவனுக்கும், ஊர்ப்பணக்காரரின் மகளுக்குமான காதலுக்கு எதிர்ப்பு ஜாதி, மதம் கடந்தும் தனி நபரின் விருப்பு வெறுப்பையும் தாண்டி பாசத்தால் முதலில் நிராகரிக்கப்பட்டு பின்பு ஏற்கப்படுவதுமாக அமைத்திருக்கும் திரைக்கதைதான் இப்படத்தின் சுவாரஸ்யம்..!

கோழிகளில் இத்தனை வகைகள் உண்டு என்பதை இப்படத்தை பார்த்தும் தெரிந்து கொண்டேன்..! ஏதோ மேம்போக்காக கோழி விற்பவன் என்று சொல்லாமல் கோழி தொழிலின் அத்தனையையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். செய்வது திருட்டுத் தொழில் என்றாலும், அதனை செய்வதற்கு அதில் ஈடுபட்டுள்ள அனைவருக்குமே ஒரு காரண, காரியங்கள் இருக்கின்றன என்பதையும் ஒளிவுமறைவில்லாமல் திரைக்கதையில் விளக்கியிருக்கிறார் இயக்குநர்..!


தன் முந்தைய 2 படங்களைவிடவும் இதில் அதிகமாகவே நடித்திருக்கிறார் அசோக். ஹீரோயின் இந்தத் தொழிலை கைவிடும்படி சொன்னதும், அதற்கு அவரிடம் இருக்கும் நியாயங்களைச் சொல்லும் அசோக்கின் நடிப்பு அதனை ஏற்றுக் கொள்ள வைக்கக் கூடியதாகவே இருந்தது.. சின்ன சின்ன விஷயங்களில்.. ரியாக்ஷன்களில், காமெடி டெலிவரிகளில் அசத்தியிருக்கிறார். ரோகிணியிடம் தன் காதலை நியாயப்படுத்தி பேசுகின்ற காட்சியில் யாருமே அதற்குப் பின் பேச முடியாத அளவுக்கு தன் கருத்தை அழுத்தமாக பதிவு செய்வது போன்ற அவரது நடிப்பு ஓகே..! 


ஹீரோயின் ஸ்ரீஜாரோஸ்.. வழக்கம்போல கடவுளின் தேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறார். பெயருக்கேற்றார்போல் ரோஸ் கலரில் அநியாயத்திற்கு அழகாய் இருக்கிறார்..! 


பரந்து விரிந்திருக்கும் அந்தக் கண்கள் மூலமாக அவர் காட்டியிருக்கும் ரியாக்ஷன்கள்.. ஆக்சன்கள்.. கொஞ்சல்கள்.. கெஞ்சல்கள்.. அத்தனையும் இயக்குநருக்கு போனஸ்..! பாடல் காட்சிகளிலும், குளியல் காட்சிகளிலும் முகத்திற்கு இத்தனை குளோஸப் வைத்து ஒளிப்பதிவாளரும் தன் பங்குக்கு அழகை ஆராதனை செய்திருக்கிறார்..! 


அந்த சிவந்த அதரங்களும், சலிப்படைந்த முக பாவனைகளும், சிரிக்கின்ற காட்சிகளில் குழி விழுந்த கன்னங்களின் அபாயகரமான அழைப்பும்.. சொக்க வைத்தது என்றால், நடிப்பிலும் அம்மணி சோடை போகவில்லை.. தன்னை ஏமாற்றிவிட்டு சென்ற அசோக்கை ஓரிடத்தில் பார்த்தவுடன் அவருடைய முகம் காட்டிய பாவனையை மறக்க முடியவில்லை..! 


இதே பொண்ணைத்தான் பிற்பாதியில் பல இடங்களில் கதறி அழுக வைத்து நடிக்கவும் வைத்திருக்கிறார்கள்..! அந்த பால்கோவா முகத்தில் கண்ணீர்க் கோடுகள் மேலிருந்து கீழிறங்கி ஓடுவதைக்கூட குளோஸப்பில் காட்டி நம் சாபத்தையும், கோபத்தையும் சம்பாதித்திருக்கிறார் இயக்குநர்.. புன்னகை இளவரசிக்கு போட்டியாக இன்னொரு இளவரசி கிடைத்திருக்கிறார்..! இவருக்கு சரியான கைட்லைன்ஸ் கிடைத்தால் நிச்சயம் பெரிய ரவுண்ட் வரலாம்..! 

என் பார்வையில் இந்த ஹீரோயினான ரோஸ், கடைசி நேரத்தில் அறிமுகமாகியிருந்தாலும் இந்த ஆண்டு அறிமுகமான ஹீரோயின்களில் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இரண்டாமிடத்தை லட்சுமி மேனனும், மூன்றாமிடத்தை கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் ஹீரோயின் நந்திதாவும் பெறுகிறார்கள்..!


படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொருவர் நரேன்..! தான் பெற்ற பிள்ளையை மனைவியின் இறப்பு காரணமாகவும், ஜோஸியக்காரன் சொன்னான் என்பதற்காகவும் 18 ஆண்டுகள் தனியாக வைத்திருந்து வளர்த்த சோகத்தை உணர்ந்த ஒரு தந்தையின் உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறார்.. எப்போதும் கோபத்துடன் கேமிராவை பார்த்தே பேசிப் பழகியிருக்கும் நரேனுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு சவால்தான்.. தன் மகளுக்கும், தனக்குமான பாசப் போராட்டத்தை அவர் விவரிக்கும் அந்த நீண்ட காட்சியில் இயக்குநரையும் மீறிய ஒரு தனி பாணி வெளிப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது.. தன் மகளின் சந்தோஷமே தனக்கு முக்கியம் என்பதை அவர் அழுத்தமாகச் சொல்லும் காட்சியிலும், ரோகிணியிடம் அவ்வளவு பிரச்சினையிலும் பணிவாகப் பேசும் அந்தப் பக்குவமும் ரஞ்சித்தின் சிறந்த இயக்கத்தைக் காட்டுகிறது..!


ரோகிணியின் அந்த மனமாற்றத்திற்கு முன்புவரையிலுமான அவரது நடிப்பு சரண்யா பொன்வண்ணனுக்கு சரியான போட்டி என்றே சொல்ல வேண்டும்..! அசோக்கின் காதலை மறுத்து அவர் பேசுகின்ற காட்சியும், போஸ் வெங்கட்டை எச்சரிக்கும் காட்சியிலும் அசத்தியிருக்கிறார்..! போஸ் வெங்கட் இனிமேல் சீரியல்கள் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க மாட்டேன் என்று வீர சபதம் போட்டு அதில் உறுதியாகவே இருக்கிறார். அதற்கு இந்தப் படம் இன்னும் கொஞ்சம் உரம் போட்டு உறுதியாக்கியிருக்கிறது..!


போஸ் வெங்கட்டின் மிக முக்கிய படங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது..! இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.. அனைத்து காதல் திரைப்படங்களிலும் வில்லனை காதலுக்குத்தான் எதிரியாக காட்டுவார்கள்.. இதில் தனி மனிதனின் ஈகோவை முன்னிறுத்திக் காட்டிவிட்டு, தனது குடும்ப நலனுக்காக, அண்ணனுக்காக தானும் விட்டுக் கொடுக்கும் ஒரு தம்பியாக இறுதியில் காட்டியிருப்பது வித்தியாசம்தான்..! முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் தனது அண்ணன் மேல் மரியாதை வைத்திருப்பவர்.. அவருடைய பேச்சுக்குக் கட்டுப்படுபவர் என்பதை பல காட்சிகளில் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருப்பதால், காதலர்களைத் தேடியலையும் அந்தக் காட்சியிலும், கிளைமாக்ஸிலும் போஸின் நடிப்பு குறை சொல்ல முடியாதது..!

புதுமுக இசையமைப்பாளர் ராம்தாஸின் இசையில் வாடாமல்லிக்காரி பாடல் அசத்துகிறது..! அதேபோல் இந்தப் பாடலின் காட்சிகளும் ரசனையோடு படமாக்கப்பட்டுள்ளது.. 


வீட்டின் கூடத்தில் பாவாடை, தாவணியில் கோழிக் குஞ்சைக் கையில் தூக்கி வைத்துக் கொண்டு ஹீரோயின் காட்டும் அந்த எக்ஸ்பிரஷன்.. ம்.. சூப்பர்..! அதேபோல் சாரப் பாம்பு போல பாடலும் இனி எஃப்.எம்.களில் அதிகம் ஒலிக்கப்படும் என்று நினைக்கிறேன்..!  

படத்தின் இரண்டு கதாபாத்திரங்கள் இரு பக்கமும் முக்கியத் தூணாக இருக்கின்றன. ஒரு பக்கம் ஹீரோயினின் பாட்டியாக ஜோதிலட்சுமி. மறுபக்கம் ஹீரோவுக்கு வேலை கொடுத்திருக்கும் முதலாளி மயில்சாமி..! இருவருமே ஆளுக்கொரு பக்கமாக இறுதியில் நியாயம் பேசுகிறார்கள்.. அதிலும் உணர்ச்சியோடு.. ஜோதிலட்சுமி இப்படி நடிப்பை 'மட்டுமே' காட்டி எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும்..? 

கிளைமாக்ஸில் ஹீரோயின் அசோக்கை தேடி வரும் காட்சி மட்டும், கொஞ்சம் நெருடலே தவிர.. மற்றபடி இந்தப் படத்தில் எந்தத் தவறையும் என்னால் சுட்டிக் காட்ட முடியவில்லை..!  பார்த்த விஷயத்தையே, பார்க்காத கோணத்தில், நியாயமான காரணங்களோடு, சிறந்த இயக்கத்தோடு கொடுத்தாக வேண்டு்ம் என்கிற கட்டாயம் காதலை இயக்கும் இயக்குநர்களுக்கு உண்டு. அந்த வரிசையில் அட்டக்கத்தி ரஞ்சித்திற்கு போட்டியாக இன்னொரு ரஞ்சித் இன்றைக்கு உருவாகியிருக்கிறார்..! 

இந்தப் படம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே தயாராகி பல முறை ஸ்பெஷல் ஷோ போட்டுக் காண்பிக்கப்பட்டிருந்தது.. படத்தை கடைசியாக வாங்கி டிங்கரிங் வேலை செய்து வெளியிட்ட லண்டனைச் சேர்ந்த அந்த தொழிலதிபருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..! இது போன்ற படங்களை ஆதரிப்பது, சினிமா ஆர்வலர்கள், மற்றும் ரசிகர்களுக்கு முதலாளிகள் செய்யும் தொண்டாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த லண்டன் முதலாளியும் மிகுந்த தைரியமானவர். பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த டீமை போட்டு புரட்டி எடுத்துவிட்டார். “நான் இந்த பிராஜெக்ட்டுக்குள் கால் வைத்தவுடனேயே செய்த முதல் வேலை படத்தின் பி.ஆர்.ஓ.வை தூக்கியதுதான்..” என்று ஓப்பன் மைக்கில் சொன்னபோது பத்திரிகையாளர்களே அசந்துவிட்டார்கள். “அந்த டீமுக்குள் இருந்த ஈகோ பிரச்சனை.. ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் ஒரு வாரத்தில் சரி செய்து இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும்வரையிலும் சொந்தப் படம்போல உழைக்க வைத்தேன்” என்றார். இந்தத் தொழிலதிபர் தொடர்ந்து படங்களை தயாரித்தால் நன்றாகத்தான் இருக்கும்..! 

இன்றைக்கு ரிலீஸ் ஆகியிருக்கும் படங்களில் இந்த ஒன்று மட்டுமே தேறியிருக்கிறது என்பதால், கடைசி நேரத்தில் வந்திருக்கும் இதுவொரு வெற்றிப் படமாகவும் அமையட்டும் என்று வாழ்த்துவோம்..  படத்தின் ஹீரோயினுக்காகவே நான் இன்னும் 3 முறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்..! நீங்க..????

சென்னை உலகத் திரைப்பட விழாவும், நானும்..!

24-12-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பார்த்து வந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவை இந்தாண்டு முழுமையாக பார்க்க முடியாதது எனது துரதிருஷ்டம். ஜெயா டிவியில் வேலையில் இருந்தபோதுகூட முன் அனுமதி பெற்று தினமும் படங்களை பார்த்து வந்தேன். சென்ற ஆண்டு நான் இருந்த புதிய தலைமுறை டிவியில் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் வழங்கி கெளரவித்திருந்தார்கள். இந்தாண்டு வேலை பார்க்கும் நிறுவனத்தில் கேட்டால் “லெட்டரை கொடுத்துவிட்டு வீட்டுக்கே போயிரு”ன்னு பதில் வரும் என்பதை நானே ஊகித்துக் கொண்டு, எனது அறிவுத் திறமையாலும், புத்திக் கூர்மையாலும் வேலையைக் காப்பாற்றிக் கொண்டு உலக சினிமாவை கைவிட்டுவிட்டேன்..!

57 நாடுகளைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட படங்கள் என்று அட்டவணையில் சொல்லப்பட்டாலும் சில திரைப்படங்கள் மூன்று முறை மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வராத திரைப்படங்களின் நேரத்தையும், எண்ணிக்கையையும் ஈடுகட்டின என்பதையும் சொல்ல வேண்டும்..! மாசிடோனியா, உருகுவே, தஜிகிஸ்தான், கஜகஸ்தான், சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகளும் இந்தாண்டு சென்னை உலக சினிமா ரேஸில் கலந்து கொண்டிருக்கின்றன..! 

ஆனாலும் ஒரு பத்திரிகையாளனாக.. கடமையுணர்ச்சியுள்ள  பணியாளானாக துவக்க விழாவுக்கு சென்றிருந்தேன்.. எங்கோ தப்பித் தவறி வெளிநாட்டுக்கு வந்துவிட்டோமோ என்ற பீலிங்கிற்கு கொண்டு போய் விட்டன அரங்கேறிய நிகழ்ச்சிகள்..! நடப்பதோ சினிமா பற்றியது.. வாய்ப்பாட்டு, கஜல் பாட்டு, ஹிந்துஸ்தானி மியூஸிக், உலக இசையமைப்பாளர் ரஹ்மானின் புதல்வனின் பியானோ இசை என்று ஏதோ டிசம்பர் மாத இசைக் கச்சேரிக்கு வந்ததுபோல இருந்தது..! 


மாநில அரசிடமிருந்து 50 லட்சம் ரூபாயை சுளையாக வாங்கியிருந்த காரணத்தினால் அம்மா புகழ் பாட ஒரு அடிமையை வரவழைத்திருந்தார்கள். செய்தித் துறை அமைச்சர் என்று சொல்லிக் கொண்ட அவர், “இத்தனை சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும்” என்று கட்சி மீட்டிங்கில் புழங்குவதுபோல முழங்கித் தள்ளி நீட்டி நெடித்து, முடிக்கும்போது யாருக்குமே கிடைக்காத கைதட்டலை அள்ளிக் கொண்டு போனார். தான் மட்டுமே சிறப்பாக பேசியதாக அவர் நினைத்திருப்பாரோ என்னவோ.. அப்படியொரு சந்தோஷம் மனுஷனுக்கு சீட்டுக்கு திரும்பும்போது..!

எப்போதும் மேடைப் பேச்சுதான் அவதிப்படும். அன்றைக்கு தமிழ்த்தாய் வாழ்த்தே பெரும் அவதிப்பட்டது..! அதிலும் சர்ச்சை நாயகன் அமீரினால்..! “தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் இந்த நிகழ்ச்சியைத் துவங்கியதே தப்பு.. தமிழிலும் சில நிகழ்ச்சிகளை வைத்திருக்கலாம்..” என்று ஆலோசனையை குற்றச்சாட்டாகவே வைத்துவிட்டுப் போனார்..!

பஞ்சாயத்துக்கே நாட்டாமையாகத் திகழும் சரத்குமார் தன் பேச்சின்போது இதற்கு தீர்ப்பு சொல்கிறேன் பேர்வழி என்று திடுதிப்பென்று தன் பேச்சின் ஊடேயே  “நான் இப்போ தமிழ்த் தாய் வாழ்த்து பாடுறேன்..” என்று சொல்லிவிட்டு பாடத் துவங்க.. அப்போதுவரையிலும் தூங்கிக் கொண்டிருந்த சிலரை எழுப்பி எழுந்திருக்க வைப்பதற்குள் பாடலே முடிந்தவிட்டது.. தமிழ்த்தாய் பாடிக் கொண்டிருந்தபோது அரங்கத்தின் பல மூலைகளில் இருந்தும் செல்போனில் ரிங்குகள் தொடர்ந்து கொண்டிருந்ததும், இந்த விழாவின் ஒரு சிறப்பம்சம்..! அரசியல்வியாதிகள் எங்கே, எதைத் தொட்டாலும் சர்வநாசம் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம்..!


எங்கும், எல்லாமும் அம்மா மயத்துடன் துவக்கப்பட்ட இந்த விழாவின் துவக்க நாள் படத்தை பார்க்க முடியாத அளவுக்கு வீட்டு வேலைகள் இருந்ததால் அடியேன் பறந்துவிட்டேன்..! ஆனாலும் கிடைத்த கேப்பில் அடுத்த ஞாயிறன்று மட்டும் 4 படங்களை பார்க்க நேர்ந்தது..! மற்ற நாட்களில் கால்வாசி படம், முக்கால்வாசி படம், அரைவாசி படமாகவே சிலவற்றை பார்க்க முடிந்தது..! எனது கலையுலக வாழ்க்கையில் மிக மோசமான நாட்களாக இவற்றை நினைக்கிறேன்..!

KUMA (Austria), The Taste of Money (south Korea), Paradaise Love (Austria), Mystery (China) என்று பார்த்த படங்கள் நான்கும் நான்கு வகை.. இதில் பாரடைஸ் லவ் படத்தின் போது தமிழ் மக்களின் உலக சினிமா ஆர்வம் எதற்கு என்று புரிந்தது..! திரையில் ஓடிய கில்மா சீன்களுக்கெல்லாம் “ஓ” என்று கத்தி தங்களது புல்லரிப்பைக் காட்டியவர்கள், அவ்வப்போது அக்கம்பக்கம் அமர்ந்திருக்கும் பெண்களின் முகத்தையும் உற்று உற்றுப் பார்த்து மகிழ்ந்தார்கள்..! இதுகூட செய்யலைன்னா தமிழன்னு யாராவது ஒத்துக்குவாங்களா..? இந்த மாதிரி படத்தையெல்லாம் எவன் உலக சினிமால சேர்த்தான்..? சேர்க்கணும்..? பட்டவர்த்தனமான ஆபாசப் படம் இது..! அத்தோடு நிறவெறி, இனவெறியான வசனங்கள், காட்சியமைப்புகளோடு அதிர்ச்சியடையவே வைத்தது..!

உலக சினிமாக்களில் இரண்டே வகைதான்.. ஒன்று பாலியலுடன் சொல்லப்படும் உலக சினிமா. இன்னொன்று அது இல்லாமலேயே சொல்லப்படுவது.. இல்லாமலேயே சொல்லப்படுவதில் ஈரானிய திரைப்படங்கள்தான் சிறப்பானவை.. அவற்றுக்கு ஈடு அவைகள்தான்.. ஆனால் பாலியலையும் சேர்த்தே தூக்கிக் கொண்டு அலையும் திரைப்படங்களை பார்க்கத்தான் இங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது..! பாலியல் வறட்சி நாட்டில் எந்தத் திசை பார்த்தாலும் தென்படுகிறது என்பதை இது போன்ற படக் காட்சிகளிலும் காண முடிகிறது..! 

'கிளிப்' என்ற செர்பிய படத்தின் கில்மா காட்சிகளுக்காகவே “ஒன்ஸ்மோர்” என்று கத்திய ரசிகர்களெல்லாம் இங்கே வந்திருந்தார்கள் என்றால் என்னத்த சொல்ல..? இந்தப் படத்தை பொறுமையாகப் பார்த்துவிட்டு வெளியேறிய ஜென்டில்மேனான வில்லன் நடிகர் மன்சூரலிகான்.. “நடிகை சுஹாசினி பொறுப்பில் இருக்கும் இது போன்ற விழாக்களில்  புளூபிலிம்களையெல்லாம் ஓட்டலாமா..?” என்று கண்டன அறிக்கைவிட.. மறுநாள் போடுவதாக இருந்த அந்தப் படத்தின் இரண்டாவது ஒளிபரப்பு “தொழில் நுட்பக் காரணங்களினால்” திரையிடப்பட முடியாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. மன்சூரலிகான் என்னை மாதிரி ஆர்வத்துடன் தியேட்டருக்கு ஓடி வந்த பயபுள்ளைகளுக்கு நிசமாவே வில்லனாயிட்டாரு..! இவருக்கெதுக்கு இந்த வேலை..?

நடிகர் சிவகுமார், கேமிராவுமன் விஜயலட்சுமி, இயக்குநர் சற்குணம் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் டீம், போட்டிக்கு வந்த தமிழ்ச் சினிமாக்களை பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்..! ராணி சீதை ஹாலில் அட்டகாசமான ஒரு வெள்ளை ஸ்கிரீனை விரித்து வைத்து அதில் படங்களை ஒளிபரப்பி படம் பார்க்க வந்தவர்களைவிடவும், ஜட்ஜ்களை நோகடித்துவிட்டார்கள் விழா அமைப்பாளர்கள். பிலிம்களை தியேட்டர்களுக்கு வழங்க முடியாத சூழல் என்பதால் பொறுத்துக்குங்க என்று சொல்லிவிட்டதால், ஒளிப்பதிவை வைத்து மார்க் போடாமல் கதையை மட்டும் பார்த்து தேர்வு செய்திருப்பதாக நாம் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்..!

திருட்டு டிவிடியில்கூட கிடைக்காத ‘ஆரண்யகாண்டம்’ திரைப்படத்தை காண ராணி சீதை ஹாலில் கட்டுக்கடங்காத கூட்டம். கூட்டத்தைப் பார்த்து பயந்துவிட்டார்கள் ஏற்பட்டாளர்கள். இதனால் அன்றைக்கு திரையிடப்படவில்லை..! மறுநாள் உட்லண்ட்ஸ் தியேட்டரில் திரையிட்டார்கள். கூட்டம் அள்ளியது..! எப்படிடா இதை இத்தனை நாளா மிஸ் செஞ்சோம் என்ற வருத்தம், படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்களின் முகத்திலேயே தெரிந்தது..! இந்தப் படத்தை இப்போ ரெண்டாவது ரவுண்ட்டா வெளியிட்டாலும் கூட்டம் பிச்சிரும்.. தயாரிப்பாளர் தன் ஈகோவை கைவிட்டுட்டு படத்தை ரிலீஸ் செய்ய முன் வருவாருன்னு நம்புறேன்..!

உலக சினிமா விழாவின் முக்கிய தியேட்டரான உட்லண்ட்ஸின் பாத்ரூம், டாய்லெட்டை பார்த்துவிட்டு உலக சினிமா இயக்குநர்களெல்லாம் அடுத்த முறை சென்னைக்கு வரவே கூடாது என்றுதான் நினைத்திருப்பார்கள்..! அவ்வளவு அழகாக இருந்தது..! இத்தனை செலவு செய்து விழா நடத்துபவர்கள் இதற்கு ஒரு வழியைச் செய்திருக்க வேண்டாமா..? ஒவ்வொரு வருடமும் இப்படி புலம்புவதே என்னைப் போன்ற சாதாரண ரசிகனின் வழக்கமாகிவிட்டது..! ஒரு அப்பாடக்கரான வெளிநாட்டவர் உச்சா போய்விட்டு கையைக் கழுவ தண்ணீர் இல்லாமலும், டிஸ்யூ பேப்பர் இல்லாமல் தேடி அலைபாய்ந்து, வெளியேயும் வந்து அங்கே, இங்கே என்று பார்த்து, பரிதவித்து.. கை நீட்டியவர்களிடத்தில் கை கொடுக்க மறுத்து சங்கடத்துடன் நின்றதையெல்லாம் காபியை குடித்தபடியே நான் ரசித்துக் கொண்டிருந்தது இந்த விழாவின் ஹைலைட் என்றே சொல்லலாம்..!

சென்ற முறை படம் துவங்கிய 15 நிமிடங்களுக்கு பிறகு ரசிகர்கள் யாரும் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று விதிமுறையைக் கொண்டு வந்து கொடுமைப்படுத்தினார்கள். கில்மா சீன் ஓடிட்டிருக்கும்போது ஒருத்தர் குறுக்கால புகுந்து அந்த வரிசைக்கு போறதா.. இந்த வரிசைக்கு போறதான்னு யோசிச்சுக்கிட்டு நிப்பார் பாருங்க.. அப்பத்தான் கடுப்பே வரும்..!  அந்தக் கடுப்புக்கு இது சந்தோஷமாத்தான் இருந்தது..! ஆனா ஒரு சிலருக்குக் கோபம். “அவனவன் அரக்கப் பறக்க ஆபீஸுக்கு டிமிக்கி கொடுத்திட்டு வர்றான்.. இங்க வந்தா, உள்ள வுட மாட்டீங்களா..? கூட்டுடா பஞ்சாயத்தை..” என்று சென்ற முறையே ரத்தம் வராத அளவுக்கு சண்டையெல்லாம் நடந்திருந்தது.. அதனால், இந்த முறை சத்தமில்லாமல் அதனை தூக்கிவிட்டு எப்படியோ போய்த் தொலைங்கன்னு விட்டுட்டாங்க.. 

இன்னமும் நம்ம மக்கள்ஸ் சில பேரு நாகரிகத்தைக் கத்துக்கிடலையே..? ஒரு குண்டூசி சப்தம்கூட இல்லாமல் அமைதியா போய்க்கிட்டிருக்கும்போது மனசு முழுக்க படத்துக்குள்ள இருக்கும்போது, பின்னாடியோ முன்னாடியோ எவனோ ஒருத்தன் செல்போன்ல குசுகுசுன்னு பேசிக்கிட்டேயிருக்கான்..! எல்லா படத்துலேயும் எனக்கு இந்த அனுபவம் கிட்டியது.. செல்போனை பொண்டாட்டி மாதிரி பாவிக்கணும்னு இந்தப் பயபுள்ளைகளுக்கு தெரியலை.. இந்தியன் பனோரமாவின் ஒரு படத்தை திரையிட்ட போது அதன் இயக்குநரும் வந்திருந்தார். நம்மாளுகளோட செல்போன் அலம்பலை பார்த்து ரொம்பவே டென்ஷனாயிட்டாரு மனுஷன். கூடவே கடைசி நிமிஷத்துல படம் முடியறதுக்குள்ள லைட்டையும் போட்டு மக்களை வெளிய போன்னு சொல்லிட்டாங்க.. அந்த இயக்குநர் தொண்டை கிழிய கத்தி குமிச்சிட்டாரு..! ஆனாலும் கொஞ்ச நேரம் கழிச்சு கூலாகி அந்தப் படத்தை எப்படியெல்லாம் எடுத்தேன்றதை அரைமணி நேரமா சோப்பு போட்டு விளக்கிட்டுத்தான் போனாரு..!

வாலண்டியரா வந்து மாட்டின அடிமைகளா இந்த வருஷம் சிக்கினவங்க நியூ காலேஜ் பசங்க..! போன தடவை மாணவிகளையும் சேர்த்திருந்தாங்க.. ஆனாலும் நம்மாளுக கில்மா படம் போடும்போதெல்லாம் அந்தப் புள்ளைகளையும் சேர்த்து ராகிங் செய்து வைக்க.. இந்தத் தடவை பசங்களே போதும்னு முடிவு பண்ணிட்டாங்களாம்..! பயலுக பாவம்.. வாங்கிக் கொடுத்த டிபனுக்கும், மதியச் சோத்துக்கும், ராத்திரி குருமாவுக்கும் மேலேயே வேலை பார்த்து ஓய்ஞ்சுட்டாங்க.. இந்தப் பசங்க எடுத்த சில குறும்படங்களை கடைசி நாள் அன்னிக்கு அமிதாப் முன்னாடி திரையிட்டாங்க.. இருந்தாலும் தமிழ்ச் சினிமா பத்தி இல்லாம, பர்மா பஜார் டிவிடி கடைகள், சென்னை நகரம் பற்றி எடுத்திருந்தது ஒரு குறைதான்..!

கடந்த 9 வருஷமா உலகத் திரைப்பட விழால முன்னாடி நின்னுக்கிட்டிருந்த நடிகர் எஸ்.வி.சேகரை இந்த வருஷம் சுத்தமா காணோம்.. இவர்தான் இந்த அமைப்பின் துணைத் தலைவரும்கூட.. இப்போ இருக்காரா..? இல்லை சத்தமில்லாம தூக்கிட்டாங்களான்னு தெரியலை.. ஆனா சுஹாசினி தலைமைல பூர்ணிமா பாக்யராஜ், லிஸி, ரோகிணி, பாத்திமா பாபு, மோகன், மனோபாலா, ஷைலஜா, டாக்டர் ஷர்மிளா, டிவி நடிகர் ராகவ், அவர் மனைவி, மற்றும் சில பிரபலங்களெல்லாம் சேர்ந்து வாலண்டியரா வொர்க் பண்ணியிருக்காங்க.. அத்தனை பேருமே திரைப்பட விழாவின் யூனிபார்மை போட்டுக்கிட்டு 7 நாளும் அரங்கத்தை வளைய வந்தது மிகப் பெரிய விஷயம்..! 

கடைசி நாள்ல அமிதாப்பச்சன் வர்றாருன்றதால ரொம்பவே டென்ஷனா இருந்தாங்க மக்கள்ஸ்.. லோக்கல் கேபிள் சேனலுக்குக்கூட அழைப்பு கொடுத்திருந்ததால 30 டிவி சேனல்ஸ் கேமிராவோட வந்து நின்னுட்டாங்க.. பார்வையாளர்களுக்கு நடுவுல அவங்க ஸ்டேண்ட் போட.. பின்னாடியிருந்த மக்கள்ஸ் எழுந்து வந்து கத்த.. செம கலாய்ச்சலாத்தான் இருந்தது..!


செம பந்தாவா பென்ஸ் கார்ல வந்திறங்கிய அமிதாப்ஜியை ஓயிலாட்டம், மயிலாட்டம் குழுவினர் ஆடி, ஆடி வரவேற்றனர்.. காரில் இருந்து இறங்கியதுமே அவர்களைப் பார்த்து திரும்பி கையசைத்துவிட்டுத்தான் படியேறினார் அமிதாப்.. என்ன வேகம்..? என்ன வேகம்..? நம்ம சூப்பர் ஸ்டாருக்கு பின்னாடி இம்புட்டு ஸ்பீடா நடக்குறது இந்த இளைஞர்தாங்க..! மகளிரணியினர் கையில் விளக்கேந்தி அமிதாப்பை வரவேற்றாலும், அதனை ரிசீவ் செய்யக்கூட முடியாத அளவுக்கு தள்ளுமுள்ளில் மாட்டிக் கொண்டார் அமிதாப்..!


இப்போதைய தொகுப்பாளர் உலகத்தின் சூப்பர் ஸ்டாரினி ரம்யாவும், பார்த்திபனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாங்க.. உலக சினிமான்னு சொல்லிட்டு சினிமா பத்தின நிகழ்ச்சியையோ, தமிழ்ச் சினிமா பற்றிய விஷயத்தையோ சொல்லவே கூடாதுன்னு முடிவே கட்டிட்டாங்க..  அமிதாப்பை ராஜகம்பீரமாக உட்கார வைத்து அவருடைய படத்தின் பாடலை பாடியபடியே அவரை ஓவியமா வரைஞ்சாரு ஒரு கில்லாடி ஓவியர்.. நச்சுன்னு இருந்துச்சு.. அமிதாப் பார்த்து அதிசயித்து அவரை இழுத்து அணைத்துக் கொண்டபோது எதிர்பார்க்காத அரங்கம் அதிர்ந்தது..!


பார்த்திபன் ‘ஆக்ரி ராஸ்தா’ ஷூட்டிங்கில் பாக்யராஜிடம் அஸோஸியட்டாக பணியாற்றியதை அமிதாப்பிடம் குறிப்பிட்டு, அதில் பாக்யராஜ் எப்படி அரைகுறை ஆங்கிலத்தில் அமிதாப்பிடம் காட்சிகளை விளக்குவார் என்பதை அவர் ஸ்டைலில் சொன்னது மட்டுமே மேடை தொகுப்பில் உருப்படியான விஷயம்.. 

12 தமிழ்ப் படங்களில் வெற்றி பெற்ற படங்களுக்கு விருது கொடுக்கும்போது யாருக்கு, யார் விருது கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் விட்டதால், ஒவ்வொரு முறையும் பக்கத்தில் இருந்து ஹிந்து ராமிடம், “நானா..? நீங்களா..?” என்று கேட்டுவிட்டு எழுந்து, எழுந்து நின்ற அமிதாப்பின் பக்குவமான குணம் வெரி நைஸ்..! இதுல வெற்றி பெற்ற படங்களை பற்றிய கதைச் சுருக்கத்தை ஆன் தி ஸ்பாட்டில் சுஹாசினி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அமிதாப்புக்கு சொன்னதும், அடுத்த படங்களுக்கு அவர் அருகில் காதோரம் போய் மொழி பெயர்த்ததும் இது தமிழ்நாட்டில் நடக்கும் விழா என்பதை சொல்லாமல் சொல்லியது..!


“வணக்கம். என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தமைக்கு நன்றிகள். எனக்கு இவ்வளவுதான் தமிழ்ல பேசத் தெரியும்..” என்று எழுதிக் கொடுத்ததை குனிந்த தலை நிமிராமல் சொன்னபோது  பச்சன்ஜியை ரொம்பவே புடிச்சுப் போச்சு.. மனுஷன் ரொம்ப அடக்கமாத்தான் இருக்காரு..! தர்மேந்திராவைவிடவும் அமிதாப் ஏன் இந்தியால அதிகமா தெரிஞ்சிருக்காருன்னா இதுதான் காரணம் போலிருக்கு..!


கூடவே தன் பேச்சில் நெகிழவும் வைத்தார் அமிதாப். அடுத்தடுத்த வருடங்களிலும் தன்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தால், பேப்பர் பொறுக்கிப் போடுறது.. மேடைல சேர் எடுத்துப் போடுறதுன்னு நிறைய சின்னச் சின்ன வேலைகளைச் செய்வேன்னு சொன்னப்போ சுஹாசினி மட்டுமே எழுந்து நின்று கை தட்டினார்..! வந்திட்டு சும்மா போனா நல்லாயிருக்காதுன்னு நினைச்சாரோ என்னவோ 11 லட்சம் ரூபாயை தானமாவும் கொடுத்திட்டுப் போனாரு அமிதாப்ஜி.. வாழ்க அமிதாப்ஜி.. இந்தக் காசை வைச்சு தாஜ் கோரமெண்ட்டல்ல அன்னிக்கு நைட்டே தண்ணி ஆறா ஓடுனதா கேள்விப்பட்டேன்..! சரி.. பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்.. நமக்கென்ன..? அடுத்த வருஷமாச்சும் இந்த 11 லட்சத்துல உட்லண்ட்ஸ் பாத்ரூமை கிளீன் பண்ணி வைச்சுத் தொலைஞ்சா நல்லாயிருக்கும்..!

அது மட்டுமில்லே.. இந்த நிகழ்ச்சிக்கு அமிதாப் தனது தனி பாதுகாப்பு படையோடதான் வந்தார். அந்த லிஸ்ட்ல இருந்த 11 பேருக்கான விமான டிக்கெட்டுகள்.. அவர்களுடன் தானும் சேர்ந்து தங்கியிருந்த தாஜ் கோரமண்டல் ஹோட்டல் பில்.. அனைத்தையும் அமிதாப்ஜி தானே ஏற்றுக் கொண்டாராம்..! விழா குழுவினரிடம் எதற்கும் பைசா காசு வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டுத்தான் வந்தாராம்.. இவர் மானஸ்தன்யா..!!! சமீபத்துல அரசு கல்லூரிகள்ல பேசுறதுக்காக தமிழ் நட்சத்திர தம்பதிகளை மாணவர்கள் டீம் சந்தித்தது..! 3 லட்சம் கொடுத்தா வர்றோம்.. இல்லாட்டி நடையைக் கட்டுங்கன்னு பதில் வந்துச்சாம்..! நமக்குக் கொடுப்பினை அவ்ளோதான்..!

அன்னிக்குக் கடைசி படமும் பார்க்க முடியலை.. அவசரமா வீட்டுக்குக் கிளம்பினா வழக்கம்போல நம்ம அப்பன், கோவணான்டி அவன் வேலையைக் காட்டிட்டான்.. வண்டி மக்கர்.. ஸ்டார்ட்டிங் டிரபுள்.. உட்லண்ட்ஸ் பக்கத்து தெருவுல இருந்த கடைல காட்டி நாஸிலை கழட்டி சுத்தம் பண்ணி போட்டுட்டு கிளம்பினா மறுபடியும் நின்றுச்சு.. திரும்பவும் அதே கடைக்குத் தள்ளிட்டே வந்து பார்த்தா கடை மூடியாச்சு.. ராத்திரி 9 மணியாச்சு.. என்னடா இது சோதனைன்னு வழக்கம் போல புலம்பிக்கிட்டே ராயப்பேட்டைல இருந்து ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷன்வரைக்கும் வண்டியைத் தள்ளிக்கிட்டே போய் ஸ்டேஷன் வாசல்ல இருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர்கிட்ட  மெக்கானிக் கடை பத்தி விசாரிச்சு, அடுத்த 2 வது தெருல கொண்டு போய் கொடுத்து அந்த சாமிகிட்ட கால்ல விழுகாத குறையாத கெஞ்சி கூத்தாடி, நாஸிலை மாத்தின பின்னாடிதான் வண்டி ஸ்டார்ட் ஆச்சு..!

ச்சை.. போதும்டா சாமி..! ச்சும்மா கையை வீசிக்கிட்டு நடக்கிறதே கஷ்டம்.. இதுல வண்டியை வேற தள்ளிக்கிட்டே போகணும்ன்னா..! மவனே.. அந்த கோவணான்டி மட்டும் என் கைல சிக்கினான்.. கைமாதான்.. சொல்லி வைச்சிருங்க..! 

கும்கி - சினிமா விமர்சனம்

23-12-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடின உழைப்பும், அதையொட்டிய ஜீஸஸின் கருணையும் மட்டுமே தனது வெற்றிக்கு காரணம் என்று இயக்குநர் பிரபு சாலமன் எங்கேயும், எப்போதும் சொல்லி வருகிறார். ‘மைனா’வின் அசுரத்தனமான வெற்றியை பார்த்துவிட்டு அது போலவே கடின உழைப்பு செய்து இந்த ‘கும்கி’யை வெளிக்கொணர்ந்திருக்கிறார்..! ‘மைனா’ வெற்றியின் பாதியைத்தான் ‘கும்கி’ இப்போது தொட்டிருக்கிறது என்பதுதான் உண்மை..! அதுவும் உடன் வெளிவந்த 'நீதானே என் பொன்வசந்தம்' வசந்தத்தைத் தராததாலும், அடுத்த வாரம் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' வந்த வேகத்தில் இருட்டறைக்குள் போனதாலும், ‘இப்போதைக்கு இந்தப் படம்தான் நல்லாயிருக்கும்போல’ என்ற மவுத் டாக்கினால் படம் வெற்றிகரமாக கூடுதல் பிரிண்டுகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.. வாழ்த்துகள் பிரபு சாலமன் டீமுக்கு..!

‘கும்கி’ யானைகளைப் பற்றி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் படித்து, பார்த்து தெரிந்து வைத்திருக்கிறோம்..! அதனையே களமாக வைத்து கொஞ்சம் விளையாடிப் பார்த்திருக்கிறார் இயக்குநர். 


அறுவடை காலத்தில் ஊரையே துவம்சம் செய்து பயிர்களை நாசப்படுத்தும் கொம்பன் என்னும் காட்டு யானையை நினைத்து பயப்படும் கிராம மக்கள்.. ஒரு ‘கும்கி’ யானையை வரவழைத்து காட்டு யானையை விரட்டுவோம் என்று முடிவெடுக்கிறார்கள். கோவிலில் ஆசி வழங்கி காசு பொறுக்கும் மாணிக்கம் என்ற யானையை ‘கும்கி’ யானை என்று பொய் சொல்லி 2 நாட்களில் மாற்றிவிடலாம் என்று ஊருக்குப் போகும் மாணிக்கம் யானையின் உரிமையாளரான ஹீரோ விக்ரம் பிரபு, அந்த ஊர் தலைவரின் மகள் அல்லியை பார்த்து காதலுற்று அங்கிருந்து நகர மறுக்க.. பின்பு என்ன நடக்கிறது என்பதுதான் கதை..!

யானைகளின் மோதல்தான் கதைக்களன் என்று சொல்லிவிட்டு படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் மட்டுமே யானைகளைக் காட்டியிருப்பதில் தமிழ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளார்கள். இயக்குநரையும் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை.. விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி யானைகளை சினிமாவுக்காக துன்புறுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் வாரியத்தின் மேற்பார்வையில் ஒவ்வொரு படப்பிடிப்பின்போதும் ஒரு மருத்துவரை தயாரிப்பாளரின் செலவில் உடன் தங்க வைத்து, அரசு அலுவலர் ஒருவரும் உடன் இருந்து கண்காணிக்கும் நிலையில்தான் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அரசு விதி. ஆனால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ‘டப்பு’வை ‘வெட்டிவிட்டு’ அரசு அலுவலர்களையும், அரசு மருத்துவரையும் ‘கட்’ செய்துவிட்டு தாங்களே ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்ததாகச் சொல்லி சர்டிபிகேட் வாங்கிவிடுவார்கள். இங்கேயும் அதுதான் நடந்திருக்கிறது..!

புரட்சித் தலைவரின் ‘நல்ல நேரம்’.. சூப்பர் ஸ்டாரின் ‘அன்னை ஓர் ஆலயம்’,  ஆழ்வார்பேட்டை ஆண்டவனின் ‘ராம் லஷ்மண்’ போன்ற படங்களிலெல்லாம் யானைகளின் அட்டகாசத்தையும் நடிப்பாக பார்த்திருந்த என்னைப் போன்ற ‘இளைஞர்கள்’ இப்படத்தின் யானையின் நடிப்பை பார்த்து அசந்துதான் போயிருப்பார்கள். வேறு வழியில்லை..! அப்புறம் சென்சார் போர்டுக்கு யார் பதில் சொல்றது..?

‘ஓடி ஓடி உழைக்கணும்’ பாடலில் எம்.ஜி.ஆரைவிடவும், டி.எம்.எஸ்ஸைவிடவும் அதிகம் கவர்ந்தது யானைகள்தான்..! அந்த அளவுக்கெல்லாம் யானைகளை படுத்தியெடுத்தால் இங்கே சென்சார் அனுமதியே கிடைக்காது என்பதால் முக்கால்வாசியை கிராபிக்ஸில் செய்து சமாளித்திருக்கிறார் இயக்குநர். அதுவே வினையாகிவிட்டது..!

சில மாதங்களுக்கு முன்னால் வெளிவந்த ‘நான் ஈ’ திரைப்படம் கிராபிக்ஸ் பற்றி தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு நிறையவே சொல்லிக் கொடுத்துவிட்டது.. போதாதுக்கு தினத்துக்கு  டிவி சேனல்களில் பல ஆங்கில கிராபிக்ஸ் படங்களைத் திரையிட்டு தமிழ் ரசிகர்களை மகிழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இப்படியொரு மொக்கையான கிராபிக்ஸை வைத்து ‘இதுதான் கொம்பன் யானை.. இதுதான் மாணிக்கம் யானை.. இதுதான் அதுகளுக்கு இடையில் நடக்கும் மோதல்’ என்று சொன்னால் எப்படி நம்புவார்கள்..? இந்தப் படத்தில் மிகப் பெரிய ஏமாற்றமே இந்த கிராபிக்ஸ் வித்தைதான்..!

அறிமுக நடிகர் விக்ரம் பிரபுவுக்கு சரளமாக பேசவும் வருகிறது.. நடிக்கவும் வருகிறது.. வயசுக்கேற்ற காதல் ஜாடையையும் காட்டத் தெரிகிறது. இதுக்கு மேலும் மனதைப் பிழியும் நடிப்பைக் கொட்ட அவருக்கேற்ற கதைகள் அடுத்தடுத்து அமையுமானால் இவரும் பிரகாசிக்கலாம்..! காத்திருப்போம்.. ஆனாலும் தம்பி இராமையாவுடனான இவரது மோதல் காட்சிகள் பையனுக்குள் நடிப்பும் இருக்குன்னும் சொல்ல வைக்குது..! 

லட்சுமி மேனன் நடிச்ச முதல் படம்.. இரண்டாவது படமே முதல்ல ரிலீஸ் ஆகி என்னைப் போன்ற யூத்துகளின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டார் லட்சுமி..!  கிராமத்து அல்லிக்கேற்ற முகம்..! முழுக்க மூடிய உடையில் வெளியில் தெரிந்த ‘சில’வைகளை வைத்தே பெண்ணை வெள்ளாவி வைத்த வெளுத்தது போல காட்டியிருப்பதுதான் அந்த கிளைமேட்டுக்கு ஒத்துவரவில்லை..!  சிணுங்குகிறார்.. மின்னுகிறார்.. பாடுகிறார்.. ஓயிலாக நடக்கிறார். காந்தப் பார்வையை வீசுகிறார்.. எல்லாம் இருந்தும் காதலில் ஒரு ஆழமும், சுவாரஸ்யமும் இல்லாததால் அத்தனையும் வீணாகிப் போயிருக்கிறது.. யானையைக் கண்டு மிரளும் லட்சுமியின் கண்களை பார்த்து யானையே மிதந்திருக்கும்..! யானையைக் கொஞ்சும் லட்சுமியும், விக்ரமின் காதல் தூதை ஏற்றுக் கொள்ளாத நிலையில் மருண்டு போய் கண்ணீர்விடும் லட்சுமியை பிடிக்கத்தான் செய்கிறது..! 

நூல் பிடித்தாற்போன்று செல்லும் காட்சிகளை ஒருங்கிணைக்க தம்பி இராமையா பெரிதும் உதவியிருக்கிறார். அவருடைய மைண்ட் வாய்ஸ் கமெண்ட்டுகள் கலகலப்பை கூட்டுகின்றன..!  2 நிமிடத்திற்கு முன்னால் ‘நம்ம சங்கை அறுத்திருவாங்க’ என்று சொல்லிவிட்டு அதற்குப் பின்பு காதலை சேர்த்து வைக்கவும் மனம் மாறும் தம்பி இராமையாதான் படத்தினை இறுதிவரையிலும் கொண்டு போயிருக்கிறார்..!

இந்தப் படம் ஒளிப்பதிவுக்காகவே பெரிதும் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை. சுகுமாரின் படப்பதிவு அந்த மலையையும், மக்களையும், இருப்பிடத்தையும் பல கோணங்களில் அழகாக பதிவு செய்திருக்கிறது. இதற்காக எத்தனை உழைப்பை அவர்கள் செலவிட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாகவும் உள்ளது. பாடல் காட்சிகளிலும், ஏரியல் வியூக்களிலும் இப்படி ஒரு இடத்தில் குடியிருக்கப் போனால்தான் என்ன என்ற ஏக்கத்தைத்தான் தோற்றுவிக்கிறது..! வெல்டன் சுகுமார் ஸார்..!

‘சொல்லிட்டாளே அவ காதலை’ பாடலும், ‘சொய் சொய்’ பாடலும்தான் இமான் இசையில் கவனிக்க வைக்கிறது.. பாடல்களைவிடவும், இசையைவிடவும், பாடல் காட்சிகள் மிக ரம்மியமாக இருந்து தொலைந்திருப்பதால் பாடல்களை தனியே கேட்டுத்தான் ரசித்தேன்..! இமானிடம் ஸ்பெஷலாக கேட்டு வாங்கியிருக்கும் ‘சொய் சொய்’ பாடல் அதற்கேற்ற உச்சத்தை எட்டியிருக்கிறது.. இப்போது எஃப்.எம்.களில் கட்டாய உணவாக அதுதான் ஒலித்துக் கொண்டிருக்கிறது..!

காலம், காலமாக மலையிலேயே காலம் தள்ளி வரும் மக்களுக்கு யானை மீது ஏன் இவ்வளவு பயம் வருகிறது..? கும்கி யானைக்கும் மற்ற யானைகளுக்கும் சட்டென அவர்களால் வித்தியாசம் கண்டறிய முடியாதா என்ன..? இடையில் காமெடியன்களாக இரண்டு வன இலாகா அதிகாரிகள்.. ‘கொம்பனை எந்தக் கொம்பனாலும் தூக்க முடியாது’ என்று அந்தக் கொம்பனுக்கே கொம்பு சீவி விடுகிறார்கள்.. எப்படியோ ஒரு நாளில் மாட்டிய கொம்பனை மடக்கி காட்டுக்குள் அனுப்பி வைத்த கதைதான் உண்மையில் நடந்திருக்கிறது.. அதற்காக அதையே இவ்ளோ நீளத்துக்கு பில்டப்பாக செய்ய வேண்டுமா என்ன..? இறுதிக் காட்சி தமிழ்ச் சினிமா ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது என்று பலரும் ரிலீஸுக்கு முன்பே சொல்லியும் அதனை மாற்ற மறுத்துவிட்ட இயக்குநருக்கு எனது பாராட்டுக்கள்..! கதைக்குப் பொருத்தமான முடிவுதான்..! ஆனால் இடையில் காதல்தான் நுழைந்து அல்லல்படுத்திவிட்டது..! 

காடு விலங்குகளின் இருப்பிடம். அவைகளின் தேசம்.. அதில் மனிதர்கள் குடியிருந்து வாழ்ந்தால், அவற்றோடு இயைந்துதான் இருக்க வேண்டும்.. எந்த மலைவாழ் மக்களும் விலங்குகளை எதிர்கொள்ள எந்த நேரமும் தயாராகத்தான் இருப்பார்கள். யானைகளின் அட்டூழியம் என்றுகூட இதனைச் சொல்லக் கூடாது.. சொல்லவும் முடியாது.. காட்டு யானை எப்படியிருக்கும்..? அதன் குணாதிசயங்கள் என்ன என்பது நமக்குத் தெரியாதா..? அவற்றிற்கான இயற்கை வழிகளை மனிதர்களே அடைத்துவிட்டால், அவைகள் பாவம் என்னதான் செய்யும்..?

குளம், குட்டைகளைத் தேடித்தான் அடர்ந்த காடுகளில் இருந்து யானைகள் வெளிப்படுகின்றன.. அவற்றுக்கான நீர் ஆதாரங்கள் முன்பு இருந்த இடத்தில் இப்போது இல்லை என்பதற்கு மனிதனின் செயல்கள்தானே காரணம்..? பின்பு அவற்றைக் குறை சொல்லி என்ன புண்ணியம்..? 

படம் நெடுகிலும் யானைகளின் இயல்புகளை கொடூரமாக சித்தரித்திருப்பதால் இவற்றை பார்க்கும் இளைய சமுதாயத்தினரின் மத்தியிலும் இவையே பதிவாகுமே..? யானைகளின் வாழ்க்கை முறையை பற்றியும் கொஞ்சம் எடுத்துச் சொல்லியிருக்கலாம்..! இறுதியில் கொம்பன் யானையை கொன்றே தீருவது என்று முடிவெடுத்து இயக்குநர் செய்திருப்பது விலங்குகளின் வாழ்க்கைக்கு மனிதன் தடை போடுவது போலத்தான் உள்ளது..!

ஒரு திரைப்படமாக பார்க்கப் போனால் பசுமை நிறைந்த காட்சிகளையும், அழகான நடிகர், நடிகைகளையும், கடுமையான உழைப்பையும் மட்டுமே வைத்திருந்து, மனதைத் தொடும் காட்சிகளையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் கொடுக்காமல் விட்டிருப்பதால் இந்த கும்கி மாணிக்கம், இப்போதும் கோவில் யானை மாணிக்கமாகவே தெரிகிறான்..! 

ஒரு முறை பார்க்கலாம்..! 

சட்டம் ஒரு இருட்டறை-சினிமா விமர்சனம்



22-12-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பழைய திரைப்படங்களை ரீமேக் செய்வதை நிறுத்திக் கொள்ளும்படி கனம் தமிழ்த் திரைப்படத் துறையினரை நோக்கி ரசிகர்கள் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்ள இப்படம் பெரிதும் உதவியிருக்கிறது என்றே நினைக்கிறேன்..!

1981-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் நாள் வெளியான ஒரிஜினல் சட்டம் ஒரு இருட்டறை அப்போதைக்கு சூப்பர் டூப்பர் ஹிட்.. அது அந்தக் காலத்தில் மக்களின் ரசனைக்கு நிறையவே தீனி போட்டிருந்தது..! கூடவே பரமசிவனின் நெற்றிக்கண்ணைத் திறந்தாற்போல் காட்சிக்கு காட்சி தனது சிவப்பு விழிகளை உருட்டி, உருட்டி ரசிகர்களை பெருமளவுக்கு கவர்ந்திருந்த கேப்டனும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம்..! 

எஸ்.ஏ.சி. தனது பேத்திக்கு ஒரு நல்ல துவக்கத்தைக் கொடுக்க நினைத்தது தவறில்லை. ஆனால் அதற்காக இப்படத்தையே தூக்கிக் கொடுத்து பழைய படத்தை நினைத்து பெருமூச்சுவிட வைத்ததுதான் தவறு..! புதுமுக நடிகரோ, பேர் இல்லாத நடிகைகளோ நடிக்கிறார்கள் என்றால் அதில் கதை அல்லது இயக்கம் இரண்டில் ஏதாவது ஒன்றாவது உருப்படியாய் இருந்தால்தான் மக்களிடம் அது பேசப்படும். இரண்டுமே அசத்தல் என்றால் வழக்கு எண் படம் போல சூப்பர்தான்..! இது இரண்டுமே இல்லாமல் வெறுமனே பழைய பெருமையை நினைத்து வேட்டியில் மஞ்சள் தடவிய கதையாகத்தான் இந்தப் படம் முடிந்திருக்கிறது..!

தமிழில் விஜயகாந்த்.. மலையாளத்தில் கமல்ஹாசன், தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் சங்கர்நாக், ஹிந்தியில் அமிதாப்-ரஜினிகாந்த் என்று ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் ஹிட்டடித்த இந்தப் படத்தின் கதி என்ன என்பது அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும்..!



தனது காதலியை கொன்றவர்கள் சட்டத்தின் ஓட்டைகளால் தப்பித்துவிட்ட கோபத்தில் ஹீரோ தானே அவதாரமெடுத்து அவர்களை அழிக்கிறார். ஹீரோவின் அக்கா போலீஸ் துணை கமிஷனராக இருந்தும், தனது தம்பிதான் இந்தக் கொலைகளை செய்திருக்கிறார் என்று தெரிந்தும் ஆதாரங்கள் இல்லாததால் தம்பியை கைது செய்ய முடியாமல் தவிக்கிறார். 2 கொலைகளைச் செய்துவிட்டு, அதை ஒப்புக் கொண்டுவிட்டு.. பின்பு கடைசி ஆளையும் தான் கொலை செய்வேன் என்று அக்காவிடம் சபதமிடுகிறார் ஹீரோவான தம்பி. அக்காவும் அந்த சவாலை ஏற்றுக் கொள்ள.. என்னாச்சு என்பதை பழைய சட்டம் ஒரு இருட்டறை படத்தைப் பார்த்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..!

விஜயகாந்த் வேடத்தில் புதுமுகம் தமன். பழைய படத்தைப் பார்க்காதவர்களுக்கு புதுமுக ஹீரோவாகத் தெரியும். இவர் ஏற்கெனவே ஆச்சரியங்கள் படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இன்னும் 4, 5 படங்களில் நடித்த  பின்பு இவரது நடிப்பு பற்றி நாம் பேசுவோம்..! ஹாங்காங்கில் பியாவுடனான காதல் காட்சிகளில் மட்டும் திரைக்கதையினால் கொஞ்சம் சுவாரசியப்படுத்துகிறார். அவ்வளவே..!
ஹீரோயின்கள் பியா அண்ட் பிந்து மாதவி.. இருவருக்குமே ஸ்பெஷலாட்டி கண்கள்தான்.  முடிந்தவரையிலும் அதனையே எக்ஸ்போஸ் செய்து பாடல் காட்சிகளையும், காதல் காட்சிகளையும் நகர்த்தியிருக்கிறார்கள். பியாவுக்கு இருந்த நடிப்பு ஸ்கோப்கூட பிந்துவுக்கு இல்லாததால், கொஞ்ச நேரமே வந்தாலும் பியாவே மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறார்..!

இறுதிக் காட்சியில் தலை காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் எஸ்.ஏ.சி. இதிலும் அப்படியே..! ஹீரோவுக்கு உதவும் ஜெயிலராக வந்து சட்டத்தை கிழி கிழியென்று கிழித்து எறிகிறார். ஆனால் தியேட்டரில் கைதட்டல் கிடைக்குமா என்றுதான் தெரியவில்லை. சட்டத்திற்கும் சாமான்யனுக்கும் இடையில் இருக்கின்ற இடைவெளிதான் இந்தப் படத்தின் கரு. அதனை மையப்படுத்தி வசனத்தை வைக்காமல், சென்சார் போர்டை கூல் செய்ய வேண்டி வசனத்திலும் சமரசம் செய்திருக்க முயன்றிருப்பதால் அதுவும் மனதில் நிற்கவில்லை..!

துணை கமிஷனர் கெளசல்யாவாக ரீமாசென். காக்கி சட்டையை போட்டாலே வந்துவிடும் ஒரு மிடுக்கும், தோரணையும் இங்கே மிஸ்ஸிங்.. பாடல் காட்சிகளில் அணிவதுபோலவே காக்கி பேண்ட்கூட சற்று இறக்கமாகத்தான் இருந்தது..! விஜயசாந்தி, ராதிகாவைத் தவிர வேறு யாருக்கும் போலீஸ் பாடி லாங்குவேஜ் வரவே வராது..!  படத்துக்குப் படம் வித்தியாசமாக எதையாவது செய்து தனித்திறமையை காட்டினால் மட்டுமே நீடித்து நிலைக்க முடியும்.. அம்மணி இப்போது “உண்டாகி”யிருப்பதால் இதுதான் இப்போதைக்கு கடைசி படமென்றும் சொல்லலாம்.. ஆகவே ஓகே மேடம் என்று விட்டுவிடுவோம்..!

1981-ல் இருந்த ரசிகர்களின் மனநிலையும், அறிவும் அன்று போலவே இப்போதும் இருக்கும் என்று நினைத்திருக்கும் எஸ்.ஏ.சி மற்றும் இயக்குநருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..! சுரேஷ் நடுரோட்டில் ஆக்ஸிடெண்ட்டில் இறக்கும்போது, ஓடி வரும் இன்ஸ்பெக்டர் முன்பு ஜெயிலராகவும் இருந்தவராம்..! இது எந்த நாட்டு சட்டம் என்று தெரியவில்லை.. சர்வசாதாரணமாக ஒரு துணை கமிஷனர் ஜெயிலுக்குள் நுழைந்து “செல்”வரைக்கும் போய் பார்த்து வருவதெல்லாம் முடிகிற காரியமா..? அத்தோடு அவர் ஜெயிலரா..? இன்ஸ்பெக்டரா..? எப்படி வந்தார் என்பதையெல்லாம் கொஞ்சமாவது யோசித்து வைத்திருக்க வேண்டாமா..? அதோடு 2 நாளுக்காக ஹீரோவை ஜெயிலில் வைக்கிறார் துணை கமிஷனர்.. இதையும் புதிய ஜெயிலர் ஏற்றுக் கொள்கிறார். பின்பு ஜெயிலரே போலீஸ் கமிஷனரிடம் விளக்கமளிக்க நேரில் வருகிறாராம்..!  ஒரு அமைப்பின் செயல்பாடுகளைச் சொல்லும்போது அதில் கொஞ்சமாவது உண்மைத்தன்மை வேண்டாமா..? லாஜிக் பார்க்காமல் செல்வதற்கு இதுவொன்றும் நகைச்சுவை, கமர்ஷியல் படமில்லையே..? இறுதியில் பழைய ஜெயிலரையே செல்போன் மூலமா கமிஷனர் முன்பாக அவரது அறையிலேயே கொலை செய்கிறார் ஹீரோ.. நம்பத்தான் முடியலை..!  

ஒளிப்பதிவாளர் தனது பணியைக் கச்சிதமாகவே செய்திருக்கிறார். பாடல் காட்சிகளிலும், ஹாங்காங் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் அழகுடன் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இது ஒன்று மட்டும் போதாதே.. படத்தின் வெற்றிக்கு..! அது போலவே இசையும்.. விஜய் ஆண்ட்டனியின் இசையில் 2 பாடல்கள் கேட்கும்படி உள்ளது. 'கும்கி'யில் உள்ளது போலவே இதிலிருக்கும் 'சொய் சொய்' பாடல் முணுமுணுக்கவும் வைக்கிறது..!

இந்திய அளவில் பார்த்தால் இந்தப் படத்தின் பெண் இயக்குநரான சினேகா பிரிட்டோதான் 34-வது இயக்குநர்.  புதுமுக இயக்குநர் என்பதால் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் வராமைக்கு அவரை மட்டுமே குற்றம் சொல்ல முடியவில்லை. இயன்றவரைக்கும் எடுத்திருக்கிறார். தமன்-பியா காதல் காட்சிகள்.. “நத்திங்” என்று இருவரும் ஒருவரையொருவர் காலை வாரும் காட்சிகள் மட்டுமே ரசிக்க வைக்கிறது.. தமனின் நண்பர்கள் கமிஷனர் அறையில் பேசும் பேச்சுக்களெல்லாம் ஓவர்.. இனி அடுத்தடுத்த வாய்ப்புகளில் இவரது இயக்கத் திறமை நம்மைக் கவர்வது போல இருக்கட்டும்..!

விஜயகாந்தின் அந்த அனல் தெறித்த நடிப்பும், வெறியூட்டிய சண்டைக் காட்சிகளும், மனதைக் குடைந்த அரசியல் வசனங்களும் இல்லாமல்.. ஏதோ காதலுக்காக நடந்த ஒரு சின்ன சண்டையை போல இந்தப் படம் முடிவடைந்திருப்பதுதான் ஏமாற்றத்திற்குக் காரணம்..! இப்படத்தின் மூலம் கிடைத்த லாபம் ‘கும்கி’ படத்திற்குக் கூடுதலாக தியேட்டர்களும், ரசிகர்களும், வசூலும் கிடைக்கப் போகிறது.. கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்..! 

நீதானே என் பொன் வசந்தம் - சினிமா விமர்சனம்

15-12-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'நடுநசி நாய்கள்' படத்தை மீடியாக்களும், ரசிகர்களும் குதறி எடுத்ததையே பெரும் குற்றமாக எண்ணிக் கொண்டு, மீண்டும் ஒரு முறை நம்மை வதைத்துப் பார்த்து குரூர சித்ரவதை செய்திருக்கிறார் கெளதம்..!

கதையே இல்லாமல் படம் எடுப்பது எப்படி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப் படம். கெளதம் வாசுதேவ் மேனன் என்ற தன் பெயருக்கே ஒரு வேல்யூ உண்டு.. மார்க்கெட்டிங் உண்டு.. மவுசும் உண்டு.. என்ன எடுத்துக் கொடுத்தாலும், எப்படி வழங்கினாலும் ரசிகர்கள் ஓடோடி வந்து பார்த்து காசைக் கொட்டுவார்கள் என்கிற முட்டாள்தனத்தில் தான் நினைப்பதையெல்லாம் எடுத்துத் தள்ளியிருக்கிறார் இயக்குநர்.

தன்னை ஒரு இண்ட்டலெக்ச்சுவல் இயக்குநராகக் காட்டிக் கொள்ளும் பொருட்டு அந்த டைப்பான வசனங்கள், இடையிடையே ஆங்கிலத்தில் மாடலாடுவது.. மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ் மற்றும் பெரிய தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு மட்டுமே புரியும்வகையிலான அவரது இந்தப் படைப்பு அவருக்கு எந்தவிதத்திலும் பெருமை சேர்க்காது என்பது உறுதி..!


ஜீவா கல்லூரியில் சமந்தாவை பார்த்தவுடன் தனது பால்ய சிநேகிதி என்று அடையாளம் கண்டு அதன் தொடர்ச்சியாய் காதல் கொள்வது சரிதான்..  ஆனால் அதன் பின்பு இது எந்த வகையான காதலாக காட்டுவது என்பதில்தான் கெளதமுக்கு மிகப் பெரிய குழப்பம்..! குடும்பம், ஈகோ, கல்யாணம், மிடில், அப்பர் கிளாஸ் என்று எல்லாத்தையும் ஒன்றாக நினைத்து அவரும் குழம்பி நம்மையும் சேர்த்தே குழப்பியிருக்கிறார்..!

முதல் 20 நிமிடங்களைக் கடந்த பின்பு இறுதிவரையிலும் சுடுதண்ணியில் கால் வைத்திருக்கும் கதைதான்.. “எப்படா முடிச்சுத் தொலைவீங்க..?” என்று கதற வைத்துவிட்டார்..! இசைஞானியிடம் இசையை முடிந்த அளவுக்கு கேட்கும்படியாக வாங்கத் தெரிந்த அவருக்கு அதையாவது உருப்படியாக எடுத்துத் தொலைத்திருக்கக் கூடாதா..? ஒவ்வொரு பாடலுக்கும் இடையிடையே காட்சிகளை வைத்துக் கொண்டு ஒரு பாடல் முடிய 20 நிமிடங்களாக்கியதில் இசையைக் கேட்கும் ஆசையே போய், இவருடன் கூட்டு சேர்ந்ததற்காக இசைஞானியையும் சேர்த்தே திட்ட வேண்டியிருக்கு..!

எத்தனை தடவைங்க இந்த லவ் வரும்.. போகும்..? சின்ன வயசுல போகுது.. அப்புறம் ஸ்கூல் டைம்ல போகுது.. அப்புறம் காலேஜ் லைப்ல வந்து, வந்து போகுது.. சரி அதையாவது சட்டுன்னு முடிச்சு வீட்டுக்கு அனுப்புனாங்களா..? கடைசீல கல்யாணத்தையும் ஏற்பாடு பண்ண வைச்சு.. ஏதோ சமந்தா இவர் இல்லைன்னா செத்தே போயிருவாங்கன்னு சீன் போட்டு கடைசியா காதலிலும், கல்யாணத்திலும் கெஞ்ச வேண்டியது.. மன்னிப்பு கேட்க வேண்டியது.. காத்திருக்க வேண்டியது பெண்தான் என்ற சினிமாத்தனத்தைக் காட்டி ஒரு சிறந்த ஆணியவியாதியாக உருவெடுத்திருக்கிறார் கெளதம்.

ஜீவா இதில் நடித்த நேரத்தில் வேறு படத்திலாவது நடிக்கப் போயிருந்தால் அவருக்காச்சும் ஏதாச்சும் பிரயோசனமா இருந்திருக்கும்.. இந்த மொக்கை கதைக்குத்தான் இத்தனை அலப்பறையா..? இவ்வளவு கெட்டப்பா என்று ரசிகர்களின் கோபக் கனல் கெளதமின் அடுத்த வெற்றிப் படம் வரும்வரையிலும் இருக்கும்..! சமந்தா அழகு என்பது கெளதமுக்கு மட்டுமே நன்கு தெரியும் என்பதால் அதை எப்படியெல்லாம் எக்ஸ்போஸ் செய்ய வேண்டுமோ அப்படியெல்லாம் செய்திருக்கிறார்.. ஆனால் அவரையும் கடைசி நேரத்தில் கதற வைத்து தனது சாடிஸத்தைக் காட்டியிருக்கிறார்..!

சந்தானம்ன்னு ஒருத்தர் இருக்காரு.. ஒன்றிரண்டு நேரத்துல கிச்சுகிச்சு மூட்டி சிரிப்பைக் கூட்டுறாரு.. அவ்ளோதான்.. அவரும் என்னதான் செய்வாரு..? டிராவல் பண்ண அவருக்காச்சும் கதை வேணாமா..? அவரையும் செகண்ட் ஆஃப்ல காமெடியாக்கி அவருக்கு ஒரு ஜெனிபரை லவ்வராக்கி ஜீவாகூட சுத்தவிட்டு திரைக்கதையை நகர்த்தியதுதான் மிச்சம்..! 

இவ்வளவு பெரிய பொருட்செலவில் தயாரித்து தோல்விக்காகவே அர்ப்பணித்திருக்கும் கெளதமின் இந்தச் செயலால் நஷ்டப்பட்டிருக்கும் தயாரிப்பாளர் அடுத்த படத்தை எப்படி எடுப்பார் என்று தெரியவில்லை..! இயக்குநரின் தவறுதலால் இது சங்கிலித் தொடராக பாய்ந்து சினிமா இண்டஸ்ட்ரிக்கும் சிறிது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் கொடுமை..!

எப்போதடா எந்திரிச்சு வெளில ஓடுவோம்ன்ற மனநிலைலேயே படத்தைப் பார்க்க வேண்டியிருந்ததால படத்துல மத்த அயிட்டங்களை பார்க்கவோ, சொல்லவோ மனசே இல்லை..  இதுக்கு மேல எழுதறதுக்கும் இந்தப் படத்துல எதுவுமே இல்லைன்றதால இப்படியே முடிச்சுக்குறேன்.. 

வீட்டுலேயே இருந்து  புள்ளைக்குட்டிகளை படிக்க வைங்கப்பா..! 

நீர்ப்பறவை - சினிமா விமர்சனம்

11-12-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எப்போதும் ஒரு படம் ஜெயித்துவிட்டால், அதே இயக்குநரின் அடுத்த படமும் மிக ஆரவாரமாக எதிர்பார்க்கப்படும்..! அந்த வரிசையில் தென்மேற்குப் பருவக்காற்றின் வீச்சால் நீர்ப்பறவையும் உயரே பறக்குமா என்று அதன் இயக்குநரைவிடவம் பார்வையாளர்களே எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்..! 

மீனவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் படம் என்று பலர் கொண்டாடி, சிலர் விதந்தோதி வரும்வேளையில் எனக்கு மட்டும் ஒரு குடிகார இளைஞனின் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்பட்டு திசை திரும்பும்போது காலத்தின் பரிசு எப்படி, என்னவாக கிடைக்கிறது என்பதையே உணர்த்துவதாகத் தோன்றுகிறது..!



25 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன தனது தந்தையின் எலும்புக்கூட்டை தனது வீட்டிலேயே கண்டெடுக்கும் மகனே தன் தாயின் மீது புகார் கொடுக்கிறான். போலீஸ் விசாரணையில் தாய் தனது கதையை விவரித்தலில்.. கதாநாயகனின் கொண்டாட்ட வாழ்க்கையும், அவள் அவனுக்கு எப்படி வாழ்க்கைப்பட்டாள் என்பதும்,  இறுதியில் அவன் இறந்தது எப்படி என்பதும்தான் கதை..! 

1960-களின் இறுதியில் கதை துவங்கி தற்காலத்தில் முடிவடைகிறது.. படகில் வரும்போது சுட்டுக் கொல்லப்படும் தாய், தந்தையருடன் உயிருடன் பிழைக்கும் நாயகன், லூர்துசாமியால் கண்டெடுக்கப்படுகிறான். பின்பு அவனது வளர்ப்பு மகனாகி அருளப்பசாமியாகிறான்.. கடலன்னை தாலாட்டி வளர்ந்தவன், பிற்காலத்தில் சாராயத்தால் சீராட்டி வளர்க்கப்படுகிறான்..! என்ன படித்தான்..? எதற்காக குடிக்க ஆரம்பித்தான்..? ஏன் இந்த புதைகுழியில் விழுந்தான் என்றெல்லாம் சொல்லப்படாமல் கதை துவக்கத்திலேயே ஒரு குடிகாரனின் கதையாகவே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது..!

விஷ்ணு நிரம்பவே உழைத்திருக்கிறார் என்றாலும், குடிகாரன் மற்றும் மீனவன் கல்ச்சரிலேயே மீண்டும் மீண்டும் புரண்டிருப்பதால் அவரது நடிப்புக்காக இன்னும் 2 படங்கள்வரையிலும் காத்திருக்க வேண்டும் போல தோன்றுகிறது..! அதென்னமோ தெரியவில்லை.. குடிகாரன் வேடத்தில் அத்தனை நடிகர்களுமே அசத்தலாகத்தான் நடிக்கிறார்கள். தெளிவாக இருக்கும்போதுதான் அனைவரின் அளவுகோலும் தெரிகிறது..!

சர்ச்சில் கன்னியாஸ்திரியாக இருப்பவரின் வளர்ப்பு மகளான எஸ்தர் என்னும் சுனைனாவை பார்த்துவிட்டு நாயகன் விஷ்ணுவுக்கு வழக்கமான தமிழ்ச் சினிமா பாணியில் காதல் பிறந்து கொஞ்சம் கதை காதலுக்குள் கரையும்போதுதான் லேசாக பிடிபடுகிறார் விஷ்ணு.
எஸ்தராக நடித்திருக்கும் சுனைனாவுக்கு இது மிக சிறப்பான படம்..! பிந்து மாதவி இருந்திருந்தால் அவர் கண்களை வைத்தே கவிதை வரைந்திருக்கலாம். சான்ஸ் போச்சு..!   முதல் முறையாக சுனைனாவின் நடிப்புக்கு கை தட்டல் கிடைத்திருக்கிறது என்றால் அது இந்தப் படத்தில்தான் என்று நினைக்கிறேன். “சைத்தானே விலகிச் செல்” என்று சர்ச் வாசலில் நின்று சுனைனா சொல்கின்ற அந்த ஷாட், சற்றும் எதிர்பாராதது.  அந்த இடத்தில் அந்த வசனம் பேசப்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. வெல்டன் டைரக்டர் ஸார்..! எனக்கு இந்தப் படத்திலேயே மிகவும் பிடித்த காட்சி இதுதான்..!

பின்பு அவளுக்காகவே தானும் மாறி எதிர்ப்புகளையும் மீறி கடலுக்குச் செல்லும் மீனவனாக உருமாறியவனுக்கு ஏன் அந்தச் சோகம் என்று இயக்குநர்தான் சொல்ல வேண்டும்..! இந்த இடத்தில்தான் இந்தப் படம் ஒரு அழகான சிறுகதையாக உருமாறியிருக்கிறது..! ஆனால் இதற்காக நந்திதா தாஸ் சொல்லும் காரணம் ஏற்க்க்கூடியதாக இல்லை.. “அவர் எங்கேயும் போக வேண்டாம்.. இங்கேயே இருக்கட்டும்..” என்பதெல்லாம் கிறித்துவத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர்கள் செய்வதுதான் என்றாலும் புழக்கத்தில் அது பைத்தியக்காரத்தனமான செயல் என்று அவர்களாலேயே சொல்லப்படுகிறது..!

கோவையில், ஈரோட்டில் கடந்த ஆண்டுகளில் தங்களது கணவர்களின் உடலை தனது வீட்டிலேயே வைத்திருந்து மீண்டும் அவர் இந்த வீட்டிலேயே நிச்சயம் உயிர்த்தெழுவார் என்று பிரார்த்தனை செய்த கிறித்துவ பெண்கள் பற்றிய செய்திகளைப் படித்திருக்கிறேன். அப்படி அதை வெளிப்படையாக சொல்லியிருந்தால் அது கிறித்துவ மதத்தின் மீதான விமர்சனமாகிவிடும் என்பதால் இயக்குநர் நயமாக இதனைத் தவிர்த்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்..!

வழக்கம்போல சரண்யா நடிப்பைக் கொட்டியிருக்கிறார். மகனுக்கு கொஞ்சமா குடிடா என்று சொல்லி பணத்தைக் கொடுப்பதில் துவங்கி.. கிளினிக்கிற்கு கொண்டு வந்து சேர்ப்பித்துவிட்டு அங்கிருக்கும் ஊழியர்களிடம் தனியாக பணத்தைக் கொடுத்து சாராயம் வாங்கித் தரச் சொல்லும்வரையிலும் வழக்கமான அம்மாக்களின் பிரதிநிதியாக தன்னை மீண்டும் ஒரு முறை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார். இவருக்கு போட்டி இதே படத்தில் வடிவுக்கரசி.. ஊரையே அழைத்து சாராயத்தைப் புகட்டிக் கெடுத்துக் கொண்டிருப்பவர், தனது சொந்த மகனை அந்த இடத்தில் பார்த்தவுடன் பதட்டத்துடன் “இங்கேயெல்லாம் வரக் கூடாதுப்பா..” என்று சொல்லி விரட்டுவது ஒரு அழகான முரண்பாடு.. கடைசியில் வடிவுக்கரசி தொழிலை கைவிடுவது, சினிமா பாணி டிராமாதான் என்றாலும் அதுவும் நல்லதே..!

லூர்துசாமியாக நடித்திருப்பவர் ஒரு சிறந்த தேர்வு. முக ஜாடையும், உடல்வாகும்  உடல் உழைப்பிற்கு அஞ்சாத அந்த கருப்புத் தோல் கொண்டவருக்கு ஏசப்பன் கொடுத்த பரிசான குழந்தை இல்லாத குறையினால் இந்த நாயகனை வளர்ப்பாக எடுக்க வைத்திருப்பதை சொல்லிக் காட்டாமல் இயக்குநர் தவிர்த்திருப்பது பாராட்டுக்குரியது..! போற இடமெல்லாம் காசு கேட்டு மானத்தை வாங்குறானே என்று விஷ்ணுவை வெளுப்பதும்.. அவ்வப்போது அவரை கண்டிப்பதும்.. விஷ்ணு கிளினிக்கில் இருந்து வீடு திரும்பியவுடன் ஒரு பெரிய திருக்கை மீனுடன் டாக்டரை சந்திக்கச் சென்று கும்பிடுவதுமான காட்சிகளில் ஒரு தகப்பனை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.

நந்திதா தாஸை இவ்வளவு சோகத்துடன் காட்டியிருக்க வேண்டாம். இந்தக் கேரக்டருக்கு இவரெதற்கு என்று கோபம்கூட வருகிறது..! போலீஸ் விசாரணையை அவ்வப்போது காண்பித்துவிட்டு மின்னல் வேகத்தில் கோர்ட் விசாரணையையும் முடித்துவிட்டு தீர்ப்பையும் பெண் இன்ஸ்பெக்டரே வந்து சொல்வது எந்தவிதத்திலும் ஈர்ப்பையும், பரிதாப உணர்வையும் ஏற்படுத்தாதது இந்தப் படத்தின் மிகப் பெரிய மைனஸ்..!

சமுத்திரக்கனியின் முஸ்லீம் கதாபாத்திரம் படத்தின் மையமான கருத்தை சுமந்து கொண்டிருக்கிறது..! குடிக்க காசு கேட்டு வந்தவனிடம் முன்பு கொடுத்து பழக்கப்படவனைப் போல போயிரு என்று சொல்லி மிரட்டுவது.. லூர்துசாமியின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் இருப்பது.. “உடனே தெருவுக்கு வந்திருவீங்களே..?” என்ற மதம் சார்ந்த குற்றச்சாட்டை “நாங்க எங்க உரிமைக்காக போராடினா அது தீவிரவாதமா..?” என்று பதில் சொல்லி வாயடைப்பதும் ஒரு அரசியல்தான்..! லூர்துசாமியின் சரண்டரை மிக எளிதாக எடுத்துக் கொண்டு படகு செய்து தருவதாகச் சொல்வது.. அட்வான்ஸாக சில ஆயிரமாவது வேண்டும் என்று பிஸினஸ் மைண்ட்டை விடாமல் பேசுவது உண்மையான யதார்த்த நிலைமை..! புதிய படகின் வெள்ளோட்டத்தின் பூஜையை மும்மத கலப்போடு கனியே செய்வது  போன்று காட்சியமைத்து நாம் எந்த மார்க்கத்தில் சென்றாலும், அந்த மார்க்கத்தின் துணை உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கும் இயக்குநருக்கு இதற்காக ஒரு ஷொட்டு..!

அல்லக்கை அட்டாக் பாண்டி, தம்பி இராமையா இருவரும் படத்தை தொய்வு விழாமல் கொண்டு செல்ல சில இடங்களில் உதவியிருக்கிறார்கள். பாதரிடம் விஷ்ணு தண்ணியடித்துவிட்டு வந்து பேசும் காட்சிகளில் உடன் இருந்து அல்லல்படும் தம்பி இராமையாவின் நடிப்பு கவர்கிறது.

வசனத்தை ஜெயமோகனும், இயக்குநர் சீனுராமசாமியும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இதற்கு ஜெயமோகன் எப்படி ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. மனிதர் இப்போது நன்கு பிழைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன். வெல்டன் அண்ணாச்சி.. கனி பேசும் மறைமுகமான இந்திய எதிர்ப்பு அரசியல் வசனங்கள்.. அக்காலத்திய கிறித்துவ கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள், வசனங்கள்.. தம்பி இராமையா குடியின் மேன்மையைப் பற்றிச் சொல்லும் வசனங்கள்.. நந்திதா தாஸ் இறுதியில் கோர்ட் கூண்டில் நின்றபடி கேட்கும் கேள்வி.. என்று பல இடங்களிலும் ஷார்ப்பான குறியீடுகளாகவே தென்படுகின்றன வசனங்கள்..!

படத்தில் இயக்குநருக்கு அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது பாலசுப்ரமணியெத்தான் ஒளிப்பதிவை.. முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் அந்தக் கடற்பிரதேசம் முழுவதையும் தனது பிரேமுக்குள் கொண்டு வந்திருக்கிறார். விஷ்ணுவை கடலுக்குள் அனுமதிக்கலாமா வேண்டாமா என்று தீர்ப்பு சொல்லும் காட்சியில் கேமிராவின் கோணமும், அழகும் அற்புதம்..! பாடல் காட்சிகளிலும் அதிகப்படியான லைட்டுகளை பயன்படுத்தாமல் இயற்கை ஒளியிலேயே மிக குறைவான செயற்கை ஏற்பாடுகளுடன் எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. படத்தின் பிற்பாதியில் மிகப் பெரிய பலமே ஒளிப்பதிவுதான்..! வாழ்த்துகள் பாலா ஸார்..!

“பர பர” பாடல் ஏற்கெனவே ஹிட்டாகிவிட்டது.. கிறித்துவ வார்த்தைகளை கோர்த்து வைரமுத்து போட்டிருக்கும் அந்த சந்தந்தங்களை சத்தங்களுக்குள் அனுமதிக்காமல் கொஞ்சமாக இழையவிட்டிருக்கும் ரகுநந்தனுக்கு ஒரு தேங்க்ஸ்..! பின்னணி இசையில் ஒரு சில இடங்களில் அடடே என்று சொல்லவும் வைத்திருக்கிறார்..! 

மீனவனாக இல்லாதவனை கடலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்ற மீனவ கலாச்சாரத்தை இந்தப் படம் அழுத்தமாக பதிவு செய்திருப்பது தமிழகத்துக்கே புதிய செய்தி. குப்பம், குப்பமாக ஒரு ஊர் போன்று கூட்டத்தை வைத்திருந்து அதன் மூலமே மீனவ சமுதாயம் வளர்ந்துவரும் நிலையில் அவர்களின் இந்த வாழ்க்கை முறை நிச்சயமாக பலருக்கும் அதிர்ச்சிதான்..! கடலுக்குள் செல்பவனின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்று சொல்லப்பட்டிருக்கும் சூழலில், விஷ்ணுவை கடலுக்குள் இறங்க எதிர்ப்புத் தெரிவிக்கும் மீனவர்களையும் காட்டியிருப்பதில் படம் பக்கா சினிமாவாகிவிட்டது..! 

இந்த இடத்தில் இந்தப் படத்தில் வெளிப்படையாகச் சொல்லப்படாமல் தெரியப்படுத்தப்பட்டிருக்கும் அரசியலைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். அரசியல்வியாதிகளின் பெயர்களைக்கூட ஒரு கேரக்டர் பெயராக வைக்க முடியாத அளவுக்கு இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கும்போது இந்தப் படத்தின் பின்புலமாக இருக்கும் அரசியலை வெளிப்படையாக இதில் வசனமாக வைத்திருந்தால் இந்தப் படம் நிச்சயமாக வெளி வந்திருக்காது..!

ஈழப் பிரச்சினை, சிங்கள கடற்படையின் துப்பாக்கிச் சூடு, மீனவர்களின் மரணங்கள் என்று இந்த மூன்றையுமே நேரிடையாக குறிப்பிட முடியாமல் மறைமுகமாக சொல்ல வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியிருக்கும் இந்த நாட்டின் கேடுகெட்ட அரசியலமைப்பையும், போலி ஜனநாயகத்தையும் நாம்தான் குற்றம் சொல்ல வேண்டும்..!

மீனவர்களுக்கென்றே சில தொகுதிகளும், எம்பிக்களும், எம்எல்ஏக்களும் இருந்திருந்தால் இந்தக் கொடுமையெல்லாம் நடக்குமா என்று படகுக் கடை பாய் சமுத்திரக்கனி கேட்கும் கேள்வி நியாயமானதே..! தமிழகத்தைத் தவிர இந்தியாவின் எந்தப் பகுதி மீனவர்களும் வேறு நாட்டு ராணுவத்தால் கொல்லப்படுவதில்லை. பாகிஸ்தான்கூட கைது செய்து சிறையில்தான் அடைக்கிறது..! இலங்கை ராணுவத்தின் இந்தப் படுகொலைகள் ஆயிரத்தைத் தாண்டியும் இந்த அரசுகளுக்கு சூடும், சொரணையும் இல்லாத நிலையில் இருப்பதுதான் கேவலமானது..!

இது போன்ற உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் ஒரு உண்மையான ஊடகமாக சினிமா துறை இருக்க முடியவில்லை என்பதும் நமது துயரம்தான்...!  சிங்களம், இந்திய அரசு, தமிழக அரசு, கருணாநிதி, ஜெயலலிதா, பிரபாகரன், ஈழம், விடுதலைப்புலிகள், கடத்தல் என்று எந்த இடத்திலும் பெயர்களை உச்சரிக்க முடியாத அளவுக்கு இருக்கும் இந்த சென்சார் அமைப்பை நினைத்து நாம் வெட்கப்பட்டுத்தான் ஆக வேண்டும்..!

மத தீவிரவாதத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் ஈரானில்கூட  மசூதி தொழுகைகளையே கேள்விக்குறியாக்கியிருக்கிறார்கள். ஈரான், ஈராக் போர் பற்றியும் அப்போதைய ஆட்சியாளர்களின் பெயர்களைக்கூட வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்கு ஈரானில் அரசியல் சென்சார்ஷிப் சுதந்திரம் சிறிதளவாவது இருக்கிறது.. இங்கே..? 

திறனாய்வு மனப்பான்மையோடு ஒரு பகுதி மீனவர்களின் வாழ்க்கையை சினிமாத்தனத்தோடு சமரசம் செய்து கொண்டும், அதே சமயம் யாருக்கும் பாதிப்பில்லாமலும் இயன்றவரை தொகுத்தளித்திருக்கும் இயக்குநர் சீனு ராமசாமிக்கு எனது நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்..!

கமல்ஹாசன் செய்வது சரியா..?

10-12-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


“வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திற்கும்.. வீட்டில் மின் விசிறி இருப்பினும், காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்து பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள்போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?”

- இத்தனையாண்டு காலமும் இந்தத் தமிழ்ச் சினிமாவுக்கே தனித்த அடையாளமாக இருந்துவரும் தனக்கே திரையுலகத்தில் தடை உத்தரவா என்ற ஆதங்கத்தில் அண்ணன் கமல்ஹாசன் இன்று சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை..!


கேபிள் டிவிக்கு மாதந்தோறும் 100 ரூபாய் கொடுக்கவே யோசிக்கும் நடுத்தர மக்களினும் பொருளாதாரத்தில் உயர்ந்த மனிதர்களான, மாதந்தோறும் 1700 ரூபாய் கொடுத்து செட்டப் பாக்ஸ் கனெக்சன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி என்பதால் மற்றவர்கள் நிச்சயம் திரையரங்கத்தை நாடி வருவார்கள் என்று அண்ணன் கமல் தரப்பில் 3 நாட்களாக கூக்குரலிட்டும் தியேட்டர் அதிபர்களின் மனதில் அச்சம் நீங்கியபாடில்லை.

திரைத்துறையினர் இது விஷயமாக மீண்டும் நாளை காலையில் கூடிப் பேசப் போகிறார்கள்..! இவர்களது பயமும், அவசரமும் சினிமாத் துறையினரில் பெரும்பாலோருக்கு தெரியும் என்றாலும், பலராலும் எதையும் வெளிப்படையாகச் சொல்லத்தான் முடியவில்லை. சங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்கிற வாடிக்கையான மனநிலை அவர்களைத் தடுத்து வருகிறது..!

ஒரே ஒரு முறைதான் காட்டப் போகிறார்கள். அதுவும் 1000 ரூபாய்க்கு.. ஏழரை கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் இதில் 1 சதவிகிதமான ஏழு லட்சம் பேர் மட்டுமே பார்க்க வாய்ப்பு இருந்தும், இதில் எத்தனை பேர் பார்க்கப் போகிறார்கள் என்றும் தெரியாமலும் இதன் பிரதிபலிப்பு தியேட்டர் வசூலில் எதிரொலிக்கும் என்று கலங்குகிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

“நாங்கள் தியேட்டர் வைத்திருப்பதே சினிமாக்களை வெளியிடத்தான். இப்போதைக்கு பெரிய படங்களையும், சின்ன படங்களையும், மீடியம் பட்ஜெட் படங்களையும் படங்களுக்கேற்றவாறு திரையிட்டு வருகிறோம். ஒரு படத்தில் பெறுகின்ற நஷ்டத்தை மற்றொரு படத்தில் ஈடுகட்டும் வகையில்தான் எங்களது தியேட்டர்களில் திரையிடப்படும் படங்களின் தேர்வும் இருக்கிறது. 2 பெரிய பட்ஜெட் படங்களை நாங்களே வாங்கி வெளியிட்டு நஷ்டம் ஏற்பட்டால், அந்த மெகா நஷ்டத்தை ஈடுகட்ட அடுத்த பெரிய படம்தான் தேவை.. அப்போதுதான் எங்களால் விட்ட பணத்தை குறுகிய காலத்தில் உடனேயே மீட்டெடுக்க முடியும்..! 

கமல் சொல்வது போலவே இது பெரிய பணக்காரர்களின் வீட்டு வரவேற்பறையில் தெரியட்டும். ஆனால் அப்போது அந்தக் குடும்பத்தினர் மட்டுமே பார்க்கப் போவதில்லை. குறைந்தபட்சம் தங்களது ஒட்டு மொத்தக் குடும்பத்தையாவது பார்க்க வைத்துவிடுவார்கள். இவர்கள் மல்டிபிளெக்ஸ்களுக்கு வரும் வாடிக்கையான ரசிகர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவர்கள் வீட்டில் பார்த்துவிட்டால், பிறகெப்படி தியேட்டருக்கு வருவார்கள்? மல்டிபிளெக்ஸ்களுக்கும் இதனால் நஷ்டம் வருமே..?  

சரி.. கமல் தன் படத்தின் விநியோகத்தை தானே பொறுப்பேற்று தியேட்டர்களை வாடகைக்கு எடுத்து படத்தை ஓட்டினாலும், டிடிஹெச்சில் படத்தை பார்த்துவிட்ட ரசிகர்கள் தாண்டிய பொதுமக்கள் கண்டிப்பாக தியேட்டருக்கு வர மாட்டார்கள். அப்போது டிக்கெட் கட்டண வசூல் குறையும்..  தியேட்டர் கேண்டீன்களுக்கு இழப்பு ஏற்படும்.. அனைத்து படங்களுமே இது போன்றே வெளியிடப்பட்டு, அனைவருமே வாடகைக்கு தியேட்டரை எடுத்து ஓட்டினால், எங்களுக்கு எப்படி லாபம் கிடைக்கும்..? தியேட்டரில் கிடைக்கும் வாடகை அந்த கட்டிடத்தின் நிலைப்பாட்டுக்கு மட்டுமே பயன்படும்.. ஆனால் நாங்களும் லாபம் பார்க்க வேண்டாமா..? தயாரிப்பாளர் மட்டும்தானே இதில் லாபம் பார்க்க முடியும்..? வெறுமனே வாடகையை மட்டும் வைத்துக் கொண்டு தியேட்டர் ஊழியர்களுக்குச் சம்பளத்தைக் கொடுத்துவிட்டு மிச்சம், மீதியை கவர்ன்மெண்டு எம்ப்ளாயிஸ் மாதிரி வீட்டுக்குக் கொண்டு போவதற்கா நாங்கள் தியேட்டர் நடத்துகிறோம்...?” என்கிறார்கள்.

இன்னொரு தரப்பினரோ, “தற்போது ஒரு பெரிய படம் வெளியிடப்பட்டால்.. நன்றாக இருக்கும்பட்சத்தில் அந்தப் படம் குறைந்தபட்சம் 4 வாரங்களாவது பெரிய தியேட்டர்களில் ஓட்டப்படுகிறது. இப்படி டிடிஹெச்சில் போட்டுவிட்டு தியேட்டருக்கு வரும்போது கூட்டம் குறைவாகி அந்தப் படம் 2 வாரங்கள் மட்டுமே ஓடும் சூழல் வரும்.. மிச்சம் இருக்கும் 2 வாரத்தில் வேறு படங்கள், குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்குமே..?” என்கிறார்கள்.

ஆனால் இதையும் மறுக்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். “இப்போதும் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் வாடகைக்கும், பெர்சண்டேஜுக்கும்தான் படத்தை திரையிடுகிறார்கள். இதில் எங்களுக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது..? வர்றதுக்கு வாய்க்கும், வயித்துக்குமே போதும்ன்னா நாங்க எதுக்கு இவ்ளோ பெரிய கட்டிடத்தை கோடிக்கணக்குல செலவு பண்ணி கட்டி நடத்தணும்..? பேசாம கல்யாண மண்டபமா மாத்திட்டு வீட்ல ஹாயா உக்காருவோமே..?” என்கிறார்கள்..!

“சினிமாக்களை மட்டுமே நம்பி.. அவர்களுக்காகவே நாங்கள் தியேட்டர்களை நடத்தி வருகிறோம். சினிமா தியேட்டர்களில் வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் முடியாது..! கமலை போலவே அடுத்து வரக் கூடியவர்களும் தங்களது படங்களை டிடிஹெச்சில் கொடுத்துவிட்டு பின்பு தியேட்டருக்கு வழங்கி, கூட்டத்தை குறைத்துவிட்டால்,  தியேட்டருக்கு ரெகுலராக வந்துபோகும் பார்வையாளர்களின் கூட்டம் குறையுமே..” என்று திரும்பத் திரும்ப அதே கோணத்திலேயே தங்களது பார்வையைச் செலுத்துகிறார்கள் தியேட்டர் அதிபர்கள்..!

“டிடிஹெச் சந்தாத்தாரர்கள் வெறும் 7 லட்சம் பேர் என்று கணக்கிட்டாலும், இதில் 3.5 லட்சம் பேர் 1000 ரூபாய் கொடுத்துவிட்டாலே, அதில் 35 கோடி வசூலாகிவிடும்..!   கமலுக்கு இப்போதைக்கு இது போதுமானதுதான்..! கமல் நடித்த படம் என்பதால்தான் 1000 ரூபாயை வசூல் செய்கிறது டிடிஹெச் நிறுவனம். இதையே வேறொரு தயாரிப்பாளர் மீடியம் பட்ஜெட் நாயகர்களைக் கொண்டு படமெடுத்து அதனை வெறும் 100 ரூபாய் கட்டணத்திற்கு காட்டினால், அப்போதும் மூன்றரை கோடி ரூபாய் சுளையாகக் கிடைத்துவிடும்..!

ஒரே நாளில், ஒரே செக்கில் 3.5 கோடி ரூபாய் கிடைத்துவிடும் என்று நினைத்து பலரும் இது போன்று மீடியம் பட்ஜெட் படங்களை எடுத்து டிடிஹெச்சுக்கே கொடுத்துவிட்டு காலப்போக்கில் தியேட்டர்களில் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்ற சூழலை உருவாக்கிவிட்டால், அப்போது நாங்களெல்லாம் என்ன செய்வது..?” என்கிறார்கள்..!

“இது இப்படியே தொடர்ந்து…… தமிழ்நாட்டில் கேபிள் கனெக்சன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடி என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வீட்டுக்கு 50 ரூபாய் என்று வாங்கிக் கொண்டு புத்தம் புதிய படங்களை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒளிபரப்புகிறோம் என்று சொன்னால் வாரத்துக்கு 50 ரூபாய்தானே என்ற எண்ணத்தில் மக்கள் தானாகவே முன் வந்து பணம் கொடுப்பார்கள். அப்போது இந்தத் தொகை 10 கோடி சுளையாகக் தயாரிப்பாளருக்குக் கிடைக்கும். இப்போதெல்லாம் மீடியம் பட்ஜெட் படங்களை 3.5 கோடியில் சுலபமாக தயாரித்துவிடலாம்.. கேபிள் ஆபரேட்டர்களுக்கு கொஞ்சம் தொகையைக் கமிஷனாகக் கொடுத்துவிட்டு இது போன்று மறுபடியும், மறுபடியும் டிடிஹெச்சுகளுக்காகவே படமெடுக்க துவங்கினால் சினிமாக்களை மட்டுமே நம்பி தியேட்டர்களை நடத்தி வரும் நாங்களெல்லாம் என்ன செய்ய..?” என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்..! இந்த பயம்தான் இப்போது தியேட்டர் அதிபர்களை பேயாய் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது..!

கமல் மட்டுமே இப்போதைக்கு கலக்ககுரலை எழுப்பியிருந்தாலும், மற்றவர்கள் இந்தப் படத்தின் ரிசல்ட்டை பார்த்துவிட்டு பின்பு யோசிக்கலாம் என்று காத்திருக்கிறார்கள். ஏற்கெனவே தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மாதந்தோறும் குறைந்து கொண்டே செல்கிறது. சமீபத்தில் வெளியான துப்பாக்கி படத்தின் வசூல் ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை. ஏதோ போட்ட காசு கிடைத்துவிட்டது என்று ஜெமினியும், தாணுவும் பெருமூச்சுவிட்டு ஓய்ந்திருக்கிறார்கள்.

தியேட்டர்களுக்கு கூட்டம் வராததற்கு தியேட்டர்களில் நடக்கும் அநியாயக் கொள்ளையான கட்டண உயர்வு மட்டுமே காரணம் அல்ல.. மக்களுக்கும் நாள்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் பல புதுவித பிரச்சினைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. தியேட்டர்களுக்கு சென்று ரிலாக்ஸ் செய்யும் எண்ணம் வராத அளவுக்கு ஓட வேண்டிய நிலைமை இப்போது..! 

குடும்பப் பிரச்சினை.. குழந்தைகளின் படிப்புப் பிரச்சினை.. அலைச்சல் என்று பலதையும் மனதில் வைத்துக் கொண்டுதான் “வீட்டோடு ஓய்வை கொண்டாடுவோம்.. டிவியில் நிகழ்ச்சிகளை பார்த்து டென்ஷன் இல்லாமல் இருப்போம்..” என்ற மனநிலை அநேகம் நடுத்தர வர்க்கத்தினருக்கு வந்துவிட்டது..! 

புதுவசந்தம் படம் ரிலீஸான அன்று திண்டுக்கல் லஷ்மி தியேட்டரில் நான் காலை காட்சி படம் பார்த்துவிட்டு அந்த நாள் முழுவதுமான 5 ஷோக்களையும் தொடர்ந்து பார்த்தேன். அதே நேரம் அரசு அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கும் அண்ணன் ஒருவர், தனது மனைவியுடன் படம் பார்க்க வந்திருந்தவர்.. மதியம், மாலை, இரவு காட்சிகளையும் தொடர்ச்சியாக என்னுடன் இருந்து பார்த்தார்.. அப்போது அவருக்கும், அவரது மனைவிக்கும் அந்தப் படம் மிகப் பெரிய இளைப்பாறுதலை தந்தது..  ரிலாக்ஸை தந்திருந்தது..! இப்போது இப்படி யாராவது படம் பார்க்கிறார்கள் என்று கேள்விப்பட முடியுமா..?

முந்தானை முடிச்சு படத்திற்கு தினமும் புதுமையான விளம்பரங்கள் தினத்தந்தியில் வந்து கொண்டேயிருந்தன..! ஏதாவது ஒரு ஊரில் தொடர்ச்சியாக 4 ஷோ பார்த்த பெண்கள் புகைப்படத்துடன் பேட்டி கொடுத்திருப்பார்கள். 100 நாட்களும் தொடர்ச்சியாக பார்த்ததாகக்கூட சில பெண்கள் பேட்டியளித்திருந்தார்கள்.. அப்போதைக்கு அது சினிமாவின் விளம்பரத் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இன்றைக்கு அப்படியொரு விளம்பரத்திற்குக்கூட ஆட்கள் கிடைக்காது என்பதுதான் உண்மை.!

மக்களுக்கு ஓய்வெடுக்கும் நேரம் குறைந்துபோய் அந்த நேரத்திலும் உழைத்து, உழைத்து பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆவலும், ஆசையும் வெறியாகிவிட்டிருப்பதை கண்கூடாக உணர முடிகிறது..! இதில் அநாவசியமாக சினிமாவுக்காக ஆயிரம் ரூபாய் தனியாக செலவழிக்க வேண்டுமா என்ற அவர்களது சிந்தனை நியாயமானதுதான். அதே நேரம் தியேட்டர்காரர்களும் தங்களது டிக்கெட் கட்டணத்தைக் குறைத்து 10, 20, 30 என்று வைத்தால் பெரிய பட்ஜெட் படங்களைவிடவும், சின்ன பட்ஜெட் படங்களுக்கு அதிகக் கூட்டம் கூடும் என்பது நிஜம்..! 

முதலில் தியேட்டருக்கு வரும் மக்கள் கூட்டத்தை அதிகப்படுத்த வேண்டும். அதற்கான ஒரே வழி தியேட்டர் கட்டணத்தைக் குறைப்பதுதான்.. இதனைச் செய்யாமல் இப்போது இருக்கும் கட்டணம்தான் நியாயமானது என்று தியேட்டர் அதிபர்கள் சொன்னால், அதற்கான பலனையும் அவர்கள்தான் அனுபவிக்க வேண்டும்..! வேறு வழியே இல்லை..!  திருட்டு விசிடி பிரச்சினைக்கும் முழு முதற் காரணம் இந்தக் கட்டண உயர்வுதான்..  மிகப் பெரிய பட்ஜெட் படங்களுக்கும், மிக முக்கியமான படங்களுக்கு மட்டுமே திருட்டு விசிடி வெளிவந்து கொண்டிருக்கிறது.. அதிகம் அறியப்படாத.. வெளிநாட்டு உரிமை கொடுக்கப்படாத சில சின்ன பட்ஜெட் படங்களை திருட்டு விசிடியில் கொடுத்தால்கூட வாங்கவோ, பார்க்கவோ ஆளில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை..! டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்தி, குறைத்துவிட்டால் திருட்டு விசிடிகள் குறையும் வாய்ப்பு உண்டு.

போட்டியாக ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டிருந்த 2 திரையரங்கு உரிமையாளர் சங்கங்களும் இப்போது ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தில் கை கோர்த்துக் கொண்டிருப்பது கமலே எதிர்பார்க்காத ஒரு விஷயம்..! தற்போது கமல் யாருக்கும் நஷ்டமில்லாமல் தியேட்டருக்கு வாடகை கொடுத்தே படத்தை ஓட்டிக் கொள்கிறேன் என்று சொன்னாலும், டிடிஹெச்சில் படத்தைக் கொடுத்தால், அந்தப் படத்தை நாங்கள் எங்கள் தியேட்டரில் காட்ட மாட்டோம் என்பதுதான் இப்போதுவரையிலும் தியேட்டர் அதிபர்களின் ஒருமித்த முடிவாகவே இருக்கிறது..! கமலும் அவர் கருத்தில் பிடிவாதமாகவே இருக்கிறார்..!

என்னைப் பொறுத்தவரையில் இதில் திரையுலகத்தினருக்கு சாதகமும் உண்டு.. பாதகமும் உண்டு என்றே நம்புகிறேன்..! முன்பே சொன்னதுபோல கேபிள் டிவிக்காரர்கள் மூலமாக பொதுமக்களிடம் 50 அல்லது 100 ரூபாய் வாங்கி படத்தைத் தயாரித்து அவர்களுக்கு மட்டுமே காண்பித்துவிடும் திட்டம் வந்துவிட்டால் அப்போது தியேட்டர்களின் கதி அதோ கதிதான்..! கமல், ஷங்கர், மணிரத்னம் படங்கள் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்து எடுக்கப்படும் படங்களை மட்டுமே தியேட்டருக்கு சென்று பார்க்க அவரவர் ரசிகர்கள் விருப்பப்படுவார்கள். குடும்பக் கதைகளையும், காமெடி படங்களையும் வீட்டு தியேட்டரிலேயே பார்த்துவிடலாம் என்று பொதுமக்கள் முடிவெடுத்துவிட்டால் தியேட்டர்கள் முற்றாக அழியும் நிலை ஏற்படும்..!

இன்னொரு பக்கம் படம் நல்லாயிருக்கோ.. இல்லையோ.. நல்ல டைரக்டர்.. நல்ல பேனர்.. நமக்குத் தெரிந்த நடிகர், நடிகைகள், சிறந்த இயக்குநர் என்ற நினைப்பில் மக்கள் 50 ரூபாயைக் கொடுத்துவிட்டு ஒரு மொக்கை படத்தை பார்த்துவிட்டு நொந்து போனாலும் பணம் போட்ட தயாரிப்பாளருக்கு முழுத் தொகையும் ஒரே நாளில் கிடைத்துவிடும் சூழல் உருவாகும் என்பதால் நிறைய தயாரிப்பாளர்கள் உடனுக்குடன் தமிழ்ச் சினிமாவில் நுழைவார்கள் என்பதிலும் எனக்கு  ஐயமில்லை..!

ஆக.. இதில் இருக்கும் பாதகங்களை திரையுலகத்தினர் அனைவருமே தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளும்வகையில் ஒரு கட்டுப்பாடுடன் கூடியவகையில் தியேட்டர்காரர்களுடன்  இணைந்து செயல்படுவதுதான் மிகச் சிறந்தது.. இதில் ஈகோ பார்க்காமல், சினிமா என்னும் துறையை மென்மேலும் வளர்ச்சியடைய வைக்க வேண்டியது கமல் போன்ற மகா கலைஞனின் கையிலும் இருக்கிறது..!