7-ம் அறிவு - சினிமா விமர்சனம்

27-10-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நான் ஹாலிவுட் படங்கள் பார்க்கத் துவங்கிய காலத்தில் இருந்து தற்போதுவரையிலான அமெரிக்காவின் பெருமையை பறைசாற்றும்  படங்களில், பெரும்பான்மையான வில்லன், ரஷ்ய நாடு அல்லது ரஷ்ய ராணுவமாகத்தான் இருந்தது-இருந்து வருகிறது.. 

அமெரிக்கா-ரஷ்யா, இடையே எப்போதும் இருந்துவந்த பனிப்போரை மையமாக வைத்து ஹாலிவுட் நன்றாகவே கல்லா கட்டிவிட்டது. அவைகள் சொல்லிச் சொல்லி வளர்த்த அமெரிக்க மக்களில் இளையோர் அன்றளவும் ரஷ்யா என்றாலே தங்களது விரோத நாடு என்பதை உள்வாங்கிக் கொண்டனர். உலகளவில் அமெரிக்காவை வீழ்த்தவே ரஷ்யா தினம்தினம் அல்லல்படுகிறது என்பது போன்ற பிரமையையும் உருவாக்கி வந்தது ஹாலிவுட் சினிமா.

இப்போது அதுபோன்ற தேச பக்தியை முதன்முதலாக நமக்குள் ஊட்ட முனைந்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். சீனா, இந்தியாவை அழிக்கவே நினைக்கிறது என்று இவரது கற்பனையில் உருவான ட்ரீட்மெண்ட்டுக்கு பொட்டு வைத்து பூ வைக்கும்விதமாக, போதி தர்மர் என்னும் தமிழரும் கிடைத்துவிட... அலங்காரம் பண்ணி முடித்துவிட்டார்..!


நிச்சயமாக இந்தப் படம் தமிழின் முதன்மையான திரைப்படமோ, அல்லது காவியமான, உன்னதமான திரைப்படமோ இல்லை. ஆனால் குறிப்பிடத்தக்கத் திரைப்படம். 

முருகதாஸ் போதி தர்மர் பற்றிக் கூறும்வரையில், எனக்கு இவரைப் பற்றித் தெரியாது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். அதன் பின்புதான் அவரைப் பற்றி விக்கிபீடியாவில் படித்துத் தெரிந்து கொண்டேன். சீன அரசும், சீனர்களும் போதி தர்மர் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்த ஒரு தமிழர்(இது ஒரு பெரிய சர்ச்சையில் உள்ளது. இதனை வேறொரு பதிவில் பார்ப்போம்) என்பதை ஒத்துக் கொண்டு அவருக்குரிய கவுரவத்தைக் கொடுத்திருக்கும்போது, இத்தனை நாட்களாக இதனைப் பற்றி தெரிந்தவர்கள் ஏன் வெளியில் சொல்லாமல் இருந்தார்கள் என்று தெரியவில்லை.

தமிழ்ச் சினிமா வர்த்தகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக குங்பூ சண்டை படங்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. குங்பூ ஆஃப் செவன் ஸ்டெப் என்ற திரைப்படமும், ஷாலின் டெம்பிள் என்ற திரைப்படமும் தமிழ்நாட்டில் சக்கை போடு போட்ட திரைப்படங்கள். இவற்றை பார்த்துதான் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் சண்டைக் காட்சிகளில் கொஞ்சம் முனைப்பையும், அக்கறையையும் காட்டினார்கள் நமது இயக்குநர்கள். ஜாக்கிசானின் திரைப்படங்களின் ரிலீஸின்போது கமல், ரஜினிக்கு வரும் கூட்டத்தைப் போல கூட்டம் கூடியதை, தமிழ்த் திரையுலகம் கண்டிருக்கிறது.

இத்தனை நெருங்கிய தொடர்புகள் இருந்தும், இந்த்த் தகவல் மட்டும் இத்தனை நாட்களாக வெளியில் வராமல் இருந்தது ஏன் என்றுதான் தெரியவில்லை. 

இப்போது இதனை உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறையோடு போதி தர்மர் பற்றி திரைப்படமெடுக்க முன் வந்த முருகதாஸின் முயற்சிக்கு எனது வந்தனங்கள். வேறு யாராவது எடுத்திருந்தால்கூட போதிதர்மர் இந்த அளவுக்கு தமிழர்கள் மத்தியில் ரீச் ஆகியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த வகையில் முருகதாஸ் வணக்கத்துக்குரியவர்..!

திரைப்படமாக பார்க்கப் போனால் முதல் 20 நிமிடங்களில் எடுத்திருப்பதையே முழுத் திரைப்படமாக உருவாக்கியிருக்கலாம். அதனை இன்றைய காலக்கட்டத்தோடு ஒப்பிட்டு இன்றைய தமிழ்ச் சினிமாவின் வியாபாரத்துக்கும் ஏற்றார்போல் செய்ய முனைந்தது முருகதாஸின் தவறல்ல. ஆனால் படம் முழுமையடையாமல் இருக்கும்போது, இத்திரைப்படம் தமிழ்ச் சினிமாவின் காவியப் படம்.. இதுபோல் எவரும் படம் எடுக்கவில்லை.. கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம் என்றெல்லாம் அவர் பேசியது இப்போது படத்தின் ரிசல்ட்டுக்கே எதிராகப் போய்விட்டது..

இப்படியெல்லாம் பேசாமல், “இது புதுமையான பேக்கிரவுண்ட்டில் வழக்கமான கரம் மசாலா படம்தான்..” என்று அண்ணன் முருகதாஸ் சொல்லிவிட்டுப் போயிருந்தால், இத்தனை சர்ச்சைகள் வந்திருக்காது..! ஓவர்.. படத்துக்கு வருவோம்..!

முதல் 20 நிமிடங்களில் போதி தர்மரின் வாழ்க்கை வரலாறு சொல்லும்போது ஏற்றி வைத்த பெப், அடுத்த சில காட்சிகளிலேயே நமநமத்துப் போய் கீழிறங்கிவிட.. அதற்குப் பிறகு கடைசி 20 நிமிடங்களில் மட்டுமே படத்தில் மனம் லயிக்கிறது. இடைப்பட்ட நேரங்களில் நடப்பதையெல்லாம் நல்ல இயக்கமாக இருந்தும், ஒரு சீரியல் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டியதாகிவிட்டது.. சர்க்கஸ் கலைஞராக வரும் சூர்யாவின் பார்த்தவுடன் காதலிலேயே படம் சாதாரண படமாகிவிட்டது.. முருகதாஸின் உதவியாளர்கள் இதைக் கூடவா எடுத்துச் சொல்லாமல் விட்டார்கள்..!?

போதி தர்மருக்காக சூர்யா மெனக்கெட்டிருக்கிறார் என்றாலும் சண்டைக் காட்சிகளில் கிராபிக்ஸை பயன்படுத்தி அதையும் கொலை செய்திருக்கிறார்கள். முதல் ஒரு வாரத்தில் படம் பார்க்கப் போகும் அத்தனை தமிழ் சினிமா ரசிகர்களும், இதனால் ஏமாறப் போவது நிச்சயம். குங்பூ படங்களும், ஜாக்கிசானும் எதை குங்பூ என்று சொல்லியிருந்தார்களோ, அதுவெல்லாம் இல்லாமலேயே இதுதான் குங்பூ சண்டை என்று சொல்லி முடித்திருக்கிறார் முருகதாஸ். 

சூர்யா போதி தர்மர் கேரக்டரில் அழகாக இருக்கிறார். நஞ்சு கலந்திருக்கும் உணவைக் கையில் எடுத்து சுவைக்கும்போது அவர் முகம் காட்டும் எக்ஸ்பிரஷன்.. இது சூர்யா என்கிறது..! இந்த சூர்யா சண்டையிடும் காட்சிகளும் குங்பூ கலைக்குப் பொருத்தமானதாக இல்லை என்பதால் அகாசய சூரனாகவே காட்சியளிக்கிறார். சர்க்கஸ் சூர்யா வழக்கம்போல காதலிக்க அலையும் பேட்பாயாகவே தெரிகிறார். சர்க்கஸிஸ் செய்திருக்கும் இவருடைய காட்சிகளைத்தான் இப்படி பாராட்டியிருந்தாரா முருகதாஸ்..? ஐயோடா முருகா.. இதைத்தான் சொல்ல முடியும்..!

சர்க்கஸ் சூர்யா சீரியஸாவதை மிக காமெடியாக எடுத்திருக்கிறார்கள்.  அப்போதுதான் தன்னை சர்க்கஸ் வாசலில் இறக்கிவிட்டுச் செல்லும் ஸ்ருதியைப் பற்றி சித்தப்பா சொல்லும் செய்தியைக் கேட்டவுடன் படாரென்று பொங்கியெழுந்து ஸ்ருதியின் வீட்டுக்குச் சென்று கொதிக்கும் அந்தக் காட்சி.. டிவி சீரியல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது..!

ஸ்ருதிக்கு மிக பொருத்தமான அறிமுகம். எதிர்பார்க்கவே இல்லை இத்தனை அழகாக நடிப்பார் என்று.. ஸ்ருதியின் கண்கள் ஏதோ சொல்ல வருவதைத்தான் அவருடைய அறிமுகக் காட்சியில் காட்டியிருக்க வேண்டும். ஆனால் இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் அந்தக் காட்சியில் கோட்டைவிட்டுவிட்டார்கள். 

குளோஸப் காட்சிகளில் வாய்ஸ் மாடுலேஷன் சிறிதளவுகூட மாறாமல், சிந்தாமல், சிதறாமல் இருக்கிறது.. அழகு.. சூர்யாவைவிடவும் அழகாக நடனமாடியிருக்கிறார். கப்பல் மீது ஆடும் அந்த ஒரு ஸ்டெப் போதும் அம்மணிக்கு.. கான்பரன்ஸில் தமிழர்களைப் பற்றி பொங்கியெழும் காட்சியில் ஒரு துளி கண்ணீர்கூட சிந்தாமல் கண்ணீரைத் தேக்கி வைத்த நிலையில் ஸ்ருதியின் நடிப்பு குறிப்பிடத்தக்கது.. ஆடைக் குறைப்பில் அதிகம் அக்கறை காட்டாமல் அவரை நடிக்க வைப்பதிலேயே முருகதாஸ் தீவிரம் காட்டியிருக்கிறார்..!

இந்தியாவையும், இலங்கையும் போட்டுத் தாக்கிவிட்டு, சந்தடிச்சாக்கில் இட ஒதுக்கீட்டின் மீதும் பாய்ந்திருக்கிறார் முருகதாஸ். யாரும் இதை இன்னும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. தப்பித்தார் இயக்குநர். படத்தில் தமிழர்கள் சம்பந்தப்பட்ட வசனத்திலும், இலங்கையை மறைமுகமாகத் தாக்கிய வசனத்திலும், இலங்கை சென்சார் போர்டு கத்திரி போட்டுவிட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன..!

சர்க்கஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பிரமிக்க வைக்க எத்தனையோ இருந்தும் ஒளிப்பதிவு மந்தமாக இருந்த்து ஏன் என்று தெரியவில்லை.  சூர்யா, ஸ்ருதியின் பர்ஸை லவட்டும் காட்சிகளிலெல்லாம் கேமிராமேனின் லென்ஸும் லவட்டாகிவிட்டது போலும்.. சில இடங்களில் ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு ஒன்றுமேயில்லை..

போதி தர்மர் சம்பந்தப்பட்ட காட்சிகள், பாடல் காட்சிகள், இறுதிக் காட்சியிலும் மட்டுமே சுழன்று, சுழன்று வேலை பார்த்திருக்கிறார்கள். மற்ற நாட்களில் அசோசியேட் வேலை பார்த்திருப்பாரோ..?

வில்லன் நடிகரான அந்த டோங்லீ. நல்ல தேர்வுதான் ஆனால் அவர் அளவுக்கு சூர்யாவுக்கு குங்பூ தெரியாத்தால் ஹீரோவுக்காக கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறார்..! ஸ்ருதிக்கு உதவிக்கு செய்யும் மாலதி என்ற பெண் நல்ல அழகு. சினிமாவுக்கேற்ற முகம்.. முயன்றால் ஹீரோயினாகலாம்..!

நாய்க்கு ஊசி போட்டு நோயைப் பரப்பும் காட்சிகளின் பிரம்மாண்டம் பயமூட்டுகிறது. இந்தக் காட்சியை விஸ்தாரமாக காட்டினாலும் எடுக்கப்பட்டவிதம் மிக நேர்த்தி..! 

லீ, சூர்யா, ஸ்ருதி விரட்டல் காட்சிகளில் பலவற்றை அடுத்த்து இதுதான் என்பதை தொடர்ச்சியாக சினிமா பார்த்து வருபவர்கள் மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம். நாம் நினைப்பதுதான் ஸ்கிரீனிலும் வருகிறது. நம்மை கெளரவிக்க வேண்டும் என்பதற்காகவே முருகதாஸ் இதைச் செய்திருக்கிறாரோ..? வாழ்க இயக்குநர்..!

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ஆடியோ ரிலீஸின்போதே வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது முன் அந்திச் சாரல் பாடல். படமாக்கப்பட்டவிதமும் பிரெஷ்னஸ்.. அழகு.. பின்னணி இசையில் பல இடங்களில் பரபரப்பை ஊட்டியிருக்கிறார். சில இடங்களில் அதுவே அலங்கோலமாகவும் தெரிகிறது. அடிக்கடி வரும் தீம் மியூஸிக் காதைக் குடைகிறதே தவிர.. வேறு எதையும் செய்யவில்லை..!  

இறுதியில் டோங்லீ வீழ்வார் என்று தியேட்டர் வாட்ச்மேனுக்கே தெரியுமென்பதால் அதிக சுவாரஸ்யமே இல்லாமல் போய்விட்டது சினிமா ரசிகர்களுக்கு.. லாஜிக் மீறலில் இந்தப் படத்தில் செய்திருக்கும் தவறுகளைப் பட்டியலிட்டால் அதை வைத்தே இன்னொரு சினிமா எடுத்துவிடலாம்..! 

ஹிப்டினாசம் முறையிலேயே அனைவரையும் திசை திருப்ப முடியுமெனில், ஸ்ருதியையும், சூர்யாவையும் மடக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அத்தனையையும்விட்டுவிட்டு 16 ரீல்களுக்கு கதையை நகர்த்த வேண்டி இத்தனை அதகளம் செய்திருக்கிறார்கள்.

நோக்கு வர்மக் கலையால், போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே நுழைந்து பல காவலர்களை சாகடித்த பின்பும் அவரைத் தேடாத போலீஸ் என்று சொல்லி தமிழ்நாட்டு போலீஸை மிகவும் கேவலப்படுத்திவிட்டார் முருகதாஸ். இந்தப் படத்தை முருகதாஸின் கேரியரில் மிக முக்கிய படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு போனதற்கு இந்த ஒரு லாஜிக் மீறலையே உதாரணமாகச் சொல்லிவிடலாம்..!  

டோங்லீ இறுதிக் காட்சியில் மரத்தையே தூக்கும் டூ மச்சான ஷாட்டுகள், சர்க்கஸை நிஜமாகவே கோமாளிகளின் கூடாரமாகக் காட்டியது.. 300 கோடி ரூபாயை ஸ்விஸ் வங்கியில் போட்டிருப்பதாக சாதாரண மெயில் மூலம் கண்டுபிடிப்பது.. சூர்யா திடீரென்று தனி டிராக்கில் சென்று பேராசிரியரை கடத்துவது.. சூர்யாவின் குடும்பத்தினரின் வருகையும், ஆன் தி ஸ்பாட்டில் காணாமல் போவதுமாக.. எண்ணற்ற சினிமா விதிமீறல்களை வைத்திருப்பதால் முருகதாஸ் தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த முறை தோற்றுப் போனவராகவே காட்சியளிக்கிறார்..!

நான் முன்பே சொன்னதுபோல சீனா-இந்தியா எதிர்ப்பு என்ற ஒன்றைக் காட்டி இந்திய தேசியத்தைக் கட்டிக் காப்பதற்காக போதி தர்மரின் டி.என்.ஏ. மீண்டும் தோண்டியெடுக்கப்படுகிறது என்று படத்தின் ஒன்லைனை வைத்துவிட்டு, “தமிழர்கள்ன்னா இந்தியாவிலேயும் அடிக்கிறாங்க.. வெளிநாட்டுலேயும் அடிக்கிறாங்க.. எங்க போனாலும் அடி வாங்குறது தமிழர்கள்தான்”னு கொந்தளிக்கிற டயலாக்கை வேறு வைத்திருப்பது இடிக்கிறதே..! 


இந்திய தேசியம் இருந்தாலென்ன? நாசமாப் போனாலென்ன என்பதுதான் இன்றைய பெருவாரியான தமிழர்களின் மனநிலை.  இதையாவது அண்ணன் முருகதாஸ் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளட்டும்..!

நிச்சயம் பார்க்கக் கூடாத, வேண்டாத படமல்ல. அதே சமயம் பார்த்தே தீர வேண்டிய படமும் அல்ல. நேரம் கிடைத்தால் பாருங்கள்..!

படத்தின் டிரெயிலர் :


உள்ளாட்சித் தேர்தல் - ஒரு பார்வை..!


25-11-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..! 

ஜெயலலிதா எதை எதிர்பார்த்தாரோ அது கிடைத்துவிட்டது..! கருணாநிதி எதை எதிர்பார்க்கவில்லையோ அதுவும் கிடைத்துவிட்டது. விஜயகாந்த், ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின் செல்வாக்கு என்ன என்பதையும் அவர்களுக்கு உணர்த்தியாகிவிட்டது. வைகோவுக்கு அவரது பெயருக்குள்ள செல்வாக்கு இருப்பது மட்டுமே மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஜெயிக்க வைக்கக் கூடிய அளவுக்கான தொண்டர்களை இன்னமும் அவர்கள் பெறவில்லை என்பது சொல்லப்பட்டுவிட்டது. பாரதீய ஜனதாவுக்கு மாற்று ஆள் தேடிக்கிட்டிருக்கோம் என்ற சிக்னலை கொடுத்தாகிவிட்டது.. ஆனால் தமிழகத்து மக்களுக்குத்தான் என்ன கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை..!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலே முறைகேடாக நடத்தப்பட்ட ஒரு தேர்தல் என்று நான் கருதுகிறேன்.. டி.என்.சேஷன் காலத்தில் மயிலாப்பூர் இடைத்தேர்தலில் நடத்திய அத்தனை அட்டூழியங்களையும் வொயிட் அண்ட் வொயிட் டிரெஸ் போட்டு கச்சிதமாக அரிவாள், கத்திகளை கையில் எடுக்காமல், வன்முறையை கொஞ்சமும் சிந்தவிடாமல், கணிணியைப் பயன்படுத்தியே அனைத்துக் கட்சிகளின் கழுத்தையும் அறுத்துவிட்டார் ஜெயலலிதா.

இப்படித்தான் தேர்தலை நடத்தி, இப்படித்தான் ஜெயித்தாக வேண்டும் என்று ஜெயலலிதா ஏற்கெனவே நினைத்திருந்ததால் அதற்கேற்ற தலையாட்டி பொம்மையாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சோ.அய்யரை அந்தப் பதவியில் உட்கார வைத்ததே இந்த முறைகேட்டின் முதல் காட்சி.

எந்தெந்த தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்பது ஜெயல்லிதாவுக்கும், சோ.அய்யருக்கும் மட்டுமே தெரியும் என்ற அளவுக்கு ஏற்பாடுகளை செய்துவிட்டு, தான் மட்டும் கனகச்சிதமாக பெண்களுக்குரிய தொகுதிகளில் பெண்களையே தேடிப் பிடித்து அறிவித்துவிட்டு அதன் பின்பே தேர்தல் கமிஷனின் அறிவிப்பை வெளியிடச் செய்த ராஜதந்திரம், கோவிலில் கன்னம் வைத்து திருடுவதற்குச் சமமானது..!

தேர்தல் தேதி அறிவித்த பின்பும், கூட்டணி உண்டா இல்லையா என்பதையே தன்னை நம்பி வந்த கட்சிகளிடம் தெரிவிக்காமல் நாட்களைக் கடத்தி அவர்களை அலைபாய வைத்து கடைசியில் கொடுப்பதை வாங்கிக் கொண்டு கையது, வாயது பொத்திக் கொண்டு செல்லுங்கள் என்று சர்வாதிகாரமாகச் சொல்லி அவர்களை நட்டாற்றில்விட்டது நம்பிக்கை துரோகம். இதுதான் அரசியல் ராஜதந்திரம் எனில், இதற்கான பலனும் நிச்சயமாக ஜெயலலிதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்றேனும் ஒரு நாள் கிடைக்கத்தான் போகிறது..!

தி.மு.க.வின் அமைச்சர்கள் பலர் மீதும் வழக்குகள் பாய்ந்தவண்ணம் இருந்தன. இருக்கின்றன. இதில் பலரும் தவறுகள் செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த்தில் தவறில்லை. ஆனால் அதே சமயத்தில் தி.மு.க. ஆட்சியில் இவர்கள் சொல்பேச்சு கேட்டு பாதிக்கப்பட்ட பொது மக்களின் புகார்களை வாங்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது இந்தக் கைதுகளைக்கூட தனது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தத்தான் என்பது தெளிவாகவே தெரிகிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அவரது மகன் கைப்புள்ள ஸ்டாலினும் தி.மு.க. ஏன் ஆட்சியை இழந்தது என்பதை புரிந்து வைத்திருந்தும் அது தெரியாததுபோல் நடிக்கிறார்கள். திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் நேருவையே நிறுத்தியது படுமுட்டாள்தனம். தி.மு.க. என்ற கட்சி மீதுள்ள கோபத்தைவிட நேரு மீதுதான் திருச்சி மாவட்ட மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதைக்கூட புரிந்து கொள்ளாத இவர்களது கட்சித் தலைமையை என்னவென்றுதான் சொல்வது..?

நேரு மற்றும் அவரது உறவினர்களின் ஆதிக்கம் அரசு அதிகாரத்தில் எத்தனை தூரம் மலிந்து போய் இருந்தது என்பது திருச்சி மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாக உள்ளது. இத்தனை நடந்தும் மீண்டும் நேருதான் எமது வேட்பாளர் என்று தி.மு.க. தலைமை அறிவித்ததற்கு கிடைத்த செருப்படிதான் சென்ற தேர்தல் வித்தியாசத்தைவிட 1 மடங்கு வித்தியாசத்தை கூட்டி பொதுமக்கள் அளித்தது..! நேருவைவிட வேறு யாரையாவது நிறுத்தியிருந்தால்கூட வெற்றி வித்தியாசம், இந்த அளவுக்கு போயிருக்காது என்றே நான் நம்புகிறேன்..!  

உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவின் திருவிளையாடல்களை முன்னரே ஊகித்துவிட்ட கருணாநிதி, தானும் அவசரம் அவசரமாக வேட்பாளர்களை நிறுத்தி வைத்து களத்தில் குதித்துவிட்டார். ஆனால் எதைக் காரணமாக வைத்து மக்களிடம் ஓட்டு வாங்குவது என்பதில்தான் தவறிவிட்டார். சந்திக்கு சந்திக்கு, ஊருக்கு ஊர் ஜெயலலிதா ஊதித் தள்ளிய ஸ்பெக்ட்ரம் ஊழலையும், தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் அட்டூழியத்தையும் கருணாநிதியாலும், ஸ்டாலினாலும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியவில்லை. நடப்பவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்.

தமிழகத்தில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன இவை அனைத்திலும் சேர்த்து மொத்தம் 1,32,467 பதவியிடங்கள் உள்ளன. இதில், 19,646 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

அ.தி.மு.க., 9,864 பதவிகளை கைப்பற்றியுள்ளது.  சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, சேலம், தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு ஆகிய 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க.வே கைப்பற்றியுள்ளது. 

10 மாநகராட்சிகளில் உள்ள மொத்த வார்டுகளில், 580 வார்டுகளை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. 124 நகராட்சிகளில் 89 நகராட்சித் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது 1,680 நகராட்சி வார்டுகளையும், 285 பேரூராட்சிகளையும், 2,849 பேரூராட்சி வார்டுகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 574 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 3,797 பதவிகளையும் அதிமுக பிடித்துள்ளது. அதிமுக மொத்தமாக 30.02 சதவீத வாக்குகளை அள்ளியுள்ளது. நகர்ப்புறத்தில் 39.24 சதவீத வாக்குகளையும், கிராமப்புறங்களில் 38.69 சதவீத வாக்குகளையும் அக்கட்சி பெற்றுள்ளது.

அதிமுகவின் இந்த மாபெரும் வெற்றிக்கு என்ன காரணம் என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. சமச்சீர் கல்வி திட்டத்தில் ஜெயல்லிதா செய்த குளறுபடி மட்டுமே அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு அவர் மீது அதிருப்தி ஏற்பட்ட ஒரே காரணம். அந்த ஒரு காரணத்தை அப்போதே மக்கள் மறந்துவிட்டார்கள் போலும். மேலும், தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது... இந்தம்மா ஆட்சிக்கு வந்தால்தான் இதுவெல்லாம் நடக்கும்போலிருக்கு என்ற நம்பிக்கையை மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்த வெற்றிகள் ஜெயலலிதாவிற்கு கிடைத்திருக்கிறது. 

இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தான் சிறைக்குள் போகவிருக்கும் நெருக்கடியான காலக்கட்டத்தில் கட்சிக்குக் கிடைத்திருக்கும் இந்த ஜாக்பாட்டை ஜெயலலிதா எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை..

தி.மு.க. உள்ளாட்சி அமைப்புகளில் 4059 பதவிகளை கைப்பற்றியுள்ளது. 23 நகராட்சித் தலைவர் பதவியையும் 121 பேரூராட்சித் தலைவர் பதவியையும் திமுக கைப்பற்றியுள்ளது. 10 மாநகராட்சி வார்டுகளில் 129 கவுன்சிலர் பதவிகளையும், நகராட்சி வார்டுகளில் 963 பதவிகளையும், பேரூராட்சி வார்டுகளில் 1,820 பதவிகளையும், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 27 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 976 பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. திமுகவுக்கு 26.09 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இக்கட்சிக்கு நகர்ப்புறங்களில் 26.67 சதவீத வாக்குகளும், கிராமப்புறங்களஇல் 25.71 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

அ.தி.மு.க.வுக்கு அடுத்த நிலையில் தி.மு.க. என்றாலும் 10 மாநகராட்சிகளையும் ஒருசேர பறி கொடுத்த அபல நிலையில் தி.மு.க. உள்ளது. மதுரையில் குட்டி முதல்வராக கோலோச்சிய அஞ்சாநெஞ்சன் அழகிரியின் சொந்த வீடு இருக்கும் சத்யசாய் நகரை உள்ளடக்கிய வார்டில் தி.மு.க. உறுப்பினர் 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதை மதுரை மக்கள் நல்ல சகுனமாகத்தான் பார்க்கிறார்கள்.. 2-வது இடத்தைக் கூட பிடிக்க முடியாமல் 871 ஓட்டுக்களே பெற்று 4-வது இடம் எனில், அழகிரியின் மீது அந்தப் பகுதி மக்களுக்கு இருக்கும் பாசமும், தி.மு.க. மீதான பற்றும் தெளிவாகவே புரிகிறது..! 

இது மட்டுமா.. சென்னையில் தமிழினத் தலைவர் குடியிருக்கும் கோபாலபுரம் பகுதியின் 111-வது வார்டையும் முதன்முறையாக அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.. தான் குடியிருக்கும் பகுதியிலேயே செல்வாக்கை இழந்துவிட்டார் தாத்தா. கூடவே தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயம் அமைந்திருக்கும் தேனாம்பேட்டை 117-வது வார்டிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது. 

இப்படி அ.தி.மு.க.வுக்கு மாற்றாக உள்ள தி.மு.க.வுக்கு மரண அடி கொடுத்திருக்கும் நிலையில் தி.மு.க. தற்போது தனது கட்சியையும், கட்சியினரையும் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இந்தக் கேவலமான தோல்வி எதனால்.. என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் மிகவும் சென்சிட்டிவ்வான கல்வி விஷயத்தில் தாறுமாறாக விளையாடினார். இதனை அவர்களின் கூட்டணிக் கட்சிகள் உட்பட அனைவருமே கண்டித்தும், ஏசியும் பேசி வந்தார்கள். இந்தக் குழப்பத்தை ஒருவாறு சமாளித்திருந்தாலும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இப்போதும் பிள்ளைகளுக்காக வீட்டில் கஷ்டப்படுவது அவர்கள்தானே.. ஜெயலலிதாவுக்கு நிச்சயம் ஒரு ஷாக் கொடுப்பார்கள் என்று இந்த ஒரு விஷயத்தை வைத்து மட்டுமே கங்கணம் கட்டி அலட்சியப்படுத்தினார்கள் தி.மு.க. தலைவர்கள்.
மக்கள் இதனையொரு பொருட்டாகவே கருதவில்லை என்பது இந்த்த் தேர்தலின் மூலம் தெரிந்துவிட்டது. 

இனி தி.மு.க. செய்ய வேண்டியது அடுத்த வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஊழல் மயமான கட்சி என்ற அவப் பெயரிலிருந்தும், அராஜகம், ரவுடிகள், குண்டர்களுடன் நெருங்கியத் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களிடமிருந்தும் கட்சியைக் காப்பாற்ற வேண்டியதும் இருக்கிறது. இதனை முறைப்படி செய்தால், அதன் பலன் அப்போது அவர்களுக்குக் கிடைக்கும். இல்லையெனில் அடுத்த பொதுத் தேர்தலில் ஒரு எம்.பி. தொகுதியில்கூட ஜெயிக்க முடியாமல் போகும் வாய்ப்புண்டு..!

தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு தன்னைவிட்டால் மாற்றில்லை என்று செயல்பட்ட விஜயகாந்துக்கும் கொஞ்சம் அதிர்ச்சி வைத்தியம் கிடைத்துள்ளது. 857 பதவிகளை மட்டுமே பிடித்து சுயேச்சைகளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது தே.மு.தி.க. 2 நகராட்சித் தலைவர் பதவிகள், 2 பேரூராட்சித் தலைவர் பதவிகள், மாநகராட்சிகளில் மொத்தமே 8 கவுன்சிலர் பதவிகள் இவ்வளவுதான் புரட்சிக் கலைஞருக்குக் கிடைத்துள்ளது.

ஆனால் இக்கட்சியின் வாக்கு வங்கி கிட்டத்தட்ட ஒரே நிலையாக உள்ளது. கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் தனியாக போட்டியிட்ட இக்கட்சிக்கு 8.38 சதவீத வாக்குகள் கிடைத்தன. லோக்சபா தேர்தலில் 10.01 சதவீத வாக்குகளை தே.மு.தி.க. பெற்றது. தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு 10.11 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த லோக்சபா தேர்தலைவிட லேசான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது தேமுதிக. இருந்தாலும் வெற்றி பெற்ற இடங்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த காரணத்தினாலும், தி.மு.க. மீதான கடுமையான எதிர்ப்பில் இருந்த காரணத்தினாலும்தான் தற்போது தான் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தில் இருப்பதை விஜயகாந்த் உணராமல் இருக்கிறார். இதற்கான பாடம் இது.! சட்டசபையில் உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக அவர் செயல்படவில்லை. ஜெயல்லிதா கோபித்துக் கொள்வாரே என்பதற்காக அமைதியாக இருந்த அவரை இனியும் இதுபோல் அமைதியாகவே இருந்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் வாக்காளர்கள். 

இனி வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாது.. மிஞ்சிப் போனால் 3-வது அணியாக பல கட்சிகளை சேர்த்து வைத்து போராட வேண்டும். அப்படி போரடினாலும் ஜெயல்லிதா மக்களுக்கு வெறுப்பு வரும் அளவுக்கு ஆட்சியை நடத்த வேண்டும். அப்போதுதான் ஓட்டுக்கள் மாறி விழுகும். அப்படியொரு சூழலுக்கு ஜெயல்லிதா தனது கட்சியைத் தள்ள மாட்டார் என்பதனால் ஒரு முறை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அனுபவித்த பெருமை மட்டுமே விஜயகாந்துக்கு கிடைக்கும் என்றே நம்புகிறேன்..!

4-வது பெரிய கட்சியும் தமிழர் விரோதக் கட்சியுமான காங்கிரஸ் கட்சிக்கும் இத்தேர்தலில் மரண அடி கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் கிடைத்த பதவிகள் 740. இதில், 24 பேரூராட்சிகளும் அடங்கும். அந்தக் கட்சிக்கு ஒரு நகராட்சிகூட கிடைக்கவில்லை.  இக்கட்சிக்கு 5.71 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. 

தங்கபாலுவும், இளங்கோவனும் தங்களுக்கு இடையேயான விளையாட்டை நிறுத்திக் கொண்டு ஒரே ஜீப்பில் தேர்தல் பிரச்சாரம் செய்தாலும், காங்கிரஸை மக்கள் சீண்டவில்லை. இப்போது ஜெயித்திருப்பவர்களும் அவரவர் பகுதிகளில் தங்களுக்கு இருக்கும் சொந்த செல்வாக்கினால் ஜெயித்தவர்கள் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.

வாக்காளர்கள் அடுத்தபடியாக வெளுத்துக் கட்டியிருப்பது பாட்டாளி மக்கள் கட்சியை. எங்களைப் புறக்கணித்துவிட்டு யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது என்றெல்லாம் அறைகூவல் விடுத்த டாக்டர் ராமதாஸின் இன்றைய நிலைமை அதோ கதிதான்..! 2 மாநகராட்சி கவுன்சிலர்கள், 60 நகராட்சி கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்துக்களில் 2 தலைவர் பதவி, 108 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், மாவட்டப் பஞ்சாயத்து உறுப்பினராக 3, மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாக 225 என்று மொத்தமாக 400 பதவிகளை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. இக்கட்சி பெற்ற வாக்குகளின் சதவிகிதம் வெறும் 3.55 மட்டுமே..!

இவருக்கு இது தேவைதான். தனது மகனது நல்வாழ்க்கைக்காகவே கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார் என்பதை தமிழகத்து மக்கள் தெள்ளத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி வலுவாக இருப்பதாக சொல்லிக் கொள்ளும் தமிழகத்தின் வட மாவட்டங்களிலேகூட ஒரு நகரசபையைக் கூட இவர்களால் கைப்பற்ற முடியவில்லை என்னும்போது கட்சி மக்களிடத்தில் நம்பிக்கையைப் பெற இன்னமும் போராட வேண்டியிருக்கிறது என்பதை இப்போதாவது ராமதாஸ் புரிந்து கொள்ளட்டும்..!

இந்தத் தேர்தலில் எனக்கு வருத்தமளித்த விஷயம் ம.தி.மு.க.வை மக்கள் புறக்கணித்திருப்பதுதான். தற்கால அரசியலுக்கு ஏற்றவகையிலான குணநலன்களை பெற்றிருக்கும் வைகோவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். ஆனால் வைச்சால் குடுமி, அடித்தால் மொட்டை என்பதைப் போல வாக்காளப் பெருங்குடி மக்கள் அதிமுகவை விட்டால், தி.மு.க.வுக்கும், இவரைவிட்டால் அவருக்குமாக ஓட்டளித்து புதியவர்களை வளர்த்துவிட மறுக்கிறார்கள். தமிழகத்தின் சீரழிவுக்கு நிச்சயமாக ஒரு புறம் தமிழகத்து வாக்காளர்களும் காரணமாவார்கள்.

மதிமுகவுக்கு இந்தத் தேர்தலில் 11 மாநகராட்சி கவுன்சிலர்கள், 1 நகராட்சித் தலைவர், 49, நகர சபை உறுப்பினர்கள், 7 கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், 82 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், 2 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 42 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர்கள் என்று மொத்தம் 193 பதவிகள் கிடைத்துள்ளன. பெற்ற வாக்குகளின் சதவிகிதம் 1.7.

ஈழப் பிரச்சினையில் கடந்த 35 ஆண்டு காலமாக வைகோ எடுத்திருக்கும் நிலையான உறுதிப்பாடு பாராட்டத்தக்க ஒன்று. அதே சமயம், தமிழகத்து விஷயத்தில் அவர் அவ்வப்போது எடுத்த சில முரண்பாடுகள்.. கட்சியினரை தக்க வைத்துக் கொள்ளாதது.. தன்னைத் தவிர நட்சத்திரங்களை கட்சியில் நிலை நிறுத்தாதது போன்ற விஷயங்களால்தான் மக்களுக்கு அவர் மீது இன்னமும் பிடிப்பு வரவில்லை என்றே நினைக்கிறேன். மக்கள் மாற வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அதே நேரத்தில் வைகோவும் அதற்குத் தயார் நிலையில் தனது கட்சியினரை வைத்திருக்க வேண்டும்.. இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நான் ஒரு நல்லவன் என்ற சிம்பலை மட்டும் வைத்துக் கொண்டே காலத்தை ஓட்ட முடியும்..?

இந்தத் தேர்தலில் ஆச்சரியமான ஒரு விஷயம் பா.ஜ.க.வுக்கு கிடைத்திருக்கும் சில வெற்றிகள்தான். தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சில பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு பெற்றிருக்கும் இக்கட்சி 2 நகராட்சித் தலைவர் பதவி, 4 மாநகராட்சிக் கவுன்சிலர்கள், 37 நகராட்சி கவுன்சிலர்கள், 13 பேரூராட்சித் தலைவர்கள், 181 கவுன்சிலர்கள், 2 வார்டு உறுப்பினர்கள் என குறிப்பிட்டுச் சொல்லும்படியாக வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சி பெற்ற வாக்குகள் சதவிகிதம் 1.35.

வரும்காலத்திலும் இக்கட்சி தனித்து நிற்கும் சூழலே தென்படுவதால் இதனுடைய வளர்ச்சியை மற்றக் கட்சிகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. சிற்சில இடங்களில் பல முக்கிய வேட்பாளர்களின் வெற்றியை இக்கட்சி வேட்பாளர்கள் தடுத்துள்ளார்கள். அகில இந்திய அளவிலான இக்கட்சியின் மதம சார்ந்த கொள்கைகள் மாறாதவரையில் இக்கட்சியின் வாக்கு சதவிகிதம் உயர வ்ழியில்லை என்றே நினைக்கிறேன்..!

தேமுதிகவின் கூட்டணிக் கட்சியாக போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 மாநகராட்சி கவுன்சிலர்கள், 2 நகராட்சித் தலைவர்கள், 20 நகராட்சி கவுன்சிலர்கள், 5 டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், 101 டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 2 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், 26 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என்று 159 பதவிகளும் கிடைத்துள்ளன. பெற்ற வாக்குகளின் சதவிகிதம் 1.02

இதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 99 பதவிகளே கிடைத்துள்ளன. 4 மாநகராட்சி கவுன்சிலர்கள், 10 நகராட்சி கவுன்சிலர்கள், 2 டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், 33 டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 4 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், 46 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என்று கிடைத்திருக்கும் சிபிஐ கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 0.71.

இந்த இருவரின் வாக்கு சதவிகிதம் இந்த உள்ளாட்சித் தேர்தலில் குறைந்திருக்கிறது. இதுவரையிலும் அதிமுக, தி.மு.க. என்று மாறி, மாறி கூட்டணி வைத்திருந்த்தால் இவர்களது உண்மையான பலம் என்ன என்பது தெரியாமல் இருந்த்து. இப்போது, இந்தத் தேர்தலின் மூலம் தெரிந்துவிட்டது. இனி இவர்களுக்கு 3-வது அணி மட்டுமே கை கொடுக்கும். அதற்கான முயற்சிகளை செய்வதுதான் இக்கட்சிகளின் எதிர்காலத்திற்கு நல்லது.

இறுதியாக திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி. 1 மாநகராட்சி கவுன்சிலர், 13 நகராட்சி கவுன்சிலர்கள், 12 டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 9 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என்று மொத்தமே 35 பதவிகள்தான் இக்கட்சிக்குக் கிடைத்துள்ளன. பாரதீய ஜனதாவைவிடவும் மிகச் சொற்பமான செல்வாக்கில் இருக்கும் இக்கட்சியின் ஆரம்பக் காலத்தை நினைவில்கொண்டால் இது மாபெரும் தோல்வி..! 

தமிழகத்தில் கட்சிகளை ஆரம்பிக்கும் அனைவருமே ஆரம்பத்தில் நம்பிக்கையூட்டும்விதமாகவே செயல்படுகிறார்கள். கட்சியின் வட்டச் செயலாளர்கள் டாடா சுமோவில் வலம் வந்து, மாவட்டச் செயலாளர்கள் டயோட்டா குவாலிஸில் வரத் துவங்கியவுடன் கட்சியும் நொண்டியடிக்கத் துவங்குகிறது. இப்படித்தான் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் ஆகிவிட்டது. 

கட்டப் பஞ்சாயத்து, ரவுடித்தனம் போன்றவற்றில் தனது கட்சியினரின் செயல்பாடுகளை தட்டிக் கேட்க முடியாத நிலையில் இருக்கும் திருமாவளவன் மக்களிடத்தில் அதிகம் நெருங்க முடியாத சூழலில் இருக்கிறார். அவர்களுக்கு செல்வாக்கு அதிகமுள்ள இடங்களில்கூட இந்த நிலைமைதான் என்பதனால் இனி இக்கட்சிக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவளித்து ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை..!

இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தினை சுயேச்சைகள் பெற்றிருப்பதே குறிப்பிடத்தக்கது. 5 நகராட்சித் தலைவர்கள், 55 மாநகராட்சி கவுன்சிலர்கள், 552 நகராட்சி கவுன்சிலர்கள், 64 பேரூராட்சித் தலைவர்கள், 1995 டவுன் பஞ்சாயத்து உறுப்பினர்கள், 655 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர்கள் என்று மொத்தம் 3322 பதவிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சுயேச்சைகள் பெற்ற மொத்த வாக்குகளின் சதவிகிதம் 9.46.

இவர்களில் அநேகம்பேர் பெரிய கட்சிகளில் சீட் கொடுக்கப்படாத்தால் தனியாக நின்றவர்கள். எனவே வெற்றி பெற்ற பின்பும் அவர்கள் சார்ந்த கட்சி உறுப்பினர்களாகவே இருப்பார்கள். அல்லது மீண்டும் கட்சியில் சேர்ந்துவிடுவார்கள். எப்படியோ உள்ளாட்சி அமைப்புகள் என்று வரும்போது மக்கள் பக்கத்து வீட்டுக்காரர், ஊர்க்காரர், தெரிந்தவர், சொந்தக்காரர் என்றெல்லாம் பார்த்தே வாக்களிப்பார்கள் என்பதால் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை..

சட்டசபை தேர்தலிலேயே இமாலய வெற்றி பெற்றிருக்கும் ஜெயல்லிதா இந்த உள்ளாட்சி தேர்தலின் மூலமும் அசுர பலம் பெற்றிருக்கிறார். ஆனாலும் மிக விரைவில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளே செல்ல வேண்டியிருப்பதால், அவருக்குப் பின்னான தலைமை எப்படி கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தப் போகிறது என்று தெரியவில்லை. 

தி.மு.க.வின் உட்கட்சிப் பூசல் வெடிக்காதா என்று அ.தி.மு.க.வும், ஜெயலலிதாவும், சசிகலாவும் வெளியில் இல்லாத நிலையில் அதிமுகவை சீர்குலைத்துவிடலாம் என்று தி.மு.க.வும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. இரண்டில் எது நடந்தாலும் அது தமிழகத்துக்கு நல்லதே..!


உள்ளாட்சித் தேர்தல்-2011 இறுதி முடிவுகள்


கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம் (நகர் மற்றும் ஊரகப் பகுதிகள்) -கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கான பதவிகள் நீங்கலாக.



மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்



மாநகராட்சி மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சித் தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்



அனைத்து மாநகராட்சிகளுக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்



அனைத்து பேரூராட்சிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்



அனைத்து நகராட்சிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்


நன்றி : பல்வேறு இணையத்தளங்கள் 

வர்ணம் - சினிமா விமர்சனம்

13-10-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சில நல்ல, கருத்தாழமிக்க திரைப்படங்கள் வெளிவந்தாலும் அவைகளுக்கு போதுமான விளம்பரம் கிடைக்காமல், அவைகள் நம் கண் பார்வைக்கு வராமலேயே போய்விடுகின்றன..! அப்படி பல திரைப்படங்களை நாம் பார்க்காமலேயே தொலைத்திருக்கிறோம். அந்த லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்க வேண்டிய இத்திரைப்படம் இயக்குநரின் விசாலமான பார்வையால், வலைப்பதிவர்கள் பலரையும் பார்க்க வைத்திருக்கிறது..! இயக்குநருக்கு எனது நன்றிகள்..!


இயக்குநரின் சொந்தப் படம். மிகக் குறைந்த பட்ஜெட்.. மோனிகா, சம்பத் இருவரைத் தவிர மற்றவர்கள் அதிகம் தெரியாதவர்கள். சிலர் புதுமுகங்கள். ஆனால் கதையை நம்பி தைரியமாக களத்தில் குதித்திருக்கிறார்கள். ஒரு நாவலின் வெற்றி அதனை படித்துக் களைத்து மூடிய பின்பும் நம் மனத்திரையில் மூடாமல் அசை போட வைப்பதில்தான் உள்ளது. இத்திரைப்படமும் ஒரு கதை நாவல் போன்றதுதான். 

மணி என்னும் தகப்பனை இழந்த அடல்ட்ரி மாணவன், படிப்பை விரும்பாமல் சேட்டைகளை அதிகம் விரும்பி செய்கிறான். தாங்கிக் கொள்ள முடியாத பள்ளி அவனை வெளியே அனுப்ப.. தனது தாய் மாமன் சம்பத்தின் ஊரான தாண்டிக்குடிக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கேயுள்ள பள்ளியில் மாமனின் தயவில் சேர்க்கப்படுகிறான்.

சுதந்திரம் அடைந்துவிட்ட நாடு என்று நமக்கு நாமே பெருமிதப்பட்டுக் கொண்டாலும் இன்னமும் கிராமப் புறங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைத்தபாடில்லை. தனி காலனி, தனி கோவில், தனி சாலைகள், டீக்கடைகளில் தனி டம்ளர், தனியான சுடுகாடு என்று அவர்களை இன்னமும் அடிமைத்தனமாகத்தான் வைத்திருக்கிறோம். இது போன்ற கொடூரங்கள் நிலவும் ஊர்தான் இந்தத் தாண்டிக்குடி.(நிஜத்தில் இந்த ஊரில் அப்படி இல்லை)

மாமன் சம்பத்துதான் ஊர் மைனர். பெண்களை மேய்வதை முழு நேரத் தொழிலாகவும், மிச்ச நேரத்தில் காபி எஸ்டேட்டை கவனித்துக் கொள்பவராகவும் இருக்கிறார். இங்கேயும் மணியின் சகவாசம் எல்லை மீறும்போது கணக்கு டீச்சரான மோனிகாவும், உடன் படிக்கும் மாணவியான தங்கமும் குறுக்கிடுகிறார்கள்..

மோனிகா சம்பத்தின் கார் டிரைவரை காதலிக்க.. சம்பத்தோ மோனிகாவை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். இந்தக் காதல் ஜோடி ஊரைவிட்டு வெளியேற எத்தனிக்கும்போது இந்த கார் டிரைவர்தான் தான் தேடிக் கொண்டிருக்கும் தனது அப்பாவை கொன்ற கொலைகாரன் என்பது மணிக்குத் தெரிய வர.. சம்பத் ஒரு பக்கம்.. மணி ஒரு பக்கம் என்று காதலர்களை குறி வைக்கும் சூழல்.. தப்பித்தது யார் என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..!

இயக்குநர் ராஜூ யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியதில்லை என்று சொன்னபோது நம்ப முடியவில்லை. படத்தின் மேக்கிங் ஸ்டைல் அப்படித்தான் உள்ளது. டைட்டில் காட்சிகளின் வித்தியாசத்தை உணர்ந்து ஒரு எதிர்பார்ப்போடு அமர்ந்திருக்க முதல் ஷாட்டிலேயே கவர்ந்துவிட்டார் இயக்குநர். படம் முழுவதிலும் ஒவ்வொரு காட்சியிலும் ஏதோவொரு வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.. 


மணி என்னும் அந்தப் பையனின் வாழ்க்கைக் கதையை அவனே சொல்வதன் மூலம்தான் படம் துவங்குகிறது. அதில் இருக்கும் சஸ்பென்ஸ் இறுதிக் காட்சியில் உடைக்கப்படுவது நல்ல திருப்பம். இதே போன்றதொரு துவக்கமும், முடிவும்தான் தமிழகத்து மக்கள் பலரும் பார்க்காமல் தவறிய தா படத்தில் இருந்த்து..!

எல்லோருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அது நல்லவரோ, கெட்டவரோ என்பதில் ஐயமில்லை. இதில் அந்தப் பையனுக்கு இருக்கும் ஓவியத் திறமை வெகு அழகாக எஸ்டாபிளீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓவியத் திறமைச் சொல்லிக் காட்டியே மோனிகா மணியை மடக்குவதும், அவனை மேற்கொண்டு நல்ல பையனாக்கி படிக்க வைப்பதும் யதார்த்தமாகப் படமாக்கப்பட்டுள்ளது.

அந்த முனி கோவிலில் மோனிகாவை பார்த்தவுடன் உறைந்து போய் நிற்கும் காட்சியில் மணியிடம் நல்ல எக்ஸ்பிரஸன்ஸ் வந்திருக்கிறது.. தங்கத்திடம் பேரம் பேசிவிட்டு இறங்கும் புரோக்கரிடம் இடைவெளிவிட்டுவிட்டு வந்து பேசும் மணியின் நடிப்பு குறிப்பிடத்தகுந்தது.

சம்பத்துடன் பாலத்தில் சண்டையிட்டுவிட்டு போடா என்று அலட்சியமாகச் சொல்லும் அந்தக் காட்சி மிக அழகானது.. இந்த வயதுப் பையன்கள், அதுவும் நெருங்கிய உறவினனால் வேறென்ன சொல்ல முடியும்..? 


தங்கம் என்ற அஸ்வதாவுக்கு நடிக்க அதிகம் வாய்ப்பில்லை என்றாலும், தன்னை அவமானப்படுத்தி திட்டும் காட்சியில் துளிக்கூட கண்ணீர் இன்றி அவர் காட்டியிருக்கும் எக்ஸ்பிரஸன்கள் சூப்பர்.. நல்ல இயக்குநர்கள் கிடைத்தால் நல்ல நடிப்பும் வெளியே வருமாம்..! அஸ்வதா ஏற்கெனவே புழல், திட்டக்குடி, கரகம் படங்களில் நடித்துள்ளார். திட்டக்குடியில் இவரது நடிப்பு குறிப்பிட வேண்டிய ஒன்று..!

படத்தின் மிகப் பெரிய ஆளுமைகள் சம்பத்தும், மோனிகாவும். சம்பத் வழக்கம்போல வில்லன் போல ஆனால் வில்லன் இல்லை என்றான கேரக்டர்தான்..! மணி, பள்ளிக்கூடத்தில் டீச்சரின் கையைப் பிடித்து வளையலை உடைத்த்தைப் பாராட்டி இப்படித்தான் இருக்கணும். அப்பத்தான் நம்ம மேல அவங்களுக்கு பயம் இருக்கும் என்று மைனர் பரம்பரை ஊட்டி வளர்க்கிறார்.


மோனிகா மீது இவருக்கு இருந்த மோகத்தை துளிகூட காட்டாமலேயே இறுதியில் மோனிகாவுக்காக மணியுடன் சண்டையிடுவது மட்டும்தான் திரைக்கதையில் கொஞ்சம் சேதாரமாகத் தெரிகிறது..! 



கீழ் ஜாதிக்காரனை அவமானப்படுத்துவது போன்ற அந்தக் காட்சி படத்தில் நெளிய வைக்கிறதுதான் என்றாலும் தமிழ்நாட்டில் மாதத்திற்கு ஏதோ ஒரு கிராமத்தில், ஏதோவொரு இந்தியனுக்கு இந்த அவமானம் இழைக்கப்பட்டுதான் வருகிறது.. இதனைச் சுட்டிக் காட்டியதற்கு இயக்குநரை பாராட்டத்தான் வேண்டும்..!

கணக்கு டீச்சர் மோனிகா ஒரு காட்சி என்றாலும், அவரது இதுநாள்வரையிலான நடிப்பு கேரியரில் பெயர் சொல்லும்படியாக நடித்துள்ளார். நிச்சயத்தார்த்தம் நடந்தேறவுள்ள நிலையில் அதனை நிறுத்துவதற்காக அவர் ஆடுகின்ற அந்த பேய் ஆட்டமும், அதைத் துவக்கும் முன் அவருடைய முகத்தில் துவங்கும் ஆரம்ப ரகளைகளும்.. அசத்தல் மோனிகா.


முனி கோவிலில் காதலருடன் சல்லாபத்தில் இருந்த காட்சியில் பிரேமின் கலரும், மோனிகாவின் நடிப்பும் மணியை மட்டுமல்ல.. அனைவரையும் ஏதோவொன்றாக ஈர்த்திருக்கும்.. அம்மணிக்கு இதைவிட நல்ல கேரக்டர் கிடைத்து நல்ல நடிப்பை வெளிக்காட்ட அந்த முனியே அருள் புரியட்டும்..!

அவ்வப்போது வெகு இயல்பான டயலாக் டெலிவரியை பாஸ் செய்திருக்கும் மோனிகாவின் அண்ணனாக நடித்திருந்தவரின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.. வேட்டிக்கு கீழேயிருந்து பார்த்துவிட்டு ரொம்ப வளர்ந்துட்டானோ என்று சொல்வதும். சீரியல் லைட் ஜோக்கிலும் அலுங்காமல் கலக்கியிருக்கிறார் மனிதர்..

இந்தப் படத்தில்தான் இயக்குநர் பெயருக்கு கருத்து-இயக்கம் என்று டைட்டில் போட்டிருக்கிறார்கள். பாராட்டுக்கள். இதைவிடவும் பெரிய விஷயம்.. கதை டிஸ்கஷனில் உட்கார்ந்திருந்த அனைவரின் பெயரையும் போட்டு பெருமைப்படுத்தியிருப்பது.. இந்த இயக்குநருக்கு இருக்கின்ற பெருந்தன்மைகூட பல பெரிய இயக்குநர்களுக்கு இல்லையே என்று யோசிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜூ..!

இசை பால் ஐசக் என்ற புதுமுகம்.. முனி பாடலும், அந்தப் பாடலிலேயே ஒரு கதை சொல்லியிருப்பதும் அனைவரையும் கவருகின்ற விஷயம். துவக்கத்தில் பின்னணி இசை சொதப்பலாக இருந்தாலும், முனி கோவில் காட்சிகளில் சலங்கை கட்டி ஆடியிருக்கிறது..!

சிற்சில காட்சிகளில் ஒளிப்பதிவில் குறைகள் தென்பட்டாலும் பள்ளிக்கூட காட்சிகளிலும், மழை காட்சிகளிலும் ஒளிப்பதிவு அபாரம்..! இயக்குதல் மிக ரசிப்புத் தன்மையுடன் இருந்ததால் எந்தக் குறைகளும் பெரிதாகத் தோன்றவில்லை. 

சினிமாவில் யாரையும் உடல், தோற்றம், பேச்சை வைத்து எடை போட்டுவிட முடியாது என்பார்கள். எப்படி அவுட்புட் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அந்தக் கலைஞரை தீர்மானிக்க முடியும்.. அந்த வகையில் இந்தப் படத்தின் இயக்குநர் தனது முதல் படத்திலேயே தான் ஒரு திறமையான இயக்குநர் என்பதை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார். இனி வரும் படைப்புகளையும் இது போலவே படைத்தால், தமிழ்ச் சினிமாவில் இவருக்கும் ஒரு இடம் நிச்சயமாக உண்டு. வாழ்த்துகள் ராஜூ ஸார்..!

அவசியம் பார்க்க வேண்டிய சினிமா இது. வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் மக்களே..! 

புகைப்படங்களுக்கு நன்றி : Indiaglitz.com

கைப்புள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம்...!

13-10-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கைப்புள்ள ஸ்டாலின் என்ற தலைப்பில் பத்திரிகையாளர் அன்பு புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் சென்ற தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த பல ஊழல்கள், மற்றும் முறைகேடுகளை தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களை வைத்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

இத்தகவலை கூகிள் பஸ்ஸில் வெளியிட்டதுமே வழக்கம்போல தி.மு.க.வின் தொண்டரடிப் பொடியாழ்வார்களும், அடிமைகளும் அ, ஆ, இ, ஊ என்று துள்ளிக் குதித்தார்கள். கைப்புள்ள் என்ற பெயர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் தாக்குகிறது. இது தனி மனிதத் தாக்குதல் என்றெல்லாம் பொங்கித் தீர்த்தார்கள்.

ஸ்டாலின் வேறு கருணாநிதி வேறல்ல.. கருணாநிதி வேறு தி.மு.க. வேறல்ல.. தி.மு.க. வேறு ஊழல் வேறல்ல.. ஆக.. அடிப்படையே தவறாக இருக்கும்போது ஸ்டாலினை மட்டும் ஏதோ அவதாரப் புருஷனாக கற்பனை செய்து கொண்டு இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். அதனால்தான் சொல்கிறேன் அவர்கள் அடிமைகள் என்று..!

சரி.. போகட்டும். அந்தப் புத்தகத்தின் முதல் கட்டுரையே கைப்புள்ள ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டன் ஒருவன் எழுதியிருக்கும் உண்மைக் கடிதம்தான்.. இந்தப் பிரச்சினையைத் தொட்டுவிட்ட பாவத்திற்காக இந்தக் கடிதத்தையும் தட்டச்சு செய்து பதிவிட்டுள்ளேன்.. 

இதில் பல கருத்துக்கள் அடிமை உணர்வில் எழுதப்பட்டிருப்பதால் எனக்கு உடன்பாடில்லை என்றாலும், பத்திரிகையாளர் அன்பு இப்போதும் தி.மு.க.வின் தொண்டர் என்பதாலும் அவரைக் குறி வைத்து துள்ளிக் குதிக்கும் லேட்டஸ்ட் தொண்டர்கள், அன்புவை பற்றியும் தெரிந்து கொள்ளட்டுமே என்பதால் வேலைவெட்டியை விட்டுவிட்டு தட்டச்சு செய்து பதிவிட்டுள்ளேன்..

படித்துப் பாருங்கள்..!

கைப்புள்ள மு.க.ஸ்டாலின்..!

எங்கள் எதிர்காலத்தின் நம்பிக்கையான அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு..


தலைவரிடமிருந்துதான் ஓய்வின்று உழைப்பதைக் கற்றோம். தலைவரிடம் இருந்துதான் சோதனைகளிலும், கழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற மன உறுதியைப் பெற்றோம். தலைவரிடம் இருந்துதான் கடிதம் எழுதும் கலையையும் கற்றுக் கொண்டோம்.. எந்த நெருக்கடியிலும் கழகத்தை நிமிர்த்திவிடும் ஆற்றல் தலைவரின் கடிதங்களுக்கு உண்டு. அந்தளவுக்கு என்னைப் போன்ற உடன்பிறப்புகளின் கடிதம் நிச்சயம் இருக்காது. அதே நேரத்தில், எங்கள் மனதில் உள்ளதை கடிதம் மூலமாக உங்களிடம் தெரிவிக்கும் ஆர்வத்தோடு நாங்கள் எழுதும் இந்தக் கடிதத்தை நீங்கள் நிச்சயம் படிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

“இடுப்பு வேட்டி அவிழ்ந்தாலும் பரவாயில்லை. தோளில் போட்டிருக்கிற பளபள துண்டு பத்திரமாக இருக்க வேண்டும்..” என்று நினைத்தால் என்ன ஆகும்? அவமானப்பட்டு நிற்க வேண்டியிருக்கும். 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியை, இயக்கத்தின் மீது பற்றுக் கொண்ட என்னைப் போன்ற உண்மையான தொண்டர்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள். நமக்குள்ளே எழுந்த போட்டி காரணமாகவும், நம்மவர்கள் சிலர் நடந்து கொண்ட செயல்பாடுகளின் காரணமாகவும், சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை அடைந்தோம் என்று 100 நாட்கள் கழித்து இப்போதுதான் தலைவருக்கு தெரிந்துள்ளது என்பதை அறியும்போது வேதனையாக உள்ளது.

தேர்தல் களத்தில் தி.மு.க. தோல்வியே காணாத கட்சியல்ல. நாம் ஆட்சியைப் பிடித்த தேர்தல்களைவிட, ஆட்சியைப் பிடிக்காத தேர்தல்கள்தான் அதிகம். தற்போது சந்தித்திருக்கும் தோல்வியைவிடவும் கடுமையான, மோசமான தோல்விகளை எல்லாம் கழகம் சந்தித்திருக்கிறது. அவற்றிலிருந்து கழகம் மீண்டும் வந்திருக்கிறது. இப்போதைய தோல்வி கழகத்தினர் மனதில் பயத்தை உண்டாக்கியிருக்கிறது. மீண்டெழ முடியுமா என்ற சந்தேகம் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இளைஞர்களையும் புதிய வாக்காளர்களையும் நேற்று தோன்றிய கட்சிகள் எல்லாம் கவர்கின்றன. பெண்களின் வாக்குகளும், அந்தக் கட்சிகளுக்கே சாதகமாக அமைகின்றன. கொள்கையோ, கோட்பாடோ இல்லாமல் தோன்றிய கட்சிகள் வளர்ச்சி பெற்று வருகின்ற நிலையில், கொள்கை வழிவந்த நம் கழகம் ஏன் செல்வாக்கைப் பெருக்க முடியவில்லை. கடந்த ஐந்தாண்டு காலத்தில் உங்களுக்கு இருந்த அக்கறையில் கால் பங்காவது நமது ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்களுக்கும், மாவட்டப் பொறுப்புகளில் இருந்தவர்களுக்கும், ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகளுக்கும் இருந்ததா..?

உழைக்கின்ற தொண்டன் உழைத்துக் கொண்டேயிருக்கிறான். அவன் இன்னும் மைதா மாவை காய்ச்சி, பழைய பெடல் இல்லாத சைக்கிளில் “கலைஞர் வாழ்க.. உங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே..” என்று வால் போஸ்டர்களை ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறான். பழைய சைக்கிளுக்கு பெடல் கட்டை வாங்கிப் போட முடியவில்லை அவனுக்கு. பதவி கிடைத்தவர்களோ குவாலிஸ், ஸ்கார்பியோ, இன்னோவா என பலவித பல்லக்குகளில் ஊர்வலம் போகிறார்கள். நகரங்களும், ஒன்றியங்களும் நான்கைந்து கார்களுடன் பவனி வந்தால், பொதுமக்களின் நிலை அவர்களுக்கு எங்கே தெரியும்..?

தலைவரும், தளபதியும் அறிவித்து செயல்படுத்திய திட்டங்கள் மக்களுக்கு ஒழுங்காகப் போய்ச் சேர்கிறதா என்பதைக்கூட மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் கண்டு கொள்ளவில்லை. கட்சியையும், ஆட்சியையும் பயன்படுத்தி சம்பாதித்த கழக நிர்வாகிகளும் கண்டு கொள்ளவில்லை. நேற்று இவர் எப்படி இருந்தார். இன்றைக்கு எத்தனை வசதியாக இருக்கிறார் என்று மக்கள் தங்கள் மனதுக்குள் கேள்வி கேட்டார்கள். அதற்கான விடையை தேர்தலில் வெளிப்படையாகச் சொன்னார்கள். 

மக்களிடமிருந்து வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டார்கள் நம் கட்சியின் அதிரடி பிரபலங்கள். கட்சியை வளர்க்கவில்லை. ஆட்சியில் அறிவித்தத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவில்லை. தங்களையும், தங்கள் குடும்பத்தையுமே வளர்த்துக் கொண்டார்கள். “குடும்ப ஆட்சி” என்ற குற்றச்சாட்டை ஊடகங்கள் சொன்னபோது நமக்கு கசப்பாக இருந்த்து. கோபம் வந்த்து. ஆனால் பொதுமக்களிடமும் அந்த எண்ணம் ஆழ்மனம்வரை ஊடுருவியிருக்கிறது என்பதுதான் உண்மை. மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம்வரை கழகத்தில் குடும்ப ஆதிக்கம் நிலவியதுதான் உண்மை. அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

தலைவரும், நீங்களும் எதற்காக சிறை சென்றார்கள் என்பதை நாடறியும். கல்லக்குடி போராட்டத்திற்காகத் திருச்சியிலும், தாய் மொழியைக் காப்பதற்காகப் பாளையங்கோட்டையிலும் சிறைப்பட்டவர் தலைவர். ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டத்தில் மிசா சிறையில் சித்ரவதைகளைச் சந்தித்து தியாகத் தழும்பு பெற்றவர் நீங்கள். ஆனால், தலைவரின் குடும்பத்தில் மற்றவர்களும் சிறை சென்றிருக்கிறார்கள். அவர்கள் எந்தப் போராட்டத்திற்காகச் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள்? எந்தத் தியாகத் தழும்பைப் பெற்றார்கள்? இந்திய தேசத்தையே உலுக்கியெடுத்த அலைக்கற்றை ஊழலில் பிடிபட்டு அல்லவா சிறை சென்றிருக்கிறார்கள்.

உங்களால் அன்போடு வளர்க்கப் பெற்ற ஆ.ராசா, உங்கள் சகோதரி கனிமொழி ஆகியோர் 2ஜி அலைக்கற்றை ஊழலில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்கள். அலைக்கற்றை ஊழலில் நம் கட்சியின் பங்கு என்ன என்பது பற்றி கிராமத்தில் தள்ளுவண்டியில் தக்காளி, வெங்காயம் விற்பவனுக்குக்கூட தெரிந்திருக்கிறது.

கனிமொழியை ஜாமீனில் வெளியே எடுப்பதில் காட்டிய அக்கறை, கட்சியைக் காப்பாற்றுவதில் உங்களுக்குக்கூட இல்லை. நீங்கள் தி.மு.க.வின் கைப்பிள்ளையாக இருந்தீர்களே தவிர, உண்மைத் தொண்டனைப் பற்றி புரிந்து செயல்படவில்லை. தலைவருக்குத் தொண்டனைவிட, கட்சியைவிட குடும்பம்தான் பெரிதாகத் தெரிந்திருக்கிறது. அதைத்தான் மற்ற அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் செய்தார்கள். கட்சிக்காரர்களிடமே காசு வாங்கிக் கொண்டுதான் சிறு மாறுதல்கூட போட்டார்கள்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவின் பி.ஏ. கோபாலிடம் என் தங்கையின் இட மாறுதலுக்காக மனு கொடுத்தேன். 60,000 ரூபாய் கேட்டார். அமைச்சரிடம் சொன்னேன். அவரும் “என்ன கோபால்..? இவர் கட்சிக்காரர்..” என்றார். கோபாலோ, “என்னண்ணே பண்ணுறது..? இந்த மாசம் முதல்வர் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டியது 2 கோடியாச்சே..?” என்றார் சாதாரணமாக..

கடைசியில் பொண்டாட்டி நகைகளை அடகு வைத்து 50,000 ரூபாய் கொடுத்தேன். 3 மாதங்கள் சென்னைக்கு அலைந்தவகையில் செலவு 15,000. கடைசிவரை மாறுதலும் கிடைக்கவில்லை. பணமும் திரும்ப கிடைக்கவில்லை. கடைசியில், மாவட்ட கல்வி அதிகாரியிடம் 10,000 ரூபாய் கொடுத்துதான் மாறுதல் பெற்றேன்.

13 ஆண்டு காலம் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, இளைஞரணியை கட்டியமைத்து கழகத்தைக் காக்கும் பணியில், தலைவருக்குத் துணை நின்றவர் நீங்கள். கழகத்தில் பிளவு ஏற்பட்டு சிலர் தனிக்கட்சி கண்டபோது, கழகத்தின் கட்டுக்கோப்பு சிதறாமல் கட்டிக் காத்ததில் உங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. இத்தனை செயல்களையும் செய்தும்கூட, அமைச்சர் பதவியைப் பெறுவதற்கு தளதி அவர்கள் நான்கு முறை எம்.எல்.ஏ.வாக வேண்டியிருந்தது.

தலைவரின் உடல்நிலைக் காரணத்தினாலேயே துணை முதல்வர் பதவி கிடைத்தது. கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளைப் பெறுவதற்கு 40 வருட காலம் கழகப் பணியாற்ற வேண்டியிருந்தது. இத்தனை கால தாமதங்களுக்கும் காரணம், நீங்கள் நம் தலைவரின் பிள்ளை என்பதுதான்.

தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களின் நிலை என்ன..? அமைச்சர் பதவிகளையும், எம்.பி. பதவிகளையும் கட்சிப் பதவிகளையும் உடனடியாகக் கேட்டு வாங்குகிறார்கள். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் மிரட்டி வாங்குகிறார்கள். தலைவரின் மகன் அழகிரி, மத்திய அமைச்சர். மகள் கனிமொழி, ராஜ்யசபாவின் நியமன உறுப்பினர். பேரன் தயாநிதி மாறன், மத்திய அமைச்சர். மகள் கனிமொழியின் மனம் கவர்ந்த ஆ.ராசாவுக்கும்(?) மத்திய அமைச்சர் பதவி. இப்படி கொடுத்தால் தொண்டன் என்ன செய்வான்..?


கட்சிக்காகச் சொத்தை விற்றவனுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர் பதவிகூட கொடுக்கப்படவில்லை. அப்படியே சீட் கொடுத்தாலும் மாவட்டச் செயலாளர் உத்தரவின்பேரில் ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர்கள் தோற்கடித்துவிடுவார்கள். அப்புறம் எப்படி கட்சியில் உண்மைத் தொண்டன் இருப்பான்..?

வாரிசு அரசியலுக்குப் பெயர் பெற்றது காங்கிரஸ் கட்சியும், நேரு குடும்பமும்தான். ஆனால் அங்குகூட அந்தக் குடும்பத்திலிருந்து ஒரு வாரிசு மட்டும்தான் பொறுப்புக்கு வருகிறார். சோனியா கட்சித் தலைவராக ஆட்சிக்கு வழிகாட்டுகிறார் என்றால், ராகுல்காந்தி இதுவரை மத்திய அமைச்சராகாமல் இருக்கிறார். பிரியங்கா எந்தப் பொறுப்புக்கும் வரவில்லை. ஆனால் கழகத்தின் நிலைமை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.

வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு, திண்டுக்கல் ஆத்தூரில் சீட்டு.  அவர் மகன் செந்திலுக்கு, பழனியில் சீட்டு. பழனியில் கட்சிக்காரன் எவனுமே இல்லையா என்ன..?

திருச்சியில் நேரு குடும்பம் ஆடிய ஆட்டத்திற்கு அளவே இல்லை. நேருவின் தம்பி ராமஜெயத்தை கட்சிக்காரர்கள் “எம்.டி.” என்றுதான் அழைக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சவுண்டையா, ராமஜெயம் இருவர் அணி, மாவட்டத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களை பட்டா போட்டுவிட்டார்கள். இதில் பல தொண்டர்களின் ஐந்து, பத்து சென்ட் இடங்கள்கூட தப்பவில்லை. தொண்டர்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள்.

நேரு லால்குடி அருகே உள்ள பூவாளூரில் கந்தன் ரைஸ் மில்லை விலைக்கு வாங்கி 10 கோடி ரூபாய் செலவில் அதி நவீன அரிசி ஆலையாக மாற்றியுள்ளார். அந்த அரிசி ஆலைக்கு எதிரே அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. பாவம், அந்த அரிசி ஆலையால் 2000 பள்ளி மாணவர்கள் தினமும் பாதிக்கப்படுகிறார்கள்.

தி.மு.க. கட்சிக்கே முதலில் கார் வாங்கிக் கொடுத்தவர் பூவாளூர் ஆனந்தன். திருச்சி மாவட்ட தி.மு.க.வில் “பெரியவர் குடும்பம்” என்று அன்பாக அழைப்பார்கள். அவர் குடும்பமோ, கட்சிக்காக சொத்தையே அழித்தவர்கள். ஆனால், இன்று அவர்கள் குடும்பமே அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்டார்கள்.

தலைவரே, “என்னய்யா பூவாளூர்க்காரர்களே..” என்று அன்பாக அழைப்பார். 1989-க்கு பின்பு பூவாளூர்க்காரர்கள் குடும்பம் தலைவருக்கு மறந்துவிட்டது. ஏனென்றால் தலைவருக்கு மாமூல் கொடுப்பவராக கே.என்.நேரு மாறிவிட்டார். பூவாளூர் ஆனந்தன் குடும்பத்தை அரசியலிலிருந்தே ஓரம்கட்டிவிட்டார்கள்.

நெல்லையில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தற்போது மேயராக இருக்கும் ஏ.எல்.சுப்ரமணியத்தின் மகன் இலட்சுமணனுக்கு சீட் கொடுக்கப்பட்டது. கட்சியிலிருந்து கொடுக்கப்பட்ட 3 கோடி ரூபாயில், 1 கோடியை செலவு செய்துவிட்டு, மீதி 2 கோடி ரூபாய் அவர்கள் வீட்டு கஜனாவுக்கு போய்விட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்கள். பொன்முடி கிளாஸ்மேட் என்பதால் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராக ராதாமணி அறிவிக்கப்பட்டார். கடைசியில் சி.பி.எம். வேட்பாளரிடம் தோற்றுப் போனார். ராதாமணிக்குப் பதிலாக முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சியாருக்கு கொடுத்திருந்தால், விக்கிரவாண்டியில் தி.மு.க.தான் வெற்றி பெற்றிருக்கும்.


இப்படி அனைத்து மாவட்டங்களிலும் கட்சிக்காக உழைத்தவர்கள், ஓரங்கட்டப்பட்டார்கள். அதனால் கட்சியின் அடிமட்டத் தொண்டனுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. அ.தி.மு.க.வில் உண்மையாக உழைக்கிற எந்தத் தொண்டனுக்கும் என்றைக்காவது ஒரு நாள் அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம் கழகத்தில் எவ்வளவு உழைத்தாலும், பதவியில் நீண்ட காலமாக இருக்கிறவர்களின் வாரிசுகளுக்கு மட்டும்தான் எல்லாம் கிடைக்கும் என்ற நிலைமை இருக்கிறது.

தப்பு செய்தால் தலைமை தூக்கியெறிந்துவிடும் என்ற பயம் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் இருக்கிறது. நம் கழகத்திலோ, தப்பு செய்துவிட்டு தலைவர் குடும்பத்தினரில் யாரையாவது பிடித்து சரி பண்ணிவிடலாம் என்ற அசாத்திய நம்பிக்கை இருக்கிறது. இப்படியிருந்தால் உண்மைத் தொண்டர்கள் எப்படி ஈடுபாட்டோடு கட்சிப் பணியாற்றுவார்கள்..? புதியவர்கள் எப்படி கட்சிக்குள் வருவார்கள்..?

தலைவர் தன் 75 ஆண்டு கால பொது வாழ்வில் சந்தித்திராத சோதனைகளையும், சோகங்களையும் மட்டுமன்றி அவமானங்களையும் சந்திப்பது இப்போதுதான். எதற்கும் கலங்காத உள்ளம் படைத்த அவர், கலங்கி நிற்பதை உண்மையான உடன்பிறப்புகள் அறிவார்கள்.

தலைவரைச் சுற்றி நிற்கும் ஜால்ரா கூட்டங்களும், ஜால்ரா ஆசாமிகளும் உண்மைகளை மறைப்பதையே இன்றுவரை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். 

ஜெயலலிதாவின் பதவியேற்புக்கு இடது சாரி தலைவரான பரதனும் வருகிறார். இந்துத்துவா கொள்கை கொண்ட நரேந்திர மோடியும் வருகிறார். இவர்கள் இருவர் பக்கமும் சாயக்கூடிய சந்திரபாபு நாயுடுவும் வருகிறார். எல்லாத் தரப்பிலிருந்தும் அவருக்கு ஆட்கள் இருக்கிறார்கள். நமக்கு இன்று தேசிய அளவில் எந்தக் கட்சி துணையாக இருக்கிறது..? கூட இருந்தே கழுத்தறுத்துவிட்டது காங்கிரஸ். நமது தரப்பு நியாயங்களை பிற கட்சிகளிடம் எடுத்துச் சொல்வதற்குக்கூட நம்மிடம் சரியான தலைவர்கள் இல்லாமல் போனது ஏன்..?

உண்மையான விசுவாசத்துடன் கழகப் பணியாற்றுபவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அதிகார மையங்கள் கழகத்தில் அதிகளவில் இருப்பதால், ஏதேனும் ஒரு மையத்தின் துணையுடன் சமாளித்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டு பொறுப்பில் இருப்பவர்கள் நன்றிகெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்கள். 

அதிகார மையங்கள் நீடிக்கும்வரை, கழகத்திற்கான சோதனைகளும், தோல்விகளும் தவிர்க்க முடியாதவையாகவே இருக்கும். மேல் மட்டத்திலிருந்து மாவட்ட நகர ஒன்றியங்கள் வரையிலான அதிகார மையங்கள் கலைக்கப்பட வேண்டும். கழகத்திற்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்.


புதிய ரத்தம் பாய்ச்சப்பட வேண்டுமென்றால் மாணவரணியிலும், இளைஞரணியிலும் புதிய உறுப்பினர்கள் பெருக வேண்டும். நெல்லையில் நடந்த இளைஞரணி மாநாட்டில் பங்கேற்ற லட்சக்கணக்கானவர்கள் தேர்தல் நேரத்தின்போது எங்கே சென்றார்கள்..? ஆளும் கட்சியாக இருந்ததால் அவரவரும் மாநாட்டுக்கு ஆட்களைத் திரட்டி வந்தார்கள்.

தேர்தல் தோல்வி சாதாரணமானது. கழக அமைப்பு என்பது வலிமையானது. கழகம் வலிமையாக இருந்தால் அடுத்தத் தேர்தலில் ஆட்சி பீடம் ஏறலாம். அமைப்பு சீர்குலைந்தால் எத்தனைத் தேர்தல்கள் வந்தாலும் வெற்றி பெற முடியாது. என்னைப் போன்ற உடன்பிறப்புகளைவிட தளபதி அவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

சட்டசபையில் உங்கள் செயல்பாடுகள் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் எதிர்க் கட்சிகள் பலத்துடன் திகழ முடியும். அது, ஆளும்கட்சிக்கு பெரும் சவாலைக் கொடுக்கும். இந்த நேரத்தில், 2001-2006 சட்டசபைக் கூட்டங்களை மனதில் கொள்ள வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உள்ளது.

முதல்வர் ஜெயல்லிதா, தி.மு.க.வினரைப் பார்த்து, “எங்கே உங்கள் தளபதி.. ஓடி ஒளிந்துவிட்டாரா?” என கேட்டது, தி.மு.க.வினரின் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எந்தப் பிரச்சினையையும் துணிவோடும், எதிர்க்கட்சிகளை பொருட்படுத்தாமல் பேசும் முதல்வர் ஜெயல்லிதாவின் பேச்சுக்கு, ஈடுகொடுக்கும்வகையில் செயல்பட வேண்டிய நெருக்கடி உள்ளது.

சட்டமன்றத்தில் கட்சியை வழி நடத்த இருப்பதுபோல, மக்கள் மன்றத்திலும் நீங்கள் வழி நடத்த வேண்டும். இது என் ஒருவனின் கருத்தல்ல..

ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மைத் தொண்டர்களின் கருத்து. தமிழக மக்களின் கருத்து.
எங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன்

அப்பாவித் தொண்டன்


சதுரங்கம் - சினிமா விமர்சனம்

08-10-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2005-ம் ஆண்டிலேயே இந்தப் படம் வெளிவந்திருந்தால் பத்திரிகையுலகிலும், அரசியல் உலகத்திலும் தனியிடம் பிடித்திருக்கும். காலதாமதத்தால் தமிழ்ச் சினிமாவிலும் தனக்கென இருந்திருக்க வேண்டிய ஒரு இடத்தை இழந்துவிட்டது என்றே எண்ணுகிறேன்..


திசைகள் என்னும் புலனாய்வு வார இதழில் ரிப்போர்ட்டராகப் பணியாற்றுகிறார் ஸ்ரீகாந்த்.. வேலை செய்கிறார் என்றால் சாதாரணமாக இல்லை. உண்மையாகவே சிறைச்சாலைக்குள் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய, வேண்டுமென்றே பஸ்ஸில் டிக்கெட் எடுக்காத சின்ன வழக்கொன்றில் சிக்கி ஜெயிலுக்குள் செல்கிறார். தனது இன்வெஸ்டிகேட்டிவ் மூளையைப் பயன்படுத்தி ஜெயிலுக்குள் நடைபெறும் லஞ்ச, ஊழல், அநியாயங்களை தொடர் கட்டுரையாக எழுதி வைக்கிறார். இதில் பாதிக்கப்படுபவர்கள் பலர் இருந்தும், இவர்களில் ஒருவர் பதிலுக்கு ஸ்ரீகாந்தின் காதலி சோனியாவை கடத்திச் செல்ல.. அவரை மீட்க அல்லல்படுகிறார் ஸ்ரீகாந்த். தனது காதலியை மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை..!

பத்திரிகையாளர்களால் பாதிக்கப்படும் அரசியல்வியாதிகள் தங்களுடைய கோபத்தை பல்வேறு ரூபங்களில் காட்டத்தான் செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இவைகள் அதிகப்பட்சமாக தெய்வத்தாய் ஜெயலலிதாவின் ஆட்சியில் நடந்திருக்கிறது என்பதுதான் மிகப் பெரிய கொடுமை..!

தராசு, நெற்றிக்கண், நக்கீரன் பத்திரிகைகள் தாக்கப்பட்டது.. நக்கீரன் நிருபர் மதுரையில் கொலை செய்யப்பட்டது.. நக்கீரனின் பதிப்பாளர் கணேசன் கொலை செய்யப்பட்டது.. போலீஸ் செய்தி பத்திரிகையின் நிருபர் கொலையானது.. நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது.. அவருடைய பத்திரிகையின் நிருபர்கள் பலரும் கைதானது.. என்று பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை நம்மால் மறக்க முடியாதுதுதான்..!

இதையெல்லாம் வெளிப்டையாகக் காட்டினால் கரு.பழனியப்பனே வெளிப்படையாக நடமாட முடியாது என்பதினால் கதையில் கொஞ்சம் சமரசம் செய்திருக்கிறார். அதே பத்திரிகையாளனின் கை, கால்களை உடைத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைப்பதில் வரும் பீலிங்கைவிட, அவனது காதலியை கடத்துவது தியேட்டருக்கு வரும் இள வயது ரசிகர்களை அதிகம் கவலைக்குள்ளாக்கும் என்பது இயக்குநரின் கணிப்பு. நல்லதுதானே..! இனிப்பை எந்த வகையில் கொடுத்தாலென்ன? மைசூர் பாக்காக இருந்தாலும். அல்வாவாக இருந்தாலும் இனிப்பு, இனிப்புதானே.. அதைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

ஜெயில் காட்சிகள் அனைத்துமே உண்மைதான். தமிழகத்தில் அத்தனை ஜெயில்களிலும் தினம்தோறுமான வசூலே பல லட்சங்கள். போர்த்திக் கொள்ள போர்வை கேட்டால்கூட காசு வைத்தால்தான் வரும் என்கிறார்கள். அதேபோல் முன்னாள் அமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கும்போது எலிகளை பிடித்து உள்ளே போட்டு அவரை வாட்டி எடுப்பதை டி.பி.கஜேந்திரனின் வாயாலேயே சொல்லியிருப்பதும் உண்மைதானே.. இந்தப் படம் அப்போதே வந்திருந்தால் இந்த விஷயத்தில் மிகப் பெரிய தாக்கமாகவும் இருந்திருக்கும்.

ஜெயலலிதாவின் முதல் கொடுங்கோல் ஆட்சிக் காலத்தில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனையும், அவரது கணவரையும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தார்கள் என்ற மொக்கை குற்றச்சாட்டின் கீழ் தடா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அப்போது தினமும் இரவில் சுப்புலட்சுமி தூங்கப் போகும்போது, வேண்டுமென்றே அறை முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்களாம்.. இதேபோல் ஜெகதீசனின் அறையில் பெருச்சாளிகளை ஓடவிட்டு அவரை அலற வைத்திருக்கிறார்கள். இந்த ட்ரீட்மெண்ட்டை தாங்க முடியாமல்தான் முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜன் அப்ரூவராக பல்டியடித்ததாக அப்போதே பத்திரிகைகள் குறிப்பிட்டிருந்தன. இது போன்ற உண்மைகளை அப்பட்டமாகச் சொல்லியிருக்கும் அண்ணன் பழனியப்பனுக்கு எனது நன்றி..!

ஸ்ரீகாந்த்தின் நடிப்பில் இந்தப் படமும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்க வேண்டியது. ஏன் அவருடைய கேரியரில் பெரும் மாற்றத்தைக்கூட தந்திருக்கும் முன்பே படம் வெளிவந்திருந்தால்..! இப்போது அவருடைய பெயரை மறக்காமல் இருக்க வைக்கவும் இந்தப் படம் உதவும் என்று நினைக்கிறேன்..!

திருப்பதிசாமி. விகடன் பத்திரிகையாளர்கள் வட்டத்தில் மறக்க முடியாத பெயர். சாலை விபத்தில் மரணமடைந்த இயக்குநரான தனது நண்பர் திருப்பதிசாமியின் பெயரையே ஸ்ரீகாந்துக்கு சூட்டி அழகு பார்த்திருக்கிறார் பழனியப்பன். ஸ்ரீகாந்த் சோனியா முதல் சந்திப்பு நடக்கின்ற காட்சியின் விஷூவல்ஸ் காதல் சிச்சுவேஷன்களை மிக எளிதாக உருவாக்கியது.. இதுக்கு மேலேயும் அபெக்ஷன் வராமல் இருந்துவிடுமா என்ன? 

ஸ்ரீகாந்த், சோனியா இருவரின் காதல் காட்சிகளும் படு ஜோர்.. சோனியா வீடு தேடி வந்து ஏதேதோ சொல்லி பேச்சை டயாப்ப்பதும், பிரா ஸ்டிரிப் நழுவியிருப்பதை காந்த் சொல்வதும், அதனையே கல்லூரியில் சோனியா திருப்பிச் சொல்வதும் அழகான, மெச்சூரிட்டியான லவ் சிச்சுவேஷன்ஸ்..!

சோனியா க்யூட்.. அம்புலிமாமா பாடல் காட்சியில்தான் செம கிளாமர்.. சிக்கென்ற உடையிலேயே இறுக்கமும், கிறுக்கமும் காட்டுகிறார்..! இடைவேளைக்கு பின்பு நடிப்பதற்கு அதிகம் வாய்ப்பில்லை என்றாலும்,  ரசகுல்லா ரசகுல்லாதான்..!

பழனியப்பனின் மிகப் பெரிய பலமே வசனங்கள்தான். இதிலும் அது அதகளம்.. ஜெயில் காட்சிகளில் துவங்கி இறுதிவரையில் வசனத்தில் பத்திரிகையாளனின் குரலாகவே ஒலிக்கிறது..!

“தரம் பார்த்துதான் நண்பனா வைச்சுக்குவேன்.. தகுதி பார்த்துதான் எதிரியா வைச்சுக்குவேன். உனக்கு அந்தத் தகுதி இல்ல தம்பி..” என்று பில்டிங் ஓனர் சொல்கின்ற காட்சியின் வசனமே அடுத்தடுத்த திரைக்கதைகளை எழுதிவிட்டது..

முதலில் ஒரு திரில்லிங்கை கூட்ட வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீகாந்தின் எழுத்தால் பாதிக்கப்பட்ட லஞ்சம் வாங்கிய அதிகாரி, முன்னாள் அமைச்சர், பில்டிங் ஓனர் என்று பலரையும் சுட்டிக் காட்டியிருப்பதுபோல் தோன்றுகிறது.

“டெபாஸிட் கிடைக்குற அளவுக்குக்கூட ஓட்டுப் போடாத உங்களுக்கு எதுக்கு நன்றி..” என்று மேடையில் பொளந்து கட்டும் இளவரசு, மனைவியையே காட்டாமல் அடிமை கணவனாக மாவாட்டும் மனோபாலா, கிழிந்த பேப்பரை எடைக்கு எடை போட்டு காசு பார்க்க நினைக்கும் சரண்யா, தனது தங்கை காதலனின் தோளில் கை போட்டு தெனாவெட்டாக பேசுவதை பார்த்தும் ரசிக்கும் அண்ணன் ஸ்ரீமன், கண்ணில் வலி என்று சொல்லி நடித்துவிட்டு  நமீதாவின் புகைப்படத்தைப் பார்த்து இரு விழிகளையும் விரித்துப் பார்க்கும் மயில்சாமி.. என்று இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்துமே ரசிக்க வைக்கின்றன..!

மணிவண்ணன் இந்தக் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். நடிகையின் புகைப்படத்தையே பெரிசாக போடச் சொல்லிவிட்டு அதுவே ஒரு மேட்டர்தானே என்பதும், திருப்பதிசாமிக்காக நான் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை.. என்று சப்போர்ட் செய்வதுமாக ஒரு கச்சிதமான ஆசிரியர் வேடம் அவருக்கு. நிஜத்தில் திருப்பதிசாமி மாதிரியான பத்திரிகையாளர்களை கண்டுபிடித்துவிடலாம். ஆனால் மணிவண்ணன் மாதிரியான ஆசிரியர்களைப் பார்ப்பதுதான் கஷ்டம்..!

இடைவேளைக்கு பின்பான கதையில் காதலியைத் தேடிப் போகும் ஸ்ரீகாந்தை அலையவிடும் காட்சிகளும்.. செல்கின்ற இடங்களில் நடக்கும் சட்ட விரோதச் செயல்களெல்லாம் இப்போதைக்கு இரண்டாம்பட்சமாகி தனது காதலியே பிரதானமாக அந்தப் பத்திரிகையாளனுக்குத் தெரிவதாகச் சொல்வதெல்லாம் உண்மையான திரைக்கதை..!

இங்கே திரைப்படத்திற்கு சமரசம் செய்து கொள்ளாமல், இதைப் பற்றிக்கூட அதே பத்திரிகையாளனிடம் கேள்வியையும் எழுப்புகிறார் இயக்குநர். பாராட்டுக்குரிய விஷயம் இது..! கள்ளச்சாராயம் காய்ச்சும் இடம், விபச்சார மேன்ஷன், அரிசிகளை கடத்தி மறைத்து வைத்திருக்கும் குடோன், டூவீலர்களை திருடி விற்கும் இடம்(இது மட்டும் சரியாக எஸ்டாபிளீஸ் செய்யப்படவில்லை) என்று இதை வைத்தே நிறைய கதை எழுதிவிடலாம். அத்தனையையும் கடந்துதான் காதலியைத் தேடிச் செல்கிறார் திருப்பதிசாமி..!

வித்யாசாகரின் இசையில் எனக்குப் பிடித்தது அம்புலிமாமா பாடல்.. படமாக்கியவிதமும் ரசிக்கும்படியாகவே இருந்தது. வசனங்கள் போலவே பாடல் வரிகளும் இலக்கியத்தனமாகவே இருக்கின்றன. பழனியப்பன் என்ற ஆசிரியர், இதிலும் கொஞ்சம் வெளிப்பட்டிருக்கிறார்..  

ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் அழகாகவும், ரவுத்திரமாகவும் எடுக்கப்பட்டிருந்தாலும், அதுவே மனதில் ஒட்டவில்லை என்கிற ஒரேயொரு குறைதான் இப்படத்தில்.. இறுதிக் காட்சியில் மக்களே தீர்ப்பு வழங்குவது போல் செய்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.

அப்போதைய ஸ்ரீகாந்தின் ஹீரோயிஸம், தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பு, விநியோகஸ்தர்களின் வற்புறுத்தல் இத்தனையையும் தாண்டி இந்த அளவுக்கு கொண்டு வந்திருப்பதே பெரிய விஷயம்தான்..!

வாழ்த்துகளும், நன்றிகளும் இயக்குநர் திரு.கரு.பழனியப்பனுக்கு..!  

வர்ணம் - திரைப்படம் - வலைப்பதிவர்களுக்காக சிறப்புக் காட்சி..!

08-10-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 6-ம் தேதியன்று நடந்த 'சதுரங்கம்' திரைப்படத்தின் சிறப்பு பிரிவியூ காட்சிக்கு குடும்பத்துடன் வந்திருந்து திரைப்படத்தினை கண்டுகளித்து தங்களது கருத்துக்களை விமர்சனங்களாக பதிவு செய்திருக்கும் அன்பு வலைப்பதிவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி..!

வலைப்பதிவர்களுக்கு தொடர்ச்சியான இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி. வரும் 10-ம் தேதி, திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள ஏவி.எம். ஸ்டூடியோவிற்குள் இருக்கும் பிரிவியூ தியேட்டரில் சமீபத்தில் வெளி வந்திருக்கும் 'வர்ணம்' என்னும் திரைப்படத்தின் சிறப்பு பிரிவியூ காட்சி, நமது வலைப்பதிவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




இப்படத்தில் மோனிகா, கிரி, அஷ்வதா, சமந்த், கெளதம் போன்றோர் நடித்துள்ளனர்.  இசை ஐசக் தாமஸ். தயாரிப்பு : அஜயேந்திரன், ராஜேந்திரன், இயக்கம் எஸ்.எம்.ராஜூ.

உண்மையாக இந்த நிகழ்ச்சி முதலில், நாளை ஞாயிற்றுக்கிழமை(09-10-2011)யன்றுதான் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அன்றைய தினம் இண்டிபிளாக்கர்.காம் நடத்தும் பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கவிருப்பதால், நமது தமிழ் வலைப்பதிவர்கள் படம் பார்க்க வருவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிந்த்தால், ஒரு நாள் தள்ளிப் போட வேண்டியதாகிவிட்டது. பதிவுலக நண்பர்கள் மன்னிக்கவும்..!

திங்கள்கிழமை-அலுவலக நாள், என்ற சிரமத்தைப் பார்க்காமல் பதிவர்கள் தங்களது குடும்பத்தினருடன் திரைப்படத்தை காண வருமாறு இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்..!

தொடர்புக்கு : 9840998725

நன்றி..!

சதுரங்கம்-வலைப்பதிவர்களுக்கான சிறப்புக் காட்சி

03-10-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதன்முதலில் வலைப்பதிவர்களுக்காக 'மந்திரப் புன்னகை' படத்தின் சிறப்பு பிரிவியூ காட்சியை ஏற்பாடு செய்து, நம்மை பெருமைப்படுத்திய இயக்குநர் கரு.பழனியப்பன், வலைப்பதிவர்களை மீண்டும் ஒரு முறை அன்போடு அழைக்கிறார்..!


தனது முதல் படமான 'பார்த்திபன் கனவு' படத்திற்குப் பின்பு இரண்டாவது படமாக 'சதுரங்கம்' என்னும் திரைப்படத்தை 2005-ம் ஆண்டு இயக்கியிருந்தார் பழனியப்பன். 

இதில் ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், மணிவண்ணன், சரண்யா, மனோபாலா, மகாதேவன், இளவரசு போன்றோர் நடித்திருந்தனர். திவாகர் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். 

ஒரு நேர்மையான பத்திரிகையாளனுக்கு அரசியல்வியாதிகளால் ஏற்படும் பிரச்சினைகளும், இதனால் வெகுண்டெழும் அந்தப் பத்திரிகையாளனின் சூரசம்ஹாரமும்தான் இந்தப் படத்தின் கதை என்று, ஒரு கழுகார் கூறுகிறார்..! 


இந்தத் திரைப்படம் சில வணிகக் காரணங்களினால் இதுவரையிலும் வெளிவராமல் இருந்தது. இப்போது கடைசியாக, 6 ஆண்டுகள் கழித்து வரும் அக்டோபர் 6-ம் தேதி வியாழக்கிழமையன்று இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

வலைப்பதிவர்களுக்காக இத்திரைப்படத்தின் சிறப்பு பிரிவியூ காட்சி, வரும் அக்டோபர் 6-ம் தேதி மாலை 6.15 மணிக்கு சென்னை சாலிக்கிராமம், பிரசாத் பிரிவியூ தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னைவாழ் வலைப்பதிவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் இத்திரைப்படத்தை காண வருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறார் படத்தின் இயக்குநர் கரு.பழனியப்பன்.

'மந்திரப்புன்னகை' திரைப்பட சிறப்புக் காட்சியின்போதே இயக்குநர் பழனியப்பன் சொல்லியிருந்த “வாக்குறுதி” இப்போதும் அமலில் இருப்பதால், படம் நமக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவோம். மாற்றுக் கருத்து இருந்தால் அதனையே விருப்பு, வெறுப்பில்லாமல் முன் வைப்போம்..! 

வாருங்கள்..!  


வாகை சூட வா - சினிமா விமர்சனம்

01-10-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'களவாணி' என்ற சூப்பர் ஹிட்டுக்கு பின்பு அந்த ஒரு வெற்றியை மட்டுமே அடையாளமாக கொண்டு இயக்குநர் சற்குணத்தின் இந்தப் படைப்புக்காக தமிழ்த் திரையுலகமே ஆவலோடு காத்திருந்தது. ஒரு கல்யாண விருந்துக்காக காத்திருந்தவர்கள் பாதி வயிறு நிரம்பிய நிலையில் எழுந்து போன மனநிலையைத்தான் இப்படம் தந்திருக்கிறது என்பது சோகமானது..!


கதைக்களம் 1966-ம் ஆண்டு நடப்பதாக உள்ளது. சர்க்கார் உத்தியோகத்தில் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக கே.பாக்யராஜை அவருடைய மைத்துனர் அவமானப்படுத்திவிட்டார். இதற்காக ஒரு வைராக்கியத்துடன் தனது மகன் விமலை டீச்சர் டிரெயினிங்கிற்கு படிக்க வைத்து அரசுப் பள்ளி ஆசிரியராக்குவதுதான் தனது லட்சியமாக்க் கொண்டிருக்கிறார்.

அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவதற்கு முன்பு கிராமசேவாவின் மூலம் கிடைக்கின்ற டீச்சர் வேலையில் சேர்ந்து அதன் மூலம் டீச்சர் அனுபவத்தைப் பெற்று பின்பு ரெகுலர் டீச்சர் வேலையில் மகனை சேர்த்துவிட்டு தனது லட்சியத்தை நிறைவேற்றலாம் என்று துடிக்கிறார் அப்பா பாக்யராஜ்.

இதற்காக கண்டெடுத்தான் காடு என்னும் குக்கிராமத்திற்கு வருகிறார் விமல். செம்மண் புழுதியில் செங்கல் சூளை மட்டுமே அக்கிராமத்தின் வாழ்வாதாரமாக இருக்க, படிப்பறிவே இல்லாத பாமர மக்கள் தங்களது குடும்பத்தினரோடு அடிமைகளை போல் நாளைய பொழுதை பற்றிக்கூட கவலைப்படாமல் உழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். 

இவர்களுடைய குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம் என்று வந்த விமலை அந்த ஊரிலேயே டீக்கடை நடத்தும் மதி என்னும் பெண் ஒரு தலையாக்க் காதலிக்கிறாள். பிள்ளைகள் பள்ளிக்கு வர மறுக்கிறார்கள். பெற்றோர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். செங்கல்களை மொத்தமாக வாங்கும் முதலாளி விமலை ஊரைவிட்டு துரத்த முயல்கிறான். இறுதியில் யார் வென்றது என்பதுதான் கதை..!

முருங்கைக்காய்களுடன் பாக்யராஜின் என்ட்ரியை பார்த்தவுடனேயே படம் பற்றிய எனது கணிப்பு லேசாக மாறியது.. பின்பு ஹீரோயினின் கேரக்டர் ஸ்கெட்ச்சை பார்த்தவுடனேயே ஆஹா.. டிராக் மாறிருச்சு என்று கணிக்க முடிந்த்து.. 

களவாணியைப் போலவே இதிலும் விமலின் கேரக்டரை அப்படியே வைத்திருக்கிறார். குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதைத் தவிர மீதியெல்லாம்தான் செய்து கொண்டிருக்கிறார். கூடவே ஒரு தலைக் காதலுக்காக அவ்வப்போது பாடுவதும், ஆடுவதுமாக கதை செல்கிறது..!

கதையின் முதல் முடிச்சே இடைவேளை பிளாக்கிற்குப் பின்பு அரை மணி நேரம் கழித்துதான் வருகிறது. அதுவரையில் நடந்த்தெல்லாம் எதற்காக..? முன்பே அந்தக் காட்சிகளை வைத்து பிற்பாடு காதலை சொல்லியிருக்கலாம்..! ஹீரோயினின் தீவிரமான ஒரு தலைக் காதலை  புரியாத அளவுக்கு அப்பாவியாய் இருக்கும் விமலின் கேரக்டர் இறுதிவரையில் பொங்கி எழவே இல்லை. கிளைமாக்ஸில்கூட அமைதியாகத்தான் அவர் தனது அப்பாவிடம் தனது விருப்பத்தைக் கூறி கிராமத்துக்கு திரும்புகிறார். 

கல்வியின் முக்கியத்துவத்தை அழுத்தமாக உணர்த்தியிருக்க வேண்டிய திரைப்படம், வலுவான திரைக்கதையில்லாத்தால் ஏதோ லைட்டா சொல்லியிருக்காங்க என்றாகிவிட்டது..!

சில சில காட்சிகள் ரசிப்புக்குரியவையாக இருந்தாலும் அதனால் ஒட்டு மொத்த படத்திற்கு என்னதான் கிடைத்த்து? தம்பி ராமையா போடும் கணக்குகள் விஷயத்தையே எடுத்துக் கொள்வோம்.. பதிலுக்கு விமல் கூறும் கணக்கை அவர் எங்கேயிருந்து படித்தார் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் ஊரைவிட்டு எங்கேயும் போகவே இல்லையே..? தெரிந்திருந்தால் முன்பே சொல்லியிருக்கலாமே..?

குமரவேலுவின் கேரக்டரை வைத்து ஏதோ பெரிதாகச் செய்யப் போகிறார்கள் என்று நினைத்தேன். நான் போறேன். நீ இருக்கணும் என்று அவர் சொல்வதை பார்த்தபோது பெரிய பூதம் கிளம்பப் போகிறது என்று பார்த்தால் கடைசிவரையில் அது வரவேயில்லை..! 

பொன்வண்ணன் அடிபட்ட நிலையில் திரும்பி வருவேன். வந்து வச்சுக்குறேன் என்று கருவிவிட்டு போகிறார். ஆனால் இவரும் திரும்பி வரவில்லை. ஆனால் திடீர் ஹீரோக்கள் என்ட்ரியை போல கே.பாக்யராஜ் கிளைமாக்ஸில் தலையைக் கொடுக்கிறார். சிரிப்பாக இருக்கிறது.

விமலின் நடிப்பில் அப்பாவித்தனம் ஓகே. ஆனால் எகத்தாளமாக பேசும்போது உண்மையாகவே வில்லனை போல் தெரிகிறார். ஆனால் கேள்விகள் கேட்கும்போது அப்பாவியாய் வருகிறது.. குழப்பமான கேரக்டர் ஸ்கெட்ச்.. ஆடு முட்ட வருவதை பார்த்து பயந்து ஓடுபவர் என்ற ஒரு குணாதிசயத்திற்காக 3 முறை அதே காட்சிகளை வைத்து வெறுப்பேற்ற வேண்டுமா..?

ஹீரோயினுக்கு முதல் படம் என்றாலும் நிறைய டிரெயினிங் கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். நன்று. டீயின் விலையை பைசாவில் சொல்லி அறிமுகமாகும் முதல் காட்சியில் இருந்து தன்னுடைய திருமணச் செலவுக்காக டீயின் விலையை ஏற்றிவிட்டதாக அனைவரிடமும் வாலண்டியராக சொல்லிவிட்டுச் செல்லும் காட்சி ரசிப்பு..!

போதாக்குறைக்கு அந்த ஹீரோயின் எப்போது விமல் மீது எதற்காக காதல்வயப்படுகிறார் என்றே தெரியவில்லை. அவ்வப்போது திடீர், திடீரென்று பத்து, பன்னிரெண்டு வரிகளோடு பாடல் காட்சிகள் ஓடி மறைகின்றன. சரசர சாரக் காத்து என்ற பாடலை படமாக்கிய விதம் அருமையாகத்தான் இருக்கிறது. ஆனால் படத்துடன் ஒட்டவில்லையே..? 

என்னை கல்யாணம் செஞ்சுக்கய்யா என்று கேட்கின்ற பெண்ணிடம் விமல் பேசுகின்ற பேச்சை கேட்டால்.. உஷ்.. முடியல சாமி.. இதே விமல்தான் இறுதிக் காட்சியில் திடீர் ஞானதோயத்தில் வாழ்க்கை முழுக்க சோறு கிடைக்குமா என்று ஒரே வரியில் தோசையைத் திருப்பிப் போட்டு கேட்கிறார்..இவ்வளவு அவசரமாக கிளைமாக்ஸை முடிக்க வேண்டுமா..?

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பித்தான் வேண்டும் என்று சொல்லி விமல் அவர்களுடன் சண்டையிடுவதாக நினைத்து 2 காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அதில் விமல் காட்டும் எக்ஸ்பிரஸனையும், வசனங்களையும் கேட்டால் ஏதோ சம்பிராதயத்துக்கு கேட்பதுபோல் இருக்கிறது..

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு முரண்.. படிப்பறிவே இல்லாத குழந்தைகள் பேசுகின்ற பேச்சைக் கேட்கும்போது அது அவர்களது வயதுக்கு மீறியதாக இருக்கிறது. ஆனாலும் பிள்ளைகளின் தேர்வு அருமை. நிமிடத்திற்கு நிமிடம் விமலை வாரிவிடும் அந்தச் சிறுசுகளின் வேலையினால் நகைச்சுவையை சிந்த முடிந்தது என்றாலும், கதையின் பெரும்பாலான நேரத்தை அவைகள் விழுங்கிவிட்டன என்ற குற்றச்சாட்டையும் சொல்லத்தான் வேண்டும்..!

அப்பாவிகள்.. படிப்பறிவில்லாதவர்கள்.. இப்படித்தான் இருப்பார்கள் என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்ளலாம். ஆனால் கல்வி வேண்டும் என்ற மனநிலை பெற்றோர்களுக்கு தோன்ற ஒரு காரணம் வேண்டுமே..? அது இங்கே அழுத்தமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மிகத் தாமதமாக.. செங்கற்களை எண்ணிப் பார்த்து கண்டுபிடிக்க தூண்டிவிடும் விமலின் இந்தக் காட்சியை முதற்பாதியில் வைத்திருந்தாலாவது படத்தின் ஓட்டத்திற்கு கை கொடுத்திருக்கும்..! எல்லாம் முடிந்து கடைசியில் என்ன செய்வது..?

அழுத்தமான, மனதை தைக்கக் கூடிய காட்சிகளை தேடித் தேடிப் பார்த்தேன். அவைகள் கிடைக்கவில்லை. இவ்வளவு அழகான கதையில் அது இருந்திருக்க வேண்டாமா..? 

எதுவுமே நல்லாயில்லையா என்று கோபப்பட வேண்டாம். கலை இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள். கலை இயக்குநர் சீனுவுக்கு ஒரு பாராட்டு.. ஒரு பொட்டல் காட்டில் 35 குடும்பங்களுக்கான குடிசைகளை அமைத்து, அதனை அழகியல் கெடாதவண்ணம் அக்கால கிராமமாக காட்டியிருக்கிறார்..!

இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோக்களை பார்த்து பிரமித்துப் போனேன்.. சிலேட்டுக் குச்சியுடனும், விளையாட்டுப் பொருட்களுடனும் விளையாடிக் களைத்துப் போக வேண்டிய அந்த பிஞ்சு கைகளுக்கு குழைக்கப்பட்டிருக்கும் மண்ணில் இருந்து செங்கலை உருவாக்க செய்து கொடுக்கும் வித்தையை பார்த்தபோது  ஆச்சரியமாகத்தான் இருந்த்து.

பக்கத்தில் இருந்த கிராமங்களில் இருந்து ஒட்டு மொத்த மக்களை ஒன்று திரட்டி அவர்களில் இருந்து குறிப்பிட்டி சிலரை மட்டும் தேர்வு செய்து, சிறு குழந்தைகளுக்காக ஒரு பெரிய வொர்க் ஷாப்பே நடத்தியிருக்கிறார் இயக்குநர் சற்குணம். அங்கே நடுவில் இருந்த குளம்கூட தயாரிக்கப்பட்டதுதான்.. ஒவ்வொரு வீட்டையும் எப்படி அமைத்தார்கள் என்பதைக் காண்கின்றபோது தமிழ்த் திரையுலக சிற்பிகள் எப்பேர்ப்பட்ட கலைஞர்கள் என்பது புரிகிறது..!

அடுத்த பாராட்டு ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷுக்கு..! கொஞ்சமும் பிசிறு தட்டாத அளவுக்கு கடைசிவரையில் கலர் மாறாமல் அதே செம்மண் கலரையே வரித்துக் கொண்டு நிற்கின்றன திரைக்காட்சிகள். குமரவேலு இறந்த செய்தி கேட்டு ஊரே திரண்டு ஓடும் அந்த ஒரு காட்சியை படம் பிடித்திருக்கும் விதம் சூப்பர்..! 

இந்தப் படத்திற்கு எதற்காக 1966-ம் வருட காலக்கட்டம்..? இப்போதுகூட தமிழ்நாட்டில் பல மலைக்கிராமங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியொரு மலைக்கிராமத்தில் ஒரு இளைஞன் குழந்தைகளின் படிப்பறிவுக்காக போராடுகிறான் என்றே எடுத்திருக்கலாம்.. எதற்காக 1966 என்று தெரியவில்லை..!

இரண்டாவது திரைப்படம். தானும் பைனான்ஸ் செய்து தயாரித்திருக்கும் படம். நிறைய பொருட் செலவு. இதையெல்லாம் மனதில் வைத்து செய்திருக்கலாமே..? அந்தக் காலக்கட்டம் என்பது எந்தவிதத்திலும் சற்குணத்திற்கும், கதைக்கும் உதவவில்லை.. வானொலியின் பாடல் ஒளிபரப்பும், மீன்களின் வகைகளை அடுக்குவதும், மக்கள் பயன்படுத்தும் பழங்காலப் பொருட்களுமாக வேறென்ன காட்ட முடிந்தது இதில்..!?

மிகச் சிறப்பான ஒரு கதைக்களனில் விளையாட்டு காட்டியிருக்க வேண்டிய இடத்தில், வெறுமனே எழுத்தில் மட்டுமே அதனை செய்திருக்கிறார் என்பதுதான் வருத்தத்திற்குரியது.

வாகை சூட வா - திரைக்கதையில் மாற்றம் செய்திருந்தால் நிச்சயம் வாகை சூடியிருப்பான்..!