தேர்தல் ஸ்பெஷல்-2009-தமிழ்நாடு-10-03-2009

10-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2009 பாராளுமன்றத் தேர்தலில் ஒரு முக்கியத் திருப்பமாக நேற்றைய நாள் இருந்திருக்க வேண்டியது.. கடைசி நிமிடத்தில் நடக்காமல் போய்விட்டது என்கிறார்கள்.

கட்சியின் கொள்கை முக்கியமா? மகன் மீதான பாசம் முக்கியமா? என்பதுதான் இப்போதைய 2009 பாராளுமன்றத் தேர்தலின் போக்கை தீர்மானிக்கப் போகிறது.

நேற்றைய ஜெயலலிதாவின் உண்ணாவிரத மேடைக்கு ராமதாஸ் நேரில் வந்து வாழ்த்து சொல்லி கூட்டணியில் இணையப் போகிறார் என்கிற செய்தி பத்திரிகையாளர்களை ஆர்வத்துடன் காக்க வைத்திருந்தது. மணிக்கொரு முறை வருவார்.. வந்துவிடுவார் என்றெல்லாம் ராமதாஸிற்காக காத்துக் கொண்டிருந்தார்கள் பத்திரிகையாளர்கள். ஆனால் ஏனோ ராமதாஸால் இன்னமும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வர முடியவில்லை.

இவருடைய இந்தத் தாமதத்தினால்தான் விஜயகாந்தும் தனது முடிவைச் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸிற்கோ திடீர், திடீர் என்று கொள்கை மாறும் ராமதாஸைவிடவும், விஜயகாந்தே மேல் என்று நினைக்கிறார்கள். தங்களுக்குரிய கோட்டாவான 20 இடங்களில் 5 இடங்களை விட்டுக் கொடுக்க முன் வந்தும், ராமதாஸ் இருக்கும் அணியில் நாம் எப்படி இணைய முடியும் என்ற கேள்விக்குறியோடு காத்திருக்கிறது விஜயகாந்த் தரப்பு.

வட மாவட்டங்களில் இன்னமும் விடுதலைச்சிறுத்தைகளைவிடவும் விஜயகாந்த் கட்சியினரைத்தான் பரம எதிரிகளாகப் பாவிக்கிறார்கள் பாட்டாளி கட்சியினர். இந்தக் கூத்தைத் தடுக்கும் விதமாக பா.ம.க.வை காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டு வர விடாமல் தடுக்க காங்கிரஸ் கட்சியே தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வருகிறதாம்.

பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டிற்கும் தி.மு.க.வே தனது கோட்டாவிலிருந்து தொகுதிகளை ஒதுக்கித் தர வேண்டும் என்று சொல்லிவிட்டது. இவை இரண்டுமே தங்களது கூட்டணிக்குள் வராமல் இருந்தால்கூட நல்லதுதான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்களது கட்சி மேலிடத்திடம் ஊதி வருகிறார்களாம். அப்போதுதான் தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ்காந்தி கொலையை பற்றி பேசவே முடியும் என்கிறார்கள்.

இன்றைக்குக் தைலாபுரத்தில் கூடியிருக்க வேண்டிய பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஏனோ கூடவில்லை. இன்னமும் அப்பாவுக்கும், மகனுக்குமான பிரச்சினை முடியவில்லையாம். தொண்டர்களெல்லாம் அதிமுக பக்கம் போய்விடலாம் என்று துடித்துக் கொண்டிருக்க அன்புமணியோ முடியவே முடியாது என்கிறாராம்.

அன்புமணிக்கு தேர்தலில் நின்று ஜெயித்து டெல்லி செல்ல விருப்பமில்லையாம். நோகாமல், அலுங்காமல், குலுங்காமல் மறுபடியும் ராஜ்யசபா சீட் மூலமாகவே டெல்லி செல்ல விரும்புகிறாராம். இதுதான் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள்.

இதில் இப்போது ராமதாஸ் செய்துவரும் தாமதத்தால் அ.தி.மு.க.வில் ராஜ்யசபா எம்.பி. சீட் கிடையாது என்று சொல்லிவிட்டார்களாம். வந்தால் 5 அல்லது 6 லோக்சபா சீட். கொஞ்சம் பணம் என்று மட்டும் சொல்லிவிட்டார்களாம். ராஜ்யசபா சீட்டை சுப்பிரமணியம் சுவாமிக்கு ஒதுக்கியிருக்கிறாராம் ஜெயலலிதா. மதுரையில் சீட் கேட்டு சுவாமி நெருக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் அங்கு அழகிரியே போட்டியிடப் போவதால் அ.தி.மு.க.வே அவரை எதிர்க்க வேண்டும் என்பது அம்மாவின் அவாவாம்.

பா.ம.க. எப்போது தனது முடிவை அறிவிக்கும் என்பது தெரியாமல் விஜயகாந்தும் காத்திருக்க.. இப்படியாச்சும் தாமதப்படுத்தி இதன் மூலம் விஜயகாந்தை தனித்துப் போட்டி என்று அறிவிக்கச் செய்து அவரைத் தனிமைப்படுத்த தைலாபுரம் நினைப்பதாகவும் ஒரு தகவல்.. விஜயகாந்தைத் தொடர்பு கொண்ட காங்கிரஸ்காரர்கள் ராமதாஸின் இந்த நினைப்பை சொல்லி அவரை உஷார்படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் மனிதர் எந்த வலையிலும் சிக்காமல் மெளனமாக தனது கட்சியில் விண்ணப்பங்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

தி.மு.க.விலும் எந்தெந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கலாம் என்பதைக்கூட செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் டாக்டரால்.. டாக்டரை ஒரேயடியாக ஒதுக்கவும் முடியாமல் அவர் அ.தி.மு.க. பக்கம் செல்வதைத் தடுக்கவும் முடியாமல் தவிக்கிறார் தி.மு.க. தலைவர்.

தி.மு.க.வில் உள்ள வன்னியர் இனத் தலைவர்கள் அனைவரும் ஒருமித்தக் குரலில் அவரை விட்டுவிடுங்கள் என்று சொன்னாலும் பல களம் கண்ட சிங்கமாச்சே நம்ம தலைவரு.. விடுவாரா..? நம்ம மக்களை நம்ப முடியாது என்ற ஒரு சிறிய சந்தேகத்தால், விஜயகாந்தும் நம்மை வாழ்த்திப் பேச இயலாத போது, வட மாவட்டங்களில் கட்டாயம் ஆதரவுக் கரம் வேண்டும் என்று தவியாய் தவிக்கிறார்.

வெளிப்படையாக போவதென்றால் போகட்டும் என்று சொன்னாலும் அன்புமணியின் மாமனாரான முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மூலமாக தி.மு.க. காய் நகர்த்திதான் வருகிறது. வந்தால் 6 எம்.பி. தொகுதியோடு அன்புமணிக்காகவே அடுத்த ராஜ்யசபா சீட்டும் உறுதி என்று சொல்லியுள்ளார்களாம். அன்புமணி விடாப்பிடியாகத் தொங்கிக் கொண்டிருப்பது, தி.மு.க.வின் இந்த உறுதிமொழியினால்தான் என்கிறார்கள்.

வைகோவும் சஞ்சலத்தில்தான் இருக்கிறார் என்கிறார்கள். சென்ற தேர்தலிலேயே பாட்டாளி மக்கள் கட்சிக்கு தன்னைவிட கூடுதல் தொகுதியை ஒதுக்கிய காரணத்தால்தான், அன்புச் சகோதரியை பாசத்துடன் பார்க்க ஓடோடி வந்தார். இப்போது ராமதாஸ் அன்புச் சகோதரியே என்று இங்கேயே தேடி வந்துவிட்டால் தனக்கு அதிமுக கூட்டணியில் மவுசு குறைந்துவிடுமே என்று பயப்படுகிறார். போதாக்குறைக்கு அவரது கட்சியின் முக்கியத் தலைவர் கண்ணப்பன் வீட்டோடு இருக்கப் போவதாகச் சொல்லிவிட.. கோவை மாவட்டத்தில் அவர் கட்சிக்கு ஒரு சீட்டு குறைகிறதே என்ற வருத்தம் வேறு. அவரும் ராமதாஸின் மூவ்மெண்ட் என்ன என்பதில்தான் தனது அரசியல் எதிர்காலமும் இருக்கிறது என்ற நினைப்பில் இருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியை அதிமுக பக்கம் கொண்டு வருவதில் தா.பாண்டியன்தான் மும்முரமாக இருக்கிறார். அதிமுக கூட்டணியின் அறிவிக்கப்படாத கொள்கை பரப்புச் செயலாளர் இப்போது தா.பாண்டியன்தான். இவர்தான் ராமதாஸிடம் விடாப்பிடியாக நச்சரித்து வருகிறார். ராமதாஸை எப்படியாவது அழைத்து வந்துவிட்டால், அன்புச் சகோதரியின் பாசத்தினால் கேட்ட தொகுதிகள் அப்படியே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பினால் தா.பா.வின் உழைப்பை கம்யூனிஸ்ட்டு வட்டாரமே பாராட்டித் தள்ளுகிறது.

ராமதாஸ் இப்படியென்றால் திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் நீடிக்கவே விரும்புகிறார். கலைஞரிடமும் தலையாட்டிவிட்டாராம். ஒரு தொகுதி உறுதி என்பதனால் சிதம்பரம் தொகுதியில் திருமாவே நின்றாலும் நிற்கலாம். ஆனால் காங்கிரஸ் இதை எப்படி ஜீரணிக்கப் போகிறது என்று தெரியவில்லை. திருமாவுக்குக் கவலையில்லை.. காங்கிரஸ் தொகுதிகளில் அலைய வேண்டிய அவசியமே இல்லை. ராமதாஸ் வராமல் போனால் வட மாவட்டங்களில் அவருக்குப் பதிலாக திருமாவளவனை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இதனால் மீண்டும் விடுதலைச் சிறுத்தைகள்-பாட்டாளி மக்கள் கட்சியினர் மோதல் ஏற்படும் சூழல் உருவாகும் என்பவர்களும் உண்டு..

ராமதாஸின் அடுத்த மூவ்மெண்ட்டுக்காக தமிழக அரசியல் இப்படி காத்திருக்க.. ஈழத் தமிழர்களுக்காக இந்தத் தலைவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரவையின் நோக்கமே, இந்த தேர்தல் கூட்டணி விவகாரத்தில் சிக்கி சிதறப் போகிறது என்று வருத்தப்படுகிறார்கள் ஈழத்து ஆதரவாளர்கள்..

தே.மு.தி.க.வில் விண்ணப்ப மனு விற்பனை..!

புரட்சிக் கலைஞரின் தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விண்ணப்ப மனு பெறுவது நேற்று துவங்கிவிட்டது.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை முதல் விண்ணப்ப மனு கொடுக்கப்பட்டது. கூட்டம் அலைமோதியது ஆச்சரியம்தான்.. எந்த நம்பிக்கையில் இத்தனை பேர் வருகிறார்கள் என்று தெரியவில்லை.

மற்றக் கட்சிகளைப் போல் இங்கேயும் விண்ணப்ப மனுக்களுக்கு கட்டணங்களை திணித்து வசூல் பார்த்துவிட்டார்கள். பொதுத் தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாய், தனித் தொகுதிக்கு 5000 ரூபாயாம். ஆனால் பெண்களுக்கு என்று தனிச் சலுகைகள் இல்லையாம்.. அண்ணியாரின் கவனத்திற்கு யாரும் இதனை கொண்டு செல்லவில்லை போலும்..!

மத்திய சென்னை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, அக்கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தாமரைக்கண்ணன் என்பவர் பத்தாயிரம் ரூபாய் செலுத்தி மனு வாங்கியுள்ளார்.

அண்ணன் இப்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்பதால், இது முடியாத காரியம் என்பது மாவட்டச் செயலாளராக இருப்பவருக்குத் தெரியக் கூடாதா என்று நீங்கள் நினைக்கக் கூடாது.. இதையெல்லாம் உணர்வுப் பூர்வமாக அணுக வேண்டும். பண்ருட்டி ராமச்சந்திரனுக்குக்கூட வராத, தோணாத எண்ணமெல்லவா இது..! இனி தாமரைக்கண்ணனின் பதவிக்கு ஆபத்தில்லை..!

விருதுநகர் தொகுதியில் போட்டியிட விரும்பி அக்கட்சியின் பிரபல தொழிலதிபரான மாபா பாண்டியராஜன் மனு கொடுத்துள்ளார். வருகின்ற 22-ம் தேதி வரையிலும் மனு கொடுப்பார்களாம். அதன் பின்னர் விஜயகாந்தே நேரடியாக விண்ணப்பம் அழைத்தவர்களை அழைத்து இண்டர்வியூ செய்து வேட்பாளர்களை தேர்வு செய்வாராம்.


தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்று நேற்றுகூட பண்ருட்டி ராமச்சந்திரனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டுள்ளார். அவரும் 501வது தடவையாக சளைக்காத முறையில் "இது குறித்து கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்வார்" என்று பொறுப்பாகப் பதிலளித்துள்ளார்.

எனக்கு ஒரு சந்தேகம்.. நிச்சயம் இந்த பதில்தான் வரும் என்று தெரிந்தும் நமது பத்திரிகையாளர்கள் ஏன் திரும்பித் திரும்பி இதே கேள்வியை கேட்டுக் கொண்டே வருகிறார்கள்..? அவர்களாகே வந்து சொல்லட்டும் என்று காத்திருக்கக் கூடாதா..?! நம் மரியாதையை நாம் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்..?

என்ன நான் சொல்றது..?

6 comments:

Thamiz Priyan said...

நல்ல அலசல்!

Krish said...

தேர்தலுக்கு முன் கூட்டணி கூடாது என்று சட்டம் வந்தால் நன்றாக இருக்கும்

உண்மைத்தமிழன் said...

//தமிழ் பிரியன் said...

நல்ல அலசல்!//

நன்றி தமிழ்பிரியன் ஸார்..

உண்மைத்தமிழன் said...

//Krish said...
தேர்தலுக்கு முன் கூட்டணி கூடாது என்று சட்டம் வந்தால் நன்றாக இருக்கும்.//

அதற்குப் பதிலாக கூட்டணியே கூடாது என்று சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் கிரிஷ்..

நித்யன் said...

சூப்பர் அப்டேட்டுக்கு மிக்க நன்றி

வாழ்க நீர்...

வளர்க உம் தொண்டு...

அன்பு நித்யன்

உண்மைத்தமிழன் said...

//நித்யகுமாரன் said...

சூப்பர் அப்டேட்டுக்கு மிக்க நன்றி

வாழ்க நீர்...

வளர்க உம் தொண்டு...

அன்பு நித்யன்//

நன்றி நித்யா..

ஏன் நீங்கள்லாம் எழுதக் கூடாதா..?