அன்புள்ள தமிழ்மணம் நிர்வாகிகளே, கொஞ்சம் செவி கொடுங்கள்..!

31-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வருடத்தின் கடைசி நாளும் அதுவுமாக என்னை இப்படித் தவிக்கவிட்ட கொடுமை இந்த ஆண்டே கடைசியாக இருக்கட்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.. கசப்பும், இனிப்புமாக, காயமும் உடனடி மருந்துமாக கழிந்துவிட்ட இந்த நாளை நான் மறக்கவே விரும்புகிறேன்.

இப்போதுதான் இணையத்தின் முன்பாக வந்தமர்ந்தவுடன் தமிழ்மணத்தின் புதிய வசதிகளில் ஒன்றாக ரேட்டிங் என்னும் பிரிவைப் பார்த்தேன். அதில் எனது தளம் 2-வது இடத்தைப் பிடித்திருப்பதாக அத்தளம் சொல்கிறது. மிக்க மகிழ்ச்சி.

இதற்கான காரணம் தமிழ் வலைப்பதிவர்களையே சேரும். அவர்கள் அடியேனை இப்படி புரட்டு புரட்டு என்று புரட்டியிருப்பதினால்தான் இந்தத் தளத்திற்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

அத்தோடு கூடவே “ம்” என்ற ஓரெழுத்துப் பின்னூட்டத்திற்குக்கூட பொறுப்பாக “மிக்க நன்றிகள் நண்பரே..” என்று கேணத்தனமாகப் பதில் சொல்லி எனது பதிவை நானே சில எண்ணிக்கைகள் கூடுமளவுக்கு உருட்டிப் பெருக்கிக் கூட்டிக் கழித்திருக்கிறேன் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன்.

என் அளவுக்கு இணையத்தின் முன்பாக 18 மணி நேரம் அமர்ந்திருந்து அதில் 17.30 மணி நேரம் வலையுலகத்தையே நோண்டுகின்ற சம்பளத்துடன் கூடிய பணி மற்ற பதிவர்களுக்கும் கிடைத்திருந்தால் அவர்களும் நிச்சயமாக இதனைச் செய்திருப்பார்கள். ஆகவே இந்த எனது ரேட்டிங் புள்ளி விபரத்தைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நானே அதனைக் கொண்டாட முடியாது. பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான் கதைதான்..!

அதே சமயம் நல்ல, நல்ல பதிவுகள் கிடைத்தால் பதிவர்கள் ஆர்வத்துடன் கவனிப்பார்கள் என்கிற ஒரு செய்திக்கு இது ஒரு உத்வேகமாகவும் இருக்கட்டும். எனது இனிய தோழர்கள் 'வினவு கூட்டமைப்பு' இந்த ரேட்டிங் முறையில் முதலிடத்தில் இருப்பது இதற்கான ஒரு சான்று. அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

தமிழ்மண நிர்வாகிகளை இந்தச் செயலுக்குக்காக வாழ்த்துகின்ற அதே நேரத்தில், இன்று எனது தளத்திற்கு நேர்ந்த ஒரு கொடூரத்திற்கு தயவு தாட்சண்யமே இல்லாமல் குற்றம் சாட்ட வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறேன்.

தமிழ்மணத்தின் கருவிப்பட்டை ஓட்டளிப்பு முறையில் விக்கிலீக்ஸ் கணக்காக ஓட்டையைப் போட்டு, ஆட்டையைப் போட்டு அதைக் கொண்டு வந்ததற்கான நோக்கத்தையே சிதைக்கின்ற அளவுக்கு மாற்றக் கூடிய ஒரு புரோகிராமைத்தான் தமிழ்மணம் இப்போதுவரையிலும் பயன்படுத்தி வருகிறது என்பது வருத்தத்திற்குரியது.

இப்படி மிக எளிதாக ஒரு நிமிடத்தில் பிளஸ் ஓட்டும், மைனஸ் ஓட்டும் போடக் கூடிய சூழலில் இருக்கின்ற சாப்ட்வேர்களை பயன்படுத்தி வருவது பற்றி தமிழ்மணம் நிர்வாகத்தினர் இப்போதுவரையிலும் கவலைப்படாமல் இருப்பது ஏன் என்றும் எனக்குத் தெரியவில்லை.

நண்பன் மாயவரத்தான் என்னுடைய நல்ல நண்பர்களில் ஒருவர் என்றுதான் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றைக்குத்தான் தெரிகிறது அவர் ரொம்பவே "நல்ல நல்ல நல்ல" நண்பரென்று..

இன்று எழுதிய கடைசி இட்லி-தோசை பதிவை முதலில் நள்ளிரவு 12.15 மணிக்குப் போட்டுவிட்டு டிவிட்டரில் இதற்கான லின்க்கை கொடுத்தபோது மாயவரத்தான் அங்கே வந்து மைனஸ் ஓட்டுப் போட ஒரு லின்க்கை ஒரு நிமிடத்தில் தயார் செய்து கொடுத்தார்.

அப்போதே நான் அதை தடுத்தேன். “இது வேண்டாம். விட்ருங்க..” என்றேன். அவர் கேட்கவில்லை. நான் என்ன சொல்லியும், நான் ஏதோ பைத்தியம்போல் உளறுகிறேன் எனவும், அவர் நகைச்சுவைக்காக நள்ளிரவில் கும்மியடிப்பதுபோலவும் நினைத்து மைனஸ் குத்துக் கிடைக்கும் சுருக்கமான லின்க்கை ட்வீட் செய்துவிட்டார்.

இது மைனஸுக்கான சுருக்க லின்க் என்பதறியாமல் பல ட்வீட்டர்கள் அதனை கிளிக் செய்துவிட மைனஸ் ஓட்டுக்கள் 6-ஐ தாண்டியது. மாயவரத்தானை கடிந்து கொண்டு கடுப்போடு அந்த எனது அந்த முதல் பதிவினை நீக்கிவிட்டு மீண்டும் அதே பதிவினை புதிதாக இட்டேன்.

காலையில் மீண்டும் டிவிட்டரில் வந்த மாயவரத்தான் எனது புதிய பதிவில் அவரைப் பற்றி “கோமாளித்தனமான” என்ற வார்த்தையால் குறிப்பிட்டதற்கு(வேறு எப்படி அழைப்பார்களாம்?) கோபப்பட்டு மீண்டும் அதேபோல் ஒரு சுருக்க லின்க்கை தயார் செய்து ட்வீட் செய்துவிட்டார்.

ட்வீட்டரில் இருந்த தோழர்கள் பலரும் ஆர்வக் கோளாறில் என்ன..? ஏது..? என்றுகூட கேட்காமல் கிளிக் செய்துவிட தமிழ்ப் பதிவுலக வரலாற்றிலேயும், எனது தளத்தின் வரலாற்றிலேயும் இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைய இட்லி-தோசை பதிவுதான் அதிக மைனஸ் குத்துக்களை வாங்கியிருக்கிறது.

மாயவரத்தான் ஏற்கெனவே இதேபோல் கோவை என்கவுண்ட்டரை எதிர்த்து நான் போட்டிருந்த இந்தப் பதிவிற்கும் இதேபோல் மைனஸ் ஓட்டுக்கள் கிடைப்பதுபோல் லின்க்கை தயார் செய்து ட்வீட்டரில்விட்டு அதன் மூலம் ஏராளமான மைனஸ்களை பெற்றுக் கொடுத்தார். இதில் அப்படியென்ன இவருக்குச் சந்தோஷம் என்று தெரியவில்லை..

அன்றைக்கு ஏதோ இவர் ஒருவர்தான் போடப் போகிறார் என்று நினைத்து "பிடிக்காவிட்டால் போட்டுக் கொள்ளுங்கள்" என்றேன். அவ்வளவுதான்.. போட்டுத் தாளித்துவிட்டார். எனக்கு அன்றைக்கு சுத்தமாகத் தெரியாது இந்த சாப்ட்வேரை உடைத்தெறிந்து டிவிட்டரில் இருந்தே மைனஸ் ஓட்டுக்களைக் குத்தலாம் என்று..?

இன்றைக்கு 50 மைனஸ்கள் வரும்போது மாயவரத்தானிடம் அந்த லின்க்கை நீக்கும்படி டிவிட்டரில் சொன்னேன். கேட்கவில்லை. இதுதான் கட்டற்ற சுதந்திரமாச்சே.. “உன்னால் முடிந்தால் தடுத்துக் கொள்” என்பதைப் போல் அவரது பேச்சு இருந்தது. எனக்கு அந்த அளவுக்குச் சக்தியில்லை. வேறு வழியில்லாமல் ட்வீட்டரில் அவரைத் தடை செய்துவிட்டு வந்துவிட்டேன். இதுதான் என்னால் முடிந்தது. என்னைப் போன்ற ஏமாளியினால் வேறென்ன செய்ய முடியும்..?

இதைத் தொடர்ந்து நமது பரமார்த்த குருவின் சிஷ்யர்கள் இருவரும் கூகிள் பஸ்ஸிலும், ட்வீட்டிரிலும் இந்த லின்க்கை பார்ப்போரிடத்தில் எல்லாம் கொடுத்து மைனஸ் ஓட்டைப் போட வைத்துவிட்டார்கள். இப்போதுவரையிலும் 105 மைனஸ் ஓட்டுக்கள்.. இதனால் இவர்களுக்கு என்ன திருப்தியோ, என்ன மகிழ்ச்சியோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனது வருத்தமும், கண்ணீரும் இவர்களுக்குப் புரியுமா? தெரியுமா..?

நல்ல நாள்.. அதுவும் புது வருடத் துவக்கம் என்பதால் என்னால் மேற்கொண்டு அவர்களைப் பற்றிச் சொல்ல முடியவில்லை.
 
ஒவ்வொரு பதிவையும் எழுதுவதற்கு எத்தனை தேடல்கள் செய்ய வேண்டியிருக்கிறது? எத்தனை மணி நேரங்கள் ஒதுக்க வேண்டியிருக்கிறது? எத்தனை சிரமங்கள் பட வேண்டியிருக்கிறது. உங்களுக்கே தெரியும்.. அத்தனை பேரும் பதிவர்கள்தானே..?

படித்துப் பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்று நினைத்துப் போட்டிருந்தால்கூட நிச்சயமாக நான் இப்படி கேட்க மாட்டேன். படிக்காமலேயே சக பதிவர்களை வம்படியாக ஒருவரின் பதிவில் மைனஸ் ஓட்டுக்களைப் போட வைத்து இவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கான காரணம்தான் என்ன..?

இதற்கான மூல காரணமான தமிழ்மண நிர்வாகிகளை இங்கே கடிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

விட்டால் ஒபாமாவுக்கே அட்வைஸ் செய்யும் அளவுக்கு புத்திசாலிகளான தமிழ்மணத்தின் இயக்குநர் சிகரங்கள்(நேர்ல வாங்கப்பூ.. வைச்சுக்குறேன்..) இப்படி மைனஸ், பிளஸ் ஓட்டுக்களை பதிவுக்கே வராமல், தளத்தையே ஓப்பன் செய்யாத நிலையிலேயே வேறு ஒரு புரோகிராமில் இருந்தும்கூட போடலாம் என்கிற அளவுக்கான ஒரு ஓட்டை சாப்ட்வேரை இதில் வைத்திருக்கலாமா..?  இவர்களுடைய சாப்ட்வேர் நிச்சயம் தவறானதுதானே..? இந்த லட்சணத்துல இவங்க எல்லாருமே பொட்டி தட்டுறவங்கதானாம். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது..?

கூடுதல் ஓட்டுக்கள் கிடைத்தால் இன்னும் ஒரு 500 பேர் படிப்பார்களே என்கிற ஆதங்கத்தினாலும் வருங்காலத்தில் எனது பதிவைப் படிப்பவர்கள் இதனை எனக்கான தரைக்குறைவான நிலையாக கருதும் வாய்ப்பும் இருப்பதால்தான் இதனைச் சொல்கிறேன். 

பொதுவாக தமிழ்மணத்தில் அதிக வாக்களிப்பு பெற்றவைகள் பட்டியலிலோ, சூடான இடுகைகள் பட்டியலிலோ ஒரு பதிவு இடம் பெற்றால் அது நார்மலான பதிவினைவிட 500 பார்வையாளர்களைக் கூடுதலாகப் பெறும். இது ஒன்றுக்காகவே நான் அதிக ஓட்டுக்களைப் பெற விரும்புகிறேன்.

அதே சமயம் முன்பே பல முறை இந்த ஓட்டளிப்பு முறையையும், சூடான இடுகை பிரிவையும் நீக்கும்படி மேன்மை தாங்கிய தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு மடலும் அனுப்பியிருக்கிறேன். தமிழ்மணம் நிர்வாகத்தினர் அதனை இன்றுவரையில் ஏற்கவில்லை.  ஓகே.. கம்பெனியின் முடிவு அது. அந்த நிறுவனத்தின் மூலம் நான் பயன்படுகிறேன் என்றால் நிறுவனத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பு நீக்கப்படும்வரையிலும் தமிழ்மணத்தின் வாசகன் என்கிற முறையில் அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியாவது தமிழ்மண நிர்வாகிகள் இந்தக் கருவிப் பட்டையில் ஓட்டளிப்பது தொடர்பான சாப்ட்வேர்களைத் திருத்தியோ, சுருக்கியோ வேறு தளங்களில் இருந்து இதற்கு வாக்களிக்க முடியாதபடிக்கும் ஏற்பாடுகளைச் செய்யுமாறு அன்போடு வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். என்னைப் போன்ற எளியவனால் இப்படித்தான் முறையிட முடியும்..

அந்த மூன்று நல்லவர்களுக்கும் எனது நன்றிகளும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

நன்றி..!

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-31-12-2010

31-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த வருடத்திய கடைசி இட்லி-வடை பதிவு இது.


ஆகவே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சில நிஜமான சண்டைக் காட்சிகள் இருக்கும் வீடியோக்களை உங்களுக்குப் பரிசாகத் தருகிறேன்.. காரணமெல்லாம் கேட்கக் கூடாது.. புரிஞ்சுக்கணும்..! அம்புட்டுத்தான்..!




இது தாதாகிரி என்கிற டிவி நிகழ்ச்சியின்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளருக்கும், அதில் கலந்து கொண்டவருக்கும் இடையில் நடந்த மோதல். முதலில் அடித்தது பெண்தான் என்றாலும், பொம்பளைப் புள்ளையை கை நீட்டியா அடிக்கிற ராஸ்கல் என்று சொல்லி நம்ம பயலைப் போட்டுப் புரட்டி எடுத்துட்டாய்ங்க.. பாருங்க..








சினிமாவில்தான் புருஷனை பொண்டாட்டி அடிப்பதைப் போல் காமெடிக்காக காட்டுவார்கள். நிஜமாக, சீரியஸாக காட்டித் தொலைக்க மாட்டார்கள். அதே போல் சீரியலிலும் நம்மாளு ஒருத்தனை அக்குவேறு, ஆளு வேறா பிரிச்சிருக்காங்க. கன்னட சீரியலாம்.. நல்ல வேளை. தமிழ் சீரியல்ல இந்த அளவுக்கெல்லாம் இல்லை. கொஞ்சமா வெளக்கமாத்தால அடிக்கிற மாதிரிதான் இருந்தது. பார்த்து சூதானமா இருந்துக்குங்க..








இந்தச் சமாச்சாரம் எப்போ நடந்ததுன்னு எனக்குத் தெரியாமப் போச்சே. இப்பத்தான் பார்த்தேன்..

டான்ஸ் புரோகிராமுக்கு நடுவரா வந்த சின்ன இடையழகி சிம்ரனிடம் எடுத்த எடுப்பிலேயே ஏதோ ஹைகோர்ட் ஜட்ஜ் மாதிரி “சந்திரமுகில ஏன் நீங்க நடிக்கலைன்னு..” கேட்டு டென்ஷனாக்கிட்டாரு விஜய் ஆதிராஜ். அதுல சிம்ரன் அக்கா ஸாரி ஆண்ட்டி கோபமாகி வெளிநடப்பு செஞ்சிருக்காங்க.

அப்புறம் எப்படியோ சமாதானம் செஞ்சு கூட்டிட்டு வந்த மாதிரி தெரியுது. அப்படியே கூடவே இதுவும் செட்டப்புதான்ற மாதிரியும் தெரியுது. நம்ம வூட்டு ஜனங்களுக்கு இதெப்படி தெரியப் போகுது..? பாருடி சண்டையன்னு மோட்டுவாய்ல கையை வைச்சுக்கிட்டுப் பார்த்து டிஆர்பியை ஏத்திவிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.








இது கேரளாவில் டைவர்ஸ் கோர்ட்டுக்கு வந்த இரண்டு குடும்பத்துப் பெண்கள் கோர்ட்டுக்கு வெளியே தங்களுடைய பிரச்சினைகளைப் பேசும்போது பேச்சுவாக்கில் கை கலப்பாகி, ஆளாளுக்கு முடியைப் பிடித்திழுத்து காரசாரமாக்கியிருக்கிறார்கள்..








இது பஞ்சாப்பில் ஒரு பெண்கள் கல்லூரியில் இரண்டு குரூப் மாணவிகள் விருதகிரி விஜயகாந்த் மாதிரி எத்தி, எத்தி விளையாடும் சூப்பர் பன்ச் சண்டை..








செக் குடியரசு நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் டேவிட் ராத்தை அந்நாட்டின் துணை பிரதமர் மிராஸ்லாவ் மெசெக் பல் டாக்டர்கள் மாநாட்டு மேடையிலேயே  மண்டையில் ஒரு தட்டுத் தட்டியதுதான் இந்த வீடியோ.

தட்டியதைத் தட்டிக் கேட்டு அமைச்சரும் பின்பு துணை பிரதமரை ஒரு போடு போட.. இருவரும் உருண்டு புரண்டு மல்லுக் கட்டியுள்ளார்கள். சண்டைக்கான காரணத்தைக் கேட்டு செக் குடியரசு நாடே சிரிப்பாய் சிரித்திருக்கிறது.

துணை பிரதமர் மெசெக் தனது மனைவியை பணத்துக்காகத்தான் திருமணம் செய்திருக்கிறார் என்று டேவிட்ராத் கட்சிக்காரர்கள் பலரிடமும் கிசுகிசு பரப்பினாராம். அதுதான் பொது மேடையிலையே ஒரு போடு போட்டிருக்கிறார் மெசெக். இப்போது இவர்கள் இருவரையுமே அவரவர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.








தனி நபர்கள்தான் சண்டை போடுவாங்களா..? நாங்க போட மாட்டோமாக்கும் என்று சவால்விட்டுச் செய்து காட்டுகிறார்கள் பொலிவியா நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள். என்ன ஆவேசம் பாருங்கள்..








குங்பூ, கராத்தேக்கு புகழ் பெற்ற தென்கொரிய பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் நடத்திய சண்டைக் காட்சிகள்தான் இது. இதில் பெண் எம்.பி.க்களுக்கும் கலந்து கொண்டு தங்களது வீரதீரத்தைக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது..








இது உக்ரைன் பாராளுமன்றத்தில் நடந்த போர்.. கல் வீச்சு, அம்பு வீச்சு, தடி வீச்சு, முட்டை வீச்சு என்று அனைத்து அம்புகளும் ஏவப்பட்டு, கை கலப்பாகி, மூக்கு உடைந்து, ரத்தம் கொட்டிய நிலையிலும் சபாநாயகர் மிகக் கர்மச் சிரத்தையாக ஓட்டெடுப்பு நடத்தி ஒரு தீர்மானத்தை நடத்தி முடித்திருக்கிறார். என்னவொரு கடமையுணர்ச்சி..? கடைசியில் பாராளுமன்றத்திற்குள்ளேயே கண்ணீர் புகைக் குண்டுகளை வீசித்தான் எம்.பி.க்களை வெளியேற்றியிருக்கிறார்கள்..





இது இலங்கை பாராளுமன்றத்தில் 2007-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதியன்று நடந்த சிறிய தள்ளுமுள்ளு சண்டை..







உலகிலேயே தற்போதைக்கு பாராளுமன்றச் சண்டைக்குப் புகழ் பெற்ற நாடான தைவானின் பாராளுமன்றத்தில் நடந்த பல, பல சண்டைக் காட்சிகளின் அரியத் தொகுப்பு








நம்ம மட்டும் சளைத்தவர்களா என்ன..? இது 2007-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதியன்று உத்தரப்பிரதேச சட்டப் பேரவையில் நடந்த அதி பயங்கர சண்டைக் காட்சி இது.. காணத் தவறாதீர்கள்..








இவ்வளவு சோகத்தையும் தாங்கிக்கிட்ட உங்களின் புண்பட்ட மனதை கூல் செய்ய வேண்டி இந்தச் செய்தி..


'நோ ஒன் கில்டு ஜெஸிகா' அப்படீன்ற படத்துல வித்யாபாலனும், ராணி முகர்ஜியும் நடிச்சுக்கிட்டிருக்காங்க. ஒரு பெரிய ஸ்டார் இருந்தாலே ஏதாவது ஒரு கிசுகிசு எழுதுவாங்க. ரெண்டு பெரிய ஸ்டாரிணிகள் இருக்கும்போது எழுத மாட்டாங்களா..?


ராணி முகர்ஜிக்கும், வித்யா பாலனுக்கும் முட்டிக்கிச்சு. ரெண்டு பேருமே படத்தில நடிக்க ஆர்வமில்லாம இருக்காங்க.. யாராவது ஒருத்தர் பிய்ச்சுக்கப் போறாங்க.. படம் நிக்கப் போகுது அப்படி, இப்படின்னு பிட்டு நியூஸா போட்டுத் தாளிச்சாங்களாம் பத்திரிகைக்காரங்க.


படம் புட்டுக்குமோன்னு பயந்து போன தயாரிப்பாளர்  பத்திரிகையாளர்களுடன் ஹீரோயின்களை நேர்ல சந்திக்க வைச்சு “நல்லா பார்த்துக்குங்க.. இவங்க ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாத்தான் இருக்காங்க. நோ சண்டை.. ஒரே பேமிலிதான்.. நல்ல பாசக்காரங்க.. படத்தை நல்லபடியா நடிச்சுக் கொடுப்பாங்க..” அப்படீன்னு சொல்றதுக்கு ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு பண்ணியிருக்காரு..


கூட்டத்துக்கு ஸ்டாரிணிகள் ராணி முகர்ஜியும், வித்யாபாலனும் வந்தாங்க. “இவங்ககிட்ட என்னத்த சொல்லி.. என்னத்த செஞ்சு நாம ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ்தான்.. நமக்குள்ள சண்டையெல்லாம் ஒண்ணுமில்லை சொல்லிப் புரிய வைக்கிறது?” அப்படீன்னு வித்யாபாலன், ராணிகிட்ட கேட்டிருக்காங்க.


அதுக்கு ராணி "சொல்ல வேணாம். செஞ்சு காட்டுவோம்.. வா"ன்னு சொல்லி வித்யாபாலனை இறுக்கியணைச்சு லிப் டூ லிப் உம்மா கொடுத்து அசத்தியிருக்காங்க.. முதல்ல தயங்குன வித்யாபாலனை அடுத்தடுத்து அதே மாதிரி கிஸ் பண்ணி கலக்கியிருக்காங்க ராணியம்மா.. இனிமே எவனாச்சும் சொல்லுவீங்க.. அக்காமார்கள் ரெண்டு பேரும் சண்டை போடுறாங்கன்னு..?





டிரவுசரை கழட்டறதுன்னா சத்தியமா அது இதுதானுங்கோ..





படித்ததில் பிடித்தது

"சுரேஷ், உங்களுக்கு விரைவில் பண வசதி விரைவில் ஏற்படும்.  நான் பல காலம் சோற்றுக்கே வழியில்லாமல் வெறும் அழுகல் தக்காளியை உண்டு உயிர் வாழ்ந்திருக்கிறேன்.  இன்னமும் இந்தியாவில் உழைப்புக்குப் பலன் உண்டு என்பதற்கு நான் ஒரு சாட்சி.  ஆனால் உழைப்பே உயர்வு தரும் என்ற பொய் வாசங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.  ஒரு ஆள் வாட்ச்மேனாக இருந்தால் வாழ்நாள் பூராவும் வாட்ச்மேனாகவே இருக்க வேண்டியதுதான்.   உழைப்போடு கொஞ்சம் புத்தியையும் கலக்க வேண்டும். அப்போது  பணம் வரும்.  வந்த பிறகு,  புத்தகம் வாங்க மறந்து விடாதீர்கள்."


- எழுத்தாளர் சாரு நிவேதிதா


பார்த்ததில் பிடித்தது




நன்றி..! 

அம்பேத்கர் - சினிமா விமர்சனம்

29-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பாரதரத்னா டாக்டர் பாபாசாஹேப் பி.ஆர்.அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் இத்திரைப்படம் பற்றிய எனது முந்தைய பதிவுகளை இதுவரையிலும் படிக்கவில்லையெனில் இப்போதாவது படித்துப் பார்க்கவும்.

அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..?

 

அம்பேத்கர் திரைப்படம் வெளியீடு - திரையரங்குகள், நேரம் மாற்றம்..!

 

 அண்ணல் அம்பேத்கரின் திரைப்படம் வெளியானது..!

 

இத்திரைப்படம் சட்ட மாமேதை என்ற அளவிலேயே அறிந்திருந்த அம்பேத்கரின் முழு வடிவத்தையும் எனக்கு உணர்த்தியது. காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பாளர். காந்தியாரின் மரியாதைக்குரிய எதிரியாகவும் திகழ்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக சுதந்திரத்திற்கு பின் பல ஆண்டு காலம் நாட்டை ஆண்டு வந்த மத்திய காங்கிரஸ் அரசு அம்பேத்கரை பற்றிய முழு உண்மைகளை இந்திய இளைஞர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்காமல் தந்திரமாக மறைத்திருக்கிறது என்பதையும் இப்படமே உணர்த்தியது.

பொதுவாக வரலாற்றுத் திரைப்படங்களைப் படமாக்குவதற்கு மிகவும் மெனக்கெட வேண்டும். அதிலும் அரை நூற்றாண்டு தாண்டிய திரைப்படங்களெனில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டி வரும் என்பது சினிமாத் துறையில் இருக்கும் எனக்கு நன்கு தெரியும்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் படத்தினை பார்க்கின்றபோது மிகச் சமீபத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் போலவேதான் இருந்தது.

படத்தின் மிகப் பெரும் குறை தமிழ் வசனங்கள் வழக்கு மொழியாக இல்லாமல் தூயத் தமிழாக அமைந்திருந்ததுதான். இந்த ஏற்பாட்டைச் செய்த புண்ணியவான் யாரோ..? ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரே தந்தையான அம்பேத்கரின் திரைப்படம் இது என்பதை உணர்ந்து செய்திருந்தால் இந்தத் தவறு  நடந்திருக்காது..

அம்பேத்கரின் 65 வருட கால வாழ்க்கையை முழுமையாகக் காட்டிவிட முடியாதுதான். அதனால் முடிந்த அளவுக்கு தற்போதைய சினிமா ரசிகர்களும் ஆவலுடன் பார்க்க விரும்புகின்ற சினிமா மொழியில் சம்பந்தப்பட்டவைகளை ரத்தினச் சுருக்கமாக சுருக்கிக் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

இத்தனை படிப்புகளை படித்திருக்கும் முதல் இந்தியர் அம்பேத்கர் என்பதும், அந்த முதல் இந்தியரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான் என்பதும் நமக்குப் பெருமையான விஷயம்தான். சிறு வயதில் அம்பேத்கர் படும் அவமரியாதைகளின் தொடர்ச்சியாகத்தான் அவரின் எதிர்கால அரசியல் வாழ்க்கை நடந்தேறியது என்பதை திரைப்படம் பதிவாக்கியுள்ளது.

மாட்டு வண்டியில் தனது சகோதரனுடன் பேசிக் கொண்டே செல்கையில் அவர்களுடைய பேச்சை வைத்தே அவர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்ந்து வண்டிக்காரன் வண்டியைக் கவிழ்த்துவிடும் காட்சி ஒன்றே போதும்.. இந்த அவமானத்தை தன்மானமுள்ள எந்த மனிதனாலும் மறக்க முடியாது. அம்பேத்கரின் முதல் சமுதாயப் புரட்சி எண்ணத்திற்கு இந்த விஷயமே அடிகோலியிருக்கலாம்..

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவர் படிக்கின்ற சம்பவங்கள்.. அங்கே நடைபெறும் சம்பவங்கள்.. இந்தியர்களை கேலியாகப் பார்க்கும் மேல்நாட்டு வர்க்கத்திற்கு அம்பேத்கர் கொடுக்கின்ற சூடுகள் என்று படத்தின் துவக்கமே அதிரடியாகத்தான் இருந்தன.

கல்விக்கு இந்த மனிதர் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை இத்திரைப்படம் பரிபூரணமாக பதிவு செய்திருக்கிறது. 17 வயதில் ராமாபாயை திருமணம் செய்து முடித்த கையோடு வெளிநாட்டு வந்து படிப்பில் முழு கவனத்தையும் செலுத்திய அந்த மனிதரை என்னவென்று சொல்வது..?

நாடு திரும்பியவுடன் பரோடா மன்னரின் சமஸ்தானத்திலேயே கணக்கு பார்க்கும் வேலைக்கு அமர்கிறார். அங்கே அவர் சந்திக்கும் அவமானங்கள் மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கீழே வேலை பார்ப்பவராக இருந்தாலும் ஒரு டம்ளர் தண்ணியை கொண்டு வந்து கொடுக்க மனம் இடம் கொடுக்காத அளவுக்கு சாதிப் பித்துப் பிடித்த இந்தியர்கள் மத்தியில் எத்தனை நாட்கள்தான் அம்பேத்காரால் பணியாற்றியிருக்க முடியும்.. இது குறித்து பரோடா மன்னருடன் அம்பேத்கர் பேசும்போது மன்னர் “இவ்வளவுதான் என்னால் முடியும்..” என்று சொல்வது அப்போதைய இந்திய அரசியல் சூழலை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும்போதும் இதே போன்ற சூழலை அவர் எதிர்கொள்ளும் காட்சியும் மிக அருமை. நீர் அருந்தவிடாமல் தடுத்ததையும் எதிர்த்து தனது தாகத்தைத் தீர்த்துவிட்டு, “வேணும்னா நீங்க வரும்போது உங்க வீட்ல இருந்தே தண்ணி கொண்டு வந்திருங்க..” என்று அம்பேத்கர் சொல்லும் காட்சி மிக ரசனையானது..

நன்கு படித்து, நல்ல வேலையில் இருக்கும் தனக்கே இத்தனை இடர்ப்பாடுகளும், சோதனைகளும் கிடைக்கின்றபோது படிப்பறிவில்லாத ஏழை தாழ்த்தப்பட்ட மக்கள் என்னென்ன சோதனைகளை தினம்தோறும் சந்தித்து வருவார்கள் என்று அவர் சிந்தித்த வேளையினால்தான் இன்றைக்கு இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் என்ற பிரிவினரின் செயல்பாடுகள் ஓரளவுக்கேனும் உயர்ந்திருக்கிறது.

சைமன் கமிஷனை காங்கிரஸ் புறக்கணித்தபோதிலும் அம்பேத்கர் அங்கு ஆஜராகி தான் சார்ந்த மக்களுக்காக வாதிடுவது மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. “இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்போரில் இப்போது இருக்கும் ஒரேயொரு வழக்கறிஞர் நான்தான்” என்று அம்பேத்கர் சொல்கின்ற வார்த்தைகள், அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் உள்ளே நுழைந்திருக்கும் சினிமா ரசிகனை நிச்சயம் தாக்கியிருக்கும் என்றே நம்புகிறேன்.

மகாராஷ்டிராவில் கொலாபா மாவட்டத்தில் இருக்கும் மகத் என்னும் ஊரிலிருக்கும் செளதார் குளத்து நீரை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து அம்பேத்கர் நடத்தியிருக்கும் போராட்டம் அற்புதமானது.

மகத் நகரசபையில் செளதார் குளத்தைப் பயன்படுத்தும் உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்பும் சாதி இந்துக்களின் தூண்டுதலாலும், மிரட்டலாலும் அது நடைபெறாமல் இருக்கவே அம்பேத்கரின் தலைமையில் 1927 மார்ச் 20-ல் செளதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டம் நடந்துள்ளது.  அந்தப் போராட்டக் காட்சி, காந்தியாரின் தண்டி உப்பு யாத்திரைக்கு ஒப்பானது. ஆனால் இதுவரையிலும் இந்த செளதார் குளம் போராட்டக் காட்சிகள் இந்தியர்களின் மத்தியில் தண்டி யாத்திரைபோல் பிரபலமாகாதது ஏன் என்றும் தெரியவில்லை..

இதைத் தொடர்ந்து நடக்கும் கலவரங்களும் அந்தச் சூழலும் அம்பேத்கரை இன்னமும் அதீத வேகத்துடன் தனது இனத்து மக்களுக்காக உழைக்க வைத்திருக்கிறது.

படம் முழுவதும் சொல்லப்படும் விஷயங்கள் அனைத்துமே சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடையதாக இருப்பினும் நாம் புரிந்து கொள்வது அம்பேத்கர் நடத்திய சுதந்திரப் போராட்டம் பிரிட்டிஷ் ஆதிக்கத்திடம் இருந்து இந்தியா விடுதலை வேண்டி நடைபெற்ற போராட்டம் அல்ல.. ஆண்டாண்டு காலமாக கடவுள்கள், சனாதன தர்மம், வேதங்கள், சாதிகள் என்று இந்து மதத்தில் இருந்த குழப்பங்களை சாக்காக வைத்து ஆதிக்கச் சாதியினர் நடத்திய கொடுமையில் இருந்து தனது இனத்துச் சொந்தங்களான தாழ்த்தப்பட்ட மக்களை மீட்க அம்பேத்கர் நடத்திய சுதந்திரப் போராட்டமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

உதாரணமாக காலாரம் கோவில் போராட்டக் காட்சி அம்பேத்கரின் போராட்ட உறுதியைக் காட்டுகிறது. மதம் என்பது தன்னை பின்பற்றும் அத்தனை பேருக்கும் பாகுபாடில்லாமல் வழி காட்டக் கூடியதாகத்தான் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் குறிப்பிட்டவர்களை மட்டும் என்னைத்தான் தெய்வமாகத் தொழ வேண்டும். ஆனால் அருகில் வந்து தொழக் கூடாது. தூரத்தே நின்று அப்படியே போய்விட வேண்டும் என்றெல்லாம் எந்தக் கடவுளாவது சொன்னாலோ.. சொல்லியிருந்தாலோ.. அதனைத் தூக்கியெறிந்துவிட்டுப் போவதுதான் சாலச் சிறந்தது.

இந்தக் கொள்கைக்காகத்தான் தாங்கள் இந்து மதத்தில் உள்ளவரையிலும் இந்துக் கோவில்களில் எங்களுக்கும் சம உரிமையுண்டு என்று போராடிய அந்த கோவில் போராட்டம் அழகுற படமாக்கப்பட்டுள்ளது.. தந்திரமாக தேரை இழுக்கும் உயர்சாதியினரின் கடைசி நேர சூழ்ச்சியைக் கண்டறியும் அம்பேத்கர் அதனை அவர்கள் பாணியிலேயே சென்று முறியடிக்க தனது மக்களை உசுப்பிவிடும் காட்சியில் திரையரங்கில் காது கிழியும் அளவுக்கு கை தட்டல்கள்..

அடக்கி வைக்கப்படும்போதுதான் சுதந்திரத்தின் அருமை தெரியும்.. இந்த அடக்குமுறையை எதிர்த்தாக வேண்டுமெனில் ஆட்சி, அதிகாரத்துக்கு செல்வதுதான் மிகச் சிறந்த வழி என்றுணர்ந்து அதற்கான வழிமுறைகளுக்குள் அம்பேத்கர் இறங்கியபோதுதான் இந்தியாவின் விடிவெள்ளியாக இருந்த காங்கிரஸின் இன்னொரு பக்கமும் அம்பேத்கருக்கு புரிந்திருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஹரிஜன் என்று பெயர் சூட்டி அவர்கள் கடவுளின் குழந்தைகள் என்று சொல்லி, அவர்களை அரவணைத்துச் செல்லும்படி அறிவுரை கூறிய காந்தியார் அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காதது ஏன் என்றுதான் புரியவில்லை.

முதல் இரண்டு வட்ட மேசை மாநாடுகளிலும் அம்பேத்கர் கலந்து கொண்டு தனது இனத்து மக்களுக்காக அவர் வாதாடுவது பதிவாகியிருக்கிறது. அடுத்து வரும் தேர்தல்களில் தனது இனத்திற்காக இரட்டை வாக்குரிமை தேவை என்று கேட்டு போராடி வெற்றி பெற்று வந்த அம்பேத்கரை காந்தியார் தனது தந்திரமான போர்க்குணத்தால் வெற்றி கொண்டது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி..

அவ்வாறு இரட்டை வாக்குரிமை தருவது அவர்களை இன்னமும் ஒதுக்குவது போலாகும். இந்து மதத்தை இரண்டாகப் பிரிப்பது போலாகும் என்று காந்தியார் மறுக்கிறார். அம்பேத்கரும் இதனை ஏற்க மறுக்கிறார். இருவரும் சம அளவிலான தலைவர்கள் என்பதை அப்போதுதான் உணர்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால் காந்தியார் வழக்கம்போல தனது உண்ணாவிரதம் என்னும் ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார். பூனாவின் எரவாடா சிறையில் அவர் தொடங்கிய உண்ணாவிரதத்தின் முக்கிய நோக்கம், பிரிட்டிஷாருக்கு நான் முக்கியமா, அம்பேத்கர் முக்கியமா என்பதைச் சொல்லாமல் சொல்லியதாக நான் நினைக்கிறேன். இதுவும் ஒரு வகையில் நிச்சயமாக பிளாக்மெயில்தான்.

நான் சொல்வதைச் செய்.. இல்லையெனில் செத்துப் போவேன் என்று இன்னொரு மக்களுக்கு கிடைக்க வேண்டியதை நிறுத்துவது எப்படி அரசியல் போராட்டத்தின் கீழ் வரும் என்று தெரியவில்லை. ஆனால் அன்றையச் சூழலில்.. இந்தியாவில் காந்தியாருக்கு இருந்த தேசத் தந்தை என்ற பெரும் பெயரில் நிச்சயம் இது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது நாம் உணரக் கூடியதே..

இது பற்றிய பேச்சுவார்த்தைக்காக ராஜாஜியும், ராஜேந்திரபிரசாத்தும், பட்டேலும் அம்பேத்கரை சந்திக்கின்ற காட்சி சுவையானது. இந்தக் காட்சியில் ராஜாஜியின் முக பாவனை மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது.. எத்தனை தலைவர்களுக்கு அம்பேத்கர் என்பவர் எவ்வளவு பெரிய ஆபத்தானவராக இருந்திருக்கிறார்.. எதிரியாக அவரைப் பாவித்திருக்கிறார்கள் என்பதை உணர்த்த இந்த ஒரு காட்சியே போதும் என்று நினைக்கிறேன்.

இரண்டு முறை காந்தியாரை நேரில் சந்தித்து பேசும் அம்பேத்கர் இறுதியில் வேறு வழியில்லாமல் நாட்டு நலனுக்காக தனது இனத்து மக்கள் நலனை பலிகடாவாக்கும் அந்தச் சோகக் காட்சியின் பதிவு இதுவரையிலும் எந்த ஒரு வரலாற்றுத் திரைப்படத்திலும் தென்படாதது.

இதனைச் செய்துவிட்டு அம்பேத்கர் காந்தியாரிடம் தெரிவிக்கும் அந்தப் புகழ் பெற்ற வசனமான, ““காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் இன்னமும் தேவைப்படலாம்!”  என்பது காந்திஜி பற்றிய சிந்தனையை நமக்குள் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.

இந்த ஒரு வசனம்தான் என்றில்லை.. காந்தியார் பற்றிய அம்பேத்கரின் விமர்சன வசனங்கள்தான் தியேட்டரில் அதிக கைதட்டல்களைப் பெற்றன.

'மகாத்மாக்கள் வருவார்கள், போவார்கள், தீண்டாமை இன்னும் அப்படியேதானே இருக்கிறது'

'காந்தி வெளிநாட்டுத் துணிகளையெல்லாம் எரித்துப் போராட்டம் செய்கிறாராம்' என்கிறார் ஒருவர். அதற்கு அம்பேத்கர் 'அவர் எரிக்க வேண்டிய விஷயம் இன்னும் நெறைய இருக்கு" என்கிறார்.

இது எல்லாவற்றையும்விட இன்னொரு வசனம்தான் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. சொல்லியிருப்பது உண்மையென்றாலும் சென்சார் போர்டில் எப்படி இதனை அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயமாக இந்த ஒரு விஷயத்துக்காக சென்சார் போர்டுக்காரர்களை பாராட்டலாம். அந்த வசனம் இதுதான் :

“காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும். ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தலித்துகள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை மட்டும் மாறாது.”

இந்த சில வசனங்கள் என்றில்லை.. இத்திரைப்படத்தில் பேசப்படும் அனைத்து வசனங்களுமே அரசியல் களத்தை சூடாக்குபவைதான்.

"ஆலய பிரவேசத்தைவிட அரசியலில் முக்கியத்துவம் பெறுவதுதான் அவசியமானது.." என்று மாநாட்டு மேடையில் நின்று பேசுகின்ற காட்சி..

"நம்மை இந்துக்களும் ஏற்பதில்லை.. நாம் போட்டியாக வந்து விடுவோமோ என நினைத்து மற்ற மதத்தினரும் ஏற்பதில்லை.."

"பலர் புத்த மதமும், பொதுவுடமையும் ஒன்று என நினைக்கின்றனர்.. பொதுவுடமை என்பது ஹிம்சை. புத்த மதம் அஹிம்சை.."

"எல்லா மதத் தலைவர்களும், தான்தான் கடவுளின் அவதாரம் என சொல்கின்றனர்.. புத்த மதத்தில் மட்டும்தான் ஜாதி இல்லை." - என்று தனது நண்பர்களிடம் குமுறுவது..

"நாங்கள் ஹிந்து மதத்தை விட்டு விலகுவதற்கு வருத்தப்படாதீர்க்ள்... நாங்கள் போவதால் அது தூய்மை ஆகிறது என சந்தோசப்படுங்கள்." என்று தன்னை சமாதானம் செய்ய வரும் இந்து மதத் தலைவர்களிடம் சொல்வது..

முழுக்க, முழுக்க அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கையைச் சொல்வதாக இருந்தாலும், கொஞ்சம் அம்பேத்கரின் குடும்ப வாழ்க்கையையும் இடையிடையே தொட்டுத் தொடரத்தான் செய்திருக்கிறார்கள்.

அவருடைய மனைவி ரமாபாயின் ஏக்கம், பரிதவிப்பு, அம்பேத்கரின் அருகாமையை உணர்ந்து காத்திருப்பது.. சாப்பிடாமல் இருப்பாரே என்ற கவலையுடன் டிபன் பாக்ஸுடன் அலுவலகத்திற்கு ஓடி வருவது.. இரண்டாவது முறையாக கல்வி பயில அம்பேத்கர் லண்டன் கிளம்பும்போது அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பது.. அடுத்தடுத்து தனக்குப் பிறந்த பிள்ளைகளை இழப்பது என்ற கொடூரத்தில் அம்பேத்கரின் குடும்ப வாழ்க்கையின் இன்னொரு புறத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் நீளத்தைக் கருத்தில் கொண்டு சிற்சில விஷயங்களைப் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் பார்வையாலும், காட்சியாலுமே நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார். அம்பேத்கருக்கு சர்க்கரை வியாதி இருப்பதை வேலைக்காரன் கேட்கின்ற கேள்விக்கு “ஏன் என்னை சீக்கிரமா சாகடிக்கணும்னு பார்க்குறியா?” என்ற பதிலின் மூலம் உணர்த்தி எந்த மாதிரியான வாழ்க்கை முறையில் இந்தத் தலைவர் தனது இனத்து மக்களுக்காக இரவு, பகலாக உழைத்திருக்கிறார் என்பதைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். தனது சோகமான வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் வயலின் வாசிப்பதிலும் மிகத் தேர்ச்சி பெற்றவராகவும், அது ஒன்றையே தனது ஓய்வு நேர செலவழிப்பாகவும் கருதிய அம்பேத்கரின் கலை ரசனையை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

முதல் மனைவியின் இறப்புக் காட்சியில் இருக்கும் ஒரு கவிதைத்தனம் மிக ரசிப்புக்குரியது. பதைபதைப்புடன் தன்னைக் காண ஓடி வரும் கணவனிடம் “வெளியில் மழை பெய்கிறதா..?” என்று மனைவி ரமாபாய் கேட்கின்ற கேள்வியின் தொடர்ச்சியாக அவர்களது கல்யாண தினத்தன்று கொட்டித் தீர்த்த மழையில் ஒட்டி நின்ற அவர்களது முதல் நெருக்கத்தை அப்போதும் நினைத்துப் பார்க்க முயல்வது.. மிக உச்சமான ரசனைத்தனம்.

தனது முதல் மனைவி இறந்த பின்பு மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்ற இடத்தில் தனது நலனையே பெரிதும் விரும்பி கவனித்துக் கொண்ட தாதியையே விரும்பி மணந்து கொண்ட அவரது இன்னொரு மணவாழ்க்கைக் கதையும் படமாக்கப்பட்டிருக்கிறது.

காந்தியார் நேருவிடம் அம்பேத்கரை அமைச்சரவையில் சேர்க்கச் சொல்லியும் சட்டத் துறையை வழங்கக் கோரியும் சிபாரிசு செய்வதை மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியில் ஒருபோதும் உறுப்பினராகக்கூட இருந்ததில்லை. அதே சமயம் காந்தியாரின் மரியாதைக்குரிய எதிரியாகவும் இருந்திருக்கிறார் நேதாஜியைவிடவும். கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தலைவர் பதவிக்குப் போட்டியிட்டபோது நேதாஜி ஜெயிப்பதற்காக நிறைய உதவிகளையும் அம்பேத்கரே செய்திருக்கிறார்.

இவ்வளவும் இருந்தும் காந்தியாரின் இந்த சிபாரிசு கவனிக்கத்தக்கதுதான். எனது கருத்து என்னவெனில், “அவர்களுக்கு நாம் எதுவுமே செய்யவில்லையே என்று அவர்கள் நினைக்கக் கூடாது என்பது காந்தியாரின் எண்ணமாக இருக்கலாம்” என்று நினைக்கிறேன். நேரு இதனை எற்றுக் கொண்டதுகூட இந்தியத் திருநாட்டுக்குக் கிடைத்த நன்மைக்கே.

பிரிட்டிஷ் இந்திய அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்து இந்தியாவிலேயே முதல் முறையாக தொழிலாளர் நலத்துறை மூலமாக தொழிலாளர்களுக்கு பணி நேரத்தை முறைப்படுத்தி உத்தரவிட்டவர் அம்பேத்கர்தான்.

அந்த அனுபவத்தோடும் தனக்கு உதவியாக நியமிக்கப்பட்டவர்களின் உதவிகள் கிடைக்காத சூழலிலும் தனியொரு மனிதனாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்திருப்பது மிகப் பெரும் சாதனை.

இது பற்றி அப்போதைய பாராளுமன்றத்தில் எடுத்துக் காட்டும்போது அம்பேத்கர் மட்டுமே இதனைச் செய்து முடித்துள்ளார் என்கிறார் ஒரு உறுப்பினர். உடனேயே அம்பேத்கர் எழுந்து, “எனது சக உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன்தான் இந்த வேலையை செய்து முடித்தேன்..” என்று பெருந்தன்மையுடன் சொல்கிறார். இதனை எத்தனை தலைவர்களிடத்தில் காண முடியும்..?

பெண்களுக்கான ஜீவனாம்சம், மறுமண உறுதிச் சட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய இந்துச் சட்டத் திருத்தத்தை அம்பேத்கர் 1951-ம் ஆண்டு கொண்டு வந்தபோது, அதற்கு எழும்பிய எதிர்ப்பும், இதனைக் கண்டும் காணாததுபோல் பிரதமர் நேரு நடந்து கொண்டதையும் பார்த்துதான் மனம் வெறுத்து தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஒரு சட்ட மாமேதையின் உதவியை இந்தியப் பாராளுமன்றமும், இந்திய அமைச்சரவையும் விடுதலை பெற்ற சில ஆண்டுகளிலேயே இழந்தது மிகக் கொடுமையான விஷயம். இதில் வெற்றி பெற்றவர்கள் இந்து சனாதனவாதிகள் என்றாலும் தீவிர நாத்திகர் என்று கருதப்படும் பண்டித நேரு எதற்காக இதற்கு உடந்தையாக இருந்தார் என்பது பற்றியும் இன்னொரு பக்கம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

அன்றையச் சூழலில் இந்தியப் பிரதமர்வரையிலும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவகையில் இருந்த இந்து சனாதனிகள்தான் இன்றைக்கும் பெண்கள் இட ஒதுக்கீடு மசாதோவை வேறு பெயர்களில் மறைமுகமாக எதிர்த்து வருகிறார்கள் என்பதையும் நாம் உணர வேண்டும்.

எந்தப் பக்கம் போனாலும் தான் ஒரு இந்துவாக இருப்பதாலேயே தான் அசிங்கப்படுத்தப்படுகிறோம் என்பது அம்பேத்கருக்கு மிகப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாகவே அவர் இந்து மதத்தைத் துறப்பது என்ற முடிவுக்கு வந்து பெளத்தத்தை தழுவியிருக்கிறார்.

செய்தி கேள்விப்பட்டு சமாதானத்திற்கு ஓடி வரும் இந்து மடாதிபதிகளிடம் “நாங்கள்தான் தீண்டத்தகாதவர்களாயிற்றே.. நாங்கள் உங்களுடன் இருந்தாலென்ன? போனாலென்ன..?” என்று அம்பேத்கர் கேட்கின்ற கேள்வி நியாயமானதுதான்.

கிறித்துவம், இஸ்லாம், சீக்கியம் என்று இன்னும் புகழடைந்த பெரிய மதங்கள் இருந்தும் அம்பேத்கர் உருவ வழிபாடோ, மனிதர்களிடையே எவ்வித அடையாள பாகுபாடோ இல்லாத மதம்தான் தன்னை நாடியிருக்கும் மக்களுக்குத் தேவை என்று சொல்லி பெளத்த மதத்தைத் தழுவியிருக்கிறார்.

இத்தனை நாட்கள் அரும்பாடுபட்டும் தனது மக்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பது இந்து மதமே என்றுணர்ந்த அவரது அந்த இறுதிச் செயல்தான் இந்திய அரசியல் வரலாற்றில் அம்பேத்கரின் பெயரை இன்றைக்கும் நிலைநிறுத்தியிருக்கிறது எனலாம்.

சாதியை எதிர்ப்பேன் என்பவர்களும், சாதியை நான் ஒரு பொருட்டாக கருதுபவனில்லை என்பவர்களும், சாதியெல்லாம் நான் பார்ப்பதில்லை என்று சொல்பவர்களும் மூல காரணியான இந்து மதத்தைவிட்டு விலகுவதில்லை. அதில் இருந்து ஒதுங்கியிருக்கிறோம் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் அதைத் தூக்கியெறிய வேண்டும் என்று சொல்லி செயலிலும் செய்து காட்டியிருப்பவர் அம்பேத்கர் மட்டுமே. இதற்காக அவர் தொடுத்திருக்கும் காரணங்கள் மிக, மிக நியாயமானவை.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வோடு திரைப்படம் நிறைவடைகிறது.. இதுதான் எனது வருத்தமும்கூட.. அவரது இறப்பு மற்றும் இறுதி ஊர்வலக் காட்சிகளையும் சேர்த்து வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் மெகா ஸ்டார் என்னும் மம்முட்டி. எந்த இடத்திலும் கேரளாவின் முன்னணி நடிகராக அவர் தென்படவில்லை. முதல் காட்சியில் இருந்து முடிவுக்கு வருகின்றவரையிலும் அம்பேத்கரை தவிர வேறு யாரையும் நான் பார்க்கவில்லை.


காந்தியார் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டவுடன் தன் கையில் இருந்த புத்தகத்தை நழுவவிட்டுவிட்டு தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு நிற்கும் ஒற்றை ஷாட்டிலேயே அத்தனை சோகத்தையும்  காட்டிவிட்டார் மம்மூக்கா.

மம்முட்டியின் ஆவேசமில்லாத இயல்பான இயல்பான நடிப்பு, ஜின்னாவை பாராளுமன்ற லாபியில் அவர் சந்தித்து பேசுகின்ற காட்சிதான். முதல் மாநாட்டில் அவர் கையை உயர்த்தி "கற்பி, புரட்சி செய், ஒன்று சேர்.." என்று முழுக்கத்துடன் ஆரம்பிக்கும் அவரது ஆட்சேபணையான குரல்கள் ஒன்று சேர்ந்து இறுதிவரையிலும் தொடர்ந்துள்ளன. இவரது மனைவியாக நடித்திருக்கும் சோனாலி குல்கர்ணி இந்த ஒரு திரைப்படத்தில்தான் இப்படி சாந்த சொரூபியாக நடித்திருப்பார் என்று நினைக்கிறேன். லட்சக்கணக்கான அப்பாவி இந்திய மனைவிமார்களின் ஒரு அடையாளமாக இருந்திருக்கிறார் ரமாபாய். கூடவே அம்பேத்கரின் அண்ணனுக்கும், அவருக்குமான குடும்பப் பிரச்சினைகளையும் மறைக்காமல் காட்டியிருப்பதும் நேர்மையான விஷயம்தான்.

இத்திரைப்படத்தில் காந்தியாரை காட்டியிருப்பது வேறு எந்தத் திரைப்படத்திலும் இப்படி நகைச்சுவையாக காட்டவேயில்லை.  இந்தியாவின் அடையாளம்.. அஹிம்சையின் மறு உருவம் என்றெல்லாம் புகழப்பட்ட ஒரு மனிதரை அவருடைய உடல் அசைவுகளினாலும் திருட்டு முழிகளினாலும் அப்பாவி மனிதரைப் போலவும், சில இடங்களிலும் திருட்டுத்தனக்காரர் போலவும் காட்டியிருக்கும் இயக்குநரின் தைரியத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

பரோடா, நாக்பூர், பூனா, கொலம்பியா, லண்டன், டெல்லி, மும்பை என்று பல இடங்களையும் சுற்றி வந்தாலும் நிஜத்திற்கு அந்தக் கால  வாழ்க்கையை வடிவமைக்க கலை இயக்குநர் ரொம்பவே மெனக்கெட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவருக்கும் எனது பாராட்டுக்கள்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மம்முட்டி பெற்றதில் பெரிய ஆச்சரியமில்லை. அதேபோல் இத்திரைப்படம் பெற்ற விருதுகளெல்லாம் நிச்சயமாகக் கொடுக்கப்பட வேண்டியவைதான். இத்திரைப்படத்தில் பங்கு கொண்ட அத்தனை கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..

இத்திரைப்படம் இப்போது சென்னையில் ஆல்பர்ட் திரையரங்கில் மட்டுமே காலை காட்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அரை நாள் விடுப்பு எடுத்தாவது இத்திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று பாருங்கள்.. உங்களிடமிருந்து மறைக்கப்பட்ட பல வரலாற்று உண்மைகளை இத்திரைப்படம் எடுத்துச் சொல்கிறது.

தமிழில் டப்பிங் செய்யப்பட்ட பிரதிகள் மிகக் குறைவாக இருப்பதாலும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் சோம்பலினாலும் இனிமேல்தான் சென்னையைத் தாண்டிய பகுதிகளுக்கு இப்படம் வரப் போகிறது. அப்படி வரும்பட்சத்தில் கண்டிப்பாகப் பார்க்கத் தவறாதீர்கள்.

பள்ளிப் பருவத்தில் வெறும் சட்ட மேதை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர் என்ற இரண்டு பிரிவுகளில் மட்டுமே நம் கண் முன்னே அம்பேத்கரை கொண்டு வந்திருக்கும் இப்போதைய அரசியல் ஆட்சியாளர்களின் முகத்திரையை இத்திரைப்படம்தான் கிழித்திருக்கிறது.

செளகார் குளத்தில் நீர் அருந்த வேண்டி அம்பேத்கர் நடத்தியிருக்கும் போராட்டமும், கோவில் நுழைவு போராட்டமும், தாழ்த்தப்பட்டோருக்கு அரசியல், வாழ்வியல் உரிமைகள் கேட்டு போராடிய அம்பேத்கரின் மிக நீண்ட அரசியல் வாழ்க்கையும் மிக மிக நன்கு திட்டமிட்டு நம்மைப் போன்ற இளைய தலைமுறைகளிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது.

தண்டி யாத்திரையை 6-ம் வகுப்பிலேயே சொல்லிக் கொடுத்த ஆட்சியாளர்கள் இந்த செளகார் குளம் விஷயத்தை ஏன் சொல்லித் தருவதில்லை..? சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தை இந்திய மக்களே எதிர்த்ததாக பொய்ப் பிரச்சாரம் செய்து நமது புத்தியில் புகுத்தியது ஏன்..? சைமன் கமிஷன் முன்பும், வட்ட மேசை மாநாட்டில் காந்தியாரின் முன்பாகவே தாழ்த்தப்பட்டோருக்கான ஒரே பிரதிநிதி நான்தான் என்ற உண்மையை முழங்கியிருக்கும் அம்பேத்கரின் உண்மைப் பேச்சை நம்மிடமிருந்து மறைத்தது ஏன்..? இப்படி நேற்றைய, இன்றைய ஆட்சியாளர்களிடம் நாம் கேட்க வேண்டிய பல கேள்விகளை இத்திரைப்படம் நமக்குள் எழுப்புகிறது.

இந்தச் சந்தேகங்களுக்கு விடை தேட வேண்டுமாயின் நாம் பள்ளிப் பருவத்தைப் புறக்கணித்து அம்பேத்கரை வெறும் புத்தகங்கள் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ள வேண்டும் என்கிற சூழல் இருக்கின்றபோது இது போன்ற திரைப்படங்களை வரவேற்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

பொறுமையுடன் படித்தமைக்கு எனது நன்றிகள்..

மறுபடியும் போலி பிரச்சினை.. தாங்கலடா முருகா..!!!

27-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஏன் கண்ணுகளா..? நான் உண்டு.. என் முருகன் உண்டு என்று நானே புலம்பிக் கொண்டிருக்கும் இந்த நேரத்துல இப்படியெல்லாம் சொல்லி வைச்சு அடிச்சா நல்லாவா இருக்கு..?

இன்று காலையில் பதிவர் எல்.கே. எனக்கு மெயில் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் இந்த லின்க் இருந்தது. “இது போலி புரொபைல் என்று தெரிகிறது. செக் செய்து பாருங்கள்..” என்று எழுதியிருந்தார்.

சென்று பார்த்தேன். அதன் புரொபைல் பெயர் 'உண்மை தமிழன்' என்று உள்ளது. 'உண்மை'க்கும் 'தமிழனு'க்கும் நடுவில் 'த்' இல்லை என்பதைக் கவனிக்கணும்.. ஏற்கெனவே மூணே முக்கால் வருஷமா இந்தப் பெயரை வைச்சு இங்க குப்பைக் கொட்டிக்கிட்டிருக்கேன்றது உங்களுக்கே தெரியும்..

இது கட்டற்ற சுதந்திரமாச்சே.. யார் வேண்ணாலும், யார் பேரை வேண்ணாலும் வைச்சுக்கலாமே என்றாலும் ஐ.டி. என்னும்போது தனியார் மெயில் நிறுவனங்கள் உட்பட ஒருவர்  பயன்படுத்தி வருவதை அடுத்தவருக்குத் தர மாட்டார்கள். இது உங்களுக்கே தெரியும்.. வலையுலகிலும் நாகரிகம் கருதியும், பெயர்க் குழப்பம் வராமல் இருக்கவும் இது போன்று யாரும் பயன்படுத்துவதில்லை.. இந்த ஐ.டி.யைப் பயன்படுத்தி பின்னூட்டமிட்டால் எத்தனை குழப்பங்கள் வரும் என்பது  உங்களுக்குத் தெரியாததல்ல.

ஏற்கெனவே மூணு வருஷத்துக்கு முன்னால வலையுலகத்துல இதுதான் ஹாட் டாபிக்.. இப்போது மம்மி ரிட்டர்ன்ஸ் மாதிரி இன்னொரு ரிட்டர்ன்ஸ்.. என்னுடைய பெயரில் இன்னொரு போலித் தளம் இந்த இடத்துல இருக்குன்றதை ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இதனை ஆரம்பிச்சது யாருன்னு இப்போவரைக்கும் எனக்குத் தெரியாது. அது அப்படியேதான் இருக்கு.

இப்போ யாரோ ஒரு புண்ணியவான் இந்த ஐ.டி.யையும் ஆரம்பிச்சு வைச்சிருக்காரு.. ஆரம்பிச்சதோட இல்லாம நேற்று ஜாக்கியோட இந்தப் பதிவுல ஒரு பின்னூட்டமும் போட்டு வில்லங்கத்தை ஆரம்பிச்சிருக்காரு.. இங்க போய்ப் பாருங்க..

இவர் உண்மையிலேயே 'உண்மை தமிழன்' என்ற பெயரில் நான் இருப்பது அறியாமல் ஆரம்பிச்சிருக்காரோன்னு நினைச்சு சந்தேகப்பட்டு அவருக்கு ஆதரவு கொடுத்திராதீங்க..

'பேவரிட் மூவிஸ் - கர்ணன்' - 'பேவரி மியூஸிக் - இளையராஜா' - 'பேவரிட் புக்ஸ் - அர்த்தமுள்ள இந்து மதம்' - இப்படி எனது புரொபைலில் உள்ள விஷயங்களையே எடுத்து இதில் போட்டிருக்கிறார். யாரோ நமக்கு நன்கு தெரிந்த ஒரு வலையுலக பிரஹஸ்பதிதான் இதைச் செய்திருக்கிறார் என்பதை இதில் இருந்தே நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்..

அந்த 'உஜிலாதேவி' என்கிற தளத்தில் இருந்து எனக்கு தொடர்ந்து மெயில்கள் வந்தவண்ணம் இருந்தன. அதிகம் படிக்க முடியவில்லை. ஆகவே இரண்டு நாட்களுக்கு முன்புதான் அதனை ஸ்பேம் லிஸ்ட்டில் கொண்டு போய் தள்ளினேன். அந்தத் தளத்தை நான் விரும்பிப் படிக்கிறேன் என்று சொல்லியிருப்பது ஏன் என்றும் எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை எனக்கு உஜிலாதேவி தளத்தில் இருந்து மெயில் வருவது அவருக்குத் தெரியுமோ.. என்னவோ..?

என்ன எழவோ இருந்துவிட்டுப் போகட்டும்.. இப்போதுதான் கொஞ்சம் வலையுலகத்தில் பிரச்சினைகள் இல்லாமல் ஸ்மூத்தாக போகிறது என்று நினைத்தவேளையில் இப்படியொரு பஞ்சாயத்து.. நன்கு தெரிந்த அன்பரே இதனைச் செய்திருப்பதால் இனிமேற்கொண்டு அவரிடம் இது பற்றிப் பேசி புண்ணியமில்லை.

வலையுலகத் தோழர்களுக்கு இந்த நேரத்தில் இந்த விஷயத்தை அறிவுறுத்துகிறேன். அந்த புரொபைலில் இருந்து பின்னூட்டங்கள் வந்தால் நான் எழுதியதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.  

எனது பெயருக்குப் பின்னால் போட்டுத் தொலைந்திருக்கும் பிளாக்கர் எண்களுடன் வந்தால் மட்டுமே ஒரிஜினல் 'உண்மைத்தமிழன்' என்று நினைத்துக் கொள்ளவும்.

உண்மையில் இந்தக் கருமாந்திரம் பிடித்த நம்பரை இந்த வருடக் கடைசியில் தூக்கிக் கடாசிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். இந்தச் சூழலில் இப்படியொரு இக்கட்டு.. இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. அது பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்..

பதிவர்களே.. அந்த புரொபைலின் மூலம் வரும் பின்னூட்டங்களை அழிப்பதோ, அல்லது அப்படியே வைத்திருப்பதோ உங்களுடைய இஷ்டம்.. நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்..!!!

நன்றி

தென்மேற்குப் பருவக் காற்று - திரைப்பட விமர்சனம்

26-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த வருடத்திய இறுதிக் கணத்தில் வெளியாகியிருக்கும் மிகச் சிறந்த திரைப்படம் இது. நினைக்கவே இல்லை இப்படியிருக்கும் என்று.. படத்தின் பாடல்களை இணையத்தில் கேட்டபோது தமிழ் மணத்தது. படத்திலோ தமிழ் மண்ணின் மணம் மணக்கிறது. 'கூடல் நகர்' படத்தை இயக்கிய சீனு ராமசாமியின் இரண்டாவது திரைப்படம் இது.!

ஆட்டுக் கொட்டாயை மேய்த்துவரும் வாலிபனுக்கும், ஆட்டுக்கிடாக்களை ராவோடு ராவாக திருடும் குடும்பத்துப் பெண்ணுக்குமான காதலைச் சுவையோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர்.. இதற்குப் பின்புலமாக  வெள்ளந்தியான கிராமத்துத் தாய்களில் ஒருத்தியான வீராயியையும்  நமக்கு அடையாளம் காட்டுகிறார்.


வீராயி என்னும் சரண்யா கைக்குழந்தை இருக்கையிலேயே விதவையானவர். தான் வாழப் போன ஊரைவிட்டு வந்து வயல்பட்டியில் குடியேறி தன் மகனுக்காகவே இன்னமும் உழைத்துக் கொண்டிருப்பவள்.

ஆடுகளை வளர்த்து விற்கும் தொழிலைச் செய்து வரும் மகன் முருகையன், தனது ஆட்டுக் கொட்டாயில் நள்ளிரவில் ஆடுகளை ஆட்டையைப் போட வரும்போது களவாணிக் கும்பலில் இருக்கும் பேச்சியைப் பார்த்து மூச்சுப் பேச்சின்று போய்விடுகிறான்.

ஆத்தா வீராயி மகனுக்கு ஒரு கால்கட்டுப் போட்டுவிட்டால் பையன் வீட்டுக்கு அடங்கி குடியை மறந்திருப்பான் என்று நினைத்து தனது உறவிலேயே கலைச்செல்வியை பார்த்து வெத்தலை மாத்தி பரிசம் போட்டு வைத்திருக்கிறாள்.

முருகையன் ஆடுகளை மீட்க போலீஸின் உதவியைத் தேட.. இதனால் கோபமான பேச்சியின் அண்ணன் முருகையனை தேடி வந்து அடித்துவிடுகிறான். இந்தக் கோபத்தில் முருகையன் பேச்சியின் குடும்பத்தைக் கை காட்டிவிட பேச்சியின் குடும்பத்தில் ஆண்கள் அனைவரும் சிறைக்குள் போகிறார்கள்.


“களவாணிக் குடும்பத்தில் பெண்ணெடுக்கவா நான் இத்தனை வருஷமா இந்த புழுதிக் காட்டுல ஆடா, மாடா உழைச்சிருக்கேன்..” என்று மறுக்கிறாள் ஆத்தா வீராயி. முருகையனோ “உன்னைத் தவிர வேறு எவளும் எனக்குப் பொண்டாட்டியா வர முடியாது..” என்று பேச்சியிடம் வாக்குக் கொடுக்க.. இது நடந்ததா இல்லையா என்பதுதான் கதை..

இயக்குநருக்கு முதல் பாராட்டு. இப்படியொரு மண்ணும், மண் சார்ந்த கதையையும் தேர்ந்தெடுத்ததற்கு.. காதலை வைத்திருந்தும் காமத்தைத் துளிக்கூட காட்டாமலும், தாய்ப்பாசத்தை வைத்திருந்தும் அது முட்டாள்தனமாக இல்லாமல் தாயின் பரிதவிப்பையும் ஒரு சேர உணர்த்தியிருக்கும் அந்த நேர்மைக்கு எனது சல்யூட்..

புழுதி பறக்கும் இந்தக் காட்டில் ஒத்தைப் பொம்பளை தானே ஏர் பூட்டி உழுது கொண்டிருக்கும் காட்சியில் நடிகை சரண்யாவை மறக்க வேண்டியிருக்கிறது.. சரண்யாவின் நடிப்பு கேரியரில் மிகச் சிறந்த படம் இது..

மகன் குடிக்கிறானே என்ற கவலையுடன் அவனை விரட்டி விரட்டி அடிப்பது.. குடித்துவிட்டு வயலில் வந்து விழுந்து “பசிக்குதும்மா..” என்று கேட்பவனிடம் தூக்குவாளியைக் கொண்டாந்து வைத்துவிட்டு கடுகடுப்போடு செல்லும் அந்தக் கிராமத்துத் தாய்போல் பலர் எத்தனையோ ஊர்களில் இன்னமும் இருக்கிறார்கள்.. பையனுக்கு பேசி முடிக்க மிக எளிமையாக சுருக்குப் பையில் இருந்து காசை எடுத்து வெத்தலையை தம்பியிடமே வாங்கி பரிசம் போடும் அந்தக் காட்சியில் எந்த ஆடம்பரமும் இல்லை.


ஆடு காணாமல் போன கதையை விசாரிக்க வரும் போலீஸிடம் “ஏய் போலீஸு.. களவாண்டவங்களை பார்த்த ஆளு இருக்கு” என்று எகத்தாளமாக சொல்கின்ற அழகு.. மகன் ரத்ததானம் கொடுக்கச் சென்ற இடத்தில் “எவண்டா ஏன் புள்ளைகிட்ட ரத்தம் எடுக்குறது..?” என்று புரியாமல் சவுண்டு விடும் கோபம்.. கலைச்செல்வியின் தந்தை வீட்டு வாசலில் வந்து நின்று மண்ணை வாரி இறைத்துவிட்டுப் போகும்போது காட்டுகின்ற அந்த பரிதவிப்பு. பேச்சியின் வீட்டிற்கே சென்று அவர்களுடன் சண்டையிடுவது.. என்று சரண்யா அசத்தல் ஸ்கோர் செய்திருக்கிறார். இது அவருக்கு 100-வது படம் என்று தெரிகிறது. வாழ்த்துக்கள் மேடம்.. இன்னும் அசத்துங்கள்..

கலைச்செல்வியாக நடித்த அந்தப் பெண்ணைத் தேர்வு செய்த இயக்குநருக்கு தனி ஷொட்டு.. கருமை என்றாலும் பளிச்.. தன்னை நிராகரித்த ஹீரோவிடம் திரும்பி வந்து அவருடைய புகைப்படத்தைக் கொடுத்து “இனிமே இது என்கிட்ட இருக்கக் கூடாது மாமா..”  என்று சொல்லி நீட்டுகின்ற இடத்தில் தியேட்டரில் அப்ளாஸ் பறந்தது. இது மட்டுமல்ல.. உதயம் தியேட்டரில் 5 இடங்களில் வசனத்திற்காகவே மக்கள் கை தட்டினார்கள். ஆச்சரியம் பிளஸ் இன்ப அதிர்ச்சி.

“களவாணிக் குடும்பத்துல பொண்ணெடுக்க உங்கம்மா சம்மதிப்பாங்களா?” என்று பேச்சி கேட்டவுடன் ஹீரோ நிற்க.. “பார்த்தீங்களா நின்னுட்டீங்க..?” என்று திரும்பவும் பேச்சி சொல்கிற காட்சி டாப் கிளாஸ்.. அதேபோல் பேச்சியை ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஹீரோ அழைத்துவிட்டுப் போனவுடன் பேச்சியின் குடும்பத்தினர் ஆளாளுக்கு அவளுக்கு அட்வைஸ் செய்கின்ற சீனையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்..

கிராமத்து வாசனைத் தெறிக்கும் அத்தனையையும் பிரேம் டூ பிரேம் வைத்துச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர். இதற்கு கை கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் செழியனையும் பாராட்டத்தான் வேண்டும்.

ஆட்டுக் கொட்டடியை விடியலில் பார்க்கின்றபோது தெரிகின்ற இடங்களெல்லாம் ஆண்டிபட்டியைச் சுற்றியிருக்கும் இடங்களாம்.. நம்ம ஊர்ப் பக்கம்தான் இத்தனை அழகா என்று சிலிர்க்க வைக்கிறது.. இதேபோல் சரண்யா ஆஸ்பத்திரிக்கு பேருந்தில் செல்லும்போது பேருந்தை காட்டும் லாங் ஷாட்டில் ஊரே அழகுடன் தெரிகிறது.

பாடல் காட்சிகளிலும், ஹீரோ ஹீரோயினை விரட்டிச் செல்லும் களிமண் பூமியை அழகுற காட்டி அசத்தியிருக்கிறார் செழியன். இன்னமும் நாம் பார்க்க வேண்டிய நமது மண்ணின் வாசனை நிறையவே இருக்கிறது..


சேவல் சண்டையில் நடக்கும் சாராயப் பிரச்சினையைப் பெரிதாக்கி சண்டையை மூட்டிவிட.. சரண்யா விஷயம் தெரிந்து சண்டையிட்டவனின் வீட்டுக்கே போய் வாய்ச்சண்டை போட்டு அந்தக் கோப்பையைக் கொண்டு வந்து தன் வீட்டுக்குள் எறிந்துவிட்டு அலட்சியமாக செல்கின்ற காட்சி ஒரு அழகான சிறுகதை.. அந்தக் கோப்பையின் மதிப்பு தெரியாத அம்மா.. ஆனால் மகனின் வருத்தம் தெரிந்த அம்மா.. எவ்ளோவ் பெரிய முரண்பாடு பாருங்கள்..?

பேராண்மை படத்தில் நடந்த வசுந்தராதான் இதில் பேச்சியாக உருமாறியிருக்கிறார். இயக்குநர்களிடத்தில் தங்களை நம்பி ஒப்படைத்துவிட்டால் இது போன்ற அருமையான கேரக்டர்கள் சிறந்த நடிப்பிற்காகக் கிடைக்கும். வசுந்தராவுக்கு உறுத்தாத மேக்கப்பும், அலட்டாத, மிகையில்லாத நடிப்பும் மிகச் சரளமாக இதில் வந்திருக்கிறது..

ஹீரோவைப் பார்த்து பயந்து போய் ஓடும் வேகமும், கண்டுபிடித்தவுடன் முகத்திலேயே ஏதோ தெரியாத ஆளிடம் பேசுவது போல பேசுகின்ற தொனியும் இயக்குநரின் திறமையையும் தாண்டி வசுந்தராவின் நடிப்பைக் காட்டுகிறது.. அவருடைய முகத்தைக் காட்டியே காட்சிகளை சிற்சில இடங்களில் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

இறுதிக் காட்சியில் வைத்திருக்கும் அந்த ட்விஸ்ட்டை ஆடியன்ஸே எதிர்பார்க்கவில்லை. அந்த நேரத்தில் சரண்யாவின் திடீர் மனமாற்றமும் ஏற்புடையதே.. எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் அவருடைய முடிவை ஏற்றுக் கொள்ளும் பேச்சியின் செயலும் சபாஷ் போட வைத்தன. தியேட்டரில் இந்த ஷாட்டிலும் கைதட்டல்கள் தூள் பறந்தன..

மருத்துவமனையில் சரண்யா சொல்கின்ற “பொண்டாட்டியை பரிதவிக்க விட்டுட்டுப் போயிராதடா..” என்ற வார்த்தைகளில் தனது 35 வருட கரிசல் காட்டு வாழ்க்கையை எழுதிக் காண்பிக்கும் யுக்தி அபாரம்.. சீனு ஸார்.. உங்களுடைய எழுத்து உங்களை நல்லதொரு இலக்கியவாதியாக காட்டியிருக்கிறது இத்திரைப்படத்தில்.. வாழ்க..

குறிப்பிட்டு பாராட்டுக் கூடிய இன்னொரு நபர் தீப்பெட்டி கணேசன். ரேணுகுண்டாவில் கலகலக்க வைத்தவர் இதிலும் அப்படியே.. ஆயிரம் ரூபாயை சுருக்குப் பையில் வைச்சிருந்தனே.. காணோமே? என்ற சரண்யாவின் பரிதவிப்பைக் கேட்டு 16 குவார்ட்டர் வாங்கிருக்கலாமே என்ற நக்கல் அங்கலாய்ப்பு செம கலகலப்பு.. படத்தின் துவக்கத்தில் இருந்தே இவரது கேரக்டர் ஸ்கெட்ச் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் துணையாய் இருக்கிறது.

கலைச்செல்வியின் தந்தையை தனியே அழைத்து தான் பேச்சியைக் காதலிக்கும் விஷயத்தை அவரிடம் சொல்ல.. குடித்துக் கொண்டிருந்த போதையில் கோபத்தை அடக்கிக் கொண்டு விலகிப் போகும் அவரது நடிப்பு பாராட்டுக்குரியது. இயக்குநர் அனைத்து வழிகளிலும் மிகைப்படுத்துதலை தொடாமல் சென்றிருக்கிறார்..


பாடல்கள் அனைத்தும் இன்னொரு பக்கம் களை கட்டியிருக்கின்றன. ஏற்கெனவே இணையத்தில் கேட்டிருக்கிறேன். வைரமுத்துவின் கைவண்ணத்தில் கரிசல்காட்டு பாடலும், கள்ளச் சிறுக்கி பாடலும் திரும்பத் திரும்ப முணுமுணுக்க வைக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு படத்தின் திரைக்கதையையே பாடல்களில் கொண்டு வந்திருப்பது இத்திரைப்படத்தில்தான் என்று நினைக்கிறேன். அத்தனை பாடல்களிலும் தமிழ் விளையாடியிருக்கிறது.. புதிய இசையமைப்பாளர் ரகுநந்தனுக்கு எனது பாராட்டுக்கள்..


ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத கேப்டன் ஐசக் என்பவர் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். வெறும் 36 நாட்களில் ஷூட்டிங்கை முடித்திருக்கிறாராம் இயக்குநர். ஆச்சரியம்தான்.. எத்தனை தெளிவாக திரைக்கதை எழுதி, எத்தனை வேகமாக எடுத்திருப்பார் என்று யோசிக்க வைக்கிறது. பாலுமகேந்திரா மற்றும் சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பயிற்சி பெற்றிருக்கும் சீனு ராமசாமியின் இத்திரைப்படம் நிச்சயமாக அவரது குருநாதர்களைப் பெருமைப்படுத்தும்..!

மிகக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்திருந்தாலும் நீண்ட காத்திருப்புக்குப் பின்பு ஆண்டு கடைசியில் வெளியிட்டிருக்கிறார்கள். நிச்சயம் இது போன்ற திரைப்படங்களை ஆதரிக்க வேண்டியது நல்ல சினிமாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நம்முடைய கடமை..

அவசியம் குடும்பத்துடன் சென்று பாருங்கள்..!

ராகுல்காந்தியுடன் ஒரு சந்திப்பு..!

25-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


பள்ளிப் பருவத்தில் ஆங்கிலப் பாடத்தை விரும்பிப் படிக்காததன் பலனை கடந்த 22-ம் தேதி முழுமையாக அனுபவித்தேன். முதல்முறையாக முழுமையான ஆங்கில அறிவு இல்லையே என்கிற பெரும் ஏக்கத்தை அன்றைய ராகுல்காந்தியுடனான சந்திப்பு நிகழ்ச்சி எனக்குள் ஏற்படுத்தியது..!


பத்திரிகையாளர் கவிதா முரளிதரனின் சிபாரிசில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞரணிப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜோதிமணி, கடந்த திங்கள்கிழமையன்று உலகத் திரைப்பட விழாவில் படம் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கு போன் செய்து இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தார்.

முதலிலேயே அவரிடம், “நான் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவன். அங்கு வந்து கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிடைத்தால் என் மனதில் இருக்கும் எதிர்ப்புணர்வுகளைத்தான் கேள்வியாகக்  கேட்பேன்..” என்று தெளிவாகச் சொன்னேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். “மாற்றுக் கருத்துக் கொண்டவர்களுடன்தான் உரையாட வேண்டும் என்று எங்கள் தலைவர் ராகுல் விரும்புகிறார். நீங்கள் விரும்பியவற்றைக் கேட்கலாம். தடையில்லை..” என்று உறுதிமொழியளித்ததைத் தொடர்ந்து வருவதற்கு சம்மதம் தெரிவித்தேன்.

தாஜ்கன்னிமாரா ஓட்டலில்தான் இந்தச் சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சி 12.30-க்கு ஆரம்பம் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் அரை மணி நேரம் முன்னதாகவே 12 மணிக்கே துவக்கிவிட்டார்கள்.

பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், திரையுலகக் கலைஞர்கள், ஒருபாலின ஈர்ப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரையும் அழைத்திருந்தார்கள்.

அழைப்புக்குக் காரணம் ராகுலுடன் ஒரு நேர்முகம் என்று மட்டுமே நான் நினைத்திருந்தேன். நாட்டு நடப்பு பற்றி எங்களுடைய கருத்தை ராகுல் தெரிந்து கொள்வதற்காகவும், காங்கிரஸ் கட்சியின் பக்கம் ஈர்ப்பதற்காகவும் அழைத்திருக்கிறார் என்பது பின்னர்தான் தெரிந்தது.
 

பல்வேறு பத்திரிகைகளில் இருந்தும் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்கள் வந்திருந்தார்கள். விகடனில் இருந்து ஆரோக்கியவேல், குமுதத்தில் இருந்து தளவாய்சுந்தரம், கடற்கரய், என்.டி.டி.வி. ஹிண்டுவின் முரளிதரன், தி வீக் பத்திரிகையின் கவிதா முரளிதரன், ஞாநி, பத்மா, மாலன், மதன், டி.என்.கோபாலன், நமது வலையுலகத் தோழர் அதியமான் என்று எனக்குத் தெரிந்த சிலரும், தெரியாதவர்களில் பலரும் இருந்தார்கள்.

திரையுலகத்தினர் சார்பில் நாசர், அவர் மனைவி கமீலா, நடிகைகள் ரேவதி, ரோகிணி, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் இராம.நாராயணன், தயாரிப்பாளர்கள் 'ஆனந்தா பிலிம்ஸ்' சுரேஷ், அபிராமி ராமநாதன், பெப்ஸியின் செயலாளர் சிவா, அன்பாலயா பிரபாகரன், சித்ரா லஷ்மணன், 'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா, வெங்கட், கே.எஸ்.சீனிவாசன், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி என்று பலரும் வந்து குவிந்திருந்தார்கள்.

அரங்கத்தின் உள்ளே நுழைந்தவுடன் மேடையில் போடப்பட்டிருந்த சேரில் அமர மறுத்த ராகுல், தானே அதைத் தூக்கி வந்து கீழே வைத்து அதில் அமர்ந்து கொண்டார். ஜோதிமணி வரவேற்புரையை நிகழ்த்தியுடன் மேடையேறி மைக் முன் வந்து நின்றார் ராகுல்.

முதல் கேள்வியே நாடு முழுவதையும் சீக்காடாக்கியுள்ள மதுவைப் பற்றிய பேச்சாக அமைந்தது.

“தீவிரவாதம் பற்றி நிறையப் பேசுகிறோம். ஆனால் இன்று இருக்க கூடிய alcohol lobbyதான் இளைஞர்களுக்கு எதிரான மிகப் பெரிய தீவிரவாதம். நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான விஷயமாக இருக்கிறது. அதை உடனடியாக சரிப்படுத்த வேண்டும்.” என்றார் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த நாராயணன் என்பவர்.

தன் கையில் வைத்திருந்த கோரிக்கை மனு போன்ற ஒன்றையும் ராகுலிடம் காட்ட, ராகுலே மேடையின் ஓரத்திற்கு வந்து அதைப் பெற்றுக் கொண்டார். 

இந்தக் கேள்வியின் தொடர்ச்சியாக வேறொருவர் எழுந்து, “மது குடிப்பவரின் உடம்பை மட்டுமல்ல.. அவரது குடும்பத்தையே சீரழிக்கிறது. இதனை உணர்ந்ததாலோ என்னவோ அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் குடிப்பழக்கம் குறைந்துவிட்டது. இளமையும், மதுவும் இணைவது ஓர் அபாயகரமான கூட்டணி. நமது நாட்டில் இளைஞர்கள் அதிகம். அதனால்தான் மது உற்பத்தி செய்யும் வெளிநாட்டு கம்பெனிகள் இப்போது இந்தியா மீதுதான் மொய்க்கின்றன. இவர்களின் திட்டத்துக்குத் துணை புரிவது போலத்தான் தமிழக அரசும் செயல்படுகிறது. ஒரு ரூபாய்க்கு அரிசி போடுவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தமிழக அரசு ஏழை எளியவர்களிடம் இருந்து மதுக்கடைகள் மூலம் தினம்தினம் 100, 150 ரூபாயை பிடுங்கிக் கொள்கிறது. இதனால் நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்...” என்றார்.

இதற்குப் பதில் அளித்த ராகுல்காந்தி, “இது மிகவும் தீவிரமான பிரச்சினை இது பற்றி தேசிய அளவில் சிந்திக்க வேண்டும். மங்களூர் பப்களுக்கு வந்த பெண்களை சிலர் தாக்கினார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. மது குடிக்கக் கூடாது என்று யாரையும் கட்டாயப்படுத்துவதையும் நான் ஏற்கவில்லை..

அதே சமயம் மகாத்மா காந்தி பிரச்சாரம் செய்ததைப் போல மதுவின் தீமைகளை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மதுவை ஓர் ஒழுக்கப் பிரச்சினையாக அணுகாமல் அதை சமூகப் பிரச்சினையாக அணுக வேண்டும்..” என்றார்.

இந்த நேரத்தில் ராகுலை இடைமறித்த ஞாநி, “அரசே மது விற்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா..? உண்டு, இல்லை என்று குறிப்பாகச் சொல்லுங்கள்..” என்றார். தயக்கமே இல்லாமல்  “ஏற்கவில்லை” என்றார் ராகுல்.

வந்திருந்தவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து அமர வைத்திருந்ததால் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சான்ஸ் வழங்கலாம் என்று முடிவெடுத்து மைக்கை பிரிவுக்கு ஒன்றாக மூவரிடம் கொடுத்திருந்தார்கள். ஆனால் அதற்குள்ளாக பலரும் எழுந்து சப்தமாக கேள்வி கேட்கத் துவங்க.. அவர்களிடம் மைக்கை கொடுக்கும்படியாகிவிட்டது.

“உங்களைச்  சுற்றி சந்தேகத்திற்குரிய நபர்கள் இருக்கும்போது எப்படி சாதாரண மக்களை நீங்களும், உங்களது கட்சியும் சென்றடைய முடியும் என்று நம்புகிறீர்கள்...?” என்று சுற்றி வளைத்து ஒருவர் கேட்டார்.

இதற்குப் பதில் சொன்ன ராகுல், “அரசியல் கட்சிகள் தம்மை வெளிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும். மக்களை இன்னமும் நெருங்க வேண்டும். கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் இளைஞர் காங்கிரஸில் ஜனநாயக ரீதியாக தேர்தல்களை நடத்தி வருகிறோம். நேற்று கேரளாவில் நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் ஒரு குற்றசாட்டுகூட இல்லை. அரசியலுக்கு வரும் நபர்களில் மாற்றத்தை எப்படி கொண்டு வருவது..? அது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.  அறிவுஜீவிகள் அரசியலுக்கு வராதது சரியான விஷயமில்லை. நீங்கள் ஏன் காங்கிரஸில் சேர்ந்து பொது வாழ்க்கைக்கு வரக் கூடாது..?” என்று திருப்பிக் கேட்க கைதட்டல் தூள் பறந்தது..

சினிமாக்காரர்கள் சார்பில் 'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா மைக்கை கையில் வைத்திருந்ததால் 'ஆனந்தா பிலிம்ஸ்'  சுரேஷுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

ஏதோ நாட்டுப் பிரச்சினையைத்தான் பேசப் போகிறார் என்று பார்த்தால் அவரோ, தற்போது மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் திரைப்பட வசூலில் இசையமைப்பாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் பங்கு தருவதற்கான சட்ட மசோதாவை எதிர்த்தும், அது பற்றியும் பேசினார்.

இதனை ராகுலே எதிர்பார்க்கவில்லை என்பது அவரது முக பாவனையிலேயே தெரிந்தது. “இந்தச் சட்டம் திரையுலகத்தை அழித்துவிடும்..” என்றார் சுரேஷ். இவருக்குத் துணையாக அபிராமி ராமநாதனும் எழுந்து “மத்திய அரசாங்கம் தற்போது அறிமுகப்பபடுத்தியிருக்கும் சேவை சட்டம் மற்றும் காப்புரிமை சட்டம்  எங்களை  மிகவும்  பாதிக்கும்” என்றார்.

ராகுலோ, “இது பற்றி மேலும் தகவல்கள் கொடுத்தால் நான் கவனிக்கிறேன். நீங்கள் தில்லி வந்து என்னைச் சந்திக்கலாம்..” என்றார். அதற்குள்ளாக தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரன் எழுந்து, “சினிமாவுலகில் வீடியோ பைரசி ஒரு பெரிய ஆபத்தாக இருக்கிறது. இதை தடுக்க சி.ஆர்.பி.சி சட்டத்தை உரிய முறையில் மாற்ற வேண்டும்.” என்றார்.

இதற்குப் பதிலளித்த ராகுல்காந்தி, “சட்டத்தில் எது தவறு என்று நினைக்கிறீர்கள்? (இது பற்றி ராகுல் காந்தி விரிவாக பேசினார், அரசியலில் உள்ள சிக்கல்கள் பற்றி சொன்னார்)  இது பற்றி தில்லி வந்து என்னைப் பாருங்கள். நிச்சயம் நான் உதவி செய்கிறேன்..” என்று சொல்லி முடிக்கப் பார்த்தார். ஆனாலும் திரைக்கலைஞர்கள் விடாமல் வற்புறுத்த ராகுலே பேச்சை டைவர்ட் செய்யும் பொருட்டு, “நெக்ஸ்ட்” என்று கை காட்டி எஸ்கேப்பானார்.

அடுத்து சக்தி அறக்கட்டளையின் அநிருத்தன் வாசுதேவன் எழுந்து ஒரு நீண்ட கேள்வியைக் கேட்டார். “பாலின சிறுபான்மையினர் தொடர்ந்து பலவிதமான ஒடுக்கு முறைகளை சந்தித்து கொண்டிருப்பதால் அப்படிப்பட்ட இளைஞர்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போல உழைக்க முடியவில்லை.  மிக மோசமான ஒடுக்கு முறைகளை அவர்கள் தினசரி சந்திக்கிறார்கள்.

அரசாங்கமும் அரசியல்வாதிகளும் அது பற்றி மௌனத்தையே கடைப்பிடிக்கிறார்கள். இந்த விஷயத்தில், தமிழக அரசாங்கம் சில குறிப்பிட முயற்சிகளை எடுத்து வருகிறது. அரவாணிகளுக்காக ஒரு நல வாரியம் அமைத்திருக்கிறார்கள். இதை பிற மாநிலங்களும் கடைபிடித்தால் நன்றாக இருக்கும். ஒரு நபரின் பாலியல் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் நீங்கள் ஒரு உறுதியான முடிவு எடுக்க வேண்டும்.” என்றார்.

இதற்குப் பதில் சொன்ன ராகுல், “ஒருவருக்கு ஒழுக்கம் இருக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. எனக்கு என் ஒழுக்கம் இருக்கிறது. எனக்கு என் கருத்துகள் இருக்கின்றன. அதை எல்லோருக்கும் தெரியும் வண்ணம் வெளிபடுத்தும் உரிமையும் எனக்கு இருக்கிறது.  நான் என்ன சொல்கிறேன் என்றால் உங்களுடைய ஒழுக்கத்தை எனது கருத்துகளைக் கொண்டு தீர்மானிப்பது எனது வேலையில்லை. இதுவரை இந்தப் பிரச்னையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதோ, அது எங்களாலேயே எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா..? article 377  விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருந்தோம். காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவரும் அதை ஆதரித்தார்கள். ஒரு தனி நபராக, உங்கள் முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து..” என்று ராகுலும் மிக நீட்டமாகவே விளக்கமளித்தார்.

இலங்கை பிரச்சினைப் பற்றி அதுவரையில் யாரும் தொடாமல் இருந்த நிலையில் கவிதா முரளிதரன் அது பற்றி கேள்வியெழுப்பினார்.

“நான் நான்கு முறை இலங்கைக்குச் சென்று வந்திருக்கிறேன். அங்கே ஈழ மக்கள் பட்ட, படுகிற அவஸ்தைகள் கொடூரமானவை. இந்த விஷயத்தில் இலங்கையில் உள்ள தமிழர்கள், காங்கிரஸ் அரசாங்கத்தால் தாங்கள் கைவிடப்பட்டவர்களாக உணர்கிறார்கள். போரினால் பட்ட காயங்களைவிடவும் இந்த வேதனை அவர்கள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.  பேரழிவு போர்  சமயத்திலும் இந்தியா தலையிடவில்லை. போர் முடிந்த பிறகு அவர்களுக்கு  வீடுகள் கட்டி தருவது தவிர  நாம் எதுவும் செய்யவில்லை. இத்தோடு தமது கடமை முடிந்துவிட்டதாக இந்திய அரசு நினைப்பதுபோல் தெரிகிறது..” என்றார் கவிதா.

இதனைக் குறுக்கிடாமல் பொறுமையுடன் கேட்ட ராகுல் தான் தயாராக கையில் வைத்திருந்த குறிப்புகளைப் படித்தே இதற்குப் பதில் சொன்னார்.

“இலங்கை பிரச்னையில் நாங்கள் எதுவும் செய்யவில்லை என்பது தவறு. 2000 கோடி ரூபாய் ரயில்வே லைன் அமைக்க கொடுத்திருக்கிறோம். 80,000  வீடுகள் கட்ட உதவி செய்திருக்கிறோம். யாழ்ப்பாணத்தில் ஒரு மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். அங்கு இந்திய தூதரகம் திறக்கப்பட்டிருக்கிறது. மற்ற பகுதிகளில் திறக்கும் எண்ணமும் இருக்கிறது. நீங்கள் சில வீடுகள் என்று சொல்கிறீர்கள். 80,000 வீடுகள் என்பது சில வீடுகள் அல்ல. 2000 கோடி ரூபாய்  என்பது கொஞ்சமான நிதியும் அல்ல. இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்பது நமது நாட்டு நலன் சார்ந்த விஷயம்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து பல முனைகளில் இருந்தும் குரல்கள் எழும்பின. “தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்திருகிறதா?” என்று கேட்டார் ஒருவர்.

இதற்கும் பதில் அளித்த ராகுல், “இலங்கை அரசாங்கம் தமிழர்களை நடத்தும் விதம் குறித்து எங்களுக்கு கடுமையான ஆட்சேபனைகள் இருக்கிறது. நாங்கள் இலங்கை அரசாங்கம் மீது அழுத்தத்தை கொடுத்துதான் வருகிறோம். பிரணாப் முகர்ஜி, நாராயணன் உட்பட பல பிரதிநிதிகளை அனுப்பியிருகிறோம்.  ஆனால் இன்னொரு நாடு மீது கொடுக்கப்படும் அழுத்தத்திற்கு சில எல்லைகள் இருக்கிறது. நாங்கள் அந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்துதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட அழுத்தத்தை நாம் கொடுக்க மாட்டோம் என்று நீங்கள் ஏன் நினைகிறீர்கள்? அவர்கள் நமது மக்கள்..” என்றார்.

இந்த நேரத்தில் வேறொருவர் எழுந்து “நீங்கள் இலங்கை அரசு செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிக்கூட பேசவில்லையே..” என்றார்.

சற்று டென்ஷன் கூடிய நிலையில் பேசத் துவங்கிய ராகுல், “மன்னிக்க வேண்டும். நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. இங்கு நடந்த ஐந்து  தேர்தல் கூட்டங்களிலேயே நானே அதைப் பற்றி பேசியிருக்கிறேன். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமல்ல,  மனிதர்கள் அப்படி நடத்தப்படக்கூட கூடாது.  நமக்கு இலங்கை தமிழர்களுடன் நெருங்கிய உறவு இருக்கிறது. இந்தியாவிற்கு இருக்கிறது. தமிழ்நாட்டிருக்கு இருக்கிறது. இந்த அரசாங்கத்தால் என்ன முடியுமோ, அதை நாம் அவர்களுக்கு நிச்சயம் செய்வோம். அதை நான் தனிப்பட்ட முறையிலும் செய்வேன். இந்தப் பிரச்னை தீர்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க இன்னும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள்..?” என்று அவரே கேள்வியெழுப்பினார்.

இந்த நேரத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த மாலன் எழுந்து “இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்திருக்க வேண்டும்..” என்றார்..

இந்த நேரத்தில் ஒரு கேள்வி அரங்கத்தில் எழுந்தது.  ”நீங்கள் ராஜபக்சேவை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவுக்கு அழைத்தீர்களே..?” என்று..! கேள்வி கேட்டவர் எழுத்தாளர் தேவிபாரதி.

பட்டென்று தனது கைகளைத் தூக்கிக் கும்பிட்டுக் காட்டிய ராகுல், “அவரை நான் அழைக்கவில்லை” என்றார்.  தேவிபாரதியும் விடாமல், “உங்களது காங்கிரஸ் அரசுதான் ராஜபக்சேவை அழைத்தது. அது எங்கள் விருப்பத்திற்கு எதிரானது..” என்றார்.

கூடவே அடுத்துச் சொல்ல வேண்டியவைகளை தமிழில் தேவிபாரதி சொல்லத் துவங்க.. ஒரு அளவுக்கு மேல் புரியாத நிலையில் கேட்டுக் கொண்டிருந்த ராகுல்.. பட்டென்று அவரைப் புறக்கணித்துவிட்டு அடுத்த நபருக்குத் தாவிவிட்டார். இந்த நேரத்தில் இவருக்கு வேறு யாராவது ஆங்கிலத்தில் பேசி கை கொடுத்திருக்கலாம்..

அடுத்து பஞ்சாயத்து அமைப்புகள் அவற்றின் செயல்பாடுகள் பற்றி ஒருவர் கேள்வியெழுப்பினார். இந்த நேரத்தில் ராகுலின் செயலாளர் இன்னும் 2 நிமிடங்கள்தான் என்று ஞாபகப்படுத்திவிட ராகுல் அவசரத்துடன் பேசத் தொடங்கினார்..

“பஞ்சாயத்து அமைப்புகள் பற்றி நிறைய ஆர்வம் இருக்கிறது. இதை பற்றி என்னை தில்லி வந்து சந்தியுங்கள்.” என்று கேட்டுக் கொண்டார்.

விடைபெறும்போது, “ நான் கிளம்புகிறேன். விடைபெறுவதற்கு முன்பு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இலங்கை தமிழர் பற்றிய பிரச்னையை எழுப்பியிருக்கிறீர்கள். இந்திய அரசாங்கம் தொடர்ந்து இலங்கை மீது அழுத்தம் கொடுகிறது. இது எனக்கு தெரியும். காரணம், இந்திய அரசாங்கத்திடம் நானே இதைப் பற்றி தொடர்ந்து பேசியிருக்கிறேன். இனி நான் இதை தனிப்பட்ட முறையில் இன்னும் தீவிரமாக எழுப்புவேன். தனிப்பட்ட முறையிலும் கவனம் செலுத்துவேன்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

கீழே இறங்கிய ராகுலிடம் கை குலுக்கவும், புகைப்படம் எடுக்கவும் கூட்டம் முண்டியடித்தது. ஒரு சிலர் சில கோரிக்கைகள் பற்றிய கோப்புகளை அவரிடம் கொடுத்தார்கள். அனைத்தையும் வாங்கிக் கொண்டு கிளம்பினார்.

நிகழ்ச்சி துவங்கிய சில நிமிடங்களில் ராகுலுடன் வந்திருந்த இளைஞரணித் தலைவர்களே மைக்குகளை வாங்கிக் கொண்டார்கள். வந்திருப்பவர்களில் முக்கியப் பிரமுகர்கள் யார் என்று அந்த வெளிமாநில இளைஞரணித் தலைவர்களுக்குத் தெரியாததால், நமது பிரபலங்கள் பலருக்கும் கேள்வி கேட்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

ராகுலே கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் பேசியிருப்பார் என்று நினைக்கிறேன்.. கேள்வி கேட்டவர்களும் மிக அதிகமான நீளத்திற்கு கேள்விகளை இழுத்துக் கொண்டே போனதும்கூட நேரமின்மைக்கு ஒரு காரணமாகிவிட்டது.

150 பேரை அழைத்து ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்தாக வேண்டுமெனில் முடிகிற காரியமா..? ஒருவருக்கு ஒரு கேள்வி.. இரண்டு வரிகளில் கேள்விகளை முடித்திருந்தால்கூட நிறைய பேருக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கும். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து கடைசியில் கேள்வி கேட்க எழுந்த மதனைக்கூட உட்கார வைத்துவிட்டார்கள்.

நானும் ஐந்து கேள்விகளோடு சென்றிருந்தேன். இன்னும் ஒரு பதினைந்து நிமிடங்கள் நீடித்திருந்தால்கூட நிச்சயமாக ஒரு கேள்வியாவது கேட்டிருப்பேன். வாய்ப்பில்லாமல் போனதில் எனக்கும் வருத்தம்தான்..!

அதே சமயம் இன்னும் கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்திருந்தால் பலரையும்போல் இடைமறித்தே அவரிடம் கேள்வி எழுப்பியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது..! ம்.. இப்போது வருத்தப்பட்டுப் புண்ணியமில்லை..!

அத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு போனதையே சில நண்பர்களும், தோழர்களும் விரும்பவில்லை. “ராகுலை நீங்கள் ஏன் சென்று சந்திக்க வேண்டும்..?” என்கிறார்கள்.

நான் கேட்க நினைத்திருந்த கேள்விகளில் ஒன்று : “நளினியையும், மற்றவர்களையும் விடுதலை செய்ய ஏன் நீங்களும், உங்களுடைய குடும்பத்தினரும் விரும்பவில்லை? உங்களுடைய தாயார் விரும்பினால் நளினியை விடுதலை செய்வதில் எனக்கு ஆட்சேபணையில்லை என்று கலைஞர் சொல்லிவிட்டாரே. இப்போது நீங்களும், உங்களது தாயாரும் விரும்பினால் நளினி விடுதலையாவாரே. ஏன் அவருக்குக் கருணை காட்ட மறுக்கிறீர்கள்..?” என்பதைத்தான்..!

இந்தக் கேள்வியை சக பத்திரிகையாளர்களே ராகுலிடம் கேட்கலாம். சோனியாவிடம் கேட்கலாம். கேட்டிருக்கலாம். ஆனால் இதுவரையில் எனக்குத் தெரிந்து கேட்கவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.

இது என்றில்லை..! கலைஞரிடம்கூட நீராராடியா டேப் விவகாரத்தில் கனிமொழி, தயாநிதி பற்றிச் சொல்லியிருப்பதற்கு என்ன பதில் என்றுகூட நமது பத்திரிகையாளர்கள் கேட்டதில்லை. கேட்க முடிவதில்லை என்பதுதான் உண்மையானது.

ஏனெனில் கலைஞர் அதன் பின்பு கோபப்படுவார். பிரஸ் மீட்டை கேன்ஸல் செய்வார். நமக்கு நியூஸ் எதுவும் கிடைக்காது என்பதோடு, இது போன்ற ஆளுகின்ற அரசுகளை சங்கடப்படுத்தும் கேள்விகளை பத்திரிகை முதலாளிகளே விரும்பாததும் ஒரு காரணமாக இருக்கிறது..!

இதேபோலத்தான் ஜெயலலிதாவிடம் “எப்படி ஒரே வருடத்தில் 66 கோடிக்கு அதிபதியானீர்கள்?” என்றோ, கனிமொழியிடம் “ராசா மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கரிசனம்..? நீராராடியாவிடம் அப்படி பேசியிருக்கிறீர்கள்?” என்றோ யாரும் கேள்வி கேட்டதே இல்லை.

பத்திரிகையாளர்கள் சம்பளத்திற்கு வேலை பார்ப்பதால் முதலாளிகள் எப்படி இருக்கச் சொல்கிறார்களோ.. என்ன எழுதச் சொல்கிறார்களோ அதையே செய்துவிட்டுப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

பத்திரிகை முதலாளிகள் மாறினால் ஒழிய இந்த நேரடியான, உண்மையான, பத்திரிகை தர்மம் வெளிப்பட வாய்ப்பில்லை.. இந்தச் சூழலில் இது போன்று எந்தக் கேள்வியும் கேட்கலாம் என்கிற வாய்ப்பு வருகின்றபோது அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது என்று நினைத்துத்தான் இந்த நிகழ்ச்சிக்குச் சென்றோம்.. சென்றேன்.. அழைத்தமைக்காக அமைப்பாளர்களுக்கு எனது நன்றிகள்..!

பத்திரிகைகளை உள்ளே அனுமதிக்காததால் பெரும் ஏமாற்றத்துடன் அவர்கள் வெளியிலேயே காத்திருந்தார்கள். ராகுல்காந்தி ஹோட்டலை விட்டு வெளியேறிய பின்புதான் பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். வெளியில் வந்த பிரபலங்களிடமும், மூத்தப் பத்திரிகையாளர்களிடமும் பல்வேறு சேனல்களும் நடந்ததைக் கேட்டு பேட்டியெடுத்துக் கொண்டன.  இதில் அதிகமாகக் கல்லா கட்டியவர் அண்ணன் ஞாநிதான்..!

ஈழப் பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு ஏற்படும்வரையிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கான எதிர்ப்புக் குரல் நீடிக்கும் என்பதை ராகுல் இந்தக் கூட்டத்தின் மூலம் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்..!

இந்தக் கட்டுரைக்கு பெருமளவில் உதவிய பத்திரிகையாளர் கவிதா முரளிதரனுக்கு நன்றி..!

சில இணையத்தளங்கள், சில பத்திரிகைகளில் கிடைத்தத் தகவல்களை வைத்தும் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் நன்றி..!

மன்மதன் அம்பு - திரைப்பட விமர்சனம்

24-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கலையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினியைவிடவும் சீனியரான கமல்ஹாசனின் புகழுக்கு இப்போது என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை.. முறையாக கமல்ஹாசனுக்குப் பின்புதான் ரஜினியின் பெயர் வர வேண்டும். ஆனால் தமிழகத்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் ரஜினியின் பெயர் முதலில் வந்து, கமலின் பெயர் பின்னால் போனது அவருக்கு மிகப் பெரும் சோகம்தான்.

எந்திரன் படம் ரிலீஸ் சமயத்தில் “எதுவாக இருந்தாலும் எந்திரன் ரிலீஸுக்கு பின்பு பார்த்துக்கலாம்” என்பதுதான் திரையுலகப் பேச்சாக இருந்தது. அந்தப் படமும் வெளிவந்து வரலாறு காணாத வெற்றியைப் பெற்று ஓய்ந்திருக்கும் இந்த நேரத்தில் வெளிவந்திருக்கும் கலைஞானியின் இத்திரைப்படம் ஒரு சிறிய சலசலப்பைக்கூட எழுப்பாமல் இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

படம் பற்றிய விளம்பரங்கள் தொல்லைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப வந்தாலும் அது எந்திரனின் விற்பனை வணிகத் தந்திரத்துக்கு ஒப்பாக இல்லை என்பது நேற்று இத்திரைப்படம் வெளியானபோது தெரிந்துவிட்டது.

எப்போதும் புதிய திரைப்படங்கள் வெள்ளிக்கிழமையன்றுதான் வெளியாகும். ஆனால் இத்திரைப்படம் நேற்று வியாழன்றே வெளியாகியுள்ளது. ஆனால் பத்திரிகைகளில் வெள்ளியன்றுதான் வெளியாகவிருப்பதாக விளம்பரங்களும், ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களும் தெரிவித்தன.

நேற்று மாலை அண்ணன் பட்டர்பிளை சூர்யா சொல்லித்தான் இந்த விஷயமே எனக்குத் தெரியும். “ஜாக்கிசேகரும், பிரபாகரும் ஜோதி தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..” என்ற அவர் சொன்ன செய்தியே என்னை ஆச்சரியப்பட வைத்தது. எப்படி இப்படியொரு தடாலடி முடிவெடுத்து நிறைவேற்றினார்கள் என்று யோசித்தபோது பிடிபடவில்லை. ஆனால் படம் பார்த்தபோது தெரிந்துவிட்டது.

ஏற்கெனவே படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த பின்பு முன் பதிவுகள் களைகட்டும் என்று நினைத்திருந்த தியேட்டர்காரர்கள் எண்ணத்தில் மண் விழுந்திருக்கிறது. இத்திரைப்படத்தின் மீது அவ்வளவாக மக்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தது ஏன் என்று தெரியவில்லை..

எந்திரனுக்கு முன் பதிவு அறிவிக்கப்பட்ட அன்றைக்கு முற்றிலுமாக செயலிழந்துபோகும் அளவுக்கு இணையத்தளங்கள் முற்றுகையிடப்பட்டன. முதல் நாளில் ஒரு மணி நேரத்திலேயே ஒரு வாரத்துக்கான முன் பதிவுகள் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, முன் பதிவிலேயே நான்கரை கோடி ரூபாய் வசூலானதாகத் தெரிவிக்கப்பட்டது.

இப்படியொரு எதிர்பார்ப்பை இதற்கு முன் கமலின் தசாவதாரம் பெற்றிருந்தாலும், அடுத்தப் படமான இந்த மன்மதன்அம்புவும் பெறும் என்று நினைத்திருந்தேன். பொய்த்துப் போய்விட்டது.

கமலுக்கு மட்டுமல்ல கமல்ஹாசனின் ரசிகர்களுக்கும் வயதாகிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. உதயம் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களின் எண்ணிக்கைக்கூட மிகக் குறைவுதான். சசிகுமாரின் 'ஈசன்' படத்திற்கு இதைவிடவும் அதிகமான எண்ணிக்கையில் பேனர்கள் இருக்கின்றன. போஸ்டர்களும் தென்படுகின்றன.

நான் பார்த்த காசி திரையரங்கில் இணையத்தள முன் பதிவுகளைத் தவிர மீதி டிக்கெட்டுகளை மொத்தமாக பிளாக்கில் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். மப்டி போலீஸ்காரர் ஒருவர் மிகப் பொறுப்பாக, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பொறுமையுடன் காத்திருந்து தனக்குரிய கல்லாப் பணத்தைப் பெற்றுக் கொண்டு போனார்.

வெளியில் ஹவுஸ்புல் போர்டு தொங்கினாலும் தியேட்டரின் உள்ளே கடைசிவரையிலும் 20 சீட்டுக்கள் கீழ்த்தளத்தில் காலியாகத்தான் இருந்தன. 

ஓகே.. இனி படத்துக்கு வருவோம். சந்தேகமே இல்லாமல் இது கமலுக்கு இன்னுமொரு 'மும்பை எக்ஸ்பிரஸ்'தான்.

கேப்டன் ராஜமன்னாரில் இருந்து ஒரு “மன்”, மதன்மோகனில் இருந்து ஒரு “மதன்”, அம்புஜத்திடம் இருந்து ஒரு “அம்பு” - இப்படி மூன்றையும் தேர்ந்தெடுத்து 'மன்மதன் அம்பு'வாக்கி நமக்கு அர்ப்பணித்திருக்கிறார் கமல். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்துமே கமல் அண்ணன்தான்..

திரிஷா ஒரு திரைப்பட நடிகை. பெற்றோரின் எதிர்ப்பையும் திரிஷாவைக் காதலித்து கைப்பிடிக்கக் காத்திருக்கும் மாதவனுக்கு திரிஷாவின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் வருகிறது. பல பேருடன் பழகுபவளோ, படுப்பவளோ என்கிற ரீதியில் மாதவனின் அம்மா மேற்கு வங்கத்து 'ஸ்வீட் ஹார்ட் மாமியாரான' உஷா உதூப் தூபம் போட்டுவிட.. சந்தேகப் பேயிடம் சிக்கிக் கொள்கிறார் மாதவன். இதனைல் கோபம் கொண்ட திரிஷா மனச்சாந்திக்காக பாரீஸ் வருகிறார்.

அங்கு அவளுடைய நண்பியான டைவர்ஸி சங்கீதா மற்றும் அவளது சுட்டியான இரண்டு குழந்தைகளுடன் சொகுசு கப்பலில் சுற்றுப்பயணத்தைத் துவக்குகிறார் திரிஷா. இந்த நேரத்தில் மாதவன் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் கமல்ஹாசனை திரிஷாவை பின் தொடர்ந்து சென்று துப்பறிந்து அங்கு நடப்பதை உடனுக்குடன் தனக்குத் தகவல் தெரிவிக்கும்படி சொல்லியனுப்புகிறார்.

திரிஷாவை வேவு பார்க்க வந்த கமல்ஹாசன் ஒரு கட்டத்தில் மாதவன் மீது கோபப்பட்டு இல்லாத விஷயத்தை இருப்பதுபோல் காட்டி சீன் போடுகிறார். எதிர்பாராதவிதமாக திடீர் கோபத்தில் மாதவனும் கிளம்பி ஏதென்ஸுக்கு வந்துவிட.. இறுதியில் காதலர்கள் இணைகிறார்களா அல்லது பிரிகிறார்களா என்பதுதான் கதை..

படத்தில் ஒரேயொரு குறிப்பிடத்தக்க விஷயம் திரிஷா-மாதவன் காரில் செல்லும்போது ஏற்படும் ஒரு விபத்தை கமல்ஹாசனை வைத்து சம்பந்தப்படுத்தியிருப்பது.. இது ஒன்றுதான் 'அடடே' போட வைக்கிறது.

மற்றபடி 'பஞ்சதந்திரம்' படம்போல் வெற்று வசனங்களாலேயே சிரிக்க வைத்துவிடலாம் என்று நினைத்து கொஞ்சம் முயற்சி செய்து நிறைய ஏமாந்து போயிருக்கிறார்கள்.

கமலுக்கு எதற்கு இன்னொரு கொலீக்..? முதல் பாட்டு சீனில் நிஜ நடிகராக சூர்யாவும் ஆட்டத்தில் கலந்து கொண்டு ஆடுவது புதுமைதான். சூர்யாவின் ரசிகர்களின் ஆதரவும் தனக்கு வேண்டும் என்று நினைக்குமளவுக்கு கமலுக்கு தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்று தெரியவில்லை..


படம் துவங்கி 23 நிமிடங்கள் கழித்தே அண்ணன் அமர்க்களமாக என்ட்ரி கொடுக்கிறார். அதுவும் ஒரு சண்டைக் காட்சியில்.. காலைக் காட்டியவுடனேயே அவர்தான் என்பதை உணர்ந்து கை தட்ட ஆரம்பித்த குஞ்சுகள் சண்டைக் காட்சி முழுவதுமே விசிலையும், கை தட்டலையும் பரப்பி காதைக் கிழித்துவிட்டார்கள்.

நடிப்புக்கு ரொம்ப மெனக்கெட வேண்டாம் என்று நினைத்து 'கலைஞன்' படத்தில் கமலின் முதல் மனைவி கதையை பாடலிலேயே சொல்வதைப் போல் கலங்கிப் போன கண்களுடன் இந்தப் படத்திலும் அதே கதையைச் சொல்லி முடிக்கிறார். இந்தப் பாடல் காட்சி முழுவதுமே ரிவர்ஸ் விங்காக வருவது கவனத்தை ஈர்க்கிறது.


காதலில் சேட்டைக்கார கமல்ஹாசனை பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது.. வயதுக்கேற்றாற்போல் நடிக்க வேண்டும் என்று அவராகவே முடிவெடுத்துவிட்டார் போலும்.. இதில் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த முத்தக் காட்சி இல்லாததால் லட்சணக்கணக்கான கமல் ரசிகர்கள் ஏமாந்து போயிருப்பார்கள். தப்பித்தது திரிஷாவின் உதடு..


படத்தில் வெள்ளைக்கார மனைவி இருப்பதைப் பார்த்தவுடன் ஒருவேளை உதட்டுக் கடி சீன் இந்த அம்மணியோடு இருக்குமோ என்று நினைத்திருந்தேன். அந்த ஆத்திக காமப் பாடலும் அதையொற்றித்தானே இருந்தது.. ஒருவேளை அந்தப் பாடல் காட்சியில் இதுவும் இருந்திருக்குமோ..? என்னவோ போங்க..? அண்ணன் கமலுக்கு ஒரு கிஸ் சீன் போச்சு..!

இப்படியொரு பிரம்மாண்டமான கப்பலை உள்கட்டமைப்பு பிரமிக்க வைக்கிறது.. ஒரு காட்சியில் ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியாக கப்பலை முழுமையாகச் சுற்றி வந்து காட்டுவது கொள்ளை அழகு. இதில் சுற்றுவதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்..

எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரியான முக பாவனைகள்.. பாதி சொல்லியும், மீதியை சொல்ல முடியாமலும் தவிக்கும் கமலின் அந்த நடிப்பு பல காலமாக நாம் பார்த்து வருவதுதான்.. இதில் ஒன்றும் புதுமையில்லை. கொஞ்ச நேரத்திலேயே அது போரடிக்க வைத்துவிடுகிறது.

கமல் மாதவனுக்கு எதிராகத் திரும்ப காரணமாக இருக்கும் ரமேஷ்அரவிந்த்-ஊர்வசி கிளைக்கதை சற்று உருக்கமானதுதான்.. ஆனால் அந்த கேரக்டரின் மேல் பரிதாபம் வரக் கூடிய நிலையில் திரிஷாவை பார்த்தவுடன் ஊர்வசி ஆர்வத்துடன், “நானும் என் வீட்டுக்காரரும் உங்களோட பேன்..” என்று சொல்லி சப்பையாக்கிவிட்டார்.


உருப்படியாக நடித்திருப்பவர்கள் மாதவனும், சங்கீதாவும்தான்.. தண்ணியைப் போட்டுவிட்டு அலப்பறை செய்யும் அக்மார்க் ஹைடெக் அம்பியான மாதவனின் புலம்பல்களின்போதுதான் தியேட்டர் களை கட்டுகிறது.


கடைசி இருபது நிமிடங்களில் ஆள் மாறாட்டக் காட்சிகளில் மட்டுமே காட்சியமைப்புகளின் மூலமே நகைச்சுவையைக் கொண்டு வந்திருக்கிறார். அந்த மலையாள தயாரிப்பாளராக நடித்திருக்கும் நடிகர், நிஜமாகவே மலையாளத்தில் நகைச்சுவை நடிகர்தான். உடன் அவரது மனைவியாக வரும் மஞ்சுவும் மலையாளத்தில் பெரிய நடிகைதான்.


வசனங்களை கமல் அண்ணனே எழுதியிருக்கிறார். “நடிகைகள்லாம் உள்ளூர்ல இது மாதிரி சேட்டையெல்லாம் செய்ய மாட்டாங்க. வெளிநாட்லதான் செய்வாங்க” என்பதெல்லாம் கமல் கேள்விப்பட்ட நியூஸ்களா அல்லது சொந்தச் சரக்குகளா என்றெல்லாம் விசாரிக்க வேண்டியிருக்கிறது.

நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் என்று தன்னுடைய சக தொழிலாளர்களையே எந்த அளவுக்கு தாக்க வேண்டுமோ அந்த அளவுக்குத் தாக்கியிருக்கிறார் அண்ணன்.

“உலகத்தையே உன் காலடில போடுறேன்” என்கிறார் காதலர் மாதவன். “உலகத்தை யாரும் யார் காலடிலேயும் போட வேண்டாம். அது அங்கயேதான் இருக்கும். பிச்சைக்காரன் காலடில கூடத்தான் உலகம் இருக்கு..” என்ற திரிஷாவின் பதில் நச் வகை.

“சிட்டில சைட் அடிப்போம். வில்லேஜ்ல பெண் எடுப்போம்” என்ற மிகப் பெரிய தத்துவத்தை பொறித்திருக்கிறார் அண்ணன். இதன் மூலம் சிட்டி  பெண்கள் பற்றிய கமலின் பார்வை என்ன என்பது விவாதத்திற்குரியது..


“வீரத்தின் அடுத்தக் கட்டம்தான் மன்னிப்பு.. வீரத்தின் உச்சக்கட்டம் என்ன தெரியுமா? அது அஹிம்சை” என்கிறார் கமல். இப்படி சிற்சில வசனங்கள் சுவையாக இருந்தாலும் படத்தோடு ஒன்றிப் போகாமல் தனித் தீவு மாதிரி இருப்பதுதான் பெரும் குறை..

அதிலும் முக்கால்வாசி வசனங்கள் ஆங்கிலத்தில் இருப்பதும் மிகப் பெரிய மைனஸ்.. இத்திரைப்படம் பி அண்ட் சி தியேட்டர்களில் 3 வாரங்களுக்கு ஓடுவது என்பதே மிகப் பெரிய விஷயம்தான்.. எல்லாம் தெரிந்த கமலே இப்படிச் செய்தால் எப்படி..?

அத்தோடு கூடவே இன்னொரு விஷயம்.. படத்தின் ஒலிப்பதிவு ஸ்பாட் ரெக்கார்டிங் என்கிறார்கள். கடித்துத் துப்புவது போன்ற வசன உச்சரிப்புகளால் பல வசனங்கள் புரியாமலேயே போகின்றன. திரிஷாவுக்கு  சொந்தக் குரலாமே.. லட்சுமிக்கு தங்கச்சி வாய்ஸ் மாதிரியிருக்கிறது.

படத்தின் பாடல்களும் பெரும் குறைதான். நீலவானம் பாடலுக்கு ஏன் அப்படியொரு இழுப்பூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூ..? பாடல் காட்சியில் அந்த “நீ”-க்கு கமல் அண்ணன் தனது வாயை இழுத்து வைத்துப் பாடுவதைப் பார்த்தால் “ஏன் இவ்ளோ கஷ்டப்படணும்..? எளிதாகப் புரிவதுபோல் வேறு யாரிடமாவது கொடுத்து எழுத வைத்திருக்கலாமே..?” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது..


நல்லவேளை.. அந்த நாத்திக பக்தி பாடலை நீக்கிவிட்டார்களாம்.. அந்தக் கண்றாவி போய்த் தொலையட்டும்.. ஆனாலும் காவிக்காரர்களைத் தாக்குவதுபோல் இரண்டு இடங்களில் வசனங்களை வைத்திருக்கிறார் கமல். காவியுடன் இவருக்கென்ன மல்லுக்கட்டு..?

மாதவனுடன் பேசிக் கொண்டே செல்கையில் கோவில் மணி ஒலிக்கிறது. அதனை ஒரு உத்வேக எடுத்துக்காட்டாக மாதவனுக்குச் சொல்கிறார் கமல். நாத்திகத்தை பரப்புவதுபோல் ஒரு பாடலை எடுத்து வைத்துக் கொண்டு, ஆத்திகத்தின் துணையோடு கதையை நகர்த்த முயல்வது முரண்பாடாகத் தெரிகிறதே. கமலுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..?


பாரீஸில் கார் ஓட்டும் ஈழத் தமிழரை இந்த அளவுக்கு கேவலப்படுத்தியிருக்க வேண்டாம். “செருப்பாக இருக்கவும் தயார்..” என்று அந்த ஈழத் தமிழர் தனது அபிமான நடிகையான திரிஷாவிடம் சொல்வது போன்ற அந்தக் காட்சி நிச்சயம் ஈழத் தமிழர்களைப் புண்படுத்தும் என்றே நினைக்கிறேன். அதற்கு ஈழத் தமிழர் அல்லாத தமிழ்நாட்டுத் தமிழர்களையே காட்டித் தொலைத்திருக்கலாம். அவர்களே வெந்து, நொந்து போயிருக்கும் நிலையில் அவர்களை இப்படியெல்லாமா கேவலப்படுத்துவது..?

கடைசி இருபது நிமிடங்களில்தான் கொஞ்சூண்டு சிரிக்க வைத்திருக்கிறார்கள். அதிலும் படத்தின் ஹைலைட்டான அந்த கிளைமாக்ஸ் வசனத்தை திரிஷா மிக இயல்பாக சொல்வது சினிமாத்தனம் இல்லாமல் இருப்பதால் மனதில் ஒட்டவில்லை.

திரிஷாவிடம் ஒன்று மிஸ்ஸிங். அது அழகு.. என்னாச்சு குயினுக்கு என்று தெரியவில்லை. ஒளிப்பதிவில் குறையில்லை.. ஆனால் இவரும், சங்கீதாவும் மேக்கப்பே போடாமல்தான் இருக்கிறார்கள். விண்ணைத் தாண்டி வருவாயாவில் இருந்த திரிஷா இதில் இல்லையே..?

ஒளிப்பதிவு மனுஷ்நந்தன். நான் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஞாநியின் பெசண்ட் நகர் வீட்டில் நந்தனை சந்தித்தபோது மிக போல்டான பையனாக இருந்தார். என்ன செய்ய வேண்டும் என்பது அப்போதே அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. இதற்காக பெற்றோர்களின் உற்சாகமும், தூண்டுதலும் அவருக்குக் கிடைத்திருந்தது. “எனக்கு உங்களை மாதிரி ஒரு அண்ணன் கிடைச்சிருந்தா நான் நிச்சயமாக வாழ்க்கையில் உருப்பட்டிருப்பேன்..” என்று அண்ணன் ஞாநியிடம் அப்போதே சொன்னேன்.

மனுஷ்நந்தன் படிக்கின்ற வயசிலேயே கேமிராவைக் கையில் தூக்கியவர். அவர் எடுத்திருந்த பல புகைப்படங்கள் அப்போதே பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பிரிவில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் தனது திறமையாலேயே சேர்ந்தவர். அங்கு பணியாற்றிய நிலையிலேயே விகடனில் தொடர்ந்து மனுஷ்நந்தனின் புகைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. திறமையான புகைப்படக் கலைஞருக்கான பாராட்டுக்களையும் அப்போது அவர் பெற்றிருந்தார்.

தனது திரையுலக வாழ்க்கையின் துவக்கத்திலேயே ரவி கே.சந்திரனிடம் உதவியாளராக பல இந்திப் படங்களில் பணியாற்றியிருக்கிறார்.. இது அவருக்கு ஒளிப்பதிவாளராக முதல் திரைப்படம்.

யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காத ஒரு வாய்ப்பு மனுஷுக்கு கிடைத்திருப்பது தெய்வச் செயல்தான். வெளிநாட்டு லொகேஷன், பெரிய நடிகர், பெரிய பேனர், ஒளிப்பதிவுக்கு ஏற்ற கதை.. வேறென்ன வேண்டும்..?

கப்பல் சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளிலும் ஒரு ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது மனுஷின் கேமிரா.. முதல் பாடல் காட்சியிலும் சூர்யா, திரிஷாவின் ஆட்டத்தை முறையாகப் பதிவு செய்திருக்கிறார். ஆட்டம் ஜோர்.. வாழ்த்துக்கள் மனுஷ்.. இன்னும் பல உயர்வுகள் பெற வாழ்த்துகிறேன்.

எப்போதும் அடுத்தவர்களின் படத்தை மொத்தமாக விலை கொடுத்து வாங்கி மிகக் குறுகிய காலத்தில் பெருத்த லாபம் பார்க்கும் உதயநிதி ஸ்டாலின், இந்தப் படத்தை மட்டும் ஏன் ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்கு மொத்தமாக விற்றார் என்பதை படத்தின் ரிசல்ட் நிச்சயம் சொல்லத்தான் போகிறது..

மைனா படத்தில் 13 கோடி லாபம் பார்த்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், இந்தப் படத்தைச் சொந்தமாக ரிலீஸ் செய்திருந்தால் இதே அளவுக்கு நிச்சயம் நஷ்டத்தைத்தான் சந்தித்திருப்பார் என்று ஊகிக்க முடிகிறது..

அதிகப்படியான வெளிநாட்டு ஷூட்டிங் செலவுகளால் படத்தின் பட்ஜெட் எகிறியிருந்தும், வசூலை குறி வைத்து படம் எடுக்கப்படாததால் உதயநிதியின் கை மாற்றல் டிரிக் நிச்சயம் புத்திசாலித்தனமானது. ஆனால் இப்படி ஒருவர் தப்பித்து இன்னொருவர் நஷ்டமடைவது வியாபரத் தந்திரம். இதில் பாவம், பாவமில்லை என்றெல்லாம் பார்க்கக் கூடாது.. இது ரொம்பப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய இடத்து விவகாரம். நாம் விட்டுவிடுவோம்..

மன்மதன் அம்பு - நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்.

ஆ.ராசாவின் தலித் கேடயத்தால் ஏமாற்றப்பட்ட தலித் மக்கள்..!

21-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெடித்ததில் இருந்தே ராசாவைக் காப்பாற்றுவதற்காக கலைஞர் பயன்படுத்தும் வார்த்தை ராசா ஒரு தலித் என்பதால்தான் அவரைக் குறி வைத்து அனைவரும் தாக்குகிறார்கள் என்பதுதான்..!

கலைஞர் மட்டுமல்ல.. அவருடைய அடிப்பொடிகள்கூட இதே வார்த்தையைத்தான் பயன்படுத்தி வருகின்றன. ஊழல் செய்கின்ற அரசியல்வியாதிகள் யாரும் ஜாதியை வைத்து பணத்தைக் கொள்ளையடிப்பதில்லை. தங்களுக்கு இருக்கின்ற திறமையை வைத்துதான் செய்கின்றனர். இதற்கும் ஜாதிக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பது அவர்களுக்கே தெரியுமென்றாலும் கட்சிப் பாசம் அவர்களைக் கண்ணை மறைக்கிறது.

இவர்கள் தலித் தலித் தலித் என்று கூக்குரலிட்டு ராசாவைக் காப்பாற்ற முனைந்தாலும், இதே தலித் ராசா, தனது பெரம்பலூர் தொகுதியைச் சேர்ந்த தலித் விவசாய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி அவர்களிடமிருந்து நிலங்களை ஏமாற்றி பிடுங்கியிருக்கிறார் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது..!


பெரம்பலூரில் அமையவுள்ள எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலைக்கு பொதுமக்களிடம் நிலம் ஆர்ஜிதம் செய்து வழங்கியதில்தான் அந்தப் பகுதி தலித் விவசாய மக்களை பெருமளவுக்கு ஏமாற்றியிருக்கிறார் தலித் அமைச்சரான ராசா.

60 தலித் விவசாய மக்களை உருட்டிப் புரட்டி அவர்களுடைய நிலங்கள் அனைத்தும் தலித் அமைச்சர் ராசாவின் குடும்ப நிறுவனமான கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தால், குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட மேம்பாட்டுக்காகவே, தான் எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலையை பெரம்பலூர் தொகுதிக்குள் கொண்டு வந்ததாகப் பெருமையுடன் கூறிக் கொண்டார் தலித் அமைச்சரான ராசா. ஆனால் உண்மையில் தனது குடும்பத்தின் வளத்தைப் பெருக்கிக் கொள்ளவே திட்டமிட்டு இதனைச் செய்திருப்பதாக இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

இந்த எம்.ஆர்.எப். நிறுவனத்துக்காக நாரணமங்கலம் என்ற இடத்தில், அந்த கிராம மக்கள் 156 பேரிடம் 600 ஏக்கர் நிலம் "கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்' என்ற நிறுவனத்தின் ஏஜன்டுகளான செந்தில் முருகன், செல்வராஜ் ஆகியோர் மூலம் 2007-08ம் ஆண்டுகளில் வாங்கப்பட்டது.

இந்த கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் என்பது ராசாவின் "நெருங்கிய' நண்பர்  சாதிக் என்பவரை எம்.டி.யாகவும், ராசாவின் அண்ணன் கலியபெருமாள், ராசாவின் அக்கா கமலா உள்ளிட்ட சிலரை இயக்குனர்களாக கொண்ட நிறுவனம்.

முதலில் தொழிற்சாலை அமைக்க நிலம் கொடுப்பதற்கு, நாரணமங்கலத்தை சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் மக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  அவரை சாதிக் சரிக்கட்டிய பின்பு, பின்னர் செந்தில் முருகனே முன்னின்று நாரணமங்கலம் கிராம மக்களை பல்வேறு வகைகளில் மிரட்டியும், குறைந்த விலை கொடுத்தும் (ஏக்கருக்கு 65 ஆயிரம் முதல் 3.5 லட்ச ரூபாய்வரை) நிலத்தை வாங்கி கொடுத்துள்ளார்.

அப்போது நிலம் கொடுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு எம்.ஆர்.எப்., நிறுவனத்தில் கண்டிப்பாக வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தாலும், நிலம் வாங்கிய ஏஜெண்டுகளாலும் உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 60 பேரிடம் நிலம் வாங்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை பெரிதும் நம்பியிருந்த பலர் விவசாய நிலத்தை கொடுக்க மறுத்துள்ளனர். அவர்களை மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள், போலீஸ் என அரசு இயந்திரத்தை முழுமையாகவும், முறைகேடாக பயன்படுத்தியும், தொடர்ந்து மிரட்டல் விடுத்தும் செந்தில் முருகன், ஹபிபுல்லா, செல்வராஜ் ஆகியோர் வாங்கியுள்ளனர். வாங்கிய பின்பு குறிப்பிட்ட ஏக்கர் நிலங்களை கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்திற்கு கை மாற்றி கொடுத்துள்ளனர்.

இதற்காக இவர்கள் சாதிக்கிடம் ஏக்கருக்கு ஆறு லட்ச ரூபாய் வாங்கியுள்ளனர். சாதிக்கோ இவர்களிடம் வாங்கிய நிலத்தை எம்.ஆர்.எப்., நிறுவனத்திடம் ஒரு ஏக்கருக்கு 15 முதல் 18 லட்ச ரூபாய்வரை விற்பனை செய்துள்ளார். அதுவும் 435 ஏக்கர் நிலம் மட்டுமே அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 165 ஏக்கர் நிலம் இன்னமும் செந்தில் முருகன், செல்வராஜ் ஆகியோர் பெயர்களில்தான் உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

எம்.ஆர்.எப்., நிறுவனத்துக்காக நாரணமங்கலம் கிராம மக்களிடம் நிலம் வாங்கி கொடுத்தது மூலம் சாதாரண நிலையில் இருந்த செந்தில் முருகனும், செல்வராஜும் தற்போது கோடீஸ்வரர்களாக பெரம்பலூரில் வலம் வருகின்றனர்.

தங்களிடம் நிலம் வாங்கியவர்கள் திடீரென பணக்காரர்களாக வலம் வருவதை கண்ட நாரணமங்கலம் கிராம மக்கள், இது குறித்து விசாரித்தபோதுதான், “தங்களை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கிய நிலத்தில் 435 ஏக்கரை எம்.ஆர்.எப்., நிறுவனத்துக்கு, ஐந்து முதல் 25 மடங்குவரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், நிலம் கொடுத்தவர்களில் 60 பேர் விவசாயத்தை மட்டும் நம்பியிருந்த ஏழை தலித் மக்கள். அவர்களின் அறியாமையை பயன்படுத்தியும், அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மூலம் மிரட்டியும், ஒரு ஏக்கர் நிலத்தை 65 ஆயிரம் முதல் 2.50 லட்ச ரூபாய் வரை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர். இதற்கு முன்னாள் அமைச்சர் ராஜாவின் அதிகாரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

எம்.ஆர்.எப்., நிறுவனம், தங்களது நிலத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதை அறிந்த நாரணமங்கலம் கிராம மக்கள், தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் உதவியோடு, மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இப்படி நிலம் வாங்கிய விஷயத்தில், "தலித்' அமைச்சரான ராசா, தான் சார்ந்த தலித் மக்களுக்கே துரோகம் இழைத்துள்ளார் என்று, அவரது தலித் சமுதாய மக்களே  குற்றம் சாட்டுகின்றனர்.

ரமேஷ் என்னும் தலித் விவசாயி கூறுகையில், “என்னிடமிருந்த 5.79 ஏக்கர் நிலத்தை 4.70 ஏக்கர் நிலம்தான் என்று மிரட்டி வாங்கி கொண்டனர். ஏக்கருக்கு 2.50 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்தனர். ஆனால், அவர்கள் டயர் கம்பெனிக்கு, ஏக்கர் நிலத்தை 15 முதல் 18 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து விட்டனர். நிலத்தை விற்க முடியாது என்று நான் சொன்ன போது, வி.ஏ.ஓ., முதல் ஆர்.டி.ஓ.வரையிலான அதிகாரிகள் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக நிலத்தை எழுதி வாங்கி கொண்டனர். ஆனால், சொன்னபடி டயர் கம்பெனியில் வேலையும் வாங்கி தரவில்லை.” என்கிறார்.

பாப்பா என்னும் தலித் பெண்மணி, “வேலை தருவோம்னு சொன்னாங்க. அதை நம்பி எங்களிடம் இருந்த 1.90 ஏக்கர் விவசாய நிலத்தை ஏக்கர் 75 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்தோம். நிலத்தை வித்த பணமும் செலவாகி விட்டது; பிழைக்க வழியில்லை. எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கணும்.” என்று இப்போது அழுகிறார்.

தலித் விவசாயியான தங்கராஜ், “ என்னிடம் இருந்த ஆறு ஏக்கர் நிலத்துக்கு ஏக்கருக்கு ஐந்து லட்ச ரூபாய்னு விலைபேசி, பத்திரத்தில் கையெழுத்து போட்டவுடன், ஏக்கருக்கு 2.50 லட்ச ரூபாய்தான் கொடுத்தாங்க. பணம் குறையுதேன்னு கேட்டதுக்கு செந்தில் முருகன் மிரட்டினார்.  தலித் என்பதால்தான் அவருக்கு அமைச்சர் பதவியே கிடைச்சது. அதை பயன்படுத்தி, எங்களை போன்ற தலித் மக்களை ஏமாற்றி நிலங்களை அபகரிக்க துணைபோனவரை என்ன சொல்றதுன்னே தெரியல. இருந்த நிலம் பறிபோனதால, கூலி வேலைக்கு போய் கஷ்டப்படுகிறேன்.” என்கிறார்.

பாப்பண்ணன் என்னும் தலித் விவசாயி, “முதல்ல அரசுதான் நிலத்தை வாங்கி கொடுப்பாங்கன்னு சொன்னாங்க. ஆனால், சாதிக் மூலமாக நிலத்தை வாங்கி கொடுக்க அரசு அதிகாரிகளும், அப்போதிருந்த கலெக்டரும் எப்படி அனுமதிச்சாங்கன்னு தெரியவில்லை. என்னிடமிருந்த 2.5 ஏக்கர் நிலத்துக்கு ஏக்கருக்கு 95 ஆயிரம் ரூபாய்தான் கொடுத்தாங்க. இப்பிரச்னையில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும்.” என்கிறார்.

தலித் விவசாயியான செந்திலின் சோக அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது :

“என்னிடம் 3.5 ஏக்கர் நிலம் இருந்தது. அதை நான் கொடுக்க விரும்பவில்லை. ஆத்திரமடைந்த செந்தில் முருகனும், செல்வராஜும் சேர்ந்து என் மேல் பி.சி.ஆர்., கேஸ் போட வைச்சு சிறையில போட்டுட்டாங்க. அதன்பின் என்னுடைய அம்மாவையும், சகோதரிகளையும் மிரட்டி என்னை பணிய வச்சாங்க. ஜாமீனில் 5.30 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்த என்னை, இரவு 9.30 மணிக்கு செட்டிக்குளம் பத்திரப் பதிவு அலுவலகம் அழைத்து சென்று, நிலத்தை எழுதி வாங்கிட்டாங்க.” என்கிறார்.

இப்படி எம்.ஆர்.எப்., நிறுவனத்துக்கு நிலம் கொடுக்க மறுத்தவர்களை மிரட்டி பணிய வைக்கும் இடமாக பாடாலுர் போலீஸ் ஸ்டேஷனும், ஆர்.டிஓ. அலுவலகமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 2007 முதல் 2008-ம் ஆண்டுவரை பணியில் இருந்த உயர் போலீஸ் அதிகாரிகளும், உயர் அரசு அதிகாரிகளும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலம், வீடு, பணம் அன்பளிப்பாக பெற்றுள்ளனர் என்று நாரணமங்கலம் பொதுமக்களும், விவசாய அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளன.

நாரணமங்கலத்தில் டயர் நிறுவனம் அமைய நிலம் கொடுத்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி போராடி வரும் விவசாய அமைப்புகளுக்கு, ராசாவின் நண்பர் சாதிக் தரப்பிலிருந்து, "ராசா மீண்டும் அமைச்சராகி விடுவார். அப்புறம் நடக்குறதே வேற..' என்ற தொனியில் மிரட்டல்கள் வந்துள்ளன.

ராசா மீது "2-ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றச்சாட்டப்பட்டபோது, தமிழக முதல்வர் கருணாநிதி, "ராசா ஒரு தலித் என்பதால் பழி சுமத்தப்படுகிறது' என, வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

ஆனால், நாரணமங்கலத்தில் தலித் மக்களிடம் இருந்த நிலங்களை குறைந்த விலைக்கு மிரட்டி வாங்க, தலித் கோட்டாவில் அமைச்சர் பதவி பெற்ற ராசாவின் அதிகாரம்தான், முழுமையாக, முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

“பெரம்பலூருக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் கொண்டு வந்தேன். அரசு கலைக் கல்லூரி கொண்டு வந்தேன். மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தேன். பாலிடெக்னிக் கொண்டு வந்தேன். எம்.ஆர்.எப். டயர் கம்பெனி கொண்டு வந்தேன்...” - இதெல்லாம் அமைச்சர் ராசா தான் தொகுதிக்குச் செய்ததாகச் சொன்னவைகள். ஆனால் சொல்லாத இன்னொரு விஷயமும் இருக்கு. அது சி.பி.ஐ.யை கொண்டு வந்தது என்று சொல்லி நக்கலாகச் சிரிக்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட அதிமுகவினர்.

ராசாவின் அதிகாரத் திமிர், ஊழல்கள் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் பிரிவின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை சொன்னது அத்தனையும் அதிர்ச்சி ரகம்..

“மத்தியிலும், மாநிலத்திலும் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் போட்ட ஆட்டம் சொல்லி மாளாது. அவர் தன்னுடைய தாய், தந்தை பெயரில் வைத்திருக்கும் அறக்கட்டளை பெயரில் முக்கிய சாலைகளின் அருகில் நிலங்களை வாங்குவார்.

அந்த நிலத்துக்குப் பக்கத்தில் உள்ள நிலங்களை எல்லாம் அவரது நண்பர் சாதிக் வளைப்பார். யாராவது நிலம் தர மாட்டேன் என்று சொன்னால் போலீஸ், ஆர்.டி.ஓ. என்று எல்லா துறையும் அவர்களை மிரட்டும். அவர்கள் சொன்ன ரேட்டுக்கு நிலத்தைக் கொடுத்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பிடுங்கிக் கொள்வார்கள்.

நிலம் வாங்கி முடிந்ததும் பெரம்பலூரில் அரசு கலைக் கல்லூரி வருகிறது. மருத்துவக் கல்லூரி வருகிறது என்று அறிவிப்பு வரும். அதிகாரிகள் இடம தேடுவார்கள். கிடைக்காது. உடன் ராசா தன்னுடைய தாய், தந்தை பெயரில் உள்ள அறக்கட்டளையில் இருந்து நிலத்தை தானமாக வழங்குவார்.

உடனேயே அரசு அந்த நிலத்தை எடுத்துக் கொள்ளும். இதனால் அரசுக்குக் கொடுத்த நிலங்களின் அருகிலேயே அவருடைய நண்பர் சாதிக் வாங்கி வைத்திருக்கும் நிலங்களின் மதிப்பும் ஏகத்துக்கு உயர்ந்துவிடும்.

பெரம்பலூர் - துறையூர் சாலையில் குரும்பலூர்ங்கிற இடத்துல 500, 600 ஏக்கர் இடத்தை வாங்கினாங்க. அப்ப விவசாயிகள்கிட்ட அரசாங்கம் கல்லூரி கட்டுறதுக்காக இந்த இடத்தை எடுத்துக்கும். அதுக்கு முன்னால நீங்க இந்த இடத்தை வித்தீங்கன்னா நல்ல விலைக்குக் கிடைக்கும். இல்லைன்னா கவர்ன்மெண்ட்டு ஐயாயிரமோ, பத்தாயிரமோ கொடுக்கும்னு சொல்லி மெரட்டுவாங்க..

இப்படியே வாங்கி முடிச்சதுக்கப்புறம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வரப் போகுதுன்னு ஒரு அறிவிப்பு வந்துச்சு.. அதுக்கு ஆண்டிமுத்து-சின்னப்பிள்ளை அறக்கட்டளை சார்பா இலவசமா 8.51 ஏக்கர் இடம் கொடுத்து போர்டும் வைச்சுட்டாங்க. அந்த இடத்தைச் சுத்தி ஏக்கர் வெறும் இருபத்தைந்தாயிரத்துக்கு வாங்கின இடம், இப்ப அஞ்சு லட்சத்துக்குப் போவுது.

அதே மாதிரி பெரம்பலூர்-செட்டிக்குளம் ரோட்டுல ராசாவின் சொந்த ஊரான வேலூருக்குப் பக்கத்துல அரசு பாலிடெக்னிக் கல்லூரி வந்துச்சு. அங்கேயும் இதே டெக்னிக்குதான். அதுக்கும் இடம் ஆண்டிமுத்து-சின்னப்பிள்ளை அறக்கட்டளையால் வழங்கப்பட்டதுதான்..” என்றார்.

இப்படி ரியல் எஸ்டேட் மூலமாக பெரும் பணம் சம்பாதித்துடன் தொகுதிக்கு தான் பெரும் சாதனையைச் செய்ததாக காட்டியிருக்கும் தலித் அமைச்சர் ராசா நிச்சயமாக ஒரு கில்லாடி தலித்துதான்..!

கொள்ளையடிப்பதில் தலித் என்ன? தலித் அல்லாதவர்கள் என்ன..? அத்தனை கொள்ளையர்களும் ஒன்றுதான் என்பதை இப்போதாவது அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும்..!

கட்டுரைக்கு உதவியவை : பல்வேறு பத்திரிகைகள், இணையத்தளங்கள்