கமல்-ஸ்ரீவித்யா காதல் கதையா.. 'திரைக்கதா' மலையாளத் திரைப்படம்..?

24-10-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..
கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக எழுத்தாளரான நண்பர் திரு.எஸ்.ராமகிருஷ்ணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது சமீபத்தில் தான் கேரளா சென்று வந்ததை சொன்னார். அப்போது கூடவே, இரண்டு மலையாளத் திரைப்படங்களைப் பார்த்ததாகவும், இரண்டுமே சிறப்பாக இருந்தது என்றும், பார்க்கத் தவறாதீர்கள் என்றும் சொன்னார்.

அவைகளில் ஒன்று ‘தலப்பாவு’. மற்றொன்று ‘திரைக்கதா’. ‘தலப்பாவு’ படத்தினைப் பற்றி பத்ரி ஸார் தனது தளத்தில் ஏற்கெனவே எழுதிவிட்டார்.

‘திரைக்கதா’ படத்தினைப் பற்றி இணைய தளம் மூலமாக ஏற்கெனவே அறிந்தும் வைத்திருந்தேன். சமீபத்தில் மறைந்த திரைப்பட நடிகை ஸ்ரீவித்யாவிற்கும், நடிகர் கமலஹாசனுக்கும் இடையே இருந்த காதலைப் பற்றித்தான் படமாக எடுத்திருக்கிறார்கள் என்று நிறைய கேள்விப்பட்டும் இப்படத்தினைப் பார்க்க பெரும் ஆவலோடு காத்திருந்தேன். சமீபத்தில் சென்னை பத்மம் திரையரங்கில் மழையும், கூட்டமுமாக இருந்ததொரு மாலைக் காட்சியில் பார்த்தேன்.

'Casablanca'. 1943-ல் வெளி வந்த புகழ் பெற்ற அமெரிக்கத் திரைப்படம். Michael Curtiz இயக்கியது. சிறந்த கதை-திரைக்கதை, இயக்கம், திரைப்படம் என்று மூன்று பிரிவுகளில் ஆஸ்கார் அவார்டு வாங்கிய திரைக்காவியம். இரண்டாம் உலகப் போரின்போது மொராக்கா நாட்டின் சுற்றுலாத்தலமான 'Casablanca'-வில் இருந்த ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது.

இத்திரைப்படத்தின்பால் ஈர்ப்பு கொண்ட அக்பர் அஹமத்(பிருத்விராஜ்) தான் இப்போது திருவனந்தபுரத்தில் நடத்துகின்ற ரெஸ்ட்டாரெண்ட்டிற்கும் அதே பெயரைத்தான் சூட்டியிருக்கிறான். ரெஸ்ட்டாரெண்ட் நடத்துவதோடு மட்டுமல்லாமல் இப்போது அவன் மலையாளத் திரையுலகின் வெற்றிகரமான புதுமுக இயக்குநராகவும் திகழ்கிறான்.
ஒரு மழை பெய்யும் காலைப் பொழுதில் அக்பர் அஹமத் காரை ஓட்டிக் கொண்டு வர அவனது வருங்கால மனைவியும், அவனது துணை இயக்குநருமான தேவயானி(ஷம்விருத்த சுனில்) பக்கத்தில் இருக்க.. பின் இருக்கையில் மலையாள சூப்பர் ஸ்டார் அஜய்சந்திரன்(அனூப்மேனன்) அமர்ந்து வர..

அக்பர் அஹமத் தனது இரண்டாவது திரைப்படத்திற்காக கதை தேடி அலைந்ததையும், தனக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷக் காதலை மையமாக வைத்து தான் அமைத்த திரைக்கதையையும், இப்போது அந்தக் கதையின் நிலைமையையும் திரை ரசிகர்களுக்குச் சொல்லத் துவங்குகிறான். இப்படித்தான் இந்தத் திரைப்படம் துவங்குகிறது.

அக்பர் அஹமத் தனது முதல் படத்திலேயே மலையாளத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ள இயக்குநர். இவனது முதல் திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு பரிசளிக்க வந்து செல்கிறார் தற்போதைய சூப்பர் ஸ்டார் அஜய். தனது அடுத்தப் படமும் மிக, மிக வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பதை மக்களிடம் சொல்லி தனது அடுத்தக் கதைக்கருவைத் தேடிக் கொண்டிருக்கிறான் அக்பர்.

இந்தச் சூழலில் 1980-களில் மலையாள சினிமாவில் கொடி கட்டிப் பறந்த நடிகை மாளவிகா(ப்ரியாமணி)விற்கும் தற்போதைய சூப்பர் ஸ்டார் அஜய்யுக்கும் இடையிலான திருமண பந்தம் முறிந்து போய் இன்று மாளவிகா எங்கே இருக்கிறாள் என்பதே தெரியாத நிலையில் இருப்பதை ஒரு சூழ்நிலையில் அறிகிறான் அக்பர். ஆனால் மலையாள சினிமா வரலாற்றோடு இவர்களது காதலும், திருமணமும், முறிவும் கலந்திருப்பதை உணர்கிறான் அக்பர்.

தனது அடுத்தத் திரைப்படத்தை இவர்களது காதலையே மையமாக வைத்து எடுப்பதற்கு முடிவெடுக்கிறான் அக்பர். அவர்களது காதலை அப்போதே அறிந்து உடனிருந்து உதவியும் செய்த இயக்குநரின் வீட்டிலிருந்து இந்த நட்சத்திர தம்பதிகள் பற்றிய சில காதல் குறிப்புகள் அக்பருக்குக் கிடைக்கின்றன.

அந்தக் காதல் கதையை அவன் தனது உதவியாளர்களுடன் பகிர்வதில் இருந்து திரைக்கதை விரிகிறது. ஒரு திரைப்படத்தின் உருவாக்கம் என்பது மெல்ல, மெல்ல ஒரு நூலைப் பிடித்து அதன் மூலம் ஊரைப் பிடிப்பது போலத்தான்.. நத்தை ஒன்று தன் கூட்டை விட்டு வெளியே வந்து இந்தப் பேருலகத்தைக் காணும்போது என்ன நினைக்குமோ அந்த ஒரு நினைவைத்தான் திரைப்பட இயக்குநர்கள் முழுமையான கதை உருவாகி நிற்கும்போது பிரமிப்பாக பார்ப்பார்கள்.

அக்பர் அந்தக் கதையைத் தான் படித்ததோடு அல்லாமல் தனது குழுவினரோடு அதனைப் பற்றி சொல்கிறான்.. விவாதிக்கிறான்.. உடன் காட்சிகளும் அஜய்-மாளவிகாவோடு பயணிக்கிறது.

மாளவிகா ஹீரோயினாகவும், அஜய் வில்லனாகவும் ஒரே திரைப்படத்தில் அறிமுகமாகிறார்கள். பார்த்தவுடன் காதல் வருவதற்கு ஏதேதோ காரணம் இருக்கலாம். அதில் ஒன்று அஜய்யின் மனதைத் தொட.. மாளவிகாவை நெருங்க முயல்கிறான். ஆனால் தவறான நேரத்தில்.. தனக்குப் பிடிக்காத திரையுலகில் தன்னை திணித்து வைத்து தன் அழகின் முதலீட்டில் பணம் பார்த்துக் கொண்டிருக்கும் தனது அம்மாவிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது தனது முதல் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை முன் மொழிகிறான் அஜய்.

“என்னைத் தனியா விடுங்க.. எனக்கு நேரமில்லை..” என்று சிடுசிடுக்கும் மாளவிகாவிடம் பயந்த உணர்வுடன், “டேங்க்ஸ்..” என்று சொல்லி விலகிச் செல்லும் அஜய்யை நினைத்து ஒரு நொடி சிரிப்புடன் அதை மீண்டும் சொல்லிக் காட்டுவது அவளது முதல் தனிமை சந்திப்பாகிறது.

அடுத்தடுத்தக் காட்சிகளில் இருவரும் காதலர்களாகப் பேச வேண்டிவந்த கட்டாயத்தினால் இருவரின் பேச்சுக்களும் கூடக் கூட அவர்களுக்குள் காதல் தோன்றிவிட்டதாக அக்பர் சொல்கிறான்.

மாளவிகாவின் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அஜய்யும், மாளவிகாவும் முத்தமிட்டுக் கொண்டிருந்ததை மாளவிகாவின் அம்மா பார்த்துக் கத்திக் கூப்பாடு போடுகிறாள். மகளை அடித்துவிட்டு, “ஊர், பேர் தெரியாதவன் நீ.. உனக்கு என் பொண்ணு கேக்குதா.. என் பொண்ணு நாளைக்கு சூப்பர் ஸ்டாரினி ஆகப் போறாடா..?” என்று பேயாட்டம் கத்துகிறாள்.
ஏற்கெனவே காதல் பிசாசு இருவருக்குள்ளும் தலையை விரித்துப் போட்டு ஆடுவதால் அம்மாவின் பேயாட்டம் பலிக்கவில்லை. அதன் பின் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்திக்கிறார்கள். காதலை வளர்த்துக் கொண்டே செல்கிறார்கள்.

அக்பர் கதையை குறிப்புகளிலிருந்து மட்டுமில்லாமல் அவர்களுடன் பழகியவர்கள், காதலுக்கு உதவியவர்களுடன் நேரடியாகச் சென்று பேசத் துவங்குகிறான்.

புதிய திரைப்படமொன்றில் அஜய்யும், மாளவிகாவும் நடிக்கும் சந்தர்ப்பம் வருகிறது. மாளவிகாவின் தாயார் கண் கொத்திப் பாம்பாக மகளைப் பாதுகாத்து வைத்தும், காதல் தொடர்வது அவளுக்குத் தெரியாமலேயே போகிறது. மீறுவதுதானே வாலிப வயசு.. அதிலும் காதல் எனில் மீறினால்தான் அதற்கு மரியாதையே..

ஒரு படப்பிடிப்பில் மாளவிகா உடை மாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் அஜய் அவளிடம் பேசப் போக.. அதனை யூனிட் ஆட்களோடு அவளுடைய தாயாரும் பார்த்துவிடுகிறாள். ஆனாலும் அதே இயக்குநர் தனது அடுத்தப் படத்தை அஜய்யை ஹீரோவாக வைத்து துவக்க.. அதுவே அஜய் சூப்பர் ஸ்டாராக உருவெடுக்க பிள்ளையார் சுழியாகிறது.

புகழும், வெற்றியும் ஒரு சேரக் கிடைக்கும் சந்தோஷத்தில் இருவரின் காதலும் திருமணத்தை நோக்கிச் செல்லும் அதே வேளையில் மதுக் கிண்ணங்களுடன் காதலர்கள் இருவரும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே இயக்குநரின் உதவியோடு இருவரின் காதலும் வென்று திருமணத்தில் சென்று முடிகிறது. திருமணத்திற்குப் பின்பு கர்ப்பமாகிறாள் மாளவிகா. அங்கேதான் அவர்களது காதல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு புள்ளி துவங்குகிறது. அந்தக் கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்கிறான் அஜய். இப்போதுதான் மாளவிகா புகழ் உச்சத்தில் இருப்பதால் இன்னும் சில ஆண்டுகள் அவள் நடிக்க வேண்டும் என்கிறான் அஜய். மறுக்கிறாள் மாளவிகா.

தம்பதிகளின் இந்த மோதல் அவர்களுடைய ஈகோவை மெல்ல, மெல்ல உரசிப் பார்க்கிறது. அவர்களுடைய பிரிவுக்கும், விவாகரத்துக்கும் அதுவே காரணமாகவும் போய்விடுகிறது. ஆனாலும் தன்னுடைய முதல் வாரிசையே கலைக்கும்படி பிடிவாதம் காட்டிய அஜய்யின் செயலுக்கு என்ன காரணம் என்பதனை அறிந்த பின்புதான், மாளவிகாவுக்கு அவனுக்குத் தன் மீது இருந்த காதலுக்கான அர்த்தம் என்ன என்பது புரிகிறது.

நட்சத்திரங்களைச் சுற்றிலும் ஆயிரம் பேர் இருந்தாலும், யாருடனும் அவர்களுக்கு எள்ளளவும் தொடர்பிருக்காது என்பார்களே.. அது போலவே தனக்கு ஒரு துணை வேண்டும் என்றெண்ணி மதுக் கோப்பையை எடுத்துக் கொள்கிறாள் மாளவிகா. அதுவே அவளுக்குத் துணையாகிறது. ஆனாலும் நடிப்பையும் விடாமல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தாள் ஒரு காலக்கட்டம் வரையிலும்.. ஆனால் இப்போது அவள் எங்கே என்பது யாருக்கும் தெரியவில்லை.

அதே சமயம் அஜய் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து நட்சத்திரப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளான். வேறொரு திருமணத்தையும் செய்து கொண்டு தன்னுடைய ஹீரோ இமேஜை தக்க வைத்துக் கொண்டு வெற்றியாளனாக வலம் வந்து கொண்டிருக்கிறான்.

விளக்குகளின் வெளிச்சத்தில் மின்னும் நட்சத்திரங்கள் தங்களது நிழலுகத்தை மட்டும் இருட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள் என்று திரையுலக பிரபலங்களை பற்றி அடித்துச் சொல்வார்கள். இது மாளவிகா-அஜய் காதல் விவகாரத்திலும் உண்மையானதாகவே இருக்கிறது.

தான் நினைத்ததைவிடவும் அழகாகவும், அற்புதமாகவும் திரைக்கதை அமைந்துவிட்டதால் படத்தினை உடனேயே துவக்கிவிடலாம் என்கிற சந்தோஷத்தில் அக்பர் திளைத்துக் கொண்டிருக்கும்போதுதான் அந்தத் துயரச் செய்தி அவனுக்குக் கிடைக்கிறது.

அவனது காதல் கதையின் ஹீரோயின், முன்னாளைய சூப்பர் ஸ்டாரினி மாளவிகா நாகர்கோவிலில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் இருக்கிறாள் என்பதைக் கேள்விப்படுகிறான். உடனேயே அங்கே பயணப்படுகிறான்.

உண்மையில் மாளவிகாவைத் தாக்கியிருப்பது புற்றுநோய் என்ற அரக்கன். ஒரு காலத்தில் அவள் முக தரிசனத்திற்காக நிமிடக் கணக்கில் காத்திருந்து ஒரு ரசிகனாக தவம் கிடந்திருக்கும் அக்பர், இப்போது நோய் தாக்கிய நிலையில் அலங்கோலமாக முடி கொட்டிப் போய் தான் பார்க்க விரும்பாத நிலையிலும் வேறு வழியில்லாமல் தனது கதாநாயகியைப் பார்க்கிறான்.

தன்னையும், தனது நோக்கத்தையும் அவளிடம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்கிறான். மருத்துவர்களிடம் விசாரிக்கிறான். நோய் மெல்ல மெல்ல அவளைக் கொன்று கொண்டிருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அவளைத் தன்னுடன் தங்களுடைய ரெஸ்ட்டாரெண்ட்டிற்கு அழைத்து வருகிறார்கள் அக்பரும் அவனது நண்பர்களும்.

அங்கே நோயாளி போல் அல்லாமல் குடும்பத்தினர் போல் மாளவிகாவிடம் பழகுகிறார்கள் அனைவரும். அவ்வப்போது அவளது காதல் கதையின் புதிய புதிய அத்தியாயங்களைக் கேட்டுக் கொள்கிறான் அக்பர்.

தான் நேசித்த கதாநாயகி.. தான் திரைக்கதையாக்கம் செய்ய விரும்பிய அவளுடைய கதையில் கடைசியாக அவளுடைய ‘கதை’யே முடியப் போகிறது என்கிற கதையையும் சேர்க்க வேண்டிய கட்டாயம் அக்பருக்கு ஏற்பட.. இக்கதையைப் படமாக்கும் முயற்சியையே கைவிடுவதாகத் தயாரிப்பாளரிடம் சொல்லிவிடுகிறான்.

அவர்களது ரெஸ்ட்டாரெண்ட்டில் சிறு குழந்தை போல சுற்றி வரும் மாளவிகாவுக்கு அது ஒரு உன்னதமான அனுபவத்தைத் தருகிறது. தன்னைத் திரையில் மட்டுமே நேசித்த ரசிகர்களை அறிந்திருந்த மாளவிகா, எப்போதும் தன்னை நேசிப்பவர்களும் இருப்பார்கள் என்கிற உண்மையில் கரைந்துதான் போகிறாள். ஆனாலும் நோய் அவளை விடவில்லை. துன்புறுத்துகிறது. அவளை அப்போதைக்கு காப்பாற்ற வேண்டி மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்க்கிறான் அக்பர்.

உயிர் போவது எப்போது என்பது தெரியாவிட்டாலும் அதிக நாட்கள் ஆகாது என்பது தெரிந்த மாளவிகா தனது கடைசி விருப்பத்தை அக்பரிடம் தெரிவிக்கிறாள், தான் அஜய்யை சந்திக்க வேண்டும் என்று..

அக்பர் மாளவிகாவுக்காக அஜய்யை சந்திக்க வருகிறான். தன்னை வைத்துப் படமெடுக்க விரும்பாமல் தனது தூதுவரை திருப்பியனுப்பிய அக்பரை வேண்டாவெறுப்பாக அழைத்து அமர வைத்து வெறுப்பேற்றுகிறான் அஜய். ஆனாலும் மாளவிகாவுக்காகத் தான் வந்த விஷயத்தைச் சொல்ல அஜய்யின் முகம் பேயறைந்ததாற்போல் ஆகிறது.

தான் மறக்க நினைத்தவளை திரும்பத் திரும்ப நினைவுகள் ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது. அவளை மறக்க மதுக் கிண்ணத்தை நாடுகிறான். ஆனாலும் தகவல்கள் சுற்று வழியாக வீட்டிற்குள்ளும் நுழைகிறது. வீட்டில் மனைவியும் அவனைக் குத்திக் காட்ட அவனுக்குள்ளும் காயங்கள் ஏற்படுகின்றன.
மாளவிகாவைச் சந்திக்க மருத்துவமனைக்கு வருகிறான். சந்திக்கிறான். தாங்கள் எந்தச் சூழலில் பிரிந்தோம் என்பதனை இருவருமே புரிந்து கொண்டு இப்போதும் தங்களுக்குள் காதல் உண்டு என்பதனை இருவருமே புரிந்து கொள்கிறார்கள்.

மருத்துவனையின் நான்கு சுவர்களுக்குள் தான் இறக்க விரும்பாத நிலையைச் சொல்கிறாள் மாளவிகா. மருத்துவனையில் அக்பர் மற்றும் அவனது நட்பாளர்களிடம் விடைபெறுகிறாள் மாளவிகா. தாங்கள் காதலர்களாக இருந்தபோது தங்களுடைய காதல் சந்திப்பு இருப்பிடமாக இருந்த ஒரு மலைப்பிரதேச காட்டேஜுக்கு வந்து சேர்கிறார்கள்.

அன்றொரு நாள் காதலர்களாக இருந்தபோது அஜய்யின் ஸ்பரிசம் அவளை எப்படித் தாக்கியதோ, அதே உணர்வை இன்றைக்கும் அவன் தொடும்போது உணர்கிறாள் மாளவிகா. அஜய்யும், அவளும் அன்றைக்குத்தான் தங்களது காதல் துவங்கியதைப் போல் காணப்பட.. படம் இங்கே திடீரென்று முடிந்ததைப் போல் முடிந்துவிட்டது.
படத்தின் மொத்தக் கனத்தையும் பிருத்விராஜ் தாங்கிக் கொண்டிருந்தார் என்றாலும், பிற்பகுதியில் தனது சோக நடிப்பால் ‘முத்தழகி’ அவரை முந்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அம்மணிக்கு இந்த ஆண்டுக்கான தேசிய விருதும் இந்தப் படத்தின் மூலம் உறுதி என்றே சொல்லலாம்.

ப்ரியாமணியை நடிப்புக்காக வாழ்த்துவதற்கு முன் இப்படியொரு திரைப்படத்தில் நடிக்க முன் வந்த தைரியத்திற்காக ஸ்பெஷலாக அவருக்கு பாராட்டையும் தெரிவித்துத்தான் ஆக வேண்டும். நடந்த கதை.. கொஞ்சம் முலாம் பூசப்பட்டது என்பதெல்லாம் தெரிந்து, அதற்கடுத்தாற்போல் பெரிய பிரபலமில்லாத ஒரு நடிகருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறோம் என்பது தெரிந்தும் கதைக்காக நடித்திருக்கும் பிரியாமணிக்கு ஒரு ‘ஜே’ போடுகிறேன்.

முற்பாதியில் வெள்ளித்திரையில் மின்னும் கதாநாயகியாக ஜொலிக்கின்ற பிரியாமணி பிற்பாதியில் ஒரு நோயாளியாகத் தோற்றமளிக்கும்போது அனைத்திலும் வேறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களைப் பார்த்த அனுபவம் போல் இருக்கிறது.

அம்மாவிடம் சிடுசிடுப்பதில் துவங்கி, அஜய்யின் தவறான ஆங்கிலத்தைத் திருத்தி ஒரு நட்பை உருவாக்குவதிலும் வேகம் உண்டு. அஜய்யுடனான தனது ரொமான்ஸ் காட்சிகளில்(அந்த உடை மாற்றும் காட்சி) அவர் காட்டுகின்ற பொய்யான தவிப்பும், குறுகுறுப்பும் ஒரிஜினல் காதலியை அடையாளம் காட்டுகின்றது.

பிற்பாதியில் நோயின் பாதிப்பில் உருக்குலைந்து போய் தலைமுடி கொட்டி, அலங்கோலமான நிலையில் வெறித்தப் பார்வையுடன் அஜய்யை நீண்ட நாட்கள் கழித்துப் பார்க்கின்ற கோலத்தின் பின்னணி இசை நம்மை கட்டிப் போட்டுவிட்டது. பிரியாமணியின் கண்களும் சில சமயங்களில் நடிக்கத்தான் செய்கிறது. வயதான தோற்றத்திலும் அந்தக் கண்கள் மின்னியது என்னவோ உண்மை. பிரியாமணிக்கு இது ஒரு அனுபவப் பாடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பிருத்விராஜ் சாக்லேட் பையன் தோற்றத்தில் இருந்து மெல்ல, மெல்ல விலகி மோகன்லாலுக்கு வாரிசாக அவதாரமெடுக்கிறார் போல் தெரிகிறது.. ஒவ்வொரு சீனையும் தனது டீமுடன் பகிர்ந்து கொள்வதைப் போல் கதையைச் சொல்லிவிட்டு மாளவிகாவின் கதை முடியப் போகிறது என்பதை திரைப்படத்தில் காட்ட முடியாத வேதனையில் தயாரிப்பாளரிடம் படம் கைவிடப்பட்டது என்பதைச் சொல்கின்றபோது படத்தின் அழுத்தம் இங்கேதான் கிடைக்கிறது.

மாளவிகா-அஜய்சந்திரனின் காதலுக்கு இடையே அக்பர்-தேவயானி காதலையும் ஒரு சேரக் காண்பித்து ஒருவேளை அடுத்தக் கதையாக இவர்களே இருக்கக் கூடும் என்பதை சொல்லாமல் சொல்லிக் காட்டியிருக்கும் இயக்குநரின் திறமை ரசிக்கத்தக்கதே.

எந்தவொரு கதாபாத்திரத்தையும் வீணாக ஆக்காமல், அவர்களையே சுற்றியும் வராமல் ஒரே படத்திற்குள் இரண்டு திரைக்கதைகள் என்று வைத்து எதையும் குழப்பாமல் நீண்ட நேர்க்கோட்டில் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக இவருடைய நந்தனம்(இப்படத்தில்தான் நவ்யா நாயர் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார்.) படம் பார்த்துவிட்டு அசந்துபோனேன். என்ன ஒரு திரைக்கதை என்று.. அதே போலத்தான் இன்றும் இப்படத்தை போரடிக்காமல் கொண்டு சென்று அசத்தியிருக்கிறார். முடிவு நான் முற்றிலும் எதிர்பார்க்காதது.. ஆனாலும் அதன் பின் நடப்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் என்று நம்மிடமே விட்டிருக்கிறார் இயக்குநர்.

அடுத்து நிகழப் போவது மாளவிகாவின் மரணம்தான் என்றாலும், அதுவரையிலுமாவது அவளுக்கு சொற்ப சந்தோஷம் கிடைத்திருக்கிறதே என்றெண்ணி நாம் சந்தோஷப்பட வேண்டியதுதான்.

பிருத்விராஜ் இப்படத்தின் கதையைக் கேட்டவுடன் மிக, மிக ஆர்வமாகி நடிப்பதற்கு இசைந்துள்ளார். இது போன்ற கதாநாயகர்கள்தான் நிச்சயம் திரையுலகை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் காரணிகள் என்று சொன்னால் மிகையில்லை. ஏனெனில் அவருக்கு இதில் மிகப் பெரிய வேடமில்லை என்றாலும், அனூப்மேனன் அளவுக்கு பிருத்விக்கு முக்கியத்துவமும் இல்லை என்றாலும் அவர் விரும்பி நடித்துள்ளாரே..

அதனால்தான் படத்தின் விநியோகத்திற்கும், விளம்பரத்திற்கும், வியாபாரத்திற்கும் பிருத்விராஜும், பிரியாமணியும், இயக்குநரும் உதவி செய்ய ஒரு வித்தியாசமான திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. அந்த வகையில் அவருக்கு எனது நன்றி..

இந்தக் கதை நிஜமான கதையா..? அல்லது நிஜம் போல் உருவான கதையா என்பதை யோசித்தால் கொஞ்சம் உண்மை இருக்கலாம் என்று எனக்குப் படுகிறது.

இயக்குநர் ரஞ்சித் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது “இந்தப் படத்தின் அடிப்படை கதை, ஸ்ரீவித்யாவுக்கும், கமலஹாசனுக்குமான காதல்தான்..” என்று கூறியிருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தின் விளம்பர போஸ்டரில்கூட இதையே பயன்படுத்தியும் வருகிறார்கள்.

தமிழில் கமலஹாசனும், ஸ்ரீவித்யாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் 1973-ல் வெளிவந்த ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய இத்திரைப்படத்தில் கமல் கிட்டத்தட்ட ஒரு வில்லன் போலத்தான் வருவார். ஆனாலும் இருவருக்குள்ளும் இதற்கு முன்பேயே அறிமுகங்கள் உண்டு.

அதன் பின் 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’. இப்படத்தில் ‘பைரவி’ என்கிற பாடகியாக நடித்திருந்த தனக்கும், தன் காதலருக்கும் இடையேயான காதல் இந்தப் படத்தில்தான் உறுதியானதாக ஸ்ரீவித்யாவே சொல்லியிருந்தார். “அதிசய ராகம்” பாடல் காட்சியில் கமல் காட்டியிருக்கும் உணர்ச்சிப் பிரவாகத்தை, இன்றைக்குப் பார்த்தாலும் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால் அது நிறைவேறாமல் போனதற்கான காரணம் இதே ஆண்டில் வெளி வந்த இன்னொரு திரைப்படமான ‘மேல் நாட்டு மருமகள்’தான். இது ஸ்ரீவித்யாவுக்கு அப்போதே தெரியாமல் போனது அவருடைய துரதிருஷ்டம்தான்.

‘மேல் நாட்டு மருமகள்’ படத்தில் நடித்த வாணிகணபதிக்கும், கமலுக்குமான நட்பு ஸ்ரீவித்யாவுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். அதனால் இன்னொருபுறம் கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் ஸ்ரீவித்யா தனது காதலை வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறார்.

1976-ல் ‘samassiya’ என்கிற மலையாளப் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இதே ஆண்டில் கமல் ‘புகழ்’ பெற்றத் திரைப்படமான ‘உணர்ச்சிகள்’ படத்திலும் ஸ்ரீவித்யாவுடன் இணைகிறார். 1977-ல் ‘அன்னை வேளாங்கண்ணி’ திரைப்படத்தின் மலையாளப் பதிப்பில் ஸ்ரீவித்யாவுடன் நடித்திருக்கிறார் கமல்.

“படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் நாங்கள் சந்திக்கும், பேச சந்தர்ப்பம் கிடைக்கும் நாட்களிலெல்லாம் என்னை உருகி, உருகி காதலிப்பதாகச் சொன்ன அவர், “உன்னைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்” என்று வாக்குறுதியும் அளித்துவிட்டுப் போன மறுநாளே, அவரது திருமணச் செய்தியை காலை நாளிதழில் பார்த்து அதிர்ச்சியாகிப் போனேன்..” என்று தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுகிறார் ஸ்ரீவித்யா.

1978ல் கமல்-வாணி கணபதி காதல் திருமணம் நடந்தது. இதன் பின்னர் கமலும், ஸ்ரீவித்யாவும் கிட்டத்தட்ட 8 ஆண்டு காலம் இணைந்து நடிக்கவில்லை. 1986-ல் வெளிவந்த ‘புன்னகை மன்னன்’தான் இருவரையும் மீண்டும் இணைத்து வைத்த திரைப்படம்.

1989ல் ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘இந்திரன் சந்திரன்’, 1995-ல் ‘நம்மவர்’, 1998-ல் ‘காதலா, காதலா’ என்று அவருக்கும், கமலுக்குமான இரண்டாவது சினிமா வாழ்க்கையை இப்படி முடித்துக் கொண்டார் ஸ்ரீவித்யா.

இத்திரைப்படம் சொல்வதைப் போல் அம்மாவின் வற்புறுத்தலால் ஸ்ரீவித்யா திரையுலகத்திற்குள் வரவில்லை. ஸ்ரீவித்யாவின் சினிமா பிரவேசத்தை கடுமையாக எதிர்த்தார் அவருடைய தாயார் எம்.எல்.வசந்தகுமாரி. அதேபோல் பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்திருந்தார். தனது அம்மா, மற்றும் குடும்பத்தினருக்குப் பிடிக்காமல்தான் மலையாள சினிமா தயாரிப்பாளர் ஜார்ஜை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீவித்யா. அப்போது அவருக்கு புத்தி சொன்ன சக நடிகைகளை பகைத்துக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை.

1997-ல் கணவர் ஜார்ஜுடனான விவகாரத்து வழக்கு கோர்ட்டுக்கு வந்த பொழுது முதல் முறையாக ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் தனது தற்போதைய வாழ்க்கையின் துயரங்களை பதிவு செய்ய முன் வந்தார். ஆனால் தன்னுடைய முந்தைய துயரங்களை வெளியிட அப்போதே அவர் மறுத்துவிட்டார்.

பின்னர் ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகையில் தொடர் கதையாக தனது வாழ்க்கைச் சரிதத்தை எழுதும்போதுதான் தனது ‘முதல் காதலைப்’ பற்றியும், ‘காதலரைப்’ பற்றியும் தெரிவித்தார். ஆனால் இதற்குப் பின்பு கமலும், ஸ்ரீவித்யாவும் இணைந்து நடிக்கவேயில்லை.

இத்திரைப்படத்தில் இருவரும் கல்யாணம் செய்து கொண்டு பின் கருவுற்று கலைக்க வேண்டிய கட்டாயக் கோபத்தில் பிரிந்து சென்றுவிட்டதாக அமைத்திருக்கிறார் இயக்குநர். இதில் ஸ்ரீவித்யாவின் காதல் என்பது, படத்தில் காட்டப்படும் திருமணத்திற்கு முந்தின ‘செல்லூலாய்டு காதலாக’ இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

யாருக்கு யார் எங்கே அமையும் என்பது யாருக்கும்தான் தெரியாது. ஆனால் காதலர்களுக்கு நிச்சயம் தெரியும். அந்த உறுதி இருப்பதாலேயே காதலுக்கு மரியாதை உண்டு. அந்த எழுத்துகளுக்கு ஒரு அர்த்தமும் உண்டு.

இங்கே புண்பட்டுப் போனது காதலா என்பதை அந்த இருவரும்தான் சொல்ல வேண்டும். ஒருவர் மட்டுமே வெளிப்படையாகச் சொல்லியிருந்ததுதான் சிக்கல். ஆனாலும் கமலஹாசன், “அவரை மட்டுமல்ல; ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா வரையிலும் அனைவரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில்தான் இருந்தது அப்போதைய எனது வாலிபப் பருவம்..” என்று சொல்லி தனது கருத்தை முடித்துக் கொண்டார்.

ஆனாலும் தான் நோய்வாய்ப்பட்ட பின்பு யாரையும் சந்திக்க மறுத்த ஸ்ரீவித்யா, கமலஹாசனுக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுத்தார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருவரும் மனம் விட்டுப் பேசியதாகத் தெரிகிறது. ஸ்ரீவித்யாவின் மரணத்திற்கு அஞ்சலி எழுதிய கமல், தனது உயிர்த் தோழி ஸ்ரீவித்யா என்று உருகியிருந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இத்திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் மாளவிகாவின் கையில் இருக்கும் மதுக்கிண்ணம், கதாபாத்திரத்தின் மேலிருக்கும் அபிமானத்தைக் குறைக்கிறதே என்று நாம் யோசிக்க வேண்டாம். அது உண்மைதான் என்பது திரையுலகில் அனைவருக்குமே தெரியும் என்பதால் அதனைப் பற்றி வேறுவிதத்தில் நாம் யோசிக்க முடியாது.

ஒரு வேளை ஸ்ரீவித்யாவின் சொந்த வாழ்க்கையில் வேறுவிதமான ஏற்றங்கள் ஏற்பட்டு குடும்பம், குழந்தைகள் என்று அவரும் ஒரு பண்பட்டுப் போயிருந்தால் இன்றைக்கு மாதிரி அவருடைய கதையே திரைக்கதையாக மாறியிருக்காது. ஏனெனில் அவருடைய கதையைவிட மோசமான கதையை கொண்டவர்களெல்லாம் வேறொரு உலகத்தில் ஐக்கியப்பட்டு அவரவர் வழியில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இன்னொரு சர்ச்சையும் மலையாளத் திரையுலகில் இத்திரைப்படத்தையொட்டி எழுந்துள்ளது.
இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் அஜய்சந்திரனாக நடித்துள்ள அனூப்மேனன் சாயலில் கொஞ்சம் மோகன்லால் போலவே உள்ளார். ஆக, மோகன்லாலைத்தான் மறைமுகமாகக் குத்திக் காட்டி இப்படியொருவரை நடிக்க வைத்திருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

போதாக்குறைக்கு எப்போதோ முடிந்து போய் ஆறிப் போயிருந்த ‘மஞ்சிள் விரிந்த பூக்கள்’ திரைப்படத்தின் கதையும் இப்போது மலையாளப் பத்திரிகைகளில் அவல் பொரியாக அலசப்பட்டு வருகிறது.

அத்திரைப்படத்தில் மோகன்லால் வில்லன் கதாபாத்திரத்தில் வருவார். ‘ஒருதலைராகம்’ சங்கரும், பூர்ணிமா ஜெயராமும் அத்திரைப்படத்தில்தான் அறிமுகமானார்கள் என்று நினைக்கிறேன்.

“இதில் மோகன்லாலின் சொந்தக் கதையும் உண்டு. அதனை வெளியில் சொல்லாமல் இறந்து போனவரின் மேல் பழியைப் போட்டிருக்கிறார்கள்” என்பதும் இன்னொரு புறம் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சர்ச்சைகளும், பிரச்சினைகளும் எழுந்தாலே அத்திரைப்படம் பேசப்பட்ட படமாகிவிடும் என்பது திரையுலக ஜாதகம். அந்த வரிசையில் இத்திரைப்படம் தற்போது பேசப்பட்ட படமாகிவிட்டாலும், நல்ல கதைக்கரு, சிறந்த திரைக்கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம் என்பதற்காக வருங்கால மலையாள சினிமாவுலகில் பேசப்படும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

நெஞ்சம் மறப்பதில்லை - இயக்குநர் ஸ்ரீதர்

21-10-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

என்னுடைய சிறிய வயதில் நான் பார்த்த பிரம்மாண்டமான திரைப்படங்களே திரையுலகம் பற்றிய ஒரு மாயையை எனக்குள் தோற்றுவித்திருந்தது.
லவகுசா, வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், அடிமைப்பெண், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், என்ற திரைப்படங்களையெல்லாம் நான் காணும்போது அதனுடைய கதையைவிட அதைப் பெரிதாக உருவாக்கிய சித்திரம்தான் எனது மனக்கண்ணில் ஆழ்ந்திருந்தது.

அந்த வரிசையில் ஒரு மதியானப் பொழுதில் திண்டுக்கல் சென்ட்ரல் திரையரங்கில் நான் பார்த்த “சிவந்த மண்” என்கின்ற திரைப்படம் எனக்குள் ஏனோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றது.. எப்படி இத்தனை நாடுகளுக்குப் போய், இவ்வளவு செலவு செய்து, இத்தனை ஜோடனைகள் செய்து, அரங்குகள் அமைத்து செலவு செய்து படத்தை எடுத்தார்கள் என்ற சிந்தனை, திரைப்படம் பற்றிய அறிவு எனக்குள் விளைந்த நாளிலிருந்தே தோன்றியிருந்த ஒன்று.

அப்போது ஸ்ரீதர் என்கிற இயக்குநர் மிகப் பிரம்மாண்டமான இயக்குநர் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பின்னாளில் எனது அம்மாவுடன் ஒரு நாள் அதே சென்ட்ரல் திரையரங்கில் “போலீஸ்காரன் மகள்” திரைப்படத்தைக் காண நேர்ந்தபோது ஸ்ரீதரின் பெயர் மறுபடியும் வீட்டில் உச்சரிக்கப்பட்டபோது அந்த இயக்குநர்தான் இவர் என்பதும் எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

திரையுலகம் எனக்குள் வண்ணமயமான கனவுகளைக் கலைத்துப் போட்டுக் கொண்டிருந்தபோதுதான் ஸ்ரீதர் பற்றி மேலும் அறிந்தேன்.
திரையில் மின்னிய அலங்காரத் தோரணங்களையும், படோபடமான காட்சியமைப்புகளையும்,. கதாநாயகனின் கையில் இருக்கும் வாள் காட்டும் வீச்சில் தெறிக்கும் வீரத்தையும், நாயகியின் தலைகுனிவில் தெரியும் வெட்கத்தையும் மட்டுமே வைத்து திரைக்கதைகள் பின்னப்பட்டுக் கொண்டிருந்தக் காலக்கட்டத்தில் வசனங்களைத் துருப்புச் சீட்டுக்களாக வைத்து திரையில் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தியவர் ஸ்ரீதர்.

டி.கே.சண்முகம் அண்ணாச்சியால் “ரத்தபாசம்” என்கிற திரைப்படத்தின் வசனகர்த்தாவாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஸ்ரீதர் அடுத்தத் தலைமுறையின் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழப் போகிறார் என்று சண்முகம் அண்ணாச்சிக்கே நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
“அவர் வசனம் மட்டுமே எழுதியத் திரைப்படங்களிலும் தனித்தன்மை வாய்ந்தவராகத்தான் தெரிந்தார்” என்று அப்போதே பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் மனதாரப் பாராட்டியிருந்தார்.

அவர் திரைப்படங்கள் இயக்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் ஒரு புதுமையைச் சேர்க்க விரும்பித்தான் செட் பிராப்பர்ட்டீஸ் என்றழைக்கப்படும் பொருட்களையே ஒரு குறியீடாக, கதாபாத்திரங்களாக பயன்படுத்தத் தொடங்கினார்.

“கல்யாணப் பரிசு” திரைப்படத்தில் அவர் காதலர்களுக்காக ஆரம்பித்து வைத்த ஒற்றை வரி வசனம் காலம் கடந்தும் இன்றைக்கும் காதலர்களால் மறக்க முடியாத வசனமாக உள்ளது. “அம்மா நான் காலேஜ்க்கு போயிட்டு வரேன்..” என்று சரோஜாதேவி தனது காதலருக்காக ஊருக்கே கேட்கும் அளவுக்குச் சொல்லிவிட்டுச் செல்லும் காட்சி இன்றைக்கும் “கல்யாணப் பரிசு” படத்தின் மையமான காட்சியாக உள்ளது.

வெறும் வாய் வார்த்தைகளால் சிரிக்க வைத்துவிட்டு திரையரங்கைவிட்டு வெளியில் வந்தவுடன் மறந்துவிடக் கூடியதல்ல இவருடைய திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள். அனைத்தும் மீண்டும், மீண்டும் அசைபோட வைக்கும் ரகங்கள்.

இன்றைக்கும் குப்பை கொட்டுபவரிலிருந்து, கடைசியாக ஆட்குறைப்பால் வெளியேற்றப்படும் ஐ.டி. அலுவலக ஊழியர்கள் வரை அனைவராலும் உச்சரிக்கப்படும் “மன்னார் அண்ட் மன்னார் கம்பெனி” இவருக்கு மட்டுமே சொந்தம்..

அந்த “பைரவர்” கேரக்டரில் வாழ்ந்து காட்டிய தங்கவேலுவையும், அவர் தம் துணையையும் இன்றைக்கும் நம் ஊரில், நம் தெருவில், நம் வீட்டில் என்றைக்காவது ஒரு நாள் நாம் நிச்சயம் காண முடியும். காலம் கடந்து நிற்கிறதே “கல்யாணப் பரிசின்” காட்சிகள்..

அத்திரைப்படத்தின் இறுதிக் காட்சியைப் பலவாறாக யோசித்து வைத்து ஒரு துன்பவியல் நாடகம்போல் ஆக்கியிருந்தார் ஸ்ரீதர். அதனை பல இயக்குநர்கள் பார்த்தும், விநியோகஸ்தர்கள் பார்த்தும் முடிவை மாற்றும்படி சொல்லியும் “முடியாது.. பரீட்சித்துப் பார்ப்போம்” என்று சொல்லி அதனையே வைத்து வெற்றியும் கண்டார். அந்த முடிவு தமிழ்ச் சினிமாவின் வழக்கமான வெற்றி, அல்லது இணைதல் என்பதற்கு மாற்றாக முதல் எடுத்துக்காட்டாக அமைந்தது.

“வெளில எங்கேயும் போக வேண்டாம்.. ஒரேயொரு செட்டுதான் படமே..” என்று முடிவெடுத்து 17 நாட்களில் படத்தை எடுத்து முடித்தார் “நெஞ்சில் ஓர் ஆலயத்தை”..

மறக்கக் கூடிய திரைப்படமா இது..? கதை, திரைக்கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு, பாடல்கள் என அனைத்திலும் ஒரு சதவிகிதம்கூட சோடை போகாமல் தமிழ்ச் சினிமாவுக்கு இந்தியா முழுவதிலும் பெருமை சேர்த்தது இத்திரைப்படம்.

“சொன்னது நீதானா..” பாடல் காட்சியில் கேமிரா டாப் ஆங்கிளில் இருந்து இறங்கி முத்துராமன் அமர்ந்திருக்கும் கட்டிலுக்கு அடியில் சென்று அந்தப் புறமாக எழுந்து மேலே செல்கின்ற வித்தையை இன்றைக்கும் ஒளிப்பதிவாளர்கள் வியந்து பார்க்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் வின்சென்ட் செய்த அந்த டெக்னிக்கை பாராட்டாதவர்களே இல்லை. இன்றைக்கும் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் இந்தப் பாடல் காட்சியும் ஒரு பாடமாக அடிக்கடி காட்டப்படுவது இதனுடைய தனிச்சிறப்புதான்.

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை”, “எங்கிருந்தாலும் வாழ்க” என்கின்ற காவியப் பாடல்களை கவியரசர் கண்ணதாசன் படைப்பதற்கு முதல் காரணமாகத் திகழ்ந்துள்ளார் என்பதே இயக்குநர் ஸ்ரீதருக்கு பெருமை சேர்க்கக் கூடிய விஷயம்.

இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து எடுத்த “நெஞ்சம் மறப்பதில்லை” ஒரு தோல்விப் படமாக அமைந்துவிட்ட போதிலும் அதிலும் பாடல்கள் மிக, மிக பிரபலம். தேவிகாவின் நடிப்பில் ஒரு எல்லைக் கல் இந்தப் படமே என்று சொல்லலாம்.

வாழ்க்கையில் தோற்றுக் கொண்டே செல்பவர்களுக்காக ஒரு பொன்னான ஊக்க வரிகளை கவியரசரின் மூலமாக எழுத வைத்த ஸ்ரீதரை நாம் என்றென்றைக்கும் மறக்கவே கூடாது.. என்ன ஒரு பாடம் அந்தப் பாடல்.. “மயக்கமா கலக்கமா? மனதிலே கலக்கமா? வாழ்க்கையில் நடுக்கமா?” என்றென்றைக்கும் ஊக்க சக்தியை அளிக்கிறது இப்பாடல். “சுமைதாங்கி” படத்தில் ஜெமினி கணேசன் காட்டிய உருக்கத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எந்தவிடத்திலும் பின்னணி இசையை அநியாயத்திற்கு உயர்த்தி செலவிடாமல் அளவாகக் காட்டி சோகத்தின் முகமூடியைக் கழட்டிக் காண்பித்தத் திரைப்படம் இது.

முற்றிலும் புதுமுகங்களை வைத்து அவர் உருவாக்கிய “வெண்ணிற ஆடை”யில் நடித்த அனைவரும் இன்றைக்கும் ஏதோ ஒருவகையில் பேசப்பட்டவர்களாக உருமாறிவிட்டார்கள். ஸ்ரீகாந்த், நிர்மலா, ஜெயலலிதா, மூர்த்தி என்கிற இந்த இளைய பட்டாளத்தை வைத்து ஒரு சோதனை முயற்சியாக எடுத்த அத்திரைப்படம் பெரும் வெற்றியடைந்து நல்ல கதையும், இயக்குநரும் கிடைத்தாலே போதும்.. புதுமுகங்களை வைத்து திரைப்படம் துவக்கலாம் என்று தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய தைரியத்தையும் முன் உதாரணத்தையும் தந்தது.

தமிழ்ச் சினிமாவில் ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொரு விதமாகத் திரைப்படங்களை இயக்கியிருந்தாலும், ஒவ்வொருவரும் தத்தமது திரைப் பயணத்திலும் நீண்ட முடிவுறாத தனித்தன்மை வாய்ந்த ஒரு சாதனையை உருவாக்கிவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் ஸ்ரீதர் கொடுத்த மறக்க முடியாத இன்னொரு சினிமா “காதலிக்க நேரமில்லை.”

“உண்மையாகவே இதுதான் சினிமா” என்று அப்போதே ‘கல்கண்டு’ பத்திரிகையில் விமர்சனம் எழுதப்பட்டிருந்தது. எது சினிமா? ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும்? அது பொழுது போக்குக்காகவா அல்லது பிரச்சாரத்திற்காவா என்றெல்லாம் கேள்விகள் எழக்கூட இடம் தராமல் முற்றிலும் புதியதொரு அனுபவத்தை தமிழ் ரசிகர்களுக்குக் கொடுத்தது அத்திரைப்படம்.

இயக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. ஒரு நடிகரை அழைத்து வந்து, “இந்த டயலாக்கை உங்க பாணில பேசிருங்க. அவ்ளோதான்..” என்று சொல்லிவிட்டு “ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன்” என்று சொல்வதல்ல இயக்கம். அந்த நடிகரிடம் இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பு வெளியாகுமா என்று முழுமையாகத் தெரிந்து வைத்திருந்து அதன் பின் அவர்களிடமிருந்து நடிப்பை வரவழைப்பதே இயக்கம்.

முற்றிலுமாக இதனை இத்திரைப்படத்தில் சாதித்திருந்தார் ஸ்ரீதர். முதலில் ரவிச்சந்திரன் வேடத்தில் ஜெய்சங்கரைத்தான் நினைத்திருந்தாராம். பின்புதான் திடீரென்று மனம் மாறி ரவிச்சந்திரனை புக் செய்திருக்கிறார். இதில் இவருடைய கனகச்சிதமான தேர்வுகள் பாலையாவும், நாகேஷ¤ம்.
இப்போதும் மறக்க முடியவில்லை. எப்போதும் முடியாத அளவுக்கு ஒரு 5 நிமிட காட்சியை அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஸ்ரீதர்.
நாகேஷ் கதை சொல்கின்ற காட்சியில், அவர் சொல்கின்ற விதத்தைவிட என்னை அதிகம் கவர்ந்தது அதற்கு பாலையா காட்டிய ரியாக்ஷன்தான். அதுதான் முக்கியம். எப்போதும் காமெடியில் எதிர் நபர் காட்டுகின்ற ரியாக்ஷன்தான் அது காமெடியா இல்லையா என்பதைக் காட்டும். இப்போதும் பாருங்கள்.. பாலையாவின் நடிப்பசைவில் அவர் காட்டுகின்ற நவரசங்களால்தான் காமெடியே உருவாகியிருக்கிறது. ஸ்ரீதரின் இயக்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு இந்தப் படத்தில் இந்த ஒரு காட்சிக்கே கிடைத்துவிட்டது என்று சொல்லலாம்.

ஒரு விடுதலைப் போராட்டத்தைக் காட்ட வேண்டி அவர் எடுத்த “சிவந்தமண்” திரைப்படம் அவருடைய திரைப்பட வாழ்க்கையில் ஒரு மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். இத்திரைப்பட உருவாகிய காலக்கட்டம்தான் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக கஷ்டமான காலமாகிவிட்டது.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அரசியலில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வெளிநாடுகளில் ஷ¥ட்டிங் என்று திட்டம் தீட்டிவிட்டு கால்ஷீட் கிடைக்காமல் தவியாய் தவித்துப் போனார். அப்போது அத்திரைப்படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகள் சூழ்ந்து ஒரு கட்டத்தில் படம் நகருமா, நகராதா என்கிற அளவுக்குப் பிரச்சினைகள் வந்தபோதும் மனம் தளராமல் நான் எடுத்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து எடுத்துக் காட்டிய திரைப்படம் இது.

இத்திரைப்படத்திற்காக சுவிட்சர்லாந்தில் பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தபோது அவருடைய தாயாரின் மரணச் செய்தி அவருக்குக் கிடைத்தது. இருந்தும் தனக்கு இந்தப் படத்தை முடிப்பதுதான் முதல் வேலை என்று கருதி தாயாரின் முகத்தைக் கூடப் பார்க்க வராமல் விட்டுவிட்டார். இந்த ஒரு நிகழ்வு அவருடைய வாழ்க்கையில் பிற்காலத்தில் அவரால் பல முறை பல பேரிடம் சொல்லிச் சொல்லி அழுக வைத்த நிகழ்வாகப் போய்விட்டது.

“சிவந்தமண்” சிவாஜிக்கும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் தோற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது நிச்சயம் பொய்யில்லை.. ஸ்ரீதரின் திரைப்பட வரிசையில் இத்திரைப்படம் எந்த இடத்தைப் பிடித்திருந்தாலும் சரி.. தமிழ்த் திரைப்படங்களின் வரிசையில் மிக முக்கியமானத் திரைப்படத்தை இத்திரைப்படம் பிடித்திருக்கிறது. காரணம் படத்தின் கதையும், களமும்தான்..

மிகப் பெரிய பட்ஜெட் என்றில்லாமல் “ஊட்டி வரை உறவு” என்கின்ற நகைச்சுவையை மையமாக வைத்து ஒரு சிறிய படத்தையும் அவரால் எடுக்க முடிந்தது. “இத்திரைப்படத்தில் தன் அழகை வெளிப்படுத்தியதுபோல் வேறு எந்தத் திரைப்படத்திலும் வேறு யாரும் காட்டவில்லை” என்று திருமதி கே.ஆர்.விஜயாவே பிற்காலத்தில் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

திரைப்பட உலகம் எப்போதுமே ஒரு மாய வலைதான்.. யாரை, எப்போது, எங்கே, எப்படி உச்சாணிக் கொம்பிற்குக் கொண்டு செல்லும் என்பதும், யாரை எங்கே எப்படி குப்புறக் கவிழ்க்கும் என்பதும் யாருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த இரண்டு வித வாழ்க்கைச் சக்கரத்தில் திரையுலகப் புள்ளிகள் பலரை உருட்டி விளையாடிவிட்டது திரையுலகம்.

30 ஆண்டு காலமாக திரையுலகில் நீடித்திருந்தும் தோல்விப் படங்களால் கடன் சுமையை ஸ்ரீதரின் மேல் ஏற்றி விட்டிருந்தது இத்திரையுலகம். அப்போதுதான் அவர் தனது திரையுலகப் பயணத்தைச் சற்று நிறுத்தியிருந்த நேரம்.
அவருடைய கட்டாய ஓய்வு அப்போதைய சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆரின் கவனத்திற்குச் சென்றபோது ஸ்ரீதரை வரவேற்றுப் பேசினார் எம்.ஜி.ஆர். தன்னை வைத்து இதுவரையிலும் திரைப்படம் எதையும் இயக்காமலிருந்த இவருக்கு படம் தயாரிக்கவும், இயக்கவும் வாய்ப்பு தந்தார் எம்.ஜி.ஆர். அது “உரிமைக்குரல்”. முதல் ஷெட்யூலிலேயே ஸ்ரீதரின் கடனை அடைக்கும் அளவுக்கு விநியோகஸ்தர்களிடமிருந்து பண வசூல் குவிந்துவிட்டது.

படம் வெளிவந்து எம்.ஜி.ஆருக்கு பெயர் கிடைத்ததோ இல்லையோ.. ஸ்ரீதரின் பெயர் கெட்டது என்னவோ மறுக்க முடியாத உண்மை. கிட்டத்தட்ட அப்போதைய தமிழ்த் திரைப்பட உலகை ஆட்டிப் படைத்த கிளாமர் மோகத்தில், நடிகை லதா காட்டிய அதீத கவர்ச்சியில் ஸ்ரீதரின் பெயரும் ஆட்டம் கண்டு போனது. ஆனாலும் எம்.ஜி.ஆருக்காக மீண்டும் “மீனவ நண்பன்” படத்தினை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே அவருடைய புகழ் பெற்ற படங்களின் பட்டியலில் வராதது சோகம்தான்.

எம்.ஜி.ஆரை வைத்து எத்தனையோ இயக்குநர்கள் படங்களை இயக்கியிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு பாக்கியம் இவருக்குக் கிடைத்தது. 1977-ல் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதலமைச்சராகப் பதவியேற்கும் சூழல் உருவானபோது அப்போது உருவாக்கத்தில் இருந்த “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” படத்தின் சில காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்தது.

கிடைத்த 10 நாட்கள் இடைவெளியில் எம்.ஜி.ஆர். மீதமிருந்த தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் பதவியேற்றார். அப்போது அந்தப் படத்தினை இயக்கிக் கொண்டிருந்தது ஸ்ரீதர்தான். பதவியேற்பு விழாவுக்கு முதல் நாள்தான் அவருடைய ஷ¥ட்டிங் முடிந்தது. அந்தக் காட்சியை முடித்து வைத்தவர் ஸ்ரீதர் என்பது அவருக்குப் பெருமை சேர்க்கின்ற விஷயம்தான்.

திரைப்படத் துறை மேலும், மேலும் வளர்ச்சியடைந்து வந்து கொண்டிருந்த காலத்தில்கூட சிவாஜி என்னும் நடிகன் மேலிருந்த தாபத்திலும், ஆர்வத்திலும், அவருடைய புகழையே மங்கச் செய்யும் அளவுக்கு மிக மிக சாதாரணமான திரைப்படங்களை பலரும் இயக்கிக் கொண்டிருந்த காலக்கட்டத்திலும் ஸ்ரீதர் தன்னுடைய பழைய பாணி இயக்கத்திலிருந்து மாறவும் தைரியம் கொண்டிருந்தார்.

சிவாஜி-எம்.ஜி.ஆர். என்ற இரட்டைச் சக்கரவர்த்திகளைப் போல் தமிழ்த் திரையுலகம் கமல்-ரஜினி என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் வசீகர வளையத்தில் சிக்கத் தொடங்கியபோது அதனையும் தனது பாணியில் பயன்படுத்தத் தவறவில்லை ஸ்ரீதர்.
“இளமை ஊஞ்சலாடுகிறது” ஸ்ரீதரின் இளமையைச் சோதிக்க அவர் எடுத்தத் திரைப்படம் என்று சொல்லலாம். பாடலுக்கும், இசைக்கும் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டத் திரைப்படம்.
அவருடைய பேவரைட்டான முக்கோணக் காதலை அன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல் தேன் தடவி அவர் கொடுத்த மருந்துதான் இப்படம்.
எனக்கு கமலஹாசனைவிடவும் இப்படத்தில் ரஜினிதான் மிகவும் கவர்ந்தார். அந்த சோடாபுட்டி கண்ணாடி அவர் ஒரு மதிப்புற்குரிய கனவான் என்ற தோற்றத்தைக் கொடுத்தது. படம் நெடுகிலும் அவருடைய நடிப்பும் அப்படியே இருந்தது என்னவோ உண்மைதான்.
எப்படி இவரால் இப்படியொரு திரைப்படம் எடுக்க முடிந்தது என்பதைவிட எப்படி இவரால் எம்.எஸ்.விஸ்வநாதனைவிட்டு விலக முடிந்தது என்றுதான் அப்போதைக்கு பத்திரிகைகளில் கிசுகிசு பரவியது. தனது நீண்ட நாள் நெருங்கிய நண்பர்களான சித்ராலயா கோபு, மற்றும் ஆஸ்கார் பிலிம்ஸ் பாஸ்கர் ஆகியோரின் ஆலோசனையில் காலத்திற்கேற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளவும் தயங்கவில்லை இயக்குநர் ஸ்ரீதர்.

“தென்றலே என்னைத் தொடு” படத்தின் வெளியிட்டீன்போது “யாரோ ஸ்ரீதராம்ல.. மோகனை வைச்சுப் பண்றாராம்..” என்று அப்போதுதான் பரவலாகப் பரவியிருந்த புத்தம்புது மஞ்சள் வியாபார விநியோகஸ்தர்களிடையே பேச்சு இருந்தது. இளையராஜாவின் இன்னிசையால் படம் வழக்கம்போல பிய்த்துக் கொண்டு போன போதுதான் ஸ்ரீதரின் பழைய ஜாதகமும் தோண்டி எடுக்கப்பட்டு பேசப்பட்டது.

‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’.. ‘ஒரு ஓடை நதியாகிறது’.. இந்த இரண்டு திரைப்படங்களின் பாடல்களை மட்டுமே நான் கேட்டுள்ளேன்.. அசத்தல் பாடல்கள். ஸ்ரீதர் ஆரம்பக் காலத்திலிருந்தே தனது திரைப்படங்களின் இன்னொரு கதாபாத்திரமாக உருவாக்கி வைத்திருந்தது திரையிசைதான்..
பாடலுக்கும், இசைக்கும் இவர் கொடுக்கின்ற முக்கியத்துவம் ரசிகர்களின் மனநிலையை அறிந்து வைத்திருந்த இவரது தனித்தன்மையைக் காட்டுகிறது.

‘கல்யாணப் பரிசு’ தொடங்கி ‘தந்து விட்டேன் என்னை’ வரையிலுமான இவரது திரைப்பயணத்தில் அற்புதமானத் திரைப்படப் பாடல்களை ஸ்ரீதர் தொகுத்து வழங்கியிருப்பது, தமிழ்த் திரைப்படத் துறைக்கு இவர் செய்திருக்கும் மிகப் பெரிய உதவியும்கூடத்தான் என்பதனை யாராலும் மறுக்க முடியாது.

ஸ்ரீதரின் இயக்கத்தில் நான் பார்த்து பிரமித்த திரைப்படங்களைத்தான் இங்கே பட்டியலிட்டுள்ளேன். பார்த்தும் விரும்பாத படமும் ஒன்று உண்டு. அது ‘நானும் ஒரு தொழிலாளி’.

முதல் இரண்டு ரீல்களில் அம்பிகா எல்.கே.ஜி. மாணவிபோல் இருப்பார். அதே போலத்தான் கமலஹாசனும். அடுத்த நான்கு ரீலுக்கு யு.கே.ஜி. பின்பு ஒன்றாம் வகுப்பு என்று காலம் கடந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு ரீலாக எடுக்கப்பட்ட படம் என்பதனை மேக்கப்பே காட்டிக் கொடுத்தது என்றாலும், இத்திரைப்படத்தின் பாடல்களும் தேனிசை. மறக்க முடியாத பாடல்கள்.

கடைசியாக அவர் எடுத்த ‘தந்து விட்டேன் என்னை’ என்கிற திரைப்படத்தில்தான் விக்ரம் அறிமுகமானதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. “விக்ரமை வைத்து தான் மீண்டும் ஒரு திரைப்படம் செய்வேன்” என்று அவ்வப்போது பத்திரிகையாளர்களிடமும், பார்க்க வருபவர்களிடமும் சொல்லிக் கொண்டுதான் இருந்தார் ஸ்ரீதர். ஆனால் விக்ரம் இதுவரையில் ஸ்ரீதரைப் பற்றி எந்த வார்த்தையும் சொல்லாமல் இருப்பது(ஒரு வேளை எனக்குத் தெரியாமல் இருக்கலாம்) ஏன் என்பதுதான் புரியவில்லை.

இயக்குநர் ஸ்ரீதருக்கு திரையுலகிலும் பலமான வாரிசுகள் உண்டு. முதலிடம் இயக்குநர் இமயம் பாரதிராஜா. சில ஆண்டுகள் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். அடுத்து குறிப்பிடத்தக்கவர்கள் வாசுவும், சந்தானபாரதியும்.

திடீரென்று ஒரு நாள் பக்கவாதம் தாக்கி அவரை முடக்கிப் போட்டது. அந்த ஒரு நாளில் அவருடைய அனைத்துமே முடங்கிப் போனது. அன்றிலிருந்து நேற்றுவரையிலும் அவர் மரணத்தை எதிர்கொண்டபடியேதான் இருந்தார். மருத்துவமனையில் அவர் நினைவிழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறார் என்பதை உணர்ந்து மருத்துவர்கள், எந்தவொரு முக்கியப் பிரமுகர்கள் அவரைப் பார்க்கச் சென்றாலும், அவரிடம் பழைய கதைகளை சிறிது நேரமாவது பேசும்படி பணிக்கப்பட்டார்கள்.

அப்படித்தான் கொஞ்சம், கொஞ்சமாக அவர் மறுபடியும் இயக்குநர் ஸ்ரீதராக உருவெடுக்கப்பட்டார். பெற்ற தாயாருக்கு இறுதி மரியாதை செலுத்தக்கூட வர முடியாத சூழலுக்குள் தள்ளப்பட்டதை, இந்தக் காலக்கட்டத்தில்தான் தன்னைச் சந்திக்க வந்த அத்தனை பேரிடமும் சொல்ல முற்பட்டதை கண் கலங்கச் சொல்கிறார்கள் அவருடைய நேசிப்பாளர்கள்.

குடும்பம், மனைவி, மக்கள் ஏன்? எதற்கு? என்று கேட்பவர்களுக்கு மிகப் பெரிய உதாரணத்தை உருவாக்கித் தந்திருக்கிறார் ஸ்ரீதர்.
இவருடைய மனைவி தேவசேனா அம்மாவின் உறுதுணையும், அன்பும், பரிவும், பாசமும்தான் இவரை இத்தனை வருடங்கள்(கிட்டத்தட்ட 10 ஆண்டுகள்) நீண்டு வாழ வைத்துள்ளது என்றால் அதில் கொஞ்சமும் மிகையில்லை.

எத்தனையோ பணக்காரர்கள் வீட்டில், வயதான பெரியவர்களை மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு நர்ஸ்களை சம்பளத்திற்கு வேலைக்கு வைத்துவிட்டு அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போகும் சூழல் உள்ள நிலையில்(விஜயா-வாஹினி ஸ்டூடியோ அதிபர் திரு.நாகிரெட்டி தனது கடைசிக் காலங்களில் தான் உருவாக்கிய விஜயா மருத்துவமனையிலேயே ஒரு அறையில் இப்படித்தான் முடங்கிப் போய் கிடந்தார்) தன் கண்ணின் மணி போல கணவரை கடைசி வரையில் தனது இல்லத்தில் பாதுகாத்து வந்தவர் தேவசேனா. இதனால்தான் சமீப காலமாக நடிகர் சிவக்குமாரும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் “பெண்மையின் அடையாளமாகத் திகழ்கிறார் தேவசேனா” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்தப் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அவரை குழந்தை போல பாவித்து வந்தது முதல், மருந்து, மாத்திரை கொடுத்து கவனித்து வந்து, சொல்வதே புரியாத நிலையில் அவர் சொல்வதைப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது என்றும், அவர் பார்க்க விரும்புகிறவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ஸார் பார்க்கணும்கிறார்.. கொஞ்சம் வர முடியுமா?” என்று கேட்டு அவர்களை வரவழைத்து, கணவரின் சிறிது நிமிட சந்தோஷத்தையும் அந்த நேரத்தில் பூர்த்தி செய்த அவருடைய மனைவி தேவசேனாவை தெய்வம் என்றே சொல்லலாம்.

“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்.
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதிவரைக்கும் அமைதி நிலைக்கும்”

என்ற வரிகளை ஸ்ரீதர்தான் தனது “சுமைதாங்கி” திரைப்படத்திற்காக கவியரசர் கண்ணதாசனிடம் கேட்டு வாங்கியவர்.
இருப்பதில் பலர் உதாரணமாக இருப்பார்கள்.. இறந்தும் சிலரே உதாரணமாகத் திகழ்வார்கள். அந்த வகையில் திரைப்பட சாதனைகளையும் தாண்டி, தனிப்பட்ட முறையில் தனது குடும்பத்தினரோடு இணைந்து உதாரணமாகிவிட்டார் இயக்குநர் ஸ்ரீதர்.

அவருடைய ஆன்மா சாந்தியாகட்டும்..

குசும்பனாருக்கு நன்றியும், பதில் பதிவும், இரண்டு கேள்விகளும்..!

14-10-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

நமது செல்லக் குசும்பன் தனது குசும்புத்தனத்தின் அடுத்தக் கட்டமாக சினிமாவிலும் கை வைத்து அதகளப்படுத்தியிருக்கிறார். அமர்க்களமான காமெடி.. கூடவே என்னையும் துணைக்கு அழைத்திருக்கிறார். மறவாமல் இருப்பதற்கு, இருந்ததற்கு நன்றி குசும்பா..

அதிர்ஷ்டவசமாக முருகன் அருளால் நேரமும் கிடைக்கப் பெற்று இதோ எனது சினிமா தொடர்பான பதிவு.. எந்தப் புண்ணியவான் ஆரம்பித்தாரோ தெரியவில்லை.. அவரை பாதம் தொட்டு வணங்குகிறேன். தொடர்ந்து பதிவர்கள் பலரும் எழுதி வருபவைகள் அனைத்துமே புதிய, புதிய விஷயங்களை, மறந்து போயிருந்த பல ஆட்டோகிராப் கதைகளை ஞாபகப்படுத்தி வருகின்றன.

நன்றி.. நன்றி.. நன்றி..

இனி எனது பதில்கள்..


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயது என்று சரியாகத் தெரியவில்லை. 5 அல்லது 6 இருக்கும் என்று நினைக்கிறேன். திண்டுக்கல் சென்ட்ரல் தியேட்டரில் ஒரு மதியானக் காட்சியில் 'பாலும் பழமும்' படத்தினை பார்த்தது நினைவிருக்கிறது. காரணம், அதில் இடம் பெற்ற காலத்தால் அழிக்க முடியாத பாடலான "போனால் போகட்டும் போடா" என்ற பாடலில் இந்த வரிகளை மட்டும் அடுத்த சில நாட்களுக்கு உளறிக் கொண்டேயிருந்தேன் என்று எனது அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சென்னை தேவி திரையரங்கில் 'ராமன் தேடிய சீதை'.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சமீபமாக ஊருக்குச் செல்லும்போது பேருந்தில் 'கில்லி' போட்டார்கள். பாதி பார்த்து மீதியில் தூங்கினேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச சினிமா!

‘பாசமலர்’. எத்தனை முறை பார்த்திருந்தாலும் சரி.. எத்தனையோ தடவைகள் கேட்டிருந்தாலும் சரி.. "கை வீசம்மா கை வீசு.. கடைக்குப் போகலாம் கை வீசு.." என்ற வசன வரிகளைக் கேட்டவுடன், குபுக்கென்று கண்களில் நீர் முட்டுகிறது. ஏன் என்றுதான் தெரியவில்லை.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

‘முதல்வன்’ படத்தினை ஓட விடாமல் செய்ய மதுரையில் உடன்பிறப்புகள் நடத்திய ரெளடித்தனம். நான் அப்போது மதுரையில்தான் குடியிருந்தேன். முதல் நாள் 5 ஷோக்களுக்குமே டிக்கெட் கிடைக்காமல் சோகத்தில் இருந்த எனக்கு மறுநாள் மதியம் 2 மணிக்கு என் வீட்டு கேபிள் டிவியில் ‘முதல்வன்’ டைட்டிலைப் பார்த்தவுடன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை..

அதன் பின் நடந்த 'பாபா' படப் பெட்டி விவகாரம், இப்போது 'காதலில் விழுந்தேன்' விவகாரத்திற்கெல்லாம் மனம் ஏற்கெனவே கல்லாகிப் போய்விட்டிருந்ததால் வலி உணரவில்லை.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

'மைடியர் குட்டிச்சாத்தான்'.. 3D என்றொரு வார்த்தையை அன்றைக்குத்தான் கேள்விப்பட்டேன். சிறார்களுக்கே உரித்தான மனப்பாங்கில் கண்ணாடியை சந்தோஷமாக வாங்கிக் கொண்டு ஈட்டி குத்த வரும்போது ‘கிலீர்’.. ‘கிலீர்’.. என்று சிரித்த சந்தோஷம் பாருங்கள்.. அப்பச்சனை ஆயுள் உள்ளவரை மறவேன்..

6. தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிறைய.. ஒருவர் விடாமல் வாசித்து வருகிறேன். எனது புத்தக தேர்வுகளில் 75 சதவிகிதம் சினிமா பற்றிய பத்தகங்கள்தான். அதிலும் அறந்தை நாராயணன் எழுதிய ‘தமிழ்ச் சினிமாவின் வரலாற்றைப்’ படிக்கத் தவறிவிடாதீர்கள்.

7. தமிழ் சினிமா இசை?

எனது முதல் இசை ஆசான் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான். அவருக்குப் பின் ‘திருவிளையாடல்’ படத்திற்காக திரு.கேவி.மகாதேவன், ‘தெய்வம்’ படத்திற்காக திரு.குன்னக்குடி வைத்தியநாதன்.. மற்றபடி அடுத்த இடம் சந்தேகமே இல்லாமல் இசைஞானிதான்.. பிற்காலத்திய தமிழ் இசையின் பொற்காலம் இசைஞானி ஆட்சி புரிந்த காலம்தான்.. இப்போது எல்லாமே உடான்ஸ்தான்..

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நிறைய.. இப்போதெல்லாம் தொழிலே இதுதான். அதிகம் பாதித்தப் படங்களின் எண்ணிக்கை அதிகம்.. சில படங்களின் பெயர்கள் ஞாபகமில்லை. அதிகம் ஸ்காண்டிநேவியன் நாடுகளின் திரைப்படங்கள்தான். சமீபகாலமாக ஈரானியத் திரைப்படங்கள்..

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித் தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?

நிறைய.. சொல்வதற்கு இது நேரமில்லை. பக்கமும் பத்தாது.. நான் சினிமாத் துறையில் உன்மத்தமாக உள் நுழைந்தால் சினிமா மேம்படுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நான் மேம்படுவேன்.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நிச்சயம் பெரியதொரு எதிர்காலம், புதுமை படைக்கவிருக்கும் இயக்குநர்களால் வழி நடத்தப்படும். ஒரு படத்திற்கு 40 லட்சம் வாங்கும் கமர்ஷியல் இயக்குநர்கள் ஒரு கட்டத்தில் சரக்கு தீர்ர்ந்தவுடன் நீக்கப்படுவார்கள். புதிய கமர்ஷியல்கள் வரும்.. ஆனால் அதே சமயம் அமீர், பாலா, சேரன், சசிகுமார் போன்றவர்களின் வாரிசுகள் தமிழ்ச் சினிமா மீதான காதலை நம்மிடமிருந்து நீங்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

மக்களுக்கு நிறைய பணம் மிச்சமாகும். அதே சமயம் வழிப்பறி, கொள்ளைகள், திருட்டுக்கள், கொலைகள் அதிகமாகும். சினிமா தியேட்டரில் கொண்டாட வேண்டியவர்களெல்லாம் தெருவுக்கு வருவார்கள். பீச்சில் கால் வைக்க முடியாது.. கட்சிக்காரர்களுக்கு எளிதாக தொண்டர்கள் கிடைப்பார்கள். தப்பித் தவறி அன்றைய வருடத்தில் தேர்தல் நடந்தால், அப்போதைக்கு யார் ஆள்பவர்களாக இருந்தாலும் அவர்கள் நிச்சயம் தோற்பார்கள்.

அதே சமயம் சினிமாவை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பிச்சையெடுப்பார்கள். அல்லது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்தது அந்த சினிமா தொழில் மட்டும்தான். வேறெதுவும் இல்லை..

- - - - - - - - - - - - - - - - - - - -

குசும்பா... எனது பணி முடிந்தது. ஆனால் அழைக்க வேண்டியவர்கள் பட்டியலை யோசித்து யோசித்துப் பார்த்தேன். பலரும் பலவித வழிகளில் நண்பர்களாகி அழைப்பை ஏற்ற வண்ணம் இருக்கிறார்கள்.. இதுவரையிலும் யார், யார் எழுதியிருக்கிறார்கள்.. யார் எழுதவில்லை என்பதையெல்லாம் பட்டியல் எடுத்த பின்புதான் நான் எனது நண்பர்கள் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அதற்கெல்லாம் குசும்பா... மன்னித்துக் கொள்.. எனக்கு சத்தியமாக நேரமில்லை..

எனக்குப் பதிலாக நீயே இன்னொரு பதிவு போட்டு அழைத்துவிடு.. அனைவரையும் எனது நண்பர்களாக்கிவிடு.. புண்ணியம் கிடைக்கும்..

கேள்வி-1 : நான் கேட்ட நூல் விமர்சனம் எங்கே..?

கேள்வி-2 : இந்த 'சினிமா தொடர் சுற்றைப்' போலவே 'ராமன் தேடிய சீதை' படம் போல் "பதிவர்கள், தாங்கள் பெண் பார்த்த.. அல்லது மாப்பிள்ளை பார்த்த சம்பவங்களை" விவரிக்கலாமே.. காமெடியாக இருக்குமல்லவா..? கூடவே என்னைப் போன்ற அனுபவம் இல்லாதவர்களுக்கு ஒரு அட்வைஸ் கிடைக்குமே.. என்ன சொல்ற..? முதல் போணியை நீயே ஆரம்பித்து வைத்துவிடு..

வாழ்க வளமுடன்

புகைப்படம் புகட்டும் நீதி..!

10-10-2008


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நல்ல விஷயங்களை யாரிடமிருந்தாலும் கற்றுக் கொள்வதில் நாம் தவறக் கூடாது. நம் கலாச்சாரம்தான் உயர்ந்தது; மற்றைய கலாச்சாரங்களில் கற்றுக் கொள்ள ஏதுமில்லை. என்று சொல்லி எதையும் ஏறெடுத்துப் பார்க்காமல் புறக்கணித்தால் நமக்குத்தான் நஷ்டம்.

நியூஜெர்ஸியில் இருக்கும் எனதருமைத் தம்பி செந்தில்குமார் ஒரு புகைப்படத்தை ஈ-மெயிலில் அனுப்பி “அண்ணா.. போட்டோவைப் பார்.. செய்தியைப் படி.. உனக்கேற்றதுதான்..” என்று சொல்லியிருந்தான்.

அந்தப் புகைப்படம் இது.

படத்தில், படகில் மீன் பிடித்துக் கொண்டிருப்பது பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ். அவருக்குப் பின்புறமாக அமர்ந்திருப்பவர் ஹாலிவுட் நடிகர் ஆஸ்டின் ஹட்ச்சர். அவர் மடியில் அமர்ந்து ரொமான்ஸ் மூடில் அவரைக் கொஞ்சிக் கொண்டிருப்பது புரூஸ் வில்லிஸின் முன்னாள் மனைவியும், ஹட்ச்சரின் தற்போதைய மனைவியும், ஹாலிவுட் நடிகையுமான டெமிமூர்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா..?

நம் ஊரில் டைவர்ஸ் வாங்கியவர்களில் 90 சதவிகிதத்தினர் “என் மூஞ்சில நீ முழிக்கக் கூடாது.. உன் மூஞ்சில நான் முழிக்க மாட்டேன்” என்று ‘மங்கம்மா சபதம்’ போட்டுத்தான் பிரிகிறார்கள். அதிலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு டைவர்ஸ் ஆனவர்களின் நிலைமைதான் இதில் மிக, மிக சிக்கலில் கொண்டு போய் விடுகிறது.

“குழந்தைகளை நான்தான் வைத்துக் கொள்வேன்” என்று சொல்லி அப்பா, அம்மா இருவரும் கோர்ட் படியேறி சண்டையிடுவது டைவர்ஸிற்கு அடுத்தக் கட்ட மோதலாக இருக்கிறது. “குழந்தைகள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அப்பாவுடன் இருக்கலாம்..” என்பதுதான் பெரும்பாலான இது போன்ற வழக்குகளின் தீர்ப்பாக உள்ளது.

இதற்குப் பின் அவரவர் தத்தமது போக்கில் வேறு, வேறு திருமணங்களைச் செய்து கொண்டு போனாலும், குழந்தைகளின் நிலைமைதான் மிகவும் வருத்தத்திற்குரியது. வாரத்தில் சனி, ஞாயிறுகளில் மட்டும் அப்பாவைச் சந்திக்க வருவதும், மீதி நாட்களில் அம்மாவுடன் வாழ்வதுமாக ஒரு நாடோடி வாழ்க்கையை சந்திக்க வேண்டியிருக்கிறது.

ஏதாவது ஒரு பள்ளி நிகழ்ச்சி, உறவுக்காரர்கள் நிகழ்ச்சி என்றால்கூட பிள்ளையைப் பெற்றவர்கள் ஒன்றாக கலந்து கொள்ள முடியாத சூழல். “அவ வந்தா நான் வர மாட்டேன்..”; “உன் அப்பன் வந்தா நான் வர மாட்டேன்” என்று ஆளுக்கொரு பக்கமாக குழந்தைகளை இழுத்துக் கொண்டு இம்சிப்பது தொடர்கதையாகத்தான் இருந்து வருகிறது.

ஏன்.. எங்காவது நேருக்கு நேர் சந்திக்கின்ற சூழல் வந்தாலும்கூட கவனமாகத் தவிர்த்துவிட்டுத்தான் போகிறார்கள். சொல்கின்ற காரணம் “அப்படியொரு நபரை நான் சந்திக்கவே இல்லை என்று நினைத்துக் கொள்கிறேன்” என்கிற அளவுக்கு அவர் மீதான காழ்ப்புணர்வை அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இது போகப் போக அவர்களுடைய குழந்தைகள் மீதும் செலுத்தப்பட்டு யாரும், யாரையும் நம்பாத சூழல்தான் சமூகத்தில் உருவாகி வருகிறது.

இங்கே கதையோ அப்படியே நேர்மாறாக நடந்திருக்கிறது.
11 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு டைவர்ஸ் வாங்கியவர்கள் வில்லிஸ¤ம், டெமிமூரும். இப்படியொரு சூழ்நிலையில் குழந்தைகளுக்காக தனது முன்னாள் மனைவியின் ரொமான்ஸை பார்க்கத் தகுந்த சூழலில் அவர்களுடன் வருவதற்குரிய மனப்பக்குவம் வில்லிஸ் என்ற தந்தைக்கு வந்திருப்பது நிச்சயம் ஆச்சரியத்துக்குரியதுதான்.

புரூஸ் வில்லிஸோ “இதில் என்ன ஆச்சரியம்?” என்கிறார்.

“எனது மூன்று பெண் குழந்தைகளுக்கும் ஸ்டெப் பாதர் ஹட்ச்சர்தான். குழந்தைகள் பிக்னிக் போக வேண்டும் என்றார்கள். தனித்தனியே போவதென்றால் குழந்தைகளுக்கு வசதிப்படாது. எல்லாரும் ஒண்ணாவே போவோம் என்று சொல்லி கிளம்பிவிட்டோம். டெமி என்னைவிட்டுப் பிரிந்தாலும், என்றென்றும் எனது காதலுக்குரியவர்.. குழந்தைகளுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம்.. தப்பில்லை” என்கிறார் வில்லிஸ்.

நிச்சயம்.. பாராட்டக்கூடிய அதே சமயம் நாமும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்..

புகையிலையை ஒழிப்போம்-அன்புமணிக்கு ஒரு ஆதரவு

07-10-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதலில் டாக்டர் அன்புமணிக்கு எனது கைகள் வலிக்க தட்டி எனது வாழ்த்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் அன்புமணி அரசியல்வாதிகளில் தான் ஒரு மருத்துவர் என்பதை பொதுவிடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு தடை, மீறினால் அபராதம் என்று இப்போது கொண்டு வந்துள்ள முனைப்பான சட்டத்தால் முழுமையாக நிரூபித்திருக்கிறார்.

பொதுவிடங்களில் புகைப்பிடித்தலைத் தடை செய்தமை குறித்து புகை ஆர்வலர்களும், புகை விரும்பாத ஆர்வலர்களும் மாறி, மாறி சண்டையிட்டுக் கொண்டு வருகின்றனர். தடை செய்தமைக்கான காரணம், புகை விடுவதால் வெளி வரும் நச்சுப் பொருளான நிகோடினால், அப்புகையை வெறுமனே சுவாசிக்கும் அக்கம்பக்கத்தினர் நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு என்கிறது சுகாதாரத் துறை.

புகை பிடிப்பவர்களை அதிகம் தாக்குவது புற்றுநோயும், இதய நோயும்தான். புற்று நோயில் தொண்டை புற்று நோய், நுரையீரல் புற்று நோய், வாய்ப்புற்று நோய், கணையத்தில் புற்று நோய் என்று நிகோடினால் தாக்கப்படும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இந்தப் புற்று நோய், வகை.. தொகையில்லாமல் தாக்கி வருகிறது. புகையிலையினால் அதிகப்பட்சமாக வாய்ப்புற்று நோய் தோன்றுகிறது. புகையிலையிலும் இந்த நிகோடின்தான் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆக மொத்தத்தில் மனித குலத்தின் முக்கிய நோய் எதிரிகளில் ஒருவர் இந்த நிகோடின்தான்.

பொதுவாகப் புகைப் பிடிக்கும் பழக்கமுள்ளவர்களை கணக்கெடுத்தால் அதில் அதிகம் பேர் இளைஞர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு அந்தப் பழக்கம் எப்படி அமைந்ததெனில், அது மரபு ரீதியாக, வழி வழியாக ஆண்களுக்கு ஒரு அடையாளமென்ற முட்டாள்தனமான நம்பிக்கை இளைஞர்களுக்குள் ஏற்படுவதினால்தான் என்று நினைக்கிறேன்.

மேலும், மிக, மிக எளிதாக தெருவுக்குத் தெரு மளிகைக் கடைகளில் கிடைப்பதான ஒன்று என்பதாலும்தான் அந்தச் சனியனான ‘வெண்குழல்’ இளைஞர்களின் கைகளில் அதிகம் தவழ்ந்து வருகிறது. அடிப்படையில் மனோதிடத்தை இது அதிகப்படுத்துவதாகச் சொல்லித்தான் நிறைய ஆண்கள் இதனைக் குடிக்கிறார்கள். இந்தத் தத்துவத்தை இவர்களுக்கு உணர்த்தியது, சந்தேகமே இல்லாமல் நமது திரையுலகச் ‘சக்கரவர்த்திகள்’தான்.

திரைப்படங்களில் தங்களது ஆஸ்தான ஹீரோக்களின் புகை விடும் ஸ்டைலை பார்த்துத்தான் ரசிகர்களும் புகைப்பழக்கத்தைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டதென்னவோ மறக்க முடியாத உண்மைதான்.

எனது சொந்தக்கார அண்ணன் ஒருவர் அவர் உயிரோடு இருந்தவரையிலும் ஒரு நாளைக்கு பத்து பாக்கெட் சிகரெட் குடிப்பார். ஒன்றை கீழே போடுகிறார் எனில் இன்னொன்றை பற்ற வைத்துவிட்டுத்தான் செய்வார். தீவிரமான சிவாஜி ரசிகர். “புதிய பறவை” படத்தில் “பார்த்த ஞாபகம் இல்லையோ..” பாடல் காட்சியின்போது செளகார்ஜானகியைப் பார்த்தபடியே சிவாஜி ஸ்டைலாக புகைவிடும் ‘நடிப்பைப்’ பார்த்துதான், தனக்குப் புகை மீது ‘வெறி’ வந்ததாக ‘உயிரோடு இருந்தபோது’ பெருமையாகச் சொன்னார்.

இப்படி சில அப்பாவிகள் வரும் ஆபத்து தெரியாமல் அதனைத் தொட்டுவிட்டு பின்பு அதனைவிட முடியாமல் இப்போதும் தவிக்கிறார்கள். எவ்வளவு விலையேற்றினாலும் வேறு ஏதாவது செலவுகளைக் குறைத்துக் கொண்டு சிகரெட்டுக்கென்றே தனி பட்ஜெட் போட்டுவிடுகிறார்கள் புகை விரும்பிகள்.

நமது வலையுலகத்திலும் பல இளைஞர்கள் வெண்குழல் பற்ற வைக்கும் நாயகர்களாகவே இருக்கிறார்கள். “புகை பிடிக்காதே தம்பி..” என்று சொல்ல வேண்டியவர்களே, “சிகரெட் இருக்கா..?” என்று கேட்டு வாங்கும் கொடுமையும் நமக்குள் நடக்கிறது.

நான் சந்தித்த பல பதிவர் சந்திப்புகளிலும் புகை விடுவதற்காகவே இடை, இடையே தப்பித்து ஓடும் பதிவர்களை நினைத்துக் கோபப்பட்டிருக்கிறேன். சிறந்த எண்ணங்களை, எழுத்தாக்கி, அந்த எழுத்தை ‘மீண்டும், மீண்டும் படிக்க வைக்கும் போதை’யாக மாற்றுவதைப் போன்ற எழுத்தாற்றல் மிக்க அசாத்தியத் திறமை படைத்தப் பதிவர்களெல்லாம், இந்தச் சனியனைக் கையில் தூக்கிக் கொண்டு திரிவதைப் பார்க்கும்போதெல்லாம் எரிச்சலாகத்தான் வருகிறது.

நான் கடைசியாக கலந்து கொண்ட தமிழ்மண நிர்வாகிகளின் பதிவர் சந்திப்பிலும் நமது வலைப்பதிவர்களில் பாதிப் பேர் இப்படித்தான் திடீர், திடீரென்று எழுந்து வெளியே ஓடினார்கள். விருந்தினர்களைத் தனியே தவிக்கவிட்டுவிட்டு இவர்கள் வெளியே தனியே கூட்டம் நடத்துகிறார்களே என்று வெளியில் வந்து பார்த்தால், அனைவரின் கைகளிலும் அந்தப் பாழாய்ப் போன வெண்குழல்.

அன்றைய தினத்தில் ‘தோளர்’ வளர்மதி, ‘நன்பர்’ பைத்தியக்காரன் என்ற இரண்டு பின்னவீனத்துவ நாயகர்கள்விட்ட சிகரெட் புகையில் முக்கால்வாசி எனது நுரையீரலுக்குள்தான் சென்றது.. வேறு வழியில்லாமல் முருகனை நம்பி சுவாசித்துக் கொண்டேன். அவர்கள் கையில் சிகரெட் இல்லாத நேரத்தில் போய் பேசலாம் என்றால் தூங்கும்போது மட்டும்தான் அது முடியும் என்பதாக எனக்குப் பட்டது. வேறு வழியில்லாமல் கிட்டத்தில் பேசப் போய், புகை நான் விட்டதா அல்லது அவர்கள் விட்டதா என்று கேட்கும் அளவுக்கு புகை மண்டலத்தை கிளப்பினார்கள்.

போதாக்குறைக்கு அப்போதைய புத்தம் புதிய பதிவர் ஒருவரின் அருகில் பேசுவதற்காகச் சென்றேன். அவரருகில் சென்றவுடனேயே எனது கையில் சிகரெட்டால் சூடாக ஒரு சூடு வைத்தார். அலறிப் போய் நான் கையை எடுத்தவுடன் அவரும் பதறிப் போய் அதுவரையில் தனது கரத்தின் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்துக் காட்டினார்.

“என்ன அண்ணே.. சுட்ருச்சா.. ஸாரிண்ணேன்.. ஏதோ அண்ணன் வர்றாரே.. ஒரு மரியாதைக்கு இருக்கட்டும்னு மறைச்சு வைச்சேன்.. எப்படிண்ணேன் கரெக்ட்டா அது மேல போயி கைய வைச்சீங்க..?” என்று ‘அப்பாவி’யாய்க் கேட்டார். என்ன சொல்வது? வேறு வழியில்லாமல் கையைப் பிடித்தபடியே, “தெரியாம வைச்சுட்டேன்பா” என்றேன். ஆனாலும், அந்தப் பதிவர் ‘தெரிந்தே வைத்தாரா? அல்லது தெரியாமல் வைத்தாரா?’ என்பதில் எனக்கு இன்றைக்கும் ஒரு சந்தேகம் உண்டு.!!!

தனி மனித உரிமை.. தனி மனித உரிமை என்று கூச்சல் போட்டு, கோஷம் கொப்பளிக்க, கொடி பிடிப்பதற்கு இது ஒன்றும் நிஜமான தனி மனித உரிமைப் பிரச்சினையில்லை. சமூகப் பிரச்சினை.. “என்ன நோய் வருமாம்ல.. வரட்டும்.. வந்துட்டுப் போகட்டும்.. பார்ப்போம்.. எத்தனையோ சமாளிச்சிருக்கோம். இதை சமாளிக்க மாட்டோமா..” என்று வாய்ச்சவடால் விடுவதற்கு இது ஒன்றும் காசு, பணம் பிரச்சினையில்லை.. உயிர் பிரச்சினை..

புகை பிடிக்கின்ற அனைவரையுமே புற்றுநோய் தாக்குவதில்லை. ஆனால் மற்ற ஏதேனும் ஒரு நோய் தாக்கி விடுகிறது. சராரசியாக 45-லிருந்து 55 வயதுவரையில் மாரடைப்பு வந்து இறந்து போனவர்களின் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தீர்களானால், அதில் முக்கால்வாசிப் பேர் புகைப்பிடித்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

நோய் வரும். தாக்கும்.. என்பதெல்லாம் நன்கு தெரிந்த பின்பும் புகை விடுபவர்கள் அதனை ஏற்க மறுத்து அது எங்களது உரிமை என்ற ரீதியில் பேசுவது எனக்கு முட்டாள்தனமாகப்படுகிறது. நோய் வராவிட்டால் சந்தோஷம்தான்.. ஆனால் வந்துவிட்டால்..? இந்த ரீதியில் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்.. கொஞ்சம் வெளிப்படையாகப் பேசுவோமே...

இன்றைய பொருளாதாரச் சூழலில் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரு நாள் மருத்துவமனையில் படுக்கையில் கிடந்தாலே ஒரு மாச சம்பளத்தை மொத்தமாக கொடுத்துவிட்டுத்தான் வர வேண்டும். அந்த அளவுக்கு மருத்துவமனை, உபகரணங்கள், மருந்துகள், மாத்திரைகளின் கட்டணங்கள் உயர்ந்திருக்கின்றன. இதில் புகையினால் நோய் என்று வந்து நாம் மருத்துவமனையை நாடுவது, கண்ணை விற்று பின்னர் சித்திரம் வாங்கும் கதைதானே..

‘எப்படியும் நாங்கள் பொழைச்சுக்குவோம்’ என்று கும்மியடிப்பவர்கள், படுக்கையில் வீழ்ந்தால் தலகாணியை நகர்த்தி வைக்கக்கூட ஒரு ஆள் உடன் இருக்க வேண்டும் என்பதனை தயவு செய்து மறக்க வேண்டாம்.

மருத்துவமனைக்கு வந்த பின்பு உங்கள் சிகரெட்டுக்கு லைட்டர் துணையுடன் பற்ற வைத்தவரோ, அல்லது சிகரெட் வாங்கிக் கொடுத்தவரோ 24 மணி நேரமும் உடன் இருந்து உங்களைப் பார்த்துக் கொள்ளப் போவதில்லை. கஷ்டப்படப் போவது முழுக்க, முழுக்க நீங்களும், உங்களது குடும்பத்தினரும் மட்டும்தான்.

எவ்வளவோ கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் உங்களது சேமிப்பு, நீங்கள் மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் கண் முன்பே கரையும் கொடுமையை மத்திய தர வர்க்கம், அதற்கும் கீழான வர்க்கத்தினரெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது. நமது சேமிப்புதான் நமது குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் பாதுகாப்பு. அதையும் நாமே செலவு செய்துவிட்டு பின்பு நமது குழந்தைகளை பிற்காலத்தில் பணத்திற்காகக் கஷ்டப்பட வைக்கவும் கூடாது.

ஒருவிதத்தில் இந்தப் புகையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து குடும்பத்தினரையும் சேர்த்து கஷ்டப்படுத்துவது அவர்களின் தனி மனித உரிமையை பாதிக்கும் விஷயம்தானே.. எப்படி உங்களுக்குப் புகைப் பிடிக்கும் பழக்கம் தனி மனித உரிமை என்கிறீர்களோ, அதே போலத்தானே உங்களது குடும்பத்தினருக்கும் இருக்கும்..

மருத்துவமனை வாழ்க்கை என்பது சாதாரணமா...? நினைத்துப் பார்த்தால் திரும்பவும் அந்த வாழ்க்கையை வேறு எந்த மனிதரும் அனுபவிக்கக்கூடாது என்றுதான் அனுபவித்த எந்தவொரு மனதும் நினைக்கும். நானும் அதனால்தான் சொல்கிறேன்.

எனது தந்தை எப்போதும் சார்மினார் சிகரெட்தான் குடிப்பார். சிகரெட்டிற்கு காசு இல்லாதபோது சொக்கலால் பீடி குடிப்பார். இடையில் கொஞ்ச நாட்கள் சுருட்டு பிடித்தார். இப்படி அனைத்து வித வழிகளிலும், ‘புகையை விடத்தான் செய்வேன். என்னைக் கேட்கவே ஆள் இல்லை..’ என்று வீட்டில் தனி ராஜாங்கமே நடத்தினார்.

அந்த சிகரெட்டை வாங்கிவர நான்தான் போக வேண்டும். நான் இல்லாவிடில் எனது அம்மாவை அனுப்புவார். ஆனால் தான் போக மாட்டார். அவர் ஒருவகையான ஆணாதிக்கத்தில் இருந்தவர். ஆனால் பாசமானவர். இருந்தும் என்ன செய்ய..? ஆடிய ஆட்டமெல்லாம் ஒரு நாள் ஓய்ந்து போனது.

தொண்டை புற்று நோய் வந்து சாப்பிட முடியாமல், வயிற்றில் டியூப் போட்டு.. அதில் பால் ஊற்றி பின்பு, அதிலேயும் செப்டிக் ஆகி.. முடியாமல் போக.. பசி.. பசி.. பசி.. என்று பசியால் துடித்த துடிப்பு இருக்கிறதே.. சாப்பிட சாப்பாடு இருந்தும் சாப்பிட முடியாமல் சாவது எவ்வளவு கொடுமை என்பது தெரியுமா உங்களுக்கு? பட்டினியாக இருந்தே சாவைச் சந்தித்த அந்தக் கொடுமையை என்னால் மறக்கவே முடியவில்லை, நான் இந்தக் குடி, புகை, புகையிலை, மதுவை அடியோடு வெறுப்பதற்குக் முதல் காரணம் இது ஒன்றுதான்.

என் அப்பன் முருகன் அவனாகவே புற்று நோயையோ அல்லது வேறு ஏதோ ஒரு கர்மத்தையோ கொடுத்து என்னை கூப்பிட்டால், கண்டிப்பாக போய்த்தான் ஆவேன். போக மாட்டேன் என்று சொல்ல முடியுமா என்ன..? சொன்னால்தான் விட்டுவிடப் போகிறானா..? ஆனால் நானாக வரவழைத்துக் கொள்ள மாட்டேன் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். என்னுடைய சில நிமிட சிற்றின்பத்திற்காக எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் நான் அந்த நரக வேதனையில் ஆட்படுத்த மாட்டேன் என்ற உறுதிதான், என்னை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது.

புகை விடுபவர்களுக்கு நோய் வராமல் இருக்க வேண்டும் என்றுதான் நானும் வேண்டிக் கொள்கிறேன். வந்துவிட்டால் என்ன செய்வது என்பதுதான் எனது கேள்வி.

புகை பிடிக்கத் தடை சட்டம், பொதுவிடங்களில் மட்டும்தானே ஒழிய.. அவரவர் வீட்டுக்குள் புகை பிடித்துக் கொள்ள எந்தத் தடையுமில்லை என்கிறது அரசாங்கத்தின் புதிய விதிமுறை. இதுவும் ஒரு வகையில் மிக, மிக ஆபத்தான சட்ட விதிமுறைதான்.

புகை பிடிக்கும் பழக்கம் ஆபத்தானது என்பதனை வளர்ந்து வரும் சமுதாயத்தினரிடம் நாம் சொல்லிப் பழக்க வேண்டிய இந்தக் காலத்தில், வீட்டுக்குள்ளே இருந்து குடிச்சுத் தொலை என்றால் எப்படி?

வெளியில் பஸ்ஸ்டாண்டில், மக்கள் கூடும் இடங்களில் புகையை சுவாசிக்கும் வாய்ப்புள்ள பொதுமக்களைத் தவிர்த்துவிட்டு, வீட்டில் இருக்கும் குடும்பத்தினர் அந்தப் புகையை இனிமேல் அளவுக்கு அதிகமாகப் ‘பிடிக்கப்’ போகிறார்கள். நமது ஆணாதிக்கம் சார்ந்த சமூகத்தில் ஏற்கெனவே குடிகார ஆண்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது அரசே உரிமம் கொடுத்துவிட்டதைப் போல் இருக்கிறது இந்த விதிமுறை.

பிள்ளைகளுக்கு அடையாளங்களாக இருக்க வேண்டிய அப்பன் வீட்டுக்குள்ளேயே இருந்து சிகரெட் குடித்தால், பிள்ளைகள் என்ன நினைப்பார்கள்? அந்தப் பழக்கம் தவறு என்ற மனப்பான்மை அவர்களுக்குள் எப்படி ஏற்படும்? ‘நம்ம அப்பாவே குடிக்கிறார்.. நாமளும் குடிப்போம்’ என்றுதான் இப்போது விடலைப் பசங்கள் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். அதனை ஊக்குவிப்பதைப் போல் உள்ளது மறைமுகமான இந்த அனுமதி. இதற்கு என்ன தீர்வு என்பதையும் நாம் இப்போது யோசிக்க வேண்டும்.

இந்தப் புகையால் மட்டும்தான் நோய் வருகிறதா..? பேருந்துகள் விடும் கட்டுபாடற்ற புகையினாலும்தான் நோய் வருகிறது. அதனால் பேருந்துகளை தடை செய்துவிடுவார்களா என்றெல்லாம் நமது ‘வலையுலக சிங்கங்கள்’ கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

புற்றுநோய் தாக்கியவர்களில் தானாகவே நோயை வரவழைத்துக் கொண்ட வகையினர்தான் அதிகம் என்பது மருத்துவக் குறிப்புகள் சொல்லும் உண்மை. எந்தவிதமான கெட்டப் பழக்கமும் இல்லாமல் இருந்தும் நோய்வாய்ப்பட்டவர்கள் குறைந்த சதவிகிதத்தினர்தான். இதற்கு யாரையும் காரணமாகச் சொல்ல முடியாது. இந்தக் குறைந்த சதவிகிதத்தினருக்காக பெரும்பான்மை சதவிகிதத்தினர் செய்வது சரி என்று சொல்லிவிட முடியுமா என்ன..?

மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு கிராமம் முழுக்கவே சிறுநீரகத்தில் கோளாறு, பலருக்கு புற்று நோய், சிலருக்குத் தோல் நோய், இன்னும் பலருக்கு யானைக்கால் நோய் என்று பல வியாதிகளும் ஒட்டு மொத்தமாகத் தாக்கியிருக்கும் விஷயங்களும் இப்போது பத்திரிகைகளில் வெளி வந்திருக்கின்றன.

இவைகள் அந்தந்தப் பகுதிகளில் நிலவி வரும் தட்பவெப்பநிலை, உண்ணும் உணவு, பயன்படுத்தப்படும் தண்ணீர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் பாதிப்பாகத்தான் இருக்கும். இல்லை என்று சொல்லவில்லை. இதனால் ‘முதலில் அங்கே சரி செய்துவிட்டு பின்பு இங்கே வா..’ என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம்தானே..

“ஏன் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். சிகரெட் குடித்தால் புற்றுநோய்.. இதே புற்றுநோய் மதுபானம் அருந்தினாலும் வருகிறதே.. அதனை தடை செய்யுங்கள். தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து சம்பாதிக்கத் தெரிகிற அரசாங்கத்திற்கு சிகரெட் பிடிப்பது மட்டும்தான் குற்றமாகத் தெரிகிறதா..?” என்றும் வாக்குவாதங்கள் தொடர்கின்றன.

இதுவும் தவறுதான்.. ஆனால் தவறு என்று நினைப்பவர்கள் ஆட்சியில் இல்லாத காரணத்தினால் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போதைய தமிழக நிலவரப்படி டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடினால், நமது கஜானா அடுத்த நொடியே காலியாகிவிடும். அடுத்த மாத இலவசத் திட்டங்களுக்கு பைசா இருக்காது. இலவச் திட்டங்கள் இல்லாமல் போனால் அடுத்து மறுபடியும் ஆட்சிக்கு வர முடியாது.. எது முக்கியம் நாம் ஆட்சிக்கு வருவது முக்கியமா? அல்லது மக்கள் உயிர் முக்கியமா..?

இந்தப் பட்டிமன்றத்தில் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவது மட்டுமே முக்கியம். மக்கள் குடிகாரர்களாக மாறி சாவது பற்றித் தங்களுக்குக் கவலையில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். இனிமேல் உங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியது நீங்கள்தான். ஆனாலும் தடை செய்யப்பட அதிகாரமுள்ள துறைகளில், தடை செய்து காப்பாற்றப்பட வேண்டிய சில உயிர்களையாவது காப்பாற்றலாமே.. அது சரிதானே.. அதைத்தான் மிஸ்டர் அன்புமணி இப்போது செய்திருக்கிறார்.

இந்த பிரச்சினைக்கெல்லாம் தீர்வு ஒன்றுதான். அது சிகரெட், பீடி, புகையிலை, மது போன்ற நோய்வாய்ப்பட வாய்ப்புள்ள அனைத்து வகை போதை வஸ்துக்களையும் ஒட்டு மொத்தமாக தடை செய்யப்படுதல் வேண்டும். ஆனால் இது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது எனக்குத் தெரியவில்லை.

நாட்டின் ஒட்டு மொத்த பட்ஜெட்டில் கிடைக்கும் வருவாயில் 40 சதவிகிதம் இந்த வஸ்துக்கள் மூலமாகவே வருகிறது என்கிறார்கள். உண்மை நிலவரம் தெரியவில்லை. பணம் கொட்டும் துறையாக வளர்ந்து செழித்திருக்கும், இந்த புகையிலை சார்பான தொழில்களை தடை செய்து அதனால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டத் தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டுமெனில் அதற்கெல்லாம் தொலைநோக்கோடு செயல்படக்கூடிய ஒரு அரசாங்கம் வேண்டும்.

அடுத்து ஆட்சியில் அமர்த்துவது முதல் மகனையா அல்லது, இரண்டாவது மகனையா.. மகளா, பேரனா, வளர்ப்பு மகனா, உடன் பிறவா சகோதரியா, சகோதரியின் உடன் பிறந்த சகோதரர்களா, ராஜகுருவா என்றெல்லாம் நமது அரசியல்வாதிகளின் சிந்தனை சென்று கொண்டிருக்கும்போது, இந்த தொலை நோக்குப் பார்வை அவர்களுக்கு எங்கிருந்து வரும் என்பது எனக்குத் தெரியவில்லை.
அமைச்சர் அன்புமணி பொது இடங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை இந்தச் சட்டத்தின் மூலம் காட்டிவிட்டார். அதற்காகத்தான் முதலிலேயே நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். இவராவது இதையாவது செய்தாரே என்று சந்தோஷப்படலாம்.

இனி நாம் நமது தாய்க்குலங்கள் மீதுதான் நம்பிக்கை வைக்க வேண்டும். இல்லத்தில் கண்ணியத்தைக் கட்டுப்படுத்தும் உரிமை எங்களுக்குத்தான் உள்ளது என்ற நோக்கில் தாய்க்குலங்கள் வீட்டிற்கு உள்ளேயும் இதே போல் தடை உத்தரவு கொண்டு வந்தார்களானால், அடுத்த இரண்டாவது தலைமுறையிலாவது புகையிலை இல்லாத சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும்.

அப்படியொரு சூழலை நாம் உருவாக்க நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும், போதைப் பொருட்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வை நமது பிள்ளைகளிடத்தில் நாம் கற்பிக்க வேண்டும். அது நமது கடமையும்கூட..
போதைப் பொருட்களை ஒழிப்போம்..
புகையில்லா உலகத்தைக் காண்போம்..

வாழ்க வளமுடன்

டிஸ்கி-1 : நமது வலையுலக மருத்துவர் ப்ரூனோ அவர்கள் நிகோடின் பற்றியும், அதனால் ஏற்படும் நோய்கள் பற்றியும் புள்ளி விவரத்துடன் இதில் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.. மருத்துவருக்கு எனது நன்றி.

டிஸ்கி-2 : இப்படியொரு கருத்துடன் எப்போது நான் பதிவைப் போடுவேன் என்று ‘வெறி’யுடன் காத்திருக்கும் வெளிநாட்டு ‘தைலாபுர’ பதிவருக்கு இப்பதிவு சமர்ப்பணம்.