தனி ஒருவன் - சினிமா விமர்சனம்

29-08-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இயக்குநர் ஜெயம் ராஜாவுக்குக் கிடைத்திருக்கும் உண்மையான முதல் வெற்றி இதுதான்.  ‘நிமிர்ந்து நில்’ படத்தின் மூலம் நினைக்க வைத்த ஜெயம் ரவி அடுத்து வந்த ‘ரோமியோ ஜூலியட்’டிலும் அந்தப் பெயரை தக்க வைத்தார். அடுத்து வந்த ‘அப்பாடக்கர் சகலகலாவல்லவன்’ லேசாக அவருடைய பெயரை டேமேஜ் செய்து வைத்தாலும், இந்தப் படம் ஜெயம் ரவியின் கேரியரிலும் தனித்து நிற்கும்.

ஐ.பி.எஸ். பணியின் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் ஜெயம் ரவிக்கு அங்கே ஒரு பாண்டவர் டீமே துணைக்கு இருக்கிறது. இன்னமும் பயிற்சி முடியாத இந்த நேரத்திலும் இரவு நேரத்தில் ரவுண்ட்ஸ் செல்கிறார்கள். குற்றங்களை நேரில் பார்க்கும்போதெல்லாம் அதைக் கண்டறிந்து களத்தில் குதித்து குற்றவாளிகளைப் பிடித்து வைத்துவிட்டு இவர்கள் எஸ்கேப்பாகுகிறார்கள். இதையே ஒரு சவாலாகவும், பயிற்சியில் ஒரு பங்காகவும் செய்து வருகிறார்கள்.
32 குற்றங்களில் குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுத்தவர்கள் அதிர்ச்சியாகும்வண்ணம் குற்றவாளிகள் அனைவருமே சில நாட்களில் வெளியில் வந்துவிட.. இவர்களின் ஆதிமூலத்தைக் கண்டறியத் துடிக்கிறார் பாண்டவர் டீம் கேப்டன் ஜெயம் ரவி.
எதிரி நம் அருகில்வரும்வரையில் நாம் ஏன் காத்திருக்க வேண்டும்..? நாமே அவனை தேடிச் சென்று அட்டாக் செய்வோம் என்று நினைத்து இந்தக் குற்றவாளிகளின் காட்பாதரை தேட.. கடைசியில் மருத்துவ விஞ்ஞானியான சித்தார்த் என்கிற அரவிந்த்சாமி சிக்குகிறார்.
இவர்தான் நமது எதிரி என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு அவரது சாம்ராஜ்யத்தில் குண்டு வைக்க முயல்கிறது ஜெயம் ரவியின் டீம். இதை சுலபத்தில் அறிந்து கொண்ட அரவிந்த்சாமி பதிலுக்கு தன் வித்தையைக் காட்ட இரு தரப்பினருக்கும் இடையே பரபர, விறுவிறு சேஸிங்குகளும், பறத்தல்களும், சண்டைகளும் நடக்கின்றன. இறுதியில் நீதி வென்றதா..? அநீதி வென்றதா என்பதே கதை..!
வில்லனான அரவிந்த்சாமிதான் படத்தின் ஹீரோ என்று உறுதியாகச் சொல்லலாம். படத்தின் கதை முழுவதையும் தன் மீது சுமந்து கொண்டு அத்தனை அனாயசமாக நடித்திருக்கிறார்.  இவருக்கு இருக்கும் பிளாஷ்பேக் காட்சிகளும், இவரது தந்தை தம்பி ராமையா, முதலமைச்சர் நாசர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் மிக யதார்த்தம்..! தம்பி ராமையாவின் கேரக்டர் ஸ்கெட்ச் படத்தின் பிற்பாதியில் சிரிக்கவும் வைத்து கடைசியாக உச்சுக் கொட்டவும் வைத்திருக்கிறது..!
ஜெயம் ரவியின் பாடி லாங்குவேஜுக்கு ஏற்ற வேடம். மிக வேகமாக நகரும் திரைக்கதையில் நடிப்பென்று தனியாக சொல்ல வைக்காமல் கேரக்டருடனேயே வாழ்ந்ததுபோலவே தெரிகிறது இவரது நடிப்பு. தன்னுடைய செயல்களெல்லாம் எப்படி அரவிந்த்சாமிக்கு தெரிகிறது என்பதை ஊகித்துத் தெரிந்து கொண்டு, அதன் பின்னான நயன்தாராவுடனான மெளன ரொமான்ஸில் நச்சென்று மனதில் பதிகிறார்.
ஒரேயொரு டூயட்டுக்காக நயன்தாரா வேஸ்ட் என்றாலும், கேரக்டர் படம் முழுக்கவே வருவது போல இருப்பதால் பார்க்கவும் முடிகிறது. ரசிக்கவும் முடிந்தது. எடுத்த எடுப்பிலேயே ஜெயம் ரவியை ‘வாடா’, ‘போடா’ என்றெல்லாம் அழைத்தபடியே வந்து போவதால் அந்த அன்னியோன்யத்தை மீறி அவர்களை பார்க்க முடிவதில்லை. ஏஞ்சலீனாவுக்கு பதிலாக தன்னை போகச் சொல்லும் ஜெயம் ரவியிடம் நயன்தாரா சொல்லும் வசனமும், அதை வெளிப்படுத்தியவிதத்திலும் தியேட்டரில் கைதட்டல்கள் உறுதி..!
இதேபோல் தம்பி ராமையாவும், அரவிந்த்சாமியும் பேசுகின்ற காட்சிகளெல்லாம் தியேட்டரில் கலகலப்புதான். அந்தக் குரங்கு கதையைச் சொல்லி முடித்தவுடன் தம்பி ராமையா அப்பாவீயாய் கேட்கும் ‘அப்போ அது செத்திருக்குமே’ என்ற ஆக்ஷன் ஓஹோதான்..!
நட்புக்காக கணேஷ் வெங்கட்ராமன், நாசர் என்று குலக் கொழுந்துகள் இருந்தாலும் அவரவர் வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். இயக்கம் சிறப்பாகவே இருப்பதால் இவர்களையும் ரசிக்க முடிந்தது. அரவிந்த்சாமியிடம் கால் மேல் கால் போட்டு கெத்தாக பேசும் முதலமைச்சர் நாசர், அடுத்த சில வினாடிகளில் அரவிந்த்சாமி உட்கார தான் பவ்யமாக குனிந்து பேசும் காட்சியெல்லாம் ரசனைக்குரியவை. கிளைமாக்ஸ் எதிர்பாராதது..!
“எதிரியும் வாழணும்.. நாமளும் வாழணும்.. அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டணும். அதுதான் வீரம்..” என்ற நயன்தாராவின் பொன்மொழிதான் படத்தின் டர்னிங் பாயிண்ட். இந்த வசனத்தை யூகித்து சொன்னவருக்கு ஒரு பூங்கொத்தினை பரிசாக தரலாம்..!
ராம்ஜியின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் பளபளக்கின்றன. காட்சிகளை ஊடறுக்காமலும், பாடல் காட்சிகளில் அழகுடனும் படமாக்கியிருக்கிறார். இது போன்ற படங்களுக்கு மிகப் பெரிய துணையே எடிட்டர்தான். எடிட்டர் கோபி கிருஷ்ணாவின் கத்தரி வேலை நச்சென்று இருக்கிறது. படத்தில் பல இடங்களில் இடம் பெறும் இண்ட்டர்கட் காட்சிகளின் ஜம்ப்பிங் மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருப்பதால் கொஞ்சமும் ஸ்லிப் ஆகவில்லை. திறமையான படத்தொகுப்பும் இந்தப் படத்தின் விறுவிறுப்புக்கு ஒரு முக்கியக் காரணம்..!
ஸ்டண்ட் சில்வா மற்றும் திலீப் சுப்பராயனின் சண்டை காட்சிகள் நிகழ்த்திக் காண்பிக்கப்படாமல் நடந்ததாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கலவரமாகவே முடிந்திருப்பதுதான் கொஞ்சம் கவலையளிக்கிறது. ஜெயம்ரவியின் நண்பனின் கொலையை இத்தனை கொடூரமாகக் காட்டியிருக்க வேண்டாம். தியேட்டருக்கு வரும் பச்சைப் புள்ளைக பயந்திரும்..
உடலில் மைக்ரோபோனை பொருத்துவது என்கிற ஒரேயொரு கான்செப்ட் பல ஹாலிவுட், பாலிவுட் படங்களில் ஏற்கெனவே பார்த்ததுதான் என்றாலும் அது ஒன்றை மையப்புள்ளியாக வைத்து இப்படத்திற்கு கோலம் போட்டிருக்கும் சுபா இரட்டையர்களுக்கு ஒரு பாராட்டு..!
முதற்பாதியில் வரும் 32 களப் பணிகளில் ஈடுபட்டும் லோக்கல் போலீஸில் சிக்காமல் தப்பிப்பது.. நயன்தாராவின் தொல்லை தாங்காமல் முசெளரியில் இருந்து வேறு பயிற்சிக் கல்லூரிக்கு மாறி வந்ததாக ஜெயம் ரவி சொல்வது. எடுத்த எடுப்பிலேயே போலீஸ் கண்காணிப்பாளராக வேலை கிடைத்திருப்பதாகச் சொல்வது.. போஸ்ட்டிங் கிடைத்தவர்கள் யார், யார் எந்தெந்த போஸ்ட்டிங்கில் இருக்கிறார்கள் என்பதையே தெளிவாகச் சொல்லாதது.. கடைசிவரையிலும் நயன்தாராவை போலீஸ் டிரெஸ்ஸில் காட்டாதது. டிரைவர் வைத்துக் கொள்ளாமல் அரவிந்த்சாமி எப்போதும் எல்லா இடங்களுக்கும் தானே சர்ரென்று வந்து இறங்குவது.. அவருடைய அப்பாவை இவ்வளவு இளிச்சவாயனாக காட்டுவது.. ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களை மீறி செய்யப்படும் ஒப்பந்த விவகாரம்.. இதில் கையெழுத்திட வருபவரை படுகொலை செய்யும் சின்ன சம்பவம்.. அரவிந்த்சாமி வாயைத் திறந்தால் தன் பதவியும் பறிபோகும் என்ற நினைப்பிலும் நாசர் கிளைமாக்ஸில் பல்டியடிப்பது.. – இப்படி படம் பற்றிய விமர்சனங்களை சொல்லிக் கொண்டே போகலாம்தான்.
ஆனால் இது அத்தனையையும் தாண்டி ஒரு நிமிடம்கூட செல்போனை பார்க்க வைக்காமல், போரடிக்காமல், சொல்ல வந்த விஷயத்தை ஒரே நேர்க்கோட்டில், சுவாரஸ்யமாக சொல்லிய விதத்தில் இயக்குநர் ராஜாவின் இயக்கத் திறமையை நாம் பாராட்டியே ஆக வேண்டும். வெல்டன் ராஜா ஸார்..  கீப் இட் அப்..!
தனி ஒருவன் – சினிமா ரசிகர்கள் மிஸ் பண்ணக் கூடாத திரைப்படம்..! 

வண்ண ஜிகினா - சினிமா விமர்சனம்

29-08-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வண்ணமயமான ஜிகினா பேப்பருக்குள் பரிசுப் பொருட்களை கொடுத்து வாங்குபவரை மகிழ்விக்கலாம். அவர்களின் மகிழ்ச்சியை பார்த்து நாமும் மகிழலாம். அதே ஜிகினா பேப்பருக்குள் கொலை ஆயுதத்தையும் வைத்து எதிராளியை பயமுறுத்தலாம். அதற்கும் இந்த ஜிகினா பேப்பர் பயன்படுத்தான் செய்யும்.
ஜிகினா என்பது ஒரு அலங்காரம் மட்டுமே.. வெளிப்புற அழகு மட்டுமே.. அதுவே பொருளாகிவிடாது.. அதுவே பரிசாகிவிடாது..  இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் இந்த ‘வண்ண ஜகினா’ படத்தின் கதைக்குப் பொருத்தமாக தலைப்பு வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ரவி நந்தா பெரியசாமி.

கருப்புக் கலரில் ஆனால் அழகான முகவெட்டுடனும், தோற்றத்துடனும் இருக்கும் விஜய் வசந்த், தனது நிறத்தினால் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறார். கால் டாக்சி டிரைவரான இவர், ரெகுலராக ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர்களுக்கு காரோட்டி வருகிறார். அவர்களுடன் சேர்ந்து தண்ணியடித்து நண்பர்போல பழகும் விஜய்யின் சொந்தப் பெயர் பாவாடை சாமி. இந்தப் பெயரும் சேர்ந்தே இவருக்கு இம்சை கொடுக்கிறது. பெயரைக் கேட்டவுடன் சிலர் சிரிப்பதை பார்த்து, இவருக்குள்ளேயே ஒரு சங்கடம்.
ஐடி நண்பர்கள் ஆளாளுக்கு 2 பெண் நண்பிகளை வைத்துக் கொண்டு ஊர் சுற்றுவதை பார்த்து இவருக்குள்ளும் ஒரு பொறாமை. கோபம்.. தன்னிடம் ஒரு பெண்கூட பழக வரவில்லையே என்று ஏக்கப்படுகிறார். இவருடைய ஏக்கத்தை போக்க ஐடி நண்பர்கள் உதவுகிறார்கள். கிஷோர் குமார் என்கிற வேறொரு நபரின் புகைப்படத்தை விஜய்க்கு அணிவித்து முகநூலில் ஒரு பேக் ஐடியை உருவாக்கிக் கொடுக்கின்றனர். இதில் இவர்களே விஜய்க்காக பல பெண்களை நண்பர்கள் பட்டியலில் கோர்த்தும் விடுகின்றனர்.
அப்படி வந்து சிக்கும் ஒரு பெண்தான் ஏஞ்சல் பிரியா. இந்த அக்கவுண்ட்டில் இருக்கும் பெண்ணிடம் தினமும் வாய்ஸ் சாட்டிங் செய்து தனது காதல் பொழப்பை ஓட்டி வருகிறார் விஜய். ஒரு நாள் இந்த ஏஞ்சல் பிரியாவே இவருடைய காரில் பயணிக்க.. பதற்றம் தொற்றுகிறது விஜய்க்கு.
விஜய்யின் எளிமையான பேச்சினால் கவரப்படும் அந்த ஏஞ்சலான ஹீரோயின் சானியா தாரா விஜய்யுக்கு திக்கான நண்பராகிறார். விஜய்யின் ஊக்கத்தினால் கோரஸ் பாடகியாக இருந்து தனிப் பாடகியாக வளரும் அளவுக்கு உருமாறுகிறார்.
இந்த நேரத்தில் எப்படியாவது தான்தான் அந்த கிஷோர்குமார் என்கிற உண்மையைச் சொல்லிவிடலாம் என்று நினைத்து தவிக்கிறார் ஆனால் முடியவில்லை. சொல்லாமல் தயக்கத்தில் காத்திருக்கும் நேரத்தில் எல்லாமே தாறுமாறாக நடக்கிறது.
முகநூல் மூலமாக பெண்களை மடக்கி அனுபவிக்கத் துடிக்கும் ஒருவனும், சானியாதாராவை பார்த்து ஜொள்ளுவிட்டு அவளை அடையத் துடிக்கிறான். பின்னணி பாட வேண்டும் என்று நைச்சியாகப் பேசி அவளை அழைத்து வந்து வன்புணர்வு கொள்ள முயல்கிறான். இதில் தப்பிக்கும் சானியாதாரா, விஜய்யின் துணையோடு அவனது காரிலேயே தப்பிக்கிறாள்.
இருவரும் கொடைக்கானலுக்குத் தப்பியோட.. அங்கே நடக்கும் விபத்தில் சிக்கி விஜய் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அத்தருணத்தில் சானியா தாரா கொடுக்கும் சர்ப்ரைஸ் அதிர்ச்சியில் மேலும் பாதிப்பாகும் விஜய், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து மலையுச்சிக்குச் செல்கிறார்.
ஆனால் அங்கே ஒரு பெண் இதேபோல் தற்கொலைக்கு முயல்வதைப் பார்த்து அவளுடன் பேசி இருவரும் ஒன்றாக தற்கொலை செய்யலாம் என்று நினைக்கிறார் விஜய். ஆனால் அவர்களுக்கிடையேயான பேச்சில் ஒரு வார்த்தையில் இருவருக்குமான பந்தம் வெளிப்பட.. திகைக்கிறார்கள் இருவரும்..
இவர்கள் யார் என்பதும், விஜய்யின் கல்யாணம், காதல், காதலி கனவு என்ன ஆனது என்பதும்தான் சஸ்பென்ஸ்..!
கதையின் அடித்தளம் ஒரு கருப்பான மனிதனின் நிறம் பற்றிய வெறுப்பு என்கிறார் இயக்குநர். அழகு என்பது கருப்பிலும் உண்டே.. கருப்பழகியாகவும் இருப்பவர்கள் இங்கே நிறைய இருக்கிறார்களே..? ‘பாவாடை சாமி’யில் சிரிக்க என்ன இருக்கிறதென்று தெரியவில்லை..? இதுவொரு சாமி பெயர்தான். இன்னும் சொல்லப் போனால் இது சமூகத்தின் அடித்தட்டு மக்களிடையே சர்வசாதாரணமாகப் புழங்கும் பெயர்.
இந்தப் பெயர் மற்றும் நிறத்தினாலேயே ஒருவன் தனக்கான அங்கீகாரம் சமூகத்தில் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுவதும், வேதனைப்படுவதும் இங்கே அவ்வளவாக இல்லை. இந்த ஒரு விஷயத்துக்காகவே தற்கொலை என்றெல்லாம் பேசுவது சரியில்லையே இயக்குநர் ஸார்..!
விஜய் வசந்த்.. இந்தக் கேரக்டருக்கு மிகப் பொருத்தமான நபர்தான்.. சில நேரங்களில் கவர்கிறார். பல நேரங்களில் இன்னும் நல்லா செய்திருக்கலாமே என்று சொல்லவும் வைக்கிறார். இன்னமும் நிறைய இயக்குநர்களின் கைவண்ணத்தில நடித்து தனது நடிப்பை இம்ப்ரூவ்மெண்ட் செய்து கொள்வார் என்றே நம்புகிறோம்.. ஆனால் நடனம், வசன உச்சரிப்பிலெல்லாம் பக்காவான நடிகராகவே தோன்றுகிறார்.
சானியாதாரா. பரவாயில்லை என்ற முகம். ஆனால் சிறப்பான இயக்கத்தினால் சமாளித்திருக்கிறார். முக பாவனைகளில்கூட ஏன் இத்தனை கஷ்டம் என்றுதான் தெரியவில்லை. அம்மணிக்கும் தனியா டிரெயினிங் தேவையாக இருக்கிறது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்..
கருகமணியாக நடித்த ஸ்ரீதேவி மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். அவ்வளவு அழகாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். முதலில் பார்த்தவுடன் என்னடா இது… சினிமாவுக்கேற்ற முகம் இல்லியே என்கிற வருத்தத்தோடு பார்த்த பார்வையெல்லாம் அதன் பிறகு இவரது காட்சிகளிலெல்லாம் ஊடேயே வரும் ஒருவித சோகத்தை உணரும்போது சிறப்பாகத் தெரிகிறது.. நல்ல நடிப்பு.
படத்தில் தேவையே இல்லாத ஒரு கேரக்டராக வந்திருக்கும் அந்த வில்லனை மறந்துவிடலாம்.. ஆனால் சில காட்சிகளே வந்தாலும் சிங்கம்புலி கிளைமாக்ஸின் கனத்தைக் குறைக்க உதவியிருக்கிறார்.
ஜான் பீட்டர்ஸின் இசையில் ‘காத்தோட உன் வாசம்’, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ பாடல்கள் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் அழகாகத்தான் இருந்தன. குத்துப் பாடல் ரசிகர்களுக்காக ‘ஐயோ’ பாடலும் இருக்கிறது..!
பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் காட்சிகள் ஜில்.. மற்றபடி எடிட்டர் கோபி கிருஷ்ணாவின் கை வண்ணத்தில் பல காட்சிகளை நறுக்கியிருப்பதன் பலன் படத்தில் தெரிகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் ‘படாபட்’ என்ற வசனத்தைச் சொல்லும்விதமும், அதை கருகமணி கண்டறியும் இடமும் பட்டென்று பாராட்ட வைக்கிறது.. நன்று..
முகநூலில் பார்க்காமலேயே காதல் என்று வளர்ந்து காதலரைத் தேடி சென்னைக்கு ஓடி வரும் மாணவிகள், பெண்கள் பற்றியெல்லாம் பத்திரிகைகளில் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த அவலத்தையெல்லாம் போக்கும்வண்ணம் கூடுதலான வசனத்தின் மூலம் இந்த முகநூலின் ஆபத்துகளையும் இயக்குநர் சுட்டிக் காட்டியிருக்கலாம்.
முகமூடி ஐடிக்களின் காதல் இந்த லட்சணத்தில்தான் முடியும் என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதற்கு நன்றி. அவரவர்க்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். மேலதிகமாக ஆசைப்பட வேண்டும் என்பதைத்தான் இயக்குநர் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் போலும். சொல்லியேவிட்டார்..!
வண்ண ஜிகினா – பாதி காதல் ; மீதி எச்சரிக்கை..!

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க - சினிமா விமர்சனம்

14-08-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆர்யாவின் 25-வது படம். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமன்னா ஹீரோயினாக நடித்திருக்கும் தமிழ்ப் படம். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வின் சுமாரான வெற்றியை மறக்கடிக்கும்வகையில் இயக்குநர் எம்.ராஜேஷுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய படம்.. இப்படி பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் தன்னுடைய டிரேட் மார்க் கதையோடு, அதே பாணியிலான திரைக்கதையோடு மறுபடியும் சிரிக்க வைக்க வந்திருக்கிறார் இயக்குநர் எம்.ராஜேஷ்.

சரவணன் என்கிற ஆர்யாவும், வாசு என்கிற சந்தானமும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள். ஆர்யாவின் அப்பா காலமான சூழலில் ஆர்யாவை சந்தானத்தின் வீட்டில் விட்டுவிட்டுத்தான் அவரது அம்மா வேலைக்குச் செல்வாராம். அப்படியொரு சூழலில் டிரவுசர் போட்ட காலத்தில் இருந்தே ரெண்டு பேரும் ஒண்ணுமண்ணா வளர்ந்திருக்காங்க. இன்றுவரையிலும் அப்படியேதான் இருக்கிறார்கள். ஒரு மொபைல் கடை நடத்துகிறார்கள்.  ராத்திரில வழக்கம்போல சேர்ந்தே சரக்கடிக்கிறார்கள்.
ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள அவரது அம்மா ரேணுகா வற்புறுத்துகிறார். ஆர்யா விளையாட்டுத்தனமான பிள்ளையாகவே இருப்பதால் அதனை ஏற்க மறுக்கிறார். ஆனால் சந்தானம் புத்திசாலி. ‘தாமிரபரணி’ பானுவை பார்த்தவுடன் காதல் கொண்டு கல்யாணம்வரைக்கும் கொண்டு போய் குடும்பஸ்தராகிவிடுகிறார்.
ஆனால் சந்தானத்திற்கு ஆர்யாவுடனான நெருக்கம் பானுவுக்கு பிடிக்கவில்லை. ஆர்யா செய்த சிறுபிள்ளைத்தனமான சேட்டையால் அவர்களுடைய முதலிரவு கட்டில் உடைந்து பத்து நாள் ஆஸ்பத்திரியில் படுக்கிறார் சந்தானம். ஏற்கெனவே தன்னை இண்டர்வியூ என்ற பெயரில் ராகிங் செய்த ஆர்யா மீது கடுப்பில் இருந்த பானு, இப்போது ஆர்யாவுடனான நட்பைத் துண்டித்தால்தான் தாம்பத்தியம். இல்லையேல் இப்படியே கிடக்க வேண்டியதுதான் என்று உத்தரவு போடுகிறார்.
நட்பை கத்தரிக்க முடியாது. பதிலுக்கு ஆர்யாவுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டால் நம் பிரச்சனை தீருமே என்றெண்ணி ஆர்யாவுக்கு பெண் பார்க்க மேட்ரிமோனியல் டாட் காம் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறார் சந்தானம். அங்கே மெழுகு பொம்மையாக வந்து நிற்கும் கஸ்டமர் கேர் ஆபீஸர் தமன்னாவை பார்த்தவுடன் ஐஸ்கிரீமாக உருகுகிறார் ஆர்யா. காதலித்தால் இவளைத்தான்..  கட்டினாலும் இவளைத்தான்.. என்று சொல்லி தமன்னா மீது காதல் கொண்டு அலைகிறார்.
இந்தக் காதலுக்காக பல ரீல்களில் தொடர்ந்து சந்தானம் திட்டம் போட்டுக் கொடுத்துக் கொண்டேயிருக்க அது படு சொதப்பலாகி முடிந்து கொண்டேயிருக்கிறது. கடைசியில் காதல் ஓகேயாகும் சூழலில் நட்புக்கு வேட்டு வைக்கிறார் தமன்னா. சந்தானத்துடனான நட்பைத் துண்டித்தால்தான் நமக்கு கல்யாணம் என்று ஆர்யாவிடம் கண்டிஷன் போடுகிறார்.
இதற்கு மேல் என்ன நடக்கும் என்பது கொஞ்சம் சஸ்பென்ஸ். எல்லாரும் நினைக்கும் அதே சுப முடிவுதான். ஆனால் அது எப்படி முடிகிறது என்பதை படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இயக்குநர் எம்.ராஜேஷ் ஒளிப்பதிவாளரையோ, நடிகர், நடிகைகளையோ மாற்றினாலும் சரி தன்னுடைய ஸ்டைல் கதையையும், திரைக்கதையையும் மாற்ற மாட்டார் போலிருக்கிறது. முதல் படத்தில் இருந்த்து போன்ற அதே டைப்பான காதல், காதல் விரட்டு, நட்பு, நண்பனை விட்டுக் கொடுக்காமல் இருப்பது.. டாஸ்மாக் பானங்கள், சைடிஷ் என்று அனைத்துமே இந்தப் படத்திலும் இருக்கின்றன.
கூடவே சந்தானத்தின் வித்தியாசமான பஞ்ச் டயலாக்குகள். இவைகளை எங்கேயிருந்து தேடிப் பிடிக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நன்றாகவே இருக்கும். வரிக்கு வரி பதில் சொல்வதுபோல அடுக்கு மொழியிலும், எதுகை மோனையிலும் பஞ்ச் வசனங்களை பேசுவது சில நேரங்களில் நம்ம காதுக்கே பஞ்சராகிறது.
இந்த பஞ்ச் வசனங்களை பற்றி கிண்டல் செய்பவர்களுக்கும் சந்தானம் படத்திலேயே பதில் சொல்லியிருக்கிறார். பஞ்ச் டயலாக்குகளுக்கு எத்தனை, எத்தனை மெனக்கெடல்கள் செய்ய வேண்டும் தெரியுமா..? என்றெல்லாம் கேள்விகள் கேட்டிருக்கிறார். எல்லாஞ்சரிதான் சாமி.. எல்லா டயலாக்குகளுமே ‘ஒரேயொரு பிரெண்டை வைச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே’ன்ற மாதிரியிருந்துட்டா இந்தப் பிரச்சினையெல்லாம் வராதேண்ணே..?!
படத்தில் சுவையானதே திரைக்கதைதான். இடைவேளைக்கு பின்பு வரும் பல காமெடி டிவிஸ்ட்டுகள்தான் படத்தினை இறுதிவரையிலும் ரசிக்க வைக்கின்றன. இப்படித்தான் முடியப் போகிறதோ என்று நினைக்கும் வேளையில் புதிய பிரச்சனைகள் வந்து சந்தானத்தின் கற்புக்கு சோதனை வைப்பதெல்லாம் நினைத்தாலே சிரிப்பு வரும் திரைக்கதை.
ஒவ்வொரு பாடல் காட்சியையும் வித்தியாசமாக படமாக்கப்பட வேண்டும் என்று நினைத்து அதற்காக மெனக்கெட்டு பிரயத்தனம் செய்திருக்கிறார் இயக்குநர். இதற்காகவே இவருக்கொரு பாராட்டு. ‘சோனா சோனா’ பாடல் காட்சியும் ‘நா ரொம்ப பிஸி’ பாடல் காட்சியும் கண்ணுக்கு அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றன.
ஆர்யாவுக்கு அதே கேரக்டர். ஒரு மாற்றமுமில்லை. ஸ்பாட்டுக்கு எப்படி வந்திறங்கியிருப்பாரோ, அது போலவேதான் கேமிரா முன்பாகவும் நின்றிருக்கிறார். ஒரு அழுகை, ஒரு சோகம் என்று எதுவுமில்லாமல் எல்லாவற்றையும் ஜாலியாகவே எடுத்துக் கொள்ளும் ஒரு காதலராகவும், மகனாகவும், நண்பனாகவும் காட்.சியளிக்கிறார்.
படத்தில் அப்பாவியாய் சில கேள்விகளை கேட்கும்போதுதான் ஆர்யாவை நடிகைகளுக்கு ஏன் அதிகம் பிடிக்கிறது என்பதற்கான காரணமும் தெரிகிறது. நடிப்பென்று பார்த்தால் தமன்னாவிடம் நட்பை விட்டுக் கொடுக்க முடியாது என்று சொல்லும்போதுகூட ஒரு வித்தியாசத்தையும் காட்டாமல் பேசும் ஆர்யாவிடம் ஏதோ ஸ்பெஷல் இருக்கிறது. இல்லாவிடில் இதெல்லாம் ஒரு நடிப்பாடா என்று நாலு பேர் கேட்டுவிடுவார்கள். அப்படி கேட்கவிடாமல் செய்கிறது அவரது இயல்பான அந்த நடிப்பு.
சந்தானம் வழக்கம்போல அதே கலகலப்பு, நக்கல், கேலி, கிண்டல், நையாண்டி என்று அனைத்தையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார். முன்பே சொன்னதுபோல பஞ்ச் வசனங்களை கொஞ்சம் குறைத்துக் கொண்டு இயல்பான வசனத்திலேயே பதில் சொல்ல முனைந்தால் இன்னும் நன்றாக இருக்கும். தன்னுடைய கற்புக்கு வந்த சோதனைக்காக அவர் படும்பாடும், ‘செல்லம்மா..’ ‘செல்லம்மா’ என்று தன் மனைவியை கொஞ்சிக் கொண்டே பின்னாலேயே அலைவதும் பார்க்க ரசிப்பாகத்தான் இருக்கிறது..
வெள்ளைக்கட்டி, மெழுகு பொம்மை, ஐஸ்கிரீம் என்று ஆர்யாவால் வர்ணிக்கப்படும் தமன்னாவுக்கு இது  நிச்சயம் ஸ்பெஷல் படம்தான். அதிகமான குளோஸப் காட்சிகளில்  இவரது நடிப்பை வெளிப்படுத்தும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டு பெயர் வாங்கியள்ளார் தமன்னா.
மியூஸியத்திற்கு அழைத்துச் சென்று டைனோசர்போல் நிற்க வைத்துவிட்டு எஸ்கேப்பாகும்போதும், ஓடும் டிரெயினில் பொருத்தமான இடம் பார்த்து சாகச் சொல்லும் காட்சியிலும், பீர் அடித்துவிட்டு சுவாமிநாதனின் வீட்டிற்கு அர்த்தராத்திரியில் சென்று அரை ரவுசு விடும் காட்சியிலும் ரசிக்கத்தான் வைக்கிறது தமன்னாவின் நடிப்பு. பாடல் காட்சிகளில் காட்டியிருக்கும் அழகையும், ஸ்டெப்ஸையும் பார்த்தால், அம்மணி நினைத்தால் தமிழ்த் திரையுலகில் ஒரு வலுவான இடத்தைப் பட்டா போட்டு வைக்கலாம்போலத்தான் தெரிகிறது.
ஹீரோயினுக்கு துணை என்றாலும் வித்யுராமன் கலக்கியிருக்கிறார். இவரைப் போன்ற டயலாக் டெலிவரியை நொடி தாமதிக்காமல் செய்யும் காமெடி நடிகைகளெல்லாம் இப்போது இங்கே அதிகமில்லை என்பது உண்மை. ஆர்யா தன்னைக் காதலிக்க தயார் என்று தெரிந்த கணத்தில் இருந்து இவருடைய அட்டகாசங்கள் பரபர.. தன் உருவத்தை வைத்து சந்தானம் பேசும் காமெடி டயலாக்குகளையெல்லாம் எப்படி இவர் ஒத்துக் கொண்டார் என்றே தெரியவில்லை. முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டிய விஷயம்.
‘கலாய்ச்சுட்டாராம்’ என்ற வார்த்தையே வைத்தே படத்தில் பல இடங்களில் நம்மை கலாய்த்திருக்கிறார்கள். சில கவுண்ட்டர் டயலாக்குகளுக்கு இது ஓகேதான். மற்றபடி கடுப்புதான் வருது..!
கிளைமாக்ஸ் உண்ணாவிரதப் போராட்டம். இதற்கு ஆதரவு தெரிவிக்க நேரில் வரும் தங்கத் தலைவி ஷகிலா.. அதைத் தொடர்ந்து அஸிஸ்டெண்ட் கமிஷனர் என்ற சிறப்புத் தோற்றத்தில் வரும் விஷால். அவருக்கான பில்ட்அப்.. மனைவிகளுக்கு பயப்படும் கணவன்களின் கூட்டணி என்று கடைசிக் கட்டத்திலும் டிவிஸ்ட்டுகளை கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் இயக்குநர். அதேபோல் பாட்டில்களையும் கண்ணில் காட்டிக் கொண்டேயிருக்கிறார்.
‘லட்சுமி’ என்ற பெயரை வைத்து விஷாலை வாரியிருக்கும் ஆர்யா கூட்டணியின் பாச உணர்வு பாராட்டுக்குரியது. அதே ஒரிஜினல் வரலட்சுமியின் முகத்தைக் காட்டாமல் அவரது ஒரிஜினல் குரலையே பயன்படுத்தி தனது படத்தில் இடம் கொடுத்து அவர்களது காதலுக்கு உதவியிருக்கும் ஆர்யாவுக்கு பதில் உதவியைச் செய்திருக்கிறார் விஷால். வாழ்க நண்பர்கள் கூட்டணி..!
தன்னுடைய 25-வது படம் என்பதால் சிறந்த படமாகவும், ஹிட்டாகவும் அமைய வேண்டும் என்பதால் தானே சொந்த்த் தயாரிப்பில் இறங்கியிருக்கும் நடிகர் ஆர்யாவை பாராட்டுகிறோம்.
இயக்குநர் ராஜேஷுக்கு ஒரு கோரிக்கை. உங்களுடைய இயக்கத்தில் எங்களுக்கு மாறுபட்ட கருத்தில்லை. மிகச் சிறப்பாக நடிகர்களை இயக்கி நடிக்க வைக்கிறீர்கள். திரைக்கதையை சுவாரஸ்யமாகவே எழுதுகிறீர்கள். ஆனால் இன்னமும் ஏன் இப்படி டாஸ்மாக்கையே கட்டி அழுகுறீர்கள் என்று தெரியவில்லை. இந்தப் படத்தில் கடைசியாக மப்டியில் வரும் அஸிஸ்டெண்ட் கமிஷனர் விஷாலையும் தண்ணியடிப்பதுபோல காட்டியிருப்பதை பார்த்தால் உங்களுக்குள் ஏதோ ஒருவித டாஸ்மாக் பிரியம் இருப்பது போல தெரிகிறது.
எந்தவொரு கெட்ட செயலும் வலிந்து திணிக்கப்படுதல் கூடாது என்பதே நாம் இங்கே சொல்ல விரும்புவது. இதற்கு பதிலாக குடித்துவிட்டு பேசுவதுபோலகூட காட்டிவிடலாம். ஆனால் படம் முழுவதும் குடித்துக் கொண்டேயிருப்பதுபோல என்றால் எப்படி..? கொஞ்சம் யோசியுங்கள் பிரதர்..!
பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தருகிறார்கள் இந்த வாசுவும், சரவணனும்..!

குரங்கு கைல பூ மாலை - சினிமா விமர்சனம்

12-08-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இந்தப் படத்தில் ஜெகதீஷ், கவுதம் கிருஷ்ணா இருவரும் ஹீரோக்களாக நடித்திருக்கின்றனர். ஹீரோயினாக சாந்தினி மற்றும் நிஷா, சரவண சுப்பையா, கணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
மாயன் ஒளிப்பதிவு செய்ய சாய் சுரேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். சாய் குருநாத் இசையமைத்திருக்கிறார். பாடல்களை பாலு நாராயணன், மோகன்ராஜன், குரு. அய்யாத்துரை, என். இதயா ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.  குரு.அய்யாத்துரை, நீல்சன், வல்லவன் ஆகியோர் பாடல்களை பாடியிருக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஜி.கிருஷ்ணன்.
காதல் என்ற பெயரால் ஆண், பெண் இருவருமே ஒருவருக்கொருவர் ஏமாற்றி வருகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையை காயப்படுத்துகிறார்கள். அந்தக் காயப்படுத்தலினால் ஏற்படும் விபரீதங்களைத்தான் இந்தப் படம் விளக்கியுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலிப்பதுபோல நடிக்கும் நிஷா, தன்னுடைய கம்பெனியின் முதலாளியை காதலிக்க வேண்டும் என்பதற்காக தற்போது தன்னை காதலிக்கும் இரண்டு காதலர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறாள். இதனால் ஒரு காதலரான ஜெகதீஷ் தன் வேலையை இழக்கிறார். இதன் பின்னர் பெண்கள் மீதும், காதல் மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார்.
இன்னொரு பக்கம் ரவுடியிஸம் செய்யும் பிரவீன்குமார் காதல் என்ற பெயரில் பெண்களை பயன்படுத்திக் கொண்டு   தூக்கியெறிவதை வழக்கமாக் கொண்டிருக்கிறார்.
ஹீரோயின் சாந்தினி தைரியமான பெண். தவறுகளை தைரியமாக தட்டிக் கேட்கும் தைரியமுள்ளவர். பிரவீன் கண் வைத்த ஒரு பெண்ணை அவரிடமிருந்து காப்பாற்றி போலீஸிடம் பிரவீனை மாட்டிவிடுகிறார் சாந்தினி. இதனால் பிரவீனுக்கு சாந்தினி மீது கடும் கோபம்.
முன்னதாக பிரவீனுக்கு போன் செய்து திட்டுவதாகச் சொல்லி ஒரு ராங்நம்பருக்கு போன் செய்து திட்டுகிறார் சாந்தினி. பிறகு உண்மை தெரிந்து அந்த நம்பருக்குரியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று துடியாய் துடிக்கிறார்.
அந்த நம்பரை வைத்திருக்கும் கவுதம் கிருஷ்ணா தான் ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருக்கிறார். முகமறியா சாந்தினியின் குரலைக் கேட்டே காதலிக்கத் தொடங்குகிறார்.
சாந்தினிக்கு இப்போது வேறொரு பிரச்சினையும் இருக்கிறது. அந்தப் பகுதி கவுன்சிலரான அவரது தாய் மாமன், சாந்தினியை திருமணம் செய்ய ஆவலாக இருக்கிறார். ஆனால் சாந்தினி அதற்கு ஒத்துக் கொள்ளாமல் தவிர்த்து வருகிறார்.
இந்த நேரத்தில் சாந்தினியை பழி வாங்கத் துடிக்கும் பிரவீன் சாந்தினியை பாலோ செய்து அவளது புதிய காதலன் பற்றிய தகவலை அறிந்து தன் ஆள் ஒருவனை அவள் தேடும் காதலன் போல் நடிக்க வைத்து சாந்தினியை தன் வசப்படுத்த திட்டம் தீட்டுகிறான்.
சாந்தினி தான் போனில் பேசிய கவுதமை சந்திக்க வேண்டி பூங்காவுக்கு வந்து காத்திருக்கும் நேரத்தில் அவளது தாய் மாமன் அங்கே வந்து சாந்தினியை அடித்து இழுத்துச் செல்கிறான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஜெகதீஷும், சாந்தினி யார் என்று தெரியாமல் மற்ற பெண்களிடம் எக்குத்தப்பாக கேள்வி கேட்டு அடி வாங்கி பூங்காவில் தனித்து நிற்கும் உண்மை காதலன் கவுதமும் சந்தித்துக் கொள்கிறார்கள்.
ஜெகதீஷிடம் தனது காதல் பற்றி கவுதம் சொல்ல.. இதையடுத்து ஜெகதீஷ் தான்தான் சாந்தினி தேடும் காதலன்போலவும், காதல் தோல்வியால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருப்பது போலவும் மருத்துவமனையில் படுத்துக் கொண்டு ஒரு டிராமா போடுகிறார்.
இதில் சிக்கிய சாந்தினி அந்த போன் நபர் பற்றிய மர்ம்ம் புரியாமல் முழிக்கிறார். இதையறிந்து மருத்துவமனைக்கு வரும் பிரவீன் ஜெகதீஷை பார்த்து குழப்பமடைகிறான். இதே நேரம் ஜெகதீஷை முன்பு ஏமாற்றிய நிஷாவும் ஜெகதீஷிடம் வந்து சரணடைகிறாள். 
பிரச்சனை தீவிரமாகிறது.. கடைசியில் இந்தக் குழப்பம் எப்படி தெளிவாகிறது என்பதைத்தான் இடைவேளைக்கு பின்பான சுவாரஸ்யமான திரைக்கதை விளக்குகிறது.
இந்தப் படத்தின் இயக்குநரை எப்பாடுபட்டாலும் பாராட்டியே தீர வேண்டும். ஒரு குடும்பக் கதையாக இருந்தால்கூட சிக்கலான விவகாரங்களை திரைக்கதைக்குள் நம்பக்கூடிய வகையில் கொண்டு வர பெரிதும் மெனக்கெட வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் நான்கு விதமான திரைக்கதைகளுக்குள் கதையைக் கொண்டு போய் கச்சிதமாக ஒரு குழப்பம்கூட இல்லாமல் தெளிவாக கிளைமாக்ஸ்வரைக்கும் கொண்டு வந்து முடித்திருக்கிறார். ‘ஹாட்ஸ் அப்’ என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
ஹீரோயின்கள் சாந்தினி, நிஷா, இன்ஸ்பெக்டர் சரவண சுப்பையாவை, காமெடிக்கு நடித்த வேல்முருகனைத் தவிர மற்றவர்களெல்லாம் புதுமுகங்கள்தான். சொல்லிக் கொடுத்த்தை தங்களால் முடிந்தவரையிலும் செய்திருக்கிறார்கள். யாரும் சோடை போகவில்லை. நடிப்பென்று தனியாகத் தெரியாத அளவுக்கு மிக இயல்பாக, யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
முதற்பாதியில் ஜெகதீஷ் செய்கின்ற செயல்களெல்லாம் அவரை மோசமானவராகவே காட்டிவிடுகிறது. ஆனால் கிளைமாக்ஸில்தான் அந்த ரகசியம் உடைகிறது. உடைவதை இன்னமும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.
இன்னொரு பக்கம் விடுதிக்கு பாலியல் பெண்ணை வரவழைத்து நடக்கும் கூத்துக்கள் ஒரு பக்கம் உண்மைக்காகவும், இன்னொரு பக்கம் காமெடிக்காகவும் வைக்கப்பட்டிருப்பது இயக்குநரின் திறமையேயே காட்டுகிறது.
‘கோலிசோடா’ சாந்தினிக்கு ஹீரோயின் வேடம் பொருந்துகிறது. சற்று மெருகேறியிருக்கிறார். அதிகம் அலட்டலில்லாத நடிப்பு என்பதால் அவர் மீதான பரிதாபம் கடைசிவரையிலும் நீடிக்கிறது. ‘அந்த போனை எடுத்துத்தான் தொலைங்களேன்பா’ என்று ஒருவித பச்சாபதமும் கடைசி நேரத்தில் உண்டாகிவிட்டது.
நிஷா தன்னை உயிராய் காதலித்த காதலர்களுக்கு செய்த துரோகத்திற்காக அவருடைய வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த தண்டனையை இயக்குநர் காட்டியிருப்பது சாலப் பொருத்தம். அதைச் சொல்லாமல் சொல்லியிருப்பதும் நன்று. கடைசியிலும் நிஷா தன் கணவருக்காக ஜெகதீஷிடம் பேசுவதும், இதையும் சஸ்பென்ஸாக வைத்திருந்து கடைசியாக உடைப்பதும் ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை.
படத்துக்கு இன்னொரு பக்க பலம் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சரவண சுப்பையா. மற்ற சினிமா இன்ஸ்பெக்டர்கள்போல எதற்கெடுத்தாலும் அடித்துக் கொண்டும், உதைத்துக் கொண்டும் இல்லாமல் அந்த காக்கி டிரெஸ்ஸின் மிடுக்கு மாறாமல் நடித்திருக்கிறார்.
பாலியல் பெண்ணைத் தேடி இத்தனை பேர் ஸ்டேஷனுக்கு படையெடுத்து வந்ததைக் கண்டு நொந்து போய் கடைசியாக வந்தவனிடம், வசனமே பேசாமல் கை காட்டி ‘போய் பார்த்துக்க’ என்று வெறுப்போடு சொல்லும் அந்த ஒரு ஷாட்டில் மிகவும் பிடித்துப் போகிறது அவரை.. இயக்குநரும் கச்சிதமாக இவரைப் பயன்படுத்தியிருக்கிறார்.
இது போலவே கிளைமாக்ஸில் சரவண சுப்பையாதான் மொத்தப் படத்தையும் தாங்கியிருப்பதுபோல நடித்திருக்கிறார். ஒவ்வொருவர் தரப்பு நியாயத்தையும் கேட்டு சலித்துப் போய் யார்தான் உண்மையான காதலன் என்பது தெரியாமல் மாற்றி மாற்றி பேசுவதும், கேட்பதுமாக அந்தக் காட்சியையே சமாளித்திருக்கிறார். பாராட்டுக்கள்..!
இது போன்ற அசத்தல் திரைக்கதையுள்ள பட்ஜெட் படங்களில் ஒளிப்பதிவையோ, இசையையோ யாரும் முக்கிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. இசையமைப்பில் பாடல்கள் வசீகரிக்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் அடக்கமாக வாசித்து நம்மை காப்பாற்றியதற்கு ஒரு மிகப் பெரிய நன்றி.
ஒரு நல்ல கதையை நல்ல திரைக்கதைதான் காப்பாற்ற முடியும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம். படத்தின் ஷூட்டிங் நாட்களைவிடவும் டிஸ்கஷன் நாட்கள் அதிகமானால்தான் இனிமேல் இது போன்று படங்கள் தரமானதாக வரும் என்றே சொல்லலாம்.
இந்தப் படத்தின் திரைக்கதை மீடியம், சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஒரு மிகப் பெரிய உதாரணம். இயக்குநர் கிருஷ்ணன் மிக அபாரமான திரைமொழியாக இதனைக் கொணர்ந்திருக்கிறார். திரைக்கதையைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் அவசியம் தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்..!

சண்டி வீரன் - சினிமா விமர்சனம்

12-08-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



சிங்கப்பூரில் விசா மோசடியில் சிக்கி ‘ரோத்தர்’ எனப்படும் குண்டியில் அடி வாங்கி கெத்தாக சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் நெடுங்காடுக்குத் திரும்பி வருகிறார் ஹீரோ அதர்வா. வரும்போதே அவருக்குள் ஒரு கனவு. தனது பால்ய காலத்து நண்பி கயல் ஆன்ந்தியை பார்க்க வேண்டும் என்பது..!
சென்னையிலேயே தங்கியிருந்து மொட்டையடித்த தலையில் கொஞ்சம் முடி வளர்ந்த பின்பு சென்னை பர்மா பஜாரில் சிங்கப்பூர் பொருட்களை வாங்கிக் கொண்டு வெற்றிகரமாக ஊர் திரும்புகிறார். தனது ரகசிய சிநேகிதியை காண்கிறார். காதல் கொள்கிறார். மோதலும், ஊடலுமாக காதலும் வளர்கிறது.
அதே நேரம் பக்கத்து ஊரான வயல்பாடி தண்ணீர் பிரச்சினையில் சிக்கி சீரழிவது அதர்வாவின் கண்ணுக்குத் தெரிகிறது. நெடுங்காடுக்கும், வயல்பாடிக்கும் நடுவில் இருக்கும் ஒரு குளத்து தண்ணீரை வயல்பாடி மக்களுக்குத் தர மாட்டேன் என்று சொல்லி அடம் பிடிக்கிறார் ஊர் முக்கியஸ்தரான மில்லுகாரர் லால். இவரது மகள்தான் ஹீரோயின் ஆனந்தி என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா..?
ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பாக இரு ஊர்களுக்கும் தண்ணீர் பிரச்சினைக்காக நடந்த மோதலில்தான் ஹீரோ அதர்வாவின் தந்தை கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது மனைவி ராஜஸ்ரீயும் சிறிது மனநலம் குன்றிதான் இருக்கிறார். இவைகளும் சேர்ந்து அதர்வாவுக்குள் ஏதோ செய்கின்றன.
தனது மகளுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பியதற்காக அந்தப் பையனை பள்ளிக்கே சென்று அடித்துவிட்டு மகளின் டிசியை வாங்கிக் கொண்டு வந்து மகளின் படிப்பை பாதியில் நிறுத்திய புண்ணியவான் லால். மகளின் காதல் தெரிந்தால் சும்மா இருப்பாரா..? அதுவும் அவரது மில்லில் வேலை செய்யும் ஒரு பெண்ணின் மகன்தான் காதலன் என்றால் அவரது புஜங்கள் துடிக்காதா..? துடித்துவிட்டது.. அதர்வாவை கீழ்த்தரமாகத் திட்ட.. அவர் பதிலுக்கு லாலின் சட்டையைப் பிடிக்கிறார்.
இந்தக் கோபத்தில் இருக்கும் அதர்வாவுக்குள் வயல்பாடியில் இருக்கும் நண்பனின் வீட்டிற்குச் சென்று வந்தவுடன் ஒரு மாற்றம். அந்த ஊர் மக்களுக்கு ஏதாச்சும் செய்து உதவியாக வேண்டுமே என்று துடிக்கிறார். குளத்தை ஏலத்தில் எடுக்க லாலுக்கு எதிராக இவரும் களத்தில் குதிக்கிறார். ஏலத்தொகைதான் அதிகமானதே தவிர அதர்வாவால் முடியவில்லை.
அதே ஏல தினத்தில் அதர்வாவின் ஏற்பாட்டின்படி வயல்பாடி கிராமத்துக்காரர்கள் சிலர் அங்கே வந்து தங்களது கிராமத்தின் தேவைக்காக குளத்தை விட்டுக்கொடுக்கும்படி கேட்க.. அவர்களை அடித்து, அவ்மானப்படுத்தி அனுப்புகிறார்கள் லாலின் அடியாட்கள்.
இதற்கு பழிக்குப் பழி வாங்க வயல்பாடி மக்கள் துடிக்க.. அதே நேரம் தனது மகளின் காதலையும் ஒழித்துக் கட்ட திட்டம் தீட்டுகிறார் அப்பா லால். இது முடிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
‘சண்டியருக்கெல்லாம் சண்டியர்’ என்ற பொருள்படிந்த தலைப்புக்கு அதர்வா பொறுத்தமா இருப்பாரா என்றெல்லாம் யோசித்திருக்கலாம். தலைப்பு வேறாக வைத்திருக்கலாம். தண்ணீர் பிரச்சினைதான் படத்தின் மையக் கருத்து என்பதால் அதையொட்டி இருந்திருந்தால் சாலப் பொருத்தமாக இருந்திருக்கும்.
சிங்கப்பூர் கதை படத்துடன் ஒட்டவில்லை. ஏன் வைத்தார்கள் என்றும் தெரியவில்லை. ‘ரோத்தர்’ என்று பெயரை அடிக்கடி பயன்படுத்தியதால் சிங்கப்பூரிலும் படம் ரிலீஸாக முடியாமல் போய்விட்டது.
அதர்வாவின் கெட்டப்பையே மாற்றாமல் சண்டியராக காட்ட முனைந்திருக்கிறார்கள். கோபத்தில்தான் ஹீரோவின் அழகே தெரியும். இது அதர்வா போன்ற பால் வடியும் முகங்களுக்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை. சில காட்சிகளில் தனது உடல் மொழியால் சிரிக்க வைத்திருக்கிறார்.  இதையே தொடரலாமே..? எதுக்கு ஆக்சன் கிங் வேஷமெல்லாம்..?
சின்ன சிரிப்பழகியாக தெரிகிறது ஆனந்தியின் முகம். பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவில் கூடுதல் அழகு மிளிர வருகிறார். ஆனாலும் சின்னப் புள்ளை மாதிரியே இருப்பதால் கொஞ்சம் சதை பிடித்தால் ரசிகர்களுக்கும் பிடிக்கும்மா..! லால் தன் அட்டகாசத்தில் கொஞ்சம்தான் இதில் காட்டியிருக்கிறார். அதுவும் கிளைமாக்ஸில் மட்டும்..
அதர்வா-ஆனந்தி காதல் மேட்டர் பல இடங்களில் ஜிலுஜிலுப்பாக பயணம் செய்து ரசிக்க வைக்கிறது. “எத்தனை ரோத்தர் வாங்கின..?” என்று ஆனந்தி ரகளை செய்யும் காட்சியில் இருந்து அவரை காதலிப்பதுபோல் நடிப்பதுவரையிலும் எல்லாம் ஓகேதான்..
காதலர்கள் தப்பிப் போக நினைக்கும் அதே நாளில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க லால் திட்டமிடுவதும் சரியான திரைக்கதைதான். அந்த கடைசி அரை மணி நேர தவிப்புதான் படத்தை எப்படி முடிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டது. கடைசியில் ‘இதற்குத்தானா இப்படி..?’ என்கிற ஆயாசமும் வந்துவிட்டது..
திரைக்கதையில் இன்னமும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம். தண்ணீர் பிரச்சினை என்பதால் தமிழ்நாடு, இந்தியா என்று பேசியிருந்தாலே நம்பத் தகுந்தவிதமாக இருந்திருக்கும். அதுவும் அது ஊர்ப் பஞ்சாயத்துக்கான பொதுக் குளமாகத்தான் இருக்க முடியும். அதில் மீன் வளர்ப்பது என்பது பற்றியெல்லாம் சிந்திக்கவே முடியாது. மீன் வளர்க்கத்தான் குளம் எனில் வயல்பாடி மக்களுக்கு இப்போதைய மாநில அரசு ஏன் உதவி செய்யவில்லை என்கிற பிர்சிசனையும் எழுகிறது.
இது போன்ற சென்ஸிட்டிவ் அரசியல் கலந்த பிர்சிசனைகள் என்பதால்  அரசு நிர்வாகம், போலீஸ் இரண்டையும் சரியானவிதத்தில் பயன்படுத்திருக்கலாம். வெறும் கர்நாடகாவை மட்டும் சுட்டிக் காட்டி பேசிவிட்டால் இது நியாயமாகிவிடுமா..?
அதுவரையில் கொலை வெறியோடு வந்திருக்கும் ஆட்கள் திடீரென்று அதர்வாவின் வாய்ஸை கேட்டவுடன் மனம் மாறுவது திடீர் திருப்பமாக இருக்கிறது. அதேபோல் ஊர் பஞ்சாயத்து தலைவர் விபத்தில் சிக்கியவுடன் தண்ணீருக்கு தவித்த தருணத்தில் தானே மனம் மாறுவதை சபாஷ் என்று சொன்னாலும் அழுத்தமில்லாமல் இருந்த்து. குளத்து நீரில் கரண்ட் கம்பி இருப்பதால் அனைவரையும் முந்திக் கொண்டு தான் சென்று அவர்களைத் தப்பிக்க நினைத்தது ஓகேதான். ஆனால் இதை அவரே சொல்லியிருந்தால் அந்தக் கேரக்டருக்கு இன்னமும் உயர்வாக இருந்திருக்கம்.
‘களவாணி’ போலவே பக்கா கிராமத்து டிராமாவோடு படத்தை முடித்திருக்கிறார். எதிர்பாராத்து. ரத்தக் களறியை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தக்காளி சட்னியை நசுக்கிக் காட்டியிருக்கிறார். ஆனாலும் சுவைதான். லாலின் நடிப்பினால் அதையும் ரசிக்கத்தான் முடிந்தது..! இத்தனை சீக்கிரமாக ஒரு வில்லன் நல்ல மாமனாராக உருமாறுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதையும் சொல்லித்தான் தீர வேண்டும்.
படம் முழுவதுமே பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவில் சிலிர்ப்பாகவே இருக்கிறது. ‘அலுங்குற குலுங்குற’ பாடல் காட்சியில் ஒளிப்பதிவை பாராட்டுவதா..? இசையை பாராட்டுவதா..? என்று தெரியவில்லை. அசத்தல் பாடல்.. ‘தாய்ப்பாலும் தண்ணீரும்’ பாடல் மனதைப் பிசைகிறது. ‘மண்ணைப் போல தண்ணீருக்கும் எல்லக்கோட்டை போடுற.. வறுமைக்கோட்ட வளக்குற.. இயற்கையைத்தான் பூட்டி வச்சு பொம்மையாக்க பாக்குற..’ என்ற பாடல்  வரிகள் இப்போதைய தமிழகத்தின் யதார்த்த நிலைமையைச் சொல்கிறது.  பாடல் வரிகளும், குரலும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இசையமைப்பாளர் அருணகிரிக்கு பாராட்டுக்கள்.
படத்தில் சின்னச் சின்ன கேரக்டர்களில் மிக, மிக யதார்த்தமான கிராமியத்தனம் வாய்ந்த மக்களையே அதிகம்  நடிக்க வைத்திருக்கிறார். ஆனந்தி பம்ப் செட்டுக்கு குளிக்க வரும்போது உடன் வரும் அக்கா.. சைக்கிள் ஓட்டும் போட்டியில் இரண்டாவதாக்கிய அக்கா.. அதர்வாவின் வயதைத் தாண்டிய அவரது நண்பன்.. கிளைமாக்ஸில் அதர்வாவுக்காக பரிந்து பேசுபவர்கள் என்று பலரும் திரையுலகம் அதிகம் பார்த்திராத முகங்கள்.. மிக இயல்பான நடிப்பைத் தொட்டிருக்கிறார்கள். இவர்களால் ஒரு கிராமிய படத்தை பார்க்கின்றோம் என்ற உணர்வும் நமக்கு வருகிறது. இயக்குநர் சற்குணத்திற்கு ஒரு ஷொட்டு..!
தண்ணீர் பிரச்சினைக்காக தமிழ்ச் சினிமாவில் இடம் பிடித்த படங்களின் பட்டியலில் இந்தப் படமும் இடம் பிடித்துவிட்டது..! 

வந்தா மல - சினிமா விமர்சனம்

12-08-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இயக்குநர் இகோருக்கு இருக்கும் தைரியத்தை நினைத்தால் ஆச்சரியமாக்த்தான் இருக்கிறது. ‘பாபநாசம்’ படத்தில் பேசப்பட்ட அந்த நெல்லை தமிழை தமிழகத்து மக்கள் புரிந்து கொள்வார்களா என்று கமல்ஹாசனையும் தாண்டி பல முறை யோசித்துதான் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால் இகோரோ ஒரே முடிவோடு சென்னை தமிழ் பாஷையை படம் முழுவதிலும் வைத்து ஒரு திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.
அதிலும் இந்தப் படம் முழுக்க முழுக்க மேல்தட்டு மக்களை கவருகிறதோ இல்லையோ.. பி அண்ட் சி மக்களை நிச்சயம் கவரும். அவர்கள் பேசும் பாஷை, பேச்சு, உடல் மொழி, கலாச்சாரம்.. பழக்க வழக்கம் என்று அனைத்தையும் இதில் கொணர்ந்திருக்கிறார்.

நான்கு செயின் திருடர்களைப் பற்றிய கதைதான் இது.  வாசலில் கோலம் போடும் பெண்களிலிருந்து ரோட்டில் நடந்து செல்லும் பெண்களின் கழுத்திலிருக்கும் செயினை நொடியில் அத்துக் கொண்டு செல்லும் இந்த வாலிபர்களுக்கு அதைப் பற்றிய குற்றவுணர்ச்சி கடைசிவரையிலும் இல்லை. ஆனால் இதையே கொண்டாடுகிறார்கள். அதுதான் வாழ்க்கை என்கிறார்கள்.
இவர்களில் ஒருவருக்கு ஹீரோயின் வசந்தா மீது காதல். அரவை மில்லில் வேலை செய்யும் அவளுக்கும் இவன் மீது கொள்ளை காதல். பார்த்தவுடன் கிஸ்ஸடிக்கத் துடிக்கும் அளவுக்கு வெளிப்படையான பெண். பேச்சு லொடலொட.. ஆனால் நேர்மை வேண்டும் என்கிறாள். காதலனை திருடப் போகாதே என்று தடுக்கிறாள். ஆனால் முடியவில்லை.
இவர்கள் கடைசியாக திருடிய செயினை வசந்தாவிடம் தனது காதல் பரிசாக்க் கொடுக்கிறான் காதலன். அவள் அதை ஏற்க மறுத்து தூக்கியெறிகிறாள். அந்த வட்ட வடிவ பெரிய டாலர் செயினுக்குள் இருக்கும் ஒரு துண்டு பேப்பரில் எழுதப்பட்டிருக்கும் செய்திதான் இடைவேளைக்கு பின்பான கதையை நகர்த்துகிறது.
தன்னைக் காப்பாற்றினால் 2 கோடி கிடைக்கும் என்று எழுதப்பட்டிருப்பதை பார்த்து காசுக்கு ஆசைப்படுகிறார்கள் நண்பர்கள் நால்வரும். இதனை வைத்து அந்த கோடிகளை சம்பாதிக்க நினைக்கிறார்கள். முடிந்ததா இல்லையா என்பதுதான் மீதமான கதை.
படம் முழுவதிலும் இருக்கும் சென்னை பாஷையே படத்திற்கு பலமாகவும் இருக்கிறது. இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கிறது. சில நேரங்களில் உற்று கவனிக்கவில்லையெனில் வசனம் புரியாமல் போகும் அபாயமும் இருக்கிறது.
படத்தில் அனைவரையும்விடவும் அதிகமாக ஸ்கோர் செய்திருப்பது ஹீரோயின் பிரியங்காதான். பக்கா தமிழச்சியான இவர் இதுவரையிலும் சில பி அண்ட் சி படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் ‘கங்காரு’ படம் மட்டுமே இதுவரையிலும் குறிப்பிட்டுச் சொல்லும் படமாக இருந்தது. இப்போது இந்தப் படத்தைச் உறுதியுடன் சொல்லிவிடலாம்.
காதலனுக்கு முத்தம் கொடுப்பதற்காக அத்தனை நீள வசனத்தையும் அந்த அழகு கொஞ்சல், வழிசலுடன் பேசி முடித்திருக்கும் அந்த நீளமான காட்சியை வடிவமைத்ததற்காக இயக்குநருக்கு ஒரு ஷொட்டு. இதில் ஒரு சிறிய தவறுகூட இல்லாமல் நடித்திருக்கும் அந்த்த் திரைக் காதலர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.
அதேபோல் திருட்டு செயினை வாங்கி தன் கழுத்தில் போட்டுவிட்ட குற்றத்திற்காக காதலனை விரட்டிவிரட்டி அடித்துவிட்டு “என் உண்மையான காதலை புரிஞ்சுக்க மாட்டேங்கிறியேடா..?” என்று புலம்பும்போது நிஜமாகவே உச்சுக் கொட்ட வைக்கிறார் ஹீரோயின்.
நடுஇரவில் காதலனை தனியே அழைத்துச் சென்று “டிவில மிட் நைட் மசாலான்னு பாட்டெல்லாம் போட்டு கொல்றாங்கடா.. என்னை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ…” என்று கொஞ்சலுடன் கெஞ்சுகின்ற காட்சிகளெல்லாம் ரசிக்க வைக்கிறது. எம்புட்டு தைரியமான பொண்ணு என்பதைவிடவும் எத்தனை தைரியமான திரைக்கதை என்று பாராட்டவும் சொல்கிறது. காதலனுக்காக தன் உடலில் டாட்டூவை குக்கித் கொண்டு ஹீரோயின் அதைக் காட்டும் அழகும் காதலுக்கு சுவையூட்டுகிறது.
இந்த நால்வரின் காட்பாதர் தாத்தாவான பழைய தாதா கேரக்டரில் பழம்பெரும் கதாசிரியர் வியட்நாம் வீடு சுந்தரம். இதில் நடித்து இறந்தும் போகிறார். இவர் சொல்லும் உதயராஜின் பிளாஷ்பேக் கதை, மெயின் கதைக்கு உடன்படாததால் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனாலும் சிரிப்பலை தியேட்டரில் கிடைக்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் மகாநதி சங்கரின் கேரக்டர் ஸ்கெட்ச் நகைச்சுவை கலந்த கேரக்டராக போய்விட்டதால் படத்தின் சீரியஸ்னெஸ்ஸே இல்லாமல் முற்றிலும் காமெடி படமாகிவிட்டது. இப்படியொரு ஏரியாவுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் வந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் டிஜிபியாக இகோர் மாதிரியானவர்கள் இருக்க வேண்டுமே..?
படத்தில் பல சுவாரஸ்ய திரைக்கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளால்தான் படத்தை இறுதிவரையிலும் பார்க்க முடிந்தது. திருடர்கள் நால்வருக்கும் போலீஸுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள்.. இன்ஸ்பெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ. என்று அனைவரையும் இழுத்து வைத்து போஸ்டர் அடித்து ஒட்டுவது.. தாத்தா சாவின்போது பெண்களே குத்தாட்டம் போடுவது.. அதைச் சாக்காக வைத்து ஹீரோ ஹீரோயினிடம் ‘பழம்’விட பார்ப்பது.. செயினை திருடிய பெண்ணைப் பிடிக்க வேண்டி தங்களது பழைய நண்பன் பிரகாஷை தேடிப் போய் கடைசியில் அவர் லலிதாவாக மாறியிருப்பது. இதைத் தொடர்ந்து இந்த லலிதா துணையுடன் கிளைமாக்ஸ்வரையிலும் தாக்குப் பிடித்துச் செல்வது. கடைசியில் பிரச்சனைக்கை இழுத்த ராணியே டபுள் ஆக்ட்டில் இருப்பது… என்றெல்லாம் சில, பல சுவாரஸ்யங்களே படத்தை இழுத்துச் செல்கின்றன.
கிளைமாக்ஸில் வரும் அந்த தேச துரோகச் செயல் கொஞ்சம் குறைவான தயாரிப்பில் படம் பிடிக்கப்பட்டிருப்பதால் மனதில் நிற்கவில்லை. எப்படியிருந்தாலும் அந்தத் திருட்டுப் பணம் இந்தத் திருடர்களிடமே கடைசியில் போய்ச் சேர்ந்திருப்பதும், கடைசிவரையிலும் அவர்கள் திருந்தியபாடில்லை என்பதும் நெருடலான ஒரு விஷயம்தான்.
மாரியின் ஒளிப்பதிவில் குறைவில்லை. பாடல் காட்சிகளில் ரம்மியமாக சுழன்றிருக்கிறது கேமிரா. ‘உன்னாண்ட காதல்னா’ பாடலும், பாடலை படமாக்கியவிதமும் அருமை. அற்புதம் என்றே சொல்ல வேண்டும். அந்த லோக்கல் பாஷையை பயன்படுத்தி பாடலை எழுதிய இயக்குநர் இகோரே பாடியிருப்பதும் பாராட்டுக்குரியது. இசையமைப்பாளர் தேவாவின் குரலில் ‘ஆன்னா ஆவண்ணா’ பாடலும் இன்னொரு பளிச் ரகம்.  இசையமைப்பாளர் சாம்ராஜுக்கு நமது வாழ்த்துகள்.
அதிகப்படியான காட்சிகளும், மெயின் கதையைவிட்டு விலகிப் போகும் சில காட்சிகளும்.. அடுக்கடுக்கான தொடர்ச்சியான வசனங்களும் படத்திற்கு சற்று வேகத்தடையைக் கொடுத்தாலும் பிற்பாதியில் படம் ஓடும் ஓட்டத்தில் அதுவும் காணாமல் போகிறது..!
‘வந்தா மல’ என்று சொல்லித்தான் இழுத்திருக்கிறார். ‘மல’ கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறோம்..!

புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன..? முழுமையான கட்டுரை..!

07-07-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இனிமேல் விஜய்யின் திரைப்பட விழாக்களை இதுபோல சென்னையைவிட்டு தள்ளி மாமல்லபுரத்தையும் தாண்டித்தான் வைக்க வேண்டும். இங்கே வைத்தும் கூட்டத்தை சமாளிக்கத்தான் முடியவில்லை.

சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் ‘புலி’யின் தீவிர ரசிகர்கள் தங்களது ரசிகர் மன்றத்தின் கொடியை பைக்கில் கட்டிக் கொண்டு மகாபலிபுரத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

சென்னையில் இருந்து பழைய ஓ.எம்.ஆர். சாலையில் கொட்டிவாக்கத்தில் துவங்கி மாமல்லபுரத்தில் இருக்கும் அந்த ரிசார்ட்வரையிலும் சாலையில் இடதுபுறத்தில் நூறு அடிக்கு ஒரு கட் அவுட் வைத்து அசத்தியிருந்தார்கள் விஜய் ரசிகர்கள்.

நிகழ்ச்சி எங்கே நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள யாரிடத்திலும் கேட்கவே தேவையில்லை என்பதுபோல இந்த கட்அவுட்டுகளை பார்த்தபடியே சென்றாலே போதும் என்று நினைத்து செயல்படுத்தியிருந்தார்கள்.

ரிசார்ட் வாசலிலும் பெரும் கூட்டம். அத்தனை ரசிகர்கள் கைகளிலும் ரசிகர் மன்றத்தின் விஜய்யின் முகம் தாங்கிய கொடிகள். எப்பாடுபட்டாவது உள்ளே செல்ல வேண்டும் என்று துடித்தபடி அழைப்பிதழ் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தார்கள் சிலர். அழைப்பிதழோடு வந்து உள்ளே சென்றவர்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

காவல்துறையினரோடு தனியார் செக்யூரிட்டி அலுவலர்களும், ரிசார்ட்டில் பணிபுரிபவர்களும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தும் ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அரங்கத்திற்கு ரசிகர்கள் வருவதற்கு முன்பாகவே விஜய் வந்துவிட்டார். வாசலின் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தார். முக்கிய பிரமுகர்கள் வரும்போது மட்டும் வாசல் பகுதிக்கு வந்து அவர்களை வரவேற்று உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்.

சென்னை மாவட்டத்தின் முக்கிய விஜய் ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்த்தால் அவர்கள் அனைவரும் உள்ளே அமர்ந்திருந்தனர். ஆனால் அவர்களது வாயும், கையும் சும்மா இல்லை. மேடையில் இருந்த ஸ்கிரீனில் ‘புலி’யின் ஸ்டில்கள் வரிசையாக ஓடிக் கொண்டிருக்க.. அதில் விஜய்யின் முகம் வரும்போதெல்லாம் கைதட்டல்களும், விசில்களும் தூள் பறந்தன.

அதேபோல் விருந்தினர்கள் ஒவ்வொருவராக வரும்போதும் இதே கதிதான். பின் வரிசையில் அமர்ந்திருந்தவர்களெல்லாம் முன் வரிசைக்கு ஓடி வந்து நின்றபடியே வந்தவர்களைப் பார்த்துவிட்டு பின்பு திரும்பிச் சென்றார்கள். ரசிகர்களின் ஆர்வக் கோளாறை யார் தவறென்று சொல்ல முடியும்..?



சிறப்பு விருந்தினர்களுக்கு தனித்தனி சோபாக்கள் போட்டு கவுரவப்படுத்தியிருந்தார்கள். இதில் நடு நாயகமாக விஜய் இருப்பது போல செட்டப் செய்திருந்தார்கள்.

மு்ககிய பிரமுகர்கள் வரும்போது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 குதிரைகளில் போர் வீரர்கள் அமர்ந்திருந்தார்கள். காரில் இறங்கி அரங்கத்தின் வாசல்வரைக்கும் வருவதற்காக சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கம்பளத்தின் இரு புறமும் கூர் தீட்டிய வேல்கம்புகளுடன் போர் வீரர்கள் தோற்றத்தில் சண்டை நடிகர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். இவர்களது வேல்கள் ஒன்றுடன் ஒன்று மோதலுடன் வைக்கப்பட்டிருந்தது. பிரமுகர்கள் இவர்களது அருகில் வரும்போதுதான் அவர்களது வேல்கம்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. பார்ப்பதற்கு ராஜ தர்பாருக்கு வருகின்ற உணர்வைக் கொடுத்தது.

6.30 மணிக்கு விஜய் அரங்கத்தின் உள்ளே நுழைய, காது கிழியும் அளவுக்கு கைதட்டல்கள்.. அடுத்த 2 நிமிடங்களுக்கு அது நீடித்த்து.

இதன் பின்பே ஹன்ஸிகா தனது தாயாருடன் உள்ளே நுழைந்தார். அடுத்த அரை மணி நேரம் கழித்து ஸ்ருதிகமல்ஹாசன் வந்தார். சரியாக 8.20 மணிக்குத்தான் ஸ்ரீதேவி வந்து சேர்ந்தார். அதுவரையிலும் ஸ்ரீதேவி சென்னையில் இருந்து வந்து கொண்டிருப்பதையே ஒரு ஸ்பெஷல் செய்தியாக மேடையில் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.

நடிகர் விஜய், நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நந்திதா, ஈடன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இயக்குனர் சிம்பு தேவன் உள்ளிட்ட படக் குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், டி.ராஜேந்தர், தரணி, எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் ஜீவா, தம்பி ராமையா, விஜய் சேதுபதி, இமான் அண்ணாச்சி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை அஞ்சனாவும், பிரேமும் தொகுத்து வழங்கினார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்தினை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாரும், ஷிபு தமீஷும் பேசினார்கள். பி.டி.செல்வகுமார் பேசும்போது “ஒரு சாதாரண பி.ஆர்.ஓ.வாக இருக்கும் என்னை தயாரிப்பாளராக உயர்த்தியிருக்கும் விஜய்யை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. ஒரு நாள் என்னை அழைத்து ‘அடுத்த படத்தோட கதை ரெடியாயிருச்சு.. சிம்புதேவன் இயக்கப் போறார். நீங்கதான் தயாரிக்கிறீங்க..’ என்று மிக எளிமையாகச் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. நான் ஆரம்பத்தில் பத்திரிகையாளராக இருந்து எஸ்.ஏ.சி. ஸார்கிட்ட உதவியாளரா வேலை பார்த்து.. இப்போ விஜய் ஸாருக்கும் பி.ஆர்.ஓ.வாக இருக்குறதெல்லாம் நான் செய்த பாக்கியம் என்றே நினைக்கிறேன். தன்னிடம் வேலை பார்க்கும் பி.ஆர்.ஓ.வை தயாரிப்பாளராக்கிய ஒரேயொரு ஹீரோ தமிழ்ச் சினிமாவில் விஜய் ஸார் மட்டும்தான்…” என்று உருகினார்.

பின்பு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுவரையிலும் விஜய் நடித்த படங்களில் இடம் பெற்ற பாடல்களை கொண்ட நடனக் காட்சி தொடர்ந்தது.

அடுத்து ‘புலி’ படத்தின் டிரெயிலரை இங்கேயும் வெளியிட்டார்கள். இந்த டிரெயிலரில் சில புதிய காட்சிகளையும் இணைத்திருந்தார்கள். ஹீரோயின்களைவிடவும் விஜய் அழகாகத் தெரிந்ததுதான் இதன் சிறப்பு.

அடுத்து மேடையேறிய இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தனக்கும் விஜய்க்குமான உறவு பற்றி சிலாகித்து பேசினார். “குஷி’ படம் எப்படி விஜய்யின் கேரியரில் முக்கியமான படமோ அதேபோல் எனக்கும் அதுதான் ஒரு அடையாளம். அதை வைத்துதான் அடுத்து நான் என் இயக்குநர் பயணத்தைத் தொடர்ந்தேன். அதுக்கு வழிவகை செய்தவர் விஜய்தான். அவருக்கு என் நன்றி. இந்தப் புலிக்கு அடைமொழியெல்லாம் தேவையில்லை. இப்படி புலி, அப்படி புலியெல்லாம் இது இல்லை. இது புலி அவ்வளவுதான். தமிழ்த் திரையுலகில் எனக்குத் தெரிந்து நன்றி என்ற வார்த்தையின் மறுபெயர் விஜய் மட்டும்தான்.” என்றார் நெகிழ்ச்சியோடு. ‘குஷி-2 என்னாச்சு?’ என்று ரசிகர்களே கோரஸ் குரல் எழுப்ப.. சட்டென்று குஷியான இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, “வரும் வாய்ப்புண்டு” என்று ஆங்கிலத்தில் சொல்ல.. இதற்கு விஜய் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் சிரித்துக் கொண்டார்.

தொடர்ந்து படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை வெளியிட்டனர். இந்தப் பாடலுக்கு நடன இயக்குநர் ஸ்ரீதரின் குழுவினர் நடனமாடினார்கள். இதில் சிறுவர், சிறுமியர்களும் இணைந்திருந்தனர்.

அடுத்து இயக்குநர்கள் பேரரசுவும், தரணியும் பேசினார்கள். பேரரசு தன் பேச்சில், “வாலு’ படத்திற்கு உதவியவர் இந்த ‘புலி’தானாம். இன்றைக்கு்ததான் எனக்கு இந்த விஷயம் தெரிந்தது. ‘புலி’ வாலைப் பிடித்த கதைதான். ஆனால் இந்தப் ‘புலி’ வாலுக்கு மட்டுமில்லை ‘தலை’க்கும் நல்லதுதான் நினைக்கும். அப்துல் கலாம் மாதிரி இளைய தளபதி விஜய்க்கு எந்தப் பதவியும் தேவையில்லை. பதவியில்லாமலேயே பல கோடி இளைஞர்களை வழி நடத்துவார் இந்தப் புலி. .” என்றார். உடனேயே ‘தலைவா வா’ என்ற கூக்குரல்கள் அரங்கமெங்கும் ஒலித்தன.

தரணி பேசும்போது, ‘கில்லி’ ஷூட்டிங்கின்போது விஜய் நடந்து கொண்டதையும், அந்தப் படம் இன்றுவரையிலும் சூப்பர் ஹிட்டடித்து இருப்பதையும் சொன்னார். பேச்சுக்கு பேச்சு விஜய்யை ‘நண்பா.. நண்பா’ என்றே அழைத்து  விஜய்க்கு வாழ்த்து சொன்னார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “விஜய்யின் கேரியர் இப்படி உச்சக்கட்டத்திற்கு சென்றதற்கு காரணம் அவருடைய அயராத உழைப்புதான்…” என்று பாராட்டினார்.

அடுத்து இந்த ‘புலி’ படத்தில் விஜய்யும், ஸ்ருதிஹாசனும் இணைந்து பாடியிருக்கும் ‘ஏண்டி ஏண்டி’ பாடலுக்கு நடனக் குழுவினர் நடனமாடினார்கள்.

ஹன்ஸிகா பேச வரும்போது அவரைப் பற்றிய ஒரு வீடியோ படத்தினை வெளியிட்டார்கள். ஹன்ஸிகா மேடையேறி சிரித்தாலே போதும். பேசவே தேவையில்லை என்று சொல்லலாம்.  விஜய்யுடன் நடித்ததில் தனக்கு மிகவும் பெருமையென்றும், இத்தனை ரசிகர்கள் மத்தியில் தான் நிற்பதுகூட தனக்கு பெருமைதான் என்றும் சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

அடுத்து மேடையேறிய இமான் அண்ணாச்சி இந்தப் படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றியினைச் சொல்லி ஒரு சின்ன நிகழ்ச்சியை நடத்தினார்.

4 இளைஞர்களை மேடைக்கு அழைத்து அவர்களிடத்தில் விஜய் படத்தின் பாடல்களை பாடச் சொன்னார். தப்பில்லாமல் பாடினார்கள் அந்த ரசிகர்கள். அடுத்து அவர்களிடம் ‘தமிழ்த்தாய் வாழ்த்தினை’ 4 வரிகள் பாடச் சொன்னார். 2 பேர் சரியாகப் பாடினார்கள். 2 பேர் சொதப்பினார்கள். “இப்படியிருந்தா நாடு எப்படிய்யா உருப்படும்..? இதையும் கத்துக்கணும்ல்ல..” என்று அட்வைஸ் செய்து கச்சேரியை முடித்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, விஜய் ஆரம்பக் காலத்தில் எத்தனை கஷ்டப்பட்டு வளர்ந்தார் என்பதையும், விஜய்யின் கடுமையான உழைப்பு மட்டுமே அவரை இந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்றும்.. விஜய் வாசலில் நின்று ‘வாங்கப்பா’ என்று தன்னை வரவேற்றதை நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு கண் கலங்கினார்.

பி.டி.செல்வகுமார் தன்னிடம் உதவி இயக்குநராக வேலை பார்க்க வந்து பின்பு உதவியாளராகி, பி.ஆர்.ஓ.வாகி இன்னமும் அதே வேலையில் தொடர்வதை குறிப்பிட்டார் எஸ்.ஏ.சி. “பி.டி.செல்வகுமார் இப்போது தயாரிப்பாளராகிவிட்டார். இயக்குநராகிவிட்டார். இப்போதும் என்னிடம் வேலை பார்க்கிறார். ஆனால் நான் ரொம்ப நாளைக்கு முன்பாகவே அவரை போகச் சொன்னேன். ‘நான் வேற பி.ஆர்.ஓ.வை வைச்சுக்கிறேன். நீங்க இப்போ இயக்குநராயிட்டீங்க. நல்லாயிருக்காது…’ என்றெல்லாம் பேசிப் பார்த்தேன். செல்வக்குமார் அதை மறுத்து இன்றுவரையிலும் பிடிவாதமாக என்னிடத்திலும், தம்பி விஜய்யிடத்திலும் தொடர்ந்து வேலை செய்து வருகிறார். அதற்கான நன்றியாகத்தான் தம்பி விஜய் இந்தப் படத்தை தயாரிக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கியிருக்கிறார்..” என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

நடிகர் தம்பி ராமையா பேசும்போது முதலில் ‘புலி’ படத்தைப் பற்றி விரிவாகவே பேசினார். “இந்தப் படம் முன் ஜென்மக் கதை அல்ல. ராஜா ராணி கதையும் இல்லை. டைம் மிஷின் கதையும் இல்லை. இதையெல்லாம் தாண்டிய இன்னொரு டைப் கதை. சூப்பர்மேன் கதை. இயக்குநர் சிம்புதேவன் அற்புதமாக இந்தக் கதையை எழுதியிருக்கிறார். இதில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தமைக்காக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார்.

அடுத்த டாப்பிக்காக இவர் பேசியதுதான் ஹைலைட். இப்போதைய தமிழகத்து இளைஞர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பது பற்றி தனது கவலையையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார். “சேகுவேராவை கொண்டாடும் நாம் திருப்பூர் குமரனையும், கட்டபொம்மனையும் பற்றி பேச மறுக்கிறோம்..” என்ற ரீதியில் பல உதாரணங்களைச் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார்.  

இசையமைப்பாளர் டி.எஸ்.பி. என்னும் தேவிஸ்ரீபிரசாத்தை பற்றி ஒரு அறிமுக வீடியோவை திரையிட்டார்கள். அதில் தெறித்த இசையை மொத்தக் கூட்டமும் ரசித்துக் கேட்டது. அது முடிந்தவுடன் விஜய் அதை திரும்பவும் திரையிடும்படி சைகை காட்ட.. அவருக்காகவே திரும்பவும் காண்பிக்கப்பட்டது.

பின்பு இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தை மேடைக்கு அழைத்தார்கள். அவர் மேடையேறி மைக்கை பிடித்து பேசத் துவங்குவதற்குள் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டு, ரசிகர்களின் பலத்த கரகோஷத்தோடு அண்ணன் டி.ராஜேந்தர் மேடையேறினார்.

அடுத்த 22 நிமிடங்களுக்கு அந்த அரங்கமே அதிர்ந்த்து. தன்னுடைய தமிழ்ப் புலமையில் ‘புலி’யை அக்குவேறு, ஆணிவேறாக அலசி ஆராய்ந்து புகழ்ந்து தள்ளிவிட்டார். முதல்  பொழிவுரையைக் கேட்டவுடனேயே தாங்க முடியாத பாராட்டில் விஜய்யே எழுந்து நின்று டி.ஆருக்கு வணக்கம் போட்டு உட்கார்ந்தார்.

ஆனாலும் ரசிகர்களின் அன்புக் கட்டளைக்கிணங்க மேலும் தொடர்ந்தார் டி.ஆர். இந்த முறை எதுகை, மோனையுடன் கூடிய அடுக்கு மொழியில் ‘புலி’ என்ற டைட்டிலை வைத்தே டி.ஆர். தமிழை அள்ளிவிட.. தாங்க முடியாத அளவுக்கு கூட்டம் ஆர்ப்பரித்த்து.

டி.ராஜேந்தர் தன் பேச்சில், “நான் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். ஒரு நடிகன் வளர்ந்துவிட்ட பிறகு தன்னடக்கத்துடன் இருப்பது ரொம்ப கஷ்டம். எஸ்.ஏ.சி அவர்களும் நானும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். நான் என்னை கண்ணாடியில் பார்க்கும்போது அவரை பார்ப்பது போன்றே நினைத்துக் கொள்வேன். அவர் ஒரு நல்ல மனிதர். நல்ல தந்தை, நல்ல இயக்குநர் அவருடைய மகன் விஜய் அவர்களை எப்படி அவர் படிப்படியாக உயர்த்தி கொண்டு வந்தாரோ அதைப் பார்த்து நான் பெருமைபட்டவன். அது ஏன் என்று கேட்டால், அவரை போலவே என் மகன் சிம்புவையும் உருவாக்கி வருகிறேன் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.

எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும், அது ஏன் என்று எனக்கு தெரியாது. எஸ்.ஏ.சி அவர்களும் அவருடைய மனைவி ஷோபா அவர்களும் நானும் மலேசியாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அப்போது அவர்களிடையே நான் பழகும்போது அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே நான் பழகிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் பல விஷயங்களை பேசினோம். 

அதையெல்லாம் அவர்கள் விஜய்யிடம் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இன்றைக்கு தம்பி சிம்புவின் படத்திற்கு ஒரு தடை என்றவுடன் ஓடோடி வந்த விஜய்.. இன்னொரு ஹீரோவின் படத்திற்கு வேறு எந்த ஹீரோவும் செய்யாத ஒரு செயலாக அந்தப் படம் திரைக்கு வருவதற்கான உத்தரவாதத்தையும், வழிகளையும் செய்து கொடுத்தார். அதை சிம்புவும், நானும் நிச்சயமாக மறக்கவே மாட்டோம்.
விஜய் இவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்துவிட்ட பிறகும் அவர் என்னுடைய ரசிகர் என்று கேள்விப்பட்டபோது எனக்கு சந்தோஷமாக இருந்தது. தலைவா படப்பிரச்சனையின்போது சிம்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘விஜய் அண்ணா நான் உங்களுக்கு பின்னே துணையாக இருப்பேன்’ என்று பல வருடங்களுக்கு முன் ஒரே ஒரு ட்வீட் செய்திருந்தான், அதை மனதில் வைத்துக் கொண்டு தற்போது சிம்புவின் வாலு படப் பிரச்சனையை தீர்த்து வைத்திருக்கிறார் விஜய். சிம்பு இன்னொருவரின் ரசிகனாக இருக்கலாம். இருந்தாலும் விஜய்க்கு, சிம்பு நண்பன் மட்டுமல்ல தம்பியும்கூட..” என்றார்.

டிஆரின் பேச்சில், “என் மகன் வேறொருவருக்கு ரசிகனாக இருந்தபோதிலும்..” என்ற வார்த்தையை உச்சரித்தவுடன் பல ரசிகர்கள் எழுந்து முன்னால் ஓடி வந்து கத்திக் குவித்தார்கள்.

இதன் பின்பும் டிஆரின் அடுக்கு மொழி பாராட்டு தொடர… இந்த தமிழ்த் தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடியாமல் விஜய்யே எழுந்து மேடைக்கு ஓடிப் போய் டி.ஆரைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். அப்படியும்விடாமல் தனது தமிழ்ப் புலமையைக் காட்டிவிட்டுத்தான் ஓய்ந்தார் டி.ஆர்.  அங்கேயே டி.ராஜேந்தருக்கு சால்வை போர்த்தி வணங்கி கெளரவித்தார் விஜய். ஒரு புயலடித்து ஓய்ந்ததுபோல இருந்தது டிஆர் மேடையைவிட்டு இறங்கியபோது..!

தொடர்ந்து மேடையேறிய நடிகர் விஜய் சேதுபதி, “டி.ஆரின் பேசுனதுக்கப்புறம் நானெல்லாம் என்ன பேசுறது..? விஜய்யின் இந்த ‘புலி’ படத்தை அவரது ரசிகர்களை போலவே நானும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்..” என்று சுருக்கமாகச் சொல்லி முடித்துக் கொண்டார்.

அடுத்து மேடையேறிய நடிகை ஸ்ருதிஹாசன் ஏனோ வந்ததில் இருந்தே முக வாட்டமாகவே இருந்தார். மேடையிலும் அப்படியேதான் காணப்பட்டார். “விஜய் ஸார் ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுவார்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் நல்லா பாடுவாருன்னு தெரியாது. இந்தப் படத்துல அவர்கூட நான் பாடியது எனக்கு சந்தோஷம்..” என்று பட்டென்று முடித்துக் கொண்டார்.

அடுத்து நடிகர் ஜீவா மேடைக்கு வந்தவர். வந்தவேகத்தில் ‘மச்சி குவார்ட்டர் சொல்லு’ என்று ரசிகர்கள் குரல் எழுப்ப.. “ஐயையோ.. வேண்டாம்பா.. எங்க போனாலும் அதையே பேசுறாங்க. இனிமே அதைப் பத்தியே பேச மாட்டேன்..” என்று சொல்லிவிட்டு ‘புலி’ டாப்பிக்கிற்கு வந்தார்.

‘நண்பன்’ பட நேரத்தில் விஜய் தன்னிடம் நெருக்கமாக ஈகோ இல்லாமல் பழகியதை குறிப்பிட்ட ஜீவா இப்போதும் விஜய்க்கு தான் அன்புத் தம்பியாக இருப்பதாக சொன்னார். கடைசியாக ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இங்க சினிமாவுலகத்துல எல்லாரும் அண்ணன், தம்பியாகத்தான் பழகிட்டிருக்கோம். நீங்க இணையத்துல எந்த வகையிலும் சண்டை போட்டுக்காதீங்க.. அது நல்லாயில்ல..” என்று அட்வைஸ் செய்துவிட்டுப் போனார்.

பலத்த எதிர்பார்ப்போடு மேடைக்கு வந்த ஸ்ரீதேவி ரொம்பவே ஏமாற்றத்தை கொடுத்தார். “நான் ரொம்ப வருஷம் கழிச்சு தமிழ்ல நடிச்சிருக்கேன். தமிழில் திரும்ப வரும்போது ஒரு நல்ல, பெரிய படத்துல இருக்கணும்னு நினைச்சேன். அதுக்கு இந்தப் படம் நல்ல வாய்ப்பா கிடைச்சது. நான்தான் நடிக்கணும்னு நினைச்ச இயக்குநருக்கு என் நன்றி. இந்தப் படத்தின் ஷீட்டிங்கின்போது விஜய்யின் எளிமையைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன்.. படம் நிச்சயம் வெற்றி பெறும்..” என்று மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

தன் பேச்சை முடித்த கையோடு மைக்கை வாங்குவதற்காக அருகில் வந்த மேடை உதவியாளினியிடம் ஏதோ சொன்னார் ஸ்ரீதேவி. உடனேயே அந்தப் பெண்ணும் ஸ்ரீதேவியுடனேயே மேடையில் இருந்து கீழேயிறங்க.. அந்தப் பெண்ணின் கையைப் பிடித்தபடியே பக்குவமாக படிகளில் பார்த்துப் பார்த்து கால் வைத்து இறங்கினார் ஸ்ரீதேவி. எல்லாம் ஒரு பயம்தான்..!

கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தை வாயார வாழ்த்தினார். “தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எல்.ஜி.கிட்டப்பா, கே.ஆர்.ராமசாமி போன்றோர்தான் இதுவரையில் தாங்கள் நடித்த பாடல் காட்சிகளுக்கு தாங்களே பாடியிருக்கிறார்கள். அந்த வரிசையில் இன்றைக்கு ‘இளைய தளபதி’ விஜய்யும் தன்னுடைய பாடல் காட்சிக்கு தானே பாடியிருக்கிறார். இது தமிழ்ச் சினிமாவில் ஒரு சாதனை..” என்று பாராட்டினார்.

அன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் மிக மிக உற்சாகத்துடன் மேடையேறியவர் படத்தின் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடினார்.

தன் பேச்சின்போது, “திடீரென்று என்னை சந்திக்க வந்த இயக்குநர் சிம்புதேவன் ‘ஒரு படத்துக்கு நீங்கதான் மியூசிக் போடணும்’ என்று சொல்லி கதையைச் சொன்னார். கடைசியாகத்தான் ‘யார் ஹீரோ’ன்னு கேட்டேன். ரொம்ப சிம்பிளா ‘விஜய் ஸாரு’ன்னு சொன்னார்.. எனக்கே இனிய அதிர்ச்சி. இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டுவிட்டு விஜய் ஸார் என்னைப் பாராட்டியதும் எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது..” என்றார்.

இயக்குநர் சிம்புதேவனும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் நிகழ்ச்சியை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காகவே குறைவாகவே பேசினார். தனது உதவி இயக்குநர்களை மேடையேற்றி கெளரவப்படுத்தினார். இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதற்கு விஜய்க்கு நன்றி தெரிவித்தார். ‘கத்தி’ பட சமயத்திலேயே விஜய்யை சந்தித்து தான் இந்தக் கதையை சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்தார். “இளைய தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு முற்றிலும், எதிர்பார்க்காத ஒரு புதுமையான அனுபவத்தை நிச்சயம் இந்தப் படம் கொடுக்கும்..” என்று உறுதியுடன் கூறினார் சிம்புதேவன்.

கடைசியாக மேடையேறிய நடிகர் விஜய் அதுவரையில் தொகுப்பாளர்களாக இருந்த அஞ்சனா, பிரேம் இருவரிடமும் கை குலுக்கி அவர்களை பாராட்டி அனுப்பிவிட்டு அதே மைக்கில் இடம் பிடித்தார். பேச்சை ஆரம்பித்த நிமிடம் முதல் கைதட்டல்கள் அதிர வைத்தது அரங்கத்தை.. !!

விஜய் பேசும்போது, “ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு சரித்திர படத்தில் நடிக்கணும்னு ஆசை இருந்துட்டேயிருந்துச்சு… அந்த நேரத்துல இயக்குநர் சிம்புதேவன் என்கிட்ட இந்த கதையை கொண்டு வந்தாரு, இந்தப் படத்தில் மிக முக்கியமானவர்களெல்லாம் நடிச்சிருக்காங்க. என்கூட இரண்டு பெண் புலிகளும் நடிச்சிருக்காங்க.

ஒருத்தங்க.. ‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா’ என்பதற்கு எடுத்துக்காட்டாக இங்கேயிருக்கும் ஸ்ருதிஹாசன்.. மும்பையில் இருந்து நமக்குக் கிடைத்திருக்கும் இரண்டாவது குஷ்பு ஹன்ஸிகா.. அப்புறம் படத்துல ஒரு சின்ன கேரக்டர்தான். ஆனால் முக்கியமான கேரக்டர். இதுல நடிச்ச நந்திதாவை ரொம்பவே பாராட்டணும்.

ஒரு அருமையான கேரக்டர்ல.. நல்ல, அழகான, போல்டான தனது நடிப்பால இந்தியாவையே கட்டிப் போட்ட நம்ம ஊர் சிவகாசி பட்டாசு ஸ்ரீதேவி மேடம்..

இன்னைக்கு இருக்குற ஹிரோக்களிடம் அண்ணனாக பழகிக் கொண்டிருப்பவர் பிரபு சார்.. அதேமாதிரி ஒரு ஹிரோ இன்னொரு ஹிரோ படத்துல வில்லனாக நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள் ஆனா கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் சார் இதுக்கு ஒத்துக்கிட்டாரு… அவருடைய பெருந்தன்மைக்கு என்னுடைய நன்றி.  மேலும் தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சின்னு ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளம் சேர்ந்தது இந்தப் படம்.

’23-ம் புலிகேசி’ படத்துல நம்மையெல்லாம் சிரிக்க வைத்த இயக்குநர் சிம்புதேவனின் டீம் இந்த புதிய முயற்சில ஈடுபட்டு நம்மையெல்லாம் ஜெயிக்க வைக்கணும்னு வந்திருக்காங்க. இந்தியாலேயே மிகப் பெரிய ஒளிப்பதிவாளர் நட்டி ஸார்.. அவரே ஹீரோவா ‘சதுரங்க வேட்டை’ ஆடினாரு, இப்ப இதுல கேமரா மூலமாக புலி வேட்டை ஆடியிருக்கிறார்.

அடுத்து ஒருத்தரை பற்றி நான் சொல்லியே ஆகனும், அவரை நான் சந்திக்கும்போதெல்லாம் எப்பவுமே ஒரு எனர்ஜி அவர்கிட்ட தெரியும், அதை பார்த்து நான் வியந்திருக்கிறேன். இப்ப இந்த படத்துல தாரை தப்பட்டையெல்லாம் வச்சு ‘புலி’யை விரட்டுவாங்க, ஆனா இப்ப தாரை தப்பட்டையெல்லாம் வைத்து ‘புலி’யை ஆட வச்சிருக்காரு தேவிஸ்ரீபிரசாத்.. அவருக்கு என் நன்றி மற்றும் பிறந்த நாள் வாழ்த்துகள்..

பொதுவா பெரிய தொழிலதிபர்களெல்லாம் வருஷா வருஷம் இடம் மாறிக்கிட்டேயிருப்பாங்க. யார் லிஸ்ட்ல பர்ஸ்ட்டுன்னு.. ஆனா இப்போவரைக்கும் முதலிடத்திலேயே இருக்கார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். கலை இயக்குநர் முத்தையா பிரம்மாண்டமான அரண்மனை செட்டுக்களை அழகா போட்டுக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் மொத்த பிரம்மாண்டத்திற்கும் முக்கியக் காரணம் என் தயாரிப்பாளர்கள் ஷிபுவும், செல்வக்குமாரும். இந்தப் படத்துல இன்னும் இரண்டு ஹீரோக்களும் இருக்காங்க. ஒருத்தர் இந்தப் படத்துக்காக கிராபிக்ஸ் வேலையெல்லாம் செய்திருக்கும் கமலக்கண்ணன். இன்னொருத்தர் படத்தோட எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். அவருக்குள்ள ஒரு இயக்குநரும் இருக்கார்.

பொதுவாக பரீட்சை எழுதுறவங்க அதிகமாவும், மார்க் போடுறவங்க கம்மியாவும்தான் இருப்பாங்க. ஆனால் இங்க பரீட்சை எழுதறவங்க கம்மியாவும், மார்க் போடுறவங்க அதிகமாவும் இருக்காங்க. இந்தப் படத்துக்கு எத்தனை மார்க்குன்னு பரீட்சை எழுதின நாங்க சொல்லக் கூடாது. மார்க் போடுற நீங்கதான் சொல்லணும். படத்தைப் பார்த்திட்டு சொல்லுங்க. தியேட்டர்ல..!

தயாரிப்பாளர் நிறைய செலவு பண்ணி படத்தைத் தயாரிச்சு கொண்டு வர்றாங்க. ஆனால் சில பேர் திருட்டுத்தனமா போன்ல எடுத்து நெட்ல போடுறாங்க. இதுனால என்ன கிடைக்குதுன்னு தெரியலை. ஒரு தயாரிப்பாளர் நிறைய பிளான் பண்ணி.. எந்த டைம் ஷூட் செய்யணும். எந்த டைம் ரிலீஸ் செய்யணும்… இப்பத்தான் என்னென்னமோ சொல்றாங்களே.. பர்ஸ்ட் லுக்.. செகண்ட் லுக்.. டீஸர்.. டிரெயிலர்ன்னு நிறைய இருக்குன்னு சொல்றாங்க.

இதுல நான் என்ன சொல்றேன்னா.. இது மாதிரி தயாரிப்பாளர் கஷ்டப்பட்டு தயாரிக்குற படத்தை இவங்க திருட்டுத்தனமா ரிலீஸ் செஞ்சு ஒரு குழப்பு குழப்பி, இதுனால இவங்க என்னத்த சாதிக்கிறாங்க.. ஜெயிக்கிறாங்கன்னு தெரியலை. இது அம்மா வயித்துல ஆரோக்கியமா வளர்ற குழந்தையை சிசேரியன் பண்ணி கொலை பண்ற மாதிரியிருக்கு. நான் எனக்காக மட்டும் பேசலை. எல்லா தயாரிப்பாளர்களுக்கும் சேர்த்துதான் பேசுறேன்.

எனக்கு உண்மையா வெறுக்க தெரியும். ஆனா பொய்யா நேசிக்க தெரியாது. நமக்கு முதுகுக்கு பின்னாடி பேசுறவங்களை பத்தி நாம கவலைப்படவே கூடாதுங்க. உயிரோட இருக்குறவரைக்கும் அடுத்தவங்களுக்கு தீமை செய்யாமல் இருந்தாலே போதும்,
எல்லாரும் சொல்வாங்க.. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் ஆணோ, பெண்ணோ இருப்பாங்கன்னு. ஆனா என்னோட வெற்றிக்குப் பின்னால நிறைய அவமானங்கள்தான் இருக்கு.

பில்கேட்ஸ் பத்தி நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். சின்ன வயசுல.. அவரோட ஸ்கூல் டைம்ல.. நிறைய பேர்.. அவரைப் பத்தி குத்தம் சொல்லிக்கிட்டே.. குத்திக் காட்டிக்கிட்டேயிருப்பாங்களாம். அவர் தன்னோட குறைகளை சரி பண்ணிக்கிட்டேயிருப்பாராம். இன்னிக்கு உலகத்துலேயே மிகப் பெரிய தொழிலதிபரா இருக்கார் பில்கேட்ஸ். அவரைக் குத்தம் சொன்னவங்கள்லாம் இப்போ அவரோட கம்பெனில ஊழியர்களா வேலை பார்க்குறாங்களாம். ‘அப்போ நீ பில்கேட்ஸா?’ன்னு கேக்குறீங்க. அதான.. நான் பில்கேட்ஸ் இல்லங்க.. ச்சும்மா ஒரு தகவல் நம்ம காதுக்கு வந்துச்சு. நல்ல நியூஸா இருந்துச்சு. ஷேர் பண்ணிக்கலாமேன்னு நினைச்சேன். அவ்ளோதான். இதை இங்கேயே மறந்து விட்ரணும்.. ஏன்னா நமக்கும் நாலு நல்ல விஷயம் தெரியும்ன்றது எல்லாருக்கும் தெரியணும்ல்ல.

இப்போதைய இளைஞர்கள் எல்லாத்துலேயும் அக்கறையில்லாமல் இருப்பதாக ஒரு சின்னக் குற்றச்சாட்டு இருக்கு. இதை நான் ஒத்துக்க மாட்டேன். அது எல்லா விஷயத்திலேயும்.. கிரிக்கெட் முதற்கொண்டு.. இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் மாதிரி.. நாம விளையாட்டா எடுத்துக்க வேண்டிய மேட்டரை சீரியஸா எடுத்துக்குறோம். சீரியஸா எடுத்துக்க வேண்டிய மேட்டரை விளையாட்டாகூட எடுத்துக்க மாட்டேன்றோம்.

இந்த நேரத்துல ஒண்ணு ஞாபகம் வருது. ‘பல்லாண்டு வாழ்க’ன்னு ஒரு படம். எம்.ஜி.ஆர். அவர்கள் நடிச்ச படம். அந்தப் படத்தோட கதை என்னன்னா கொடூரமான கொலை கைதிகளை திருத்தறதுதான். அந்தப் படத்துல ஒரு சீன் வரும். சில கல்லூரி மாணவர்கள் பேசிக்கிட்டே போவாங்க.. இதெல்லாம் நடக்குற காரியமில்லை.. யாரையும் திருத்த முடியாதுன்னு சொல்வாங்க. அப்போ எம்.ஜி.ஆர். ஒரு பேப்பர்ல ஒரு முகத்தை வரைஞ்சு, இன்னொரு பக்கம் இந்தியா மேப்பையும் வரைஞ்சு அந்த பேப்பரை கிழிச்சு கீழ போடுவாரு.

அந்த மாணவர்களை அழைத்து அந்தப் பேப்பர்ல இந்தியாவோட மேப்பை அமைக்கச்  சொல்வாரு.. அவங்க செஞ்சு பார்த்துட்டு வரலைன்னு சொல்வாங்க. அந்த மனுஷனோட முகத்தை ஒண்ணா சேருங்கன்னு சொல்வாரு. கண்ணு, காது, மூக்கு, வாய்ன்னு அதை அவங்க ஒண்ணா சேர்ப்பாங்க. இப்போ என்ன வருதுன்னு பாருங்கம்பாரு. இப்போ பேப்பர்ல இந்தியா மேப் இருக்கும். அப்போ அவர் சொல்வாரு.. ‘ஒரு மனுஷனை திருத்தினாலே இந்தியா மேப்பே சரியாகுது. இதே மாதிரி ஒவ்வொரு மனுஷனும் திருந்தினா இந்தியாவே திருந்திரும்’பாரு.. நான் ஏன் இதை இங்க வந்து பேசுறேன்னே எனக்கே தெரியலை.  இந்த படம், இந்தக் கதை, இந்த சீன், இந்த டயலாக் ரொம்ப நாளா மனசுல இருந்துச்சு. இதை உங்தகிட்ட ஷேர் செய்யணும்னு தோணுச்சு. அதான் சொன்னேன்.

கடவுள் முன்னாடி மண்டி போட்டா யார் முன்னாலும் எழுந்து நிற்கலாம். நமக்குத்தான் எல்லாம் தெரியும். மற்றவர்களுக்கு ஏதுவும் தெரியாதுன்னு மட்டும் நினைச்சிடாதீங்க. நமக்கு சொல்லித் தருவதே மற்றவர்கள்தான்.

வாழ்க்கைல அடுத்த நிமிஷம் நிச்சயமில்லாம இருக்கும்போது இந்த வாழ்க்கை நமக்கு இருக்குறவரைக்கும் அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும். எனக்கும், என் ரசிகர்களுக்கும் மற்றவர்களை வாழ வச்சு, அழகு பார்க்குறதுதான் பிடிக்கும்.. என்ன நண்பா நான் சொல்றது சரியா…? இந்த விழாவுக்கு இவ்வளவு தூரம் வந்து வாழ்த்திய அனைவருக்கும்.. முக்கியமாக டி.ஆர். சாருக்கும் என் நன்றி. வணக்கம்.” என்று சொல்லி முடித்தபோது ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டோடியிருந்தது.

இளைய தளபதி விஜய் தனது ரசிகர்களை ‘எதற்கோ’ தயார் செய்கிறார் என்பது மட்டும் அவரது பேச்சில் இருந்து தெரிகிறது.
முடிவில் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் நடைபெற்றது. இசையை விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் வெளியிட.. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. மேடையில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான கேக்கினை தேவிஸ்ரீபிரசாத் வெட்ட.. அதை அவருக்கு ஊட்டி பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தார் இளைய தளபதி விஜய்.

இதைச் செய்த அடுத்த நொடியில் மேடையில் இருந்து காணாமல் போனார் விஜய். வந்திருந்த ரசிகர்களிடம் சிக்கினால் அதோ கதிதான் என்பதை உணர்ந்து அவரை பத்திரமாக மறைத்து வைத்து உடனேயே ரகசியமான முறையில் வெளியில் அனுப்பினார்கள் பாதுகாவலர்கள்.
வந்திருந்த ரசிகர்கள் பட்டாளம் நட்சத்திரங்களை சூழ்ந்து கொள்ள நூற்றுக்கணக்கான செல்போன் கேமிராக்களின் பிளாஷ் வெளிச்சம் அந்த மண்டபத்திலும், வெளியிலும் தொடர்ந்து பரவிக் கொண்டேயிருந்தது.

தனது நீண்ட நெடிய திரையுலகப் பயணத்தில் பல இனிப்பான அனுபவங்களுடன், கசப்புகளையும் சேர்ந்தே சுவைத்திருப்பதால் விஜய் தனது ஒவ்வொரு ஸ்டெப்பையும் இனிமேல் கவனமாக எடுத்து வைப்பார் என்றே தெரிகிறது. அது இன்றைய விழாவிலும் தெரிந்தது..!

‘புலி’ படம் வெற்றி பெற நாம் மனதார வாழ்த்துகிறோம்..!