மயிலு - சினிமா விமர்சனம்

28-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


'காஞ்சிவரம்' படம் முடிவடைந்தவுடன், அந்தப் படத்தில் தன்னுடைய மகளாக நடித்திருந்த ஷம்முவின் நடிப்பில் அகமகிழ்ந்து போய் அப்போது தன்னுடைய டூயட் மூவிஸின் மூலம் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் moserbear நிறுவனத்திற்காக தயாரிக்கவிருந்த இந்த மயில் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தி உருவான படம் இது..!

நடுவில் படம் முடிந்த பின்பு moserbear நிறுவனத்துடன்  பிரகாஷ்ராஜுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடால், படம் கிடப்பில் போடப்பட்டு பின்பு, 4 வருட தாமதத்திற்கு பின்பு இப்போதுதான் வெளியாகியுள்ளது..!

கிராமத்துக் கதைகள் என்றால் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து அது போன்ற ஒன்று இதுவாக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதில் மயிலுவாக நடித்திருக்கும் ஷம்முவின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் படத்தின் பலமே..! ஒரு ஸ்வீட்டான காதல் கதையை, கோவில், மனிதர்களின் நம்பிக்கை.. ஈகோ பிரச்சினைகள் என்று எல்லாவற்றுக்கும் இந்தக் காதல் பலிகடாவாகுவதை நம்பக் கூடிய விதத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்..!

 

மயிலு, செல்லப்பாண்டி மீது தீராக் காதல் கொண்டிருக்கிறாள். கல்லூரியில் படித்து வரும் செல்லப்பாண்டி மயிலுவின் இந்தக் காதலை  முதலில் மறுத்தாலும், பின்பு அவளது தீவிரத்தால் கவரப்பட்டு ஏற்றுக் கொள்கிறான். காதலர்கள் காந்தர்வ மணமும் புரிந்து கொள்கிறார்கள். இந்த நேரத்தில்தான் தனது தந்தையின் விருப்பத்திற்காக ஊர் கோடாங்கி பதவியை செல்லப்பாண்டி ஏற்க வேண்டிய கட்டாயம்..! இது அவனது திருமணத்திற்கு தடை போடவே.. மயிலு அவனால் தான் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லி ஊரை விட்டு ஓடிவிடலாம் என்கிறாள். அதையே செய்கிறார்கள் காதலர்கள். இப்போது ஊர் இந்த விஷயத்தில் இரண்டுபட்டு நிற்கிறது.. அதே சமயம் செல்லப்பாண்டியும் மனதளவில் தான் ஒரு சாமியாடி என்பதை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப கோபக் குணத்துடன் இருக்கிறான். இது அவனது திருமண வாழ்க்கையையும் பாதிக்க.. இறுதில் என்ன ஆனது என்பதுதான் கதை..!

எல்லாரையும் விட்டுட்டு முதல்ல வாழ்த்த வேண்டியது இசைஞானி இளையராஜாவைத்தான்.. டைட்டிலில் இரண்டு பொடுசுகள் நடந்து வரும் அழகில் ஆரம்பிக்கும் அவரது ராக ராஜாங்கம்.. இறுதிவரையிலும் தொடர்கிறது.. பின்னணி இசைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுக்காக இளையராஜாவின் சாதனைப் படப் பட்டியலில் இந்தப் படத்தையும் சேர்த்துவிடலாம்.. அதிலும் மயிலு, செல்லப்பாண்டி மீது காதல் கொள்ளும் காட்சிகளிலும், இருவரின் உள் குத்தல் காட்சிகளிலெல்லாம் இசைஞானியின் இசை ஒரு தனி கேரக்டர் போலவே நடித்திருக்கிறது..! சில விஷயங்களைச் சொன்னால் புரியாது. அனுபவித்தால்தான் தெரியும் என்பார்கள். அதில் இதுவும் ஒன்று..!

6 பாடல்களுமே இன்னொரு முறை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணியிருக்கின்றன..! அதிலும் இறுதியாக என்ன குத்தம் என்ற இசைஞானியின் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல் படத்தின் இறுதி பாரத்தையும் சேர்த்துச் சுமக்கிறது என்பது படத்திற்கு கிடைத்திருக்கும் பெருமை..!

படம் முழுவதிலும் வரும் கேரக்டர்களில் 3 பேரைத் தவிர மற்றவர்களின் முகத்திலேயே கிராமத்து வாசனை வீசுகிறது.. மிகச் சிரமப்பட்டு அந்த வசன உச்சரிப்பை பேச வைத்து, நடிப்பையும் வாங்கியிருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர்..! கிராமத்து நடிகர்களை நடிக்க வைப்பதில் உள்ள சிரமங்களை இயக்குநர்கள் மட்டுமே அறிவார்கள்..!

கிராமத்து ஹீரோயின்களின் அடக்க ஒடுக்கத்தையெல்லாம் இந்த மயிலு காலில் போட்டு மிதித்திருப்பதுதான் இந்தப் படத்தின் ஸ்பெஷலாட்டி..! தான் அறிமுகமாகும் முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் ஷம்மு அந்த மயிலாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். இவருக்கு டப்பிங் பேசியவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்..! அந்த வட்டார மொழிக்கேற்ப தனது உடல் மொழியை இவர் பயன்படுத்திய விதம் அருமை..!

அதனினும் பெரிது இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்..! காமத்தை கண்டு ஒதுங்கிப் போகும் வழக்கமான மயிலாக இல்லாமல், அதை விரும்பும் பெண்ணாகவும், அதை தொட்டுப் பார்க்கத் துடிக்கும் பெண்ணாகவும் இவரைக் காட்டியிருப்பது வித்தியாசம்தான்..! இது அந்தந்த வயதுக்கேற்றதுதானே என்பதையும் தாண்டி எதார்த்தத்தின் எல்லை மீறாமல் இறுதிக் காட்சிவரையிலும் இவரது கேரக்டரை கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.  அதிலும் அந்த பனியாரக் கிழவி அந்தக் காலத்தில் வெள்ளைக்கார மச்சான்களை கவிழ்ப்பதற்கு என்ன செய்தார் என்பதைச் சொல்வதும், அதை மயிலு பாலோ செய்ய வருவதும் சுவாரஸ்யமான காட்சிகள்.. இதை விஷூவலாக எடுப்பதற்குக் கூட ஒரு தைரியம் வேண்டும்..! செல்லப்பாண்டியுடன் காதலியாக இருக்கும்போதே ஒட்டி உறவாடும் காட்சியும், திருமணத்திற்கு பின்பு ஒரு இரவில், “தான் தயார்” என்பதையும், அவன் தயாரா என்பதற்காக அவளது பார்வை எங்கே செல்கிறது என்பதைக்கூட இயக்குநர் குறிப்பால் உணர்த்தியிருப்பதும் இதுவரையில் எந்தவொரு தமிழ்ச் சினிமாவிலும் நான் பார்த்திராத காட்சி..! ரொம்பத்தான் தைரியம் இந்த இயக்குநருக்கு..!

அந்த வயதுக்கேற்ற கேரக்டரை மிக அழகாகச் செய்திருக்கிறார் மயிலாக நடித்திருக்கும் ஷம்மு..! செல்லப்பாண்டியை அடிக்கடி வம்பிழுக்கும் காட்சியிலும், “இந்தா அத்தே..” என்று இழுத்து இழுத்து பேசுவதிலும் அந்த கிராமத்து மயிலையே பார்க்க முடிகிறது..! இந்தப் படம் அந்தக் காலக்கட்டத்திலேயே வெளிவந்திருந்தால் மயிலுக்கு ஒரு கிரேஸை உருவாக்கியிருக்கும்.. இதற்குப் பின்பு ‘மாத்தி யோசி’, ‘பாலை’ போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டாராம்..! ஒரு நல்ல நடிகையை தமிழ்ச் சினிமாவும் இழந்துவிட்டது..!

செல்லப்பாண்டியாக நடித்திருக்கும் ஸ்ரீ-க்கு இதுதான் முதல் படமாம். சாமியாடும் காட்சிகளில் பயமுறுத்தியிருக்கிறார்..! சிறந்த தேர்வு.. எந்தவித அடையாளமும் தெரியாத நபர் என்பதால் முடிந்தவரையிலும் சிறப்பாகவே செய்திருக்கிறார்..!

‘மைனா’ விதார்த் இதில் சில நிமிடங்கள் வரும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆச்சரியம்தான்..! ‘மைனா’வுக்கு முன்பே அவர் நடித்திருந்த படம்..!  பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் பிற்பகுதியில் இவர்தான் கதையை நகர்த்த உதவியிருக்கிறார்..!

கஞ்சா கருப்புவின் ஒரு நாள் அலட்டலும், அதற்குப் பின்னான பஞ்சாயத்து கூத்துகளும் அமர்க்களம்..! அதிலும் டாஸ்மாக் பாரில் தன்னை பஞ்சாயத்தில் கேள்வி கேட்டவனை பிடித்து நொங்கெடுக்கும் கஞ்சாவை ரொம்பவே பிடித்துப் போகிறது..!

‘கல்யாணமாம் கல்யாணம்’ பாடல் காட்சியில் அந்தக் கலாட்டா கல்யாணத்தை காட்டியிருக்கும் விதம் அழகு..! கிராமத்து பஞ்சாயத்துக்களில் சண்டையெல்லாம் எங்கேயிருந்து எப்படி ஆரம்பிக்கும் என்பதையும் மிகவும் நுணுக்கமாக  காண்பித்திருக்கிறார் இயக்குநர்.

செல்லப்பாண்டியும், மயிலுவும் ஊரை விட்டு ஓடிப் போன பின்பு அங்கே நடக்கும் விஷயங்கள் அனைத்தும் மிக யதார்த்தமானவை..! தன்னுடைய மரியாதையும், வம்சத்தின் பெருமையையும் பெரிதாக நினைக்கும் செல்லப்பாண்டியின் அப்பா ஒரே நாளில் அது அழிந்து போன சோகத்தில் குடித்துவிட்டு உளறுவதும், தனக்கு இனிமேல் என்ன ஆனால் என்ன என்பது போல் பஞ்சாயத்தில் பேசுவதும் உருக்கம்தான்..!

படத்தில் குறைகளும் இல்லாமல் இல்லை.. பகுத்தறிவு பேசுபவர்கள் தாலி கட்டும் திருமணத்தை நடத்தி வைப்பதும், அவர்களே பேய், பிசாசு, காத்து, கருப்பு என்பதையெல்லாம் ஒரு நம்பிக்கையாக எடுத்துக் கொள்ளாமல் விசாரிப்பதும்... அவர்களைப் பற்றிய அறிதலில் சிறிது குழப்பத்தை உண்டு பண்ணுகிறது.. ஆனால் இறுதிக் காட்சி நினைத்துக் கூட பார்க்காதது..! இப்படியொரு சோகம் மயிலுவுக்கு தேவையா என்ற பச்சாபத உணர்வை ஏற்படுத்திவிட்டார் இயக்குநர்..!

சாமியாடுவது மன ரீதியாக அவர்களை எந்தவிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை செல்லப்பாண்டியின் அடுத்தடுத்த கோபப்படும் காட்சிகளில் தெளிவாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். கல்லூரியில் நடைபெறும் அந்த அடிதடியும், பேருந்தில் பறை சப்தத்தையும், பக்தி பாடல்களை கேட்டதுமே ஆட்டத்தைத் துவக்குவதுமாக அவர்களுக்குள் ஏற்படும் மன ரீதியான பாதிப்பையும் இயக்குநர் இதில் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்..!

கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாடல்களையும் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கமும் செய்திருக்கிறார் புதுமுக இயக்குநர் ஜீவன். தனது முதல் படத்திலேயே இவர் ஜெயித்திருக்கிறார் என்று சொல்வதற்கு நிறைய விஷயங்கள் படத்திலேயே இருக்கின்றன..! இவருடைய கெட்ட நேரம் படத்தின் தாமதம், இவரது வருகையை சற்றுத் தாமதப்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்..!

மயிலு - அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

இந்த நாள் இனிய நாளே..!

25-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


எனக்கு மட்டும் ஏன் இப்படீன்னு தெரியலை..! ஏதாவது முக்கியமான விஷயம்ன்னு புரோகிராம் போட்டா, அன்னிக்குத்தான் அத்தனை கெரகங்களும் ஒண்ணா சேர்ந்து விளையாட்டு காட்டுதுக..!

இன்னிக்கு ஆபீஸுக்கு காலைல 10 மணிக்குள்ள வந்தாகணும்ன்னு உத்தரவு..! காலைல 8.25-க்கெல்லாம் வீட்ல இருந்து கிளம்பிட்டேன்.. ஜாபர்கான்பேட்டைக்குள்ள வரும்போது டூவீலரின் செயின் கழன்றுச்சு.. பக்கத்துல அப்போதுதான் ஒரு மெக்கானிக் கடையைத் திறந்திருந்தாங்க. சின்னப் பையன்தான் இருந்தான். “கடை ஓனர் வராமல் நான் எதுவும் செய்ய மாட்டேண்ணே..!” என்றான். எனக்கு இருக்கிற அவசரத்தைச் சொல்லி கால்ல விழுகாத குறையா கெஞ்சின பின்னாடி, பரிதாபப்பட்டு செயினை சரி செஞ்சு கொடுத்தான்..

அவசரமா வண்டியைக் கிளப்பிட்டு போனா.. கிண்டி ஒலிம்பியா தாண்டி மேம்பாலத்துக்கு கீழ வரும்போது செயின் உடைஞ்சு வண்டி நின்றுச்சு.. விதியேன்னு நினைச்சு அப்படியே வண்டியை தள்ளிட்டுப் போனா கூப்பிடு தூரத்துலேயே மெக்கானிக் கடை(இந்த வழி செஞ்சு கொடுக்குறதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை அந்தப் பரதேசியப் பயபுள்ளைக்கு..!) “ஸ்பேர் பார்ட்ஸ் கடை 10 மணிக்குத்தான் திறக்கும்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஸார்”ன்னாரு மெக்கானிக். விதியே என்று நின்றிருந்தேன்.

வவுத்துப் பசியைத் தீர்க்க அருகில் இருந்த டீக்கடையில் ஒரு டீயை அடித்து முடித்த பின்புதான் தெரிந்தது கையில் 200 ரூபாய்தான் உள்ளது என்று..! அடித்துப் பிடித்து அந்த வழியே சென்ற ஆட்டோவில் ஏறி கிண்டி பேருந்து நிலையத்திற்கு வந்து ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு, மீண்டும் அந்த மெக்கானிக் கடைக்கு அவசரமா வேறொரு ஆட்டோவை பிடித்து வந்து சேர்ந்தேன்..!

எஃப்.எம்.மில் தோல்வி நிலையென நினைத்தால் பாடலை கேட்டபடி கடையில் இருந்த நேரத்தில்தான் தெரிந்தது வீட்டில் இருந்து கொண்டு வந்த எனது பேக்கை ஜாபர்கான்பேட்டை மெக்கானிக் கடையில் விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்பது..! மீண்டும் ஆட்டோ.. 50 ரூபாய்தான் தருவேன் என்றால் மேலும், கீழுமாய் பார்க்கிறார்கள் ஆட்டோ அண்ணன்மார்கள்.. 80-லேயே 5 பேர் உறுதியாய் நிற்க.. இனியும் தாமதித்தால் நமக்குத்தான் கஷ்டம் என்றெண்ணி அந்தத் தொகைக்கே சவாரி செய்து அவர்களுக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்துவிட்டேன்..! கெட்டதுலேயும் ஒரு நல்லது.. அந்தச் சின்னப் பையனே பேக்கை பத்திரமாக எடுத்து கடையில் வைத்திருந்தான்.. நன்றி சொல்லி அதை எடுத்துக் கொண்டு மீண்டும் வேறொரு ஆட்டோவில் அதே 80 ரூபாய் செலவில் கிண்டி மெக்கானிக் கடைக்கு பயணம்..!

இப்போது இந்தக் கடையில் வேலை செய்யும் பையன்தான் இருந்தான். கடைக்காரனை காணவில்லை. “அவரோட வீட்ல இருந்து ஒரு முக்கியமான போன் வந்துச்சு ஸார். அதான் என்னைய பார்த்துக்கச் சொல்லிட்டு போயிட்டாரு.. இருங்க.. நான் செஞ்சர்றேன்..” என்று சொல்ல எனக்கு பொசுக்கென்றானது.. அந்தப் பையன் இப்போதுதான் தொழில் கத்துக்குறான் போலிருக்கு.. எந்த வகை ஸ்பானரை பயன்படுத்தணும்னு கூட தெரியலை.. ஒவ்வொரு ஸ்பானாரையும் மாட்டிப் பார்த்துதான் கழட்டினான்.. யாரை நோவுவது என்று தெரியாமல் பதட்டத்தில் இருந்தேன்..!

இந்தப் பையனும் முடிக்கிற பாடில்லை.. அதற்குள்ளாக 4 கடை தள்ளி இன்னொரு  கடை வைத்திருந்த மெக்கானிக் அவசரமாக இந்தக் கடைக்கு வந்தார்.. “ரவி போன் செஞ்சு சொன்னாப்புல. ஏதோ அவசரத்துல இருக்கீங்களாம்.. இந்தப் பயலுக்கு சரியா தெரியாது.. என்னைய செய்யச் சொன்னான்..” என்று என்னிடம் சொல்லிவிட்டு துழாவிக் கொண்டிருந்த பையனை “டேய் தள்ளுடா..”ன்னு சொல்லிட்டு 20 நிமிடத்தில் அனைத்தையும் மாட்டிக் கொடுத்துவிட்டார்..!

“பணத்தை அந்தப் பையன்கிட்டயே கொடுத்திட்டு போயிருங்க..” என்று சொல்லிவிட்டு அவர் போக.. பில்லை நீட்டினான் அந்தப் பையன்.. செயின் மற்றும் செயின் வீலும் சேர்த்து 620 ரூபாய். பேரிங் 120. மெக்கானிக் சார்ஜ் 180.. ஆக மொத்தம் 920. இதில் நான்கு முறை ஆட்டோவில் பயணம்.. 80+80+40+40 ஆக 240 ரூபாய்.. இந்தக் காலையிலேயே 1160 ரூபா அவுட்டு..!

இந்த நாளின் பிரமாதமான துவக்கத்தோடு அலுவலகம் வந்து சேர்ந்தபோது மணி 11.20. இன்னிக்கு நான்தான் கடைசி ஆள்..! நல்லவேளை.. பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் நாரதர்கள் யாரும் என் அலுவலகத்தில் இல்லை என்பதால் தப்பித்தேன்..!

நேத்தெல்லாம் இது போன்று நடந்திருக்கலாம்.. அல்லது முந்தாநாள்.. அவசரம் இல்லாத நாட்களில் நடந்து தொலைந்திருக்கலாம்.. ஆனால்  எனக்கு ஒரு வேலை வரும்போதுதான் இது போன்ற தடங்கல்கள் ஆயிரம் கூடவே வரும்.. பல முறை இது போன்ற சம்பவங்களை என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன்..! எப்படியாச்சும் சீக்கிரமா முடிக்கணும்னு ஒரு வேலையை ஆரம்பிச்சேன்னா.. அதுக்கு ஆயிரத்தெட்டு தடைக்கற்கள் வந்து நிற்கும்.. தடுக்கி விழும்போது தூக்கிவிடவும் பக்கத்தில் ஆள் இருப்பார்கள். அதே சமயம் அடியும் வாங்கத்தான் வேண்டும்.. இதுதான் நான் வாங்கி வந்த வரம்..! 

ஏதோ புலம்பணும்னு தோணுச்சு.. புலம்பிட்டேன்..!

கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்


21-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..! 
 

பெரிய பட்ஜெட் படங்கள் மட்டும்தான் ஹாலிவுட்டை காப்பியடிக்குமா..? நாங்க எல்லாம் செய்ய மாட்டோமா என்று இந்த சின்ன பட்ஜெட் தயாரிப்பாளரும், இயக்குநரும் யோசித்து எடுத்த படம் இது..!

ஐந்து வெவ்வேறு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் இறுதியில் ஓரிடத்தில் சந்திக்கும் சூழலில் அனைவருக்கும் பொதுவான முடிவு கிளைமாக்ஸில் கிடை(ந)டக்கிறது..! இதுதான் கதை..!

 
காதலித்து ஏமாற்றும் பெண்கள் மீதெல்லாம் கோபம் கொள்ளும் ஹீரோ.. தன் நண்பனை அவமானப்படுத்திய பெண்ணை எப்படியாவது தன்னுடன் காதலில் விழ வைத்து பின்பு அவளை அவமானப்படுத்தி காட்டுகிறேன் என்று ஒற்றைக் காலில் நின்று அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்..!

நாமக்கல்லில் லாரி டிரைவராக இருக்கும் ஒருவர், ரோட்டார குஜிலிகளிடம் சென்று எய்ட்ஸ் நோயை பரிசாக வாங்கி வருகிறார்.. மனைவிக்கும் இது தெரிய வர.. இவரது குடும்ப வாழ்க்கையில் விரிசல்..! “உறை” போட்டாவது வேலையை முடிக்க எண்ணும் கணவனை பக்கத்திலேயே நெருங்க விட மறுக்கிறாள் மனைவி.. கடுப்பில் இருக்கிறார் லாரி டிரைவர் ராஜாகண்ணு..!

ஆந்திரா பார்டரில் இருக்கும் முறுக்கு தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்க்கும் சிறுவர்கள், அதை நடத்தும் ரவுடி அக்கா ஒருவரின் சித்ரவதையை சந்தித்து வருகிறார்கள். இதில் இருந்து தப்பிக்க முயல்கிறார்கள்..!

பணம் கொடுத்தால் எதையும் முடிக்கும் வில்லன் ஒருவன், முடி வெட்ட கடைக்கு வரும் பலிகடாவையே ஷேவிங் செய்பவன்போல போட்டுத் தள்ளிவிட்டு போகிறான்.. இவனிடம் தனது கலப்படத் தொழில் பற்றி போலீஸுக்கு போக ரெடியாக இருக்கும் ஒருவனை போட்டுத் தள்ளும் அஸைண்மெண்ட் தரப்படுகிறது..!

பொய்யைத் தவிர வேறு எதையும் சொல்ல விரும்பாமலும், உழைக்கப் பிடிக்காமல் பக்கத்து வீட்டு தங்கச்சியிடம் பாசம் காட்டி காசை அடிக்கும் குடிகார தம்பியொருவன், ஒரு முறை பணம் கொடுக்கவில்லையென்பதற்காக அந்த வீட்டு குழந்தையை கடத்திக் கொண்டு போய் பணம் கேட்கிறான்..

இப்படி இந்த 5 கதைகளையும் இறுதியில் ஒன்றாகச் சேர்த்து வைத்து, தற்செயலாக குற்றவாளிகள் அனைவரும் ஒரே நேரத்தில் பரலோகம் போவது போல போக வைத்து.. குற்றம் செய்தவன் எப்படியும் தண்டனை பெற்றே தீருவான் என்பதுபோல முடித்திருக்கிறார்கள்..!  ம்ஹூம்.. ஏதோ பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே முடிந்த விஷயத்தை கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த அளவுக்காச்சும் எடுத்திருக்கிறார்களே  என்று சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்..!

நடிப்பையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆவாது..! ஹீரோ, ஹீரோயின்ஸுக்கும் நடிப்புக்கும் ரொம்ப தூரம்..! இயக்கமே கொஞ்சூண்டுதான் என்பதால் அவர்களையும் குத்தம் சொல்லி புண்ணியமில்லை. ஆனாலும் ஹீரோயினின் அப்பாவை மடக்க அவருக்கு தண்ணி வாங்கிக் கொடுத்து "மாமா" என்பதும், நிதானத்தில் இருக்கும்போது "என்ன மாமா மறந்துட்டீங்களே..?" என்று கலாய்ப்பதும் சுவாரசியமாகவே இருக்கிறது..!

 

இருப்பதிலேயே எனக்கு பிடித்த போர்ஷனாக இருந்த்து நாமக்கல் லாரி டிரைவரின் சீக்ரெட் லைப்.. பாவம்.. அதுக்கும் முடியாம.. இதுக்கும் முடியாம அவர் படுற பாடு.. இதுல பொண்டாட்டி குளிச்சிட்டு பாவாடையோட வந்து நிக்குற கோலத்தை பார்த்தும் ஒண்ணும் செய்ய முடியாம தவிக்கிறது.. முயற்சி செஞ்சு மூக்குடைபட்டு அங்கலாய்க்கிறதுமா.. பாவமா இருந்தாரு இவரு..!

குழந்தையைக் கடத்திட்டு போற போர்ஷனில் நடிகர்களும், நடிப்பும் செமையான அக்கப்போர்..! பதட்டத்தை கூட்டுறேன்னு சொல்லி நமக்கு இன்னுமா படம் முடியலைன்னு டென்ஷனைத்தான் கூட்டிட்டாங்க..!

ஹீரோ, ஹீரோயினை பிரெண்ட் வீட்டுக்குத் தள்ளிட்டுப் போய் காந்தர்வ மணத்திற்கு முயலும்போது தப்பிக்குற ஹீரோயினுக்கு இப்போ ஹீரோ கெட்டவனா தெரியலையா..? அவன் தன்னை ஏமாத்துறதுக்குத்தான் பழகுறான்னு தெரிஞ்ச பின்னாடி அவனை விட்டு விலகுறேன்னு சொல்றது கொஞ்சம் லாஜிக் மிஸ்டேக்கா இருக்கு டைரக்டர் ஸார்..!

ஹீரோயினை துவக்கத்துல கொஞ்ச நேரத்துக்கு சைவப் பட்சியா காண்பிச்சிட்டு அப்புறம் மேல் போகப் போக அசைவமா காண்பிக்க வைச்சு.. அவரும் தன்னால முடிஞ்ச அளவுக்கு காட்டியிருக்காரு.. இடைல குத்துப் பாட்டு ரசிகர்களுக்காக ஒரு தெருவோர குத்துப் பாட்டு.. பாட்டையும், டான்ஸையும்விட ஆடுற பொண்ணு அசத்தல்..! பேசாம இந்தப் பொண்ணையே ஹீரோயினா போட்டிருக்கலாம்..!

அதெப்படி கிளைமாக்ஸ்ல குண்டெல்லாம் கரெக்ட்டா குற்றவாளிகள் மேலேயே படுதுன்றதுக்கு இயக்குநர்கிட்டதான் கேள்வி கேக்கணும்ன்றதால இதையும் லூஸ்ல விடுவோம்..! ஆனாலும், சுமாரான இயக்கம்.. சுமாரான நடிப்பு.. ஓய்ந்து போன இசை.. இதை வைத்தே படத்தை எடுத்து முடித்திருக்கும் இயக்குநரின் திறமைக்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் போட வேண்டும்..!

என்னமோ.. எந்தக் கதையை வைச்சாவது படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணிட்டாலே போதும்ன்ற லெவல்ல தயாரிப்பாளர்கள் இருக்கும்போது, எப்படியாச்சும் இயக்கம் என்பதற்குக் கீழே தங்களது பெயரை கொண்டு வரத் துடிக்கும் இயக்குநர்களைக் குற்றம் சொல்லி என்ன புண்ணியம்..? ஒரு வாரம் ஓடும்ன்னு நினைக்கிறேன்..! என்னிக்காச்சும் டிவில போடும்போது அவசியம் பாருங்க..!

அமிர்தயோகம் - சினிமா விமர்சனம்

20-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!   

இந்தப் படத்தின் இயக்குநர் மாணிக்கராஜ், இசை வெளியீட்டு விழாவில் மிக உருக்கமாகப் பேசியிருந்தார்.  மாணிக்கராஜ் ஏதோவொரு சினிமாவில் துணை இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த்தபோதுதான் அவரது தாயார் இறந்துபோனாராம். அப்போது வேலைப் பளு காரணமா அம்மாவின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லையாம்.. சில ஆண்டுகள் கழித்து இவரது மனைவி இறந்தபோதும் ஏதோவொரு ஷூட்டிங்கில்தான் இருந்தாராம்..! இந்தக் கலையுலகத்திற்காக நான் சந்தித்த பெரிய இழப்புகள் இவை என்று டச்சிங்காக பேசி வந்திருந்த ஒரு சில பெண்களையும் கண்ணீர் சிந்த வைத்திருந்தார்.

3 பாடல் காட்சிகளைத் திரையிட்டுக் காட்டியபோது 1980-களின் இசை திரையில் வழிந்தோடியது. மாணிக்கராஜ் பாக்யராஜின் அஸோஸியேட் என்ற கூடுதல் தகவலும் தெரியவர அப்போதே பார்க்கப்பட வேண்டிய படங்களின் பட்டியலில் இதையும் சேர்த்தாகிவிட்டது..! அந்த நினைப்புக்குக் கிடைத்த தண்டனை கொஞ்சம் அதிகம்தான்..!

 

முதல் காட்சியில் ஹீரோயின் பேருந்தில் இருந்து இறங்கி ஊருக்குள் வருகிறார்.  ஒரு இடத்துல இருந்து “ராமு” என்று அவர் அழைக்க.. இன்னொரு பக்கம் வயலில் டிராக்டர் ஓட்டிக் கொண்டிருக்கும் அந்த ராமு, “ஜானகி” என்றழைக்க.. இருவரும் ஓடுகிறார்கள்.. ஓடுகிறார்கள்.. ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.. “டேய்.. போதும்டா.. எங்களுக்குக் கண்ணு வலிக்குது.. அதான் பக்கத்துல வந்துட்டீங்கள்ல.. கட்டிப் பிடிச்சுக்குங்கடா” என்று நாம் மனசுக்குள்ள கதறிய பின்புதான் அந்தக் காட்சியே முடிவுக்கு வந்தது..! இப்போது ராமுவுக்காக பிஸ்கெட்டெல்லாம் வாங்கி வராமல் “ஜானகி-ராமு” என்று எழுதப்பட்ட ஒரு போர்வையை பரிசாக கொடுக்கிறாள் ஜானகி. இதை மறந்திராம ஞாபகத்துல வைச்சுக்குங்க..! படத்தின் துவக்கத்திலேயே இந்தச் சித்ரவதையைக் கொடுத்துவிட்டதால் “விசாரணை” எப்படியிருக்கும் என்பதை ஓரளவுக்கு ஊகித்துவிட்ட மக்கள்ஸ்.. பல பேர் செல்போனில் மூழ்கத் துவங்க.. சிலர் கண்ணை மூடித் தூங்கவும் துவங்கினார்கள்..!

ஜானகியும், ராமுவும் ஒரே ஊர்க்கார காதலர்கள்.. ராமு பிறந்தவுடனேயே அவனுடைய அம்மா இறந்து போனதால் அப்பா அவனை பாராமுகமாக நடத்துகிறார்.. சித்தியும், ஒரு தம்பியும் வந்த பின்பும் விவசாய வேலைக்காக அவனை அடிமை போல் நடத்துவதாக ஜானகியே குத்தம் சொல்கிறார். ஜானகிக்கு ஒரேயொரு அண்ணன். ஸ்கூல் டீச்சராம்.. இவுங்க ரெண்டு பேரு லவ்வு பண்றது அந்த ஊர்ல இருக்குற ஆடு, மாடு, கோழி உட்பட அனைவருக்கும் தெரியுமாம்..!

இன்னும் 2 வருஷம் கழிச்சு படிப்பை முடிச்சவுடனேயே நம்ம கல்யாணந்தான்னு சொல்லிட்டு ஜானகி டவுனுக்கு வண்டியேற.. ராமு மீண்டும் வயக்காட்டு வேலையில் மூழ்குகிறானாம். அதே ஊரைச் சேர்ந்த சக மாணவனுக்கு, ஜானகி மீது ஒரு ஈர்ப்பு.. அவளை லவ் செய்வதாகக் கூற..  ஜானகி அதை மறுத்துவிட்டு அடுத்த நாலாவது ரீலிலேயே ஊர் திரும்புகிறாள். மீண்டும் ஒரு ஓடிப் பிடிச்சு விளையாடும் கொடுமை..!

அதே ஜானகி ராமு போர்வையை போர்த்திக் கொண்டு இங்கிட்டும், அங்கிட்டுமா 4 நிமிஷம் ஜானகியும், ராமுவும் ஓடிப் பிடிக்க.. நமக்கே களைப்பாகி நாம விட்ட மூச்சு ஸ்கிரீன்ல பட்டுச்சோ தெரியலை.. அவங்களே ஓடுறதை நிறுத்திடுறாங்க. இப்போ “என்னைய பார்க்காத.. ஓடிப் போயிரு”ன்னு கதறு, கதறுன்னு கதறுறான் ராமு.. பார்த்தே தீருவேன்னு ஜானகி நேரடியா சொன்னாலும், படம் பார்க்க வந்தவர்களுக்கு அந்தக் கொடுமையைக் காட்டியே தீரணும்னு மறைமுகமாகவும் இயக்குநர் பிளான் பண்ணியிருந்ததால ராமு தன் முகத்தைக் காட்டுகிறான்..!

தொழு நோய் வந்தது போல் முகமே தோல் உரிந்து அசிங்கமாக இருக்க.. ஏதோ பாம்பு கடிச்சிருச்சாம். அதுனால இப்படி வந்தது என்று கூசாமல் ரீல் விட்டிருக்கிறார்கள்..! இப்போ இந்த “அழகு” மூஞ்சியை ஜானகி கண்ணாலம் கட்டிக்கிட்டாளா இல்லையா என்கிறதுதான் மிச்ச சொச்சக் கதை..! 

 

இயக்குநர் மிகச் சிறந்த வசனகர்த்தா என்பதில் சந்தேகமில்லை.. மேடை நாடகங்கள் நிறைய எழுதியவர் போலும்.. பக்கம், பக்கமான டச்சிங்கான வசனங்களை பேச வைத்தே நம்மை மிரட்டியிருக்கிறார்.. தப்பித் தவறி டைரக்சன்னா என்ன்ன்னு யாரும் அவரண்டை கேட்டிரக் கூடாதுன்றதுக்காகத்தான், நடக்குறதையெல்லாம் ஓடுறதா காட்டி நம்மளை தியேட்டரைவிட்டு ஓட வைக்குறாரு..!

ஹீரோவைவிடவும், ஹீரோயினுக்குத்தான் ஸ்கோப் அதிகம்..!  ஏதோ ரெண்டு பேரும் வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாம நடிச்சிருக்காங்கன்னு சொல்லிக்கலாம். அம்புட்டுத்தான்..!

படத்தோட தயாரிப்பாளர் ஜெயசேகர உடையார் பாண்டிச்சேரில பெரிய கையாம்.. சொந்த ஊருக்குள்ளாற டீமை கூட்டிட்டு போனதால இஷ்டத்துக்கு எடுத்துட்டு வந்திருக்காங்க.. தயாரிப்பாளர்தான் ராமுவோட அப்பா.. இவர் அம்மனுக்கு பால்குடம் எடுக்கிறதையெல்லாம் ஒரு காட்சியா திணிச்சு அவரோட ஆசையையும் நிறைவேத்தி வைச்சிருக்கிற இந்த மாதிரி இயக்குநர்கள் இருக்கிறவரைக்கும் தமிழ்ச் சினிமாவுக்கு அழிவே கிடையாது..!

சீரியல் டிராக் மாதிரி ஜெயசேகர உடையாரின் வீட்ல இருக்குற லூஸான பொண்ணை ஜானகியின் ஒன் சைட் லவ்வர் யூஸ் பண்ணிட்டு சொர்க்கத்துக்குக் கூட்டிட்டுப் போய் விட்டுர்றாரு.. இந்தப் பழியும் அந்த நேரத்துல வீட்டுக்கு வரும் ராமு மேல விழுக.. அவங்க அப்பனே அத்தாந்தாண்டி உடம்பை வைச்சுக்கிட்டே பையனை புரட்டி எடுத்திர்றாரு.. அப்பால 10 நிமிஷத்துல உண்மை தெரிஞ்சு மறுபடியும் அந்த உடம்போடு குடுகுடுன்னு ரோட்டு, வயக்காட்டுல, தோப்புக்குள்ள.. ஏரிக்குள்ள ஓடியும், நடந்தும் கிளைமாக்ஸை பரபரப்பாக்கியிருக்காரு.. பாவம்.. இந்தத் தயாரிப்பாளர்.. எனக்குத் தெரிஞ்சு இவ்ளோ கஷ்டப்பட்டு நடிச்சிருக்குற முதல் படத் தயாரிப்பாளர் இவராகத்தான் இருக்கும்..!

“இளையராஜாவைத் தவிர வேற எந்த இசையமைப்பாளருக்கும் கொடுக்குற காசு வேஸ்ட்டு”ன்னும், “எதுக்காக வெளிநாட்டுக்கு போய் டியூன் போடுறதா சொல்லி தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்குறாங்க..?” என்று இப்போதைய டாப் லிஸ்ட் இசையமைப்பாளர்களை வாரு வாருன்னு வாரின, இந்தப் படத்தோட இசையமைப்பாளர் சுந்தர்.... 1980-ல வந்த இளையராஜாவின் மெட்டுக்களை அப்படியே தோசையைத் திருப்பிப் போடுற மாதிரி போட்டு டியூன் உருவாக்கியதை மட்டும் சொல்லாம விட்டுட்டாரு.. “ராமன் தேடிய சீதை” பாடல் மட்டுமே அமர்க்களம்.. ஆனா சத்தியமா அதை விஷூவலா பார்த்திராதீங்க.. டெங்கு காய்ச்சலே வந்தாலும் வந்திரும்..!

சிசர் மனோகர் அப்பப்போ வந்து சீன்களை ஜாயிண்ட் பண்ணி விடுறாரு.. மனோபாலா ஒரேயொரு காட்சில வந்து ஆட்டத்தைக் கலைச்சிட்டுப் போயிடறாரு.. எப்படியோ எல்லா தயாரிப்பாளர்களின் முதல்  படத்திலும் மனோபாலா இருக்கணும்ன்ற தமிழ்ச் சினிமாவின் விதிக்கப்படாத விதியை இந்தப் படத்துலேயும் நிறைவைத்திட்டாங்க.. வாழ்க.. வளர்க..!

கிளைமாக்ஸில் “ஒரு பொண்ணு, கணவனுக்கு மனைவியாத்தான் வாழணும்னு அவசியமில்லை.. தாயாகவும் இருக்கலாமே..?”ன்ற உலக மகா தத்துவத்தை  தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அள்ளிக் கொடுத்திருக்கும் இதன் இயக்குநர் மாணிக்கராஜின் மாணிக்கமான அந்த மனசுக்கு நாம வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவிச்சுக்குவோம்..!

ஏதோ இதன் இயக்குநருக்கு அமிர்தயோகம்ன்னு நினைக்கிறேன்.. அதான் படம் கிடைச்சிருக்கு..! அடுத்த படத்தையும் நிச்சயமா இயக்குவேன்னு தைரியமா சொல்லியிருக்காரு இயக்குநர்.. அந்தத் தயாரிப்பாளருக்கு இப்பவே நம்முடைய அனுதாபங்களை தெரிவிச்சுக்குவோம். இந்தத் தயாரிப்பாளருக்கு ஏன் சொல்லலைன்றீங்களா..? இவருக்கு படத்தின் முடிவு முன்னாடியே தெரிஞ்சுதான் படத்தை எடுத்திருக்கிறாருன்னு நல்லாவே தெரியுது..! தன் முகம் தெரியணும்.. தன் ஊர் தெரியணும்.. தான் அம்மனின் பக்தன் என்பது அம்மனுக்கே தெரியணுன்ற இவரது ஆசையின் வெளிப்பாடுதான் இந்தப் படம்..!  இதன் விளைவுகளையும் அவர்தான் அனுபவிக்க வேண்டும். நோ பீலிங்ஸ் மக்களே..!

 ஆகவே..! வேற ஒண்ணும் சொல்றதுக்கில்லை..!

பீட்சா - சினிமா விமர்சனம்


19-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


அட்டக்கத்தியைக் கொடுத்த தயாரிப்பாளர் சி.வி.குமாரின் அடுத்த அட்டகாசமான படைப்பு இது..! தமிழில் இது போன்று படம் பார்த்து ரொம்ப நாளாச்சு.. கடைசியாக இரண்டாண்டுகளுக்கு முன்பு உட்லண்ட்ஸில் உலகத் திரைப்பட விழாவில் ஒரு ஜப்பானிய திரைப்படம் பார்த்து அரண்டு போய் உட்கார்ந்திருந்தேன். அதற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான்..!


படத்தின் கதை என்ன என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பல முறை கேட்டபோதும் “பீட்சா விக்குற கடைல வேலை பார்க்குற விஜய் சேதுபதியின் ஒரு நாள் வாழ்க்கை ஒரு விஷயத்தில் திருப்பிப் போடப்படுது. அது எதனால்ன்றதுதான் கதை.. தயவு செய்து இதுக்கு மேல கேக்காதீங்க.. ப்ளீஸ்..” என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கெஞ்சி கேட்டுக் கொண்டார்.. வழக்கம்போல எல்லா இயக்குநர்களும் சொல்றதுதானே என்று அலட்சியமாக படம் பார்த்தவர்களெல்லாம், இடைவேளையிலேயே கார்த்திக்கை பார்த்து பவ்யமாக கும்பிடு போட்டார்கள்..!

என்னவொரு இயக்கம்..!? ஒரு நிமிடம்கூட கைக்கடிகாரத்தை பார்க்கவிடாமல், செல்போனை தொட விடாமல் அடுத்தது என்ன.. அடுத்தது என்ன என்று நம்மையும் ஸ்கிரீனுக்குள்ளேயே கொண்டு போய் உட்கார வைத்துவிட்டார்.. செம திரில்லிங்கான திரில்லர் மூவி. சத்தியமாக குழந்தைகளும், இளகிய மனம் கொண்டவர்களும் பார்க்க வேண்டாத படமும்கூட..! தாங்க முடியாது..!

நல்லவிதமாக விமர்சனம் எழுதுங்கள் என்பதைவிடவும், கதையை முழுதாகச் சொல்லிவிடாதீர்கள் என்று திரும்பத் திரும்ப இயக்குநர் கார்த்திக் கேட்டுக் கொண்டதாலும், இது போன்ற சிறந்த சினிமா படைப்புகள் மக்களிடம் போய்ச் சேர வேண்டியது அவசியம் என்பதாலும் பல்லைக் கடித்துக் கொண்டு கதையையும், திரைக்கதையையும் இங்கே முற்றிலுமாக தவிர்க்கிறேன்..!

இது போன்ற கதைகளுக்கெல்லாம் திரைக்கதைதான் முக்கியம்.. எந்த இடத்தில் சறுக்கினாலும் முழுப் படமும் சரிந்துவிடும் அபாயம் இருந்தாலும், இதில் எந்தத் தவறும் செய்யாமல் திரைக்கதையில் நம்மை வசீகரித்திருக்கிறார் இயக்குநர். இதற்கு உடந்தையானவர்கள் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும்..!

படத்தின் துவக்கத்தில் முதல் 20 நிமிடங்களில் ஒரு அழகான காதல் கதை.. இன்றைய யதார்த்த வாழ்க்கையையொட்டி அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.. “நான் எதுலயாச்சும் கேர்லெஸ்ஸா இருந்ததை நீ பார்த்திருக்கியா..?” என்று விஜய் கேட்க, “நான் பிரெக்னெட்டா இருக்கேன்..” என்ற ரம்யா சொல்லும் பதிலும் எதிர்பாராதது.. ஆனால் கார்த்திக்கின் எழுத்து வன்மைக்கு இதுவொரு சான்று..! பல இடங்களிலும் இது போன்ற வசனங்கள் மின்னலாய்த் தெறித்திருக்கின்றன..!

படத்தின் முக்கிய இடமே அந்த பேய் வீடுதான்..! என்னமாய் ஜமாய்த்திருக்கிறார் விஜய் சேதுபதி.. ஒரு நிமிடம் பதட்டம்.. அடுத்த நிமிடம் சுதாரிப்பு.. மறுநிமிடம் பயம்.. அடுத்தது தேடல்.. என்று அந்த 50 நிமிட நேரம் நம்மையும் சீட்டு நுனிக்கு வரவழைத்து கதகளி ஆடியிருக்கிறார்..! உண்மையில் விஜய் சேதுபதியின் கேரியரில் இது ரொம்ப, ரொம்ப முக்கியமான படம்.. ஒன் மேன் ஷோவில் சேதுபதி நிச்சயமாக ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..!

அனுவாக வரும் ரம்யா நம்பீசனுக்கு நடிப்பில் முழு அளவுக்கான ஸ்கோப் இல்லையென்றாலும் தோன்றிய காட்சிகளில் ரம்யமாகவே நடித்திருக்கிறார்..! சைக்காலஜி படித்த பொண்ணாக விஜய்க்கு அட்வைஸ் செய்யும் காட்சிகளில் அலட்டல் இல்லாமல் நிறைவாகவே செய்திருக்கிறார்..! இனி திருமணமாகப் போகும் ஆண்களுக்கு ஆனி போன்ற மனைவி கிடைக்க வாழ்த்துகிறேன்.. காரணத்தை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

புதிய ஒளிப்பதிவாளர்கள் நிறைய கற்றுக் கொள்ளும்வகையில் இப்படத்தின் ஒளிப்பதிவில் வித்தை காட்டியிருக்கிறார் கோபி. ஒரு டார்ச் லைட்.. மெழுகுவர்த்தி வெளிச்சம்.. இதைவைத்து இப்படியொரு டென்ஷனை ஏற்றி.. நடிப்பை வாங்கியிருக்கிறார்கள் என்றால் இந்த யூனிட் மென்மேலும் பேசப்படக் கூடியவர்களாகவே இருப்பார்கள் என்று வாழ்த்துகிறேன்..! ஒரு வீட்டை இதை விடவும்  டெர்ரராக காட்ட முடியுமா...? அந்த மழையில் நனையும் டூயட் காட்சியில் விஜய், ரம்யாவைத் தவிர கேமிராவும் ஒரு ஆக்டராகவே நடித்திருக்கிறது என்றே சொல்லலாம்..!

இதேபோன்று இசையமைப்பாளரும்.. ஒவ்வொரு காட்சிக்கும் பொருத்தமான இசையை அள்ளிக் கொடுத்தும், தெளித்தும் மயிர் கூச்செறியும் ஆக்சனை படம் பார்ப்பவர்களிடத்தில் இருந்து வாங்கிக் கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.  வீட்டு காலிங்பெல்லை அடித்ததில் துவங்கி, அந்த வீட்டில் இருந்து வெளியேறும்வரையிலும் அலறவும், அரற்றவும் வைத்திருக்கிறார்..  பின்னணி இசைக்காகவும் இந்தப் படம் நிச்சயம் பேசப்படும்..!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நிறைய படித்திருக்கிறார்.. சினிமாவில் அனைத்து டிபார்ட்மெண்ட்டுகளையும் நன்கு கற்று வைத்திருக்கிறார்.. அவரது குறும்படத்தில்கூட இதே போன்ற கதை வடிவம் ஒன்று இருந்தது.. படத்தின் இடைவேளையில் அந்தப் படத்தின் கதையும் நமது நினைவில் குறுக்கிட.. அதுவா.. இதுவா என்ற பல குழப்பத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது..! இப்படி டிவிஸ்ட்டுக்கு மேல் டிவிஸ்ட்டாக கொண்டு சென்று அவர் புதிரை விடுவித்த இடம் அழகு.. அதைவிட அழகு படத்தின் நிறைவுப் பகுதி.. இது போன்ற படங்களெல்லாம் இப்படித்தான் முடியும் என்பது தெரியும் என்றாலும், விஜய் சேதுபதியின் அற்புதமான நடிப்பில் இதுவும் புதுமையான சப்ஜெக்ட்டாகவே தெரிந்தது..! நன்றி கார்த்திக்..!

சினிமாவின் அனைத்துத் தொழில் நுட்பக் கலைஞர்களின் 100 சதவிகித முழுமையான அர்ப்பணிப்போடு உருவாகியிருக்கும் இப்படத்தின் தரம் திரையில் தெளிவாகத் தெரிகிறது.. இது போன்ற மாற்று சினிமாக்களையும் நாம் நிச்சயமாக ஆதரிக்க வேண்டும்..! திகிலும், திரில்லும் பிடிக்காதவர்களும், சினிமா என்னும் மொழிக்காக இப்படத்தை பார்த்து தெரிந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை..!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு தமிழ்ச் சினிமாவில் ஒரு சிறந்த இடம் காத்திருக்கிறது என்றே உறுதியாக நம்புகிறேன்..! அவரது யூனிட்டார் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்..!

அவசியம் பார்க்க வேண்டிய படம் மக்களே..! தவற விடாதீர்கள்..!


மாற்றான் - சினிமா விமர்சனம்

14-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

 ஒரு இயக்குநருக்கு சமூக அக்கறை தேவைதான்.. அதனை தான் இயங்கும் தளத்திலேயே வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் பாராட்டுக்குரியதுதான்.  ஆனால் அது இந்த அளவுக்கு இருக்கணுமா என்று கே.வி.ஆனந்த் தன்னையே ஒரு முறை கேட்டுக் கொள்ளலாம்..!




மரபணு ஆராய்ச்சியாளரான தனது தந்தை குழந்தைகளுக்கான பால் பவுடரில் ஆபத்தானவைகளைக் கலந்து விற்பனை செய்வதைக் கண்டறியும் மகன் சூர்யா, தனது தந்தையின் வியாபார முகமூடியை எப்படி கழட்டியெறிகிறார் என்பதைத்தான் நமது கழுத்தைத் திருகாத குறையாக உட்கார வைத்து கொன்றிருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

நிச்சயமாக இந்தப் படத்தில் அயன், கோ போன்று திரைக்கதையில் வித்தை காட்டிய படமில்லை.. சொத்தையாகிப் போன திரைக்கதையை வைத்து எத்தனைதான் நடிப்பைக் கொட்டினாலும் அத்தனையும் வீண்தானே..?  இரட்டை சூர்யாக்கள் கதையே முதலில் இதற்குத் தேவையே இல்லை.. ஒரு சூர்யாவே போதும்..! இடைவேளையின்போது தந்தையின் கோர முகம் தெரிய வர.. அடுத்த பகுதியில் அதனை கிழித்தெறியக் கிளம்பும் சூர்யாவாக கொண்டு போயிருந்தால் தியேட்டரில் சூர்யாவின் ரசிகர்கள் கை தட்டவாவது வாய்ப்புக் கிட்டியிருக்கும்..!

10 பேருக்கு பிறந்தவன்டா என்று கிளைமாக்ஸில் அப்பா சொல்லும் வசனத்தை முன்பே சொல்லியிருந்தால், கொஞ்சமாவது பீலிங்காவது வந்திருக்கும். சாகப் போகும்போது “சங்கரா, சங்கரா” என்ற ரீதியில் சொல்வது படத்திற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை..!  நல்ல ஆராய்ச்சியாளராக இருந்த தான், ஒரு அமைச்சரின் புறக்கணிப்பு.. அரசுகளின் கண்டு கொள்ளாமையால்தான் இப்படி கெட்ட ஆராய்ச்சியாளராக மாறியதாகச் சொல்வது நம்பும்படியாக இல்லை..!

1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகள் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைந்த நாடுகள் அணியாகப் போட்டியிட்டு மொத்தம் 112 மெடல்களை பெற்று முதலிடம் பெற்றன.. இதில் அதிக பதக்கங்களை வாங்கியது உக்ரைன் நாட்டு அணி. இந்தச் சின்ன விஷயத்தை மையமாக வைத்து எழுத்தாளர்கள் சுபா எழுதியிருக்கும் இந்தக் கட்டுக் கதையை கொஞ்சமும் நம்பும்படியாக கொடுக்கத் தவறிவிட்டார்கள்..!

ஒரு சீரியஸ் மேட்டரை சொல்லும்போது அதில் சிறிதளவாவது லாஜிக் இருக்க வேண்டும்..! உக்ரைன் விளையாட்டு வீரர்கள் சென்னையில் இருந்து சென்ற ஒரு ஆராய்ச்சியாளரின் அறிவுரையினால்தான் பதக்கங்களை வேட்டையாடினார்கள் என்றால் புத்தகத்தில் படிப்பதற்கு ஓகே.. ஆனால் விஷூவலாக பார்ப்பதற்கு நம்பும்படியான காட்சிகள் வேண்டுமே..? இதில் அதனை ச்சும்மா காமெடி காட்சிகள்போல ஜஸ்ட் லைக் தேட் டைப்பில் பேசியே நகர்த்தியிருக்கிறார்கள்..! இதுவும் திரைக்கதையின் தொய்வுக்கு ஒரு காரணமாகிவிட்டது..!

தீம் பார்க் சண்டையின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். அதேபோல் உக்ரைனில் நடைபெறும் சண்டையும் தேறவில்லை..! போதாக்குறைக்கு உக்ரைனில் சூர்யா, காஜலை பாலோ செய்யும் இரண்டு டீம்களையும் அடையாளப்படுத்துவதில் சுணங்கிவிட்டார் இயக்குநர்.. போலீஸ் இன்பார்மர் அங்கே வருவதற்கு என்ன அவசியம் என்றும் தெரியவில்லை..! அடுத்தடுத்து இவர்களுடைய திரைக்கதைக்கு ஏற்றாற்போல் அந்த நாட்டிலேயே உடனுக்குடன் முகவரியைக் கண்டுபிடித்து பேசுவதும், வருவதுமாக காட்சியமைப்பு சின்னப்புள்ளத்தனமாகவே இருக்கிறது..!

அப்பாவின் திசை திருப்பல் கதையைக் கேட்டு கோபப்பட்டு டைனிங் டேபிளை உடைத்தற்கு பதிலாக அப்பாவின் பல்லை உடைத்திருந்தால்கூட ரசிகர்களும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்..!  அந்த ஆவேச கோபத்தைக் கட்டுப்படுத்தி உக்ரைன் போய் நிரூபிக்க அனுப்பி வைத்திருக்கும் இயக்குநரின் மீதுதான் இப்போது கோபம் வருகிறது..!

கிளைமாக்ஸ் சொதப்பல் அதைவிட..! இதற்கெதற்கு குஜராத்..? இவரே சென்னைக்கு வந்து கம்பெனியை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு அப்பனின் திருட்டுத்தனத்தை வெளிப்படுத்தியிருந்தால் திரைக்கதை இன்னும் சூப்பராகத்தான் வந்திருக்கும்..! ம்ஹூம்.. சில வெற்றிகளைப் பெற்றவுடன் நாம் என்ன செய்தாலும், எப்படி கொடுத்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று சில இயக்குநர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்..! மிஷ்கின், விஜய் வரிசையில் மூன்றாவதாக இடம் பிடித்துவிட்டார் கே.வி.ஆனந்த்..!

சூர்யாவின் நடிப்பு மென்மேலும் மெருகேறி வருகிறது..! விமலன், அகிலன் நடிப்பில் வித்தியாசம் காட்டும் அளவுக்கு இருக்கும் காட்சிப்படுத்தலில் கஷ்டப்பட்டுத்தான் நடித்திருக்கிறார் சூர்யா.. விமலனைவிடவும் அகிலன் சூர்யாதான் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவர்கள் இரட்டையர்களாக இல்லாமல் இருந்திருந்தாலும் இன்னும் நல்ல பெர்பார்மென்ஸ் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது..! 

பல இடங்களில் அகிலனின் நக்கல் கமெண்ட்டுகள்தான் கொஞ்சமாவது பல்லைக் காட்டும் அளவுக்கு புன்னகைக்க வைத்தது..! போலீஸ் ஸ்டேஷனில் பெண் இன்ஸ்பெக்டருக்கு கடுக்கான் கொடுத்துவிட்டு, அவரையே புலம்ப வைக்கும் அந்தக் காட்சியும்.. காஜலிடம் ஜோடி சேர விமலனுக்கு கிளாஸ் எடுக்கும் தியேட்டர் காட்சியும் ஓகே..!

காஜல் இருந்த தைரியத்தில்தான் படம் முழுக்க உட்கார முடிந்தது..! பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று பார்த்தால் இந்தப் படம் முழுக்கவே காஜல்தான் போஸ்ட்வுமன் வேலையைச் செய்திருக்கிறார்.. அவருடைய கண்களே தனி கதையை பேசுகின்றன..! இந்தப் பொண்ணுக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தமான நடிப்பை வாங்கும் அளவுக்கு கேரக்டர்கள் இனிமேலாச்சும் கிடைக்கட்டும்..!

இங்கேயும் ஒரு கங்கை தாராவை கடைசியாக இந்தக் கோலத்தில்தான் பார்க்க வேண்டுமா..? ஒரு சூர்யாவை கொன்றுவிடலாம் என்று டாக்டர்கள் கொடுக்கும் அட்வைஸை தாரா அரைகுறை தூக்கத்தில் கேட்பது போன்ற அந்த ஒரு காட்சியை யாராவது உதவி இயக்குநர் இயக்கினாரா என்ற சந்தேகம் வருகிறது.. இப்படித்தானா பக்கென்று இராம.நாராயணன் ஸ்டைலில் கதையை நகர்த்துவது..? தோடா ராமா..?

சூர்யாவின் அப்பாவாக நடித்தவருக்கு வில்லத்தனம் பொருத்தமாகவே இருக்கிறது.. உக்ரைன் பெண்ணின் கேமிரா பேனாவை பிடிங்கிக் கொண்டு வார்த்தைகளால் விளாசும் அந்தக் கோபக்கார மனுஷனை அப்போது சந்தேகமே பட முடியவில்லை.. தாராவுடன் சண்டையிட்டு இன்னும் நல்லா சாப்பிடு என்று கோபப்படும் காட்சியிலும், டைவர்ஸ் கேட்டு தாரா செல்லும் அவளது அண்ணன் வீட்டிற்கே சென்று சமாதானப்படுத்தும் காட்சியிலும் தான் நல்லவன் என்ற அந்தத் தொனி குறையாமலேயே பார்த்துக் கொண்டிருக்கிறார்..!

5 கேரக்டர்களை மெயினாக வைத்து படம் முழுக்க உழைக்க வைத்திருக்கும் இயக்குநரின் நம்பிக்கையை பாராட்டத்தான் வேண்டும்..! ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வார்த்தைகளைக் காணாமல் இசை மட்டுமே காதில் ரீங்காரித்தது..! நார்வே நாட்டில் ஆடிப் பாடும் அந்த ஒரு காட்சியில் ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன்  தனித்து நிற்கிறார்.. அவ்வளவே..!  எதையாவது செய்து படத்தைத் தூக்கி நிறுத்தவும் என்று அனைத்தையும் எடிட்டரிடம் தள்ளிவிட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.. அவராலேயும் ரசிகர்களின் ஓட்டத்தை நிறுத்த முடியவில்லை.. முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும்போதே பேஸ்புக்கில் சில சுவையான பின்னூட்டங்கள் வந்தவண்ணம் இருந்தன..!

பாட்டு சீனில் சூர்யா அறிமுகம்  - விசில் சத்தம்..

கிச்சுகிச்சு மூட்டுறாங்கப்பா..

மயான அமைதி..

இடைவேளையாம்.. ஐயோ இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்காம்ல..

நல்லவேளை காஜலுக்கு மட்டும் உக்ரைன் மொழி தெரியலை.. நாம செத்தோம்..!

மீண்டும் மயான அமைதி..

கை தட்டுவது எப்படி..? மறந்து விட்டார்கள் ரசிகர்கள்..!

அப்பாடி.. ஒரு டான்ஸ் ஆரம்பிச்சிருச்சு. குட்டு நைட்டு..!

இந்தியா வந்தாச்சு.. உடனேயே குஜராத்துக்கு கிளம்பிட்டோம்..!

எலிக் குகை பார்த்ததுண்டா..? நாங்க கண்ணால பார்க்குறோம்..!

ஐ ஜாலி.. படம் முடிஞ்சிருச்சாம்.. கெளம்பிட்டோம் வீட்டுக்கு..!

- இப்படி வகை, வகையாக போட்டிருந்த கமெண்ட்டுகளெல்லாம் முதலில் எரிச்சல்படுத்தினாலும், நாமளே படம் பார்க்கும்போது இதையேதான் சொல்லணும்னு தோணுச்சு..!

ஒரு சிறப்பான சமூக நோக்குடன் கூடிய இந்தக் கதையை வழக்கமான பாணியிலேயே கொண்டு சென்று கமர்ஷியல் கம்மர் கட்டாக கொடுத்திருக்கலாம்.. இயக்குநரின் திரைக்கதை சொதப்பல் படத்தை வெற்றிப் படம் என்று சொல்ல முடியாமல் தடுக்கிறது..! அடுத்தப் படத்தில் அண்ணன் கே.வி.ஆனந்த் நிச்சயம் ஜெயிப்பார் என்றே நம்புகிறேன்..!

இயக்குநர் ஏ.ஜெகந்நாதன் - அஞ்சலி

10-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கடந்த 7-ம் தேதி காலை திரையுலக பி.ஆர்.ஓ. நண்பர் விஜயமுரளி அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி தமிழ்த் திரையுலகத்தில் அரை நூற்றாண்டு காலமாக பணியாற்றிய ஒரு இயக்குநரின் மரணத்தை தெரிவித்தது..! ஆனால் அந்த இயக்குநரின் 50 வருட கால சினிமா வாழ்க்கையைப் பற்றி கோடம்பாக்கம் அதிகம் அறிந்திருக்கவில்லை. அந்த மனிதரும் அதைப் பற்றி இறுதிவரையிலும் கவலைப்பட்டவரில்லை..!

நண்பர் எஸ்.ராமகிருஷ்ணனின் கை காட்டலில் நான் அறிந்து கொண்ட ICAF என்னும் அமைப்பில் சேர்ந்து உலகப் படங்களை ஆர்வத்துடன் கண்டு கொண்டிருந்த நேரம்..! ஒரு வெளிநாட்டு பட விழாவைத் துவக்கி வைக்க மேடையேறி முதன்முதலாக எனக்கு அறிமுகமாகியிருந்தார் இயக்குநர் ஏ.ஜெகந்நாதன். 





அந்த நிகழ்ச்சியில் அவருடைய பேச்சுதான் கலகலப்பு.. அவ்வளவு சுவாரஸ்யமாகவும், நகைச்சுவை பொங்கவும் பேசி கூட்டத்தைக் கவர்ந்திருந்தார். “இவர்தான் மூன்று முகம் இயக்குநர்” என்று இயக்குநர் வேதம் கே.கண்ணனால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட அந்த நாளில் இருந்து, சென்ற மாதம் நான் கடைசியாகப் பேசியவரையிலும் என் மீது அன்பு காட்டி, நட்பு வைத்திருந்து ஒரு நல்ல நண்பனாகவே இருந்து வந்திருக்கிறார் இந்தப் பெரியவர்.

என்னுடைய ஜாதகத்தைக் கேட்டறிந்ததில் இருந்து இவர் என்னை அழைத்தது “லூட்டி சரவணன்” என்றுதான்..! “வீட்டுக்கு வீடு லூட்டி' சீரியலை நானும் பார்த்திருக்கேன்.. நீங்கதான் எழுதினதா..? நல்லாயிருந்துச்சே.. அப்புறம் ஏன் நிறுத்துனீங்க..?” என்றவர் என் முன்பாகவே தனது செல்போனில் “சரவணன் லூட்டி” என்று என் பெயரை பதிவு செய்த தினத்தையும் நான் மறக்க முடியாததுதான்..!

கோடம்பாக்கம் இயக்குநர்கள் காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆட்டோவில் பிலிம் சேம்பர் வரும் இவருடன்தான் பெரும்பாலான நேரங்களில் நான் அருகே அமர்ந்து உலகப் படங்களை ரசித்திருக்கிறேன். நான் முதலில் சென்றால் இவருக்கும், இவர் முதலில் சென்றால் எனக்குமாக சீட் போட்டு வைக்கும் அளவுக்கான நட்பு கடைசிவரையிலும் இருந்தது..!

படம் முடிந்தவுடன் என்னுடைய TVS XL Super-ல் நானே அவரது வீட்டில் அவரை டிராப் செய்வேன்.. “உன் வண்டி என்னைத் தாங்குமா..?” என்று முதல் முறை மட்டுமே கேட்டார். அடுத்த முறைகளெல்லாம் “நீ எங்க உக்காந்தாலும், படம் முடிஞ்சவுடனே வாசல்ல வந்து நில்லு.. உன் வண்டிலதான் நானும் வருவேன்..” என்று உரிமையுடன் கேட்டு பல நாட்கள் என்னுடன் பயணம் செய்திருக்கிறார்..

எம்.ஜி.ஆர்., சிவாஜி, சிவக்குமார், ஜெய்சங்கர், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று முன்னணி ஹீரோக்கள் அனைவரையும் வைத்து படம் இயக்கியவருக்கு, சில காலம் நான் சாரதியாக இருந்த அந்த நேரத்தை இப்போது நினைத்தாலும் பெருமையாகத்தான் இருக்கிறது..! 

என்னுடைய நிலையில் இருந்து பார்த்தால்தான் இது புரியும். அன்றைய நாளில் ஒரேயொரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த ஒரு புதிய இயக்குநரிடம் இதே உலகப் பட விழாக்களில் நட்பு பாராட்டச் சென்று நான் அருகில் சென்றவுடனேயே “கொஞ்சம் திங்க் பண்ணிக்கிட்டிருக்கனே..!” என்று முகத்தில் அடித்தாற்போல்  ஜாதி வெறியையும் தோற்கடிக்கும் திமிர்ப் பேச்சைக் கேட்டு நொந்து போயிருக்கிறேன்.. இன்னொரு புதிய இயக்குநர். எனக்கு நல்ல அறிமுகம். அவரது படத்தின் ஸ்கிரிப்ட்டைகூட நான் டைப் செய்து கொடுத்திருக்கிறேன். அரங்கத்தில் அவர் அருகே சீட் உள்ளது என்று எதேச்சையாக அறிந்து அருகில் அமர்ந்து “ஹலோ ஸார்..” என்று சொன்னவுடனேயே லேசாக புன்சிரிப்பை மட்டுமே உதிர்த்துவிட்டு, விருட்டென எழுந்து 2 சீட்டுக்கள் பின்னால் போய் அமர்ந்து என்னை அவமானப்படுத்தியதையும் மறக்க முடியாது..!

யாரோ, ஊர் பேர் தெரியாத அனாதைகள் கூட்டத்தில் ஒருவனாக, சினிமா ரசிகனாக மட்டுமே பிலிம் சேம்பரில் முகத்தைக் காட்டியிருக்கும் எனக்கு இப்படியொரு பெரிய இயக்குநர் நண்பராக இருந்தது அந்த நேரத்தில் எனக்குக் கிடைத்த ஒரு டானிக்கும்கூட..!

“சாயந்தரமா வீட்டுக்கு வாங்க.. நிறைய பேசலாம்..” என்பார்.  அவருடைய மனைவி வந்து “டைம் ஆச்சு..” என்று சொல்லும்வரையிலும் பேசிக் கொண்டேயிருப்பார். கோடம்பாக்கத்தில் மட்டுமல்ல.. பொதுவாகவே வயதானவர்கள் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிலும் உழைப்பாளிகளாக தங்களை இந்தச் சமூகத்தில் நிலை நிறுத்திக் கொண்டவர்கள் தங்களுடைய அனுபவங்களை யாரிடமாவது பகிர வேண்டும் என்று நினைக்கிறார்கள். துரதிருஷ்டம் வேகமாக வர.. அதிர்ஷ்டம் ஓடத்தில் வரும் என்பதை போல இந்தப் பாக்கியம் பலருக்கும் கிடைப்பதில்லை..!

“என்னோட திரையுலக வாழ்க்கை அனுபவங்களை எழுதறதுக்கு ஒரு பத்திரிகை கிடைக்கலை.. ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா..?” என்றார்..! அப்போது விகடனில் இது பற்றி கேட்டுப் பார்த்தேன். வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக 'தினகரனி'லும், 'கல்கி'யிலும் கொஞ்சம், கொஞ்சமாக எழுதினார்.  மிச்சம், மீதியாக பல விஷயங்களை அவரது இல்லத்திலும், பிலிம் சேம்பரிலும், உலக திரைப்பட விழாக்கள் நடைபெற்ற ஆனந்த், உட்லண்ட்ஸ், பைலட் தியேட்டர்களிலும் அவருடன் பேசியதும், பழகியதும், தெரிந்து கொண்டதும் இன்றைக்கும் மனதில் பசுமையாகவே இருக்கிறது..!

ஏ.ஜெகந்நாதன் தனது சினிமா வாழ்க்கையை 1958-ம் ஆண்டு ஜூபிடர் பிக்சர்ஸில் இருந்துதான் துவக்கியிருக்கிறார். இயக்குநர்  டி.பிரகாஷ்ராவ் அந்தச் சமயத்தில் ஜூபிடரில் “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். ஏ.ஜெகந்நாதன் முதலில் துணை இயக்குநராகப் பணியாற்றியதும் இந்தப் படத்தில்தான்.! இந்தப் படம் முடியும்போது அப்படத்தின் கதாசிரியர் வித்வான் மா.லட்சுமணன், இவரின் சுறுசுறுப்பான வேலைகளினால் கவரப்பட்டு, இயக்குநர் ப.நீலகண்டனிடம் இவரை உதவியாளராகச் சேர்த்துவிட்டார். அப்போதிலிருந்துதான் தனக்கு சுக்ரதிசை திரும்பியதாகச் சொன்னார் ஜெகந்நாதன் ஸார்.

“வரிசையா எம்.ஜி.ஆர். படம்.. 'காவல்காரன்', 'கண்ணன் என் காதலன்', 'மாட்டுக்கார வேலன்', 'ராமன் தேடிய சீதை', 'என் அண்ணன்', 'சங்கே முழங்கு', 'கணவன்', 'நீரும் நெருப்பும்', 'நல்லவன் வாழ்வான்', 'ஒரு தாய் மக்கள்'ன்னு ப.நீலகண்டன் இயக்கிய அத்தனை படங்களிலும் நான் வேலை செஞ்சேன். அப்போ எம்.ஜி.ஆர். படத்துல கரெக்ட்டா பேமெண்ட் வந்திரும்.. அதுனால எனக்கு அடுத்தடுத்த பல வருடங்கள் சோத்துக்குப் பஞ்சமில்லாம போச்சு.. நான் இந்த கோடம்பாக்கத்துல ஸ்டெடியா நின்னதுக்கு ரொம்ப பெரிய காரணம் இது ஒண்ணுதான்.. இடைல இடைல டி.பிரகாஷ்ராவ் ஸாரும் வெளிப்படங்கள் செய்யும்போது என்னைக் கூப்பிட்டுக்குவாரு.. நான் நீலகண்டன்கிட்ட சொல்லிட்டுப் போயிட்டு வருவேன்.. ‘படகோட்டி’ படத்துல என்னை இணை இயக்குநரா பிரமோஷன் கொடுத்து பெருமைப்படுத்தினாரு பிரகாஷ்ராவ்..” என்று நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

“தொட்டால் பூ மலரும்” பாடல் ஷூட்டிங் எடுக்கப் போகும்போது அதை எப்படி எடுக்கலாம்ன்னு பிரகாஷ்ராவ் ஒரு ஐடியா பண்ணிட்டு வந்திருந்தாரு..! ஆனா இயக்குநர் வரும்போது எம்.ஜி.ஆர். ரொம்ப யதார்த்தமா தென்னை மரத்துல கையை வைச்சு அந்தப் பாட்டை பாடி ஹம்மிங் பண்ணிக்கிட்டிருக்கிறதை தூரத்துல இருந்து பார்த்தாரு.. என்ன நினைச்சாரோ தெரியலை.. என்னைக் கூப்பிட்டு “ஏன் அதையே ஸாங் லீடிங்கா நாம வைச்சுக்கக் கூடாது?”ன்னாரு..! அப்படி திடீர்ன்னு உருவானதுதான் அந்தப் பாடலின் துவக்க வரிகளின் காட்சிகள்.. இப்போதும் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி ரொமான்ஸ்களில் இந்தப் பாடலும் தனியிடத்தைப் பிடிச்சிருக்கு...” என்றார்.

1958-ம் ஆண்டில் இருந்து இயக்குநர் பணியைக் கற்றுக் கொண்ட இவருக்கு முதல் வாய்ப்பை வழங்கியது எம்.ஜி.ஆரின் முதலாளி ஆர்.எம்.வீரப்பன்தான்.. சின்ன பட்ஜெட்டில் தனது மகள் செல்வி பெயரில் துவங்கிய புது கம்பெனிக்காக ஒரு படத்தைத் தயாரிக்க முன் வந்த ஆர்.எம்.வீ., “ஜெகந்நாதனை இந்தப் படத்தை இயக்கச் சொல்ல்லாமா?” என்று எம்.ஜி.ஆரிடமே கேட்டுவிட்டுத்தான் இந்தப் பணியினை இவருக்கு வழங்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் துவக்க விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆர். ஜெகந்நாதனை பெரிதும் பாராட்டிவிட்டு, “இவருடைய பணியினை நான் நன்கு அறிவேன்.. மிகச் சிறந்த உழைப்பாளி. என்னோட ஸ்டூடண்ட் மாதிரி.. ப.நீலகண்டனிடம் பணியாற்றிய போது இவரது திறமையைப் பார்த்து நான் பெரிதும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்..” என்றெல்லாம் சொல்லி புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இதுவே மிகச் சிறந்த விஸிட்டிங் கார்டாகிவிட்டது இவருக்கு..!




இந்த ‘மணிப்பயல்’ படம்தான் திராவிட இயக்கத்தினருக்கும் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது ஜெகந்நாதன் ஸார் செய்த புண்ணியம் என்றே சொல்ல வேண்டும். மாஸ்டர் சேகரின் நடிப்பில் பேரறிஞர் அண்ணாவின் புகழ் பாடும் புலமைப்பித்தன் எழுதிய அந்த புகழ் பெற்ற வாழ்க்கை வரலாற்றுப் பாடல் காட்சி இந்தப் படத்தில்தான் இடம் பெற்றிருந்தது..! 'வங்கக் கடல் அலையே வாய் மூடித் தூங்குமெங்கள் தங்கத் தமிழ் மகனைத் தாலாட்டிப் பாடினையோ..” என்ற இந்த வரிகளைக் கேட்டு கண் கலங்காத ரசிகர்கள் இருந்திருக்க முடியாது..!  “அண்ணா.. அண்ணா.. எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா…” என்ற இந்தப் பாடல் இன்றுவரையிலும் அண்ணாவின் தம்பிகளுக்குப் பிடித்தமானதே..!

இதற்குப் பின் “உனக்கு ஒரு படம் பண்ண வாய்ப்பு தரேன்..” என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்த இடைவேளையில்தான், ஜெய்சங்கரின் ‘இதயம் பார்க்கிறது’ என்ற சின்ன பட்ஜெட் படத்தையும் இயக்கியிருக்கிறார். இதற்குப் பின் எம்.ஜி.ஆரின் ‘இதயக்கனி..!’ சஸ்பென்ஸ் காட்சிகளோடு, எம்.ஜி.ஆரின் அதே அம்மா சென்டிமெண்ட்.. காதல் களியாட்டங்கள்.. அவரது புகழ் பாடும் காட்சிகள் என்று ‘ஏ கிளாஸ் எம்.ஜி.ஆர் படம்’ என்ற பெயரை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்குப் பிறகு இந்தப் படம்தான் பெற்றது..!

படத்தின் துவக்கக் காட்சியில் வரும் “நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற..” பாடல் எம்.ஜி.ஆருக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது..!  இந்தப் படத்தை சிறப்பான முறையில் இயக்கியதற்காக எம்.ஜி.ஆரிடமிருந்து பரிசாக வாங்கி ஜெகந்நாதன் ஸார் அணிந்திருந்த, அந்த கைக்கடிகாரத்தை அடிக்கடி தொட்டுப் பார்ப்பேன்.. சிரிப்பார்.. அதைப் பற்றிப் பேசினாலும், எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசினாலும் பேசிக் கொண்டேயிருப்பார். அதற்குள் வீடு வந்துவிட்டால், “நாளைக்கு மிச்சத்தைச் சொல்றேன்..” என்று பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்..!

அப்படி அவர் பாதியிலேயே சொல்லாமலேயே விட்டுவிட்டது “இன்பமே..” பாடல் காட்சியை ஷூட் செய்த தினங்களில் வி.என்.ஜானகி அம்மாளை ஸ்பாட்டுக்கு தன்னுடன் வர விடாமல் செய்ய எம்.ஜி.ஆர். செய்த சதி வேலைகள்..! பாதிதான் சொன்னார் இயக்குநர்.. மீதி, இனியும் கேட்க முடியாது..!

அந்தப் பாடல் காட்சி என்றில்லை.. “அந்தப் படம் முழுவதுமே ராதாசலூஜா காட்டிய கவர்ச்சி மிகவும் அதீதமாக இருந்ததே..?” என்றேன்.. “அப்போ எம்.ஜி.ஆரை.. எல்லா லேடீஸும் தன்னோட ஹஸ்பெண்ட்டாவே நினைச்சு ரசிச்சுக்கிட்டிருந்தாங்க. அதுனாலதான் எம்.ஜி.ஆரை வைச்சு படம் பண்ற அத்தனை இயக்குநர்களும் கதாநாயகிகளை கவர்ச்சியாவே காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. விநியோகஸ்தர்களும் இதைத்தான் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் விரும்புறதாவே சொன்னதால எங்களுக்கும் வேற வழியில்லாம போச்சு..” என்றார்..!

இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட்டுக்கு பின்பும் தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம்.. “அடுத்த 2 வருடங்கள் மட்டுமே எம்.ஜி.ஆர். நடித்தார்.  அதிலும் என்னுடைய குருநாதர் நீலகண்டனே எம்.ஜி.ஆரின் 2 படங்களை இயக்குவதற்காக காத்திருந்தார். கே.சங்கர், ஸ்ரீதர் தலா ஒரு படம் பண்ணினாங்க.. அதுக்குள்ள எம்.ஜி.ஆரும் தேர்தல்ல ஜெயித்து முதலமைச்சராகிவிட்டதால் ஒரு படம் செஞ்சாலும், மறக்க முடியாத படமா செஞ்சுட்டதா இப்போவரைக்கும் எனக்கு பெருமைதான்..” என்றார்..

“இப்படியே டைப் அடிச்சுக் கொடுத்திட்டு காலத்தை வீணாக்காத.. ஏதாவது சினிமா கதை இருந்தா சொல்லு.. நான் யார்கிட்டயாச்சும் சொல்றேன்.. அப்படியாச்சும் உள்ள நுழைஞ்சு பொழைச்சுக்கோ..” என்றார் ஜெகந்நாதன் ஸார். அப்போதும், இப்போதும் என்னிடம் ஒரு கதை இருந்தது. இருக்கிறது.. “அது மலையாளத்துல பண்ணா நல்லாயிருக்கும்.. நீங்க வேண்ணா படிச்சுப் பாருங்க ஸார்.. புடிச்சிருந்தா யார்கிட்ட வேண்ணாலும் சொல்லுங்க..” என்று சொல்லி அந்தக் கதையைக் குடுத்தேன். படித்துப் பார்த்துவிட்டு மறுநாள் போன் செய்து என்னை வீட்டுக்கு கூப்பிட்டார்.

போனவனை காபியோடு வரவேற்று உட்கார வைத்து, “படிச்சேன்.. நீ சொன்ன மாதிரி இது தமிழுக்கு சூட்டாகாது. மலையாளத்துக்குத்தான் ஆகும்.. வேண்ணா பாலாஜிகிட்ட சொல்லலாமா..?” என்று கேட்டுவிட்டு என்னை கேட்காமலேயே போனை எடுத்து டயல் செய்தார்.. ரிங் போய்க் கொண்டேயிருந்தது.. எடுக்க ஆளில்லை போலும்.. போனை வைத்துவிட்டு, “ரொம்ப வருஷமாச்சு பாலாஜிகிட்ட பேசி.. அவரோட தயாரிப்புல ஒரு படம் செஞ்சேன். பாதி படம் செஞ்சுக்கிட்டிருக்கும்போதே அதே கதையை எனக்குத் தெரியாமலேயே தெலுங்குல செய்ய ரைட்ஸ் கொடுத்திட்டாரு பாலாஜி.. இது எனக்கு ரொம்பக் கோவமாகி காச் மூச்சுன்னு கத்திட்டேன்.. அன்னிக்கு பேசினதுதான்.. இப்போதான் உனக்காக பேசப் போறேன்..” என்று சொல்லிவிட்டு மீண்டும், மீண்டும் டயல் செய்தார். ஆளில்லை போல தெரிய.. “சரி விடு.. நாளைக்கு நான் பேசிட்டு சொல்றேன்..” என்றார்.. எனக்காக இத்தனை வருட பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு வந்து தனது ஈகோவை கைவிட எத்தனித்த அவருடைய அந்த நிமிடத்தை இப்போது நினைத்தால் பெருமையாக உள்ளது.. கடைசியில் அவர் திரு.பாலாஜியிடம் பேசிவிட்டு பின்பு என்னிடமும் சொன்னார். “நீ அவரை போய்ப் பாரு..” என்றார். நான் திரு.பாலாஜிக்கு  போன் செய்த நேரம் அவருக்கு மிகவும் துரதிருஷ்டமான நேரம்.. அத்தோடு நான் அதை விட்டுவிட்டேன்..!

‘இதயக்கனி’க்கு பின்பு பிலிம் நியூஸ் ஆனந்தன் தொகுத்தளித்திருக்கும் லிஸ்ட்படி பார்த்தால் பல படங்களை ஜெகந்நாதன் இயக்கியிருந்தாலும் முழு தகவல்களைத் திரட்ட முடியவில்லை. நான் நேரிலும் கேட்டபோது “அதையெல்லாம் நோட் போட்டு எழுதி வைச்சிருந்தேன். வெள்ளையடிக்கும்போது எங்கோ மிஸ்ஸாயிருச்சு.. இப்போ எனக்கே மறந்து போச்சு” என்றார்.. ‘ஆயிரம் வாசல் இதயம்’, ‘குமார விஜயம்’, ‘நந்தா என் நிலா’, ‘குரோதம்’, ‘முதல் இரவு’, ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’ போன்ற படங்களை இயக்கியிருப்பது தெரிகிறது.. இதில் ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’ படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். ‘சின்னச்சாமி’ என்ற பாரதிராஜாவின் ஒரிஜினல் பெயர்தான் டைட்டிலில் வருமாம்..!

'குரோதம்' படத்தில் இவர் அறிமுகப்படுத்திய மலேசிய நடிகர் பிரேமை நீங்கள் மறந்திருக்க முடியாது..! இந்தப் படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியிருக்கிறது.  “முதல் இரவு” படத்தில் சிவக்குமார், சுமித்ரா நடித்திருந்தார்கள். “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்” என்ற பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றிருந்தது.. இந்தப் பாடல் காட்சியை படமாக்கியிருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னேன்..  “ஊட்டியில் மாலை மயங்கிய நேரங்களிலேயே இந்தப் பாடல் காட்சியை படமாக்கியதாகவும், இளையராஜாவின் அற்புதமான இசைதான் பாடலை ஹிட்டாக்கிவிட்டது..” என்றார்..! “சிவக்குமாருக்கு அப்போதைய காலக்கட்டத்தில் பொருத்தமான ஜோடி சுமித்ராதான்.. படம் சரியாப் போகலைன்னாலும் எனக்கும், சிவக்குமாருக்கும் இந்தப் படத்துல ஆத்ம திருப்தி..” என்றார்..!

8 ஆண்டுகளுக்கு முன்பாக உலக திரைப்பட விழா சென்னையில் துவங்கியபோது மிக ஆர்வமாக கலந்து கொண்டவர், கடைசியாக சென்ற ஆண்டு வரையிலும் தினம் தவறாமல் வந்திருந்து படங்களை பார்த்துச் சென்றார். சென்ற ஆண்டுதான் கடைசி ஆண்டோ தெரியவில்லை.. இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமனும், ஜெகந்நாதன் ஸாரும்தான் போன வருஷம் முழுக்க ஜோடி போட்டு உட்லண்ட்ஸ் தியேட்டர்ல சுத்தினாங்க..! நான் தியேட்டருக்குள் வேக வேகமா படியேறும்போதே அவரிடமிருந்து போன் வரும். “மிஸ்டர் லூட்டி சரவணன்.. உட்லண்ட்ஸ்ல படம் போர்.. சிம்பொனிக்கு வாங்க.. அங்கதான் உக்காந்திருக்கேன்..” என்பார். சமயங்களில் பல முக்கியத் திரைப்படங்களை முன்பே பார்த்திருப்பதால் “அந்தப் படத்துக்கு போங்க.. இந்தப் படத்துக்கு போங்க..” என்று அவரே திசை திருப்பிவிடுவார்..!

முதல் 2 உலகப் பட விழாக்கள் ஆனந்த் தியேட்டரில் நடந்தபோது நான் வெட்டி ஆபீஸராக இருந்தேன். அப்போதெல்லாம் தினம்தோறும் எனக்கு மதியச் சாப்பாடும், மாலை சிற்றுண்டியும் ஜெகந்நாதன் ஐயா வழங்கியதுதான்..! இப்போதும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்..! ஆனந்த் தியேட்டரில் அன்றொரு நாள் பார்த்த ஒரு படம் மிக மிக வித்தியாசமாக படத்தின் கிளைமாக்ஸே 4 விதமாக இருந்தது.. கடைசி 5 நிமிடங்கள் ரசிகர்கள் அனைவரும் நின்று கொண்டுதான் இருந்தோம். அப்படியொரு சுவாரஸ்யம்..!

வண்டியில் வீட்டிற்கு போகும்வழியில் பாம்குரோம் பக்கத்தில் இருக்கும் செட்டி நாடு ஹோட்டலுக்கு விடச் சொன்னவர்.. அங்கேயே எனக்கு இரவு டிபன் வாங்கிக் கொடுத்து அந்தப் படத்தைப் பற்றி ரீல் பை ரீல் பாராட்டிப் பேசினார்..! “இப்படியெல்லாம் எடுக்கணும்யா.. எங்க நம்ம ஆளுக ரசிச்சானுங்கன்னா எடுக்கலாம்.. யாருய்யா நஷ்டப்பட்டு கை தட்டலுக்காக படம் எடுக்க முன் வரப் போறாங்க..?” என்று பெரிதும் வருத்தப்பட்டார்..!

உதவி செய்வதும், கை காட்டுவதும்.. கனிவாகப் பேசுவதும்.. ஒரு புறத்தில் இருந்தாலும் சுயமரியாதையில் மிக உறுதியாகவே இருந்தார் ஐயா.. நான் எப்போதும் எனது குருநாதர் கே.பி.யை பெயர் குறிப்பிடாமல், “டைரக்டர்” என்றே சொல்வது வழக்கம்.  ‘மின்பிம்பங்கள்’ காலம் தொட்டே இப்படித்தான்..! இவரிடமும் பேசும்போது “இன்னிக்கு டைரக்டரை பார்த்தேன் ஸார்.. டைரக்டர்கிட்ட பேசுனேன் ஸார்..” என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் திடீரென்று கோபப்பட்டு, “ஏம்ப்பா இங்க பாலசந்தர் மட்டும்தான் டைரக்டரா..? மத்தவன்லாம் அஸிஸ்டெண்ட்டா..? என்ன.. எப்போ பார்த்தாலும் ‘டைரக்டர்’.. ‘டைரக்டர்’ன்னுட்டு..!” என்று சிடுசிடுத்தார்..

அவரது கோபத்தை எதிர்பார்க்கவில்லை என்றாலும், பதில் சொல்ல முடியாமல் நிற்க.. இன்னும் கோபமானார்.. “என்னய்யா டைரக்டர் அவரு(கே.பாலசந்தர்)..? ஒரு ஷாட்கூட ஒழுங்கா வைக்கத் தெரியாது..! நாங்க எடுத்ததெல்லாம் சினிமாய்யா.. அவர் எடுத்தது சினிமாவா..? இங்கேயும் வந்து நாடகம் மாதிரியே டைம் லேப்ஸ் கொடுத்து கிடைச்ச கேப்புல காலண்டரை காட்டுறது.. காலை காட்டுறது.. பொம்மைய காட்டுறதுன்னு  டயலாக் டெலிவரிக்கு டைம் கொடுத்தே, தமிழ்ச் சினிமாவையும் நாடமாக்கிட்டாரு.. இதுல என்னய்யா சினிமாத்தனம் இருக்கு..?” என்று பொங்கித் தீர்த்துவிட்டார்..!

மெளனமாக அவர் சொன்னது முழுவதையும் தாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தவனை இரவு 11 மணிக்கு கைப்பேசியில் மீண்டும் அழைத்தார் ஜெகந்நாதன் ஸார். “அது வந்து.. ஏதோ கோபத்துல சொல்லிட்டேன்.. நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க.. அவர்கிட்ட சொன்னாலும் எனக்கொண்ணும் ஆட்சேபணையில்லை.. சொல்லலைன்னாலும் வருத்தப்பட மாட்டேன்.. அவரோட மேக்கிங் ஸ்டைல் பத்தி என்னோட கருத்து இதுதான்.. கொஞ்சம் ஸ்பீடா சொல்லும்போது வேற மாதிரி வந்திருச்சு. உங்களுக்கு ஒண்ணும் கோபமில்லையே..?” என்றார் 75 வயது நிரம்பிய அந்த முதியவர்..! இப்போது நினைத்து பார்த்தாலும் இதில் கோபிக்க ஏதுமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது..!

1982-ம் வருடம் ஜெகந்நாதன் ஸாரின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு திருப்பு முனை.  சத்யா மூவிஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த 'மூன்று முகம்' படத்தை ஜகந்நாதன் டைரக்ட் செய்தார்.  ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்ற இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்த ரஜினியின் கேரக்டர் ஸ்கெட்ச்தான் படமே..! இந்தப் படத்தின் கதையை ரஜினியிடம் சொன்னபோது, “பிறந்த நாள் கேக்கை வெட்டும்போது அந்தத் தீச்சுவாலையில்  பிளாஷ்பேக் கதை விரியும்..” என்று ஜெகந்நாதன் ஸார் சொன்னபோது, ரஜினி கை தட்டி ரசித்தாராம்.. “இது நல்லாயிருக்கு ஸார்.. கண்டிப்பா நல்லா வரும் ஸார்..” என்று முதலிலேயே ரெடியாகிவிட்டாராம்..!

முதலில் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டருக்கு ரவிச்சந்திரன்தான் நடிப்பதாக இருந்ததாம்.. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவர் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட அதையும் ரஜினியே செய்யட்டுமே என்று ஆர்.எம்.வீ.யும் கதை இலாகாவினரும் சொல்லிவிட்டார்களாம்.. அந்த கேரக்டருக்காக தனி ஸ்டைல் இருந்தால் நல்லாயிருக்குமே என்று ஜெகந்நாதன் ஸார் விருப்ப்ப்பட்டிருக்கிறார். “நீங்க சொல்லுங்க ஸார்.. செஞ்சு பார்த்திருவோம்..” என்று ரஜினியும் ஓகே சொல்லி “இதுவரைக்கும் வேகமாக பேசித்தான் நடிச்சிருக்கேன்.. அதே ஸ்பீட்ல நடந்தா நல்லாயிருக்குமா..? செஞ்சு பார்க்கலாமா..?” என்று ப்ளோரிலேயே பல முறை நடந்து காட்டினாராம்.. இதுவும் போதாமல், மேக்கப் அறையில்கூட குறுக்கும், நெடுக்குமாக நடந்து பார்த்துவிட்டு “இப்போ ஓகே ஸார்..” என்றாராம்..! “அந்த ஸ்டைல்தான் படமே..! அதுனாலதான் படம் ஜெயிச்சது.. நான் திரும்பவும் ஜெயிச்சேன்..” என்றார்..!

“ரஜினி அதுக்கப்புறம் பல நேரம் திடீர், திடீர்ன்னு போன் செய்வாரு.. அப்புறம் போனே செய்றதில்லை.. ரொம்ப நாளாச்சு..  செளந்தர்யா கல்யாணத்துல பார்த்ததுதான்..” என்ற வருத்தத்தில் இருந்த ஜெகந்நாதன் ஸாரை, இன்னும் கொஞ்சம் கோபப்பட வைத்துவிட்டார் ரஜினி.

இயக்குநர்கள் சங்க ஆண்டு விழாவில் ஜெகந்நாதன் ஸார் ரஜினியின் அருகில் சென்று பேச முயல.. “ஓகே.. ஓகே..” என்று வழக்கம்போல ஆசீர்வாதம் செய்வது போல சொல்லி  மறுதலித்துவிட்டார் ரஜினி. ஏற்கெனவே நடு ராத்திரியில் மேடையேற்றிய கோபத்தில் இருந்த ஜெகந்நாதன் ஸாருக்கு இது இன்னுமொரு கோபமாகிவிட்டது.. “என்ன சரவணா இது..? ச்சும்மா தலையை ஆட்டி.. ஓகே ஓகேன்னா என்ன அர்த்தம்..? அவர்ல்ல எந்திரிச்சு வந்து என்னை விசாரிக்கணும்.. நானே தள்ளாடிக்கிட்டு நடந்து வர்றேன். ஏதோ மூணாம் மனுஷன் மாதிரி பேசினா எப்படி...?” என்று மிகவும் வருத்தப்பட்டார்..!

இதுவும் கொஞ்ச நாள்தான்..! இதற்குச் சில நாட்கள் கழித்து ரஜினி தனது வீட்டில் தன்னை வைத்து இயக்கிய பெரிய இயக்குநர்கள்.. தனக்கு நெருக்கமான திரையுலகப் பிரமுகர்கள் அனைவரையும் அழைத்து ஒரு விழா எடுத்தார்..! இந்த விழாவுக்கு ஜெகந்நாதன் ஸாருக்கும் அழைப்பு வந்தது. லதா ரஜினியே போன் செய்து அழைத்திருந்தார். விழாவுக்கு போய்விட்டு வந்து அன்று மாலையே என்னை போனில் அழைத்து சந்தோஷப்பட்டார்..!

“இன்னிக்கு ரஜினியை பார்த்தேன் சரவணன்.. நல்லா பேசினாரு.. ‘உடம்பை பார்த்துக்குங்க’ன்னு சொன்னாரு..  ‘உங்களை நிறைய மிஸ் பண்ணிட்டேன்’னு சொன்னாரு.. எனக்கும் வருத்தமாத்தான் இருந்தது.. ‘எனக்கு உடம்புக்கு முடியலை. இல்லாட்டி உங்களை அடிக்கடி வந்து பார்ப்பேன்’னு சொன்னேன்.. ‘இல்ல.. இல்ல.. நீங்க வீட்ல ரெஸ்ட் எடுங்க.. போன்ல பேசுவோம்’னு சொன்னாரு..! அவருக்கு உ.வே.சா. பத்தின புத்தகத்தை பரிசா கொடுத்தேன்..! உங்காளும்(கே.பி.) வந்திருந்தாரு.. ரொம்ப நாள் கழிச்சு அவர்கிட்டேயும் பேசினேன்.. அவருக்கும் ஒரு புத்தகத்தை பரிசா கொடுத்திட்டு வந்தேன்..! ஆனா உன்னைப் பத்தி எதுவும் சொல்லலை.. ரஜினி வாசல்வரைக்கும் வந்து வழியனுப்பி வைச்சாரு.. ஐ ஆம் ஸோ ஹேப்பி..!” என்றார்.

அடிப்படையில் ஜெகந்நாதன் ஸார் கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் இரண்டாம் பேட்ச் மாணவர். பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்தவர்.. தமிழ் இலக்கியத்தில் நிரம்ப ஆர்வம் கொண்டவர்.. அதிலும் சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர்.. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர். சென்னையில் உ.வே.சா.வுக்கு சிலை அமைக்கப்பட்ட பின்பு, உ.வே.சா.வின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும்  அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

உ.வே.சா.வை பற்றிப் பேசச் சொன்னாலும் மணிக்கணக்காகப் பேசுவார். அவரைப் பற்றி தூர்தர்ஷனுக்காக 13 வாரத் தொடராக “தமிழ்த் தாத்தா” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியிருந்தார்..!  வீட்டில் இருந்த புத்தகங்களில் பெரும்பான்மையானவை இலக்கிய புத்தகங்கள்தான்..! “சிலப்பதிகாரத்துக்கு உரைநடையாக புத்தகம் இருக்குமா?” என்று நான் கேட்டிருந்தேன்.. எனக்காக பல இடங்களிலும் விசாரித்துவிட்டு மிகவும் கவலையோடு “இதுவரைக்கும் யாரும் அப்படி எழுதலை சரவணா..!” என்று வருத்தப்பட்டு சொன்னவிதம் , எனக்குள் அவர் மீதான மரியாதையை பன்மடங்கு உயர்த்தியது..!

இலக்கியத் தொடர்பில் பல முக்கிய இலக்கிய பத்திரிகைகளை வாசித்து வந்தாலும் அசோகமித்திரனுடன் பழக்கம் இருந்ததாகச் சொன்னார்..!  ஒரு முறை அசோகமித்திரன் இவரிடம், “கரகாட்டக்காரன்-சின்னத்தம்பி.. இந்த ரெண்டு படமும் எப்படிங்க ஜெயிச்சது..? ஏன் இந்த ஓட்டம் ஓடுச்சு..?” என்று கேட்டாராம்..! “இதுக்கு ஆன்ஸர் தெரிஞ்சா, நானே இதே மாதிரி படம் செஞ்சிர மாட்டேனா...?” என்று இவரும் பதில் சொன்னாராம்..!

மூன்று முகம் வெளியான அடுத்த வருடமே ஜெகந்நாதன் ஸாருக்கு மீண்டும் ஒரு டபுள் ஆக்சன்..! 1983 நவம்பர் 4. தீபாவளியன்று சிவாஜி பிலிம்ஸின் ‘வெள்ளை ரோஜா’வும், ரஜினியின் ‘தங்க மகன்’ இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகி இரண்டுமே ஹிட்டடித்தன..! ‘வெள்ளை ரோஜா’வில் சாப்ட்டான கேரக்டரில் நடிப்பு சாயல் இல்லாமல் இருந்தால் ஜெயிக்குமா என்ற நடிகர் திலகத்தின் சந்தேகத்தை தீர்த்துவைத்து, உடன் ராம்குமாரையும் வில்லனாக நடிக்க வைத்து ஜெயித்துக் காட்டினார்.  இதே 'வெள்ளை ரோஜா', இந்திக்கும், கன்னடத்திற்கும் படையெடுத்திருக்கிறது. இந்தியில் ஜிதேந்திராவும் கன்னடத்தில் பிரபாகரும் நடிக்க இவைகளையும் ஜெகந்நாதன் ஸாரே இயக்கியிருக்கிறார். சிறந்த இயக்குநருக்கான ஒரேயொரு பிலிம்பேர் விருதையும் ‘வெள்ளை ரோஜா’ படத்துக்காகவே வாங்கியிருக்கிறார் ஜெகந்நாதன் ஸார்..!

ரஜினி, சிவாஜியுடன் மட்டுமா என்ற கேள்விக்கு 1987 பொங்கலில் வெளியான சத்யா மூவிஸின்  'காதல் பரிசு' படம் விடை சொன்னது. இதில் ‘காதல் மகாராணி’ பாடல் “நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ ஸ்டைலில் இருப்பதாக நான் சொன்னவுடன்.. “அதேதான்.. அந்த ஸ்டைல்ல ஒரு பாட்டு வேணும்ன்னு விருப்பப்பட்டோம். அதுனால அதே மாதிரி  எடுத்தோம்.. இருந்தாலும் கமல், அம்பிகாவோட ஆர்ட் டைரக்சனும் அற்புதமாக வேலை பார்த்தாங்க.. இப்பவும் அந்தப் படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு அதுதான்...” என்றார். “ஆனால் எனக்கு கூ.. கூ.. என்று குயில் கூவாதா..? பாட்டுதான் பிடிக்குது..” என்றேன்.. “அந்த டான்ஸெல்லாம் ச்சே.. ச்சே.. சான்ஸே இல்லை.. கமலுக்கு மட்டும்தான்..” என்றேன்..

“கமல் இதுக்கு முன்னாடி நான் டைரக்ட் செஞ்ச படங்கள்லேயே சின்ன சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கான்.. அப்பல்லாம் ஆழ்வார்பேட்டைல அவனை ஏத்திக்கிட்டு அதே கார் என் வீட்டுக்கு வந்து என்னையும் கூட்டிக்கிட்டு கிளம்பும்.. அன்னிக்கு டான்ஸ் ரிகர்சல்ன்னா வண்டிலேயே கையை, காலை ஆட்டிக்கிட்டு ஏதாவது செஞ்சுக்கிட்டேதான் வருவான்.. டயலாக் போர்ஷன்னா மனப்பாடம் செஞ்ச மாதிரி டயலாக்கை சொல்லிக்கிட்டேதான் வருவான்.. டெடிகேஷன் பெர்ஷன்.. அதுனாலதான் இந்த அளவுக்கு வந்திருக்கான்..! இந்தப் படத்துலகூட லொகேஷன் வந்த பின்னாடி இடத்தைப் பார்த்துட்டு, திரும்பத் திரும்ப டான்ஸ் மூவ்மெண்ட்ஸை மாத்தி, மாத்தி ரெடி பண்ணிக் குடுத்தான்.. அதான் அந்த டான்ஸ் இப்பவும் பேசப்படுது..” என்றார்..!

சத்யா மூவிஸ் தயாரிப்பு மட்டுமல்ல.. வெளி தயாரிப்புப் படங்களையும் ஒப்புக் கொண்டு இயக்கியிருந்தாலும் அவருடைய கடைசி ஹிட் ‘காதல் பரிசு’தான். ‘முத்துக்கள் மூன்று’, 'கொம்பேறி மூக்கன்', 'நாளை உனது நாள்', ஓ மானே - மானே, 'கற்பூர தீபம்' 'என் தங்கை', மில் தொழிலாளி', 'அர்ச்சனா ஐ.ஏ.எஸ்', 'ஹீரோ' என்று லிஸ்ட்டில் பல படங்களும் அடக்கம். இடையில் சுருளிராஜனை ஹீரோவாக வைத்துகூட ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். ஜெகந்நாதன் ஸார் இயக்கிய கடைசிப் படம் ‘வாட்ச்மேன் வடிவேலு’. சிவக்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். “அதற்குப் பின்பும் பட வாய்ப்பு வந்தது.. அந்த நேரத்துல உ.வே.சா. பத்தின டாக்குமெண்ட்ரி எடுக்கப் போனதால கொஞ்சம் கேப் விழுந்திருச்சு.. அதுனால அப்படியே கோடம்பாக்கம் கை விட்டுப் போயிருச்சு” என்றார்..!

கோடம்பாக்கம் கைவிட்டாலும் சின்னத்திரையிலும் சில தொடர்களை இயக்கியிருக்கிறார் ஜெகந்நாதன் ஸார்.. வரிசைக்கிரமமாக பார்த்தால் ‘தாலி’, ‘மர்மம்’, ‘நரசிம்மாவதாரம்’, ‘பவானி’, ‘கோர்ட்டு தீர்ப்பு’, ‘பெண் ஒரு ஜீவ நதி’ என்று சில குறுந்தொடர்களை இயக்கிய நிலையில் மேலும் பலவற்றுக்கு கதை ஐடியா மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தார். வயதானது ஒரு பக்கம்.. துணைக்கு யாருடைய உதவியும் இல்லாதது..! சேனல்களில் அறிமுகம் இல்லாதது - இதெல்லாம் சேர்ந்து கொண்டதால் இதுவே போதும் என்று தனது படைப்புலகத்தில் இருந்து விலகியிருந்தார் ஜெகந்நாதன் ஸார்..!

சென்ற வருட உலகத் திரைப்பட விழாவின் அனைத்து நாட்களிலும் வராமல் போனாலும் கடைசி 4 நாட்கள் முழுவதுமாக என்னுடன் இருந்தார்..! நான் ஈரோடு சென்று திரும்புவதாகச் சொன்னபோது “உனக்கு இப்போ அந்த விருது ரொம்ப முக்கியமா..? இப்போ மிஸ் பண்ற படங்களை எப்படி திரும்பப் பார்ப்ப..?” என்று லேசாகக் கோபித்தும் கொண்டார்..!  இடையிடையே ஐசிஏஎஃப்பின் புதிய பட திரையிடூகள் பற்றி போனில் பேசுவோம்..! ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் இட நெருக்கடியால் சில நேரங்களில் உட்கார முடியாததால், இப்போதெல்லாம் போக முடியவில்லை என்று ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டார்..!

அவருடைய மகள்கள் இருவரும் திருப்பூரிலும், திருச்சியிலும் இருப்பதால் அடிக்கடி டூர் சென்றுவிடுவார். ஏதாவது முக்கிய படங்கள் ரிலீஸாகும்போது மட்டுமே போன் செய்து ரிசல்ட் என்ன என்று ஆர்வத்துடன் விசாரிப்பார். “இதுவும் ஊத்திக்கிச்சா..?” என்று அவர் மெல்ல சொல்லும்போது எனக்கு புரையேறுவது போல சிரிப்பு வரும்..! ஆனாலும் அவர் சிரிக்காமல் “அவன் இவ்ளோ அலட்டும்போதே நினைச்சேன்.. இப்படித்தான் எடுத்துத் தொலைப்பான்னு..” என்பார்..!

திருப்பூரில் தான் இருந்தபொழுதுகூட அந்த ஊரில் நடந்த பல புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளிலும், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.. “இப்போ எல்லாருமே வரலாறு தெரியாமலேயே பேசுறாங்க.. எழுதுறாங்க.. நம்மளை கொஞ்சம் பேச விட்டா பேசலாம்.. எங்க முடியுது..” என்று அலுத்துக் கொண்டவருக்கு சினிமாவைக் கற்றுக் கொள்வதில் இருந்த ஆர்வம் இறுதி வரையிலும் இருந்திருக்கிறது. இதுதான் ஆச்சரியம்..! சிலருக்கு மட்டுமே இது சாத்தியம்..!

ஒரு மகன். பெயர் அருண்.. மைக்ரோசாப்ட் கம்பெனியில் மிகப் பெரிய பொறுப்பில் இருப்பது குறித்து அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதே சமயம்.. பெரிய குறையும் அதுதான் என்பார். “எனக்குப் பின்னாடி என் பேரைச் சொல்ல இங்க யாருமே இல்லை..” என்பார். “என்னோட அஸிஸ்டெண்ட்கூட யார், எங்க இருக்காங்கன்னே தெரியலை.. ஒருத்தராச்சும் ஏதாவது ஒரு நல்ல நாள்ல வந்து பார்த்திட்டு போகக் கூடாதா..?” என்பார்.. எனக்குத் தெரிந்து இவருடன் நீண்ட நாட்கள் அஸிஸ்டெண்ட்டாக இருந்தவர்களில் யாரும் இயக்குநர்களாக பரிணமிக்கவில்லை என்பது உண்மை..!

78 வயதாகி சற்றுத் தளர்ச்சியான நடையில் இருந்தாலும், 2 ஆண்டுகளுக்கு முன்னால்தான் அமெரிக்கா சென்று 6 மாதங்கள் தனது மகன் வீட்டில் தங்கியிருந்துவிட்டு வந்தார்..!  திருப்பூரிலேயே பாத்ரூமில் வழுக்கி விழுந்து அடிபட்டுவிட்டதாகவும், சீக்கிரமா சென்னைக்கு வந்துட்டு கூப்பிடுறேன் என்று மட்டுமே கடைசியாக  பேசும்போது கூறியிருந்தார்.  திரும்பி வருவார் என்றுதான் நானும் நம்பியிருந்தேன். நான் மட்டுமல்ல.. அவர் வீட்டு போர்டிகாவில் இப்போதும் எரிந்து கொண்டிருக்கும் அந்த 40 வால்ட்ஸ் பல்பும் அவருக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறது..!

அவரது பூதவுடலை சென்னை கொண்டு வந்திருந்தால் இயக்குநர்கள் சங்க மாலையோடு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியிருக்கலாம்.. ஆனால் வாய்ப்பில்லாமல் போய்விட்டதெண்ணி அவர் நிச்சயம் வருத்தப்படுவார் என்றே நினைக்கிறேன். ஏனெனில் அவர் சினிமாவை நேசித்தார்.. தான் சினிமாக்காரன் என்பதை மிகவும் உயர்வாகவே கருதினார்.. அந்த உயர்வுக்குரிய மரியாதை அவரது உடலுக்கு கிடைக்காமல் போனது வருத்தமானதே..! ஆனால் இது எல்லாவற்றையும்விட அவருக்கு இன்னொரு பெயர் கிடைத்திருக்கிறது.. தான் பிறந்து வாழ்ந்த அதே ஊரில் ஒரு பண்பட்ட மனிதனுக்கு இறப்பும் கிடைக்கிறது என்றால் அது அவரவர் செய்த பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்..!

1935 டிசம்பர் 25-ம் தேதி இதே திருப்பூரில் ஆறுமுகம் முதலியாருக்கும்,  ராமாத்தாளுக்கும் மகனாகப் பிறந்த ஜெகந்நாதன் அதே ஊரில் தனது தந்தை பெயரில் கட்டியிருந்த.. பெற்றோர் இருந்திருந்த வீட்டிலேயே இறந்தும் போனது அவருக்குக் கிடைத்த கொடுப்பினை..!

என்னைப் போன்ற சாதாரணமானவர்களையெல்லாம் நடுவீட்டில் உட்கார வைத்து மரியாதை செய்து நம்பிக்கையூட்டிய எனது மூத்தோர் ஜெகந்நாதன் ஐயாவுக்கு என்னால் முடிந்தது இந்தச் சிறிய அஞ்சலிதான்..!

அவரது ஆன்மா சாந்தியாகட்டும்..!