தேர்தல் ஸ்பெஷல்-2009-ஒரிஸ்ஸாவில் வெடித்த பூகம்பம்!

10-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரிஸ்ஸாவி்ல் எப்போது புயல் வரும், மழை, வெள்ளம் வரும் என்று தெரியாது.. ஆனால் வருமுன் காப்போம் திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தி வந்தார் ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக். அதன் பலனாகத்தான் கடந்த 11 ஆண்டுகளாக அவரே ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

ஒரிஸ்ஸா சட்டப் பேரவையில் மொத்த இடங்கள் 147. இதில் பிஜூ ஜனதா தளத்திற்கு 61 உறுப்பினர்கள் உள்ளனர். பாரதீய ஜனதாவிற்கு 30 உறுப்பினர்கள். இவர்கள் கூட்டணி சேர்ந்துதான் ஆட்சி அமைதியாக நடந்து வந்தது. இந்தக் கூட்டணிக்கு வேட்டு வைத்துள்ளது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு.

மொத்தமுள்ள 21 நாடாளுமன்றத் தொகுதிகளை பங்கு போட்டுக் கொள்வது பற்றிய பேச்சு வார்த்தையில் ஒரு சமூகமான உடன்பாடு ஏற்படாமல் பேச்சு வார்த்தை பல முறை ஒத்திப் போடப்பட்டு வந்தது.

டெல்லியில் இருந்து பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்கள் புவனேஸ்வர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும பீஜூ ஜனதா தளம் 8 தொகுதிகள்தான் தர முடியும் என்று பிடிவாதம் பிடித்துள்ளது. மோதிப் பார்க்க முடிவு செய்துவிட்டார்கள் என்பதனைப் புரிந்து கொண்ட பாரதீய ஜனதா சட்டென்று மாநில அரசிற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது.


இதனை முன்பே எதிர்பார்த்திருந்த முதல்வர் நவீன் பட்நாயக் உடனுக்குடன் இடது சாரி கட்சிகளையும், தேசியவாத காங்கிரஸையும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவையும் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்க, இதுவரை 'பேயாட்சி' என்று கத்திக் கொண்டிருந்தவர்கள், இப்போதைக்கு அரசியல் லாபம் கருதி ஒரு மணி நேரத்தில் தங்களது கொள்கையை மாற்றிக் கொண்டு நவீனுக்கு ஆதரவுக் கரம் நீட்டிவிட்டார்கள்.

இப்போது திடீரென்று ஏற்பட்ட மனமுறிவு காரணமாக பிஜூ ஜனதா தளத்துடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அறிவித்துள்ளது பாரதீய ஜனதா கட்சி.

இது நாள்வரையில் அக்கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை நடத்தி வந்த நவீன் பட்நாயக், கொஞ்சமும் தயங்காமல் இந்திய அரசியலின் தார்மீகப் பெருமையைக் காப்பாற்றும்விதமாக இத்தனை நாட்கள் எதிரிக் கட்சிகளாக இருந்த தேசியவாத காங்கிரஸ், இடது சாரிகள், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் ஆதரவைத் தேடிச் சென்று பெற்றுள்ளார்.


ஆளுநர் மாளிக்கைக்குத் தான் திரட்டிய எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் சென்று அடையாள அணிவகுப்பும் செய்து காண்பித்துவிட்டார். ஆனாலும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மெஜாரிட்டியை சட்டப் பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும் என்பதால் நாளை சட்டப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வரப் போகிறார் நவீன் பட்நாயக்.

இந்தக் கூட்டணி முறிவால் பிஜூ ஜனதா தளத்தைவிட பாரதீய ஜனதா தளத்திற்கே அதிக பாதிப்பு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இப்போதைய பிஜூ ஜனதா தளத்தின் கூட்டணிகள் கட்சிகளான இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் கணிசமாக ஓட்டுக்களை வாங்கிக் குவிக்கப் போகின்றன. பாரதீய ஜனதாவிற்கு இருந்த இடங்களிலும் ஓட்டுக்கள் சிதறப் போகின்றன என்கிறார்கள்.

நவீன் பட்நாயக்கிற்கு இந்த இக்கட்டிலும் ஒரு நன்மை கிடைத்துள்ளது. அது கந்தமால் கலவரத்தில் பாரதீய ஜனதாவிற்கு இதுநாள்வரையில் தோள் கொடுத்து விமர்சனங்களை வாங்கிக் கொண்டிருந்தத சோகத்திலிருந்து தற்காலிகமாக விடுதலை கிடைத்துள்ளது. இது சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை இந்தத் தேர்தலில் அறுவடை செய்ய பெரிதும் உதவும் என்று அவர் நம்புகிறாராம்.

கடந்த 1998, 99 மற்றும் 2004-ல் நடந்த லோக்சபா தேர்தல்களில் பாரதீய ஜனதா, பிஜூ ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. 2000, 2004-ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் கூட்டணி தொடர்ந்தது. கடந்த லோக்சபா தேர்தலில் இக்கூட்டணி மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. கடந்த சட்டசபை தேர்தலிலும் இந்தக் கூட்டணி 93 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இப்போது திடீரென்று ஏற்பட்டிருக்கும் இந்த மனமுறிவால் பாரதீய ஜனதாவுக்குத்தான் அதிக இழப்பு என்கிறார்கள்.

ஆனாலும் பிஜூ ஜனதா தளத்தின் பொதுச்செயலாளர் தாமோதர்ரவுத் என்பவர், “தேசிய அளவில் எங்களது நிலை என்ன என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. நாங்கள் இன்னமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம்" என்று காமெடி செய்திருக்கிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் பாரதீய ஜனதாவின் எம்.பி. தர்மேந்திரா பரதனோ, “இடதுசாரி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் பிஜூ ஜனதா தளம் கை கோர்த்துள்ளது. இதற்கு பின்னும் அந்தக் கட்சி எப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்க முடியும்? தவறான கருத்துக்களைச் சொல்லி மக்களைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள்..” என்கிறார்.


நமக்குத்தான் தலை சுற்றுகிறது..!.

6 comments:

சொல்லரசன் said...

சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை பெற பிஜூ ஜனதா தளத்தின் கபட நாடகம்,தேர்தல் முடிந்தபின் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று சொல்வார்கள்.

உண்மைத்தமிழன் said...

//சொல்லரசன் said...
சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை பெற பிஜூ ஜனதா தளத்தின் கபட நாடகம்,தேர்தல் முடிந்தபின் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று சொல்வார்கள்.//

ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக பிஜூ போடும் நாடகம்தான் இது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்..

தேர்தல் முடிவில் மெஜாரிட்டி கிடைக்கவில்லையெனில் தயங்காமல் பிஜேபியுடன் கூட்டணி வைக்க அவர் தயங்க மாட்டார்..

எல்லாம் அரசியல் மயம்..!

Anonymous said...

அண்ணே,
பதிவுகள் விட்ஜெட் கொஞ்சம் வைங்கண்ணே!! பழைய இடுகைகளை தேடிபிடுச்சு படிக்க கஷ்டமா இருக்கு!!

உண்மைத்தமிழன் said...

//Bhuvanesh said...
அண்ணே, பதிவுகள் விட்ஜெட் கொஞ்சம் வைங்கண்ணே!! பழைய இடுகைகளை தேடி பிடுச்சு படிக்க கஷ்டமா இருக்கு!!//

இந்தப் பதிவுகள் விட்ஜெட் எப்படி தம்பி போடுறது..? கொஞ்சம் சொல்லிக் கொடு..

என் பதிவிலேயும் வலது புறம் பார்த்துக்கிட்டே வந்தா கடைசி ஒரு மாதப் பதிவுகள் முழுவதும் தலைப்போடு இருக்குமே..! கவனிக்கவில்லையா..?!

Anonymous said...

நான் தான் கவனிக்கவில்லை.. மனுச்சுருங்க அண்ணே!!

உண்மைத்தமிழன் said...

//Bhuvanesh said...

நான்தான் கவனிக்கவில்லை.. மனுச்சுருங்க அண்ணே!!//

ஐயைய்ய.. இதுக்கெல்லாம் எதுக்கு சாமி மன்னிப்பு, அது, இதுன்னுட்டு.. இதுவெல்லாம் பெரிய விஷயமே இல்லை.. சப்பை மேட்டரு.. லூஸ்ல விடுங்க..!