Showing posts with label தேர்தல் கமிஷன். Show all posts
Showing posts with label தேர்தல் கமிஷன். Show all posts

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்-2011 - வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல்..!

16-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2011, ஏப்ரல் 13 அன்று நடந்து முடிந்த 14-வது சட்டப் பேரவைக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய முழு விபரங்களைத் தொகுத்து வழங்கலாம் என்று நினைத்து தேடிக் கொண்டிருந்தேன்.  பல்வேறு பத்திரிகைகளும் அவற்றை முழுப் பக்க அளவில் வெளியிட்டிருந்ததால் இணையத் தொகுப்பில் அவற்றை இணைக்கவில்லை. இதனால் பி.டி.எஃப் மற்றும் இமேஜ் பைலாக அவைகள் கிடைக்கவில்லை.

பார்த்து, பார்த்து அனைத்தையும் தட்டச்சு செய்தால்தான் முடியும் என்ற நிலை. ஆனால் தற்போதைய எனது வேலைப் பளுவில் அது முடியாத காரியம் என்பதால் அதையும் தவிர்த்தேன். கடைசியில் இன்று ஒரு நண்பரின் உதவியுடன் தினகரன் பத்திரிகையில் வெளி வந்த அனைத்து முழுப் பக்க மாவட்ட வாரியான தொகுதி முடிவுகளை ஸ்கேன் செய்து இங்கே வெளியிடுகிறேன்..!

படிப்பதற்கு சிறியதாக இருந்தால் அதனை கிளிக் செய்து புதிய பிரவுசரில் பெரிதுபடுத்திப் படித்துப் பார்க்கவும்..!

தொந்தரவிற்கு மன்னிக்கவும்..










பொறுமையாகப் படித்து, முடித்த கழகத்தின் கண்மணிகளுக்கு எனது பணிவான நன்றிகள்..! 

தகவல்களுக்கு பெரிதும் நன்றி : தினகரன் நாளிதழ்

தி.மு.க.வை முந்திய அ.தி.மு.க...!

04-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தலைப்பைப் பார்த்தவுடன் அவசரமாக கிளிக்கிவிட்டு உள்ளே வந்திருக்கும் அன்புத் தோழர்களே.. இது கண்டிப்பாக செம மொக்கைப் பதிவுதான்..! மன்னியுங்கள்..!

இந்தத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கையில் முந்திய அ.தி.மு.க. இன்னுமொரு விஷயத்திலும் முந்தியுள்ளது. அதைப் பற்றியானதுதான் இந்தப் பதிவு..!

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 2,773 பேர் போட்டியிடுகின்றனர்.

தி.மு.க., - காங்கிரஸ், பா.ம.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூலம் தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் 679 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத் தகவல்கள், ஆமதாபாத்தை தலைமை இடமாகக் கொண்டும், டில்லியிலிருந்தும் செயல்பட்டு வரும் ஜனநாயக சீர்த்திருத்த இயக்கத்தின் சார்பில் திரட்டப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள், இந்த அமைப்பின் சார்பு நிறுவனமான தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் மூலம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.

679 வேட்பாளர்களில் 125 பேர் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளதும், இவர்களில் 66 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள விவரங்களும் தெரிய வந்துள்ளன. இந்த வேட்பாளர்களில் பலர் கோடீஸ்வரராகவும் உள்ளனராம்.

தி.மு.க., சார்பில் போட்டியிடும் 119 பேரில், 24 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதை ஒத்துக் கொண்டுள்ளனர்.

பா.ம.க. சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தே.மு.தி.க.வின் வேட்பாளர்களில் 7 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 63 பேரில், 6 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் 169 வேட்பாளர்களில், 19 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில், 3 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களில் 3 பேர் மீதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களில் 1 நபர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.

ஆனால், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்களில்  43 பேர்  மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.

இதுதான் இந்தப் பட்டியலில் அதிகம்..!

ஆக மொத்தம் தி.மு.க.வை இந்த ஒரு விஷயத்திலாவது அ.தி.மு.க. முந்தியிருக்கிறது என்று ரத்தத்தின் ரத்தங்கள் நிச்சயம் பெருமைப்படலாம்..!

கிரிமினல் பின்னணியில், நாகப்பட்டினம் பி.ஜே.பி. வேட்பாளர் முருகானந்தம்தான் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் மீது சீரியஸ் வழக்குகள் 13, ஐ.பி.சி. வழக்குகள் 34 உள்ளன. இவற்றில் 5 கொலை முயற்சி வழக்குகளும், பயங்கர ஆயுதம் வைத்துத் தாக்கியதாக 3 வழக்குகளும், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும், கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் தலா ஒரு வழக்கும் உள்ளன!


அடுத்த இடத்தை ஜெயங்கொண்டம் பா.ம.க. வேட்பாளர் ஜெ.குருநாதன் என்ற காடுவெட்டி குரு பிடிக்கிறார். இவர் மீது சீரியஸ் ஐ.பி.சி. கேஸ் 8, சாதாரண ஐ.பி.சி. வழக்குகள் 38 உள்ளன. இதில் ஒரு கொலை முயற்சி வழக்கு, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக 3 வழக்குகள், ஆபாசமாகப் பேசியதாக 2 வழக்குகள் உள்ளன!

அந்தியூர் தி.மு.க. வேட்பாளர் என்.கே.பி.பி.ராஜா மீது திருட்டு தொடர்பான 2 வழக்குகள் (ஐ.பி.சி. செக்ஷன் 379), அவதூறாகப் பேசிய 2 வழக்குகள், கடத்தல் தொடர்​பான ஒரு வழக்கு, பயங்கர ஆயுதம் வைத்துத் தாக்கியதாக ஒரு வழக்கு ஆகியவை நிலுவையில்!

பட்டுக்கோட்டை தே.மு.தி.க. வேட்பாளர் என்.செந்தில்​குமார் மீது மூன்று கொலை முயற்சி வழக்குகளும், பயங்கர ஆயுதம் வைத்துத் தாக்கியதாக ஒரு வழக்கும் உள்ளது.

ஆண்டிப்பட்டி அ.தி.மு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும், மற்றும் பயங்கர ஆயுதம் வைத்துத் தாக்கியதாக ஒரு வழக்கும் உள்ளன.

திருவாரூரில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதி மீது இரு தரப்பினர் இடையே பகைமையைத் தூண்டியது உட்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. (தாத்தாவின் இத்தனை வருட சர்வீஸ்ல 3 கேஸ்தானா..?)

ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் ஜெயலலிதா மீது சீரியஸ் ஐ.பி.சி. வழக்குகள் எதுவும் இல்லை என்றாலும், அவதூறு, சொத்துக் குவிப்பு உள்ளிட்ட 8  வழக்குகளும் உள்ளன.

நன்றி : ஜூனியர் விகடன் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைள்

கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கத் துடிக்கும் ஜெயலலிதா..!

17-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கலைஞர் கருணாநிதியைப் போலவே ஆட்சி நடத்தும் தகுதியே இல்லாத புரட்சித் தலைவி ஜெயலலிதா, கட்சி நடத்தும் தகுதியும் தனக்கு இல்லாததை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்..!


தற்போதைய பொது எதிரி யார் என்பதை தமிழகமே அடையாளம் கண்டு அவரை வீட்டுக்கு அனுப்பும் வேலையைச் செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் அலுங்காமல், குலுங்காமல் அதே எதிரியை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க தன்னால் முடிந்த அத்தனையையும் செய்து கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதா தனது கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்திருக்கும் இந்திய மரியாதைக்கு அசட்டுத்தனமான, திமிர்த்தனமான, முட்டாள்தானமான என்று இந்த வரிசையில் எத்தனை இருக்கோ... அத்தனையும் போட்டுக் கொள்ளலாம்.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடுவதற்கு முன்பு வரையிலும் தமிழினத்தின், தமிழகத்தின் பொது எதிரியான கருணாநிதி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றுதான் தமிழகமே நம்பிக் கொண்டிருந்தது. ஏன், கருணாநிதியே இதைத்தான் நம்பினார். இல்லாவிடில் சென்னையை கூட்டணிக் கட்சியினருக்கு தாம்பாளத் தட்டில் வைத்து வழங்கிவிட்டு தான் மட்டும் ஊரைவிட்டு ஓடுவாரா...?

அவரே பயந்து ஓடிக் கொண்டிருக்கும்போது மேலும் ஓட, ஓட துரத்தும் வேலைகளைக் கவனிக்காமல், போதும். திரும்பி வந்திருங்க என்று அறைகூவல் விடுத்திருக்கும் ஜெயலலிதாவின் இந்தச் செயலால் நாசமாகப் போவது அவரும், அவரது கட்சியினரும்தான்..! கூடவே தமிழகத்து மக்களும்தான்..!

தனது கட்சிக்காரர்களை மட்டும்தான் ஜெயலலிதா இதுவரையில் மதிக்காமல் இருந்திருக்கிறார் என்றால், இப்போது கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அதேபோல் நினைத்துவிட்டார்..! ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் இதுதான் வித்தியாசம்..!

தனது வீடு திறந்த வீடு என்பதை வெளிக்காட்டி தமிழகத்தின் கலாச்சாரத்திற்கேற்றவாறு, நாகரிகமான முறையில் யார் வந்தாலும் வரவேற்கிறார் கருணாநிதி. ஆனால் ஜெயலலிதாவோ தான் சந்திர மண்டலத்தில் குடியிருப்பதைப் போல காட்டிக் கொண்டு இறுக மூடிய வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு பொது வாழ்க்கைப் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்..!

கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரே கொள்கையோடு ஒன்று சேரும் அனைத்துக் கட்சிக்காரர்களையும் அனுசரித்து, தோழமையோடு அரவணைத்து வெற்றி வாகை சூடுவதைவிட்டுவிட்டு தனது வழக்கமான திமிர்த்தனத்தைக் காட்டி தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

இப்போது தே.மு.தி.க. ஜெயலலிதாவுக்கு நிபந்தனை விதிக்கும் அளவுக்குத் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டுள்ளது. இது ஆத்தாவுக்கு நிச்சயம் தேவையானதுதான்..! அனைத்து எதிர்க்கட்சிகளின் ஓட்டுக்களும் பிரிந்திருப்பதால்தான் கருணாநிதி ஆட்சிக்கு வந்திருக்கிறாரே தவிர, தமிழகத்து மக்கள் அனைவரும் ஏகோபித்த குரலில் அவருக்கு வாக்களித்து அவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கவில்லை என்பதை துரதிருஷ்டவசமாக அவர் மட்டுமே உணர்ந்திருக்கிறார்.

இதனை அவருக்கு முன்பாகவே உணர வேண்டிய எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா ஏனோ தனக்காகவே தமிழகத்து மக்கள் காத்திருப்பதைப் போல ஒரு கனவை கண்டுவிட்டு அதனை நோக்கி நடப்பதாக நினைத்து புதைகுழியில் இறங்கிக் கொண்டிருக்கிறார்.

அதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, மதிமுக, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை என்று மெகா கூட்டணியாகத் திகழ வேண்டிய இந்த இடத்தில் முக்கியமான கட்சிகள் கழன்று கொள்ளும்போது கடையாணி கழன்ற மாட்டு வண்டியில் எந்த ஊருக்கு பிரயாணம் செய்யப் போகிறார் இந்த ஆத்தா..?

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளார். அதனை பல்வேறு நாடுகளில் முதலீடு செய்துள்ளார் என்று நேற்று பட்டவர்த்தனமாக சி.பி.ஐ.யின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார். இதனைவிடவும் மிகக் கேவலமான ஒரு விஷயம் தமிழகத்து மக்களுக்கும், தி.மு.க.வுக்கும் இதுவரையில் நடந்ததில்லை..!

ஆளும் கட்சி கூட்டணியில், தான் அமைச்சரவை வகிக்கும் ஒரு அரசியல் அமைப்பில் செயல்படும் போலீஸ் அமைப்பு ஒன்றே, தனது கட்சியின் அமைச்சர் ஒருவர் லஞ்சம் வாங்கிக் குவித்துவிட்டார் என்று பகிரங்கமாக நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தியிருக்கும்போது இதனை எந்தெந்த வழிகளில் மக்களிடத்தில் கொண்டு சென்று இந்தக் கொள்ளைக் கூட்டத்தை அப்புறப்படுத்தும் வழியைக் கவனிப்பதைவிட்டுவிட்டு, மீண்டும், மீண்டும் தனது சொந்த சுகத்தையே முன் வைத்து அரசியல் நடத்தும் ஜெயலலிதா அரசியல் என்னும் பொது வாழ்க்கையில் ஈடுபடும் தகுதியை முற்றிலுமாக இழந்துவிட்டார்.

“யானை தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போடுவதைப் போல தமிழகத்து மக்கள் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்பை இந்த அம்மையார் தானே கெடுத்துக் கொள்கிறார்..” என்று கலைஞர் கருணாநிதியே ஜெயலலிதாவி்ன் முந்தைய ஆட்சியின் அலங்கோலங்கள் பற்றி வருத்தப்பட்டுச் சொன்னார்.. இப்போது அந்த வாக்கியத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறார்  ஜெயலலிதா. வசனகர்த்தா கருணாநிதி. நடிகை ஜெயலலிதா..!

தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு தி.மு.க., அ.தி.மு.க. என்றே ஆரம்பிக்கிறது என்பதால்தான் கருணாநிதிக்குப் பதிலாக ஜெயலலிதா என்ற பேச்சே எழும்புகிறது. மக்கள் ஆதரவு இவர்கள் இருவரைத் தவிர மற்ற யாரேனும் ஒருவருக்கு அமோகமாக கிடைத்துவிட்டால் இந்த இரண்டு திருடர்களையும் யார் கொண்டாடப் போகிறார்கள்?

ஊழல் விஷயத்தில் கருணாநிதியைவிட ஜெயலலிதாதான் சில வருடங்களுக்கு முன்புவரையிலும் முன்னணியில் இருந்தார். ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு முன்பு ஜெயலலிதாவையும் வீழ்த்திவிட்டு 'அகில உலக ஊழல் திலகம்' என்ற பட்டத்தை பெற்றுக் கொண்ட கருணாநிதியை வீழ்த்த நாம் ஜெயலலிதா என்னும் இரண்டாவது ஊழல்வாதியை தேட வேண்டியது நமது துரதிருஷ்டம்தான்..!

இதற்கு மக்களைத்தான் குற்றம் சுமத்த வேண்டும். வைகோ இருக்கிறார். வாக்களித்திருக்கலாம். கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன வாக்களித்திருக்கலாம். விஜயகாந்த் வந்திருக்கிறார் வாக்களித்துப் பார்க்கலாம். ஆனால் இதையெல்லாம்விட்டுவிட்டு மீண்டும், மீண்டும் தி.மு.க., அதிமுக என்று மாறி மாறி திருடர்களையே கொண்டு வந்து கொண்டிருக்கும் இந்த முட்டாள்தனமான மக்கள் இருக்கின்றவரையில் இந்த நிலைமை மாறவே மாறாது..!  இப்போது திருந்த வேண்டியது தமிழகத்து மக்கள்தான்.

தேர்தல் கூட்டணி வைப்பதுகூட இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக கண்டிப்பாக நடத்த வேண்டிய ஒரு சடங்காகவே இருக்கிறது என்பதையும் நாம் ஒருவிதத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தேர்தல் கமிஷனின் சின்ன விதிமுறை மட்டும் இவ்வளவு கடினமானதாக இல்லாமல் இருந்தால், கட்சிகள் அனைத்தும் தனித்தனியே நின்றே தங்களது பலத்தைக் காட்டிவிடும். ஆனால் பெரிய கட்சிகளை எதிர்த்து சிறிய கட்சிகள் வளர்ந்துவிடக் கூடாதே என்பதற்காகவே அமைக்கப்பட்டிருக்கும் சின்னம் தொடர்பான அந்த விதிமுறையை மறுபரீசிலனை செய்ய, இதுவரையில் பெரிய கட்சிகள் எதுவும் கோரிக்கை விடுக்கவில்லை என்பதையும் சற்று யோசித்துப் பாருங்கள். புரியும்..!

ஜனநாயகத்தில் அனைத்துக் கட்சியினருக்கும் சம அளவில் வாய்ப்புகள் தரப்பட வேண்டும். நம் நாட்டில் சாமான்ய மக்களின் கல்வியறிவே மிகக் குறைவாக இருக்கின்றபோது தேர்தலுக்கு தேர்தல் சின்னங்களை மாற்றிக் கொண்டேயிருந்தால் அக்கட்சி வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. உதயசூரியன் சின்னமும், இரட்டை இலையும், அரிவாள் சுத்தியலும் தமிழகத்து மக்கள் மத்தியில் பிரபலமானதற்குக் காரணம் நீண்ட வருடங்களாக அக்கட்சிகளுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்தான்.

இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்காகவே இப்போதைய அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் அபிலாஷைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஓரளவுக்கு கொள்கைகள் ஒத்துப் போகின்ற கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்கின்றன. வேறு வழியில்லாமல் நாமும் இதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

நேற்று இரவில் இருந்து எழுந்த எதிர்ப்புகளையெல்லாம் ஏதோ சாதாரணமாக கொசு கடித்தாற்போன்று அலட்சியப்படுத்திய ஜெயலலிதா சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் தே.மு.தி.க. அலுவலகம் முன்பாக அதன் தொண்டர்கள் காட்டியிருக்கும் எதிர்ப்புணர்வுக்கு பின்பு லேசாக இறங்கி வந்திருப்பதுபோல் தெரிகிறது. மாலைக்குப் பின்பு எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி பேசிக் கொண்டிருக்கிறார்களாம். 

இன்னொரு பக்கம் இத்தனை வருடங்களாக தனக்கென்று எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் எத்தனையோ இழப்புகளைத் தாங்கிக் கொண்டு ஆதரவை அளித்து வந்த வைகோ தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியில் தலை காட்டாமல் இருக்கிறார். தமிழகத்து அரசியலில் அவர் நிலைமை பரிதாபமானதற்கு காரணம் அவருடைய நியாயமான, நேர்மையான குணம்தான்..!

திருமாவளவனைப் போல காலையில் இலங்கை தூதரகத்தை அகற்று என்று முழங்கிவிட்டு மதியத்தில் அறிவாலயத்தில் போய் சாமி கும்பிடும் கேவலத்தைச் செய்யத் தெரியாததால்தான் வைகோ இன்றைக்கு இந்த லட்சணத்தில் இருக்கிறார். ஈழப் பிரச்சினை ஒன்றுதான் வைகோ இன்றைக்கு தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராக உருவெடுக்கவிடாமல் வைத்தது என்பது வரலாற்று உண்மை..!




இன்றைய நிலைமையே நாளையும் நீடித்து ஒருவேளை மூன்றாவது அணி அமையும்பட்சத்தில் இந்த இரண்டு கயவர்களையும் விரட்ட அந்த அணிக்கு ஆதரவு தர வேண்டியது நமது கடமை.. இதையும் நாம் செய்யவில்லையெனில் வருங்காலத்தில் நமது வாரிசுகளுக்கென்று மிச்சம் மீதி எதுவும் தமிழகத்தில் இருக்காது என்கின்ற உண்மையையும் நாம் இந்த நேரத்திலாவது உணர வேண்டும்.

இன்றைய நிலைமையே நிச்சயமாகத் தொடரும் என்றால் கருணாநிதியின் வெற்றியும் உறுதியானதுதான். இதற்கடுத்து அடுத்தாண்டு பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் ஜெயலலிதாவை காணும் பாக்கியம் அவர்தம் கட்சியினருக்கு நிச்சயமாக கிடைக்கும்..!

சொத்துக் குவிப்பு வழக்கு தனது இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. ஆத்தாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதைய தேர்தல் நேரத்தை வைத்து வேண்டுமானால் மே மாதம் வரையிலும் விசாரணைக்கு ஆஜராகமாமல் ஜெயலலிதா தப்பிக்கலாம். ஆனால் ஜூன், ஜூலையில் நிச்சயமாக விசாரணை முடிந்துவிடும். விசாரணையின் முடிவும் நிச்சயமாக ஜெயலலிதாவுக்கு பாதகமாகத்தான் வரப் போகிறது என்றே நானும் நம்புகிறேன்.

ஊர்க் காசை அடித்து உலையில் போடும் வித்தையில் கரை கண்ட முதல் தமிழகத்து அரசியல் பெண்மணி என்ற கெட்ட பெயரோடு ஜெயலலிதா ஜெயிலுக்குள் வாசம் செய்யப் போவதும் உறுதிதான்..! இத்தனை விஷயங்கள் தனக்காகக் காத்திருக்கும்போது அதனை எதிர்கொள்ள எத்தனை ராஜதந்திர விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்..? கருணாநிதியிடம் இத்தனை நாட்களாக அரசியல் நடத்திய ஜெயலலிதா அவரிடம் கற்றுக் கொண்டதுதான் என்ன..?

கருணாநிதியாவது விஞ்ஞானி ரீதியாக ஊழல் செய்து இதுவரையில் மாட்டிக் கொள்ளாத புத்திசாலி. இதைக்கூட ஜெயலலிதா அவரிடம் கற்றுக் கொள்ளாமல் மாட்டிக் கொண்டதை நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

நமக்கும் வேறு வழியில்லை.. இந்த இரண்டு கொள்ளைக் கூட்டக் கும்பல்களுக்கு மத்தியிலும் மாறி, மாறி அல்லல்பட வேண்டும் என்று நம் தலையில் எழுதப்பட்டிருக்கிறது..!

அனுபவிப்போம்..!

தேர்தல் ஸ்பெஷல்-10-03-2009-தேர்தல் கமிஷன் அறிவிப்புகள்

10-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தா நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த செய்திகள்..

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை

தமிழ்நாட்டில் புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் முடிவடைந்துவிட்டதாம். சென்னையில் 96 சதவீதமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 98 சதவீதமும் முடிந்துள்ளன. தேர்தலுக்கு முன் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிடுமாம். விடுபட்டவர்கள் தேர்தல் வேட்பு மனு தாக்கல் தேதிக்கு முதல் நாள் வரையிலும் மனு செய்யலாமாம்.. ஆனால் எப்போது கொடுப்பார்கள் என்பது தெரியாது..

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறதாம். வேட்பாளர்களோ, அரசியல் கட்சிகளோ, தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு தமிழக இணை தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர், சென்னை தொலைக்காட்சி நிலைய உதவி இயக்குநர், சென்னை வானொலி நிலைய உதவி இயக்குநர் ஆகியோர் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கப் போகிறார்கள்.

வேட்பாளர் தங்களது விளம்பரங்களை வெளியிடும் முன், இந்தக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். பதிவு பெற்றக் கட்சியினர் விளம்பரம் வெளியிடுவதற்கு 3 நாட்களுக்கு முன்பும், மற்றவர்கள் 7 நாட்களுக்கு முன்பும் தங்கள் விளம்பரங்களுக்கு இந்த அனுமதியைப் பெற வேண்டுமாம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி இந்தக் குழுவின் அனுமதியின்றி எந்த ஒரு விளம்பரமும் ஒலி, ஒளிபரப்பு செய்யக்கூடாதாம்.

வேட்பாளர்கள் தனியாக செய்யும் விளம்பரங்களுக்கு சான்றிதழ் வழங்கும் அதிகாரியாக அந்தந்த லோக்சபா தொகுதியின் தேர்தல் அதிகாரி செயல்படுவாராம்.

வெளியிடப்படும் விளம்பரங்கள் தொடர்பான புகார்கள், குறைகளை தெரிவிப்பதற்காக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் மற்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளதாம். இந்தக் குழுவில் மத்தியத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பார்வையாளர், சென்னை தொலைக்காட்சி நிலைய அதிகாரி ராம், சென்னை வானொலி நிலைய வர்த்தக ஒலிபரப்பு சேவையின் இயக்குநர் ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

பார்வையற்றவர்களுக்கான ஒரு வசதி

பார்வையற்றவர்கள் ஓட்டுப் போடுவதற்காக தனியாக எலெக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாம். பார்வையற்றவர்களுக்காக பிரெய்லி எழுத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் எண்கள் ஆங்கிலத்தில் இடம் பெறவும் வகை செய்யப்பட்டுள்ளது. இது தவிர, துணைக்கு ஒருவரை அழைத்து வருவதற்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டு வந்த வசதியும் தொடர்ந்து அளிக்கப்படும்.

தேர்தல் தகவல்களுக்காக புதிய இணைய தளங்கள்

இந்தத் தேர்தலுக்காக www.elections.tn.gov.in, www.ceotamilnadu.nic.in என்ற பெயரில் இரண்டு புதிய இணைய தளங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இவற்றில் தேர்தல் தொடர்பான அதிகாரிகள், தமிழ்நாட்டில் உள்ள தொகுதி வாரியான வாக்காளர் பட்டியல்கள், வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பம், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பம், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் பட்டியல்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவித் தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடிகளுக்கான அதிகாரிகள், மறு சீரமைப்புக்குப்பின் தொகுதிகளின் பெயர் விவரம் மற்றும் தொகுதிகளில் அடங்கிய ஊர்கள், அந்தந்த தொகுதிகளின் வரைபடங்கள், தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் தாக்கல் செய்வதற்கான விண்ணப்ப மனு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், விவரங்கள் உட்பட தேர்தல் தொடர்பான அனைத்து A To Z தகவல்கள் அனைத்தும் இந்த இணைய தளங்களில் உள்ளன. பயன்படுத்திக் கொள்ளலாம்.

வந்துவிட்டார்கள் கொள்ளையர்கள்..! மக்களே எச்சரிக்கையாக இருங்கள்..!

03-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தியாவை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்துடன் கொள்ளையடிக்கவும், மொட்டையடிக்கவும் வரவிருக்கும் மெகா கொள்ளைக் கும்பலைத் தேர்வு செய்யும் திருவிழாவிற்கான அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டுவிட்டது.

இப்போதைய கொள்ளைக் கூட்டக் கும்பலின் பதவிக் காலம் 2009 ஜூன் 1-ல் முடிகிறதாம்.. புதிய கும்பல் ஜூன்-2-ம் தேதி கூடியே ஆக வேண்டுமாம்..!

இதன்படி பதினைந்தாவது கொள்ளைக்கூடத்தின் அங்கத்தினர்களுக்கான தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறப் போகிறதாம். முதற்கட்ட ஓட்டுப் பதிவு ஏப்ரல் 16-ம் தேதி துவங்குகிறது. ஐந்தாவது மற்றும் இறுதி கட்டம் மே 13-ம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்தல் அட்டவணை

முதல் கட்டத் தேர்தல்

தொகுதிகள் 124
ஓட்டுப் பதிவு ஏப்ரல் 16
இரண்டாவது கட்டத் தேர்தல்

தொகுதிகள் 141
ஓட்டுப் பதிவு ஏப்ரல் 23

மூன்றாவது கட்டத் தேர்தல்

தொகுதிகள் 107
ஓட்டுப் பதிவு ஏப்ரல் 30
நான்காம் கட்டத் தேர்தல்

தொகுதிகள் 85
ஓட்டுப் பதிவு மே 7

ஐந்தாம் கட்டத் தேர்தல்

ஓட்டுப் பதிவு மே 13
ஓட்டு எண்ணிக்கை மே 16.

இந்த மெகா மோசடித் தேர்தலுடன் ஆந்திரா, ஒரிசா, சிக்கிம் மாநிலங்களில் பேட்டை ரவுடிகளின் சட்டசபை தேர்தலும் நடைபெறப் போகிறது.
மாநில வாரியாக லோக்சபா தேர்தல் நடக்கும் தேதிகள்

1. ஜம்முகாஷ்மீர், உத்தரபிரதேசம் - ஏப்ரல் 16, 23, 30, மே 7, மே 13
2. பீகார் - ஏப்ரல் 16, 23, 30 மற்றும் மே 7
3. மகாராஷ்டிரா - ஏப்ரல் 16, 23, மற்றும் 30
4. மேற்கு வங்கம் - ஏப்ரல் 30, மே 7, 13
5. ஆந்திரா - ஏப்ரல் 16, மற்றும் 23
6. அசாம் - ஏப்ரல் 16 மற்றும் 23
7. கர்நாடகா - ஏப்ரல் 23 மற்றும் 30
8. மத்தியப்பிரதேசம் - ஏப்ரல் 23, மற்றும் 30
9. மணிப்பூர் - ஏப்ரல் 16, மற்றும் 23
10. ஒரிசா - ஏப்ரல் 16, மற்றும் 23
11. பஞ்சாப் - மே 7 மற்றும் 13
12. ஜார்க்கண்ட் - ஏப்ரல் 16 மற்றும் 23
13. அருணாச்சல பிரதேசம், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சட்டீஸ்கர் - ஏப்ரல்-16
14. கோவா, திரிபுரா - ஏப்ரல் 23
15. குஜராத், சிக்கிம் - ஏப்ரல் 30
16. டில்லி, அரியானா, மற்றும் ராஜஸ்தான் - மே 7
17. இமாச்சலப்பிரதேசம், தமிழகம், உத்தரகாண்ட் - மே 13
யூனியன் பிரதேசங்கள்
18. தாத்ரா மற்றும் நகர்ஹவேலி, டாமன் மற்றும் டையூ - ஏப்ரல் 30
19. சண்டிகார், புதுச்சேரி - மே 13
20. அந்தமான், நிகோபார் தீவுகள், லட்சத்தீவு - ஏப்ரல் 16
தமிழகத்திலும், புதுவையிலும் ஒரே தேதியில் ஓட்டுப் பதிவு நடைபெறவிருக்கிறது.
தமிழகம் மற்றும் புதுவைக்கான தேர்தல் அட்டவணை
வேட்புமனு தாக்கல் ஆரம்பம் - 17.04.09
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - 24.04.09
வேட்பு மனு பரிசீலனை கடைசி நாள் - 25.04.09
வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் - 27.04.09
ஓட்டுப் பதிவு - 13.05.09
ஓட்டு எண்ணிக்கை - 16.05.09
தமி்ழக நிலவரப்படி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கும், தேர்தல் பிரச்சார கடைசி நாளிற்குமான கால அவகாசம் 14 நாட்களே உள்ளதால், இந்த முறை தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் சூறாவளி சுற்றுப்பயணமாகத்தான் இருக்கப் போகிறது. உள்ளூர் கட்சித் தொண்டர்களின் கடும் உழைப்பினால் மட்டுமே வெல்ல முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
கடைசி நிமிடத்தில் ஏதாவது ஒரு குறையினால் வேட்பாளரின் பெயர் மாற்றப்பட்டாலோ அல்லது பதிலி வேட்பாளர் உண்மையான வேட்பாளராக ஆக்கப்பட்டாலோ, ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளருக்கான விளம்பரங்கள் அனைத்தும் வீணாகிவிடும் என்பதால் இந்த முறை கட்சிக்கே வாக்களியுங்கள் என்ற பொதுவான கோஷங்கள்தான் முதலில் ஆரம்பிக்கும். பின்புதான் வேட்பாளரின் பெயர் பிரபலப்படுத்தப்படலாம்.
மாநிலங்களில் 3 கட்டத் தேர்தல்
ஜம்மு காஷ்மீரில் 6 தொகுதிகளுக்கு ஏப்ரல் 16, 23, 30 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. மற்ற இரு தொகுதிகளுக்கு மே 13-ல் வாக்குப்பதிவு நடைபெறப் போகிறது.
உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளுக்கு ஏப்ரல் 16, 23, 30 மற்றும் மே 7, 13-ம் தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும்.
பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஏப்ரல் 16, 23 தேதிகளில் தலா 13 தொகுதிகளுக்கும், எஞ்சிய 11 தொகுதிகளுக்கு ஏப்ரல் 30ம் தேதியும், மீதமுள்ள 3 தொகுதிகளுக்கு மே 7-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும்.
கர்நாடகாவில் 28 தொகுதிகளில் ஏப்ரல் 23-ல் 17 தொகுதிகளிலும், ஏப்ரல் 30-ம் தேதி 11 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கவுள்ளது.
ஆந்திராவில் உள்ள 42 தொகுதிகளில் ஏப்ரல் 22-ம் தேதி 22 தொகுதிகளிலும், ஏப்ரல் 23-ம் தேதி 20 தொகுதிகளிலும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் ஏப்ரல் 16-ம் தேதி 13 தொகுதிகளுக்கும், 23-ம் தேதி 25 தொகுதிகளுக்கும், 30-ம் தேதி 10 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இத்துடன் கோவாவில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் 23-ம் தேதி தேர்தல் நடக்கும்.
மே 13-ம் தேதி தமிழ்நாடு, புதுவையுடன் இமாச்சலப்பிரதேசத்தில் 4, சட்டீஸ்கரில் 1, உத்தரகாண்டில் 5, பஞ்சாப்பில் 9, மேற்குவங்கத்தில் 11, காஷ்மீரில் 2 மற்றும் உ.பி.யில் 14 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும்.
ஆந்திரா, ஒரிசா சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 16 மற்றும் 23 தேதிகளில் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 23-ம் தேதி உள்ளூர் விடுமுறை என்பதால், அங்கு மட்டும் ஏப்ரல் 22-ம் தேதி தேர்தல் நடைபெறுமாம்.
தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்ட பின்னர் முதல் தேர்தல்
மக்களவைத் தொகுதிகளின் எல்லைகள் பல ஆண்டுகளாக மாற்றி அமைக்கப்படாததால் ஒரு சில தொகுதிகளில் 30 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களும், ஒரு சிலவற்றில் ஒரு லட்சத்துக்கும் குறைவான வாக்காளர்களும் இருந்தனர். இந்த நிலையை மாற்றி எல்லா தொகுதிகளிலும் ஒரே அளவு வாக்காளர்கள் இருக்கும்படி செய்ய தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
இதன்படி நாடு முழுவதும் தொகுதிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 499 தொகுதிகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
மறுசீரமைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் நடக்கும் முதல் பொதுத்தேர்தல் இதுதான். அருணாச்சல பிரதேசம், அசாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், காஷ்மீர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகமானது

கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலின்போது ஆறு லட்சத்து 87 ஆயிரத்து 402 ஓட்டுச் சாவடிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன. இந்தாண்டு எட்டு லட்சத்து 28 ஆயிரத்து 804 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளனவாம்.
தேவையான ஓட்டு இயந்திரங்கள்

இந்த பொதுத்தேர்தலை நடத்த 11 லட்சத்துல 12 ஆயிரம் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் தேவை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் 13 லட்சத்து 68 ஆயிரம் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் கையிருப்பு உள்ளதால் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் வராதாம்.
இத்தேர்தல் பணிகளில் நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் 40 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுவார்களாம்.
மத்திய ரிசர்வ் போலீஸார், மாநில போலீஸார் என 21 லட்சம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் நடக்கும் 543 தொகுதிகளில் 522 தொகுதிகளில் முதன்முறையாக வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது.
வரக்கூடிய தேர்தலில் 71.4 கோடி பேர் ஓட்டளிக்கவுள்ளனராம். இது 2004-ம் ஆண்டின் வாக்காளர் எண்ணிக்கையைவிட 4.3 கோடி அதிகம்.

ஒரே ஒருவருக்காக வாக்குச்சாவடி
குஜராத் மாநிலம் ஜூனாகாபாத் தொகுதிக்கு உட்பட்ட கிர் வனவிலங்கு சரணாலயத்தில் நடுக்காட்டில் பானேஜ் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பரத்தாஸ் என்பவர் பூசாரியாக இருக்கிறார். இவர் கோவிலேயே தங்கியிருக்கிறார். ஜூனாகாபாத் மக்களவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இதனால், இவர் வாக்களிக்க வசதியாக கோவிலேயே ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளது. இந்த வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியலில் பரத்தாஸின் பெயர் மட்டுமே உள்ளதால் வாக்குச்சாவடி அமைத்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாம்.
தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதிகள் அதிகரிப்பு
14-வது மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு 79 தொகுதிகளும், மலைஜாதியினருக்கு 41 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. மற்றவை பொதுத் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன. தொகுதி மறுசீரமைப்பால் தனித்தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதிகள் 84 ஆகவும், மலை ஜாதியினருக்கான தொகுதிகளின் எண்ணிக்கை 47 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோருக்கென்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் தாழ்த்தப்பட்டோருக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எல்லாம் வியாழக்கிழமை மயம்..!
ஏப்ரல், மே மாதங்களில் 5 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 16, 23, 30 மற்றும் மே 7 ஆகிய தேதிகள் வியாழக்கிழமையாகும். கடைசி கட்டத் தேர்தல் மட்டுமே மே 13-ம் தேதி புதன்கிழமை நடக்கிறது. வியாழக்கிழமைகளை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்தது ஏன் என்று தெரியவில்லை..

தேர்தல் கமிஷனின் மூன்று அம்சத் திட்டம்

இந்தத் தேர்தலில் தேர்தல் கமிஷன் மூன்று அம்சத் திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாம்.
முதலாவது புகைப்பட வாக்காளர் பட்டியல் அறிமுகம். இதன் மூலம் கள்ள ஓட்டுக்கள் பதிவாவது தடுக்கப்படும்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது அம்சமாக, ஓட்டுச் சாவடிகள் அளவில் அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகளை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாக்காளர் பட்டியல் முன்பே சரிபார்க்கப்படுவதோடு, கள்ள ஓட்டுப் போட வருவோரையும் எளிதாக அடையாளம் காண முடியும் என்று தேர்தல் கமிஷன் நம்புகிறது.
புதிதாக கட்சிகளை பதிவு செய்ய முடியாது
தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுவிட்டதால் புதிதாக எந்தவொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடியாது. மே 29-ம் தேதிவரையிலும் இந்தத் தடை இருக்குமாம்.
பொதுவாகவே தேர்தல் கமிஷன் எந்தவொரு அறிவிப்பு வெளியிட்டாலும். "இது ஆளும்கட்சியின் சதி" என்று எதிர்க்கட்சிகளும், "எதிர்க்கட்சிகளுக்கு பலியாகிவிட்டது தேர்தல் கமிஷன்" என்று ஆளும்கட்சியினரின் புலம்பல்களும் பொங்கி வரும்.
ஆனால் இந்த முறை காங்கிரஸ், பாரதீய ஜனதா இரண்டு கட்சிகளுமே தேர்தல் கமிஷனின் இந்தத் தேர்தல் கால அட்டவணையை வரவேற்றுள்ளனர்.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதுள்ளது.
இதன் காரணமாக நேற்று மாலை சென்னை கோயம்பேட்டில் நடைபெறுவதாக இருந்த கலைஞர் சட்டப் பேரவை பொன்விழா நினைவு வளைவின் திறப்பு விழாவை அவசரம், அவசரமாக அமைச்சர் பரிதி இளம்வழுதியை வைத்து திறந்து வைத்துவிட்டார்கள். ஏற்கெனவே இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஸ்டாலின்தான் கலந்து கொண்டு நினைவு வளைவை திறந்து வைப்பதாக இருந்தது. பின்னாளில் வழக்கு, பேச்சு என்று வந்தால் தளபதியைக் குறி வைக்கக்கூடாது என்பதால் துணைத் தளபதியைக் கொண்டு திறந்து வைத்துவிட்டார்கள் புத்திசாலி அதிகாரிகள்..!
ஆரம்பித்துவிட்டது அதிரடிக்காரர்களின் அட்டகாசங்கள்..
இனி மேடைகளில் "உங்கள் வீட்டுக்கு கிணற்றில் இருந்து தண்ணி சுமந்து வந்து ஊத்துவோம்..” என்றுகூட வாக்குறுதிகள் வழங்கப்படும்.. நம்புபவர்கள் வாசலில் குடத்தோடு காத்திருக்கலாம்..

மக்களே.. வேறு வழியில்லை..
இவர்கள் கொடுக்கப் போகின்ற அனைத்து வாக்குறுதிகளும் கடைசியில் குப்பைக்கூடத்திற்குத்தான் போகும் என்பது நமக்குத் தெரியாமாதலால், இதையும் புன்சிரிப்புடன் சகித்துக் கொண்டு கூடுமானவரையில் "இவர் குறைந்தபட்சமாக கொள்ளையடிப்பார், ஆனால் அதிகபட்சம் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்வார்" என்று தெரிந்தால், அந்த நபருக்கே, உங்களது பொன்னான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்யுமாய் தமிழக வலைப்பதிவர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வேண்டி விரும்பி, சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
வணக்கம்.