வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் - சினிமா விமர்சனம்

28-12-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு சின்ன கதையை வைத்து சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பில் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அபநிந்திரன்.

அமெரிக்காவில் இருக்கும் சாப்ட்வேர் என்ஜீனியரான ஹீரோ பிரவீன் குமார்,  தனது அப்பாவின் கேன்சர் சிரிச்சைக்காக உடனடியாக தாயகம் திரும்ப வேண்டிய நிலைமை. அதுவும் அமெரிக்கா சென்ற 4 மாதங்களிலேயே ஊர் திரும்புகிறார்.
வந்த இடத்தில் தந்தையின் சிகிச்சைக்காக பணம் தேடி அலைகிறார் பிரவீன். கிடைக்கவில்லை. கடைசியில் கந்துவட்டிக்காரரான அருள்தாஸிடம் அறுபது லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார். கடனை குறித்த காலத்தில் கட்ட முடியாமல் போக, வீடு தேடி வந்து மிரட்டுகிறார் அருள்தாஸ்.
வீட்டில் இருக்கும் பிரவீனின் மனைவியை பார்த்து ஜொள்ளுவிடும் அருள்தாஸ், இதையே சாக்காக வைத்து அடிக்கடி வீட்டுக்கு வந்து போக.. பிரவீன் பதைபதைக்கிறார். எப்படியாவது கடனை அடைத்துவிடலாம் என்று எண்ணுகிறார்.
இந்த நேரத்தில்தான் ஹீரோவின் மூளை மழுங்குகிறது. கிரிமினலாக மாறுகிறது. தனது முன்னாள் காதலியும், இப்போது ஒரு டாக்டருடன் திருமணமானவருமான பூஜாவை பார்த்தவுடன் அவருக்குள் வேறொரு சபலம் தட்டுகிறது.
பூஜாவுடன் தான் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதை நினைத்துப் பார்க்கும் பிரவீன்.., அதை வைத்து தனது நெருங்கிய நண்பனான பால சரவணன் மூலமாக பிளாக்மெயில் செய்து 50 லட்சம் ரூபாயை பூஜாவிடமிருந்து பறிக்க நினைக்கிறார். அதேபோல் பால சரவணனும் பூஜாவிற்கு போன் செய்து அவளை மிரட்ட.. கொஞ்சம், கொஞ்சமாக 10 லட்சம் ரூபாய் வரையிலும் கறக்கிறார்கள்.
இதற்கு மேல் தன்னிடம் பணமில்லை என்று சொல்லும் பூஜா தன் கணவன் சட்டவிரோதமாக அவனது கிளினிக்கில் யாரோ ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்திருக்கிறான் என்பதைச் சொல்லி அவனை பிளாக்மெயில் செய்து பணத்தை சம்பாதித்துக் கொள்ளும்படி தூண்டிவிடுகிறாள்.
பால சரவணனும், ஹீரோவும் டாக்டர் ரகுவை பிளாக் மெயில் செய்ய.. அவனோ தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி தத்தளிக்கிறான். ஆனாலும் பிரச்சினை பெரிதாகாமல் இருக்க வேறு வழியில்லாமல் அந்த கருக்கலைப்பை யாருக்காக செய்தானோ, அந்தப் பெண்ணின் தகப்பனான ஞானவேலிடம் சென்று பிரச்சினையை வெளியில் சொல்லாமல் இருக்க 1 கோடி ரூபாய் கேட்கிறான்.
ஞானவேல் பணக்காரர் என்றாலும் இப்போது  அவரிடமும் பணம் இல்லை.. என்ன செய்வது என்று யோசிக்கிறார். இந்த நேரத்தில் அவரிடம் ஒரு கட்டப் பஞ்சாயத்து கேஸ் வருகிறது. பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் போன இரண்டு பில்டிங் கான்ட்ராக்டர்களைப் பற்றி ஞானவேலிடம் ஒருவர் புகாருடன் வர.. அந்த காண்ட்ராக்டர்களை மிரட்டி ஒரு கோடி ரூபாயை வசூல் செய்ய திட்டம் போடுகிறார் ஞானவேல். அதேபோல் அவர்களை மிரட்டவும் செய்கிறார்.
திடீரென்று ஒரு கோடிக்கு எங்கே போவது என்று யோசித்த காண்ட்ராக்டர்கள் தங்களுடன் பழக்கமுள்ள ஒரு ரிட்டையர்டு போலீஸ் அதிகாரி செய்த பாலியல் சேட்டைகள் தங்களிடம் வீடியோவில் இருப்பதாகச் சொல்லி அதை வெளியிடாமல் இருக்க 2 கோடி ரூபாயை அவரிடம் தட்சணையாகக் கேட்கிறார்கள். பணம் கிடைத்தால் ஒரு கோடியை ஞானவேலிடம் கொடுத்துவிட்டு, இன்னொரு கோடியை தாங்களே வைத்துக் கொள்ளலாம் என்பது இவர்களின் திட்டம்.
இந்த ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியும் வேறொரு திட்டம் போடுகிறார். மாநில உள்துறை செயலாளர் மீதான லஞ்ச ஒழிப்பு புகாரை கிடப்பில் போட 10 கோடி கேட்கிறார். உள்துறை செயலாளர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரின் அறக்கட்டளை நிர்வாகம் செய்திருக்கும் கோல்மால்களை சுட்டிக் காட்டி அதை கிளியர் செய்ய 50 கோடி கேட்கிறார். அந்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கில் எதிராளிக்கே தீர்ப்பாகும்வகையில் வாதத்தின்போது தான் விட்டுக் கொடுப்பதாகவும் இதற்கு தனக்கு 100 கோடி வேண்டும் என்றும் கேட்கிறார்.
இப்போது இது சென்னையில் இருக்கும் ‘பெரியவர்’ என்றழைக்கப்படும் டானின் வசம் வந்து நிற்கிறது. ஒரு சந்தேகத்தில் இது எப்படி ஆரம்பித்தது என்று பெரியவர் அலசி, ஆராயத் தொடங்க.. சங்கிலித் தொடர் போல பலரும் வரிசையாக மாட்டுகிறார்கள். கடைசியாக ஹீரோவும், அவரது நண்பனும் என்ன ஆனார்கள்..? பெரியவர் அவர்களை என்ன செய்தார் என்பதும்.. பெரியவரிடமிருந்து அவர்கள் தப்பித்தார்களா என்பதும்தான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதையாக்கம்.
ஒரு குற்றம் எப்படியெல்லாம் பயணித்து எவரையெல்லாம் குற்றம் செய்ய வைக்கிறது என்பதை நூல் பிடித்தாற்போல் அடுத்தடுத்த நம்பகத்தனமான காட்சிகளின் மூலம் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இந்தச் சிறப்பான திரைக்கதைக்காகவும், சுவையான இயக்கத்திற்காகவும் நிச்சயம் பாராட்டுக்குரியவர் இந்த அறிமுக இயக்குநர்.
கார்த்திக் என்கிற ஹீரோ புதுமுகம் என்றாலும் கதைக்குத் தகுந்தாற்போல் அளவாக நடித்திருக்கிறார். அதிகம் மெனக்கெடாத அளவுக்கு அவருக்கான கேரக்டர் ஸ்கெட்ச் அமைக்கப்பட்டிருப்பதால் ரசிக்க வைத்திருக்கிறார். இறுதியாக பெரியவரிடம் அவர் வேண்டுமென்றே தோற்றார் என்பதை சொல்லிவிட்டுப் போகும் காட்சியில் தன் மீதான ரசிகனின் பரிதாப உணர்வை வரவழைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
மனைவியாக நடித்த சனம் ஷெட்டியைவிடவும் பூஜாவாக நடித்த ஷாலினி வட்னிகட்டிக்கு நிறையவே வாய்ப்பு. இவரும் கொள்ளை அழகுடன் இருக்கிறார். குளோஸப் காட்சிகளில் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். சிறந்த இயக்கத்தினால் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஷாலினி.  ஹீரோயின் தேடுபவர்கள் இவரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெரியவராக நரேன். வழக்கம்போல அவருடைய டயலாக் மாடுலேஷனும், பாடி லாங்குவேஜும் அந்த பெரிய தாதா கேரக்டருக்கு வலு சேர்த்திருக்கிறது. “இப்பத்தான்..  இப்படியொரு மகன் எனக்கு இல்லையே என்றொரு ஏக்கம் எனக்கு வந்திருக்கு…” என்று கடைசியாக ஜெயபிரகாஷிடம் சொல்லும் காட்சியில் கண்ணீர் சிந்தவில்லையென்றாலும் நெகிழ வைத்திருக்கிறார் நரேன்.
ஜெயபிரகாஷ், காண்ட்ராக்டர் நண்பர்கள், அருள்தாஸ், ரிட்டையர்டு போலீஸ் அதிகாரயாக நடித்திருப்பவர் என்று அனைவருமே தங்களது கேரக்டரை உணர்ந்து நம்மை ஈர்த்திருக்கிறார்கள்.
படத்தின் பிற்பாதியில் திரைக்கதையின் ஊடேயே நகைச்சுவை மிளிர்வதால் தியேட்டரில் அவ்வப்போது கைதட்டல்களும், சிரிப்பலைகளும் எழும்பி எழும்பி அமைகின்றன. இந்த குபீர் சிரிப்பை வரவழைத்திருக்கும் அனைத்து கேரக்டர்களுக்கும் ஒரு ஷொட்டு..!
சாரங்கராஜனின் ஒளிப்பதிவில் குறையில்லை. ஜோஷ்வா ஸ்ரீதர் பின்னணியில் இசைத்திருக்கிறார். இவர்களைவிடவும் கலை இயக்குநர்தான் இந்தப் படத்தில் பாராட்டுக்குரியவர்.. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இந்த 5 சிச்சுவேஷன்களுக்கேற்றவாறு இடங்களை தேர்வு செய்து செட் பிராப்பர்ட்டீஸ்களை வைத்து இயக்குநருக்கு பெரிதும் உதவியிருக்கிறார். பாராட்டுக்கள்.
குறையில்லாத படமே இருக்க முடியாது. இது நமக்குக் குறையாக தெரியலாம். இயக்குநருக்கு இதுவே நியாயமாக இருக்கலாம். தான் செய்த தவறை உணர்ந்த ஹீரோ பூஜாவிடம் வந்து பிளாக் மெயில் செய்தது தான்தான் என்பதை ஒத்துக் கொள்வதும், இதற்கு பூஜா, அதிகப்பட்ச அதிர்ச்சியாகாமல் லேசாக ஷாக்காகி பின்பு சுதாரித்து தானும் தவறு செய்ததை ஒத்துக் கொண்டு கதைக்கு மங்களம் போடும் காட்சி மிக யதார்த்தம்தான்..!
சின்ன பட்ஜெட்டில் சிறிய கலைஞர்களைக் கொண்டு சிறந்த கதையில் அதைவிட சிறப்பான திரைக்கதையில் இப்படியொரு படத்தை எடுத்துக் கொடுத்திருக்கும் இயக்குநர் அபநிந்திரனுக்கு நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..! இந்தாண்டின் கடைசி வெற்றிப் படமாக இது இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
அவசியம் பார்க்க வேண்டிய படம். மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!

பசங்க-2 - சினிமா விமர்சனம்

25-12-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எப்போதும் துறுதுறுவென்று பரபரப்பாக எதையாவது செய்து கொண்டேயிருக்கும் சின்ன பிள்ளைகளை ‘அதிகம் சேட்டை செய்யுதுக’ என்று சொல்லி கண்டிப்பதும், தண்டிப்பதுதான் பெற்றவர்களின் வழக்கம். இது தவறு என்பதை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

ஏ.டி.ஹெச்.டி. என்று சொல்லப்படும் Attention Deficit Hyber Activity Disorder என்கிற குழந்தைகளின் சின்ன குறைபாடுடைய இரண்டு பிள்ளைகளின் வாழ்க்கைக் கதைதான் இந்த ‘பசங்க-2’ திரைப்படம். ‘பசங்க-1’-ல் இருந்த சின்ன வயது பிள்ளைகளின் பிரச்சினைகளைவிடவும் மிக அதிகமாக, இதில் குழந்தைகள் பிரச்சினைகளை விவாதித்து குழந்தைகள் நல சிறப்பு இயக்குநர் என்றே பெயரெடுத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
வங்கியில் மேனஜராகப் பணியாற்றும் முனீஸ்காந்த் – வித்யா பிரதீப் தம்பதிகள். இவர்களுக்கு ஒரு மகன். இதேபோல் சிவில் என்ஜினீயரான கார்த்திக்குமார் – பிந்து மாதவி தம்பதிக்கு ஒரு மகள். இவர்களும் சென்னையில் வேறொரு பகுதியில் வசித்து வருகிறார்கள். 
இந்த இரு தம்பதிகளின் குழந்தைகளுமே இந்த விநோதமான ஒரு குறையினால் பாதிக்கப்பட்டவர்கள். சேட்டை என்றால் அப்படியொரு சேட்டை..! வருடத்திற்கு ஒரு முறை பள்ளியை மாற்றி மாற்றி ஓய்ந்துவிட்டார்கள். இத்தனைக்கும் இவர்கள் படிப்பதென்னவோ 2-ம் வகுப்புதான். அதற்குள்ளாக 4 பள்ளிகள் மாறிவிட்டார்கள். இந்த சேட்டையான பிள்ளைகளினால் அடிக்கடி வீடு மாறும் தொல்லை வேறு..
கடைசியாக தாம்பரம் பக்கத்தில் இருக்கும் ஒரு குடியிருப்பில் குடியேறுகிறார்கள். அங்கேதான் இந்த இரண்டு குடும்பங்களும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்கிறார்கள். குடியிருப்பிலும் இவர்களது சேட்டைகள் தொடர.. தாங்க முடியாமல் ஹாஸ்டலில் சேர்த்துவிடுகிறார்கள் பெற்றோர்கள்.  பிள்ளைகளோ ஹாஸ்டலிலும் பலவித  சேட்டைகளை செய்து அங்கேயிருந்தும் துரத்தப்பட்டு வீடு வந்து சேர்கிறார்கள்.
தாம்பரத்தில் புதிதாக இவர்கள் போன குடியிருப்பிலேயே பிரபலமான குழந்தைகளுக்கான மனநல மருத்துவரான தமிழ்நாடான் என்னும் சூர்யா தனது குடும்பத்துடன் குடியிருக்கிறார். அசந்தர்ப்பத்தில் இந்தப் பிள்ளைகளின் சேட்டை பற்றி அவருக்கும் தெரிய தான் பிள்ளைகளை கேர்டேக் செய்து கொள்வதாக கூறி இரண்டு குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் கொடுக்கிறார்.
சூர்யாவுடன் அந்தக் குழந்தைகள் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். குழந்தைகளுக்குள் இருக்கும் பிரச்சினையை சூர்யா கண்டறிந்து, அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்தாரா… குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் இடைவெளி சரியானதா என்பதை மிக அழகாகச் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர்.
வெறுமனே குழந்தைகளின் வளர்ப்பு முறை பற்றிச் சொல்லாமல் பெற்றோர்களின் கடமை.. ஆசிரியர்களின் பொறுப்பு.. பள்ளிகளின் கடமை.. இப்போதைய பள்லிகள் கல்வியை சொல்லித் தரும் லட்சணம்.. அவர்களது விளம்பர வெறி.. பெற்றோர்களின் அதீத எதிர்பார்ப்பு.. என்று அனைத்தையுமே சல்லடை போட்டு சல்லிசாக்கித்தான் தந்திருக்கிறார் இயக்குநர்.
முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பேபி வைஷ்ணவி, நிஜேஷ், நயனா, அபிமன் ஆகிய குழந்தைகளை அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அதிலும் வைஷ்ணவியின் துடுக்குத்தனமான பேச்சுக்கள்.. பேய் வேடத்தில் காட்டும் நடிப்பு.. ஹாஸ்டலில் பெற்றோரை பிரிந்து காட்டும் தவிப்பு.. கிளைமாக்ஸில் மேடையில் குருவி கதை சொல்லும் ஆக்சன்களில் அனைவரையும் தாண்டிச் சென்றுவிட்டார்.
அதேபோல் பையன் நிஜேஷ்.. இப்படியொருத்தன் இருந்தால் வீடு உருப்பட்டாப்புலதான் என்பார்கள்.  ஒரு சேட்டைக்கார பையனை அப்படியே நினைவு கூற வைத்திருக்கிறான்.
சூர்யா அவருக்கே பிடித்தமான சூர்யாவாகவே நடித்திருக்கிறார். குழந்தைகளோடு குழந்தைகளாக அவர்களுக்குப் பிடித்தமான சேட்டைகளைச் செய்யும் ஒருவித மருத்துவர் நிலையில் தியேட்டருக்கு வரும் குழந்தைகளும் நிச்சயம் கவர்வார். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் தங்களுக்கெல்லாம் இது போன்ற கணவர் கிடைக்க மாட்டாரா என்கிற ஒரு எதிர்பார்ப்பை ரசிகைகளுக்குள் தூண்டிவிடும் அளவுக்கு இருக்கிறது.
அமலாபால் கேமிராமேன் உதவியோடு இன்னமும் அழகாக ஜொலிக்கிறார். குளோஸப் ஷாட்டுகளில் சொக்க வைக்கிறார். டீச்சர் என்கிற கேரக்டருக்கு கண்ணியமான காஸ்ட்யூம் என்றாலும் மேக்கப்பும், அணிகலன்களும் அதீதமாக இருந்தன என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
முந்தைய படங்களிலெல்லாம் காமெடி வேடங்களில் மட்டுமே நடித்திருக்கும் முனீஸ்காந்த், இதில் ஒரு பொறுப்பான அப்பாவாகவும் நடித்திருக்கிறார். ஆனாலும் இவருக்குள் இருக்கும் கெட்ட பழக்கமான சிறுசிறு பொருட்களை சுடும் காட்சிகளெல்லாம் கலகலப்பு.. அதிலும் டாக்டரிடன் ஸ்டெதஸ்கோப்பையே சுட்டுவிட்டு வந்து அழுவதெல்லாம் வயிறு வலிக்க வைத்த காட்சி..
இவருக்கு மனைவியாக வரும் அறிமுகம் வித்யா பிரதீப்பும் அழகு. பையனை சமாளிக்க முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு.. ஹாஸ்டலில் இருக்கும் நேரத்தில் பிரிவு தாங்க முடியாமல் வருத்தப்பட்டு கண்ணீர் விடுவதிலும் ஒரு சராசரி அம்மாவை கண் முன்னே காட்டியிருக்கிறார்.
கார்த்திக் குமார் – பிந்து மாதவி ஜோடியும் நம் மனதில் அழகாக பதிகிறார்கள்.  அடுத்தக் குழந்தை உண்டான சந்தோஷத்தை காட்டுவதும்.. அதை ஏற்றுக் கொள்ள முடியாத தவிப்பில் கார்த்திக் இருப்பதும்.. மகளின் அதிகமான பேச்சால் கோபப்பட்டு அடித்துவிட்டு பின்பு வருத்தப்படும் பிந்து.. கணவனின் கண்டு கொள்ளாமையை நினைத்து மனதுக்குள் மருகும் தாய் என்று பல்வேறு கோணங்களிலும் ஒரு அப்பர் மிடில் கிளாஸ் பேமிலியின் குணச்சித்திரத்தை இந்தக் கதை மாந்தர்களின் மூலமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இவர்கள் மட்டுமேயில்லாமல் ஒரு சிறிய கேரக்டராகவே இருந்தாலும் மனதில் நிற்பதுபோல முகம் காட்டியிருக்கும் தீபா ராமானுஜன், வினோதினி வைத்தியநாதன், டெல்லி கணேஷ், மருத்துவராக நடித்திருக்கும் ப்ரியா என்று அனைவருமே ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள்.
கதைக்கு பக்க பலமாக ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம்மின் ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது. காட்சிகள் ஒவ்வொன்றும் அழகழகாக இருக்கின்றன. எந்த கேமிராவில்தான் படமாக்குகிறாரோ தெரியவில்லை. மற்றவர்களைக் கேட்டாலும் இதே கேமிராதான் என்கிறார்கள். ஆனால் இதில் மட்டும் ஏன் இப்படி என்றால் யாருக்கும் சொல்லத் தெரியவில்லை.
இசையமைப்பாளர் ஆரோல் கொரெல்லியின் இசையில் வந்திருக்கும் பின்னணி இசை கதையோடு ரசிகர்களை ஒன்ற வைக்கிறது. பாடல்கள் ரசிக்கும்விதமாக இருக்க.. எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளோ குழந்தைகளுக்கும் பிடிக்கும்வகையில் இருக்கிறது. 
சின்னப் பையன்களை வைத்து படமெடுப்பது சுலபமல்ல. அது எல்லோராலும் முடிகிற விஷயமும் இல்லை. அவர்களின் சின்னச் சின்ன மூவ்மெண்ட்டுகளைக்கூட கவனம் சிதறாமல் பதிவாக்கியிருக்கிறார். நிச்சயம் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு பாண்டித்யம் பெற்றவர்தான். இல்லாவிடில் இது போன்ற மழலைகளை சமாளித்து எடுத்துவிட முடியுமா..?
அதேபோல் கணவன், மனைவிக்குள் நடக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகள், ஊடல்களைக்கூட முழுமையாக பதிவு செய்திருக்கிறார். ஒரு காட்சியில் தன் மனைவியை பிறர் முன்பாக குறை சொல்ல விரும்பாத சூர்யா.. “அங்கே இருந்துகிட்டே ஒண்ணும் செய்ய முடியலைன்னா எப்படி…?” என்று சொல்லிவிட்டு சூர்யா தள்ளிப் போய்க் கொண்டேயிருக்க கேமிரா அமலாபாலை காட்டுகிறது. இந்த இடத்தில் இயக்குநர் வைத்திருக்கும் காட்சியமைப்பு அபாரமான நாகரிக கற்பனை..!
சேட்டை செய்யும் குழந்தைகளும், நிறைய பேசும் குழந்தைகளும் செய்வதெல்லம் குற்றங்கள் இல்லை. அவர்களுடைய ஆளுமைத் திறனின் அதிகப்படியான வெளித்தோற்றம் அவ்வளவுதான் என்கிறார் இயக்குநர். இதனை நினைத்து பயந்து போகும் பெற்றோர்களும், அடக்கி ஆள நினைக்கும் ஆசிரியர்களையும் ஒரு சேர கண்டித்திருக்கிறார். அந்தக் குழந்தைகளிடம் தனித் திறமைகள் நிறைய இருக்கும். அதை வெளிக்கொணர்வதுதான் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமை என்கிறார் இயக்குநர்.
மதிப்பெண்களின் அடிப்படையில் கணிக்கப்படும் மாணவர்களின் மதிப்பீடு.. பிள்ளைகளை திறமைசாலிகளை வளர்ப்பதைவிடவும் சம்பாதிக்கக் கூடியவர்களாக வளர்க்க விரும்பும் பெற்றோர்கள்.. மாணவர்களை வைத்து பள்ளியின் மதிப்பை உயர்த்தி பணம் சம்பாதிக்க நினைக்கும் பள்ளிகள்.. எப்போதும் தங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் மாணவர்களையே விரும்பும் ஆசிரியர்கள்.. மற்ற பிள்ளைகளோடு ஒப்பீடு செய்தே தன் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் என்று பலதரப்பட்டவர்களுக்கும் இந்த ஒரு படத்தின் மூலமாக அருமையான விளக்கவுரை தந்திருக்கிறார் இயக்குநர்.
‘தரே ஜமீன் பர்’ என்கிற புகழ் பெற்ற ஹிந்தி படத்தின் கதைக் கருவின் சாலயை இந்தப் படமும் கொண்டிருந்தாலும் நம் தமிழ் மண்ணுக்கே உரித்தான குணத்தோடும், மனத்தோடும் திரைக்கதை அமைக்கப்பட்டு மிக அருமையான கட்டிடமாக எழுப்பப்பட்டிருக்கிறது..!
நல்ல படம் வரவேயில்லை என்றெல்லாம் இனியும் புலம்பாமல் வந்திருக்கும் இது போன்ற நல்ல படங்களுக்கும் ஆதரவு கொடுத்து கை தூக்கிவிட வேண்டியது தமிழ் சினிமா ரசிகர்களின் கடமை.
தயவு செய்து செய்யுங்கள்..! அவசியம் குடும்பத்தோடு பாருங்கள்..!

தங்க மகன் - சினிமா விமர்சனம்

19-12-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘வேலையில்லா பட்டதாரி’ போன்ற கதையம்சத்துடன் அதன் உடையை அணிந்து கொண்டு புதிதாக வந்திருக்கும் ஒரு திரைப்படம்.
இதுவும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் அனைத்துவித சந்தோஷங்களையும், துக்கங்களையும் உள்ளடக்கிய கதைதான்.

தமிழ் என்னும் தனுஷ்.. அப்பா கே.எஸ்.ரவிக்குமார், வருமான வரித்துறையில் பணியாற்றும் சாதாரண ஒரு கிளார்க். அம்மா ராதிகா. வீட்டுக்கு ஒரே பிள்ளை. கல்லூரி நேரம் தவிர மற்ற நேரங்களில் சதீஷ் மற்றும் அரவிந்த்துடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார் தனுஷ். இதில் அரவிந்த், தனுஷின் சொந்த அத்தை மகன்.  
தற்செயலாக கோவிலில் பார்க்கும் எமி ஜாக்சனை காதலிக்கத் துவங்குகிறார் தனுஷ். அவரும் இவரைக் காதலிக்கிறார். காதலருடன் சேர்ந்து பீர் குடிக்கும் அளவுக்கு முற்போக்கான பெண்ணாக இருக்கிறார் எமி. டார்ஜிலிங்கிற்கு இன்பச் சுற்றுலால்லாம் செல்கிறார்கள் காதலர்கள். அந்த அளவுக்கான அவர்களது சுதந்திரம் இருக்கும்போது திருமணத்திற்கு பின்பான வாழ்க்கை பற்றிய விஷயத்தில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு எழுகிறது.
தனது சின்ன வயது ஆசையினால் திருமணத்திற்கு பின்பு தனது கணவருடன் தனிக்குடித்தனமாக வாழ பிரியப்படுகிறார் எமி. ஆனால் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருக்கும் தனுஷ் இதை ஏற்க மறுக்கிறார். தனது பெற்றோரைவிட்டு வெளியில் வரவே முடியாது என்கிறார். இந்த சர்ச்சையில் இருவரும் அவரவர் பாதையில் பிரிந்து செல்கிறார்கள்.
எமி, அரவிந்தை திருமணம் செய்து கொண்டு போக.. தனுஷ் சமந்தாவை திருமணம் செய்கிறார். அப்பாவின் அலுவலகத்திலேயே தனுஷிற்கும் வேலை கிடைக்கிறது. வாழ்க்கை குதூகலமாக போய்க் கொண்டிருக்கும் சூழலில் திடீரென்று தனுஷின் அப்பா தற்கொலை செய்து கொள்கிறார். அலுவலகத்தில் ஏதோ திருட்டு என்று அவர் மீது புகார் சுமத்தப்படுகிறது. இதனாலேயே தனுஷின் வேலையும் பறி போகிறது. குடும்பம் நிலை குலைகிறது.
இனி என்ன செய்ய என்பது தெரியாமல் கிடைத்த வேலைக்குச் செல்கிறார் தனுஷ். ஆனாலும் அவர் மனதுக்குள் ஒரு போராட்டம். தனது தந்தையின் சாவு எதனால்..? யாரால்..? என்கிற கேள்வி அவரைக் குடைந்தெடுக்க.. அதைத் தேடி அலைகிறார். இறுதியில் கண்டறிந்தாரா இல்லையா..? என்பதுதான் இடைவேளைக்கு பின்னான சுவையான திரைக்கதை.
கல்லூரி மாணவர், மகன், கணவர்.. பெரும் ரசிகக் கூட்டத்தின் தலைவன்.. என்று எந்தக் கேரக்டராக இருந்தாலும் அது தனுஷுக்கு கச்சிதம் என்பதுதான் அவருடைய மிகப் பெரிய பலம். இதிலும் அப்படியே.. மீசையை எடுத்துவிட்டு.. ‘காதல் கொண்டேன்’ ஹீரோவை போல அரை மணி நேரம் வருகிறார். திருமணமாகி பக்குவமான கணவனாக அடுத்த அரை மணி நேரம்.. கடைசி ஒரு மணி நேரம் ஒரு மிடில் கிளாஸ் மாதவனாக பொங்குகிறார்.. தேசிய விருது பெற்ற நடிகரை, நடிப்பு விஷயத்தில் விமர்சிப்பது முடியவில்லை.. அனைத்து காட்சிகளிலும் நல்ல நடிப்புதான்..!
எமியைவிடவும் சமந்தாதான் அழுத்தமாக நடித்திருக்கிறார். என்னதான் ஆங்கிலத்தில் எழுதி வைத்து அதனை ஒப்பித்தாலும், உதட்டசைவு இன்னமும் எமி ஒரு அந்நியர் என்பதையே காட்டுகிறது. ஆனால் சமந்தா அப்படியல்ல. நம்ம வீட்டுப் பொண்ணு என்பதுபோல அவர் காட்டும் அதீதமான கணவர் பாசம்.. இன்றைய இளம் பெண்களை நிச்சயம் ‘அசடு’ என்றுதான் சொல்ல வைக்கும். ஆனாலும் கடைசிவரையிலும் ஒரு மாதிரியான மேக்கப்பில், அவரை விட்டுவைத்திருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.
சமந்தாவுக்கு அடுத்து பெயரெடுத்திருப்பது கே.எஸ்.ரவிக்குமார். ஒரு மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக.. மறதி குணமுள்ள ஒரு அப்பாவாக.. அலுவலகத்தில் பேக்கு மாதிரி இருக்கும் ஊழியனாக.. அனைத்திலும் ஒரு வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். அவருடைய மரணமும் அதைத் தொடர்ந்த காட்சிகளும் காட்டியிருக்கும் உருக்கமும், ஏற்படுத்தியிருக்கும் அச்சச்சோ உணர்வுக்கும் இவரே காரணம் என்பதால் பாஸாகிவிட்டார்.
சமையலறையில் தனுஷுடன் செல்லமாக சண்டை போடும் அந்த ஒரேயொரு காட்சியில் ராதிகா தான் யார் என்பதைக் காட்டிவிட்டார். சின்ன கேரக்டர்தான் என்றாலும் ராதிகாவின் அந்தக் கதாபாத்திரத்திற்கு உணர்வுப்பூர்வாக அம்மாவுக்கான மரியாதையை கொடுக்கலாம்.
சதீஷ் வழக்கம்போல காதலுக்கு உதவுவது.. கொஞ்சம் ஜோக்கராக இருப்பது. நடிப்பது என்று தன் வேலையில் ஓகே.. அரவிந்தாக நடித்திருப்பவரின் ஒன் மேன் ஷோ படத்தின் மிகப் பெரிய காமெடி அலை..  அந்த பையை தூக்கி வைத்துக் கொண்டு அந்த அறைக்குள் அவர் பாடும்பாட்டை பார்த்து தியேட்டரே அதிர்கிறது. ஆனாலும் கடைசியில் திடீரென்று நடக்கும் சரண்டர் டிவி சீரியலின் இறுதி முடிவைப் போல சப்பென்றாகிவிட்டது.
குடும்பமே முக்கியம்.. பணம் முக்கியமல்ல என்பதை பல காட்சிகளில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். “பணம் ஒருத்தனை பணக்காரனாகவும் ஆக்கும்.. பைத்தியக்காரனாகவும் ஆக்கும்…” என்கிறார் தனுஷ். ஓரிடத்தில் அரவிந்திடம் “மொத்தப் பணத்தையும் நீயே வைச்சுக்க…” என்கிறார் தனுஷ். இது போன்ற சில காட்சிகளில் டிவி சீரியல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவுக்கு சென்டிமெண்ட்டை பிழிந்தெடுத்திருக்கிறார் இயக்குநர்.
இப்போது தியேட்டருக்கு ஓடி வரும் இளைஞர்களுக்கு பிடித்ததுபோல இளைஞிகளின் சைக்காலஜி மேட்டர்களை அள்ளி வீசியிருக்கிறார்கள். படத்தின் முற்பாதியை கொண்டாடுகிறார்கள் தனுஷ் ரசிகர்கள்.  பிற்பாதியில் அரவிந்தின் காமெடி காட்சியிலும், தனுஷின் ஒரு சில ஆக்சன்களுக்கும் காது கிழிகிறது.
அனிருத் இசையென்றாலும், பாடலாசிரியர் தனுஷ் என்றாலும், பாடல்கள் விட்டுவிட்டு தொடர்வதால் எந்த ஈர்ப்பும் இல்லைதான்.. அறிமுக ஒளிப்பதிவாளர் குமரனுக்கு வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
நாயகிகளை துளிக்கூட ஆபாசமாகக் காட்டாமல் இருந்தமைக்கும், குத்துப் பாடல்களை வைத்து காதைக் கிழிக்காமல் விட்டதற்கும்,  நாரசார வசனங்களை வைக்காமல் இருந்தமைக்காகவும், டாஸ்மாக் காட்சிகளை காட்டாமல் இருந்ததற்காகவும், சரியாக 2 மணி நேரத்தில் படத்தை முடித்து அனுப்பி வைத்தமைக்காகவும் இயக்குநருக்கு நமது நன்றிகள்.
இருந்தாலும் ஒரேயொரு நெருடல்.. எமி ஜாக்சனும், அவரது நண்பியும் பீர் குடிக்கும்  காட்சியை சுத்தமாக நீக்கியிருக்கலாம். தேவையற்ற காட்சி அது. ஏற்கெனவே ‘பசங்க குடிக்கிறதையே காட்டாதீங்கப்பா’ என்று தமிழகமே கதறி வரும் வேளையில் இது போன்று செய்தால் எப்படிங்க இயக்குநரே..?
தந்தை பாசம்.. குடும்ப நலன்.. பொறுப்பான மகன்.. அன்பான மனைவி..  என்று இந்தக் காலத்திற்கேற்றார் போல் ஒரு குடும்பப் படமாக எடுத்திருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.  லஞ்சமும், ஊழலும் எந்த அளவுக்கு மிடில் கிளாஸ் பேமிலியை ஆக்கிரமித்திருக்கிறது என்பதையும் அதன் விளைவுகளையும் இந்தப் படம் அழுத்தமாகச் சொல்லாதது ஒரு குறைதான். ஹீரோயிஸ கதை என்பதால் அதை ஆழமாகத் தொடாமல் ஹீரோவே கதையை முடித்துவைப்பதுபோலவே முடித்திருக்கிறார்கள்..!
தங்க மகன் உண்மையில் திரையில் காட்டிய அந்தக் குடும்பத்திற்கான தங்க மகன்தான்..! 

ஈட்டி - சினிமா விமர்சனம்

12-12-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



சிறு வயதில் இருந்தே லட்சத்தில் ஒருவருக்கு இருக்கும் விநோதமான நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர் அதர்வா. அவரது உடம்பில் ஒரு குண்டூசி குத்தினால்கூட ரத்தம் கொட்டும். கொஞ்சம் ஆழமாக குத்தினால் அவரின் உயிருக்கே ஆபத்தாகும். இதை அதர்வாவின் சிறு வயதிலேயே தெரிந்துகொண்ட போலீஸ் ஏட்டுவான அவரது அப்பா ஜெயப்பிரகாஷ், அதர்வாவை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். 
விளையாட்டில் அதிக கவனம் செலுத்தினால் அதர்வாவின் உடல் நலப் பிரச்சினையை ஓரளவு சரி செய்யலாம் என்று நினைத்து அவரை விளையாட்டில் ஈடுபடுத்துகிறார் ஜெயப்பிரகாஷ்.  கல்லூரியில் படிக்கும் அதர்வா, டிரெயினர் நரேனின் தீவிர பயிற்சியால் சிறந்த தடகள வீரராக உருவெடுக்கிறார். ஓட்டப் பந்தயத்தில் மாநில அளவில் முதல்வராக வரும் அதர்வா அடுத்து நேஷனல் லெவலுக்கு தேர்வாகுவதற்காக பயிற்சியெடுத்து வருகிறார்.
இந்த நேரத்தில் ஒரு ராங்கால் மூலமாக ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. முதலில் ஹீரோயினை மிரட்டி அவ்வப்போது தனக்கும், தனது நண்பர்களின் மொபைல்களுக்கும் டாப் அப் செய்து கொள்ளும் அதர்வா.. இன்னொரு கட்டத்தில் முகமே பார்க்காமல், யாரென்றே தெரியாமல் காதல் உணர்வில் சிக்குகிறார். ஹீரோயினும் அப்படியே..!
இதற்கிடையில், ஸ்ரீதிவ்யாவின் அண்ணனான திருமுருகனுக்கும் சென்னையில் புகழ் பெற்ற கள்ள நோட்டு கும்பலுக்குமிடையில் விரோதம் ஏற்படுகிறது.  கள்ள நோட்டுக் கும்பலை போலீஸில் பிடித்துக் கொடுக்கிறார் திருமுருகன். அதனால் இவர் மீது கொலை வெறியாகும் கள்ள நோட்டுக் கும்பலின் தலைவன் ஆர்.என்.ஆர்.மனோகர்.. திருமுருகனை கொலை செய்ய நேரம் பார்த்துக் காத்திருக்கிறார்.
இந்த நேரத்தில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள சென்னைக்கு வருகிறார் அதர்வா. இப்போது திருமுருகனை கொலை செய்ய கள்ள நோட்டுக் கும்பல் முயலும்போது எதிர்பாராதவிதமாக அதர்வா இடையில் நுழைந்து திருமுருகனுக்கு உதவி செய்ய அந்த்த் திருட்டுக் கும்பலுடன் மோத வேண்டிய சூழலாகிறது அதர்வாவுக்கு.. மோதுகிறார்.
இதனால் இன்னும் கோபமாகும் அவர்கள், திருமுருகனை கொலை செய்கிறார்கள். மேலும் டிரெயினர் நரேனையும் அடித்துக் காயப்படுத்துகிறார்கள். நாளை காலை ஓட்டப் பந்தயம் என்றிருக்கும் நிலையில் அதர்வாவையும் கொலை செய்ய முயல்கிறார்கள். என்ன ஆகிறார் அதர்வா..? ஓடினாரா..? இல்லையா என்பதுதான் இந்த ஈட்டியின் திரைக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அதர்வாவுக்கு நிச்சயம் இது பெயர் சொல்லும் படம்தான். ‘பரதேசி’க்கு பின்பு கதைக்களனை உணர்ந்து அதற்காகவே தன்னை வருத்திக் கொண்டு நடித்திருக்கிறார்.
தடகள வீரருக்கு இருக்க வேண்டிய உடலமைப்புக்காக அதர்வா அளவுக்கு அதிகமாக உழைத்திருக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது. இவருடைய உழைப்புக்கு விமர்சனங்களால் நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
ஸ்ரீதிவ்யாவை கலாய்ப்பதில் இருந்து நண்பர்களுடன் போங்கு காட்டுவது.. வீட்டில் அப்பாவின் குடி அட்வைஸுக்கு தள்ளாடியபடியே தலையாட்டுவது என்று சிற்சில இடங்களில் மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார். அடிதடி காட்சிகளில் ஒரு ஆக்சன் ஹீரோவுக்குரிய லட்சணம் இவருக்குக் கிடைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.  ஆனால் இது போதுமா..?  
நாயகியான ஸ்ரீதிவ்யா ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கொஞ்சம் அழகு.. அதிகம் நடிப்பு.. அந்த வயதுப் பெண்களுக்கே உரித்தான சின்னச் சின்ன முகபாவனைகளில் ரசிகர்களை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்.
அடுத்து பாராட்டைப் பெறுபவர் உடற்பயிற்சி இயக்குநர் நரேன். எப்பவும்போல அந்தக் கேரக்டருக்காகவே நேர்ந்துவிட்டதை போலவே 99 சதவிகித முழுமையான நடிப்பையும் காட்டிவிட்டார். சின்ன கேரக்டர் என்றாலும் வசன உச்சரிப்பிலும், நடிப்பிலும் ஜெயப்பிரகாஷை மிஞ்சிவிட்டார் அதர்வாவின் அம்மாவாக நடித்திருக்கும் சோனியா போஸ்.   பொறுப்பான அப்பாவாக ஜெயப்பிரகாஷ்.. சிரித்தபடியே எதுவாக இருந்தாலும் சமாளிக்கிறார். வில்லனான மனோகரின் கண்களே அவருக்கு மிகப் பெரிய பலம்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் பின்னணி இசையைவிட சிறப்பாக இருந்தது.. ஆனாலும் வழக்கம்போல ஒரு முறை மட்டுமே கேட்கும்படியாகத்தான் இருக்கின்றன. சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு குறையொன்றுமில்லை என்று சொல்ல வைக்கிறது.
விளையாட்டை மையப்படுத்தி இதற்கு முன்பேயே பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக திரைக்கதையும் அமைத்திருக்கிறார் இயக்குநர்  ரவி அரசு. இடைவேளை பிளாக் சூப்பரோ சூப்பர்.
முதற்பாதியில் நீளும் அதர்வா அவரது நண்பர்கள், ஸ்ரீதிவ்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன. கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். இத்தனை வருடங்களாக கள்ள நோட்டு தொழிலை செய்து வருபவர்களை இதுவரையிலும் போலீஸார் கண்டு கொள்ளாமலேயே விட்டுவைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்வது..?
இதேபோல் கிளைமாக்ஸில் அந்த லேசான காயம்.. ரத்தம் சொட்டுவது.. அதர்வா ஓடுவது என்பதெல்லாம் அக்மார்க் சினிமாத்தனமான காட்சிகள். வேறு யோசித்திருக்கலாம்..! அல்லது வில்லன் கோஷ்டியை போட்டுத் தள்ளியவுடனேயே படத்தையே முடித்திருக்கலாம்.. மறுபடியும் ஒரு சண்டையை கொண்டு வந்து.. அதையும் டென்ஷனாக இழுத்து.. ‘என்னப்பா இப்படி..?’ என்றும் சொல்ல வைத்திருக்கிறார்கள்.
சினிமாட்டிக்காகத்தான் படத்தை முடிக்க வேண்டும் என்றில்லை. மிக இயல்பாக போலீஸ் டிரெஸ்ஸுடன் வீட்டுக்கு வருவதுபோல இருந்திருக்கலாம். இங்கேயும் அப்பா ஏட்டாக இருக்கும் ஸ்டேஷனிலேயே இன்ஸ்பெக்டராவது போலல்லாம் காட்டுவது இயக்குநரின் ஓவர் சிந்தனையைத்தான் காட்டுகிறது..!
ஹீரோ ஈட்டியாக பாய்வான் என்பதற்கு பொருத்தமாகத்தான் ‘ஈட்டி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  படமும் அப்படித்தான் பாய்ந்திருக்கிறது என்று நம்புகிறோம்..!


உறுமீன் - சினிமா விமர்சனம்

10-12-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முன் ஜென்மப் பகை.. ஜென்ம்ம் தாண்டியும் தொடர்கிறது.. இரண்டாவது ஜென்மத்திலும் அதே துரோகத்தைச் சந்தித்த வேதனையிலும், துடிப்பிலும் இருக்கும் ஹீரோ.. மூன்றாவது ஜென்மத்தில் வட்டிக்கும், முதலுக்குமாக திருப்பிக் கொடுப்பதுதான் இந்த உறுமீன்..!
‘ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் காத்திருக்குமாம் கொக்கு’ என்பார்களே.. அது போலத்தான் முதல் ஜென்மத்தின் கணக்கைத் தீர்க்கவும், இரண்டாம் ஜென்மத்தின் பட்ட துரோகத்தையும் தாங்கிக் கொண்டு மூன்றாவது ஜெனமத்தில் காத்திருந்து துரோகியை பொலி போடுகிறார் ஹீரோ..!

முதல் ஜென்மக் கதை :
ராஜசிம்மன் என்கிற சோழ வம்சத்து அரசனான பாபி சிம்ஹா, தன்னுடைய குருவான பிரம்மர் என்கிற முனிவரிடமிருந்து நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் புத்தகத்தைப் பெற்றிருக்கிறான்.
தன்னுடைய சக நாட்டு அரசனுடன் போரிட வேண்டிய நிலை. இந்த நேரத்தில் தன்னுடைய நம்பிக்கைக்குரிய நண்பனான ‘கருணா’வால் காட்டிக் கொடுக்கப்பட்டு எதிரி அரசனிடம் பிடிபடுகிறான். ஆனாலும் தன்னுடைய விடா முயற்சியால் அங்கிருந்து தப்பித்து தனது குருநாதரைத் தேடி வருகிறான்.
எதிரியிடம் பிடிபட்டு சாவதைவிட தானே தன் சாவைத் தேடிக் கொள்வதே எனக்குப் பெருமை என்று சொல்லி தன்னை உயிருடன் புதைத்துவிடும்படி கேட்டுக் கொள்கிறான். அவனுடன் அந்தக் காலப் புத்தகமும் புதைக்கப்படுகிறது.
இரண்டாம் ஜென்மக் கதை :
நூறாண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதி. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில்.. தேயிலை தோட்டங்களையெல்லாம் வளர்த்தெடுத்து, டீ உற்பத்தியை பெருக்கி இதன் மூலம் கிறிஸ்துவத்தை மறைமுகமாக பரப்பி வந்த நேரம் இது.
இந்தப் பகுதியிலும் அடுத்த ஜென்ம உருவமாக பிறந்திருக்கிறார் பாபி சிம்ஹா. இப்போது அவர் வக்கீலுக்கு படித்தவர். அந்த ஊரிலேயே ஆங்கிலம பேசத் தெரிந்த ஒரேயொருவர். முதல் ஜென்மத்து துரோகி நண்பனான கருணா, இப்போது கலையரசனாக சிம்ஹாவின் நண்பனாக உடன் இருக்கிறார்.
ஊருக்கு வரும் வெள்ளைக்கார துரை காட்டுக்குள் வேட்டைக்கு போகும்போது துணைக்கு மொழி பெயர்ப்பாளர் ஒருவரும் தேவை என்பதால் ஊர் கங்காணி, துணைக்கு பாபி சிம்ஹாவையும், அவரது ஆத்ம நண்பர் கலையரசனையும் அனுப்பி வைக்கிறார்.
போகிற இடத்தில்தான் அந்தக் காலப் புத்தகம் சிம்ஹாவின் கைக்கு கிடைக்கிறது. அது கிடைக்கும் நேரத்தில் வெள்ளைக்கார துரை சிம்ஹாவை செஸ் விளையாட அழைக்கிறார். காய்கள் வெட்டப்பட, வெட்டப்பட தோற்றவர் அவரவர் ஆடைகளைக் களைய வேண்டும் என்பது ஆட்டத்தின் விதிமுறை. தோல்வியடையும் வெள்ளைக்கார துரை முழு நிர்வாணமாக வேண்டிய நிலைமை.
இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் தவிக்கிறார் துரை. இருவருக்குள்ளும் ஏற்படும்  பிரச்சினையில் சிம்ஹா துரையை அடித்துவிட காது கேளாமல், பேச முடியாத நிலைமைக்குத் தள்ளப்படுகிறார் துரை. இதைச் செய்துவிட்டு காட்டுக்குள் தப்பியோடுகிறார் சிம்ஹா.
இப்போதும் உடனிருக்கும் கலையரசன், அந்த தேயிலை தோட்டம் முழுவதையும் தனது பொறுப்புக்குவிட்டால் சிம்ஹாவை காட்டிக் கொடுப்பதாகச் சொல்லி சிம்ஹாவை வெளியில் அழைத்து வந்து விடுகிறான். துரை சிம்ஹாவை கொலை செய்ய.. இரண்டாவது முறையாகவும் துரோகம் ஜெயிக்கிறது.
இப்போது நிகழ் காலம்..
மதுரையில் இருந்து பி.இ. முடித்துவிட்டு வேலை தேடி சென்னைக்கு வந்திருக்கிறார் சிம்ஹா. நண்பன் காளியின் அறையில் தங்கிக் கொண்டு வேலை தேடி வருகிறார். கிடைக்கவில்லை. ஆனால் தற்செயலாக அந்தக் காலப் புத்தகம் சிம்ஹாவின் கைக்கு கிடைக்கிறது.
அது கிடைத்தவுடன் சிம்ஹாவின் வாழ்க்கையில் பெரிய மாற்றம். சட்டென வேலை கிடைக்கிறது. கிடைத்த இடத்தில் கல்லூரியில் தனக்கு ஜூனியரான ரேஷ்மியை அங்கே பார்க்கிறார். கல்லூரி காலத்தில் சொல்ல முடியாமல் போன காதலை, இங்கே சொல்லிவிடலாம் என்று தவியாய் தவிக்கிறார் சிம்ஹா. ரேஷ்மியும்தான்..!
அலுவலகத்தில் வைத்திருந்த காலப் புத்தகத்தில் இருந்து திடீரென்று புகை வர.. புத்தகம் பற்றிய சந்தேகம் சிம்ஹாவுக்குள்ளும் புகைகிறது. மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்கிறார். “அந்தப் புத்தகத்திற்கும் உனக்கும் ஏதோ பூர்வீக பந்தம் இருப்பதாகத் தெரிகிறது. முடிக்காத ஒரு விஷயத்தை முடித்து வைக்க இந்தப் புத்தகம் உதவலாம்..” என்று பூடமாகச் சொல்லியனுப்புகிறார் மருத்துவர்.
இந்த நேரத்தில்தான் ரேஷ்மி கிரெடிட் கார்டில் வாங்கிய கடனுக்காக அவரை போனில் டார்ச்சர் செய்கிறார் கலையரசனின் தம்பி. அவனை நாலு தட்டு தட்டலாம் என்றெண்ணி சிம்ஹாவும், காளியும் அவனை பின் தொடர.. திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு கும்பல் கலையரசனின் தம்பியை எரித்துக் கொல்கிறது. இதற்கு சிம்ஹாதான் காரணமோ என்றெண்ணி அவரைத் தூக்கி வந்திருக்கிறது கலையரசனின் டீம்.
இப்போது அந்தப் புத்தகத்தின் உதவியோடு தான் கணக்குத் தீர்க்க வேண்டியது கலையரசனைத்தான் என்பது சிம்ஹாவுக்குத் தெரிய வர.. அதை செய்து முடிக்க தீர்மானிக்கிறார். எப்படி முடிக்கிறார் என்பதுதான் இந்த புதுமையான, சுவாரஸ்யமான திரைக்கதை கொண்ட படத்தின் மிச்சம் மீதிக் கதை.
பாபி சிம்ஹா ஒரு ஆக்சன் ஹீரோவாக தலையெடுக்க வேண்டியே இந்தக் கதையைப் பிடித்திருக்கிறார் போலிருக்கிறது. முதல் படத்திலேயே மூன்று கேரக்டர்கள். மூன்றில் ஒன்று மோஷன் கேப்சர் ஆப்ஷனில் அட்டகாசமாக படமாக்கப்பட்டுள்ளது. அதில் வரும் சிம்ஹாவின் அச்சு அசலான உருவத்தில் அந்தக் கேரக்டரின் பீலிங்க்ஸ் தெரியும் அளவுக்கு வரைந்திருப்பது சிறப்பு..!
இரண்டாவதாக வரும் ஜான் கேரக்டரில் அந்த அலட்சிய மனப்பான்மை.. வெள்ளையனை எதிர்க்கும் வெறுப்பு.. இரண்டையும் சரி சமமாகவே செய்திருக்கிறார். இதில்தான் செமத்திய சண்டை காட்சிகள்.. ஆக்சன் ஹீரோவுக்கு தேவையானதை இதிலேயே செய்து காட்டியிருக்கிறார். இனிமேல் அவரது ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
மூன்றாவதான செழியன் கேரக்டரில் போகப் போகத்தான் ஆக்சனுக்குள் இறங்குகிறார். அதுவரையிலும் இருக்கும சாதா செழியனை அனைவருக்கும் பிடிக்கும்வகையில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். புத்தகம் கைக்கு வந்தவுடன் அவருக்குள் ஏற்படும் மாற்றம்.. திடீரென்று எழுப்பியவுடன் ஆக்ரோஷமாக கத்தியபடியே எழும் அந்த ஒரு காட்சியே பயமுறுத்திவிட்டது.
ரேஷ்மியுடனான காதலைச் சொல்ல முடியாமல் சங்கடப்பட்டு கடைசியாக மறைமுகமாகத் தெரிவிக்கும் காதல் செழியனுக்குள் நிஜமாகவே காதலை வரவழைத்திருக்கும் என்று நம்புகிறோம்.. தம்பதிகள் நீடூழி வாழட்டும்.
கிளைமாக்ஸில் அதிக கத்தியின்றி, ரத்தமின்றி சேதாரமில்லாமல் ஆக்சன்களை வைத்திருப்பதால் மறுபடியும் ஒரு ஆக்சன் ஹீரோவை பார்க்க வழியில்லாமல் போய்விட்டது.
ரேஷ்மிக்கு அதிகம் வேலையில்லை. ஆனால் கொடுத்த கேரக்டருக்கு வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார். வசனமே பேசாமல் தடுக்கி விழுந்தே ஒரு காட்சியில் பெரும் சிரிப்பை வரவழைக்கிறார் மனோபாலா.
கலையரசனுக்கும் ‘மெட்ராஸு’க்கு பின்பு பெயர் சொல்லும் படம். ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொருவிதமான நடிப்பைக் காண்பிக்கும்போதுதான் நடிப்பு என்பதென்ன என்பது ரசிகனுக்கும் தெரிகிறது. ஜானை மாட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்து செல்லும் கலையரசனின் வெற்றிப் பெருமிதம் அவரது நடிப்புத் திறமைக்கு ஒரு ஷொட்டு..!
அதேபோல் இப்போதைய தாதா கலையரசன் கேரக்டரும் அசத்தல். அந்த மாடுலேஷன், பாடி லாங்குவேஜெல்லாம் நிறைய படங்களில் நடித்த அனுபவஸ்தர் போலவே இருக்கிறது..! வெல்டன் கலை ஸார்..!
குறிப்பிடத்தக்க நடிப்பை காண்பித்திருக்கிறார் அப்புக்குட்டி. இரண்டாவது ஜென்மத்துக் கதையில் இவர் மூலமாக உலகத்துக்குச் சொல்லும் ஒரு வசனத்தை சென்சார் போர்டு எப்படி கண்டு கொள்ளாமல்விட்டார்கள் என்று தெரியவில்லை. இந்த ஒரு வசனத்துக்காகவே இயக்குநருக்கு ஒரு சல்யூட்..
“காட்டுல மொத்தம் நாப்பத்தி அஞ்சாயிரம் புலிகள் இருந்துச்சு .இந்தப் படுபாவிப் பயங்க அநியாயமா கொன்னு கொன்னு இப்போ இருபதாயிரம்தான் இருக்கு . டேய் ஒண்ணு ஞாபகம் வச்சுக்கங்கடா … எண்ணிக்கை குறைஞ்சாலும் புலி, புலிதான் “ என்கிறார் அப்பு\க்குட்டி உடனே பாபி சிம்ஹா அவரிடம் ‘’நீங்க எந்தப் புலியை சொல்றீங்க?’’ என்று கேட்க, அப்புக்குட்டி சிரித்துவிட்டு, “உங்களுக்கே தெரியாதா..?” என்கிறார்.   அதேபோல் துரோகியான கலையரசனுக்கு ‘கருணா’ என்று பெயர் வைத்திருக்கிறார். புரிந்தது.
இதேபோல் அப்போதையக் காலக்கட்டத்தில் டீ என்னும் குடிபானம் எப்படி தென்னிந்திய மக்களின் அன்றாட உணவானது என்பதையும், தேயிலைத் தோட்டங்களை வைத்தே கிறித்துவம் எப்படி அந்தப் பகுதியில் பரப்ரப்பட்டது என்பதையும் இயக்குநர் ஒரு சில காட்சிகளில் நுணுக்கமாகப் பகிர்ந்திருக்கிறார்.
முதல் பாதியில் ஓடும் ஒரு பரபரப்பு, இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வைக் கொடுத்தாலும், கலையரசனை வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்குச் சொல்லப்படும் காரணம் மிக எளிமையானதாக பெருவாரியான ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான விஷயமாகவும் இருப்பதால் அதுவே ரசிக்கப்படுகிறது.
கலையரசனின் இன்றைய கதையில் இப்படியொரு பிளாஷ்பேக் தேவையே இல்லை. பழி வாங்கப்படுதலுக்காகத்தான் இந்த மூன்றாவது பிறவி. பின்பு எதற்கு வீணான பில்டப்பு..?
கிளைமாக்ஸ் காட்சிக்காக எங்கே போய் ரூம் போட்டு யோசித்தார்களோ தெரியவில்லை. பரவாயில்லை. கச்சிதமாக அதிகம் ரத்தம் சிந்தாமல், ஒரு செட்டப் செய்து செய்யும் இந்தக் கொலைகளெல்லாம் சாதாரண கமர்ஷியல் படங்களில் படங்களில் காணப்படுவது போலவே இருப்பதுதான் இந்த வித்தியாசமான கதையம்சம் உள்ள படத்தின் ஒரேயொரு மைனஸ் பாயிண்ட்.
ரவீந்திரகுரு நாத்தின் ஒளிப்பதிவும், அச்சு ராஜாமணியின் இசையமைப்பும் படத்திற்கு ஒரு பலம். அறிமுக இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி  வித்தியாசமான ஒரு கதையுடன் அழுத்தமான இயக்கத்தில் ஒரு பொழுது போக்கு படத்தை உரிய நேரத்தில் கொடுத்திருக்கிறார்.
இதன் மூலம் உறுமீனைக் கொத்தப் போகும் மீனவனாக இருக்கும் நடிகர் பாபி சிம்ஹாவுக்கு, இந்தப் படம் பெரிதும் உதவினாலே அது இருவரது வாழ்க்கையிலும் பெரிய திருப்பம்தான்..!