சொன்னா புரியாது - சினிமா விமர்சனம்

29-07-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

படத்தின் கதையும் சத்தியமா சொன்னா புரியாதுதான்..! 


கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிட்டு டெய்லி பப், தண்ணி, கிளப்புன்னு சுத்துற ஆளு சிவா. வோல்ஸ்வேகன் கார் ஒண்ணு வாங்கி அதுல ஜம்முன்னு போகணும்ன்றதுதான் ஐயாவோட நீண்ட நாள் கனவு. அம்மாவோட நச்சரிப்பு தாங்காம கல்யாணத்துக்கு ஒத்துக்கப் போய்.. ஒரு பொண்ணு சிக்குது. அந்தப் பொண்ணுக்கும் கல்யாணத்துல இஷ்டமில்லை.. ரெண்டு பேருக்குமே இது தெரிஞ்சு ஆளுக்கு ஒரு பொய் சொல்லி கல்யாணத்தை நிறுத்திர்றாங்க.. ஆனா விதி விடலை. அதுக்கப்புறமும் ரெண்டு பேரையும் 50 லட்சம் பரிசு ஒரு போட்டிக்காக ஒண்ணு சேர்க்குது..! தான் விரும்பிய கார் வாங்குறதுக்காகவே போட்டில கலந்துக்கிட்டதா சிவா சொன்னாலும், ரெண்டு பேருக்குள்ளேயும் காதல் இருக்காம்.. அது பாருங்க.. நம்ம கண்ணுக்குத் தெரியலை.. அவங்களுக்கும் தெரியலை.. இயக்குநருக்கு மட்டுமே தெரிஞ்சிருக்கு..! இதையே கடைசி 3 ரீல்ல இழுத்துவைச்சு கடைசீல ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சு சுபம் போட்டு முடிச்சிட்டாங்க. அவ்ளோதான் கதை..!

சிவா அண்ணன் இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் ஆனாத்தான் அடுத்தடுத்த வருடங்களில் மேலும் ஒரு படி போக முடியும்..! எப்போதும் பிரச்சினை என்றவுடனேயே நெற்றிப் பொட்டைத் தொட்டுவிட்டு குனிந்து கொள்வதும்.. கேமிராவுக்கு மேலே பார்த்து பேசுவதுமாகவே இருக்கிறார். இந்த மேனரிஸம் இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை. ஆனாலும் சிற்சில இடங்களில் நகைச்சுவை தூள் பறக்கிறது..!

நண்பனின் திருமணத்தின்போது ஹீரோயின் வசுந்தரா அனுப்பிய பெண் வந்து செய்யும் கலாட்டாவை சமாளிப்பது.. சிவாஜியிடம் தன்னுடைய குறையைச் சொல்லி திருமணத்தை நிறுத்துவது.. வசுந்தராவின் பெட்ரூமூக்குள் சென்று வசனத்தைக் கொட்டுவது. பின்பு வெளியில் வந்து சிவாஜியை சமாளிப்பது.. மனோபாலாவை இந்தக் கதைக்குள் இழுத்துவிடுவது என்று இவர் செய்திருக்கும் சிற்சில காமெடிகள் மட்டுமே படத்தினை தொடர்ந்து பார்க்க வைத்திருக்கிறது..!

இவருக்கு அடுத்து சிவாஜியும், மனோபாலாவும்தான்..! தெரியாத்தனமாக ஒரு பொய் சொன்னதற்காக மேட்டர் இல்லம்மா என்ற ஒற்றை வரியை அசால்ட்டாகச் சொல்லி அனைத்து கைதட்டல்களையும் வாங்கிக் கொண்டார் சிவாஜி. எப்போதும் காமெடிக்கு டயலாக் டெலிவரிதான் முக்கியம் என்பார்கள். அதற்கு இந்த ஒரேயொரு ஷாட்டையே உதாரணமாகச் சொல்லலாம்..!  ஆனாலும் இதையே காரணமாக வைத்து அவ்வப்போது அந்த இடத்தை பார்த்தபடியே சிலேடை பேசுவது கொஞ்சம் ஓவரோ என்று சொல்லத் தோன்றுகிறது..!

வசுந்தரா.. சிரிக்கும்போது பளீச்சென இருக்கிறார் எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய்..! பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போகிறது..! பட்டுச் சேலையில் பாந்தமாக காட்சியளித்து இவரே பிற்பாடு பப்பில் பீர் அடித்து வாந்தி எடுத்த கேரக்டர் என்ற திருப்பம் வரும்போது இன்னும் கொஞ்சம் பிடித்துப் போகிறது..! சிவாவுடன் ஒத்துப் போய் கல்யாணத்தை நிறுத்திவிட்டு பின்பு சிவா மீதே காதலாகி தன் காதலை ஒத்துக் கொள்ளும்படி கெஞ்சும் அந்தக் காட்சியில் மட்டுமே காமெடியே இல்லாது சிறிது நேரம் உதடுகளை மூட வேண்டியிருக்கிறது..! நச் என்ற நடிப்பு.. இந்தப் பாப்பாவுக்கு ஏன் அதிக வாய்ப்புகள் வரலைன்னு தெரியலை.. இந்த இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் வேற என்னதான் வேணுமாம்..? 

இயக்குநர் புதுமுகம். எம்.ராஜேஷின் பட்டறையில் இருந்து வெளி வந்திருக்கிறவர்.. அதே பார்முலாவின்படி கதையை சிறிதும் போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார்..! எந்த நேரமும் கையில் டேப்லட்டுடன் திரியும் சிவாவின் பாட்டி அவ்வப்போது எடுத்துக் கொடுக்கும் இணைய ஹிண்ட்ஸ்கள்.. மகனை கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ள வைப்பதற்காக அம்மா எடுக்கும் ஆன்மீகப் பயணம்.. பிளாஷ்பேக் சிச்சுவேஷனை உருவாக்க அனைவருமே நெற்றியைத் தடவிக் கொண்டு தலையைக் குனிந்து தரையைப் பார்ப்பது..! சிவாஜி-மனோபாலா கேரக்டர் ஸ்கெட்ச்.. வசுந்தரா மனம் மாறி தனக்குள் காதல் இருப்பதை ஒத்துக் கொண்டு சிவாவை பார்க்க வருவது.. ஆள் மாறாட்டக் காட்சிகளில் குழப்பமில்லாமல் தெளிவாக நம்மைக் குழப்பியிருப்பது.. டப்பிங் வாய்ஸ் கொடுப்பதை வைத்தே சிற்சில இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர்.. அதிலும் குரங்குகளின் லைப்புக்கு வசுந்தராவின் பெயரைச் சூட்டி அவரே பார்த்து காதலைத் தெரிந்து கொள்வது - இதெல்லாம் திரைக்கதைக்காக ரொம்பவே ரூம் போட்டு யோசித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது..!

யாரோ ஒரு புதுமுக புண்ணியவான்தான் இசையமைப்பாளர்.. நல்லாயிருக்கட்டும். அடுத்தப் படத்தில் நன்றாகவே இசையமைக்கட்டும். காமெடிதான் ஓடிக்கிட்டே இருக்குல்ல.. அப்புறம் எதுக்கு அதுக்காகவெல்லாம் மெனக்கெடணும்னு விட்டுட்டாங்க போலிருக்கு..!

இந்த வாரம் வந்த படங்களில் இதுவே தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்க்கும்வகையில் இருப்பதால் இப்போதைக்கு கல்லா கட்டி போட்ட காசு கைக்கு வரும் என்று நினைக்கிறேன்.. பட்டத்து யானையால் பலன் பெற்றிருக்கிறது இந்த சொன்னா புரியாது.. டைட்டில் மட்டும் ஏன் இப்படி வைத்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை காதல் சொன்னா புரியாது.. அனுபவிச்சாத்தான் புரியும்ன்னு சொல்றாங்களோ என்னவோ..! 

அடிக்கடி சினிமா பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புரியும்.. எப்போதாவது பார்ப்பவர்களுக்கு இடைவேளைக்கு பின்பு நடப்பது புரியுமா என்பது சந்தேகம்தான்..! ஆனாலும் கிளைமாக்ஸ் பரபரப்பு.. ஆள் மாறாட்ட காட்சிகள்.. அந்த சென்டிமெண்ட் திருப்பங்கள் எல்லாம் சேர்ந்து 1980-களின் ஒரு சினிமாவா இதைக் காட்டிவிட்டன.. வாழ்க இயக்குநர்..!

சொன்னா புரியாது - பார்த்தால்தான் புரியும்..! 

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

27-07-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கமான விஷால் படம்தான். கொஞ்சம் கூடுதலாக காமெடி என்ற பெயரில் லந்து செய்திருக்கிறார்கள். இதுதான் வித்தியாசம்.. சந்தானம் மட்டும் இல்லைன்னா..??????


காரைக்குடியில் இருந்து ஹோட்டல் வைப்பதற்காக திருச்சிக்கு சந்தானத்துடன் வருகிறார்கள் விஷால் அண்ட் டீம். வந்த இடத்தில் ஹீரோயின் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட ஒரு சிக்கலில் தலையிடுகிறார் விஷால். அது கடைசிவரையிலும் தொடர்ந்து வர.. விஷாலுக்கு இருக்கும் சஸ்பென்ஸ் காட்சிகளுடன் இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்து கிளைமாக்ஸ்வரைக்கும் நீள்கிறது.. அவ்வளவுதான் கதை..!

படத்தின் துவக்கத்தில் இருந்தே படத்தைத் தன் தோள் மீது சுமந்திருக்கிறார் சந்தானம். ஆனாலும் அதுக்காக இப்படியா..? காமெடி வசனம் என்பது பார்க்கும் நபரையெல்லாம் நக்கல் செய்வதும்.. 3 வரிகளில் தொடர்ச்சியாக எதுகை, மோனையில் பேசுவதும்தான் என்று யாரோ சந்தானத்திற்கு சொல்லியிருக்கிறார்கள் போலும்.. அதை பழைய படங்களின் ஸ்டைலையே இதிலும் தொடர்ந்திருந்தாலும் சிற்சில இடங்களில் நகைக்க வைத்திருக்கிறார். திரைக்கதையின் சுவாரசிய ஓட்டத்தில் சந்தானத்தின் இந்த கனெக்ட்டிவிட்டிதான் நம்மை சீட்டில் உட்கார வைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை..!

விஷாலுக்கு அதே நடிப்புதான்.. அவன் இவனுக்கும் இந்தப் படத்துக்கும் எத்தனை வித்தியாசம் நடிப்பில் என்று போட்டியே வைக்கலாம்..! இடைவேளை பிளாக்கில் தான் யார் என்பதை சீரியஸாக சொல்லும்போதுதான் விஷால் சிரமப்பட்டு நடித்திருக்கிறார் போலும்.. சண்டை காட்சிகளை அமைத்தவரின் புண்ணியத்தில் ஆக்சன் ஹீரோவாக அதகளம் செய்து தப்பித்து கொண்டிருக்கும் ஹீரோக்களில் விஷாலும் ஒருவர் என்பதால் ஆக்சனில் காது கிழிகிறது..! அடி ஒவ்வொன்றும் இடியாக விழுக.. அதை வாங்கியவன் உண்மையில் செத்திருக்க வேண்டாம். ஆனாலும் இயக்குநர் பெருந்தன்மையாக சாகாமல் மருத்துவமனையில் அட்மிட் ஆவதாக திரைக்கதை அமைத்து நமது வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்..!

ஹீரோயின் ஐஸ்வர்யா அர்ஜூன்.. புதுமுகம் என்பதால் விட்டுவிடலாம். ஒரு ரவுண்டு வருவதே கஷ்டம்ன்னு நினைக்கிறேன்..! முகத்தையும் மீறி ஏதாவது வித்தியாசம் வேணும்.. ம்ஹூம்.. அப்பாவின் சிரிப்பு மட்டுமே வருகிறது..! நல்லவேளை டப்பிங் உத்தடசைவுகள் பொருத்தமாக இருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்..! பாடல் காட்சிகளில் ஜிகினா டிரெஸ்ஸில் ஜொலித்தாலும், கனவுக்கன்னியாக வரும் வாய்ப்பு குறைவுதான்..!

குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் மயில்சாமி. மனிதர் டயலாக் டெலிவரியில் பின்னியெடுக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் சித்ரா லஷ்மணனிடம் தான் எப்படி திருடினேன் என்பதைச் சொல்லும் காட்சியில் சந்தானத்தை ஓவர்டேக் செய்திருக்கிறார் மயிலு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இது போன்ற சில காட்சிகளுக்காகவே படம் ஓடிருமா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை..! 

லாஜிக்கே பார்க்காமல்தான் படம் பார்க்கணும்னு இயக்குநர் முன்னாடியே சொல்லிட்டார்.. அதுனால லாஜிக் கிலோ என்ன விலைன்னு கேக்குற டீம்ன்னு நினைச்சே படத்துக்கு போங்க.. பாருங்க..! குரு என்று சொல்லி சந்தானத்தை ஓட்டுவதும்.. அவரை சாப்பிட அனுப்பிவிட்டு இவர்கள் பின்னால் செல்ல நினைப்பதும், அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவை பார்த்துவிட்டு அவர் பின்னால் ஓடி வழிவதும் மகா லாஜிக் ஓட்டை.. ஜன்னல் வழியாக ஐஸ்வர்யாவிடம் விஷால் பேசுவது சுத்த பேத்தல்..! சித்ரா லஷ்மணன் தன் மகள் கல்யாணத்தின்போதே தனக்கு டிரான்ஸ்பர் வந்துவிட்டதாகச் சொல்லி சாப்பாட்டை பார்சல் எடுத்துச் செல்வது பூச்சுற்றல்..! மன்னாரு பற்றி போட்டுக் கொடுத்து தனது போலீஸ் வேலையைக் காட்டுவது திரைக்கதையை இழுக்கும் உத்தி.. சந்தானத்தின் காமெடியை அதிகப்படுத்த நினைத்து திரைக்கதையில் டிஸைன், டிஸைனாக ஓட்டைகளைக் குத்தி அலைய விட்டிருக்கிறார் இயக்குநர் பூபதி பாண்டியன்..!

காமெடிதான் என்பதால் மக்கள் அதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்க என்று நினைத்துவிட்டார்கள். அப்படியே இருந்தாலும் ஐஸ்வர்யாவை காதலிக்க வைக்கவே விஷாலின் நல்ல குணங்களை அப்படியே சீன் பை சீனாக கொண்டு வருவதெல்லாம் டூ மச்சு.. அதோடு ப்ளஸ்டூ படிக்கும் ஐஸ்வர்யாவுக்கு காதல் ஒரு கேடான்னு நாளைக்கு நிறைய பேர் கிளம்பி வரப் போறாய்ங்க.. இதுக்கும் இயக்குநர்தான் பதில் சொல்லணும்..! சீரியஸ் படம் என்றால் நடந்த கதை. அல்லது கேள்விப்பட்ட கதை என்று தப்பிக்கலாம். இதுக்கு..?

தமன் இசையில் 'என்ன ஒரு என்ன ஒரு' பாடல் மட்டுமே இனிக்கிறது..! ஆனாலும் டியூனை கேட்டால் வேறு எங்கோ போய் இடிக்குது.. கண்டுபிடிச்சிருவோம்.. மண்டைக்குள்ளேயே இருக்கு.. இறங்க மாட்டேங்குது..! பாடலுக்கான இசையைவிட்டுவிட்டு பின்னணியில் போட்டுத் தாளித்திருக்கிறார் தமன்.. முடியலை.. 

பூபதி பாண்டியன் நல்ல நகைச்சுவை எழுத்தாளர்.. அதுவும் சிறந்த கதை, திரைக்கதையோடு இருந்தால்தான் வொர்க் அவுட்டாகியிருக்கும். தனுஷ் கால்ஷீட் இல்லையென்ற கோபத்தில் உடனுக்குடன் விஷாலுக்காக கதையை தயார் செய்து எடுத்திருக்கிறார் போலும்.. சந்தானத்தை வைத்தே முதலில் இருந்து கடைசிவரையிலும் கதையை ஓட்டியிருக்கிறார்கள்.  சந்தானமும் சளைக்காமல் போராடியிருக்கிறார்.. இப்போதே சரக்கு ஸ்டாக் பஞ்சமோ என்று கேட்கும் அளவுக்கு ரிப்பீட் டயலாக்குகள் நிறையவே இருக்கின்றன.. மற்றதெல்லாம் எப்படியோ..? உடனிருக்கும் கூட்டத்தை உஷார்படுத்தினால் சந்தானத்திற்கு நல்லதுதான்..!

'சொன்னா புரியாது' படத்துடன் போட்டிபோட்டு ஸ்டார் வேல்யூவுடன் வந்திருக்கிறது என்பதாலும், சந்தானம் இருப்பதாலும் இப்போது எதுவும் சொல்ல முடியாது.  திங்கள்கிழமை மாலை இப்படத்தின் கதி தெரிந்துவிடும்..! 

மரியான் - சினிமா விமர்சனம்

19-07-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கொஞ்சம் 'ரோஜா', கொஞ்சம் 'நீர்ப்பறவை', கொஞ்சம் 'கடல்' - இவைகளை எல்லாம் சேர்த்துக் கொண்டால் இந்த மரியான் கிடைக்கும்..! தன்னுடைய காதலிக்காக சூடானின் எண்ணெய் கம்பெனியில் இரண்டு வருட கான்ட்ராக்ட்டில் வேலைக்குச் செல்லம் தனுஷ், கான்ட்ராக்ட் பீரியட் முடிந்து ஊர் திரும்பும்போது வழியில் சூடானின் தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொள்கிறார்.. எப்படித் தப்பித்து ஊர் வந்து சேர்கிறார் என்பதுதான் கதை..!


'வந்தே மாதரம்' என்ற ஒரு ஆல்பத்தின் மூலமாகவே ஓவர் நைட்டில் இந்தியா முழுவதும் பிரபலமான பரத்பாலாதான் இப்படத்திற்கு கதை எழுதி இயக்கியிருக்கிறார். வசனம் ஜோ.டி.குரூஸ்.. மீனவர்களின் வாழ்க்கைப் பிரச்சினையைத்தான் இதில் அலசியிருக்கிறோம் என்று பல பிரஸ் மீட்டுகளில் இயக்குநர் சொல்லி வந்தது இப்போது ஜல்லி என்று தெரிகிறது..!

படத்தின் முதல்பாதி முழுவதும் தனுஷ்-பார்வதி காதல் பிரச்சினைகளிலேயே சிக்கித் தவித்து, காதலை சொல்லித் தொலைங்களேன்பா என்று நம்மை கதற வைக்கும் அளவுக்கு திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்..! சிறு வயதில் இருந்து பார்வதி தனுஷை விரும்புகிறாராம். ஆனால் தனுஷ் கடலை மட்டுமே விரும்புகிறாராம்.. பார்வதி தன்னைத் திருமணம் செய்து கொண்டால் மிகவும் கஷ்டப்படுவார் என்பதால் தான் அவரைத் தவிர்க்கிறேன் என்று தனது நண்பன் அப்புக்குட்டியிடம் சொல்கிறார்.. இதனாலேயே தனக்குள் இருக்கும் காதலை மறைத்து, பார்வதியிடம் நேரில் காதல் இல்லை என்கிறார்.. இப்படியே 5 ரீல் பேசிய பின்பு திடீரென்று காதல் வந்து பெண் கேட்டு வந்த ரவுடியிடம் சண்டைக்கு போகிறார்.. அப்பாடா ஒரு வழியாக காதல் பிறக்கிறது.. ஆனால் பிரச்சினையும் வருகிறது.. 

பார்வதியின் அப்பா வாங்கிய கடனை உடனேயே திருப்பிக் கொடுக்கும்படி அடி வாங்கிய ரவுடி சொல்ல.. அதற்காக தான் சூடானுக்கு எண்ணெய் கம்பெனியில் வேலைக்குப் போகத் தயார் என்று சொல்லிவிட்டு கிடைக்கும் அட்வான்ஸ் பணத்தை பார்வதியின் தந்தை சலீம்குமாரிடம் கொடுத்துவிட்டுப் போகிறார் தனுஷ்.. மிச்சக் கதையை சுருக்கமாகவே மேலே சொல்லியிருக்கிறேன்..!

காதல்.. காதல்.. காதல்.. மீனவர்களின் பிரச்சினைகளையெல்லாம் தாண்டி இதுதாங்க சினிமா இயக்குநர்களிடத்தில் பெரிய பிரச்சினையா இருக்கு. எத்தரப்பு மக்களாய் இருந்தாலும் அதுக்குள்ள ஒரு லவ்வை கிரியேட் செஞ்சு காதலிக்க வைக்கிறதுதான் இயக்குநர்களின் வேலை.. கடலுக்குள் போனவர்கள் சுடப்பட்டு பிணமாக கரையில் ஒதுங்குகிறார்கள். ஏதோ.. யாராலோ.. கொல்லப்பட்டதாகச் சொல்லி திரைக்கதையை ஒரு ரீலிலேயே முடித்துவிட்டார்கள். அதுக்கு தனுஷிடமிருந்து ஒரு பீலிங்.. அவ்ளோதான்..!

'ஆடுகளம்' படம் கொடுத்த ஹிட்டைவிட அதில் கிடைத்த விருதுதான் தனுஷை மிகவும் மாற்றிவிட்டது என்று நினைக்கிறேன்.. மனிதர் சாதா நடிப்பெல்லாம் நடிக்க மாட்டேன் என்று மிகவும் பிடிவாதமாக இருக்கிறார். '3', 'மயக்கம் என்ன', 'அம்பிகாபதி' இதைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் தனது நடிப்பை பிரேம் டூ பிரேம் அள்ளித் தெளித்திருக்கிறார். சந்தேகமே இல்லை.. சிறந்த நடிப்பு.. இந்தாண்டுக்கான சிறந்த நடிகருக்கான போட்டியில் அவரே 2 படங்களுக்காக மோதுவார் என்று நினைக்கிறேன்..!

ஆனால் இதில் ஒரு பயமும் ஏற்படுகிறது.. இப்படியே தொடர்ந்து தனது 360 டிகிரி நடிப்பையும் காட்டுகின்ற கேரக்டரில்தான் நடிப்பேன் என்று தனுஷ் பிடிவாதம் பிடித்தால் கடைசியாக பாலிவுட்டின் நானாபடேகர், ஓம்புரி லிஸ்ட்டில்  சேர்ந்துவிடுவாரோ என்று பயமாகவும் இருக்கிறது..! இப்போதே சூர்யா, விக்ரம், கார்த்தி வரிசையில் இருந்து தனுஷும் கீழேயிறங்கிவிட்டதாகவே தோன்றுகிறது..! ஷாட் பை ஷாட்.. எந்தக் காட்சியிலும் தனுஷின் நடிப்பை நடிப்பாகச் சொல்லிவிட முடியாது.. இயல்பாகவே வாழ்ந்தது போலத்தான் இருக்கிறது..! வெல்டன் ஸார்..! அப்படியே படத்துக்கு படம் ஹீரோயின்களுக்கு லிப் கிஸ் கொடுத்துட்டே இருக்காரு.. இதென்ன சென்டிமெண்ட்ன்னு தெரியலை..?

பாரு என்ற பார்வதி மேனன்.. 'பூ' படத்துக்குப் பின்பு செலக்ட்டிவ்வாக தேர்ந்தெடுத்துதான் நடித்தேன் என்றார்.. 'பூ'வை விடவும் மிக அழகாக இருக்கிறார் இதில்.. அற்புதமாகவும் நடித்திருக்கிறார்..! தனுஷுக்கு ஏற்ற ஜோடியாகவும் தெரிகிறார்..! உமா ரியாஸ் தனுஷின் அம்மாவாகவும், தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம் குமார் பார்வதிக்கு அப்பாவாகவும் ஆக்ட்டிங் கொடுத்திருக்காங்க...!

“வாழ்க்கைல சாதிக்கணும்னு நினைக்கிறவன் எல்லாரும் பொம்பளை வாடையோடதான் இருக்கணும்..”னு இவர்தான் தனுஷை தூண்டிவிடுறார்..! அதுனாலதான் தனுஷ் தன்னோட வாழ்க்கையைப் பத்தி யோசிக்கிறாராம்.. நல்லாத்தான்யா வசனம் எழுதியிருக்காங்க.. கடல் வசனத்தைவிடவும் மிக இயல்பாக இருக்கிறது.. தெளிவாகப் புரியவும் செய்தது.. கன்னியாகுமரி மாவட்டம் 'நீரோடி' கிராமம்தான் படத்தின் தளம்..! அந்த வட்டார வழக்கு மொழியை.. தமிழைச் சிதைக்காமல், புரியும்படி கொடுத்த வசனகர்த்தாவுக்கு எனது நன்றிகள்..!

படம் முழுக்கவே தனுஷ், பார்வதியின் குளோஸப் காட்சிகள்தான் அதிகம்..  உணர்ச்சிகளைக் கொட்டிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஹீரோவும், ஹீரோயினும் இருப்பதால் காட்சிகள் அனைத்திலுமே நடிப்பை முழுமையாக ரசிக்க முடிகிறது.. ஆனால் இடைவேளைக்கு பின்பு இதுவே சற்று அயர்ச்சியையும் தருகிறது..! 

காதலை ஜெயிக்க வைப்பதா? அல்லது தோற்க வைப்பதா? என்றெல்லாம் யோசித்த இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் யோசித்து செய்திருக்கலாம்.. இடைவேளைக்கு பின்பு தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் தனுஷ் இருக்கும்போது செய்யும் சாப்பாட்டு மோனோ ஆக்டிங்.. அதைத் தொடர்ந்த தீவிரவாதிகளின் அடிதடிகள்.. தப்பிப் போகும் முயற்சிகள் என்று அனைத்துமே படத்தின் நீளத்தை உணர்த்தியபடியே இருந்தன.. நிறையவே கட் செய்திருக்கலாம்.. அல்லது வேறு மாதிரியாகவே திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கலாம்.. இயக்குநரின் அதிமேதாவித்தனத்தை இப்படியெல்லாமா காட்டுவது..?

9 நாட்கள் கடந்த பின்புதான் மீட்கப்பட்டதாக இறுதியில் சொல்லப்படுகிறது.. இதில் இடையில் 5 அல்லது 6 நாட்கள்தான் எண்ணெய் நிறுவனத்திடம் பேசும்படி தனுஷிடம் சொல்கிறார்கள். சூடானின் இன்றைய அரசியல் நிலையை சொன்ன இயக்குநர் இன்னும் கொஞ்சம் யதார்த்தத்தை காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தின் பட்ஜெட்டுக்காக இரண்டே இரண்டு ஜீப்புகள்.. மொத்தம் 12 தீவிரவாதிகள் என்று திருப்பித் திருப்பிக் காட்டுவது லாஜிக்கில் மிகப் பெரிய ஓட்டை..!

அதற்குள்ளாக இங்கே என்ன நடந்தது என்பதற்காக பார்வதியை வைத்து மெலோ டிராமாவாக சீரியல்களே தோற்றுப்போகும் அளவுக்கு காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பார்வதிக்கு மனநிலை பாதிப்பு வந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு காட்சிகள் இருக்கின்றன.. ஆனால் இறுதியில் அப்படி எதுவும் இல்லை என்றாகிறது..! படத்துக்கு பாஸிட்டிவ்வான முடிவு தேவை என்று முடிவு செய்த பின்பு எதற்கு இந்த சூடான்..? எண்ணெய் அரசியல்..? தீவிரவாதக் கும்பல்..?   

பாடல்களில் 'நெஞ்சே எழு' பாடலும், 'கடல் ராசா' பாடலும் ரொம்ப நாளைக்கு பின்பு ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் கேட்கத் தூண்டுகின்றன..! பாடலும், படமாக்கப்பட்டவிதமும் சூப்பர்..! இடையிடையே துண்டு துண்டாக பாடல்களும் ஓடி ஓடி ஒளிகின்றன..! இது ஏதோ விவிதபாரதியில் பாட்டுக்கு நடுவில் வரும் விளம்பரம் போல வருவதால் மனதில் ஒன்றவில்லை..!

பின்னணி இசையில் நான் ஏ.ஆர்.ரஹ்மானை அதிகம் நேசித்தவனில்லை.. ஆனால் இந்தப் படத்தில் கொஞ்சம் அதகளம் செய்திருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.. ரவுடியை தனுஷ் அடிக்கத் துவங்கியபோது ஒலிக்கின்ற  இசை அபாரம்.. அந்தக் காட்சியையே தூக்கி நிறுத்தியிருக்கிறது.. தன்னையும் அகில இந்திய அளவில் மேலும் மேலும் பிரபலமாக்கிய இயக்குநர் என்பதால் பரத்பாலாவுக்காக இந்தப் படத்தை செய்தேன் என்றார் ஏ.ஆர்.ரஹ்மான். எப்படிச் செய்தாலும் நல்லவையாகவே செய்திருக்கிறார்..! 

இத்தனை உழைப்பு.. பணம்.. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் போட்டது கைக்கு கிடைத்தாலே போதும் என்ற திருப்தியோடெல்லாம் தனுஷ் போன்ற ஹீரோக்களின் படங்களை எடுக்கக் கூடாது..!  'பொல்லாதவன்', 'ஆடுகளம்' போன்ற படங்களின் தன்மை வேறு.. ஆனால் அதில் இருந்த ரியலிஸம் மற்றைய படங்களில் காணாமல் போய், விருது வாங்கும் தன்மையே மேலோங்கி நின்றது.. இதனாலேயே அந்த மூன்று படங்களும் வெகுஜன ரசிகர்களிடத்தில் இருந்து விலகியே இருந்தன.. இந்தப் படமும் அதுபோலவே வந்துவிட்டதில் எனக்கு பெரும் அதிருப்தி..!

'அம்பிகாபதி' படம் சிறந்த காதல் கதையாக இருந்தும், முழுக்க முழுக்க பாலிவுட் ஆதிக்கமாகவே இருந்ததால் தனுஷ் ரசிகர்களே படம் பார்க்க வரவில்லை..! 'சிங்கம்-2' ஓடுகின்ற ஓட்டத்தைப் பார்த்தால் பொதுவான சினிமா ரசிகர்கள் தங்களுடைய இரண்டரை மணி நேர ஓய்வின் மூலம் இன்னொரு துன்பவியலை ஏற்றுக் கொள்ள தயாரில்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது..!

தனுஷின் அடுத்தப் படமாவது அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும்வகையிலும், கல்லாப் பெட்டி நிரம்பும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அவரிடமே கேட்டுக் கொள்கிறேன்..!

'மரியான்' - ஒரு முறை பார்க்கலாம்..!



ஒரேயொரு உருப்படியான வேலை..!

18-07-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரொம்ப நாளாச்சு பதிவெழுதி..! அலுவலக நெருக்கடி.. வீட்டுப் பிரச்சினைகள் என்று வண்டி, வண்டியாக வேலை வந்து கொண்டேயிருக்க.. அப்புறம் எழுதலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போய் இது மாதிரி 17 நாள் இடைவெளியாகிவிட்டது..!

எதையாவது எழுதலாம் என்றால் என்ன எழுவது என்று ஒரே குழப்பம்..!

அரசியல் எழுதி போரடித்துவிட்டது..! பைசாவுக்கும் பிரயோசனமில்லாத நிலைமை.. நாம் சொல்வதைப் புரிந்து கொள்ளாத கூட்டத்தினரிடையே நாம் என்னதான், எவ்வளவுதான் கரடியாய் கத்துவது..? நிறுத்தினேன் அரசியலை.. ஆனால் அது என்னைத் துரத்துவதை நிறுத்தவில்லை. அவ்வப்போது சின்னச் சின்னதாக பத்திகளாக பிளஸ்ஸிலும், பேஸ்புக்கிலும் எழுதியதோடு சரி.. அவ்வளவுதான்..!

சினிமா விமர்சனம் என்றால் இப்போது அதுவும் போரடிக்கிறது..! பைசாவுக்கு பிரயோசனம்தான் என்றாலும் அடுத்தடுத்த வாழ்க்கை நகர்த்தல்களுக்கு சினிமாவின் தேவை அதிகம் என்பதால் சினிமாவை கைவிட மனசில்லை..!

இந்த வருடத்தில் எதையாவது உருப்படியாய் செய்வோம் என்றால் அதற்கும் வழியில்லாமல் இருக்கிறது.. நான்கடி எடுத்து வைத்தால் பதினாறு அடி பின்னோக்கி இழுக்கிறது..! ம்ஹூம்.. வாழ்க்கையில்தான் இப்படியென்றால் வலையுலகிலாவது எதையாவது செய்வோம் என்று ஒரு பதிப்பாளரைத் தேடிப் பார்த்தேன். நான் தேடும் அளவுக்கு பூதக் கண்ணாடி கிடைக்காததாலும், கிடைத்த பதிப்பாளர்களும் எனது பதிவுகளின் நீளத்தைக் கண்டு பயந்து போய் "ஐயா சாமி.. ஆளை விடுங்க.. வேண்ணா நீங்க காசு கொடுங்க. பிரிண்ட் மட்டும் போட்டுத் தர்றோம்.." என்று ஜகா வாங்குகிறார்கள்..! நல்லதுக்குக் காலமில்லை.. ஒரு எழுத்தாளனை இந்த அளவுக்கு வஞ்சிக்கும் இந்தத் தமிழ்ச் சமூகம் உருப்படுமா..? நிச்சயம் நாசமாத்தான் போகும்..!

இடையில் திடீரென்று ஞாபகம் வந்ததை போல கடலூர் காட்டான் புருஷோத்தமன் குழலி போன் செய்தார். 2 மாதங்களுக்கு முன்பு நான் செய்யச் சொன்ன எனது வலைத்தளத்தை டாட்.காம் முகவரிக்கு மாற்றல் சம்பந்தமாய் பேசினார். "இப்போ வேர்ட்பிரஸ், பிளாக்கர்ஸ் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது.. பாஸ்வேர்டு கொடுங்க.. 2 நிமிஷத்துல முடிச்சுத் தர்றேன்..." என்றார்..

முக்கால் கிணறு தாண்டியாகிவிட்டது.. இன்னும் குவார்ட்டர்தானே பாக்கியிருக்கு என்று நினைத்து பாஸ்வேர்டை அனுப்பி வைத்தேன். சொல்லி வைத்தாற்போல் 2 நிமிடங்களில் எனது தளம் டாட்.காமிற்கு மாறிவிட்டது.. http://truetamilans.blogspot.com இனிமேல் http://truetamilan.com என்றே அழைக்கப்படும். இந்த ஒரு வேலையையாவது உருப்படியாய் செய்து கொடுத்த,  அண்ணன் புருஷோத்தமன் குழலிக்கு எனது கோடானுகோடி ரசிகர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் நன்றிகள்..!

தமிழ்மணத்தில் சேர்க்க பெரிய அக்கப்போர் நடந்து கொண்டிருக்கிறது.. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணுமாம்..! இன்னொரு பெரிய வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் இந்த மாதத்தில் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். என்னுடைய சோம்பேறித்தனத்தால் பாதியில் நிற்கும் அந்தப் பணியையும் முடித்துவிட்டு மீண்டும் வருகிறேன்..! 

நன்றி..

வணக்கம்..!


அன்னக்கொடி - சினிமா விமர்சனம்

01-07-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு வரும் இயக்குநர் இமயத்தின் படம் என்கிற ஆர்ப்பாட்டம்கூட இல்லாமல் வெளிவந்து, அவரது ரசிகர்களை மட்டுமல்ல, சினிமா விமர்சகர்களையும் சேர்த்தே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது இப்படம்..!

எந்த பெரிய இயக்குநராக இருந்தாலும் காலத்தின் போக்கை ஏற்றுக் கொண்டு, அதனூடேயே பயணம் செய்தால்தான் அவர் எப்போதும் வெற்றி பெற முடியும்.. தான் இப்படித்தான்.. தன் படம் இப்படித்தான் இருக்கும்.. இஷ்டம் இருந்தால் படம் பார் என்று சொன்னால் ரசிகர்களின் பதிலும் இப்படித்தான் இருக்கும்..!

தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு பார்த்தாலும் சலிக்காத விஷயம் காதல் மட்டுமே.. அதில் பாரதிராஜா எக்ஸ்பர்ட் என்பது இப்போது தாத்தாவாகிவிட்ட ரசிகர்கள் பேசும் பேச்சு.. காதலை எந்த அளவுக்கு ஸ்பீடு எக்ஸ்பிரஸ் போல் பாவிப்பது என்பதை இந்தக் கால காதலர்களிடத்தில்தான் நீங்கள் பார்க்க முடியும்..! அதற்கேற்றாற்போல்.. இப்போதைக்கு சினிமா தியேட்டர்களை நாடி வரும்.. ஓடி வரும் காதலர்களையும் கவரும்வகையிலாவது காதலை கொடுத்திருந்தால் இந்த விமர்சனத்தின் முதல் பாராவிலேயே அசத்தல் என்று சொல்லியிருப்பேன்.. இப்படி கந்தல் என்று சொல்ல வந்திருக்கவே மாட்டேன்..!


செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனுக்கும், சாராயம் விற்கும் பெண்ணின் மகளுக்குமான காதல்தான் கதை. இதில் வட்டி தொழில் செய்யும் அலப்பறையான ஒரு தாதா.. அவரது மகனான வில்லன்.. இவர்கள் எப்படி இவர்களது காதல் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள் என்பதை இயக்குநர் இமயம் தனது சாதி சார்ந்த பார்வையிலேயே பார்த்து பிலிமில் எடுத்துக் கொடுத்திருக்கிறார்..!

படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் எந்தவகையிலும் படத்தில் ஒட்ட முடியாமல் தவிக்கிறோம்.. அது என்ன என்றுதான் தெரியவே இல்லை..! ஒருவேளை இது எந்தக் காலத்திய படம் என்பதை துவக்கத்திலேயே ஸ்லைடு போட்டு விளக்கியிருந்தால் படம் பார்ப்பவர்களுக்கு சின்னக் குழப்பம் வந்திருக்காது என்று நினைக்கிறேன்..!

ஒரே ஊர்.. பலரும் ஜாக்கெட் அணிந்திருக்கிறார்கள். சிலர் மட்டுமே அணியாமல் இருக்கிறார்கள்.. போலீஸ் அணிந்திருக்கும் தொப்பி 1975-க்கு முந்தைய காலக்கட்டத்தைக் காட்டுகிறது..! 1 ரூபாய்.. 2 ரூபாய் நோட்டுக்களைக் காட்டுகிறார்கள். 5 ரூபாய்க்கு சந்தைக்குப் போகலாம் என்கிறார் மீனாள். ஆனால் கார்த்திகாவின் மேக்கப்பை பார்த்தால் வருட பிரச்சினை ஏகத்திற்கும் வருகிறது..! 

பாரதிராஜாவின் டச் வேண்டும். இல்லையென்றால் படம் பார்க்க வர மாட்டோம் என்று எந்த ரசிகன் கூப்பாடு போட்டானோ தெரியவில்லை.. படத்தில் அதிகம் தெரிவது பாரதிராஜா மட்டுமே..!  செருப்பு தைப்பவனின் மகன் என்பதாலோ என்னவோ ஒரு செருப்பும் இதில் கேரக்டர் ரோலில் நடித்திருக்கிறது.. அது கடைசிவரையிலும் வருகிறது என்பதே இந்தப் படத்தின் மிகச் சிறப்பான ஒரு அம்சம்..!  அந்தச் செருப்பு படும்பாட்டை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.. இயக்குநர் இமயத்திற்கு கற்பனை வறட்சி இந்த அளவுக்கு இருந்திருக்க வேண்டாம்..!? 

காதலர்களின் காதல் விளையாட்டை காட்டுகிறேன் என்ற போர்வையில் இந்தக் காலத்திலும் இப்படியெடுத்தால் யார் பார்ப்பார்கள்  என்று உதவி இயக்குநர்கள் முன்கூட்டியே எச்சரிக்காதது  குறித்து பெரிதும் வருத்தப்படுகிறேன்..! பூச்சிக் கடிக்கு இதுதான் மருந்து என்று விரல்களை சூப்புவது..! ஆட்டுப் பாலை கறந்து ஹீரோவுக்கு வைத்தியம் செய்வது.. கை இருப்பதை மறந்துவிட்டு ஹீரோயின் தன் நாக்கால் நக்கியெடுப்பது..! செருப்புக்கு மாலை மரியாதை அணிவித்து மரியாதை செய்வது..! இப்படியெல்லாம் இம்சை செய்துதான் அந்தக் காதல் ஜெயிக்க வேண்டுமா..? கிராமத்துக் காதலில் ஒரு சதவிகிதம்கூட இப்போது இந்தப் படத்தில் காட்டப்பட்டதுபோல் இல்லை. அங்கேயும் காதலில் அடுத்த நூற்றாண்டுக்கே போய்விட்டார்கள்.. நம்ம டைரக்டர் மட்டுமே இன்னமும் 1977-லேயே இருக்கிறார்..!

வாங்கிய பணத்தைத் தரவில்லை என்பதற்காக மனைவியை அபகரித்துச் செல்வது பார்த்துப் பார்த்து சலித்த காட்சி. வில்லன் மனோஜ், ஹீரோயினை திருமணம் செய்வதுவரையிலும்கூட சரிதான்.. அதற்குப் பின்பு கிளி செத்த நிலையில் வில்லன் இருப்பது. இதனையொட்டியே மாமனார் மருமகளை மடக்கப் பார்ப்பது.. மருமகளின் முதுகை பார்ப்பது.. இடுப்பை பார்ப்பது.. கை விரல்களை சூப்புவது.. காலைச் சுரண்டுவது என்று பிட்டு பட ரேஞ்சுக்கு காட்சிகளைக் காட்டியிருப்பது யூ டூ இயக்குநர் இமயம் என்று கேட்கத்தான் தோன்றுகிறது.. 

இதனினும் உச்சக்கட்டமாக மனோஜ், ஹீரோவை பார்த்துவிட்டு வந்ததற்காக ஹீரோயினை நடுவீட்டில் அமர வைத்து தலையில் தண்ணீர் ஊற்றி கேவலப்படுத்துவது.. அரை நிர்வாணமாக்கி ஆட்டுக் கொட்டடியில் சிறை வைப்பது.. - இதெல்லாம் கிராமத்தில் நடக்கிறது.. நடந்தது என்றெல்லாம் சொன்னாலும் இதை இந்தக் கதையில் காட்ட வேண்டிய அவசியமென்ன என்றுதான் கேட்கத் தோன்றுகிறது..!

இதனினும் அசிங்கமான காட்சியமைப்பு.. மீனாள் சம்பந்தப்பட்டவை.. ஊருக்கு வெளியே பாலியல் தொழில் செய்யும் அவரிடமே சின்ன வயது பையன்கள் வந்து பைசாவை நீட்டி “வரட்டுமா..?” என்று பூடகமாகப் பேசுவதெல்லாம் எந்தக் கிராமத்து அத்தியாயத்திலும் சேர்க்கப்பட முடியாத விஷயங்கள்..! மீனாளின் பரந்து விரிந்த முதுகையும், லேசுபாசான ஜாக்கெட் அணியாத உடம்பையும் காட்டியிருக்கும் காட்சிகளெல்லாம் பிட்டு படங்களின் நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகப் பெரிய கொடுமை..!  அப்பனும், மகனும் ஒரே பெண்ணிடம் வருகிறார்கள் என்பதையும் இறுதியில் காட்டி அதிரடி புரட்சி செய்திருக்கிறார் இயக்குநர் இமயம்..!

படம் வெளியானவுடனேயே மதுரை மாவட்ட பார்வர்டு பிளாக் கட்சியினர் தங்களது தேவரினத்தினரை கேவலப்படுத்தியிருக்கிறார் பாரதிராஜா என்று போர்க்கொடி தூக்கி அவரது வீட்டு முன் மறியல் செய்திருக்கிறார்கள். அதற்குப் பதில் அறிக்கையை பாரதிராஜா இன்றைக்கு அளித்திருக்கிறார். அதில் தான் எந்த சாதியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று சப்பைக் கட்டு கட்டியிருக்கிறார்..!

ஏற்கெனவே தென் மாவட்டங்களில் முணுக்கென்று கம்பையும், அரிவாளையும் தூக்கிவிடுவார்கள்.. அரசியல்வியாதிகளிடமே சாதியைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் இப்படி முழுக்க முழுக்க சாதிப் பெருமை பேசும் படத்தை எடுத்துக் காண்பித்து இதுதான் அந்தப் பகுதியில் நடக்கிறது என்று காட்டினால் எப்படி..?

பெண் கேட்டு போன இடத்தில் ரமாபிரபா பேசும் வசனங்களும், அதன் காட்சியமைப்புகளும் அப்பட்டமாக சாதி வெறி பிடித்தவை..! பெண் கேட்டு போகுமிடத்தில் இந்த அளவுக்கா பேசுவார்கள்..? பெரியவரை தள்ளிவிட.. ஹீரோ கோபத்தில் உதைத்துவிட.. ஹீரோவை கட்டிவைத்து அடிப்பது.. பெரியவர் மீது சாணித் தண்ணியை வீசுவது.. என்று பக்காவான கிராமத்து அடிதடியை காட்டினாலும் அதில் ஜீவன் இல்லை..! 

சாதி வெறி அடையாளம் இது மட்டுமல்ல.. போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரும் அப்படியே தேவர் முக ஜாடை.. அவரும் பல பொய்க் கேஸ்கள் போட்டு ஹீரோவை உள்ளே தள்ளுகிறார்.. ஆனால் அந்த போலீஸ் ஸ்டேஷன் பெரியகுளம்..! பெரியகுளத்தை சுத்தி யார், யார் குடியிருக்கிறார்கள் என்று தோண்டிப் பார்த்தால் இதில் யாரை இவர் சொல்லியிருக்கிறார் என்பது தெரியும்..!

போலீஸ் ஸ்டேஷனில் நடிக்கும் அடிதடியில் ஹீரோ அடிக்கப் பாயும்போதுதான் அவரது பின்னணியில் அம்பேத்கரின் புகைப்படத்தைக் காட்டுகிறார்கள்.. இன்ஸ்பெக்டருக்கு பின்னால் காந்தியார் அநியாயத்திற்கு சிரிக்கிறார்.. அதுக்கும், இதுக்கும் சரியாப் போச்சாம்..!

படத்தின் மிக முக்கியமான இறுதிக் கட்டத்தில் ஒரு கனவுக் காட்சியை வைத்து கொலை செய்திருக்கிறார் திரைக்கதையை..! அரை நிர்வாணக் கோலத்தில்.. ஆட்டுக் கொட்டடியில்.. தான் கண்டெடுத்த அந்த பாழாய்ப் போன செருப்பை பார்த்தவுடன் ஹீரோயினுக்கு மீண்டும் ஹீரோவின் நினைப்பாம்.. உடனே டூயட்டாம்..! முடியல சாமி..!

ஹீரோ லட்சுமணன்.. கோடீஸ்வர பையன்.. பாவம் இப்படி வயக்காட்டிலும், ஊர்த் தெருவிலுமாக ஆடியோடி நடித்திருக்கிறார். ஹீரோவுக்கான களையே இல்லை என்றாலும்.. புதுமுக நடிகர் என்பதாலும் விட்டு வைப்பதுதான் நியாயமானது.. இன்னும் வாய்ப்பு கிடைத்து நடித்து பெயர் பெற்றால் சந்தோஷம்தான்.. பாண்டியனையே நடிக்க வைத்து அழகு பார்த்து தமிழ்த் திரையுலகம் என்பதை நாம் மறக்கக் கூடாது..!

படத்தின் மிகப் பெரிய பலம் பாரதிராஜாவுக்கு பின்பு ஹீரோயின் கார்த்திகாதான்.. நிச்சயம் கார்த்திகா பாரதிராஜாவுக்காகவே இப்படத்தில் இந்த அளவுக்குத் துணிந்து நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.. வேறு இயக்குநர் என்றால் நிச்சயம் மறுத்திருப்பார்..! முதலில் ஹீரோ.. பின்பு கிராமத்துத் தெருக்களில் வெறும் காலோடு நடக்க வைத்திருக்கும் கொடுமை.. அரை நிர்வாணக் கோலத்தில் நடித்திருப்பது.. இதெல்லாம் பாரதிராஜாவுக்காக மட்டுமே என்பதால் அதற்கொரு பாராட்டை தெரிவிப்போம்..! படத்தில் அதிகபட்சம் நடித்திருப்பதும் இவர் மட்டுமே..! 

மனோஜ்தான் இந்தப் படத்தின் ஹீரோ போல் நடித்திருக்கிறார். ஆனால் வில்லன். முக்காலே மூணு வீசம் காட்சிகளிலும் மனோஜ்தான் தென்படுகிறார்..! இவருக்கான பஞ்ச் டயலாக்குகள்.. பாடல்கள் என்று பலதையும் வைத்து மகனை ஸ்கோர் செய்ய வைத்திருக்கிறார் இயக்குநர் இமயம்.. ஆனால் வெற்றி கிடைக்குமா என்பதை அடுத்து வரும் வாய்ப்புகளின் மூலம்தான் தெரிய வரும்..! ஆனாலும் கார்த்திகாவை டார்ச்சர் செய்யும் காட்சிகளிலெல்லாம் இவரிடம் தெரியும் வெறியை பார்த்தால் தொடர்ந்து வில்லனாகவே இவர் நடித்து புகழ் பெறலாம் என்றே நினைக்கிறேன்..!

ஒரு பாடல்கூட முணுமுணுக்க வைக்கவில்லை.. பெயருக்கு போட்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்..  பின்னணி இசையமைக்க நேரமில்லை என்றாரோ என்னவோ சபேஷ் முரளியை வைத்து செய்திருக்கிறார்கள். அதுவும் ஜவ்வு மிட்டாய்..! போலீஸார் ஊருக்குள் வந்து அதகளம் செய்யும் காட்சியை பாருங்கள்.. பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்று தெரியும்..! 

இளையராஜா இல்லாத பாரதிராஜா பாதி பலம் குறைந்தது போலத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்..! அன்னக்கிளி செல்வராஜ், கலைமணி போன்றோரிடமிருந்து கதைகளை வாங்கி, திரைக்கதை செப்பனிட்டு, வசனமெழுதி இயக்கிய இவரது படங்களெல்லாம் அப்போதைய பொக்கிஷங்கள்தான்.. இப்போது இவர்களும் இல்லாமல் போக.. தனது மகனுக்காக படத்தை எடுத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முழுமையாக எதிர்கொள்ள முடியாமல் மிகத் தேவையான நேரத்தில் ஒரு முழுமையான தோல்விப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் இமயம்..!

முன்பே சொன்னதுபோல மாமனார் போர்ஷனை முழுமையாக நீக்கியிருந்தால் இப்படம் பாரதிராஜாவுக்கே மிக முக்கியமான படமாக இருந்திருக்கும். ஆனால் இப்போது தமிழ்ச் சினிமாவிலேயே மிக முக்கியமான படமாக வேறொரு கோணத்தில் சொல்லப்பட்டுவிட்டது. இதனை ரப்பர் வைத்தெல்லாம் அழித்துவிட முடியாது.. 

இதேபோன்று ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில்கூடத்தான் காட்சிகள் இருந்தன..! பாண்டியன் மைனர் வேடத்தில் நடித்திருப்பார். அவருக்காக பாடல் காட்சிகூட இருந்தன.. ஆனாலும் படம் வெற்றி பெற்றது. அதே பார்முலாவையே இதில் பாலோ செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் ‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் வெற்றிக்குக் காரணம் அதில் இருந்த அண்ணன்-தங்கை பாசம்.. ரத்னகுமாரின் கதைக்கு இயக்கம் மட்டுமே செய்தார் பாரதிராஜா.. இதில் எல்லாவற்றையும் அவரே செய்ததுதான் பெரும் கவனக்குறைவு..!

‘கிழக்குச் சீமையிலே’ படம் போலவே மாட்டு வண்டி பாடல் காட்சி.. சேலை பறந்து போவதற்குப் பதில் இங்கே சட்டை பறந்து வந்தது..! இறுதிக் காட்சிகூட புதிய வார்ப்புகள் படத்தின் காப்பிதான்..! அதில் வைக்கோல்போருக்குள் வைத்து சொக்கப்பானை கொளுத்துவார்கள்.. இதில் ஆழியில் வைத்து மலையில் இருந்து உருட்டிவிடுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்..!

படத்தின் இறுதியில் “இதெல்லாம் கிராமத்துக் கதைகளில் இருந்து நான் சொன்ன ஒரு அத்தியாயம் மட்டுமே..” என்கிறார் இயக்குநர் இமயம்.. இவர் சொல்வது மட்டும் உண்மையானால், இவ்வளவு கேவலமான சமூகச் சூழலை வைத்துக் கொண்டு தமிழ்க் கலாச்சாரம் எப்படி உயர்வானதாக கருதப்படும்..? மூத்தக்குடி தமிழ்க்குடி என்று எப்படி நாம் பெருமையாகப் பேச முடியும்..? இதுவே படு கேவலமான சமூகமால்ல இருக்கு..? இந்தக் கொடுமையை நாம எங்க போய்ச் சொல்றது..? 

பாரதிராஜா அடுத்து படம் இயக்கத் தயாராகும் முன் ‘16 வயதினிலே’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘காதல் ஓவியம்’, ‘கடலோரக் கவிதைகள்’ என்று காதலுக்காகவே அவர் நினைக்கப்படும் அவருடைய பழைய படங்களை இன்னொரு முறை பார்த்துவிட்டு களத்தில் இறங்குவது அவருக்கும் நல்லது.. அவருடைய பரம ரசிகர்களாகிய என்னைப் போன்ற லட்சணக்கணக்கான ரசிகர்களுக்கும் நல்லது..! 

சிறந்த கலைஞர்கள் தோல்வியடைவதை அவரது ரசிகர்கள் விரும்பவே மாட்டார்கள். அந்த வகையில் பாரதிராஜாவைவிடவும் எங்களுக்குத்தான் இது மிகப் பெரிய தோல்வி..! மிகவும் வருந்துகிறோம்..!