டிமா்ன்ட்டிகாலனி - சினிமா விமர்சனம்

23-05-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் எங்கேயிருந்தாலும் சமீபத்திய செய்திகளின்படி அங்கே பேய்களின் நடமாட்டமும் இருக்கத்தான் செய்யும். அந்த அளவுக்கு பேய்களின் அதிகாரப்பூர்வமான பி.ஆர்.ஓ.க்களாக இந்த நிறுவனம் கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே செயல்பட்டு வருகிறது.
பலவிதமான பேய்களையும் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், இந்த முறை மோகனா மூவிஸையும் இணைத்துக் கொண்டு ஒரு போர்த்துக்கீசிய பேயை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது.
ஹீரோயினே இல்லாத ஒரு தமிழ்த் திரைப்படம். பாடல்கள் இல்லாமல் வந்திருந்தாலும் வரவேற்கத்தக்கதே..!
4 நண்பர்கள். பட்டினப்பாக்கம் அரசு குடியிருப்பில் வீட்டிற்கு ஏசி வசதி செய்து வசிக்கிறார்கள். இருப்பவர்களிலேயே அதிகம் வசதியுள்ளவர் அருள்நிதி. ஒரு ஆண்ட்டிக்கு சின்ன வீடாக செட்டப்பாகி அந்த ஆண்ட்டி கொடுக்கும் காசில் மற்ற மூன்று நண்பர்களுக்கும் கொடுத்து உதவும் அன்னதான பிரபு.
ஒரு நாள் இரவு டாஸ்மாக் கடையில் நான்கு நண்பர்களும் ஓவர் மட்டையாகி கிளம்பும்போது மழை பிடித்துக் கொள்கிறது. எங்கயாவது ஒதுங்கலாம் என்று நினைக்கும்போது இந்த டிமான்ட்டி காலனி பங்களாவிற்கு போகலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.
உள்ளே போன இடத்தில் கிடைக்கும் ஒரு செயினை லவட்டிக் கொண்டு வருகிறான் நண்பன். கூடவே அந்த வீட்டில் இருந்த ஆவிகளும் இவர்கள் வீட்டில் வந்து குடியேறுகின்றன.
அன்றைய இரவில் இருந்து அந்த வீட்டில் எல்லாமே தாறுமாறாக நடக்கின்றன. பேய்களின் அட்டூழியம் அர்த்தராத்திரியில் அட்டகாசம் செய்ய நான்கு நண்பர்களும் அவைகளிடமிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் கதை.
இப்போதெல்லாம் பேய்களை உருவாக்க காரணம், காரியமெல்லாம் தேவையே இல்லை. இறந்தவர்களெல்லாம் பேய்கள்தான். ஆவிகள்தான். தன்னைத் தொந்திரவு செய்தவர்களை எப்போதும் பின் தொடர்வார்கள் என்பதை தொடர்ச்சியான படங்களின் மூலம் தமிழர்களின் மனதில் பதிய வைக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்து வருகிறார்கள் இது போன்ற பேய்ப் படத்தின் இயக்குநர்கள்.
சென்னை மாநகரம் உருவாகாத காலக்கட்டம். போர்த்துக்கீசியர்கள் முதன்முதலாக சென்னையில் காலடி எடுத்து வைத்த நேரத்தில் உருவான ஒரு பங்களா.. அந்த பங்களாவில் நிகழ்ந்த சில படுகொலைகளால் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. உள்ளே வந்தவர்கள் மறுநாள் வெளியில் வந்து ரத்தம் கக்கி சாவதைப் பார்த்துவிட்டு இன்னமும் அந்த வீட்டில் யாரும் கால் வைக்காமல் இருக்கிறார்கள்.  இந்தக் கிளைக்கதையும் படத்தில் இடம் பெற்றிருக்கிறது.
பீட்சா-2-ல் வந்த அதே பேய் பங்களா.. திகிலுக்கும், சஸ்பென்ஸுக்கும் அதிகம் வேலை வைத்திருக்கும் திரைக்கதை. கூடுதலான பயத்தைக் கொடுக்கும் அளவுக்கு பயமூட்டிய இசைமைப்பு.. அடுத்தடுத்த டிவிஸ்ட்டுகளின் தொகுப்பாக கேரக்டர்களின் நடவடிக்கைகள்.. என்று படத்தின் பிற்பாதியில் பல சுவாரஸ்யங்கள்.. இறுதிவரையிலும் சஸ்பென்ஸை அப்படியே மெயின்டெயின் செய்து கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.
அப்பாவியாகவே நடித்து பெயர் பெற்றுவிட்ட அருள்நிதி தமிழரசு கொஞ்சம் பயந்தவனாகவும் நடிப்போமே என்றெண்ணி இப்படத்தில் நடித்திருக்கிறார் போலும். ஆனாலும் நன்றாகவே நடித்திருக்கிறார். பேய் படங்களில் பயமுறுத்தினால்தானே அது நடிப்பு. கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
டாஸ்மாக் கடையில் “இனிமே யாரும் புலம்பக் கூடாது..?” என்று அட்வைஸில் துவங்கி, “ஜில்லு…” என்று தனது கள்ளக் காதலி ஆண்ட்டியை அழைத்துவிட்டு அதற்கான விளக்கத்தை அதே முகபாவனையுடன் சுவாரஸ்யமே இல்லாமல் சொல்லும்விதமும் ரசிக்க வைத்திருக்கிறது. அவருடைய நண்பர்களாக நடித்தவர்களில் கடைசி பேயாக வெளியேறுபவரை காட்டிலும் மற்ற இருவரும் நிறையவே நடித்திருக்கிறார்கள். பயமுறுத்தியிருக்கிறார்கள்.
திரைக்கதையில் புதுமையான முறையில் கதை சொல்லியிருப்பதால் யாராவது செல்போனை நோண்டிவிட்டு மறுபடியும் தலை நிமிர்ந்து படம் பார்த்தால் கொயப்பம்தான் மிஞ்சும்.. அவ்வளவு வேகமாக நகர்கிறது திரைக்கதை.
முதலில் டிவியில் ஆரம்பிக்கும் கதை.. பின்பு நிஜத்தில் நடக்கத் துவங்கி.. அடுத்து அது டிவியிலேயே முடிந்து மீண்டும் நிஜத்தில் துவங்கி.. கடைசியாக எல்லாமே பொய் என்றாகி நிற்கும்போது எத்தனை டிவிஸ்ட்டுகளைத்தான் மனதில் வைத்துக் கொள்வது என்கிற சிறிது அயர்ச்சியே ஏற்பட்டு சலிப்பாக்கிவிட்டது.
இறுக்கமான இயக்கத்தினால் மட்டுமே படத்தினை கடைசிவரையிலும் ரசிக்க முடிந்தது. அதிலும் அந்த கிளைமாக்ஸில் லாரிக்குள் அமர்ந்தபடியே மெளனப் புன்னகை புரிந்து நகையுடன் செல்லும் காட்சி படம் மொத்தத்தையும் தாங்கிப் பிடிக்கிறது. நமக்குப் புரிந்ததுபோல எத்தனை பேருக்கு அந்தக் காட்சி புரியுமென்று தெரியவில்லை. திரைக்கதையை இன்னமும் எளிமையாக்கியிருக்கிறலாம்.
‘வாடா வா மச்சி’ பாடல் காட்சி முழுமையாகவும், ‘டம்மி பீஸ் போல’ பாடல் காட்சி கொஞ்சமாகவும் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஒளிப்பதிவுக்காக பாராட்டு அரவிந்த் சிங்கிற்கு.. பாத்ரூமில் நடைபெறும் சண்டை காட்சி.. வீட்டிற்குள் தீப்பற்றி எரியும் காட்சி போன்றவற்றில் எடிட்டரின் கைவண்ணத்தால் காட்சிகள் பரபரக்க வைத்திருக்கின்றன. கேபா ஜெர்மியாவின் இசைதான் கொஞ்சம் அதீதமாக இருந்துவிட்டது. பின்னணி இசை பேய்ப் படங்களுக்கு மிகவும் அவசியம்தான். ஆனால் அதற்காக இப்படியா..?
பேய்களில் பெரிய பேய், சின்ன பேயெல்லாம் இல்லை.. தொட்டால் விடாது என்பதுதான் இயக்குநர்கள் நமக்குச்  சொல்லும் கருத்து. இது கொஞ்சம் அறிவிப்பூர்வமான பேயாக மாறி ஜன்னல்கள், வாசல் கதவுகளை அடைத்து வைத்து டார்ச்சர் செய்வது.. ஏசியை கூட்டி வைத்து வீட்டில் இருப்பதையெல்லாம் உறைந்து போக வைப்பது.. ஆள் மாற்றி ஆள் உடலுக்குள் ஊடுறுவி அவர்களையே பலியாக்குவது, பரிசுத்த யேசுநாதரின் நேரடி கண் பார்வையில் படும் பகுதிக்குள் மட்டும் வராமல் எஸ்கேப்பாவது என்று பேய்களின் சேட்டைகளை இயக்குநர் தன்னால் முடிந்த அளவுக்கு கொடுத்திருக்கிறார்.
பேய்ப் பட ரசிகர்கள் பார்க்கலாம்..

கமரகட்டு - சினிமா விமர்சனம்

23-05-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு விஷயத்தில் இந்தப் படத்தின் இயக்குநர் ராம்கி ராமகிருஷ்ணனை பாராட்டியே தீர வேண்டும். இதுவரையிலும் 4 முறை இந்தப் படத்தின் சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தப் படம் பேய்ப் பட வரிசையில் ஒன்று என்பதைச் சொல்லாமல் எஸ்கேப்பாகி கடைசியாக படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ள வைத்திருக்கிறார்.
திருவண்ணாமலை, சித்தர்கள், கமர்கட்டு, சிவ புராணம் என்றெல்லாம் நூல் விட்டுத் திரித்தவர் கடைசியில் தற்போதைய டிரெண்ட்படி பேய்ப் படமாக எடுத்திருக்கிறேன் என்பதை மட்டும் சொல்லாமல் எஸ்கேப்பாகியிருக்கிறார்.
எல்லா படங்களிலும் பெண் பேய்களையே காட்டிக் கொண்டிருக்கிறார்களே என்று வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இதில் இனிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
இரண்டு ஆண் பேய்கள், தங்களை பேய்களாகும் நிலைமைக்கு தள்ளியவர்களை எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதுதான் படத்தின் ஒட்டு மொத்தக் கதை..!

பள்ளியில் பிளஸ்டூ படிக்கும் மாணவர்களான யுவனும், ஸ்ரீராமும் முறையே சக மாணவிகளான ரக்சா ராஜ் மற்றும் மனீஷா ஜித்தை சைட் அடித்தும், காதலித்தும் வருகிறார்கள். காதலிகளுக்கு இவர்களால் முடிந்தது கமர்கட்டும், பஜ்ஜியையும்தான் வாங்கித் தர முடிகிறது.
இறுதித் தேர்வில் காதலிகள் இருவரும் வெற்றி பெற.. காதலர்கள் படு தோல்வியடைகிறார்கள். ஆனாலும் தங்களது காதல் மட்டும் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
கல்லூரி வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தவுடன் காதலிகளின் போக்கில் பெரும் மாற்றம். வெறும் கமர்கட்டும், பஜ்ஜியையும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஏஸி கார், பர்கர் என்று ஸ்டைலிஷ் வாழ்க்கைக்கு அடிபணிகிறார்கள். உடன் படிக்கும் மாணவர்களிடத்தில் தங்களது காதலை டிரான்ஸ்பர் செய்து கொள்கிறார்கள்.
முந்தைய காதலர்கள் கடும்கோபம் கொண்டு காதலிகளிடம் நியாயம் கேட்க “பிச்சைக்காரனையெல்லாம் காதலிக்க முடியாது…” என்று சொல்லிவிட்டு போகிறார்கள். இவர்களது கோபப் பேச்சால் கவலைப்படும் முன்னாள் காதலர்கள் காதலிகளின் தாயிடம் சென்று முறையிடுகிறார்கள்.
இப்போதைய காதலர்களின் பூர்வீகத்தையும், செல்வாக்கையும் தெரிந்து கொண்ட காதலிகளின் தாய், தந்திரமாக இவர்களிடத்தில் கையொப்பம் பெற்றுக் கொண்டு அடியாட்களை வைத்து இருவரையும் கொலை செய்கிறாள். பிளஸ்டூவில் பெயிலானதால் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லி கேஸை இழுத்து மூடுகிறாள்.
மேலே போக வேண்டிய காதலர்களின் ஆவிகள் தங்களது சாவுக்கு ஒரு நியாயம் கிடைக்காமல் மேலுலகம் செல்ல விருப்பமில்லாமல் தங்களது காதலிகளின் உடலுக்குள் புகுந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்கிறார்கள். இவர்களது புதிய காதலர்களுடனான கல்யாணத்துக்கும் வேட்டு வைக்கிறார்கள்.
இவ்வளவையும் தாண்டி கடைசியாக ஆவிகளின் பரலோகத்தை அடைந்தார்களா..? காதலிகள் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தின் மிச்சம் மீதிக் கதை..!
காதல் எப்படி உருவானது என்றெல்லாம் திரைக்கதையில் நீட்டாமல், முழுக்காமல் கத்தரித்து இருந்தாலும் படம் அநியாயத்திற்கு நீளமானது. நிறைய கத்திரி போட்டிருக்கலாம். 25 நிமிடங்கள் கட் செய்தால் படம் நிச்சயம் கிரிப்பாக இருக்கும்..!
யுவன், ஸ்ரீராம் இருவரும் பள்ளி வயது மாணவர்களுக்கான தோற்றம்தான். அதற்கேற்ற நடிப்பையும் கொஞ்சம் காட்டியிருக்கிறார்கள். ஆனால் காதல் தோல்வியடைந்தவுடன் அடிக்கடி தலையைப் பிடித்துக் கொண்டு ‘ஐயோ’ என்று கதறுவதெல்லாம் டூ மச்சு..! ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணி வேலைக்குப் போய் அப்புறமா காதல், கல்யாணம்ன்னு ஆக வேண்டிய வயசுல காதலிக்காகவே பிளஸ்டூல பெயிலாயிட்டு வந்து நின்னா கேரக்டர் மேல எப்படி ஒரு ஈர்ப்பு வரும்..?
ஹீரோயின்களாக ரக்சா ராஜ், மனீஷா ஜித். இருவரும் பேயாக வரும் காட்சிகளிலெல்லாம் சிறப்பான நடிப்பைக் காட்டியிருக்கிறார்கள். அதென்னவோ அனைத்து நடிகைகளுமே பேய் கேரக்டர்களில் மட்டுமே 100 சதவிகிதம் நடிப்பைக் காட்டித் தொலைக்கிறார்கள். ஏதோ சாபம் போலிருக்கு..! மனிஷா ஜீத்தைவிட ரக்சா ராஜ் நல்ல அழகு.. நல்ல நடிப்பு.
அதற்காக பேய் பிடித்தவுடன் இருவரும் காட்டுகின்ற வெறித்தனமான நடிப்பைப் பார்த்தால் நமக்கு திக்திக்கென்றாகிறது. போதாக்குறைக்கு காதுக்குள்ளேயே போய் உட்கார்ந்து கொண்டு டிரம்ஸ் வாசிப்பது போல பின்னணி இசை.. தாங்க முடியலையே..? இரைச்சலை கொஞ்சம் குறைச்சிருக்கலாம்.
கிரேன் மனோகர், வாசு விக்ரம், பாலாசிங், சேத்தன் என்று அனுபவப்பட்ட நடிகர்கள் தங்களது அனுபவத்தை படத்தின் பிற்பாதியில் ஆங்காங்கே தெளித்திருப்பதால் படம் கொஞ்சமும் சோர்வடையாமல் பயணிக்கிறது.
ஆர்.ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் கிராமப் பின்னணி பார்க்க அழகாக இருக்கிறது. பாடல் காட்சிகளில் ரம்மியமாக சுழன்றிருக்கிறது கேமிரா. படத்தின் பாடல்கள் அனைத்துமே கேட்கும்படி இருப்பது படத்தின் இன்னொரு சிறப்பு. அதிகமாக எஃப்.எம். ரேடியோக்களில் இவைகள் ஒலிபரப்பானால் இயக்குநருக்கு நிச்சயம் பெரிய பெயர் கிடைக்கும்.
பள்ளிப் பருவ மாணவர்களுக்கு காதல், கீதலெல்லாம் தப்பான விஷயம் என்று சொல்லாத ஒரு விஷயத்திற்காக மட்டுமே இயக்குநருக்கு நமது வன்மையான கண்டனங்கள்.
முற்பாதியைவிடவும் பிற்பாதியில்தான் அமானுஷ்யம், பேய், மந்திரம், தந்திரம் என்று அனைத்தையும் இறக்கிவிட்டிருப்பதால் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை முன்பேயே யூகிக்க முடிந்தாலும்கூட இந்த ‘கமரகட்டு’ ரசிக்கத்தான் வைக்கிறது.

திறந்திடு சீசே - சினிமா விமர்சனம்

23-05-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தின் தயாரிப்பாளரை போன்ற தைரியசாலி மற்றும் எதையாவது புதிதாகச் செய்ய நினைக்கும் சினிமா மீதான ஆர்வலர்களை பார்ப்பது அரிது. 2013-ம் ஆண்டு வெளிவந்த ‘மதுபானக்கடை’ படத்தின் உரிமையாளரும் இதே ரகம்தான்..!
எடுக்கப் போவது பக்கா ‘ஏ’ படம். நிச்சயம் வரிவிலக்குக் கிடைக்காது. தமிழக அரசு வழங்கும் தயாரிப்பாளர்களுக்கான சலுகையும் கிடைக்காது என்பது நன்கு தெரிந்தும் துணிச்சலாக ஒரு மாறுபட்ட கோணத்தில் இப்படத்தைக் கொடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.

வயது வித்தியாசம் பாராமல் அனைவரும் சமத்துவமான குடிமக்கள் என்று அறியப்படும் பார் என்ற உயர்குடி மக்கள் மதுவருந்தும் மதுக்கூடம் அது. இரவு நேரம். மது அருந்த வருகிறார் சார்மி என்ற இளம் பெண்.
அவளைப் பார்த்தவுடனேயே சபலப்படுகிறார்கள் பாரில் ஊற்றிக் கொடுக்கும் நாராயணனும், சப்ளையர் வீரவனும். இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இலவச கட்டிங்குகளைக்கூட அவளுக்குக் கொடுக்கிறார்கள்.
நேரம் ஓடுகிறது. சார்மி மூக்குமுட்ட குடித்துவிட்டு நிதானம் இழந்த நிலையில் இருக்கிறாள். கூட்டம் கலைகிறது. அனைவரும் சென்றுவிட்டார்கள் என்று நினைத்திருந்த நேரத்தில் நாராயணன் தற்செயலாக பாத்ரூமுக்கு செல்ல அங்கே கீழே விழுந்து கிடக்கிறாள் சார்மி.
வீரவனின் துணையோடு அவளைத் தூக்கி வந்து ஹாலில் கிடத்தி தண்ணீர் ஊற்றி எழுப்புகிறார்கள். எழுந்த சார்மி தன் உடலில் ஏதோவொரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தவள் சில நொடிகளில் தான் பலாத்காரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்கிறாள்.
அவர்கள் இருவரிடமும் அது பற்றி விசாரிக்க இருவருமே அலறுகிறார்கள். தாங்கள் இருவரும் அவள் மீது ஆசைப்பட்டது உண்மைதான் என்றாலும் இருவருமே அவளைத் தொடவில்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால் இதனை நம்ப மறுக்கிறாள் சார்மி.
நாராயணன் தனது ஆஸ்தான பெண் மருத்துவரை அழைக்க.. அவரும் வந்து சார்மியை செக் செய்துவிட்டு அவள் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள் என்று உறுதியாகச் சொல்கிறார். இதைக் கேட்டு ஆவேசப்படும் சார்மி, இந்த இருவரில் ஒருவர்தான் தன்னைக் கற்பழித்த கயவன். அது யாரென்று தெரியாமல் தான் இங்கேயிருந்து வெளியேறப் போவதில்லை என்று சொல்லி பாரினுள் அமர்ந்து கொள்ள அந்த அர்த்த ராத்திரியில் அந்த பாரில் மட்டும் சுவாரஸ்யம் தட்டுகிறது.
அந்த நள்ளிரவில் வீடு திரும்பாத வீரவனை பார்க்க அவனது மனைவி பாருக்குள் வர மோதல் தெரிக்கிறது. விஷயம் அவளுக்கும் தெரிந்து வாக்குவாதம் ஏற்படுகிறது. கோபப்படும் சார்மி வீரவனின் மனைவியை சுட்டுக் கொன்றுவிட.. அலறுகிறார்கள் அனைவரும்..
சார்மியை கற்பழித்தது யார் என்கிற கேள்விக்கான விடையை தியேட்டரில் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்வதுதான் நியாயமானது.
படம் முழுவதும் இருட்டிலேயே எடுக்கப்பட்டிருப்பது படத்தின் மிகப் பெரிய பலவீனம். இந்த அளவுக்கு ஒளியமைப்பை தெளிவாக்கிக் காட்டும் திரையரங்குகள் தமிழ்நாட்டில் மிக குறைவானவை என்பதை இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் ஏன் மறந்தார்கள் என்று தெரியவில்லை. படத்தில் பேசப்படும் வசனங்களும் சுவாரஸ்யமாக பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைக்கவும் செய்திருக்கின்றன.
வீரவன் ஸ்டாலின் புதுமுகம் என்றாலும் அது தெரியாத அளவுக்கே நடித்திருக்கிறார். குடித்துவிட்டு பேசும் வீரவனும், குடிக்காமல் பேசும் வீரவனும் வேறு வேறு நபர்கள் என்பதை தனது பாடி லாங்குவேஜ் மூலமாகக் காட்டியிருக்கிறார். இவரது வாழ்க்கைக் கதை இன்னொரு பாடம். அதையும் நறுக்கென்று காட்டியிருப்பது அழகு.
நாராயணன் படத்திற்குப் படம் தன்னை மெருகேற்றிக் கொண்டே வருகிறார்.  கொஞ்சம் ஏமாளித்தனம்.. அதிகம் ஏமாற்றுத்தனம் இரண்டிற்குமான நடிப்பில் கவர்ந்திருக்கிறார்.
தன்ஷிகா அதிர்ச்சியடைத்தான் வைத்திருக்கிறார். இதுவரையிலான படங்களில் இல்லாத அளவுக்கான நடிப்பு இதில். நம்ப முடியவில்லை. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கே மிகப் பெரிய தைரியம் வேண்டும். அவளை ரேப் பண்ணுடா என்று நாராயணனைத் தூண்டிவிடும்போது பகீரென்றானது. ஆனால் அதனைத்தான் எத்தனை அழுத்தம், திருத்தமாக திரும்பத் திரும்ப உச்சரிக்கிறார் தன்ஷிகா. உங்க கேரியர்லேயே நடிப்புக்கு பெஸ்ட் இந்தப் படம்தான் மேடம்..
ஒரு காட்சியே வந்தாலும் வசன உச்சரிப்பாலேயே நகைச்சுவையை தெளித்திருக்கிறார் இயக்குநர் ராம்தாஸ். போலீஸார் எப்படித்தான் மாமூலையும், லஞ்சத்தையும் பிரித்து பிரித்து வாங்குகிறார்கள் என்பதை நகைச்சுவையான வசனங்களின் மூலம் அசத்தலாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மேலும் மற்றுமொரு நாயகியான அஞ்சனா கீர்த்தியும் தன்னுடைய வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
மதுபானக் கடைக்குள்ளேயே அதிகக் காட்சிகள் எடுக்கப்பட்டிருப்பதால் ஒளிப்பதிவாளர் குளஞ்சி குமார் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறார். முதல் பாடல் கேட்பதற்கு இனிமையாகத்தான் இருந்தது. வாழ்த்துகள் கணேஷ் ராகவேந்திராவுக்கு..
இயக்குநர் ஷங்கரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய நிமேஷ் வர்ஷன்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லரை கடைசிவரையிலும் காப்பாற்றி இறுதியில் கிளைமாக்ஸில் வைத்திருக்கும் ஒரு உலக மகா டிவிஸ்ட் எதிர்பாராதது..  ஆனால் அவசியமானதும்கூட.. இப்படியும் செய்யலாமா என்றும் யோசிக்க வைக்கிறது.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்கிற கதையில் வரும் திறந்திடு சீசேம் என்கிற பாஸ்வேர்டை மையமாக வைத்து படத்திற்குத் தலைப்பை வைத்திருக்கிறார்கள்.
மனம் என்ற குரங்கை கட்டுப்படுத்த பாஸ்வேர்டு போன்ற கிளைமாக்ஸ் டிவிஸ்ட் மிக அவசியம்தான் என்பது படத்தை பார்த்த பின்பு தோன்றுகிறது. மதுபானக் கூடத்திற்குள்ளேயே மதுபான பிரியர்களை பார்க்க வைத்து அதே மதுபானத்தை மனம் வெறுக்கும் அளவுக்கு ஒரு கடைசி சிச்சுவேஷனுடன் எண்ட் கார்டு போடுவது படத்தின் கச்சிதமான கிளைமாக்ஸ்..!
இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்..!

36 வயதினிலே - சினிமா விமர்சனம்

18-05-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதுவரையிலும் இந்தியாவை ஆட்சி செய்த 14 பிரதமர்களில் ஒரேயொருவர்தான் பெண். ஜனாதிபதி மாளிகையில் ரப்பர் ஸ்டாம்ப்பாக ஆட்சி புரிந்த 13 ஜனாதிபதிகளில் ஒருவர்தான் பெண். சுதந்திரம் அடைந்த இத்தனையாண்டுகளில் 15 பெண் முதலமைச்சர்கள்தான் ஆட்சியில் இருந்திருக்கின்றனர்.
பெண்களுக்கான கதவுகள் திறந்திருந்தும் யார் அவர்களை உச்சத்திற்கு வரவிடாமல் தடுப்பது..? ஒரு குடும்பத்தையே திறம்பட நிர்வகிக்கும் திறன் கொண்ட பெண்கள் அதிகமாக நாட்டின் பொறுப்பேற்க.. பொது வாழ்க்கைக்கு வர.. எத்துறையிலும் முதலிடத்திற்குள் ஏன் வர முடியவில்லை..?
இந்தக் கேள்விக்கான விடையைத் தேடித்தான் இந்தப் படத்தின் ஹீரோயின் வசந்தியும் செல்கிறாள். விடை கிடைத்ததா என்பதுதான் படத்தின் ரத்தினச் சுருக்கமான கதை.

தமிழ்ச் சினிமாவுக்கு மிகவும் புதிய கதை. மலையாளத்தில் ‘How old are you’ என்ற பெயரில் வெளிவந்தபோதே நாடு முழுவதிலும் கவனத்தை ஈர்த்த படம் இது. பெண்களின் முன்னேற்றத்தைத் தடுப்பது யார் என்கிற கேள்வியைவிடவும், பெண் தனக்குள் இருக்கும் திறமைகளை ஏன் வெளிக்காட்டாமல் இருக்கிறாள் என்கிற கேள்வியைத்தான் இந்தப் படம் அதிகம் பேசியிருக்கிறது. முன் வைத்திருக்கிறது என்றே நினைக்கிறோம்.
சுயநலமிக்க கணவன்.. தன்னைப் புரிந்து கொள்ள முயலாத மகள்.. வீட்டில் இருக்கும் மாமனார், மாமியாரையும் கவனிக்க வேண்டிய சூழல்.. இதனாலேயே அலுவலக வேலையில் முழுமையாக ஈடுபட முடியாத சூழல் என்று ஒரு மந்தமான வாழ்வியலில் உழன்று கொண்டிருக்கும் சாதாரணமான கலெக்டர் ஆபீஸ் கிளார்க் வசந்தா.
கல்லூரி காலங்களில் மாணவிகளை ஒன்று திரட்டி கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தி ஜெயிக்க வைத்த இதே வசந்திதான் இன்றைக்கு அமைதியின் திருவுருவமாக தாங்க முடியாத மன அழுத்தத்துடனும், சகிப்புத்தன்மையுடன் வாழ்கிறாள்.
தனது பெற்றோர்களை பற்றியே கவலைப்படாமல் தான் அயர்லாந்துக்கு சென்றே ஆக வேண்டும் என்று துடிக்கிறான் கணவன். வீட்டில் வயதான அம்மா, அப்பா இருக்கிறார்களே என்கிற சிறு கவனம்கூட இல்லாமல் தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படும் அவனை இன்னமும் நேசிக்கிறாள் வசந்தி.
கவனக்குறைவால் காரை ஓட்டி ஒரு சிறுவனின் காயத்திற்கு காரணமாகும் கணவனைக் காப்பாற்ற தான் கார் ஓட்டியதாகச் சொல்லி தண்டனைக்குட்பட முன் வருகிறாள் வசந்தி. ஆனால் காலாவதியான லைசென்ஸ் நிலைமையைச் சிக்கலுக்குள்ளாக்க மேலும் கணவனின் கோபத்திற்குள்ளாகிறாள்.
இந்த நேரத்தில் தன் பெண்ணிடம் எப்போதோ சொன்ன ஒரு கேள்வியை அவள் தனது பள்ளிக்கு வந்த இந்திய ஜனாதிபதியிடம் கேட்க.. இதைக் கேட்டுவிட்டு இன்ப அதிர்ச்சியான ஜனாதிபதி அவளது தாய் வசந்தியை சந்திக்க விரும்புகிறார். வசந்தி பயத்துடன் ஜனாதிபதியை சந்திக்கும் நேரத்தில் உயர்ரத்த அழுத்தத்தினால் மயங்கி விழுந்துவிட இதுவே நாடு முழுவதிலும் கேலிக்குரியதாகிறது.
ஒரு பக்கம் தன் முகம் நாடு முழுவதிலும் தெரிந்தாலும் இப்போது அது கேலிக்குட்பட்டதாக இருப்பதால் வருத்தப்படும் வசந்தியை தனியே விட்டுவிட்டு கணவன் தன் மகளை அழைத்துக் கொண்டு அயர்லாந்து செல்கிறான்.
இங்கே மாமனார், மாமியாரோடு தனித்து நிற்கும் வசந்தியை சந்திக்கும் அவளது கல்லூரி தோழி, பழைய வசந்தி எங்கே என்று ஒரு கேள்வி கேட்டு உசுப்பிவிட.. தன்னைக் கேட்க அருகில் ஆளில்லை என்கிற நிலைமையில் தான் நினைத்ததையெல்லாம் செய்ய நினைக்கிறாள் வசந்தி.
செய்து முடித்தாளா..? தனக்கான தனித்துவத்தைப் பெற்றாளா..? வசந்தி என்ற பெயருக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டாளா என்பதுதான் மீதமிருக்கும் படத்தின் கதை.
குடும்பம் மட்டுமே முக்கியம் என்கிற ஒற்றை விஷயத்துடன் மல்லுக்கட்டி வரும் இந்திய சமூகத்தில் பெண்கள் எப்பேர்ப்பட்ட பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் வீட்டுக்குள் வந்தால் அவர்கள்தான் குடும்பத் தலைவியாகவும், பொறுப்பான அம்மாவாகவும், மனைவியாகவும், மகளாகவும், மருமகளாகவும் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதனாலேயே இவர்களது தனிப்பட்ட சாதனைகள் அனைத்தும் கேள்விக்குரியதாகவே போய்விடுகின்றன.
அத்திப்பூத்தாற்போலத்தான் ஒரு சிலர் தங்களது வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து மற்றவர்களுக்கு அடையாளமாகத் திகழ்கிறார்கள். அப்படியொரு அடையாளமாக இந்த வசந்தியிருக்கிறாள் என்பதுதான் படம் காட்டியிருக்கும் செய்தி.
அடித்து, உதைத்து, துன்புறுத்தி சித்ரவதை செய்தவர்தான் கொடுமையான கணவர்கள் என்றில்லை. குடும்பம் பற்றி கவலையில்லாமல் தான்தோன்றித்தனமாக தன் சுயநலம் சார்ந்து பேசும் இந்த வசந்தியின் கணவர்கூட ஒரு டெர்ரரிஸ்ட் கணவர்தான்.  போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீடு திரும்பும்போது ஜோதிகாவும், ரகுமானும் பேசிக் கொண்டே வரும் அந்த நீளமான ஷாட்டுதான் இந்தப் படத்தின் அடித்தளம்.
தனது குடும்பப் பொறுப்பை எத்தனை முறை சொல்லியும் எதையும் காதில் வாங்காமல் அக்கறையில்லாமல் பேசும் அந்தக் கணவனை ஏன் வசந்தி கடைசிவரையிலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை..
பெண்கள் தங்களுக்குள் இருக்கும் ஒரு சிறப்பு தகுதியை வளர்த்து அதன் மூலம் பெரிய ஆளாகலாம் என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ். ஆர்கானிக் அக்ரிகல்ச்சர் என்றழைக்கப்படும் இயற்கை விவசாயம் முறையை வீட்டிலேயே செய்து அதன் மூலமும் தொழில் செய்யலாம். குடும்பத் தேவையையும் பூர்த்தி செய்யலாம் என்று ஒருவித புத்திசாலித்தனமான கான்செப்ட்டை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தியதற்காக இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்..!
வெற்று வெளியாக இருக்கும் மொட்டை மாடியில் சின்னஞ்சிறிய இடத்தில்கூட சிறிய காய்கறிகளை பயிரிட்டு அந்தக் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பயன் பெறலாம் என்பதோடு இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்கும்வகையில் தொழிலை நடத்தலாம் என்பதையும் அழுத்தம்திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
மலையாளத்தில் மஞ்சுவாரியரின் செகண்ட் இன்னிங்க்ஸின் துவக்கம் இந்தப் படத்தில்தான் அமர்க்களமாகத் துவங்கியது. அதேபோல இதில் ஜோதிகாவின் மறு பிரவேசமும் அமோகமாக துவங்கியுள்ளது.
இத்தனை நடிப்புத் திறனை வைத்துக் கொண்டு கடந்த 8 ஆண்டுகளாக அரிதாரம் பூசாமல் காத்திருக்கும் பொறுமை ஜோதிகாவுக்கு எப்படி வந்ததோ தெரியவில்லை. ஆனால் இனியும் அதுபோல இருக்க வேண்டாம் என்பது தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பும், வேண்டுகோளும்..!
முதல் காட்சியில் இருந்து கடைசியாக கம்பீமான தோற்றத்தில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியில் வரும் காட்சிவரையிலும் பிரேம் பை பிரேம் ஜோதிகாவின் ஆதிக்கம்தான்..!
அவருடைய கண்களே பல மொழிகளைப் பேசும். இதில் தன்னுடைய பாடி லாங்குவேஜை வைத்தும் கூர்மையான வசனங்களின் மூலமாகவும் அந்த வசந்தியை இன்றைக்கு அனைத்து ரசிகர்களின் மனத்திலும் சம்மணங்கால்போட்டு அமர வைத்திருக்கிறார் ஜோ.
கணவனிடம் தனது நிலைமையைச் சொல்லி இறைஞ்சுகின்ற அதே ஜோ.. பின்னாளில் “நான் அயர்லாந்துக்கு வரலை..” என்று தீர்மானமாகச் சொல்கிற தொனியில் கை தட்ட வைத்திருக்கிறார். தன் மகள் அயர்லாந்து செல்லும்போது “அந்தக் கேள்வியை சொல்லவா?” என்று கேட்கும்போது “வேண்டாம்..” என்று திடமாக மறுக்கும்போதும் அந்த காட்சியின் முழு பரிமாணத்தையும் தானே சுமந்திருக்கிறார் ஜோ.
கணவனிடத்தில் அன்பை செலுத்தி வாங்க முடியாமலும், மகளிடத்தில் பாசத்தைக் கொட்டி அதையும் திரும்ப்ப் பெற முடியாமலும்.. அலுவலக வேலைகளிலும் ஈர்ப்பு காட்ட முடியாமல் தவியாய் தவித்தும், பார்க்கிறவர்களின் கேலிகளுக்கு ஆளாகாமல் தவியாய் தவிப்பதுமாக வசந்தி என்கிற ஒரு விலைமதிப்பில்லாத கேரக்டரை நம் கண் முன்னால் நடமாடவிட்டிருக்கிறார் ஜோதிகா. வெல்டன்.. பிரமிப்பாகவே இருக்கிறது..
கணவராக ரகுமான்.. சிடுசிடு குணத்துடன்.. சுயநலமிக்கவராக காட்சியளித்திருக்கிறார். இடையில் கணவர் என்ற கோதாவில் வீட்டில் எரிந்துவிழுந்துவிட்டு மகளிடத்தில் பாகப் பிரிவினை செய்வதை போல அயர்லாந்து பிரித்து அழைத்துப் போகும் அந்த வில்லன் கேரக்டரையும் கச்சிதமாகவே செய்திருக்கிறார்.
மகளாக நடித்திருக்கும் இஷா துவக்கத்தில் ஜோதிகாவின் வயதைக் குறிப்பிட்டு தொடர்ச்சியாக பேசும் காட்சிகளில் கவர்ந்திழுக்கிறார். இயக்கம் சிறப்பாக இருந்தாலே அனைத்தும் சிறப்பாகத்தான் இருக்கும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு சாட்சி.
ஏன்.. எதற்கு.. என்கிற காரணத்தையெல்லாம் சொல்லாமல் ஜோதிகாவின் வீடு, அடையாளங்களை தேடும் பணியில் போலீஸ் மும்முரமாக இருப்பதை பக்கா சினிமாத்தனம் என்று சொன்னாலும் அதுவும் படத்தில் ஒரு டிவிஸ்ட்டாகி ரசிக்கத்தான் வைத்திருக்கிறது.
அபிராமியின் என்ட்ரிதான் படத்திற்கு மிகப் பெரிய டிவிஸ்ட். அவருடைய வார்த்தை ஜாலத்தில் ஜோ திசை திரும்பி தன் வாழ்க்கையை தன் கையில் எடுப்பதெல்லாம் திரைக்கதையின் யுக்திதான்.. இந்த இடத்தில் சொல்வது ஒரு ஆணாக இருந்தால் அது நிச்சயம் எடுபட்டிருக்காது..
அலுவலக சச்சரவுக்கு கோலிசோடா சுஜாதா.. வீட்டில் சீரியலே கதி என்றிருக்கும் மாமியாராக ரொம்ப நாள் கழித்து தமிழில் கலாரஞ்சனி.. ஆதரவான மாமனாராக டெல்லி கணேஷ்.. ஆதரவான தோழியாக தேவதர்ஷிணி, ஒரு மில்லியன் டாலருக்கு மதிப்பான அந்தக் கேள்வியை சதாராணமாகச் சொல்லும் பிரேம்.. மக்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான் பணம் சம்பாதிக்க காய்கறிகளை செயற்கை முறையில் வளர்த்து கூச்சமே இல்லாமல் விற்பனை செய்யும் வியாபாரியாக இளவரசு.. துணிக்கடை அதிபரான ஜெயபிரகாஷ் என்று அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தை ரசித்து செய்திருக்கின்றனர். கூடுதலாக ஒரேயொரு காட்சியில் வந்தாலும் பாரதிமணி நினைவில் நிற்கிறார்.
‘வாடி ராசாத்தி’ பாடல் ஜோதிகாவுக்காக பாடப்பட்டிருந்தாலும் படத்திற்கு மிகப் பொருத்தமானதுதான். சந்தோஷ் நாராயணனின் இசைப் பயணம் இன்னமும் தொடரும்போல தெரிகிறது.. திவாகரனின் ஒளிப்பதிவில் மொட்டை மாடிகள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. இதையும்விட ஜோதிகாவும் மிக அழகாக இருக்கிறார். இன்னமும் 40 படங்களில் அவர் நடிக்கலாம்..
இடைவேளைக்கு பின்புதான் இந்த பூ ஒன்று புயலானது கதையே துவங்குகிறது. அந்தப் பரபரவை கடைசிவரையிலும் கொணடு போய் நம்மை ஸ்கிரீனைவிட்டு அகல வைக்காமல் செய்திருக்கும் எடிட்டர் மகேஷ் நாராயணனுக்கும் நமது பாராட்டுக்கள்.
விஜியின் வசனங்கள் இயக்குநருக்கு மிகப் பெரிய உதவியாக கிடைத்திருக்கின்றன.  கடமை, வேலை, பொறுப்புகள் இவை மூன்றுக்கும் உள்ள வேறுபாட்டை ரகுமான்-ஜோதிகா பேச்சிலேயே தெளிவாக்கியுள்ளார். ஒரு விஷயத்தைத் தூண்டிவிடுவதற்கு சம்பவங்களே வேண்டும் என்றில்லை.. சில வார்த்தைகளே போதும் என்பதையும் அபிராமி கேரக்டர் வாயிலாகச் சொல்லி பெருமைப்படுத்தியிருக்கிறார் விஜி.
படத்தில் ஒரேயொரு நெருடல்தான். இன்றுவரையிலும் வசந்தியை புரிந்து கொள்ளாத கணவனிடத்தில் மறுபடியும் வசந்தி சேரத்தான் வேண்டுமா..? அயர்லாந்துக்கு போகத்தான் வேண்டுமா..? ஜனாதிபதியை சந்தித்த்தோடு அவளுடைய லட்சியம், கனவுகள் முடிந்துவிட்டதா..? அவளுடைய உயர்வின் எல்லைக்கோடே ஜனாதிபதியின் சந்திப்புதானா..? புரிந்து கொள்ளாத, பாசமில்லாத, சுயநலமான கணவனை புறக்கணித்துவிட்டு தனித்தே வாழ்ந்து அவள் தன்னை இன்னமும் பெரிய ஆளாக்கிக் காட்டலாமே..? என்றெல்லாம் கேள்விகள் நாலாபுறத்தில் இருந்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.  இயக்குநர்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
மற்றபடி பெண்கள் சாதிப்பதற்கு வயது ஒரு பொருட்டல்ல. குடும்பம் ஒரு தடையல்ல.. பிள்ளைகள் ஒரு பிரச்சனையில்ல.. என்பதை நெத்திப் பொட்டில் அடித்தாற்போல் அடித்திருக்கும் படம் இது..!
பெண் குலத்தினர் மட்டுமல்ல ஆண் குலத்தினரும் அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம் இது..!

புறம்போக்கு என்னும் பொதுவுடமை - சினிமா விமர்சனம்

16-05-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’ படங்களுக்கு பிறகு ஜனநாதன் இயக்கியிருக்கும் 4-வது படம் இந்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’.
இயல்பாகவே தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லாமல் சொல்லி வருபவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். வருடத்திற்கு ஒரு படம் செய்பவரில்லை. சில வருடங்களுக்கு ஒரு படம். ஆனால் அவையே அந்தந்த காலக்கட்டத்தில் பேசப்பட்டவையாகவே அமைந்துவிடும். அதற்கு இந்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படமும் விதவிலக்கல்ல.
முதற்கண் நன்றிகள் யு டிவி நிர்வாகத்தினருக்கு. ஹிந்தியில் பரீட்சார்த்த முறையிலான சினிமா துறை சார்ந்த திரை மொழி படங்களுக்கு மிகுந்த ஆதரவு கொடுத்து வரும் யு டிவி தமிழில் மிக பெரிய நடிகர்களை வைத்து ஸ்டார் கேஸ்ட் படங்களாகவும், கமர்ஷியல் படங்களாகவும் மட்டுமே அளித்து வந்திருக்கிறது. இப்போதுதான் முதல் முறையாக மக்களுக்கான கதையாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

தேசத் துரோக குற்றச்சாட்டிற்காக மூன்று மரண தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டிய குற்றவாளி ஆர்யா. இந்த மரண தண்டனையைக்கூட ஒரு கை தேர்ந்த தூக்கிலிடும் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரை வைத்தே செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இந்த பாலுச்சாமி என்கிற ஆர்யாவின் தேசத்துரோகம் அமைந்திருக்கிறது.
நீதிமன்றம் குறிப்பிட்ட தூக்கிலிடும் பணியில் நிபுணத்துவம் பெற்ற எவரும் கிடைக்காமல் போனதால், கடைசியாக 10 வருடத்திற்கு முன்பு ஒரு முறை தூக்கிலிட்ட அனுபவத்தை தன் தந்தை மூலமாகப் பெற்றிருக்கும் எமலிங்கம் என்கிற விஜய் சேதுபதியை வலை வீசிப் பிடிக்கிறது சிறை நிர்வாகம். ரயில்வேயில் கலாசியாக பணியாற்றும் விஜய் சேதுபதி முதலில் வர மாட்டேன் என்று முரண்டு பிடித்து பின்பு ஒத்துக் கொள்கிறார். தூக்கிலிட அல்ல. தூக்கில் தொங்க வேண்டியவரை காப்பாற்ற..!
தன்னுடைய பாசம் மற்றும் நேசத்தாலேயே ஆர்யாவை தூக்கு மேடைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருப்பதை நினைத்து வருத்தப்படும் ஆர்யாவின் பெண் கூட்டாளியான குயிலி என்னும் கார்த்திகா, ஆர்யாவை சிறையில் இருந்து காப்பாற்ற நினைக்கிறார். இதற்காக தூக்குப் போடும் பணிக்கு போகவிருக்கும் எமலிங்கத்துடன் நட்பு வைத்து அவரைக் கவர்ந்து தங்களது இயக்கம் பற்றித் தெளிய வைத்து.. ஆர்யா செய்த தேசத் துரோகச் செயல்கள் என்னென்ன என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி எமலிங்கத்தின் மனதை மாற்றி அவரை சிறைக்குள் அனுப்பி வைக்கிறாள்.
இன்னொரு பக்கம் ஆர்யா, தூக்கில் தொங்கியே ஆக வேண்டும் என்பது இந்திய அரசின் தலையாய விருப்பம் என்கிற கட்டாயத்தின் பேரில் தமிழகச் சிறைக்கு அனுப்பப்பட்டு சிறைத் துறையின் அடிஷனல் டி.ஜி.பி.யான ஷாமின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஆர்யாவை தூக்கிலிடுவதுதான் தனது முதல்வேலை என்று பணியில் தீவிரமாக இருக்கிறார் ஷாம்.
இந்த நான்கு பேரின் நான்குவகையான முயற்சிகளில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் இந்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தின் திரைக்கதையின் களம்.
கேரக்டர்களின் பெயர்களையே பொருத்தம் பார்த்து வைத்திருக்கிறார் இயக்குநர். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் சுதந்திர இந்திய அரசு முதலில் தூக்கிலிட்ட தமிழரான பாலுச்சாமியின் பெயர்தான் ஆர்யாவுக்கு..! உலகத்திலேயே முதல் மனித வெடிகுண்டாக செயல்பட்டு உயிர்நீத்த குயிலியின் பெயர்தான் கார்த்திகாவுக்கு. எமலிங்கம் என்ற பெயர் தூக்கு தண்டனை நிறைவேற்ற பிடிக்கவே பிடிக்காத நிலையில் இருக்கும் விஜய் சேதுபதிக்கு. அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே கண்மூடித்தனமாக கடைப்பிடிக்க நினைக்கும் அரசு அதிகாரியான ஷாமுக்கு, இப்போதுவரையிலும் கல்வித் துறையில் நம்மை ஆட்சி செய்யும் ஆங்கிலேயே கல்வி அதிகாரியான மெக்காலேயின் பெயர். எல்லாமே பொருத்தமானவைதான்.
ஒரு திரைப்படத்தில் எதெல்லாம் இருக்காது என்று நினைக்கிறோமே அதையெல்லாம் இந்தப் படத்தில் நைச்சியமாக அரங்கேற்றியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் துவக்கத்திலேயே வெளிநாடுகளில் குப்பை என்று சொல்லப்படுபவையெல்லாம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு அப்பாவி மக்களுக்கு எமனாக மாறி வருவதையுபம், குப்பைக் கூளங்களால் இந்தியாவே குப்பையாகிக் கொண்டிருப்பதையும், இந்த ஏகாதிபத்திய அவலட்சணத்தை இந்திய அரசு மறைமுகமாக ஊக்குவித்து வருவதையும் கடுமையாக சாடியிருக்கிறார் இயக்குநர்.
ஆர்யா செய்யும் தேசத் துரோகச் செயலாக பஞ்சத்தில் அடிபட்டு நிற்கும் மக்கள் கையில் தட்டுடன் உணவு வேண்டி நிற்க.. இன்னொரு பக்கம் ரயிலில் உணவு தானியங்கள் கொள்ளை போவதை அறிந்து அதைத் தடுத்து ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ கோஷத்துடன் மக்களுக்கு பகிர்ந்தளிக்கிறார்.
மாசுகளற்ற நிலம் இந்த மக்களுக்கு உடமை என்பதை வலியுறுத்தி தங்களது மக்கள் செயலுக்கு விரோதமாகச் செயல்படும் ராணுவத்தை எதிர்த்து மனித வெடிகுண்டு போராளியாக செல்வதாகக் காட்டியிருக்கிறார்.
வலிமை வாய்ந்த சென்சார் போர்டின் முறுக்கலை எதிர்கொள்ளும் எந்தவொரு இயக்குநரும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்தான் தன்னுடைய சொந்தக் கொள்கையையும், நாட்டைப் பற்றியும் பேச முடியும். அதைத்தான் இயக்குநர் ஜனநாதன் இதில் செய்திருக்கிறார்.
திரைப்படத்தின் வசனங்கள் மூலமாக பொதுவுடமை என்றால் என்ன..? தனியுடமை என்றால் என்ன..? மார்க்சியம் என்ன சொல்கிறது..? மக்களுக்கும் மார்க்சியத்திற்கும் இடைவெளி ஏன்..? யார் மக்கள்..? என்பதையெல்லாம் விலாவாரியாக விவரித்திருக்கிறார் இயக்குநர்.
ஷாமுக்கும், ஆர்யாவுக்குமான பல வசனங்கள் இன்றைய தீவிர நக்சல்பாரி அரசியலை எடுத்துக் காட்டுகிறது. “இளைஞர்களை அந்த வழிக்குக் கொண்டு போய் தள்ளியது அரசுகளே தவிர வேறு நபர்கள் இல்லை..” என்கிறார் இயக்குநர். அரசு இந்த பாலுச்சாமியை தூக்கிலிட்டே ஆக வேண்டும் என்று உறுதியாகச் சொல்வதுகூட அரசு அமைப்புகளை எதிர்க் கேள்வி கேட்கக் கூடாது என்கிற சர்வாதிகாரத்தின் வெளிப்பாடுதான்.
“ஜெனீவா ஒப்பந்தப்படி கைதிகளை உடல் ரீதியாக துன்புறுத்தக் கூடாது..” என்கிறார் ஆர்யா. “தண்டிக்கக் கூடாதுதான். ஆனால் கண்டிக்கலாம். தூக்கி கண்டத்துல போடு. ஒரு வாரத்துக்கு பச்சைத் தண்ணியைத் தவிர வேற எதையும் தராத..” என்கிறார் ஷாம். இது  அரசுகளை எந்தவொரு ஒப்பந்தமும் கட்டுப்படுத்த முடியாது என்பதையே காட்டுகிறது.
“நீ யாருக்காக போராடுறேன்னு சொல்றியோ.. அவங்களை உன்னைப் பத்திக் கவலைப்படலை..” என்கிறார் ஷாம். “நான் சொல்லும் மக்கள் அவங்க இல்லை..” என்கிறார் ஆர்யா. இதைத்தான் அனைத்துவிதமான தீவிரவாத இயக்கங்களின் தோழர்களும் சொல்கிறார்கள். தங்களின் போராட்டத்தை புரிந்து கொள்ள அந்த மக்களே விரும்பவில்லையே என்கிற ஆதங்கம் அவர்களுக்கு எப்போதுமே உண்டு. புரிந்து கொண்டால்தான் இன்றைக்கு அவர்கள் ஆட்சிக்கு வந்திருப்பார்களே..?
வெறுமனே தூக்குத் தண்டனைக்கு எதிரான படமாகவும் இருக்க்க் கூடாது என்பதால் எதற்கு தண்டனை..? ஏன் தண்டனை..? எதனால் இது ஏற்பட்டது என்பதையும் விளக்கமாகச் சொல்லி அதையும் திரைக்கதையில் விறுவிறுப்பானவிதத்தில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஆர்யாவுக்கு நிச்சயம் இதுவொரு புதுமையான அனுபவமாகத்தான் இருக்கும். எப்போதும் அவரையொரு ரொமான்ஸ் பேபியாக பார்த்தவர்களுக்கு இந்தப் படம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். முகத்தில் எப்போதும் தீவிரம் காட்டும் தீவிரவாதியாக இல்லாமல் சரளமாக, சகஜமாக இனிமையாக பேசும் பாலுச்சாமியாகவும் நடித்திருக்கிறார்.
அதிகக் காட்சிகளில் இவருடன் வசனத்தினாலேயே மல்லுக்கட்டியிருக்கும் ஷாமின் மிதமான நடிப்பினால் ஆர்யா பேசும் வசனங்கள் நாளைய சினிமாவுலகத்திலும் பேசப்படவிருக்கின்றன. சின்னச் சின்ன ஷாட்டுகளில் அதிக நீளமான வசனங்களாக இல்லாமல் கச்சிதமாக கத்தரித்துவிட்டது போன்றவையாக இருப்பதால் இருவரின் வசனப் போராட்டத்தையும் வெகுவாக ரசிக்க முடிந்திருக்கிறது.
தூக்கு மேடையில் இறுதியாக தனது கனவு பலிக்காமல் போகப் போகிறது என்பதை உணர்ந்த நிலையிலும், விஜய் சேதுபதிக்காக பரிதாபமாகப் பார்க்கின்ற பார்வையில் ஒரு போராளியின் கனவை நினைவுபடுத்தியிருக்கிறார் ஆர்யா.  செம கிளாஸ் இயக்கம்.
உண்மையில் படத்தைத் தூக்கி நிறுத்தியிருப்பது விஜய் சேதுபதிதான். அவருடைய குடிகார பழக்கமும், குடும்பச் சூழலும் என்னமோ ஏதோ என்று நினைக்க வைத்து.. அவர்தான் தூக்கில் போடப் போகிறவர் என்றவுடன் ஒரு பரபரப்பு ஏற்படுகிறது.
சின்ன வயதில் ஒருவரின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டும்போது “நான் நிராபராதிப்பா..?” என்று அவர் சொல்ல.. அந்த வார்த்தையே இத்தனை நாட்களாக தன்னை தூங்க விடாமல் செய்கிறது என்பதை பத்ரகாளியின் முன்பாக பொரிந்து தள்ளிவிட்டு சாகப் போகும் காட்சியில் இமை கொட்டாமல் பார்க்க வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
எப்படியாவது தான் தூக்கிப் போடக் கூடாது.. அதே சமயம் அரசு கொடுத்த வேலையையும் செய்து முடிக்க வேண்டும் என்று டபுள் கேம் விளையாட நினைத்து அப்பாவியாக கார்த்திகாவின் முயற்சிகளுக்கு தோள் கொடுத்து நிற்கும் அப்பாவித்தனத்தில் அசத்திவிட்டார் விஜய் சேதுபதி.
கடைசிவரையிலும் ஆர்யா தப்பிக்கப் போகிறார் என்றே நினைத்துக் கொண்டு கழுத்தில் துணியை மூடப் போகும் சூழலிலும் கண்ணடித்துவிட்டு லீவரை இழுத்துவிட்டு காத்திருந்தவர்.. தொடர்ந்த நொடிகளில் அந்தக் கயிறு காற்றில் ஆடும் விதத்தையும், கீழேயிருந்து வரும் உயிர் பிரியும் வலியின் சப்தத்தையும் வைத்தே தன் கனவு சிதைந்துபோய்விட்டதை உணர்ந்து சிதிலடைந்து போய் முதுகு காட்டி அமர்ந்து அழுது படத்தின் ஒட்டு மொத்த பீலிங்கையும் தானே சுமந்து பார்வையாளர்களுக்குக் காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.
திட்டம் தோல்வியடைந்து போராளியின் பூதவுடலைத் தூக்கிச் செல்லும்போது அவருக்கு ஒண்ணுமில்ல ஸார்.. ஒண்ணுமில்ல ஸார்.. விடுங்க ஸார்.. என்று பின்னாலேயே ஓடி வரும் எமலிங்கத்தின் கதறல் தனியொரு மனிதனின் படுகொலைக்கு எதிரானதேயன்றி வேறொன்றுமில்லை.. 
இவருடைய கடைசியான முடிவு தூக்கில் தொங்கப் போகிறவனைவிடவும், தூக்கில் தொங்கவிடுபவனின் சோகம்தான் மிகப் பெரியது என்கிற இயக்குநரின் மனவோட்டத்தை பிரதிபலிக்கிறது. இந்தப் படத்திற்கு இத்தனை கடினமான சோகம் தேவையா என்று கேட்டால்.. இது நிச்சயம் தேவைதான். இப்போதுதான் தூக்குத் தண்டனை என்பதன் முழு வீரியமும் பார்வையாளர்களுக்குப் புரிகிறது..! வெல்டன் இயக்குநர் ஸார்..!
தற்போதைய ஹைடெக் தீவிரவாதிகளாக பவனி வரும் கார்த்திகா அண்ட் கோவும். அவர்கள் போடும் திட்டங்களும் ஒரு பரபரப்பை ஏற்படுத்துகின்றன. கார்த்திகாவுக்கு அழுது புரண்டு நடிக்கும் காட்சிகள் இல்லையென்றாலும், பரபரவென்று நடித்திருக்கிறார். தீவிரவாதியாகவே இருந்தாலும் வீஜய் சேதுபதிக்கு தன் மீது ஒரு பார்வை இருப்பதை உணர்ந்தும், அதனை தன்னுடைய இயக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதெல்லாம் இயக்குநரின் பக்குவமான திரைக்கதை. நடிப்பிற்காக இயக்குநர் அதிகம் பிரயத்தனப்படவில்லை. ஆனால் திரைக்கதையும், வசனமும், இயக்கமும் சிறப்பாக இருப்பதினால் படத்தில் ஒரு நிமிடம்கூட தொய்வு என்பதே இல்லை.
படத்தில் லெனின், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்றவர்களின் புகைப்படங்களும் புத்தகங்களும் அங்கொன்றும், இங்கொன்றுமான காட்சிகளில் தென்படுகின்றன. பஞ்சாப்பில் சீக்கிய தோழர் ஒருவர், அந்த ஜெயிலை பற்றிச் சொல்லும்போது அவருடைய பின்னணியில் ஏங்கெல்ஸின் புகைப்படத்தை வைத்திருப்பது என்ன குறியீடோ..?
தோழர்களின் சமூகம் சார்ந்த அக்கறையையும் ஒரு காட்சியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். விஜய் சேதுபதியின் அம்மா தனது மகன் பாலியல் பெண்களை சந்திக்கும் பழக்கம் வைத்திருக்கிறான் என்பது தெரிந்தும், “அப்படியொரு பெண்ணை கூட்டி வந்து கட்டி வைத்து அவளையும் நல்லவளா மாத்திரலாமே..?” என்று அக்கறையாக கேட்கிறார். இயக்குநர் சமூக சிந்தனையுள்ளவர் என்பதற்கு இதைவிட பெரிய வசனங்கள் எதுவும் தேவையில்லை.
சினிமாத்தனமான காட்சிகளாக சிலவையும் இருக்கத்தான் செய்கின்றன. அவையும் திணிக்கப்பட்டவையல்ல. ஆனால் இருந்துதான் ஆக வேண்டும். இது தமிழ்ச் சினிமாவின் தலைவிதி. ஆர்யாவை தப்பிக்க வைக்க போடும் திட்டங்கள்.. சிறைச்சாலையின் வரைபடம் உடனயே கார்த்திகா டீமிடம் கிடைப்பது.. கடைசி நிமிடத்தில் மழையால் தங்களது சதித்திட்டம் வெளியாவது.. இதனை தற்செயலாகவே காட்டியிருக்கலாம்.. கடைசி கேட் அருகில் சென்றவுடன் திட்டம் பணாலாவது என்பதெல்லாம் சினிமாத்தனம்தான். இதுகூட இல்லையெனில் ரசிகர்களை ஆர்வத்தோடு அமர வைப்பது கடினம்..!
வர்ஷன் இசையமைத்திருக்கிறார். இந்த மாதிரியான படங்களுக்கு பாடல்களே தேவையில்லைதான். ஆனால் தயாரிப்பாளரையும் திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகவே வைத்திருக்கிறார்கள்.. பின்னணி இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் திருப்திதான். கிளைமாக்ஸ் காட்சியில் நெஞ்சை உருக்குமிடத்தில் அதன் போக்கிலேயே விட்டுவிட்டு நம்மை ரசிக்க வைத்தமைக்கு அவருக்கு ஒன்று நன்றி..
திரும்பத் திரும்ப ஜெயில் காட்சிகளே வருவதால் ஒவ்வொரு முறையும் வேறுவேறு காட்சிகளை கொண்டு வந்து எடிட்டிங்கில் காப்பாற்றியிருக்கிறார் எடிட்டர் கணேஷ்குமார்.
ஜெயில் செட் அமைத்து பிரமாதப்படுத்தியிருக்கும் கலை இயக்குநருக்கு நமது ஷொட்டு. கோடிகளை செலவிட்டு செய்திருக்கிறார்கள். அதன் பிரமாண்டத்தை அழகாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். வெளிச்சக் கலவையில்லாமல் ஜெயிலின் சூழல் கெடாமல் மங்கலான வெளிச்சத்திலேயே படமாக்கியிருப்பதும் ஒரு குறியீடு போலத்தான் தோன்றுகிறது..
என்னதான் கதை செய்வது..? திரைக்கதை அமைப்பது..? வசனம் எழுதுவது..? என்றெல்லாம் தலையைப் பிய்த்துக் கொள்ளும் இயக்குநர்களுக்கு ஒரு பாடமாக எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.
சென்சார் போர்டு நமக்குக் கொடுத்திருக்கும் குறைந்தபட்ச சுதந்திரத்தில் அவர்கள் கண்ணுக்கே தெரியாத அளவுக்கான விஷயங்களை திறம்பட கொடுத்து, இப்படியொரு அற்புதமான படத்தைக் கொடுத்திருக்கும் நமது தோழர், மக்கள் இயக்குநர் அண்ணன் எஸ்.பி.ஜனநாதனுக்கு ஒரு சல்யூட்..!

எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல் - சினிமா விமர்சனம்

09-05-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

புதிதாக நடிப்புத் துறைக்குள் நுழைய விழைபவர்களும், தயாரிப்புப் பணிகளை மேற்கொள்பவர்களும் மிகக் குறைந்த முதலீட்டில் போட்ட காசு வந்தால் போதுமே.. முயற்சி செய்து பார்ப்போமே என்று நினைத்து உழைத்தால் சேதாரம் அடைந்தாலும் அடையாத்துபோலவே நினைத்து கரையேறலாம்.. இப்படியொன்றை நினைத்துத்தான் இந்தப் படக் குழுவினரும் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறோம்.
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க.. வனிதாவின் கணவரான நடன இயக்குநர் ராபர்ட் தானே மெயின் ரோலில் நடித்து இயக்கியிருக்கும் படம் இது. தலைப்பு வித்தியாசமாகவும், ஈர்ப்பாகவும் இருக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் ஒரேயொரு சிறப்பம்சம்.
ராபர்ட், சுரேஷ், மனோஜ், கும்கி நால்வரும் அந்த சின்ன பேட்டையில் இருக்கும் நண்பர்கள். என்ன வேலை செய்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் ஒன்றாக இருக்கும்போது கண்ணம்மா என்ற திருநங்கையின் கடையில் சாப்பிட்டுவிட்டு பொழுதைக் கழிப்பவர்கள்.
நண்பர்களில் ஒருவரின் தாய்க்கு இதயக் கோளாறு ஏற்பட மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஆபரேஷனுக்குத் தேவையான பணத்தைப் புரட்டுவதற்குள் அவர் இறந்து போய்விட.. இப்போது இந்த நண்பர்கள் நால்வருக்கும் பணத்தின் மீதான அருமையும், தேவையும் புரிகிறது. எதைச் செய்தாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஒரு நாள் இரவில் டாஸ்மாக் சரக்கின் புண்ணியத்தில் டிஸ்கஷன் நடத்தும்போது ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட முடிவெடுக்கிறார்கள். அதனைச் செயல்படுத்தப் போகும் இடத்தில் தங்களது முகம் தெரியாமல் இருக்க எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் போஸ்டர்களை முகத்தில் போட்டுக் கொண்டு செல்கிறார்கள்.
அதே நேரம்  ஏடிஎம்மில் பணத்தை வைக்க ஏஜென்ஸிக்காரர்களும் அங்கே வர.. இரு தரப்பினருக்கும் கை கலப்பாகிறது. பணத்தையும் திருடிவிட்டு ஏஜென்ஸி சார்பாக அங்கே வந்திருந்த அதிகாரி நிரோஷாவையும் கடத்திக் கொண்டு செல்கிறார்கள்.
விடிந்த பின்பு ஊரே அல்லலோகப்பட ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்த எம்.ஜிஆர். சிவாஜி, ரஜினி, கமல் மாஸ்க்குகள் பெரிதாகப் பேசுகின்றன.  போலீஸும் தீவிரமாக யோசித்து ஒரு அப்பாடக்கர் லேடி துணை கமிஷனரான ஐஸ்வர்யாவை இந்தக் கேஸை துப்புத் துலக்க நியமிக்கிறது. தன்னுடைய ஜீப் டிரைவரை மட்டும் துணைக்கு வைத்துக் கொண்டு, இந்த கேஸை துப்புத் துலக்க கிளம்புகிறார் ஐஸ்வர்யா.
அதே நேரம் நிரோஷா அவர்களிடமிருந்து தப்பிக்க நினைக்காமல், அந்தக் கொள்ளையில் தனக்கும் பங்கு வேண்டும் என்கிறார். இவர்களை விரட்டிப் பிடிக்கும் ஐஸ்வர்யா அந்தக் கொள்ளையில் தனக்கும் பங்கு கொடுத்தால் அவர்களை உயிருடன் விட்டுவிடுவதாக பேரம் பேசுகிறார். இதற்கிடையில் இவர்களிடமிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுவிட.. அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள்.
கொள்ளையர்களான இவர்களிடமிருந்தே கொள்ளையடித்தது யார்..? எதற்காக..? என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!
ராபர்ட்டே இயக்கியிருப்பதால் அதிலும் முதல் படமாகவும் இருப்பதால் நத்தை வேகத்தில் நகர்கிறது படம். இதனாலேயே பல இடங்களில் சுவாரஸ்யம் கெட்டுப் போய் கொட்டாவிதான் வருகிறது. இயக்கமும் சில இடங்களில் சொதப்பலாக டயலாக் டெலிவரிக்கே டைம் லேப்ஸாகி வசனங்கள் சவசவ என்று சொல்லப்படுகின்றன. ஐஸ்வர்யாவின் முணுக் கோபமெல்லாம் ஓவர் ஆக்டிங்காக மாறி நம்மை இம்சைப்படுத்துகிறது.
ஒரு வெற்றிப் படத்திற்கான கதைக்களம் இதில் இருந்தும் சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாததும், ஈர்ப்பான இயக்கம் இல்லாமையாலும் படத்தினை முழுமையாக ரசிக்க முடியவில்லை.
படத்தின் ஒரேயொரு ஆறுதல் திருநங்கையாக நடித்திருக்கும் ராம்ஜிதான். அசத்தியிருக்கிறார்.  தோற்றம், நடை, உடை, பாவனை அனைத்துமே அப்படியே திருநங்கைகளை உரித்து வைத்திருக்கிறது. கண்ணாலேயே ஏமாற்றி, காதல் செய்து.. கல்யாணம் செய்யும் ஆசையுடன் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் சர்ச்சில் செய்யும் குட்டிக் கலாட்டாக்கள் பெரிதும் ரசிக்கப்படும்..! இதுபோல ராம்ஜி வரும் காட்சிகளெல்லாம் ரசனையாவைதான். ஆனால் இது ஒன்றே இந்தப் படத்தை வெற்றி பெறவும், பேசப்படவும் வைக்காதே..?!
ராபர்ட்டின் ஆடலும், பாடலும் சிறப்புதான். அதிலும் சந்திரபாபு ஸ்டைலில் பாடும் பாடலும், ஆடும் ஆட்டமும் அந்த சிச்சுவேஷனுக்கு பொருத்தமாக ரசிக்க்க் கூடியதாக இருந்தது. ஆனால் மற்றவைகள்..?
காதல் பாடல்களை படமாக்கியிருந்தாலும் படத்தின் ஸ்பீடு குறைகிறதே என்று நீக்கிவிட்டார்களாம். தவறான முடிவு. அந்த காதல் பாடல்கவை வைத்திருந்தால்  அதுவே ரசிகர்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸினை கொடுத்திருக்கும்..!
அடுத்த முறை இன்னமும் சிறப்பான படத்தினை கொடுக்க இயக்குநர் ராபர்ட்டை வாழ்த்துகிறோம்..!

இந்தியா பாகிஸ்தான் - சினிமா விமர்சனம்

09-05-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பழைய கதையாகவே இருந்தாலும் அதையும் நவீன பாணியில் இப்போதைய ஜெனரேஷனுக்கு பிடித்தாற்போல் மாற்றிக் கொடுத்தால் ரசிகர்கள் நிச்சயம் பார்க்கத்தான் செய்வார்கள். பாராட்டத்தான் செய்வார்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அறிமுக இயக்குநர் ஆனந்த், தன் கன்னி முயற்சியிலேயே வெற்றி கண்டிருக்கிறார்.
இவரைப் போலவே ஹீரோ விஜய் ஆண்டனிக்கும் ஹாட்ரிக் வெற்றி இந்தப் படத்தின் மூலமாகவே கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே அவர் நடித்த ‘நான்’, ‘சலீம்’ ஆகிய படங்கள் கதையின் தொடர்ச்சியாக வந்து வெற்றி பெற்றிருப்பதால் இந்தப் படமும் அதன் தொடர்ச்சியாக வந்திருக்குமோ என்ற ஐயப்பாடு இருந்த்து. நல்ல வேளையாக அப்படி எதுவும் இல்லாமல்.. வக்கீல் கதையாக இதனை மாற்றியமைத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

சின்ன ஒன் லைன்தான்.. ஈகோ.. அதுவம் காதலர்களுக்கும் இருக்கும் ஈகோ. தங்களது காதலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு வக்கீல்களின் கதையுடன் அதிகம் நகைச்சுவை கலந்த ஒரு கிராமத்துக் கதையையும், ஒரு அதிரடியான போலீஸ் என்கவுண்ட்டர் கதையையும் இணைத்து அனைத்திற்கும் சம அளவிலான பங்களிப்பு கொடுத்து திரைக்கதை அமைத்து ஜெயிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்.
வக்கீல்களான ஹீரோ விஜய் ஆண்ட்டனியும், ஹீரோயின் சுஷ்மா ராஜும் அலுவலகம் வைக்க இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். புரோக்கர்களின் கமிஷன் ஆசையால் இருவரும் வக்கீல்கள்தான் என்பது தெரியாமலேயே வீட்டிற்குள் அலுவலகம் அமைத்து விடுகிறார்கள். உண்மை தெரிந்த பின்பு சங்கடத்துடன் சர்ச்சைகள் வெடிக்கிறது. இருவருமே ஒருவரையொருவர் வெளியேறச் சொல்ல.. அது முடியாமல் போகிறது.
தங்களுக்குள் ஒரு போட்டி வைத்துக் கொள்கிறார்கள். யாருக்கு முதலில் கேஸ் கிடைக்கிறதோ அவர்கள் இங்கேயே இருக்கலாம். கேஸ் கிடைக்காதவர்கள் வெளியேறலாம் என்பதுதான் உடன்படிக்கை. ஆனால் இருவருக்குமே ஒரே சமயத்தில் கேஸ் கிடைத்துவிட.. இருவரும் அங்கேயே இருக்க வேண்டிய சூழல்..
இருவருமே ஒருவரையொருவர் எதிர்த்து வழக்காட வேண்டிய கட்டாயம்.. இடையில் இருவருக்குமிடையேயான காதலும், கத்திரிக்காயும் வெளியில் வர உடன்படிக்கையை மறந்து போகிறார்கள். கேஸை முடிக்க நினைத்த இவர்கள் கேஸே, ஒரு போலீஸ் என்கவுண்ட்டரை படம் பிடித்த வீடியோ சிடியினால் சிக்கலாகிறது..
இதில் இருந்து இவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள்..? இவர்களது காதல் ஜெயித்ததா..?  கேஸ் என்ன ஆனது என்பதையெல்லாம் இந்த இரண்டரை மணி நேர படத்தைப் பார்த்து சிரித்தபடியே தெரிந்து கொள்ளுங்கள்..!
கதை எங்கே இருக்கு என்றவர்களும், திரைக்கதையில் காமெடியை எப்படி கொண்டு வருவது என்கிற சந்தேகம் உள்ளவர்களும் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம்..! முதற்பாதியில் கொஞ்சமாக இருக்கும் நகைச்சுவை, இரண்டாம் பாதியில் தலைவிரித்தாடுகிறது. கிளைமாக்ஸில் ரணகளம் என்றே சொல்ல வேண்டும்.. திரைக்கதையைவிடவும் நடிகர்களின் நடிப்பும், இயக்கமும் அந்த அளவுக்கு சிறப்பாக இருந்ததுதான் காரணம்..!
ஹீரோ விஜய் ஆண்ட்டனிக்கு இது வித்தியாசமான வேடம்தான். முந்தைய படங்களில் அவர் காட்டியிருந்த இறுக்கமெல்லாம் இந்தப் படத்திற்குத் தேவையே இல்லாமல் போய்விட்டது. ரொம்பச் சாதாரணமாக வந்து சென்றாலே போதுமென்ற கேரக்டர்.. ஹீரோயினுடன் மல்லுக்கு நின்று தன் ஈகோவை விட்டுக் கொடுக்காமல் மோதுகின்ற காட்சிகளிலெல்லாம் கொஞ்சமேனும் நடிப்பைக் காட்டியிருந்தாலும் அதுதான் அவரது இயல்பான குணம் என்பதால் இவருக்கு மிக எளிதாகிவிட்டது..! டயலாக் டெலிவரியில் காமெடியின் உச்சம் தொட்ட நடிகர்களிடத்தில் ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். அதிலும் சீரியல் ஆக்டர் ஜெகனுடன் மல்லுக்கட்டி நின்று காமெடி செய்திருக்கிறார்.  வெல்டன் ஸார்..!
ஹீரோயின் சுஷ்மாராஜ். பார்ப்பதற்கு அனுஷ்காவுக்கு தங்கச்சி போலவே இருக்கிறார். தமிழுக்கு மட்டுமே புதுமுகம் என்றாலும் தெலுங்கில் சில படங்களில் நடித்திருப்பதால் நடிப்பில் குறையில்லை. கவர்ச்சிக்கு வழியில்லை என்றாலும் ஸ்கிரீனில் வரும்போது அழகாகவே இருக்கிறார். நடன அசைவுகளில் அனுஷ்கா ஸ்டைல் தெரிகிறது.. நடிப்பிலும் சோபிக்கிறார்.  தயாரிப்பாளர்கள் அனுக்கிரஹத்தால் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் நல்லதுதான்..!
இவர்களையும்விட படத்தில் அதிகம் பாராட்டைப் பெறுபவர்கள் பசுபதியும், எம்.எஸ்.பாஸ்கரும்தான். பசுபதி தன்னுடைய உடல் மொழியாலேயே நகைச்சுவையை சிதறடித்திருக்கிறார். கூடவே குபீர் சிரிப்பிற்காகவே இறக்குமதி செய்யப்பட்ட வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் கச்சிதமான இடங்களில் டெலிவரி செய்திருப்பதால் பசுபதியின் நடிப்பு அதிகமாகவே கவருகிறது. அலட்சியமாக “ஓட விட்டு வெட்டுவேனான்னு சந்தேகமா கேட்டீங்கள்ல.. இப்ப பாருங்க..” என்று சொல்லிவிட்டு வம்புச் சண்டைக்கு இழுத்துச் சென்று காட்டுதில் வன்முறையையும் மீறி சிரிக்க வைத்திருக்கிறார்.
எதற்கெடுத்தாலும் ஆத்தாவிடம் அனுமதி கேட்கும் எம்.எஸ்.பாஸ்கரும், அவரது ஜோஸியக்காரர் மனோபாலாவும் செய்யும் சேட்டைகள் தனி. இவர்களது அலப்பறைக்கு இவர்களது முட்டாள் அடியாட்களும் போடும் ஜே கோஷமும் தியேட்டரில் பட்டையைக் கிளப்புகிறது. கோர்ட்டில் தன்னுடைய வம்சத்தின் பூர்வாசிரமத்தை எம்.எஸ்.பாஸ்கர் அள்ளிவிடும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
இதைவிட.. வக்கீல் தம்பதிகள் கல்யாணமான பின்பும், பசுபதியும், எம்.எஸ்.பாஸ்கரும் சம்பந்திகளான பின்பும் அடுத்த 25 வருடங்களுக்கு வழக்கினை தள்ளிக் கொண்டே வரும் படத்தின் இறுதிக் காட்சிகளும் சுவையானவை. ரகளையானவை.. !
ஜெகனின் ஸ்பீடு வசனங்கள் படத்திற்கு ஸ்பீடு கொடுத்திருக்கின்றன. இதேபோல காளி வெங்கட்டின் அப்பாவித்தனமான காபி சீன் படத்திலேயே மிகப் பெரிய கைதட்டலை அள்ளிக் கொடுக்கிறது கிளைமாக்ஸில்…! கிளைமாக்ஸ் காட்சியில் இத்தனை ஆர்ட்டிஸ்டுகளை வைத்தும் நகைச்சுவையாக திரைக்கதை அமைத்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர்.
தீனா தேவராஜன் இசையமைத்திருக்கிறார். ‘ஒரு பெண்ணை பார்த்தேன் மாமா’, ‘பல கோடி பெண்களிலே’, ‘வாடி குட்டி லேடி’ என்று பலவித டைப்புகளில் பாடல்களை உருமாற்றியிருக்கிறார்கள். பாடலும், ஆட்டமும் படு ஜோர்.. ஆற்றங்கரையில் ஆடும் ஆட்டத்திற்கும், அந்தத் சிச்சுவேஷனுக்கான பொருட்களை அமைத்துக் கொடுத்த கலை இயக்குநருக்கும் ஒரு ஷொட்டு..! இதேபோல் ஒளிப்பதிவாளர் ஓமின் காட்சிப்படுத்தலுக்கும், எடிட்டர் தியாகராஜனின் கிளைமாக்ஸ் காட்சியின் கத்தரி வேலைக்கும் நமது  பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.
பொதுவாக திரைப்படங்களில் அரசியல்வியாதிகளை எப்படி வேண்டுமானாலும் திட்டுவார்கள். அதிகாரிகளை, அதிலும் குறிப்பாக போலீஸாரைக்கூட குறிப்பிட்டே திட்டுவார்கள். அஞ்ச மாட்டார்கள் நமது இயக்குநர்கள். ஆனால் வழக்கறிஞர்களை பற்றி மட்டும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் பயம்..
ஆனால் இந்த இயக்குநர் ஆனந்த், தனது முதல் படத்திலேயே வழக்கறிஞர்களை மையமாக வைத்து எடுத்து, அதிலும் இப்போதைய காலக்கட்டத்தில் வழக்கறிஞர்கள் கேஸ் பிடிக்க எப்படி அலையோ அலை என்று அலைகிறார்கள் என்பதைக்கூட நகைச்சுவையாக சொல்லியிருக்கும் தைரியத்திற்காக நமது சல்யூட்..!
குடும்பத்துடன் பார்ப்பதற்கு தகுதியான படம் என்று சொல்ல ஒரு வார இடைவெளிக்குள் மீண்டும் ஒரு படம் வந்திருக்கிறது. சம்மர் லீவுக்கு ஏற்றது இந்த இந்தியா-பாகிஸ்தான் திரைப்படம். மிஸ் பண்ணிராதீங்க..!

உத்தமவில்லன் - சினிமா விமர்சனம்

02-05-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அண்ணன் கமல்ஹாசன் ஒரு திரைப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார் என்று பொத்தாம் பொதுவாக எழுத முடியுமா என்ன..? நடிப்பை மட்டும் விட்டுவிட்டு கதைக்களத்தை ஆய்வு செய்தாலே விமர்சனங்கள் தீயாய் பறக்கும். இந்தப் படமும் அதைத்தான் செய்யச் சொல்கிறது.

‘சாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாள் நரமாகிவிடும்’ என்பார்கள். ஆனால் இப்போது நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களுக்கு நாள் தெரியாவிட்டாலும் மாதங்கள், வருடங்கள் மட்டும் தெளிவாகச் சொல்லப்பட்டுவிடுகிறது.
‘சாவு’ என்கிற ஒரு வார்த்தையின் அர்த்தத்தை மனிதன் உணராமல் தான் என்ற அகந்தையுடன் ஆடிய ஆட்டத்தையெல்லாம் பார்த்துதான் நாகரிகம் வளர வளர.. வசதி, வாய்ப்புகளும், தொழில் நுட்பமும், விஞ்ஞானமும் வளர வளர, புது புது வியாதிகளை கொடுத்துக் கொண்டேயிருக்கிறான் ஆண்டவன்.
எந்த வியாதி வந்தாலும் அதைத் தீர்ப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் இதே மண்ணில் இருந்தே தேடி எடுக்கிறார்கள் மனிதர்கள். ஆனாலும் நோய்கள் குறைந்தபாடில்லை. சிகிச்சை முறைகளும் அதிகமாகிக் கொண்டேதான் செல்கின்றன.
சில சமயங்களில் சாவுகூட நல்லதுதான் என்பார்கள். இதனால் சில குடும்பங்கள் பிரியலாம். பல குடும்பங்கள் ஒன்று சேரலாம். இதில் ஏதோ ஒன்று அந்தக் குடும்பத்தில் நிகழும் என்பார்கள் நம் முன்னோர்கள்.
இப்போதைய கம்ப்யூட்டர் யுகத்தில் நோயின் பிடியில் சிக்கி மரணத்திற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள் உயிர் போவதற்குள் குடும்பம் ஒன்றாக வேண்டும்.. குடும்பத்திற்கு பிரச்சினையில்லாமல் பணத்தை சேர்த்துவைக்க வேண்டும்.. செய்ய வேண்டிய கடமைகளைச் முடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். பலரும் இதைச் செய்துவிட்டுத்தான் நிரந்தரமாக கண்ணை மூடுகிறார்கள்.
அப்படியொருவனுக்கு திடீரென்று சாவின் நாள் தெரிந்துவிட்டால் அடுத்து அவன் என்ன செய்வான்..? என்ன செய்ய நினைக்கிறான்..? என்பதைத்தான் தனது மனோரஞ்சன் கேரக்டர் மூலமாக தமிழ்ச் சமூகத்திற்கு சொல்லியிருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.
‘உலக நாயகன்’ மனோரஞ்சன் திரையுலகில் முன்னணி ஹீரோ. ரசிகர்களின் ஆர்ப்பரிக்கும் கைதட்டல்களை வாங்கக் கூடிய ஹீரோ. ‘மார்க்கதரிசி’ என்ற தீர்க்கதரிசியான கே.பாலசந்தரின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானவர். ஆனால் இப்போது அவருடன் தொடர்பில்லாமல் இருக்கிறார்.
மனோரஞ்சன் இப்போது பெரும்பாலும் தன்னுடைய மாமனாரான பூர்ணசந்திரராவின் சொந்தப் படங்களிலேயே நடத்தி வருகிறார். பி.பி. நோயாளியான மனைவி.. வாய்ப்புக் கிடைத்தால் ரொமான்ஸில் சடுகுடு விளையாட தயாராக இருக்கும் இள வயது மகன்.. இவர்களுடன் மாமனாரும், மாமியாரும்.. ஒரு கூட்டுக் குடும்பமாகவே வாழ்கிறார்கள். இதில்லாமல் மனோரஞ்சனுக்கு அவரது பிரத்யேக மருத்துவரான அர்ப்பணா என்னும் ஆண்ட்ரியாவுடனும் இல்லீகல் தொடர்பு இருக்கிறது.
மனோரஞ்சனுக்கு இந்தக் கட்டத்தில் தலைவலி வந்து உயிரையெடுக்கிறது.. அவ்வப்போது மயக்கம் போட்டு விழுகிறார். சி.டி. ஸ்கேன் செய்ய பல முறை அழைத்தபோதும் வர மறுக்கிறார். தன்னை எதுவும், எதுவும் செய்ய முடியாது என்கிற தீர்க்கமான நம்பிக்கையில் இருக்கிறார்.
இந்த நேரத்தில் அவரது முதல் காதலியான யாமினியின் கணவரான ஜெயராம் கமலை சந்தித்து அவருக்கும் “யாமினிக்கும் பிறந்த மகளான மனோன்மணி உயிருடன் இருப்பதாகவும், அவள் அவரை பார்க்க விரும்பாமல் இருந்தாலும் யாமினியின் விருப்பப்படி அவளை உங்களிடத்தில் காட்ட வேண்டியது என்னுடைய கடமை..” என்கிறார்.
தன்னைச் சந்திக்க விருப்பமேயில்லாத மகளை மிகவும் விரும்பிச் சந்திக்கிறார் கமல். தன் முகத்தை பார்க்கக்கூட விரும்பாத மகளை நினைத்து வருத்தத்தில் இருக்கும் சூழலில் திரும்பவும் மயக்கம் வருகிறது கமலுக்கு. இந்த முறை ஸ்கேன் செய்தே தீர வேண்டிய நிலைமை. விதி தனது கோரப்பல்லைக் காட்ட கமலின் வாழ்க்கை இன்னும் சில மாதங்களே என்பது தெரிகிறது. மூளையில் கேன்ஸர் என்று தெரிந்து முதல்முறையாக பயப்படுகிறார். அதிர்ச்சியாகிறார்.
தன்னுடைய வாழ்க்கையை அன்றைய தினத்தில் இருந்து நெறிமுறைப்படுத்த விரும்புகிறார். தான் முதலில் சந்திக்க விரும்பும் நபராக தன்னைத் திரையுலகத்தில் அறிமுகப்படுத்திய குருவையே தேர்ந்தெடுக்கிறார். கே.பி.யை சந்திக்கிறார் கமல்ஹாசன். தான் அவருடைய படத்தில் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார் கமல்.
ஏற்கெனவே அவருடைய மாமனாரால் அசிங்கப்பட்டு ஒதுங்கியிருக்கும் கே.பி. இதற்கு மறுக்கிறார். பின்பு “கதை இல்லையேடா..? என்கிறார். “நீ இருக்குற லெவலுக்கு நான் எப்படிடா கதை பண்றது..?” என்கிறார். இந்த நேரத்தில் ஆண்ட்ரியாவையும் அழைத்து தன்னுடைய உடல் நலன் பற்றிய உண்மையைச் சொல்ல வைக்கிறார் கமல். அதிர்கிறார் கே.பி. பதறுகிறார். நம்ப முடியாமல் திணறுகிறார். உண்மை உணர்ந்து ஏதாவது செய்ய வேண்டுமே என்று துடிக்கிறார்.
“கதைதானே வேண்டும். நான் தருகிறேன்.. நல்ல காமெடி சப்ஜெக்ட்.. நீங்க ஒத்துக்கணும்..” என்று சொல்லி ஒரு கதையைச் சொல்ல கே.பி. ஓகே சொல்கிறார். இது தெரிந்த கமலின் மாமனாரும், மனைவியும் கோபித்துக் கொண்டு தனிக்குடித்தனம் செல்கிறார்கள்.
படத்தின் ஷூட்டிங் துவங்குகிறது.. ஒரு கட்டம்வரையில் படம் வளர்ந்தவுடன் கமல் தனியாக இருப்பதை அறிந்த கே.பி. தனது பிடிவாதத்தையும் விட்டுவிட்டு கமலின் குடும்பத்தாரிடம் அது பற்றி பேசி உண்மையை உணர வைக்க வருகிறார். குடும்பங்கள் ஒன்று சேர்கின்றன. கமலின் வாழ்க்கை போராட்டம் அவர்களுக்குத் தெரிய வர.. யாமினியின் மகள் உட்பட அனைவரும் கமலுக்காக ஏங்குகிறார்கள்.
படம் முடிவடையும் தருணத்தில் கமலை, நோய் தீவிரமாய்த் தாக்க மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவரது வருகைக்காக ஒட்டு மொத்தக் குடும்பமும், பட யூனிட்டும் காத்திருக்கிறது. மனோரஞ்சன் என்னும் கமல்ஹாசன் வருவாரா..? வந்தாரா..? என்பதுதான் கிளைமாக்ஸ்..!
இந்தச் சோகக் கதை நிறைய பார்த்ததுதான். படித்ததுதான்.. சாகும் நாள் தெரிந்தவுடன் ஒரு மனிதன் செய்யும் செயல் என்ன என்பதுதான் படத்திற்கான அடிப்படை. இந்த நிலையற்ற வாழ்க்கை என்ற உண்மையை மனிதன் தனது அந்திமக் காலத்தில்தான் அதிகமாக உணர்கிறான்.
இந்த மனோரஞ்சன் என்னும் கமல்ஹாசன் அதை உணரும்போது தான் முதலில் சந்திக்க விரும்புவதாக நினைப்பது தனது குருவைத்தான். இங்கே ஒரு கதாசிரியனாக, ஒரு நடிகனாக கமல்ஹாசன் தன்னுடைய உண்மையான மனதையே வெளிப்படுத்துகிறார். ஒரு உண்மை கலைஞன் இதைத்தான் விரும்புவான்.
தானும் கே.பி.யும் இணைந்து சாகாவரம் பெற்ற பல படங்களை கொடுத்திருப்பதால் தனது கடைசி படமும் நல்ல, சிறந்த படமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் நடிகன் மனோரஞ்சன். இது ஒரு நல்ல கலைஞனுக்கான மனது. அதனைச் செயல்படுத்தவும் செய்கிறார்.
திருமணத்திற்கு அப்பாற்பட்டு ஒரு தொடர்பு தனக்கு இருக்கிறது என்பதையும் உணர்ந்து அதை இந்தக் கலைஞன் தவறென்று சொல்லவே இல்லை. மாறாக தான் மரணத்தின் வாசலில் இருக்கும் சூழலிலும் அதனை விரும்பி கண்ணடித்துவிட்டுத்தான் சுவாசத்திற்குள் மூழ்குகிறார். ஆக.. கலைஞர்கள் இப்படித்தான். நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்.. ஒழுக்கம் என்பதெல்லாம் கலைஞர்களுக்கு அப்பாற்பட்ட, தேவையற்ற விஷயம் என்பதை இந்தப் படத்தின் மூலமாக அழுத்தம்திருத்தமாக அண்ணன் கமல்ஹாசன் நமக்கு இப்படி உணர்த்தியிருக்கிறார். புரிந்து கொள்வோமாக..!
தன்னுடைய உடல் நிலையை தானே முன் வந்து குடும்பத்தாரிடம் சொல்ல முடியாது என்பதால் கே.பி. மூலமாகச் சொல்ல வைக்கிறார் கமல். மயங்கி விழுந்து மருத்துவமனையில் இருக்கும் மனைவியின் இயலாமையை மிக இயல்பாக எதிர்கொள்கிறார்.
இதுநாள்வரையிலும் தனது மகனை பற்றிய கவலையில்லாமல்.. அவனே தன்னுடைய படத்தை ‘மொக்கை படம்’ என்று சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டு கண்டு கொள்ளாமல் போகும் மனநிலையில் இருப்பவர், வாழ்க்கையின் இறுதிக் கட்டம் என்றவுடன் மகனை கட்டியணைத்து “என்னவாகப் போற..? எப்படி படிக்கிற..?” என்று அக்கறையாக விசாரிக்கிறார்.
பக்கத்து வீட்டு காம்பவுண்டில் இருந்து எட்டிப் பார்த்து கையசைக்கும் ரசிகர்களை “எங்களை தனியா விடுங்கப்பா.. எங்களுக்கும் பிரைவசி வேணும்ப்பா..” என்கிறார்.
தன்னுடைய முதல் காதலி தன்னை விட்டுப் பிரிந்து போனதற்கு தன்னுடைய இத்தனையாண்டு கால மேனேஜரும் ஒரு காரணம் என்று தெரிந்தும் அவரை மன்னிக்கிறார். தன்னுடைய மகளிடம் அந்தக் கதையைச் சொல்லி தன் மீது தவறில்லை என்பதை நிரூபித்து மகளிடத்தில் அன்பை வாங்கிக் கொள்கிறார்..
எப்போதும் எதிர்த்து பேசும் குருவிடம் இப்போது தன்மையாகப் பேசி மாற்றுக் கருத்தை படத்தில் பதிவு செய்கிறார். பக்குவமாக, அதே சமயம் வேகமாகவும் நடந்து படத்தை முடித்துக் கொடுக்கிறார். இதுவரையிலும் எல்லாம் சரிதான்..!
தமிழ்த் திரையுலகம் எதிர்பார்க்காத கதைதான்.. திரைக்கதைதான்.. அமர்க்களமான நடிப்பு.. அசத்தலான ஒளிப்பதிவு.. சுவையான வசனங்கள்.. குற்றம், குறை சொல்ல முடியாத இயக்கம்.. இந்த ஒரு கதையே போதுமே இந்தப் படத்திற்கு..? எதற்கு இரண்டாவதாக ‘உத்தம வில்லன்’ என்ற கதை..?
முன் கதை முழுவதும் ஒருவித சோகம் அடர்பனியால் சூழ்ந்திருப்பதால் அதிலிருந்து ரசிகர்களை ரிலாக்ஸ் செய்ய கமல் எடுத்திருக்கும் கதைதான் இந்த சாகாவரம் பெற்ற உத்தம வில்லனின் கதை.
சாகப் போகும் மனோரஞ்சன், சாகாவரம் பெற்ற உத்தமனாக நடிப்பது எப்பேர்ப்பட்ட முரண்பாடு. இந்த முரண்பாடுகளை தான் உறுதியாய் நம்பும் கடவுள் மறுப்பு, பகுத்தறிவு என்னும் சில கொள்கைகளை வைத்து வலிந்து திணிக்கப்பட்ட ஒரு திரைக்கதையில் கொடுத்திருக்கிறார். இதற்கு ‘தெய்யம்’ என்னும் கேரளாவின் தெய்வீகக் கலையையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார் கமல்..!
தெய்யம் மரபு வழித்தோன்றலில் கூத்தாட்டம் ஆடும் உத்தமன் கமல்ஹாசனை முதலில் ஒரு பாம்பு கடிக்கிறது. இறப்பு சடங்குகளை முடித்து ஆற்றோடு விடுவதற்கு வசதியாக மூங்கிலில் கட்டி வைத்திருக்கும்போது முழிப்பு வருகிறது உத்தமனுக்கு.. இதைப் பார்த்து பயந்து ஓடுகிறார்களாம் சடங்கு செய்ய வந்த அந்தணர்கள்.
தன்னைக் கடிக்க வரும் முதலையிடமிருந்தும் தப்பித்து ஊருக்குள் வரும் உத்தமன், அந்தணர்களின் சாப்பாட்டு பந்தியில் சாப்பிடுவதற்காக அமர்கிறார். பேய்தான் வந்திருக்கிறது என்று நினைத்து அனைவரும் விலகி ஓட.. முந்தைய நாள் பாம்பு கடிக்க காரணமாக இருந்த பாம்பு பிடாரியே உலக்கையால், உத்தமனின் தலையைப் பொளக்க.. மறுபடியும் மயக்கமாகிறார் உத்தமன். 

இப்போதும் ஊர்க்காரர்களால் செத்துப் போனதாக நினைக்கப்பட்ட உத்தமன் பட்டென்று மறுபடியும் உயிர் பிழைக்கிறார். 'சாகாவரம் பெற்றவன் போலிருக்கானே..?' என்கிறார்கள் அந்தணர்கள். இந்தச் செய்தி அந்த ஊரின் கோட்டைவரைக்கும் காது வழியாகவும், வாய் வழியாகவும் பரவுகிறது. ஆக.. ஒரு மூடப் பழக்கத்தை.. பகுத்தறிவுக்கு ஒவ்வாததை அந்தணர்கள்தான் பரப்புகிறார்கள் என்பதை மறைமுகமாக ஊருக்கும், உலகத்துக்கும் சொல்கிறார் திரைக்கதையாசிரியர் கமல்ஹாசன்.
அதே நேரம் அந்த ஊர் ராஜாவை தந்திரமாக கொலை செய்துவிட்டு ஆட்சியைப் பிடிக்கிறார் மந்திரியான முத்தரசன் என்ற நாசர். இறந்து போன ராஜாவின் மகளான கற்பகவல்லி என்னும் பூஜாகுமாரை அடைய நினைக்கிறார் நாசர். பூஜாவோ, அந்த மல்லுக்கட்டலில் நாசரின் ஒரு பக்கக் காதைக் கடித்துக் குதறி துப்பிவிடுகிறார்.  இதன் பின் பூஜாவைச் சிறைப்படுத்திவிட்டு ஒற்றைக் காதுடனே நாட்டையே நிர்வகித்து வருகிறார் நாசர்.
இவருக்கும் சாகாவரம் பெற்ற உத்தமன் பற்றி தகவல் கிடைக்க.. அவரை இழுத்து வரச் செய்கிறார். சில, பல காமெடி காட்சிகளுக்குப் பின் உத்தமனின் சாகாவரம் நாசருக்கு உண்மையென்று தெரிய.. உத்தமனை அருகில் வைத்துக் கொள்ள விரும்புகிறார்.
ஆனால் பூஜாகுமார் தான் பைத்தியம் போல் நடித்து நாசரிடம் இருந்து தப்பித்திருப்பதை உத்தமனிடம் சொல்ல.. நாசரை கொல்ல… நல்ல மந்திரியான ஞானசம்பந்தனும் இவர்களும் சேர்ந்து கொள்ள ஒரு திட்டம் தீட்டுகிறார்கள்.
ஹிரண்ய கசிபுவின் நாடகத்தை நடத்துகிறார் உத்தமன். அதில் நாசரையும் நடிக்க வைத்து.. உடன் பூஜாகுமாரையும் நடிக்க வைத்து கதையை திருப்பிப் போட்டிருக்கிறார் திரைக்கதை ஆசிரியரான கமல்ஹாசன். நரசிம்ம அவதாரமாக வெளிவரும் நாசரை ஹிரண்ய கசிபுவும், அவரது மகன் பிரகலாதனும் சேர்ந்தே கொல்கிறார்கள். (!!!)
இந்த ஒரு காட்சியோடு நடிகர் மனோரஞ்சன் மயங்கி விழுக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். எடுத்தவரைக்குமான காட்சிகளை எடிட் செய்து அதை மருத்துவமனையில் காத்திருக்கும் மனோரஞ்சனின் உறவினர்களிடத்தில் போட்டுக் காட்டுகிறார் இயக்குநர் மார்க்கதரிசி..! இப்படியாக படத்திற்குள் படமாக வரும் ஒரு கதையும் முடிவுக்கு வருகிறது..!
ஒரு சோகக் கதையின் உள்ளூடாக இன்னொரு சோகக் கதையும் இருத்தலாகாது என்று யார் சொன்னது..? சொல்பவரும், நடிப்பவரும் கமல்ஹாசனாக இருந்தால் சாத்தியமாகியிருக்கும். ஆனால் இந்த கமல்ஹாசன் வழக்கம்போல தனக்கு தெரிந்தவைகள், தன்னுடைய கொள்கைகள் அனைத்தையுமே குண்டா சட்டியில் போட்டு அரைத்து நமக்குக் கொடுத்திருக்கிறார்.
இது சுவையான துவையலாக இருந்திருந்தால் ரசித்திருக்கலாம். ஆனால் பாதி நகைச்சுவையாகவும், மீதி எடுக்கப்பட்ட விதமே நகைச்சுவையாகவும் இருப்பதால் கொஞ்சம், கொஞ்சம் தேக்க நிலை படத்தின் பிற்பாதியில் ஏற்பட்டிருக்கிறது..!
காதைக் கடித்து துப்புவது.. புலியைப் பார்த்து தப்பிப்பது.. கட்டி வைக்கப்பட்டிருக்கும் பூஜா குமாரிடம் அறிமுகமாகி பின்பு புலியை வைத்து நாடகமாடுவது.. என்பதெல்லாம் சோர்ந்துபோக வைக்கும் அளவுக்கான திரைக்கதைகள்.. கமல்ஹாசனின் எந்த காவியத் திரைப்படத்திலும் பார்த்திராத அளவுக்கு கடைசி ஒரு வரியில் அந்த உத்தமன் கேரக்டரையே பொசுக்கென்று பக்கத்து நாட்டு ராஜாவாக்கியிருக்கிறார் கமல்ஹாசன். கிட்டத்தட்ட ‘தளபதி’ படத்தில் மணிரத்னம் கிளைமாக்ஸில் அடித்த அண்டர்பல்டி போல..!
பிராமணர்களை கிண்டல் செய்திருக்கும்விதம். மற்றும் அவர்கள் சாப்பிடும்விதத்தை இன்வளவு நெருக்கமாக காண்பிக்க வேண்டுமா என்ன..? அந்தக் காலத்தில் பேயாய் வருகிறானே என்று நம்பும் அளவுக்கா மக்கள் முட்டாள்களாக இருந்திருக்கிறார்கள்...? இந்த அரசனையும் முட்டாளாக்கி உத்தமனின் கதை முழுவதுமே முட்டாள்தனமான கதையாகத்தான் தோன்றுகிறது..
இதில் எதற்கு ஹிரண்ய கசிபுவின் கதை..? ‘தெய்யம்’ ஆட்டம் வழி வழியாக வந்திருக்கும் தெய்வீக நடனம்.  அது ஒரு போதும் நாத்திகத்தை பரப்புரை செய்வதில்லை.. நடிகர் கமல்ஹாசன் என்னும் தெய்வீகக் கலைஞருக்கு தெய்யமும் அத்துப்படி என்பதைக் காட்டுவதற்காகவே இது இடைச்செருகலாக திணிக்கப்பட்டதோ என்று சந்தேகம் வருகிறது.
இந்த தெய்யம் ஸ்டில்ஸ் வெளியானபோது இருந்த பரபரப்பை இரு தரப்பினருமே எதிர்பார்த்தார்கள். மேக்கப் போடுவதற்கே 5 மணி நேரங்கள் ஆகும். வாயை திறக்கவே முடியாது. ஸ்டிரா வைத்துதான் ஜூஸ் குடித்தார் கமல்ஹாசன். 2 மணி நேரம் படுத்தபடியேதான் இருந்தால்தான் இந்த மேக்கப்பை போட முடியும் என்றெல்லாம் ஏகத்திற்கும் ஏற்றப்பட்ட இந்த ‘தெய்யம்’ மேக்கப்பிற்கு படத்தின் முடிவில் கிடைத்திருக்கும் பாராட்டு என்ன..?
படத்தில் இந்தக் காட்சிகள் வரும்போதெல்லாம் நம் கண்கள் திரையைவிட்டு அகலவில்லை என்பது உண்மைதான். ஆனால், யார், யார் எந்த மேக்கப்பில் இருக்கிறார்கள் என்பதை கண்டறியே சில குளோஸப் காட்சிகள் தேவைப்பட்டன. அதை உணர்வதற்குள்ளாக வசனக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் தொடங்க.. பட்டென்று தொடர்புகள் அறுந்து போயின.
மீண்டும் மேக்கப்புகள் மாறி ஹிரண்ய கசிபு மற்றும் நரசிம்ம அவாதரம் மாறிய களக் கதை வந்தவுடன் அதில் வரும் காமெடி நடனம் மற்றும் பாடல் காட்சிகள், எறும்பு நாசரை கடிப்பது என்றெல்லாம் மிக வேகமாக நகர்ந்த காட்சிகளினால் அந்தத் ‘தெய்யம்’ கலையின் மேக்கப்பையும், அதன் நடன திறமையையும் கண்டறியும் பாக்கியம் நமக்குக் கிடைக்காமலேயே போய்விட்டது.
இதைத் தொடர்ந்து பட், பட்டென்று மாறிய அடுத்தடுத்த ஷூட்டிங் சம்பந்தமான  காட்சிகள் இந்த நடனக் கலையை நம் மனதில் நிறுத்தாமல் போயிருப்பதை நாம் இப்போது யாரிடம் போய் சொல்வது....? ‘விஸ்வரூப’த்தில் குறுக்கீடே இல்லாமல் ஆடிய அந்த ‘கதக்’ நடனமும், ‘சலங்கை ஒலி’ திரைப்படத்தில் விநாயகர் சிலை முன்பு தனித்து கமல்ஹாசன் ஆடியிருக்கும் நடனமும், இன்னமும் நம் மனக்கண்ணில் ஆடிக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அவரவர் கொள்கை அவரவர்க்கு.. ‘கடவுள் இல்லைன்னு சொல்லலை.. இருந்திருந்தால் நல்லாயிருக்குமேன்னுதான் சொன்னேன்..’ என்று பேசினாலே கடவுள் மறுப்புக் கொள்கை தீயாய் பரவும் என்று நினைத்தவர்தான் அண்ணன் கமல்ஹாசன். இதில் ஹிரண்ய கசிபுவின் கதையை தன்னுடைய கொள்கையைப் பரப்ப தோதான ஒரு விஷயமாக கையில் எடுத்திருக்கிறார்.
உண்மையான கதைப்படி நரசிம்ம அவதாரம்தான் ஹிரண்ய கசிபுவை காலி செய்கிறது. இதில் ஹிரண்ய கசிபுதான் நரசிம்ம அவதாரத்தை காலி செய்கிறது. நாசரை ஹிரண்ய கசிபுவாகவும், உத்தமனை நரசிம்ம அவதாரமாகவும் மாற்றி அமைத்திருந்தால் திரைக்கதையின்படி நியாயமானது. ஆனால் கமல் தன்னுடைய நாத்திகக் கொள்கையை பறை சாற்றவே சம்பந்தமே இல்லாமல் ஹிரண்ய கசிபுவே நரசிம்ம அவதாரத்தை கொல்வது போல மாற்றியிருப்பதை பார்த்தால், நிஜமாக ஹிரண்ய கசிபுவே இந்தத் திரைக்கதையை எழுதியிருப்பது போலத்தான் தோன்றுகிறது..!
இப்படி எத்தனை பாடுபட்டாலும் இந்த நாட்டு மக்களிடமிருந்து ஆத்திக உணர்வை அழிக்க முடியாது என்பதை அண்ணன் கமல்ஹாசன் உணர்ந்து கொள்ள வேண்டும். எத்தனை நரசிம்ம அவதாரங்கள் வேண்டுமானாலும் பிறவியெடுக்கட்டும்.. எத்தனை ஹிரண்ய கசிபுக்கள் வேண்டுமானாலும் தோன்றட்டும். ஆனால் பக்த பிரகலாதன்களை ஒருபோதும் இந்தியாவில் அழிக்க முடியாது..!
நடிகர் கமல்ஹாசனின் நடிப்பைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமேயில்லை. சாதாரணமான ‘சிங்காரவேலனி’லேயே நடிப்பைக் கொட்டியவர். இதில் சொல்ல தேவையே இல்லை..!
நடிப்பு என்பதே கலைஞர்களின் முகம் காட்டும் வித்தியாசமான உணர்ச்சிகளின் தொகுப்புதான். வருடக் கணக்காக பார்த்திருக்கிறோம்.. எந்தக் காட்சியில் எப்படி நடிப்பார் என்று.. அதில் சிறிதும் தவறவில்லை.. எதிலும் குறையும் வைக்கவில்லை..!
குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், ஆண்ட்ரியா அறையை விட்டு வெளியேறச் சொல்லும்போது ஒரு ஹம்மிங் வாய்ஸோடு சின்னப் பிள்ளை போல முத்தம் கேட்டு அடம் பிடிக்கும் அந்தக் காட்சியில் இப்போதைய இளம் ஹீரோக்களுக்கெல்லாம் சவால் விட்டிருக்கிறார் உலக நாயகன்.
ரொமான்ஸ் காட்சிகளில் தான் இன்னமும் கிங் என்பதை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா கமலுக்கு..? முதல் பாடலில் அவர் ஆடும் ஆட்டமெல்லாம் முணுமுணுக்க வைக்காத பாடலினால் வீணாகத்தான் இருக்கிறது. இந்த ஆட்டமெல்லாம் கமலுக்கு இந்த வயசுக்கு பின்பு தேவைதானா என்று ஒரு கூட்டம் கேட்கிறது.. அவர் காதில் விழுந்தால் சரிதான்..!
எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி கொடுப்பதை போல ஆண்ட்ரியாவிடமிருந்து முத்தம்.. தொடர்ந்து ரொமான்ஸ்.. இறுக்கியணைத்து உம்மா..  கிளைமாக்ஸில் மாக்ஸுக்குள் இருந்து முத்தம் கொடுப்பதும், கண்ணடிப்பதுமாக தன்னுடைய ரசிகர்களை கொஞ்சமாவது திருப்தி செய்திருக்கிறார் கமல். ‘வாவ்’ என்று நம்மையும் சொல்ல வைத்திருக்கிறார்.
தன்னுடைய குருநாதரான கே.பி.யிடம் எப்போதும் சாதாரணமாக அவர் பேசுகின்ற டயலாக்குகளையே இதில் பயன்படுத்தியிருக்கிறார். “ஒரு படம் மட்டும் நடிச்சுக்குறேன் ஸார்..” என்று கெஞ்சுகின்ற காட்சியும், கே.பி.க்கு உண்மை தெரிந்தவுடன் அதை கமல் புரிந்து கொண்டு கே.பி.க்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்கிற பதட்டத்தோடு பேசுகின்ற தொடர்ச்சியான வசனங்களும் டச்சிங், டச்சிங் சீன்ஸ்.
தன்னுடைய மகனுடன் கிரிக்கெட் பாலை கேட்ச் செய்து பேசியபிடியே தன்னுடைய நோயை அவனிடம் சொல்வது இன்னொரு டச்சிங் காட்சி. முதலில் கமலின் கை வலிக்கும் அளவுக்கு பந்தை வீசியெறியும் மகன், கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பீடை குறைத்து வீசிக் கொண்டே போய் கடைசியாக “கேன்ஸரா..?” என்று கேட்ட பின்பு, “ஆம்” என்ற பதிலைச் சொன்னவுடன் தலை குனிந்து ஓடும் மகனை விரட்டிப் பிடித்தபடியே கமல் பேசும் தொடர்ச்சியான அந்த காட்சிகள் ‘குணா’ படத்தின் ரவுண்டு டேபிள் காட்சிக்கு ஈடானது..! இந்தப் படத்திலிருந்து கமலின் பொக்கிஷமான காட்சிகளில் சேர்க்கப்படும் முதல் தரமான காட்சி இதுவாகத்தான் இருக்கும்..
30 வயது ஹீரோவாக கேன்ஸர் வந்து சாகப் போகும் நடிப்பையெல்லாம் ‘வாழ்வே மாயம்’ படத்திலேயே செய்து காட்டிவிட்டதால் இதில் அதிகமாக முக மொழியை வெளிப்படுத்தாமல் உடல் மொழியை வெளிப்படுத்தியே நடித்திருக்கிறார் கமல். தன்னுடைய மகளை பார்த்தவுடன் பதற்றத்தில் பேசும் உணர்ச்சிபூர்மான காட்சி.. யாமினிக்கு தான் எழுதிய கடித்த்தை மகளிடம் படிக்கக் கொடுத்துவிட்டு அவள் படிக்க படிக்க தன்னுடைய மேக்கப்பை கலைத்தபடியே பேசும் காட்சி... சில முகத்திற்குண்டான குளோஸப் காட்சிகளிலும் அதிகமாக நடித்திருப்பது அவருடைய கண்கள்தான். ஆனால் இதையே நடிப்பென்றால் எப்படி..? இந்தப் படமும் கமல்ஹாசனின் நடிப்புக்கு முழு தீனியை போடவில்லை.
ஆனால் மேக்கப் கலைக்கு ஒரு பிரமாதமான முன்னுதாரணத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் கமல். ‘தெய்யம்’ கலைஞ்ன் வேடத்தில் வரும் அந்த முகத்தில் தெரிவதே இரண்டு கண்கள்தான். அதை வைத்தே ஒளிப்பதிவாளரின் கண் ஓவியத்தில் நடிப்பை வரைந்திருக்கிறார் கமல். கடின உழைப்பு = கமல்ஹாசன் என்பதற்கு இந்தப் படத்தில் வரும் உத்தமன் கேரக்டரும் ஒரு உதாரணம்..!
மற்ற நகைச்சுவை படங்களில் நடித்த நடிப்பைத்தான் இதிலும் இந்த உத்தமன் வேடத்தில் காட்டியிருக்கிறார். பெரிதும் உதவியிருக்கும் வசனங்களினால் பல காட்சிகளில் சிரிப்பூட்டிய அதே சமயம், சில காட்சிகள் எரிச்சலையும் கொடுத்தன என்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டும்..!
குளோஸப் காட்சிகளைவிடவும் ‘காதலாம் கடவுள் முன்’ பாடல் காட்சியில் நாசரின் முன்பாக நடந்து சென்றபடியே கமல் காட்டும் நவரசங்களே ரசிக்கக் கூடியவையாக இருந்தது. கிரேஸி மோகன் டைப் வசனம் மூலமாக உத்தமன், கமல்ஹாசனை ரசிக்க முடிந்தாலும் அது அவ்வப்போது வெளியில் சென்று நிஜ உலகத்துக்குள் சற்று நேரம் பிரவேசித்துவிட்டு திரும்பவும் வந்து சேர்வதால் இரண்டுவித மன நிலையையும் நமது ரசிக மனப்பான்மைக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனால் அதிகம் ரசிக்க முடியாமல் போனது உத்தமனைத்தான்..! உத்தமன் தனியாகவே எடுக்கப்பட்டிருக்கலாம்..!
தன்னுடைய வாழ்க்கையின் முடிவில் மிகப் பெரிய ஒரு சாதனையை படைத்துவிட்டுப் போயிருக்கிறார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். தன்னுடைய சிஷ்யனுக்காக இந்தப் படத்தில் நடித்ததுகூட என்னவொரு பொருத்தம் பாருங்கள். சாகப் போகிற ஹீரோவை வைத்து படமெடுத்த இந்த இயக்குநர் உண்மையில் இறந்து போக.. ஹீரோவாக நடித்தவர் படத்தினை வெளியிட்டிருக்கிறார். என்னவொரு உண்மையான, அழகான முரண்பாடு பாருங்கள்..!
எப்போதும் கமலிடம் உரிமையாக பேசுவதைப் போலவே படம் முழுக்க பேசியிருக்கிறார் கே.பி. கே.பி.யின் இந்தப் பேச்சுகளுக்கு ஊடாக “போடா, வாடா” என்றும் “ராஸ்கல்..” என்றும், “உன்னை மிஞ்ச யாருடா இருக்கா…?” என்கிற டயலாக்குகளெல்லாம் விரவியிருப்பதை பார்த்தால் பெரிசு, சொந்தச் சரக்கையும் சேர்த்தே பேசியிருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது..!
கமலின் நோய் பற்றித் தெரிந்தவுடன் தன்னுடைய சேரில் அவரை உட்கார வைத்து பதட்டத்துடன் அவர் படும்பாடும்.. அதுவரையில் கமலின் மாமனாரின்பேரில் இருந்த ஈகோவினால் அவரைச் சந்திக்க மறுத்து வந்த அந்த குணத்தை நொடியில் மாற்றிக் கொண்டு தனது முதல் சிஷ்யன் என்கிற பதட்டமும் அவருக்குள் தொற்றிக் கொண்டதை மிக இயல்பாக படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். வெல்டன் ஸார்..
எப்போதும் சினிமாவுடனேயே வாழ்ந்து கொண்டிருந்த கே.பி.யை அச்சுப் பிசகாமல் காண்பிப்பதை போல மருத்துவமனைக்கு டிவிடி பிளேயருடன் வந்து கமல் நடித்த காட்சிகளை போட்டுக் காட்டுவதை போல திரைக்கதை அமைத்திருக்கும் கமலுக்கு ஒரு பூச்செண்டு..!
இவரை போலவே கோபத்தில் இருக்கும் பூர்ணசந்திரராவ் என்ற தயாரிப்பாளராக இயக்குநர் கே.விஸ்வநாத். கே.பி.யை கிண்டலோடு அழைத்து பேசத் துவங்கி.. கடைசியாக “இந்த வீடு என் பேர்லதான இருக்கு..?” என்று கமல் கேட்டவுடன் அமைதியாக வெளியேறும் தன்மையுடன் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் சிறப்பானது.. பாவம் அந்த ஒரிஜினல் தயாரிப்பாளரான பூர்ணசந்திரராவ்.. பல தமிழ், தெலுங்கு படங்களை தயாரித்த பெரிய தயாரிப்பாளர் அவர்.
சில காட்சிகளே வந்தாலும் தன்னுடைய படபட பேச்சிலும், பி.பி. குறையாத நோயாளியான தோற்றத்திலும் ஊர்வசி அசத்தியிருக்கிறார். யாருக்கு கட்டி என்று எம்.எஸ்.பாஸ்கரிடம் கேட்டுவிட்டு மாடியிறங்கி வந்து அழுகை முகத்துடன் கமலை பார்த்தபடியே தரையில் சரியும் ஊர்வசியின் நடிப்புக்கு ஒரு ஷொட்டு.
எம்.எஸ்.பாஸ்கருக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு மைல் கல்லுதான். ஆனால் உண்மையாக அவரை கண்ணீர்விட வைத்திருக்கிறார்கள்.. “எத்தனை வருஷமா கூடவே இருந்தேன்.. என்கிட்டகூட சொல்லாம மறைச்சுட்டாரே…?” என்கிற கோபத்தில் புலம்புவதும், யாமினியின் கடிதத்தை கமலிடம் கொடுக்காமல் மறைத்துவிட்ட பாவத்தைச் செய்துவிட்டு அழுவதும் அந்தக் காட்சியை கனமாக்கியிருக்கின்றன.
ஆண்ட்ரியாவைவிடவும் பூஜா குமாருக்கு அதிக ஸ்கோப்.. ஆடல், பாடலில் கமலுக்கு ஈடு கொடுத்திருக்கிறார் இந்த 37 வயதான நங்கை. கற்பகவள்ளியாக பவனி வரும் பூஜாவின் முத்துப்பல் வரிசை அழகைக் காட்டும்விதமான வசனக் காட்சிகளும், நடனத்தில் அம்மணி காட்டியிருக்கும் தாராளமான அம்சங்களும் இவரையும் போரடிக்காமல் பார்க்க வைத்திருக்கின்றன. ராகவா லாரன்ஸ் வியாதி கமலுக்கும் தொற்றிக் கொண்டதோ தெரியவில்லை.. புலியைப் பார்த்து பயந்து பூஜாவின் இடுப்பிலும் ஏறி அமர்ந்துவிட்டார் கமல். எப்படித்தான் தாங்கினாரோ தெரியலை..?
ஆண்ட்ரியா என்னும் அழகி இன்னொரு ரகம்.. இது போன்ற முகங்களுக்கு விஸ்வாமித்திரரே தப்ப முடியாது..! குடும்ப மருத்துவராக இருந்தாலும் ஒருவிதத் தொடர்பில் இருப்பதை கூச்சமே இல்லாமல் செய்வதும்.. முத்தம் கொடுத்து வாங்கி,.. ரொமான்ஸில் கமலுக்கு ஈடு கொடுத்திருக்கிறார்.. காரில் பயணிக்கும்போது “இங்க இருக்குற மூணு ஆம்பளைங்களும் இதை வெளில சொல்லக் கூடாது..” என்று சொல்லிவிட்டு, கமலஹாசனை இறுக்க அழைத்துக் கொள்ளும் அந்தக் காட்சிக்காக யாரும் அவரைக் கோபித்துக் கொள்ளப் போவதில்லை. அசத்தல் எக்ஸ்பிரஷன்..!
நாசர் எப்போதும் போலவே.. தன்னுடைய மகன் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோதும் இந்த நகைச்சுவை காட்சிகளில் வந்து நடித்திருக்கிறார். பிறவிக் கலைஞன். எப்படி முடிந்தது இவரால்..?
தொடர்ச்சியான காமெடி வசனங்களினாலும், டயலாக் டெலிவரியினாலும் சிரிக்க வைத்திருக்கிறார். ரசிக்க வைத்திருக்கிறார். ஒரு முட்டாள் அரசன் இப்படித்தான் இருப்பான் என்பதற்கு இந்தக் கேரக்டரும் ஒரு உதாரணமாகிவிட்டது..!
இன்னும் நிறைய நட்சத்திரங்கள் ஜெயராம், கு.ஞானசம்பந்தன், சித்ரா லட்சுமணன், வையாபுரி, அஜய் ரத்னம் ஆகியோர் இடையிடையே கிச்சு கிச்சு மூட்டுவதை போல வந்து சென்றிருக்கிறார்கள்.
இதில் தனித்திருப்பவர் கமலின் மகளாக வரும் பார்வதி மேனன். முதல் முறையாக அப்பாவை பார்க்க வந்து வெறுப்புடன் பேசும் காட்சியில் மலையாளப் பொண்ணுகள் சோடை போனதில்லை என்பதை நிருபித்துவிட்டார். அவருடைய கேரக்டரின் நியாயம் புரியும் அளவுக்கு அவருடைய முகத்தின் எக்ஸ்பிரஷன்களும் இருந்தன. கடைசியில் இவரும் திருந்திவிட்டார் என்பதை அதிவேக திரைக்கதையினால் நாமளே புரிந்து கொண்டு பார்க்க வேண்டியதாகிவிட்டது..!
ஷம்ஷத்தின் ஒளிப்பதிவு.. ஜிப்ரானின் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு மிகப் பெரிய பக்க பலம்தான்..! உண்மையில இளையராஜா இசையமைத்திருக்க வேண்டிய படம். ஏன் கமல் அதைச் செய்யவில்லை என்று தெரியவில்லை. பாடல்கள் அனைத்துமே வழக்கம்போல ஒரு முறை மட்டுமே கேட்பது போல இருந்தது.. தமிழ்ச் சினிமாவிற்கு பிடித்த சாபக்கேடாகிவிட்டது இது..!
கலை இயக்குநர் லால்குடி இளையராஜாவுக்கு ஒரு சபாஷ்.. உத்தமன் கதையில் அவருடைய கை வண்ணத்தில் ஊறு இல்லாமல் காட்சிகளை ரசிக்க முடிந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் எங்கே பிடித்தார்கள் லொகேஷனை என்று கேட்கவும் வைத்திருக்கிறார்கள்..! பூஜா குமாருக்கு அதிக டிரெஸ் கொடுக்காமல் பார்த்துக் கொண்டதற்கும், ஆண்ட்ரியாவுக்கு குறைத்துக் கொடுக்காமல் அப்படியே விட்டுவைத்ததற்காக காஸ்ட்யூம் டிஸைனர் கவுதமிக்கு நமது பாராட்டுக்கள்..!
படத்தின் பட்ஜெட் நிச்சயம் 40 கோடியை தாண்டியிருக்கலாம். அந்த அளவுக்கு உழைப்பும் படத்தில் இருக்கிறது..!  கமல் போன்ற நடிகரையெல்லாம் இயக்குவதென்பது கரும்புக் காட்டுக்குள் யானையை மேய்ப்பதற்கு சமம்.. இயக்குநர் ரமேஷ் அரவிந்தின் இயக்கத்தில் குறையில்லை. கமலை அறிமுகப்படுத்தும் முதல் காட்சியிலேயே இத்தனை கூட்டத்தைக் கூட்டி அதற்கு நடுவில் வரவழைத்து.. ஒரு ஹிப்பை உயர்த்தியிருக்கிறார். இயக்கத்தில் கமலின் கை வண்ணம் நிச்சயம் இருந்திருக்கும்.. இது போன்ற பெரிய நடிகர்களின் படங்களெனில் இயக்குநரின் தனித்திறமையைக் காண வேறொரு தனி படங்கள் அவசியம் தேவை.. இயக்குநர் ரமேஷ் அரவிந்திற்கு நமது பாராட்டுக்கள்..
ஒட்டு மொத்தமாக ஒரு திரைப்படம் தரும் ‘ஐயோ கொன்னுட்டாங்களே’ என்ற பீலிங்கை இந்தப் படம் இறுதியில் தராமல் ஏமாற்றியது நமது தவறல்ல..
ஆனாலும் இறுதிக் காட்சியில் வழக்கமான தமிழ்ச் சினிமாக்கள்போல ஒப்பாரி காட்சிகளெல்லாம் இல்லாமல் ஒரு சின்ன ஷாட் மூலமாகவே ‘அதை’ உணர்த்திவிட்டு மனோரஞ்சனை நம் மனதில் நிலை நிறுத்திய இயக்குநருக்கு நமது நன்றி..!
உலக நாயகன் கமல்ஹாசனின் படங்களில் தரமான படங்கள் லிஸ்ட்டில் இது நிச்சயம் இடம் பெறும் என்றாலும், எந்த வரிசையில் என்றால் சொல்ல முடியவில்லை..!