வாடா டேய்..! போடா டேய்..!! தப்பிச்சு போயிருங்கடா..!!!

29-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


'ஒச்சாயி' படம் பார்க்கப் போயி 'கெளரவர்கள்' படம் பார்த்த கதையை ஏற்கெனவே சொல்லியிருந்தேன்.  அன்றைக்கு தியேட்டரில் மாட்டுத்தாவணி படத்தின் போஸ்டரை அவசரம், அவசரமாக ஒட்டிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் அந்தப் படம்தான் அங்கே ரிலீஸ் என்றார்கள். சரி.. பார்த்திருவோம் என்று நினைத்து நேற்று போனேன். மறுபடியும் முருகனின் விளையாட்டு.. அந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லையாம். அதுக்குப் பதிலா என் கெரகம்.. 'வாடா' போட்டிருந்தார்கள். செகண்ட் ஷோ வேற.. வந்தது வந்தாச்சு.. பார்த்துத் தொலைவோம் என்று போயி உட்கார்ந்தேன்.

இந்த முறை தியேட்டரில் 12 பேர் இருந்தார்கள். பரவாயில்லை. கீழே தேவி கருமாரியில் 'எந்திரன்' படத்திற்கு 15 பேர் இருந்தார்கள். அதுக்கு இது பரவாயில்லையே..?

சுந்தர்.சி ஒழுங்காக இயக்கம் செய்து கொண்டிருந்த மனிதர். “ஓங்குதாங்கா நமீதாவுக்கு பாடிகார்டு மாதிரியிருக்கப்பா.. நீ கண்டிப்பா நடிக்கலாம்” என்று யாரோ தூபம் போட்டு நடிகர் சங்கத்தில் கார்டு வாங்கிக் கொடுத்துவிட்டார்கள். ஒரேயொரு படத்தைத் தவிர மற்ற படங்களெல்லாம் தோல்வியடைந்தாலும் இவருக்கு எப்படி அடுத்தடுத்த படங்கள் கிடைக்கின்ற என்பதெல்லாம் சி.பி.ஐ. விசாரணை போட்டு கண்டுபிடிக்க வேண்டிய விஷயம்.

இந்தப் படம் 2009 ஆகஸ்ட்டில் பூஜை போடப்பட்டு 2010 ஜனவரி பொங்கலில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. படத்தின் தயாரிப்பாளர் நடிகை ராதிகாவின் உடன் பிறந்த சகோதரர் எம்.ஆர்.மோகன்ராதா. ராடன் நிறுவனத்தில் பங்குதாரராகவும், இயக்குநர்களில் ஒருவராகவும் பணியாற்றி வந்த மோகன்ராதா 2008-ம் ஆண்டு ஏதோ ஒரு பிரச்சினையால் ராடனில் இருந்து வெளியேறினார்.

அதன் பின்பு நானும் சினிமா தொழிலில் ஈடுபடப் போகிறேன் என்பதைச் சொல்லாமல் சொல்லி இந்தப் படத்தைத் துவக்கினார். அவர் நேரம் சரியில்லையோ அல்லது நமது நேரம் சரியாயிருந்துச்சோ தெரியலை.. படத்தில் பல்வேறு சிக்கல்கள்.. பணப் பிரச்சினைகள்..

படத்தின் இயக்குநர் பெருமதிப்பிற்குரிய ஷங்கரின் சீடரான ஏ.வெங்கடேஷ். கமர்ஷியர் ஹிட் இயக்குநர்கள் லிஸ்ட்டில் ஹரிக்கு அடுத்த இடம் இவர்தான்.. ஆனால் ஷங்கரிடம் இருந்து வந்தவர் என்பதைத்தான் நம்ப முடியவில்லை.

உத்தர்காண்ட் மாநிலத்தில் இருக்கும் ரிஷிகேஷில் கதை நடப்பதாகச் சொல்லி மொத்த யூனிட்டையும் அங்கே தள்ளிக் கொண்டு போனதில் நாக்கு வெளியே தள்ளிவிட்டது மோகன்ராதாவுக்கு.

எதிர்பார்த்த இடங்களில் இருந்தெல்லாம் பண உதவிகள் கிடைக்காததால் சென்னையில் வைத்து பேட்ச் ஒர்க்ஸை கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து முடித்தார். முடித்தாலும் விதி விடவில்லை. சுந்தர்.சி ஸாருக்கு என்ன மார்க்கெட் இருக்கோ, அதுக்கேத்தாப்புலதான் விநியோகம் நடக்கும்ன்றது கடைசியாத்தான் தயாரிப்பாளருக்குத் தெரிஞ்சிருக்கு போலிருக்கு..

படத்தின் தயாரிப்புச் செலவுக்கு ஏற்றாற்போல் விநியோகம் செய்ய முடியாமல் தவித்துப் போனார். வேறு வழியில்லாமல் வந்தவரைக்கும் லாபம் என்ற நோக்கத்தில் படத்தைத் துவக்கத்திலேயே நஷ்டத்தில்தான் ரிலீஸ் செய்திருக்கிறார். இந்தக் கட்டப்பஞ்சாயத்தினால் ஒரு நாள் தாமதமாகவே படம் ரிலீஸ் ஆனதாக தியேட்டரில் சொன்னார்கள்.

படம் வெளியாகி மூன்று நாட்களாகியும் தனக்கு எந்தப் பாராட்டும் வராதது கண்டு மனம் வெதும்பிய நடிகர் விவேக் இது பற்றி பத்திரிகையாளர்களிடம் புலம்பித் தள்ள.. அந்த புலம்பலை மட்டும் மிகச் சரியாகப் போட்டுத் தாளித்துவிட்டார்கள் சினிமா பத்திரிகையாளர்கள்.

“சுருளிராஜன் மாதிரி உசிரைக் கொடுத்து நடிச்சிருக்கேன். ஒரு ரெஸ்பான்ஸும் இல்லையே..?” என்றார் விவேக். நடிச்சு என்ன புண்ணியம்..? ஆளே இல்லாத இடத்துல தனியா நாடகம் நடத்தி என்ன பயன்..? இப்படித்தான் ஆயிருக்கிறது விவேக்கின் நிலைமை..

படத்தில் விவேக்கின் முனைப்பும், பேச்சும், நடிப்பும் பாராட்டுக்குரியதுதான். சுருளிராஜனின் வாய்ஸ் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் செட்டாகாது.. அதோடு அவர் ஒவ்வொரு வார்த்தையையும் கொஞ்சம் இழுத்துவிட்டுத்தான் பேசுவார். அந்த ஸ்லாங்கை முடிந்த அளவுக்குப் பேசியிருக்கிறார் விவேக். இதற்காக டப்பிங்கில் அவர் என்ன பாடபட்டிருப்பார் என்பதை நினைக்கும்போது அவருக்கு ஒரு சல்யூட் வைக்கவும் தோன்றுகிறது. சல்யூட் ஸார்..

ஆனால் அவர் பேசிய டயலாக்குகள் சிலவற்றைக் கேட்டபோது பாவம் சுருளிராஜன் என்றும் சொல்லத் தோன்றுகிறது. இப்படியா டபுள் மீனிங்கை சிங்கிள் மீனிங் கணக்காகப் பேசுவது..? சுருளிராஜனும் பேசியிருக்கிறார். ஆனால் இவ்வளவு வெளிப்படையாக அல்ல.. இதற்காக விவேக் ஸாரை ஒரு குட்டு குட்டலாம்..

பழைய காலத்து கதை ஒன்றை,  ஜிகினா பேப்பர்களை வைத்து ஒட்ட வைத்து மேம்போக்காக எடுத்துக் கொடுத்திருக்கிறார் வெங்கடேஷ்.

கலெக்டரான சுந்தர்.சியின் கெடுபிடியான நடவடிக்கைகளால் வெறுத்துப் போன அமைச்சரும், பெரும் புள்ளி ஒருவரும், சுந்தரை சிக்கலில் மாட்டிவிட எண்ணி அந்த ஊருக்கு வரும் கவர்னரை ஆள் வைத்து சுட்டுக் கொன்று பழியை சுந்தர்.சி.யின் மீது தூக்கிப் போடுகிறார்கள். சுந்தர்.சி. போலீஸிடம் மாட்டாமல் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டி ரிஷிகேஷ் வருகிறார். அங்கே பலவிதப் போராட்டங்களுக்குப் பின்பு கடைசியில் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறாராம்..

ஒருவேளை இதுதான் சுந்தர்.சி.யின் கடைசி தமிழ்ப் படமாக இருக்குமோ என்னமோ? அப்படி நினைத்துத்தான் சுந்தர் நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

எந்திரன் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளைக்கூட சுட்டது என்று சொல்லும் அளவுக்கு தமிழ்ச் சினிமாவுலகம் மாறிவரும் சூழலில், இப்படியெல்லாம் படமெடுத்து அதனைத் தியேட்டருக்கு கொண்டு வரும் தைரியத்தை என்னவென்று பாராட்டுவது..?

இந்த நேரத்தில்தான் ஷங்கர் போன்றவர்களைப் பாராட்ட வேண்டும். எந்திரனைப் போல வருடத்திற்கு ஒரு படம் வந்தால் போதும். இதுமாதிரியான ஒன்றுமில்லாத திரைப்படங்களை மக்கள் புறக்கணித்து குப்பைக்கு அனுப்பி விடுவார்கள். அடுத்து வருபவர்கள் படமெடுக்கத் தயங்குவார்கள்.

ஏற்கெனவே சுந்தருக்கும், நடிப்பும் எட்டா தூரம். அவர் ஒரு நல்ல இயக்குநர். ஆனால் ஏன் அதற்குச் சோம்பேறித்தனப்பட்டு இப்படி கலர் கனவில் வாழ்ந்து வருகிறார் என்று தெரியவில்லை.

படத்தின் திரைக்கதையில் ஓரளவாவது நம்பகத் தன்மையோடு இருந்திருந்தால் கொஞ்சமாவது இது சினிமா என்றாவது நம்பலாம். வலது பக்க நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளது. இந்த நிலைமையிலும் சண்டை போட்டு தாவி, பறந்து சாயந்தரம் கெஸ்ட் ஹவுஸுக்கு வருவது வரையிலும் காட்சியை இழுத்துத் தொலைத்திருக்கிறார்கள்.

இதாவது பரவாயில்லை. கெளரவர்கள் படத்தின் கிளைமாக்ஸில் சத்யராஜ் தனது வலது பக்க தலையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்வார். துப்பாக்கியால் சுட்ட பின்பும் அடுத்து மூன்று நிமிடங்களுக்கு வசனம் பேசிவிட்டுத்தான் மண்டையைப் போடுகிறார் சத்யராஜ். இந்த இயக்குநர்களையெல்லாம் என்னவென்றுதான் சொல்வது..?

ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் என்னென்ன வேலைகள் செய்கிறார்கள் என்பது ஓரளவுக்கு நமக்குத் தெரியும். இதில் ஒரு டி.எஸ்.பி. செய்யக் கூடிய டகால்டி வேலைகளையெல்லாம் கலெக்டர் செய்கிறார் என்று நம் காதில் பூவைச் சுற்றியிருக்கிறார்கள்.

எந்த ஊர் கலெக்டர் இது மாதிரி அமைச்சர்களிடம தெனாவெட்டாகப் பேசுகிறார்? பையனைக் கடத்துறாராம்.. அமைச்சரை அலைய விடுகிறார். ஆஸ்பத்திரிக்கு போகச் சொல்கிறார். அங்கேயும் அமைச்சர் தன் பெயரை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் என்று நம்ப முடியாத காட்சிகளை வைத்திருந்தாலும் படத்திலேயே உருப்படியான ஒரேயொரு விஷயம் இந்த ஆஸ்பத்திரி சீன்தான்.

இது மாதிரி எல்லா அமைச்சர்களையும் ஒரு நாளைக்கு ஆஸ்பத்திரில அலையவிட்டா அப்புறம்தான் தெரியும் அவங்களுக்கு பொதுமக்களின் அவதி என்றால் என்னவென்று..?

ஓடுகிற பைக்கில் ஏறி நின்று கொண்டு நேருக்கு நேராக வரும் லாரிகளின் பெட்ரோல் டேங்கை குறி பார்த்து சுட்டுத் தள்ளி வெடிக்க வைத்துவிட்டு தான் மட்டும் தப்பிக்கும் அந்த டெக்னிக் போலீஸ்காரங்களுக்காச்சும் தெரிஞ்சிருக்குமான்றது சந்தேகம்தான்.

தஞ்சாவூர் அரண்மனைல போலீஸோட போய்தான் சுத்திப் பார்க்குறார்.. அங்க ஒருத்தன் வேவு பார்க்க வந்திருக்கான்னு தெரிஞ்சு, அவனை இவர் ஒருத்தர் மட்டுமே ஓடித் துரத்துறாரு.. சரி முடியலீல்ல. இப்படியொருத்தன் ஓடிட்டான்னு கூட வந்த டிஜிபிகிட்ட சொல்ல வேண்டாமா..? ம்ஹூம்.. சாப்ட்டா அடுத்த சீன்ல செக்யூரிட்டி பத்தி பேச ஆரம்பிச்சிட்டாருப்பா..

கிளைமாக்ஸ் சண்டைல ஒரு சாதாரண துண்டால பனை மரத்தையே தூக்கி வீசுற சீன் இருக்கு பாருங்க.. கொன்னுட்டாரு டைரக்டரு.. இது ஒண்ணுக்காகவே அவருக்கு பெஸ்ட் டைரக்டர்ன்னு அவார்டு கொடுக்கணும்..

வழக்கமா இது மாதிரி படத்துல எல்லாம் ஊறுகாய் ரேஞ்சுக்குத்தான் ஹீரோயின்கள் இருப்பாங்க. இதுலேயும் அதே மாதிரிதான். அம்மணி ஷெரில் பிண்டோவாம்.. எப்பவுமே தொப்புளுக்குக் கீழேயே விரல் சைஸுக்கு கேப் விட்டு, எப்ப வேண்ணாலும் அவிழலாம்ன்ற டேஞ்சர் லைட்லதான் பேண்ட் போட்டுக்கிட்டு ஊர் சுத்துறாங்க..

ஒருவேளை இயக்குநருக்கு அது ரொம்ப புடிச்சுப் போச்சு போலிருக்கு.. அந்தப் பொண்ணை வைச்சு எந்த அளவுக்கு காண்பிக்க முடியுமோ அத்தனையையும் காண்பிச்சிட்டாரு.. போதாக்குறைக்கு பொண்ணு துண்டைக் கட்டிக்கிட்டு குளிக்கப் போற சீன்ல சுந்தர் வந்து துண்டைப் பிடிக்கிற இடம் இருக்கே.. ம்ஹூம்.. நான் காட்சியைச் சொல்லலை. அவர் பிடிச்ச இடத்தைச் சொன்னேன்.. இந்த சென்சார் போர்டுக்காரனுங்க இதையெல்லாம் கண்டுக்க மாட்டானுக.. ஒருத்தன் வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி ஏதாவது குறும்படம் எடுத்திட்டு வந்தா மட்டும் ஆயிரத்தெட்டு நொட்டை, நொள்ளை சொல்லுவானுங்க..

இவுகளைத் தவிர்த்து பார்த்தா நடிச்சிக்கிறது மந்திரியா வர்ற ராஜ்கபூர். ஆஸ்பத்திரில அவர் அலர்ற சீன்ல இருந்த 12 பேருமே கொஞ்சம் சிரிச்சோம். அவ்ளோதான வந்துச்சு. மனிதருக்கு இயக்கம் போனாலும் நடிப்பு நல்லாவே வருது..

ரீமிக்ஸ் மன்னன் இமானின் பாட்டில் ஒரு நல்ல பாட்டை மறுபடியும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள். இந்த ரீமிக்ஸ் கலாச்சாரத்தை ஒழித்தால்தான் என்ன..? நம் முன்னோர்களுக்கு கொஞ்சமாவது மரியாதை செய்ய வேண்டாமா..? “என்னடி ராக்கம்மா” பாட்டை எவ்ளோ கெடுக்கணுமோ அவ்ளோ கெடுத்திட்டாரு.. இதுல “தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி நம்ம கதைல இருக்குதடி..” என்ற வரி வருமிடத்தில் குஷ்பூவே உடன் ஆடுகிறார்.. என்ன பொருத்தம் பாருங்க.. இவ்ளோ நல்லா யோசிச்சவரு.. கதைல ஏன் கோட்டை விட்டாருன்னு தெரியலையே..?

படத்தின் துவக்கத்தில் வரும் குத்துப் பாட்டுக்கு ஜெமினி கிரண் மாமி ஆடியிருக்கிறார். நல்லபடியா வந்திருக்க வேண்டியவர்.. இப்படி ஒத்தைப் பாடலுக்கு ஆடுற மாதிரியாகிப் போச்சு.. ஆனாலும் உடையைக் குறைக்க வேண்டி வந்தா கூச்சப்படாம செய்ற பொண்ணுங்கிறதால இப்படி ஆளுகளுக்கு எப்பவும் வேகன்ஸி உண்டுதாம்பா..

ரொம்ப நாள் கழிச்சு நம்ம மாயவரம், அபிஅப்பாவோட கண் கண்ட தெய்வம் காட்சி கொடுத்திருக்கு. அப்படியும் நாலு சீன்ல சிரிப்பு, நாலு சீன்ல அழுகைன்னு போயிருச்சு.. இருந்தாலும் அதே சிரிப்புதான். அபி அப்பா அவசியம் பாருங்க..

ஏதோ ரிஷிகேஷை காட்டுறாங்களே.. கொஞ்சம் சுற்றமும், புறமும் நல்லா காட்டுவாங்கன்னு பார்த்தா, கஷ்டமே படாம பட்டப் பகல்ல எல்லா சீனையும் எடுத்து முடிச்சிட்டு வந்துட்டாங்க போங்க.. ஒளிப்பதிவாளரை ஒண்ணும் சொல்றதுக்கில்லை..

வசனம் பட்டுக்கோட்டை பிரபாகராம்.. ரெண்டு, மூணு இடத்துல மட்டும் சூடேத்துற மாதிரி இருந்தது.. மத்தபடி பிரபாகர் ஸார் பக்காவான சினிமா எழுத்தாளரா மாறிட்டாருன்றது டபுள், டிரிபுள் மீனிங் டயலாக்குலேயே தெரியுது.. வாழ்க வளமுடன்..

இதுக்கு மேலேயும் படத்தைப் பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்லே..

மறுபடியும் டைட்டிலுக்கு வருவோம்..

"வாடா வாடான்னு கூப்பிட்டு போடா.. போயிருடான்னு வெறுப்பேத்தி தொரத்தி விட்டுட்டாங்க.."

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com. www.chennai365.com

40-வது ஆண்டு விழா - சர்ச்சையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்


27-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 
தனது பெருமைக்குரிய உறுப்பினர் 'செந்தமிழன்' சீமான் சிறைக் கொட்டடியில் வாடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தனது 40-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது.

சென்ற 23-ம் தேதியன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த விழா நிகழ்ச்சிகளின் பூரிப்பில் இயக்குநர்கள் திளைத்திருந்தாலும், பல மூத்தக் கலைஞர்களும், பல திரைப்படத் தொழிலாளர்களும் பெரும் அதிருப்திதான் அடைந்திருக்கிறார்கள்.

பொதுவாக சங்கத்தின் ஆண்டு விழா என்றாலே அச்சங்கத்தின் துவக்கத்திற்குக் காரணமானவர்களையும், மூத்தவர்களையும் மேடையேற்றி கெளரவப்படுத்துவதுதான் வாடிக்கை. அது சங்கத்திற்குப் பெருமையும்கூட. இதனைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் தனது விழாவினை சன் டிவி சொல்லிக் கொடுத்தது போலவே நடத்தி முடித்திருக்கிறார்கள் என்று பொருமுகிறார்கள் சில மூத்த இயக்குநர்கள்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் இல்லாததால் அதற்கான நிதியைத் திரட்டும் பொருட்டே இந்த விழாவை ஏற்பாடு செய்ததாக முன்பே தெரிவிக்கப்பட்டுவிட்டது.

ஒரு மாதத்திற்கு முன்பாக விழா பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் பாரதிராஜா, “சொந்தக் கட்டிடம் கட்டுவதற்காகத்தான் இந்த விழாவையே நடத்துகிறோம்..” என்று தெள்ளத் தெளிவாகத் தெரிவித்துவிட்டார். விழாவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யும் உரிமையை விற்பதன் மூலம்தான் அத்தொகை கிடைக்கும் என்பதால் முன்னணி சேனல்கள் இரண்டுமே இதற்காக போட்டியிட்டன.

ஆளும் கட்சி கோதாவில் களமிறங்கிய 'கலைஞர் டிவி' ஒன்றரை கோடியைத் தாண்டிப் பேசவே இல்லையாம். எப்படியும் தங்களுக்குத்தான் என்று நினைத்து கொஞ்சம் அலட்சியமாக அவர்கள் இருந்துவிட கிடைத்த கேப்பில் சன் டிவி ஒரே தவணையில் இரண்டே முக்கால் கோடி தருவதாகச் சொல்லி உரிமையைக் கைப்பற்றியது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதைக்கூட பத்திரிகைகள் முன்பாகவே நடத்தினார்கள்.

மிகப் பெரும் தொகை என்பதால் சன் டிவி சொல்லிக் கொடுத்தது போலவே நிகழ்ச்சிகளை வடிவமைத்திருந்தனர். இதில்தான் சங்க நிகழ்ச்சிகளெல்லாம் வடிகட்டப்பட்ட முக்கியமான மார்க்கெட்டிங் விதிமுறைகள் புகுத்தப்பட்டு கதை கந்திரலோகமானது என்கிறார்கள். காலை, மாலை நிகழ்ச்சிகள் இரண்டிலுமே சன்னின் தற்போதைய டார்கெட்டான 'எந்திரனின்' பாடல்கள் மற்றும் அது தொடர்பான ஆடல், பாடல் காட்சிகள் தவறாமல் இடம் பெற்றிருந்தது.

காலை நிகழ்ச்சிகளில் தமிழில் முக்கியமான இசையமைப்பாளர்களை வைத்து பாட்டுக் கச்சேரி லெவலுக்கு ஒன்றை நடத்தினார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் தனது பேவரிட் சில்க் ஜிப்பா உடையில் மேடையில் ரகளை செய்து கொண்டிருந்த கங்கை அமரன், 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே..' பாடல் தனது அம்மா பாடிய கும்மிப் பாட்டு ஒன்றின் காப்பி என்கிற உலக மகா உண்மையை போட்டுடைத்தார். 'சாமி வருகுது..' என்று துவங்கும் அந்தக் கும்மிப் பாட்டையும் பாடிக் காட்டினார் கங்கை அமரன். தொடர்ந்து அவர் பேசும்போது தனது உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் உரமேற்றி அஸ்திவாரமிட்டவர் பாரதிராஜாதான் என்று நன்றிக் கடன் செலுத்தினார். கூடவே அவர் இயக்கிய முதல் படமான 'கோழி கூவுது' படம் சிவாஜி நடித்த பழைய 'புதையல்' படத்தின் கதைதான் என்று சொன்னது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த விஷயம்.

அனுராதா ஸ்ரீராம் 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' என்ற அபூர்வ ராகங்கள் படப் பாடலை பாடினார். இதன் பின்பு 'தனக்கு மிகவும் பிடித்தமான பாடகி சமீபத்தில் மறைந்த சொர்ணலதா' என்று கூறி சொர்ணலதா பாடிய பாடல்களில் இருந்து சிலவற்றை பாடினார்.

வாலியையும், எம்.எஸ்.வி.யையும் மேடையேற்றி கெளரவப்படுத்தினார்கள். வாலி பேசும்போது “நான் எம்,எஸ்.வி.யை சந்திக்கின்றவரையிலும் சோத்துக்கே சிங்கியடித்ததேன். எம்.எஸ்.வி.யை சந்தித்த பின்பு சாப்பிடுவதற்கே நேரமில்லாமல் தவித்தேன்” என்றார். இதனை எம்.எஸ்.வி. மரியாதை பொருட்டு மறுத்தாலும், வாலி “அண்ணா.. அண்ணா..” என்று எம்.எஸ்.வி.யை அழைத்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

மேலும் வாலி பேசுகையில், “என்னதான் நல்ல பாடலை கவிஞன் எழுதிக் கொடுத்திருந்தாலும், எத்தனை சிறந்த இசையமைப்பில் அது பதிவாகியிருந்தாலும் ஒரு நல்ல இயக்குநர் அதை நல்லவிதமாகப் படமாக்கினால்தான் அந்தப் பாடல் வெற்றியடையும். இல்லையெனில் அது விழலுக்கு இறைத்த நீர்தான். இதை இன்றைய இயக்குநர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே...?” என்று சொல்லி வருத்தப்பட்டார்..

கேரள கலையுலகம் சார்பாக வந்திருந்த மெகா ஸ்டார் மம்முட்டி, முழுவதும் தமிழிலேயே பேசி ஆச்சரியப்படுத்தினார். “நானும் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறேன். என்னை இயக்கிய இயக்குநர்களில் அதிகம் ஆச்சரியப்படுத்தியவர் ஆர்.கே.செல்வமணிதான். இரவு, பகல் பாராமல் ஷூட்டிங்கை நடத்துவார். எப்போது தூங்குவார், எப்போது விழிப்பார் என்றெல்லாம் தெரியாமல் நான் ஆச்சரியத்துடன் அவரை பார்ப்பேன். அந்த அளவுக்கு அவர் ஒரு ஸ்பீடு இயக்குநர்” என்று பாராட்டிவிட்டுப் போனார்.

இந்தக் கலை நிகழ்ச்சியை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதனை நடிகர் நெப்போலியன் திறந்து வைத்தார். அந்தக் கண்காட்சியில் தமிழ்த் திரையுலகின் பல இயக்குநர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் மிகக் குறைவான அளவே புகைப்படங்கள் இருந்ததாலும், குறுகிய இடத்தில் செய்யப்பட்டிருந்ததும் பார்வையாளர்களுக்கு முழு திருப்தியை அளிக்கவில்லை.

நடிகர் நெப்போலியன் பேசும்போது, "தனது இன்றைய மத்திய இணை அமைச்சர் வரையிலான உயர்வுக்கு முழுக் காரணமே பாரதிராஜாதான். அவர் மட்டும் இல்லைன்னா நான் இந்த அளவுக்குக்கூட உயர்ந்திருக்க முடியாது" என்று குரு காணிக்கையைச் செலுத்தினார்.


நடிகை சரண்யா தான் திரையுலகில் அறிமுகமானவிதத்தைச் சொன்னபோது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. “முக்தா ஸார் எடுக்குற படத்துக்கு புதுமுகம் தேடுறாங்கன்னு சொன்னாங்க. எங்கப்பா என்னை முக்தா ஸார் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாரு. அப்போ அங்க ஒரு மூலைல மணிரத்னம் உக்காந்து ஒரு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருந்தாரு. அப்போ எனக்கு அவர்தான் மணிரத்னம்ன்றது சுத்தமா தெரியாது. முக்தா ஸார் வந்து 'இவர்தாம்மா டைரக்டர் மணிரத்னம்'னு சொன்னப்போ ரொம்ப ஷாக்காயிட்டேன். அப்புறம் அவர்கிட்ட, "ஸார் நான் உங்க பேன் ஸார்.. உங்க 'மெளனராகம்' படம் எனக்கு ரொம்பப் புடிச்ச படம் ஸார்"ன்னு சொன்னேன். நான் சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டிட்டு 'ஓகே' 'ஓகே'ன்னு சொன்னாரு.. என்னை எப்படியும் செலக்ட் பண்ண மாட்டாருன்னு நினைச்சேன். பட் செஞ்சுட்டாரு.. எனக்கு ரொம்ப ஆச்சரியந்தான்” என்றார்.

நடிகர் பிரபு பேசும்போது “நான் இதுவரைக்கும் 55 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருக்கேன். என்னதான் நான் நல்லா நடிச்சிருந்ததா நினைச்சிட்டிருந்தாலும் எனக்குள்ள இருக்குற திறமையை வெளிக்கொணர்ந்தது இயக்குநர்கள்தான். இது எனக்கு மட்டுமல்ல. என் அப்பாவுக்கும் பொருந்தும்” என்றார்.

நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார், தன் பங்குக்கு “உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்..” பாடலை பாடி அசத்தினார். ஆனால் அவரது மனைவியான நடிகை ராதிகா பேசிய பேச்சுதான் கொஞ்சம் ஓவராகிப் போனது காலை நிகழ்ச்சிகளுக்கே திருஷ்டிபட்டது போலானது.


தான் அழகாக இல்லாமல் இருந்தும் தன்னை பாரதிராஜா தேர்வு செய்தது தனக்கு மிகப் பெரிய அதிர்ச்சிதான் என்றவர், ஷூட்டிங்கின்போது “உனக்கெல்லாம் நடிப்பு சொல்லித் தரணும்ன்னு என் தலையெழுத்து..” என்று பாரதிராஜா புலம்பியதையும் சிரித்தபடியே சொன்னவிதத்தில் பாரதிராஜாவே நெளிந்துதான் போனார்.

மாலை நிகழ்ச்சிகளில் கே.பாலசந்தர், பாரதிராஜா இருவரைப் பற்றியும் இயக்குநர் வசந்த் எடுத்திருந்த டாக்குமெண்ட்ரிகளைத் தவிர வேறெந்த நிகழ்ச்சியும் இல்லாதது மிகப் பெரும் ஏமாற்றமே. இவர்களின் திரைப்படப் பாடல்களுக்கு நடிகர், நடிகைகள் நடனமாடினார்கள்.

தமிழ்த் திரையுலகின் முன்னோடி இயக்குநர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைத்து அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை ஒரு ஆவணப் படமாக எடுத்துக் காட்டியிருந்தால் சங்க ஆண்டு விழாவின் நோக்கம் சிறப்பானதாக இருந்திருக்கும்.

அதனைச் சுத்தமாக மறந்துவிட்டு சன் டிவியின் மார்க்கெட்டிங்கிற்காக ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை மட்டுமே வைத்தது பலருக்கும் அதிருப்தியை அளித்தது.

தமிழ்ச் சினிமாவில் துவக்கக் காலப் புள்ளியான மாடர்ன் தியேட்டர்ஸில் பணியாற்றிய முக்தா சீனிவாசனையாவது மேடையேற்றி கெளரவப்படுத்தியிருக்கலாம் என்பது மூத்தக் கலைஞர்களின் அங்கலாய்ப்பு. விழாவுக்கு வந்திருந்த முக்தாவும் தனக்கு எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து பாதியிலேயே வெளியேறினார். அதேபோல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த மூத்த இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஜெகநாதனையும் மேடையேற்றவில்லை.

இதுவாவது பரவாயில்லை. 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கர்ணன்', 'ஆயிரத்தில் ஒருவன்' என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்த் திரைப்படங்களை இயக்கியிருக்கும் பி.ஆர்.பந்தலுவின் நூற்றாண்டு இந்த வருடம் கொண்டாடப்படுகிறது.

அவர் பிறந்த கன்னட தேசத்தில் ஒரு மாதம் முழுக்க கர்நாடக அரசு பந்தலுவை கெளரவிக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் விழாக்களை நடத்தியது. ஊருக்கு ஒரு தியேட்டரில் பந்தலு இயக்கிய திரைப்படங்களை வெளியிட்டு கெளரவித்தது.

ஆனால், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், பந்தலுவைப் பற்றி இன்றுவரையிலும் மூச்சு விடாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை என்றார்கள் சினிமா பத்திரிகையாளர்கள். "இந்த விழாவிலாவது பந்தலுவுக்கு சிறிதளவு நேரம் ஒதுக்கி அவரைப் பெருமைப்படுத்தும்விதத்தில் ஏதாவது செய்திருக்கலாம்.." என்றார் ஒரு மூத்த சினிமா பத்திரிகையாளர்.

என்னதான் பணத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள் என்றாலும் சங்கத்தின் தனித்தன்மையை விட்டுக் கொடுப்பதா என்றும் கொந்தளித்தார்கள் சில உதவி இயக்குநர்கள். “நடிகை ரோஜாவும், இயக்குநர் செல்வமணியும் மேடையேறி, தாங்கள் காதலித்தது, கல்யாணம் செய்தது.. சண்டை வந்து பிரிய நினைத்தது என்பதையெல்லாம் விலாவாரியாக எடுத்துரைத்தது ரொம்பவே டூ மச்.  “இதெல்லாம் சங்க ஆண்டு விழாவுக்கு ரொம்ப முக்கியமா ஸார்..? யார் ஸார் இதையெல்லாம் கேட்டது..?” என்றார் ஒரு உதவி இயக்குநர்.


மாலை நிகழ்ச்சிகளில் சுந்தர்.சி., டி.பி.கஜேந்திரன் நடித்த படு மொக்கையான ஒரு நாடகத்தை போட்டு நேரத்தை வீணடித்துவிட்டார்கள். 

இசைஞானி இளையராஜாவும், பாரதிராஜாவும் தாங்கள் எங்கே முதல்முதலாக சந்தித்துக் கொண்டோம் என்று துவங்கி, பல விஷயங்களை பேசி முடிக்க கூட்டம் கலகலத்துப் போனது. ஆனாலும் இவர்கள் இருவரும் இறுதிவரையில் முகத்தோடு முகம் பார்த்து பேசாமல் இருந்தது ஏன் என்றுதான் தெரியவில்லை. தனது நிகழ்ச்சி முடிந்ததும் இளையராஜா சொல்லாமல், கொள்ளாமல் அரங்கத்தில் இருந்து வெளியேற.. பாரதிராஜா அவரை பார்த்தபடியேதான் இருந்தார். இதேபோல் 3 மணி நேரத்திற்கும் மேலாக அருகருகே அமர்ந்திருந்தும் சந்தானபாரதியும், வாசுவும் பேசிக் கொள்ளாமலேயே எழுந்து சென்றதையும் பார்க்க நேர்ந்தது.

பல இளைய இயக்குநர்கள் ஓடியாடி உழைத்துக் கொண்டிருந்ததை கண்கூடாக பார்க்க நேர்ந்தது. லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், வசந்த், எழில், கெளதம்மேனன் போன்றோர் பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர். கெளதம் மேனன் மேடை அமைக்கும் பொறுப்பை முழுமையாகத் தானே ஏற்றுக் கொண்டாராம். இதற்காகக் தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாயை செலவழித்திருக்கிறார் என்று நம் காதைக் கடித்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர்.

பிரபலமான ஹிந்தி இயக்குநர் கோவிந்த் நிகாலனிக்கு மணிரத்னம் சங்கத்தின் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கெளரவித்தார். அதேபோல் தெலுங்கு, கன்னடத்தில் இருந்தும் பிரபல இயக்குநர்களை வரவழைத்திருந்தார்கள்.

தெலுங்கில் கே.விஸ்வநாத், கோதண்டராமிரெட்டி, ராகவேந்திரராவ், கன்னடத்தில் துவாரகீஷ் நாகபரணா, கே.எஸ்.ராவ், மலையாள இயக்குநர் ஹரிஹரன் ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

தமிழில் இயக்குநர்கள் பாலுமகேந்திரா, இராம.நாராயணன் ஆகியோர் விருதுகளைப் பெற்றார்கள். “இவர்களைவிட மூத்தவர்களான  ஏ.சி.திருலோகசந்தர், சி.வி.ராஜேந்திரன், சித்ராலயா கோபு, மகேந்திரன், என்று பலரும் இருக்கிறார்களே..? அவர்களையும் மேடையேற்றி கெளரவித்திருக்கலாமே..?” என்றார் ஒரு திரைப்பட விமர்சகர்.

விருதுகளை கொடுக்கும்போது யார், யாருக்குக் கொடுக்கிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதை மன்னிக்க முடியாதது. விருந்தினர்களை இவ்வளவு நேரம் காக்க வைத்து அனுப்ப வேண்டுமா என்றெல்லாம் பலரும் முணுமுணுக்கும் அளவுக்கு நிகழ்ச்சியின் நேரம் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போனது.

கார்த்திக்கும், ராதாவும் மேடையேறி பேசிக் கொண்டிருந்தபோதுதான் சூப்பர்ஸ்டார் ரஜினி அரங்கத்தில் நுழைந்தார். கூட்டம் எழுப்பிய கரவொலி அடங்க சில நிமிடங்கள் ஆகியது. “இப்போ ஒரு சுனாமி வந்த மாதிரியிருக்கே..” என்று டைமிங்காக கார்த்திக் சொன்னது அசத்தல் கமெண்ட்..


இடையில் நடிகர் ராதாரவி நடத்திய 'ரத்தக்கண்ணீர்' நாடகத்தின் சில பகுதிகள் ரசிகர்களின் கைதட்டலை மொத்தமாக அள்ளியது. லேட்டஸ்ட் அரசியல் கருத்துக்களைப் புகுத்தி தனது வழக்கமான பாணி நகைச்சுவையைத் தெளித்திருந்தார் ராதாரவி. இறுதியில் “நீங்க எந்தக் கட்சில சேரப் போறீங்க..?” என்று கேட்டதற்கு “நம்ம நிலைமைதான் இப்படியாயிருச்சே..” என்று இரட்டை விரல்களைக் காட்டிவிட்டுப் போனபோது ரஜினியே கை தட்டினார். ஆனால் எதற்காக இரட்டை விரல்களைக் காட்டினார் என்பது அடுத்த நாள் அவர் அ.தி.மு.க.வில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்ட செய்தி வந்தபோது புரிந்தது.


ரஜினி இறுதிவரையில் அமைதியாக அடக்கமாக அமர்ந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. ஆனால் அந்த அடக்கம் ஏன் என்று கடைசியில்தான் தெரிந்தது. இந்தக் கலை விழாவின் ஹைலைட்டே அவரும் அவருடைய குருநாதர் கே.பாலசந்தரும் கலந்து கொண்ட நேருக்கு நேர் நிகழ்ச்சிதான்.

எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய் அமைந்திருந்த இந்த நிகழ்வில் ரஜினி சங்கடப்பட்டது மூன்று கேள்விகளுக்குத்தான். “பஸ் கண்டக்டராக இருந்தபோது யாரையாவது காதலித்திருக்கிறாயா?” என்று கேட்டதற்கு “ஆமாம்..” என்றவர் யார்? என்ன? என்ற மேல் விபரங்களைச் சொல்ல மறுத்து “வேண்டாமே..” என்று தன்மையோடு மறுத்தார்.

அதேபோல் “இந்த கேரக்டரை நாம பண்ணியிருக்கலாமே என்று நீ நினைச்சிருப்பியே.. அதை லிஸ்ட் போடு..?” என்று கேட்டபோது அதற்கும் “வேண்டாம் ஸார்..” என்று மென்மையாக மறுத்தார். “உன்னை அவமானப்படுத்திய விஷயம்?” என்று கேட்ட இன்னொரு கேள்விக்கும் இதேபோல் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

கே.பி.யின் நறுக்குத் தெரித்தாற்போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது இடையில் வந்த பதிலில் கிடைத்தது சூப்பர் ஸ்டார் ஏப்ரல் மாதத்தில் அரங்கேறப் போகும் கே.பி,யின் மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் நடிக்கவிருப்பதுதான். 

இந்த நிகழ்ச்சி முடியவே இரவு 11.30 மணியாகிவிட்டதால் கூட்டம் பெரிதும் கலைந்துவிட்டது. ரஜினியின் பேட்டியின்போதே காலரியில் பாதி காலிதான். இத்தனை நேரத்திற்கும் நிகழ்ச்சியை இழுத்துக் கொண்டே போனால் எப்படி முணுமுணுப்புகள் அரங்கத்தின் உள்ளேயும், வெளியேயும் புகைந்து கொண்டேயிருந்தது.

விழாவில் இயக்குநர்கள் பாலா, மணிரத்னம், அகத்தியன் மூவரையும் பெருமைப்படுத்தும்விதத்தில் தங்கத்தில் செய்யப்பட்ட இயக்குநர் சங்கத்தின் அடையாள அட்டை தரப்பட்டது. இதன் பின்பும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூட்டத்தை இருக்க வைத்தாலும்.. பசியிலும், களைப்பிலும் மக்கள் கலைவதை உணராமல் மைக்கில் தொடர்ந்து இதையே சொல்லிக் கொண்டிருந்ததுதான் கொடுமையானது.


நிகழ்ச்சிக்கு வந்திருந்த சில உதவி இயக்குநர்களிடம் பேசியபோது “இரண்டே முக்கால் கோடி ரூபாய்க்காக 'சங்கத்தின் ஆண்டு விழா' என்ற போர்வையில் இதனை நடத்தியதற்குப் பதிலாக 'கலை விழா' என்றே சொல்லி நடத்தியிருக்கலாம். 'சங்க ஆண்டு விழா' என்று எதற்காகச் சொல்ல வேண்டும்..?  எங்களுடைய முன்னோடி இயக்குநர்களையும், சங்கத்தின் வரலாற்றையும் முன்னிறுத்தாமல் வெற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தியதில் எங்களுக்குக் கொஞ்சமும் திருப்தியில்லை..” என்றார்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றித்தான் விமர்சனங்கள் எழுந்தன என்றாலும் கடைசியில் இயக்குநர்கள் சங்கத்தின் தற்போதைய நிலையைப் பற்றிக்கூட அங்கே பலராலும் பேசப்பட்டது. முதலிலேயே இந்தக் கலை விழாவை சீமான் வெளியில் வந்த பின்பு வைத்துக் கொள்ளலாம் என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். அவர் வெளியில் வரவே நிச்சயம் 1 ஆண்டு ஆகும் என்று இயக்குநர்கள் சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் சொன்னதைக் கேட்டு சீமானின் ஆதரவாளர்களே கொதிப்படைந்துவிட்டார்களாம்.

தமிழ்த் திரையுலகம் மட்டுமன்றி அதையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரெடுத்திருக்கும் சீமான் இயக்குநர்கள் சங்கத்தின் கவுரமிக்க ஒரு உறுப்பினர். அவர் அவருடைய அரசியல் கொள்கைக்காக ஜெயிலுக்குப் போயிருக்கட்டும். அதற்காக நம் குடும்பத்துப் பையனை புறக்கணித்துவிட்டு நாமே விழா நடத்துவது ஏற்புடையதுதானா..? என்றெல்லாம் கேள்விகள் உதவி இயக்குநர்கள் மத்தியில் பரவியிருந்தது.


இந்தக் கொதிப்பை உணர்ந்ததினால்தான் இந்த நிகழ்ச்சிக்கு முதல்வரை அழைக்கவில்லையாம். நிகழ்ச்சிக்கு முதல்வர் வந்திருந்து, அந்த நேரத்தில் உதவி இயக்குநர்கள் அவர் முன்பாகவே ஏதாவது தகராறு செய்துவிட்டால் அது சங்கத்திற்கு கேவலமாகிவிடுமே என்ற எண்ணத்தில்தான் முதல்வரை விட்டுவிட்டதாக சங்கத்தில் தொடர்புடைய ஒருவர் கூறினார்.

இதேபோல் உடல் நலக்குறைவால் மணிவண்ணனும், சீமான் விஷயத்தில் கோபம் கொண்டு வெளிநாட்டில் 'ஆதிபகவன்' ஷூட்டிங்கை வைத்துக் கொண்டு அமீர் எஸ்கேப்பானதாகச் சொல்கிறார்கள். தங்கர்பச்சானும் இதனாலேயே வரவில்லை என்கிறார்கள். இதேபோல் ஷங்கரும் அரங்கத்தில் தென்படவில்லை.

அதேசமயத்தில் இன்னொரு அதிர்ச்சியடைய வைத்த செய்தி. சங்கத்தின் பொருளாளரான இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் நிகழ்ச்சிக்கு வரவில்லை. நெருக்கி விசாரித்தபோது அவர் சில மாதங்களுக்கு முன்பாகவே தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய்விட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் அவரது ராஜினாமாவின் பின்பு பெரும் கதையே இருப்பதாக சுந்தர்ராஜன் தரப்புத் தெரிவிக்கிறது. பல ரசாபாசங்களும் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதனாலேயே சுந்தர்ராஜனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டி வந்ததாம்.

இதில் ஒரு ஸ்கூப் நியூஸ்.. நேரு ஸ்டேடியத்தில் இயக்குநர்கள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், ராஜாஅண்ணாமலைபுரம், குமாரராஜா முத்தையா அரங்கத்தில்  எம்.எஸ்.விஸ்வநாதன் அறக்கட்டளை நடத்திய கண்ணதாசன் விழாவுக்கு ஆர்.சுந்தர்ராஜன் வந்திருந்தது சுவையான விஷயம்..!
 

சரி. இவர்தான் வரவில்லையென்றால், சென்ற தேர்தலின்போது ஆர்.சுந்தர்ராஜனிடம் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றுப் போன வி.சேகரும் அரங்கத்தில் தென்படாதது ஏனென்று தெரியவில்லை.

தற்போது சங்கத்தின் புதிய பொருளாளராக 'பெண்ணின் மனதைத் தொட்டு' படத்தின் இயக்குநர் எழில் நியமிக்கப்பட்டிருக்கிறாராம். ஆனால் இந்த மாற்றத்திற்கு சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழுவில் இதுவரை அனுமதி வாங்கவில்லையாம்.. இயக்குநர்கள் சங்கத்தின் இந்த விவகாரம், விரைவில் வெடிக்கத்தான் போகிறது என்கிறார்கள் சங்கத் தொடர்புடையவர்கள்.

இந்த நிகழ்ச்சி முடிந்த இரண்டு நாட்கள் கழித்து நேற்று வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதற்காக இயக்குநர்கள் சங்கத்தினர் அனைவரும் வெற்றி விழா கொண்டாடியிருக்கிறார்கள். நள்ளிரவு தாண்டியும் 'தீர்த்தவாரி' நடந்து முடிந்ததாம்.

இதைக் கேள்விப்பட்டும் சில உதவி இயக்குநர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். “யார் வீட்டுக் காசு இது..? அவனவன் பொண்டாட்டி தாலியை அடகு வைச்சு ஐம்பதாயிரம் ரூபா பணத்தைக் கட்டி மெம்பர்ஷிப் ஆயிருக்கான் ஸார்.. இவங்க அந்தக் காசுல இப்படி கூத்தடிச்சா என்ன அர்த்தம்..?” என்கிறார்கள் கோபத்தோடு.

நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்களோ, “பாரதிராஜா என்ற ஒரு மனிதர் மட்டும் இல்லாவிட்டால் இந்த நிகழ்ச்சி இந்த அளவுக்கு சிறப்பா நடந்திருக்குமா? கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கச் சொல்லுங்க அவுங்களை.

பாரதிராஜா கூப்பிட்டாருன்றதாலதான் மணிரத்னமே ராத்திரி 12 மணிவரைக்கும் உக்காந்திருந்தாரு. ரஜினி வந்திருந்தாரு. வந்த ரஜினி இப்படியொரு பேட்டிக்கு ஒத்துக்கிட்டாரே. வேற யாருக்கு இதையெல்லாம் ஏற்பாடு செய்யற அளவுக்கு தகுதியும், திறமையும் இருக்கு? தெலுங்கு, கன்னட இயக்குநர்களெல்லாம் வந்திருந்தாங்களே.. எப்படி? பாரதிராஜான்ற பேருக்காகத்தானே..?

பாரதிராஜாவை உதவி இயக்குநர்கள் அனைவரும் 'அப்பா' என்றுதான் அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் மீது பாசத்துடன் இருக்கிறார்கள். இந்த விழாவில் பணியாற்றிய அனைவருமே உதவி இயக்குநர்கள்தான். அத்தனை பேருக்குமே நிகழ்ச்சியில் பணியாற்றியதற்காக சிறிதளவு தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. வேலையே இல்லாமல் கஷ்டத்தில் இருந்த அவர்களுக்கு, அடுத்த இரண்டு மாதங்கள் குடும்பத்தை நடத்தும் அளவுக்கு இப்போது உதவி செய்திருப்பதே பாரதிராஜாதான். அவரைப் போய் தப்பா பேசுறாங்களே..?

கொஞ்ச நஞ்சமில்ல ஸார்.. இப்போ இரண்டே முக்கால் கோடி ரூபாய் சங்கத்துக்கு நிதியா கிடைச்சிருக்கு.. இதுக்கு முன்னாடியும் அமைப்பு இருந்துச்சு. நிர்வாகிகள் இருந்தாங்க. அவங்களால செய்ய முடிஞ்சதா? இல்லீல.. இப்ப பாரதிராஜா செஞ்சுட்டாருன்னு சொன்ன உடனேயே பொறாமைல வயிறு எரியறாங்க..” என்று பொரிந்து தள்ளுகிறார்கள்.

10 தமிழர்கள் இருந்தாலே எட்டுவிதமான கருத்துக்கள் அலைமோதும். இதில் 2000 பேர் இருக்கிறார்கள். சர்ச்சைகளும், கலகலப்புகளும் எழத்தான் செய்யும். ஏதோ நல்லவிதமாக பில்டிங் கட்டி முடித்தாலே போதும்தான்..!

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

கொல்ல முடியாத கணங்கள்..!

27-10-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!





கொல்ல முடியாத கணங்கள்..!

பூனையொன்றை பார்க்க வைத்தே
மீனின் குச்சி எலும்பைக் கூட
விடாத தர்மவான்களை..

ஒட்டிய வயிறோடு
கையை நீட்டும் சிறாரை
எட்டி உதைக்கும் கால்களுக்குச்
சொந்தக்காரர்களை..

வீடுவரையேனும்
விடாமல் துரத்தி
கையூட்டு வாங்கும்
அரசாளர்களை..

மன்னிப்பு கேட்டும்
மண்டியிட வைக்கும்
அதிகார வர்க்கத்தினரை..

அரைசாண் வயிற்றுக்காக
கழிவறைக்குள்
இறங்கியவனிடமே
காசு பார்க்கும் தரகனை..

குடும்பத்திற்காக
பணி தேடி வந்தவளை
படுக்கைவரை இழுத்தவனை..

தோல் சுருங்க
தூக்கி வளர்த்தவர்களை
மேல் கருக்க
மீளவும் உழைக்கனுப்பிய
உத்தம பிள்ளைகளை..
 

இருக்கிறான் ஆண்டவன்
என்றெண்ணி
பக்தன் அளித்ததை
கொள்ளையடிக்கும்
போலி பக்தர்களை..

இன்னும் நிறையவர்களை
கொல்லத்தான் நினைக்கிறேன்
தினம் தினமும்...

ஒவ்வொரு முறையும்
தோல்வியில் முடிகிறது
எனது முயற்சி..

இறுதியில் கண்டு கொண்டேன்..
இவர்களில் எங்கோ நானும்
ஒளிந்திருக்கிறேன் என்று..!


அள்ள முடியாத சொற்கள்..!


26-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!




அள்ள முடியாத சொற்கள்..!!!



மூச்சின்றி கிடந்தது என் வீட்டின்
வாசம்.!



கூடத்தில் சிதறிக் கிடந்தன
நான் வீசிய சொற்கள்.


மேலும் பேச விடாமல் நாவைத்
தடுத்தது மனம்.


அவரவர் மனதில் அவரவர் அம்புகள்
தயார் நிலையில்.
 

இனி யார் வீசுவது என்பதில்தான்
அனைவருக்கும் தயக்கம்.
 

இங்கே துவக்கம் ஒரு போரின்
அடையாளம்தான்..
 

துவங்கிய பின்பு 
செல்லும் திசையை
யார் கணிப்பது..?
 

பேச்சு, மூச்சுமில்லாமல் 
கிடப்பதுகூட
ஒருவகையில் பிராப்தம்தான்..
 

எந்த அம்பையும் எதிர்கொள்ளத்
தேவையில்லை..
 

வீட்டின் மெளனத்தைக் கலைத்தன
சிட்டுக் குருவிகளின் கூச்சல்.
 

கிடைத்த நேரத்தில் இரங்கிப் போக
எத்தனித்தேன்..
 

நான் வீசியிருந்த சொற்களே
என்னைத் தடுத்தன.
 

சிதறிக் கிடந்தவற்றை
முடிந்தவரை ஒழுங்காக்கினேன்.
 

ஆனால் அள்ள முற்பட்டுத்தான்
தோற்றுப் போனேன்..
 

மீண்டும், மீண்டும்
தோல்வியடைந்தேன்.
 

இறுதியில்
வேறொரு அம்பைத்தான்
என்னால் வீச முடிந்தது.

ராதிகாவின் சந்தோஷப் பேச்சு..! சரத்குமாரின் சங்கடம்..!

24-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..
!

நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த இயக்குநர்கள் சங்க ஆண்டு விழாவில் கே.பி.-ரஜினி பேட்டி ஒரு ஹைலைட் என்றால் மற்றொரு ஆச்சரியம் ப்ளஸ் அதிர்ச்சியாக்கிய விஷயம் நடிகை ராதிகாவின் வெளிப்படையான பேச்சு..!



 
ராதிகாவின் இந்த வெளிப்படையான பேச்சு கடைசியில் டபுள், டிரிபுள் மீனிங்கையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட, சம்பந்தப்பட்ட பாரதிராஜா, சரத்குமாரெல்லாம் சங்கடத்தில் நெளிய வேண்டியதாகிவிட்டது.

நேற்றைக்கு ஏதோ என்றைக்கும் இல்லாத அளவுக்கு மிக சந்தோஷமாக இருந்தார் ராதிகா. காரை விட்டு இறங்கி காரிடாரில் நடந்து வந்தபோதே எதிரில் வந்து வரவேற்ற பாரதிராஜாவை இறுக்கி அணைத்து அவருடைய இடுப்பில் கை போட்டபடியே கிட்டத்தட்ட இழுத்தபடியேதான் வந்தார் ராதிகா. இவர்களுக்குப் பின்னாலேயேதான் சரத்குமாரும் வந்தார். உள்ளரங்கத்திற்குள் நுழைந்தபோதுதான் பாரதிராஜாவே தவியாய் தவித்து ராதிகாவின் கையை எடுத்துவிட்டார்.

"சரத்குமார் பாடுவார். ராதிகா துணைக்கு ஆடுவார்" என்று சொல்லித்தான் அவர்களை மேடைக்கு அழைத்தார் தொகுப்பாளர் மதன்பாப். சரத்குமாரும், ராதிகாவும் மேடைக்கு வந்தார்கள்.

சரத்குமார் தான் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் பாடும் “உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்..” என்ற புரட்சித் தலைவரின் பாடலை அட்சரப் பிசகாமல் அழகாகப் பாடினார். அதுவரையில் தூரத்தில் நின்றபடியே சரத் பாடும் அழகை ரசித்தபடியே இருந்தார் ராதிகா.

மைக் ராதிகாவின் கைக்கு வந்த பின்புதான் ரகளையே துவங்கியது. எடுத்த எடுப்பிலேயே பாரதிராஜாவை பார்த்தே பேச ஆரம்பித்தார் ராதிகா.

“நானெல்லாம் அந்தக் காலத்துல என்ன லட்சணத்துல இருந்தேன்னு எனக்குத்தான் தெரியும். ஐஸ்வர்யா ராய் மாதிரி கொஞ்சமாச்சும் அழகா இருந்தால்தான், சினிமால நடிக்க முடியும்.. ஆனா அப்புறமும் எதுக்கு ஸார் என்னை செலக்ட் செஞ்சீங்க..? அதுவே எனக்கு ரொம்ப ஆச்சரியம்..

ஒரு சமயம் 'கிழக்கே போகும் ரயில்' ஷூட்டிங்கப்ப நீங்க ஒரு பாறைல தலையை முட்டிக்கிட்டிருந்தீங்க.. நான் அப்போ உங்ககிட்ட வந்து ‘Why are you doing sir..?’ அப்படீன்னு அப்பாவியா கேட்டேன். அதுக்கு நீங்க ‘இனிமே நீயே டைரக்ட் செஞ்சுக்க. நான் செய்ய மாட்டேன். உன்னையெல்லாம் வைச்சு நான் என்ன டைரக்ட் செய்யறது?’ன்னு கேட்டீங்களா இல்லையா..?

அப்புறம் ‘நிறம் மாறாத பூக்கள்’ல நடிக்கும்போது நடந்த கூத்து. கூட நடிச்ச விஜயனுக்கு April Fool என்ற வார்த்தையை இங்கிலீஷ்ல உச்சரிக்கவே தெரியலை. அவர் அதை எப்படி உச்சரிச்சாருன்னு நான் என் வாயால சொல்ல மாட்டேன். சத்தியமா சொல்ல மாட்டேன் ஸார்..

அப்போவெல்லாம் ஹீரோயினை பாம்பேல இருந்து கொண்டு வந்துக்கிட்டிருந்தாங்க.. இந்த நேரத்துல நம்மளை செலக்ட் பண்ணியிருக்காரேன்னு நானும் பயந்து, பயந்துதான் நடிச்சேன். ஒரு நாள் அப்படியே நீங்க கேட்டீங்க.. ‘உனக்கெல்லாம் போய் நடிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கு பாரு.. என் தலையெழுத்து…’ அப்படின்னீங்க.. சொன்னீங்களா இல்லையா.. ஸார்..?

ஒரு நாள் வீட்ல ஏதோ வேலை பார்த்துக்கிட்டிருந்தேன்.. அப்போ டிவி ஓடிக்கிட்டிருந்துச்சு.. அதுல கேள்வி கேட்டுக்கிட்டிருந்தாங்க. ‘உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யாரு?’ன்னு.. அப்போ ஒரு பொண்ணு சொல்லுச்சு ‘சரத்குமார்’ன்னு.. எனக்கு பயங்கர ஷாக்கு.. எப்படிங்க இது..? அடுத்து அந்தப் பொண்ணுகிட்ட ‘சரத்குமாரை ஏன் பிடிக்குது’ன்னு கேட்டா ‘அவர் நல்லா பண்ணுவாரு’ன்னுச்சு.. சரத் நல்லாப் பண்ணுவாராம். எனக்குத் தாங்க முடியல. அதுலேயும் சன் டிவில..? அவங்களை எதிர்த்துதான் வேற கட்சிக்குப் போய், அப்புறம் அது சரி  வராம தனிக்கட்சி ஆரம்பிச்சோம். அதுக்கப்புறமும் இப்படியா..?” என்று பேசிக் கொண்டே போக சரத்குமார் இதற்கு மேல் தாங்க முடியாமல் கீழே இறங்கி வந்துவிட்டார்.

அதற்குப் பிறகும் எந்திரன் படம் பற்றியும், பாரதிராஜா தனது ஹீரோயின்களை செலக்ட் செய்யும்விதம் பற்றியும் ஏகத்திற்கும் கமெண்ட் செய்துவிட்டு பெரும் கைதட்டலுடன்தான் மேடையில் இருந்து இறங்கினார் ராதிகா.

அவருடைய ஒவ்வொரு சொற்றொடருக்கும் பாரதிராஜாவை குளோஸ்அப்பில் காட்டும்போது, பாரதிராஜாவின் அவஸ்தை அவருடைய முகத்தில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

என்னமோ தெரியவில்லை.. நேற்றைய தினம் முகம் கொள்ளாச் சிரிப்புடன் ராதிகா பேசிய பேச்சு கவர்ச்சிகரமானதுதான் என்றாலும் தெரிந்துதான் பேசினாரா அல்லது தெரியாமலேயே சந்தோஷத்தின் உச்சத்தில் பேசிவிட்டாரா என்பது புரியாமல் வந்திருந்த சினிமா பிரபலங்கள் முழித்தது தனிக்கதை..

ஆனாலும் விழாவின் காலை நிகழ்ச்சியில் வார்த்தைக்கு வார்த்தை அப்ளாஸ் வாங்கியது ராதிகாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

தீபாவளியன்று சன் டிவியை பாருங்கள். உங்களுக்கே தெரியும்..!

கே.பாலசந்தர்-ரஜினி - அசத்தலான நேருக்கு நேர் பேட்டி..!


24-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த சில நடிகர், நடிகைகள் மேடைக்கு வந்து தங்களைக் கவர்ந்த இயக்குநர்கள் யார், யார்..? தங்களுடைய வளர்ச்சியில் இயக்குநர்களுக்கு இருந்த பங்கு என்ன என்பதைப் பற்றி விலாவாரியாகப் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்த விழாவுக்கே முத்தாய்ப்பு வைப்பது போல ஒரு நிகழ்ச்சி இறுதியில் நடைபெற்ற ரஜினி-கே.பாலசந்தர் இருவர் மட்டும் கலந்து கொண்ட நேருக்கு நேர் பேட்டிதான்.

சுமார் இருபது நிமிடங்கள் நீடித்த இந்த நேருக்கு நேர் பேட்டியில் கே.பி.யின் அசத்தலான கேள்விகளும், ரஜினியின் பட், பட்டென்ற நறுக்குத் தெரித்தாற்போன்ற பதில்களும் கைதட்டல்களை அள்ளிக் கொண்டு போனது.

இந்தப் பேச்சில் கிடைத்த ஒரு மில்லியன் டாலர் ஸ்கூப் செய்தி ரஜினி நாடகத்தில் நடிக்கப் போவதுதான். கே.பி. தன்னுடைய புகழ் பெற்ற நாடகமான 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தை ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் அரங்கேற்றம் செய்யப் போகிறார். அதில் மேஜர் சந்திரகாந்தாக ரஜினியே நடிக்க இருக்கிறார். சூப்பர்தான்.. நாடக அரங்கங்களும் இதனாலேயே ஹவுஸ்புல் ஆனால் நமக்குச் சந்தோஷம்தான்..!

முதலில் மேடைக்கு வந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் 'இயக்குநர் சிகரம்' பாலசந்தரைப் பற்றிப் பேசி அவரை மேடைக்கு அழைத்தார். பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினியையும் மேடைக்கு அழைத்து அவரையும்  பாலசந்தரின் அருகில் அமர வைத்துவிட்டுப் போனார்.

இதன் பின்பு பாலசந்தரே பேசத் தொடங்கினார்.

"ரஜினி இன்றைக்கு உலக சினிமாவுக்குப் போய்விட்டார். இந்திய சினிமாவின் உச்ச நடிகர். எவ்வளவோ வளர்ந்து விட்ட நிலையிலும் இன்றும் எனக்கு அவர் மாணவன்தான். என்னை எப்போதும் குருவாகவே மதிக்கிறார். நானும் அவரும் சந்திக்கும்போது எப்படி இருக்க? என்ன செய்யற? நல்லாயிருக்கேன்.. இவ்ளோதான்.. கொஞ்சம்தான் பேசுவோம்.. ஆனா இப்ப அவர்கிட்ட ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சிருந்ததையெல்லாம் கேட்கலாமேன்னு நினைச்சிருக்கேன். இந்த விழா மேடையில் அதையெல்லாம் கேட்கப் போகிறேன்… இந்த மேடையைப் பொறுத்தவரை என்னை குருன்னு நினைக்காம ஒரு பிரஸ்காரனா அவர் நெனச்சிக்க வேண்டியதுதான்.
ரஜினி, இதுக்கு நீ உன்னால முடிஞ்ச அளவுக்கு பதில் சொல்லணும். பதில் சொல்ல வேண்டாம்னு நினைச்சா 'நோ கமெண்ட்ஸ்'ன்னு சொல்லிட்டுப் போயிரலாம். எனக்காக எந்தப் பயமும் வேண்டாம். ச்சும்மா ரிலாக்ஸா... ஒரு நேருக்கு நேரா இதை நினைச்சுக்க..

இங்க இருக்குற எல்லாருக்குள்ளேயும் உன்கிட்ட கேக்குறதுக்கு நிறைய கேள்விகள் இருக்கும். அப்படியொரு கேள்விப் பட்டியலைத்தான் நான் இவங்க சார்பா தயார் பண்ணி கொண்டு வந்திருக்கேன்..” என்று சொல்லிவிட்டு கேள்வி பதிலைத் தொடங்கினார்.

இந்த நேரத்தில் சன் டிவியின் தொகுப்பாளர் விஜயசாரதி ஒரு பேப்பரை கொண்டு வந்து ரஜினியிடம் கொடுத்துவிட்டு அவரது காதருகில் ஏதோ முனங்கிவிட்டுப் போனார். அந்தப் பேப்பரை கூர்ந்து படித்த ரஜினி எந்த ரியாக்ஷனும் காட்டாமல் சரி என்பது போல் தலையாட்டிவிட்டு கேள்வி-பதிலுக்குத் தயாரானார்.

இனி இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கேட்ட கேள்விகளும், அதற்கு சூப்பர்ஸ்டார் ரஜினி அளித்த பதில்களும் என்னுடைய நினைவில் இருந்து இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

முழுமையாகத் தெரிய வேண்டுமெனில் வரும் தீபாவளிவரையில் பொறுமையாக இருங்கள். அன்றைக்கு சன் டிவியில் இந்த நிகழ்ச்சிதான் நிஜமான தீபாவளி.

சிவப்பு நிறத்தில் இருப்பதெல்லாம் இயக்குநர் சிகரத்தின் கேள்விகள்..

நீல நிறத்தில் இருப்பதெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பதில்கள்..

திரும்பவும் சிவாஜிராவாக மாற முடியுமா உன்னால்..?

இப்பவே அப்படித்தான் இருக்கேன்..

புகழ் உச்சிக்குப் போனாலும் இதனால உன்னோட பிரைவஸி போயிருச்சேன்னு உனக்கு வருத்தம் உண்டா..?

இருக்கு.

உன்னோட புகழால பிரைவஸியைவிட வேற எதையாவது இழந்துட்டியா..?

இப்ப சூழ்நிலைக் கைதி மாதிரிதான் இருக்கேன்.

உன்னோட வாழ்க்கைக் கதையை நீயே எழுதுவியா..?

ஆட்டோபயோகிராபின்னா நிச்சயம் நிறைய உண்மைகளை எழுதணும்.. வேண்ணா உங்ககிட்ட சொல்லி எழுதுவேன்..

உண்மையை எழுதறதால உனக்கு பயமா இருக்கா..?

ஜாஸ்தியா இருக்கு..

உன்னை இந்த அளவுக்குப் புகழ் உச்சில கொண்டு போய் வைச்சிருக்கிற இந்தத் தமிழ்ச் சமூகத்துக்கு நீ என்ன செய்யப் போற..?

பெருமைப்படற அளவுக்கு அவங்களுக்கு ஏதாவது செய்யணும். நிச்சயம் செய்வேன்.

நிறைய சினிமாக்களைப் பார்க்கும்போது இதை நாம பண்ணியிருந்தா நல்லாயிருக்குமேன்னு நினைச்சிருப்பியே.. அது மாதிரியான படங்கள் எது..?

நிறைய படங்கள்.. பெயர் வேண்டாமே..

நீ ஒன் மேன் ஆர்மி மாதிரி. நீயே ஒரு படம் டைரக்ட் செஞ்சா என்ன..?

அது ஒரு பெரிய பொறுப்பு. என்னால செய்ய முடியுமான்னு தெரியலை.. யோசிக்கணும்.. இப்போதைக்கு முடியாதுன்னுதான் நினைக்கிறேன்.

ஒருவேளை அப்படி நீ படம் எடுத்தா என்னை அஸிஸ்டெண்ட்டா சேர்த்துக்குவியா..?

சிரிப்பு

நீ இதுவரைக்கும் மொத்தமா எத்தனை படத்துல நடிச்சிருக்க..?

154

50 வருஷம் கழிச்சு உன்னோட படத்துல எந்தப் படத்தை ரீமேக் செய்யலாம்னு நினைக்கிற..?

ராகவேந்திரா.. பாட்சா, எந்திரன்..

இதுல என் படத்தை ஏன் சொல்ல மாட்டேன்ற..?

சிரிப்பு..

அமிதாப்பச்சன் செஞ்ச 'சீனி கம்' மாதிரி கதையம்சம் உள்ள படத்துல நடிப்பியா..?

அது மாதிரி நமக்கு செட்டாகாது. கமலுக்குத்தான்..

தேசிய விருது வாங்கலையேன்னு உனக்கு இப்பவும் வருத்தம் இருக்கா? இல்லியா..?

இருக்கு.. அது மாதிரி நல்ல கதையோட டைரக்டர்ஸ் அமையலை.. இனிமே நீங்க பண்ணினாத்தான்..

நான் உன்னை வைச்சு இனிமே படமே பண்ண முடியாதுப்பா. நீ எங்கயோ போயிட்ட..

சரி அதை விடு. என்னோட நாடகத்துல நடிப்பியா..?

கண்டிப்பா..

என்னோட மேஜர் சந்திரகாந்த் நாடகத்தைத் திருப்பிப் போடப் போறேன். ஏப்ரல்-15 வைச்சுக்கலாமா? ரெண்டு நாள் மட்டும் டேட் கொடு. போதும்..

சரி..

கமல் என்னை நடிக்க வைச்சு டைரக்ட் பண்றேன்னு சொல்றாரு. ஆனா நீ ஏன் அது மாதிரி சொல்ல மாட்டேன்ற..?

செஞ்சா சொல்றேன்..

ரஜினிகாந்த்ன்னு உனக்கு என்னிக்கு பேர் வைச்சேன்னு ஞாபகம் இருக்கா..?

ஹோலிப் பண்டிகை அன்னிக்கு..

அப்போவெல்லாம் ஒவ்வொரு வருஷமும் ஹோலிப் பண்டிகைக்கும் இந்தப் பேர் வைச்சதை ஞாபகம் வைச்சிருந்து என்னைப் பார்க்க வருவ.. கொஞ்ச வருஷம் வந்துக்கிட்டிருந்த.. அப்புறம் வர்றதில்லை.. மறந்துட்டியேப்பா..

இனிமேல் நடக்காது. கண்டிப்பா வருவேன்.

ஆனா, எனக்கு ஹோலிப் பண்டிகைன்னாலே உன் ஞாபகம்தான் வரும்.. ஓகே..

என் படத்துல நடிக்கும்போது ஏண்டா, இவன்கிட்ட மாட்டிக்கிட்டோம்ன்னு என்னிக்காவது நினைச்சிருக்கியா..?

நிறைய தடவை..

நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணினதே 5 படம்தான் இருக்கும். அதுக்குள்ளயே நிறைய தடவை யோசிச்சுட்டியா..?

சிரிப்பு

உனக்கு ஞாபகம் இருக்கா.. 'தில்லுமுல்லு' படத்துல நடிக்க உன்னைக் கூப்பிட்டப்போ “உன்னால காமெடி செய்ய முடியும். தைரியமா செய்”யுன்னு நான்தான் அழுத்தி, அழுத்திச் சொன்னேன்.

ஆமாமாம்..

நீதான் ரொம்ப பயந்த.. ஏன்னா மீசையை எடுக்கணுமேன்னு..!? 

சிரிப்பு

'அவர்கள்' ஷூட்டிங் சமயத்துல உன்னை கண்டபடி திட்டிட்டேன். கோச்சுக்கிட்டு வெளில போயிட்டேன். நீ மறக்கலியே..?

இல்லை..

பஸ் கண்டக்டரா இருக்கும்போது யாரையாவது லவ் பண்ணியிருக்கியா..?

அப்புறமா சொல்றேன்..

எந்திரன் உன் அல்டிமேட் படமா..?

இல்லை..

நான் எந்திரன் படத்தை 2 தடவை பார்த்தேன். உனக்காகத்தான்.. நீ என் படத்தை என்னிக்காச்சும் 2 தடவை பார்த்திருக்கியா..?

நிறைய பார்த்திருக்கேன்..

எந்திரன் படத்தை முடிச்சிட்ட..? மகளுக்கும் கல்யாணம் செஞ்சு வைச்சிட்ட.. இப்ப உன்னோட அடுத்தக் கவலை என்ன..?

எதைப் பத்தியும் நினைக்கலை..

இப்போ என்கிட்ட என்ன எதிர்பார்க்குற..?

இந்தக் கேள்வி பதில் எப்போ முடியும்..?

உனக்குப் புடிச்ச சூப்பர் ஸ்டார்.. எந்தத் துறையில வேண்டுமானாலும் இருக்கலாம்..

சிங்கப்பூர் முன்னாள் பிரைம் மினிஸ்டர் லீ க்வான் யூ..

கவிதை எழுத ஆசை இருக்கா உனக்கு?

இருக்கு.

அதற்கு ஏதாவது முயற்சி செஞ்சிருக்கியா..?

இல்லை.

இவர் போல் இல்லையேன்னு நீ யாரையாவது பார்த்து நினைச்சிருக்கியா..?

நிறைய பேர்..
 

வாழ்க்கையில யாரையாவது பார்த்து பொறாமைப்பட்டிருக்கியா?

இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து ரொம்ப பொறாமைப்பட்டிருக்கிறேன்.

உனக்குச் சின்னச் சின்ன ஆசைகள் உண்டா..?

உண்டு..

இப்பவும் சிகரெட் பிடிப்பியா..?

நிறைய..

விடுறா.. நீ விட்டீன்னா நாட்ல நிறைய பேர் விட்ருவாங்க. உனக்கே தெரியும் நான் பாக்கெட், பாக்கெட்டா எத்தனை ஊதியிருக்கேன்னு. நானும் ஒரு நாள் விட்டேன். நீயும் விட்ரு என்ன..?

ட்ரை பண்றேன்..

இந்த நேரத்தில் இடையில் புகுந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், “ரஜினி சிகரெட் பிடிக்கவே நீங்கதான் ஸார் காரணம். நீங்கதான் அதைப் படம் பிடிச்சு காட்டுனீங்க..” என்று சொல்ல சட்டென்று உஷ்ணமாகிவிட்டார் கே.பி.

“அவரு அப்படி, இப்படின்னு ஸ்டைலா தூக்கிப் போடுறதை மட்டும்தான் செஞ்சு காட்டுறான்னு சொல்லி படத்துல வைச்சேன். புகையை விடச் சொல்லலியே..?” என்று கேட்க ரஜினியே சிரித்துவிட்டார்..

இனிமேல் நான் கேட்கிற எல்லா கேள்விக்கும் ஒரு வரியில்தான் பதில் சொல்லணும். ஓகேவா?

ரஜினி சரியென்று தலையாட்டினார்.

உனக்குப் பிடித்த தமிழ் இயக்குநர் யார்?

மகேந்திரன்..

உனக்குப் பிடித்த புத்தகம் எது?

பொன்னியின் செல்வன்..

குடும்பத்தோடு நீ சென்று வந்த பிக்னிக் ஸ்பாட்..?

லண்டன்..

நீ மட்டும் தனியா போயிட்டு வந்த இடம்.. இமயமலையைத் தவிர..?

நேபாளம்..

அதுவே கிட்டத்தட்ட இமயமலைதான்.. சரி விடு..  

உனக்குப் பிடித்த உணவு எது?

சிக்கன்.

யார்கிட்ட சொல்றான் பாருங்க. என்கிட்ட.. ஏதாவது வெஜ் அயிட்டம் சொன்னீன்னா நான் அதை பாலோ பண்ணலாம்னு நினைச்சேன்..

உன்னோட பெஸ்ட் பிரெண்டு யாரு..?

ராவ்பகதூர்..

ஏற்கெனவே சொல்லியிருக்க.. சரி.. உன்னோட பேவரிட்டான வண்டி..

ஜாவா மோட்டார் பைக்..

நீ இப்பவும் நினைச்சுப் பார்த்து சந்தோஷப்படுற நாள்..?

கே.பி. ஸார் என்னை அவர் படத்துல புக் செஞ்ச நாள்..

நீ இப்பவும் நினைச்சு துக்கப்படுற நாள்..?

எங்கப்பா செத்த நாள்..

நீ மறக்காம வைச்சிருக்கிறது..?

முள்ளும் மலரும் படம் பார்த்துட்டு நீங்க எனக்கு எழுதின லெட்டர்..

உன்னை ரொம்ப அவமதிப்பு செஞ்ச விஷயம்..?

வேண்டாமே..

உன்கிட்டயே உனக்குப் பிடிக்காதது..?

என்கிட்ட எனக்குப் பிடிக்காதது எது..?

என்கிட்ட உனக்குப் பிடிக்காதது எது..?

உங்க கோபம்..

சரி.. என்கிட்ட மட்டுமாச்சும் ரகசியமா சொல்லு.. அரசியலுக்கு நீ வருவியா? மாட்டியா..?

மேலே கைகளைத் தூக்கிக் காண்பித்தார்.

இப்ப நீ ஏதாவது சொல்றதா இருந்தா சொல்லிக்க..!

நோ கமெண்ட்ஸ்..

 இத்துடன் நேருக்கு நேர் முடிந்தது..!

ஒரு சில இடங்களில் கேள்வி-பதிலையும் மீறி ரஜினியும், கே.பி.யும் பேசிக் கொண்டார்கள். அதனை நினைவில் கொண்டு வர முடியவில்லை..

கிட்டத்தட்ட 90 சதவிகிதத்தை இதில் எழுதியிருக்கிறேன்.

நள்ளிரவு 11 மணிக்குத்தான் இந்த நிகழ்வு தொடங்கியது.. என்னுடைய வருத்தமெல்லாம் என்னவெனில், இது மாதிரியான ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி பின்னால் வரப் போகிறது என்பது தெரியாததால் நிறைய நடிகர், நடிகைகளும், பொதுமக்களும் லேட்டாயிருச்சேன்னு எழுந்து போய்விட்டது சோகமானது.

கிட்டத்தட்ட காலரியில் பாதி காலியான நிலையில்தான் இந்தப் பேட்டி நடந்து கொண்டிருந்தது மிக, மிக வருத்தமானது. இதனை முன்கூட்டியே சொல்லியிருந்தாலாவது கூட்டம் இருந்திருக்கும். அல்லது முன்கூட்டியே இதனை நடத்தியிருக்கலாம். 

இதற்குப் பின்பும் 1 மணிவரை நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது..!


11-01-2011 அன்று வீடியோ இணைக்கப்பட்டது :



கெளரவர்கள் - சினிமா விமர்சனம்

22-10-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சினிமாவுக்கு போய் 20 நாளாச்சு. கடந்த 1-ம் தேதியன்று 'எந்திரன்' பார்த்ததுதான். அதன் பின்பு புதிய படங்கள் வராததாலும், அதன் பின்பு வந்தவைகள் பார்க்க வேண்டிய படங்களாக அவை இல்லாததாலும் போகவில்லை. சென்ற வாரம் வந்த படங்களில் ஒச்சாயி, தொட்டுப் பார் இரண்டு படங்கள் மட்டுமே பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்று ரிப்போர்ட் வந்தது.

எப்படியும் இந்த இரண்டில் ஒன்றை கருமாரி காம்ப்ளக்ஸில் போட்டிருப்பார்கள் என்று நினைத்துதான் அங்கே சென்றேன். என் அப்பன் முருகனின் திருவிளையாடல் அபாரம். அங்கே இந்த இரண்டுமே இல்லாமல் புரட்சித் தமிழன் சத்யராஜ் நடித்த 'கெளரவர்கள்' படம் போட்டிருந்தார்கள்.

வேறு வழி.. அப்போதே பத்து மணி ஆகியிருந்தபடியால் வேறு எங்கும் போக நேரம் கிடைக்காத சூழலால் சரி. வந்தது வந்துவிட்டோம். பார்த்து தொலைவோம் என்று முனங்கிக் கொண்டுதான் சென்றேன். அதேதான்.. அதேதான். எப்பவாச்சும் ஒரு தடவைதான் நமக்கெல்லாம் இன்ப அதிர்ச்சி கிடைக்கும். நேத்திக்கு கிடைக்கலை..

புரட்சித் தமிழனுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து அதிர்ச்சியாயிருக்கு. தியேட்டருக்குள்ள மொத்தமே 9 பேர்தான். அதுல இரண்டு பேர் தியேட்டர்ல வேலை பார்க்குறவங்க.. என்ன செய்யறது? புரட்சித் தமிழனின் ரசிகர் மன்றங்களெல்லாம் என்ன ஆச்சு..? அவருடைய தீவிர ரசிகர்களெல்லாம் இப்ப எங்க போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க.. வலைவீசித் தேடணும் போல இருக்கே..

அப்புறம், இப்பல்லாம் தமிழ்நாட்டு ஜனங்களுக்கு தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறதைவிட டிவி சீரியல் முக்கியமா போயிருச்சு.. மொதல்ல நாட்டுல செய்தி சேனல்களை தவிர மீதி சேனல்கள் அத்தனையையும் தடை செய்யணும்பா. அப்பத்தான் சினிமா தொழில் வளரும். சினிமா தொழிலாளர்கள் வாழ்வாங்க. அவங்க குடும்பம் நல்லாயிருக்கும். தமிழ்க் கலாச்சாரம் வளர்ந்து கொண்டே போகும்..

யார் கேக்கப் போறா..? 'முதல்வன்' படத்துல வர்ற மாதிரி எனக்கு ஒரு நாள் பிரதமர் பதவி கிடைச்சா இதை செஞ்சிருவேன்.. சரி.. நம்ம புலம்பலை விட்ருவோம்.. படத்துக்கு வருவோம்.

சினிமாவுலகத்துல புயல் அடிச்ச வேகத்துல அண்டா, குண்டாவே தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கறப்போ சில்வர் டம்ளர்களையெல்லாம் கணக்குல எடுத்துக்க முடியுமா? அப்படித்தான் விக்னேஷ் அப்படீன்ற நடிகர் ஓய்ஞ்சு போய் நடிக்க வாய்ப்பில்லாம தவியாய், தவிச்சு கடைசியா ஒரு தயாரிப்பாளரைப் புடிச்சு இதுல ஹீரோவா நடிச்சிருக்காரு..

அவர் மட்டும் நடிச்சா அவர் குடும்பம் மட்டும்தான பார்க்க முடியும்..? கிண்டலாவே இருந்தாலும் இதுதானே உண்மை. அதுனால துணைக்கு புரட்சித் தமிழனை வளைச்சுப் போட்டு தனக்கேத்தாப்புல ஒரு கதையை ரெடி பண்ணி கொண்டாந்துட்டாரு..


'தளபதி' ஸ்டைல் கதைதான். மம்முட்டி-சத்யராஜ், ரஜினி-விக்னேஷ். வேலைவெட்டி இல்லாம தண்டச்சோறா தாய் மாமனோட சேர்ந்து ஊர்ல லூட்டி அடிச்சிக்கிட்டிருக்குறவரு விக்னேஷ். ஒரு நாள் இவங்க அடிச்ச லூட்டியால கோவில் உண்டியலை காவாளிப் பயபுள்ளைக கூட்டம் ஆட்டையைப் போட்டுட்டு போயிடறாங்க. இதுனால தண்டப் பணமா 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை விக்னேஷோட குடும்பம் கொடுக்கணும்னு ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்த சினிமா பஞ்சாயத்து கோர்ட்டு, தீர்ப்பு சொல்லுது.

வீட்டைச் சுத்தமா கழுவி, மொழுகிவிட்ட மாதிரி அத்தனை உருப்படியையும் தூக்கிட்டுப் போன பின்னாடிதான் நம்ம விக்னேஷுக்கு புத்தி வருது.. “இனிமேலாச்சும் உருப்படியா நான் வேலைக்குப் போறேன்ம்மா..” என்று தனது அம்மாவிடம் கெஞ்சி, உருகி, மருகி அழுகிறார்.

பஸ்ஸ்டாண்டில் டூவிலர் ஸ்டேண்ட்டை கவனிக்கும் பொறுப்பை வாங்கித் தருகிறார் அவருடைய சித்தப்பாவாக நடித்திருக்கும் கவிஞர் பிறைசூடன். வேலைக்குப் போன இடத்தில் தானாகத் தேடி வரும் வம்பை விலைக்கு வாங்கிக் கொள்கிறார். தானே விட்டாலும் அடிதடி தன்னை விட மறுப்பதால் அடித்தவர்களை நொறுக்கியெடுத்துவிட்டு லாக்கப்பில் வந்து குத்த வைத்து உட்கார்ந்து கொள்கிறார்.

“ஒரு சுண்டைக்காய் பயலா எல்லாரையும் அடிச்சான். கொண்டாங்கடா அவனை..” என்று ஊரில் இருக்கும் ஒரேயொரு தாதா விஜயரகுநாததொண்டைமான் ஆணையிட எஃப்.ஐ.ஆர். போட்ட பின்பும் தாதாவின் ஆட்கள் விக்னேஷை கடத்திக் கொண்டு போய் தொண்டைமானின் முன்னால் அதாங்க புரட்சித் தமிழன் சத்யராஜ் - நிறுத்த.. அன்றிருலிருந்து சத்யராஜுக்கு தளபதியாகிறார் விக்னேஷ்.


விக்னேஷ் செய்த அடிதடிக்கு மூல காரணமாக இருந்த ஹீரோயினுடன் அவ்வப்போது கொஞ்சம் லவ்வுகிறார். அதே நேரத்தில் அடிதடியில் அடிபட்ட ஊர் எம்.எல்.ஏ.வின் மகனோ, “ஹீரோயினும் வேணும்; விக்னேஷும் சாகணும்” என்று கருவிக் கொண்டிருக்கிறான்.

இடையில் தொண்டைமானின் தொண்டையில் முள் வைக்காத குறையாய் அவருடைய பழைய மாப்பிள்ளை(பானுசந்தர்) அவ்வப்போது கொல்வதற்கு ஆளை அனுப்பி காமெடி செய்து கொண்டிருக்கிறார்.


இடையில் எம்.எல்.ஏ. திடீரென்று உள்துறை மந்திரியாகிவிட தொண்டைமானுக்கு சனி தசை துவங்குகிறது. தனது மனைவியின் தங்கையான ஹீரோயினை மந்திரியின் மகனுக்கு கட்டிவைத்துவிட்டு தான் சென்னைக்கு கமிஷனராகிவிட எண்ணுகிறார் தற்போதைய ஊர் கமிஷனர் ரஞ்சித். இதற்காக அவர் தனது காய்களை மூவ் செய்கிறார்.

சத்யராஜிடம் விக்னேஷ் வேலை செய்வது தெரிந்தும் அவரிடம் ஹீரோயினை கொலை செய்யணும். இல்லைன்னா அவர் மேல இருக்குற பழைய கேஸையெல்லாம் கைல எடுக்க வேண்டி வரும் என்று ரஞ்சித் சொல்ல.. விக்னேஷின் காதல் பற்றித் தெரியாத சத்யராஜ் விக்னேஷிடமே ஹீரோயினை கைமா பண்ணும் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

விக்னேஷ் காதலையும் விட முடியாமல், நன்றிக் கடனையும் தீர்க்க முடியாமல் அல்லாட.. பானுசந்தர் மனம் தளராமல் தொண்டைமானை போட்டுத் தள்ள அடுத்த ஆளை அனுப்பி வைக்க.. உள்துறை மந்திரி தனது மகனுக்கு ஹீரோயினை மணமுடிக்க நெருக்கடி கொடுக்க.. ரஞ்சித் தனது கொழுந்தியாளை வைத்து கமிஷனர் பதவிக்காக முட்டி மோதிக் கொண்டிருக்க.. யார் ஜெயித்தார்கள் என்பதுதான் மிச்ச மீதிக் கதை..


ஏதோ அடிச்சுப் பிடிச்சு கதையைச் சொல்லிப்புட்டேன்னு நினைக்கிறேன்.

‘தூத்துக்குடி', ‘பூவா, தலையா?', ‘வீரமும், ஈரமும்' என்று ஏற்கெனவே 3 திரைப்படங்களை இயக்கிய அனுபவமுள்ள சஞ்சய்ராம்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். சேலத்தைச் சேர்ந்த பத்து திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்களாம்.

ஆடியோ ரிலீஸ் சமயத்தில் அந்தத் தயாரிப்பாளர்களை வானளாவப் புகழ்ந்து தள்ளினார்கள் அனைவரும். நாமும் இப்போது அவர்களை பாராட்டிக் கொள்ளுவோம். ரொம்ப தில்லுங்க உங்களுக்கு..!

விக்னேஷோட மார்க்கெட் என்ன? சத்யராஜோட மார்க்கெட் என்னன்றதையெல்லாம் தெரிஞ்சு வைச்சுக்கிட்டுத்தான் படத்தை தயாரிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். லோ பட்ஜெட் படம்கிறது தெளிவா தெரியுது.

குறைஞ்ச நாள்ல ஷூட்டிங் எடுத்திருக்காங்க போலிருக்கு.. ஒரே காஸ்ட்யூம் அடுத்தடுத்து வந்து நிக்குது.. பிராப்பர்ட்டீஸ்கூட மாத்தாம விட்டிருக்கிறதை பார்த்தா எடுத்துத் தள்ளியிருக்கிற ஸ்பீடு நல்லாத் தெரியுது...


விக்னேஷ் அருவா மீசையோட வர்றார்.. அவர் நடிச்சு அதிகமா நான் பார்த்ததில்லை. ஆனா அவரோட கேரக்டர் என்னன்றதையே பதிவு செய்யாம ஏதோ குழந்தைத்தனமானவர்ன்னே காட்டி கடைசிவரைக்கும் கொண்டு போனதால ஹீரோன்ற மெஸேஜே நம்ம மண்டைல ஏறலை..

சண்டைக் காட்சில எல்லாரும் இருக்குற இடத்துல இருந்தே அடிப்பாங்க. இதுலதான் தப்பிச்சு ஓடிக்கிட்டே அடிக்கிறாரு. கொஞ்சமாச்சும் யதார்த்தத்தைத் திணிப்போம்னு இயக்குனர் நினைச்சுக்கிட்டாரு போலிருக்கு..

டீ காசு கொடுக்கலேன்னு கோபப்படுறவரு, “எங்க கணேசனை கல்யாணம் செஞ்சுக்குங்க.. உங்களை நல்லா வைச்சுக்குவாரு”ன்னு சின்னப் புள்ளைக சொன்னவுடனேயே கன்னத்துல அறையற ஹீரோயின்கிட்ட ஒரு சின்ன முறைப்பு.. கோபம்.. ம்ஹூம்.. ஒண்ணும் இல்லாம.. அப்பிராணியா பின்னாடியே ஓடுறதை பார்த்தா “இன்னாங்கடா கூத்து இது..”ன்னு கேக்கத் தோணுது..

நிறைய சீன்களை டிவி சீரியல்கள்லேயே பார்த்ததால் அலுப்புத் தட்டுது.. அதுக்காக டிவி சீரியல் மாதிரியேவா எடுக்குறது.. All Artistes Combination-ல இயக்குநர் கஷ்டப்பட்டு டைம் மேனேஜ் செஞ்சு ஷூட் செஞ்சிருக்காரு.. பாவம் அவரும்தான் என்ன செய்வாரு..?

இப்போ பாருங்க. ஹீரோயினுக்கே சம்பளம் தரலையாம். படத்தை ரிலீஸ் செஞ்ச அன்னிக்கு நடிகர் சங்கத்துல கம்ப்ளையிண்ட் கொடுத்து அந்தப் பொண்ணு 2 லட்சம் ரூபாய் பாக்கியை வாங்கியிருக்கு. அட ஹீரோயின் யாருன்னு சொல்லலியே..? அதாங்க நம்ம கிளி மூக்கு மோனிகா..

சிலந்தி படத்துல கடைசி நேரத்துல போட்டோவுக்கு அப்படியொரு போஸ் கொடுத்து தயாரிப்பாளரையும், இயக்குநரையும் வாழ வைச்ச பொண்ணு அது. அதையே கண்ணு கலங்க வைக்கலாமா?


எந்தக் கோணத்துல பார்த்தாலும் இந்தப் பொண்ணை அடையாளம் கண்டுபிடிக்கிறது மகா கஷ்டமா இருக்குப்பா. டைட் குளோஸப் ஷாட் வைச்சாத்தான் தெரியுது மோனிகான்னு.. இது யாரோட குற்றம்? கேமிராமேன் செஞ்ச சதியா? இயக்குநர் செஞ்ச லொள்ளான்னு தெரியலை..

இரண்டு பாட்டுக்கு வஞ்சகமில்லாம ஆடிக் காண்பிச்சிருக்கு. பார்க்கலாம்.. நடிப்பு.. ம்.. சத்யராஜூக்கு அப்புறம் கொஞ்சூண்டு நடிப்பைக் காமிச்சிட்டு கிளிசரினுக்கு கொஞ்சம் வேலை கொடுத்திருக்கு.

புரட்சித் தமிழனுக்கு நிறைய சீன்ல வேலையே முகத்துல தோரணம் காட்டுறதுதான். அப்படியொண்ணும் பெரிய வேலையில்லீல்ல. அண்ணன் எத்தனை படம் பார்த்திருப்பாரு. ஒரே காஸ்ட்யூம்தான்.. ஒரே ஒரு சீன்ல மட்டும்தான்.. சின்னப்பதாஸ் மாதிரி வாய்ல பீடிய வழிச்சுக்கின்னு உள்துறை அமைச்சர் வீட்ல வந்து சவுண்டு விடுற சீனை மட்டும் இனிமேல் அடிக்கடி சின்னச் சின்ன சேனல்ல பார்க்கலாம். அந்தப் பழைய தெனாவெட்டு சத்யராஜை எங்க போய் பார்க்குறது..? இன்னமும் ஆளுக்கு தானா வருதுய்யா அது..

பானுசந்தர் பாவம்.. தெலுங்கு அடிதடி படங்களில் அநேகமாக புரட்சிக்காரனாகவோ, இல்லாவிடில் நேர்மையான போலீஸ்காரனாகவோ நடித்து முடித்து ரிட்டையர்டானவரை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தணுமோ அந்த அளவுக்கு செஞ்சுப்புட்டாங்க..

தன்னோட பழைய தரை டிக்கெட்டான உள்துறை அமைச்சரோட பேசுற அந்த ஒரு சீன்தான் மனுஷனுக்கு வசமா சிக்கிருக்கு.. நல்ல டிவிஸ்ட்டான காட்சி அது.. பானுசந்தரின் நடிப்பும் இந்த ஒரு காட்சியில் பேர் சொல்லும் விதமாக உள்ளது.

எம்.எல்.ஏ.வா இருந்து அமைச்சரா அவதாரமெடுக்குறவரு இயக்குநர் மனோஜ்குமார். பையனுக்கு பீர் பாட்டிலை உடைச்சுக் கொடுத்து “இதைக் குடிடா மவனே.. கொஞ்சம் சோகமும் தீரும்.. உடம்பு வலியும் போகும்..”ன்னு அன்பா சொல்ற ஒரு அப்பன். எனக்கெல்லாம் இப்படியொரு அப்பன் வாய்ச்சிருக்கக் கூடாதா..?

பானுசந்தரை டுமீல் செய்துவிட்டு தரையில் இருந்து சோபாவுக்கு ஜம்ப் செய்துவிட்டு “யாருடா தரை டிக்கெட்டு..?” என்று கேட்டு அதகளம் செய்யும் அந்த ஒரு காட்சிலதான் இவரும் நடிப்பைத் தொட்டுட்டாரு..


அப்புறம் நம்ம ரஞ்சித்.. கமிஷனர் ஆஃப் போலீஸ்.. ஆனால் போட்டிருக்கிற போலீஸ் டிரெஸ்ஸை பார்த்தா போலீஸ்காரங்களே சிரிப்பாங்க.. இதுக்கெல்லாம் மலையாளத்துல சுரேஷ் கோபி போலீஸா நடிக்குற படத்தைப் பார்க்கணும்ய்யா.. காக்கி டிரெஸ்ஸிங்ல அவரை அடிச்சுக்க முடியாது. அப்படியொரு பிட்னஸ் தெரியும்..

அழகன் தமிழ்மணி, சடுகுடு யுவராணி, குயிலி, சச்சு, அண்ணாமலை படத்தின் கதாசிரியரும், இயக்குநருமான மீனாட்சிசுந்தரம் என்று மிகப் பெரும் லிஸ்ட்டே இதுல நடிச்சிருக்கு.

இசை தினா. ஒரு குத்துப்பாட்டுக்கு பறையடி அடித்திருக்கிறார். “ஆஹா சொக்க வைச்சான்” பாட்டும் “நேசமா நினைச்சவ” பாடலும் கேட்கும்படியிருந்தது.. ரொம்ப நாள் கழித்து பாடல் வரிகள் காதுகளில் விழுந்து தெரித்தன. படத்தின் தீம் மியூஸிக்கையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.. நன்றி தினா.

பெரும் லாஜிக்குகளை படு லாவமாகக் கடத்திக் கொண்டு போயிருக்கும் இயக்குநர் கிளாமாக்ஸில் செய்திருக்கும் படு சொதப்பல் தமிழ்த் திரையுலகம் இதுவரை காணாதது..

பொட்டல் காட்டில் சத்யராஜையும், அவரது ஆட்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு ஹீரோயினையும், விக்னேஷையும் கேட்டுத் துன்புறுத்தும் காட்சியின் இறுதியில் வாய் விட்டுச் சிரிக்க வைத்தது ரஞ்சித்தின் அஸால்ட்டான முடிவு.

ஹீரோயினும், விக்னேஷும் தாங்கள் பிரிவதாகச் சொன்ன பின்பு, சத்யராஜ் திடீர் என்று தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொள்ள.. “வாங்க போலாம்..” என்று ரஞ்சித் சக போலீஸாரிடம் சொல்லிவிட்டு நடையைக் கட்ட தாங்கள் வந்த போலீஸ் வேன், போலீஸ் ஜீப்களைக்கூட எடுக்காமல் போலீஸ் கூட்டம் அப்படியே பொடி நடையாய் நடப்பதைப் பார்த்து பேஸ்த்தடித்துப் போய் எழுந்த வேகத்தில் திரும்பவும் அமர்ந்துவிட்டேன். இப்படியுமா இந்தக் காலத்தில் ஒரு காட்சியை வைப்பார்கள்..? இயக்குநருக்குத்தான் தோணலைன்னா.. அஸோஸியேட். உதவி இயக்குநர்களெல்லாம் என்னதான் செஞ்சுக்கிட்டிருந்தாங்களோ தெரியலை..

என்ன செய்யறது? நமக்கு வாய்க்குறது அவ்ளோதான்.. படத்தை ரிலீஸ் செஞ்சாச்சு.. ஏழு நாள் படமும் ஓடி முடிஞ்சிருச்சு. கணக்குப் போட்டுப் பார்த்து மிச்சம், மீதியிருந்தா அந்த பத்து தயாரிப்பு தெய்வங்களும் பங்கு பிரிச்சுக்கட்டும்..

முடிவுல நான் என்னத்த சொல்றது..? என்னிக்காச்சும் ஒரு நாள் வீட்டு டிவில போடுவாய்ங்க.. அப்போ பார்த்துக்குங்க..

“படம் எடுக்கிறது எவ்ளோ கஷ்டம்னு தெரியாம.. மவனே.. ஓசில இடம் கொடுக்குறானேன்னு இஷ்டத்துக்கு விமர்சனம் எழுதி தள்ளிக்கிட்டிருக்க.. ஒரு நாளைக்கு இருக்குடி உனக்கு....!!!” - தயவு செய்து இப்படியெல்லாம் திட்டி மெயில் அனுப்ப வேண்டாம்..

எனக்குத் தெரிஞ்சது விமர்சனம் செய்ய மட்டும்தான். படம் எடுக்க இல்லை.. ஹி.. ஹி.. ஹி.. மன்னிச்சுக்குங்கோ..

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

ஆதிசேஷனும், பணியாரக் கிழவியும்

21-10-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


அமரர் ஆதிசேஷன்




அரவம் இல்லாச் சூழலில்
அரவம் தீண்டி வைகுந்தம்
போனான் ஆதிசேஷன்..

 

பணியாரக் கிழவி


 

பள்ளி வயதில்
பணியாரமே காலையுணவு.
தெருமொக்கில் கூரை இல்லாத
சிறு கடை கிழவியுடையது..
எப்போதும் எண்ணெய் வாசம்
கிழவியைச் சுற்றி..
 

அவசரத்திற்காகவேனும்
அரைகுறையாக சுடுவது
கிழவியின் வழக்கமில்லை..
கரண்டியால் குத்தியெடுத்து
அதனை டப்பாவிற்குள்
போடுவதே ஒரு தனி கலை..
ஒரு பணியாரம் அஞ்சு காசு..
எப்பவும் காலையில்
ஆறு பணியாரம்
முப்பது காசு..
சுருக்குப் பை தாங்காத அளவுக்கு
சில்லறைகள் குலுங்கும்..
நிமிடத்தொரு முறை
அவிழ்க்கவும், மறுபடியும் இடுப்பில்
கட்டவுமே கிழவிக்கு நேரம்
சரியாய் இருக்கும்.
ஆனாலும் முடிச்சுப் போட
மறப்பதில்லை..
அந்தப் பணியாரமும்
என்னை மறந்ததில்லை..

காலம் வெகுவேகமாக ஓடிப் போக
மறந்தது பணியாரத்தையும்
கிழவியையும்..
ஊருக்கு வந்திருந்த
நேரத்தில் அக்கா
எங்கோ பார்த்தநோக்கில் சொன்னாள்..
பணியாரக் கிழவி இழுத்துக்கிட்டிருக்கு..

கழுத்தில் இருந்த ஒரு
கறுப்புக் கயிறை
முன்னுக்குள் தள்ளியபடி
தொண்டை நரம்பு
உள்ளே, வெளியே என்று
துடித்துக் கொண்டிருக்க..
கிழவியைச் சுற்றிலும்
எப்போது போகும் என்ற
எதிர்பார்ப்புடன் சொந்தங்கள்..

ஒட்டிப் போன
பாலைவனத்து ரேகை பதிந்த
கன்னங்களையும் தாண்டி
கூர்மையான பார்வை..
அருகில் சென்றவனை
தன் கையால் பிடித்தாள் கிழவி..
பிசுபிசுத்தது கை..
விலக்கிய பின்பு
என் கையைப் பார்த்தேன்..
அதே பிசுபிசுப்பு..

திரும்பிப் பார்க்காமல்
வந்தபோது
மனம் முழுவதும்
நிரம்பியிருந்தது
பணியாரம்..!

குசும்பனின் சீக்ரெட் போட்டோ அம்பலம்..!

20-10-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கல்யாணத்திற்குப் போனாலும், கருமாதிக்குப் போனாலும் ஒரு சிலருக்கு ராஜ மரியாதை கிடைக்கும். மற்றவர்கள் சொம்பாக இருக்க வேண்டியதுதான். இது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் லக்கு..!

இன்னிக்குப் பாருங்க.. தற்செயலா மல்லிகா ஷெராவத்தோட போட்டோ தேடி(எதுக்குன்னுல்லாம் கேக்கப்படாது) அலைஞ்சுக்கிட்டிருந்தேன். கண்ணுக்குக் குளிர்ச்சியா ஒரு நல்ல ஸ்டில் கிடைச்சா போதும்னு தேடிக்கிட்டிருக்கும்போது மான் கூட்டத்துக்கு நடுவுல ஒரு சிம்பன்ஸி உக்காந்திருந்த மாதிரி நம்மாளு ஒருத்தன் உக்காந்திருந்தான்.

அட.. இந்தக் குரங்கை எங்கயோ பார்த்த மாதிரியிருக்கேன்னு மூளையைக் கசக்கிக்கிட்டு யோசிச்சா அட நம்ம குசும்பன்..!



ஆபீஸ்ல இருந்த கேரளத்துப் பொண்ணுங்க எல்லாம் வரிசையா ரிலீவ் ஆயிட்டதால "போஸ்ட் போட மாட்டேன். பஸ்ஸுல ஏற மாட்டேன்.. ஜிடாக்குக்கு வர மாட்டேன்.. பேஸ்புக்ல தலையைக் காட்ட மாட்டேன். ட்விட்டர்ல முகம் கொடுக்க மாட்டேன்"னு அடம் பிடிச்சிட்டு வீட்ல குப்புறப் படுத்துத் தூங்குறானாம்பா..!

இந்தப் பய கெட்ட கேட்டுக்கு எம்புட்டு தகரியமா எவ்ளோ அழகா போஸ் கொடுக்குறான் பாருங்க. நான் தேடுனது மல்லிகா ஷெராவத்தை. இவன் எதுக்கு நடுவால வர்றான்..? இவனுக்கும் மல்லிகாவுக்கு என்ன தொடர்பு..? இல்ல கூகிள் கம்பெனிக்கு காசு கொடுத்து இது மாதிரி செட்டப்பு நடத்துறானா..? ஒண்ணும் புரியலை..!

ஆருக்காச்சும் உண்மை தெரிஞ்சா சொல்லுங்கப்பா..!

டிஸ்கி :  யார், யாரோ கும்மி போஸ்ட் போட்டு கல்லா கட்டும்போது நான் செய்யக் கூடாதா என்ன..?

சென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை..!

19-10-2010            

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரொம்ப நாட்களாகவே இந்தக் கதையை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்தபடியேதான் இருந்தேன். ஆனால் நிறைய சோம்பேறித்தனத்திற்கு அடிமைப்பட்டுவிட்டதால் பாதி எழுதி, மீதியை விட்டு வைத்திருந்தேன். இப்போதுதான் நேரம் வந்தது. எழுதுகிறேன்.

2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்தான் எனது 'புனிதப்போர்' என்னும் குறும்படத்தை எடுத்து முடித்திருந்தேன். அதற்கடுத்த மாதம் எடிட்டிங் செய்து முதல் காப்பி எடுத்து நான் மட்டுமே பார்த்து திருப்திபட்டிருந்த நிலையில், சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் இதை தள்ளிவிட்டு அவர்களையும் கொடுமையில் ஆழ்த்தலாமே என்ற நல்லெண்ணம் எனக்குள் பிறந்தது.

அப்படி என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான 'நிழல்' பத்திரிகையின் ஆசிரியர் திருநாவுக்கரசிடம் இதனை கொடுத்து பார்த்து அனுபவிக்கும்படி சொல்லியிருந்தேன். அவரும் பார்த்துவிட்டு “முதல் முயற்சிதானே.. நல்லாத்தான் இருக்கு. எல்லாருக்குமே இதே மாதிரியொரு எண்ணம் இருக்கும். ஏன்னா அவங்கவங்களுக்கு முதல் முதல்லா மனதுக்குள் எழுந்த கதை அவ்வளவு சீக்கிரம்  அவங்களை விட்டு வெளில போகாது. ஆனால் அது காலம் கடந்ததாகவும் இருக்கும். எடுக்கவும் முடியாது. இது போன்ற பிரச்சினைகள் எல்லா படைப்பாளிகளுக்கும் உண்டு. மனதைத் தளர விடாதீங்க. அடுத்தப் படைப்பை உருவாக்குற வழியைப் பாருங்க..” என்று உற்சாகமூட்டினார்.

அப்படியே கூடவே, தமிழ்நாட்டில் எங்கெங்கு ஆவணப் பட, குறும்பட விழாக்கள் நடைபெறுகின்றன என்பதைச் சொல்லி அங்கேயெல்லாம் எனது படத்தை போட்டிக்கு அனுப்பச் சொன்னார். நானும் திருப்பூர், மதுரை, டெல்லி, மும்பை என்றெல்லாம் எனது 'புனிதப்போர்' படத்தினை போட்டிக்கு அனுப்பி வைத்தேன். பரிசை பத்தி கேட்டு என் வயித்தெரிச்சலை கொட்டிக்காதீங்க. அதனால இதோட விட்ருங்க..!

இப்போதுதான் ஒரு நப்பாசை. ஏதோ 'தேசிய விருது' , 'தேசிய விருது'ன்னு சொல்றாங்களே.. அதுக்கு இதை அனுப்பி பார்க்கலாமே என்று ஒரு ஆசை தோன்றியது. லோக்கல் விருதுகள் கிடைக்காமல் போனாலும் போகலாம். ஆனால் எனது 'புனிதப்போரு'க்கு தேசிய விருது கண்டிப்பாக கிடைக்கும் என்ற எனது அசைக்க முடியாத நம்பிக்கையை தினமும் உரம் ஊற்றி வளர்த்தான் என் அப்பன் முருகன்.

தேசிய விருதுக்கு படங்களை அனுப்ப விரும்பினால் அது முதலில் சென்சார் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்ததால் சென்சார் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டேன். சாஸ்திரி பவனில் நான் கால் வைத்தபோது, கூடவே சனீஸ்வர பகவானும் என்னுடன் தொற்றிக் கொண்டது எனக்கு அப்போது தெரியவில்லை.

டிடி எடுத்துத் தரச் சொன்னார்கள். அதைக் கொடுத்தவுடன் அப்ளிகேஷனை கொடுத்தார்கள். டிவிடிக்கள்-2, எடிட்டிங் செய்த இடத்தில் இருந்து சர்டிபிகேட், தயாரிப்பாளரிடம் இருந்து சான்றிதழ் என்று நிபந்தனைகள் பல இருந்தன. இதில் கொடுமையானது முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதித் தர வேண்டும் என்பதுதான்.

ஸ்கிரிப்ட் என்றால் வசனம் மட்டுமல்ல.. கதாபாத்திரங்களின் அசைவுகளையும் சேர்த்து, கேமிரா கோணங்களின் இருப்பு, எந்த வகையான ஷாட்டுகளை வைத்திருக்கிறோம்.. காட்சியில் இருக்கும் மற்றவர்களின் ரியாக்ஷன் என்ன என்பது முதற்கொண்டு அத்தனையும் பதிவு செய்யப்பட வேண்டும்.

இதுபோல் சென்சார் ஸ்கிரிப்ட் எழுதுவதற்காகவே ஸ்பெஷலான எழுத்தாளர்கள் சென்சார் அலுவலகத்தின் வாசலில் நின்றிருப்பார்கள். இதற்குத் தனியாக புரோக்கர்களும் இருக்கிறார்கள். ஆர்.டி.ஓ. அலுவலகம் போலவே.. சென்சார் போர்டு அலுவலகத்திலும் இந்த புரோக்கர்கள் சகல துறைகளிலும் புகுந்து வருவார்கள். நாம் வரவேற்பறையோடு நிற்க வேண்டியதுதான்.

“இவர்களைப் பிடித்தால் உடனே காரியம் முடிந்துவிடும்” என்று என்னிடம் சென்சார் அலுவலக அதிகாரி ஒருவர் நான் அப்ளிகேஷனை வாங்கிக் கொண்டு வெளியில் வரும்போதே சொன்னார். வெளியில் என்னை வரவேற்ற அந்த புரோக்கரிடம் எனது குறும்படம் பற்றிச் சொல்லி “படம் மொத்தமே 12 நிமிடங்கள்தான்.. எவ்வளவு ஆகும்..?” என்று கேட்டேன். வாய் நிறைய பான்பராக்கை குதப்பியபடியே, “12 நிமிஷம்னா கொஞ்சம் குறைச்சுக்கலாம். ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுங்க. போதும்.. நான் சொல்லும்போது வந்தால் போதும். ஸ்கிரீனிங்கப்போகூட நீங்க வர வேண்டாம். சர்டிபிகேட்டை கைல வாங்கி வைச்சுக்கிட்டுத்தான் நான் உங்களைக் கூப்பிடுவேன்” என்று உறுதிமொழியளித்தார்.

ஆனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கே இரண்டாயிரம் ரூபாய்தான் சென்சார் ஸ்கிரிப்ட்டுக்கு கொடுக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியும் என்பதால் “சரி.. யோசிக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அன்றைய என்னுடைய வாழ்க்கை நிலைமையே பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தது. எதுக்கு வீணா 2000 ரூபாயை வேஸ்ட் செய்யணும் என்று நினைத்து நானே ஸ்கிரிப்ட்டை எழுதிவிட்டேன்.

டி.வி.டி. மற்றும் அனைத்து ஆவணங்களுடனும் நேரில் சென்று எனது விண்ணப்பத்தினை சமர்ப்பித்தேன். வாங்கிக் கொண்ட ஒரு பெண்மணி.. “என்ன நீங்களே ரெடி பண்ணிட்டீங்களாக்கும்..?” என்று அலுத்தபடியே கேட்டார். “ஆமாம்.. ஏன் மேடம்..?” என்றேன். “அதான் வாசல்ல எழுதறவங்க இருந்தாங்களே..? அவங்ககிட்ட சொல்லியிருக்கலாமே?” என்றார். “எனக்கே எழுதத் தெரியுங்க.. அதான் நானே எழுதிட்டேன்” என்றேன். பட்டென்று சுட்டெரித்துவிடுவதைப் போல் முறைத்தார் அவர். “என்ன மேடம் அப்படி பார்க்குறீங்க..?” என்றேன் கூலாக.. “உங்களுக்குத் தெரியாதுங்க.. உங்க ஸ்கிரிப்ட்டுல ஏதாச்சும் ஒரு சின்ன தப்புன்னாலும் 'இங்க சர்டிபிகேட் தர முடியாது'ன்னு சொல்லிருவாங்க.. அப்புறம் நீங்க கட்டின பணம்கூட வேஸ்ட்டுதான்.. நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்” என்று சொல்லிவிட்டு ஏதோ வேண்டா வெறுப்பாக வாங்கி உள்ளே வைத்துக் கொண்டார்.

நாம பார்க்காத கவர்ன்மெண்ட் ஆபீஸா..? என்ற நினைப்பில் வீடு வந்தேன். இரண்டு நாட்கள் கழித்து சென்சார் ஆபீஸில் இருந்து என்னை போனில் அழைத்தார்கள். “இன்னிக்கு சாயந்தரம் 5 மணிக்கு ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர்ல இருக்குற எங்க பிராஞ்ச் ஆபீஸ்ல உங்க படத்தை பார்க்கப் போறாங்க. நேரா அங்க 5 மணிக்கு போயிருங்க..” என்றார்கள்.

நானும் மிகச் சரியாக ஐந்து மணிக்கு அங்கே போய்ச் சேர்ந்தேன். திரைப்படங்களை சென்சார் செய்யும்போது அதிகாரிகள் சொல்லும் நாளில், அவர்கள் சொல்லும் பிரிவியூ தியேட்டர்களில் தயாரிப்பாளர்கள் சகல வசதிகளுடன் படத்தைத் திரையிட்டுக் காட்டுவார்கள்.

ஆனால் ஆவணப்படங்கள், குறும்படங்களை மட்டும் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரின் உள்புறம் இருந்த ஒரு அலுவலகத்தில்தான் பார்த்து வந்தார்கள். இப்போதும் இது தொடர்கிறதா என்று தெரியவில்லை. அங்கு சென்றவுடன் ரிசப்ஷன் பெண்ணிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கேட்டபோது உள் அறைக்குள் போகச் சொன்னார். அறையில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்மணியும் அமர்ந்திருந்தார்கள். என் பெயர், எனது தொழில், என்னைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டுக் கொண்டு “சரி.. நீங்க கிளம்புங்க. நாங்க படம் பார்த்துட்டு நாளைக்குச் சொல்லியனுப்புறோம்..” என்றனர். கிளம்பி வந்துவிட்டேன்.

மறுநாள் காலை 12 மணியிருக்கும். சென்சார் அலுவலகத்தில் இருந்து போன் செய்த ஒரு அம்மணி, “ஸார் உங்க ‘புனிதப்போர்' படத்துக்கு ‘சர்டிபிகேட் தர மாட்டேன்'னு சொல்லிட்டாங்க. நீங்க நேர்ல வந்து பேசுங்க..” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்..

“ஏன்.. ஏன்..?” என்று நான் கேட்டதற்கு, “எனக்கே தெரியாது ஸார்.. அதை நீங்க பெரிய ஆபீஸர்கிட்டதான் கேக்கணும்.. நேர்ல வாங்க..” என்றார் மறுபடியும். விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன். மறுபடியும் அதே அம்மணி.

இம்முறை என்னைப் பார்த்தவுடன் தலையில் அடித்துக் கொண்டவர், “நான்தான் முன்னாடியே சொன்னேன்லங்க.. ‘புரோக்கரை வைச்சு ரெடி பண்ணுங்க'ன்னு.. பாருங்க இப்போ ‘உங்களுக்குக் கொடுக்கவே கூடாது'ன்னு எழுதி வைச்சிருக்காங்க..” என்று சொல்லி சர்டிபிகேட் மறுக்கப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்கும் அந்த நோட்டைக் காட்டினார்.

அதில் ஆங்கிலத்தில், “வசனங்கள் முழுவதும் பெண்களை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதப்பட்டிருக்கிறது. எந்தவிதத்திலும் சர்டிபிகேட் கொடுக்கத் தகுதியில்லாதது இந்தப் படம்..” என்று எழுதப்பட்டிருந்தது. படம் பார்த்தது மூன்று பேர். இரண்டு ஆண்கள். ஒரு பெண். அதில் இரண்டு ஆண்கள் எதுவும் சொல்லாமல் போக.. இந்தப் பெண்மணி ஏதோ அதிசயத்தைக் கண்டுபிடித்ததுபோல் இதை எழுதி வைத்திருக்கிறார். அவர் பெயர் நிகிலா அசோக்குமார்.

“இப்ப நான் என்னங்க செய்யணும்?” என்றேன் அந்தம்மாவிடம். “பாபு ஸாரை பார்க்கணும்.. வெயிட் பண்ணுங்க. அவர் இன்னொரு படம் பார்த்துக்கிட்டிருக்காரு..” என்று சொல்லி அமர வைத்தார்கள்.

வேறொரு லேடி வந்தாங்க. “பாருங்க ஸார்.. அந்தம்மா ரொம்ப ஸ்டிரிக்ட். பிடிக்கலைன்னா அவங்க உறுதியா இருப்பாங்க. நீங்க அந்தம்மாகிட்ட போன்ல பேசிப் பாருங்க.. ‘ஏதாவது டயலாக்கை கட் செய்யணும்னா சொல்லுங்கம்மா கட் செஞ்சிடறேன்'னு சொல்லுங்க. அவங்க சொல்றதையெல்லாம் கட் செஞ்சிருங்க.. உடனே சர்டிபிகேட் கைக்கு வந்திரும். வீணா பிரச்சினையை பெரிசாக்காதீங்க..” என்று அட்வைஸ் மழை பொழிந்தார்.

“எடுத்ததே 12 நிமிஷ படம். அதுல ஒரு பொம்பளைகூட கிடையாது. எல்லாரும் ஆம்பளைங்கதான். அதுலேயும் அவங்க முகத்தைக்கூட காட்டாம கட் பண்ணியாச்சு. மிச்சம் இருக்கிறது வசனம்தான். அதுவும் இருக்கக் கூடாதுன்னு அப்புறம் அதுல என்னதாங்க இருக்கும்..?” என்றேன். “அந்த வசனத்துலதான பிரச்சினை.. பேசாம அந்தம்மா சொன்ன மாதிரியே செய்யுங்க.. இல்லைன்னா உங்களோட 1500 ரூபாய் வேஸ்ட்டாயிரும். அதுக்காகச் சொல்றேன்.. உங்களையும் பார்த்தா பாவமா இருக்கு..” என்று என்னை ஏதோ பிச்சைக்காரன் ரேஞ்சுக்கு கற்பனை செய்து பார்த்துவிட்டுச் சொன்னார் அந்தப் பெண்.

நானும் ஆஹா.. அரசு அலுவலகத்தில் நம்மளையும் மனுஷனா மதிக்கிறதுக்கு ஒரு ஜீவன் இருக்கேன்னு சந்தோஷத்துல இருந்தேன். ரெண்டே நிமிஷத்துல இடி விழுந்துச்சு. என்னை உள்ளே அழைத்தார்கள். அங்கே நான்கைந்து ஊழியர்கள் நின்றிருந்தார்கள். “உக்காருங்க ஸார்..” என்றார்கள். உட்கார்ந்தேன். “இங்க பாருங்க ஸார்.. உங்களுக்கா எவ்ளோ கஷ்டப்பட்டாவது, அந்தம்மாகிட்ட பேசி நாங்க சர்டிபிகேட் வாங்கித் தர்றோம்.. கவலையை விடுங்க..” என்றார் அட்வைஸ் செய்த அதே அம்மணி. பிட்டு படம் பார்க்கத் தியேட்டருக்கு போய், ஷகிலாவே நேரில் வந்து பக்கத்தில் அமர்ந்தது போல் சிலிர்ப்பாக இருந்தது எனக்கு..

பட்டென்று என் முன்னால் ஒரு ரசீது புத்தகத்தை வைத்த அந்தப் பெண், “இது எங்க குவார்ட்டர்ஸ் பக்கத்துல இருக்குற கோவில்.. அதை கொஞ்சம் பெரிசா கட்டலாம்ன்னு இருக்கோம். நீங்க உங்களால முடிஞ்சதை கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும். எவ்ளோ ஸார் எழுத? 500, ஆயிரம்..” என்று அவராகவே முடிவெடுத்ததைப் போல பேச.. பொசுக்கென்று போனது எனக்கு..

பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, “இல்ல.. இப்ப பணம் எதுவும் கொண்டு வரலையே..?” என்று இழுத்தேன். “சரி.. பரவாயில்லை ஸார்.. நாளைக்கு வந்து பணத்தைக் கொடுத்திட்டு சர்டிபிகேட்டை  வாங்கிட்டு போங்க..” என்றார். கோடு எங்கே இழுத்து எங்கே போடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். “சரி.. நாளைக்கு பார்ப்போம்ங்க..” என்று கொஞ்சம் கடுப்போடு சொல்லிவிட்டு எழுந்து வெளியே வந்து அமர்ந்தேன்.

அவர்களுடைய ஏமாற்றமோ என்னமோ.. கிட்டத்தட்ட 2 மணி நேரமாகியும் அழைக்கப்படாமலேயே இருந்தேன். எனக்குப் பின்னால் வந்தமர்ந்த தயாரிப்பாளர் வி.சேகர், தேனப்பன் ஆகியோர் தங்களது வேலையை முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டார்கள்.

சாவகாசமாக சென்சார் அதிகாரி பாபுராமசாமியின் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அவரும் என்னை மரியாதையுடன் அமர வைத்து என்னைப் பற்றிய முழுத் தகவலையும் தெரிந்து கொண்டவர், “உங்க படத்தை இப்பத்தான் பார்த்தேன். எனக்குப் புரியுது. (அருகில் இருந்த அலுவலர்களைக் காட்டி) இவங்க எல்லாருக்கும் புரிஞ்சது. அந்தம்மாவுக்கு மட்டும் புரியலை. விடுங்க. நான் அவங்களோட போன்ல பேசி புரிய வைச்சிட்டேன். சர்டிபிகேட் கொடுக்கச் சொல்லிட்டேன். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. குட் வொர்க்.. நல்லாத்தான் இருக்கு. வித்தியாசமான முயற்சி.. இது மாதிரி நிறைய பண்ணுங்க.. எட்டு பேரு நல்லாயில்லைம்பாங்க.. நாலு பேரு நல்லாயிருக்கும்பாங்க.. உங்க மனசுக்கு படம் பிடிச்சிருக்கா.. அது போதும். வெளில கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. இப்பவே சர்டிபிகேட் தரச் சொல்றேன்..” என்று சொன்னவர் இண்டர்காமில் யாரிடமோ எனக்கு சர்டிபிகேட் தரச் சொல்லி உத்தரவிட்டார்.

நானும் நிம்மதிப் பெருமூச்சுடன் வந்து அமர்ந்தேன். மறுபடியும் அதே ரசீது புக் அம்மணிகள் வேகமாக என்னிடத்தில் வந்து, “என்ன ஸார்.. உங்களுக்காக ஸார்கிட்ட எவ்ளோ ஸ்டிராங்கா பேசியிருக்கோம்.. நீங்க கவனிக்க மாட்டேன்றீங்க..?” என்றார்கள். நானும் பணிவாக, “நிஜமா என்னிடம் இப்ப பணம் எதுவும் இல்லீங்க... அதோட இந்த மாதிரி கோவிலுக்கு நன்கொடை கொடுக்கிறதெல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயம்..” என்று முகத்திலடித்தாற்போல் சொன்னேன். ஏதோ நாத்தனாரிடம் முறைத்துக் கொண்டு போவதைப் போல் பதிலே சொல்லாமல் முகத்தை மட்டும் வெட்டிக் காட்டிவிட்டுப் போனார்கள் அந்தப் பெண்மணிகள்.

'யு' சர்டிபிகேட்டுடன் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதியன்று பிற்பகலில் எனது முதல் கன்னி முயற்சிக்கான அரசு அங்கீகாரத்தை நான் வாங்கிய கதை இதுதான்.

எனது அந்தக் குறும்படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே 'பக்கம், பக்கமான வசனங்கள்' என்றார்களே தவிர.. 'நீக்கப்பட வேண்டிய வசனங்கள்' என்று சொல்லவில்லை. இது இயல்பாக தினம்தோறும் பெண்கள் மீது ஊடகங்களின் மூலம் சுமத்தப்படும் வார்த்தைகள்தான். இத்தனைக்கும், இன்றைக்கும் டிவி சீரியல்களில் வரும் வசனங்களில் கால்வாசிகூட நான் எழுதியதில் இல்லை.  ஆனாலும் இதை குரூரம் என்கிறார் அந்த அம்மையார்.

இதன் பின்பு நான் எந்தத் திரைப்படத்திற்குச் சென்றாலும் சென்சார் சர்டிபிகேட்டில் இந்த அம்மையார் பெயர் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பேன். இருந்தது நிறைய படங்களில்..

அத்தனைப் படங்களிலும் ஆபாச வசனங்களும், குலுக்கல் காட்சிகளும், அங்கங்களை குளோஸப்பில் அசைக்கும் காட்சிகளை வைத்திருந்து அந்தப் படத்திற்கு 'யு' சர்டிபிகேட்டும் கொடுத்து கையொப்பமிட்டிருக்கும் கொடுமையையும் கண்டு கொண்டே வருகிறேன்.

என்னால் பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்..? 

இவ்வளவு நேரம் இதனை பொறுமையாகப் படித்து முடித்திருக்கும் தோழர்களுக்கு எனது 'புனிதப்போர்' குறும்படத்தைக் காணும் வாய்ப்பை கொடுக்கவில்லையெனில் நான் நன்றி மறந்தவனாகி விடுவேன்..

இந்த மூன்றாண்டுகளில் நிறைய புதிய பதிவர்கள் வலையுலகில் நுழைந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் இதைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதைப் போல அவர்களும் இதனைப் பார்த்து பரவசமடைய வேண்டும் என்று எண்ணுகிறேன்.

புதிய பதிவர்களே.. என் இனிய தோழர்களே.. என் மீது பொறாமைத் தீயில் வெந்து உருகும் ஒரு சில பழைய பதிவர்கள், “பார்க்காதீங்க.. பேய் அடிச்சிரும்.. பிசாசு கடிச்சிரும்.. பூதம் தூக்கிட்டுப் போயிரும்..” என்றெல்லாம் உங்களை பயமுறுத்தக் கூடும். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், காதில் வாங்கிக் கொள்ளாமல் தைரியமாக இங்கே போய் எனது அந்த தேசிய விருதுக்குரிய, ஆஸ்கார் விருதை மயிரிழையில் தவறவிட்ட குறும்படத்தைப் பார்த்து பரவசமடையுங்கள்...

உங்களுடைய விலை மதிப்பில்லாத விமர்சனங்களை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

அன்புடன்

உண்மைத்தமிழன்

கவிதையும், கத்திரிக்காயும், பின்னே காதலும்..!

18-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


தோழி கேட்டார்
உன் கவிதையா..?
இருக்கவே இருக்காது என்றார்
திடமாக..!

எனக்கேன் கவிதை 
வசப்படவில்லை..!
காதலித்தால் மட்டும்தான் 
கவிதை வருமா..?

நான்தான் காதலிக்கப்பட்டவனில்லையே..!
பின் எப்படி 
கவிதையும் கத்திரிக்காயும் 
பின்னே காதலும்
வரும்..!?

தேடுகிறேன் தேடுகிறேன்
காதலையும், காதலியையும்..!

காதல் கிடைத்தால்
காதலி கிடைப்பதில்லை..
காதலி கிடைத்தால் 
காதல் கிடைப்பதில்லை..

பாசத்திற்கு ஏங்கினேன்..
அது தாயோடு போயிற்று..
அன்புக்கு ஏங்கினேன்
அது தந்தையோடு ஒழிந்தது..
பிரியத்திற்கு ஏங்கினேன்
உடன்பிறந்தாரோடு தொலைந்தது..
நேசத்துக்கு ஏங்கினேன்
நண்பர்களோடு முடிந்தது..

இப்போதுதான்
முதல்முறையாக
காதலுக்காக ஏங்குகிறேன்...

சில காதல்கள் 
பறந்து செல்ல
துணை நின்றேன்.
ஆனால் என் காதலைத்
துவக்கிவிடவே 
ஆள் இல்லை..!

பள்ளிக் காலத்தில்
வந்த காதல்
வருடத்தோடு முடிந்தது..!

இப்போது
திரும்பிப் பார்க்கிறேன்..!
அவளுக்கென்று
ஒரு மனம்..!

எப்போதாவது
தலையில்
ஒற்றைப் புஷ்பத்தோடு
யாரேனும் 
கடந்து போனால்
சட்டென்று 
நினைவுக்கு வருகிறது
அவள் நினைவு..!

காதலுக்கு 
தகுதியுண்டா?
அனுபவித்தவர்களிடம் 
கேட்டேன்..

காதலுக்கு 
முதல் தகுதி 
நீர் 
கவிதை ஆசிரியர் ஆவதுதான்
என்றனர்..

கவிதை எது 
என்றேன்..
காதலை
மறந்துவிடு 
என்றனர் பட்டென்று..

கவிதை இல்லாமல்
காதல் இல்லையா..?
காதல் இல்லாமல் 
கவிதை இல்லையா..?

காதல் எதற்கு?
கவிதை எதற்கு..?
நீண்டன என் 
கேள்விகள்..

காதல் வாழ்க்கைக்கு..
கவிதை காதலுக்கு 
என்றனர்..

கவிதையற்ற
காதலைத் தேடுகிறேன்
என்றேன்..

தேடு.. தேடிக் கொண்டேயிரு
என்றனர்.

அவர்களது சொற்கள்
வாழ்த்தா அல்லது சாபமா
இன்றுவரையில்
தெரியவில்லை..

ஆனாலும் 
இப்போதுவரையிலும்
தேடுகிறேன்..
கவிதையற்ற
என் காதலை..!

டிஸ்கி : சத்தியமா நான்தாம்பா இதை எழுதினேன்.. 100.6 டிகிரி காய்ச்சலாம்.. படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது. உக்காந்தா தூங்கணும் போல இருக்கு.. ஏதாவது எழுதலாமேன்னு கீபோர்ட்ல கை வைச்சா இப்படித்தான் வருது.. என்ன செய்வேன்? என்ன செய்வேன்..?