தேர்தல்-2009-ஆந்திர சட்டமன்றத் தேர்தல் - கருத்துக் கணிப்பு முடிவு

10-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆந்திர தேசத்தில் இந்த பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டப் பேரவைக்கும் சேர்த்து தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் தனித்து நிற்கின்றன. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட்டு, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து ஓரணியாகப் போட்டியிடுகின்றன. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியும் தனித்தே போட்டியிடுகிறது.

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி நீல்சன் ஓ.ஆர்.ஜி அமைப்பு என்.டி.டி.வியுடன் இணைந்து மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

அதன்படி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றும் நிலை உள்ளதாக தெரிகிறது.



மொத்தம் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 155 முதல் 169 தொகுதிகள்வரை கிடைக்கும் என்றும்,



தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 92 முதல் 110 இடங்களும்,


சிரஞ்சீவியின் கட்சிக்கு 30 முதல் 35 இடங்களும் கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.


தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு 4 முதல் 6 இடங்கள் மட்டுமே கிடைக்குமாம்.


காங்கிரஸ் கட்சிக்கு வட ஆந்திரப் பகுதி எனப்படும் கடற்கரை பகுதியில் மட்டும் 77 முதல் 88 தொகுதிகளும், ராயலசீமா பகுதியில் 35 முதல் 41 இடங்களும் கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராயலசீமா பகுதியில் தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 13 முதல் 15 இடங்களும் சிரஞ்சீவியின் கட்சிக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாம்.

வட ஆந்திரப் பகுதியில் தெலுங்கு தேசம் கூட்டணி 20 முதல் 24 தொகுதிகளையும், சிரஞ்சீவியின் கட்சி 21 முதல் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாம்.


தனது முதல் தேர்தலிலேயே ஏழுமலையானின் இருப்பிடமான திருப்பதி தொகுதியில் போட்டியிடும் சிரஞ்சீவி செல்லுமிடங்களிலெல்லாம் திரண்டு வரும் கூட்டம் இதனை நம்ப முடியாததுபோல் உள்ளது.

இருந்தாலும் எத்தனையோ தேர்தல்களைப் பார்த்திருக்கும் நமது பொது அறிவுக்குள் கொஞ்சம் சந்தேகமும் வருகிறது. இதேபோலத்தான் சிவபார்வதி 3-வது அணியில் சேர்ந்து சந்திரபாபு நாயுடுவை ஓட, ஓட விரட்டுகிறேன் என்று சவால் விடுத்து ஆர்ப்பரித்தபோது, விஜயவாடா கடற்கரையில் கூடிய கூட்டத்தைப் பார்த்து சரத்யாதவும், ஜார்ஜ் பெர்னாண்டஸும் மயக்கம் போடாத குறையாக மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி என்றார்கள். ஆனால் அந்தத் தேர்தலில் ஒரு சீட்டுகூட கிடைக்காமல் அத்தோடு வீட்டிற்கு அனுப்பப்பட்டார் சிவபார்வதி.


இது போன்ற சுவாரஸ்யமான அரசியல் அனுபவங்கள் நமக்கு உண்டு என்பதால் இதையும் இப்போதைக்கு நம்பித் தொலைப்போம்..

மற்றவை திருப்பதி ஏழுமலையானின் கையில்தான்..!

4 comments:

வால்பையன் said...

தமிழ்நாடு எப்போது?
ஆந்திராவிலும் டப்பு விளையாடுமா?

உண்மைத்தமிழன் said...

//வால்பையன் said...
தமிழ்நாடு எப்போது? ஆந்திராவிலும் டப்பு விளையாடுமா?//

சீக்கிரம்.. இந்த மாசமே நடக்கும்.. போன மாசம் நடந்ததுலே அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பார்டர்ல தொட்டுக்கிட்டு நிக்குதுக..

கடைசியா டப்புவாலதான் தி.மு.க. ஜெயிக்கும்னு நினைக்கிறேன்..

Anonymous said...

3--வது அணில சநதிரபாபு நாயுடுதான் கன்வீனரா இருக்காரே.. நாளைக்கு மத்தியில 3-வது அணிக்கு ஆட்சி அமைக்க சான்ஸ் அடிச்சா தெலுங்கு தேசத்துலேயே குந்தியிருப்பாரா..? இல்லாட்டி டெல்லிக்கு ஓடிருவாரா..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
3-வது அணில சநதிரபாபு நாயுடுதான் கன்வீனரா இருக்காரே.. நாளைக்கு மத்தியில 3-வது அணிக்கு ஆட்சி அமைக்க சான்ஸ் அடிச்சா தெலுங்கு தேசத்துலேயே குந்தியிருப்பாரா..? இல்லாட்டி டெல்லிக்கு ஓடிருவாரா..?//

முதல்ல அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.. அப்புறம் மாமாவா? சித்தப்பாவான்னு யோசிக்கலாம்..!