தோழர் உ.ரா.வரதராசனின் மரணம் தற்கொலையல்ல..! கொலைதான்..!

24-02-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"தோழர்களே.. நமது மதிப்பிற்குரிய தோழர் வரதராசனின் உடலை கொண்டுசெல்லவிருக்கும் ஆம்புலன்ஸ் வேனிற்கு பின்பு முதலில் நான்கு பேர் வரிசை கொண்ட பெண்கள் அணி நடந்து செல்ல.. அதற்குப் பின்னால் நமது தோழர்கள் வரிசையாய் அணிவகுத்து நமது உற்றத் தோழரின் இறுதிப் பயணத்தை சீரும், சிறப்புமாக நடத்திக் கொடுக்குமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். நமது தோழரின் இந்த இறுதிப் பயணம் கட்டுக்கோப்போடும், கண்ணியத்தோடும், கடமையுணர்வோடும் நடப்பதுதான் அன்னாருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்.."

இப்படியொரு ஒலிபெருக்கி அறிவிப்போடுதான் உ.ரா.வரதராசன் என்கிற 65 வயதான அந்த மூத்த கம்யூனிஸ இயக்கத் தோழரின் இறுதி ஊர்வலம் நேற்று மதியம் 3.10 மணிக்கு சென்னை தியாகராய நகரில் இருக்கும் பி,ராமமூர்த்தி நினைவகம் என்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது.

இந்த மாதம் 6-ம் தேதி கொல்கத்தாவில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி கூட்டத்தில் நடந்தப்பட்ட விசாரணைக்குப் பின் மத்திய கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நமது தோழர் உ.ரா.வரதராசன் அதே 6-ம் தேதி தனது அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்கச் செய்த கொல்கத்தாவில் இருந்தபடியே ஒரு கடிதத்தை எழுதிவைத்துவிட்டு, மீண்டும் 11-ம் தேதி சென்னையில் தனது வீட்டில் மேலும் ஒரு கடிதத்தை தாய்த்தமிழில் பதிவு செய்துவைத்துவிட்டு காணாமல்போக.. 13-ம் தேதி சென்னை போரூர் ஏரியில் பிணமாக அவர் கண்டெடுக்கப்பட்டு.. உற்ற தோழர் உயிரிழந்த கொடூரம்கூட தெரியாமல் 14-ம் தேதி காவல்துறையில் அவருடைய துணைவியாராலும், கட்சியினராலும் புகார் கொடுக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 21-ம் தேதி ராயப்பேட்டை மார்ச்சுவரியில் அழுகிப் போய் அடையாளம் காண முடியாத உடலாகக் காட்சியளித்து, 22-ம் தேதி இவர்தான் என அடையாளம் காணப்பட்ட இந்தச் சிவப்புக் கொடி தோழரின் முடிவு இப்படியொரு நாள் புள்ளிவிவரக் கணக்கில் சொல்லப்படும் அளவுக்குச் சென்றது மிக மிக கொடூரமானது.

என்ன தவறு செய்துவிட்டார் இந்தத் தோழர்..? யாருக்கும் தெரியவில்லை. ஆனால் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ள செய்தி பத்திரிகைகளில் வெளியான பின்புதான் கடந்த 6-ம் தேதியே அவர் மத்தியக் கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தியை 'தீக்கதிர்' வெளியிட்டது. அதுவரையில் எட்டு நாட்களாக சோவியத்தின் கம்யூனிஸ ஆட்சியைப் போன்றதொரு நீண்ட மெளனம் கட்சியிலும், கட்சிப் பத்திரிகையிலும்!

பொதுவாழ்க்கையில் அதுவும் சித்தாந்தத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உழைக்கும் மக்களின் அபிமானம் பெற்ற கட்சியின் பெருந்தலைவர் ஒருவரே இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டிருப்பது எப்படி.. ஏன் என்பதை அக்கட்சிக்காரர்கள் இப்போதுவரையில் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இனியும் சொல்ல மாட்டார்கள் என்பதும் நிச்சயம்.

இதுவரையில் தெரிந்த அளவுக்கு அவர் மீதான புகார்களை அவருடைய குடும்பத்தினரே சுமத்தியதால் மாநிலக் கட்சிக் குழு அதை விசாரித்து உண்மை என்று அறிந்து கட்சியில் இருந்து வரதராசனை நீக்கவேண்டும் என்று மத்தியக் கமிட்டிக்கு பரிந்துரை செய்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் என்ன காரணம் என்பதை மட்டும் வெளியில் சொல்ல மறுக்கிறார்கள்.

இன்றைய செய்தியின்படி கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத்துதான் பிடிவாதமாக வரதராசனை நீக்கினார் என்று சாவிற்கான பழியை பிரகாஷ்காரத் மீது வீசுகிறார்கள் தமிழ் மாநிலத் தலைவர்கள். பிரகாஷ்காரத்தின் விசாரணைக்கு மையப்புள்ளியே கட்சியின் தமிழ் மாநிலக் குழு, தோழர் வரதராசனை நீக்கும்படி அனுப்பியிருந்த பரிந்துரைக் கடிதம்தான். அந்தக் கடிதத்தை இவர்கள் அனுப்பாமல் இருந்திருந்தால்..?

அப்படியென்ன அது கொடுங்குற்றம்..? தோழராக இருந்தாலும் அவர் முதலில் மனிதராகத்தானே இருக்கிறார். பின்புதானே ஏற்றுக் கொண்ட, பின்பற்றுகின்ற கொள்கையின்படி ஒரு அமைப்பின் உறுப்பினர். பலவீனங்களால் ஆட்படுபவன்தான் மனிதன். நிச்சயம் அவன் வாழ்நாளில் ஒரு முறையாவது ஏதாவது ஒருவகை சைத்தானுக்கு ஆட்பட்டே தீருவான்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று காட்சியளிக்கும். சிக்கியவர்கள் மீள்வார்கள். மீளாதவர்கள் கொடும் சிக்கலுக்குள்ளாவார்கள். தெருவுக்கு நான்கைந்து பேர் நிச்சயமாக இருப்பார்கள்.

ராயப்பேட்டை மார்ச்சுவரியில் தோழரின் உடலைப் பார்த்தவுடன் தங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று தோழரின் உடன் பிறந்த சகோதரிகளும், மனைவியும் ஆளுக்கொரு பக்கமாகப் போர்க்கொடி தூக்கியதில் இருந்தே அத்தோழரின் குடும்பத்துப் பிரச்சினை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பது புரிகிறது.

கேவலம்.. ஒரு சாதாரண குடும்பத் தகராறையெல்லாம் ஒரு அகில இந்தியக் கட்சியின் மத்தியக் கமிட்டி கூட்டம் அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போடுகிறது என்பதை நினைக்கும்போது இந்தக் கட்சியின் தலைவர்கள் எந்த அளவுக்கு வேலைவெட்டியில்லாமல் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இது நிச்சயம் குடும்பத் தகராறுதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

இது பொதுவில் வந்திருக்க வேண்டியதில்லை. புகார் கொடுத்தவர் கட்சியைச் சேர்ந்த அவருடைய மனைவியாகவே இருந்தாலும் அதனை குடும்பப் பிரச்சினையாகக் கருதி நான்கு சுவர்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளும்படி அனுப்பி வைத்திருந்தால் இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவுக்கு ஒரு லட்சம் ரூபாய் எழவுக்கான செலவு ஏற்பட்டுத் தொலைந்திருக்காது. அவர்களுக்கும் அடுத்த சட்டசபை தேர்தலில் நிற்க ஒரு மக்கள் தொண்டரும் கிடைத்திருப்பார்.

எத்தனையோ குடும்பங்களில் இது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அத்தனையிலும் வீட்டில் இருக்கும் யாரோ ஒருவர் விட்டுக் கொடுத்துத்தான் போகிறார்கள். யாரும் இதை அறிவுப்பூர்வமாக அணுக வேண்டியதில்லை. உணர்வுப்பூர்வமாகதத்தான் அணுகியிருக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு இந்த விஷயத்தில் நடந்து கொண்டது கிட்டத்தட்ட சர்வாதிகாரம்தான். இது போன்ற விஷயங்களையெல்லாம் கட்சியில் வைத்து அலசுவார்கள். இதுதான் கட்சியின் கொள்கை என்றால் அந்த 'புடலங்காய்கள்' ஏன் இன்னும் மார்க்கெட்டில் அதிகமாக விற்கவில்லை என்பதற்கான காரணமாக இதனையே ஏற்றுக் கொள்ளலாம்.

"மயிர்நீப்பின் வாழா கவரிமான் அன்னார், உயிர்நீப்பர் மானம் வரின்" என்ற குறளை அடையாளம் காட்டி, "தற்கொலை செய்து கொள்பவன் கம்யூனிஸ்டே அல்ல. உள்கட்சிப் போராட்டத்தில் எத்தனையோ இடர்களை என்னால் எதிர்கொள்ள முடிந்தது. ஆனால் உள்வாழ்க்கைப் போராட்டத்தில் நான் நிலைகுலைந்து வீழ்ந்துவிட்டேன். இனி.. ஏது..? குறளே நின்றது.. மனதை வென்றது.." என்று தனது மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டு சாவைத் தேடிச் சென்றுள்ளார் தோழர் வரதராசன்.

இதற்குப் பெயர் கோழைத்தனம் அல்ல.. புறவாழ்க்கையில் எதிர்ப்பட்ட எதிர்ப்புகளை எல்லாம் ஓட ஓட விரட்டிய இந்தத் தோழரால் அகவாழ்க்கை சிக்கல்களில் இருந்து மீளத் தெரியவில்லை. அல்லது முடியவில்லை. இந்தத் 'தெரியவில்லை'; 'முடியவில்லை' என்கிற வார்த்தைகளினால்தான் உலகம் முழுவதும் தினம்தோறும் லட்சக்கணக்கானோர் தங்களது உடலைத் தியாகம் செய்துவிட்டு வீழ்கின்றனர்.

அறிவின் சிகரங்கள் இதனைக் 'கோழைத்தனம்' என்று வர்ணிப்பது காலம்காலமாக நடந்துதான் வருகிறது. ஆனால் அவர்களுக்கு இது மாதிரியான சந்தர்ப்பங்கள் வந்து தொலையாதது அவர்களது அதிர்ஷ்டம் என்பதை மட்டும் அவர்கள் உணர்வதே இல்லை.

ஆறாண்டுகளுக்கு முன்பாக விஜய் டிவியில் தினம்தோறும் காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'முதல் பிரதி' என்னும் நிகழ்ச்சியில் நான் பணியாற்றி வந்தேன். ஒரு நாள் நிகழ்ச்சியில் இரண்டு எதிரெதிர் தரப்பு அரசியல்வாதிகள் பேசுவார்கள். அந்த வரிசையில் ஒரு நாள் இந்தத் தோழரின் பெயரும் இருந்தது. கூடவே அவருடைய வீட்டு முகவரியும்தான்.

தினமும் அதிகாலை 5.30 மணிக்கு ஷூட்டிங். நாங்கள் 3 மணிக்கு ஸ்டூடியோவில் ஆஜராவோம். 4 மணிக்கு அனைத்துச் செய்தித்தாள்களும் கைக்கு வர.. செய்திகளை தட்டச்சு செய்துவிட்டு கேள்விக்கணைகளோடு தயாராக இருப்போம். அன்றைய விருந்தினரான தோழர் உ.ரா.வரதராசனை வரவேற்க கார் அவருடைய வீடிருந்த அண்ணா நகருக்குச் சென்றிருந்தது. வந்துவிடுவார் என்று எதிர்பார்த்து நாங்களெல்லாம் வாசலில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு சைக்கிளின் பின்பக்க கேரியரில் அமர்ந்தபடியே இந்த முரட்டு சட்டை மனிதர் ஸ்டூடியோ வாசலில் வந்து இறங்கினார்.

திக்கென்று இருந்தது எங்களுக்கு.. "என்ன ஸார்..? உங்களைக் கூப்பிடத்தான கார் வந்துச்சு..? வரலியா..?" என்று கேட்க, "நான்தான் நேத்து நைட்டே, உங்க ஆபீஸுக்கு போன் போட்டு சொன்னனேப்பா.. கார் வேண்டாம்னு.." என்றார். "காலைல சீக்கிரம் எந்திரிக்கணுமேன்னு நைட்டு நம்ம கட்சி ஆபீஸ்லேயே படுத்திட்டேன்.." என்று விகல்பமில்லாமல் சொல்லிவிட்டுச் சிரித்தார்.

ஏஸி கார் அனுப்பவில்லையே என்பதற்காக காரில் ஏற மாட்டேன் என்று தகராறு செய்து ஏஸி காரை அனுப்பிய பின்பு நிகழ்ச்சிக்கு வந்த ஒரு பாரம்பரியக் கட்சியின் வி.ஐ.பி.க்களை மட்டுமே பார்த்திருந்த எங்களது டீமுக்கு இது ஒரு சுவையான அனுபவம். இப்படித்தான் இந்த எளிமையான தோழர் எனக்கு அறிமுகமாயிருந்தார்.

ஆனால் இன்றைக்கு சவப்பெட்டிக்குள் ஏதோ கருப்பு மை பூசி மெழுகப்பட்ட முகத்துடன் அடையாளம் காண முடியாத அளவுக்கு கோரமாக காட்சியளித்த இவரா, புகைப்படத்தில் இருக்கும் சிவப்பு நிறத் தோழர் என்ற ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஒன்று சேர என்னைத் தாக்கியது.
கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என்பதாலும், கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் இருந்த காரணத்தால் அந்த அலுவலகத்தில் இவருடைய சடலத்திற்கு மட்டும் இடம் கிடைத்திருக்கிறது போலும்.

"எனது இரண்டு வங்கிக் கணக்குகள் முடிக்கப்பட்டு எஞ்சியுள்ள தொகையை கட்சிக்கு வழங்க வேண்டும். என்னுடைய புத்தகங்கள் கட்சி மற்றும் 'தீக்கதிர்' நூலகங்களுக்கு அளிக்கப்பட வேண்டும். எனது மடிக்கணினியை(அமெரிக்கா சென்றிருந்தபோது மகன் வாங்கிக் கொடுத்தது) 'தீக்கதிர்' பயன்பாட்டிற்குத் தர வேண்டும். எனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒப்படைத்துவிடுங்கள். எனது இல்லம் உட்பட எங்குமே எனக்குப் படத்திறப்போ, இதர நிகழ்ச்சிகளோ நடத்தக்கூடாது.." என்ற தனது இன்னொரு கடிதத்தில் எழுதியிருந்ததைப் படிக்கின்றபோது மனிதர் என்ன மாதிரியான உறுதியுடன் இருந்திருக்கிறார் என்பது புரிகிறது.

இவரா கோழை.. இதுவா கோழைத்தனம்.. இல்லவே இல்லை. இத்தனை நாட்கள் உங்களுடன் ஒன்றிணைந்து உறவாடி, பேசிப் பழகி, போராட்டங்களுடன் துணை நின்று தன்னைப் புரிந்து கொள்ள முடியாத அல்லது தனக்குத் துரோகம் செய்வித்த நண்பர்களான தோழர்களை மறுபடியும் தான் சந்திக்கவே விரும்பவில்லை என்கிற வெறுப்புணர்வுதான் அவரை ஆட்கொண்டுள்ளது.

"படத்திறப்புக்கள் நடத்தப்படவே கூடாது" என்று சொல்லியிருப்பதில் இருந்தே தான் தேடிக்கொள்ளும் முடிவின் மூலம் தான் ஒரு கம்யூனிஸ்ட்டே இல்லை என்பதை உலகிற்கு சொல்லியிருக்கும் இவர்தான் உண்மையிலேயே தோழர்.. நிச்சயமாகச் சொல்லலாம். இறக்கப்போகும் தருவாயிலும் கட்சியின் கொள்கைகள் மீது தோழர் வரதராசன் எந்த அளவிற்கு மரியாதை வைத்துள்ளார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பத்திரிகைகள் வட்டாரத்திலோ இந்தப் பிரச்சினைக்கு வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பதவியிலிருந்து உடல் நலக் குறைவு காரணமாக என்.வரதராஜன் விலகியபோது அடுத்த மூத்தவர் என்கிற நிலையில் இந்த உ.ரா.வரதராசன்தான் அடுத்தப் பொதுச்செயலாளராக ஆகியிருக்க வேண்டும். ஆனால் இப்படியொரு நிலைமையைத் தவிர்க்கவே, என் வரதராஜனின் பதவி விலகலுக்கு முன்பாகவே உ.ரா.வரதராசனின் பதவி நீக்க நடவடிக்கை அவசரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அனைத்துக் கட்சிகளிலும் இருக்கக்கூடிய சிற்சில போட்டி, பொறாமைகள் இக்கட்சியிலும் இருந்திருக்கலாம். அதன் தாக்கம் இவர் மீது அதிகமாக படிந்து அதன் மூலம் இவர் துரத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் பொதுவானவர்கள்.

கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதையும், காணாமல் போயிருப்பதையும் ஒரே நாளில் கண்கூடாகப் பார்த்து கட்சியின் அடிமட்டத் தோழர்கள் குழம்பித்தான் போயிருக்கிறார்கள். நான் அங்கு பார்த்தவகையில் பலரும் ஏதோ ராணுவ ரகசியம்போலத்தான் இதைப் பற்றிப் பேசினார்கள்.

"தெரியலை.." "செயலாளர் அறிக்கையிலதான் படிச்சேன்.." "கட்சின்னா ஆயிரம் இருக்கும்.." "எங்க கட்சில இப்படித்தான்.." "என்ன இருந்தாலும் தோழர் இப்படி செஞ்சிருக்கக் கூடாது.." என்றெல்லாம் மானாவரியாக சொன்னார்களே ஒழிய.. கட்சியைக் குறை கூறி ஒரு வார்த்தை.. ம்ஹும்.. என் காதுபட யாரும் சொல்லவில்லை. அதுதான் இந்த இயக்கம்..

பொதுவாழ்க்கையில் அரிவாள், சுத்தியல் அடையாளத்துடன் கடந்த 45 ஆண்டு கால அனுபவமுள்ள இந்தத் தோழரின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. வடஆற்காடு மாவட்டம் உள்ளியநல்லூர் கிராமத்தில் 9.7.1945 அன்று பிறந்தவர் உ.ரா.வரதராசன்.

'அருவி' என்ற இலக்கிய சிற்றிதழை மாணவப் பருவத்திலேயே நடத்தியுள்ளார். 1967-ம் ஆண்டு ரிசர்வ் வங்கிப் பணியில் சேர்ந்த அவர் 17 ஆண்டுகள் வங்கிப் பணியில் இருந்திருக்கிறார். ரிசர்வ் வங்கிப் பணியில் இருந்தபோதே கட்சியின்பால் ஈர்க்கப்பட்டு கட்சிப் பணியையும் சேர்த்தே செய்து வந்திருக்கிறார்.

1984-ம் ஆண்டு, வங்கிப் பணியைத் துறந்து, கட்சியின் முழுநேர ஊழியராகித் தனது பொது வாழ்க்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார். சென்னை மாவட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்த வரதராசன், 1989-ம் ஆண்டு, நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளராக வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்கிற பெருமையுடன் வெற்றி பெற்றார்.

சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர்களில் ஒருவராக செயல்பட்டு வந்த அவர், பிற்பாடு சி.ஐ.டி.யு.வின் அகில இந்திய செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக இருந்தபோது டெல்லி தொழிற்சங்கப் பணிக்காக சென்றிருக்கிறார். இதன் பின்புதான் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கட்சிப் பணிகளுக்காக பெரும்பாலான நேரங்கள் டெல்லியிலும், கொல்கத்தாவிலுமாக இவரது சேவை கட்சிக்குக் கிடைத்துள்ளது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ்நாட்டில் இவரது குரல் ஒலிக்காமல் இல்லை. ஈழப் போராட்டத்திற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே முன்னின்று ஒரு கவன ஈர்ப்புப் போராட்டத்தை சென்னையில் நடத்தியபோது அதனை முன்னின்று நடத்தியவர் இந்தத் தோழர் வரதராசன்தான். .

சிஐடியூவின் அகில இந்தியச் செயலாளராக இருந்திருந்த காரணத்தாலும், சிம்சன் நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவராக புகழ் பெற்றிருந்ததாலும் தொழிலாளர் பெருமக்களின் அஞ்சலி இந்தத் தோழருக்கு பெருமளவில் கிட்டியது.

தோழர் பாரதி கிருஷ்ணகுமார் பார்க்கின்ற தோழர்களையெல்லாம் கட்டிப் பிடித்து கதறிக் கொண்டிருந்தார். அவ்வளவு பெரிய ஆளுமை கொண்ட பாரதிகிருஷ்ணகுமார், நடுரோட்டில் உடல் குலுங்கி அழுவதை பார்த்தபோது என்னையறியாமல் கண்கள் கலங்கிவிட்டன. இவர் ஒருவரே கண்ணீரை தைரியமாக வெளியில் விட்டவர். ஒரு ஐந்து பேர் சுற்றி நின்றிருந்தால் அதில் ஒருவர் நிச்சயம் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார். துக்கப்படுகிறோம் என்பதை வெளியில் சொல்வதற்குகூட முடியாததுதான் மாவோவின் சிந்தாந்தம்போல..

மாலை அணிவித்துவிட்டு கைகளை உயர்த்தி வீரவணக்கம் செலுத்திய தமிழ் மாநில உயர் மட்டத் தலைவர்களை பார்த்தபோது எனக்கு வெறுப்புதான் வந்தது. எப்படி இவர்களால் சலனமேயில்லாமல் அனைத்தையும் செய்ய முடிகிறது என்றுதான் தெரியவில்லை.

மற்றக் கட்சிகளாக இருந்திருந்தால் வேறுவிதமான சம்பவங்களை இறுதி ஊர்வலத்தில் பார்த்திருக்க முடியும். ஆனால் நான் முதல் பாராவில் சொல்லியிருப்பதுபோல் கடைசிவரையில் கட்டுக்கோப்பாக, கண்ணியமாக ஒரு சிறு எதிர்க்குரல்கூட எழுப்பாமல் இருந்தது இந்தத் தோழர்களின் கட்டுப்பாட்டைக் காட்டினாலும் நமக்குள் கோபம் கொப்பளிக்கத்தான் செய்கிறது.

கட்சியில் பல மட்டத்தில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்புதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பல பத்திரிகைகளுக்கும் பேட்டியளித்துக் கொண்டிருந்த கட்சியின் பெண்ணியவாதிகள், தோழரின் உடல் மீட்கப்பட்டவுடன் அப்படியே அமைதியானார்கள். கட்சித் தலைவர்கள் கட்சியின் நியாயத்தை சொல்வதை நிறுத்திவிட்டு தோழரின் அருமை, பெருமைகளை பறை சாற்றத் துவங்கிவிட்டார்கள். தனது கணவரான தோழர் வரதராசன் மீது கட்சியில் புகார் மனு அளித்திருந்த அவரின் துணைவியாரே, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால்தான் தோழர் வரதராசன் இந்த முடிவுக்குச் சென்றதாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

தோழர் வரதராசனின் இறுதி மூச்சு தானாகவே அடங்கியிருப்பதாக அத்தனை தோழர்களின் மனதில் பதிய வைக்கும் முயற்சிகள் இந்த இரண்டு நாட்களில் நடந்தேறின.


இதில் மிகப் பெரிய சோகம் அவருடைய விருப்பப்படி அவருடைய உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட முடியாமல் போனதுதான். கிட்டத்தட்ட 2 நாட்கள் முழுவதும் தண்ணீரில் ஊறியிருந்து முகமெல்லாம் கருமையாக மாறிப் போனதாலும், உடல் உப்பியிருந்த காரணத்தாலும் உடலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்களாம்.

“ஜெய் சலோ ஜெய் சலோ
செவ்வணக்கம் செவ்வணக்கம்
வீர வணக்கம் வீரவணக்கம்..
தோழர் வரதராசனுக்கு வீரவணக்கம்..
வீர வணக்கம் வீரவணக்கம்..
தோழர் வரதராசனுக்கு வீரவணக்கம்..
நடப்போம் நடப்போம்..
வரதராசன் காட்டிய பாதையில் நடப்போம்..
செய்வோம் செய்வோம்..
வரதராசன் ஆற்றிய கடமையைச் செய்வோம்..
தொடர்வோம் தொடர்வோம்..
வரதராசன் பணியைத் தொடர்வோம்”

இதுவெல்லாம் இறுதிப் பயணத்திற்காக தோழர் வரதராசனின் உடலை சவவண்டியில் ஏற்றி வைத்துவிட்டு அத்தனை தோழர்களும் உரத்தக் குரலில் எழுப்பிய கோஷங்கள்.

இதில் "தோழர் வரதராசன் காட்டிய பாதையில் நடப்போம்" என்று சொன்னவர்களுக்கு கட்சித் தலைவர்கள் வரதராசனின் "எந்தப் பாதை"யைக் காட்டப் போகிறார்கள் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. அவரை நீக்க வேண்டும் என்ற முனைப்போடு மல்லுக் கட்டியவர்கள்.. இத்தனை வருடங்கள் கட்சிக்காக உழைத்திருக்கிறாரே என்கிற சிந்தனையில்லாமல் தூக்கி வீசிவிட்டு இப்போது எதற்கு இந்தப் புகழாரம்..?

"அவர் தற்கொலை செய்யும் நிலைமைக்குச் செல்வார் என்பது எங்களுக்கு எப்படி தெரியும்..?" என்று இனிமேல் அறிவாளிகளாக கேட்பார்கள் கட்சியின் தமிழகத் தலைவர்கள். "அவர் சாதாரணமாக காபி சாப்பிடத்தான் கொல்கத்தா வந்தார்.." என்று கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் சரடுவிடப் போகிறார்கள்.. தலைவர்கள் வரிசையில் இரண்டாவதாக இருந்துவிட்டு இனிமேல் தான் சாதாரண காம்ரேடுகளில் ஒருவராகத்தான் கட்சி அலுவலகத்திற்கு வரமுடியும் என்பதை எந்தத் தலைவரால்தான் ஜீரணிக்க முடியும்..?

புறக்கணிப்பு என்கிற மிகப் பெரிய கொடூரமான தண்டனையை மனச்சாட்சியுள்ள எந்த மனிதராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் புறக்கணிப்பினால்தான் இந்தத் தோழர் தனது முடிவைத் தானே தேடிச் சென்றிருக்கிறார்.

2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோவையில் நடந்த கட்சியின் அகில இந்திய மாநாட்டின்போது, "தோழர்கள் ஜோதிபாசுவும், ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும் தங்களது உடல் நலன் காரணமாக தங்களை கட்சியின் உயர்மட்டக் குழுவில் இருந்து விடுவிக்கச் சொல்லியிருக்கிறார்கள். இது பற்றி கட்சி இந்த மாநாட்டின் இறுதி நாளில் முடிவெடுக்கும்.." என்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரிகளை பத்திரிகைகளுக்குத் தெரிவித்திருக்கும் தோழர் உ.ரா.வரதராசன் என்ற இந்த முக்கியத் தோழரால், இந்த உள்ளடிகளை எப்படித் தாங்கிக் கொண்டிருக்க முடியும்..?

கட்சியே. கொள்கைகளே, கோட்பாடுகளே, சித்தாத்தங்களே முக்கியம். மற்றவைகளெல்லாம் பிற்பாடுதான் என்று இயங்கி வரும் மனிதர்களுக்கு கட்சியில் தங்களுக்கான இருப்பிடம்தான் பெரியது. அதுதான் உலகம். அது அவர்கள் கைகளில் இருந்து விடைபெறும்போது வாழ்க்கையே தொலைந்துவிட்டது போலத்தான்.

தோழர் உ.ரா. வரதராசனின் வாழ்க்கையைத் தொலைத்தது அக்கட்சியின் தலைவர்கள்தான். ஒரு நல்ல தலைவனை இழந்து நிற்கும் அக்கட்சியின் தொண்டர்களுக்கு நியாயமான, வெளிப்படையான பதிலைச் சொல்ல வேண்டியது அக்கட்சித் தலைவர்களின் பொறுப்பு.

மாலை 4.30 மணியளவில் தியாகராய நகர் கண்ணாம்மாபேட்டை இடுகாட்டில் தகனம் செய்யப்பட்ட தோழர் உ.ரா.வரதராசனின் உடலில் வைக்கப்பட்ட தீ, உண்மையிலேயே கடந்த பிப்ரவரி 6-ம் தேதி கொல்கத்தாவில் அவருடைய கட்சியினராலேயே வைக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

அவருடைய செயல் நிச்சயம் கோழைத்தனம் அல்ல.. அந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்குப் பெயர் தற்கொலையும் அல்ல. கொலைதான். நிச்சயம் படுகொலைதான்.

தோழர் உ.ரா.வரதராசன் அவர்களுக்கு எனது வீர வணக்கம்.

கலையுலகில் நடக்கும் உள்குத்துக்கள்! பாவமான ரஜினியும், அஜீத்தும்..!!!

22-02-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'படிக்காதவன்' படத்தின் வெற்றிக்குக் காரணமான 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்; உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி' பாடல் காட்சிதான் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிக முறை ஒளிபரப்பப்பட்ட பாடலாக இருக்கும்.

இருந்தும் ரஜினி இப்போதும் அதே பாடலை மறுபடியும் ஹம்மிங் கொடுத்துக் கொண்டேயிருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். என்றைக்கு அந்தப் பாடலின் அர்த்தம் புரிந்தவராகக் காட்சியளிக்கப் போகிறார் என்றுதான் தெரியவில்லை.

எதற்கெடுத்தாலும் 'தமிழ்', 'தமிழ்' என்று தமிழை கொத்துபுரோட்டா போடும் சில அரசியல் வியாபாரிகளின் கூச்சல், தமிழ்த் திரையுலகில் மறுபடியும் சப்தமில்லாமல் தலையெடுத்துவிட்டது. இந்த முறையும் இவர்கள் வாய்க்கு ஊறுகாய் ரஜினிதான். கூடவே துணைக்கு அஜீத்தையும் இழுத்து வைத்திருக்கிறார்கள்.

ஒருவருக்குப் பாராட்டு விழா என்றால் பேச்சாளர்களைத் தவிர்த்து மற்றவர்களை முறைப்படி அழைக்கலாம். "கண்டிப்பாக வரணும்" என்று சொல்வதோடு முடித்துவிடுவது நாகரிகம்.. "வரலைன்னா சொத்துல பங்கு கிடையாது.. உன்கூட 'கா.." என்று நட்பு ரீதியாகவும், உறவு முறையிலும் அன்போடு மிரட்டுவதும் ஒரு வகையில் நடப்பதுதான்.

ஆனால், "வரவில்லையெனில் நீ தொழிலே பண்ண முடியாது.. ஊர்லயே இருக்க முடியாது" என்று சொல்லி அழைப்பது அந்த விழாவையே கேலிக்கூத்தாக்கும் விஷயம். இதைத்தான் கலைஞரின் பாராட்டு விழாவில் செய்திருக்கிறார்கள் திரையுலக சங்கத்தினர்.

வராவிட்டால் திரையுலகில் நீடிக்கத் தடை.. பணி புரிய முடியாது என்றெல்லாம் மிரட்டி அழைக்கப்பட்டிருப்பதால், வந்தவர்கள் எல்லாம் மனதார வாழ்த்தினார்கள் என்றா கருத முடியும்..? இதுவே கேவலமில்லையா..? ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து "என்னை நாலு வார்த்தை 'நச்சு'ன்னு வாழ்த்திட்டுப் போடா பேமானி.." என்று மிரட்டி அவர் பயத்தில் எட்டு வார்த்தையில் கவிதை பாடிவிட்டுப் போனால் அதைக் கேட்டும் ஒருவர் நெக்குருகி போய் நிற்கிறாரென்றால் அவர் நிச்சயம் 'நட்டு கழன்ற கேஸாகத்தான்' இருக்க முடியும்.

இப்படியொரு தோற்றத்தை வலுக்கட்டாயமாக முதல்வருக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் திரையுலகத்தினரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும்.

"ரஜினி, கமல் இருவரும் வராவிட்டால் கூட்டம் வராது.. குத்துப் பாட்டு நடனங்கள், கேளிக்கைகள், கிண்டல்கள், குத்தல்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் இல்லையெனில் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் ஸ்பான்ஸர் கிடைக்காது.. சின்ன ஸ்பான்ஸர் கிடைத்தால் பணம் பெயராது.. பணம் வரவே இல்லையெனில் இவருக்கு பாராட்டு விழா நடத்துவதால் எங்க டிவிக்கு என்ன பிரயோசஜனம்..?" என்று கலைஞர் டிவியின் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி போட்டுக் கொடுத்த திட்டப்படிதான் அத்தனையும் நடந்தது.

நிகழ்ச்சிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாக கமலஹாசன் முதல்வரை சந்திக்க அவரது வீட்டுக்கு வந்தார். கமலஹாசன் வரப் போவதை முன்கூட்டியே பெப்ஸியின் தலைவருக்கு பாஸ் செய்த டிவிக்காரர்கள் "கமல்ஹாசனையும் கலைநிகழ்ச்சியில் ஏதாவது ஒண்ணு செய்ய வைச்சிருங்க.. கமல், சி.எம்.கிட்ட பேசும்போது நீங்களும்கூட இருந்து பேசி முடிச்சிட்டீங்கன்னா கமல் தட்ட மாட்டார்" என்று ஒரு புது திரைக்கதை எழுதி சொல்லியனுப்பினார்களாம்.

தான் மட்டுமே பேச வந்து பெப்ஸியின் தலைவரே இந்த வீட்டில் வரவேற்கிறாரே என்கிற புதுமையில் சபையில் புகுந்த கமலுக்கு அவரே எதிர்பார்க்காத அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் குகநாதன், "ஐயா நீங்களே இவர்கிட்ட சொல்லிருங்க.. ஏதாவது ஒரு படத்தோட வசனத்தை மட்டும் ஒரு பத்து நிமிஷம் பேசுற மாதிரி இருந்தால் போதும்.." என்று கலைஞரிடம் போட்டுக் கொடுக்க.. 'தேவர் மகன்' புரியாமல் பார்த்தபடியிருக்க.. "நான் சொல்லிக்கிறேன்.. தம்பி நடிப்பாரு.." என்று கலைஞரும் 'தானா வந்து மாட்டுறாங்க பாருங்க..' என்ற நினைப்பில் சொல்லிவிட அன்றைக்கே பத்திரிகைகளில் செய்தி வந்து பரபரப்பூட்டியது கலைஞரின் வசனத்தை கமல் மேடையில் பேசி நடிக்கப் போகிறார் என்று..

தான் பேச வந்த விஷயத்தைவிட தன்னை சிக்க வைத்த காரண, காரியத்தால் சங்கடமாகிப் போன கமல், பிற்பாடு கலைஞர் டிவியில் இருந்து வந்த தொடர் நெருக்கடி கண்டு கடுப்பாகித்தான் போயிருக்கிறார். கடைசிநாள் வரையிலும் தன்னுடைய நிகழ்ச்சிக்கான நேரம் எவ்வளவு என்பதைச் சொல்லாமலேயே டபாய்த்துவிட்டு முதல் நாள்தான், "ஸ்டெடி பண்ண நேரமில்லை. பிராக்டீஸும் முடியலை.. சொதப்பலா நான் எதையுமே செய்ய மாட்டேன்னு உங்களுக்குத்தான் தெரியுமே.. விட்ருங்க.." என்று ஒரே போடாகப் போட்டுத் தப்பித்துக் கொண்டாராம்.

இந்த அதிர்ச்சியை சமாளிக்கத்தான் சம்பந்தப்பட்ட கிளிப்பிங்ஸை போட்டு முதல்வரை அழுக வைத்து சமாளித்துவிட்டார்கள். ஆனாலும் அஜீத் கொடுத்த அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் இதே அஜீத்துக்கு பத்திரிகை வைத்து அழைப்புவிடுக்கப் போனவர்கள் கொடுத்ததும் ஒருவிதத்தில் அதிர்ச்சிதான்.

"நானும் வாழ்த்துறேன்.. பொதுவா நான் இந்த மாதிரி பங்ஷன்ல கலந்துக்குறதே இல்லையே.. என்னுடைய பங்களிப்பா எவ்வளவு வேணுமா சொல்லுங்க.. அதைக் கொடுத்துடறேன்.." என்றுதான் அஜீத் சொல்லியிருக்கிறார். ஆனால் அழைக்கப் போனவர்கள் அப்போது வைத்த நக்கலும், கிண்டலும், மிரட்டலும்தான் அஜீத்தை அப்படி பேச வைத்துவிட்டது என்கிறார்கள்.


அந்தப் பேச்சுக்கு ரஜினி மட்டுமல்ல அரங்கில் இருந்த முக்கால்வாசி பேரும் கைதட்டி ஓய்ந்துதான் போயிருக்கிறார்கள். இப்போது நெட்டில் ஓடும் கிளிப்பிங்ஸ்களை கேட்டுப் பாருங்கள். தெளிவாகவே தெரிகிறது. மறுநாளில் இருந்து பல இளம் நடிகர்கள், நடிகைள், இயக்குநர்கள், பிரபலங்கள் என்று பலருமே அஜீத்திற்கு போன் செய்தும், மெஸேஜ் அடித்தும் பாராட்டித் தள்ளிவிட.. தனது எதிர்ப்புக் குரல் திரையுலகிலும் மையமாக சுழன்றுவருவதை அஜீத்தும் புரிந்து கொண்டிருந்தார்.

அதேவேளை கலைஞர் டிவி நிர்வாகிகளையும், விழா அமைப்பாளர்களையும் அழைத்து "கூப்பிட்டு வைச்சு கேவலப்படுத்திட்டீங்களே.." என்று கலைஞர் காய்ச்சி எடுத்த பிறகுதான் இந்த பிரச்சினை வேறு முலாம் பூசி வெடிக்கத் துவங்கியுள்ளது.

சிங்கப்பூர் கலை நிகழ்ச்சி, நடிகர் சங்க நிகழ்ச்சிகள், நெய்வேலி ஊர்வலம், இராமேஸ்வரம் ஊர்வலம், ஈழத் தமிழருக்கான உண்ணாவிரதப் போராட்டம் என்று அத்தனைக்கும் அஜீத்தை அழைப்பதற்காக ஒரு தனிப்படையையே போட வேண்டிய நிலைமை என்று இருந்ததால் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி அஜீத் மீது காட்டமாகவே இருந்தார். அதனை நக்கீரன் பத்திரிகையில் அப்படியே பேட்டியாக அளித்திருந்தார்.

அஜீத்திற்கு எதிராகப் பேட்டியளிக்க கட்சி நடிகர், நடிகையர் தவிர மற்ற பொதுவானவர்கள் யாரும் முன் வராததால் சம்பந்தப்பட்ட டிவி வட்டாரத்தில் இருந்து கை காட்டிய பின்பே ஜாக்குவார் தங்கம் லைம்லைட்டிற்கு வந்ததாக கோடம்பாக்கத்தில் சொல்கிறார்கள். அவருடைய பேட்டியையே யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட.. விஷயத்தை பெரிதாக்கியே தீருவது என்ற நோக்கத்தில் உருவானதுதான் அவருடைய வீடு தாக்கப்பட்டது என்கிற சினிமா திரைக்கதையில் உருவான புகார் நடவடிக்கை.

அஜீத்தின் தூண்டுதல் என்று சொல்லி புகாரை பதிய வைத்து அதையை நடிகர் சங்கத்திலும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் ஜாக்குவார் தங்கம். அதே நடிகர் சங்கத்தில் வைத்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த ஜாக்குவார், "ரஜினி ஒரு ஜோக்கர். அவர் சொன்னதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க.." என்று சொன்னது மிகப் பெரிய அதிர்ச்சி.

இதற்கு இந்த நிமிடம்வரையிலும் நடிகர் சங்கத்தில் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. ஆனால் கூட்டப்பட்ட சமரச பேச்சுவார்த்தையில் அஜீத் மன்னிப்பு கேட்டுத்தான் ஆக வேண்டும் எனவும், ரஜினிகாந்திற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அறிவித்து முடித்திருக்கிறார்கள். ஜாக்கிவாரின் ரஜினி பற்றிய கமெண்ட்டுக்கும், அஜீத் பற்றிய பேச்சுக்கும் எந்தவித ரியாக்ஷனும் அந்த அறிக்கையில் இல்லவே இல்லை.

நடிகர் சங்கத்தின் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ரஜினி வந்தால்தான் சிங்கப்பூரில் கல்லா கட்ட முடியும் என்று சொல்லித்தான் அழைத்தார்கள். வந்தார். இப்போது வங்கியில் கல்லா நிரம்பி வழிகிறது. சென்சிடிவ்வான காவிரி பிரச்சினையில் தலையைக் கொடுக்க வேண்டாம் என்று மறுத்தும் வராமல் போனால் கர்நாடகாவிற்கு ஆதரவாளன் என்று பட்டம் சூட்டிவிடுவார்கள் என்று பயந்துபோய் வந்து பேசியதில் இரண்டு பக்கமும் குட்டு வாங்கிக் கொண்டு போனார். விதி வலியதாச்சே.. சங்கத்தின் மூலம் நடத்திய ஈழப் போராட்டத்திற்கு வந்தே தீர வேண்டும் என்றார்கள். வந்தார். பேசினார். தன் கடமையை சங்கத்திற்காக முடித்துவைத்துவிட்டுப் போனார்.

நடிகைகள் பற்றி ஆபாசமாக எழுதிய 'தினமலர்' பத்திரிகைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்திற்கு வந்து இரு தரப்பினரையுமே பேலன்ஸ் செய்வதைப் போல் பேசிவிட்டுச் சென்றார். அதையே கிண்டல் செய்தவர்கள் பின்பு வந்து பேசியவர்கள் பேசிய பேச்சுக்களால் விளைந்த விளைவுகளைப் பார்த்த "ரஜினி பேசியது சரிதான்.." என்றார்கள் கடைசியில்.

'ஜக்குபாய்' திரைப்படம் இந்த 25-வது நாளான இன்றைக்கு சென்னையில் மட்டும் வெற்றிகரமாக 3 தியேட்டர்களிலாவது ஓடுகிறது என்றால் அதற்குக் காரணம் ரஜினிதான். ஏதோ தன்னால் முடிந்த அளவுக்காவது படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டிவிடுவோம் என்ற எண்ணத்தில் படத்தின் கதையைப் பற்றிச் சொல்லி கிக் ஏத்தினார். ஆனாலும் படம் பெயிலியர் ஆனது வேறு கதை.

'ஜக்குபாய்' படத்தின் பிரிவியூவுக்கும் அழைத்தார்கள். கூட்டத்தோடு கூட்டமான பிரிவியூக்களுக்கு வராதவர் இந்த அழைப்பை மட்டும் ஏற்று வந்தார். நடிகர் சங்கத் தலைவருக்கு திருப்தியளிக்கும்வகையில் அவருக்கு இன்றுவரையிலும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்திருக்கிறார் ரஜினி. அப்படியிருந்தும் அந்தக் கூட்டத்தில் அவருக்கு ஆதரவாகப் பேச யாருமில்லை.. இதுதான் ரஜினியின் ராசி..!

ஏதோ இந்த சினிமா அமைப்புகளினால்தான் திரையரங்குகளில் திரைப்படங்கள் ஓடுகின்றன என்று அவர்கள் நினைக்கிறார்கள். கலைஞர் டிவிக்கு காசு பெயர்வதற்கு நாங்கள் ஏன் உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டும் என்கிறார்கள் நடிகர், நடிகைகள். ஒருவகையில் இவர்கள் சொல்வதும், கேட்பதும் நியாயம்தான்.

உண்மையான பாராட்டுவிழா என்றால் எதற்கு ஆடல், பாடல், கேளிக்கைகள்..? பேச்சு மட்டும் போதாதா..? பேசியே தீருவது என்றால் ஒருவரைப் பற்றி எத்தனை முறை, எத்தனை மேடைகளில்தான் பேசுவார்கள். அவர்களுக்கே எரிச்சலாக இருக்காதா..? கோபம் இருந்தாலும் மறைத்துக் கொண்டு, எரிச்சல் இருந்தாலும் இல்லாமல் காட்டிக் கொண்டு பேசிவிடு என்று சொன்னால் அந்தப் பேச்சில் என்ன உண்மையான அன்பா வெளிப்பட்டிருக்கும்..?

முதல்வர் இந்த பாராட்டு பற்றிய விஷயத்தில் உலகத்திலேயே மிக, மிக வித்தியாசமான மனிதர். இப்படியொரு விளம்பர வெறி பிடித்த மனிதரை வேறு எந்த லோகத்திலும்கூட நாம் பார்க்க முடியாது. அவருக்குத்தான் புரியாது என்றாலும் இந்த சினிமாக்காரர்கள் ஏன் இப்படி அநியாயத்திற்கு கூஜா தூக்குகிறார்கள்..? தூக்கினால் தூக்கட்டும். தூக்க மாட்டோம் என்பவர்களை விட்டுவிட வேண்டியதுதானே..? ஊரைவிட்டே ஒதுக்குவோம் என்று சொல்லும், இவர்களுக்கும் கிராமங்களில் மரத்தடி பஞ்சாயத்து செய்யும் நாட்டாமைகளுக்கும் என்ன வித்தியாசம்..?

ரஜினியும், அஜீத்தும் முதல்வரை சந்தித்த அன்று மாலை நடந்த 'பாடகசாலை' படத்தின் கேஸட் வெளியிட்டு விழாவில் பேசிய பெப்ஸியின் தலைவர் குகநாதன், “நாங்கள் பண்பாகவும் கேட்போம். பணிவாகவும் கேட்போம். வற்புறுத்தி அல்லது மிரட்டியும் கேட்போம். என்ன செய்துவிட முடியும் இவர்களால்? அப்படியும் கேட்காவிட்டால் அவர்களை எப்படி ஓரங்கட்ட முடியும் என்ற வழிமுறையும் எங்களுக்குத் தெரியும்...” என்று ஏதோ வில்லன் ரேஞ்சுக்கு பேசியிருக்கிறார். வருத்தப்பட வேண்டிய விஷயம். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதைப் போல பெப்ஸி தலைவருக்குள் இருந்த 'உடன்பிறப்பு' பாசம் வெளியே வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

கலைஞரின் பாராட்டு விழாவுக்கு வந்தே தீர வேண்டும் என்று பல கலைஞர்களை மிரட்டிப் பணியவைத்த இவர்கள், நடிகர் சங்கத்தில் ஆயுள்கால உறுப்பினராக இருக்கும் செல்வி ஜெ.ஜெயலலிதாவை வற்புறுத்தினார்களா என்று தெரியவில்லை. புரட்சிக் கலைஞர் விஜயகாந்தை ஏன் வரவில்லை என்று கண்டித்தார்களா என்று தெரியவில்லை. கிராமத்து நாயகன் ராமராஜனுக்கு வராததற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்களா என்றும் தெரியவில்லை. எஸ்.எஸ்.சந்திரனுக்கு தந்தி அடித்தாவது அழைத்தார்களா என்பதும் தெரியவில்லை. 'திரையுலக அஷ்டாவதனி' விஜய டி.ராஜேந்தரை அழைக்க வண்டி போனதா என்றும் தெரியவில்லை. அவருடைய புதல்வர் நடிகர் சிம்பு என்ன காரணம் சொல்லி லீவ் லெட்டர் கொடுத்தார் என்பதும் தெரியவில்லை.. இது எல்லாவற்றையும்விட, குகநாதன் செயலாளராக இருக்கும் 'தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்க'த்தின் தலைவர் இயக்குநர் விசு ஏன் வரவில்லை என்று அவரது சட்டையைப் பிடித்துக் கேட்டார்களா என்றும் தெரியவில்லை. ஆனால் இவர்களையெல்லாம் ஏன்.. எதற்கு.. என்று கேட்க முடியவில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பொதுவானவனாக யாருமே இருக்க முடியாது என்பதுதான். ஒன்று நீ எனக்கு நண்பனா இரு. அல்லது அவனுக்கு நண்பனாக இரு. இரண்டுமே இல்லாவிடில் நீ எனது எதிரிதான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள் இரு தரப்பு அரசியல்வியாதிகளும். அந்த வியாதி இப்போது சினிமாவுலகத்தையும் தொற்றிக் கொண்டுள்ளது.

அந்த நிகழ்ச்சிக்கு வராதவர்களே தமிழ் இன உணர்வு இல்லாதவர்கள் என்கிற ரீதியில் பேச்சு எழுவது பிரச்சினை இப்போது எந்தத் திசையில் போகிறது என்பதை உணர்த்துகிறது. ஜாக்குவார் தங்கம் தான் சார்ந்திருக்கும் நாடார் இனத்தினரின் பெயரை போஸ்டரில் அடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். இனப் பிரச்சினையில் உட்புகுந்து இப்போது ஜாதிப் பிரச்சினையாகவும் உருமாறி வருகிறது. இந்த லட்சணத்தில் இதற்கு திருமாவளவனின் ஆதரவும் ஜாக்குவார் தங்கத்துக்காம். இப்படி எதையாவது செய்து வருங்கால முதல்வர் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிடலாம் என்று தீர்மானித்திருக்கிறார் திருமா. திருமாவின் ஆதரவு ஜாக்குவாருக்கு என்றவுடன் ரஜினிக்கும், அஜீத்துக்கும் ஆதரவு ஈரோட்டு நாயக்கரின் பேரன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடமிருந்து கிடைத்திருக்கிறது. சபாஷ்.. மெல்ல மெல்ல அரசியலும் உட்புகுகிறது. எங்கே போய் முடியும் என்றுதான் தெரியவில்லை.

இதுவரையிலும் ரஜினி என்னும் தமிழின் சூப்பர்ஸ்டாரின் இருப்பிடத்தை அசைக்க முடியாத இயலாமையில் முடியாதவர்கள் பலரும் வைக்கின்ற ஒரு முட்டாள்தனத்தை இன்றைக்கு சினிமாக்காரர்களே முன் வைப்பது கேவலமானது. அவருடைய புகழ் அவர்களுக்கு வேண்டும்.. பணம் அவர்களுக்கு வேண்டும்.. ஆனால் அவர் மட்டும் வேண்டாம் என்பது இவர்களது புதிய சூத்திரமாக இருக்கிறது. வெட்கக்கேடானது.

கலையில் மொழி இல்லை என்று இவர்களுடைய முன்னோர்கள் சொல்லியதால்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தை எம்.ஜி.ஆர்., சிவாஜி, நாகேஸ்வரராவ், என்.டி.ராமாராவ், ராஜ்குமார், பிரேம்நஸீர், மது என்று தென்னிந்திய ஹீரோக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆரம்பித்தார்கள். காலப்போக்கில் அவரவர் தாய் மொழியில் சங்கங்களை ஆரம்பித்தாலும், இந்த மொழித் திரைப்படங்கள் அடுத்த மொழியிலும், அடுத்த மொழித் திரைப்படங்கள் இந்த மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுத்தான் வந்தன. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ராஜ்குமார், நாகேஷ்வரராவ், பிரேம்நசீர் என்று அக்கால ஹீரோக்கள் அனைவருமே தங்களுக்குப் பொருத்தமான அடுத்த மாநிலக் கதைகளை தனதாக்கி அதில் வெற்றியும் பெற்றியிருக்கிறார்கள்.

இன்றைக்கு 'தமிழ்..' 'தமிழ்' என்று பேசத் துவங்கியிருக்கும் பெப்ஸியின் தலைவர் குகநாதனே தெலுங்கிலும் எத்தனையோ திரைப்படங்களுக்கு பணியாற்றியிருக்கிறார். தமிழைவிட தெலுங்கில்தான் குகநாதன் கதை விஷயத்தில் ரொம்பவே பிரபலம்.. தெலுங்குலகில் ‘ரிப்பேர் திலகம்' என்பார்களாம் அவரை. முடிச்சவிழ்க்க முடியாத ‘திரைக்கதை முடிச்சுக்களை அவிழ்ப்பதில் கில்லாடி குகன்' என்று பாராட்டப்பட்டவர் அவர். ஆனாலும் இன்றைக்கு தான் தெலுங்கிலும் மற்ற மொழிப் படங்களிலும் பணியாற்றியதையும், சம்பாதித்தையும் மறந்துவிட்டு தமிழைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்.

ஆரம்பக் காலத்தில் ஏவி.எம்.மின். ஆஸ்தான கதாசிரியராக இருந்த குகநாதன்தான் எம்.ஜி.ஆர் நடித்த ‘குமரிக்கோட்டம்', ‘புதிய பூமி' படங்களுக்கு கதாசிரியர். எஸ்.பி.முத்துராமன் முதல்முதலாக இயக்கிய ‘கனமுத்துப்பாப்பா'வின் கதாசிரியரும், தயாரிப்பாளரும் இவர்தான். சிவாஜியின் ‘ராஜபார்ட் ரங்கதுரை' படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். அஜீத் நடித்த “மைனர் மாப்பிள்ளை” படத்தை இயக்கி தயாரித்ததும் குகநாதன்தான். ஆனால் இதுதான் தமிழில் குகநாதன் தயாரித்த கடைசி படம்.

ஒருவேளை அந்தப் படத்தின் தயாரிப்புப் பணியில் தனிப்பட்ட முறையில் அஜீத்திற்கும், குகநாதனுக்கும் இடையில் ஏதாவது மோதல் இருந்திருக்குமோ என்கிற ரீதியில் பத்திரிகையாளர்கள் இப்போது தோண்டித் துருவிக் கொண்டிருக்கிறார்கள்.

குகநாதனின் சர்ச்சைக்கிடமான அந்தப் பேச்சு சற்று ஓவரானது என்பதை திரையுலகப் பிரபலங்களே ஒத்துக் கொள்கிறார்கள். இப்போதைய சமாதானத்துக்காக அறிக்கையில் கையெழுத்திட்டதாக ராதாரவி சொல்கிறாராம். ஆனாலும் குகநாதனின் அந்த மேடைப் பேச்சு நடிகர்களை இப்போது உசுப்பிவிட்டிருக்கிறது.

பல கண்டன போன்கால்களுக்கும், வருத்தங்களுக்கும் பிறகு நடிகர், நடிகைககளை விழாவுக்கு வந்தே தீர வேண்டும் என்று பெப்ஸி அமைப்பின் பெயரில் குகநாதன் மிரட்டியதாகவும், கட்டாயப்படுத்தியதாகவும் இப்போது நடிகர் சங்கத்தின் மூலம் முறைப்படியான புகார், தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாம். குகநாதனின் பேச்சு எல்லை மீறியது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். நடிகர் சங்கத்தின் இந்த நடவடிக்கை சரிவர பத்திரிகைகளில் வெளிவராமல் போயிருக்கிறது.. ஏன் என்று தெரியவில்லை.

அஜீத் இப்போதுவரையிலும் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி வருகிறார். ஆனாலும் "நமக்குள்ளதான.. ஒரு பேப்பர்ல எழுதி அறிக்கைவிட்டுட்டு ஆக வேண்டியதை பாருங்க.. அடுத்த நாளே எல்லாரும் மறந்திருவாங்க.." என்ற ரீதியில் அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடந்துதான் வருகின்றன.

இடையில் அவர் தெம்பாக இருப்பதற்கு இன்னுமொரு அரசியல் காரணமும் உண்டு. தயாநிதி அழகிரிக்கு அடுத்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜீத். மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை வெளியிடமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கினாலும், மதுரையின் பட்டத்து இளவரசரால் அந்தத் தடையை நொடியில் தூக்கிவிட முடியும் என்கிறார்கள் சிலர்.

இதற்கு, நயன்தாராவுக்கு முன்பு ஒருமுறை பெப்ஸி அமைப்பு தடை போட்டிருந்தபோது "ஆதவன் படத்தின் ஹீரோயின் நயன்தாராதான்" என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு சப்தமில்லாமல் பெப்ஸியின் அந்த தடை உத்தரவை குப்பைக் கூடைக்குப் போகச் செய்ததை உதாரணம் காட்டுகிறார்கள் பத்திரிகையாளர்கள்.

தமிழ்.. தமிழ்.. என்று திரையுலகில் இன்றைக்குச் சொல்பவர்களெல்லாம் ஒரு காலத்தில் ஐந்து மொழியிலும் தங்களது படங்களை ஏதாவது ஒரு ரூபத்தில் ஓட வைத்துக் கொண்டிருந்தவர்கள்தான். அன்றைக்கு அவர்கள் சம்பாதிக்க அத்தனை மொழிகளும் வேண்டும்.. அத்தனை மொழிக் கலைஞர்களும் வேண்டும் என்று ஆளாய்ப் பறந்தவர்கள் இன்றைக்கு சூடு குறைந்து, சுதியிறங்கி மைக் மட்டுமே மிச்சம் என்ற நிலைமைக்கு வந்த பின்பு தமிழ் மட்டுமே நம் மொழி என்று பேசுவது நயவஞ்சகத்தனம்.

தாங்கள் கலைஞரை சந்தித்த பிறகும் தங்களுக்கு எதிராகக் கண்டன அறிக்கையும், தடைகள் வருவதையும், தமிழின் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றபோதும் சங்க அமைப்பின் பெயரில் தங்களை நோக்கி கல்லெறியும் சம்பவங்களைப் பார்க்கின்ற இந்த நேரத்திலாவது ரஜினியும் அஜீத்தும் இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை புரிந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது.

ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களைப் பகைத்துக் கொண்டால் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் அதோ கதிதான் என்பதை முதலில் கலைஞரும், பின்பு ஜெயலலிதாவும் இப்போது மீண்டும் கலைஞரும் அவ்வப்போது பலருக்கும் உணர்த்தி வந்தாலும் அனுபவப்பட்டவர்களே புரியாததுபோல் இருப்பதும், நடிப்பதும் ஏன் என்றுதான் தெரியவில்லை.

இந்த வெட்கக்கேட்டை செய்த, செய்யும் இருவருமே கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இந்தக் கலைத்துறையின் துரதிருஷ்டம்.

புகைப்படங்கள் உதவி : www.indiaglitz.com

யாழ்ப்பாணத்தில் விசேட அடையாள அட்டை - ஒரு சுவாரஸ்யமான கதை..!

18-02-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நமது வலையுலகின் மிகத் தீவிரமான வாசகரான பென்ஸ் அலாய் என்னும் ஈழத்துப் பெரியவர் ஆஸ்திரேலியாவில் குடியிருந்தபடியே வலைத்தளம் எழுதி வருகிறார். சமீபகாலமாக தினமும் எனக்கு பல நல்ல விஷயங்களை மெயிலில் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்படி இன்று அவர் அனுப்பிய மெயிலில் இருந்த இந்தக் கதையை நிச்சயம் பதிவர்களாகிய உங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று எனக்குள் தோன்றியது.. அதுதான் இந்தப் பதிவு..!

நன்றிகள் பென்ஸ் ஐயாவுக்கு..!


"யாழ் நகரில் அரசாங்க விஷேட அடையாள அட்டை விநியோகித்த தமிழ் அலுவலர்களின் அசட்டை தமிழ் மகனது சுயநலம் அம்பலமாகுது.


இங்கே யாழ்குடா நாட்டை ஜெனரல் கொப்பாக்கடுவையின் இலங்கை இராணுவம் கைப்பற்றியதும் 10 வயதிற்கு மேற்பட்டோருக்கு விசேட அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதனை ஓர் Special Projectஆக அரசாங்க அடையாள அட்டை திணைக்களம் யாழ் அரசாங்க அதிபர் ஊடாக நடாத்தியது.

Special Project Manager திருலிங்கநாதன் அய்யாவினது தலைமையில் 35 ஆண், பெண் கிளார்க் நபர்கள் வெவ்வேறு உதவி அரசாங்க அலுவலகங்களது தொடர்பில் கிராம சேவகர்கள் மூலம் சிறுவர் சிறுமிகள் பெரியோர்களுக்கென வழங்கினார்கள்.


திரு.லிங்கநாதன் அய்யா ஓரு அறிவுக் கடல். மூன்று பாஷைகளும் சரளமாக பேசுவார். அகவை எழுபதை தண்டிய பின்னர் ''பாலபண்டிதர்'' படித்தார். தமிழ் பண்டிதர்களுடன் தர்க்கம் புரிவதற்காக. இவரை பின்னர் விரிவாக பார்ப்போம்.

இராணுவம் வீடுகளில் தேடுதல் நடாத்தும்போதோ- தெருவில் மக்களை சோதிக்கும் போதோ இந்த விசேட அடையாள அட்டை இல்லாது போனால் கைது செய்யப்படும் அவலமும் நடக்கும்.


அய்ந்து லட்சம் மக்களுக்கு 35 நபர்களது சேவை அதிதுரிதமாக இருக்காத போதிலும், எமது மக்களது பரிதாப நிலையை உணர்ந்து தமிழ் அரசாங்க அலுவலர் சற்று இளகிய மனதுடனும் சேவை மனப்பானமையுடனும் இயங்குவார்கள் என்று எமது சமுதாயம் ஏங்கியது.

சரி.. கதைக்குச் செல்வோம்.

சர்வன் பெரித்த குரலான். பருத்த உடம்பான். சாதுர்ய பேச்சாளன். கவர்ச்சியான உடை நடை பாவனை. இடம் கண்டால் தயங்காது ஏமாற்றும் பேர்வளி. ரோட்டுக்கு தார் போடும் ஓவர்ஸீயர். கள்ளம் என்றாலும் உழைப்பிற்கு குறைவில்லை. புலி இயக்க பொறுப்பாளருக்கே இத்துப்போன கயித்தை குடுத்தவன் எண்டால் பாருங்கோவன். Air Condition Curtain வித்த கதை சுவாரஸ்யமானது. ஞாபகப்படுத்துங்கோ பிளீஸ். சர்வன் தேவையானோரை சினேகிதராக்கி காரியம் பார்ப்பதில் கில்லாடி.

ஆசீர், அரசாங்க அடையாள அட்டை இலாகாவின் யாழ் மாவட்ட கிளாக்கர். அனுபவசாலி. ஆசீர் நேர்மையானவர். லஞ்சத்தை வெறுக்கும் அபூர்வ பேர்வழி. ''லஞ்சம் பறிக்க துணிவில்லாத மடையன்'', எனவும் ஆசீரை பலர் திட்டித் தூற்றுவர். எமது தண்ணி பாட்னர். தண்ணி வாங்குவது ஆசீர். அவருக்கு கொம்பனி நாம்.

ஆசீர் நம்ம கிளிக்கில ஓரு பொருத்தமில்லாதவர் எண்டுதான் சொல்லோணும். யதார்த்தவாதி. அதனால் வெகுசன விரோதி. மானஸ்தன். நாணயம் காப்பவர். புதுவிதமான முன்கோபி. அலுவலகத்தில் பெரும் பிழை ஏற்பட்டால் கோபிக்காது அன்பாக நயமாக பேசி பிழையை மேலிடத்திற்க்குத் தெரிவிக்காது ரெண்டாம் பேருக்கு பிரஸ்த்தாபிக்காது நிவர்த்தி செய்வார். அற்ப பிழையை கண்டாலோ மனுசன் பிச்சி பிடுங்கி மானத்தை வாங்கி பிரட்டி எடுத்திடுவார். ''மாசம் முடிய கை நீட்டி சம்பளம் வாங்கிறாயே, கொஞ்சமாவது கதையை குறைச்சு செய்யிற வேலையில கவனம் செலுத்தண்டி''. என்பார்.

பெண்கள்தான் கதைப்பது அதிகம். ஓரு நடுத்தர வயதுப் பெண் சதா நாளும் பிந்தியே வருவார். அதுகும் அவசர அவசரமாக அவர் சைக்கிளில் றோட்டைத் தாண்டும்போது பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கும். அண்மையில் குழந்தை பெற்றெடுத்தவர். அன்றொரு நாள் எமது அலுவலகம் முன்னால் றோட்டை கடக்கும் போது ஓரு பஸ் உடன் மோதப் பார்த்தார். பஸ் டிறைவர் படு தூஷணை வார்த்தைகளால் பெரும் சத்தமாக ஏசி விட்டுப் போனார்.

ஆசீர் அண்ணா கேட்டாரே அந்த ஷாக்கில பயந்து வந்த மனுசியை, ''ஏண்டி கடைசி நேரம் மட்டும் புருஷனை கட்டிப் பிடிச்சிட்டு வந்தா அந்த பிள்லையை அநாதராவாத்தான் விட்டுட்டு போகப் போறாயேடி''. விம்மி மிம்மி அழுதவளை கூப்பிட்டு, ''பிந்தி வாறதுக்கு உனக்கு உரிமை இருக்கு. ஸ்பெஷல் பெமிர்ஷனுக்கு மனு ஓன்று போடு. மினிஸ்றிக்கு எழுதி எடுக்கலாம்'' என்று ஆறுதல் சொல்லி சொன்ன மாதிரி அலுவலும் நடந்தது.

சர்வனது குடும்பம் பிள்ளைகளது கல்வியின் நிமித்தம் கிராமத்தில் இருந்து யாழ் நகர் குடியிருக்க வந்த காலம். சர்வனது மனைவியிடம் அடையாள அட்டை கிடையாது. கிராமப்புறத்தில் அடையாள அட்டை அதிகம் தேவையில்லாது போனாலும் நகர்புறத்தில் அட்டை இல்லாது ஆமிக்காறனிடம் தப்பலேது.

''அ.அ. க்கு மனு போட்டு ஆறு மாதமாகுது இன்னமும் ஓண்டையும் காணோம்'', என்றார் அம்மையார். ஆசீரது தலை சுற்றி ஓரு நோட். அவ்வளவே. சலனம் எதுவுமே கிடையாது. சர்வன் வெகு இரகசியமாக மனைவியிடம் சொன்னது எல்லோருக்கும் இரைச்சலாக கேட்டது, ''அந்தாளுக்கு ஓருக்கா சொன்னா போதுமப்பா, அவர் அப்பிடித்தான் ''.


அடுத்த நாள் யாழ் அரசாங்க அதிபருக்கு கடிதம் பறந்தது. உதவி அரசாங்க அதிபரிடம் விளக்கம் கேட்டிருந்தார் ''அதிபர்''. உதவி அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட கிளார்க்கர் அய்யாவினது இருப்பிடத்தை அணுக 300-க்கும் மேற்பட்ட தேங்கிய விண்ணப்பங்களுடன் கிளார்க்கர் அய்யா மாட்டிக் கொண்டாரே.. சதாசிவ சர்மா, தமிழ் அய்யர்.

மறுநாள் காலை அடையாள அட்டை அலுவலகத்திற்கு அசடு வழிய வந்து ஆசீர் அய்யாவை அணுகினார் சதாசிவ சர்மா, அசட்டு கிளாக்கர்.

''அய்யர் அய்யா, தமிழன் தமிழன் எண்டு தம்பட்டம் அடித்து கதை அளப்பீரே.. இதுதானா ஓய் உம்மட யோக்கியதை. காய்கறி வாங்க சந்தைக்கும் போக முடியமா.. பிள்ளைகளை நேரத்துக்கு பள்ளிக்கூடம் கொண்டு போக ஏலாம.. வீட்டை சோதிக்க வாற ஆமிகாறங்களுக்கு காட்டுறதுக்கு அடையாள அட்டை இல்லாம.. அவதிப்படுறாவாமே ஓரு மனுசி.. அவ உங்கட பெண்டாட்டியா அய்யரே..? அப்பிடியெண்டா மட்டும் மணியை கிலிக்கிக் கொண்டு இங்கை ஓடி வந்திருப்பீர்.. என்ன..?"

ஓரு முழக்கம். அய்யர் அசந்தே போனார் !

''தமிழன், நாம் தமிழர்'' என்று வசனம் வாய் கிழிய கத்துவோர் அநேகமாக ''வாய்'' அளவில் மட்டுமே என்பது எமது தமிழ் சமுதாயத்தின் பரவலான கருத்து.

தமிழ் சமுதாயத்திற்கென தியாகம் செய்த நல்ல உள்ளங்களும் எம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். அருமையாக.
."

முத்தான கலைஞன் வி.எம்.சி.ஹனீபா - ஒரு அஞ்சலி

17-02-10

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற ஆண்டுதான் லோகிததாஸ், ராஜன் பி.தேவ், முரளி என்று முத்தான மூன்று கலைஞர்களை இழந்திருந்த மலையாளத் திரையுலகத்திற்கு இந்தாண்டு துவக்கமே மோசமானதாக இருந்துவிட்டது. வி.எம்.சி.ஹனீபா என்னும் பாசக்கார மனிதரின் மரணம் மலையாள திரையுலகத்தினரை ரொம்பவே அப்ஸெட்டாக்கியிருக்கிறது.


கல்லீரல் புற்றுநோய் காரணமாக கடந்த 2-ம் தேதியன்று சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மரணமடைந்த வி.எம்.சி.ஹனீபாவின் மரணத்தை இத்தனை சீக்கிரம் யாரும் எதிர்பார்க்கவில்லை.. திருமணமாகி 16 வருடங்களுக்குப் பிறகு மூன்றாண்டுகளுக்கு முன்புதான் குழந்தைகள் பிறந்ததில் மனிதர் உச்சிகுளிர்ந்து போயிருந்தார். அதுவும் இரட்டை பெண் குழந்தைகள். சந்தோஷத்தின் உச்சியில் இருப்பதாக பெருமிதத்துடன் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்குள் இந்தத் துயரம்..


மாதத்தில் 30 நாட்களும் கேரளாவில் ஷூட்டிங்கில் இருக்க வேண்டியிருந்தாலும் சென்னையில் சாலிக்கிராமத்தில்தான் குடியிருந்து வந்தார். கடைசியாக தமிழில் 'வேட்டைக்காரனில்' நடித்திருந்தார். 'மதராஸபட்டினம்', 'கற்றது களவு' ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் ஹனீபா மிகச் சமீபத்தில்தான் தன்னை கேன்ஸர் தாக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

சென்னையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த 28-ம் தேதிதான் ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார். 2-ம் தேதி காலையில் ஏற்பட்ட கடும் மாரடைப்பு அவருடைய உயிரைப் பறித்திருக்கிறது.


1951-ம் ஆண்டு கொச்சியில் பிறந்த கொச்சி ஹனீபாவின் இயற்பெயர் சலீம் அஹமத் கெளஸ். தாவரவியலில் பட்டப் படிப்பை முடித்த சலீமுக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட.. நடிகர் ஜெயராம், பிந்து பணிக்கர், ஹரிஅசோகன், காலாபாவன் மணி என்ற கலைஞர்களெல்லாம் நடித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற நாடகக் குழுவான கலாபாவனில் ஒரு உறுப்பினராக சேர்ந்தார். 'காலாபாவன்' அமைப்பு நடத்தும் நாடகங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தபோது ஒரு நாடகத்தில் அவர் ஏற்றிருந்த 'ஹனீபா' என்றொரு கேரக்டர் டாப்கியருக்கு செல்ல.. இந்தப் பெயரும் பிறந்த ஊரான கொச்சியும் சேர்ந்து கொச்சின் ஹனீபா என்பதே இவரது பெயராக நிலைத்துப் போய்விட்டது.

1976-களில் சென்னை வந்த ஹனீபா அப்போதைய நமது வில்லன் நடிகரான ஆர்.எஸ்.மனோகரின் தம்பி சீனிவாசன் தயாரித்த மலையாளத் திரைப்படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியபடியே நடிக்கத் தொடங்கினார்.

1979-ல் 'அஷ்தவக்ரம்' என்னும் மலையாளப் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகத்திற்கு அறிமுகமான ஹனீபாவுக்கு முதலில் சில சிறிய வேடங்களே கிடைத்தாலும் பிற்பாடு அவருடைய முகத்தோற்றம் வில்லனுக்குரியதாக இருந்ததால் 'மாமாங்கம்' என்னும் படத்திலிருந்து வில்லனாக நடிக்கத் துவங்கினார்.

இதுவரையிலும் 300-க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 17 மலையாளத் திரைப்படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். 7 மலையாளத் திரைப்படங்களை இயக்கியிருக்கும் ஹனீபா தமிழிலும் 6 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில் 'பாடாத தேனீக்கள்', 'பாசப் பறவைகள்' இரண்டு படங்களுமே அவர் மலையாளத்தில் இயக்கிய திரைப்படங்களின் தமிழ் ரீமேக்தான். இந்த இரண்டிற்குமே கலைஞர்தான் வசனம் எழுதினார்.

1985-ல் இவர் இயக்கிய முதல் திரைப்படமான 'ஒரு சந்தோஷம் கூடி' இன்றைக்கும் மலையாள திரையுலகில் மிகப் பிரபலமான திரைப்படம். மம்முட்டியும், ரோகிணியும் நடித்தது. 2001-ம் ஆண்டு 'சூத்ரதாரன்' திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றிருக்கிறார்.


பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எளிமையானவர்.. ஈகோ இல்லாத மனுஷன்.. ஒரு இயக்குனருக்கு எந்த மாதிரியாகவும் செட்டாகக் கூடியவர் என்பதால்தான் தமிழ், மலையாளம், இந்தி என்று மூன்று மொழிப் படங்களிலுமே களைகட்டியவர். இவருடைய மிக நெருங்கிய நண்பரான இயக்குநர் பிரியதர்ஷனின் திரைப்படங்கள் அத்தனையிலும் தவிர்க்க முடியாத நபர் ஹனீபாதான். வில்லத்தனத்தில் இருந்து நகைச்சுவை கேரக்டருக்கு இவரை மாற்றியது பிரியதர்ஷன்தான்.


ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக இயக்குநர் பிரியதர்ஷனிடம் ஸ்கிரீன் அவார்டு விஷயமாக பேசுவதற்காக சந்திக்கச் சென்றிருந்தேன். ஒரு காலைப் பொழுதில் வாகினி ஸ்டூடியோவில் ஒரு விளம்பரப் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார் பிரியதர்ஷன். நான் சென்ற நேரம் என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அங்கே வி.எம்.சி.ஹனீபாவுடன், சீனிவாசனும் உடன் இருந்தார். நிமிடத்திற்கு ஒரு ஜோக் அடித்தபடியே நான் எதிர்பார்த்திருந்த வில்லன் கதாபாத்திரமும், இயக்குநர் கதாபாத்திரமும் இல்லாமல் சக தோழனைப் போல் பார்த்த நிமிடத்தில் தோளில் கை போட்டு பேசிய அந்த நேசத்தை நான் அப்போது எதிர்பார்க்கவில்லை.

நான் என்றில்லை.. அவருடன் இணைந்து பணியாற்றிய அத்தனை தமிழ்நாட்டு டெக்னீஷினியன்களும் இதைத்தான் சொல்கிறார்கள். கொடுத்தப் பணத்தை வாங்கிக் கொண்டு மிச்சம், மீதியிருந்தாலும் பின்னாடி வாங்கிக்கிறேன் என்று சொல்லிவிட்டு தயாரிப்பாளர்களுக்கும் பிடித்தமானவராக இருந்திருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகன் மீது முன்னணி மலையாள நடிகர்கள் கோபம் கொண்டு அவரைப் புறக்கணிப்பு செய்திருந்தபோதிலும், சமீபத்தில் நடந்த திலகனின் மகள் திருமணத்திற்கு ஹனீபா ஓடோடிச் சென்று வாழ்த்தியதை மலையாளப் பத்திரிகைகள் பெரும் செய்தியாக வெளியிட்டிருந்தன.

ஹனீபா தமிழில் முதலில் பிரபலமானது கே.பாலசந்தரின் 'வானமே எல்லை' படத்தில்தான். மகளின் காதலைத் தடுக்க மகள் விரும்பியவனின் தாயையே திருமணம் செய்து கொண்டு வரும் அதிவில்லத்தனமான கேரக்டர்.. யார் இந்த ஆளு என்று புருவத்தை உயர்த்த வைத்தது இவருடைய பாடி லாங்வேஜூம்.. டயலாக் டெலிவரியும்.. அடுத்த வருடமே வெளிவந்த 'மகாநதி' இவரை எங்கயோ கொண்டு போனது.. அந்த அலட்சியத்தனமான, நம்ப முடியாத வில்லத்தனம் இது போன்ற கேரக்டர்களுக்கே இவரை இழுத்து வந்தாலும். 'சிறைச்சாலை', 'காதலுக்கு மரியாதை' போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்கள் பக்கம் திசை திரும்பிவிட்டார்.

அவருடைய உடல் வாகுக்கு ஏற்றாற்போல் வில்லனாகவும், அதே சமயம் மாட்டிக் கொள்ள விரும்பாத காமெடியனாகவும் அவருடைய அவதாரங்கள் பல பல.. 'கிரீடம்' படத்தில் ரவுடி போன்று கைகளை வீசிக் கொண்டு அவர் நடந்து வரும் தோரணை பயமுறுத்துவதற்கு பதிலாக சிரிப்பைத்தான் வரவழைத்தது. இதையேதான் மலையாள இயக்குநர்கள் விரும்பினார்கள். சப்பையான வில்லன் என்றால் அது ஹனீபாதான் என்பதற்கு ஏற்றாற்போல் அவருக்குள் இருந்த நகைச்சுவைத்தனத்தை மலையாள உலகம் கச்சிதமாகவே பயன்படுத்திக் கொண்டது.

மலையாள சேனல்களில் தமாஷ் நிகழ்ச்சிகளில் வலம் வந்து கொண்டிருக்கும் ஹனீபாவை இப்போது பார்க்கின்றபோது இறைவன் அவசரப்பட்டுவிட்டானோ என்று திட்டத்தான் தோன்றுகிறது. எத்தனையோ நடிப்புகள் அவரிடமிருந்து திரையுலகத்திற்கு தேவையிருக்கும்போது சாவிற்கு என்ன அவசரம்..? இது நிச்சயம் கொடுஞ்சாவுதான்..!

காரணம், இறப்புக்குக் காரணமாக இருந்த கல்லீரல் கேன்சர் இவருக்கு ஏன் வந்தது என்பதும் தெரியவில்லை. மனிதர் திரையில்தான் நிறைய குடித்தது போல் நடித்திருக்கிறார். நிஜத்தில் குடிப்பழக்கம் இல்லாதவர். சிகரெட்டுகளைக்கூட தனது மகள்கள் பிறப்பிற்குப் பின் பெருமளவு குறைத்துக் கொண்டதாக அவருடைய பல வருட நண்பரான இயக்குநர் சசிமோகன் தெரிவித்தார். (பதிவர்களின் பின்னூட்டங்களுக்குப் பின்பு விசாரித்தபோது தெரிந்தது)

எர்ணாகுளத்தின் ஜூம்மா மசூதியில் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட ஹனீபா, வந்தாரை வாழ வைக்கும் சென்னைதான் தன்னையும் வாழ வைத்தது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அதே சென்னையில்தான் அவருடைய மரணமும் நிகழ்ந்து உடல் மட்டும் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது காலத்தின் கொடூரம்.

மீண்டு(ம்) வந்தேன்..!

16-02-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இந்த துரதிருஷ்டம் உங்களுக்கு வந்திருக்க வேண்டாம்தான்..! ஆனால் எனக்கும் வேறு வழியில்லை..!!

அதிர்ஷ்டத்தை என் வாழ்க்கையில் நான் இதுவரையிலும் பார்த்திருக்காத காரணத்தினாலும், இனிமேலும் பார்ப்பேன் என்று நினைக்கக்கூட முடியாத நிலையில் நான் இருப்பதினாலும் இது எனக்குப் புதியதல்ல.

உதிர்ந்த இலைகளெல்லாம் காற்றின் ஊடலையும் தூசிகளை உள்வாங்கிக் கொண்டு குறைந்தபட்சத்தை வெளிக்காட்டி நல்லதொரு தொண்டுள்ளம் செய்வதை நாம் உணர்ந்ததில்லை. உதிராமல் இருந்துவிடலாமே என்று அதுவும் நினைப்பதில்லை.. காலமாற்றம் நமக்கு மட்டுமல்ல.. இயற்கையின் அத்தனைக்கும் உண்டு. சிறகுகள் உதிர்ந்து சருகுகளாகி அப்போதும் அவைகள் யாரோ ஒரு இயற்கையின் படைப்புகளுக்குப் பயன்படுகின்றன என்பதுதான் அவற்றின் சிறப்பு.

வந்தோம்.. சென்றோம்.. என்றில்லை.. அத்தனையிலும் ஒரு காரண, காரியம் இருக்கிறது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தாலே வாழ்க்கையின்போக்கில் நாமும் போய்விடலாம்.

அப்படித்தான் யயாதியின் வம்சத்தில் ஒருவனாக வேட்கை கொண்டலையும் அவன் வழித்தோன்றலில் எளியவனாக எதையோ தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன். அது எது என்பதுதான் இன்றுவரையில் தெளிவாகப் புலப்படாததால் கண்ணில் படுபவற்றையெல்லாம் அற்புதம், அழகு என்றெல்லாம் மிகை உணர்ச்சியின் விளம்பில் நின்று வினாவெழுப்ப மனமில்லாமல் மனம் நிற்கிறது.

இடைத்தங்கலில் இளைப்பாறி, களைப்பாறிய உள்ளம் உற்சாகமாகி மீண்டும் குதிரையோட்டத்துக்கு தயாரானதுபோல் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டு வந்திருக்கிறேன். வருவது வரட்டும்.. போகிற போக்கில் என் தோல் உரிவதையும் காலச்சுழற்சியின் ஒரு அங்கமாக நினைத்து அதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கிடைத்திருப்பது குறித்து சந்தோஷம்தான்.

அந்த சந்தோஷத்துடனேயே மீண்டும் பதிவெழுத வருகிறேன்.. வந்திருக்கிறேன்.. இடையில் எழுதாமல் போனவைகள் எத்தனை.. எத்தனையோ.. அத்தனையும் திரும்பவும் எழுத எண்ணினாலும் கொட்டிப் போட்ட வார்த்தைகளை அத்தனையையும் அள்ளிவீசினாலும் தகுந்த இடம், சமயம் பார்த்து பிரயோகிக்கவில்லையெனில் அவை அத்தனையும் வீண்தான் என்று வில்லாதி வில்லன் அர்ஜூனனுக்கு யயாதியின் வாரிசு தர்மன் அருளிய உரை எனக்கு நியாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.

கடந்ததை மறந்து, நடந்ததை விட்டெண்ணி இனி வருவதை எதிர்கொள்வோம் என்று மறுபடியும் கடிகார முள் போன்று தரையிறங்கியிருக்கிறேன்.

ஓடுவதும், குதிப்பதும், சிரிப்பதும், சந்தோஷப்படுவதும், அழுவதும், துக்கப்படுவதுமாக அனைத்துமே இனி இங்கேயே இருக்கட்டுமே என்றெண்ணி எழுத முயல்கிறேன்.

வருகையை எதிர்பார்த்து பயத்துடன் காத்திருக்கும் நண்பர்களுக்கும், ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பர்களுக்கும், சொல்லொண்ணா நட்பை மறைத்துவைத்துக் கொண்டு முகமன் மட்டுமே காட்டி வரும் நட்பாளர்களுக்கும் எனது இனிய நட்பு கலந்த அன்பு வணக்கம்.