காலா - சினிமா விமர்சனம்

08-06-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். லைகா நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது.
படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ஹீமா குரேஷி, ஈஸ்வரி ராவ் இருவரும் அவருக்கு ஜோடிகளாக நடித்துள்ளனர்.
இந்தி திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் படத்தின் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளார்.
மற்றும் சமுத்திரக்கனி, சம்பத்ராஜ், சாயாஜி ஷிண்டே, அஞ்சலி பட்டேல், மணிகண்டன், திலீபன், பங்கஜ் திரிபாதி, ரவி காலே, ரமேஷ் திலக், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், சாக்சி அகர்வால், அருந்ததி, சுகன்யா, நித்திஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – பா.ரஞ்சித், ஒளிப்பதிவு – ஜி.முரளி, இசை – சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – கர் பிரசாத், கலை இயக்கம் – டி.ராமலிங்கம், ஒலி வடிவமைப்பு – அந்தோணி பி.ஜெ.ரூபன், சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், பாடல்கள் – கபிலன், உமாதேவி, அருண்ராஜா காமராஜ், அறிவு, நடன இயக்கம் – பிருந்தா, சாண்டி, ஒலிக்கலவை – ஜி.சூரன், உடை வடிவமைப்பு – அனுவர்த்தன், சுபிகா, செல்வம், ஸ்டில்ஸ் – ஆர்.எஸ்.ராஜா, மக்கள் தொடர்பு – ரியாஸ் அகமது, தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.பி.சொக்கலிங்கம், ஆர்.பிரகாஷ், இணை தயாரிப்பு – எஸ்.வினோத் குமார், தயாரிப்பு – தனுஷ், தயாரிப்பு நிறுவனம் – வுண்டர்பார் பிலிம்ஸ்.

1987-ல் வெளியான மணிரத்னத்தின் ‘நாயகன்’ திரைப்படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டது இத்திரைப்படம்.
மும்பையில் இருக்கும் ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
“நிலம் எங்கள் உரிமை – அந்த உரிமைதான் எங்கள் சுயநலம்.” – இந்த ஒற்றை வார்த்தையை முன் வைத்துதான் இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.
இந்தியா விடுதலையாவதற்கு முன்பிருந்தே ஆங்காங்கே நாடோடிகளாகவும், இருக்க வசதியற்றவர்களாகவும் வாழ்ந்த மக்கள் கிடைத்த இடங்களில் வசித்து வந்தார்கள். அது அவர்களுடைய சொந்த இடமில்லையென்றாலும் வாழ்ந்த, வாழுகின்ற இடங்களாக மாறிப் போயின.
ஆட்சியும், அதிகாரமும், இதன் மூலம் கிடைத்த பண வேட்கையும் அரசியல்வியாதிகளின் கண்களை ஆச்சரியத்தில் விரிய வைத்தபோதுதான் இந்த எளிய மனிதர்களின் வீடுகள் அவர்களுக்கு இலக்காகின. குடிசை வாழ் மக்களையும், அப்பாவி ஏழ்மை மக்களையும் விரட்டியடித்து அந்த இடங்களை அரசு அதிகாரத்தைக் காட்டி கைப்பற்றும் கொடூரத்தைத் தொடர்ந்து செய்தார்கள்.
இந்த மக்களின் பாதுகாப்புக்காகக் கொண்டு வரப்பட்டதுதான் பஞ்சமி நிலம் மீட்பு சட்டம். பூர்வீகமாக பரம்பரை, பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களிடமிருந்து அந்த நிலத்தை யாரும் கைப்பற்றக் கூடாது. அரசே கையகப்படுத்தக் கூடாது. அது அந்த மக்களுக்கானது என்கிற உரிமையைக் கொடுத்த சட்டம் அது. காலப்போக்கில் இதிலும் இல்லாத ஊழல்களையெல்லாம் செய்து அப்பாவி மக்களை வஞ்சித்து வருகின்றனர் அரசியல்வியாதிகள். இந்தக் கொடுமையை எதிர்த்துதான் இந்தப் படம் குரல் கொடுத்திருக்கிறது.
கிட்டத்தட்ட 520 ஏக்கர் பரப்பளவில் பரிந்து விரிந்திருக்கும் மும்பையின் மையப் பகுதியில் இருக்கும் தாராவி குடிசைப் பகுதியில் குடிசை அமைத்து முதன்முதலில் குடியேறிவர்களெல்லாம் மும்பைக்கே புதிதான தொழிலாளர்கள்தான். இந்தத் தொழிலாளர்கள்தான் மும்பையின் தொழில் வளர்ச்சிக்கும் உதவியவர்கள்.
இப்போதும் மும்பையில் வசிக்கும் பெரும் பணக்காரர்களின் வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்கள் அனைவருமே தாராவியில் வசிக்கும் மக்கள்தான். மும்பை முழுவதும் ‘டப்பா வாலாக்கள்’ என்றழைக்கப்படும் மதிய உணவை சப்ளை செய்யும் தொழிலாளர்களில் பெரும்பாலோர் தாராவியைச் சேர்ந்தவர்கள்தான்.
இன்றைய நிலைமையில் தாராவி பகுதியில் வசித்து வருபவர்களின் எண்ணிக்கை 7-லிருந்து 10 லட்சம் மக்கள்வரையிலும் இருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். மும்பையின் மொத்த மக்கள் தொகையில் 55 சதவிகிதம் பேர், இந்தப் பகுதியிலேயே வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மராட்டிய மண் மராட்டியருக்கே’ என்று முதன்முதலில் மும்பையில் குரல் கொடுத்த ‘சிவசேனா’ கட்சியின் பால் தாக்கரேதான் இந்த தாராவி பகுதி மீது கண் வைத்து கணைகளைக் கொடுத்தவர். அங்கேயிருக்கும் குடிசைகளை அகற்றி அந்த இடத்தைக் கைப்பற்றி அதில் மராட்டியர்களை மட்டுமே குடி வைக்க வேண்டும் என்றெல்லாம் பேசினார். ஆனால் மக்கள் கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க அவருடைய ஆசை நிறைவேறவில்லை.
அதன் பிறகு மகாராஷ்டிராவில் காங்கிரஸ் அரசின் சார்பில் முதலமைச்சரான சரத்பவார் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தாராவியை காலி செய்ய வைக்க பெரும் பிரயத்தனம் செய்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில் நடந்த கலவரமும், பெரும் போராட்டமும் வரதராஜ முதலியார் மற்றும் திரவிய நாடார் இருவரின் பெயர்களையும் வெளியுலகத்திற்கு அறிவித்தன.
அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் இறங்கினால் ஒட்டு மொத்தமாய் மும்பையே ஸ்தம்பித்துவிடும் என்கிற நிலைமைதான் இப்போது இருக்கிறது. இதனாலேயே மகாராஷ்டிரா அரசு தற்போது தாராவி பகுதி மீது மிகுந்த அக்கறை எடுத்து அந்தப் பகுதி மக்களுக்கு வேண்டிய வசதி வாய்ப்புகளை செய்து கொடுத்திருக்கிறது.
இத்தனை லட்சம் மக்கள் இருக்கும் இடத்தில் இருக்கும் சிற்சில டாய்லெட்டுக்கள், பாத்ரூம்களின் வசதிதான் பெரும் பிரச்சினையே.. அதேபோல் அந்த நகருக்குள்ளேயே ஓடும் சாக்கடையும், அது தரும் சுகாதாரக் கேடும் தாராவி மக்களுக்கு பெரும் வியாதிகளைக் கொடுத்தாலும் மும்பையின் மூச்சுமுட்டும் விலைவாசி, ஏழை ஜனங்களை அந்தப் பகுதியைவிட்டு வெளியேற விடாமல் தடுத்திருக்கிறது.
இந்தப் பிரச்சினைகளையெல்லாம் வைத்துதான் மும்பையின் தாராவி பகுதி இன்றைக்கு ‘ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய குடிசைப் பகுதி’ என்கிற பெயரைப் பெற்றிருக்கிறது.
இந்த மண்ணின் மைந்தர்களின் கதையைத்தான்.. வரதராஜ முதலியாரும், திரவிய நாடாரும் போராடி தடுத்து, அந்தப் பகுதி மக்களைக் காப்பாற்றிய கதைதான் ‘நாயகன்’ திரைப்படமும் இந்த ‘காலா’ திரைப்படமும்..! ‘நாயகனில்’ வரதராஜ முதலியார் என்றால் இந்தப் படத்தில் ‘திரவியம் நாடார்’ என்கிறார்கள்.
திரவியம் நாடார் 1930-களில் தமிழகத்தின் நெல்லை, அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து மும்பைக்கு வேலை வாய்ப்புக்காக சென்றவர். அங்கேயே செட்டிலானவர்.. அங்கேயிருந்த தமிழர்களுக்கு ஒரு தலைவராகவே திகழ்ந்து மறைந்தவர். அவருடைய வாழ்க்கைக் கதைதான் இந்த ‘காலா’ என்னும் ‘கரிகாலன்’ என்று சொல்லப்படுகிறது.
தாராவி பகுதியில் தலைவர் போல் இருப்பவர் ‘காலா’ என்னும் கரிகாலன். மனைவி செல்வி என்னும் ஈஸ்வரி ராவ் மற்றும் நான்கு மகன்கள், 3 மருமகள்கள், பேரக் குழந்தைகளுடன் அதே பகுதியில் வசதியான வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
அந்த தாராவி பகுதியில் இருக்கும் குடிசை வீடுகளை இடித்துத் தள்ளிவிட்டு அந்த இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்புக்களை கட்ட நவ பாரத் கட்சியின் தலைவரான ஹரி தாதா முடிவெடுக்கிறார். இதற்காக தனது தளபதியான சம்பத்ராஜை அனுப்பி வைக்கிறார்.
தாராவியின் வண்ணாந்துறையை சம்பத்ராஜின் ஆட்கள் இடித்துத் தள்ளும்போது ‘காலா’ நுழைந்து ‘ஒரு செங்கல்லைக்கூட இடிக்கக் கூடாது.. முடியாது’ என்று சொல்லி சம்பத்ராஜை திருப்பியனுப்பி விடுகிறார். இதனால் தனது மெகா பிராஜெக்ட் திட்டத்தை நடைமுறைத்தப்பட முடியாமல் கோபப்படுகிறார் ஹரி என்னும் நானா படேகர்.
‘காலா’ இருக்கும்வரையில் அத்திட்டத்தை தாராவியில் செயல்படுத்த முடியாது என்பதை உணரும் சம்பத்ராஜ் ‘காலா’வை கொலை செய்ய முயல்கிறார். இத்திட்டம் சொதப்பலானாலும் ‘காலா’விற்கு மிக நெருக்கமான ஒரு இளைஞன் கொல்லப்படுகிறான்.
இதனால் ஆத்திரப்படும் ‘காலா’ தன் மகனை வைத்து சம்பத்ராஜை கொலை செய்ய முயற்சிக்கிறார். அது நள்ளிரவில் முடியாமல் போனாலும், அடுத்த பகலில் அதைச் செய்து முடிக்கிறார் காலா.
தனது தளபதியின் மரணத்தால் துடித்துப் போகும் நானா படேகர்.. ‘காலா’வை சந்திக்க தாராவிக்கே நேரில் வருகிறார். “இது என்னுடைய இடம். இதில் நீ தலையிடக் கூடாது…” என்று காலாவை எச்சரிக்கிறார் நானா. ஆனால் நானா திரும்பிப் போக முடியாமல் மக்கள் தடுப்புக்களை போட.. வேறு வழியில்லாமல் காலாவிடம் திரும்பி வந்து அவமானப்பட்டு அவரிடத்தில் அனுமதி பெற்ற பின்பு வெளியேறுகிறார் நானா.
இது அவருக்குள் ஆறாத வடுவை ஏற்படுத்துகிறது. அவருடைய கட்சி மாகாராஷ்டிராவில் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தும், தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்கிற கொதிப்பில் இருக்கிறார்.
எப்பாடுபட்டாவது தாராவி பகுதியில் அடுக்கு மாடி கட்டிடம் கட்டம் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அதற்கான வேலைகளில் இறங்குகிறார் நானா. இதைத் தடுக்கும் முயற்சியில் இருக்கிறார் ‘காலா’. கடைசியில் யார் வெற்றி பெற்றார்கள்  என்பதுதான் இத்திரைப்படம்.
‘நாயகன்’ மட்டுமல்ல.. ‘சுறா’ படத்தில் இருக்கும் மீனவக் குடியிருப்புகளை கைப்பற்றும் நிலத்தைக் கையகப்படுத்த எதிர்க்கும் போராட்டம், மற்றும் ‘தலைவா’ படத்தில் இருக்கும் காட்பாதர் ஸ்டைல் கதையையும் உள்ளடக்கித்தான் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.
நிச்சயமாக இது ரஜினி படமல்ல. இயக்குநர் இரஞ்சித்தின் படம் என்பது மட்டும் உறுதி.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே இந்தப் படத்தின் பல காட்சிகள், தனது வழக்கமான திரைப்படங்களுக்கு மாறாக இருக்கிறது என்பது நிச்சயமாக தெரிந்திருக்கும்.
எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு இந்தப் படத்தில் மிக, மிக சாதாரணமாக அறிமுகமாகிறார் சூப்பர் ஸ்டார். இதுவே முதல் அதிர்ச்சி.
தனது அழகான இயக்கத் திறமையால் அத்தனை நடிகர், நடிகைகளையும் அழகாகவே நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் இரஞ்சித்.
ரஜினியின் வயதுக்கேற்ற கேரக்டர் என்றாலும் அவருடைய வேக நடை, ஸ்டைல் ஆக்சன், ஸ்பீடு டயலாக், கெத்தான உடல் மொழி, கம்பீரத் தோற்றம் அத்தனைக்கும் இந்தப் படத்தில் கூடுதல் வேலையைக் கொடுத்திருக்கிறார் ரஞ்சித். இன்னும் கூடுதலாக மனைவி, மற்றும் காதலிக்காக உருகும் சாதாரண ஒரு குடும்பத் தலைவன் கேரக்டரையும் செய்திருக்கிறார் ரஜினி.
படம் நெடுகிலும் ஒரு தாதாவைப் போன்றே காட்சியளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதினால் அந்த ஸ்டைலில் ரஜினி நடித்த காட்சிகளைவிடவும் ரூப் கார்டன் ஹோட்டலில் தனது பழைய காதலி ஹூமாவுடன் அமர்ந்து பழைய கதைகளைப் பேசும் ஒரு காட்சியில் ரஜினியை மிகவும் பிடிக்கிறது. இந்தக் காட்சியில் இசையமைப்பாளர், நடிகை, இயக்குநர் என்று அனைவருமே போட்டி போட்டு வேலை செய்திருக்கிறார்கள்.
முதல்முறையாக நானா படேகர் தாராவிக்குள் வந்து ரஜினியை சந்திக்கும் காட்சியில் ரஜினியின் எகத்தாளமான பேச்சும், “நான் உன்னை போகச் சொல்லவேயில்லையே…” என்று ஸ்டைலாக மிரட்டும் காட்சியும் அவரது ரசிகர்களுக்கானது.
நானா படேகரின் வீட்டுக்குள்ளேயே போய் ரஜினி பேசும் காட்சியில் பேசப்படும் வசனங்கள் சில இஸங்களை குறிப்பிட்டே பேசப்படுவதால் கதையின் அடித்தளத்தைவிட்டுவிட்டு கருத்துக்களை கோர்வையாகச் சொல்லி பரப்புரையாக்கப்பட்டதில் ரஜினியின் கோப நடிப்பை அதிகம் ரசிக்க முடியாமல் போய்விட்டது.
போலீஸ் ஸ்டேஷனில் சாயாஜி ஷிண்டேவை காட்டி, “குமாரு,, யார் இவரு…?” என்று திருப்பித் திருப்பிக் கேட்கும் காட்சியில் அந்தக் காட்சியின் அமைப்பையும் மீறி சிரிக்க வைத்திருக்கிறார் ரஜினி.
மனைவியிடம் பல்பு வாங்கும் காட்சியில்கூட இந்த தாதா நடித்திருக்கிறார். “நிஜமாவே பெருமாளை நீ காதலிச்சியா…?” என்று சந்தேகத்துடன் கேட்கும்போது பழைய ரஜினி தென்படுகிறார். அதேபோல் கொல்லப்பட்ட தன் மனைவியை நினைத்து “அவ எனக்கு சாமி.. குல சாமி..” என்று கலங்கும் காட்சியிலும் சினிமா நடிப்பையே காண்பித்திருக்கிறார் ரஜினி. ஆனால் இது இரண்டுமே தாராவியின் தாதா என்னும் ரஜினியின் கேரக்டர் ஸ்கெட்ச்சை கொஞ்சம் சிதைத்திருக்கின்றன என்பதையும் சொல்லியாக வேண்டும்.
ரஜினியின் மனைவி செல்வியாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவின் அலப்பறைகள் கொஞ்சம் ரசிக்கும்படி இருக்கின்றன. ஆனாலும் இந்த அளவுக்கு வளவளவென்று வசனங்கள் பேசியிருக்க வேண்டாம். கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
“எனக்கும் திருநெவேலிக்கு ஒரு டிக்கெட் போடுங்க. என் பின்னாடியே அலைஞ்சு திரிஞ்ச அந்த பெருமாளையும் ஒரு பார்வை பார்த்திட்டு வர்றேன்..” என்று அவர் குபீரென்று பொங்கும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது. “ஐ லவ் யூ பொண்டாட்டி” என்ற ரஜினியின் கொஞ்சலுக்கு அவர் காட்டும் ரியாக்ஷன் சூப்பர்ப்..!
புத்தம்புது ரோஜாவாக தமிழுக்கு அறிமுகமாகியிருக்கும் ஹூமா குரேஷியின் வருகைக்கு ஒரு மிகப் பெரிய ரோஜாப்பூ மாலையை அணிவிக்கிறோம். டூயட்டுகளெல்லாம் இல்லாமல் மத்திய வயதையொட்டிய மேக்கப்பில் அம்மணி தனது நடிப்புத் திறனை காட்டியிருக்கிறார்.
முதல்முறையாக ரஜினியின் வீட்டில் சந்திக்கும்போதும் காட்டும் காதல் ரியாக்ஷன்களும், ரூப் கார்டன் ஹோட்டல் சந்திப்பிலும் ஹூமாவின் காதலை அவரது கண்களே பேசியிருக்கின்றன. ரஜினி வீட்டிற்கு வந்து நலம் விசாரிக்கும்போது ஏற்படும் மோதலும், கூட்டத்தில் ஒப்பந்தம் தொடர்பாக இருவருக்குள்ளும் ஏற்படும் காரசார விவாத்தில் “மிஸ்டர் கரிகாலன்” என்று அழைத்து பொருமும் காட்சியிலும் தனி நடிப்பைக் காண்பித்திருக்கிறார் ஹூமா. வெல்டன் மேடம்..!
அண்ணன் சமுத்திரக்கனி முழு நேர குடிகாரராக ரஜினியின் வலது, இடம் கரமாக நடித்திருக்கிறார். ‘நாயகனில்’ கமலுக்கு டெல்லி கணேஷ் போல்.. இந்தப் படத்தில் ரஜினிக்கு இவர். எப்போதும் தண்ணியிலேயே மிதந்து கொண்டிருப்பதால் குடிகாரன் பேச்சை அப்படியே பேசியிருக்கிறார்.
நானா படேகர் என்னும் நடிப்பு ஜாம்பவான் மிரட்டியிருக்கிறார். நிஜத்தில் பால் தாக்கரேயின் தம்பி மகனான ராஜ் தாக்கரேயின் கேரக்டரை படத்தில் செய்திருக்கிறார் நானா படேகர்.
வெள்ளையுடை வேந்தனாக தனது உடல் மொழியால் பல காட்சிகளில் பார்ப்பவர் கண்ணை சிறிதுகூட அகற்ற முடியாமல் பிடித்து வைக்கிறார் நானா. வில்லத்தனத்திற்கு கோபமான குரலும், கொடூரமான முகமும் தேவையில்லை. அதிகமான உடல் மொழியும், வசன உச்சரிப்புமே போதும் என்பதற்கு இந்த ஹரி தாதாவும் ஒரு உதாரணம்.
தன் வீட்டில் தன்னை சந்திக்க வந்த ரஜினியிடம் தன் காலைக் காட்டி “வா.. வந்து தொட்டு்ட்டுப் போ.. எல்லா பிரச்சினையும் ஒரே நாள்ல முடிஞ்சிரும்…” என்று சொல்லும் கோபத்தில் “சூப்பர்டா…” என்று மனதுக்குள் சொல்ல வைக்கிறார் நானா.
ரஜினியின் மகன்களில் மூத்த மகனாக நடித்திருக்கும் திலீபன், கடைசி மகனாக ‘லெனின்’ என்ற பெயரில் நடித்திருக்கும் மணிகண்டன், இவரது காதலியாக நடித்திருக்கும் அஞ்சலி பாட்டீல், மருமகள்கள் சுகன்யா, அருந்ததி, சாக்ஷி அகர்வால், இடையிடையே அணி மாறும் அருள்தாஸ்,  போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கஜ் திரிபாதி, நானாவின் அடியாளாக நடித்திருக்கும் ரவி காலே, நானாவின் பேத்தியாக நடித்திருக்கும் அந்தச் சிறுமி என்று பலருக்கும் நடிப்பதற்கான முழு வாய்ப்பையும் வழங்கியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.
முதல் பாதியில் புத்திசாலித்தனமாக ரஜினி – ஹூமா இடையேயான காதல் காட்சியை படமாக்காமல் அதைக் கார்ட்டூனிலேயே காட்டியிருப்பதால் ரஜினி தப்பித்தார். இல்லையென்றால் ‘சிவாஜி’ படம்போல் முகத்தை இளமையாக காட்ட கஷ்டப்பட்டிருக்க வேண்டும்..!
முதல் பாதியில் சில போரடிக்கும் காட்சிகளுக்கிடையே சம்பத் ராஜின் கொலைக்கு பிறகுதான் நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். பின்பு மறுபடியும் டல்லாக.. ரஜினி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகும் காட்சியில் இருந்துதான் படமே ஸ்பீடாகிறது. ஆனாலும் கிளைமாக்ஸை இத்தனை நீளத்திற்கு இழுத்திருக்கக் கூடாதுதான்..!
தாராவியின் முண்டு, முடுக்கையெல்லாம் ஒண்ணுவிடாமல் ஷூட் செய்திருக்கிறோம் என்று சொல்லியிருந்தாலும், அனைத்தையும் செட் போட்டுத்தான் எடு்த்திருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெரிவாகத் தெரிகிறது.
மும்பை தாராவியை வடிவமைப்பதுபோன்று செட் அமைத்து படமாக்கியிருக்கிறார்கள். கலை இயக்குநர் டி.ராமலிங்கத்திற்கு இதற்காக ஒரு ஷொட்டு. காசு, பணம் பார்க்காமல் வாரி இறைத்திருக்கும் தயாரிப்பாளர் தனுஷுக்கும் ஒரு நன்றி.
அடிக்கடி பருந்து பார்வையில் தாராவியை படம் பிடித்து பிரமிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜி.முரளி. காட்சிகளில் கலர் டோன்களை அதிகம் பயன்படுத்தாமல் கிளைமாக்ஸில் மட்டும் டன் கணக்கில் பயன்படுத்தியிருக்கிறார் போலும்..! கிளைமாக்ஸில் கலர், கலராக ஸ்கிரீன் மாறும்போது அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் மனதில் உட்காரவில்லையே..?
ரஜினியின் 69 வயது இளமை தோற்றத்தை படம் காட்டினாலும் அவருடைய கை, கால்களில் தோன்றியிருக்கும் உருமாற்றத்தை தவிர்க்க முடியவில்லை. சண்டை காட்சிகளில்கூட தற்போதைய டெக்னாலஜியின் உதவியினால் சாதாரண குடையைப் பயன்படுத்தியே சண்டையிடும் காட்சியெல்லாம் சப்பையாக இருக்கிறது. சி.ஜி.யே தரம் குறைவாய் தோன்றுகிறது..!
இதே போன்ற சண்டை காட்சிகளை மோகன்லாலின் சமீபத்திய ‘புலி முருகன்’ படத்தில் எப்படி அசுரத்தனமாக படமாக்கியிருக்கிறார்கள் என்பதற்காக அந்தப் படத்தை இயக்குநர் ரஞ்சித் ஒரு பார்வை பார்த்திருந்திருக்கலாம்.
இரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘கண்ணம்மா’ பாடலும், ‘தங்கச் செல’ பாடலும் கேட்கும் ரகம். ‘உரிமையை மீட்போம்’, ‘போராடுவோம்’, ‘கற்ற வை; பற்ற வை’ போன்றவைகள் காட்சிகளை நகர்த்த பெரிதும் உதவியிருக்கின்றன.
நானா படேகர் ரஜினியை பார்க்க வரும் காட்சியில் பின்னணி இசை அபாரம். அந்தக் காட்சியின் தரத்தை மிகப் பெரிய அளவுக்கு தூக்கி நிறுத்தியிருப்பது சந்தோஷ்தான். கிளைமாக்ஸிலும் இதையே கொஞ்சம் அடக்கமாய் செய்து நம்மை காப்பாற்றியிருக்கிறார் சந்தோஷ். அதற்காக அவருக்கு ஒரு தனி பாராட்டு..!
2 மணி 44 நிமிட நேரத்தில் இருக்கும் இந்தப் படத்தில் ரஜினியின் குடும்பப் பிரச்சினை காட்சிகளை கொஞ்சம் குறைத்து, நானா – ரஜினி மோதலை இன்னும் அதிகமாகக் காட்டியிருக்கலாம்..!
இயக்குநர் இரஞ்சித் தான் சார்ந்த சமூகத்தினரையும் மனதில் வைத்து, தான் கொண்டிருக்கும் அம்பேத்கர், பெரியார் வழி கொள்கைளையும் சேர்த்து வைத்து இந்தப் படத்தை அதன் பாணியிலேயே உருவாக்கியிருக்கிறார்.
படத்தில் இடையிடையே அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர், இரட்டை மலை சீனிவாசன், சிவ்ராஜ்  ஆகியோரின் சிலைகளை காட்டுகிறார். இராவணன் பற்றிய புத்தகத்தை ரஜினி படிப்பது போன்ற காட்சியையும், தொலைக்காட்சியில் ஸ்குராலிங் நியூஸாக ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வு தொடர்பான செய்தியை ஓடவிட்டிருப்பதும்கூட ஒரு குறியீடுதான்.
பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில்  போலிஸார் திட்டமிட்டு தாழ்த்தப்பட்ட மக்களை குறி வைத்து சுட்டுக் கொலை செய்ததையும், தாமிரபரணி ஆற்றங்கரையில் மாஞ்சோலை எஸ்டேட் விவகாரத்திற்காக போராடிய தொழிலாளிகளை போலீஸார் விரட்டிவிரட்டி சுட்டதையும், நீரில் நீந்தி வந்த மக்களை போலிஸாரே மீண்டும் தண்ணீரில் அடித்து  தள்ளி விடும் காட்சியை வைத்திருப்பதும், மெரீனா போராட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு, டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களில் அந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீஸார் நடத்திய வன்கொடுமைகளையும் மறைமுகமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
ஒரு மிகப் பெரிய நகரத்தின் மையப் பகுதியில் அனைத்து பணக்காரர்களின் கண்ணையும் உறுத்தும்வகையில் உருவாகியிருக்கும் இந்த சேரிப் பகுதி, குடிசை வாழ் மக்களை அப்புறப்படுத்தி நகர்மயமாக்கல் என்கிற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழ்ச்சிக்கு அரசுத் துறையும், அதிகார வர்க்கமும், அயோக்கிய அரசியல்வாதிகளும் எப்படியெல்லாம் துணை போகிறார்கள் என்பதையும் இந்தப் படம் சற்று அதிகமாகவே விளக்கியிருக்கிறது.
அரசியல்வியாதிகள் மற்றும் ஆட்சியாளர்களின் அடிவருடியாய் விளங்கும் இந்திய காவல்துறை அப்பாவி மக்களை எப்படி ஏமாற்றுகிறது. கொடுமைப்படுத்துகிறது.. மத வெறியை தூண்டிவிட்டு மக்களிடையே சண்டையை மூட்டி விடுகிறது என்பதையும் இந்தப் படத்தில் சாட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் இரஞ்சித்.
அடிப்படையான உண்மையை வெளிப்படுத்தும்விதமாய் தாராவியை டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்து புதிய அடுக்கு மாடி கட்டிடங்களைக் கட்டும் நிறுவனத்திற்கு பெயர் ‘மனு ரியாலிட்டி ஹோம்ஸ்’ என்று வைத்திருக்கிறார் ரஞ்சித். இவர்கள் கட்டப் போகும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அமையும் நகரத்தின் பெயர் ‘தண்டகாரண்யம் நகர்’.. என்னா உள்குத்து..? ஆனாலும் இது அரசியல் சார்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதுதான் உண்மை..!
இரஞ்சித்தின் இயக்கத்திற்கு உறுதுணையாய் இருக்கிறது படத்தில் பேசப்பட்டிருக்கும் பல வசனங்கள். “காலா என்பது அவங்க பார்வையில் அழிப்பவன்…  நம் பார்வையில் காப்பவன்..” என்று காலாவுக்கு விளக்கம் சொல்வதும், “திருநெல்வேலில எங்க குல சாமியின் பெயர் கரிகாலன்…”  என்று நானாவிடம் சொல்லும் இடமும் அந்தக் குலத்தினருக்கு பெருமை சேர்க்கும் வசனங்கள்.
“சேரில இருக்கிற உங்களுக்கெல்லாம்  சட்டத்தை பற்றி என்ன தெரியும்…?” என்று கேட்கும் போலிஸ் இன்ஸ்பெக்டரிடம், “சட்டத்தை பற்றி என்ன தெரியும்ன்னு எங்ககிட்டயே கேக்குறியா..?” என்று ரஜினி ஸ்டைலாக மர்மப் புன்னகையில் திருப்பிக் கேட்பதில் இருக்கும் அரசியலும் புரியாமல் இல்லை.
“பொதுவாக ஆடுகளைத்தான் பலியிடுவார்கள். நாங்கள் ஒன்றும் ஆடுகள் அல்ல;” என்றும், “எம்மக்கள் யானையை போன்றவர்கள்.. அவர்களின் பலம் அவர்களுக்கு இன்னமும் தெரியாததால்தான் பிச்சை எடுக்கின்றனர்…” என்ற அம்பேத்கரின் பேச்சுக்களையும் சைடாக புகுத்தியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.
திலீபன் இறந்த பிறகு “எங்க குல சாமி மதுரை வீரன் போய்ட்டானே…” என்று சமுத்திரக்கனி பேசும் வசனத்திலும், “சமத்துவம்ன்னா கால்ல விழுகுறது இல்ல ஸார்.. கை குலுக்கினாலே போதுமே…” என்று ஹூமா குரேஷி நானா படேகரிடம் சொல்லும் வசனமும் தான் சார்ந்த, தான் ஏற்றுக் கொண்ட கொள்கையை மக்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் பணியை இயக்குநர் ரஞ்சித் கச்சிதமாக செய்திருக்கிறார் என்பதற்கான உதாரணங்கள்..!
நானா படேகர் பேசும் பல வசனங்கள் காலாவை மென்மேலும் உயர்த்துகிறது. “உன்னைக்  குறி வைச்சேன். தப்பிச்சிட்ட. ஆனால் அது என் தப்பில்ல.. பகவானோட தப்பு..” என்கிறார். இன்னொரு காட்சியில் “பகவானுக்கு எல்லாமே படைச்சாச்சு.. காலாவோட தலையைத் தவிர..” என்கிறார்.
இதே சந்திப்பில் காலா பதிலுக்கு பேசும் வசனங்களும் தீப்பொறிதான். “நிலம் உனக்கு அதிகாரம்.. ஆனால் அதுதான் எங்களுக்கு வாழ்க்கை…” என்கிறார் காலா. அவருடைய கருப்பு நிற உடையைப் பார்த்து முகத்தைச் சுழிக்கும் நானா, “இந்தக் கருப்பு கலர் எதுக்கு..? பார்க்கவே எரிச்சலா இருக்கு…” என்கிறார். “கருப்பு உன்னைப் பொறுத்தவரைக்கும் அழுக்கு. ஆனா அதுதான் உழைப்பின் நிறம்..” என்கிறார் காலா. மேலும், “என்னோட நிலத்தை அதிகாரத்தைப் புடுங்குறதுதான் உன் கடவுளோட வேலைன்னா, அந்தக் கடவுளையும் சும்மாவிட மாட்டேன்…” என்கிறார் காலா. 
எல்லாவற்றுக்கும் மேலாக கிளைமாக்ஸ் காட்சியில் இராமன் அயோக்கியன் என்றும் இராவணன்தான் நல்லவன் என்பதையும் சொல்லி தற்போதைய சங் பரிவாரங்களையும், மத்திய ஆளும் கட்சியையும் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.
நானாவின் வீட்டில் ராம கதாகாலேட்சபம் நடந்து கொண்டிருக்க இடையிடையே காலாவை அழிப்பதற்கான உத்தரவுகளையும் போட்டுவிட்டு தனது பேத்தியையும் கொஞ்சிக் கொண்டிருக்கிறார் நானா. காலா ஒரு ராவணன்ம்மா.. அவனைக் கொல்லணும்ன்னு வால்மீகியே எழுதியிருக்காரு. நான் அவனைக் கொன்னேதான் ஆகணும்..” என்கிறார். 
எப்படி இதையெல்லாம் தாங்கிக் கொண்டு சென்சாரில் அனுமதியளித்தார்கள் என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் வீரியமான வசனங்களை எழுதியிருக்கும் தோழர்கள் ஆதவன் தீட்சண்யா, மகிழ்நன்.பா., பா.இரஞ்சித் மூவருக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
கிளைமாக்ஸில் கருப்பு, சிவப்பு, நீலம் என்று பெரியார், மார்க்சியம், அம்பேத்கர்  என்று இந்தத் தலைவர்களின் வரலாறு கலந்த உணர்வைக் கொடுக்கும்வகையில் படத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர்.
கேரக்டர் ஸ்கெட்ச்சில் பலருக்கும் ஒருவிதமான உணர்வைக் கொடுத்தும் காட்சியமைப்புகளில் பல லாஜிக் எல்லை மீறல்களையும் விட்டு வைத்திருக்கிறார் இயக்குநர் இரஞ்சித்.
ரஜினியின் தந்தையை நானா படேகர்தான் கொலை செய்திருக்கிறார். ஆனால் நானா இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். அவரை ஏதும் ‘சம்பவம்’ செய்ய ரஜினிக்கு மனசில்லை போலும். ஆனால் தாதா போல் தாராவியில் குடியிருக்கிறார். அப்புறம் எப்படி தலைவர் என்ற இமேஜ் தாராவியில் ரஜினி மீது ஏற்பட்டிருக்கும்..?
அத்தனை பெரிய தாராவியில் ரஜினியின் வீடு இருக்கும் பகுதி மட்டும் அத்தனை அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல, பெரிய வசதியுள்ள வீடாக இருக்கும் அந்த வீட்டில் இருக்கும் அளவுக்கு ரஜினி இப்போது என்ன தொழில் செய்து வருகிறார்.. அவருடைய பிள்ளைகளின் தொழில் என்ன.. வருமானத்திற்கு என்ன வழி என்பதெல்லாம் படத்தில் எங்கும் சொல்லப்படவே இல்லை.
இதேபோல் தாராவியில் ரஜினி தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் அளவுக்கு என்ன செய்தார் என்பதும் சொல்லப்படவில்லை.
இவர்தான் அங்கே எல்லாம் என்றால் இவரை எதிர்த்தே சம்பத்ராஜ் இவருக்கே தெரியாமல் வண்ணாந்துறையை இடித்துக் கட்ட முடிவெடுத்து புல்டோசரோடு வந்தது ஏன்.. அதெப்படி இந்த விஷயம் ரஜினிக்கு தெரிவிக்கப்படவே இல்லை..?
இதே சம்பத்ராஜை பட்டப் பகலில் ஒரு மேம்பாலத்தில் வைத்து போலீஸார் முன்னிலையிலேயே படுகொலை செய்துவிட்டு வேறு சிலரை கோர்ட்டில் சரணடைய வைத்துவிட்டு காலா ஹாயாக வீட்டில் காலாட்டிக் கொண்டே பேப்பர் படித்துக் கொண்டிருப்பது எந்தக் காலத்தில் சாத்தியம்..? ‘நாயகனில்’கூட இப்படி கிடையாதே..?
மகாராஷ்டிராவில் தற்போது முக்கிய கட்சிகளில் ஒன்றாக இருக்கும் நவ நிர்மாண கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேயை குறி வைத்து நானா படேகரின் கேரக்டர் ஸ்கெட்ச்சை உருவாக்கியிருக்கும் இயக்குநர் இதை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் தவிர்த்தது ஏன்..?
மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவராக நானா படேகரையும், அவர் கட்சி சார்பாக அமைச்சர் பதவியில் இருக்கும் சாயாஜி ஷிண்டேவையும் படத்தில் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
இறுதியில் ரஜினி உயிருடன் இருக்கிறாரா.. இல்லையா..? எப்படி உயிர் பிழைத்தார்.? அதுவும் நெஞ்சில்.. குளோஸ்டு ரேஞ்ச்சில் வைத்து சுடப்பட்டது..? எப்படி தப்பித்தார்? என்பதையெல்லாம் சொல்லாலேயே படத்தை முடித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
ஹீமா குரேஷியின் கேரக்டர் ஸ்கெட்ச்சிலும் ஒரு ஓட்டை. அம்மணி உலகம் முழுவதும் சுற்றியவர். உலகத்தின் பல குடிசைப் பகுதிகளை சீரமைத்து ஐ.நா. சபையிலேயே விருது பெற்றவராக காட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பகுதியை சரி செய்ய வந்தவர் முதலில் ரஜினியிடம் அல்லவா அது பற்றி விவாதித்திருக்க வேண்டும். அவர்தானே அந்தத் தாராவியின் தந்தை. அவரிடத்தில் சொல்லாமலேயே பில்டர்கள் மற்றும் பொறியாளர்கள், லோக்கல் ஆட்களுடன் பேசுவதெல்லாம் ஏன்.. எதற்காக.. எப்படி..?
அதிலும் பில்டர் ஒரு வடிவமைப்பை காட்டுகிறார். அதில் “அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு நடுவில் கோல்ப் கிரவுண்ட் அமைக்கப்படும்…” என்கிறார்கள். இதனை ரஜினி அண்ட் டீம் எதிர்க்கிறது. ஆனால் ஹீமா குரேஷி ஆதரிக்கிறார். அவரே மெத்தப் படித்தவர்தான். அவருக்கு தெரியாதா..? அந்தப் பகுதி மக்களுக்கு எதற்காக கோல்ப் கிரவுண்ட்…? என்று அவர்தானே பில்டரிடம் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.. அதைச் செய்யாமல் இதனை கேள்வி கேட்கும் கரிகாலனிடம் எதிர் கேள்வி கேட்பது எந்த வகையில் நியாயம்..?
மற்றும் ஒரு கேள்வியாக எந்தப் புள்ளியில் ஹீமா குரேஷி ரஜினியின் கூட்டணியில் சேர்கிறார். எதன் பொருட்டு அவர் மனம் மாறுகிறார்..? இதனை கொஞ்சம் அழுத்தமான சில வசனங்களால் சொல்லியிருக்க வேண்டும். வழக்கமான கமர்சியல் படங்களில் கடைசியில் ஹீரோயின் வந்து ஹீரோவுடன் கை கோர்ப்பது போலாகிவிட்டது ஹீமாவின் ஜாயிண்ட் ஆக்சன்..!
“போராடாமல் எதுவும் சுலபமாய் கிடைத்துவிடாது. போராட்டம் மட்டுமே நமது வாழ்க்கையை நமக்கு மீட்டுக் கொடுக்கும்…” என்பதைத்தான் இந்தப் படத்தில் இயக்குநர் இரஞ்சித் சொல்லியிருக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் இதனை திரையில் பேசியிருக்கும் இதே ரஜினிதான் படத்திற்கு வெளியே “எல்லாவற்றுக்கும் போராடக் கூடாது. அப்படி போராடினால் நாடு சுடுகாடாகிப் போய்விடும்…” என்று எச்சரிக்கிறார்.
ஆக, சினிமாவுக்குள் ஒருவிதமாகவும், நேரில் வேறுவிதமாகவும் பேசக் கூடிய ஒரு மிகப் பெரிய ஹீரோவை, இந்தப் படத்தின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநர் இரஞ்சித்திற்கு நமது நன்றிகள்..!
இன்னும் அடுத்தடுத்து தனது கொள்கைகளுக்காக  மட்டுமே படம் எடுக்கப் போவதாக இரஞ்சித் சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து செய்தால் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு புதிய பாதைக்கு இரஞ்சித்தே வழி காட்டுவார்..
காலாவை நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்..! ரஜினிக்காக இல்லையென்றாலும் இயக்குநர் இரஞ்சித்திற்காக..!