மீராவுடன் கிருஷ்ணா - சினிமா விமர்சனம்

30-03-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஹீரோ கிருஷ்ணா கொஞ்சம் கோக்குமாக்கான குணமுடையவர்.  சின்ன வயசுல அவர் கண்ணுல பட்டதெல்லாம் பலான, பலான மேட்டராவே இருக்கறதால, அப்பவே அந்த விஷயத்துல கொஞ்சம் டிஸ்டர்ப்பானவர். போதாக்குறைக்கு அவரோட ரோல் மாடலாவும், காட்பாதராவும் இருந்த வாத்தியார் ஒருத்தரும் மனைவியால் பாதிக்கப்பட்ட கணவராக உருவெடுக்க.. அது அழிக்க முடியாத வடுவாக கிருஷ்ணாவின் மனதில் பதிந்துவிடுகிறது.


தனது அம்மாவின் கல்யாண வற்புறுத்தலை இதன் காரணமாகவே மறுத்துவரும் கிருஷ்ணா, மீரா என்னும் டாக்டருக்கு மட்டும் தலையாட்ட வேண்டி வருகிறது.  திருமணம் முடிந்ததும் மற்றவர்களைப் போல மனைவியுடன் விளையாட கிருஷ்ணாவுக்கு நேரமில்லை.  தனக்காவது துரோகம் செய்யாத மனைவியாக இவள் இருப்பாளா என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார் கிருஷ்ணா.  இந்த நேரத்தில் மீரா வேலை செய்யும் மருத்துவமனையின் சீப் டாக்டர், மீரா தனக்குக் கிடைக்காத கோபத்தில் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றிய கதையாக செல்போனில் மீராவைப் பற்றி பற்ற வைத்துவிட.. அது கொழுந்துவிட்டு எரியத் துவங்குகிறது.. மனைவியைப் பிரிய வேண்டிய சூழலில் கிருஷ்ணாவுக்கு மயக்கம் தெளிந்ததா..? அல்லது மீரா தனியே போனாளா என்பதைத்தான் மிச்சம், மீதியிருக்கும் ரீலில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

நிச்சயமாக இந்தக் கேரக்டரில் நடிக்க இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் எந்த நடிகரும் இல்லை..! ஏனெனில் இது ஒரு கதையே இல்லை என்பார்கள்.. ஏற்கெனவே அண்ணன் கரு. பழனியப்பன் 'மந்திரப் புன்னகை'யில் சிறு வயது பாதிப்புகளை வைத்து ஒரு கதை செய்துவிட்டார். அதற்கு முன்பாக ஏழெட்டு படங்களிலும் இது பல்வேறு விதமாக கொத்து புரோட்டா போடப்பட்டுவிட்டது..

தம்பதிகள் ஒருவருக்கொரு சந்தேகப்படக் கூடாது.. குடும்பம் என்பது தேன்கூடு. அதில் சந்தேகம் என்னும் கல்லைக் கொண்டு கூட்டைக் கலைக்க வேண்டாம் என்றெல்லாம் தத்துவங்களை உதிர்த்து படத்தை விளம்பர இஷ்யூவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

இயக்குனரே ஹீரோவாகியிருக்கிறார். வேறு ஹீரோக்கள் கிடைக்கவில்லை என்பதால் தானே ஹீரோவானதாக இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கூறினார். மகிழ்ச்சி.. ஆச்சரியப்படும்விதமாக சில சில ஆக்சன்களில் அசத்தியிருக்கிறார் நடிகர் கிருஷ்ணா. 
நடுத்தர வயது ஹீரோவாக தோற்றமளிப்பது ஒன்றுதான் அவருக்குப் பிரச்சினையே தவிர.. நடிப்பில்லை.. கண்ணாடி முன்பாக நின்று கொண்டு தன்னை வேறு வேறு உருவங்களில் உருவகப்படுத்திக் கொண்டு அவர் செய்யும் மேனரிசம் அசத்தல்..!  மனைவி சொல்லும் காரணங்களை நம்ப முடியாமல் மீண்டும், மீண்டும் தவறாகவே எண்ணிக் கொள்ளும் வேகமும், அந்த கேரக்டரின் பாவனைகளையும் மிகக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

மனைவி மீராவாக நடித்தவர் நல்ல தேர்வு. குடும்பப் பாங்கான பொண்ணாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தேடிக் கண்டுபிடித்தாராம்..! கணவனை முதலில் புரிந்து கொள்ள முடியாமல் தவித்து, பின்பு ஓரளவுக்கு பேசி சரிப்படுத்துவிடலாம் என்று நினைத்து அவர் செய்யும் முயற்சிகள் படத்திற்கு ஓகேதான்..  மேலும் அவர் டாக்டராகவும் இருக்கிறார் என்பதால் ஓரளவுக்கு திரைக்கதையை லாஜிக் பார்க்க முடியாத அளவுக்குக் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர். செல்போனில் தொடர்ந்து பிட்டு நியூஸ் கொடுக்கும் சீப் டாக்டரை மட்டும் கண்டுபிடிக்கத் தெரியாதவராக இருப்பது ஒன்றுதான் மிகப் பெரிய ஓட்டை.

கிருஷ்ணாவின் டார்ச்சர் தாங்காமல் கோபத்தில் பல இடங்களில் அவரை யோவ்.. வாடா.. போடா.. என்றெல்லாம் மீரா அழைக்கின்ற அந்த சில காட்சிகள் மிக ரகளையானவை..!  பல குடும்பங்களின் சீரழிவுக்கு சந்தேகமும் ஒரு காரணம் என்றாலும், அதனை யோசித்துப் பார்த்து, சோதித்துப் பார்த்து, நம்பலாமா வேண்டாம் என்றுகூட சிந்திக்காமல் செயல்படும் பலரது அவசரத்தனம்தான் பல குடும்பங்களை அழித்திருக்கிறது..!

இந்த ஒரு சின்ன விஷயத்தைக்கூட தனது நண்பனின் கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் மனைவியை சந்தேகிக்கும்வகையில் அவர் சொல்லிக் கொடுக்கும் வழிமுறைதான் மிக ஆபத்தானதாக இருக்கிறது. ஒருவேளை படம் பார்க்க வரும் தம்பதிகள் இதையெல்லாம் பார்த்து, கேட்டு அவர்களுக்கே பிரச்சினையாகப் போகிறது..!

அவரது ரோல்மாடல் வாத்தியார் தமிழின் வாழ்க்கைக் கதை மிக உருக்கமானது. இதுபோன்று ஊருக்கு ஒருத்தர் நிச்சயமாக இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதற்காக அனைவரையும் சந்தேகப்படும் குணத்தை வியாதியாகத்தான் பாவிக்க வேண்டும். கிளைமாக்ஸில் ஒரு நொடியில் திருந்திவிடுவதற்கெல்லாம் பெயர் வியாதி இல்லையே..? 

ஆண்களின் சந்தேக புத்திக்கு பெண்ணை பலிகடாவாக்கி இவ்வளவு சோகமாக படத்தை முடித்திருக்க வேண்டாம்..!  இப்போதும் கிருஷ்ணாவுக்குள் இருக்கும் அந்த பேய் போனதா இல்லையா என்பதையும் தெளிவாகச் சொல்லாமல், அப்படியே நிறுத்தியிருக்கிறார்..!
இயக்கத்தில் எந்தக் குறையும் இல்லாமல்தான் செய்திருக்கிறார் கிருஷ்ணா. அதற்காக தனி பாராட்டுக்கள் அவருக்கு..! அவரிடம் வேலை செய்யும் பானை என்ற அந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு ஒரு சபாஷ். வித்தியாசமான முக பாவனையுடன் பல காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். 

பாடல்களைப் பற்றி தனியே சொல்லும் அளவுக்கு ஏதுமில்லை. ஆனாலும் இது போன்ற குடும்பக் கதையம்சமுள்ள படங்களில் பாடல்களை அதிகம் வைத்து அதன் மூலம் இன்னமும் அழுத்தமான காட்சிகளை காட்டலாம்.  இதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருந்தும், ஏனோ இயக்குநர் அதனைத் தவிர்த்திருக்கிறார்..! அதேபோல் அந்த சிலுக்கு வாய்ஸில் கொஞ்சும் வேலைக்காரி கேரக்டரையும் தவிர்த்திருக்கலாம்..! 

நல்ல படங்கள் வரவில்லையே என்ற ஏக்கத்தில் மக்கள் இருப்பதென்னவோ உண்மைதான். ஜாலியாக, பொழுதைப் போக்க வரும் மக்களிடத்தில் அறிவுரையை கொஞ்சமாக வைத்து கலாட்டாவை அதிகமாக்கினால்தான் அவர்களுக்குப் பிடிக்கும். இதில் அறிவுரை அதிகமாகி, கலாட்டாக்கள் குறைவாக இருப்பதுதான் படத்துக்கு மிகப் பெரிய மைனஸ்..!

ஒரு முறை பார்க்கலாம்..!



கூடங்குளம்-அரசுகளின் அலட்சியத்திற்கு நாம் பலியாக வேண்டுமா..?

26-03-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்களுக்காக ஆட்சியா அல்லது ஆட்சியினருக்காக மக்களா என்ற கேள்விக்கு தற்போது நம் கண் முன்னே ஒரு காட்சி நடந்து கொண்டிருக்கிறது..!

சட்டமன்றத்தில் 'மாண்புமிகு அம்மா புரட்சித் தலைவி' என்று 500 முறை ஒப்பாரி வைத்தபடியே மாநிலத்தின் பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் கொடுமை நடக்கும் அதே நேரம்.. 500 கி.மீ. தள்ளி.. தங்களது வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ள பல மக்கள் கொடும் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பட்டினியை சட்டமன்றத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் உணரவில்லை என்று நினைக்க வேண்டாம். அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். எப்படியும் அந்த மக்களே தங்களுக்குத் தாங்களே ஒரு முடிவைத் தேடிக் கொள்ளட்டும் என்ற முடிவுக்கே அவர்கள் வந்துவிட்டார்கள்.

கிட்டத்தட்ட 200 நாட்களுக்கும் மேலாக அறப் போராட்டம் தொடர்கிறது.. ஒரு சைக்கிளின் கண்ணாடிகூட சிதறிவிடாமல் கவனத்துடன் தங்களது போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் அந்த மக்கள்..! 


தங்களது கிராமங்களுக்கு அருகில் இருக்கும் அணு உலையால் எதிர்காலத்தில் தங்களது வாரிசுகளுக்கோ தங்களுக்கோ எந்தவிதத்திலும் ஆபத்து நேரக் கூடாது என்ற உறுதிமொழியை அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த அரசுகளிடம் கேட்கிறார்கள்..!

அவர்களுடைய சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு ஐயம் திரிபுற பதிலளித்து அவர்களது கவலையைப் போக்க வேண்டியது அரசுகளின் கடமை.. உலகம் முழுவதுமே அணு உலைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளும் மூடி வரும் நேரத்தில், நமது நாட்டில் மட்டும்தான் ஆரத்தி எடுத்து வரவேற்று குடி வைத்திருக்கிறார்கள். இதோ இப்போது கடைசியாக ஜப்பானில் கடைசி அணு உலைகளையும் மூடப் போகிறார்கள்..! அவர்களுடைய அணு உலைகளில் லேசாக கசிந்த வாயுவினால் எழுந்த பூகம்பத்தையே அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மக்களா..? தொழில் நுட்பமா..? என்ற கேள்விக்கு அவர்கள் மக்கள்தான் என்பதைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

நம் நாட்டில் அப்படியே நேருக்கு மாறாக இருக்கிறது. ஏற்கெனவே கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் அணு உலையால் பாதிக்கப்பட்ட சுற்றுப்புற மக்களின் பரிதாப நிலைகள் பல குறும்படங்களாகவும், ஆவணப் படங்களாகவும் வெளிப்பட்டு அணுக் கதிர்வீச்சின் தீமையைச் சொல்லியிருக்கிறது. ஆனால் அவைகள் அத்தனையும் படிப்பறிவே இல்லாத, வெளியுலகம் அறியாத கிராமப்புற மக்களைத் தாக்கியிருப்பதால், இது சொந்த நாட்டு மக்களாலேயே அந்நியத்தனமாகப் பார்க்கப்படுகிறது..!

15000 கோடிகளைக் கொட்டியிருப்பதால் இதனை நடத்தியே தீருவோம் என்பதெல்லாம் சொத்தை வாதம்..! முதலிலேயே இந்த மக்களின் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆதரவு கொடுத்து தடுத்திருந்தால் நிலைமை இந்த அளவுக்கு போயிருக்காது.. அப்போது ஒருங்கிணைப்பு செய்யவும் ஆட்கள் இல்லை.. அணு உலை பாதுகாப்பின்மை பற்றி அந்தப் பகுதி மக்களிடம் எடுத்துச் சொல்லவும் பொறுப்பானவர்கள் இல்லை..! 

இந்திய ஏகாதிபத்தியத்தில் டெல்லி சுல்தான்களாக அமர்ந்திருக்கும் மோடி மஸ்தான்கள் என்ன சொல்கிறார்களோ.. அதனை அப்படியே காலால் செய்து முடிக்கும் வெட்கம்கெட்ட மாநிலத்து அரசியல் நாய்கள், தங்களது அரசியல் பதவிக்காக, கட்சிப் பதவிக்காக, சொத்து, சுகத்திற்காக தன் சொந்த இனத்து மக்களையே புறக்கணிப்பது மகா கேவலம்..! 

இப்போது எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என இரண்டையுமே இணைத்துப் பிடித்து ஒரு வரிசையில் நிறுத்தியிருக்கிறது மத்திய கபோதி அரசு.. அவர்களுக்குத் தேவை வாங்கின கமிஷனுக்கு ஏற்றாற்போல் வேலை நடக்க வேண்டும்.. மாநில அரசுக்குத் தேவை.. தான் எதிர்காலத்தில் இருக்கப் போகும் அதியுயர் செல்லில் கொஞ்சம் காற்று வெளிப்பட வேண்டும்.. எதிர்க்கட்சிக்கு தங்களது பேரன்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்க வேண்டும்.. இந்த இரண்டு வெட்கங்கெட்ட அரசியல்வியாதிகள்தான் தமிழ் மண்ணின் மிகப் பெரிய சாபக்கேடு என்பதை நம் மக்கள் என்றைக்குத்தான் உணரப் போகிறார்கள்..?

சங்கரன்கோவில் இடைத்தேர்தலின் வாக்குப் பதிவுக்காகக் காத்திருந்து, அதன் பின்பு தனது முடிவைச் சொன்ன ஆத்தாவின் செயல் சத்தியமாக வேசித்தனம்தான்..! தனது பேரன்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிறகு, கட்சிக்கு இருக்கும் பெயரும் போய்விடக் கூடாது என்பதற்காக அணு உலையைத் திறக்க வேண்டும் என்று அறிக்கைவிட்ட உலக மகா யோக்கியர் மஞ்சத் துண்டு செய்ததும் பச்சை வேசித்தனம்தான்..! 

ஆனாலும் மக்களுக்கு புரிய வேண்டுமே..? தூத்துக்குடியில் இருந்து சங்கரன்கோவில் ஏதோ 1000 கிலோ மீட்டர் தள்ளியிருப்பது போல் நினைத்து வாங்கின காசுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்த இந்த மக்களையும் நினைத்தால் கோபம் வரத்தான் செய்கிறது..! தன் வீட்டு வாசலுக்கு தானே புயல் வந்தால்தான் தான் கதறி அழுவேன்.. பக்கத்து தெருவில் எவன், எப்படி செத்தாலும் எனக்கு கவலையில்லை என்பதும் நமது பண்பாடாகிவிட்டது..! சுயநலம் சார்ந்தே நாம், நமது குடும்பம், நம் பிள்ளைகள்.. நமக்காக என்று இதற்காகவே குடும்பத்தை வளர்த்தெடுக்கும் நமது வாரிசுகள் வேறு எப்படி இருப்பார்கள்..? 

மாவட்ட மக்கள் அங்கே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அதுவும் இன்றோடு சேர்த்து 8 நாட்கள் ஆயிற்று.. அந்த ஊரையே போலீஸ் படையை வைத்து முற்றுகையிட்டு சொந்த நாட்டு மக்களையே பட்டினி போட்டிருக்கிறோம் என்ற ஒரு சிறிய குற்றவுணர்ச்சியைக்கூட வெளிக்காட்டிக் கொள்ளாத இந்த அரசையும், அதற்குத் தலைமை தாங்குபவரையும் கண்டிக்கவோ, திட்டவோ வார்த்தைகளே கிட்டவில்லை..!


உதயகுமார் என்னும் தோழர், தனது குடும்பத்தையெல்லாம் மறந்துவிட்டு பொது நலத்துடன் அரை ஆண்டாக இடிந்தகரை மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து நடத்திவரும் இந்தப் போராட்டத்தை ஊடகங்களும், சக்தி பெற்ற ஸ்தாபனங்களும் முடிந்த அளவுக்கு திசை திருப்பி வந்தன.. இப்போதும் அதையேதான் செய்து வருகின்றன..! 

நிபுணர் குழு முன்பாக அமைதிக் குழு வைத்த கேள்விகளுக்கும், எழுப்பிய கோரிக்கைகளுக்கும் பதில் இல்லை..! அவர்கள் சொல்வது மின் தட்டுப்பாடு.. ஆகவே இது அவசியம் தேவை..! தேவைதான்.. வீட்டில் கரப்பான் பூச்சி அதிகம் இருந்தால், பூச்சி மருந்து அடிக்கத்தான் வேண்டும். ஆனால் எப்போது அடிப்பார்கள் தெரியுமா..? வீட்டில் யாரும் இல்லாத பொழுது.. அதுவும் குழந்தைகள் அந்த மருந்தை கொஞ்சம்கூட ஸ்மெல் செய்துவிட முடியாத நேரத்தில்.. அவர்கள் பள்ளிக்குச் சென்ற காலை நேரத்தில்.. வீட்டை பூட்டி விட்டுச் செல்லும் நேரத்தில்தான் மருந்தடிப்பது வழக்கம்.. 

டைனிங் டேபிளில் குடும்பத்தினர் சாப்பிட்டுக் கொண்டிருக்க.. வீட்டில் மருந்தடிக்கும் பைத்தியங்களை நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா..? இங்கேதான்.. தமிழ்நாட்டில் இப்போது இதுதானே நடக்கிறது..? அது அதற்கு இடம், பொருள், ஏவல், வேலை, நேரம் பார்த்துச் செய்யப்பட வேண்டிய விஷயத்தை அவர்களுக்கு தோதான இடம் கிடைத்தவுடன் செய்திருக்கிறேன் என்கிறார்களே.. இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்..?

பக்கத்தில் கடல் இருக்க வேண்டுமா..? ஏன் கொச்சிக்கு போகலாமே..? மும்பையில்கூட இன்னொரு அணு உலையை அமைக்கலாமே..? ஆந்திராவின் நெல்லூர் பக்கத்தில் போய் வைக்கலாமே..?  வங்காளத்தின் கடற்கரைப் பகுதிக்கு போகலாமே.. ஆனால் எதற்கு தமிழகம்..? இங்கேதான் டெல்லி போடும் பிச்சைக் காசை பொறுக்கித் தின்னும் கேவலங்கெட்ட அரசியல் நாய்கள் நிறையவே இருக்கின்றன.. கையது, வாயது பொத்தி.. தனக்கும், தன் குடும்பத்திற்கும் தேவையானதை மட்டும் பெற்றுக் கொண்டு, இவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்து கொண்டு மக்களைத்தான் சுடுகாட்டில் வசிக்கச் சொல்கிறார்கள்..! உலகில் எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு மனித உரிமை மீறல்கள் இருந்திருக்காது..! 

8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் உதயகுமார் மற்றும் அவரது தோழர்களின் நிலைமை இப்போது கவலையாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.. அவர்களது உயிருக்கு இனி யார் பொறுப்பு..? எந்த அமைச்சராவது இதனைக் கண்டு கொண்டாரா..? அவர்களுக்கோ யார் மாண்புமிகு புரட்சித் தலைவி என்ற வார்த்தையை அதிகம் தடவை சொல்வது என்பதிலேயே கவனம் இருக்கிறது..! இந்தக் கேடு கெட்டவர்கள் முதலில் தங்களது குடும்பத்தினரை அந்த அணு உலையின் பக்கத்தில் கொண்டு போய் வைத்துக் காட்டட்டுமே..? மக்களே.. எமது குடும்பத்தினரும் இங்கேதான் குடியிருக்கப் போகிறார்கள். பயப்பட வேண்டாம் என்று.. முடியுமா அவர்களால்..?

ஒரு அமைச்சர் ஊதுகுழல் ஊதுகிறார். விமானத்திலேயே வந்து மோதினால்கூட அணு உலை உடையாது என்று.. “ஐயா அமைச்சரே.. நீரும் உம் பிரதம அமைச்சரும் அவர்தம் குடும்பத்தினரும் ஒரே விமானத்தில் வந்து மோதிக் காட்டுங்களேன்.. அதன் பின்பு இந்த போராட்டத்தை நாங்கள் கை விடுகிறோம்..” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தாகிவிட்டது.. சூடு, சொரணை என்றால் என்னவென்றே தெரியாத இந்த அரசியல் ஓநாய்களிடம் வேறு எந்த மொழியில் சொன்னால்தான் புரியும் என்றே தெரியவில்லை..!

20 ஆண்டுகளுக்கு முன்னால் தீபாவளிக்கு வாங்கிய வெடிகள் ஒரு மாதம் வரையிலும் வீட்டில் வைத்திருந்து வெடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. காலம் மாறி, சூழலும் மாறி, தட்பவெப்ப நிலையும் மாறி, சுற்றுப் புறச் சூழல் மாசுபடுகிறதே என்பதற்காக வெடி வெடிப்பதற்கும் ஒரு நேரத்தை ஒதுக்கி இந்த நேரத்தில் வெடித்துக் கொள்ளுங்கள் என்று அரசு சொன்னதற்கு யாராவது மறுப்புத் தெரிவித்தார்களா..? போராட்டம் நடத்தினார்களா..? இல்லையே..? வெடிகள் வாங்குவதையே கொஞ்சம், கொஞ்சமாக நிறுத்தி வருகிறார்கள் மக்கள். அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.. 2 நிமிட கொண்டாட்டத்திற்கு எதற்காக அழுக வேண்டும் என்று..! மக்கள் காலத்திற்கேற்றாற்போல் இது போன்று மாறவும் தயங்கவில்லை..!

ஆனால் இதே மக்கள்தான் நமது அரசுகளின் சர்வ அலட்சியத்தையும் மனதில் வைத்து அந்த அணு உலை தங்களுக்குத் தேவையில்லை என்கிறார்கள்.. இதனை ஏற்றுக் கொள்வதுதான் அரசுகளின் கடமை.. பொறுப்பு..! உலக அரசியல் அரங்கில் நடைபெறும் பனிப்போரில் தங்களது குடும்பத்தினரை பணயம் வைக்கவா தமிழகத்து மக்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள்..? அவர்கள்தான் சாக வேண்டுமா என்ன..? அரசியல்வியாதிகளின் பிள்ளைகளையும், அணு உலை வேண்டும் என்பவர்களின் பிள்ளைகளையும் அங்கே வேலைக்கு சேரச் சொல்லுங்களேன்.. பார்க்கலாம்..!?

அரசுகள் எந்த வழிகளில் நம்மை மடக்கப் பார்க்கிறார்களோ.. அதே வழியில் நாமும் அவர்களுடன் மோதுவோம்..! நாம் குனிந்தே இருந்தால் குட்டத்தான் செய்வார்கள்.. நிமிர்ந்தே நிற்போம்.. எப்போது குனிவோம் என்று அவர்கள் காத்திருக்கட்டும்..! ஆனால் நமது பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கும். அந்த எல்லையை அரசுகள் தொடும்வரையிலும் இந்த அறப் போராட்டம் நீடிக்க வாழ்த்துகிறேன்..! ஏதோ ஒரு முடிவுக்கு வராமல் இப்பிரச்சினைக்கு தீர்வு என்பது சாத்தியமில்லை..! அந்த முடிவு நாம் எடுத்ததாகவே இருக்க வேண்டும்..!

அதற்காகவே இந்த நேரத்தில் அண்ணன் உதயகுமாரிடம் நாம் வேண்டிக் கொள்கிறேன்.... இந்தச் சோற்றால் அடித்த பிண்டமாக சூடு, சொரணையில்லாத வெட்கங்கெட்ட அரசியல் ஜென்மங்களை நம்பி நமது உயிரைப் பணயமாக்குவது வீண் விரயம்.. அதுவும் உதயகுமார் போன்ற போராளிகள் நீண்ட பயணம் செய்ய வேண்டியுள்ளது. மக்கள் நலப் பணிகளில் அவர் ஆற்ற வேண்டிய செயல்கள் நிறையவே உண்டு. ஆகவே, அவரும் அவரது குழுவினரும் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு, அதற்கு ஈடாக அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை வேறு வழிகளில் தொடர வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

இயக்குநர் விக்ரமன் சொன்ன ரகசியம்..!

25-03-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பல நல்ல விஷயங்களின் துவக்கத்திற்கு பின்புலமாக சில கசப்பான உண்மைகள் நிச்சயம் இருக்கும்..!  பல சாதனைகளுக்குப் பின்னால் நிச்சயமாக சில வேதனைகளும் இருக்கத்தான் செய்யும்.. சாதனைகளையும், துவக்கத்தையும் மட்டுமே நாம பேசுவோமே தவிர.. அதற்குத் தூண்டுதலாக இருந்தது எது என்பதையும், அதனை அடைய சாதனையாளர்களும், ஊக்கப்படுத்தியவர்களும் பட்ட கஷ்டத்தை நாம் அறியோம்..!

தமிழ்ச் சினிமாவில் 'வித்தக இயக்குநரான' இயக்குநர் விக்ரமன், புதிய இயக்குநர்களுக்கெல்லாம் முன்னோடி.. புதிதாக திரையுலகில் நுழையத் துடிக்கும் தற்போதைய இயக்குநர்களுக்கெல்லாம் நிச்சயமாக ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். 'புது வசந்த'த்தில் ஆரம்பித்து இன்றுவரையிலும் தனது டிரேட் மார்க்கை இம்மியும் விலகாமல் பார்த்துக் கொண்டிருப்பவர்..! குடும்பத்தோடு படம் பார்க்கச் செல்ல 'விக்ரமன்' என்ற பெயர் போஸ்டரில் இருந்தாலே போதும் என்னும் அளவுக்கு பெயர் பெற்றிருப்பவர்..!

திரைத்துறையில் இன்னொரு நல்ல பெயரும் அவருக்கு உண்டு. அது உதவி இயக்குநர்கள் பலரும் நன்றியுணர்வோடு நினைவு கூர்கிறார்கள் அண்ணன் விக்ரமனின் பாசத்தை.. "மாசம் பிறந்தால் துணை, உதவி இயக்குநர்களுக்கான சம்பளக் கவர் அவரது அலுவலகத்தில் தயாராக இருக்கும்.. என்றைக்கும் தாமதமாகாது..! வேலையே இல்லை என்ற காலத்தில்கூட உடன் இருப்பவர்களுக்கு மாதாமாதம் சம்பளம் கொடுப்பதை நிறுத்தாதவர் எங்க டைரக்டர்.." என்கிறார்கள்..!

'புது வசந்தம்' படத்தில் இவர் துவக்கி வைத்த ஒரு புதிய அலை, இன்றுவரையிலும் ஓயவில்லை..! அத்தோடு இவரும் எஸ்.ஏ.ராஜ்குமாரும் இணைந்து கொடுத்த பல மெலடிகள் இன்றைக்கும் இசையுலகில் பேசப்பட்டு வருகிறது..! இதைவிடவும், பல புதிய, புதிய கவிஞர்களைத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்வித்த விக்ரமனின் பரந்த சேவைதான் இன்றைக்கு தமிழ்ச் சினிமாவுலகத்தில் இத்தனை புதிய கவிஞர்களுக்கு வருகைக்கு ஒரு துவக்கப் புள்ளியாக இருந்தது..! அண்ணன் விக்ரமனின் இந்த அறிமுக வெறிக்கு, பின்புலமாக ஏதாவது காரணம் இருக்குமோ என்று யாரும் நினைத்துக் கூட பார்த்ததில்லை.. ஆனால் இருந்திருக்கிறது. 

நேற்று பிரசாத் லேப்பில் நடைபெற்ற 'அமிர்தயோகம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில்தான் இதனை வெளியிட்டார் அண்ணன் விக்ரமன்..!


இவருக்கு முன்பாகவே அந்த விழாவில் பேசிய அப்படத்தின் இசையமைப்பாளர் திரு.ஆர்.கே.சுந்தர், “இப்போதைய தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள், இசைஞானி இளையராஜா வாங்கும் சம்பளத்தைவிட ஒரு பைசாகூட அதிகம் வாங்கத் தகுதியில்லாதவர்கள்..!” என்றார் ஆணித்தரமாக.. அதேபோல் பாடல் கம்போஸிற்காக வெளிநாடுகளுக்கு பறக்கும் கலாச்சாரத்தையும் கண்டித்தார்.. “தாய் நாட்டில், சொந்த ஊரில் வராத இசை அறிவு, தாய்லாந்து போனால் மட்டும் வந்துவிடுமா என்ன..? அப்படி நாடு, நாடாக சுற்றி செலவு செய்யும் காசை படத்தில் போட்டாலாவது தயாரிப்பாளருக்கு உதவுமே..?” என்றார்..

இதன் பின்பு பேச வந்த அண்ணன் விக்ரமன் “நானும் நிறைய பட விழாக்கள்ல கலந்துக்குவேன். ஆனா அடுத்த நாள் பேப்பர்ல பார்த்தா என் பேரே இருக்காது..” என்று துவக்கத்திலேயே பத்திரிகையாளர்களை வாரிவிட்டார். தொடர்ந்து இசையமைப்பாளர் ஆர்.கே.சுந்தரின் பேச்சை ஒட்டியே பேசிய விக்ரமன், தான் படமெடுத்த காலத்தில் பெரும் கவிஞர் ஒருவருக்கும், அவருக்கும் நடந்த மோதல் பற்றி சுவாரஸ்யமாகச் சொன்னார்.



“புதிய மன்னர்கள்' படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைச்சார். அந்தப் படத்துக்கு பாட்டு எழுதினாரு ஒரு பெரிய கவிஞர்.. அவர் எழுதின ஒரு பாட்டுல சில இடத்துல எனக்கு திருப்தியில்லை. அதுனால இடைல இடைல நான் திருத்தம் சொல்லிக்கிட்டேயிருந்தேன். அவரும் செஞ்சாரு.. 9, 10 முறை திருத்தம் சொன்னப்புறம், “நான் பாரதிராஜா, பாலசந்தர் முதற்கொண்டு, பெரிய இயக்குநர்கள் அத்தனை பேருக்கும் பாட்டு எழுதியிருக்கேன். ஆனா யாரும் உங்களை மாதிரி இப்படி திருத்தம் சொன்னதே இல்லை. நீங்க மட்டும் ஏன் இப்படி பண்றீங்க..?”ன்னு கேட்டார். நான் எந்தப் பதிலும் சொல்லலை. அமைதியா இருந்துட்டேன்.. 

உடனேயே அங்கேயிருந்து நேரா ரஹ்மான்கிட்ட போனேன்.. ‘ஸார்.. இந்த செட்டப் எனக்கு ஒத்து வராதுன்னு ஃபீல் பண்றேன்.. அதுனால அவர்கூட வொர்க் பண்ண முடியாதுன்னு'ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்..! அதுக்கப்புறமா அந்தப் பாட்டுக்கு பழநிபாரதியை எழுத வைச்சு அதைப் பயன்படுத்திக்கிட்டேன்..!

ஆனா அந்தச் சம்பவம் என்னை ரொம்ப டிஸ்டர்ப் செஞ்சுச்சு.. அந்தக் கவிஞர் அளவுக்கு நான் இலக்கியம் படிச்சவனில்லைன்னாலும், 50 சதவிகிதமாவது தமிழ் இலக்கியம் பத்தி எனக்கும் தெரியும்.. ஏன்னா நான் பிளஸ் டூலேயே சிறப்புத் தமிழ் படிச்சவன். நான் எந்த அளவுக்கு புத்தகங்களை வாசிச்சவன்.. நேசிக்கிறவன்.. படிச்சவன்றது தமிழ் இண்டஸ்ட்ரில நிறைய பேருக்கு தெரியும்..! ஆனாலும் அவர் ‘நீங்க ஏன் திருத்தம் சொல்றீங்க?’ன்னு கேட்டது என்னை புண்படுத்துச்சு. 

அதுக்கப்புறமாத்தான் இனிமே எல்லா படத்துலேயும் புதிய, புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்தியே ஆகணும்னு எனக்கு வெறியே வந்திருச்சு. அதையும் செஞ்சேன்.. இப்போ கணக்கற்ற அளவுக்கு புதிய கவிஞர்கள் தமிழ்ச் சினிமாவுக்கு கிடைச்சிருக்காங்க.. இதுக்குப் பின்புலமா நான் இருந்திருக்கேன்னாலும், முக்கியக் காரணம், அந்தக் கவிஞர்தான்..” என்றார்.

அந்தக் கவிஞர் யார் என்பதை அண்ணன் விக்ரமன் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், இதைப் படிப்பவர்கள் எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்..! 

ஆக.. ஒரு கவிஞரின் கோபம்.. கோபத்தைத் தாங்க முடியாத இயக்குநரின் அறச்சீற்றம்.. இவையிரண்டும் சேர்ந்து தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு நிறைய கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் மற்றும் நல்ல இசை கிடைக்க வாய்ப்பாக இருந்திருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் சினிமா நியூஸ்..! 

அண்ணன் விக்ரமனை பத்தி ரொம்ப நாளா உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்லணும்னு நினைச்சுக்கிட்டேயிருந்தேன். இப்போ இட்லி-வடை பதிவுகளை நான் எழுதாததால 'படித்ததில் பிடித்தது' பகுதி இல்லாம, இதை போட முடியலை. இதுதான் சாக்குன்னு நினைச்சு இந்த இடத்துல இதையும் சேர்த்துக்குறேன்..

அண்ணன் விக்ரமன் தனது திரையுலக அனுபவங்களை “நான் பேச நினைப்பதெல்லாம்” என்ற தலைப்புல புத்தகமா வெளியிட்டிருக்காரு. அதுல நான் படிச்சு கண்ணு கலங்குன ஒரு பகுதியை இங்கே உங்களுக்காக டைப்பி தர்றேன்.. படிச்சுப் பாருங்க..! சினிமாவுலகத்தின் உண்மையான கலைஞர்கள் எங்கேயிருந்து, எப்படி உருவாகியிருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம்..!

“புது வசந்தம்’ படத்தோட புரஜக்சன் போட்டிருக்காங்க. அப்ப படம் பார்த்தவங்களும் 'படம் சூப்பர்'ன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க.. அது மட்டுமில்ல.. படத்தை வாங்க யாருமே முன் வராத நிலைமை மாறி, ஏரியாவுக்கு இருபது லட்சம், முப்பது லட்சம்ன்னு விலை கேட்டிருக்காங்க.. 22 லட்சம் ரூபாய் பர்ஸ்ட் காப்பில எடுத்த, ‘புது வசந்தம்’ படத்துக்குக் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு ஆஃபர் வந்துக்கிட்டிருக்கு..

‘புது வசந்தம்’ படம் இந்த அளவுக்குப் பரபரப்பா பேசப்பட்டிருக்கிற இதே நேரம்.. நானோ சாப்பாட்டுக்கு வழியில்லாம ரூமுல படுத்துக் கிடக்கிறேன்.. பாக்கெட்டுல பத்து காசு இல்லை. டேப் ரிக்கார்டரை வித்தாச்சு.. பழைய பேப்பரை எடைக்குப் போட்டாச்சு.. மோதிரத்தை அடகு வைச்சாச்சு.. வாட்ச்சை அடகு வைச்சாச்சு.. இனிமே விக்குறதுக்கோ, அடகு வைக்கவோ ஒண்ணுமில்லை.. இன்னும் பச்சையா சொல்லப் போனா, இரண்டு பேண்ட்டையும் வித்துட்டேன்.. அப்படியும் வறுமை தீரலை. மூணு நாளா பட்டினி கிடக்கிறேன்..

சூப்பர் குட் பிலிம்ஸ்ல டிரைவரா இருந்த விஸ்வம்பரன்ங்கிறவர் ரெண்டு, மூணு தடவை வந்து, ‘ஸார்(ஆர்.பி.செளத்ரி) கூப்பிடறார்’ன்னு கூப்பிட்டார். நான் போகலை. அப்புறம் என் அஸிஸ்டெண்ட் ஒருத்தர் புரஜக்சன் போயிருக்கார். அவர்கிட்டேயும் என்னை வரச் சொல்லி அனுப்பியிருக்கார் செளத்ரி ஸார். 

‘விக்ரமனை நான் அவசியம் பார்க்கணும். அவர் வரலைன்னா, நான் வேண்ணா அவர் ரூமுக்கு வரட்டுமா..?’ என்று கேட்டிருக்கார். இந்த விஷயத்தை என் அஸிஸ்டெண்ட் வந்து சொன்னதும், என் பிடிவாதத்தைத் தளர்த்திட்டு, மறுநாள் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆபீஸுக்கு போனேன்.

‘ஏன் வர்றதே இல்லை..?’ என்று செளத்ரி ஸார் கேட்டார்..

‘நான் வந்தப்ப நீங்க்கூட என் முகம் கொடுத்துப் பேசலை.. நான் என்னவோ தப்பான கிளைமாக்ஸை எடுத்திட்டதா மத்தவங்க சொன்னதைக் கேட்டு இப்படி நடந்துக்கிட்டீங்க.. அதனாலதான் நா வர்றதை நிப்பாட்டிட்டேன்.. இப்ப பாருங்க.. எல்லாரும் கிளைமாக்ஸை பாராட்டுறாங்க..’ என்று நான் வருத்தப்பட்டேன்..

‘நான் அப்படிச் சொல்ல்லை.. எல்லாரும் என்னை பயம் காட்டிட்டாங்க.. நானும் ஃப்ர்ஸ்ட் படம்தானே எடுக்கிறேன்.. நான் என்ன பண்றது..?’ - நடந்த சம்பவங்களுக்காக அவரும் வருத்தப்பட்டார்.

அதுக்கப்புறம் போட்ட எல்லா புரஜக்சன்லேயும் படத்துக்கு நல்ல ரிப்போர்ட். ‘ஆஸ்கார் பிலிம்ஸ்’ ரவிச்சந்திரன் ஸார் படத்தைப் பார்த்துட்டு ஒரு ஏரியா வாங்கினார். ஏரியா வாங்கினது மட்டுமில்லே.. இன்னொரு காரியமும் பண்ணினார் அவர். 

அந்த நாளை என்னிக்குமே என்னால மறக்க முடியாது..!

அன்னைக்கு எனக்கு பிறந்த நாள். காளிகாம்பாள் கோவிலுக்குப் போகணும்.. என்கிட்ட காசு இல்லை.. மூணு நாள் பட்டினி வேற கிடந்திருக்கேன். வேற வழி தெரியாம எடிட்டர் தணிகாசலத்தைப் பார்க்கப் போனேன்.. 

‘உங்ககிட்ட நூறு ரூபாய் இருக்குமா?’ என்று அவர்கிட்ட கேட்டேன்..

'எதுக்கு..?'

'காளிகாம்பாள் கோவிலுக்குப் போகணும்.. ஆட்டோல போயிட்டு வர்றதுக்கு நாப்பது ரூபாய் ஆகும். அர்ச்சனை பண்றதுக்கு இருபது ரூபாயாகும். நான் மூணு நாளா சாப்பிடலை.. அதுக்கும் காசு வேணும்.. அதான் நூறு ரூபாய் கேட்டேன்..'

- நான் இப்படிச் சொன்னதும் தணிகாசலம் அதிர்ச்சியாயிட்டார்.. ‘மூணு நாளா சாப்பிடலை’ன்னு சொன்னதை அவரால தாங்க முடியலை.. உடனே அவர் போட்டிருந்த மோதிரத்தை அடகு வைச்சு 300 ரூபாயோ, 400 ரூபாயோ கொடுத்தார். இன்னைக்கும் அதை நான் எல்லா பேட்டிகளிலும் மறக்காம சொல்லிக்கிட்டிருக்கேன்..! அதுக்கப்புறம் அவர் என்னோடு ஐந்து படங்கள் பண்ணினார். அப்புறம் பண்ணலை. ஆனாலும், அன்னைக்கு அவர் பண்ணின உதவியை என்னால எப்பவும் மறக்க முடியாது..

தணிகாசலம் பணம் கொடுத்த்தும் காலைல கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். மதியானம் அவரை பார்த்தப்ப, சவேரா ஹோட்டல்ல இருந்த பிரிவியூ தியேட்டர்ல புரஜக்சன் நடக்குதுன்னு என்னைக் கூப்பிட்டார்.

நான் அங்கே போனப்ப படம் முடிஞ்சு ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஸார், வெளியே வர்றார். என்னைப் பார்த்த்தும் நேரா கிட்ட வந்தார். படத்தைப் பத்தி பாராட்டிட்டு கைல வைச்சிருந்த சூட்கேஸைத் திறந்து காட்டினார். உள்ளே ஏகப்பட்ட பணக்கட்டுக்கள்..!

‘விக்ரமன் ஸார்.. இதிலே இவ்வளவு பணம் இருக்கு.. வாங்கிக்கங்க. அடுத்த படம் எனக்குத்தான் பண்ண்ணும்.. இது அட்வான்ஸ்தான்.. படம் ஹிட்டாகி நீங்க என்ன சம்பளம் சொன்னாலும், அதுக்கு நான் ஒத்துக்குறேன்..’ என்று சொன்னார். நான் அவ்வளவு பணத்தைப் பார்த்ததும் ஷாக்காயிட்டேன்..! ‘இல்ல ஸார்.. ரெண்டாவது படம் சூப்பர் குட்டுக்கு பண்றதா செளத்ரி ஸார்கிட்ட வாக்குக் கொடுத்திருக்கேன். அதை முடிச்சிட்டு வேண்ணா உங்களுக்கு பண்றேன்’னு சொல்லிட்டு பணத்தைத் திருப்பிக் கொடுத்திட்டேன்.. அதுக்கப்புறமும் படத்தைப் பார்த்த பல பேர் அட்வான்ஸ் கொடுக்க வந்தாங்க. நான் வாங்கலை.. 

காலைல பிச்சைக்காரன்.. சாயந்தரம் கோடீஸ்வரன்.. இதுதான் சினிமா..!”

நன்றிகள்

"நான் பேச நினைப்பதெல்லாம்" 
திரையுலகில் சாதிக்கத் தூண்டும் விக்ரமனின் போராட்டம்
பக்கங்கள் 67-70
போதி பதிப்பகம்
எஸ்-2, ஜாஸ்மின் கார்டன்
5, வேதவல்லி தெரு, சாலிகிராம்ம்
சென்னை-600093.



காதல் பிசாசு - சினிமா விமர்சனம்

22-03-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கனடாவாழ் இலங்கை தமிழர் அரவிந்த், தனது நண்பருடன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார். ஹீரோவும் அவரே.. இயக்கமும் அவரே..! 




சந்தானபாரதி மிகப் பெரிய கான்ட்ராக்டர். அவருக்கு ஒரு மகள். ஹீரோயின் மிதுனா. இவரது வீட்டில் வேலை பார்க்கும் வனிதாவின் மகன்தான் ஹீரோ அரவிந்த். தங்களது மாடி வீட்டிலேயே வனிதாவையும், அரவிந்தையும் தங்க வைத்து பராமரித்து வருகிறார் சந்தானபாரதி. ஹீரோவையும் அவரே படிக்க வைக்கிறார். மிதுனாவும், அரவிந்தும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில்தான் படிக்கிறார்கள். மிதுனாவுக்கும், அரவிந்துக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. அப்பாவிடம் சொல்கிறாள் மகள். ஏற்றுக் கொள்கிறார் அப்பா. காதல் சிறகு காற்றில் பறக்கும் நேரத்தில், இங்கே பரீட்சை பேப்பரில் மானம் பறந்துவிடுகிறது..! இருவருமே பெயிலாகிவிடுகிறார்கள்.

இப்போது குடும்பத்தினர் வட்டமேசை மாநாடு போட்டு, முதல்ல படிப்பு. அப்புறமாத்தான் காதல் என்கிறார்கள் கண்டிப்போடு. ஹீரோவுக்கு திடீர் ஞானதோயம். காதலியின் அருகில் இருந்தால் படிக்கவே முடியாது என்ற எண்ணத்தில் மும்பையில் ஒரு கல்லூரிக்கு டிரான்ஸ்பர் வாங்கி அங்கே பறக்கிறார். ஹீரோ மும்பைக்கு போனவுடன் எட்டாமிடத்தில் சனி பகவன் வந்து உக்கிரப் பார்வை பார்த்துவிடுகிறார்.

தெரியாத்தனமாக தனக்கு முன்பே தெரிந்த ஒரு பெண்ணை ஹோட்டலில் காப்பாற்றப் போய் மும்பையின் மிகப் பெரிய டானின் மகன் மரணத்திற்குக் காரணமாகிவிடுகிறார். டான் ஹீரோவைத் துரத்த, அந்த டானையும் போட்டுத் தள்ளுகிறார் அரவிந்த். இந்த டானுக்கு எதிர் கோஷ்டியான இன்னொரு டான் அரவிந்தை அரவணைத்துக் கொள்ள.. என்ஜீனியரிங் படிக்க வந்த ஹீரோ பில்லாவாகிறார். தனது குடும்பத்துடனான தொடர்பை துண்டித்துக் கொண்டதால் இவரது நிலைமை வீட்டாருக்குத் தெரியவில்லையாம். இதற்குள் 3 வருடங்கள் ஓடிவிட்டதாம். அதற்குள் ஹீரோயின் மிதுனாவும் தனது படிப்பை முடித்துவிட்டு ஐ.பி.எஸ்.ஸாகி அதே மும்பைக்கு ஸ்பெஷல் டூட்டியில் வந்து சேர்கிறார். 

யாரோ ஒரு டானை பிடிக்கப் போகிறோம் என்று சொல்லி வலைவிரிக்க அதில் தனது காதலனே வந்து விழுந்தவுடன் அதிர்ச்சியாகிறார் மிதுனா. இறுதியில் என்ன ஆனது என்பதை என்னைப் போலவே நீங்களும் தியேட்டருக்குச் சென்று நேரில் பார்த்து அவஸ்தைப்பட்டு தெரிந்து கொள்ள வேண்டுமாய் சபிக்கிறேன்..!

மனம் நிறைய ஆசை இருக்கலாம். நடிப்பதற்கேற்ற முகவெட்டு இருந்தால் ஹீரோவாக விருப்பம் இருக்கலாம். அதே சமயம் கையில் காசு இருந்தால் தனக்குத் தோதான கதையை படம் இயக்கத் தெரிந்தவரிடம் கொடுத்து செய்யச் சொன்னால் நல்லதுதான்.. இப்படி இயக்கத்தையும் நானே செய்வேன் என்று சொல்லி குழி தோண்டி, அதில் தானே துண்டுவிரித்து படுத்துக் கொள்வதெல்லாம் முட்டாள்தனம்..!

தமிழ்ச் சினிமாக்கள் இன்றைக்கு என்ன லெவலில் வந்து கொண்டிருக்கின்றன என்பதையும், தமிழ்ச் சினிமா ரசிகர்களின் சினிமா அறிவு பற்றியும் தெரிந்து கொள்ளாமல் இப்படித்தான் பலரும் வாரவாராம் படத்தினை வெளியிட்டு தங்களது உடலையே காயப்படுத்திக் கொள்கிறார்கள்..!

கே.எஸ்.ரவிக்குமாரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய தங்கவேல் என்பவர்தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். சில இடங்களில் திரைக்கதையும், பல இடங்களில் வசனமும் பளிச்சிடுகிறது. இது மட்டும் இருந்தால் போதுமா..? முதல் காட்சியில் ஹீரோ ஓடி வருவதும், ஹீரோயின் போலீஸ் டிரெஸ்ஸில் துரத்துவதையும் பார்த்தபோதே வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது.. அதேதான் படம் முழுக்க.. அரவிந்த் இன்னும் கொஞ்சம் நடிப்பைக் கற்றுக் கொண்டு அதன் பின்பு வரலாம். அதே சமயம் படமெடுக்க முன் வந்த தைரியத்தை பாராட்டத்தான் வேண்டும். வேறு வழியில்லை..!

ஹீரோயின் மிதுனா, 'கருத்தம்மா' ராஜஸ்ரீயின் உடன் பிறந்த தங்கை. சீரியலில் நடிக்க வந்தவரை சினிமாவுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். சிற்சில இடங்களில் நடிப்புக்காக பார்க்க முடிந்தாலும், ஹீரோயினுக்கான ஜாடையே இல்லாதவர். இவருடன் இன்னொரு ஐபிஎஸ்ஸாக வரும் ஒரு பெண் இவரைவிட அழகாக இருந்து தொலைத்துவிட்டதால் இடைவேளைக்கு பின்பும் பார்க்க சகிக்கவில்லை..!

படத்தின் விற்பனைக்காக கடைசி நேரத்தில் சந்தானத்திடம் கால்ஷீட் கேட்டு சில காட்சிகளை தனியே எடுத்து இதில் இணைத்திருக்கிறார்கள். தன்னை அழைத்தவர்களை அவரும் ஏமாற்றவில்லை. அண்ணன் சந்தானம், கொஞ்சம் சுத்தி வளைத்துச் சொல்லும் வசனங்களையும், நீட்டமாக எதுகை, மோனையாக அள்ளிவிடுவதையும் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, கவுண்ட்டர் அட்டாக் செய்தால் நலமாக இருக்கும்..! இடைல கனடால கொஞ்சம் ஷூட் செஞ்சிருக்காங்கன்றது நல்லா தெரியுது. ஆனா எதுக்கு..? எல்லாம் வேஸ்ட்டு..! 
பெரிசுகளின் அலப்பறையையே சொல்ல முடியாத சூழல்ல ஒளிப்பதிவு, இசைன்னுல்லாம் கேட்டு நீங்க உங்க மூளைய கன்பியூஸ்ல விட்டுக்காதீங்க..! 

நடிச்சே ஆகணும்ன்னா நல்ல இயக்குநர்களைத்தான் முதல்ல தேடிப் பிடிக்கணும்.. கடந்த 3 வாரமா வெளிவந்த எந்த சினிமாவும் மக்கள் ரசனைக்கேத்தாப்புலேயே இல்லைன்றதுதான் உண்மை. அதைவிட உண்மை சுத்தமான வாஷ் அவுட்டுதான் கடந்த 3 வாரங்களாக சினிமா தொழிலுக்கு பதிலா கிடைச்சிருக்கு..! 

அரவான் படத்துக்கு எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் தியேட்டர்ல செகண்ட் ஷோவுக்கு 10 பேர் வந்திருக்காங்க.. நாங்க படத்துக்கு தேவி பாரடைஸ் தியேட்டர்ல 28 பேர் வந்திருக்காங்க.. தேவி பாரடைஸ்ல இந்தப் படத்தை தூக்கிட்டு தியேட்டரையே மூணு நாளைக்கு மூடி வைச்சிருந்திருக்காங்க..! ஒரு வார தியேட்டர் கட்டணமான ஆறே முக்கால் லட்சத்தை வைச்சுட்டு ஒரு படத்தை ஓட்டுறதுக்கு எந்தத் தயாரிப்பாளரும் முன் வரலை. அவங்க என்ன செய்வாங்க..? பூட்டுறா சாமின்னுட்டாங்க..! இதுதான் தற்போதைய தமிழ்ச் சினிமாவின் நிலைமை. 

இந்த லட்சணத்துல பெப்சி-தயாரிப்பாளர்கள் சண்டை வேற மும்முரமா இருக்கு. அறிவிக்கப்படாத ஸ்டிரைக் இப்போ அறிவிக்கப்பட்டுவிடலாம்ன்ற ரேஞ்ச்சுல நிக்குது. என்னிக்குன்னுதான் தெரியலை..! 

இன்னிக்கு 5 படம் ரிலீஸ் ஆகியிருக்கு.. எதையும் சொல்ல முடியாது. கடும் உழைப்பு, சிறந்த இயக்கத் திறமை, கதையாடல், படத்தின் நேர்த்தி இது எல்லாவற்றையும் தாண்டி நேரம், காலமும் சினிமால முக்கியம்.. அது எல்லாருக்குமே அமையாது. கிடைத்தவர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள்..! 99 சதவிகிதம் நமது முயற்சிதான்.. 1 சதவிகிதம்தான் லக்கு இல்லாட்டி இறைவனின் ஆசி...! இதுல 99 சதவிகித்தையே முழுசா செய்யலைன்னா, இறைவனின் ஆசி எப்படி கிடைக்கும்..? தப்பு தம் பக்கம்தான் என்பதை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் முதல்ல புரிஞ்சுக்கிட்டு அப்புறமா நஷ்டக் கணக்கையும், யாரால் நஷ்டம் வந்திருக்கிறது என்பதைப் பற்றியும் பேசட்டும்..!

தியேட்டருக்கு போங்கன்னும் சொல்ல மாட்டேன்.. போகாதீங்கன்னும் சொல்ல மாட்டேன்.. உங்க இஷ்டம்..!


சினிமா 360 டிகிரி-2


20-03-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு கல் ஒரு கண்ணாடி

'ஒரு கல் ஒரு கண்ணாடி'யின் இசை வெளியீட்டு விழா அமர்க்களமாக நடந்து முடிந்தது..! தயாரிப்பாளரின் செல்வாக்கினால் மிக முக்கிய இயக்குநர்களும், நடிகர்களும் தவறாமல் ஆஜராகியிருந்தார்கள். உதயநிதிக்கு காதல் காட்சிகளில் நடிப்பை வரவழைக்க உதவி இயக்குநர்களையே ஹீரோ, ஹீரோயினாக்கி நடிக்க வைத்து பயிற்சி கொடுத்ததாக இயக்குநர் சொன்னபோது, இவ்ளோ கஷ்டம் தேவையா என்றுதான் தோன்றியது.. ஆனாலும் உதயநிதி வெகுளியாகப் பேசுகிறார். “இந்த ஒரு படம் ஓடினால் தொடர்ந்து நடிப்பேன். இல்லைன்னா தயாரிப்பு மட்டும்தான்..” என்கிறார் திடமாக..! நல்லவேளை, தமிழ்நாட்டை காப்பாத்தினீங்கண்ணே.. நன்றி..!

படத்தின் டாக்கிங் போர்ஷன் 3 மாதங்களுக்கு முன்பாகவே முடிந்துவிட்டாலும் ஹாரிஸ் ஜெயராஜின் இழுவையினால் படம் இன்னமும் முடியாமல் இருக்கிறது.. இதனால் ரிலீஸ் தேதியையும் பிக்ஸ் செய்ய முடியாமல் தவிக்கிறார் உதயநிதி. விழா மேடையிலேயே மறைமுகமாக இதற்கு ஒரு பன்ச் வைத்தார் உதயநிதி. “நாளைல இருந்து ரீரிக்கார்டிங்கையும் முடிச்சுக் கொடுத்தீங்கன்னா, கொஞ்சம் நல்லாயிருக்கும் ஸார். நாளைக்கு காலைல 10 மணிக்கே நான் உங்க ஆபீஸ்ல இருப்பேன்...” என்று உதயநிதி சொல்ல.. ஹாரிஸ் சன்னமாக சிரித்துக் கொண்டார்..! வரும்.. ஆனால் வராது கதைதான்..!

தொடர்ந்து நடந்த பிரஸ்மீட்டில் யாரையாவது வம்பிழுக்கணும்னு நினைச்சாரோ என்னவோ, கேமிராமேன் பாலசுப்ரமணியெத்தை வம்பிழுத்துவிட்டார் உதயநிதி. “நம்ம கேமிராமேன், ஹீரோயினுக்கு மட்டும்தான் குளோஸப் ஷாட் வைப்பார்.. 'கொஞ்சம் நம்மளையும் அழகா காட்டுங்க ஸார்'ன்னு சொன்னா.. 'இருக்குறதுதான் வரும்.. அவ்வளவுதான்'ம்பாரு.. ஆண்ட்ரியா வந்துட்டாங்கன்னா அவ்ளோதான்.. கேமிராவைத் தூக்கிட்டு அவங்க பின்னாடியே ஓடிருவாரு..” என்றார்.. பாலசுப்ரமணியெம் இதைக் கேட்டு ஒரு நொடி வெலவெலத்துதான் போனார். பின்பு நிகில் முருகன் மைக் பிடித்து சமாளித்தது வேறு கதை. இதையெல்லாம் பத்திரிகைகாரங்க எழுதினாத்தான் பிரச்சினை. அவங்களே சொல்லிட்டா நோ பிராப்ளமாம்..!

----------------------------

சொந்த செலவில் சூனியம்..!

'பத்திரமா பார்த்துக்குங்க' என்றொரு சினிமா. படத்தின் தயாரிப்பாளரே இயக்குநர். யாரிடமும் இவர் உதவி, துணை, இணையாக பணியாற்றியதில்லை. எடுத்த எடுப்பிலேயே இயக்குநர் போஸ்ட்டிங். அதான் காசு இருக்கே.. பத்தாது..? 

“ஏன் ஸார் இந்த முடிவு..?” என்றால் சொன்னார் பாருங்கள் ஒரு பதில்..! “இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை நான் எப்பவோ எழுதி டைப் பண்ணி பைண்ட் பண்ணி வைச்சிருந்தேன். வந்த இயக்குநர்கள்கிட்ட படிக்கக் கொடுத்தேன். 'இதைப் படமா பண்ணிக் கொடுங்க'ன்னு கேட்டேன். ஆனா அவங்களோ அவங்களோட கதையைத்தான் சொன்னாங்க. இதை மாட்டேன்னுட்டாங்க. அப்பத்தான் என்னோட அஸிஸ்டெண்ட்ஸ் எல்லாரும், “இந்தக் கதையை நீங்க செஞ்சா மட்டும்தான் ஸார் நல்லா வரும்.. வேற யார் செஞ்சாலும் சொதப்பலாயிரும்..னு சொன்னாங்க.. அதான் நானே துணிஞ்சு இறங்கிட்டேன்..” என்றார். படம் எப்படின்னு கேக்குறீங்களா..? வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் முடங்கிவிட்டது.! அவரவர் ஆசைக்கு அவர்களே பலியாகிறார்கள்..!

------------------------------

எல்லா புகழும் இசைஞானிக்கே..!

சென்ற மாதத்தில் ஒரு நாள் எனது வாழ்வின் முக்கியமான நாள். கேமிரா கவிஞர் பாலுமகேந்திராவை ஒரு காலை நேரத்தில் அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். இசைஞானியின் இன்னிசையில் அவரது 'ஓலங்கள்' படத்தில் துவங்கிய 'தும்பி வா' பாடலின் தொடர்ச்சியான பல வெர்ஷன்கள் பற்றி பேட்டியெடுக்கச் சென்றிருந்தேன்.

மாடிக்கு அழைத்துச் சென்றார். ஹாலில் ஜன்னலோரம் ஒரு சேரும், டேபிளும் போடப்பட்டிருந்தது. சேரில் அமர்ந்தவர் கேமிராவை அவருக்கு எதிராக வைக்கச் சொன்னார். தனது நெஞ்சு அளவுக்கு மட்டும் கேமிராவை போகஸ் செய்யச் சொன்னார். அதனை வியூ பைண்டரில் பார்க்கவும் செய்தார். ஜன்னலை இரண்டு முறை ஒரு அளவுக்கு திறந்து வைத்து சூரிய வெளிச்சத்தை பேலன்ஸ் செய்தார். எதிரில் சும்மா இருந்த ஒரு சேரை எடுத்து எதிரில் போடச் சொன்னார். அதில் என்னை அமர வைத்து கதையை ஆரம்பித்தார். சொல்லும்போது அவருக்கும் ஒரு பிடிப்பு வேண்டுமே என்பதற்காக தலையை ஆட்ட ஆரம்பித்தேன். கடைசிவரையில் நிறுத்தவே இல்லை..!

“மணிரத்னம் தான் முதலில் இயக்கிய ‘பல்லவி அனு பல்லவி’ படத்துக்கு என்னை ஒளிப்பதிவு செய்ய கூப்பிட்டிருந்தார். அப்போ நான் 'மூன்றாம் பிறை' படத்தையும் செஞ்சுக்கிட்டிருந்தேன். இளையராஜாவை 'மூன்றாம் பிறை' ரீரிக்கார்டிங் சம்பந்தமா அந்தச் சமயத்துல சந்திச்சப்போ ஒரு டியூனை என்கிட்ட பாடிக் காட்டி ‘நல்லாயிருக்கா?’ன்னு கேட்டார் இளையராஜ். அது எனக்கு ரொம்பப் புடிச்சிருந்தது. ‘இதை உங்க குரல்ல பாடி ஒரு கேஸட்ல போட்டுக் கொடுங்க’ன்னு கேட்டு வாங்கிக்கிட்டேன். ‘பல்லவி அனு பல்லவி’ படத்துக்கு லொகேஷன் பார்க்க மணிரத்னம்கூட கார்ல போகும்போதுஸ இந்த கேஸட்டை கேட்டுக்கிட்டேதான் போனேன். ஏனோ, எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு இந்த டியூன்..! ‘மூன்றாம் பிறை’ படத்துலேயே இந்த டியூனை ரீரிக்கார்டிங்ல பயன்படுத்திக்கிட்டேன். அதுக்கப்புறமா ‘ஓலங்கள்’ல ‘தும்பி வா’ பாடலாவும் கொண்டு வந்தேன். அதுல ஆரம்பிச்சு இத்தனை வெர்ஷனாகியும் அந்த டியூனை யாராலேயும் மறக்க முடியலைன்னா, அதுக்குக் காரணம் இளையராஜாதான்..” என்றார்..!

பேட்டி முடிவுக்கு வந்தது என்பதை அவராகவே எனக்கு உணர்த்திவிட்டு, நொடிகூட தாமதிக்காமல் காலர் மைக்கை எடுத்து டேபிளில் வைத்துவிட்டு எழுந்தார். எனது கேமிராமேன் அந்த அவசரத்திலும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள எனக்குத்தான் நேரம் கிட்டவில்லை. நொடியும் தாமதிக்காமல் படியிறங்கிவிட்டார்.! ப்ச்.. ஏமாற்றமாகிவிட்டது..!

பாலுஜியின் மாடி அறையில் என்னைக் கவர்ந்தது விண்டோ டைப் படுக்கை அறைதான்..! நான்கு புறமும் கண்ணாடிகளால் ஆன அந்த அறையில் நடு நாயகமாக ஒரு மரக் கட்டில் போடப்பட்டு அதன் மேல் குஷன் பெட் போட்டு அழகான கண்கவர் பெட்ஷீட் விரிக்கப்பட்டிருந்தது. அதன் அருகிலேயே 2 அண்டா சைஸுக்கு பெரிய மரம் ஒன்றின் அடிவேர் மட்டும் வைக்கப்பட்டிருந்தது..! எதற்கோ..? வித்தியாசமான கலை அறை..!  

--------------------------------

சாந்தி முகூர்த்தத்தை சுருக்கமாக வைச்சுக்க முடியுமா..?

தெலுங்கில் சென்ற ஆண்டு வெளியான 'வீரா' என்ற தெலுங்கு படம் 'வீரய்யா' என்ற பெயரில் தமிழில் டப்பிங் ஆகிறது..! டாப்ஸி மற்றும் காஜல் அகர்வாலின் அட்டகாசத்தில் படத்தின் பாடல்களை பார்க்கும்போது குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது. படம் தெலுங்கில் கொஞ்சூண்டு ஓடியிருந்தாலும் தமிழில் டாப்ஸி மற்றும் காஜல் அகர்வாலுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டை வைச்சு ஏதாச்சும் அள்ளிரலாம் என்று கணக்குப் போட்டு டப்பிங் செய்திருக்கிறார்கள்.

பாடல் வெளியீட்டு விழாவில் ச்சும்மா பார்க்க வந்தவங்களையெல்லாம் மேடையேத்தி உக்கார வைச்சிருந்ததால, “2 நிமிடம் மட்டுமே பேசுங்கள்..” என்றார் லேடி அறிவிப்பாளர். பேச வந்தவர்களில் பலரும் இதையே சாக்காக வைத்து 'படம் வெற்றியடைய வாழ்த்துகள்' என்று ஒற்றை வரியில் சொல்லி விடைபெற்றார்கள். இயக்குநர் திலகம் பாக்யராஜ் தன் பேச்சில் இதைக் குறிப்பிட்டுப் பேசினார். “கல்யாணத்தை ஓஹோன்னு கிராண்டா, பிரமாண்டமா நடத்திட்டு, 'சாந்தி முகூர்த்தத்தை சுருக்கமா வைச்சுக்குங்க'ன்னு சொல்றாப்புல இருக்கு...” என்றார்.. விழாவுக்கு வந்திருந்த பெண்கள் மத்தியில் செம வரவேற்பு..! இதைக் கூட புரிந்து கொள்ளாத அந்த பெண் அறிவிப்பாளர் மீண்டும், “டைம் இல்லைன்றனாலதான் ஸார் சொன்னேன்..” என்று வெள்ளந்தியாக திரும்பவும் சொல்ல.. ஏக கலகலப்பு..!

'தாலாட்டு கேட்குதம்மா' படத்தில் தன்னை நடிக்க அழைத்தபோது அந்தக் கதை தனக்கு ஷூட் ஆகாது என்று தான் மறுத்த கதையையும் சொன்னார் பாக்யராஜ். அதில் முதல் இரவிலேயே பொண்ணுக்கு செக்ஸ்ன்னாலே பிடிக்காது.. தெரியாதுன்ற மாதிரியும், ஹீரோ 'அது'க்கு அலையற மாதிரியும் இருந்ததாம் கதை.. “ஏற்கெனவே எனக்கு தமிழ்நாட்டு மக்கள் மத்தில ரொம்ப நல்ல பேரு. இந்த நேரத்துல நான் இப்படியொரு கதைல நடிச்சா கண்டிப்பா படம் ஓடாது'ன்னு சொல்லி நான் நடிக்க மாட்டேன்னுட்டேன்..” என்றார்.. அதன் பின்பு தனது நண்பரின் மகனுக்கு இது போன்று குறை இருந்து, அதனை தானே டாக்டரிடம் அழைத்துச் சென்று சரி செய்த கதையையும் சொல்ல.. பொழுது நல்லாவே போனது..! 

இனி எல்லா நிகழ்ச்சிக்கும் இவரையே கூப்பிட்டால்தான் என்ன..? எழுதறதுக்காச்சும் ஏதாவது ஸ்டோரி கிடைக்குமே..!?

------------------------------------

பெட்டிக்குள் முடங்கிய மாசி..!

இந்திய தேசியத்தின் தீவிர பக்தரான அர்ஜூன் நடித்திருக்கும் மாசி படம் பல தடைகளைக் கடந்து சென்ற வாரம்தான் ரிலீஸ் ஆகியிருக்கு..! “ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்..” என்றார் அர்ஜூன்.. "தேசியக் கொடி, தேசியத்தை பத்தி படத்துல ஏதாவது இருக்கா..?" என்ற கேள்விக்கு.. "அது இல்லாமலா..? “அர்ஜூன் ஸார் இருந்தா இந்தியாவே இருந்த மாதிரி..” என்றார் இயக்குநர் கிச்சா..! 

'பவானி ஐ.பி.எஸ்.' படத்தினால் மிகப் பெரும் பொருள் இழப்புக்குள்ளாகி இந்தப் படத்தையும் முடிக்க முடியாமல் தட்டுத் தடுமாறி இப்போதுதான் ரிலீஸுக்கு கொண்டு வந்திருக்கிறார் கிச்சா. “நாளைக்கு படம் ரிலீஸ்.. அவசியம் எல்லோரும் பார்க்கணும்.. மறுபடியும் பிரஸ் ஷோல உங்களையெல்லாம் சந்திக்கிறேன்”னு சொல்லிட்டுப் போனார் அர்ஜூன். அந்தோ பரிதாபம்.. அன்றைய இரவிலேயே கிச்சாவும், அவருடைய நண்பரும், 'எப்படி மனசுக்குள் வந்தாய்' இயக்குநருமான பிரசாத்தும் மோசடி வழக்கில் கைது செய்யப்பட, 'மாசி' மீண்டும் பெட்டிக்குள் முடங்கி ஒரு வார தாமதத்திற்குப் பின்பு வெளியானது..!

கைது செய்யப்பட்ட விவகாரமும் திகைப்பை ஊட்டுகிறது..! பெரிய நடிகர்களை வைத்து படம் செய்து தருவதாக வாக்குறுதி அளித்த பிரசாத் 67 லட்சம் ரூபாயை செக்காக வாங்கிக் கொண்டு கடைசியில் தயாரிப்பாளர் தமிழ்க்குமரனின் மகனையே ஹீரோவாக வைத்து ஒரு படத்தை எடுத்துக் கையில் கொடுத்துவிட்டாராம்..! இதனை தயாரிப்பாளர் ஏற்க மறுக்க.. இயக்குநர் பிரசாத் தானே இப்படத்தின் தயாரிப்பாளராக மாறுகிறேன் என்று சொல்லி 67 லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்து, அதுவும் பவுன்ஸாகிவிட்டதாம்..! பிரசாத் இதில் கொஞ்சத்தை கிச்சாவுக்குக் கொடுத்து 'மாசி' ரிலீஸுக்கு வழிவகை செய்திருக்கிறார் போலும். அதனால் கிச்சாவையும் எஃப்.ஐ.ஆரில் சேர்த்து உள்ளே வைத்துவிட்டார் தயாரிப்பாளர் தமிழ்க்குமரன். இப்போது மும்முரமாக சமாதானப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்..!

--------------------------------------

வட்டார மொழியே இல்லாதது கஞ்சாதான்..!

'கஞ்சா கூட்டம்'. வழக்கமான தலைப்புக்கேற்ற கதைதான். கஞ்சா விற்கும் 4 வாலிபர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் நங்கைகளின் காதல் விளையாட்டுதான் படமாம்..!

படத்தின் தயாரிப்பாளர் தனது சொந்த ஊரில் இருந்து 4 பஸ்களில் சொந்த, பந்தங்களை அழைத்து வந்துவிட்டதால், பத்திரிகையாளர்களே நிற்க வேண்டி வந்தது..  ஆடியோவை ரிலீஸ் செய்து பேசிய முக்குலத்தோரின் தற்போதைய திரையுலக 'சின்னக் கலைவாணரான' விவேக் “கஞ்சா என்ற பெயருக்கு மட்டும் தமிழ்நாட்டில் வட்டார மொழியே கிடையாது.. கஞ்சாவிற்கு ஒரே ஒரு பெயர்தான்.. அது கஞ்சாதான்..” என்று ஆணித்தரமாக, அழுத்தந்திருத்தமாகச் சொன்னார். பாடல் காட்சிகள் ரசனையாகத்தான் இருக்கிறது..! பாடல்களும் அப்படித்தான் இருக்கின்றன..!  ஆனால் தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைக்க ஓப்பனிங் தேவையாய் இருக்கிறதே..? என்ன செய்ய..?

------------------------------------------

கபாலிக்கு ஒரு வரவேற்பு..!

பெயரும், ஆளும் நச் என்று மிகப் பொருத்தமாக இருந்தார்கள், 'கபாலி' ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில்..! தமிழ், கன்னடத்தில் ஒரே நேரத்தில் வெளியாகப் போகிறதாம்..! ஹீரோயின் வரவில்லை. ஆனால் அயிட்டம் கேர்ளாக நடித்தவர் மட்டும் மிகப் பொறுப்பாக வந்திருந்தார். சொந்த ஊர் கொல்கத்தாவாம்.. டான்ஸ் மேல் விருப்பமாததால் கொல்கத்தாவில் இருந்து பெங்களூர் வந்து அதன் வழியாக ஹைதராபாத் வந்து, அப்புறமா கோடம்பாக்கத்தில் கால் வைத்திருக்கிறாராம்..! வெல்கம்..!

“ச்சும்மா சென்னைல ஒரு நிகழ்ச்சியை மட்டும் நடத்திட்டு இதை தமிழ்ச் சினிமாவா ஆக்கிராதீங்க.. தமிழ்ச் சினிமான்னா தமிழ்நாட்டுலேயே 60 சதவிகித படப்பிடிப்புகள் நடத்தணும்..” என்றார் ஆர்.கே.செல்வமணி. 

வந்திருந்த இன்னொரு வி.ஐ.பி.யான இயக்குநர் வீ.சேகரோ நிறைய அட்வைஸ்களை வாரி வழங்கினார். “படத்தை முதல்ல உங்க நண்பர்கள், சொந்தக்காரங்களுக்கு போட்டுக் காட்டுங்க. அவங்க ஏதாவது திருத்தம் சொன்னாங்கன்னா அது சரிதானான்னா யோசிங்க..! இன்னொரு தடவை சில சீன்களையோ, அல்லது பாட்டு சீன்களையோ எடுக்கணும்னு தோணுச்சுன்னா சட்டுன்னு செலவு பார்க்காம எடுத்திருங்க. என்னோட 'காலம் மாறிப் போச்சு' படத்துல எல்லாம் முடிஞ்சு ரஷ் போட்டு பார்த்தப்போ, ஏதோ ஒண்ணு குறையற மாதிரியிருந்துச்சு. அப்புறமாத்தான் கடைசீல வடிவேலுவை வைச்சு 'வாடி வாடி பொட்டப்புள்ளை'ன்ற பாட்டை ஷூட் செஞ்சு இணைச்சேன். படம் 100 நாள் ஓடுச்சு..” என்றார்..!

இறுதியாகப் பேசிய கலைப்புலி ஜி.சேகரன், “சினிமாக்குள்ள வந்து, சினிமா புகழை வைச்சு பொது வாழ்க்கைல உயரத்துக்கு வர விரும்பும் நடிகர்கள் முதலில் தங்களது ரசிகர் மன்றத்தினரிடம் தியேட்டர்களில் பிளாக்கில் டிக்கெட் வாங்காதீர்கள் என்று சொல்ல வேண்டும். தங்களது படங்களை திரையிடும்போது டிக்கெட் விலையை அநியாய விலையாக உயர்த்த அனுமதிக்க்க் கூடாது.. தங்களது படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் விற்க்க் கூடாது என்று தியேட்டர்களை நிர்ப்பந்திக்க வேண்டும். இதையெல்லாம் செய்து கொஞ்சமாவது நேர்மையைக் காப்பாற்றிக் காட்டிவிட்டு அதன் பின்பு பொதுவாழ்க்கையில் அவர்கள் இறங்கட்டும்..” என்றார் சூடாக..!

இதையெல்லாம் விஜய், விஜய்காந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் பட விழாக்களில் பேசினால்தானே எடுபடும்..!

------------------------------

வருகிறது வனயுத்தம்

'குப்பி' படத்தின் இயக்குநர் ரமேஷின் அடுத்த படம் வனயுத்தம். வீரப்பனின் வாழ்க்கை வரலாறுதான் கதை. வீரப்பனாக கிஷோர், அவரது மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமி, விஜயகுமார் ஐ.பி.எஸ்.ஸாக அர்ஜூன் என்று பதம் பிரித்து நடிக்க வைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு விஜய்மில்டன். வசனம் நம்ம எழுத்தாளர் அண்ணன் அஜயன் பாலா..!

பிரஸ் மீட்டில் நடிகர் மணியின் பில்டப்பான பேச்சை பார்த்து அர்ஜூனும், இயக்குநருமே சிரித்துவிட்டார்கள். விட்டால் மைக் உடையும்வரை கீழே வைக்க மாட்டார் போலிருக்கிறது என்று பதறிப் போன பத்திரிகையாளர்கள் ஒரே குரலாக “அண்ணே.. வேண்டாம்ண்ணே..” என்று கெஞ்ச அதுக்கப்புறம்தான் தனது பில்டப்பை கொஞ்சமாக குறைத்துக் கொண்டார்.

அர்ஜூன் தன் பேச்சில் விஜயகுமார் மீதான பாசத்தைக் கொஞ்சம் தொட்டுக் கொண்டார்.. வீரப்பன் கொலைகாரன் என்பதாகவே அர்ஜூனின் பேச்சு இருந்தது.. அனைத்து டிவிக்களுக்கும் ஒரே நேரத்தில் பேட்டியளித்து தப்பித்துக் கொண்டார்... "ச்சும்மா வாங்க பாஸ்.. வேற பேசுவோம்.." என்று அழைத்ததற்கு, "வேணாம் பாஸ்.. உங்க சேட்டையெல்லாம் எப்படின்னு தெரியும்.." என்று சிரித்தபடியே சொல்லி எஸ்கேப்பானார்.

“இந்தப் படத்தில் எந்த இடத்திலும் நாங்கள் பொய் சொல்லவில்லை. முழுக்க முழுக்க நடந்த உண்மையைத்தான் அப்படியே எடுத்திருக்கிறோம்.. 4 மாதங்கள் வீரப்பன் சம்பந்தமான அனைத்து ஊர்களுக்கும் நேரடியாகவே சென்று பேட்டியெடுத்து, அனைத்து ஜெயில்களுக்கும் சென்று வீரப்பன் தொடர்பான குற்றவாளிகள் அனைவரையும் சந்தித்துவிட்டுத்தான் ஸ்கிரிப்ட் ரெடி செய்தோம். என்னைப் பொறுத்தவரையில் வீரப்பன் ஒரு ஹீரோ..” என்றார் அஜயன்பாலா..!

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.. அழகாக பேசுகிறார். பணிவாக பழகுகிறார். மிக எளிமையாக இருக்கிறார்.. கடும் உழைப்பாளி என்றார்கள். “படத்தைப் பார்த்தால் தெரியும்.. அதிகம் பேசவில்லை. நான் ஒரு வேலையாள். வீரப்பனை பற்றி தனிப்பட்ட முறையில் கருத்து சொல்ல தெரியவில்லை..” என்று ஒப்பனாகச் சொல்லிவிட்டு தப்பித்துக் கொண்டார். இதே கருத்தைத்தான் வீரப்பனின் மனைவியாக நடித்த விஜயலட்சுமியும் கூறுகிறார்..! தப்பிக்கத் தெரிஞ்சவங்கதான்..!

இயக்குநரோ, இந்தப் படத்தில் தன்னைவிட அதிகம் உழைத்திருப்பது ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்தான் என்று பழியை அவர் மீது தூக்கிப் போட்டார். கூடவே, “வீரப்பனை ஹீரோவாகவும் உயர்த்தவில்லை.. வில்லனாகவும் பழிக்கவில்லை. நடந்தவைகளை அப்படியே படம் பிடித்திருக்கிறேன்.. படத்தை பார்த்துட்டு வாங்க. இன்னும் நிறைய பேசுவோம்..” என்றார். இந்தப் படத்தை தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்திருக்கிறார் இயக்குநர் ரமேஷ். இதற்காக வாஸ்து சரியில்லை தனது மனைவியிடம் பொய் சொல்லி தனது வீட்டையே விற்றாராம்...!

எப்படியிருப்பினும், வீரப்பனின் முடிவாக படத்தில் இருப்பது என்னவென்றால், அரசுத் தரப்பு என்ன சொன்னதோ அதுதானாம்.. டிரெயிலர் அப்படித்தான் சுட்டிக் காட்டுகிறது.. படம் வரட்டும்.. பார்த்துவிடுவோம்..! 

-----------------------------------

இன்னொரு காதல்..!

“கல்லூரியின் தோல்விக்குப் பிறகு மீண்டும் அசர வைக்குற மாதிரி ஒரு படத்தைக் கொடுக்கணும்னு நினைச்சேன். அதனாலதான் இவ்ளோ பெரிய பிரேக்...” என்றார் பாலாஜி சக்திவேல். எல்லாரும் புதுமுகங்கள்.. பொதுவாக ஹீரோயினைத்தான் கேரளாவில் இருந்து இறக்குமதி பண்ணுவாங்க இந்தப் படத்துல ஹீரோக்கள்ல ஒருத்தர் கேரள இறக்குமதியாம்.. 

படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் லிங்குசாமியும், இவரும் ஷங்கரிடம் துணை இயக்குநர்கள் வேலை பார்க்கும்போது ஒரே அறையில் தங்கியிருந்தவர்களாம்.. அந்த நட்பு இன்றைக்கும் அப்படியே தொடர்கிறது என்றார் லிங்குசாமி. “ஒரு நாள் மதிய சாப்பாட்டிற்காக வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தபோது நான் ஒரு கதை சொல்றேன் கேளுன்னு பாலாஜி சொன்னாரு. நானும் ம்.. ம்..ன்னு கேட்டுக்கிட்டேயிருந்தேன். நான் சமைச்சு முடிக்கிறதுக்குள்ள கதையை சொல்லி முடிச்சார். அதுதான் 'காதல்' படத்தின் கதை. அதை நான்தான் தயாரிச்சிருக்கணும். பட்.. மிஸ்ஸாயிருச்சு. இந்தத் தடவை நான் விடலை.. 'காதல்' மாதிரியே இந்தப் படமும் உங்களை உலுக்கப் போகுது..” என்று உறுதியாகச் சொன்னார் லிங்குசாமி..!

பாலாஜி சக்திவேலும் தன் பேச்சில் லிங்குசாமியைப் பற்றிக் குறிப்பிடும்போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார். "என்ன கதை, யார் நடிக்கிறான்னு எதையும் கேக்கலை.. ஓகே ஆரம்பிங்கன்னு கை காட்டிட்டாரு லிங்கு. தினமும் அவர் ஆபீஸுக்கு போவேன்.. வருவேன்.. ஷூட்டிங்குக்கும் போயிட்டு வந்துக்கிட்டிருக்கேன். ஒரு நாள்கூட அவர் கேக்கலை.. சில மாதங்கள் கழித்து 'அப்புறம்'ன்னாரு.. அப்பத்தான் சொன்னேன்.. 'எல்லாம் முடிஞ்சிருச்சு.. ஆனால் படத்தோட ஓப்பனிங் எப்படின்னு நான் இன்னும் முடிவு பண்ணலை. அதை டிஸ்கஸ் பண்ணிட்டு ஷூட் பண்ணிட்டு அப்புறமா உன்கிட்ட காட்டுறேன்'னு சொன்னேன்.. அதுக்கும் ஒரு 'உம்' சொல்லிட்டுப் போயிட்டாரு.. இப்படியொரு தயாரிப்பாளர் எனக்கு நண்பனாவும் கிடைச்சது பெரிய பாக்கியம்..” என்று கண் கலங்கிச் சொன்னார்..!

இன்னொரு 'காதல்' என்கிறார்கள். கைக்குட்டையோடதான் தியேட்டருக்குள்ள போகணும் போலிருக்கு..!

ஓகே.. நிறைய பேசிட்டோம் மக்களே.. அடுத்த வாரம் சந்திப்போம்..!


விண்மீன்கள் - சினிமா விமர்சனம்

18-03-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அரவான் போன்ற படங்களுக்கே மக்களிடையே பெரும் வரவேற்பில்லாத சூழலில், பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகள் இல்லாமல், கதையை மட்டுமே நம்பி வந்துள்ள படம் இது. புதிய இயக்குநர்கள் புதிய கோணத்தில் ஒரு விஷயத்தை சொல்வதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றாலும், அதனை வணிக ரீதியாகவும் வெற்றி பெற வைத்து சினிமா தொழிலின் வளர்ச்சிக்கும் வழிவகை செய்தால் நன்றாக இருக்கும்..!

இப்படம் பார்த்து முடிந்த பின்பு, இதனை எப்படி மக்களிடையே கொண்டு போய் சேர்ப்பது என்று நினைத்துப் பார்த்தேன். எந்த வழியும் தெரியவில்லை. தற்போதைய நிலையில் மக்களுக்கு தினமும் ஒரு பிரச்சினைகள் கூடுதலாக வந்து கொண்டே இருக்கின்றன. இதிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு பொழுது போக்கிற்காக சினிமா தியேட்டர்களை நாடி வருபவர்களை இது போன்ற 2 மணி 10 நிமிட துன்பவியல் காவியங்கள் எந்த அளவுக்கு ஈர்க்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் படத்தை எடுத்தவிதத்தில் ஒரு சினிமாக்காரனாக எனக்கு திருப்திதான்..!

 

பிறக்கும்போதே உடலின் ஒரு பாதி இயங்காத நிலையில், காலம் முழுக்க வீல்சேரில்தான் இருக்க வேண்டியிருக்கும் நிலைமையுள்ள குழந்தையை மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி வளர்த்தெடுக்கும் பெற்றோர்கள்.. வளர்ந்த பின்பு, அந்த இளைஞன் தனது வாலிப வயதில் சந்திக்கும் ஒரு பெண்ணின் சிநேகமும், நட்பும் அவனது வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதையும், அந்த அனுபவத்தின் மூலம் அவன் உணர்கின்ற உண்மையையும் சொல்கிறது இப்படம்.

பையனின் பிறப்பு முதல், அதன் ஒவ்வொரு வளர்ச்சியையும், அதற்கேற்றாற்போன்ற குழந்தை, சிறுவனை வைத்து இயக்கியிருக்கும்விதம் பாராட்டுக்குரியது.. குழந்தை பிறந்தது முதல் துவங்கும் சோக ஓவியம், அதன் பின்பு படம் முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதால் அந்த இளைஞன் மீதான நமது பரிதாப உணர்வு மிகுதியாகக் கொண்டேதான் செல்கிறதே தவிர.. அதுவொரு சினிமா என்பதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..!

அம்மாவாக நடித்திருக்கும் ஷிகாதான் பெரிய அளவில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். முடிந்த அளவுக்கு அவருக்கான குளோஸப் காட்சிகளை அதிகமாக வைத்து அந்தச் சோகத்தை அவரது கண்களில் இருந்தே காண்பித்து தனது இயக்கத் திறமையை காட்டியிருக்கிறார் இயக்குநர்..!

குழந்தையை அப்படியே வேறொருவரிடம் வளர்க்கக் கொடுக்கும்படி மருத்துவர் சொல்லும் இடத்தில் மருகும், உருகும் ஷிகாவின் நடிப்பும், அப்பாவாக நடித்த ராகுலின் நடிப்பும் உண்மையாகவே இருந்தது..! பையனை பள்ளியில் சேர்க்க விரும்பி அழைத்துச் செல்லும் இடத்தில் பையனின் புரிந்து கொள்ளல் பற்றி ராகுல் செய்யும் விளையாட்டு திடீர் அதிர்ச்சியாக இருந்தாலும், அதைவிட அதிர்ச்சி, பையனின் திடீர் பேச்சுதான்..! கொஞ்சம், கொஞ்சமாக பேசி வருகிறான் என்பதை முதலிலேயே சொல்லியிருந்தால் சட்டென மனம் ஏற்றிருக்கும்.. திடீரென்று நார்மலானவர்களை போன்று பேசுவது கொஞ்சம் அதிகப்படியான காட்சியாகவே தோன்றுகிறது..!

ராகுலின் மேஜிக் தொழில் எதற்காக என்பதும் இன்னொரு சின்னக் குழப்பம். அது எந்தவிசத்திலும் படத்திற்கு பலனளிக்கவில்லை என்பதுதான் சோகம். வேறு கேரக்டர் ஸ்கெட்ச் தயார் செய்திருக்கலாம்.. படத்தோடு ஒன்றிப் போவதற்கு ஹீரோ மட்டுமே தேவையாய் இருந்தார். ஆனால் அவரையும் வீல் சேரில் அமர வைத்துவிட்டால் வேறு என்ன செய்வது..?

பாண்டியராஜன் கதையைக் கேட்டவுடன் நிமிடமும் தாமதிக்காமல் ஒத்துக் கொண்ட கதை என்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது சொன்னார். பாராட்ட வேண்டும். அவருக்கான ஸ்கோப் நிறையவே இருக்கிறது. இடைவேளைக்கு பின்பு படத்தினை அவர்தான் தாங்கிப் பிடிக்கிறார். அனுஜாவுக்கும், தனக்குமான நட்பை காதல் என்று நினைத்து பேசும் ஹீரோவிடம் அது பற்றி எடுத்துரைக்கும் அவருடைய பேச்சு எளிமையானது..! இது போன்று எதார்த்தமான, மேக்கப் நடிப்பாக இல்லாமல் இருக்கும் பாண்டியராஜினின் தேவை தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு அவசியம் தேவைதான்..!

பரிதாபத்தில் பிறக்கும் உணர்வை காதல் என்று நினைப்பதும்.. அதனை பட்டென்று அனுஜா போட்டுடைத்துவிட்டு போவதும்.. பின்னான தொடர்ந்து காதலுக்காக முயலும் காட்சிகளும் வழக்கமான படங்களில் சொல்லப்படுவதுதான்.. இந்தப் படத்தில் இது தேவைதானா என்று கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டார் இயக்குநர்..!

அனுஜாவின் அப்பா ஹீரோவை அவமானப்படுத்தும் விதமும், அதற்கடுத்து ஹீரோ தானாகவே செயல்பட எடுக்கும் முயற்சிகளும் பாராட்டுக்குரியது. இதைத்தான் இயக்குநர் சொல்ல வந்தார் என்று நினைக்கிறேன். இந்த கிளைமாக்ஸ் நிச்சயம் பாராட்டுக்குரியது. பரிதாபத்தில் ஏற்படும் காதலை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்கவும் ஒரு தைரியம் வேண்டும். அந்த உண்மையை ஹீரோ இறுதியில் உணர்ந்து கொள்வதும் ஏற்கக் கூடியதுதான்.. 

இது போன்ற குறைபாடு உள்ள குழந்தைகளை வளர்த்துவரும் பெற்றோர்களுக்கான சில செய்திகளும் படத்தில் உண்டு. இவர்களுக்காகத்தான் இப்படம் எனில் இயக்குநருக்கு ஒரு சல்யூட்டுதான்..! படம் முழுவதிலும் இயக்கத்தில் குறையே சொல்ல முடியாத அளவுக்கு மிகச் சிறப்பாகத்தான் இருக்கிறது. இதற்கடுத்து சொல்ல வேண்டியது ஒளிப்பதிவு. மிக அழகு.. காட்சிக்கு காட்சி, பிரேமுக்கு பிரேம்.. அழகைக் கொட்டுகிறது திரை..! ஒளிப்பதிவாளர் ஆன்ந்திற்கு தமிழ்ச் சினிமாவில் மிகச் சிறப்பான எதிர்காலம் உண்டு.. நிச்சயம் உயரத்திற்கு வருவார் என்றே நம்புகிறேன். படத்தின் டிரெயிலர் பார்த்த உடனேயே இணையத்தில் இதனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதன் பின்புதான் ஆனந்த், நமது சக தோழர் ஜீவானந்தத்தின் மகன் என்பது தெரிந்தது.. வாழ்க..!

படத்தின் இசையமைப்பாளரை பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் டிரெயிலர் வெளியீட்டின்போதே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தேன். ஜூபின். 'பொல்லாங்கு', 'விண்மீன்கள்', 'பழைய வண்ணாரப்பேட்டை' என்று 3 படங்களிலும் இசையை கலக்கலாக செய்திருக்கிறார்..! இதில் 'உன் பார்வையில்' என்ற பாடல் சொக்க வைக்கிறது..! ரொம்ப நாள் கழித்து எனக்கு மீண்டும், மீண்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது இப்பாடல்தான்..! ஜூபினும் ஒரு ரவுண்டு வருவார் என்றே திடமாக நம்புகிறேன்..! 

படத்தின் இயக்குநர் விக்னேஷ் மேனன், பழம்பெரும் இயக்குநர் சங்கரின் பேரனாம். வாழ்த்துகள். முதல் படத்திலேயே ஒரு பெரிய கவன ஈர்ப்பை செய்திருக்கிறார். ஆனால் இத்தனை செய்தும், பல லோ பட்ஜெட் படங்களில் இருப்பதைப் போன்று எழுத்துப் பிழையோடு டைட்டில்கள் ஓடியதைப் பார்த்து கோபமாகத்தான் வந்தது.. அதுவும் எடுத்த எடுப்பிலேயே மது உயிரைக் கொள்ளும் என்று எழுதி, அதனை 30 நொடிகளுக்கு அப்படியே வைத்திருந்ததே மகா கொடுமை..! இறுதி டைட்டில்களிலும் பல எழுத்துப் பிழைகள்.. உழைப்பையும், சிரத்தையையும் மற்ற எல்லா விஷயங்களிலும் செலுத்துங்க இயக்குநரே..!

இப்போதைய தமிழ்ச் சினிமாவின் வியாபாரச் சூழலில் இதுவொரு ஆச்சரியமான படம்தான்.. இது போன்ற உடல் குறைபாடு கொண்ட ஒருவனை மையப்படுத்தி எடுத்த முதல் தமிழ்ச் சினிமா என்றும் சொல்லலாம்..! சினிமாக்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றால்தான் அதன் தயாரிப்பாளருக்கும் நல்லது. தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், இயக்குநருக்கும் நல்லது. நல்ல படம், நல்ல பெயர் மட்டும் எடுத்துவிட்டால் இயக்குநருக்கு போதும்தான். ஆனால் தயாரிப்பாளருக்கு..? போட்ட பணம் திரும்பக் கிடைத்துவிட்டால் அவர் மீண்டும் ஒரு படத்தினை தயாரிக்க முன் வரலாம்..! இதனை மனதில் வைத்து இயக்குநர்கள் தங்களுடைய பெயர், புகழையெல்லாம் கொஞ்சம் ஓரம்கட்டிவிட்டு மக்கள் விரும்பும்வகையில் அவர்களுக்கேற்றவகையில் கொஞ்சம் கசப்போடு கூடிய மருந்தாக தந்தால் தமிழ்ச் சினிமாவுலகத்திற்கும் நல்லது.. அவர்களுக்கும் நல்லது.. தயாரிப்பாளர்களுக்கும் நல்லது..!

இந்த விண்மீன்கள் நிச்சயம் ஒரு நட்சத்திரம்தான்..!



தாயே... மன்னித்துவிடு..!


17-03-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அப்போது நான் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள அரசு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் அப்ரண்டிஸ் செய்து கொண்டிருந்தேன். குடியிருந்தது திண்டுக்கல்லில். தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்து 5.45 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸையோ அல்லது அதற்குப் பின்பு வரும் டிரெயினையோ பிடித்து மதுரை வந்து, அங்கிருந்து வேறொரு பஸ்ஸில் 8 மணிக்குள்ளாக ஒர்க்ஷாப்பிற்குள் போயாக வேண்டும்..!

எனது அம்மாவுக்கு படிப்பறிவே இல்லை. பள்ளிக்கூடமே போகவில்லை. கையெழுத்து கூட போடத் தெரியாது. உடல் வலுவும் இல்லை. ஒல்லிக்குச்சியாக இருக்கும். எப்போதும் காலை நீட்டி சுவரில் சாய்ந்துதான் உட்கார்ந்திருக்கும். வீட்டில் சமையல் வேலையெல்லாம் எனது அக்காள்கள்தான்..! எனக்காக எனது அக்கா செல்வமணி காலை 4 மணிக்கு எழுந்து சமையல் செய்து கொடுக்கும். சில நாட்களில் அக்காவால் முடியலைன்னா அதுவும் படுத்திரும். 

காலை 4.15 மணிக்கு முதல் அலாரம் ஒலித்த சில நொடிகளில் என் அம்மா கண் முழிச்சிரும்.. “தம்பி...” என்று குரல் கொடுக்கும். என்னிடமிருந்து ஏதாவது அசைவுகள் வரவில்லையெனில் “ராசா” என்று இன்னொரு குரல் கொடுக்கும்.. அதற்கும் நான் பதில் அசைவு கொடுக்கவில்லையெனில் எழுந்து உட்கார்ந்து நான் போர்த்தியிருக்கும் பெட்ஷீட்டை லேசாக உருவியபடியே “கண்ணு.. எந்திரி கண்ணு.. அலாரம் அடிச்சிருச்சு..” என்று சொல்லும்..!

அப்படி, இப்படி என்று திரும்பி, அலுத்துப் போய் எழுந்து உட்கார்ந்து அம்மாவை பார்த்தவுடன் ஒரு இனம் புரியாத கடுப்பு.. கோபம்.. எல்லாம் சேர்ந்து வரும்.. “அதான் எந்திரிச்சிட்டேன்ல.. அப்புறம் எதுக்கு நொய்.. நொய்யுன்ற..” என்று கடுப்போடு எழுந்து போவேன்.. அம்மா இதைக் கண்டு கொள்ளாமலேயே இன்னொரு பக்கம் படுத்திருக்கும் அக்காளை எழுப்பத் துவங்கும். “செல்வா.. தம்பி எந்திரிச்சிட்டான் பாரு..” என்று குரல் கொடுக்கும். அக்காள் உடனே எழுந்தால் நல்லது. இல்லையெனில், கோபத்துடன் வசவுகளை வாரி வழங்கும். இந்தக் கோபக் குரலைக் கேட்டே அக்காளுக்கும் கோபம் வரும்.. “ச்சே.. ஆத்தாளுக்கும், மகனுக்கும் வேலையில்லை. உயிரை வாங்குறீங்க..” என்று சொல்லிக் கொண்டே எழுந்திருக்கும்.. “ஆமா.. எனக்கு வேலையில்லை.. வேலைக்குப் பொற புள்ளைக்கு சமைச்சுக் கொடுக்க உனக்கு வலிக்குதாடி..?” என்று கேட்டுவிட்டு மீண்டும் படுத்துக் கொள்ளும் அம்மா..!

நான் குளித்து முடித்து ரெடியாகி வரும்வரையில் அக்காவிடமிருந்து சின்னச் சின்ன முனங்கல்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கும். இதற்கு எதிர்வினையாக அம்மாவும் எதையாவது படுத்த நிலையில் இருந்தே அள்ளி வீசிக் கொண்டிருக்கும். அதிகமாக “உனக்கு கொழுப்பு கூடிப் போச்சுடி.. பொம்பளை மாதிரியா இருக்குற..? அவனுக்கு சமைச்சுக் கொடுக்க உனக்கு வலிக்குதா.. நாம செஞ்சு கொடுக்கலைன்னா வேற எவ செஞ்சு கொடுப்பா..?” என்பதாகவே இருக்கும்..!

“இந்தாடா.. கிளம்பு.. போய்த் தொலை.. உயிரை எடுக்குறான்..” என்று அதிகப்பட்சம் முறைப்புடன் அக்கா, டிபன் பாக்ஸை கையில் கொடுத்துவிட்டு எப்போது வெளியேறுவேன்.. கதவைச் சாத்தலாம் என்கிற ஆசையோடு காத்திருக்கும்.. நான் பேக், டிபன் பாக்ஸ் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பும்வரையிலும் படுத்திருக்கும் அம்மா, வாசல் கதவு அருகே சென்றவுடன் எழுந்து உட்கார்ந்து, “தம்பி.. பாஸ் எடுத்துக்கிட்டியா..? எல்லாம் எடுத்திட்டியா..? காசு வைச்சிருக்கியா..?” என்றெல்லாம் அடுக்கடுக்காய் கேள்விகளை வீசும். ஒரு நாள்கூட ஒரு கேள்விக்கும் மரியாதையாய் பதில் சொல்லியதில்லை. “எல்லாம் எடுத்துக்கிட்டேன்.. ச்சும்மா தொண, தொணன்னு அனத்தாதம்மா.. படுத்துத் தொலை..” என்று வெறுப்பை கக்கிவிட்டுத்தான் கிளம்பியிருக்கிறேன்..!

இந்த வெறுப்பை என்றைக்கும் எனது அம்மா கண்டு கொண்டதில்லை.. அடுத்த நாள்.. அதற்கடுத்த நாள்.. அந்த 2 வருட அப்ரண்டிஸ் பீரியட் முடியும்வரையிலும் அதனுடைய கேள்விகளும், விசாரணைகளும், அக்கறையும் ஒரு நாள்கூட நின்றதில்லை..! அதற்குப் பின்பு கேன்சரில் அது படுத்த படுக்கையாகும்வரையிலும்கூட இரவு வேளையில் நான் எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் “சாப்பிட்டியா கண்ணு..?” என்று வார்த்தைகளை வீசாமல் தூங்கியதில்லை....! 

எனக்கும் என் அண்ணனுக்கும் இடையில் 16 வருட இடைவெளி. இது தலைமுறை இடைவேளையாக பரவி.. ரோட்டில் பார்த்துக் கொண்டால்கூட பேசிக் கொள்ளாமல் செல்வதாக இருந்தது.. ஒரு நாள் டிரெயின் பாஸ் எடுக்க  காசில்லை என்றார் அண்ணன். எனக்கு கோபம். தொடர்ந்து வீட்டுச் சண்டையில் வீட்டில் எல்லாரையும் சபித்துவிட்டு, பட்டென்று சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு “இந்த எழவெடுத்த வீட்டுக்கு இனிமேல் வரவே மாட்டேன்..” என்று சொல்லிவிட்டு வெளியேறினேன்..

மதுரை ஒத்தக்கடையில் என்னுடன் வேலை பார்த்த வேல்முருகனின் வீட்டில் டேரா போட்டுவிட்டேன். காலையில் மெதுவாக எழுந்து, ஹோட்டலில் சுடச் சுட இட்லியையும், மெதுவடையையும் சாப்பிட்டுவிட்டு மதியத்திற்கும் கடையிலேயே சாப்பிட்டு இரண்டாவது நாளிலேயே நாக்கு சுவை கண்டுவிட்டது..! மாதம் அப்ரண்டீஸ் உதவித் தொகையாக 450 ரூபாய் கொடுத்தார்கள். அதை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்று மனதுக்குள் ஒரு நப்பாசை..!

2-வது நாள் மாலையே எனது அண்ணன் ஒர்க்ஷாப்பிற்கு போன் செய்தார். “டேய் அம்மா கூப்பிடுதுடா.. வந்திருடா..” என்றார். “அதுக்கு வேற வேலையில்லை.. எங்கிட்டாவது போகச் சொல்லுங்க..” என்று சொல்லிவிட்டு வைக்கிறேன்னு சொல்லாமலேயே போனை கட் செய்தேன்.. மாலை வேலைகளில் ஒத்தக்கடை சிவலிங்கம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, அடுத்தடுத்த நாட்களில் சினிப்பிரியா, மினிப்பிரியா என்று நண்பர்களுடன் அவர்களுடைய காசில் ரவுண்டு அடிக்க ஆரம்பித்தேன்..!

தினமும் மாலை 5 மணிக்கு எனது அண்ணன் போன் செய்வதும், நான் மறுப்பதுமாக நாட்கள் நகர்ந்தன. 10-வது நாள். மறுபடியும் போன்.. “டேய்.. அம்மா நேத்து காலைல இருந்து சாப்பிடலைடா.. உன்னை பார்த்தாத்தான் சாப்பிடுவேன்னு சொல்லுதுடா.. வந்து ஒரு வாட்டி முகத்தைக் காட்டிட்டுப் போடா. அது பாவம்டா...” என்றார் அண்ணன்.. இப்போதும் “உங்க வீட்டுக்கே வர விருப்பமில்லை. ஆளை விடுங்க” என்றேன்..!

மீண்டும், மீண்டும் அன்றைக்கே தொடர்ச்சியாய் போன்.. ஒர்க்ஷாப்பில் விசாரித்தார்கள். விபரம் தெரிந்து ஆள், ஆளுக்கு கையில் கிடைத்ததையெல்லாம் தூக்கிக் கொண்டு அடிக்க வந்தார்கள். “மரியாதையா இப்பவே கிளம்பலைன்னா நாளைக்கு வீட்டுக்குள்ள விடமாட்டோம்”னு நண்பர்களே சொல்லும் அளவுக்கு டிராக்டர் ஷெட் பஞ்சாயத்து சென்றுவிட்டது..

கடுப்போ கடுப்பு.. கோபமோ கோபம்..! கொஞ்சமும் நிம்மதியாய் இருக்க முடியலை.. நம்ம இஷ்டத்துக்கு விட மாட்டேன்றானுக என்று நெஞ்சு கொதிக்க.. நண்பர்களிடம் கை மாத்து வாங்கிக் கொண்டு திண்டுக்கல்லுக்கு பஸ் ஏறினேன்.. மதுரையில் சிடி சினிமா, தீபா, ரூபாவில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்றுதான் பிட்டு படங்களை மாற்றுவார்கள். அது வியாழக்கிழமை.. நாளைக்கு ஒரு நாள் கூட இருந்து படத்தையாவது பார்த்துட்டுப் போகலாம்னு முடியலையே என்ற கோபமும் சேர்ந்து கொண்டது..!

திண்டுக்கல்லுக்கு இரவு 7.30 மணிக்கு வந்து சேர்ந்து அப்பவும் வீட்டுக்குப் போக மனசில்லாமல் ஒய்.எம்.ஆர்.பட்டி தாஸ் கடையில் பையை வைத்துவிட்டு அப்படியே என்விஜிபி தியேட்டருக்கு 8 மணி ஷோவிற்குச் சென்றேன்.. அப்போது பிட்டு படங்கள் மட்டுமே அந்த ஷோவில் ஓட்டுவார்கள்.. ஓட்டினார்கள்.. கண் குளிர பார்த்துவிட்டு மிக சாவகாசமாக போய்த் தொலைவோம் என்ற நினைப்பிலேயே 11 மணிக்கு வீட்டுக் கதவைத் தட்டினேன்..!

உள்ளேயிருந்து என் அம்மாவின் குரல்தான்.. “செல்லா.. தம்பி வந்துட்டான்.. தம்பி வந்துட்டான்.. கதவைத் திறடி..” என்றது அவசரமான அந்தக் குரல்.. கதவைத் திறந்த அக்காள் தலையில் நொங்கு நொங்கென்று கொட்டினாள்.. “சனியனே.. சனியனே.. ஏன் எங்க உயிரை எடுக்குற..? உங்க ஆத்தாளுக்கு எவ பதில் சொல்றது..? வந்து தொலைய வேண்டியதுதானே..?” என்றது. படுக்கைகள் விரித்து தூங்கிப் போயிருந்தவர்களை எழுப்பியிருக்கிறேன் என்பது புரிந்த்து. இன்னொரு மூலையில் கட்டிலில் படுத்திருந்த அண்ணன் எழுந்து காலைத் தொங்கபோட்டபடியே என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அருகிலேயே தரையில் காலை நீட்டி அமர்ந்திருந்த எனது அம்மாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் அம்மாவின் குரல் வீடு முழுக்க திரும்பத் திரும்ப ஒலித்தது.. “சோறு எடுத்து வைடி.. புள்ள பசியோட வந்திருப்பான்..” என்றது.. அந்த ஒரு நொடிதான்.. எனக்குள் ஒரு மிருக வெறி.. அடுத்த 5 நிமிடங்களுக்கு எனது அம்மாவைப் பார்த்து எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு கத்தித் தீர்த்தேன்.. 

சனியன், பிசாசு, பேய் என்று என்னென்ன அடைமொழி இருக்கோ அத்தனையையும் சொல்லி.. “ஏன் என் உசிரை எடுக்குற..? பார்க்கணும்.. பார்க்கணும்னு ஏன் என்னைக் கொல்லுற.. மதுரைல நிம்மதியா இருந்தேன்.. அதான் வந்துட்டேன்ல.. என்ன செய்யணும்.. சொல்லு.. சொல்லு..?” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து அராஜகம் செய்தேன்.. எனது அண்ணன் எனது கையை கஷ்டப்பட்டு விலக்கி என்னைக் கீழே தள்ளிவிட்டார்..

எனது அம்மா தனது கண்ணாடியைக் கழட்டிவிட்டு கண்களை முந்தானையில் துடைத்துக் கொண்டு மீண்டும் அக்காவிடம் “தட்டு எடுத்து வைடி. சாப்பிட்ட்டும்...” என்று சொல்லிவிட்டு, “சாப்பிடுறா.. சாப்பிடு தம்பி.. ராசா சாப்பிடு..” என்றார். இப்போதும் என் தலையில் அடித்துக் கொண்டு, “சாப்பிடு.. சாப்பிடு.. சாப்பிடு.. ஏன் இப்படி உசிரை எடுக்குற..? சாப்பிடவா நான் பொறந்தேன்.. சனியனே உசிரை எடுக்காத.. காலைல சரவணான்னு எழுப்பின கொன்னே புடுவேன்..” என்று சொன்னபடியே விரித்திருந்த பாயில் மல்லாந்தேன்..!

எனக்கு இப்போதும் நியாபகம் இருக்கிறது. அன்றைய இரவில் நான் சாப்பிட்ட பின்பு எனது அம்மாவை வலுக்கட்டாயமாக எழுப்பி அண்ணன் ஒரு பக்கம், அக்காள் ஒரு பக்கமாக கெஞ்சு, கெஞ்சென்று கெஞ்சி சாப்பிட வைத்தார்கள்.. என்னைப் பார்த்தபடியே ஏக்கத்துடன் இருந்த அந்த சுருங்கிப் போன முகத் தோல்களை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு என் முதுகைக் காட்டிவிட்டு திரும்பிப் படுத்தேன்..!  இப்படித்தான் தொடர்ந்திருந்தது எனக்கும், எனது அம்மாவுக்குமான பாசப் போராட்டம். 

சாப்பிடு.. தூங்கு என்ற இரண்டு வார்த்தைகளைத் தவிர வேறு எதையும் என்னிடம் சொல்ல விரும்பாத ஒரு தாயை நான் அப்போதைக்கு விரும்பாதவன்.. ஆனால் இப்போது..?

இன்று நீண்ட நாட்கள் கழித்து எனது தாயோடு நெருங்கிப் பழகிய ஒரு புண்ணிய ஆத்மாவிடம் சிறிது நேரம் பேசினேன்..! எனது அம்மாவைப் பற்றிச் சொன்ன அவர், “பாவம்டா உங்கம்மா.. அவளுக்கு ஒண்ணுமே தெரியாது.. உலகமே தெரியாது.. பாசக்காரி.. நீங்கதான் அவளைப் புரிஞ்சுக்கலை..” என்றார்..

அந்த வார்த்தைகள் என் நெஞ்சில் முள்ளாய் குத்தியது.. வீடு வந்து சேரும்வரையில் நான் என் நினைவில் இல்லை.. இப்போதுதான் கொஞ்சம் கூடுதலாக நினைத்துப் பார்க்கிறேன்.. எத்தனை பாசம்..? எத்தனை அன்பு..? எத்தனை ஈர்ப்பு..? எத்தனை கனிவு..? அத்தனையையும் கலந்து கொடுத்த ஒரு தெய்வத்தையே நான் மதிக்காமல்தான் வளர்ந்திருக்கிறேன்.. வந்திருக்கிறேன்..! புரிந்து கொள்ளாமல்தான் இருந்திருக்கிறேன்..!

பெற்றவர்களின் ஆசி எல்லாவற்றுக்கும் வேண்டும் என்பார்கள். நான் எல்லாவிதத்திலும் அவர்களை உதாசீனப்படுத்தியவன்.. கஷ்டப்படுத்தியவன்.. மரணத் தருவாயில் இருந்த எனது தாய், தந்தையர் இருவரிடமும் இரு வேறு சந்தர்ப்பங்களில் நேருக்கு நேராகவே கேட்டிருக்கிறேன்.. “செத்துத் தொலையக் கூடாதா..?” என்று..! 

அவர்களுடைய இறுதிக் கட்டத்தில்தான் அவர்களுடன் நெருக்கமாகி, அவர்கள் இருக்கப் போவதே கொஞ்ச நாள்தான்.. பாவம் என்று பலரும் சொன்ன பின்புதான் தாய், தந்தையர் என்பதையும் தாண்டி ஒரு உயிர் என்ற பிற்போக்குத்தனமான பார்வையுடன் பார்த்திருந்த எனது கேடுகெட்டத்தனத்தை இன்றைக்கு நினைத்தாலும் வெட்கமாகத்தான் இருக்கிறது..!

அத்தனைக்கும் இப்போது படுகிறேன்..! நினைத்துப் பார்த்தால் இங்கேதான் ஜெயிக்கிறான் இறைவன்..! பட்டுத் திருந்து.. படாமல் போனால் கிடைக்காது புத்தி என்கிறான் இறைவன்..!  இருக்கும்போது அதன் அருமை தெரியவில்லை. இல்லாதபோதுதான் புரிகிறது..! இன்றைக்கு ஒரு வேளை.. ஒரு வாய் சாப்பிட்டியா என்று கேட்கவே எனக்கு நாதியில்லை..! “தூங்குனியா..? உடம்பு சரியில்லையா..?” என்று அன்பை கொட்டவும் ஆளில்லை..! செத்துப் போனால்கூட தூக்கிப் போடவும் ஆளில்லை.. எத்தனை, எத்தனை விஷத்தைக் வார்த்தைகளில் தோய்த்து வீசியிருக்கிறேன் எனது தாயை நோக்கி.. அத்தனைக்குமான பதிலடிகளை இப்போது வட்டியும் முதலுமாக வாங்கிக் கொண்டிருக்கிறேன்..! எத்தனையோ முறைகள்.. எப்படியெப்படியோ திட்டமிட்டும் எதுவும், எதிலும் ஜெயிக்க முடியவில்லை. தோற்றுக் கொண்டேயிருக்கிறேன் ஒவ்வொரு விஷயத்திலும்..! தாயின் ஆசிகளே இல்லையே.. கிடைத்திருக்காதே.. பின்பு எப்படி வரும் நல்ல வாழ்க்கை..?

ஆண்டவனின் விளையாட்டில் எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.. அத்தனை பேருக்கும் அவன் அளந்துதான் கொடுத்திருக்கிறான்.. கொடுக்கிறான் என்பது இப்போது யோசித்துப் பார்த்தாலும் புரிகிறது.. நான் யார், யாரையோ இப்படி சொன்னேன்.. அப்போது நான் சொன்னது, இப்போது எனக்கே திருப்பியடிக்கிறது..! 

வேறு வழியில்லை.. மனதை சாந்தப்படுத்த யாரிடமாவது பேச வேண்டும்போல் உள்ளது. நான் பேசுவதையும், மன்றாடுவதையும், மன்னிப்பு கேட்பதையும் தெரிந்து கொள்ளவும் ஆள் இல்லையே.. அதனால்தான் இந்த எழுத்து..! 

தாயே.. கடைசி முறையாகக் கேட்கிறேன்.. மன்னித்து விடு..!



கழுகு-சினிமா விமர்சனம்

16-03-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் பெயருக்கும் படத்திற்கும் எந்தச் சம்பந்தமில்லை..! ஆனாலும் ஏதாவது வித்தியாசமாக வைத்தால்தான் படம் போணியாகும் என்பதால் வைத்திருக்கிறார்கள்..!

ஹனிமூன் கொண்டாட மூணாறு செல்பவர்கள் உண்டு. இன்பச் சுற்றுலா செல்பவர்களும் உண்டு.. கணவரைக் கொலை செய்ய மனைவிகளும், மனைவியைக் கொலை செய்ய கணவன்களும், மனைவியின் கள்ளக் காதலனை கொலை செய்ய கணவர்மார்களும், கணவரின் கள்ளக்காதலியை கொலை செய்ய மனைவிமார்களும் மூணாறுக்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு.. இவர்களில்லாமல் எப்போதுமே மாதத்திற்கு ஒன்றாக தேடி வந்து விழுபவர்கள் காதலர்கள்தான்..!

 

இப்படி மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்பவர்களையும், கொலை செய்யப்படுவர்களையும் பிணமாகத் தூக்கி வரும் வேலையைச் செய்து வரும் கூட்டத்தில் ஹீரோவான கிருஷ்ணா, கருணாஸ், தம்பி இராமையா, மற்றொரு ஊமை கேரக்டரும் அடக்கம்..!

ஹீரோயின் பிந்து மாதவியின் தங்கை, தனது காதலனுடன் தற்கொலை செய்து கொள்ள.. அதில் ஹீரோயினின் தங்கையின் உடலை மட்டும் தேடியெடுத்து வருகிறார்கள். அதில் கவரப்பட்ட பிந்துவிக்கு ஹீரோவின் முரட்டு குணம், குடிகாரன் பட்டம் எல்லாம் வழக்கம்போல கவர்ந்துவிட ஹீரோவை லுக்கு விடுகிறார். அதற்குள்ளாக தங்கையின் உடலில் இருந்து உருவப்பட்ட மோதிரத்தையும், செயினையும் கிருஷ்ணா திருப்பிக் கொடுத்ததால் லுக்கு சைட்டாகி பின்பு லவ்வாகிவிடுகிறது.. இடையில் தேயிலை எஸ்டேட் முதலாளியான ஜெயப்பிரகாஷை ஒரு வழக்கில் இந்த டீம் சிக்க வைத்துவிட.. ஜெயப்பிரகாஷ் 1990 பட வில்லன் மாதிரி நான் வெளில வர்றதுக்குள்ள முடிச்சிரு என்று 4 பேருக்கும் சங்கு ஊதுகிறார்..! அது முடிந்ததா இல்லையா என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..!

கிருஷ்ணா நடிக்கும் 3-வது படம் இது. முடிந்த அளவுக்கு அவரது முகவெட்டுக்கு ஏற்ற வேடம்தான் என்பதால் சமாளித்திருக்கிறார்..! லவ்வுன்னா என்னன்னுகூட தெரியாத  அப்பாவி என்ற ஸ்கெட்ச்சுதான் கொஞ்சம் ஓவரா இருக்கு.. எப்பவும் பீடியை வலித்துக் கொண்டு ஒரே பாவனையுடன் இருப்பது கொஞ்சம் சலிப்புத் தட்டுகிறது..!

ஏதோ பிந்து மாதவி இருப்பதால் பாடல் காட்சிகளில் ஒரு அட்ராக்ஷன் இருக்குன்னு நினைக்கிறேன்..! ஆனாலும் பல காட்சிகளில் முணுக்கென்றால் அழுக வைப்பது போல் நடிக்க வைத்திருப்பது சகிக்கவில்லை..! தங்கையிடம் கொடுத்த மோதிரத்தை கிருஷ்ணாவின் கையில் பார்த்தவுடன் அதில் தனது தலையை வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் போகும் அந்தக் காட்சி ஒரு கிளாஸ்..! பிந்துவின் திரும்பிப் பார்க்கும் அந்த ஷாட் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.. விபத்தில் சிக்கியது கிருஷ்ணாதானோ என்றெண்ணி அவருடைய பதட்டமும், ஓட்டமும், கடைசியில் அவரைப் பார்த்தவுடன் காட்டும் ஆக்சனும் அருமை..! கேமிராவும், இயக்கமும் ஏதோ ஒன்றைச் செய்கின்ற இந்த ஒரு இடத்தில். கிருஷ்ணாவின் மன மாற்றத்தை உண்டாக்கியது இதுதான் என்பதால் கனகச்சிதம்..! பிந்துவிக்கு இன்னும் சிறந்த இயக்குநர்கள் கிடைத்து ஒரு ரவுண்ட்டு வந்தால், ஒண்ணுமே இல்லாமல் கோடிகளைச் சுருட்டும் தமன்னா போன்ற சப்போர்ட்டாக்களை ஓரம்கட்டலாம்..!

தம்பி ராமையாவும், கருணாஸும்தான் கிருஷ்ணாவை பாதி காப்பாற்றியிருக்கிறார்கள். கருணாஸின் இந்த குணச்சித்திர வேட முடிவு பாராட்டுக்குரியதுதான்.. அம்பாசமுத்திரம் அம்பானிக்கு பிறகு அடுத்தப் படத்துக்கு பூஜையை போட்டுவிட்டு தொடர்ந்தால் என்ன நடக்கும் என்பது தெரியுமாததால்  புத்திசாலித்தனமாக வரும் வேடத்தைத் தொடர்வோம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்..! இதையே தொடர்ந்தால் நலமாக இருக்கும்..!

தம்பி ராமையாவின் நடிப்பு வழக்கம்போலத்தான்.. அவருடைய தலையை வைத்துச் சொல்லப்படும் வசனங்களை எந்தப் படத்தில்தான் நிறுத்தப் போகிறார்களோ தெரியவில்லை..? தொடர்ந்து கேட்க எரிச்சலாக இருக்கிறது..! 

ஜெயப்பிரகாஷ் போலீஸ் ஸ்டேஷனில் கையொப்பமிடும் அளவுக்கு குற்றவாளியாக இருக்கிறார் என்பதை முதல் காட்சிலேயே பதிவு செய்யும் இயக்குநர், அவர் மீதான பார்வையை அழுத்தமாக பதிவு செய்யவில்லை..! கடத்தல் தொழில் செய்பவராக இருக்கட்டும்..! லோக்கல் போலீஸுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை என்பது தனுஷ்கோடியில் இருப்பவனுக்குத் தெரியும்.. அப்படியிருக்க.. ஏதோ அவர் யாருக்குமே தெரியாமல் செய்கிறார் என்பது போல் காட்டி படத்தின் முடிவுக்கு அவரை பயன்படுத்திருப்பது வீண்தான்..!

இந்த நால்வர் கூட்டணியில் கடைசி ஆள் ஊமை என்பதே இடைவேளைக்கு பின்புதான் தெரிகிறது..! இந்த சஸ்பென்ஸ் எதற்கும் உதவவில்லை என்பது சோகம்தான்..! தங்களுக்கு உதவியாக இருப்பவர்களையே போலீஸ் ஸ்டேஷனில் வைத்து வெளுத்துக் கட்டுவதும், இன்ஸ்பெக்டர் அவர்களைவிடச் சொல்லும் காரணமும் ஏற்கக் கூடியதே.. தொடர்ச்சியான காட்சிகளில் போலீஸ் திருடன் விளையாட்டு மாதிரி இருவரும் ஒருவருக்கொருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்வதெல்லாம் ஏக பொருத்தம்தான்..! 

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஒளிப்பதிவுதான்.. மூணாறு என்பதால் இயற்கை தந்த அழகோடு, கேமிராமேன் சத்யா படமாக்கிய விதமும் காட்சிக்கு காட்சி கவிதையாக இருக்கிறது..! இப்போது வரக் கூடிய அனைத்து படங்களிலுமே ஒளிப்பதிவை ரம்மியமாகத்தான் செய்து வைக்கிறார்கள். ஆனால் கதையில்..? இசை யுவன்சங்கர்ராஜா...! ஆத்தாடி மனசுதான் பாடலும், பாதகத்தி கண்ணுபட்டு பாடலும் கண்ணைத் தொடுகின்றன..! பாடல் காட்சியிலேயே காதல் காட்சிகளை வரிசைப்படுத்தி சென்று கொண்டு கொஞ்சம் மூச்சுவிட வைத்திருக்கிறார் இயக்குநர்..!

படத்தின் துவக்கத்திலேயே கருணாஸ் சொல்லும் ஒரு வசனத்தின் மூலமே படத்தின் கிளைமாக்ஸ் புரிந்துவிட்டது. இது என் போன்றோருக்கு மட்டுமே..! வெகுஜன ரசிகர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. ஆனாலும் இறுதிக் காட்சி மனதுக்குள் பதியும் அளவுக்கு எடுக்கப்படவில்லை என்பது மட்டும் தெரிகிறது..! 

இப்போதைய டிரெண்ட்டில் ஜெயிக்க வேண்டும். காதல் தேவை. நண்பர்கள் தேவை.. சிறந்த ஒளிப்பதிவும், பாடல்களும் இருக்கின்றன.. ஆனால் இதையும் தாண்டிய ஏதோ ஒன்று தேவை.. அது மனதிற்குள் படத்தை பதிய வைக்க இருந்த இடங்களிலெல்லாம் நகைச்சுவை போல தாவிச் சென்றுள்ளது படத்தின் மிகப் பெரிய மைனஸ். 

எழுந்திரிக்க முடியாமல் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் கிருஷ்ணா ஒரு கப் தண்ணி பட்டவுடன் டி.ராஜேந்தர் அளவுக்குத் தெளிவாக, தெனாவெட்டாக பேசுவதெல்லாம் ஒட்டவேயில்லை.. அதேபோல் காரணமேயில்லாமல் பிந்துவிடம் முதலில் அலட்டிக் கொள்வதும், பின்பு நண்பர்களின் நிலைமை பார்த்து உடனுக்குடன் ஆவேசப்படுவதும் படத்தை முடிக்கும் அவசரத்தில் திரைக்கதை இருப்பதுபோல் தெரிகிறது..!

பணம் இருக்கிறது.. படம் எடுக்கலாம்.. திறமைசாலி இயக்குநர் கிடைத்துவிட்டால் போதும்.. ஆனாலும் இதற்கு மேலும் கண்ணுக்குத் தெரியாத ஒன்று சினிமாவுலகத்துக்குத் தேவை.. அதை அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம்.. அல்லது முருகனின் ஆசி என்றும் சொல்லலாம்.. அதில் ஒன்று இவர்களுக்குக் கிடைத்தால் இயக்குநரும், கிருஷ்ணாவும் பிழைத்துக் கொள்வார்கள்..! 

சினிமா 360 டிகிரி..!

13-03-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அனைத்து சினிமா நிருபர்களையும் நேற்றைய மதிய நேரத்தில் அல்லலோகப்படுத்திவிட்டார்கள் 'அலெக்ஸ் பாண்டியன்' படக் குழுவினர். கிரீன் ஸ்டூடியோ சார்பில் தான் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங்கை நிறுத்த சதி நடக்கிறது என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பொங்கித் தீர்த்துவிட்டார்.

 

சென்ற வாரம்தான் அவருக்கும் அமீருக்கும் இடையில் 'பருத்தி வீரன்' தெலுங்கு டப்பிங் விஷயமாக மோதல் முட்டிக் கொண்டது.. டப்பிங் செய்வதற்காக கதை ஆசிரியருக்கு தரப்பட வேண்டிய பங்குத் தொகை தனக்குத் தரப்படவில்லை என்பதால் படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்று அமீர் ஹைதராபாத்துக்கே சென்று அங்கேயுள்ள பெப்சி அமைப்பினரிடமும் பேசியும் பலனளிக்கவில்லை. படம் ரிலீஸாகிவிட்டதாம்..! 

அட்வான்ஸ் வாங்கிய தியேட்டர் உரிமையாளர்களிடம் பணத்தைத் திருப்பித் தர ஞானவேல்ராஜா மறுத்ததால், வேறு வழியில்லாமல் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டியிருந்ததாக தெலுங்குத் திரையுலகம் கைவிரித்துச் சொல்லிவிட்டது.. 'அரவான்' படத்திற்காக வசந்தபாலனுக்கு இருந்த 26 லட்சம் ரூபாய் சம்பளப் பாக்கியை ஒரே நாளில் பஞ்சாயத்து பேசி வாங்கிக் கொடுத்த எனக்கு, என் சம்பளத்தை வாங்க முடியவில்லையே என்று பெரிதும் வருத்தப்பட்டார் அமீர்.

இந்த நிலைமையில் 2 நாட்களுக்கு முன்பிருந்தே 'அலெக்ஸ்பாண்டியன்' படப்பிடிப்புத் தளத்தில் லைட்மேன்கள், கேமிரா அஸிஸ்டெண்ட்டுகள், கிரேன் ஆபரேட்டர்கள் மூவரணியாக சேர்ந்து சின்னச் சின்னப் பிரச்சினைகளைச் செய்து வந்திருக்கிறார்கள். நேற்று முதல் நாள் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்பு அனுமதி பெற்று ஷூட்டிங்கை வைத்திருந்தும், அரை மணி நேரம் கழித்துதான் ஸ்பாட்டுக்கே வந்திருக்கிறார்கள் தொழிலாளர்கள். நேற்றே பெப்சியுடன் பேசி பணி செய்ய வைத்திருக்கிறார்கள். நேற்று காலை 6 மணி ஷூட்டிங்கிற்கு 10 மணிக்கு பணிக்கு வந்தும், வேலை செய்யக் கூடாது என்று எங்களது சங்கத்தில் சொல்லிட்டாங்க ஸார் என்று தொழிலாளர்களே சொல்லிவிட்டு அமைதியாக ஓரம்கட்டி உட்கார்ந்துவிட மதிய நேரத்தில் கொளுத்தும் வெயிலில் விமான நிலையம் அருகேயுள்ள ஷூட்டிங் வீட்டில் பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டார் ஞானவேல்ராஜா.

 

இன்றைக்கு நடக்கின்ற பல ஷூட்டிங்குகள் மத்தியில் தனது படம் மட்டுமே நிறுத்தப்பட்டிருப்பதால் இதில் உள்குத்து வேலை நடந்திருக்கிறது என்கிறார் ஞானவேல்ராஜா. அமீரிடமும், பெப்சி செயலாளர் சிவாவிடமும் தயாரிப்பாளர்கள் தரப்பின் சார்பில் பேசியிருக்கிறார்கள். எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று அமீர் சொன்னாலும், அவர் மீது பாசப்பிணைப்பில் இருக்கும் தொழிலாளர் சங்கத்தினரே தன்னிச்சையாக செய்திருக்கும் வேலை இது என்கிறார்கள் சிலர்.. பெப்சியின் சார்பில் ஷூட்டிங் தொடரும் என்று வாக்குறுதி அளித்தாலும், இன்று மதியத்திற்கு மேல் நடக்கவில்லை. மட்டன் பிரியாணியோடு அனைவருக்கும் பிரியாவிடை கொடுத்துவிட்டார்கள்..!
வரும் புதன்கிழமை பெப்சி தொழிலாளர்களுடனான இறுதிக் கட்ட சம்பளப் பேச்சுவார்த்தைக்கு போக வேண்டிய சூழலில் இந்தப் பிரச்சினையும் புதிதாகக் கிளம்பியிருக்க, இது இப்போதை முடியாது போலிருக்கிறது...!

-----------------------------

'உடும்பன்' நல்ல கதை. திருடனும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருப்பது.. பள்ளிகளின் படிப்புக் கட்டணக் கொள்ளை.. என்று நல்ல பிளாட்பார்ம் இருந்தது. கருப்பசாமி பாடல் கலக்கலோ கலக்கல். எல்லாம் இருந்தும், எல்லாம் இருந்தும்.. இயக்கம் சரியில்லாமல் படமும் எடுபடாமல் போய்விட்டது.. 

 

இதே கதையை வேறு இயக்கம் தெரிந்த இயக்குநர்களிடம் கொடுத்து எடுக்கச் சொல்லியிருந்தால் நிச்சயம் பெயரும், புகழும் கிடைத்திருக்கும். தயாரிப்பாளர்களில் சிலர் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. “நானே இயக்கம் செய்யணும்னு நினைச்சேன்..” என்கிறார் இயக்குநர்.. நமக்குத்தான் மனசு கேக்க மாட்டேங்குது.. ஒரு நல்ல படத்திற்கான ஸ்கோப் போச்சே என்று..!!!

-----------------------------

'யாருக்கு தெரியும்' படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் ஹீரோயின் சஞ்சனா சிங் போட்டிருந்த காஸ்ட்யூம்ஸை பார்த்தவர்களெல்லாம் நெஞ்சடைத்து போனார்கள்.. கேமிராமேன்களுக்கு மட்டும் கொண்டாட்டமோ கொண்டாட்டம்..! கண்ணால் ஜொள்ளுவிட்டது, பலருக்கும் வாயில் வெளியே வந்தது.. ஆனாலும் அம்மணிக்கு எந்தக் கவலையும் இல்லையாம்.. இதனைவிட கம்மி டிரெஸ்ஸிலெல்லாம் படங்களில் நடித்திருக்கிறாராம்..! ம்.. கன்னடத்துக்காரங்க மச்சக்காரங்கதான்..! 

 

5 பேர் கொண்ட குழுவினர் ஒரு வீட்டுக்குள் சிக்கிக் கொள்கின்றனர். வெளியேற வாய்ப்பே இல்லை.. ஒரு நாள் தாமதமானாலும் உயிர் போகும் அபாயம். எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதையாம்.. ஏதாவது ஹாலிவுட் படம் நியாபகத்திற்கு வந்தால் அதற்கு கொம்பனி பொறுப்பல்ல..!

------------------------------

"செங்காத்து பூமியிலே" படத்தின் இயக்குநர் ரத்னகுமார். சினிமாவுலகில் பழுத்த அனுபவசாலி. பாரதிராஜாவின் கதாசிரியர்களில் ஒருவர். படத்தின் பிரமோஷன் செய்வதற்கு டிவிக்களுக்கு டிரெயிலர், பாடல்கள், படக் காட்சிகளை கொடுத்தால்தான் பேட்டியெடுத்து ஒளிபரப்ப முடியும் என்றதற்கு “அப்படியா..? எத்தனை கேஸட் வேணும்..? அதுல என்னென்ன இருக்கணும்..? எப்போ கொடுக்கணும்..?” என்றெல்லாம் கேட்டு பலருக்கும் பயத்தை வரவழைத்துவிட்டார்..! 

 

இத்தனை வருட அனுபவம் உள்ள இவருக்கே படத்தின் பிரமோஷன் பற்றி தெரியவில்லை என்றால், புதியவர்களைப் பற்றி என்ன சொல்ல..? இதுக்குத்தான் அடிக்கடி சினிமா நிகழ்ச்சிகளுக்கு வரணும்.. கலந்துக்கணும்ன்றது.. படம் ஒரு முறை பார்ப்பது போல் இருந்தும் பெயரெடுக்கவில்லையே என்பதில் அவரைவிட சினிமாவுலகத்தினருக்கே ரொம்பவே வருத்தம்..! 

-------------------------------

டிவிக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. படங்களின் பிரஸ் மீட்டில் ஒரே விஷயத்தை 15 டிவிக்களின் முன்பும் சொல்ல வேண்டியிருக்கிறது. “அதான் மேடையில பேசுறோமே.. அதை யூஸ் பண்ணிக்குங்களேன்..” என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறார்கள் நட்சத்திரங்கள். நோ யூஸ்.. சேனல்கள் கேட்டபாடில்லை. தனிப்பட்ட பேட்டிகள் இருந்தால்தான் மக்கள் மத்தியில் சேனல்களுக்கு மரியாதை இருக்கும் என்று இவர்கள் சொல்ல.. இவங்க போதைக்கு நாம ஊறுகாயா என்று தவிப்பில் இருக்கிறார்கள் பி.ஆர்.ஓ.க்கள்..!

 

இவர்களையும் தாண்டி பத்திரிகை நிருபர்கள், இணையத்தள பத்திரிகை நிருபர்கள், எஃப்.எம்.ரேடியோக்களின் நிருபர்கள் என்று கிட்டத்தட்ட 30 தடவைக்கும் மேல் சொல்லிச் சொல்லி வெறுப்பாகும் நிலைமைக்கு வந்துவிட்டார்கள். தற்போது இணையத்தளங்கள், எஃப்.எம்.களை பிரஸ் மீட்டுக்கு அழைக்காமல் விட்டுவிடலாமா என்று யோசித்து வருகிறார்களாம்..!

 

'தோனி' படத்தின் பிரஸ் மீட்டுக்கு வந்த இசைஞானி, கூட்டத்தை பார்த்ததும் ஐயோ சாமி.. ஆளை விடுங்கப்பா என்று அரங்கத்திற்குள் ஓடிவிட்டார். பின்பு அவர் காலில் விழுகாத குறையாக கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வந்தார்கள். 4 முறை கொஞ்சம் கொஞ்சமாக கேமிராக்களை உள்ளே அனுப்பி ஒரு வழியாக பேட்டியை நிறைவு செய்தார் இசைஞானி. “இசையமைக்கிறதுகூட கஷ்டமில்லப்பா.. உங்க எல்லார்கிட்டேயும் ஒரே விஷயத்தை திருப்பித் திருப்பிச் சொல்றது இருக்கே..” என்று வார்த்தையைக்கூட முடிக்காமல் தனது டிரேட் மார்க் சிரிப்போடு ஓடி தப்பித்தார் இசைஞானி..!

--------------------------

“நான் ஈ” இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியை அப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் சந்தித்தேன்.. “நான் ஈ” படத்தை பற்றி தனக்குத் தெரிந்த தமிழ் மற்றும் சரளமான ஆங்கிலத்தில் விளாசினார். படத்தில் “ஈ”-தான் ஹீரோவாம்.. முற்பிறவிக் கதையாம்..! “ஈ மேல உங்களுக்கு ஏன் ஸார் இவ்ளோ கோபம்?” என்று கிண்டலடித்தபோதும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். டென்ஷனாகாத அவருடைய பேச்சும், இயல்பும் பத்திரிகையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.. 

 

படத்தின் பட்ஜெட் 40 கோடி. அதில் 20 கோடியை கிராபிக்ஸுக்கே செலவழித்துள்ளார்கள். படத்தின் தயாரிப்பாளர்கள் பிவிபி கம்பெனி. விக்ரமின் ராஜபாட்டை படத்தைத் தயாரித்து ஓய்ந்தவர்கள். அடுத்து கமல்ஹாசனின் 'விஸ்வரூப'த்தைத் தயாரிக்கிறார்கள். செல்வராகவனின் 'இரண்டாம் உலகமும்' இவர்களது தயாரிப்புதான். பாலாவின் தற்போதைய படத்தையும் தயாரிப்பது இவர்களே.. மிகப் பெரிய துட்டு பார்ட்டி என்பதால் எதற்கும் கவலையில்லை. 

இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது.  சந்தானம், சமந்தா என்ற இரண்டு மார்க்கெட்டிங் ஸ்கில்லுகள் இருப்பதால் ஏக எதிர்பார்ப்பு.. இயக்குநரிடம் கிடைத்த சந்தர்ப்பத்தில் பேசும்போது “தமிழ் டெக்னீஷியன்களை அடிச்சுக்கவே முடியாது. ராத்திரி 3 மணிக்கு எழுப்பி ஷூட் என்று சொன்னாலும் சட்டுன்னு ரெடியாகுறாங்க.. இந்தியால எங்கேயும் இவர்களை மாதிரி பார்க்கவே முடியாது..” என்றார். 

 

என் மனதுக்குள் எப்போதுமே இருக்கும் அந்தக் கேள்வியைக் கேட்டேன். புருவத்தை உயர்த்தினார். உதட்டைப் பிதுக்கினார். “இந்த விஷயத்தையே இப்பத்தான் நான் கேள்விப்படுறேன்.. ஸாரி.. எனக்குத் தெரியலையே. நான் என்ன பதில் சொல்றது..?” என்றார். ம்.. என்னத்த சொல்றது..? 

-----------------------------

படம் ஷூட்டிங்கே ஆரம்பிக்கலை. 'காதல் தீவு' படத்தின் பெயர். அதுக்குள்ள படத்துல நடிச்சவங்களை மட்டும் அறிமுகப்படுத்தி வைக்க ஒரு விழாவையே ஏற்பாடு பண்ணிட்டாங்க. ஸ்லம்டாக் மில்லினியரில் சின்ன வயது ஹீரோயினாக(விபச்சார விடுதியில் நடனமாடும் பெண்) தான்வி லோன்கர் இதில் ஹீரோயினாக அறிமுகம். 14 வயசுதான் இருக்கும்னு நினைக்கிறேன்.. 

 

“கதைக்கு இவங்கதான் பொருத்தமா இருந்தாங்க..” என்றார் இயக்குநர். “திடீர்ன்னு ஒரு நாள் டிவி பார்க்கும்போது இந்தப் பொண்ணு நடிச்ச ஸ்லம்டாக் மில்லினியர் ஓடிக்கிட்டிருந்துச்சு. இப்போ இந்தப் பொண்ணு கொஞ்சம் வளர்ந்திருக்குமே.. நம்ம கேரக்டருக்கு பொருத்தமா இருக்கும்னு பாம்பேவரைக்கும் போய் பிடிச்சிட்டேன்..” என்றார் இயக்குநர். அந்தப் பொண்ணோ, “நான் நடிச்ச கன்னடப் படத்துக்கு இயக்குநர்தான் வசனம் எழுதினாரு. ஷூட்டிங் ஸ்பாட்ல என்னை பார்த்திருக்காரு. அந்தப் பழக்கத்துல அந்தப் பட ஷூட்டிங் சமயத்துலேயே, தமிழ்ல நான் எடுக்குற படத்துக்கு நீதான் ஹீரோயின்னு சொல்லி கூப்பிட்டுட்டு வந்துட்டாரு..” என்றார்..
ஒரு செலக்ஷனுக்கு எத்தனை கதைகளப்பா..???

----------------------------------

வில்லியம் ஷேக்ஸ்பியர்ன்னு ஒரு மெகா எழுத்தாளர் இங்கிலாந்துல இருந்தார்ன்னு உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும். அவர் எழுதுன மெக்பத் என்ற நாடகத்தின் பேரை மட்டும் சின்ன வயசுல இருந்து தெரிஞ்சு வைச்சிருப்பீங்க. அந்த மெக்பத் நாடகத்தை சமீபத்துல டிவி நடிகர்கள் மற்றும் சினிமா இயக்குநர்களை நடிக்க வைச்சு அதையும் ஷூட் செஞ்சிருக்காங்க..! 

 

போஸ் வெங்கட், மு.களஞ்சியம், நடிகர் ஆதி, மீரா கதிரவன் நடிச்சிருக்காங்க.. இந்தக் கதையின் நாயகியான லேடி மெக்பெத்தா ஆக்ட்டிங் கொடுத்திருக்கிறது தமிழச்சி தங்கபாண்டியன். அவங்களோட ஆதர்ச கேரக்டராம் இது.. அதுனால ஆர்வத்துடன் நடிச்சிருக்காங்க.. இந்த நாடகத்தோட டிரெயிலரை வெளியிட்டிருக்காங்க.. இதுவே 21 நிமிஷம் இருக்கு..! முழுசும் வரட்டும் பார்ப்போம்..!

-------------------------------------

'மாயவரம்' படத்தின் இயக்குநர் நேசம் முரளி மகா நம்பிக்கைக்காரர். ஒரு உதாரணம் சொல்லட்டுமா..? 

 

“இந்தப் படம் ரஜினி படத்துக்கு ஈக்குவலா வசூல் அள்ளும் ஸார்.. ஒரு ரஜினி படத்துல என்னென்ன இருக்குமோ அதெல்லாம் இந்தப் படத்துலேயும் இருக்கு. அந்த அளவுக்கு வசூலை அள்ளத்தான் போகுது.. ஏன்னா ரஜினி படத்தோட வசூல் சூட்சுமத்தை நான் கத்துக்கிட்டேன் ஸார்.. அதையேதான் இதுல ஒரு சதவிகிதம்கூட குறைவில்லாம செஞ்சிருக்கேன்..” என்றார்.. தன்னம்பிக்கை தேவைதான்.. ஆனா இந்த அளவுக்கா..?

இது ஒரு பக்கம் இருக்க.. படத்தின் ஹீரோவான இயக்குநர் ஸெல்வன், பாண்டிச்சேரி அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி உயிர் போய் மீண்டிருக்கிறார். இன்னமும் பேச முடியவில்லையாம்.. பாவம்.. பொழைச்சு வரட்டும்..!

---------------------------------

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென் ஆற்காடு, வட ஆற்காடு, பாண்டிச்சேரி வட்டார சினிமா தியேட்டர் அதிபர்கள் ஒண்ணா கூடி புதுசா ஒரு சங்கத்தை ஆரம்பிச்சிருக்காங்க. ஜிம்கானா கிளப்பில் நடந்த இந்த விழாவைத் துவக்கி வைக்க வந்தாரு சிறுத்தை கார்த்தி. 

காரை விட்டு இறங்கினவரை பார்த்தவுடனேயே விழா ஏற்பாட்டாளர்களுக்கு பொசுக்குன்னு ஆயிப் போச்சு. காலர் வைக்காத டீ ஷர்ட் போட்டு வந்தவரை பார்த்தவுடனேயே ஒரு நிமிஷம் சொக்கிப் போன வரவேற்பாளர்கள், அந்த ஒரே நிமிஷத்துல சுதாரிச்சு, “ஸார்.. ஸார்..” என்று அருகில் ஓடிப் போய் விஷயத்தை உடைக்க.. கார்த்தியின் முகம் போன போக்கை பார்க்கணுமே..? தனது ரெடிமேட் சிரிப்பை உதிர்த்து.. “என்னாங்க இது.. நான் இதுவரைக்கும் கேள்விப்பட்டதே இல்லை..” என்றார். “இல்ல ஸார்.. டீ ஷர்ட், வேஷ்டி கட்டிக்கிட்டு இங்க யாரும் உள்ள வரக் கூடாது.. இது ரொம்ப வருஷமா இங்க இருக்குற ரூல்ஸ். உங்ககிட்ட சொல்ல மறந்திட்டோம்.. ஸாரி..” என்றார்கள். 

 

முன்னாடியே தெரிந்தும், கார்த்தியிடம் சொல்லாத விழா அமைப்பாளர்கள் சங்கடப்பட... கார்த்தியை அப்படியே வெளியே அழைத்து வந்து காரில் அமர வைத்துவிட்டு அவரது சட்டை அளவை குறித்துக் கொண்டு ஒரு டீம் வேறொரு காரில் வெளியில் பறந்தது. அரை மணி நேரத்தில் அவர்கள் கொண்டு வந்த சட்டை.யை அணிந்த பின்புதான் கிளப்புக்குள்ளேயே நுழைந்தார் கார்த்தி.

இந்தக் கதை இப்படியிருக்க.. விழா நடந்த இடத்திற்கு நேர் எதிரே இருந்த நீச்சல் குளத்தில் குட்டியூண்டாக மேலே ஒரு டிரெஸ், கீழே ஒரு டிரெஸ் போட்டுக் கொண்டு 3 குடும்பங்கள், மிதக்கும் தலையணைகளில் இருந்த ரெட் ஒயினை அருந்தியபடியே நீராடிக் கொண்டிருந்த கொடுமையையும் பார்க்க வேண்டியிருந்தது..! 

வாழ்க தமிழகம்..!

---------------------------

இடம். பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோ. அவர் பெரிய நடிகர். கையில் சிகரெட், இன்னொரு கையில் ஸ்கிரிப்ட்டுடன் நின்று கொண்டிருந்தார். தற்செயலாக குனிந்தவர் தனது காலில் ஏதோ ஒட்டியிருப்பதை கவனித்து சலனமடைந்தார். தூரத்தில் புரொடெக்ஷன் மேனேஜருடன் ஏதோ தீவிர டிஸ்கஷனில் இருந்த உதவி இயக்குநரை விசில் அடித்து அழைத்தார். பத்தடி தூரத்திலேயே அரக்கப் பரக்க ஓடி வந்தார் துணை. தனது காலை காண்பித்து “ஏதோ ஒட்டியிருக்குல்ல..” என்றார் நடிகர். துணை இயக்குநரும் பார்த்துவிட்டு “ஆமா ஸார்..” என்றார். “துடைச்சு விடு..” என்றார் நடிகர். கேட்ட மாத்திரத்தில் காருக்கு ஓடிய துணை இயக்குநர் காரில் இருந்து ஒரு துணியை எடுத்து வந்து நடிகரின் முன்னால் தரையில் அமர்ந்து அவர் காலில் ஒட்டியிருந்ததை துணியால் துடைத்துவிட்டு பவ்யமாக எழுந்து போனார். நடிகரும் அடுத்த சிகரெட்டை ஸ்டைலாக பற்ற வைத்தார். 

சினிமாவுலகம் எங்கயோ போகுது..!

இனி இந்த சினிமா 360 அடிக்கடி இங்கே வரும்..!