அம்மா கணக்கு - சினிமா விமர்சனம்

24-06-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வித்தியாசமான கதைக் களனுடன் வந்திருக்கிறது இந்தப் படம். இந்தாண்டு ஏப்ரல் 22-ம் தேதி இந்தியாவெங்கும் வெளியாகி வெற்றி பெற்ற ‘Nil Battey Sannata’ என்கிற ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்குதான் இது.
அவார்டு படங்களை குறி வைத்து தயாரித்துக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ், இந்தப் படத்தையும் அந்த நோக்கத்திற்காகவே தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர் திவாரி என்கிற பெண் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு அம்மாவும் மகளும் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தால் எப்படியிருக்கும்..? கற்பனை செய்து பார்க்க முடியுமா..? அந்த முடியாத விஷயத்தைத்தான் இதில் படமாக்கியிருக்கிறார்கள்.

மிக இளம் வயதிலேயே திருமணமாகி குழந்தை பெற்று.. கணவன் இறந்துவிட.. குழந்தைக்காக வீட்டு வேலைக்காரியாகவும், மீன் கடையிலும் வேலை பார்த்து மகளை வளர்த்து வருகிறார் அமலாபால். இவருடைய மகளான யுவஸ்ரீ 10-ம் வகுப்பு படிக்கிறாள்.
மகள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிடுவாளா என்கிற பயம் அம்மாவை பிடித்தாட்டுகிறது. அவள் வேலை பார்க்கும் வீட்டு உரிமையாளரான டாக்டர் ரேவதியிடம் இது பற்றி ஆலோசனை செய்கிறாள் அம்மா.
யுவஸ்ரீக்கு கணக்கு சுட்டுப் போட்டாலும் வராது. படிப்பில் கவனமில்லை. டிவி பார்ப்பதிலேயே குறியாய் இருக்கிறாள். அம்மாவைவிடமும் அதிமாகவே பேசுகிறாள். இதனால் மகளின் எதிர்காலம் குறித்து கவலையுடன் இருக்கிறாள் அம்மா.
இதைக் கேள்விப்படும் ரேவதி, அம்மாவையும் படிக்கச் சொல்கிறாள். “நீ 9-ம் வகுப்போட நின்னுட்ட.. ஏன் நீ திரும்பவும் படிக்க்க் கூடாது..?” என்று ஒரு கேள்வியை எழுப்பி அம்மாவை வலுக்கட்டாயமாக படிக்க ஏற்பாடு செய்கிறாள். அதுவும் மகள் யுவஸ்ரீ படிக்கும் அதே பள்ளியில் அதே வகுப்பில் சேர்த்து விடுகிறாள்.
இப்போது அம்மாவும், மகளும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். “இப்போது யார் நன்றாக படிப்பது என்று போட்டி வந்து உன்னுடன் உன் மகளே போட்டி போட்டு படிப்பாள்…” என்று ரேவதி சொல்ல.. இதை நம்பி அம்மாவான அமலாவும் தீவிரமாக படிக்கத் துவங்குகிறார்.
அம்மா பள்ளிக்கு வருவது யுவஸ்ரீக்கு பிடிக்கவில்லை. இதனாலேயே அம்மாவை வெறுக்கத் துவங்குகிறாள். மாதாந்திர தேர்வில் மகளைவிட அம்மா, அதிக மதிப்பெண்கள் பெற்றுவிட.. யுவஸ்ரீ இன்னும் கூடுதலாக வெறுப்படைகிறாள்.
“அடுத்தத் தேர்வில் உன்னைவிடவும் அதிக மதிப்பெண்ணை நான் வாங்கினால் நீ ஸ்கூலுக்கு வரக் கூடாது…” என்று கண்டிஷன் போடுகிறாள் மகள். அம்மாவும் இதற்கு ஒத்துக் கொள்கிறாள். இது நடந்ததா இல்லையா..? மகள் 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றாளா.. இல்லையா.. என்பதுதான் மீதமான படம்.
ஹிந்தியில் இந்தப் படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் அதிகம் அறியப்படாத நடிகர், நடிகைகளை வைத்து எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய்வரையிலும் வசூல் செய்திருக்கிறது இந்தப் படம். ஹிந்தியில் இந்தப் படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரிதான் இந்தத் தமிழ் பதிப்பையும் இயக்கியிருக்கிறார்.
பெண்களுக்கு கல்வி அவசியம்.. பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் புரிதல் அவசியம்.. பள்ளிக்கூடங்கள் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த வேண்டும். கல்வியை மன்னமாக சொல்லிக் கொடுக்காமல் புரிதலோடு சொல்லித் தர வேண்டும். மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைய வேண்டும் என்கிற விஷயங்களையெல்லாம் இந்தப் படம் சொல்லித் தந்திருப்பதால் இந்த வருடத்திய தேசிய விருதுகளில் இந்தப் படத்திற்கு நிச்சயம் இடம் உண்டு.
பொதுவாகவே கணக்குப் பாடம் என்றாலே பலருக்கும் அலர்ஜிதான். அது புரியவில்லை என்பார்கள். வரவே வராது என்பார்கள். நிறைய மாணவர்கள் அதில்தான் குறைவான மதிப்பெண் எடுப்பார்கள். அதே சமயம் 100-க்கு 100 எடுக்கும் வித்தகர்களும் உண்டு. இந்தக் கணக்கு பாடத்தில் இருக்கும் சிரமத்தை இந்தப் படத்தில் விலாவாரியாகவே எடுத்துரைத்துள்ளனர்.
கணக்குப் பாடத்தை மற்றைய பாடங்களை போல மனப்பாடம் செய்தெல்லாம் படித்தறியக் கூடாது. இதை மட்டும் புரிந்து கொண்டு படிக்க வேண்டும். கணக்கு எளிது. அதைப் புரிந்து கொண்டால் அதைவிட எளிது. கணிதம் சூத்திரங்களாலேயே ஆளப்படுவது. அதன் சூத்திரங்களை நாம் புரிந்து கொண்டாலே கணிதம் நம் வசப்பட்டுவிடும் என்று இந்தப் படத்தில் பல இடங்களில் வசனத்தின் மூலமாக தெளிவாக்கியிருக்கிறார்கள். இதற்காக இயக்குநருக்கு தனிப்பட்ட முறையில் நமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரியின் சிறப்பான இயக்கத்தினால் படத்தில் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். அம்மாவும், மகளும் மோதிக் கொள்ளும் காட்சிகளெல்லாம் மிக யதார்த்தமாக பதிவாகியிருக்கிறது.
அமலாபால் இவ்வளவு சின்ன வயதில் அம்மாவாக நடித்திருக்க வேண்டுமா என்று யோசித்தால்.. பின்பு மாணவியாக வரும்போது அவருடைய தோற்றம் கொஞ்சமாவது ஒத்து வர வேண்டுமே என்பதற்காகத்தான் அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது புரிகிறது. இவரைத் தேர்வு செய்த இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
அமலாபாலுக்கு நிச்சயம் இதுவொரு புதுமையான அனுபவம்தான். தமிழில் இதுவரையில் அவர் நடித்த எந்தப் படத்திலும் இந்த அளவுக்கான வசனங்களை பேசி நடித்திருக்கவே மாட்டார். அத்தனை வசனங்களை இதில் பேசி நடித்திருக்கிறார். மகள் தன்னைப் புரிந்து கொள்ளாமலை குறித்து ரேவதியிடம் இவர் புலம்பும் ஆற்றாமையும், ரேவதியின் டேக் இட் ஈஸி பாணியிலான பதிலும் நிச்சயம் குறிப்பிட வேண்டியது.
மகளாக நடித்திருக்கும் யுவஸ்ரீயும் நடிப்பில் குறை வைக்கவில்லை. சிடுசிடு முகத்தில் “நான் வேலைக்காரியாகத்தான் போறேன்..” என்ற சின்ன வயது கோபம் குறையாத பேச்சும்.. அம்மாவை வெறுப்பேற்ற செய்யும் செயல்களும் அந்த வயதுக்கே உரிய பிள்ளைகளை அடையாளம் காட்டியிருக்கிறது. ரேவதி மிக பாந்தமாக நடித்துள்ளார். இவருக்கும், இவரது கணவருக்குமான உறவும், குழந்தைகள் இல்லாத அந்த வீட்டில் நிலவும் ஒரு அமைதியும் குறியீடுகளாகத் தெரிகிறது.
இவர்களையும் தாண்டி குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் சமுத்திரக்கனி.  இவருடைய கேரக்டரை பார்ப்பவர்கள் நிச்சயம், “என்னடா இது..?” என்றுதான் சொல்வார்கள். ஆனால் இப்படியும் சில வாத்தியார்கள் நாட்டில் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாதிரி என்பார்கள். அதில் இவரும் ஒன்று என்றே எடுத்துக் கொள்ளலாம்.
முற்றிலும் மாறுபட்ட சமுத்திரக்கனியை இந்தப் படத்தில் பார்க்கலாம். அந்த உடல் மேனரிச ஸ்டைல்.. பிரேயரின் இடையிடையே மாணவர்களை எச்சரிக்கும் கோபம்.. மாணவர்களை நோகாமல் திட்டுவது.. வார்த்தைகளாலேயே கண்டிப்பது என்று தனக்கென்று தனி நடிப்பை காட்டியிருக்கிறார். ரேவதி, அமலாபால், சமுத்திரக்கனி மூவரும் பேசும் காட்சி கொஞ்சம் ஸ்பெஷல்.
இத்தனை கோபமாக இருக்கும் மகள், சக மாணவன் ஒருவன் தன் அம்மாவின் கஷ்டத்தைப் பற்றிச் சொன்னதும், அம்மா வேலை பார்க்கும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று காட்டியதும் உடனடியாக மனம் மாறி அம்மாவின் பிள்ளையாக ஆவதெல்லாம் தொலைக்காட்சி சீரியல் ரகம் இயக்குநரே.. இதுவொன்றுதான் படத்தின் மிகப் பெரிய சறுக்கல்..! இதற்குப் பதிலாக வேறு ஏதாவது யோசித்திருக்கலாம்.
படத்தின் ஒளிப்பதிவு அப்படியொரு கிளாஸ் ரகம். கேவமிக் ஆரியின் கைவண்ணத்தில் அமலாபாலின் வீட்டுக்குள் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் ஒளிப்பதிவினாலேயே கவனிக்க வைத்திருக்கிறது. இயக்குநரே அதிகப்பட்சமாக குளோஸப் காட்சிகளாகவே வடிவமைத்திருப்பதால் இதில் கேமிராவின் பங்களிப்பும் பெரிதாகத்தான் தேவைப்பட்டிருக்கிறது. அவரும் தன் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார்.
அமலா பாலின் வீடு, வீடு இருக்கும் பகுதி.. மீன் கடை.. ரேவதியின் வீடு. தோற்றம் என்று அனைத்திலும் கலை இயக்குநரின் கைவண்ணத்தில் அழகு மிளிர்கிறது. இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.. பட்.. பின்னணி இசையில்தான் ராஜா நிற்கிறார். அனாவசியமான திணிப்புகள் இல்லாமல் ரசிக்க வைத்திருக்கிறது அவருடைய பின்னணி இசை. நன்றி ராஜாவுக்கு..!
கதாசிரியர் நிதீஷ் திவாரியின்  இந்த யோசனைக்கு ஒரு சபாஷ்தான். ஆனால் இந்தியாவில் இது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது. எந்தப் பள்ளியிலும் 3 அல்லது 4 வயதுக்கு மூத்தவர்களை அந்தந்த வகுப்புகளில் சேர்ப்பதில்லை. அதற்கு வாய்ப்பும் வந்ததில்லை. கல்லூரிகளில்கூட அஞ்சல் வழிக் கல்வியில் படித்துக் கொள்ளுங்கள் என்பார்கள். முடியாத ஒரு விஷயத்தை முடிந்தால் எப்படியிருக்கும் என்று பார்க்கவே இதனை படமாக்கியிருக்கிறார்கள் போலும்..!
கணிதம் பாடம் எத்தனையோ மாணவ, மாணவியர்களை பயமுறுத்தியிருக்கிறது. ஆனால் அதனை புரிந்து கொள்ளக் கூடிய சூட்சுமம்தான் யாருக்கும் இல்லை. அதைச் சொல்லித் தரவும் இங்கே ஆசிரியர்களுக்கு திறன் இல்லை. அந்த அளவுக்குத்தான் கல்வியின் தரம் நம் நாட்டில் இருக்கிறது.
இந்தப் படத்தின் வசனங்கள் சொல்லும் விஷயங்களை எந்தப் பள்ளியிலும் எந்த ஆசிரியரும் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்கள். இந்தப் படத்தைப் பார்ப்பவர்களாவது படத்தில் சொல்லியிருக்கும் கணிதம் பாடம் பற்றிய அறியாமையை தெரியாதவர்களுக்குச் சொன்னால், இது மிகச் சிறந்த கல்விச் சேவையாகத்தான் இருக்கும்.!
அம்மா கணக்கு – அம்மாக்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு பாடம்..!

ராஜா மந்திரி - சினிமா விமர்சனம்

24-06-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘இறுதிச் சுற்று’ படத்திற்குப் பிறகு திறமையான மற்றுமொரு பெண் இயக்குநர், தமிழ்த் திரையுலகில் கில்லியாக அடித்திருக்கும் படம் இது.
‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’ ஆகிய படங்களில் இயக்குநர் சுசீந்திரனிடம் இணை இயக்குநராய் பணியாற்றிய உஷா கிருஷ்ணன் இயக்கியிருக்கும் முதல் படம்.
தனது முதல் படத்தையே வெற்றிப் படமாக்கியிருக்கும் அறிமுக இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் உஷா கிருஷ்ணன். வாழ்த்துகள். இந்தக் கதையை கையில் வைத்துக் கொண்டு இரண்டு வருடங்களாக பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடத்தில் சொல்லியும் அவர்கள் படமாக்க முன் வரவில்லை என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார் உஷா கிருஷ்ணன்.
இந்தக் கதையை நிராகரித்த அவர்களெல்லாம் இன்றைக்கு இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நிச்சயமாக மனதுக்குள் வருத்தப்படுவார்கள்.. ஒரு நல்ல படத்தை விட்டுவிட்டோமே என்று..! அந்த அளவுக்கு பெருமைப்படும்படியாக படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

அண்ணன், தம்பி பாசம்தான் படத்தின் கதைக் கரு. கிராமத்தில் வசிக்கும் ‘நாடோடிகள்’ கோபால், ஜெயந்தி தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் காளி வெங்கட், இளையவர் கலையரசன். காளி வெங்கட் சோடா வியாபாரம் செய்து வருகிறார். கலையரசன் கல்லூரிக்கு செல்லும் வயதில் இருக்கிறார்.
காளி வெங்கட்டிற்கு எந்தப் பக்கம் பார்த்தாலும் வரன் அமையவில்லை. வரன் அமையாத வருத்தத்திலும் கன்னி கழியாத இளைஞனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திடீரென்று தனது பக்கத்து வீட்டிற்கு குடி வந்திருக்கும் வைசாலியை பார்த்தவுடன் அவரை காதலிக்கத் துவங்குகிறார் காளி வெங்கட்.
கலையரசனும் கல்லூரியில் படிக்க டவுனுக்குச் செல்கிறார். அங்கே கல்லூரியில் நுழைந்த தினத்தன்றே பேருந்தில் அறிமுகமாகும் ஷாலினுடன் மோதல் ஏற்பட்டு பின்பு அதுவே காதலாக மாறியிருக்கிறது.
தேர்வு விடுமுறையில் ஊருக்கு வருகிறார் கலையரசன். இந்த நேரத்தில் பக்கத்து வீட்டிற்கு வேலி தாண்டிக் குதித்து தனது காதலியைப் பார்க்க சென்ற காளியைப் பார்த்துவிடும் காளியின் அப்பா அந்த அர்த்த ராத்திரியில் தாம்.. தூமென்று குதிக்க.. இந்தக் களேபரத்தில் காளியை காதலியின் அப்பா அடிக்க.. தனது அண்ணனை அடித்துவிட்டாரென்ற கோபத்தில்… அவரை கலையரசன் அடித்துவிட.. பெரும் சண்டையாகிறது.
அடுத்த நாளே வைசாலியின் குடும்பத்தினர் ஊரையே காலியை செய்துவிட்டுப் போகிறார்கள். மறுபடியும் சோகமாகிறார் காளி வெங்கட். எப்படியும் மகனுக்கு கல்யாணம் செய்துவைத்துவிட துடிக்கும் பெற்றோர்கள் அரும்பாடுபட்டு ஒரு பெண்ணை பார்க்கிறார்கள்.
பெண் பார்க்க வர மறுக்கும் காளி வெங்கட்டை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறார் கலையரசன். அங்கே பெண்ணாக காபி கொண்டு வருபவர் ஷாலி. மாப்பிள்ளை கலையரசன்தான் என்று நினைத்து ஷாலி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க.. பொண்ணே ஒத்துக்குச்சே என்றெண்ணி காளியும் ஆச்சரியத்தோடு, கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ள.. குழப்பம் உண்டாகிறது..
உண்மை தெரிந்து ஷாலி கலையரசனிடம் கோபப்பட.. அவரை சமாதானப்படுத்த தனது நண்பன் பால சரவணனுடன் இணைந்து பல டிராமாக்கள் போடுகிறார். இருந்தும் பலனில்லாமல் போகிறது. அண்ணனின் சந்தோஷமும் கெடக் கூடாது. இந்தக் கல்யாணமும் நடக்கக் கூடாது என்று தம்பி கலையரசன் போராடுகிறார். அவருடைய காதல் போராட்டம் ஜெயித்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் நகைச்சுவை கலந்த சுவாரசியமான திரைக்கதை.
யார் சொன்னது பெண் இயக்குநர்களால் நகைச்சுவையை கொண்டு வர முடியாது என்று..? அந்தக் கூற்றை உடைத்தெறிந்திருக்கிறார் இயக்குநர் உஷா கிருஷ்ணன். பல காட்சிகளில் தியேட்டரே அதிரும்வகையில் இருக்கிறது அவரது அழகான இயக்கம்.  
குறிப்பாக இரண்டு சகோதரர்களின் தகப்பனாரான ‘நாடோடிகள்’ கோபால் தன் பிள்ளைகளின் ஒற்றுமையைக் கண்டு அடிக்கடி கண் கலங்கும் காட்சியில் சிரிக்காதவர்களே இருக்க முடியாது. காதல் காட்சிகளில் ஒரு கண்ணியம்.. பாடல் காட்சிகளில் ஒரு அழகுணர்ச்சி.. வசனங்களில் ஒரு எல்லைக்கோடு.. இயக்குதலில் ஒரு சிறப்புத் தன்மை என்று தன்னை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசீந்திரனுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குநர் உஷா கிருஷ்ணன்.
காளி வெங்கட்டிற்கும், கலையரசனுக்கும் நிச்சயம் இது புகழ் சேர்க்கும் படம்தான். கலையைவிடவும், காளி வெங்கட்டுதான் அசத்தியிருக்கிறார். தன்னையும் ஒரு பெண் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாளே என்றெண்ணி அந்த எண்ண மகிழ்ச்சியில் டூவிலரில் செல்லும்போது தம்பியிடம் விட்டுவிட்டு வசனம் பேசிக் கொண்டே வரும் காட்சியில்  மனதைத் தொட்டுவிட்டார் காளி.  
இறுதியில் காளி, தன் காதலியைச் சந்திக்கும் காட்சியும் கிளைமாக்ஸ் பரபரப்பில் ‘பாவம்பா.. சேர்த்துதான் வைங்களேன்’ என்று நம்மையும் சேர்த்தே பதற வைத்திருக்கிறது அவருடைய நடிப்பு. அண்ணனுக்கு ஒரு விருது பார்சல்..!
கலையரசன் அந்த வயதுக்கே உரிய துள்ளலுடன் நடித்திருக்கிறார். அண்ணனுடன் வம்புக்கு போய்க் கொண்டேயிருப்பதும்.. பின்பு அதே அண்ணனின் வாழ்க்கைக்காக அவருடன் இணைந்து போராடி.. தனது வாழ்க்கையைக்கூட தியாகம் செய்யும் அளவுக்குப் போகும் நடிப்பையும் காட்டியிருக்கிறார். கலையரசனை நிசமாகவே அதிகமாக நடிக்க வைத்திருப்பது இந்தப் படத்தில்தான்..! கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
ஹீரோயின்களில் ஷாலினைவிடவும் ஒரு படி மேலே போய் ஸ்கோர் செய்திருக்கிறார் மகாலட்சுமியாக நடித்திருக்கும் வைசாலி. சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்கள்.. ‘காலிபிளவர்’ பாடல் காட்சியில் இவருடைய ஆக்சன்கள்.. ரசனையானவை. காதலிக்கக் காத்திருப்பவர்களையும் நிச்சயம் காதலிக்க வைத்துவிடும் அளவுக்கு இருக்கிறது இவருடைய நடிப்பு.
காதலிக்கிறாரா இல்லையா என்பதையே சொல்லாமல் வீட்டையும் மாற்றிக் கொண்டு சென்ற பிறகு.. கடைசியாக கோவிலுக்கு வந்து சேலையை ஒப்படைத்துவிட்டுப் பேசும் காட்சியின்போது மனதைத் தொடுகிறார் வைசாலி. அடுத்த நொடி மனம் மாறும் காளியின் செயலும், அடுத்தடுத்த காட்சிகளும் சிறப்பான இயக்கத்தினாலேயே  வேகமெடுக்கிறது.
இதேபோல் மலையாள புது வரவான ஷாலினும் பிரமாதமாக நடித்திருக்கிறார். முற்பாதியில் கலையுடன் சண்டையிட்டு பல்பு வாங்கி.. பின்பு நட்பாகி.. அது காதலாகும்போது மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார். பிற்பாதியில் கோபத்தில் இவர் ‘டா’ போட்டு பேசும் காட்சிகளிலெல்லாம் நமக்கும் கோபம் கொப்பளிக்கிறது.
இவர்களைவிட்டுவிட்டுப் பார்த்தால் ஸ்கோர் செய்திருப்பது பால சரவணன்தான். மிக யதார்த்தமாக எந்தவகையான ஸ்லாங்காக இருந்தாலும் ‘அசால்ட்டு சேது’வாக நடிக்கிறார் பால சரவணன். இதில் நிச்சயத்தார்த்தத்தை நிறுத்த இவர் போடும் திட்டம் பணாலாகும் காட்சி வயிற்றைப் பதம் பார்க்கிறது.  கலை மற்றும் காளியின் அம்மாவாக நடித்திருக்கும் ஜெயந்தியின் நடிப்பு அருமை. குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இடையிடையே காமெடி செய்திருக்கும் கல்யாண புரோக்கர் சூப்பர்குட் சுப்ரமணி மற்றும் சித்தப்பா சரவண சக்தியின் டாஸ்மாக் காமெடியெல்லாம் ஏ ஒன்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் ‘காலிபிளவர்’ பாடல் இப்போதே எஃப்.எம்.களிலும், டிவிக்களிலும் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருக்கிறது. பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவுக்கும் ஒரு சபாஷ். ஒளிப்பதிவுக்காக நிரம்ப மெனக்கெடாமல் இயல்பாக எது இருக்குமோ அதையே வழங்கியிருக்கிறார்.
படத்தை கடைசிவரையிலும் ரசிக்க வைத்திருப்பதே இடையிடையே தியேட்டரில் எழும் கைதட்டல்கள்தான். நடிகர்களின் யதார்த்த நடிப்பிலேயே நகைச்சுவையை வெளிக்கொணர வைத்திருக்கிறார் இயக்குநர் உஷா கிருஷ்ணன். அதுவும் அந்தப் பகுதி மக்களின் எளிய வசனங்கள்.. ஆண்கள் அதிகம் பேசும் வசனங்கள் என்று எதையும் விட்டுவைக்காமல் அலசி, ஆராய்ந்து எடுத்து பயன்படுத்தியிருக்கிறார். மிகக் கடுமையான உழைப்பாக இருக்கிறது. அவருடைய உழைப்புக்கும், திறமைக்கும் நமது சல்யூட்.
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்திற்குப் பிறகு குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய அளவுக்கு வந்திருக்கும் திரைப்படம் இது. மிஸ் பண்ணிராதீங்க..!

மெட்ரோ - சினிமா விமர்சனம்

24-06-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்னை போன்ற மெட்ரோ நகரத்தின் பயங்கரமான இன்னொரு முகத்தினை உரித்துக் காட்டியிருக்கும் படம் இது. இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணனை வெகுவாகப் பாராட்ட வேண்டும். இதுதான் கதை என்று முடிவான பிறகு இதற்கு வணிக ரீதியான அரசு உதவியை எதிர்பார்க்காமல், ‘ஏ’ சர்டிபிகேட்டுதான் கிடைக்கும். இதனால் படத்தின் பெயரும் ‘மெட்ரோ’ என்று ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் என்று தீர்மானமாக யோசித்துதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
ஏற்கெனவே விதார்த் நடிப்பில் ‘ஆள்’ என்னும் திரில்லர் படத்தை இயக்கிய அனுபவம் கொண்ட ஆனந்த் கிருஷ்ணன், அதே டைப்பில் மறுபடியும் இந்த ‘மெட்ரோ’வை கொடுத்துள்ளார்.
குற்றவாளிகள் தானாக உருவாகுகிறார்களா..? அல்லது உருவாக்கப்படுகிறார்களா..? என்கிற கேள்விக்கு ஒரே பதில் உருவாக்கப்படுகிறார்கள் என்பதுதான். ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே’ என்பது சாசுவதமான உண்மை. அதன் பின்னான வளர்ப்புகளிலும், சூழ்நிலைகளினால் மட்டுமே பல குற்றவாளிகளின் வாழ்க்கை தடம் புரள்கிறது. அதே சமயம், பொருளாதாரத் தேவைதான் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றும் எமன் என்பதையும், அப்படியொரு எமச் சிக்கலில் மாட்டிய இளைஞனின் கதையையும் சொல்வதுதான் இந்த ‘மெட்ரோ’,

ஓய்வு பெற்ற ஏட்டய்யா ராஜா.. அவரது மனைவி துளசி.. மூத்த மகன் அறிவழகன்(சிரிஷ்).. இளைய மகன் மதியழகன்(சத்யா) என்ற அன்பான குடும்பத்தில் இளைய மகனான சத்யாவின் காதலால் குடும்பமே தலைகீழாக மாறுகிறது..
ஒரு பத்திரிகை அலுவலகத்தில் ரிப்போர்ட்டராக வேலை செய்கிறார் சிரீஷ். குடும்பத்தினர் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். தம்பி சத்யாவோ கல்லூரி மாணவர். இவருக்கு ஒரு காதலி. அவர் ஆடம்பரப் பிரியை. தன்னுடைய காதல் தொடர வேண்டுமெனில் சத்யாவிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்.. லேப்டாப், விலையுயர்ந்த செல்போன் என்று பல இத்யாதிகைளை பட்டியலிடுகிறார் காதலி.
சத்யா தன் வீட்டில் பைக் கேட்கிறார். அவ்வளவு பணமில்லை என்கிறார்கள். சிரீஷ் தம்பிக்காக முயன்று பார்த்தும் லோன் கிடைக்காததால் விட்டுவிடுகிறார். ஆனால் சத்யாவின் காதலி விடவில்லை. காதல் முறியும் அபாயம் வர.. சத்யா பதறுகிறான். அவனுடன் படிக்கும் கணேஷ் என்ற மாணவன் செல்வச் செழிப்பில் திளைப்பது எப்படி என்று அவனிடமே கேட்கிறான் சத்யா.
சத்யாவை கையோடு அழைத்துச் சென்று பெண்களின் கழுத்துச் செயினை குறி வைத்து அறுக்கும் படுபாதகச் செயலை செய்து காட்டுகிறான் கணேஷ். தனக்கும் பணம் வேண்டும். ஆடம்பரமான வாழ்க்கை வேண்டும். காதலி வேண்டும்.. இதைவிட்டால் உடனடி பணத் தேவைக்கு வேறு வழியில்லை என்று நினைத்து இதற்குள் ஆட்படுகிறான் சத்யா.
சென்னையின் செயின் பறிப்பாளர்களின் சங்கத் தலைவரான தாதா குணா என்னும் பாபி சிம்ஹாவிடம் அறிமுகப்படுத்தி வைக்கப்படுகிறான் சத்யா. அவனையும் ‘ஆட்டை’யில் சேர்த்துக் கொள்கிறார் பாபி. இதன் பின்பு சத்யாவின் வாழ்க்கையில் அவன் விரும்பியதெல்லாம் கிடைக்கிறது.
ஒரு கட்டத்தில் சத்யாவின் திருட்டுத் தொழில் அவனது அம்மாவுக்குத் தெரிய வர.. அவள் அவனைக் கண்டிக்கிறாள். அந்த நேரத்தில் சத்யா ஒரு படுபாதகச் செயலைச் செய்துவிட.. குடும்பமே பரிதவிக்கிறது. இதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படமே..!
படத்தின் துவக்கமே சஸ்பென்ஸில் துவங்கி.. போகப் போக டாப் கியரில் கொண்டு செல்லப்படுகிறது. எதற்கு இந்த சித்ரவதை என்ற சந்தேகம் வலுவாகிக் கொண்டே போய், கடைசியாக அந்த முதல் நபரை மறந்தே போக வைத்துவிட்டது திரைக்கதை.
இயக்குநர் தந்திருக்கும் அழுத்தமான இயக்கத்தினால் படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். புதுமுகமான சிரிஷும், சத்யாவும் தங்களது அண்ணன், தம்பி கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. சிரிஷின் ஹீரோத்தனமான ஆக்சன் காட்சிகளுக்கேற்றாற்போல் முதல் 20 நிமிட திரைக்கதைகள் அமைந்திருக்கின்றன.
இதைவிடவும் தன் அப்பாவிடமே சிகரெட் கேட்பது.. கட்டிங் கேட்பது.. அப்பா, அம்மா பாசத்தில் நெகிழ்வது. அவர்களது திருமணத் தின கொண்டாட்டங்கள்.. தம்பிக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பது. கடைசியில் உண்மை தெரிந்து தம்பிக்கு முன்னால் தான் மண்டியிட்டு நிற்பது என்று ஒரு அண்ணன் கேரக்டரை புரிந்து செய்திருக்கிறார் சிரிஷ். ஆனாலும் அப்பாவிடமே சிகரெட், கட்டிங் கேட்கும் காட்சியெல்லாம் ரொம்ப ஓவர் இயக்குநரே.. நீக்கப்பட்டிருக்க வேண்டிய காட்சிகள்..!
தம்பி சத்யாவின் தடுமாற்றமான மனநிலைக்கு ஏற்றாற்போன்று திரைக்கதை காட்சிகள் அமைந்திருப்பதால் எதுவும் வலிந்து திணிக்கப்பட்டதாகவே தெரியவில்லை. ஆடு தானாக வந்து தன்னிடம் மாட்டும் என்று கசாப்புக்காரன் காத்திருப்பதுபோல, கணேஷின் அந்த கேண்டீன் காட்சி மட்டுமே கதையின் போக்கை சொல்கிறது.
“எனக்கு இதாம்மா பிடிச்சிருக்கு.. தப்பில்லம்மா.. என்னை புரிஞ்சுக்கம்மா..” என்று தன் அம்மாவிடம் கெஞ்சும் செயலும், தன் அண்ணனிடம் கடைசியாக இதையே சொல்வதும் அந்தக் கேரக்டரை கடைசிவரையிலும் நியாயப்படுத்தும் செயல்தான். ஆனால் எதிர்த்துப் பேசுபவர்கள் இதைவிட அதிகமாக நியாயம் பேசியிருக்க வேண்டும். அது இல்லாதது ஒரு பெரிய குறைதான்.
பாபி சிம்ஹாவுக்கு புதிய கேரக்டர் ஸ்கெட்ச். முதலில் தாதாவாக வந்தவர் கடைசியில் போதை மருந்தினால் பைத்தியக்காரன் லெவலுக்கு போய் பரிதாபமாக முடிகிறது இவரது கதை. இவருடனேயே இருக்கும் இவரது சீனியரின் செட்டப் ரசிக்க வைக்கிறது. ஹீரோயின் மாயாவுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை. இருக்கும் காட்சிகளில் கவர்ந்திருக்கிறார்.  ராஜாவும், துளசியுமே மனதை ஆக்கிரமிக்கிறார்கள்.  நண்பனாக வரும் செண்றாயனின் அறிமுகக் காட்சியே ஒரு பாட்ஷா ஸ்டைல். நண்பனுக்காக எந்த அளவுக்கு இறங்க முடியுமோ அந்த அளவுக்கு இறங்கியிருக்கிறார் கதையில்..!
செயின் திருடர்கள் பற்றிய கதை என்பதாலேயே செயின் திருடர்கள் எப்படி.. யாரை.. எங்கே குறி வைத்து இதைச் செய்கிறார்கள் என்பதையெல்லாம் விலாவாரியாக விளக்கியிருக்கிறார் இயக்குநர்.
தலையை விரித்துப் போடாமல் கொண்டை போட்டிருக்கும் பெண்கள்.. அல்லது ஜடை போட்டிருப்பவர்கள்.. சேலை அணிந்திருக்கும் பெண்கள்.. துப்பட்டா இல்லாத பெண்கள்.. பேசிக் கொண்டே கவனமில்லாமல் இருக்கும் பெண்கள்.. குழந்தையுடன் செல்லும் பெண்கள்.. இவர்களைத்தான் குறி வைக்க வேண்டும் என்பதும்.. கழுத்தில் ஒரு நகக்கீரல்கூட விழுகக் கூடாது என்று இந்த செயின் வேட்டையில் இருக்கும் எழுதப்படாத விதிகளை இந்தப் படத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
எப்படி பறிக்கிறார்கள் என்பதையும் பல காட்சிகளில் விளக்கியிருக்கிறார். அதிலும் குழந்தையுடன் செல்லும் குடும்பத்தினரின் மீது கை வைக்க.. இது தவறுதலாக  குழந்தையையும் தாக்க.. குழந்தை பறந்து வந்து விழும் காட்சியை படமாக்கியிருக்கும்விதம் அருமை. கொடூரம் என்றாலும் இதைக் காட்டித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லைதான்.
இதேபோல் செயினை பறித்ததும் என்ன செய்வார்கள்..? அந்தச் செயினை எங்கே விற்பார்கள். திருட்டு செயின்கள் கடைசியில் என்னவாகும் என்பதையெல்லாம் விளக்கமாகவே காண்பித்திருக்கிறார் இயக்குநர். மொத்த செயினையும் உருக்கி தங்கக் கட்டியாக வகுத்தெடுத்து அதனை விற்கும் இந்த அண்டர்கிரவுண்ட் ஆபரேஷனையும் நிஜமாகவே நடப்பது போல் படமாக்கியிருக்கிறார்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் கதையாகத்தான் பல திருடர்கள் இப்போது சிக்கிக் கொள்கிறார்கள். இதிலும் அந்த வயதான செக்யூரிட்டிக்காரர் தனது சைக்கிளை தூக்கி செயின் திருடர்களை அடித்து வீழ்த்துமிடத்தில், படம் பார்க்கும் ரசிகனின் மனம் சந்தோஷப்படும் அளவுக்கு இயக்குநர் படமாக்கியிருக்கிறார்.
ஜோகனின் இசையில் பாடல்கள் வழக்கம்போல மீண்டும் கேட்கும்படியாக இல்லை என்றாலும், பின்னணி இசையில் அடக்கி வாசித்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். என்.எஸ்.உதயகுமாரின் கேமிராவில் டைட்டில் காட்சி, மற்றும் இறுதிக் காட்சியில் காட்டப்படும் கழுகுப் பார்வையே அவரது திறமையைக் காட்டுகிறது.
படம் பார்க்கும் தாய்க்குலங்கள் இனிமேலாவது ஜாக்கிரதையாக இருந்துவிட்டால் நல்லதுதான். போதாக்குறைக்கு ஹெல்மெட் போடாமல் டூவிலர் ஓட்டக் கூடாது என்பது தற்போது தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவரும் இந்த வேளையில், அறுத்துக் கொண்டு ஓடுபவனை எப்படி அடையாளம் காட்டுவார்கள் என்கிற பிரச்சினையும் தீவிரமாகி வருகிறது.
காவல்துறையின் உதவியில்லாமல் இவர்களைப் போன்ற குற்றவாளிகள் வெளியில் நடமாடவே முடியாது. அவர்களுக்கும், பாபி சிம்ஹா போன்ற இடைநிலை தாதாக்களுக்கும் இடையிலான கள்ளத்தனமான மறைமுகமான தொடர்பினை பற்றி இந்தப் படத்தில் எதுவும் சொல்லாதது ஏன் என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் எந்த ஊரில் எந்த ஸ்டைலில் திருட்டு நடந்தாலும் யார் செய்திருப்பார்கள் என்று போலீஸாரே சொல்லிவிடுவார்கள். அந்த அளவுக்கு திருடர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார்கள்.
மாமூல், லஞ்சம், ஊழலில் திளைக்கும் ஒரு சில காக்கிச் சட்டையணிந்த பெருச்சாளிகளால்தான் சத்யா போன்ற  இளம் குற்வாளிகளும் வளர்க்கப்பட்டு வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
தாய், தந்தை நல்லவர்களாக இருந்தும் பிள்ளைகள் தடம் மாறும்போது ஏன் என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் எழுமே.. அது இந்தப் படத்திலும் எழுந்திருக்கிறது. சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் ஒரு மனிதனை குற்றவாளியாக்குகிறது என்பதுதான் இந்தப் படம் சொல்லும் நீதி. 
மெட்ரோ – படமாக்கலில் ஒரு சிறப்பான திரைப்படம்..!

எனக்கு இன்னொரு பேர் இருக்கு - சினிமா விமர்சனம்

20-06-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வடசென்னையை மையப்படுத்தி வந்திருக்கும் அடுத்த படம் இது. கேங்ஸ்டர் கதைதான். ஆனால் கொஞ்சம் நகைச்சுவையாக கொடுத்திருக்கிறார்கள்.


ரத்தத்தைக் கண்டாலே வலிப்பு வரும் அளவுக்கு போபியோ நோய் உள்ளவர் ஹீரோ ஜி.வி.பிரகாஷ். இவரது அப்பா, தாத்தா இருவருமே அந்தக் காலத்து ரவுடிகள். ஆனால் இவருக்கு மட்டும் ரவுடியிஸம் செட்டாகவில்லை.
அதே ராயபுரத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் தாதா ‘நைனா’ என்னும் சித்தப்பு சரவணன். மீனவர் சங்கத் தலைவர், துறைமுகத்தின் அதிகாரிகள், தொகுதி எம்.எல்.ஏ. என்று பலரையும் கைக்குள் வைத்திருக்கும் இந்த நைனாவுக்கு ராயுபரத்திலேயே ஒரு எதிரி உருவாகிறான்.
பெண்களைக் கடத்தி வெளிநாடுகளுக்கு கப்பலில் அனுப்பி வைத்தால் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறான். சரவணன் அதைத் தடுத்து “வேற வேலைய பார்” என்று சொல்லியனுப்ப.. கோபத்தில் அவன் தனது ஆட்களை அனுப்பி சரவணனை கொலை செய்ய முயல்கிறான்.
நெஞ்சில் விழுந்த வெட்டுக்குத்துடன் உயிர் தப்பிய சரவணன் இப்போதுதான் தனது வாழ்க்கையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கிறார். தனக்கிருக்கும் ஒரே மகள், மனைவி, குடும்பத்தினர் தனக்குப் பின்பு என்ன ஆவார்களோ என்று பயப்படுகிறார். தனக்குப் பின்பு இந்த ராயபுரத்திற்கு யார் நைனாவாக அமர்வது என்று யோசிக்கிறார்.
இதற்கெல்லாம் ஒரே தீர்வாக தனது மகள் ஆனந்திக்கு எதற்கும் அஞ்சாத ஒரு ரவுடியை கல்யாணம் செய்துவைத்துவிட்டு அவனையே ராயபுரத்திற்கு நைனாவாக்கிவிடலாம் என்று நினைக்கிறார். இதற்காக அந்தப் பகுதி முழுவதிலும் எதற்கும் அஞ்சா சிங்கத்தைத் தேடி நாயாய், பேயாய் அலைகிறார்கள் அடியாட்கள்.
இதற்கு முன்பாகவே ஆனந்தியை பார்த்துவிடும் ஜி.வி.பிரகாஷ் அவர் மீது காதல் கொண்டு அலைகிறார். ஆனந்தி தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்குள் போய் அவளை பார்க்க முயல்கிறார். அதே நேரம் அதே ஹாஸ்டலில் இருக்கும் ஒரு பெண்ணைத் தூக்க கடத்தல்காரர்களும் நுழைகிறார்கள். அதே நேரம் அதே இடத்திற்கு சரவணனை வெட்டியவனும் வர… அவனைத் தூக்க சரவணனும் ஆட்களை அனுப்புகிறார்.
மின் சப்ளையை துண்டித்தவுடன் கிடைத்த கேப்பில் யாரோ சரவணனின் எதிரியை போட்டுத் தள்ள.. இந்தப் படுகொலையை ஜி.வி.பிரகாஷ்தான் செய்திருக்கிறார் என்று நினைக்கிறார்கள் சரவணனின் அடியாட்கள். இதனால் ஜி.வி.பிரகாஷ் மிகப் பெரிய ரவுடி என்று நினைத்து சரவணனிடம் அவரைப் பற்றி மாற்றிச் சொல்ல.. சரவணன் பிரகாஷை வரவழைத்துப் பேசுகிறார்.
தனது காதலியின் அப்பாவே முன் வந்து பேசுகிறார் என்பதால் ஜி.வி.பிரகாஷும் இதற்கு ஒப்புக் கொள்ள.. கல்யாணத்தில் முடிகிறது. இந்த நேரத்தில் ஜி.வி.பிரகாஷின் ரத்த போபியோ ஆனந்திக்கும், சரவணனுக்கும் தெரிய வருகிறது.
சரவணனை மீண்டும் ஒரு முறை கொலை செய்ய முயற்சிகள் நடக்கிறது. ராயபுரத்தில் இருந்தே சரவணனை குடும்பத்துடன் துரத்த அடியாட்கள் கொலை வெறியுடன் அலைய.. இந்தப் பிரச்சினையில் இருந்து ஜி.வி.பிரகாஷும், அவரது குடும்பமும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் திரைக்கதை.
கேங்ஸ்டர் கதை என்றாலும் அதற்குண்டான திரைக்கதையில், இடையிடையே நகைச்சுவைத் துணுக்குகளையும் சேர்த்து அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
இயக்கத்தில் குறைவில்லை. ஆனாலும் படத்தில் இருக்கும் சில இரட்டை அர்த்த ஆபாச வசனங்களை முற்றிலுமாக நீக்கியிருக்கலாம். கவர்ச்சி ஆடைகளும், ஓவர் கிளாமரும் எனக்கு ஒத்து வராது என்று சொல்லும் ஹீரோயின் ஆனந்தி, ‘த்ரிஷா இல்லனா’ நயன்தாரா படத்துக்குப் பிறகு இந்தப் படத்திலும் இரண்டாவது முறையாக டபுள் மீனிங் டயலாக்கை பேசியிருக்கிறார். அர்த்தம் புரிந்துதான் பேசினாரா என்பதுதான் நமக்குத் தெரியவில்லை.
ஜி.வி.பிரகாஷின் உடல்வாகு, அவரது நடிப்புத் திறன் இதற்கேற்றாற்போல் பெரிய மாஸ் ஹீரோவாக அவரை ஆக்காமல் காமெடி ஹீரோவாகவே உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். நல்லவேளை தப்பித்தார் என்றே சொல்ல வேண்டும். ஜி.வி.யெல்லாம் சண்டை போட்டு ஜெயிக்கிறார் என்றால், தியேட்டர் கேண்டீனில் காபி விற்பவன்கூட கை தட்ட மாட்டான்.
‘டார்லிங்’, ‘பென்சில்’ படத்தில் பார்த்த அதே ஜி.வி.யாகத்தான் இதிலும் இருக்கிறார். இதுதான் மிகப் பெரிய குறை. படத்திற்கு படம் எதையாவது புதுமையாக செய்தால் ஒழிய விமர்சனம் எழுதுபவர்களுக்கு ஜி.வி.பிரகாஷை பாராட்ட வார்த்தைகள் கிடைக்க வாய்ப்பேயில்லை. இதில் தனது அம்மாவான நிரோஷாவிடம் பேசும் சில காட்சிகளிலும், ரத்தம் பார்த்து பயந்துபோய் நடுக்கத்துடன் நிற்கும் காட்சிகள்.. மற்றும் சில நகைச்சுவை துணுக்குத் தோரணங்களிலும் இயல்பாக நடித்திருக்கிறார். அவ்வளவுதான்..!
அப்படியென்ன அழகி இவர் என்று கேட்க வைக்கிறார் ஆனந்தி. நடிப்பும் என்னவென்று தெரியவில்லை. கொடுத்த வசனங்களை நச்சென்று சரியாகப் பேசியிருக்கிறார். அவ்வளவுதான்.. இதுவே நடிப்பென்றால்.. நாம் வேறொன்றும் சொல்வதற்கில்லை.
உண்மையாகவே நடிப்பென்றால் சரவணனும், யோகி பாபு, கருணாஸ், வில்லனாக நடித்த லாரன்ஸ் ஆகியோர் நடித்தவைதான். உண்மையாகவே இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நகைச்சுவையையும் தாண்டி கேங்ஸ்டர் கதையாகவே படம் சீரியஸாகவே நகர்கிறது. இவர்கள் இல்லாத காட்சிகளில்தான் நகைச்சுவையாகத் தெரிகிறது.
நிரோஷாவையும், சரவணனையும் சம்பந்தப்படுத்திய திரைக்கதையில் டிவிஸ்ட்டாக பிரகாஷின் அப்பாவான விடிவி கணேஷின் வருகையும், அதன் பின்னான காட்சிகளும் அந்த சிச்சுவேஷனுக்கு பொருத்தமாக இல்லாமல் தொலைவதால் ரசிக்க முடியாமல் போய்விட்டது.
நிரோஷாவை இவ்வளவு சீக்கிரமாக அம்மா கேரக்டரில் பார்க்க நேர்வதை நினைத்தால் காலத்தை பார்த்து திட்ட வேண்டும் போலிருக்கிறது. எப்படியிருந்தவர் இப்படியாகிவிட்டார்..? ஆனாலும் நிறைவான நடிப்பு.
கடைசி கட்டத்தில் வரும் மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், பொன்னம்பலம் என்ற மூவர் கூட்டணியின் அலம்பல்களும், சுவையான திரைக்கதையும் படத்தை நல்லவிதமாக முடிக்க வைத்திருக்கிறது.
சரவணன் வில்லன் மோதல் நடக்கும் நேரத்தில் ஜி.வி.பிரகாஷின் என்ட்ரியும், அதற்கடுத்த படா படா காட்சிகளும், சரவணன் குடும்பத்தினரைத் தேடி வில்லனின் அடியாட்கள் குடியிருப்புகளில் தேடும் காட்சிகளும் செம விறுவிறுப்பு. இப்படி சீரியஸாக ஓடிக் கொண்டிருக்கும் படத்தில் திடீர், திடீரென்று நகைச்சுவையை கலந்து நமக்கு பிரேக் போட்டிருக்கிறார் இயக்குநர்.
ஜி.வி.பிரகாஷிடம் இசை சரக்கு தீர்ந்துவிட்டதுபோலும்.. காலத்தால் அழிக்க முடியாத எம்.எஸ்.வி.யின் பாடல்களை ரீமிக்ஸ் என்கிற பெயரில் சிதைத்து வந்த கொடுமை, சில மாதங்களாக நின்றிருந்த்து. ஆனால் இப்போது மீண்டும் இந்தப் படம் மூலமாக துவங்கிவிட்டது.
‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் இடம் பெற்ற ‘கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்’ பாடலை இதில் ரீமிக்ஸ் செய்து கொலை செய்திருக்கிறார்கள். அதேபோல் ‘குங்குமப் பூவே கொஞ்சு புறாவே’ என்கிற சந்திரபாபுவின் பாடலையும் ரீமிக்ஸ் செய்து தனது இசை நேரத்தை ஒப்பேற்றியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இவ்ளோ சீக்கிரம் ஜி.வி.பிரகாஷ் ரிட்டையர்டு ஆவார் என்று எதிர்பார்க்கவில்லை. இப்போது தெரிகிறதா யார் இசையமைப்பாளர்கள் என்று..?
கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு நன்று. படத்தின் இறுதிவரையிலும் படத்தின் சிச்சுவேஷனுக்கேற்றாற்போன்று கதையின் போக்கு மாறிவிடாமல் ஒளிக் கலவை செய்திருக்கிறார்கள். இதேபோல் எடிட்டர் ஆண்டனி ரூபனின் பங்கும் மிகப் பெரியது. இது போன்ற கலவையான படங்களில் நகைச்சுவையும், சீரியஸும் மிஸ்ஸாகிவிடாமலும், அந்த பீலிங் தொடர்ச்சியாக வரும்படியும் பார்த்துக் கொள்வது மிக சிரமம். இதில் படத் தொகுப்பாளரின் உதவியால் இயக்குநர் இதைச் சாதித்திருக்கிறார். பாராட்டுக்கள்.
ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் இது சீரியஸ் படமா..? அல்லது நகைச்சுவை படமா என்கிற குழப்பத்திற்குள் கொண்டு வந்து, படத்தை முடித்திருப்பதால் படத்தின் தன்மையை ஒரு வரியில் சொல்ல முடியவில்லை.
ஆனால் தியேட்டரில் 2 மணி நேர எண்ட்டெர்டெயின்மெண்ட்டுக்கு இந்தப் படம் உத்தரவாதம் என்பது மட்டும் உண்மை. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் செப்பனிட்டிருந்தால் படம் ஹிட் அடித்திருக்கும் என்பதும் உறுதி.
இயக்குநர் அடுத்தப் படத்தில் இதைவிடவும் ஜெயிக்கட்டும்..!

காதல் அகதீ - சினிமா விமர்சனம்

20-06-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘தூத்துக்குடி’, ‘மதுரை சம்பவம்’ ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்ற முன்னாள் நடனப் பயிற்சியாளர் ஹரிகுமார், முந்தைய படங்களின் கவனிப்பை மனதில் வைத்து ஹீரோவாக நடித்திருக்கும் அடுத்தப் படம்.
சென்ற மாதமே படம் வெளியானது. ஆனால் வந்தது தெரியாமலேயே பெட்டிக்குள் முடங்கிப் போனதால், மீண்டும் மேள, தாள வாத்தியங்களோடு புதிய படம்போல இந்த வாரம் புது ரிலீஸாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துக் கொண்டு அந்த மார்க்கெட்டிலும் ஒரு தாதாவாக திகழ்கிறார் ஹரிகுமார். இவர் தாதா என்றால் எதிர்ப்பாளர்கள் என்று ஒரு டீம் இருக்கத்தானே செய்யும். அவர்களுக்கும், இவருக்கும் கடும் சண்டை.
இந்தச் சண்டையை பார்க்கும் ஹீரோயின் ஆயிஷாவுக்கு வழக்கம்போல ஹீரோ மீது காதல். இது ஒரு டூயட் பாட உதவுகிறது. சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையோடு சென்னைக்கு வந்திருக்கும் ஹீரோயினின் மாமா மகனான சுதர்சன், ஹரிகுமாரின் கடையில் வேலைக்கு சேர்கிறான்.
அன்றைய இரவிலேயே ஹரிகுமாரை கொல்ல வந்த கும்பலிடமிருந்து அவரைக் காப்பாற்றுகிறான் சுதர்சன். இதனால் சுதர்சன் மீது மிகுந்த பாசம் கொண்ட ஹரிகுமார், அவனை தன் வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்கிறார்.
தன் மாமா மகனை பார்க்க வருவதுபோல ஹரியின் வீட்டுக்குள் வரும் ஹீரோயின், ஹீரோ மீதான தனது காதலை வெளிப்படுத்த ஹீரோவும் அதை ஏற்றுக் கொள்ள… அடுத்த டூயட்டும் ரெடி.
ஆனால் இந்தக் காதலை ஹீரோயினின் அப்பா ஏற்க மறுக்கிறார். “ஒரு ரவுடிக்கு என் மகளைத் தர மாட்டேன்…” என்கிறார். ரவுடியிஸத்தை விட்டுவிடுவதாக ஹரிகுமார் வாக்குறுதியளிக்க திருமணம் நடந்தேறுகிறது.
முதல் இரவு அன்றே ஹரியின் வீட்டுக்கு வரும் எதிரிகள் ஹரியின் மாமனாரை கொலை செய்கிறார்கள். ஹரியையும் கடுமையாகத் தாக்கிவிட்டுப் போகிறார்கள். இந்த்த் தாக்குதலில் ஹரியின் தலையில் பலத்த அடிபட்டதால் அவருக்கு சிந்தை கலங்கி குழந்தை போலாகிறார்.
தனது கணவரை வீட்டுக்கு அழைத்து வந்து கவனமாகப் பார்த்துக் கொள்கிறார் ஹீரோயின். இந்த இடைவெளியில் ஹீரோயினுக்கு குழந்தை உண்டாகிறது. ஆனால் ஹீரோ திடீரென்று வீட்டைவிட்டு வெளியேறி வன்முறையில் இறங்க.. அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
அங்கேயிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்படுபவர் வீட்டில் குழந்தை இருப்பதை பார்த்துவிட்டு, இது ஹீரோயினின் கள்ளக் காதலில் பிறந்ததோ என்று சந்தேகப்பட்டு கொலை வெறியாகிறார்.
அப்படியிருந்தும் தன் காதல் கணவனை காப்பாற்றவே நினைக்கிறார் ஹீரோயின். அது முடிந்ததா இல்லையா என்பதுதான் படமே.
‘மதுரை சம்பவம்’ ஓடியதற்குக் காரணமே படத்தின் திரைக்கதையும், ஹீரோயின் அனுயாவும்தான். இதையே மனதில் வைத்து ஹீரோத்தன படங்களில் தொடர்ந்து வருகிறார் நடிகர் ஹரிகுமார்.
சிறந்த கதையும், அதைவிட சிறந்த திரைக்கதையும், இது இரண்டையும்விட சிறந்த இயக்கமும் இருந்தால்தான் ஜெயிக்க முடியும்.
இதில் கதையென்று ஒரு பெரிய விஷயமே இல்லை. அதைவிட திரைக்கதை படு மோசம். ஹீரோ என்னவாக இருக்கிறார் என்பதையே மருத்துவ மொழிகளில் சொல்வதற்குக்கூட இயக்குநரால் முடியவில்லை. மனநல மருத்துவமனையின் ஆக்டிவிட்டீவ்களில் நம்பகத்தன்மையும் இல்லாமல் எல்லாமே ஏனோ, தானோவென்று படமாக்கியிருக்கிறார்கள்.
ஹரிகுமாருக்கு நினைவுகள் திரும்பிவிட்டதா..? மனைவி, சுதர்சனை அடையாளம் கண்டு கொண்டாரா என்பதே தெரியாமல்.. அவர் சுதர்சனை கொலை செய்யப் போகிறார் என்று முன்கூட்டியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அது எதற்கு என்பதை விலாவாரியாக வசனத்தில் சொல்லியிருக்க வேண்டாமா..? நாமாக ஊகித்துக் கொள்ள வேண்டியிருக்கு..
ஹரிகுமார் சுமாராக நடித்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளே ஹீரோவுக்கு போதும் என்று நினைத்துவிட்டார் போலும்.. இயக்கமே இல்லை என்னும்போது இவரைக் குற்றம் சொல்லி என்ன பயன்..?
ஆயிஷா என்னும் ஹீரோயின் முகத் தோற்றமே பரவாயில்லை ரகம். நடிப்பு இன்னும் பரவாயில்லை என்றுதான் சொல்ல முடியும். நடிப்புக்கேற்ற காட்சிகள் இருந்தும் இயக்குதல் இல்லாமல் இவரும் சொதப்பியிருக்கிறார்.
ஆயிஷாவின் மாமா மகனாக நடித்திருக்கும் சுதர்சன்.. புதுமுகம் என்பது இவரது நடிப்பிலேயே தெரிகிறது. அடுத்த முறை வேறொரு இயக்குநர் கைபட்டு நன்றாக வரட்டும்.
பாண்டியராஜன், பிளாக் பாண்டி, தேவதர்ஷினி, சிங்கமுத்து, மனோகர் என்று ஒரு கோஷ்டியே படத்திற்கு பெரிதும் முட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இவர்களும் இல்லையெனில் நமக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கும்.
பர்கான் ரோஷனின் இசையில் பாடல்கள் ரொம்பவே சுமார் ரகம். ஷ்யாம்ராஜ் ஒளிப்பதிவில் அவ்வப்போது வெளிச்சம் போய், போய் வருவதையெல்லாம் எப்படி விட்டார்கள் என்று தெரியவில்லை.
சொதப்பலான திரைக்கதை, அப்பட்டமான லாஜிக் மீறல்கள், சிறப்பில்லாத இயக்கம் என்று பலவும் இந்தப் படத்திற்குக் கேடுதான் விளைவித்திருக்கின்றன.  
காதல் அகதீ நம்மை அகதியாக்கிவிட்டது..!