சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா...!

31-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் திரைப்படங்கள் மட்டும் பங்கு பெறும் ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா தற்பொழுது இந்தியாவில் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

மார்ச் 5-ம் தேதி ஆரம்பித்து, டெல்லி, மும்பை, புனே, கோழிக்கோடு, சென்னை, ஜாம்ஷெட்பூர் என்ற பல பிரதேச நகரங்களில் வருகின்ற ஏப்ரல் 22-ம் தேதி வரையிலும் இத்திரைப்படத் திருவிழா நடைபெறுகிறது.

இந்த வரிசையில் வருகின்ற ஏப்ரல் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரையிலும் சென்னையில் இத்திரைப்பட விழா நடைபெறும்.


சென்னை அண்ணா சாலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் இத்திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. கடைசி நாளைத் தவிர மற்ற நாட்களில் மாலை 6.15 மணிக்கு முதல் திரைப்படமும், இரவு 8.15 மணிக்கு மற்றொரு திரைப்படமும் திரையிடப்படும்.

இத்திரைப்படவிழா சென்னை ICAF அமைப்போடு இணைந்து நடத்தப்படுகிறது.

இத்திரைப்பட விழாவில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியல்

03-04-2009 – 6.15 மணிக்கு Czech Dream (Czech Republic)

8-15 மணிக்கு The Black Pimpernel (Sweden)

04-04-2009 – 6.15 மணிக்கு Could This be love (France)

8-15 மணிக்கு Do not think about it (Italy)

05-04-2009 – 6.15 மணிக்கு Teah (Slovenia)

8-15 மணிக்கு Happy Family (Netherlands)

06-04-2009 – 6.15 மணிக்கு Relatives (Hungary)

8-15 மணிக்கு Seven Billiards Tables (Spain)


07-04-2009 – 6.15 மணிக்கு Arabian Nights (Luxembourg)

8-15 மணிக்கு Beauty of the Bastard (Finland)
08-04-2009 – 6.15 மணிக்கு Return of the Storks (Slovakia)
8-15 மணிக்கு The Front Line (Ireland)

09-04-2009 – 6.15 மணிக்கு Hania (Poland)

8-15 மணிக்கு Sophie Scholl – The Last Days (Germany)
10-04-2009 – 6.15 மணிக்கு Totally Married (Greece)

8-15 மணிக்கு A Perfect Match (Belgium)
11-04-2009 – 6.15 மணிக்கு Welcome Home (Austria)

8-15 மணிக்கு Fighter (Denmark)

12-ம் தேதி நிறைவு விழாவன்று Trial (Portugal) திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

ஆர்வமுள்ள உலக சினிமாவின் ரசிகர்களை அன்போடு வரவேற்கிறேன்..

பிளாஷ் நியூஸ்-தி.மு.க. கூட்டணி-தொகுதிகள் அறிவிப்பு

29-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகளின் பட்டியலை கலைஞர் இன்று வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. போட்டியிட உள்ள 21 தொகுதிகள்

தென்சென்னை
மத்திய சென்னை
வடசென்னை
பெரும்புதூர்
திருவள்ளூர்(தனி)
அரக்கோணம்
தர்மபுரி
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
தஞ்சாவூர்
பெரம்பலூர்
நாமக்கல்
கரூர்
பொள்ளாச்சி
நீலகிரி(தனி)
மதுரை
நாகை(தனி)
ராமநாதபுரம்
தூத்துக்குடி
கன்னியாகுமரி

காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள 16 தொகுதிகள்

காஞ்சிபுரம்(தனி)
ஆரணி
கடலூர்
ஈரோடு
திருப்பூர்
சேலம்
கோவை
மயிலாடுதுறை
சிவகங்கை
திண்டுக்கல்
தேனி
திருச்சி
விருதுநகர்
தென்காசி(தனி)
நெல்லை
புதுச்சேரி

விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிட உள்ள 2 தொகுதிகள்

விழுப்புரம்(தனி)
சிதம்பரம்(தனி)

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதி

வேலூர்

தி.மு.க. தலைவராக வர ஆசைப்பட்டவர் யார்? கலைஞரின் கவிதை..!


29-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழினத் தலைவர், தன்மானத் தலைவர், தமிழர் தலைவர், சிங்கத் தலைவர், தமிழர்களின் தன்னிகரல்லாத தலைவர், உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர், டாக்டர் கலைஞர் (அப்பாடா முழுசும் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்..! என்னை யாரும் திட்டமாட்டீங்களே..!) பல வருட ரகசியம் ஒன்றை தன் மனதுக்குள்ளேயே வைத்திருந்து புழுங்கிக் கொண்டிருந்தவர், நேற்றைய தினம்வரையில் நடந்த தேர்தல் கூத்துக்களால் மனம் வெதும்பிப் போய் நேற்றைக்கு தனது மனம் திறந்து, அந்த ரகசியத்தை தனது வழக்கமான கவிதைத் தமிழில் கொட்டித் தீர்த்திருக்கிறார். படித்துப் பாருங்கள்..!

இனி கலைஞர் எழுதியது :

எல்.ஜி., செஞ்சி, ஆகியோரைத் தொடர்ந்து மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன், டி.கே.சுப்பு ஆகியோர் மீண்டும் தாய்க்கழகத்திற்கு வந்து இணைந்தபோது அவர்களுடன் தனித்து உரையாடிய நேரத்தில் எழுந்த நினைவலைகள் இவை..

குமரிமுனை கடற்கரை விருந்தினர் மாளிகையில்
குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தேனாம்;
அந்த நள்ளிரவில் நமது தம்பிமார்கள்
ஆற்காட்டார், துரைமுருகன் இன்னொருவர்
மாடி தாழ்வாரத்தில் தி.மு.க. வருங்காலம் பற்றி
வானம் வெளுக்கும்வரை உரையாடினாராம்;
அப்போது நான் பேர் சொல்லா அந்தத் தம்பி
ஆற்காட்டாரையும், துரைமுருகனையும் பார்த்து
கலைஞருக்குப் பின் கழகத் தலைவர் ஸ்டாலினா? என
வெகுண்டெழுந்து கேட்டாராம்;
எப்படிச் சொல்கிறாய் என தம்பியர் கேட்டவுடன்
பேராசிரியர் புகழுரைகள் ஸ்டாலினைப் பற்றி
மழையாகப் பொழிகிறதே என்றாராம் அந்தத் தம்பி;
அன்பழகனார் பேசுவதில் என்ன தவறு..?
கலைரையே உறைத்துப் பார்த்து
பிறகுதான் ஒப்புக் கொண்டார் தலைவராக
இப்போது கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்
என்ற பேச்சுக்கு நீர் ஏன் நெருப்பை
தொட்டதுபோல் துடிக்க வேண்டும்..?
கலைஞரே உம்மை போர்வாள் என்று புகழ்கிறார்;
மாநிலங்களவை பதவியை உமக்கு
தொடர்ந்து வழங்கியிருக்கிறார்;
தனக்குப் பிறகு உம்மைத்தான்
தலைவராக்குவார் இயக்கத்திற்கு என்று கூறி
அந்தத் தம்பியின் முகத்தில் ஒளிபிறக்க
செய்தார்கள் ஆற்காட்டாரும், துரைமுருகனும்;
புன்னகை தவழ்ந்த அந்தத் தம்பியின் முகத்தில்
புதியதோர் சிந்தனை கேள்வியாக மாறியது;
ஒருவேளை கலைஞரும் பெரியார் ராஜாஜி போல
தொண்ணூறு வயதுக்குமேல் வாழ்ந்தால்
நான் எத்தனை வருடம் காத்திருப்பது..?
இதைக் கேட்ட மற்ற இரு தம்பியரும்
தேள் பிலிற்றும் விஷமாக எண்ணிக் கலங்கி
ரகசியமாக சத்தியம் செய்து கொண்டார்கள்;
இந்தச் செய்தியை தலைவரிடம் சொல்வதில்லையென்று
துரைமுருகன் ரகசியம் காப்பதில் இரும்புப் பெட்டி;
ஆற்காட்டாரோ கண்ணாடிப் பிழை;
எனினும் ஆண்டுகள் கடந்த பிறகே
குமரிமுனையில் குமுறிய எரிமலையின்
குட்டைமன பேராசையை கூறினர் எனக்கு;
செப்பின் புண்ர்ச்சிபோற் கூடினும் கூடாதே
உட்பகை உற்றகுடி
(செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித் தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகை உள்ளவர்கள் உளமார பொருந்தியிருக்க மாட்டார்கள்)
என்பது 'குறளோவியம்' நூல் தொகுப்பில் நான் குறிப்பிடாமல் விட்டுப் போன குறட்பா..!

டிஸ்கி : இந்தக் கவிதைக் கதை உண்மையா? பொய்யா?ன்னு சின்னப்புள்ளத்தனமால்லாம் கொஸ்டீன் கேக்கக் கூடாது.. சொல்லிப்புட்டேன்..! 'போர்வாளின்' பதில் கவிதை இன்னமும் வரவில்லை.. வந்தா தெரிஞ்சிருமே..!

ப்ளாஷ் நியூஸ்-தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு அறிவிப்பு

28-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான இடப்பங்கீடு இன்றைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸின் நவக்கிரகங்களான மாநிலத் தலைவர் தங்கபாலு, பொருளாளர் டி.சுதர்சனம், மத்திய அமைச்சர்கள் வாசன், இளங்கோவன், சிதம்பரம் அடங்கிய குழு காலையில் சத்தியமூர்த்தி பவனில் தீவிர ஆலோசனை செய்துள்ளது.

இதன் பின் தொகுதிகளை இறுதி செய்ய சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்தும் இந்தப் பேச்சில் கலந்து கொண்டிருக்கிறார்.

பின்பு மாலையில் இந்தக் குழு கலைஞரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அதன் முடிவில் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள் முடிவாகியுள்ளது.

அதன் பின் அறிவாலயத்தில் கலைஞர், குலாம்நபி ஆசாத், சிதம்பரம், திருமாவளவன் ஆகியோரை வைத்துக் கொண்டு கலைஞர் தொகுதி உடன்பாடு பற்றியத் தகவல்களை வெளியிட்டார்.

தி.மு.க. 21 இடங்களில் போட்டியிடப் போகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி இல்லாததால் அதனை ஈடுகட்டும் பொருட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 இடமாம். மொத்தமும் முடிந்துவிட்டது.

எந்தக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிப்பதாக பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கலைஞர் தெரிவித்துள்ளார். மேலும் மனித நேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கலைஞர் தெரிவித்துள்ளார்.

மனித நேய மக்கள் கட்சி 2 இடங்களைத் தற்போதைக்குக் கேட்டு வருகிறது. அதில் ஒன்று நிச்சயமாக கிடைக்கும் என்று தி.மு.க.வினர் சொல்கிறார்கள். அந்த ஒரு தொகுதியையும் தி.மு.க. தனது தொகுதியிலிருந்தே விட்டுக் கொடுக்குமாம்..

ப்ளாஷ் நியூஸ்-ஜெயலலிதா-ராமதாஸ் சந்திப்பு-தொகுதி உடன்பாடு முடிவானது

28-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டதைப் போல மருத்துவர் ஐயா, தனது அன்புச் சகோதரியை இன்று காலை 10.40 மணிக்கு போயஸ் தோட்டத்து இல்லத்தில் சந்தித்துவிட்டார்.

மருத்துவருடன், பா.ம.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் கோ.க.மணி, ஏ.கே.மூர்த்தி, அம்பத்தூர் நகரசபைத் தலைவர் சேகர் ஆகியோரும் உடன் வந்தனர். இவர்களை அ.தி.மு.க. சார்பில் தம்பித்துரை, ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

வாசலில் வந்து நின்று சகோதரி தனது மூத்த சகோதரரை வரவேற்ற பாங்கு தொலைக்காட்சியில் பார்த்தபோது புல்லரிக்க வைத்தது. அண்ணன் கொடுத்த பூங்கொத்தை வாங்கிக் கொண்ட அன்புச் சகோதரி, அண்ணனை வீட்டுக்குள் அழைத்துச் சென்று அமர வைத்து பேசினார். அப்போது இரு கட்சிகளுக்கிடையிலான தேர்தல் உடன்பாடு பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். உள்ளே போன 15 நிமிடத்தில் பேச்சுவார்த்தை முடிந்து பாசமலர் அண்ணன் கேட்ட தொகுதிகள் அனைத்தையும் அருமைத் தங்கை ஓகே செய்துவிட்டாராம்.

வெளியில் வந்த பாசமலர்களான அண்ணனும், தங்கையும் பத்திரிகையாளர்களை ஒன்றாகவே சந்தித்தார்கள். அப்போது தங்கை பேசுகையில், "அ.தி.மு.க.வும், பா.ம.கவும் கூட்டணி அமைத்து நடைபெற உள்ள 2009 பாராளுமன்றப் பொதுத் தேர்தலை சந்திக்க உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், அண்ணன், டாக்டர் அண்ணன் அவர்களுக்கும் எனக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், 2010-ம் ஆண்டில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் பா.ம.க.வுக்குக் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.." என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பேசிய பாசமலர் அண்ணன் அவர்கள், "அ.தி.மு.க. பொதுச் செயலாளர் அன்புச் சகோதரி அவர்களோடு பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் சாதாரண வெற்றியல்ல, மகத்தான வெற்றியை இந்தக் கூட்டணிதான் பெறப் போகிறது.. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்ததற்கு பெரும் பெரும் மகிழ்ச்சிய அடைகிறேன்..” என்று உணர்ச்சிப் பெருக்கோடு குறிப்பிட்டார்.

பின்பு பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அன்புத் தங்கை பதிலளித்தார்.

கேள்வி - உங்கள் கூட்டணியில் மற்றக் கட்சிகளுக்கு எத்தனைத் தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன?

அன்புத்தங்கையின் பதில் - கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் உடன்படிக்கை ஏற்படும்.

கேள்வி - 3-வது அணியில் பா.ம.க. இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே..

அன்புத்தங்கையின் பதில் - அ.தி.மு.க. அணியில் இருப்பதாக அவரே சொல்லியுள்ளார்.

கேள்வி - ராமதாஸ் உங்கள் கூட்டணியில் இணைந்ததால் அரசியலில் எத்தகைய மாற்றம் ஏற்படும்..?

அன்புத்தங்கையின் பதில் - 8 ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் அண்ணனை சந்தித்துள்ளேன். இது மகிழ்ச்சியான தருணம். இந்தியா முழுவதும் உள்ள அரசியல் வல்லுநர்கள் இந்தக் கூட்டணியைத் தோற்கடிக்க முடியாத கூட்டணி என்று கூறியுள்ளனர்.

கேள்வி - வெற்றி பெறுவோம் என்று நீங்கள் எதை வைத்து உறுதியாகச் சொல்கிறீர்கள்..?

அன்புத்தங்கையின் பதில் - தேர்தல் முடிந்த பின்பு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்..

இந்தக் கடைசிக் கேள்விக்குப் பிறகும் மேலும் தொடர்ந்து பேட்டியளிக்க அன்புத்தங்கை, அம்மா, தங்கத் தலைவி, தங்கமங்கை, தன்மானத் தலைவி, புரட்சித்தலைவிக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு..? இத்தோடு பேட்டி முடிந்தது என்று சொல்லிவிட்டார்.

பின்பு பாசமலர்கள் மீண்டும் வீட்டுக்குள் சென்று ஒரு சிறு ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். 5 நிமிடங்கள் கழித்து மருத்துவர் ஐயாவும், அவருடன் வந்தவர்களும் வந்த வேலை முடிந்தது என்று கிளம்பியிருக்கிறார்கள். மருத்துவர் ஐயாதான் அடுத்து மறுபடியும் தனது அன்புச் சகோதரியை அடுத்து சட்டமன்றத் தேர்தலின்போதுதான் பார்க்க முடியுமோ என்கிற கலக்கத்தில் சென்றிருப்பதாக உளவுத்துரைத் தகவல்..

அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மருத்துவர் ஐயா தோட்டத்தில் இருந்தபோது உற்சாக மிகுதியில் தொண்டர்கள் விசிலடித்து, கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்துள்ளனர். மேலும் வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு தொண்டர்களே ஸ்வீட் கொடுத்து உபசரித்துள்ளனர்.

காலையில் சந்திப்பு முடிந்த பின்பு மதியம் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சிதம்பரம்(தனி), தர்மபுரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளி்ல் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடவே பா.ம.கட்சி வட்டாரத்தில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களின் பெயர்களையும் லேசுபாசாகத் தெரிவித்துள்ளார்கள்.

அதன்படி ஸ்ரீபெரும்புதூர்-ஏ.கே.மூர்த்தி, தர்மபுரி - டாக்டர் செந்தில், கள்ளக்குறிச்சி - தன்ராஜ், திருவண்ணாமலை-காடுவெட்டி குரு, அரக்கோணம்-வேலு, சிதம்பரம்-இன்ஜீனியர் கண்ணபிரான், புதுச்சேரி-தற்போதைய எம்.பி.யான ராமதாஸ் என்று சொல்கிறார்கள்.

2010-ல் கிடைக்கப் போகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி சந்தேகமேயில்லாமல் டாக்டரின் இளவலுக்குத்தான்..

இடம் மாறிவிட்டதால் மத்திய அமைச்சர்களாக கொலுவீற்றிருந்த இளவல் மருத்துவத் துறை அமைச்சர் அன்புமணியும், ரயில்வே துறை துணை அமைச்சர் வேலுவும் இன்று மாலை டெல்லி சென்று பிரதமரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பித்துவிட்டனர். அப்பாடா.. விட்டதடா தொல்லை என்று மன்மோகன்சிங் இன்று இரவு நிம்மதியாகத் தூங்குவார் என்று நினைக்கிறேன். இவர் மட்டுமல்ல தன்மானத் தலைவரும்தான்..!

இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார்-26-03-2009

26-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சக்கைப் போடு போடும் குத்தாட்ட சிடிக்கள்..!

தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் நண்பரொருவர் என்னைப் பார்க்க வந்தார். கையோடு ஒரு சிடியை கொண்டு வந்திருந்தார். பேச்சுலர் வீடுதானே என்பதால் "இதை கண்டிப்பா இப்பவே போட்டுப் பார்க்கணும்..." என்றார். அவருடைய அன்புத் தொல்லையால் பார்க்க வேண்டியதாகிவிட்டது.

ஒரு மேடை. மேடையில் நடைபெறுவது நடன நிகழ்ச்சி என்பது புரிந்தது. சினிமாவில் வருவதைப் போல சிக்கனமான உடையில் வந்த ஒரு யுவதியும், ஆடவனும் ஆடத் தொடங்கினார்கள். பாடல் 'அந்த நிலாவைத்தான கைல புடிச்சேன்.. என் ராசாத்திக்காக' என்று ஒலிக்கத் துவங்கியது.. ஆரம்பத்தில் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

திடீரென்று ஏதோ பிட்டு படத்தில் வருவதைப் போல் அவர்களுடைய செய்கைகளும், நடன அசைவுகளும் வர.. திக்கென்றானது. பிட்டு சினிமாவில் என்றால் சரி.. ஆபாசப் படத்தில் என்றால் சரி.. இப்படி பொதுமேடையில் என்றால் எப்படி..?


நண்பர் விளக்கமாகச் சொன்னார். இப்போதெல்லாம் கிராமப்புறங்களில் நடைபெறும் கோவில் விழாக்களில் இப்படி ஆடும் நடனக் குழுக்கள்தான் ஏற்பாடு செய்யப்பட்டுகின்றனவாம். 5 பெண்கள் 5 ஆண்கள் என்று வருவார்களாம். மொத்த ஆட்டமும் இப்படியான கெட்ட ஆட்டமாகத்தான் இருக்குமாம்.. நிகழ்ச்சி முடிந்த பின்பு தேவையெனில் அந்த ஊர்க்கார பெரிய மனுஷங்களுக்காக தனியிடத்தில் ஆதாம், ஏவாள் தோற்றத்திலும் ஒரு நடனம் ஆடிக் காட்டப்படுமாம்.. இதற்கு தனியாக பில்லாம்..

அந்தப் பெண்கள் ஆடியதைப் பார்த்தால் ஏதோ அவர்களைக் கட்டாயப்படுத்தி ஆட வைப்பதுபோலவோ, வேறு வழியில்லாமல் அவர்கள் ஆடுவது போலவே என் கண்ணுக்குத் தெரியவில்லை. மிக, மிக ஈடுபாட்டோடு ரொமான்ஸை பிழிந்து காட்டுகிறார்கள் அந்த யுவதிகள். மேடையில் பாடலுக்கு பாடல் காமரசம் சொட்டுகிறது.. கோவில் திருவிழாக்களிலேயே இப்படி ஏற்பாடு செய்யப்பட்டால் எவனுக்கு பக்தி உண்மையாக வரும்..?


சிடி முழுவதையும் பார்த்தேன். தொடர்ச்சியாக வில்லங்கமான பாடல்கள்தான்.. விரசமான அசைவுகள்.. ஆட்டங்கள்.. அதிலும் கடைசி மூன்று பாடல்களுக்கு மேடையிலேயே மழை பெய்வதைப் போல செட்டப் செய்து தண்ணீரில் நனைந்தபடியே தங்களது தேகத்தின் தாகத்தைக் காட்டுகிறார்கள். சினிமா செத்தது போங்க..

கிராமப்புறங்கள் ஏதோ இந்த விஷயத்தில் பின்தங்கியிருக்கிறது என்கிறார்கள். அது சுத்தப் பொய் என்றே சொல்லலாம்... பர்மாபஜாரில் இந்தக் குத்தாட்டங்கள் அடங்கிய டிவிடிக்கள் அமோக விற்பனையாம். தமிழ் பிட்டு படங்களையே ஓரங்கட்டிவிட்டதாம்..

அசத்தலா சினிமா பாணியில எடிட்டிங் வேலையும், நகாசு வேலையும் செஞ்சு ரிலீஸ் பண்ணியிருக்குற இந்த வீடியோ கம்பெனியின் பெயர் 'சரவணா வீடியோ கேவரேஜாம்..' ஹி.. ஹி.. ஹி...!

--------------------------------------------------------------

வலையுலகத்திற்கு ஒரு புதிய வரவு..!

வலையுலகில் திரைப்படத் துறையைப் பற்றி பல்வேறு பதிவர்கள் தங்களுடைய கண்ணோட்டங்களைப் பகிர்ந்து வரும் வேளையில் திரைப்பட பத்திரிகையாளரும், விமர்சகரும், ஆய்வாளரும், எழுத்தாளருமான திரு.ஜெ.பிஸ்மியும் நமது வலைத்தளத்தில் ஒரு உறுப்பினராக இணைந்துள்ளார்.

திரைப்படத் துறையின் பல்வேறு பிரிவுகளில் பல வருட அனுபவம் பெற்றவரான இவருடைய பார்வை நிச்சயம் நமக்கு புதிதாக இருக்கும். பல்வேறு தகவல்களையும், திரைத்துறை சம்பந்தமான செய்திகளையும் தொகுத்து வழங்கும் இவரது தளம் இது. www.jbismiblog.blogspot.com

இன்னமும் இவர் எந்தத் திரட்டியிலும் இணையாததால் பதிவர்கள் பலரின் பார்வைக்குப் படாமல் இருக்கிறது. அதனால்தான் ஒரு சின்ன அறிமுகம்.

----------------------------------------------

கில்லாடி எம்.எல்.ஏ.!

அரசியல் அரங்கில் ஒரு திடீர் அதிரடி சினிமாக் கதை நடந்தேறியுள்ளது. வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் சி.ஞானசேகரன் 'விடுதலைச் சிறுத்தைகளை காங்கிரஸ் கூட்டணிக்குள் சேர்க்கக் கூடாது' என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார். கலைஞர் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக நடிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இவருக்குப் பதிலளித்திருக்கும் கலைஞர் 'ஞானசேகரன் அ.தி.மு.க. முன்னாள் மந்திரி ஒருவருக்கு சம்பந்தி ஆகப் போவதால் அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு மறைமுகமாகப் போராடுகிறார்..' என்று சாடியிருக்கிறார். என்னடா இது புதுமையாக உள்ளதே என்று விசாரித்தால்.. கொஞ்சம் சினிமாக் கதையும் நிரம்பியிருக்கிறது.

ஞானசேகரனின் மகன் நவீன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார். உடன் படிக்கும் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் தம்பித்துரையின் மகளை அவர் காதலிக்கிறாராம். இந்தக் காதலுக்கு ஞானசேகரன் தரப்பில் நோ அப்ஜெக்ஷன். ஆனால் தம்பித்துரை தரப்பில்தான் மறுப்பு பலமாக எழுந்துள்ளதாம்.

பையனின் காதலை வாழ வைக்க வேண்டி வீட்டுக்குள் இருக்கும் விஷயத்தை லேசாக லீக் செய்துவிட்டு, இப்போது தனக்கு முழு சம்மதம் என்றும் விரைவில் கல்யாணம் நடக்கும் என்றும் ஞானசேகரனே சொல்லிவிட்டார். கூடவே தம்பித்துரையிடம் மகனின் காதல் விஷயமாகப் பேசியதையே நிச்சயத்தார்த்தமே நடந்தேறிவிட்டதாகவும் போகிற போக்கில் சொல்லி பற்ற வைத்துவிட்டார் கில்லாடி எம்.எல்.ஏ. இதைச் சற்றும் எதிர்பார்க்காத தம்பித்துரை ஆடிப் போயிருக்கிறார். இப்படி கிடுக்குப்பிடி போட்டால் ஊரார் பேச்சுக்காகவாவது தனது மகனின் காதலுக்கு சம்பந்தி ஒத்துக் கொள்வார் என்பது ஞானசேகரனின் ஐடியாவாம்.. சூப்பரா இல்ல..?

ஏற்கெனவே தர்மபுரி தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த தம்பித்துரை, இப்போது பா.ம.க. வரவால் தொகுதியும் கிடைக்காமல்போய், பின்னாலேயே இப்படியொரு சோகமும் சேர்ந்துவிட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுடனான சம்பந்தி திருமணத்துக்கு அம்மாவை அழைக்க முடியுமா? என்ன..? பாவமான அப்பா..

ஏதோ காதலர்கள் ஒண்ணு சேர்ந்தா நல்லதுதான்.. வாழ்த்துவோம்..

--------------------------------------------------

எனதருமை கீபோர்டுக்கு ஒரு இரங்கற்பா..!


கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக என்னுடன் ஓருடலாக இருந்து வந்த எனதருமை கீபோர்டு 4 நாட்களுக்கு முன் உயிரைவிட்டுவிட்டது. மானிட்டருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதைப் போல் இதற்கும் செலுத்த வேண்டியது எனது கடமைதான் என்றாலும், நாள் தள்ளிப் போய்விட்டதால் இங்கே 'கருமாதி'யை மட்டும் செய்து கொள்கிறேன். அதன் ஆத்மா சாந்தியாகட்டும்.

உலகப் பொருளாதாரத்தின் ஏற்றம் காரணமாக, எனது அலுவலகத்தில் சம்பளம் கொடுத்து 3 மாதங்களாகிவிட்டாலும் கையில் இருந்த கடைசி கையிருப்பையும் காலி செய்ய வேண்டிய கட்டாயம். கீபோர்டு இல்லையேல் எனது கையை இல்லாதது போல் தோன்றுகிறது. என்ன செய்ய..?

புத்தம்புது டிவிஎஸ் கோல்டு கீ போர்டை ரிச்சி தெருவில் வாங்கினேன். விலை 1400 என்று சொல்லி, ரேட்டை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து 1100-க்கு வாங்கினேன். விலை உயர்ந்தது என்றாலும் தட்டச்சிற்கு மிகச் சிறந்த கீபோர்டு இதுதான். சும்மா கீல கையை வைச்சா பஞ்சா பறக்குதுல்ல..

பதிவர்கள் புதிதாக கீபோர்டு வாங்குவதாக இருந்தால் செலவு அதிகமானாலும் பரவாயில்லை.. தயவு செய்து இதனை வாங்கிப் பாவியுங்கள்.. ஒரு நாளைக்கு நாலு பதிவுகூட நீங்க போட முடியும்..

-----------------------------------------------

நியூட்டன் விதியின் 'விதி!'




'நியூட்டனின் மூன்றாம் விதி' என்கிற திரைப்படம் தயாரித்து அனைத்துப் பின் இயக்க வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகியும் படம் திரைக்கு இன்னமும் வந்தபாடில்லை. காரணம் விசாரித்தால் கொஞ்சம் சிரிப்பாக இருக்கிறது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இதற்கு முன்னால் 'மச்சக்காரன்' என்றொரு திரைப்படத்தைத் தயாரித்தார். 'திருட்டுப் பயலே' படத்தின் வெற்றியால் ஜீவனின் மார்க்கெட் சற்று உயர்ந்திருந்தால், அந்தத் திரைப்படத்தை அகோரமான விலைக்கு விற்றுவிட்டார்கள். விநியோகஸ்தர்களும் சபலப்பட்டு அதனை வாங்கிவிட்டார்கள். ஆனால் படம் திருட்டு விசிடியில் மட்டுமே அமோகமாக ஓடியிருக்கிறது. வாங்கியத் தொகையில் பாதிகூட தேறவில்லையாம்.

'ஏதாவது பார்த்து பண்ணுங்க' என்று சொல்லி விநியோகஸ்தர்கள் உரிமையுடன் கேட்க தயாரிப்பாளர் 'அதான்.. முடிஞ்சு போச்சே.. பிஸினஸ்னா பிஸினஸ்தான்' என்று அடித்துச் சொல்லியிருக்கிறார். 'மவனே எங்களுக்கும் நேரம் வரும்டி' என்று காத்திருந்த விநியோகஸ்தர்கள், இப்போது இந்தப் படத்தின் ரிலீஸின்போது தங்கள் வித்தையைக் காட்டிவிட்டார்கள்.

"மச்சக்காரன்' படத்தின் நஷ்டத்திற்காக ஒரு குறிப்பிட்டத் தொகையை அளித்தாலோ அல்லது குறைத்துக் கொண்டாலோதான் இந்தப் படத்தை வாங்குவோம்.." என்று விநியோகஸ்தர்கள் தரப்பு தங்களுக்குள்ளேயே சிண்டிகேட் அமைத்து குரலெழுப்பிவிட்டார்களாம்..

ஏற்கெனவே தனது அடுத்தடுத்தப் படங்கள் காலைவாரிவிட்டதால் ஏதோ ஒருவித காவியம் ரேஞ்சுக்கு(புகைப்படத்தை மீண்டும் பார்க்கவும்) படத்தை எடுத்திருப்பதாகச் சொல்லும் படத்தின் கதாநாயகன் சூர்யாதான் பாவம்.. தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார். படத்தை அடிமாட்டு ரேட்டுக்கு கேட்டால் தயாரிப்பாளர் எப்படி தருவார்..?

------------------------------------------------

என் சோகக் கதை..!

வலையில் வந்து மாட்டியும் தப்பிச் சென்றுள்ள சைக்கோ மறுபடியும் தனது வேலையை எனது 'போலிகள் ஜாக்கிரதை' பதிவில் காட்டியிருக்கிறார். கிட்டத்தட்ட 3 மணி நேரங்கள் செலவழித்து பாதி பின்னூட்டங்களை அழித்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் வெறுப்பாகிவிட்டது. அப்படியே இருந்து தொலையட்டும் என்று விட்டுவிட்டேன்..! வேறு என்ன செய்வது..?!

இதுவரையில் கமெண்ட்டு மாடுரேஷனை தூக்கிவிட்டிருந்தேன். இப்போது வலைப்பதிவர்களுக்காக அதனை மறுபடியும் செட் செய்ய வேண்டிய கட்டாயம். வேறு வழியில்லை எனக்கு. காலை 9.30 மணிக்கு மேல் பதிவர்கள் இடும் பின்னூட்டங்களை வேலை முடிந்து, இரவு வீடு திரும்பித்தான் ரிலீஸ் செய்ய வேண்டி வரும்.. பதிவர்கள் பொறுத்தருளுக..

நன்றி

வணக்கம்..!

பதிவர்கள் ஜாக்கிரதை..! மீண்டும் வந்துவிட்டார்கள் போலிகள்..!

24-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு வழியாகப் போலிகளையும், போலியின் அல்லக்கைகளையும் கொஞ்சம் அடக்கி, ஒடுக்கி அனுப்பிவிட்டு வலையுலகத்தில் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தோம்.

ஆனாலும் யாருக்கும் அடங்கமாட்டோம் என்பதைப் போல சில குள்ள நரிகள் அவ்வப்போது தங்களது வேலைகளைக் காட்டிக் கொண்டுதான் உள்ளன.

முதல் குறியாக ஒரு சிலரைக் குறி வைத்து அவர்களது தளங்களைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தம்பி பொடியன் சஞ்சய் மற்றும் எம்.எம்.அப்துல்லாவின் தளங்கள் பறி போயிருக்கின்றன. அடுத்து பரிசல்காரனின் பெயரில் பலவிடங்களில் பின்னூட்டங்கள் போடப்பட்டுள்ளன.

அடுத்து எனது பல பதிவுகளில் கீழ்க்கண்ட பின்னூட்டங்கள் சேலம் சிவகிரி என்கிற பெயரில் தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் போடப்பட்டன.

“டேய் எப்புடிடா இவ்ளொ பெரிசு பெரிசா நீள நீளமா எழுதுற. ஏண்டா உணக்கு வேற வேலயே இல்லயாடா? நைட்டெல்லாம் உக்காந்து எழுதுவியாடா? அட மாணங்கெட்டவனே? ஏன்டா என் பதிவ நீக்குற. தைரியமிருந்தா பதில் சொல்லுடா.இப்படி ஓடி ஒளிய்யாத.
//பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.//
நீ உயிரோட இருந்து இப்படி மொக்க பதிவுகளப் போட்டு எங்கள கொல்லுறதுக்கு பதில் நீ தூக்குல தொங்கலாம். அதையும் போட்டா எடுத்து உன் பதிவில போடு தேய்ந்து போன ரம்பமே!”

இப்படி ஆஸ்கார் விருதுக்குச் சமமான பாராட்டுரைகளோடு வந்த பின்னூட்டங்கள், எனது சமீபத்திய அனைத்துப் பதிவுகளிலும் இடப்பட்டன. அலுவலகத்தில் பின்னூட்டங்களை நீக்கும்படியான வசதி இல்லாத சூழலால், வீட்டிற்கு வந்துதான் அந்தப் பின்னூட்டங்களை நீக்கினேன்.

அதன் பிறகும் தொடர்ச்சியாக இதே பின்னூட்டம் எனது பதிவுகளில் வந்த வண்ணம் இருந்தது. நானும் மீண்டும், மீண்டும் நீக்கினேன்.

இவை அனைத்தும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்க .. இப்போது அதை விடுத்து போனிலேயே ஆள் மாறாட்டம் செய்து மிரட்டல் விட்டிருக்கிறார்கள்., விடுகிறார்கள்.

திங்கட்கிழமை 23-03-2009 அன்று நள்ளிரவு 12.03 மணிக்கு +21356864482 என்ற எண்ணில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. போனில் பேசியவர் எடுத்த எடுப்பிலேயே “மொக்கைத் தமிழன் இருக்காரா..?” என்றார். “நீங்கள் யார்..?” என்றேன்.. “நான் பொய்த்தமிழன் பேசுறேன்..” என்றார். யாரோ வலைப்பதிவர்தான்.. நம்மிடம் விளையாடுகிறார் என்கிற நினைப்பில் நானும் நல்லவிதமாகப் பேசினேன்.

ஆனால் அந்த நபர் ஆரம்பத்தில் இருந்தே குத்தல், கேலி, குதர்க்கமாக பேசிக் கொண்டேயிருந்தார். தான் ஒரு வ.வா.சங்க உறுப்பினர் என்றும்.. எங்கே என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்றெல்லாம் பேசினார். எனக்கும் இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வந்தது. நிஜமாகவே நமது தம்பிமார்களில் யாரோதான் விளையாடுகிறார்களோ என்று நினைத்து இதமாகவே பேசினேன்..

பேச்சு தொடர்ந்ததே தவிர, என்னால் அவரை அடையாளம் காண முடியவில்லை. இந்தப் பேச்சுவார்த்தையை உண்மையான நட்பாகவும் எடுத்துக் கொள்ள முடியாததால் சோர்வடைந்து நான் போனை வைக்கப் போவதாகச் சொன்னவுடன், “டேய்.. ஏண்டா மொக்கையைப் போட்டு உயிரை எடுக்குற..? ராத்திரில தூங்க மாட்டியாடா..? குட்நைட் சொல்லதடா.. குட்மார்னிங் சொல்லுடா.. டேய் குட்மார்னிங் சொல்லுடா..” என்று பேச்சு வாடா, போடா என்று ஏகவசனத்தில் குடிகாரன் பேச்சைப் போல் திரும்பி திரும்பிச் சொல்ல.. நான் உடனேயே போனை வைத்துவிட்டேன்.

திரும்பவும் அன்று இரவு 9.53 மணிக்கு +6628183917 என்ற எண்ணில் என்னை அழைத்த நபர் மீண்டும் அதே போல் பேச்சை ஆரம்பித்தார்.. மறுபடியும் “மொக்கைத் தமிழா.. மொக்கைத் தமிழா.. டேய் பொய்த் தமிழன் பேசுறேண்டா..” என்றெல்லாம் பேச்சு வர நானே போனை கட் செய்துவிட்டேன்..

நேற்று மதியம் எனது ஜேட்கூடி பதிவிலும் “சேலம் சிவகிரி” என்ற பெயரில் என்னை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்த அதே விமர்சனம் ஒன்று போடப்பட்டுள்ளது. அதனை சற்று நேரத்திற்கு முன்பாகத்தான் நீக்கினேன்..

கூடவே திருலோகு என்ற புதிய பதிவரிடம் எனது பெயரில் யாரோ ஒருவர் பேசியிருக்கிறார். சத்தியமாக அது நான் இல்லை.. அவர் இந்தப் பதிவில் http://muttalpaiyan.blogspot.com/2009/03/blog-post_5220.html அது பற்றி எழுதியுள்ளார்.

அது நான் இல்லை என்பதை தெரிந்து கொண்டதாக இன்னொரு பதிவையும் http://muttalpaiyan.blogspot.com/2009/03/blog-post_24.html திரு. லோகு அவர்கள் போட்டுள்ளார். என்னால் இவருக்கும் ஒரு தேவையில்லாத வேலை..! கஷ்டம்.

பதிவுலகத்திற்குள் இனிமேல் தினந்தோறும் ஏதாவது ஒரு வகையில் இது போன்ற கலாட்டாக்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஓடிப் போன கயவர்கள் வேறு, வேறு ரூபத்தில் உள்ளே நுழைந்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

அதற்கு உதாரணம், உதை வாங்கி மூட்டையைக் கட்டிக் கொண்டு ஓடிச் சென்ற "அனானி முன்னேற்றக் கழகம்" இப்போது திடுதிப்பென்று வந்து கடை விரித்துள்ளது. அந்தப் பதிவில் புதிய பதிவர்கள் சற்று ஜாக்கிரதையாக இருக்கும்படியாக கேட்டுக் கொள்கிறேன். போகாமல் இருப்பதே உத்தமம்.

இந்த பொய்த்தமிழன் யார், எவர் என்று தெரியாதபட்சத்தில் உங்களுக்கும் என் பெயரிலோ, அல்லது வேறு சில பதிவர்கள் பெயரிலோ தொலைபேசி அழைப்புகளோ, பின்னூட்டங்களோ இனிமேல் தாராளமாக வர வாய்ப்பிருக்கிறது.

ஆபாசமான அல்லது இதுவரையில் அந்தப் பெயருடைய பதிவர் பயன்படுத்திராத கிண்டல் வார்த்தைகள் அல்லது கெட்ட வார்த்தைகள் அந்தப் பின்னூட்டத்தில் இருந்தால், உடனேயே அந்தப் பதிவருடன் தொடர்பு கொண்டு அந்தப் பின்னூட்டம் நிஜமாக அவர் போட்டதுதானா என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள்.. வேறு வழியில்லை..

ஓத வேண்டியது என் கடமை.. ஓதிவிட்டேன்.. பதிவர்கள் ஜாக்கிரதையாக அணுகவும்.. இருக்கவும்..

இதுவரையில் அடங்கியிருந்த பொறம்போக்குகளுக்கு முகமூடியுடன் பயன்படுத்துவதற்கு எங்காவது ஓரிடத்தில் கணினி கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.. அதுதான் ஆரம்பித்துவிட்டார்கள் அனர்த்தத்தை..

எத்தனையோ எதிர்ப்புகளையும், திருட்டுத்தனங்களையும், மொள்ளமாரித்தனங்களையும், முடிச்சவிக்கித்தனங்களையும், சோமாறித்தனங்களையும் வலையுலகில் நாம் பார்த்தாகிவிட்டது.. புதிய ஸ்டைலில் வந்திருக்கும் இந்த டுபூரித்தனத்தையும் சமாளிப்போம்..!

நன்றி..!

ஜேட்கூடியின் மரணம் சொல்லும் செய்தி..!

23-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

27 வயதான ஜேட் கூடி என்ற பெண் தனது இறப்பை எதிர்பார்த்து சில மாதங்களாகக் காத்திருந்து, இப்போது கர்த்தரின் காலடியை அடைந்துவிட்டார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் 'பிக் பிரதர்' என்கிற ரியலிட்டி ஷோவில் கலந்து கொள்ளாத வரையில் அவர் யாரென்று இந்தியர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்திய திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டியுடன் அந்த ரியலிட்டி ஷோவில் பங்கேற்ற ஜேட்கூடி, ஷில்பாவை இனவெறியோடு திட்டியதால் ஷில்பா கண்ணீர் விட்டு அழுக.. அந்த அழுகையால் தாங்களும் அழுத லண்டன் மாநகர மக்கள் மொத்த ஓட்டையும் ஷில்பாவுக்கே குத்தி அவரை பரிசு மழையில் நனைய வைத்து அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அப்போது நம்மால் கோபமாகப் பார்க்கப்பட்ட அதே ஜேட்கூடிதான் இப்போது நம்மால் பரிதாபகமாப் பார்க்கப்படுகிறார். 27 வயதுதான்.. 5 வயது மற்றும் 4 வயதான இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மா.. பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. சம்பாதிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இந்த நேரத்தில்தான் புற்று நோய் அவரைத் தாக்கியிருக்கிறது.

இந்தியாவில் கலர்ஸ் என்கிற சேனல் நடத்திய பிக் பாஸ் ரியலிட்டி ஷோவில் கலந்து கொள்ள வந்தவருக்கு மும்பையில் நல்ல முறையில் வரவேற்பு கிடைத்தது. நிச்சயம் இந்திய விஜயம் எனக்கொரு திருப்பத்தைத் தரும் என்று அப்போது சொன்னார். அந்தத் திருப்பம் அவருடைய வாழ்க்கையை முடிக்கிற திருப்பம் என்பதை அவரும், மீடியாக்களும் அறிந்திருக்கவில்லை.


ரியலிட்டி ஷோவுக்காக இந்தியா வருவதற்கு முன்பாகவே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் லண்டனிலேயே தகுந்த சிகிச்சையும், உடற்பரிசோதனையும் செய்துவிட்டுத்தான் விமானம் ஏறியிருக்கிறார்.

ரியலிட்டி ஷோவில் ஒரு நாள் ஷில்பாவுக்கு வந்த போன் கால் அவருடைய வாழ்க்கையின் முடிவுரையைச் சொன்னது..

அந்தக் காட்சியை நான் அப்போதே தொலைக்காட்சியில் பார்த்து பேச்சு மூச்சில்லாமல் போனேன். லண்டனில் அவர் செய்துவிட்டு வந்த உடற்பரிசோதனையின் முடிவுகளை அந்த மருத்துவர் தொலைபேசியில் ஜேட்கூடியிடம் சொல்கிறார், "உன்னைத் தாக்கியிருப்பது புற்று நோய். நீ இன்னும் கொஞ்ச நாள்தான் உசிரோட இருக்கப் போற.." - இந்த உண்மையை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்..? அதுவும் அம்மா என்கிற கடமையிருக்கிற ஒரு தாய்க்கு..

ஜேட்கூடி மருத்துவர் சொன்னதைக் கேட்டு கதறி அழுததையும், பின்பு வெளியே வந்து தனது சக போட்டியாளர்களிடம் இதைச் சொல்லி அழுவதையும் பார்த்தபோது பரிதாபமாக இருந்தது.


என்னிடமே இப்போது இந்த வார்த்தையை மருத்துவர் சொன்னால் நான் என்ன ரியாக்ட் செய்வேன் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

மும்பை வந்தபோது புன்சிரிப்போடும், உவகையோடும் வந்த ஜேட்கூடி நாடு திரும்பும்போது இருந்த வேதனையை மறைத்துக் கொண்டு சிரித்தபடியே போஸ் கொடுத்துவிட்டுத்தான் போனார்.

லண்டனில் இதன் பின்புதான் ஒரு பெரிய அலையே அடித்திருக்கிறது. அங்கிருந்த மீடியாக்கள் ஜேட்கூடியின் அன்றைய மெடிக்கல் ரிப்போர்ட் என்று தலைப்பிட்டே செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு போயிருக்கிறது.

இதன் விளைவு என்ன தெரியுமா? லண்டனில் இருக்கின்ற இளம் வயதுப் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜேட்கூடிக்கு வந்திருந்த கர்ப்ப் பை புற்றுநோய்க்கான ஆரம்பக் கட்ட சோதனைகளை தங்களுக்குச் செய்து கொண்டார்களாம்.. இவர்களுடைய இந்த விழிப்புணர்வுக்குக் காரணம் ஜேட்கூடிதான்.. அந்த வகையில் அவர்கள் ஜேட்டுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

நோயோடு போராடிக் கொண்டே சிரித்த முகத்தோடு தினந்தோறும் ஏதாவது ஒரு டிவியிலோ, பத்திரிகையிலோ பேட்டியளித்தவண்ணமே இருந்துள்ளார் ஜேட். அவர் இதன் மூலம் பணம் சம்பாதித்தார் என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள். பத்திரிகைகளும் அவரை வைத்து சம்பாதிக்கத்தானே செய்தன. அவரைப் பற்றியப் பரபரப்புச் செய்திகளை போட்டி போட்டுக் கொண்டு எழுதினார்களே.. சர்க்குலேஷனும், டிவி ரேட்டிங்கும் ஏறாமலா இருந்திருக்கும்..


மேலே சொன்னபடி குடும்பத்தார் சொல்லியும் கேட்காத இளசுகள் நேரில் பார்த்த ஒரு அனுபவம் தந்த பயத்துடன் மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்களே.. இது நல்ல விஷயம்தானே.. ஒன்றும் தவறில்லை.

இந்த நேரத்திலும் அவர் தனக்குள் இருந்த காதலை மறைக்கவில்லை. வெளிப்படையாகச் சொன்னார். அவரைவிட ஆறு வயது குறைந்த Tweed என்கிற இளைஞருடனான அவரது காதல் கல்யாணம் வரைக்கும் சென்றது.. இருக்கப் போவது எத்தனை நாட்கள் என்பது தெரியாத நிலையிலும் தனது குழந்தைகளுக்கென்று ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், தனது காதலை நிரூபிப்பிதற்காகவும் அவர் எடுத்த கல்யாண முடிவை வாழ்த்தியே ஆக வேண்டும்.

பிப்ரவரி 22-ம் தேதி தனது காதலரைக் கைப்பிடித்தார். நோயின் தாக்கத்தால் தலைமுடியினை இழந்து உடல் தளர்ந்து இருந்த நிலையிலும் அவருடைய உற்சாகம் மாறாத திருமண நடவடிக்கைகளையும், ஓய்வு இல்லாத பேட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளையும் பார்த்தபோது ஆச்சரியம்தான் விளைகிறது.


மரணத்தை இவ்வளவு இலகுவாக வரவேற்கிறாரே.. எளிதாகக் கையாளுகிறாரே என்று ஆச்சரியப்பட்டேன். அவருடைய முன்னாள் காதலரான Jeff Brazier மூலம் பிறந்த தனது 2 பையன்களுக்கும் இந்த மாதம் 7-ம் தேதிதான் கிறிஸ்துவ தேவாலயத்தில் பாப்டிஸம் செய்துவைத்துள்ளார். தாய்க்குரிய தனது கடமைகளை செவ்வனே செய்தே தீர வேண்டும் என்கிற அவரது கடமையுணர்ச்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

நோய் முற்றி படுத்த படுக்கையான பின்பு தான் மருத்துவமனையில் இறக்க விரும்பவில்லை என்று சொல்லி தனது இல்லத்திற்கு வந்து ஒரு அறையில் ஜன்னலோரமாக வானத்தைப் பார்த்தபடியே படுத்திருந்திருக்கிறார். இனிமேல் தன்னை தனது குடும்பத்தினர் தவிர வேறு யாரையும் சந்திக்க அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


இது அத்தனை பேரும் நினைப்பதுதான். தான் நன்றாக இருக்கும்போது பார்த்து ரசித்தவர்கள், தான் துன்பப்படுவதைப் பார்த்து வருத்தப்பட்டுவிடக்கூடாது.. அந்தக் கோலம் அவர்கள் மனதில் நிற்கக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். அதனைத்தான் இவரும் செய்திருக்கிறார். இதனால் ஜேட் கூடியைப் பார்ப்பதற்காகவே லண்டன் சென்ற ஷில்பா ஷெட்டியால்கூட அவரைப் பார்க்க முடியாமல் போய்விட்டது.

லண்டன் மீடியாக்கள் தினந்தோறும் அவரது உடல் நிலை பற்றிய செய்திகளை அப்டேட் செய்தபடியே இருந்துள்ளன. வீட்டு வாசலில் எந்நேரமும் மீடியாக்கள் நிறுத்தப்பட்டு அவரது மரணச் செய்தி எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கொஞ்சம் சிரிப்பு வந்தாலும், அதிகமான கோபம் வந்தாலும் இது போன்றவற்றை பிரபலப்படுத்தியே ஆக வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன்.

அவர் சும்மா வெறுமனே வயோதிகத்தால் இறக்கவில்லை. கொஞ்சம், கொஞ்சமாக அவரைத் தாக்கிய நோய் அவரைக் கொன்று கொண்டிருக்கிறது. அந்த நோய் பற்றிய அறிவு இந்நேரம் அதைப் பற்றியே கவலைப்படாதவர்களைக்கூடச் சென்றடைந்திருக்கும்..

தனது குழந்தைகளைக்கூட தனது சாவைப் பார்த்துவிடக்கூடாது என்று அவர்களை கூட்டிச் சென்றுவிடச் சொல்லியிருக்கிறார். சாவரசனுடன் ஒரு நீண்ட போராட்டம் நடத்தி ஓய்ந்து போன ஜேட்கூடி, நேற்று நள்ளிரவு 3 மணி 14-வது நிமிடத்தில் தூக்கத்திலேயே இறந்து போயிருக்கிறார்.

இந்த நாளில் வேறொரு விசேஷமும் உண்டு. 'அம்மாக்கள் நாள்' என்று வரலாற்றில் தன்னைப் பெற்றெடுத்தத் தாய்க்குலங்களை நினைத்துப் பார்க்கும் ஒரு நாள்.. இன்றைக்கே இந்தத் தாயின் உயிர் போயிருக்கிறது.. பொருத்தமாகத்தான் உள்ளது..

இவருடைய வாழ்க்கைப் பாதையில் நிறைய கெட்ட சம்பவங்கள் நடந்திருக்கலாம்.. நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்கள் இருந்திருக்கலாம்.. அதெல்லாம் இனிமேல் ஒருபோதும் நமக்குத் தேவையில்லை..

எந்தவொரு நோயும் நாடு, இனம், மொழி, ஜாதி, ஏழை, பணக்காரன் என்று பார்த்து வருவதில்லை.. வந்த பின்பு அது கொடுக்கும் துன்பத்தை அனுபவிப்பவர்களை பாவப்பட்ட மனிதர்கள் என்கிற ஒரேயொரு அமைப்பில்தான் சேர்க்க முடியுமே தவிர.. அவர்களுக்கு வேறு ஒரு அடையாளத்தை நம்மால் உருவாக்க முடியாது..

வலைப்பதிவர்களுக்கு நன்கு தெரியும்.. நமது சக வலைப்பதிவரான அனுராதா அம்மா எத்தனை துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, தான் பட்டத் துன்பங்களை பிறரும்படக்கூடாது என்பதற்காக, அதனை வெளிச்சம் போட்டுக் காட்டி எத்தனை, எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் தனது துன்பங்களை பதிவு செய்து வைத்தாரே.. மறக்க முடியுமா..?

நான் என்னுடைய குடும்பத்தினரிடமும் அந்த நோயைப் பற்றிச் சொல்லி உடல் பரிசோதனை செய்யச் சொன்னேன்.. சிலர் செய்திருக்கிறார்கள். பலர் படித்துவிட்டு அழுதிருக்கிறார்கள். “பாதிதான் சரவணா படிச்சேன்.. படிக்க முடியல சரவணா..” என்று சில அக்காமார்கள் சொன்ன போது நெகிழ்ந்து போனேன்..

இது போன்ற விழிப்புணர்வுகள் நமக்கு மிக மிகத் தேவைகள்.. எவ்வளவுதான் புத்தகங்கள் அறிவைக் கொடுத்தாலும், அனுபவ அறிவைவிட மிகப் பெரிய அறிவு வேறில்லை. அனுபவப்பட்டவர்கள் சொல்லும்போதுதான் அந்த பிரச்சினையின் விஸ்வரூபம் மற்றவர்களுக்குப் புரிகிறது.. ஏற்றுக் கொள்கிறார்கள். தீர்க்க முயல்கிறார்கள்.

முதலில் அனுராதா அம்மா, இப்போது ஜேட்கூடி என்று சிலருக்கு வரக்கூடிய நோய்களைக்கூட தடுக்கும் தெய்வங்களாக மாறியிருக்கிறார்கள்..

நான் ஏன் இதை உருகி, உருகி எழுதுகிறேன் என்றால் இந்தக் கொடுமையை என் கண்ணார நேரில் கண்டவன் நான். எனது தாய் ஜேட்கூடிக்கு வந்த அதே கர்ப்பப் பை புற்றுநோயால்தான் துடிதுடித்து இறந்து போனார்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் நான் எந்த வேலை, வெட்டிக்கும் போகாமல் அவர் பக்கத்திலேயே அமர்ந்து தாதி போல் வேலை செய்து அவருடைய துன்பங்களை பார்த்து, பார்த்து மனம் இறுகிப் போய்விட்டது. "முருகா சீக்கிரமா கூப்பிட்டுக்கக் கூடாதா..?" என்று நானும், எனது தாயும், முருகனை வேண்டாத நாளில்லை. அப்படியும் நேரம் வரவில்லை என்று சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் நாய் படாதபாடு படுத்திய பின்புதான் எனது தாயை அழைத்துக் கொண்டான்.

அந்த அனுபவத்தின் வாயிலாகத்தான் ஜேட்கூடியை நான் பெரிதும் பாராட்டுகிறேன். நோய் வந்ததை மறைத்து வைத்து சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் வெளிப்படையாகச் சொல்லி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் தயார்படுத்திவிட்டு தனது குடும்பத்தினருக்கும் லட்சணக்கணக்கான மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டு போய்ச் சேர்ந்திருக்கிறார் அந்த புண்ணியவதி..

அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்..

தீயான திரைப்படம் அருந்ததி..!

22-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அசத்தியிருக்கிறார் கோடி ராமகிருஷ்ணா.. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.. வெற்றி பெறக்கூடிய திரைப்படம்தான்..

தியேட்டரில் நுழைந்த உடனேயே மூளையைக் கழற்றி மூலையில் போட்டுவிட்டு பின்புதான் அமர வேண்டும். நடக்க முடியாத கதையை நடந்த கதைபோல் காட்டி அசர வைத்திருக்கிறார் இயக்குநர்.

அம்புலிமாமா, ரத்னபாலா கதைதான்.. ஆனால் எடுத்தவிதம்தான் நம்முடைய தொழில் நுட்ப அறிவை பறை சாற்றுகிறது.

அருந்ததி.. கந்தர்வக்கோட்டை என்னும் குட்டி சமஸ்தானக் குடும்பத்தில் ஒரே பெண் வாரிசு. அந்த சமஸ்தானத்தில் மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் அரசாண்ட அருந்ததியே, இப்போது பேத்தியாக பிறந்திருக்கிறாள். அவதார நோக்கம் அப்போது முடிக்காத கதையை இப்போது முடிப்பதற்காக..!

சொந்த அக்கா கணவனான பசுபதியை அவன் செய்த அட்டூழியங்களுக்காக தண்டிக்கிறாள் அருந்ததி. ஊரைவிட்டே துரத்தியடிக்கிறாள். நார், நாராக பிய்த்து எடுக்கப்பட்ட நிலையில் காட்டிற்குள் வீசப்படும் பசுபதி அங்கே நர மாமிசம் சாப்பிடும் அகோரிகளின் கண்களில் படுகிறான். அவர்கள் அவனைக் காப்பாற்றி உயிர் கொடுத்து, ஊன் கொடுத்து, ஊட்டச் சத்துக் கொடுத்து, மந்திர, தந்திரம் கற்றுக் கொடுத்து கை தேர்ந்த வில்லனாக உருவாக்கி அனுப்புகிறார்கள்.

ஏழாண்டு காலத்திற்குப் பின் தனது மாமனாரின் அரண்மனைக்குள் நுழையும் பசுபதி அன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் அருந்ததியின் திருமணத்தில் கொலை விளையாட்டு நடத்துகிறான். மாமனாரை படுகொலை செய்கிறான். அருந்ததியை தான் இப்போதே அடைய வேண்டும் என்கிறான். அவன் விருப்பப்படியே நடந்து கொள்ளும் அருந்ததி தந்திரமாக அவனைத் தாக்கி படுக்க வைக்கிறாள். அந்த நிலையிலேயே அவனைச் சுற்றிலும் கல்சுவர் எழுப்பி உயிரோடு சமாதியாக்கிவிடுகிறாள்.

அத்தோடு அந்த அரண்மனையை அனைவரும் தலை முழுகிவிட்டு போய்விட.. இப்போது பேத்தி அருந்ததி அந்த ஊருக்கு வரும்போதுதான் கதை துவங்குகிறது. அவளை பசுபதியே வரவழைக்கிறான். அவள் வந்த பின்பு அவளையும், அவள் குடும்பத்தையும் அழிப்பேன் என்று சபதமெடுத்த பசுபதி செய்து முடித்தானா? இல்லையா..? என்பதைத்தான் வழக்கமான வில்லன்-ஹீரோயின் கதை போல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.

திரைப்படத்துறையில் கிடைக்கும் அனைத்துத் தொழில் நுட்ப வசதிகளையும் இதில் பயன்படுத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

முதல் பாராட்டு படத்தின் கலை இயக்குநருக்கு.. படத்தின் ரிச்னெஸ் காட்சிக்கு காட்சி இழையாடுகிறது.. அவ்வளவு அழகான செட் அந்த அரண்மனை.. பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.

அடுத்தது அனுஷ்கா.. அம்மணி தன்னுடைய கேரியர் முழுவதிலும் நடிக்க வேண்டியதை இந்த ஒரு படத்திலேயே முடித்துவிட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம்.. நான் ஜெமினி டிவியில் பார்த்த பல பாடல் காட்சிகளில் கடற்கரையோரமாக தாவணியை கழட்டிவீசிவிட்டு காத்து வாங்கிக் கொண்டிருந்தார். 4 நிமிட பாடல் காட்சியில் மூன்றாவது நிமிடத்தில் கிடைத்த பத்து செகண்ட் குளோஸப்பில்தான் அது அனுஷ்கா என்பதே தெரிந்தது.

இடுப்பு சுழிக்கிக் கொள்ளுமளவுக்கு ஆட்டம் ஆடியிருந்த அம்மணியா இப்படி..? ஆச்சரியமாக இருக்கிறது. இயக்குநர்கள் மிகச் சரியானவராக அமைந்தால் திறமை நிச்சயம் வெளிப்படும் என்பார்கள். இதில் கோடிராமகிருஷ்ணாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.. இந்த அம்மணி விஜய்யுடனும், அஜீத்திடனும் நடிக்கப் போகிறாராம்.. பாவம்.. நமது தமிழ் ரசிகர்கள்..!

நமது இயக்குநர்கள் இவர் போன்ற இளமை ததும்பும் நடிகையரிடம் வைக்கத் தயங்கும் குளோஸப் காட்சிகள்தான் இந்தப் படத்தில் அதிகம். கோபத்தின் மூச்சுக் காற்றில் அனுஷ்காவின் மூக்குத்தி நகர்வதைக்கூட துல்லியமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். முதல் பாடல் காட்சியின் இறுதியில் அனுஷ்காவின் பின்புறமிருந்து இடுப்புப் பக்கத்திற்கு கேமிரா உயர்ந்து வந்து நிற்பது என்ன ஒரு ஷாட்..?!

மேக்கப்பே இல்லாமல் காட்சியளிக்கும் பேத்தி அருந்ததியின் நடிப்பைவிட இறுதியில் பாட்டி அருந்ததியே வெறி பிடிக்க வைக்கிறார். இதற்கு மிகப் பெரும் உதவிகரம் ஒளிப்பதிவாளர்.. அரண்மனைக் காட்சிகளில் ஸ்கிரீன் முழுவதுமே மிக அழகாக இருக்கின்றன..

கிராபிக்ஸ் காட்சிகளும், மேக்கப்பும், இசையும்தான் படம் திகில் படம் என்பதை அவ்வப்போது காண்பித்துக் கொண்டேயிருக்கின்றன. வில்லனின் மோப்பம் பிடிக்கும் காட்சியை இரண்டு இடங்களில் பெண் கதாபாத்திரங்கள் மூலமாகச் செய்யும்போது அதிர்கிறது பின்னணி இசை.. அந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் டெக்னிக்கல் கொடி கட்டிப் பறந்திருக்கிறது.. ஆக்ஷன் படங்களில் டைம்லேப் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பார்கள். இதில் கச்சிதமாகவே உள்ளது.

பேயோட்டுபவராக வரும் சாயாஜி ஷிண்டேவுக்கு மிகப் பொருத்தமான வேடம்தான்.. பொதுவாகவே தெலுங்குக்காரர்களுக்கு வில்லன்கள் என்றாலே கர்ஜனை குரல்தான் முக்கியம் என்பார்கள். சாயாஜி அறிமுகக் காட்சியில் இருக்கும் ஸ்பீட் பதைபதைக்க வைக்கிறது..

படத்தொகுப்பாளரின் கட்டிங் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரம்.. காட்சிகள் அடுத்தடுத்து அபரிமிதமான இசையமைப்புடனும், ஒளிப்பதிவுடனும் வந்திருக்க.. வில்லன் முகம் மறைத்து பின் வந்து பின் மறைத்து நிமிடத்தில் மாறுகின்றபோதெல்லாம் ஒரு நொடிகூட ஜெர்க் இல்லை.. நச்சென்று இருக்கிறது..

மனோரமாதான் பாட்டி அருந்ததியின் கதையை நமக்குச் சொல்பவர். மனுஷிக்கு எப்பவுமே கண்களில் ஒரு துளி கண்ணீர் திரண்டு நிற்கும். இந்தப் படத்தில் அதற்குத்தான் வேலை அதிகம்.

அடு்த்தது என்ன..? அடுத்தது என்ன..? என்று மிக ஆர்வத்துடன் நகத்தைக் கடிக்க வைத்துவி்ட்டார்கள். லாஜிக் பார்க்கவே முடியாத திரைப்படம் என்றாலும், திரைக்கதை அசுர வேகத்தில் செல்வதால் எதையும் யோசிக்கவே முடியவில்லை..

கல்சுவருக்குள் படுத்துக் கொண்டே அருந்ததியின் தாத்தாவை வழுக்கி விழுக வைக்கவும், அருந்ததியிடம் அவனது வருங்காலக் கணவன் குரலில் பேசவும் முடியும் வில்லன் பசுபதியால் அந்தச் சுவரை உடைக்க முடியவில்லை என்கிற லாஜிக் இப்போதுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அதற்கும் ஒரு சாஸ்திர சம்பிரதாயக் காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். சுவர் முழுவதும் மந்திரங்களை தட்டில் எழுதி பொருத்தி வைத்திருக்கிறார்கள். அவனால் தொட முடியாது என்று..! கோடிராமகிருஷ்ணா என்ன கொக்கா..? அம்மன் படம் பார்க்க வந்தவர்களை, தியேட்டரிலேயே அம்மனை வரவழைத்து ஆட வைத்தவராச்சே..

பாடல்களில் முதல் பாடல்தான் ஏதோ புரிந்தது.. தமிழுக்கேற்றாற்போல் வாலி எழுதியிருக்கிறார். பசுபதியின் மிரட்டலின்போது பாட்டி அருந்ததி போடும் பாடல் 'காதல் ஓவியம்' படத்தின் 'சங்கீத ஜாதிமுல்லை..' பாடலின் சாயலை ஒத்திருந்தது.. பின்னணி இசை அமர்க்களம்.. அவ்வப்போது பசுபதியும், அருந்ததியும் அவரவர் குரல்களில் பேயாட்டம் ஆடும்போது ஒத்து ஊதுவதை நன்றாகச் செய்துள்ளது இசை.

பசுபதியின் அம்மாவாக நடித்திருக்கும் சுபாஷினியின் அழகான கண்களில் கருவிழிகள் மட்டும் நட்ட நடுவில் உருள்வது பார்க்க பயங்கரமாக உள்ளது. சரியானப் பொருத்தம்.

மாயாஜாலம், மேஜிக், மந்திரம், தந்திரம் என்ற அலப்பறையோடு நிமிடத்துக்கொருமுறை விளம்பரப்படுத்திவிட்டதால் படத்தின் ஓப்பனிங் அபாரம் என்கிறார்கள். படத்தின் நிலை தெரியாமல் பலரும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.

ஆனால் படத்திற்கு 'ஏ' சர்பிடிகேட் கொடுத்துத் தொலைத்துவிட்டதால் டிக்கெட் கவுண்ட்டரிலேயே குழந்தைகளுடன் வந்தவர்களை திருப்பியனுப்பிவிட்டார்கள். ஆனால் தியேட்டருக்கு வெளியே பிளாக்கில் டிக்கெட் வாங்கி வந்தவர்களை அனுப்ப முடியவில்லை.

அப்படி என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு வாண்டு, பாதிப் படத்திலேயே, படத்தின் வேகத்தில் பயந்து போய் அப்பாவுடன் ஒட்டிக் கொண்டுவிட்டது. அம்மாவும், அப்பாவும் எவ்வளவோ தாஜா செய்தும் ஸ்கிரீன் பக்கம் முகத்தைக் காட்டவே மறுத்துவிட்டது. இது போன்ற திரைப்படங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரவேகூடாது.

கதையின் அடிப்படையே பெண் மோகம் என்பதால் அதனை நிரூபிப்பதற்காக இருக்கும் ஒரு சில காட்சிகள் பெரியவர்களையே நெளியத்தான் வைக்கின்றன. ஆனால் படத்தின் உயிரோட்டமான இடங்கள் இவைகள் என்பதால் மறுக்க முடியவில்லை..

இத்திரைப்படம் தெலுங்கில் பட்டையைக் கிளப்பியிருக்கிறது என்கிறார்கள். இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.. ஜெயிக்காமல் போனால்தான் ஆச்சரியமாக இருந்திருக்கும்..

திரைப்படங்களையே வித்தை காட்டுதல் என்றுதான் சிலர் சொல்வார்கள். அதற்கு மிகச் சிறப்பான உதாரணமாக இத்திரைப்படத்தைச் சொல்லலாம்.

வயதுக்கு வந்தவர்கள் மட்டும் சென்று பார்க்கலாம்..!

படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார்-21-03-2009

21-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பரந்த முதுகு.. யார்..?

இந்த பரந்த முதுகுக்குச் சொந்தக்காரர் யார் என்று பார்த்தவுடன் சொல்லுங்களேன்..


உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது எனில் நீங்கள் உடனடியாக கோடம்பாக்கத்திற்குள் எந்த ரூபத்திலும் பிரவேசிக்கலாம்.. தெரியாதவர்கள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டு கடைசிக்கு வரவும்.



கிழக்குப் பதிப்பக புத்தகங்களுக்குத் தடை


நேற்று முன்தினப் பத்திரிகைகளில் ஒரு குட்டிச் செய்தி ஒன்று வந்திருந்தது. வலையுலகத்தினர் கவனித்தார்களா என்று தெரியவில்லை. தி.நகரில் ஒரு கல்யாண மண்டபத்தில் கிழக்குப் பதிப்பகம் அமைத்திருந்த புத்தக கண்காட்சியில் பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் பற்றிய புத்தகங்களை வைக்கக்கூடாது என்று சொல்லி பறிமுதலோ அல்லது வைக்கவிடாமல் தடுத்தோ மறுபடியும் ஒரு முட்டாள்தனத்தை செய்திருக்கிறது நமது சென்னை மாநகரக் காவல்துறை.

செய்தித்தாள்களில்கூட கிழக்குப் பதிப்பகத்தின் பெயர் வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர். பதிப்பகம் தெரிந்தால் போன் செய்து என்ன புத்தகம் என்று விசாரித்து வாங்கி விடுவார்களே என்பதால்தானாம்..

பத்ரி ஸாரும், இட்லிவடையும், அஞ்சாநெஞ்சன் பா.ராகவனும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏதாவது கூக்குரலோ, கலகக் குரலோ, ஆட்சேபணைக் குரலோ எழுப்பினால் சமர்த்துப் பிள்ளையாக வெளியில் இருந்து ஆதரவுத் தரலாம் என்று பார்க்கிறேன்.. இப்படி நம்ம விஜயகாந்த் மாதிரி கமுக்கமா இருந்தா நாம என்ன செய்யறது..?


தமிழால் வாழ்வு..!

உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு, எனது அலுவலகத்தையும் தாக்கிவிட்டது. குற்றாலத்தில் இடி இடித்து குளித்தலையில் மழை பேய்ந்த கதைதான்.. 400 பேர் வேலை பார்த்த அலுவலகத்தில் இப்போது வெறும் 60 பேர்தான் உள்ளோம்.

சென்ற வாரம் ஒரு ஊழியர் தனக்குத் திருமணம் என்று சொல்லி வாய்கொள்ளாச் சிரிப்புடனும், கொஞ்சம் வெட்கத்துடனும் கல்யாணப் பத்திரிகையை கொடுத்தார். மறுநாளே அவரை அழைத்து இன்று மாலைக்குள் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறும்படி சொல்லிவிட்டார்கள்.

பார்க்க பாவமாக இருந்தது.. வாங்குகின்ற சம்பளமே எட்டாயிரம்தான்.. இதனை நம்பித்தான் திருமணமே செய்கிறார். என்ன செய்வது..? விதியோ, மதியோ கஷ்டமெல்லாம் தொடர்வது கஷ்டப்படுகிறவர்களைத்தான்..

எனது வேலைப் பிரிவிலும் ஆட்குறைப்பு ஜெகஜோதியாக நடந்தேறி இப்போது 5 பேர் மட்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதில் 4 பேர் ஓகே.. தேவையானவர்கள்தான். தேவையில்லாத நான் ஒருவன் எதற்கு..? யோசித்தேன்.. யோசித்தேன்.. விடை கிடைக்கவில்லை. பொறுக்க மாட்டாமல் வாய்விட்டு கேட்டேவிட்டேன்.. பதில் வந்தது.. “தமிழ் தட்டச்சு தெரிந்த ஒரே ஆள் நீங்கதான்.. எப்படி விடுறது..?”

வாழ்க தமிழன்னை..


ரஹ்மானின் பாராட்டு விழா என்னாச்சு..?


வாராது வந்த மாமணி போல் முதல் முறையிலேயே 2 ஆஸ்கார் விருதுகளைத் தட்டிக் கொண்டு வந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தமிழ்ச் சினிமாவுலகம் இன்னமும் முறைப்படியான பாராட்டுவிழா நடத்தவில்லை.

இசையமைப்பாளர்கள் சங்கத்தினர் மட்டுமே தங்களது பிள்ளைக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி மகிழ்ந்திருக்கிறார்கள். மற்றபடி அரசுத் தரப்புக்கு இப்போதைக்கு இதில் ஆர்வமில்லையாம்.. விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்ற அமைச்சர் பரிதிக்கு ரஹ்மான் தரப்பில் இருந்து சரியான வரவேற்பும், மரியாதையும் கிடைக்கவில்லை என்கிறார்கள். இதோடு கூடவே தேர்தல் வேலைகள் நடப்பதாலும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

கலைஞரை அழைக்காமலோ, அல்லது அவரை விட்டுவிட்டோ எப்படி நிகழ்ச்சியை நடத்துவது என்று திரையுலகத் தலைகளுக்குக் குழப்பம். அவருக்கோ உடல் நிலை சரியில்லை என்பதாலும், விழா என்றால் 4 மணி நேரமாவது அவரை அமர வைத்திருக்க வேண்டுமே என்பதாலும் அக்கறை கொள்ளாமல் இருக்கிறார்கள். எப்படியும் கலைஞர் டிவிக்குத்தான் ஒளிபரப்பு உரிமை தரப்பட வேண்டி வரும். கலைஞர் இல்லாமல் எப்படி என்று யோசிக்கிறார்களாம் கலைஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள்.. ரஹ்மானும் கலைஞரை வீடு தேடிப் போய் இன்னமும் பார்க்கவில்லை என்பதும் பெரும் குற்றமாகக் கருதப்படுகிறதாம்.. பாவம் ரஹ்மான்.. அவருக்கு இந்த அரசியலெல்லாம் தெரியுமா என்ன..?

ரஹ்மானோ பல்வேறு கல்லூரிகள், அமைப்புகள் அழைத்த பாராட்டு விழா அழைப்புகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, தினமும் ஒவ்வொரு ஊருக்கு நேர்த்திக் கடன் என்று சொல்லித் தப்பித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

"உச்ச நடிகர்களும், பிரபலங்களும் ரஹ்மானின் வீடு தேடிப் போய் வாழ்த்தியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு போனிலேயே பாதிப் பேர் வாழ்த்துச் சொல்லி அவரை அவமானப்படுத்திவிட்டார்கள்.. இந்நேரம் கமலஹாசனுக்கு இந்த விருது கிடைத்திருந்தால் இப்படி விட்டிருப்பார்களா..?" என்று இசைக் கலைஞர் ஒருவர் வடபழனியில் ‘சுதி' ஏறிய நிலையில் சங்கத்து வாசலில் நின்று கத்திக் கொண்டிருக்கிறார்.

இதையெல்லாம் கேக்குறதுக்கு யாருக்கு இங்க நேரமிருக்கு..?


செல்போன் வாங்கும்போது எச்சரிக்கை..!



நண்பன் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தின்போது எனது செல்போன் தொலைந்துவிட்டது.. தேடித் தேடி வாங்கி வைத்திருந்த பலருடைய எண்களும் போய்விட்டன. தொலைந்த பின்புதான் ஏதாவது நோட்டில் எழுதி வைத்திருக்கலாமே என்ற யோசனையே வந்தது. கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்..

புதிய செல்போன் வாங்கும் அளவுக்கு நமக்கு பொருளாதார வசதி இல்லாததால் பழைய செகண்ட் ஹேண்ட் போன் ஒன்று வாங்கினேன். தொலைந்தது நோகியோ.. புதியது சாம்சங்.. தேவையான பலரையும் சகல விதங்களிலும் தொடர்பு கொண்டு அவர்களது எண்களை வாங்கி புது செல்போனில் பதிவு செய்தேன். இதற்கே 15 நாட்கள் ஆகிவிட்டது. ஓரளவுக்கு தொடர்பானவர்களின் எண்கள் கிடைத்து கொஞ்சம் சந்தோஷத்தில் இருந்தேன்.

சமீபத்தில் கோவில், கோவிலாக ஊர் சுற்றும்போது எடுத்த கோவில் புகைப்படங்களை புளூடூத் மூலமாக கணினியில் சேமிக்க முயற்சித்தேன். அப்போது ஏதோ ஒரு பாஸ்வேர்டை கேட்டது. வழக்கம்போல 0000 என்று முயற்சித்தேன். பாஸ்வேர்டு தவறு என்று வந்தது.

வாங்கிய கடையில் கேட்டேன். "ஒரிஜினல் முதலாளியிடம்தான் கேட்க வேண்டும்" என்றார்கள். செல்போன் சர்வீஸ் கடையில் விசாரித்தேன். "சிஸ்டத்தை பார்மட் செய்துவிட்டால் பழையபடி பாஸ்வேர்டு 0000 என்று வந்துவிடும்" என்றார்கள். திடீர் சந்தோஷத்தில் நானும் "செய்யுங்கள்" என்றேன்.. ஊழியரும் கச்சிதமாக செல்போனை சுத்தமாகத் துடைத்து எடுத்துக் கையில் கொடுத்தார்.

வாங்கிய வேகத்தில் போன் செய்ய நினைத்து contacts-ற்குள் போனால் சுத்தமாக காலியாக இருக்கிறது. சிம்கார்டில் குறைவான இடங்கள்தானே உள்ளது. சிஸ்டத்தில் அதிகம் உள்ளதே என்று நினைத்து நேற்றுத்தான் சிம்கார்டில் இருந்து அனைத்து தொடர்பு எண்களையும் சிஸ்டத்திற்கு மாற்றியிருந்தேன். ஆர்வக் கோளாறில் அந்த நேரத்தில் இதனைச் சுத்தமாக மறந்து தொலைத்துவிட்டேன்.. இப்போது எனது குடும்பத்தினரின் எண்ணே எனக்குத் தெரியவில்லை..

இதுதான் சனி பகவானின் 'அடித்துத் துவைப்பது' என்று நமது சுப்பையா வாத்தியார் சொல்கிறார். சரியாகத்தான் இருக்கிறது..


ஷகிலா படத்தில் நமது சக வலைப்பதிவர்!


டிவி ரிமோட்டை அழுத்திக் கொண்டே வந்ததில் கே டிவியில் சத்யராஜும், கவுண்டமணியும் ஏதோ நக்கல் செய்து கொண்டிருந்தார்கள். அவசரம், அவசரமாக மிஷினை எடுத்துக் காதில் வைத்துவிட்டு படம் பார்க்க உட்கார்ந்தேன்.

படம் 'சுயேட்சை எம்.எல்.ஏ.' இல்லாத அட்டூழியங்களையெல்லாம் செய்துவிட்டு சமத்துப் பையனாக அமர்ந்திருக்கும் சத்யராஜை, போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்ய வருகிறார். அந்த அதிகாரியை குளோஸப்பில் பார்த்தபோது "எங்கிட்டோ பார்த்த மாதிரியிருக்குதே.." என்று எனக்கு சந்தேகம் வந்தது. சத்யராஜ் அமைதியாக அவருடன் எழுந்து வெளியே வருகிறார்.

அடுத்தக் காட்சியில் கோர்ட்டில் கூண்டில் ஏறி மைமிங்கில் தான் எடுத்த நடவடிக்கைகளைச் சொல்கிறார் அந்த 'சோடாபுட்டி' அதிகாரி. இப்போது ஆள் யாரென்று நன்கு தெரிந்தது.

நீதிபதியிடம் தான் வைத்திருந்த பணத்தினை டிரக் ஒன்றில் போட்டு கொண்டு வந்து காட்டுகிறார் சத்யராஜ். கோர்ட்டுக்கு வெளியே நீதிபதியை அழைத்து வந்து அதனைக் காட்டி விளக்கமளிக்கிறார் அந்த அதிகாரி.

எதுக்கு இம்புட்டு பெரிய சஸ்பென்ஸ்ங்குறீங்களா..? இப்படியெல்லாம் செஞ்சாத்தான நாலு பேரு படிக்கிறீங்க.. அந்த அதிகாரி.. அட நம்மாளுதாங்க.. நம்ம கேபிள் சங்கரு.. இது மாதிரி சின்னச் சின்ன கேரக்டர்ல நிறைய படத்துல நடிச்சிருக்காராம் துரை.. இப்பத் தெரிஞ்சுக்குங்க..

கோர்ட்டு சீன்ல மந்த்ராவின் முக குளோஸப் காட்சிகள் மட்டுமே தெரிகின்றன. வேறு ஒன்றையும் காணவில்லையே என்று யோசித்து இயக்குநரிடம் கேட்டபோது, "ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி ஷூட்டிங்னு ரொம்பக் கஷ்டத்துல எடுத்த படம் இது.. கடைசி ஷெட்யூல் எடுத்தப்ப மந்த்ராவுக்கு கல்யாணமாகி, உண்டாகி, குண்டாகி வந்து நின்னாங்க.. என்னத்த செய்யறது? அதான் உக்கார வைச்சு 'அப்படி உக்காரும்மா..' 'இப்படி உக்காரும்மா..' 'இந்தப் பக்கம் திரும்பும்மா' என்று சொல்லி அஞ்சு ஷாட் எடுத்து முடிச்சேன்.." என்கிறார். இவர் கஷ்டம் இவருக்கு..

சரி.. அதுக்கெதுக்கு தலைப்புல ஷகிலாங்குறீங்களா..?

இந்தப் படத்துல நம்ம ஷகிலாவும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்காங்க.. அப்ப ஷகிலா நடிச்சிருக்குற படத்துல நம்ம கேபிள் சங்கரும் நடிச்சிருக்காருல்ல.. அப்ப தலைப்பு சரிதானே..


பரந்த முதுகுக்கான விடை

அந்த பரந்த முதுகைக் காண உடனேயே ஸ்குராலை உருட்டி கீழே வந்தவர்களுக்கு எனது கடுமையான கண்டனங்கள்..

முறையாக ஒவ்வொன்றாகப் படித்துமுடித்து கடைசியாக வந்து பார்க்கும் தங்கங்களுக்கு எனது நன்றிகள்..

அந்த முதுகுக்குச் சொந்தக்காரர் இவர்தான்..


'என்னங்கடா இது.. உண்மைத்தமிழன் பதிவுல இப்படியொரு கொடுமையா..?' அப்படீன்னு நீங்க முணுமுணுக்குறது எனக்கு நல்லாக் கேக்குது..

ஆனா நான் ஏன் இதை செஞ்சேன்னா.. சில பேரு இப்பல்லாம் சும்மாவே 'நான் யூத்து.. நான் யூத்து.. நான் யூத்துதாங்க..!'ன்னு காய்ச்சல் வந்த மாதிரி பினாத்திக்கிட்டிருக்காங்க..

இதுல அக்மார்க் இன்னமும் கல்யாணமாகாத, கன்னி கழியாத எலிஜிபில் பேச்சுலரான என்னைப் பார்த்து 'வயசானவன்'னு நாலு பேர் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. எங்க பரம்பரை சீதனமா தலையில வெள்ளி முடி தரிக்க ஆரம்பிச்சிருச்சு.. இது தப்பா..? இது ஜீன் கோளாறு..

சில பார்ட்டிக நேர்ல பேசும்போது இப்படி என்னைப் பத்திப் பத்த வைக்க ஆரம்பிச்சு, அப்புறம் போன்ல கிசுகிசுப்பா பேசத் துவங்கி, எஸ்.எம்.எஸ் அனுப்பி, கடைசியா 'கேபிள்'லேயே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்களாம் 'நான் வயசானவன்'னு..

அவுங்களுக்கெல்லாம் நான் இளைஞன்னு காட்ட வேணாம்.. அதுக்காகத்தான் இப்படி போட்டோ..

கடைசியாவும் நான் ஒண்ணு சொல்லிக்கிறேன்..

நான் யூத்து..! நான் யூத்துதான்..! நான் சத்தியமா யூத்துதாங்க..!!!

ஓடு.. ஓடு.. ஓடிக் கொண்டேயிரு..! Some One to Run With (Mishehu Laruz Lto) இஸ்ரேல் திரைப்பட விமர்சனம்!

20-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சமுதாயத்தின் கடைக்கோடியில் வாழும் விளிம்பு நிலை மாந்தர்களின் வாழ்க்கை பற்றி சமீபமாக பல திரைப்படங்களில் பார்த்தாகிவிட்டது. மலையாளத்தில் நான் பார்த்த சில திரைப்படங்களும், தமிழில் முதன் முதலில் ஒரு அதிர்ச்சியைத் தந்த 'பசி' திரைப்படமும் எனது பருவ வயதில் பார்த்ததினால் அப்போதைக்கு எந்தப் பாதிப்பையும் தரவில்லை.

ஆனால் உலக சினிமா பற்றிய புரிதல்களும், ஆவல்களும் மேலோங்கியிருக்கும் இப்போதைய காலத்தில் பல்வேறு மொழித் திரைப்படங்களில் இவர்கள் பற்றிய பல சிறப்பான பதிவுகளைப் பார்த்தாகிவிட்டது. அந்த வரிசையில் சமீபத்தில் பார்த்த இந்த இஸ்ரேலிய திரைப்படமும் ஒன்று.


இஸ்ரேலிய எழுத்தாளர் டேவிட் கிராஸ்மேனின் புகழ் பெற்றக் கதையாம் இத்திரைப்படம். கதையின் பெயரும், திரைப்படத்தின் பெயரும் ஒன்றுதான்..

தனது குடும்பத்தாரிடமிருந்து பிரிந்து தனது துணையாக டிங்கோ என்ற நாயுடனுமும், தனது உயிருக்கு உயிரான கிடாருடனும் ஜெருசேலம் நகரில் சுற்றி வரும் தமர் என்கிற 16 வயது பெண்ணின் கதைதான் இந்தத் திரைப்படம்.

புராதனமான, பழமையான ஜெருசேலம் நகரம் தனக்குள் எத்தனையோ கதைகளையும், புனிதத்தையும் கொண்டிருந்தாலும் அங்கு வாழும் ஏழை மாந்தர்களின் கதையில் நிச்சயம் புனிதமில்லை. மனிதர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ.. வாழ்கிறார்களோ.. ஏழை, பணக்காரன் என்கிற ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் பிரச்சினைகளுக்குப் பஞ்சமில்லை. அவலங்களுக்கும் குறைவில்லை.

இந்தப் பிரச்சினைப் பஞ்சத்தில் சிக்கும் பஞ்சதாரிகளான கீழ்த்தட்டு மக்களில் ஒருத்தியான தமரையும், அவளது நாயையும், அவளைத் தேடியலையும் அஸப் என்கிற இளைஞனையும் சுற்றித்தான் கதை நகர்கிறது.

நகரின் மையச் சதுக்கத்தில் மாலை வேளைகளில் இளசுகள் கைகளில் சிகரெட்டும், பீர் பாட்டிலும், இன்னொரு கையில் இசைக் கருவிகளுமாய் பொழுதைக் கழிக்கின்ற வேளையில் அங்கேயை உண்டு, உறங்கி நாளைக் கடத்துகிறாள் தமர். சோத்துக்காக நான்கு பேர் கூடுகின்ற இடங்களில் தனது இசைத் திறமையைக் காட்டி அவர்களிடமிருந்து பாராட்டாக சில நாணயங்களைப் பெற்றுக் கொண்டு அதிலேயே தானும் உண்டு, தனது நாய்க்கும் உணவளித்து வருகிறாள்.

இந்தச் சூழலில் அந்த நகரின் அண்டர்கிரவுண்ட் தாதா பெஸாவின் ஆட்களிடம் சிக்குகிறாள் தமர். பெஸா நகரின் பல பகுதிகளை குத்தகைக்கு எடுத்து ஆங்காங்கே நன்கு இசைப் பயின்றவர்களை நிற்க வைத்து, பாட வைத்து, இசைக்க வைத்து மக்கள் போடுகின்ற பிச்சைத் தொகையைத் தான் எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு கொஞ்சுண்டு கொடுத்து பிழைத்து வரும் அதிபுத்திசாலி.

இதிலும் ஒரு உள்ளடி வேலையும் உண்டு. அது போதை மருந்தை விற்பனை செய்வது. மருந்தை பொட்டலத்தில் மடித்துத் தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, பணத்தையும் வைத்திருந்தால் விற்பனை செய்வதாகி மாட்டினால் வாழ்க்கையே முடி்ந்துவிடும் என்ற நிலைமை. ஆகவே கில்லாடியான பெஸா தேர்ந்தெடுத்த ஒரு குறுக்கு வழிதான் இந்த இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வழி.

தமர் இசையமைத்தபடியே பாடிக் கொண்டிருக்க.. அவளுடைய தட்டில் கிடக்கும் சில நாணயங்களோடு சில ரூபாய்த் தாள்களும் போடப்படும். போட்டவன் அப்படியே ஓரமாக நடந்து சென்று தமரை அழைத்து வந்தவனின் கையில் இருக்கும் போதை மருந்தை லவட்டிக் கொண்டு செல்வான். பணம் தமரிடம்.. சரக்கு அடியாளிடம்.. மாட்டினால் அவனே பயன்படுத்துவதற்குத்தான் சரக்கு.. தண்டனை கொஞ்சம்தானாம்..! தமரிடம் இருக்கும் பணம் கேள்விக்குறியானால் இது அவளுடைய இசைக்குக் கிடைத்த வெகுமதி. எப்படி ஐடியா..?

இப்படிப்பட்ட இடத்தில் மாட்டிக் கொள்ளும் தமரிடமிருந்து அவளுடைய நாய் பிரிக்கப்படுகிறது. பிரிந்த நாய் தெருவில் அனாதையாகத் திரிய அரசு இயந்திரம் அந்த நாயைப் பிடித்துக் கொட்டடியில் அடைக்கிறது.. கொட்டடியில் அடைக்கப்பட்ட நாயை அதற்குரிய உரிமையாளரிடம் போய் சம்மன் கொடுத்து அவர்களை அழைத்து வரும் சிறு வேலையை தனது கோடைக்கால விடுமுறை சமயத்தில் பகுதி நேர வேலையாக செய்வதற்கு அஸப் என்கிற இளைஞன் முன்வரும்போதுதான் படமே நகரத் துவங்குகிறது.

அந்த நாயின் உரிமையாளரான தமரைத் தேடி அஸப் புறப்பட நாய் தான் எங்கெல்லாம் தமருடன் சுற்றினோமோ அங்கெல்லாம் அஸப்பை அழைத்துச் செல்கிறது.



அப்படி முதலில் ஓரிடத்திற்குப் போக அங்கே போலீஸ் அவனைப் பிடித்து இழுத்துச் செல்கிறது. அப்போதுதான் தெரிகிறது தமர் இருந்தது போதை மருந்து கடத்தும் கும்பலிடம் என்று..!

அவள் கடைசியாக விட்டுச் சென்ற இடத்திலிருந்து போதை மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவும், அவள் அந்த இடத்தில்தான் வசித்து வந்ததையும் தாங்கள் கண்டறிந்ததாகவும் போலீஸ் சொல்ல.. அஸப் தன்னிடம் கொடுக்கப்பட்ட தமருக்கான சம்மனை காட்டி போலீஸிடமிருந்து தப்பிக்கிறான்.

ஆனாலும் தேடுதல் படலத்தை அவன் கைவிடவில்லை. ஒரு ஆர்வம்.. என்னதான் இருக்குன்னு பார்த்திருவோமே என்ற அந்தப் பிராயத்துக்கே உரித்தான குணத்தினால் உந்தப்பட்டு நாயின் இழுவைக்கெல்லாம் உடன் ஓடுகிறான்.

இப்போது நாய் ஒரு இடத்திற்குக் கொண்டு போய்விட.. அங்கே இருப்பவர்கள் தமரை சமீப காலமாக தாங்கள் பார்க்கவில்லை என்கிறார்கள். அங்கே அருகில் இருந்த நீச்சல் குளம் அவன் கண்ணைக் கவர.. குளத்தில் குளிக்கும்போது அவனைப் பின் தொடர்ந்து பெஸாவின் ஆட்கள் வருகிறார்கள். அவர்களுக்கு அடையாளம் காட்டுவது டிங்கோதான்..

அஸப்பினை புரட்டி எடுத்துவிட்டு நாயை இழுத்துக் கொண்டு போகும்போது அஸப்பிடம் பேசிய ஒரு லோக்கல் ரவுடி தனது துப்பாக்கியை வைத்து மிரட்டி அவர்களிடமிருந்து அஸப்பையும், நாயையும் காப்பாற்றுகிறான்.

இப்படியொரு அடிதடி, தாக்குதலுடன் இந்த வேலையைச் செய்ய வேண்டுமா என்று அஸப்பின் நெருங்கிய உறவினர் கேட்டு அவனை அவனது அப்பா, அம்மாவிடம் திருப்பியனுப்பும் முயற்சியையும் மேற்கொள்கிறார். ஆனால் அஸப் இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.

இப்படி அவனுக்குள் ஏற்படும் தேடுதல் வேட்கையின் அடுத்தக் கட்டமாக டிங்கோ, அஸப்பினை வழக்கமாக தமர் தனது கிடாரின் தந்திகளை வாங்கும் கடைக்கு அழைத்துச் செல்கிறது. அங்கே கடைக்காரரோ கதவைத் திறக்க மறுத்து அடம்பிடிக்கிறார். ஆனாலும் அஸப் சண்டையிட்டு உள்ளே சென்றவன் அவரிடம் பேச அவர் தமரின் மீது அக்கறை கொண்ட தியோடரா என்கிற அவளுடைய உறவுக்காரப் பெண்மணியைப் போய்ப் பார்க்கச் சொல்கிறார்.

இவர்கள் பேசுவதையும் பெஸாவின் அடியாட்கள் பார்த்துவிட அங்கேயும் ஓட்டம்.. கடைசியாக தியோடராவின் உதவியால் அஸப் தமரைக் கண்டுபிடிக்கிறான். ஆனால் தமரோ முதலில் அஸப்பும் பெஸாவின் கூட்டாளியோ என்று நினைத்து அவனைத் தாக்கிவிடுகிறாள். பின்பு உண்மை தெரிந்து வருத்தப்படுகிறாள்.

இப்போது தமருடன் இருக்கும் அவளுடைய அண்ணன் போதை மருந்துக்கு அடிமையானவன். அது கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதால் அந்த குகை போன்ற இடத்தில் தன்னை மறந்து கத்திக் கூப்பாடு போடுகிறான். தமர் இதனையும் தாங்கிக் கொண்டு தனது அண்ணனுக்காகவே தான் இப்போதைக்கு மறைந்து வாழ்வதாகச் சொல்கிறாள்.

அஸப்பால் இப்படியொரு பெண்ணை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. பார்த்த சில மணி நேரத்திலேயே தன்னை மறக்கிறான். காதல் கொள்கிறான். அன்றிரவு அங்கேயே தங்குகிறான். ஆனால் பின் தொடர்ந்து வந்த பெஸாவின் அடியாட்கள் சூழ்ந்துவிடுகிறார்கள். மறுபடியும் தமரையும், அவளது அண்ணனையும் கொண்டு போக முயல.. தியோடரின் முயற்சியால் காவல்துறை அங்கே திடுதிப்பென்று வந்து சுற்றி வளைக்க.. இவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். கதை சுபமாகிறது.

ஆனால் எடுத்தவிதம்..?

முதலில் நாயும், அஸப்பும் ஓடுவதில் துவங்குகிறது. அதன் பின் அவர்கள் ஓரிடத்திற்குச் செல்வதற்கு முன் அந்த இடத்திற்கு தமர் ஏன் வந்தாள் என்பது பிளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது. இப்படி படம் முழுவதுமே பிளாஷ்பேக், தேடுதல், தேடுதல்-பிளாஷ்பேக் என்று ஓடுவதால் விறுவிறுப்புக்குக் குறைவில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் Oded Davidoff.

தமராக நடித்த Bar Belfer தனது வயதை மீறிய பாத்திரத்தை செய்திருக்கிறார்.


பெஸாவின் இருப்பிடத்தில் அவளுடன் ரூம்மேட்டாக இருக்கும் பெண்ணின் கதையும் உடன் சேர்ந்தே வருகிறது.


பெஸாவின் இருப்பிடத்தில் அவர்களை அவன் பயன்படுத்தும் முறை..
அடிபணியாதவர்களுக்கு போதை மருந்தை கொடுத்து அடிமையாக்குவது, சிலரை வேண்டுமென்றே காவல்துறையிடம் போட்டுக் கொடுத்து உள்ளே தள்ளுவது என்று நமது அனைத்து உள்மனது ஆபாசங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது படம்.


காவல்துறையும், குற்றவாளிகளும் கை கோர்த்துச் செயல்படுவது ஏதோ நம் நாட்டில்தான் என்றில்லை.. உலகம் முழுக்கவே உலகமயமாக்கப்பட்ட ஜனநாயக கொள்கைகளில் அதுவும் ஒன்றுதான்.. எல்லா நாட்டிலுமே இந்தப் பிரச்சினை இருக்கிறது.

இந்த பெஸாவின் இருப்பிடத்தில்தான் தமர் தனது தொலைந்து போன அண்ணனைக் கண்டுபிடிக்கிறாள். அதுவும் அவன் போதை மருந்துக்கு அடிமையான சூழலில்தான் பார்க்கிறாள். தனது நாயை அவனிடம் அனுப்பி அவனைப் பார்க்க வைக்கும் காட்சி மனதை நெகிழ வைத்தது.

கட்டிப் பிடித்து கதறுவது, மெல்ல மெல்ல பின்னணி இசையின் ஒலியை உயர்த்தி உணர்ச்சியைத் தூண்டுவது என்ற வழக்கமான விஷயங்களே இல்லாமல் மிக இயல்பான நடிப்பும், காட்சியமைப்பும் இந்தக் காட்சியில் பார்வையாளர்களை உறைய வைத்தது.

பெஸாவின் இருப்பிடத்தில் இருந்து தினமும் வேனில் அழைத்துச் செல்லப்படும் இசைக்கலைஞர்கள் நகரின் பல இடங்களிலும் அடியாட்களுடன் ஆங்காங்கே நிறுத்தப்படுவார்கள். இவர்களுடைய இசை அங்கே சுற்றுலாவாக வரும் பயணிகளைக் கவர.. அவர்கள் போடும் தட்சணையையும், இந்த இசைக்கலைஞர்கள் தப்பிக்க முயல்கிறார்களா என்பதையும் கண்காணித்தபடியே இருக்கிறார்கள் அடியாட்கள்.

இந்த அடியாட்களிடமிருந்துதான் தனது அண்ணனைக் காப்பாற்றுகிறாள் தமர். தியோடராவுக்கு கடைக்காரர் மூலம் தகவல் சொல்லித் தயாராக காத்திருக்க வைத்து.. அவள் தப்பிக்கும் அந்தச் சில நிமிடங்கள் பதை, பதைக்க வைத்தன.


இசை சம்பந்தப்பட்டத் திரைப்படம் என்பதால் இஸ்ரேலிய இசைத் தொகுப்புகள் பலவும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. கிடார் என்பதாலேயே அதிகமான இசை இருக்குமே என்று நானும்தான் நினைத்து ஏமாந்து போனேன். கிடார் இசையையும் மென்மையாகக் கையாண்டு, பாடலுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

இத்திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் 11 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 3 விருதுகளைப் பெற்றுள்ளது. 2006-ம் ஆண்டு ஜெருசலேம் திரைப்பட விழாவில் துவக்கப் படமாக காட்டப்பட்டுள்ளது. அதே விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருது, அஸப்பாக நடித்த Yonaton-Bar-or-க்குக் கிடைத்துள்ளது.


மியாமி சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது தமராக நடித்த Bar Belferக்குக் கிடைத்துள்ளது.

மனித வாழ்வில் இளம் வயது என்பதே சாகசம் செய்யக்கூடிய காலக்கட்டம். அதிலும் ஒருவன் தனது வாழ்வையே பயணம் வைத்து செய்து முடிக்கின்றபோது நாமெல்லாம் இதில் ஒரு கால்வாசியையைவாவது தொட்டிருக்கோமா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அதே சமயத்தில் இது போன்ற திரைப்படக் கதைகள் ஏன் நம்மிடையே உருவாவதில்லை என்பதையும் நாம் யோசிக்கத்தான் வேண்டும்..

பார்க்கத் தவறிவிடாதீர்கள்..!