கட்டற்ற பாலியல் சுதந்திரம் நமக்கு தேவைதானா..?



28-07-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திருநங்கை ரோஸ் வெங்கடேசன், Cricket Scandal என்ற ஆங்கிலப் பெயருடன் தமிழ்த் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். அவருடைய நெடு நாளைய நண்பர் செந்தில்குமார் என்பவர்தான் தயாரிப்பாளராம்.. 

'இப்படிக்கு ரோஸ்' என்று விஜய் டிவியிலும், 'இது ரோஸ் நேரம்' என்று கலைஞர் டிவியிலும் நேரடி சந்திப்புகளை நடத்தியவர் கடைசியாக பிக் எஃப்.எம்.மில் 'ரோசுடன் பேசுங்கள்' என்று ரேடியோ ஜாக்கியாகவும் பணியாற்றினார். 





இவரது நெடு நாளைய கனவே இயக்குநராக வேண்டும் என்பதுதானாம். படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் பட்டியில் இன்னும் தயாராகவில்லையாம்..! ஆனால் கிரிக்கெட் சூதாட்டம் பற்றியதுதான் கதை என்று உறுதிபடச் சொன்னார். 

நம்முடைய பவர் ஸ்டார் சீனிவாசன் வழக்கமான பரிவாரங்களோடு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்..  எல்லாஞ் சரி.. ரோஸ் வெங்கடேசனை பற்றி அவர்கள் கொடுத்த செய்தியைப் படித்துக் கொண்டே வந்தபோது கடைசியாக இருந்த 2 பக்கங்கள் கொஞ்சம் சூட்டைக் கிளப்பியதாக இருந்தது..! 


செக்ஸ் சுதந்திரத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு Sexual Liberation Party of India என்று தனிக் கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறாராம் ரோஸ் வெங்கடேசன்..! 

இக்கட்சியின் கோரிக்கைகள் என்ற தலைப்பில் சிலவற்றை படிக்க நேர்ந்தது..! மெய் சிலிர்த்துப் போனேன்.. நீங்களும் படித்துப் பாருங்கள்..!

Here are some of the founding goals of her party :

1. Expression of your sexuality is your basic right.

2. 40% for women, 5% for openly LGBT, rest open in areas of public and private employment to promote a sexually equal society, rest open.

3. Repealing all laws against sexual freedom of consenting individuals.

4. sex work to be made industry with proper licenses to persons who are voluntarily involved.

5. Encouraging sex clubs and sex-based industry.

6. Comprehensive review of laws supporting and protecting marriage and amending or repealing those laws that are against individual rights.

7. Public and private sector offices should have a space for people to share sexual warmth and love.

8. Public spaces should have or create space for lovers, couples, groups that may want to have consensual sex.

9. Protecting the right to have sex in designated spaces within public areas against rowdies, police harassment.

10. Having sex in cars, four-sided closed vehicles to be made legal.

11. Encouraging women to come out and occupy employment, politics, industries at least to their reserved capacity.

12. Encouraging people to avoid marriage and procreation to bring the population of India down for the next fifty years to at least one half of the current number.

13. Legal age to be made 14.

இட ஒதுக்கீடு கேட்பது சரிதான்.. என்னைக் கேட்டால் உடல் ஊனமுற்றவர்களுக்கும், திருநங்கைகளுக்கும் முழுக்க முழுக்க 100 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும்.. இந்தக் குறைபாடு உள்ள அனைவருக்குமே அரசுப் பணி கொடுக்கப்பட வேண்டும்..! இதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன்..!

ஆனால் அடுத்து செக்ஸ் சுதந்திரத்திற்காக இவர்கள் கேட்டிருப்பது அனைத்துமே இந்தியாவை, தாய்லாந்து ரேஞ்சுக்கு கொண்டு போக நினைப்பதுதான்.. கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்பது நமது நாட்டிற்கு பெரும் சீரழிவைத்தான் தரும் என்பது எனது கருத்து.. 

உங்க கருத்து என்ன..?

மாலைப் பொழுதின் மயக்கத்திலே - சினிமா விமர்சனம்

27-07-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதுவொரு வினோத அனுபவம்..! ஒரு காபி டே கடைதான் படத்தின் இருப்பிடம். முதல் காட்சி மற்றும் இரண்டாம் காட்சியில் காட்டப்படும் கடற்கரை, ஒரு வீடு இதற்குப் பின்பு படம் முடியும்வரையிலும் கேமிரா, காபி டே கடையைவிட்டு வெளியேறவில்லை..!


2 நாட்களுக்குள்ளாக அட்வான்ஸாக வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாய நெருக்கடியில் இருக்கும் அஜய் என்னும் உதவி இயக்குநரான ஹீரோ.. நண்பனுக்கு அட்வைஸ் செய்ய வந்து அவனுக்காகக் காத்திருக்கும் ஜியா என்ற ஹீரோயின். காதல் திருமணம் செய்தும், பிள்ளை பெற்ற பின்பும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாமல் பிரியும் தருவாயில் இருக்கும் ரம்யா-சதீஷ் பேமிலி.. தாய், தந்தையின் சண்டை புரியாமல் இருக்கின்ற சூழலை அனுபவிக்கத் துடிக்கும் இவர்களின் சின்ன வயது மகன்.. அதே காபி டேயின் ஒரு ஓரத்தில் லேப்டாப்பின் மானிட்டர் ஸ்கீரினை மட்டும் ரெப்ரஷ் செய்தபடியே இருக்கும் சினிமா கதாசிரியர்.. எப்போதும் பிகர்களுடன் கடலை போடும் சர்வர்-1.. நியாயமாக வாங்குகின்ற சம்பளத்துக்கு உழைக்க நினைக்கும் சர்வர்-2, வீட்டுப் பிரச்சினையில் மண்டை காய்ந்து போயிருக்கும் கடை மேனேஜர்.. 

இவர்கள் அனைவரின் பிரச்சினையையும் ரீல் பை ரீல் லேசுபாசாகத் தொட்டுத் தொட்டுத் தடவி அத்தனை பிரச்சினைகளுக்கும் 112 நிமிடத்தில் தீர்வு சொல்லி கதையை முடித்து நம்மை விட்டால் போதுமென்று தப்பிக்க வைக்கிறார் இயக்குநர்..!

ஹீரோ ஆரி.. ஏற்கெனவே தாமிராவின் ரெட்டைச் சுழி படத்தில் ஹீரோவாக நடித்தவர்.. அவரது வயதுக்கேற்ற வேடம் என்பதால் ஜியாவை பார்த்தவுடன் காதல் பீலிங் வந்து, ஒன்றன் பின் ஒன்றாக வார்த்தைகளைக் கோர்த்து வசனங்கள் பேசுவதும்.. பாத்ரூமுக்குள் சென்று மோனோ ஆக்டிங் செய்து பார்ப்பதும்.. ஜியாவின் தோழனுக்கு அட்வைஸ் செய்வதுமான காட்சிகளில் நிச்சயம் நடித்திருக்கிறார்.. வேறு எதுவும் சொல்வதற்கில்லை..!


ஜியா என்னும் புதுமுக ஹீரோயின் இழுத்து, இழுத்து வசனம் பேசும்போதே அவரை ரசிக்க முடியவில்லை..! இப்படித்தானா தமிழைக் கொலை செய்வது..? அழகு மட்டும் போதுமா..? நன்கு தமிழ் பேசும் நடிகைகளா தமிழ்நாட்டில் இல்லை..? சொன்னதை செய்வார்கள்.. கொடுப்பதை வாங்கிக் கொள்வார்கள் என்ற சூத்திரத்தை இப்படியெல்லாம் கடைப்பிடித்தால் படம் எப்படி..? 

படத்தின் ஆறுதலான விஷயங்களில் ஒன்று ஒளிப்பதிவு.. பெஸ்ட்டோ பெஸ்ட்.. காபி டே கடையின் எந்தக் கோணத்தில் கேமிராவை திருப்பி வைத்தாலும் அழகு பளிச்சிடுகிறது. அதிலும் முக்கால்வாசி படத்தை மழை பெய்யும் சூழலிலேயே எடுத்திருப்பதும் பிரேமுக்கு பிரேம் ஜொலிக்க வைத்திருக்கிறது..! 


இன்னொரு ஆறுதல்.. இரண்டாவது ஹீரோயின் தேஜஸ்வாணி.. தேவதை.. அவர் எந்தக் கோணத்தில் அழகாக இருப்பாரோ கச்சிதமாக அதை மிஸ் செய்யாமல் படமெடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.. சின்ன சின்ன வார்த்தைகள்தான்.. கணவருடனான மோதலை முகத்திலேயே காட்டும் அந்த எக்ஸ்பிரஷன் பெர்பெக்ஷன்.. இறுதியில் இவர்கள் இணைவதாக வருவது நாடகத்தன்மையாக இருந்தாலும் அழகு தேவதையை மேலும் அழ வைக்காமல் விட்டுவிட்டார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்..!

படத்தின் மேக்கிங் நல்லாத்தான இருக்கு என்பவர்கள் வசனங்களையும், காட்சியமைப்புகளையும் உதாரணமாக்குவார்கள்.. அழகு என்பது நமக்குத்தான்.. அது சராசரி ரசிகனின் மனதை லேசாக டச் செய்ய வேண்டும். அதில் இது மிஸ்ஸிங்.. எந்தக் காட்சியும் மனதில் ஒட்டாத அளவுக்கு அளவுக்கு மீறிய இயல்பு தன்மையைக் காட்டித் தொலைத்திருக்கிறார்கள். அதுவே இப்படத்திற்கு மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்டாக போய்விட்டது..!

மேனேஜர் பஞ்சுவை டென்ஷனாக்கும் சர்வர் ஹரியின் தொடர்ச்சியான பேச்சும், இன்னொரு சர்வரின் பேச்சும் யதார்த்தமாகத்தான் உள்ளது என்றாலும் அது கடைக்கோடி ரசிகனுக்குரியதாக இல்லை..! தன்னால் ஒருத்தி கர்ப்பமாகிவிட்டாள் என்பதை அறிந்து இதையே தொழிலாக வைத்திருக்கும் ஹரி.. இதற்கு காதலியிடம் போனில் சொல்லும் சமாளிப்பும், அடுத்த பிகரிடம் உடனேயே கடலை போடத் துவங்கும் காட்சிகளும் அந்த நேரத்தில் ரிலாக்ஸ் கொடுத்தது என்பது உண்மைதான்..!

இன்னொரு முக்கிய கேரக்டர் பாலாஜி.. புரிந்து கொள்ளாத கணவராக நடித்திருக்கும் இவருக்கு பஞ்சு புத்திமதி சொல்வதை போல காட்சியமைத்து, அந்தப் புத்திமதியைக் கூட தெளிவாகச் சொல்லாமல்விட்டதுதான் ஏன் என்று தெரியவில்லை..? 

தன்னிடம் கேட்ட ஆர்டரை இல்லை என்று பொய் சொல்வது தெரிந்தும் சர்வர் சேகர் வருத்தப்பட்டு நிற்பதும்.. இதை அவ்வப்போது ஹரி சுட்டிக் காட்டி ஆறுதல் சொல்வதும்.. இறுதியில் சுப்பு தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு ஊருக்குப் போகப் போவதாகச் சொல்வதும், ஜியா இறுதிக் காட்சியில் திடீரென்று மனசு மாறி திரும்பி வருவதும் வெறுமனே நாடகத்தனமாக இருக்கிறது..!

திடீர் திடீரென்று வரும் பாடல் காட்சிகள் மட்டுமே இது தமிழ்ச் சினிமா என்பதை அடையாளம் காட்டுகின்றன.. ஆனாலும் அது எந்தவிதத்திலும் ரசிக்கும்படியாகவும் இல்லை என்பதையும் சொல்லத்தான் வேண்டும். ஊறுகாயை எதற்காகவாவது தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். ஆனால் அதையே சாப்பிட முடியுமா..? வெறும் ஒளிப்பதிவை மட்டும் வைத்துக் கொண்டு பாடல் காட்சிகளை ஒப்பேற்றியிருக்கிறார்கள்..!

சிவாஜி சந்தானம் ஸார்.. சில காட்சிகளில் தனியே அமர்ந்திருக்கிறார்.. அவருக்கென்று தனி டிராக் ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ஆனால் அவரது கேரக்டர் கடைசியில் வேஸ்ட்டாகவே போய்விட்டது..! 

சுவாரஸ்யமில்லாத கதை..  அழுத்தமில்லாத திரைக்கதை..! ஒரே இடத்தை சுற்றி சுற்றி வரும் போரடிப்பு.. அதிகம் முகம் தெரியாத நடிகர்கள்.. மேட்டிமைத்தனம் சார்ந்த இயக்கம்.. இதெல்லாம் சேர்ந்து இப்படத்தை புதைகுழிக்குள் தள்ளியிருக்கிறது என்று தைரியமாகச் சொல்லலாம்..!

வித்தியாசமான கதைக் களன்கள் தமிழ்ச் சினிமாவுக்கு அவசியம் தேவைதான். ஆனால் நிச்சயம் இது போன்ற முட்டாள்தனங்கள் தேவையில்லாதவை. இங்கே வெற்றி படம்.. வெற்றியடையாத படம் என்ற இரண்டு பிரிவுகள் மட்டுமே உண்டு.. நல்ல படம்.. கெட்ட படம் என்றெல்லாம் இல்லை..! தோல்விப் படங்களெல்லாம் கெட்ட படங்களல்ல.. அதேபோல் வெற்றி பெற்ற படங்கள் அனைத்தும் நல்ல படங்கள் அல்ல..!

சராசரி ரசிகனின் பார்வையை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. வழக்கு எண்ணை ஓடோடி வந்து பார்த்த அதே ரசிகன்தான், தடையறத் தாக்க படத்தையும் பார்த்திருக்கிறான்..! அவனுடைய அளவுகோல் மாதத்துக்கு மாதம், வாரத்துக்கு வாரம்.. ஏன் நாளுக்கு நாள் மாறிக் கொண்டேதான் இருக்கிறது..! அவர்களுக்கேற்றாற்போல் நாமளும் மாறித்தான் ஆக வேண்டும். நமக்குப் பிடித்தமானதுபோல் எடுத்துக் கொடுத்து கண்டிப்பாக நீ பார்த்தே தீர வேண்டும் என்று யாரையும் வற்புறுத்த முடியாது.. 

இதன் இயக்குநர் நாராயண நாகேந்திரராவ் நிறைய லத்தீன் அமெரிக்க படங்களை பார்த்திருப்பார் போலிருக்கிறது..! இப்படம்கூட ஏதோ ஒன்றின் தழுவலாகத்தான் இருக்கும்..! ஒரு இடைவேளை.. 5 பாடல்கள்.. நகைச்சுவைக் காட்சிகள்.. சண்டைக் காட்சிகள்.. கண்ணீர் வரவழைக்கும் 5 நிமிட உருக்கமான காட்சிகளென்று வழக்கமான கமர்சியல் பார்முலாவை கேட்கவில்லை. ஏன் வழக்கு எண் போன்றாவது செய்திருக்கலாமே..? 

இதன் தயாரிப்பாளர் திருமதி.மயூரி சேகர், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் இப்படம் தயாரிக்க தான் முனைந்தது பற்றியும், அதற்கு முன் திரையுலகில் நுழைய தான் பட்ட சிரமத்தையும் வெள்ளந்தியாக எடுத்து வைத்தபோது விழாவுக்கு வந்திருந்த அத்தனை பேரும் உருகிப் போய் வாழ்த்து மேல் வாழ்த்து சொன்னார்கள். அந்த வாழ்த்துகள் இப்படி வீணாய்ப் போய்விட்டதே என்பதில் மீடியாக்காரர்கள் அனைவருக்குமே இப்போதும் வருத்தம்தான்..!

இந்தப் படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து படங்கள் செய்ய தயாராக இருப்பதாகக் கூறியிருக்கும் தயாரிப்பாளர் இதற்கடுத்து என்ன செய்வார் என்று எனக்குத் தெரியவில்லை..! இப்படி ஒரு தயாரிப்பாளர் தோல்வியடைந்து கோடம்பாக்கத்தில் இருந்து வெளியேறினால் இவரது தோல்வியைப் பார்த்து, வருவதற்காகக் காத்திருக்கும் சிலரும் உள்ளே வராமலேயே சிலர் திசை மாறிப் போய்விடுவார்கள். இது போன்ற தோல்விகள் சங்கிலித் தொடர் போல சினிமா துறையையே பாதிக்கிறது.. இதனை யார் புரிந்து கொள்வது..?

விமர்சனங்களையும் தாண்டி இப்படம் ஓடி, வெற்றி பெற்றால் நிச்சயம் நமக்கும் சந்தோஷமே..! அடுத்த படமாவது இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் வெற்றிகரமாக இருக்க வாழ்த்துகிறேன்..!


சுழல் - சினிமா விமர்சனம்

27-07-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இது எந்த ஹாலிவுட், ஐரோப்பிய படத்தின் காப்பி என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்ல்லாம்..!

பாண்டிச்சேரி கல்லூரியில் படிக்கும் மாணவர்தான் ஹீரோ. அவருடைய செட்டில் மொத்தம் 10 பேர். அவரையும் சேர்த்து 5 ஆண்கள், 5 பெண்கள்..! ஹீரோவின் அப்பா ஈரோட்டு பக்கம் வாழ்ந்து கெட்ட குடும்பம். சூதாட்டத்தில் தனது பெயரையும், புகழையும், சொத்துக்களையும் அழித்தவர். இதனால் ஹீரோ பணத்துக்காக படித்தபடியே எலெக்ட்ரிக்கல் வேலையையும் செய்து வருகிறார். 


யாரோ ஒரு தீவிரவாதக் கூட்டம், இந்தியாவில் கடற்கரையோரமாக ஏதோ ஒரு அசம்பாவிதத்தைச் செய்யவிருப்பதாக உள்துறைக்குத் தகவல் கிடைத்து அது சி.பி.ஐ.க்கு செல்கிறது. சி.பி.ஐ. தேடும் பணியில் இறங்க.. எப்போதும் போதை மருந்துக்கு அடிமையான நிலைமையில் இருக்கும் பிரதாப்போத்தன் சிக்குகிறார். அவரது வீட்டுக்கு எலெக்ட்ரிக்கல் வேலை செய்யப் போகிறார் ஹீரோ. சிபிஐ இப்போது ஹீரோவையும் பாலோ செய்கிறது. 

ஹீரோ தன் வீட்டுக்கு தனது நண்பர்களை அழைத்துச் செல்கிறார். திரும்பும் வழியில் காதலர்களான நண்பர்கள் இருவர் விபத்தில் சிக்குகிறார்கள். இதில் காதலி இறந்துவிட.. காதலன் உயிர் பிழைத்தாலும் சீரியஸாகவே இருக்கிறார். அவரைப் பிழைக்க வைக்க லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. 

இந்த நேரத்தில் பிரதாப் எந்த நேரமும் தனது வீட்டில் இன்னும் ஒரு வாரத்தில் தான் கோடீஸ்வரனாகிவிடுவேன் என்றே சொல்லி வருகிறார். இதனைக் கேட்டிருக்கும் ஹீரோ தனது கடைசி வேலை நாளில் பிரதாப்புக்கு வந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு பணம் சம்பாதிக்க ஓடுகிறார். போலீஸ் அவரை துரத்த.. பணம் பண்ணும் வழியைக் கண்டறிந்துவிடுகிறார் ஹீரோ. ஆனால் அது அவர் நினைக்காத பயங்கரத்தைக் காட்ட.. அதில் இருந்து அவர் தப்பிக்கிறாரா இல்லையா என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..!

பணம் சம்பாதிக்க உயிரைப் பணயம் வைக்கும் ஒரு விளையாட்டில் சிக்கிக் கொள்கிறார் ஹீரோ. தப்பித்தாரா..? இல்லையா..? என்பதுதான் கதை.. இப்படி இரண்டு வரிகளில் இதனைச் சொல்லித் தப்பித்துவிடலாம். ஆனால் தமிழ்ச் சினிமாவுக்கென்றே தனி பார்முலா உண்டே.. அந்த வகையில் ஹீரோவுக்கு ஏன் அந்த பணம் சம்பாதிக்கும் ஆசை..? அதன் புறச் சூழல் என்னென்ன என்பதற்காகத்தான் ஹீரோவின் பேமிலி, அவருடைய படிப்பு.. போதை ஆசாமி பிரதாப் போத்தனின் பெத்த நடிப்பு.. நிழல்கள் ரவியின் இழந்துபோன ஜமீன்தார் கெட்டப்.. என்று அனைத்தையும் கலந்து கட்டிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெயக்குமார்.

ஹீரோவாக புதுமுகம் பாரீஸ்.. பெயர் வித்தியாசம்போல் பார்ப்பதற்கும் வித்தியாசமாகவே இருக்கிறார். முதல் பாதியைவிடவும் இரண்டாம் பாதியில் கப்பலில் அந்தக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு தவிப்பதில் மட்டுமே தனியாகத் தெரிகிறார்..! ஹீரோயின் என்று தனியாக யாரும் இல்லை..! ஒரேயொரு பாடல் காட்சியில் மட்டும் பளிச்சென்று தெரிகிறார் ரோஸி. இவரில்லாமல் சாருலதா, ஜோதி என்று இன்னும் 2 நங்கைகளும் உண்டு..!

கொஞ்சமேனும் வந்தாலும் காவேரியின் புலம்பல் ஆக்ட்டிங் மறக்க முடியாதது.. நிஜ ஆங்கிலோ இண்டியனான காவேரியை தேடிப் பிடித்து இதுக்காகவே நடிக்க வைத்திருக்கிறார்களோ..? ஆனாலும் ஒரே வசனத்தைத் திரும்பத் திரும்ப பேச வைத்திருப்பதால் கொஞ்சம் கடுப்பும் சேர்ந்து வருகிறது.. பிரதாப் போத்தனும், நிழல்கள் ரவியும் தாங்கள் இருப்பதை நிலை நாட்டியிருக்கிறார்கள் அவ்வளவே.. 

வீணடிக்கப்பட்ட நடிகரும் இருக்கிறார். அவர் அதுல் குல்கர்னி. இந்தக் கேரக்டருக்கு இவர் எதற்கு என்றுதான் தெரியவில்லை. விளம்பரங்களிலும், விழாக்களிலும் அதுலே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது கடைசியில் கேலியாகிவிட்டது..! இவர் தனியாக கண்டுபிடிப்பதை போன்று காட்சிகளோ, அழுத்தமான திரைக்கதையோ இல்லாததால் ரன், தீபாவளி, ஹேராமில் இருந்த  இவரது பங்களிப்பு இதில் மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும்..!

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவைகள் மூன்று மட்டுமே.. எடிட்டிங், ஒளிப்பதிவு, இசை... இந்த மூன்றுமே இந்தப் படத்தில் அபாரம்.. இரண்டாம் பாதியில் கப்பல் காட்சிகளையும், கிளைமாக்ஸையும் பரபரவென நகர்த்தியிருப்பதில் எடிட்டர் பி.லெனினின் பங்களிப்பு மிக அதிகம்தான்.. ரொம்ப நாளைக்கப்புறம் மீண்டும் கையில் கத்திரிக்கோலை தொட்டிருக்கிறார் எடிட்டர் திலகம் லெனின். அவருக்கு எனது வாழ்த்துகள்..!

பாண்டிச்சேரியின் வீதிகளையும், கேரளாவின் இயற்கை வனங்களையும் பளிச்சென்று காட்டுகிறது ஜேம்ஸ் கிருஷின் ஒளிப்பதிவு..! அதிலும் பாடல் காட்சிகளில் கேமிராவின் பங்களிப்புதான் மிக அதிகமாக இருக்கிறது..! எல்.வி.கணேசனின் இசையில் யார் யாரோ பாடலும், சொல்ல வந்தேன் பாடலும் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கின்றன.. இவர் நினைத்தால் ஒரு ரவுண்டு வரலாம் என்றே நினைக்கிறேன்..! சொல்ல வந்தேன் என்ற மெலடியில் எடு்ககப்பட்ட காட்சிகளிலும்கூட அசத்தியிருக்கிறார் இயக்குநர்..!

முற்பாதி முழுவதும் குடும்பப் பிரச்சினைகளையே அதிகம் தொட்டுவருவதால் கதை எங்கே போய் நிற்கும் எனத் தெரியாத சூழலில் அந்த ஆக்சிடெண்ட்.. அதைத் தொடர்ந்த நிகழ்வுகள்.. பிரதாப்புக்கு வந்த லெட்டரை ஹீரோ எடுத்துக் கொண்டு கேரளா கிளம்புவது.. இந்த நடத்தில் கதை பறக்கத் துவங்கி அது என்ன வகையான விளையாட்டு என்பது தெரியும் நிலை வரையிலும் வேகம்.. வேகம்.. வேகம்..

அந்த பயங்கர விளையாட்டை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவே காட்டியிருக்கலாம்..! அது இல்லாததால் அதிகம் மனதில் ஒட்டவில்லை. 
கடல் எல்லைக்கு அருகில் நிற்கும் கப்பலில் நடக்கும் இந்தக் கூத்து போலீஸாருக்கு தெரியாது என்றும்.. ஒரே நாள் இரவில் பிணம் கரையைத் தொட்டு.. அந்தக் கப்பல்தான் தங்களது இலக்கு என்று போலீஸும், சி.பி.ஐ.யும் முடிவெடுப்பதும்.. இயக்குநர் கஷ்டப்படாமல் கதையை முடிக்க முடிவெடுத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது..! இருந்தாலும் அந்த இறுதிக் காட்சியில் மனதில் ஒரு பீலிங் எழுவது என்னவோ உண்மைதான்..!

இந்த வாரம் வந்த படங்களிலேயே இது சிறந்தது என்பதால் கொஞ்சமாச்சும் ஓடட்டுமே என்று வாழ்த்துகிறேன்..!

நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்..!
  

கேளிக்கை வரிவிலக்கு - ஆரோகணம் இயக்குநருக்கு நேர்ந்த அனுபவம்..!

16-07-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று காலையில் வெளிவந்த இந்தச் செய்தியைப் படித்தபோது மிகவும் ஆச்சரியமாகத்தான் உள்ளது..! 

நல்ல சினிமாக்களை ஊக்குவிக்கும் பொருட்டு தாத்தா கொண்டு வந்த வரிவிலக்கு என்ற திட்டத்தின் மூலம் பல லட்சங்கள் அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் மாமூலாகச்  செல்கிறது.. கட்டிங் கொடுக்காமல் சர்டிபிகேட்டும், ஆர்டரும் நம்ம கைக்கு வராது என்று தயாரிப்பாளர்கள் யூனியன் வாசலில் பலரும் பேசுவதாக செய்திகள் உலா வந்து கொண்டிருந்தன. இப்போது இது அத்தனையையும் துடைத்தெறிவதைப் போல 'ஆரோகணம்' திரைப்படத்தின் இயக்குநர் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணனுக்கு கிடைத்த அனுபவங்கள் சொல்கிறது..!

இதோ நீங்களும் படியுங்கள் :


ஆரோகணத்தின் ‘ஆன்ட்டி க்ளைமாக்ஸ்’!

“தமிழ் சினிமாக்கள், உலகம் முழுவதிலும் அலைகளை ஏற்படுத்தி வருகின்றன.” -   ‘ஆரோகணம்’ படத்தைப் பார்த்ததும், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடமிருந்து வந்த முதல் கருத்து இதுதான். படத்தைப் பார்த்த மற்ற முன்னணி இயக்குநர்கள் மற்றும் வெற்றிப்படங்களைத் தரும் இன்றைய இளம் இயக்குநர்கள் அனைவரின் கருத்தும் அதையேதான் பறைசாற்றின. 

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் இப்படத்தைத் திரையிட்டபோதும், மலையாளப் படவுலகின் குறிப்பிடத்தகுந்த பிரபலங்கள், ‘தமிழ் சினிமாக்களின் புத்தம்புதுமையும் புதுமையான உத்திகளும், எப்போதுமே முத்திரை பதிக்கத் தவறுவதில்லை‘ என்று புகழாரம் சூட்டினர்.


படத்தின் பிரத்யேகக் காட்சியைப் பார்த்த பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்துகொண்டிருக்கும் வேளையில், ‘ஆரோகண’த்தைப் பார்வையிட்ட தணிக்கைத் துறை அதிகாரிகளும் வரிவிலக்குக் குழுவினரும் ‘சமூகத்துக்கு இது போன்ற திரைப்படங்கள்தான் இப்போது தேவை’ என்ற தங்களின் உண்மையான உணர்வைப் பதிவு  செய்தனர்.  அமைதியாகவும் மனநிறைவோடும் நான், வரிவிலக்குச் சான்றிதழை எதிர்நோக்கிக் காத்திருந்தேன்.

இது நடந்து 3 வாரங்கள் ஆகியும் அந்தத் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வராமல் போகவே, என்னைக் கவலை அரிக்க ஆரம்பித்தது. அந்த அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டுமானால், அவர்களைக் ‘கவனித்தால்’தான் வேலை நடக்கும் என்பது போன்ற வதந்திகளும் எச்சரிக்கைகளும் என் கவலையை இன்னும் அதிகரிக்கச் செய்தன.  ஏற்கெனவே பார்த்துப் பார்த்து சிக்கனமாய் நான் போட்டிருந்த பட்ஜெட்டில், காரணமே இல்லாமல் ஒரு பைசா செலவழிப்பதைக் கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியாத நிலை..! என்ன செய்யலாம் என்று தீவிரமாய் யோசித்த நான், எனது வழியிலேயே சென்று விஷயங்களைக் கையாள்வது என்று முடிவெடுத்தேன்.  லஞ்ச ஒழிப்புத் துறையில் பணிபுரியும் என் நண்பர்கள் சிலருடன் தொடர்புகொண்டபோது, அந்த லஞ்ச லாவண்ய அதிகாரிகளை நான் எப்படியெல்லாம் தந்திரமாகக் கையாளவேண்டும் என்ற அறிவுரைகளை அள்ளி வழங்கினார்கள். ஆனால் ஒருவர் மாற்றி ஒருவரைக் குறை சொல்லிக் கொண்டிருக்காமல், நானே களத்தில் இறங்கிப் பார்த்துவிடத் தீர்மானித்தேன். 

எனவே, ஒரு நாள் காலையில் கிளம்பி, எழிலகத்தில் இருக்கும் வணிக வரித் துறை அலுவலகத்துக்குச் சென்றேன். (‘இந்தியன்’ படத்தின் ஏதோ ஒரு காட்சியில் நடிப்பது போன்ற உணர்வு எனக்கு!). ஆனால், அங்கே நடந்ததே வேறு! மிகவும் ஆச்சர்யப்படத்தக்க வகையில் எனக்கு அன்பான வரவேற்பு கிடைத்ததுடன், வரிவிலக்கு சான்றிதழுக்காக வந்த ‘ஆரோகணம்’ கோப்பு, அந்த வணிகவரித் துறை அலுவலகத்தில் அரை மணி நேரத்துக்கு மேல் தங்கவில்லை என்றும், உடனேயே கையெழுத்தாகி, அடுத்த நடவடிக்கைக்காக தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டு விட்டது என்றும் தகவல் சொல்லப்பட்டது.

‘அப்பாடா.. இனிமேல் கவலைப்பட வேண்டாம்!’‘ என்ற நிம்மதிப் பெருமூச்சு என்னிடம். ஆனால் அந்த நிம்மதி வெகு நேரம் நீடிக்கவில்லை. ‘செகரட்டரியேட்லதான் கண்டிப்பா வாங்குவாங்க..’. ‘ஒரு சூட்கேஸைக் கொண்டு போய்க் காட்டும்வரையில் உங்க ஃபைல் அங்கேயிருந்து மாதக்கணக்கில் நகரவே நகராது’, ‘அங்கே உள்ளே என்ன நடக்குதுன்னு யாருக்குமே தெரியாது’.. இப்படியான ஏளனமான பயமுறுத்தல்கள் மீண்டும் வர ஆரம்பித்தன.

‘இதை விடக் கூடாது.. என்னதான் ஆகுதுன்னு பார்த்துடணும்’ என்ற உறுதியோடு, நான் தலைமைச் செயலகத்துக்குப் படையெடுத்தேன். அங்கிருந்த பணியாள் ஒருவர், எனக்கு இணைச்செயலரின் அறையைக் காண்பித்தார். அவரைப் பார்க்கும்போதே நல்ல மனிதராகத் தெரிந்தது. நான் வந்த விஷயத்தைச் சொன்னதும், சிறிது குழப்பமாகப் பார்த்தார் இணைச் செயலர். நான் இன்னும் விளக்கமாக, ‘‘இங்கே இன்னின்ன படத்துக்கு இவ்வளவு தொகை கொடுக்கப்பட வேண்டும்’’ என்று நான் கேள்விப்பட்ட கணக்கு விவரத்தைக் கூறியதும், அவர் ‘சட்’டெனத் தூக்கிவாரிப் போட்டவராக நிமிர்ந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளை அவசரமாக மறுத்த அவர், என்னை செயலரின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

செயலரின் உதவியாளர், மிகவும் சிநேகிதமான தோற்றம் கொண்ட நடு வயதுப் பெண்மணி. எனக்கு வாழ்த்துச் சொன்ன அவர், என்னைப் பற்றிய விவரங்களை செயலரிடம் தருவதற்காக ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தருமாறு கோரினார். பசியோடும், களைப்போடும், விரக்தியோடும் இருந்த நான், முற்றிலும் கலங்கிய நிலையில், ‘‘லக்ஷ்மி ராமகிருஷ்ணன், நடிகை, திரைப்பட இயக்குநர் மற்றும் இல்லத்தரசி’’ என்று ஒரு சீட்டில் அவசரமாகக் கிறுக்கி அவரிடம் கொடுத்து செயலரிடம் தரச் சொன்னேன். 

அடுத்த 2 வது நிமிடத்தில் அழைப்பு வந்தது. செயலரின் அறைக்குள் நுழைந்தேன்.. அங்கே நாற்காலியில் கண்ணியமான தோற்றத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார் அவர். பண்புள்ள, மரியாதையான அவருடைய தோற்றத்தைப் பார்த்ததுமே எனக்கு பயமின்றி அவரிடம் எல்லாம் சொல்லலாம் என்று தோன்றியது. அவரிடம் சகஜமாக என்னால் பேச முடிந்ததால், நடந்த எல்லாவற்றையுமே விளக்கமாகச் சொன்னேன்.

நான் சொல்லி முடித்த உடனே, முகத்தில் எந்த விதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், தனது துறைக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் திட்டவட்டமாக மறுத்தார் அவர். என்னுடைய ஃபைல் அங்கே வந்ததிலிருந்து, அதற்கு அடுத்தகட்டமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இப்போதைய அதன் நிலைமை.. என்று அனைத்து விவரங்களையும் தயாராக வைத்திருந்தார். அந்த ஃபைல் தற்போது அமைச்சரிடம் இருப்பதாகவும், அதைப் பற்றி அமைச்சரிடம் தான் நினைவுபடுத்துவதாகவும் உறுதிபடக் கூறினார்.

மேலும், ‘ஆரோகணம்’ திரைப்படம், ‘யு’ சர்டிஃபிகேட் மற்றும் தமிழ் தலைப்பு போன்ற வரிவிலக்கு பெறுவதற்கான எல்லாவிதமான தகுதிகளையும் பெற்றிருப்பதால், வரிவிலக்குக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் உறுதியளித்தார். அடுத்து அவர் பேசும்போது, தங்களுடைய துறை லஞ்சம் அற்றது என்றும், அங்கே பணிபுரியும் ஒவ்வொருவரும் சுத்தமான கரங்களுடன் பணிபுரிவதாகவும் கூறினார். அவர் பேசுவதையே கேட்ட நான், சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.. 

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதை எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஓர் அரசு அதிகாரி எவ்வளவு ஆணித்தரமான நம்பிக்கையோடு தன் துறையைப் பற்றிப் பேசுகிறார்! நான் வாயடைத்துப்போனேன். நான் கேள்விப்பட்ட வதந்திகள் எல்லாம் அந்தச் சில நிமிஷங்களில் ஒன்றுமில்லாமல் போயின. உடனே நான் நினைத்ததை அவரிடம் சொன்னேன்.. ‘நல்லவேளை.. எனக்கு உண்மையைப் புரியவைத்தீர்கள்.. உங்களைச் சந்தித்தது, என் கண்ணைத் திறந்துவிட்டது போல் இருக்கிறது’’ என்று நன்றி சொல்லிவிட்டு, அவருடைய நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ள விரும்பாமல் கிளம்பிவிட்டேன். 

ஓர் அரசு அலுவலகத்திலிருந்து, ஓர் அரசு அதிகாரியுடனான இனிமையான சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்தபோது, மிகவும் பயங்கரமாகச் சித்திரிக்கப்படுகின்ற சில விஷயங்கள், அருகில் சென்றால் உண்மையிலேயே அப்படி இல்லை என்ற விடியல் வெளிச்சம் எனக்குள் ஏற்பட்டது!  ‘இது இப்படித்தான்..!’ என்று வழிவழியாக நமக்குள் உருவாக்கி வைத்திருக்கும் சில பிம்பங்களை விட்டு வெளியே வரவேண்டிய நேரம் இது.. உண்மையைக் கண்டறிய நாமே தேடிச் செல்வோமானால்.. யார் கண்டது..? அங்கே நாம் காண்பது முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு பிம்பமாகவும் இருக்கலாம்!

பின்குறிப்பு: எனது அடுத்த திரைப்பட முயற்சிக்கு, இதையே அடிநாதமாக வைத்துக்கொள்ளலாமா எனப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன்.

இதுவரையிலும் சரிதான்.. இனிமேல் அமைச்சரின் டேபிளில் இருந்து இது எவ்வளவு வேகத்தில் பயணிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆரோகணம் திரைப்படத்தை 38 லட்சம் ரூபாயில் தயாரித்திருக்கிறார்கள். பிரபல விநியோகஸ்தர் ஜெ.சதீஷ்குமார்  45 லட்சம் ரூபாய்க்கு இதன் ஒட்டு மொத்த விநியோக உரிமையைப் பெற்றுள்ளார்.  ஆனாலும் கூடுதலாக 30 அல்லது 40 லட்சம் விளம்பரத்திற்காக செலவு செய்தால்தான் இந்தப் படத்தை தியேட்டர்களுக்கு கொண்டு செல்ல முடியும் என்று சதீஷ்குமாரே ஆரோகணம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.

தமிழக அரசின் வரிவிலக்கு இப்படத்திற்குக் கிடைத்தால் அது விநியோகஸ்தருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நல்லதாச்சே என்பதால் வரிவிலக்கு கிடைத்த பின்பு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்று காத்திருக்கிறார்கள்.  ரிலீஸின்போதே வரிவிலக்கு கிடைப்பது வேட்டை, 3 ஆகிய பெரிய படங்களுக்கு நடந்திருக்கிறது. சில படங்களுக்கு ரிலீஸாகி சில நாட்களுக்குப் பிறகு கொடுத்து தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார்கள். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு கடைசிவரையிலும் வரிவிலக்கு தராமல் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தார்கள். 

இப்போது இவர் எழுதியிருப்பதையும், நடப்பதையும் பார்த்தால், ஆட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதனை அப்படியே கீழே உள்ளவர்கள் பின்பற்றுவார்கள் போலும்..! யார் ஆட்சியாக இருந்தாலும் சட்டவிதிமுறைகளைப் பற்றிக் கவலைப்படாமல் மேலிடம் கொடு என்றால் கொடுப்பதும், கொடுக்காதே என்றால் கொடுக்காமல் இருப்பதுமாக அதிகாரிகளின் செயல்பாடுகள் ஒரு அடிமைத்தனமாகவே இருப்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாகிறது..!

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் - கண்டுபிடிங்க..!

16-07-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கதைக்காகவும், திரைக்கதைக்காகவும்கூட இத்தனை யோசிக்க மாட்டார்கள் நமது தமிழ்ச் சினிமா இயக்குநர்கள். நல்ல தலைப்பு கிடைக்க அல்ல்லோகப்படுகிறார்கள். பழைய புத்தகக் கடைகளில் இருந்து பழைய புத்தகங்களை எடைக்கு எடை போட்டு வாங்கி வந்து புரட்டு புரட்டு என்று புரட்டி ஆளுக்கு பத்து தலைப்பு சொல்லணும் என்பதெல்லாம் பல இயக்குநர்கள் தங்களது உதவி இயக்குநர்களுக்கு சொல்லியிருக்கும் உத்தரவு..!

சில சமயங்களில் நல்ல தலைப்பு கிடைக்காவிட்டால்கூட அதை கடைசியா பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு ஷூட்டிங்கை நடத்தியவர்களும் உண்டு..! பல நேரங்களில் இந்தத் தலைப்புதான்யா நல்ல சினிமாவுக்கும், கெட்ட சினிமாவுக்கும் அடையாளமா இருந்து தொலையுது.. ‘இன்பநிலா’ என்ற டைட்டிலை வைச்சா கேட்டவுடனேயே இது மஜா படம்னு வீட்ல இருக்குற பொம்பளைங்களே சொல்லிருவாங்க.. ‘வழக்கு எண் 18/9’ என்றவுடன் ஏதோ படத்துல இருக்கு போல என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கவும் செய்யும்..!

வித்தியாசமாக யோசிப்பதாக நினைத்து............. 

அட்டக்கத்தி
என் புகைப்படம்
ஏதோ செய்தாய் என்னை
கண்டுபிடிச்சிட்டேன்
கள்ளச் சிரிப்பழகா
கோயம்பேடு பேருந்து நிலையம்
செம்பட்டை
தேன்மொழி தஞ்சாவூர்
நானே உன் உபகாரி
நீ எனக்காக மட்டும்
படம் பார்த்து கதை சொல்
மதுபானக் கடை
ரதினா-நான் சுப்ரமணியம் பேசுறேன்
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்
வவ்வால் பசங்க” 

- இப்படியெல்லாம் தலைப்புகளை வைச்சு கொளுத்தியிருக்காங்க..!


இதுல இன்னொரு லேட்டஸ்ட் வரவு ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’. சென்னை தரமணி திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் கல்வி படித்த பாலாஜி தரணிதரனி முதல் படம் இது. இவர் ஏற்கெனவே ‘வர்ணம்’, ‘ஏன் இப்படி மயக்கினாய்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இதில் ஹீரோவா நடிக்கிறது ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி. பெங்களூர் பொண்ணு காயத்ரிதான் ஹீரோயின். எல்லாரையும் அண்ணன்னு கூப்பிட்டு நோகடிச்சிருச்சு. என்னையும் சேர்த்துதான்..!

இந்தப் படத்துக்காக ஸ்கிரிப்ட் எழுத, படிக்க, திருத்தம் செய்ய, ரிகர்சல் செய்ய ஒரு வருஷம் டிரெயினிங் எடுத்திட்டு, அப்புறமாத்தான் கேமிரா முன்னாடி வந்திருக்காங்க. பசங்க படத்தோட ஒளிப்பதிவாளர் பிரேம்குமார்தான் இந்தப் படத்தையும் ஒளிப்பதிவு செஞ்சிருக்காரு.  

இந்தப் படத்துக்கு நிகில் முருகன்தான் பி.ஆர்.ஓ.  என்பதால் உலக நாயகன் கமல்ஹாசனை இந்தக் குழு சந்தித்து அவர் கையாலேயே ஆடியோவை ரிலீஸ் செய்ய வைத்துவிட்டார்கள். கமலும் டிரெயிலரை பார்த்துவிட்டு படத்துல என்னவோ இருக்குன்னு பாராட்டிப் பேசியிருக்காரு..!


டிரெயிலர் காட்டுனாங்க.. முதல் ஷாட்டிலேயே “என்ன இது” என்கிறார் ஹீரோ புரியாமல். சுற்றியிருந்தவர்கள் முழிக்க.. டிரெயிலர் முழுவதையும் பார்த்த பின்பு ஹீரோ ஏதோவொரு விபத்தில் அடிபட்டு செலக்டிவ் அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டு அதன் விளைவுகள்தான் படத்தின் கதையாக இருக்கும் என்பது எனது அனுமானம்..!

“நல்லா போய்க்கிட்டிருக்கிற வாழ்க்கைல திடீர்ன்னு, நீங்க கடந்து வந்த 10 வருஷம் மட்டும் உங்களுக்கு ஞாபகமில்லைன்னா அதுனால என்னென்ன பாதிப்புகள் வரும்..? அதுதான் ஸார் கதை..”ன்னு ரொம்ப நோண்டி நோண்டி கேட்ட பின்னாடிதான் இயக்குநர் சொன்னாரு.. ஸோ.. இந்த செலக்டிவ் அம்னீஷியா சப்ஜெக்ட் நமக்கு புதுசுன்னு நினைக்கிறேன். பட்.. மத்த மொழிகளுக்கு நிச்சயமா இருக்காது..! 

இந்த நேரத்துல சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பிலிம் பெஸ்டிவலில் பைலட் தியேட்டரில் பார்த்த ஒரு படம் இப்போ ஞாபகத்துக்கு வருது..! ஏதோ ஒரு தென் அமெரிக்கா நாட்டு படம். கியூபான்னு நினைக்கிறேன்.  


படத்தின் துவக்கக் காட்சியே மருத்துவனையில் ஆரம்பிக்கும். ஹீரோ ஆக்சிடெண்ட்டாகி சிகிச்சையில் இருக்கிறார். அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், லவ்வரான ஹீரோயின், இவளுடைய பெற்றோர் என்று பெரும் கூட்டமே திரண்டிருக்கும்.. அன்றைக்குத்தான் கண் விழித்திருக்கிறான் ஹீரோ. 

அம்மா, அப்பா, நண்பர்கள் அனைவரையும் பார்த்து அடையாளம் தெரிந்து கொள்பவன், ஹீரோயினை மட்டும் “யார் இந்தப் பொண்ணு..?” என்கிறான். ஹீரோயினுக்கு பக்கென்றாகிறது. “இவ உன் லவ்வர். உனக்கும் இவளுக்கும் நிச்சயத்தார்த்தமெல்லாம் நடந்திருச்சு...” என்கிறார்கள். “அப்படியா..? எப்போ? எனக்குத் தெரியாதே..?” என்கிறான் ஹீரோ. ஹீரோயின் மயக்கம போட்டு விழுக.. அவளைத் தூக்கி அடுத்த பெட்டில் படுக்க வைத்து ஆசுவாசப்படுத்துகிறார்கள்.

மருத்துவர்கள் ஓடோடி வந்து ஹீரோவை செக்கப் செய்ய.. “அவன் செலக்டிவ் அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளான்..” என்கிறார் டாக்டர். “கல்லூரியில் இருந்து வெளியில் வந்த வருடம் வரையிலும்தான் அவனுக்கு நினைவுகள் இருக்கு. அதுக்குப் பின்னாடி நடந்த்தெல்லாம் அவன் நினைவில் இல்லை” என்கிறார் டாக்டர். ஹீரோயினுக்கு மீண்டும் மயக்கம். 

ஹீரோவை வீட்டுக்கு அழைத்துச் சென்று மன நல சிகிச்சை அளிக்கச் சொல்கிறார்கள். ஹீரோயினை முதன் முதலில் சந்தித்த இடம்.. வாங்கிக் கொடுத்த பரிசுப் பொருட்கள்.. கட்டிலில் கட்டிப் புரண்ட மாதிரியான புகைப்படங்கள் என்று எல்லாத்தையும் பார்த்த பின்பும் ஹீரோவுக்கு மனசில்லை.. “உன்னை எனக்குப் பிடிக்கலை” என்று ஹீரோயினிடம் சொல்லிவிடுகிறான்.

நெருங்கிய நண்பர்களை “அட்டுகளா இருக்கீங்க.. ஒருத்தனுக்குக்கூட டீஸண்ஸி தெரியலை.. உங்க்கூடவெல்லாம் நான் சகவாசம் வைச்சுக்க முடியாது”ன்னு சொல்லி கட் பண்றான். இந்த நேரத்துலதான் ஒரு வில்லன் இடைல புகுர்றாரு.. அந்த ஊர்லேயே பிரபலமான போதை மருந்து கடத்தல்காரனான அவன், ஹீரோ வீட்டுக்கு வந்து அவனை பத்தி விசாரித்து அவனுக்கான மருத்துவச் செலவுக்குரிய பணத்தையும் கொடுக்குறாரு..! இதை அந்த ஊர் ரகசிய போலீஸ் ஒருத்தர் பார்த்து தனது மேலதிகாரிகளுக்கு தகவலை பாஸ் செய்ய.. காரணம் இல்லாம நம்மூர் டான் தெருவுல கால் வைக்க மாட்டான். ஹீரோவையும் வாட்ச் பண்ணுங்கன்னு சொல்ல.. வீட்டைச் சுற்றிலும் போலீஸ்.. வீட்டு உறுப்பினர்கள் எங்கே போனாலும் போலீஸ் பின் தொடர்கிறது..!

இந்த நேரத்துல திடீர்ன்னு ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு ஹீரோவை வரச் சொன்ன வில்லன், அங்கேயிருந்து ஹீரோவை கடத்துறான். போலீஸும் துரத்துது. ஆனா பிடிக்க முடியலை. இப்போ போலீஸுக்கு ஒரு க்ளூ கிடைக்குது.. பக்கத்து ஊர்ல நடந்த ஒரு பெஸ்டிவல் சமயத்துல அங்க பிரபலமான 2 போதை மருந்து ஏஜெண்ட்டுகள் யாராலோயோ கொல்லப்பட்டுட்டாங்க. அந்த நேரத்துல அந்த ஊர்ல வில்லனும் இருந்திருக்காரு. அதேபோல ஹீரோவும், அவன் லவ்வரும்கூட அதே ஹோட்டல்ல தங்கியிருந்திருக்காங்கன்றதை போலீஸ் கண்டுபிடிச்சிர்றாங்க.

இப்போ போலீஸ் டைரக்டா ஹீரோ வீட்டுக்குள்ள வந்து சர்ச் பண்றாங்க. போதை மருந்து எதையும் கண்டுபிடிக்க முடியலை. ஆனா ஒரு வீடியோ கேஸட் மட்டும் சிக்குது..! அதை எடுத்துப் பார்த்தா அது ஒரு மலை உச்சில ஹீரோவும், ஹீரோயினும் ரொமான்ஸ் செய்யும்போது எடுத்தது..! எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு நல்ல போலீஸ் அதை எடுத்திட்டுப் போயிடறாரு..!

இன்னொரு பக்கம் வில்லன், ஹீரோகிட்ட போனை கொடுத்து ஹீரோயின்கிட்ட அன்பா பேசி “அவளை நம்ம பக்கம் வரச் சொல்லு..” என்கிறான். ஹீரோ ஏன் எதுக்குன்னு நூறு கேள்வி கேக்குறான். சொன்னதை செய்யுன்னு அவன் தலைல நாலு தட்டு தட்ட.. ஹீரோயினுக்கு போனை போட்டு வரச் சொல்றான் ஹீரோ. இதையும் போலீஸ் மோப்பம் புடிச்சு.. ஹீரோயினை பாதி வழிலேயே அவங்க கடத்திர்றாங்க.. “இனிமே நாங்க சொல்ற மாதிரி நடந்தா ஹீரோவை நாங்க காப்பாத்தி தர்றோம்”னு ஹீரோயின்கிட்ட போலீஸ் சொல்லுது. ஹீரோயின் ஒத்துக்குறா..

ஹீரோவும், ஹீரோயினும் ஒரு ரெஸ்ட்டாரெண்ட்ல சந்திக்கிறாங்க.  சுத்தி போலீஸ். இன்னொரு பக்கம் வில்லன் ஆளுங்க.. ஹீரோயின் தாங்கள் கில்மா செஞ்ச வீடியோ கேஸட்டை, ஹீரோகிட்ட கொடுத்து “இதைப் பார்த்திட்டாவது என்னைப் புரிஞ்சுக்க”ன்னு சொல்றா.. ஹீரோ அந்த கேஸட்டை வாங்கிக்கிட்டு அவளையும் கூப்பிட்டுக்கிட்டு போலீஸ்கிட்டேயிருந்து தப்பிச்சு வில்லன் வீட்டுக்கு வர்றாரு..

அங்க அந்த வீடியோ கேஸட்டை போட்டுப் பார்த்தால் கடைசி சில வினாடிகள்ல அந்த மலைக்கு கீழ 2 பேரை 6 பேர் கொண்ட கும்பல் ஒண்ணு அடிச்சு உதைக்குறது பதிவாகியிருக்கு.. அதுல ஒருத்தன் தன்னோட துப்பாக்கியால ரெண்டு பேரையும் சுட்டுக் கொல்றான். இதுவும் கேஸட்ல பதிவாகியிருக்கு. அதை ஜூம் பண்ணிப் பார்த்தா அது வில்லன். இதைப் பார்த்து ஹீரோவும், ஹீரோயினும் ஷாக்காக.. இப்போ வில்லன் சிரிக்கிறாரு.. “இதுக்காகத்தான் இத்தனை கஷ்டமும்..! என் ஏஜெண்டுகதான் அவனுக.. கமிஷன் கூட வேணும்னு கேட்டு தகராறு செஞ்சானுக.. அதான் போட்டுத் தள்ளிட்டேன். அதை நீங்க ரெண்டு பேரும்தான் அதைப் பார்த்துட்டீங்க. உங்களைத் தேடுறதுக்கே எனக்கு இத்தனை நாளாயிருச்சு.. இப்போ உங்களையும் மேல அனுப்பப் போறேன்”னு சொல்றான். 

வீடியோவை பார்த்த ஷாக்குல ஹீரோவுக்கு திடீர் ஞானோதயம் பிறக்குது. எத்தனை காதலோட இவளோட படுத்து உருண்டிருக்கோம்னு நினைச்சவன், வில்லனை தாக்கிட்டு ஹீரோயினைக் கூட்டிக்கிட்டு தப்பிச்சிர்றாரு. அந்த அவசரத்துல அந்த வீடியோ கேஸட்டை எடுக்க மறந்திர்றாங்க..  தன் வீட்டுக்கு போன் செஞ்சு தான் பக்கத்து ஊருக்கு போறேன்னு ஹீரோ சொல்ல.. இதை போலீஸ் ஒட்டுக் கேட்டு அவர்களை விரட்டுது.. இன்னொரு பக்கம் வில்லனும் அவன் கோஷ்டியோட விரட்டுறான்..  

ஒரு கரும்புக் காடு. ஒரு பக்கம் போலீஸ் வருது.. இன்னொரு பக்கம் வில்லன் கோஷ்டி வருது.. கரும்புத் தோட்டத்துக்குள்ள ஹீரோவும், ஹீரோயினும் நுழைஞ்சு பதுங்குறாங்க. போலீஸ் சுத்தி வளைக்குது.  போலீஸுக்கு ஹீரோ மேல சந்தேகம்.. ஹீரோயினை கடத்திட்டுப் போறான்னு நினைக்கிறாங்க. வில்லனுக்கோ ஹீரோ, ஹீரோயினோட போலீஸ்ல சரண்டராகப் போறான்.. அதுக்குள்ள அவனை போட்டுத் தள்ளிரணும்னு நினைக்குறாங்க.. ரெண்டு பக்கமும் புல்லட்டுக தாறுமாறா பறக்குதுக.. இடைல இந்த 2 பேரும் மாறி மாறி ஓடி, ஓடி தப்பிக்கிறாங்க.. கடைசீல வில்லன் கோஷ்டிகிட்ட ஹீரோயினும், போலீஸ்கிட்ட ஹீரோவும் மாட்டிக்கிறாங்க. 

இப்போ நேருக்கு நேர் பஞ்சாயத்து நடக்குது.. ரெண்டு தரப்பும் துப்பாக்கியை கீழ போட்டுட்டு நாட்டாமை பட பாணில பஞ்சாயத்து பேசுறாங்க..! ஹீரோவை கொடுத்திட்டா ஹீரோயினை கொடுக்கிறதா வில்லன் சொல்றான். எப்படியாவது தப்பிக்கணும்னு நினைக்கணும்னு நினைச்ச ஹீரோ தானே வில்லன்கிட்ட சரண்டராகுற மாதிரி பாவ்லா பண்றான்.. ஹீரோயினும், ஹீரோவும் நேருக்கு நேரா வர்றாங்க. சுத்தி போலீஸும், வில்லன் ஆட்களும் கைல துப்பாக்கி இல்லாம..! 

ஹீரோ, ஹீரோயின் பக்கத்துல வந்ததும் கையைப் பிடிச்சிட்டு வேற பக்கம் ஓட ஆரம்பிக்கிறாங்க. போலீஸும், வில்லன் கோஷ்டியும் துப்பாக்கியை எடுத்திட்டு துரத்த ஆரம்பிக்க.. அதுக்குள்ள ஒரு துப்பாக்கியை எடுத்த ஹீரோ, வில்லன் கால்ல சுட்டுர்றாரு.. வில்லன் கீழே விழுக.. வில்லன் ஆட்கள் போலீஸை சுட ஆரம்பிக்கிறாங்க. போலீஸ், வில்லன் ஆட்களை சுட துவங்க.. ஹீரோவும், ஹீரோயினும் கரும்புக் காட்டுக்குள்ள ஓடி எஸ்கேப்பாகுறாங்க..!

ஒரு வழியா துப்பாக்கி சண்டை ஓய்ஞ்சு வில்லன் கோஷ்டி மொத்தத்தையும் போலீஸ் போட்டுத் தள்ளிட்டு ரோட்டுக்கு வர.. அங்கே நடுரோட்டுல நின்னு கிஸ் அடிச்சிட்டிருக்காங்க ஹீரோவும், ஹீரோயினும்.. போலீஸ் அவங்களை சுத்தி வளைச்சு துப்பாக்கியை நீட்ட.. இனிமேல் என்ன இருக்கு என்பதை போல் அவர்கள் பார்க்க.. அடுத்தக் காட்சியில் அவர்களுடைய கில்மா கேஸட் போலீஸ் தலைமையக கான்பரன்ஸ் ரூம் ஸ்கிரீன்ல ஓடிக்கிட்டிருக்கு.  அத்தனை போலீஸும் ஜொள்ளுவிட்டு பார்த்துக் கொண்டிருக்க.. ஹீரோவும், ஹீரோயினும் மட்டும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்..! கேமிரா அப்படியே பேக் ஜூம்மாகி ஜன்னலுக்கு வந்து அப்படியே தரையிரங்க.. படமும் முடிஞ்சிருச்சு..!

முதல் 20 நிமிடங்கள் மட்டும்தான் படம் ஸ்லோ.. அதுக்கப்புறம்  திரைக்கதைல அவ்வளவு ஸ்பீடு..! என்னால் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று.. இதனை வாசிக்கும் அன்பர்கள், யாரேனும் இந்தப் படத்தைப் பார்த்திருந்தால் கொஞ்சம் படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.. புண்ணியமா போவும்..!

அதுக்காக, இந்தப் படத்தோட காப்பிதான் வரப் போற நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படம்னு நான் சொல்ல வரலை..! இந்தக் கதையை கேட்கும்போது நான் பார்த்த இந்தப் படம் நியாபகத்துக்கு வந்துச்சுன்னுதான் சொல்ல வந்தேன். அம்புட்டுத்தான்..!

பில்லா-2 - சினிமா விமர்சனம்


14-07-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின்பு இத்தனை ரசிகர் பட்டாளம் தனக்கு மட்டுமே உண்டு என்பதை மீண்டும் நி்ரூபித்திருக்கிறார் அல்டிமேட் ஸ்டார் அஜீத். அதற்காக ஆந்திராவை போன்று விடியற்காலை 4 மணிக்கெல்லாம் ஸ்பெஷல் ஷோக்கள் வைத்து சினிமா தொழிலையும், ரசிகர் பட்டாளத்தையும் கெடுக்க வேண்டுமா என்ன..? மற்ற நடிகர்களும் தங்களது செல்வாக்கை நிரூபிக்க இது போன்று விடியற்காலை ஷோக்களை வைக்கத் துவங்கினால் வளர்ந்து வரும் இளைஞர்களின் கதி என்ன ஆவது..? ஏற்கெனவே சினிமாக்காரர்களால்தான் சமூகம் கெட்டுச் சுவராகிவிட்டது என்று ராமதாஸில் இருந்து நேற்று முளைத்த இந்து மக்கள் கட்சிவரையிலும் தொண்டை கிழிய கத்தி வருகிறார்கள்..! இதில் சிறிதளவுக்காவது உண்மையிருக்கும் நிலையில், இது போன்ற இளைஞர்களின் இயல்பு வாழ்க்கையை மாற்றும் சினிமா கொண்டாட்டங்கள் தேவைதானா என்பதை சினிமாவுலகத்தினர் சிந்திக்க வேண்டும்..!



1978-ம் வருடம் சலீம் ஜாவேத் எழுதிய டான் கதையில் பிறந்த பில்லாவுக்கு இந்தப் படத்தின் மூலம்தான் முன்னுரை எழுதியிருக்கிறார்கள். பில்லா எப்படி இந்தக் கடத்தல் தொழிலுக்கு வந்தான் என்கிற துவக்கக் காலக் கதையை பில்லா-2 என்ற இந்த 3-ம் பாகத்தில் சொல்லியிருக்கிறார்கள். 

[1983-ல் வெளிவந்த அல்பாசினோ நடித்த SCARFACE படத்தின் கதை அமைப்பும், பல காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளது..! 

2008-ல் வெளிவந்த BODY OF LIES படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி இதில் அசத்தலாக படமாக்கப்பட்டுள்ளது..!]

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அகதியாக வந்து சேர்கிறார் டேவிட் பில்லா. தாய், தந்தை பற்றிய செய்திகள் சொல்லப்படாமல், ஒரு அக்கா.. அந்த அக்காவுக்கு ஒரு பெண்.. இருப்பது சென்னையில் என்பதை மட்டும் பதிவு செய்கிறார். மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து சென்னைக்கு வைரத்தை கடத்தும் தொழிலில் தெரியாமல் இறங்குகிறார். தெரிந்த பின்பு அதையேன் தொடர்ந்து செய்யக் கூடாது என்பதால் கூடுதலாக சதக், சதக் கொலைகளையும் செய்யத் துவங்குகிறார். இது ஸ்டேட் விட்டு ஸ்டேட்டாக பெரிதாகி, இறுதியில் கண்டம் விட்டு கண்டம் தாவுகிறார்..! 

தன்னை வளர்த்துவிட்ட கோவா டான் அப்பாசி, தன் மீது சந்தேகம் கொண்டு கொல்லப் பார்க்க அவரையும் போட்டுத் தள்ளுகிறார் பில்லா. தன் தொழில் சாம்ராஜ்யத்திற்கு இடையூறு செய்த உலகளாவிய மாபியா தலைவனான டிமிட்ரியுடன் மோதி அவனையும் காலி செய்துவிட்டு தனிக்காட்டு ராஜாவாகி பில்லா பட்டத்துக்கு வருகிறார்.. இதுவரையிலும் கொண்டு வந்து அப்படியே அந்தரத்தில் நிறுத்திவிட்டுப் போயிருக்கிறார்கள்..! இனி அடுத்தடுத்து பாகங்கள் வருமோ என்னவோ..?

“என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா..” என்ற புல்லரிப்பான டயலாக்கோடு முதல் காட்சியிலேயே பாயத் துவங்கும் தல.. கடைசிவரையிலும் பாய்ந்து கொண்டேயிருக்கிறார். சீறித் தள்ளிக் கொண்டேயிருக்கிறார். கொலை செய்து கொண்டேதான் இருக்கிறார்..! அஜீத்துக்கு ஏற்ற ரோல். அதனால் அனுபவித்து செய்திருக்கிறார்..!

டானாக உருமாறு்ம்வரையிலான அஜீத்தின் தோற்றம், அதற்குப் பின் அவரது மாடுலேஷன், ஸ்டைல், நடை என்று அத்தனையும் ஸ்டைலிஷாக மாறிவிட அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.. ஆனால் நமக்கு..? இன்னும் எத்தனை படங்கள் அவர் இதே போல் டான் வேடத்தில் நடிக்க முடியும். கோட், சூட் போட்டு வில்லத்தனம் செய்ய அஜீத்தால் மட்டுமே முடிகிறதுதான். அதற்காக அத்தனையும் இப்படியே என்றால் போரடிக்காதா..? முன் தொப்பையும் விழுந்து, ஸ்டண்ட் காட்சிகளில் அவரது கஷ்டம்கூட கண்ணில் தெளிவாகத் தெரிகிறது..! 

நடிப்பெல்லாம் அஜீத்துக்கு தேவையே இல்லை என்பதுதான் அவரது ரசிகர்களின் விருப்பம்.. ஸ்டைலே போதும் என்பதால் அளவோடு நடித்திருக்கிறார்.. அதிலும் முதல் காட்சியில் மட்டுமே அவரது நடிப்பை கொஞ்சமாவது சொல்லலாம்.. மற்றக் காட்சிகளிலெல்லாம் திரைக்கதையை மட்டுமே பாருங்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

பார்வதி ஓமணக்குட்டன் மற்றும் புருனா அப்துல்லா என்ற இரண்டு ஹீரோயின்களுமே வீணாக்கப்பட்டுள்ளனர்.. மாமா.. மாமா. என்ற பார்வதியின் கேரக்டர் ஸ்கெட்ச் பின் காட்சிகளில் திரைக்கதையை நிரப்ப மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ஒரு டூயட்டாவது எதிர்பார்த்தேன். மூச்.. அப்பாவியாக கொல்லப்பட்டுவிட பரிதாபம்தான்..!

புருனா அப்துல்லாஜி.. பிரஸ் மீட்டுக்கே அப்படியொரு டிரெஸ்ஸிங்கில் வந்து புகைப்படக்காரர்களை அலற வைத்தவர்.. படத்தில் டூ பீஸ் உடையில் வரும் ஒரு சில நொடிகள் தியேட்டரே அதிர்கிறது..! ஆனாலும் முகத்தின் குளோஸப்பில் தாங்க முடியவில்லை..! அப்பாஸியின் செட்டப் என்று காண்பித்து, அந்த செட்டப் அஜீத்தை செட்டப் செய்வதை கண்களாலேயே காட்டிவிட்டு ஒரு சீன்கூட ஓட்டாமல் போனது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இப்போ மட்டும் அஜீத்தின் கேரக்டரை கெடுக்காம இருக்கணுமாக்கும்..?

தீவிரவாதிகள்.. கள்ளக் கடத்தல் பேர்வழிகளை முஸ்லீம்களாக சித்தரித்து வழக்கம்போல சினிமா புத்தியைக் காட்டிவிட்டார் இயக்குநர். கூடவே போனால் போகிறதென்று துணைக்கு இந்து பக்திமான் வேடத்தில் இருக்கும் இளவரசுவைக் காட்டி ஹோட்டல் தொழில் நடத்தியே சைட் பிஸினஸாக வைரக் கடத்தல், பொலி போடும் தொழில் செய்பவனாக காட்டி தப்பித்துவிட்டார் இயக்குநர்..!
எதார்த்தம் காட்டுகிறேன் பேர்வழி என்று திருச்சிற்றம்பலம் என்ற அழைப்புக்கு சிவசிதம்பரம்ன்னு நன்றி காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இதுவரையிலும் யாரும் பக்தி படங்களில்கூட காட்சியாக வைத்ததில்லை. எழுத்தாளர், வசனகர்த்தா, அண்ணன் இரா.முருகன் புண்ணியத்தில் தமிழகத்திற்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது..! நன்றிகள்..!

அப்பாஸியாக நடித்த சுதன்சனு பாண்டே நல்லதொரு தேர்வு.. கோவா மாநிலத்தை கையில் வைத்திருக்கும் ஒரு டானாக காட்சியளித்திருக்கிறார். இந்தியாவிலேயே கோவா மாநிலத்தில்தான் முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர்கள், மந்திரிகள் ஆகியோர் போதை மருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டின்கீழ் சிறைக்குச் சென்றுள்ளார்கள்.  அரசியல்வியாதிகளுடனான தொடர்பில் இன்னமும் அங்கே அப்பாஸி போன்ற டான்கள் இருப்பது சாத்தியம்தான்..!

ஜார்ஜியாவில் சர்வதேச ஆயுத வியாபாரியாக அடையாளம் காட்டப்பட்டுள்ளார் டிமிட்ரியாக நடித்துள்ள வித்யூத் ஜாம்வெல். மிகச் சிறந்த ஸ்டண்ட் கலைஞரான இவருக்கு ஸ்டண்ட்டில் மட்டும் தீனி கிடைக்கவில்லை..! மற்றபடி அஜீத்தின் கெத்துக்கு ஏற்ற வில்லனாகத்தான் தென்படுகிறார்..! ரஞ்சித், மனோஜ் கே.ஜெயன், Sreemaan, ரஹ்மான் என்று கொஞ்சம் தெரிஞ்சவர்களும் வந்து, வந்து செல்கிறார்கள்..!

எந்த நடிப்பையும் எதிர்பார்க்காமல் காட்சிகளின் கோணம், கேமிரா.. நறுக்கென்ற எடி்ட்டிங்.. நச்சென்ற வசனங்கள் மூலமாக வேகவேகமாக காட்சிகளை நகர்த்தியிருப்பதால் அனைத்துமே மிக நன்றாக இருப்பது போலவே தோன்றுகிறது..! அவ்வளவுதான்..! ஆனால் மங்காத்தா என்ற  பொழுது போக்கு சினிமாவின் 25 சதவிகிதத்தைக்கூட இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பது மட்டும் உண்மை..!

முதற் பாதியில் திரைக்கதையே வேகமாக நகர்த்தி அஜீத்தை டான் வேடத்தில் கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டு, பிற்பாதியில் இனிமேல் என்ன செய்வது என்பதை ரொம்பவே யோசித்திருக்கிறார்கள்...! கஸ்டம்ஸில் சிக்கியிருக்கும் கடத்தல் லாரியை அஜீத் கடத்திக் கொண்டு போகும் ஒரு காட்சியே போதும்..! எம்புட்டு யோசிச்சிருக்காங்க..!? 

கோவாவில் இருந்து ஜார்ஜியாவுக்கு மூன்றே பேருடன் பறந்து வந்து கலாஷ்கோனிவ் துப்பாக்கியுடன் அஜீத் சண்டையிடும் காட்சியை படமாக்கியிருக்கும் விதத்தையெல்லாம் பார்த்தால் வெங்கட்பிரபுவின் காலைத் தொட்டு கும்பிட வேண்டும் போல் உள்ளது.. அதிலும் ஒரு குண்டு அஜீத்தின் நெஞ்சைத் தாக்குகிறது.. மனிதர் அதற்கு மேல் கிளைமாக்ஸ் வரையிலும் தாக்குப் பிடிப்பதும், தக்காளி சூஸின் சிதறல்கள் அடுத்தடுத்த ஷாட்டுகளில் காணாமல் போவதும், வருவதுமாக.. அட்டகாசமான இயக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள்..!

இதுவே இப்படியென்றால் பாடல்கள்.. யுவன் சங்கர் ராஜா எங்கேயிருந்து இந்த பிஜிஎம்மை கண்டெடுத்தார் என்று தெரியவில்லை.. அது பாட்டுக்கு 5 வது ரீலில் இருந்து கடைசிவரையிலும் ஒன்று போலத்தான் ஓடியது..! டன் டனா பாடல் மட்டுமே இதில் ஹிட்டடித்திருந்தது.. பாவிகள் அதையும்.. எண்ட் டைட்டிலில் போட்டு வீணடித்திருக்கிறார்கள்..! மற்றபடி ரஞ்சித்தை கொலை செய்ய வரும்போது விபச்சார விடுதி பாடல் காட்சிகளில் ஆடும் நடன நங்கைகள் அத்தனை பேரும் ஹீரோயின்கள்தான்.. இவர்களையெல்லாம் இப்படி தேடித் தேடிப் பிடித்து இழுத்து வந்த நேரத்தில் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்திரு்க்கலாம்..!

படத்தில் எதுவுமே நல்லாயில்லை என்று சொல்ல முடியாது.. வசனம், எடிட்டிங், ஒளிப்பதிவு மூன்றுமே அசத்தல்..! இரா.முருகனும், முகமது ஜாபரும் இணைந்து எழுதியிருக்கும் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்.. “டேவிட் பில்லா யாருன்னு கேட்டீல்ல தெரிஞ்சுக்கிட்டு சாவுடா..” என்று சொல்லிவிட்டுச் சாவடிக்கும் அந்தக் காட்சியில் வசனமும் சேர்ந்தே நடித்திருக்கிறது.. சபாஷ்..!

கோவாவின் அழகான அமைப்பியலையும், ஜார்ஜியாவின் அழகையும் தனது கேமிரா கண்களால் மிக அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர்..! அதிலும் அப்பாஸியின் அந்த படகு வீட்டையும், கோவா கடலையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலத் தோன்றியது..! பாடி ஆஃப் லைஸ் படத்தில் இருந்த சுட்ட காட்சியிலும் காமிரா கோணமே காப்பி என்றாலும், அசத்தல்தான்..! படத் தொகுப்பில் ஒரு குறையும் வைக்கவில்லை சுரேஷ் அர்ஸ். இன்னும் சொல்லப் போனால் படத்திற்கு இத்தனை இறுக்கம் கிடைத்தது அவரால்தான்..! அப்பாஸியிடம் சண்டையிட்டுவிட்டு இன்னொரு தாதாவை சந்திக்கப் போகுமிடத்தில் அஜீத்தை கொலை செய்ய நடக்கும் சண்டை காட்சியில் எடிட்டிங் தத்ரூபம்..! அதுதான் மிகப் பெரிய பலமாகவும் இருக்கிறது பல காட்சிகளில்..! 

நான் ஈ போன்ற படங்களிலெல்லாம் லாஜிக் பார்க்கவே கூடாது என்று எழுதியவன்தான் நான். ஆனால் இது போன்ற கமர்ஷியல் ஹிட்டடிக்கும் படங்களில் லாஜிக் பார்ப்பது அவசியம் தேவைதான்..! இத்தனை கொலைகள்.. கொள்ளைகள் என்று இருந்தும் மருந்துக்குக்கூட சென்னை போலீஸை கூட கண்ணில் காட்டாதது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை இயக்குநர் ஏன் உணரவில்லை..? கோவா மாநில முதல்வரை ஏதோ பஞ்சாயத்து தலைவரை போல காண்பித்து அவரை கொலை செய்யும் காட்சியை எடுத்திருப்பதை என்னவென்று சொல்வது..? உலக அளவிலான கள்ளச் சந்தையில் ஆயுத விற்பனை இப்போது ஜார்ஜியா நாட்டில்தான் அதிகம் நடைபெறுவதாகச் சொல்கிறார்கள். அதனால்தான் ஜார்ஜியாவை களமாக்கியிருக்கிறார்களாம்.. அங்கேயும் இத்தனை கொலைகள்..? இத்தனை சம்பவங்களா..? டிரெயினையே கடத்தல் தளமாக்கி கொண்டு செல்வதெல்லாம் ரொம்பவே டூ மச்..!  இவர்களது படப்பிடிப்பிற்கு ஜார்ஜியா நாட்டு அரசே, ராணுவ ஹெலிகாப்டரை ப்ரீயாக கொடுத்ததற்காக இத்தனை ஆர்ப்பாட்டமான கிளைமாக்ஸ் காட்சியை சுட்டு வந்திருக்கிறார்கள்..! அஜீத் டூப் போடாமல் நடித்திருக்கும் காட்சி அது என்று 1000 தடவைகள் சொன்னாலும் மனதில் ஒட்டவில்லை என்பது மட்டுமே உண்மை..!

ஒரு பெரிய மாஸ் நடிகர்.. எவ்வளவு பணம் போட்டாலும் வந்துவிடும்.. ரசிகர்கள் பட்டாளம் லட்சத்தில்.. உருப்படியாய் எடுத்து பெயரெடுத்திருக்கலாம்..! கோட்டைவிட்டது இயக்குநர்தான்..! படு பயங்கர சென்சார் கட்டுகளுடன் ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கும்போதே இந்தப் படத்தின் தரம் புரிந்துவிட்டது..! 

எது எப்படியிருந்தாலும் தல அஜீத் இருப்பதால் இதுவே போதும் என்ற நினைப்பில்தான் அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள்..! எந்தப் பக்கம் திரும்பினாலும் ஹிட் என்கிறார்கள். ஹிட் இல்லை என்று சொன்னால் உயிரோடு எரித்துவிடுவார்கள் போலிருக்கிறது.. விஜய் ரசிகர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது.. புரிகிறது..! ஆனால் உண்மை அடுத்த புதன்கிழமை தெரிந்துவிடும்.. எப்படி போனாலும் போட்ட பணம் இப்போதே வந்துவிட்டது என்றாலும், புகழ் என்ற ஒன்று உள்ளதே..! இது ரசிகர்களுக்குத் தேவையி்லலைதான். ஆனால் அஜீத்திற்குத் தேவை.. விஷ்ணுவர்த்தனாவது இந்தப் படத்தின் பலவித விமர்சனங்களைப் படித்துவிட்டு தனது அடுத்தப் படத்தில் ‘தல’யை இன்னும் கொஞ்சம் மோல்டிங் செய்து நல்லபடியாக வழங்குவார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்போம்..!

பில்லா-2-ஐ ஒரு முறை பார்க்கலாம்..!

மாற்றான் - எதனுடைய காப்பி? - இயக்குநரின் சமாளிப்பு..!


12-07-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது சினிமாக்காரர்களுக்கு புதிதல்ல. இன்று காலை 12 மணிக்கு தீர்மானித்து சாயந்தரம் 6 மணிக்கு பத்திரிகையாளர்களை அவசரம், அவசரமாக சந்தித்த மாற்றான் படத்தின் டீம் இதைத்தான் செய்தது..! இத்தனை அவசரமாக இவர்கள் பிரஸ்ஸை சந்திக்க வேண்டியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை..! ஒருவேளை நமது அண்ணன் முத்துராமலிங்கம் எழுதிய இந்தப் பதிவுதானோ என்ற ஐயமும் பிரஸ் உலகத்திற்குள் எழுந்திருக்கிறது..!




கதாநாயகன் சூர்யாவுக்கு முன்பாகவே தயாரிப்பாளர்கள் கல்பாத்தி பிரதர்ஸ் சகிதம் பிரசாத் லேப்புக்கு வந்துவிட்ட இயக்குநர் கே.வி.ஆனந்திடம் அனைத்து டிவிக்காரர்களும் பைட் கேட்க, “நிகழ்ச்சியை முடிச்சிட்டு தர்றனே.. அத்தோட நீங்களும் டீஸரை பார்த்துட்டீங்கன்னா கேக்குறதுக்கு ஏதாவது தோணும்ல்ல..?” என்று நயமாகப் பேசி மறுத்தார்.

டிரெயிலர் ஒரு முறைக்கு, மூன்று முறை ஒளிபரப்பப்பட்டது. தெலுங்கில்  ப்ரியாமணி நடித்து வரும் சாருலதா போன்று இரட்டையர்களாக தோளோடு ஒட்டியவர்களாக சில இடங்களில் தெரிகிறார்கள். ஆனால் எப்படித்தான் சண்டைக் காட்சியில் நடிப்பதுபோல எடுத்தார்கள் என்று தெரியவில்லை..! இது ரொம்பவே ரிஸ்க்குதான்..! 

எப்படியும் இன்றைக்கு தன்னை பிறாண்டி எடுப்பார்கள் என்பதை உணர்ந்தே வந்திருந்த கே.வி.ஆனந்த்,. இந்தக் கதை பிறந்த கதையை வெகு சுவாரசியமாகச் சொன்னார். அதுவே மிகப் பெரிய கதையாக இருந்தது. சிவாஜி படத்தின் ஷூட்டிங் முடிந்து விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த நர்ஸ் ஒருவரிடம் இருந்து நேஷனல் ஜியாகிரபிக் புத்தகத்தை வாங்கிப் படித்தாராம். அதில் தாய்லாந்து நாட்டில் ஒட்டிப் பிறந்து அமெரிக்கா சென்று சர்க்கஸில் வாழ்ந்து மறைந்த இரட்டையர்களைப் பற்றிய செய்தியைப் படித்தாராம். அதனை அப்போதே சூர்யாவிடம் சொல்லி பகிர்ந்து கொண்டாராம்.. “இதை பேஸ்ஸா வைச்சு ஒரு படம் செய்யணும்”னு சூர்யாவிடம் இவர் சொல்ல.. சூர்யா கேட்டுக் கொண்டதோடு சரி. அப்போதைக்கு மூச்சுவிடலையாம்.. 

இது மாதிரியான இரட்டை கேரக்டரில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். அதுனால நாமளா போய் கேக்க வேணாம். அவரா வந்தா எடுக்கலாம் என்ற நினைப்பில் ஓரமாய் இருந்த கே.வி.ஆனந்தை இழுத்துப் பிடித்து தெருவில் விட்டவர் சூர்யாதானாம்..! “சூர்யா மாட்டேன்னு சொல்லியிருந்தா, இந்த பிராஜெக்ட்டை தொட்டிருக்கவே மாட்டேன்..” என்றார் ஆனந்த். சூர்யா மிகவும் கஷ்டப்பட்டு நடிச்சிருக்காருன்னு சொல்லி “இரட்டை கதாபாத்திரங்கள்.. வேறு வேறு மேக்கப், டிரெஸ்ஸிங்ன்னு.. கஷ்டமான சிச்சுவேஷன்ஸ்.. இதுல ஸ்டண்ட் சீன்ஸ்லாம் இருந்துச்சு.. ஒருத்தர் ஆக்சன் செய்யும்போது இன்னொருத்தரோட ஆக்சனை ஞாபகம் வைச்சிருந்து திரும்பி அதையே செய்யணும்.. சூர்யா மாதிரி டெடிகேஷன் பெர்ஸனால மட்டும்தான் அது முடியும்..” என்று வழக்கம்போல புகழ்ந்து தள்ளினார் ஆனந்த்.

கேள்வி கேட்கும் படலம் துவங்கியவுடன் கே.வி.ஆனந்த் நினைத்த மாதிரியே முதல் கேள்வியே படத்தின் காப்பி பற்றித்தான் பறந்து வந்தது. உறுதியாக மறுத்தார் ஆனந்த். “சாருலதா மற்றும் அலோன் படங்களுக்கும் இதுக்கும் துளி கூட சம்பந்தமில்லை..” என்றார். பின்பு மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது, “இது பற்றி இணையத்துல நியூஸ் வந்த பின்னாடி அந்தப் படத்தை(அலோன்)யும் நான் பார்த்தேன். அதுக்கும், இதுக்கும் ஒரு சீன்கூட ஒற்றுமையில்லை..” என்று மறுபடியும் ஆணித்தரமாக மறுத்தார். அப்படியும் விடாமல் பத்திரிகையாளர்கள் துளைத்தெடுக்க, “அந்தப் படத்தோட பேஸ்மெண்ட் மட்டும் ஒரு வேளை என் படத்துல ஒண்ணா இருக்கலாம்னு நினைக்கிறேன்..” என்று மூன்றாவது ஸ்டேட்மெண்ட்டையும் விட்டார். இதற்கடுத்தும் தொடர்ந்து கேள்விகள் அலோன், சாருலதா படங்களைப் பற்றியும் காப்பி பற்றியுமே வர, “விட்ரலாமே.. எதுக்கு திருப்பித் திருப்பி அதையே பேசணும்..?” என்று அலுத்துப் போய் சொன்னார்.

படத்தின் டிரெயிலரை பார்த்தால் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் செய்யும் அலம்பல்களும், சேட்டைகளுமாகத்தான் இருக்கிறது..! அலோன் படத்தின் பேஸ்மெண்ட்டுடன் தமிழ்ச் சினிமாவின் சூத்திரத்தின்படி, கே.வி.ஆனந்தின் இயக்கத்தில், சூர்யாவின் சிரிப்பு நடிப்பில், சுபா இரட்டையர்களின் தமிழுக்கேற்றபடியான சூப்பரான திரைக்கதையில் செப்டம்பரில் வெளிவர இருக்கிறது இப்படம்.

“கிளைமாக்ஸ் சீன்கூட இன்னும் எடுக்கலைங்க..” என்று சூர்யா சொல்ல, கே.வி.ஆனந்தோ “ஒரு பாட்டு சீன் மட்டும்தான் எடுக்கலை..” என்று திருப்பித் திருப்பிச் சொல்லி சமாளித்தது ஏன் என்றுதான் தெரியவில்லை..!



எப்படியோ இயக்குநர் ஆனந்தின் இந்த சமாளிப்பு பதில்களைத் தாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து இணையத்தின் முன் அமர்ந்தால் அலோன் மட்டுமில்லை. Stuck on you  என்ற ஹாலிவுட் படத்தின் போஸ்டர்கூட இந்தப் படத்திற்காகக் காப்பியடிக்கப்பட்டிருக்கிறது என்கிற புதுச் செய்தியும் வர.. அடப் போங்கப்பா… இவங்களுக்கு அரசியல்வியாதிகளே பரவாயில்லைன்னு சொல்லணும் போலத் தோணுது..! 

முரசொலி ஆண்டி-போண்டிகள் எழுப்பும் கேள்வி..!


08-07-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கூகிள் பஸ்ஸில் இதனை சின்னதாக எழுதினேன்..! பேஸ்புக்கில் காப்பி செய்தேன்..! பின்பு யோசித்துப் பார்த்ததில், பிளாக்கில் அரசியல் எழுதி ரொம்ப நாளாச்சு.. அதுனால பிளாக்குலேயும் காப்பி செஞ்சா நல்லாயிருக்குமேன்னு தோணிச்சு. அதான் செஞ்சுட்டேன்..!

2ஜி- கனிமொழி, தயாளு அம்மாளை கைது செய்ய முகாந்திரம் உள்ளது: அமலாக்கப் பிரிவு


2-ஜி ஊழல் வழக்கு விவகாரத்தில், கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி பணம் தரப்பட்ட வழக்கில், கனிமொழி மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உரிய முகாந்திரம் உள்ளது என்று மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2ஜி வழக்கு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு முன்பு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் இருந்து 2ஜி உரிமம் பெற்ற டிபி குரூப் நிறுவனம், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி மற்றும் மகள் கனிமொழி பங்குதாரர்களாக உள்ள கலைஞர் டிவிக்கு ரூ.223.55 கோடி பணம் கொடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ரூ. 200 கோடி பணம் முறைகேடாக கருணாநிதி குடும்பத்தினரால் பெறப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் கனிமொழி, தயாளு அம்மாள் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது.

அதேபோல, மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் குடும்பத்தாருக்கு சொந்தமான சன் டைரக்ட் டிவி லிமிடெட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது பற்றியும் விசாரணை நடத்தினோம். இந்த விவகாரத்தில், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏர்செல் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து அந்த நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்க நிர்ப்பந்தப்படுத்தியுள்ளார். நிறுவனம் கைமாறிய பிறகே ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வழங்கியுள்ளார். மேலும், அதன் பின்னர் மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ.549.96 கோடி பணத்தை முதலீடு செய்துள்ளது.

இது குறித்தும் சிபிஐ துணையுடன் விசாரணை நடத்தினோம். கடந்த மே மாதம் மலேசியாவில் விசாரணை நடத்தப்பட்டது. அது குறித்து மலேசிய அதிகாரிகளிடம் இருந்து மேலும் சில தகவல்கள் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தனர்.  ஜேபிசி விசாரணையின்போது, சில உறுப்பினர்கள், 2ஜி ஊழல் வழக்கை அமலாக்கப்பிரிவினர் மெதுவாக விசாரணை நடத்துவததாக குற்றம் சாட்டினர்.

சாட்சிகள் பட்டியலில் வாஜ்பாய், ப.சிதம்பரம்

இதற்கிடையே 2-ஜி ஊழல் வழக்கில் தயாரிக்கப்பட்டுள்ள சாட்சிகள் பட்டியலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் பெயர்களை சேர்த்துள்ளனர். ஆனால், சாட்சிப் பட்டியலில் வாஜ்பாயின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஜேபிசி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த சந்திப்பின்போது ஆஜராகுமாறு 2ஜி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் தொலைத்தொடர்புத்துறை செயலாளர் சித்தார் பெகுராவுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

நன்றி : தேட்ஸ்தமிழ்.காம்

- மேற்படி செய்தி தேட்ஸ்தமிழ்.காம்-ல் வெளிவந்திருக்கிறது. இது சம்பந்தமான எனது கருத்தை முரசொலியில் தினமும் வெளிவரும் ஆண்டி-போண்டி கார்ட்டூன் வடிவத்தில் என் மனதுக்குத் தோன்றியதை இங்கே எழுதியிருக்கிறேன்..

ஆண்டி : என்ன போண்டியாரே..! டெல்லி அரசியல்ல இப்பவும் நம்ம கைதான ஓங்கியிருக்கு..?

போண்டி : அட போறுமய்யா உன் அலட்டலு.. டெல்லிக்காரன் நமக்குன்னு வைச்சிருக்கான் பாரு ஆப்பை.. நம்ம எம்.பி.க்களின் சப்போர்ட்டோடு மன்னமோகனசிங்கின் அற்புதமான தலைமை நிர்வாகத்தில் இருக்கும் இந்த ஆட்சில, நம்ம மேலேயே குத்தம் சொல்றானுக முட்டாப் பயலுவ..! இப்படிப்பட்ட திராவிட இயக்கத் துரோக சிந்தனை கொண்ட அதிகாரிகளை வேலைக்கு வைச்சிருக்கிற நம்ம பிரதமரை முட்டாள்ன்னு சொல்றதா.. இல்ல.. இதைக்கூட அவர்கிட்ட கேட்க முடியாத அளவுக்கு தைரியமில்லாத கோழையா இருக்கோமே.. நம்மளைக் குத்தம் சொல்றதா..? ஒண்ணுமே புரியலை ஓய்..!

ஆண்டி : நமக்குத்தான் கோபாலபுரம், மயிலாப்பூர்ன்னு ஒண்ணுக்கு ரெண்டு ரைடக்ட் ஹாட்லைன் இருக்கே..? சிங்குக்கு போனை போட்டு "நாங்க என்ன திருடங்களா..? எங்க குடும்பம் என்ன திருட்டுக் குடும்பமா..? அப்புறம் ஏண்டா வெண்ணை என்கிட்ட ஆதரவு கேட்டு பிச்சையெடுத்து நீ பிரதமரா இருக்குற..? என் ஆதரவோட ஆட்சி செய்யற இந்த நேரத்துல உன்னோட ஆபீஸருங்க என் குடும்பத்தை திருடங்கன்னு சொல்றாய்ங்க.. இதைக் கேட்கக்கூட முடியலைன்னா நீ என்ன மயித்துக்கு என் ஆதரவுல பிரதமரா இருக்குற"ன்னு நாலு வார்த்தை நறுக்குன்னு கேக்க வேண்டியதுதானே..? இல்லாட்டி இந்த மத்திய அரசு "திராவிட இயக்க விரோத அரசு.. நமது இயக்கத்தின் மீது அநியாய பழி சுமத்தி நம்மை அழிக்கப் பாக்குது"ன்னு வழக்கமான புலம்பலை பாடிட்டு "ஆதரவை வாபஸ் வாங்குறோம்"னு சொல்லலாமே..? டெல்லிக்காரன் அலறியடிச்சிட்டு ஓடி வந்திர மாட்டான்..? ஏன் நம்ம தலீவரு இதைச் செய்ய மாட்டேன்றாரு..?

இதற்கு போண்டி என்ன பதில் சொல்வார் என்பதை மிகச் சரியாக யூகித்து எழுதுபவர்களுக்கு அடுத்து வரக் கூடிய 4-ஜி அலைக்கற்றையின் ஒட்டு மொத்த உரிமை ஏலத்திற்கு முதல் நாளே உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தரப்படும்..!

நான் ஈ - சினிமா விமர்சனம்

08-06-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு நம்ப முடியாத கதையை நம்புகின்றவிதத்தில் கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.! வழக்கமான அம்புலிமாமா கதைதான் என்றாலும் அதன் செய்நேர்த்திதான் படத்தினை இரண்டே கால் மணி நேரமும் கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறது..!



தன்னைக் கொன்று தனது காதலியை அடைய நினைக்கும் வில்லனை, ஈயாக பிறவியெடுத்து வரும் காதலன் எப்படி பழி வாங்குகிறான் என்பதுதான் கதை..! ஒரு சாதாரண ஈதானே..? இது என்ன செய்யும் என்று நாம் நினைப்பதற்குத்தான் தங்களால், தங்கள் சக்திக்கு முடிந்த அளவுக்கு பணத்தை வாரியிறைத்து கிராபிக்ஸில் அழகாய் பதில் சொல்லியிருக்கிறார்கள் இந்தப் படக் குழுவினர்..!


ஈ- என்ற இந்த உயிரினத்திற்கு மட்டும் சிந்தனை திறனும், நம்மைப் போன்ற அறிவும் இருந்துவிட்டால் அவைகளால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை திரையில் காண்கின்றபோது நமக்கே பகீரென்கிறது..! ஹாட்ஸ் ஆப் மெளலி ஸார்..!


அரை மணி நேரம்தான்.. சாக வேண்டும் என்ற கோரிக்கையோடு வந்தால், எந்த தமிழ்ச் சினிமா நடிகரின் வீட்டு வாசலையும் மிதிக்க முடியாது என்கிற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தெலுங்கிலும் போணியாகுமே என்பதற்காக நானி என்னும் தெலுங்கு நடிகரை(இவர் தமிழிலும் 2 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்) தமிழிலும் நடிக்க வைத்திருக்கிறார். முதல் காட்சியில் இருந்து நானி சாகின்றவரையிலும் அந்த வேகமான திரைக்கதையமைப்பில் நமக்குப் பழகிப் போன காதல் காட்சிகள்தான் தெரிந்தாலும் இதையும் தாண்டிய ஏதோ ஒன்று அவற்றில் லயிக்கச் செய்தன. அதுதான் ராஜமெளலியின் சிறப்பான இயக்கம்..!


நானி பரவாயில்லை ரகம்தான்..! இரண்டாண்டுகளாக விரட்டி விரட்டிக் காதலித்தும் சிக்னல் கிடைக்காத நிலையிலும் முயற்சியைக் கைவிடாத கேரக்டர்..! சமந்தாவின் ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் அவர் கொடுக்கும் விளக்கமும், சமந்தாவின் போன் காலுக்காகக் காத்திருந்து வந்தவுடன் சந்தோஷத்துடன் ஓடுவதும், அவருக்காகவே செத்துப் போகும் ஒரு நல்ல பையனாகவே வாழ்ந்து முடித்திருக்கிறார்..! அவருடைய அத்தனை அசட்டு ஆக்சன்களுக்கும் சேர்த்து வைத்து சுதீப்பிடம் “அவ விஷயத்துல தலையிடாத.. இல்ல.. கொன்றுவேன்..” என்று ஆவேசப்படும் அந்த ஒரு ஷாட்டில் நடிப்பைக் காட்டியிருக்கிறார். வெல்டன்..!


சமந்தா பொண்ணு. ஏற்கெனவே க்யூட் பொம்மைதான்.. இதில் கன்னக்குழிகள் உப்பிப் போய் இன்னும் அழகாக இருக்கிறார்..! நானியை புறக்கணிப்பது போல் நடித்துக் கொண்டே அவரை காதலிக்கிறேன் என்ற வார்த்தையை நடப்பது அறியாமல் சொல்கின்றவரையிலும் அவரது அழகு ஸ்கிரீனை நிரப்பியிருக்கிறது..! நானியின் ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் சமந்தா கொடுக்கின்ற ஆக்சன் சூப்பர்ப்.. அதிலும் கோவிலில் “நான் அவளுக்கு ரொம்ப ஸ்பெஷல்..” என்கிற வார்த்தைக்கு சமந்தாவின் ரியாக்சனை பார்க்கணுமே..?!! இதேபோலத்தான் சுதீப்பை திடீரென்று தனது அலுவலகத்தில் பார்த்தவுடன் அதிர்ச்சியாகும் அந்த முகமும் இந்தப் பெண்ணிடமும் நடிப்பு இருக்குடா சாமிகளான்னு சொல்லுது..! படத்தின் பிற்பாதியில் சுதீப் மொத்த நடிப்பையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்டதால் அவரையும், ஈயையும் தவிர வேறு யாரையும் குறிப்பிட முடியவில்லை..!


சுதீப்.. கன்னட படவுலகில் பிரகாஷ்ராஜாக அறியப்படுகிறார்..! அலட்டிக் கொள்ளாமல் ஹீரோத்தனமும், வில்லத்தனமும் செய்யக் கூடிய ஒரே ஆக்டர் என்கிறார்கள். ரத்தச்சரித்திரம் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக அவர் காட்டிய அலட்சியமான ஸ்டைலிஷான நடிப்பு இன்னமும் கண்ணில் நிற்கிறது..!


ஈ என்னும் ஒரு கேரக்டரை கிராபிக்ஸில் பில்டப் செய்து காட்டியதைவிட, சுதீப் தனது நடிப்பில் தூக்கிக் காட்டியதுதான் அதிகம். பெட்ஷீட்டுக்குள் நுழைந்து அவரை இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்து இறுக்கப் போர்த்திக் கொண்டு படுக்க வைத்து காலையில் லேட் செய்ய வைக்கும் காட்சியில் ஈயைவிட பிரமாதப்படுத்தியிருக்கிறார் சுதீப்..! ஒவ்வொரு முறையும் ஈயினால் பாதிக்கப்பட்டு அவர் அல்ல்ல்படுவதை இவரைவிட வேறு யாரும் இத்தனை தத்ரூபமாக காட்டிவிட முடியாது..! படத்தினை அதிகம் தாங்கியிருப்பவர் சுதீப்தான்..!


படத்தின் மொத்த பட்ஜெட்டில் பாதிக்கும் மேலான 24 கோடியை கிராபிக்ஸுக்கே செலவு செய்திருப்பதாகச் சொன்னார் இயக்குநர் மெளலி. அந்தச் செலவுக்கு ஏற்ற பலன் கிடைத்திருக்கிறது. தனது முட்டையில் இருந்து வெளி வரும் திருவாளர் ஈயின் பிரமாண்டத்தை முடிந்த அளவுக்கு அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள் கிராபிக்ஸ் வல்லுநர் கமலக்கண்ணன் தலைமையிலான குழு.. அற்புதம்.. அபாரம் என்றே சொல்ல வேண்டும்..!


ஒரு வில்லனுக்குரிய பங்களிப்பை அட்சரப் பிசகாமல் செய்வது போல் ஈயை பிரமாண்டப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள்..! சுதீப் சமந்தாவை தொட்டவுடன் கோபம் கொள்வது.. சுதீப்பை நோக்கி பாய்வதற்காக கால்களை உதறிக் கொள்வது.. நானி நான்தான் என்று சமந்தாவிடம் எழுதிக் காட்டுவது.. டீ குடிப்பது.. ஊசியை எடுத்துக் குத்துவது.. பீரங்கி வடிவ குழாயில் வெடிமருந்து நிரப்பி வெடிக்க வைப்பது.. கேஸ் சிலிண்டர் பக்கமே துப்பாக்கி குண்டை பாய வைப்பது.. ஒரு மனிதத்தன மூளையுடன் செயப்படும் ஈயின் செயலை எவ்வித லாஜிக்கும் பார்க்காமலேயே ரசிக்க முடிகிறது..!


சிறு குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. தனது 9-வது வெற்றிப் படத்தை தொட்டிருக்கும் இயக்குநர் ராஜமெளலியிடம் துணை இயக்குநராக பணியாற்றுபவர்கள் நிச்சயம் கொடுத்து வைத்தவர்கள்தான். இத்தனை விஷயங்களையும் ஒரே இடத்தில் கற்றுக் கொள்ள முடியும் என்றால், அது இவரிடம்தான் போலும்..!


டிஷ் டிவியில் ஜிகினா பேப்பரை ஒட்டி வெளிச்சத்தைக் கொண்டு வருவது, மினியேச்சர் ஆர்ட்டிஸ்ட் வடிவத்திற்காக டிஸைன்களை தேடிப் பிடித்திருப்பது.. ஈ-யின் வடிவத்திற்காக அவர் செய்திருக்கும் ஆராய்ச்சிகள்..! சுதீப் ஆக்சிடெண்ட்டாகும் அந்தக் காட்சியை படமாக்கியவிதம்.. முதல் பாடல் காட்சியில் பென்சிலை சீவும் பெண் சிலையே என்ற கார்க்கியின் வார்த்தைகளுக்கேற்ப படமாக்கியிருக்கும் விதம் அழகு..! மந்திரவாதியை அழைத்து மந்திர பூஜை செய்து ஈயை அழிக்கப் பார்ப்பது.. ஈ பதிலடி கொடுப்பது..! அந்த ஒரு அறையை களமாக மாற்றி அவர் காட்டியிருந்த வித்தை.. ஹாலிவுட் படங்களில் மட்டுமே காணப்படும் குறிப்பால் உணர்த்துவது போன்ற சில ஷாட்டுகளை இங்கே அனாயசமாக வைத்திருந்து ராஜமெளலியின் ரசிகர்களை கொஞ்சம் முன்னோக்கி தள்ளியிருப்பது.. ஒரு சில நொடிகள்கூட கைக்கடிகாரத்தை பார்க்கவிடாமல் செய்த அற்புதமான இயக்கம்.. எப்படி வேண்டுமானாலும் இந்த மனிதரைப் பாராட்டலாம்..! நன்றிகள்.. வாழ்த்துகள்..!


இது போன்ற சயின்ஸ் பிக்சன் சினிமாவிற்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணமாகிவிட்டது. 'ஈடா ஈடா' பாடல் காட்சியும், அதன் காட்சிகளையும் ஜெட் வேகத்தில் கொண்டு போயிருக்கிறது பின்னணி இசை..! ஈயின் அட்டகாசங்களுக்கு பெரிய பக்க பலமே பின்னணி இசைதான்.. மரகதமணியின் முத்தான இசைக் கோர்ப்பு படத்தினை எந்த இடத்திலும் தோய்வடையவிடவில்லை..! 


பழைய விட்டாலாச்சார்யா படங்களைத் தவிர மற்ற கிராபிக்ஸ் செய்த தமிழ்ப் படங்கள் எல்லாமே ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் வரும் புகைப்படங்களை போலவே செய்யப்பட்டவை.. கடைசியாக ஜெகன்மோகினி ரீமேக்கில் செய்யப்பட்ட படு சொதப்பலான கிராபிக்ஸ் காட்சிகள்தான் அந்தப் படத்தையே வதம் செய்துவிட்டது.. இராம.நாராயணன் தனது பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல் செய்த தேள் கடி காட்சிகள் மாதிரிகூட இனி யாரும் இங்கே வைத்துவிட முடியாது..! 


பொழுது போக்கு என்னும் அம்சத்தில் இவைகள்தான் சினிமாக்கள் என்று நிச்சயமாகச் சொல்ல்லாம்..! இது மாதிரியான திரைப்படங்கள் சிறு பிள்ளைகளிடம் சினிமா மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.. ஒரு பக்கம் சினிமாவின் வளர்ச்சி. இன்னொரு பக்கம் அடுத்தத் தலைமுறை சினிமா ரசிகர்களின் துவக்கம்.. இப்படி இரண்டுவிதமான நன்மைகளையும் நாம் தொடர்ந்து பெற வேண்டுமெனில் இது போன்ற படங்கள் நிச்சயமாக நிறைய வர வேண்டும்.. 


அவசியம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்..!!!