. அம்மாவின் தூண்டுதலால் விபச்சாரம் செய்தேன் – நடிகை ஷகிலாவின் ஒப்புதல் வாக்குமூலம்..!

31-03-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நடிகை ஷகிலா தன்னுடைய வாழ்க்கைக் கதையை ‘ஷகீலாவின் ஆத்ம கதா’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்தப் புத்தகம் கேரளாவில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
shakeelas-autobiography-700x440
ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் புச்சிரெட்டி பாலம் என்ற ஊரில் பிறந்தவர் ஷகீலா பேகம். இந்த சுயசரிதை நூல் தன்னுடைய பெருமைக்காகவும், புகழுக்காகவும் எழுதப்படவில்லை. ஷகீலா என்ற நடிகை எப்படி இங்கே உருவாக்கப்பட்டாள் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தான் இதனை எழுதியிருப்பதாக ஷகீலா சொல்லியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தின் சில பகுதிகளை இணையத்தில் பலரும் மலையாளத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு  மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.
அது நமது வாசகர்களுக்காக இங்கே :
“என்னுடைய அம்மாவைப் பற்றிய நல்ல அபிப்ராயங்கள் எனக்கில்லை. அவரிடமிருந்து நான் எதிர்பார்த்த அன்போ, அக்கறையோ எனக்குக் கிடைக்கவில்லை. என்னுடைய வாழ்க்கையை புறம்தள்ளி கெடுத்தவர் என்னுடைய அம்மா என்றும் சொல்லலாம். என்னுடைய அம்மா என்னுடைய இளம் வயதிலேயே என் மீது அன்பு செலுத்தாதவராகவே இருந்தார். என்னை மிகவும் புறக்கணித்தே வந்தார்.
Shakeela-2
ஒரு நாள் திடீரென்று எனது அழகைப் புகழ்ந்தார். அது எனது 16-வது பிறந்த நாளுக்குப் பின்பு.. ஒரு நாள், ஒரு ஆள் வந்து என்னை வெளியில் அழைத்துப் போவார் என்று என்னிடம் தெரிவித்தார் என் அம்மா. அவருடன் ஒரு இடத்திற்குப் போய்,  ஒரு பணக்காரரிடம் இணக்கமாகப் போகும்படியும் என்னிடம் சொன்னார். நம் குடும்பத்தின் பணத் தேவைக்காக இதைச் செய்வதாகவும் சொன்னார். அந்த பணக்காரர் சொல்படி நடக்கும்படியும் அவனுக்கு என்ன தேவையோ அதன்படி நடக்கும்படியும் என்னை எச்சரித்தார்.
இதைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். என்னுடைய அப்போதைய வயதில் அந்தச் சூழ்நிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அம்மா சொன்னதுபோலவே ஒரு ஆள் வந்து என்னை அழைத்துப் போனார். நாங்கள் ஒரு ஹோட்டலை சென்றடைந்தோம். அங்கே எனக்காக ஒரு பெரிய பணக்காரர் காத்திருந்தார். அவருக்கு வயது 40 இருக்கும். நான் மனம் உடைந்து கண்ணீர்விட்டு அழுதேன்.  ஆனால் அந்த பணக்காரர் என்னுடைய உடைகளைக் களைந்து என்னை கற்பழித்தார். ஆனால் என்னைத் துன்புறுத்தவில்லை. இதுவொரு தொடக்கம்தான். இதற்குப் பின்னர் பல பணக்காரர்களிடம் கட்டாயமாக என் அம்மாவால் அனுப்பி வைக்கப்பட்டேன்.  அனைவருமே நினைத்துக் கொண்டார்கள், நான் அதுவரையிலும் கன்னித்தன்மையை இழக்காதவள் என்று..!
——————————————
சில்க் ஸ்மிதா முக்கிய கேரக்டரில் நடித்த ‘பிளே கேர்ல்ஸ்’ என்ற படத்தில்தான் நான் அறிமுகமானேன். இதில் சில்க் ஸ்மிதாவின் தங்கை கேரக்டர் எனக்கு.. சில்க் ஸ்மிதா மாதிரியான ஒரு அழகு நடிகையை நான் அதற்குப் பின் நான் பார்த்ததே இல்லை. அவருடைய உடல் அழகும், அவருடைய கருமையான விழிகளும்தான் அவருடைய சொத்து.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் உமாசங்கர் எனது குடும்ப நண்பர். என்னை சிறு வயதில் இருந்தே அறிந்தவர். தான் ஒரு படம் எடுக்கப் போவதாகவும் அதில் எனக்கு ஒரு நல்ல வேடம் கொடுத்து சினிமாவில் அறிமுகப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அப்போது நான் நான்சி என்ற டிவி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன்.
உமாசங்கர் ஒரு நாள் தன்னுடைய படத்தில் நடிப்பதற்காக ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு போய் இயக்குநர் ஆர்.டி.சேகரை சந்திக்கும்படி என்னிடம் சொன்னார். நானும் அதன்படியே ஏவி.எம். சென்று இயக்குநரை சந்தித்தேன். இயக்குநர் என்னைப் பார்த்துவிட்டு சில கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு ‘நாளைக்கே ஷூட்டிங்.. ரெடியா இரும்மா..’ என்றார்.
sakeela-playgirl-1
எனக்கு சில்க் ஸ்மிதாவின் தங்கச்சி கேரக்டர் என்று இயக்குநர் சொன்னதும் என்னால் நம்பவே முடியவில்லை. அன்றைய இரவில் எனக்கு தூக்கமே வரவில்லை. ஆனாலும் கொஞ்சம் குழம்பிப் போயிருந்தேன். இது நிசமாகவே சாத்தியம்தானா..? என்னால் பெரிய நடிகையாக வர முடியுமா என்றெல்லாம் யோசனை செய்து கொண்டேயிருந்தேன் அந்த இரவில்.
மறுநாள் காலை ஸ்டூடியோவுக்கு பறந்தேன். எனக்கு ஒரு டிரெஸ் கொடுத்தார்கள். மினி ஸ்கர்ட். எனக்கு அது பிடிக்கவில்லை. மிகவும் சின்னதாக இருந்தது. ஆனால் என் எதிர்ப்பை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. இப்போதுதான் நடிகையாக வேண்டும் என்கிற கனவோடு கேமிரா முன்பாக நிற்கிறோம். பிரச்சினை வேண்டாம் என்பதால் விட்டுவிட்டேன்..
என் முதல் நடிப்பே சில்க் ஸ்மிதாவுடன்தான்.. ஸ்மிதா ஒரு அறைக் கதவைத் திறந்து வெளியில் வரும்போது நான் அவரிடம் டீயை நீட்டி ‘அக்கா டீ…’ என்று சொல்ல வேண்டும். அவர் கோபத்துடன் என்னை கன்னத்தில் அறைய வேண்டும். இதுதான் அந்தப் படத்தில் எனக்கு வைத்து எடுக்கப்பட்ட முதல் காட்சி.
playgirls
ஸ்மிதாவும் கதவைத் திறந்து கொண்டு வந்தார். நானும் ‘அக்கா டீ…’ என்றேன். ஸ்மிதா கோபத்துடன் என்னை ஓங்கி அறைய.. நிசமாகவே வலித்தது. மிகவும் துடித்துப் போய்விட்டேன்..  சினிமாதான் என்றாலும் என்னால் பொறுக்க முடியவில்லை. வலியால் என் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. கோபத்துடன் அழுதபடியே “நான் வீட்டுக்குப் போகிறேன்” என்றே படக் குழுவினரிடம் சொல்லிவிட்டேன்.
ஆனால் ஸ்மிதா என்னருகில் வந்து என்னைச் சமாதானப்படுத்தினார். என்னைக் கட்டியணைத்துக் கொண்டார். காட்சியின் பெர்பெக்ஷனுக்காக அப்படிச் செய்ததாகச் சொன்னார். ஆனால் எனக்கு மனசு கேட்கவில்லை. சிறிது நேரம் ஷூட்டிங் ஸ்தம்பித்து நின்றிருந்தது. அனைவரும் எனது வார்த்தைகளுக்காக காத்திருந்தார்கள்.
அப்போது தனிமையில் யோசித்த பின்பு ஸ்மிதா மிகப் பெரிய நடிகை. நாமோ இப்போதுதான் நமது பயணத்தைத் துவக்கியிருக்கிறோம்.. அவரே வந்து நம்மிடம் ஸாரி கேட்டுக் கொண்டாரே என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். அடுத்தடுத்த நாட்களின் ஷூட்டிங்கின்போது சில்க் ஸ்மிதாவுடன் இருக்கும்போதுதான் அவர் எவ்வளவு பெரிய மனித நேயம் மிக்கவர் என்பதைப் புரிந்து கொண்டேன்.
அடுத்த நாள் மதியச் சாப்பாட்டிற்காக என்னையும் எனது தங்கை ஷீத்தலையும் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவருடைய மனித நேயம், வேலையில் ஈடுபாடு, நேரம் தவறாமை இதெல்லாம் என்னை அன்றைக்கே ஆச்சரியப்படுத்தியது. அவருடைய தற்கொலை செய்தி என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த மிக துயரமான நிகழ்ச்சியாகவே கருதுகிறேன்.
——————————–
நான் நடித்த சினிமாவில் என்னுடைய உடல்தான் பிரதானப்படுத்தப்பட்டது. பாலியல் உணர்வைத் தூண்டும்விதமாக இருந்த உடல்தான் என்னுடையதே தவிர.. வேறெதுவும் என்னிடம் இல்லை.. நான் பெண் என்ற ரீதியில் இல்லாமல் ஒரு நடிகை என்ற ரீதியிலேயே அதிகமாகக் கவனிக்கப்பட்டேன்.
13624.shakeela3
அந்த நேரத்தில் பல பெரிய நடிகைகளைவிடவும் அதிகச் சம்பளம் வாங்கினேன். ஷூட்டிங்கிற்காக பல ஊர்களுக்கும் பறந்து கொண்டிருந்தேன்.  இரவு, பகல் பாராமல் படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் தூங்குவதற்கே நேரம் கிடைக்காமல் இருந்தது. பல நேரங்களில் நான் நடித்த படுக்கையறை காட்சிகள் படமாக்கப்பட்டபோதுகூட தூங்கிவிட்டேன். திரையில் அதைக் கண்டவர்கள் ஏதோ நான் செக்ஸ் பீலிங்கை கண்ணை மூடி அனுபவிப்பதாக நினைத்துக் கொண்டார்கள். ஆனால் அது உண்மையில்லை. உண்மையாகவே நான் அப்போதெல்லாம் உறங்கிப் போயிருந்தேன். அதுதான் உண்மை. என்னுடைய செக்ஸ் உணர்ச்சிகளை நான் அப்படி வெளிப்படுத்தியதாக மக்கள்தான் நினைத்துக் கொள்கிறார்கள்..
————————————-
என்னுடைய தங்கை நூர்ஜஹான் பற்றியும் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதைய காலக்கட்டத்தில் தென்னிந்தியாவிலேயே தினச்சம்பளம் பெறும் அளவுக்கு சம்பாதித்துக் கொண்டிருந்த எனது சொத்துக்கள் முழுவதையும் பறித்துக் கொண்டவள் இவள்தான். என்னுடைய கணக்கு வழக்குகள் அனைத்தையும் இவள்தான் பார்த்து வந்தாள். நான் அவளை முழுமையாக நம்பினேன். என்னுடைய சிறு வயதில் இருந்தே அவளுடன் வாழ்ந்து வந்ததால் அவளை அப்படி நம்பியிருந்தேன்.
சினிமாவில் மிக பிஸியாக ஓடிக் கொண்டிருந்த நேரம். ஷூட்டிங்கிற்காக பல்வேறு லொகேஷன்களுக்கு சந்தோஷமே இல்லாமல், மிகவும் களைப்புடன் அலைந்து கொண்டிருந்தேன். சினிமா போதுமென்று நினைத்து கொஞ்சம் இடைவெளிவிட நினைத்தேன். என்னுடைய அம்மாவிடமும், நூர்ஜஹானிடமும் நான் திருமணம் செய்ய விரும்புவதாகவும், அவர்களைப் போலவே அமைதியான வாழ்க்கையை இனிமேல் வாழப் போவதாகவும் தெரிவித்தேன்.
shakeela (2)
அவர்கள் இருவருமே அதிர்ச்சியானார்கள். ஏதோ நான் கொலைக் குற்றம் செய்துவிட்டேன் என்பது போலவே என்னை பார்த்தார்கள். சில நிமிடங்கள் கழித்து நூர்ஜஹான் எனக்கு அட்வைஸ் செய்தாள். நான் முட்டாள்தனம் செய்வதாகச் சொன்னாள். அவர்கள் என்னுடைய பணத்தை மட்டுமே விரும்புவதாக எனக்கு அப்போதுதான் புரிந்தது. என்னுடைய வாழ்க்கை.. என்னுடைய குடும்பம் இதெல்லாம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதும் தெரிந்தது. நான் மிகவும் நொந்து போனேன். நூர்ஜஹானிடம் நான் சம்பாதித்த பணம் பற்றி கேட்டேன். மொத்தப் பணமும் குடும்பத்திற்காக செலவாகிவிட்டதாகச் சொன்னாள் நூர்ஜஹான். அதிர்ந்து போனேன் நான்.  அத்தனையும் ஒரு நொடியில் முடிந்துபோய் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். அந்த நேரத்தில் எல்லாமும் என் கையை விட்டுப் போயிருந்தது.
—————————
குடிப் பழக்கம் ஒருவகையில் என்னையும் தொற்றிக் கொண்டது. இது சிறு வயதிலேயே என்னுடைய தந்தையின் மூலமாக எனக்கு வந்தது. அப்போதெல்லாம் என்னுடைய தந்தை பீர் பாட்டிலை வீட்டிற்கே கொண்டு வந்து குடிப்பார். அதனைப் பார்த்து ஆசைப்பட்டு எனக்கும் கொஞ்சம் வேண்டும் என்று அடம் பிடிப்பேன். அப்போது சின்ன டம்ளரில் எனக்குக் கொஞ்சம் பீரை உற்றிக் கொடுப்பார் என்னுடைய தந்தை. அப்படி ஆரம்பித்த பழக்கம் பின்பு முழு பீரையே குடிக்க வைத்தது.
Shakeela-Actress
நான் ஆரம்பத்தில் டிவி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது இயக்குநர் மோகன்ராஜிடம் பீர் கேட்டு அடம் பிடித்தேன். அவர் வாங்கித் தர மறுத்தார். நான் அது வந்தால்தான் ஷூட் என்று பிடிவாதம் பிடிக்க.. வேறு வழியில்லாமல் வாங்கிக் கொடுத்தார். அன்றைய ஷூட்டிங் பிரச்சினையில்லாமல் முடிந்தது. இது இன்றுவரையிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
ஒரு பீரில் துவங்கிய எனது குடி.. இன்றைக்கு மதுவில் இருக்கும் அத்தனை வகைகளையும் தொட்டுப் பார்த்துவிட வைத்துவிட்டது.. நான் செயின் ஸ்மோக்கரும்கூட.. பல நட்பு ரீதியிலான ஆண்-பெண்களுக்கு கம்பெனி கொடுப்பதற்காக குடிக்கிறேன். பெரும்பாலும் இரவு நேரங்களில்தான்.
நெருங்கிய ஆண் நண்பர்களுடன்தான் குடிக்கிறேன். ஆனால் அதுவே நட்பைத் தொலைத்துவிட வைக்கிறது.. முதல் பெக் அடித்தவுடன் எனக்கு அட்வைஸ் செய்வார்கள்.  மூன்றாவது பெக் அடித்தவுடன் என்னுடைய நடிப்பு பற்றியும், என்னுடைய உடல் பற்றியும் பேசத் துவங்கி தொடுவார்கள்.. 4-வது பெக் முடித்தவுடன் பாத்ரூம் போய்வருவதாகச் சொல்லிவிட்டுப் போவார்கள். சென்று வந்தவுடன் என்னருகில் வந்து அமர்ந்து கொள்வார்கள். எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும்..!
shakeela-3
இப்போது அவர்கள் எதற்கும் தயார் என்ற ரீதியில்தான் என்னை பார்ப்பார்கள். அவர்களுடைய கண்களே அவர்களது பாசாங்கான நட்பையும், வேட்கையையும் எனக்குக் காட்டிக் கொடுத்துவிடும். சில நொடிகளில் என்னை அணைக்கத் தொடங்குவார்கள். எனது உடல் பாகங்களை தொட முயல்வார்கள்.. அவர்களது நோக்கம் அடுத்ததாக என்னை அவர்களது பெட்ரூமுக்கு அழைத்துச் செல்வதாகவே இருக்கும்..!
ஆண்கள் பாலியல் வேட்கையைத் தணித்துக் கொள்ளும் முன்பு அதற்காகவே குடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  இப்போதும் என்னையும் அப்படியே நினைத்துக் கொண்டார்கள். நான் பெண்களுடன் சுதந்திரமாக இருந்திருக்கிறேன். அவர்களைக் கட்டியணைப்பேன். நடனமாடுவேன். ஆனால் ஆண்களின் நோக்கம் முழுக்க முழுக்க செக்ஸாகத்தான் இருக்கும்.  அவர்களுடன் படுக்கையைப் பகிர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள்.. இதைத்தான் எனது வாழ்க்கையில் நான் உணர்ந்திருக்கிறேன்.
shakeela-pics
குடியைப் போலவே சிகரெட் பழக்கமும் தானாகவே என் வாழ்க்கையில் வந்து சேர்ந்த்து. ஒரு ஹிந்தி படப்பிடிப்பில் இருந்தபோது அதில் நடித்த நடிகை பூஜா பேடி சிகரெட் பிடித்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் ஆர்வமோ என்று நினைத்து அவர் சிகரெட்டை கொடுக்க.. அதுதான் முதல் பழக்கம். பின்பு அதுவே தொற்றிவிட்டது. இப்போது அவரைவிட அதிகமாக நான் சிகரெட் பிடிப்பதாக நினைக்கிறேன்.
எதுவாக இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் சிகரெட்டை தொட மாட்டேன். குடித்துவிட்டு கேமிரா முன்பு வந்து நிற்க மாட்டேன். அப்படி ஒரு நாளும் நான் நடந்து கொண்டதில்லை. இரவில் எனக்குத் துணை குடி மட்டுமே.. வாழ்க்கையில் எத்தனையோ விசித்திரங்களை சந்திப்பதுபோல இதுவும் ஒன்று.. அவ்வளவே..!
———————————-
Actress Shakeela at Aasami Movie Stills
‘செக்ஸ் காட்சிகளில் நடிக்கும்போது உணர்ச்சிவசப்பட்டுவிட மாட்டீர்களா..?’ என்ற கேள்வியை நிறைய பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நாங்கள் அது மாதிரியாக நடிப்பது தனி இடங்களில் அல்ல.. படப்பிடிப்புக் குழு மொத்தமாக பார்த்துக் கொண்டிருக்கும்போது, நாங்கள் எப்படி உண்மையாக செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும்..? செக்ஸ் என்பது வெறும் உடல் சார்ந்த்து அல்ல.. அதுவும் பெண்களுக்கு..! அது உணர்ச்சிப்பூர்வமானதும் அல்ல.. உணர்வுப்பூர்வமானது.. செக்ஸை விரும்பி அனுபவிப்பதில் பெண்களுக்கு வெளிப்படையாக சில சங்கடங்கள் உண்டு.. எப்படியிருந்தாலும் நான் நடிப்பைத் தவிர வேறு எதையும் அந்தக் காட்சிகளில் காட்டிவிடவில்லை. என்னுடைய மிகையுணர்ச்சி நடிப்புதான் அதில் தென்பட்டிருக்குமே தவிர.. காம உணர்ச்சியாக இருக்கவே முடியாது..!
நன்றி : ஒலிவியா பப்ளிகேஷன்ஸ்

குக்கூ - சினிமா விமர்சனம்

22-03-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



வருடத்திற்கு ஒரு படம்தான் இது போன்று வரும்.. தமிழ்த் திரையுலகில் ஒரு சிலர்தான் தங்களது அறிமுகப் படத்தில் இப்படி முத்திரை பதிப்பார்கள். இது போன்ற கதையம்சத்துடன் படத்தை எடுக்க முன் வர, தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும். முதலில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எனது நன்றிகள்..

தினம்தோறும் கண்ணில்லாத மனிதர்களைப் பார்க்கிறோம். பேருந்து நிலையம், ரயில் நிலையம்.. ரயில்கள்.. என்று எங்கும் அவர்களது குரல்கள் ஒலிக்கின்றன. ஒரு சில இடங்களில் வரிசையாக கைப்பிடித்தபடியே அவர்கள் நடந்து செல்வதைப் பார்க்கின்றோம். ஒரு நிமிடம் யோசிக்கிறோம். நாம் பரவாயில்லையே என்று முருகனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.. ஆனால் அவர்களுடனான ஒரு நாள் வாழ்க்கையை வாழ நாம் யோசிப்பதில்லை. பயமாக இருக்கிறது நமக்கு.  கண் இருப்பவர்களுக்குத்தான் இருட்டை பார்த்து பயம். பார்வையற்றவர்களுக்கு எதைப் பார்த்தும் பயமில்லை.

ஆண்டவனின் படைப்பில் மிகக் கொடூரமானது இந்தக் கண்ணில்லாதவர்கள்தான்.. இவர்களது வாழ்க்கையை வைத்து இதுவரையிலும் நிறைய தமிழ்ப் படங்கள் வந்திருந்தாலும் அனைத்துமே ஒவ்வொரு ரகம்.. ராஜூ முரூகனுக்கு இது முதல் படம் என்பதால் படத்தில் காதல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது அவரது தலையெழுத்து.  கதையம்சம் வித்தியாசமாக இருந்தாக வேண்டும் என்பது அவரது எழுத்தாளர் என்ற தகுதிக்குரிய தலையெழுத்து. இயக்கம் என்பது மூன்றாவதாக அவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள காட்ட வேண்டிய வித்தை.. இதையும் சரியாகவே செய்திருக்கிறார்..

ஏதோ ஒரு ஊரில் தமிழ் என்பவனுக்கும், சுதந்திரக் கொடி என்பவனுக்கும் இடையில் நடந்த காதலைப் பற்றிச் சொல்கின்ற கதையல்ல இது. இதன் மாந்தர்கள் நம் அருகிலேயே இருக்கலாம்.. அல்லது நாம் கேள்விப்பட்டிருக்கலாம். கண்ணில்லாதவர்கள் என்றில்லை. கண்ணிருந்தும் மற்ற சாதாரணமானவர்களை போலவே இந்த ஜோடிகளை பார்த்திருக்கலாம்.. இது ஒன்றுதான் இதில் இருந்த வித்தியாசம்..

ரயில்களில் பொருட்களை விற்றுக் கொண்டும், பகுதி நேரமாக மேடைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டும் பொழைப்பை நடத்தும் தமிழ் என்னும் பார்வையற்ற ஹீரோவுக்கு சுதந்திரக்கொடி என்னும் இன்னொரு பார்வையற்ற பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. வழக்கம்போல மோதலில் ஆரம்பித்து கடைசியில் காதலிக்க வைக்கிறது காதல்.. அதுதான் காதல்..

கண் இல்லையென்றாலும் ஆள் அழகு என்பதால் ஹீரோயின் மீது நடுத்தர வயதுள்ள குடும்ப நண்பரான ஷேர் ஆட்டோ டிரைவருக்கு ஆசை.. ஹீரோயினின் டீச்சர் வேலைக்காக எம்.எல்.ஏ.வுக்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணத்தை தானே கொடுத்து ஹீரோயினை புக் செய்து வைத்திருக்கிறார் டிரைவர். இந்த காதல் விவகாரம் ஹீரோயின் வீட்டுக்கும் தெரிய.. அவசர கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். இன்னொரு பக்கம் தமிழை ஏமாற்றி பணம் பறிக்கவும் முயல்கிறார்கள் ஹீரோயினின் அண்ணனும், டிரைவரும்.. 

இந்தக் காதல் கடைசியில் என்ன ஆனது என்பதைத்தான் 2 மணி 40,நிமிட படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

கண் பார்வையற்றவராக நடிப்பதென்பது சாதாரண விஷயமல்ல.. ‘அட்டகத்தி’ தினேஷின் இந்த நடிப்பார்வத்திற்கு ஒரு சல்யூட்டே செய்ய வேண்டும்போல் உள்ளது. இத்தனை குறுகிய காலத்தில்.. திரையுலகத்திற்கு வந்த புதிதிலேயே இது போன்ற சோதனை முயற்சி நடிப்பை மேற்கொள்வது பெரிய நடிகர்களே செய்யத் தவங்குவதுதான்.. தன்னுடைய உடல் மொழியால் பல இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார் தினேஷ். ஒரு இடத்தில்கூட அவர் நடிக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது.. இயக்கத்தின் வேகம் காரணமாய் கிளைமாக்ஸில் திரைக்கதை மெலோ டிராமாவாக ஆகிவிட்டாலும் இவருடைய நடிப்பில் எதுவும் சோடையில்லை..

ஹீரோயின் அவரைத் தாக்கியவுடன் அவர் காட்டும் ரியாக்சன்.. ஹீரோயின் அவரை தனியே அழைத்துச் சென்று அவர் நெற்றியில் பட்ட காயத்தைத் தொட்டுப் பார்த்து ஜெயம் செய்யும் காட்சியில் அவருடைய முகம் காட்டும் திகைப்பு.. நீ எப்படி இருப்ப என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்பது.. உங்க முகத்தைக் கொஞ்சம் தொட்டுப் பார்த்துக்கவா என்று கபோதி இன்ஸ்பெக்டரிடமே பேசுவது.. இப்படி பல இடங்களிலும் ஒரு கண் பார்வையவற்றவனைத்தான் திரையில் பார்க்கிறோம் என்பதை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் தினேஷ்.. வெல்டன்..

ஹீரோயின் மாளவிகா. அறிமுகம்.. புதுமுகம் என்கிறார்கள். நம்ப முடியவில்லை. இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் மிகவும் பிடித்திருக்கிறது. அறிமுகம் இல்லாத நபர்கள் கிண்டல் செய்வதை பொறுக்காதவர்.. தன்னை ஏமாற்றினால் பிடிக்காது என்கிறார். தன் மீது பரிதாபம் காட்டுவதை ஏற்காதவர்.. பழைய துணிகளை வேண்டாம் என்று மறுப்பவர்.. கடன் கேட்பதைக்கூட தவறு என்று நினைப்பவர்.. இப்படி கண்ணிருக்கும் ஒரு மனிதரிடத்தில் காணக் கிடைக்காத குணங்களையெல்லாம் பார்வையில்லாத இந்தப் பெண்ணிடம் சுமத்தி அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர்..

அழகைவிடுத்து நடிப்பும் அந்த நடிப்பும் அழகுதான்.. ஹீரோவை முதல் முறை பார்த்தவுடன் பேச்சில் கடுப்பாகி முகத்தைச் சுழித்துவிட்டு பேசும் காட்சியிலேயே மனம் ஒன்றிப் போய்விட்டது.. டிரெயினில் தான்தான் இடத்தை மாற்றிச் சொல்லி இறக்கிவிட்டதை தினேஷ் சொல்லச் சொல்ல அருகில் இருந்து கேட்டபடியே கோபமாகும் அந்த முகத்தின் வசீகரம்..  கையில் இருக்கும் ஸ்டிக்கால் தாக்கியவுடன் ‘ஐயோ’ என்ற பாவத்தை நம்மிடமிருந்து வரவழைக்கவில்லை என்பதை இப்போதுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

பாடல் காட்சிகளின் மாண்டேஜ் சீன்களில் மாளவிகாவின் முக பாவனைகள் அனைத்தும் எக்ஸலண்ட்.. ஹீரோவின் ஆடியோ கேஸட்டை கேட்டுவிட்டு முகச் சுழிப்பைக் காட்டிவிட்டாலும், அடுத்த கணம் யோசித்துப் பார்க்கின்ற அழகுக்கு இன்னொரு பாட்டு வைத்திருக்கலாம்.. காத்திருக்க வைத்த கோபம்.. மற்றவர்களின் முன் தன்னை கிண்டல் செய்த கோபம்.. பெர்பியூமை ஊருக்கே தாரை வார்த்த கோபம்.. கேக்கில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு தன் கையில் கொடுத்திருக்கிறார் என்பதையறிந்தவுடன் முகத்தில் தோன்றும் அறுவறுப்பு.. அத்தனையும் மாளவிகா என்றொரு நடிகையை அடையாளம் காட்டியிருக்கிறது. கோடம்பாக்கம் இவருக்கு ஆதரவு கொடுத்தால் அவருக்கும் புண்ணியம் நமக்கும் புண்ணியம்தான்..

ஹீரோவின் உடன் எப்போதும் துணைக்கு வரும் இளங்கோ, இளையராஜாவின் ரசிகரான முருகதாஸ், சந்திராபாபுவாக நடித்த ஈஸ்வர்.. அவருடைய இரண்டு மனைவிகள்.. அது தொடர்பான காட்சிகள்.. இடையிடையே அவ்வப்போது ஒலிக்கும் ராகதேவன் இளையராஜாவின் இசைப் பாடல்கள்.. அரசியல் புரோக்கர் என்றாலும், பெண்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று நினைக்கும் ஒரு லோக்கல் அரசியல்வாதி ஈ.ராமதாஸ்.. என்று கேரக்டர்களின் துணையோடு படத்தை ஒரு அழகான ஓவியமாகவே கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.

அத்தனைக்கும் முதல் காரணம் கதையல்ல.. இயக்குநரின் இயக்கத் திறமை.. ஒரு ஷாட்டில்கூட நீங்கள் குறை கண்டுபிடிக்க முடியாது.. ஒரு இடத்தில்கூட எடிட்டிங் பிசிறு தட்டவில்லை.. காட்சிகளை அளவோடு வெட்டி எடுத்திருக்கிறார்கள்.. இத்தனைக்கும் மேலாக இவரிடமிருக்கும் பலம் வசனங்கள்தான்.. எழுத்தாளரான ராஜுமுருகனுக்கு வட்டியும், முதலுமாகக் கிடைத்த வசனங்களும் படத்திற்கு ஒரு பிளஸ்..

டிரெயினில் யாருடனும் பேசாமல்.. ஒரே சீட்டில்.. வருடக்கணக்கானப் பயணிக்கும் ஒரு அய்யராத்து அம்பி.. பிச்சைக்காரனை கூட நிமிர்ந்து பார்க்காத குணம்.. அவரை பேச வைத்துவிட்டால் 50 ரூபாய் என்று டிரெயினில் பந்தயமெல்லாம் நடக்கிறது. ஆனால் முடியவில்லை.

ஒரே ஒரு நாள்.. ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்தியர்கள் மீது தாக்குதல் என்றவுடன், பதறிப் போய் தனது ஒண்ணுவிட்ட அத்திம்பேருக்கு போன் செய்து.. அங்கே நிலைமை எப்படியிருக்கு என்று விசாரித்துவிட்டு தன் பையனை பார்த்துக்குங்கோ என்று அக்கறையுடன் சொல்லிவிட்டு மீண்டும் அதே வெறித்த பார்வையுடன் சன்னல் பக்கம் திரும்பிக் கொள்ளும் இந்த அம்பிகள்தான் மிகப் பெரிய சுயநலவாதிகள் என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கும் ராஜூமுருகனின் உள்குத்து எத்தனை பேருக்கு புரிந்திருக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் இதே அய்யராத்து அம்பிதான்.. போஸ்டரில் இருக்கும் ஹீரோ ஆவடி ரயில்வே ஸ்டேஷனில் இருக்கிறார் என்பதை ராஜூ முருகனுக்கு போன் செய்து சொல்கிறார்.. ஆக எது தேவையோ அப்போதுதான் இவர்கள் பேசுவார்கள் என்பதை ராஜூ சொல்கிறாரோ என்னவோ..? நாம் எப்படி இதனை எடுத்துக் கொள்வது..?

தமிழ்நாடு மின் மிகை மாநிலம் ஆக வேண்டும் என்கிற ஆசையையும், குஜராத்தை போல ஒளிர வேண்டும் என்ற நப்பாசையையும் வசனத்தில் சொல்லியிருக்கிறார். ஆர்.டி.ஐ. சம்பந்தப்பட்ட அந்தக் காட்சியிலும் தோலுரித்திருக்கிறார்.. வசனங்கள்தான் இத்தனை நீள படத்தை கொஞ்சம் போரடிக்காமல் கொண்டு செல்ல உதவியிருக்கிறது.  சந்திரபாபுவின் வீட்டில் தண்ணயடித்துவிட்டு பேசும் பேச்சுக்களும்.. “பொம்பளைங்களுக்குள்ள சண்டையை மூட்டிவிட்டுக்கிட்டே இருக்கணும். அப்பத்தான் நாம நல்லாயிருக்க முடியும்..” என்ற சந்திரபாபுவின் பேச்சும் செம ரகளை..! தான் இடம் பெற்ற காட்சி முழுவதும் மெளனமாகவே வலம் வந்து கொண்டிருந்த திரை எம்.ஜி.ஆர். ஒரேயொரு காட்சியில் ஒட்டு மொத்த கைதட்டலையும் பெற்றுவிட்டார். இந்தத் திரைக்கதைக்காக ராஜூவுக்கு மீண்டும் ஒரு ஷொட்டு..!

பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் அவ்வப்போது காட்டப்படும் சென்னையின் கழுகுப் பார்வையுடன் தொடர்ச்சியான காட்சிகள் ஆச்சரியப்படுத்துகின்றன. அதிகாலை ரயில் நிலையத்தை அடிக்கடி காண்பித்து நமக்கு ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும், ஹாஸ்டல் காட்சிகளிலும்தான் கேமிராவுக்கு நிறைய வேலைகள் கொடுத்திருக்கிறார்கள்.. மிக இயல்பாக வெளிச்சம் உள்ள பகுதிகளிலேயே ஒளிப்பதிவு உறுத்தாமல் கேரக்டர்களை பதிவு செய்திருக்கிறார் வர்மா..  இந்த கிரேடிங் முறை மட்டும் இல்லாவிட்டால் ஒளிப்பதிவாளர்கள் செத்துவிடுவார்கள் என்பார்கள். இதில் அதனை பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதையே தேடித்தான் பார்க்க வேண்டும்..  

சந்தோஷ் நாராயணானின் இசையில ‘கல்யாணமாம் கல்யாணம்’ பாடலும், ‘ஆகாசத்துல’ பாடலும்தான் லயிக்க வைத்தன. பின்னணி இசையில் சோகத்தைத் ததும்பி தந்திருக்க வேண்டியது..  தராமல் போனதன் விளைவு ஒட்டு மொத்தமாய் படத்தின் அந்த பீலிங்கும் கிடைக்காமல் போய்விட்டது..

குறைகளே இல்லையா என்கிறீர்களா..? இருக்கிறது.. அதுதான் கிளைமாக்ஸ்.. 15 நிமிடங்களுக்கு முன்பாக முடிந்திருக்க வேண்டிய படம்.. மேலும் மேலும் இழுத்து புனேவரைக்கும் கொண்டு போயிருக்க வேண்டிய தேவையே இல்லை.. புனே ரயில்வே ஸ்டேஷனில் இருவரும் ஒருவரையொருவர் அடையாளம் காணுவதில் இருக்கும் லாஜிக் மிஸ்டேக் படத்தின் ஒட்டு மொத்த கலைத்தன்மையையும் குலைத்துவிட்டது.. ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தின் கிளைமாக்ஸில் அடித்த சிக்ஸரை போல மருத்துவமனையிலேயே படத்தை முடித்து நன்றி கார்டு போட்டிருக்கலாம். ஏன் இதனை இப்படி இழுத்துக் கொண்டு போனாரென்று தெரியவில்லை..!

முதல் படம் என்பதால் காதலைத் தொடாமல் படமெடுக்க முடியாது என்கிற நிதர்சன உண்மை இருந்தாலும், மாற்றுத் திறனாளிகளை கதையின் மாந்தர்களாக வைத்திருக்கும்போது அவர்கள் மீது எழும் பரிதாப உணர்வை ஏனோ இப்படம் நமக்குள் விதைக்கவில்லைதான். இதற்கு மூல காரணம் படத்தில் ஒரு காட்சியில்கூட இன்னொருவரின் உதவியினால் இவர்கள் தங்களது ஒரு நாள் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதற்கான காட்சிப் படிமத்தை இயக்குநர் வைக்கவே இல்லை.

ரோட்டில் கிடக்கும் ஹீரோயினின் அந்தக் கடிகாரத்தைக்கூட அத்தனை பிஸியான டிராபிக்கிலும் ஹீரோதான் போய்த் தேடிப் பார்த்து எடுத்து வருகிறார். வருவோரும், போவோரும் கண்டு கொள்ளாமல் செல்கிறார்கள் என்பதை தொடர்ந்து காட்டியிருப்பது நம்பத் தகுந்ததாக இல்லாமல் வலிந்து திணிக்கப்பட்டதாகவும் போய்விட்டது.

படம் முடிந்து வெளியே வரும்போது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் அவல வாழ்க்கையை.. அவர்களைப் பற்றிய ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டோம்.. பார்த்தோம் என்று சொல்ல முடியாத அளவுக்கு படம் நமக்குள் காதல் காவியமாக வியாபாதித்ததுதான் ராஜூமுருகனே எதிர்பாராதது..!

படத்தில் தவிர்த்திருக்க வேண்டிய ஒரே விஷயம்.. ஹீரோவின் நண்பர், பார்வையற்றவரான இளங்கோவும் மது அருந்துவதை போன்று காட்சி வைத்திருப்பதுதான். இப்படி நிஜத்திலும் நடக்கிறதுதான். எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு நாள் நான் பார்த்தபோது வரிசையாக அமர்ந்திருந்த 5 பார்வையற்ற ஆண்களின் கைகளில் சிகரெட்.. திக்கென்றாகிவிட்டது. யார் இதனை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தது.. கொடுமையல்லவா..?  இந்தப் படத்தை மற்றவர்களின் துணையுடன் பார்க்கவிருக்கும் பார்வையற்றவர்களின் மனதில் இந்தக் காட்சி மட்டும் ஏதேனும் விபரீதத்தை ஏற்படுத்துவிடக் கூடாது என்று கர்த்தரிடம் பிரார்த்திக்கிறேன்..

100 லாஜிக் மீறல்கள்.. 1000 ஓட்டைகள் என்று பலரும், பலவும் பேசினாலும்.. ஒரு புதுமுக இயக்குநர் இப்படியொரு கதையை கருவாக வைத்து.. தைரியமாக முனைந்து... இயக்கத்தில் ஒரு சிறிய தவறுகூட இல்லாமல் இயக்கிக் காண்பித்திருப்பதற்கு தமிழ்த் திரையுலகமே ராஜூ முருகனுக்கு ஒரு சல்யூட் அடிக்க வேண்டும்..!

நன்றிகள் ராஜூ முருகனுக்கு..!

ஒரு மோதல் ஒரு காதல் - சினிமா விமர்சனம்

18-03-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



கதையே இல்லாமல் படமெடுப்பது எப்படி என்பதை இந்தப் படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்..!

மருத்துவர்களான பெற்றோர்களுக்கு பிறந்து மருத்துவம் படிக்கப் பிடிக்காமல்.. பொறியியல் படித்துவிட்டு அந்த வேலைக்கும் போகப் பிடிக்காமல் சினிமா இயக்குநர் ஆசையில் இருப்பவர் ஹீரோ. ஒரு பெண்ணை காதலிக்கிறார். அவரும்தான். காதல் கைகூடாதோ என்ற நிலைமை வருகிறபோது.. பெண் வீட்டார் எதிர்க்கிறார்கள் என்னும்போது ரிஜிஸ்தர் கல்யாணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இடையில் புகும் பெண் வீட்டார் குழப்படி செய்ய.. கேஸ் போலீஸ் ஸ்டேஷன் செல்கிறது.. அங்கே அந்தப் பெண் ஹீரோவை யாரென்றே தெரியாது என்று சொல்லிவிட.. மனம் வெறுத்துப் போகிறார் ஹீரோ.

ஒரு ஏமாற்றத்தை இன்னொன்னு வந்துதானே பில்லப் செய்யும். ஒரு மாறுதலுக்காக பெங்களூரில் வேலை கிடைத்து அங்கே செல்கிறார். ஒரு கல்லூரியில் லெக்சரர் வேலைக்கு சேர்பவர் அங்கே படிக்க வரும் ஒரு மாணவியுடன் காதலில் விழுகிறார். இந்தக் காதலையாவது கல்யாணம்வரைக்கும் கொண்டு போகணுமே என்ற கவனத்தோடு செயல்பட்டு தானே கல்யாண ஏற்பாடுகளை முனைப்போடு செய்து இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தி கல்யாணமும் செய்து கொள்கிறார். இவ்வளவுதான் இவர்கள் சொன்ன கதை.

ஒரு காதல் தோற்றுப் போய் அவமானப்பட்டுவிட்டதால், அடுத்த காதலை அந்த அளவுக்கு போகவிடாமல் தானே முயற்சி செய்து அதனை வெற்றிகரமாக்கிக் காட்டுவேன் என்ற ஹீரோவின் சபதம்தான் கதை என்றால்.. இதனை இன்னமும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

படத்தின் மிகப் பெரிய மைனஸே ஹீரோவின் ஆக்சன்தான்.. காமெடி காட்சிகளிலும், ரொம்ப சீரியஸான காட்சிகளிலும் ஒன்று போலவே நடிப்பை காட்டியிருப்பதால் நமக்குத்தான் பெரும் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டது.. கடைசிவரையிலும் ஒரே மாதிரி நடித்துக் காண்பித்து சொதப்பிவிட்டார்.

முதல் ஹீரோயின் பரவாயில்லை ரகம். ஒரு டூயட் பாடிவிட்டு ஓய்ந்துவிட்டார். அடுத்தவர் மேகா பர்வீன். 2 டூயட்டுகளுடன் கடைசிவரையிலும் உடன் வருகிறார். இவரது நாவில் தமிழ் தகிறத்தாளம் போடுகிறது.. இவரது கூட்டுக் குடும்ப காட்சிகள் மட்டுமே ஒரே ஆறுதல்.. கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமாக காட்ட முயன்றிருக்கிறார்கள்.

படத்தின் சுவாரஸ்யத்தை இந்த முறை பெற்றோர்கள் காட்டியிருக்கிறார்கள். பிரமிட் நடராஜன் மற்றும் மீரா கிருஷ்ணன் இருவரது அக்கப்போர்களும், சண்டைகளும்.. மோதல்களும்தான் கொஞ்சம், கொஞ்சம் நகைக்க வைத்தன..

பிரியாணி மீது வெறி கொண்ட அண்ணி… அதனை வாங்கிக் கொடுத்தே கரெக்ட் செய்யும் அண்ணன்.. இவரது மக்கு ப்ளஸ் நான்கு நண்பர்கள்.. இப்படி கதையில் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து பிய்த்து கொடுத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

கே.ஆர்.கவின் இசை.. 2 பாடல்கள் மட்டுமே முணுமுணுக்க வைத்தன. மற்றபடி பெரிய அளவுக்கு நம்மை இம்ப்ரஸ் செய்யவில்லை.. கீர்த்திகுமார் எழுதி, இயக்கியிருக்கிறார். முதல் படமென்ற தடுமாற்றம் இருந்தாலும் கதையில் ரொம்பவே மெனக்கெட வேண்டிய விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறார்..

மிகக் குறைந்த பட்ஜெட் என்றாலும்,  அனைவருக்கும் பிடித்தமான கதையுடன்.. சுவாரசியமான திரைக்கதையுடன் அமைத்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். இப்போது படம் முடிந்து வெளியில் வருபவர்கள் கேட்கின்ற கேள்வி “இந்தப் படத்துல என்ன ஸார் கதை..?” என்றுதான்..!

யார் பதில் சொல்வது..?

காதல் சொல்ல ஆசை - சினிமா விமர்சனம்

18-03-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



பரம்பரையே போலீஸ் பரம்பரையாக இருந்தும், தனக்கு போலீஸ் வேலை மீது ஆர்வம் இல்லை என்பதால் அப்பாவுடன் சண்டையிட்டு அதே ஊரில் தனியாக அறை எடுத்து நண்பனுடன் தங்கியிருக்கிறார் ஹீரோ. ஹீரோயினின் செல்போன் ஹீரோவின் கைக்கு எதிர்பாராமல் வருகிறது. அதனைத் திருப்பிக் கொடுக்க முயன்று கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஒரு பெரும் கோடீஸ்வரரின் உயிரைக் காப்பாற்றுகிறார் ஹீரோ.  பலனாக அந்த கோடீஸ்வரரின் அலுவலகத்தில் பார்த்தவுடன் காதலியாகத் தெரிபவரும் வேலை செய்ய.. அங்கேயே வேலையை வாங்கிக் கொள்கிறார் ஹீரோ. தன் கையில் வைத்திருக்கும் செல்போனும் அதே ஹீரோயினுடையது என்றவுடன் ஹீரோவுக்கு காதல் உண்டாகிறது. ஆனால் ஹீரோயினிடம் சொல்லவில்லை. கோடீஸ்வரருக்கும் இன்னொரு லோக்கல் தாதாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட.. இதனால் ஹீரோவின் குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு.. வில்லங்கமாகிறது. இடையில் கோடீஸ்வரரின் மகனும் கம்பெனியில் என்ட்ரியாகி ஹீரோயினை ஒன் சைடாக காதலிக்கத் துவங்க.. கடைசியாக ஹீரோயின் யாருக்குக் கிடைத்தாள்.. வில்லன் என்ன ஆனான் என்பதுதான் மீதமுள்ள கதை..!

இதற்கு முன்னர் நடிகர் முரளியை வைத்து கடைசி ரீலுக்கு முந்தைய ரீல்வரையிலும் காதலைச் சொல்லாமலேயே கதையை நகர்த்தி காதலை சாகடிக்கும் படங்களை நிறையவே எடுத்தார்கள்.! அந்த வரிசையில் இதுவும் ஒன்று..!

ஹீரோ அசோக். கோழி கூவுது உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். இதில் நடிப்புக்கு பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லை. காதலை முன்னிலைப்படுத்தி காதலை தெரியப்படுத்தவே தடுமாறுவது போன்ற திரைக்கதை என்பதால் அசோக்கின் நண்பரை வைத்தும் கொஞ்சம் கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.

ஹீரோயினை பார்த்துவிட்டு அவளுக்காக வேலை கேட்கச் செல்வதும்.. ஹீரோயினுக்கு ஒரு லெட்டரை எழுதி வைத்துவிட்டு அது காணாமல் போய் எம்டியின் கையில் சிக்கியிருப்பதை அறிந்து நான்கு நண்பர்களும் திணறுவதும்.. இது போன்ற சில காட்சிகள் மட்டுமே ரசிக்கும்வகையில் இருந்த்து.

காமெடியன் இல்லாத குறையைத் தீர்த்து வைத்திருக்கிறார் வில்லன் நான் கடவுள் ராஜேந்திரன். இப்படியொரு மொக்கைத்தனமான வில்லத்தனத்தை எப்படித்தான் கிரியேட் செய்தார்களோ தெரியவில்லை.. அதிசூர மொக்கை வில்லத்தனமான திரைக்கதை.. செஸ் விளையாடுகிறார். அதில் விளையாடி ஜெயித்தால் ஹீரோயினை கூட்டிக் கொண்டு செல்லலாம் என்கிறார். மொதல்ல இந்த வில்லனுக்கு செக் எப்படி வைப்பது என்பதே தெரியாதாம்.. ஆனாலும் செஸ்ஸில் ரொம்ப ஆர்வமாம். இதையும்கூட சரிவர செய்யாமல் விட்டு ஈர்ப்பே இல்லாமல் போய்விட்டது..

இண்டோர் டெக்ரேஷன் துறையில் யாருக்காவது 20 கோடி ரூபாய்க்கு டெண்டர் கிடைக்குமா..? ஆச்சரியம்தான்.. அந்த அளவுக்கு என்ன கூகிள் கம்பெனிக்கா இவர்கள் வேலை செய்தார்கள். பிளாட் வீடுகள்தான். அதுக்கே இத்தனை கோடி டெண்டராம்.. இதை எதுக்கு நீ எடுத்த..? நான் சொல்ற ஆளுக்குத்தான் அதை விட்டுக்கொடுன்னு வில்லன் கோஷ்டி மிரட்டுது..! கொஞ்சமும் லாஜிக் இல்லாத திரைக்கதை..

ரொம்ப நாள் கழிச்சு ரவி ராகவேந்தர்.. சீரியஸ் டைப் கதைகள் இவருக்கு ஒத்து வராது என்பது தெரிந்ததுதான்.. மகனுக்கு அட்வைஸ் செய்து தனது செகரட்டரியிடம் லவ்வை பிரபோஸ் செய்யும்படி சொல்லும் காட்சிகள் வெகு இயல்பு. இவர் ஒருவரே படத்தின் அட்ராக்சனான நடிப்பைக் காட்டியிருக்கிறார்.. பொருத்தமான தேர்வு..

ஹீரோயின் வாஷ்னா அஹமத்.. புதுமுகம்.. தமிழ் உச்சரிப்பு சிறிது தள்ளுபடி செய்யப்பட்டு நடிப்பு மட்டும் கொஞ்சம் வந்துள்ளது. நடிப்புக்காக தமிழ் உச்சரிப்பை விட்டுவிடலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ரசிகர்கள்.. படத்துக்கு படம் புதுமுக ஹீரோயின்கள் வந்தவண்ணமே இருப்பதால் ஏதாவது ஸ்பெஷலாக இருந்தால் மட்டுமே இவர் அடுத்த சில படங்களில் நடிக்க இயலும் என்பதால் காத்திருப்போம்.

மது ரகுராம் இரண்டாவது ஹீரோவாக முதலாளியின் மகனாக நடித்திருக்கிறார். சப்பைக் கதையில்.. சொதப்பல் திரைக்கதையில் என்னதான் நடிப்பைக் காட்டினாலும் அது எடுபடாது என்பது தெரிந்ததுதான்.. ஆனாலும் இவருக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு லெவலுக்கு உயரலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.. பெஸ்ட் ஆஃப் லக் ஸார்..

எம்.லேகாவின் இசையில் பாடல்கள் வந்தன.. போயின.. வேறொன்றும் சொல்வதற்கில்லை.  கே.எஸ்.தமிழ் சீனு எழுதி, இயக்கியிருக்கிறார்.  காதல் கதைகளை நிறைய பேர் இங்கே கொத்து புரோட்டா போட்டுவிட்டதால் அதன் திரைக்கதை இப்படித்தான் இருக்கும் என்பது தியேட்டர்களில் டீ விற்பனுக்குக்கூட தெரியும். அந்த அளவுக்கு சாதாரணமாக திரைக்கதையை எழுதி, மெதுவாக நகரும்விதமாக இயக்கி.. ரொம்பச் சாதாரணமான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

திரைக்கதைக்கு வேலை கொடுப்பது போன்ற கதை என்றாலும், அதனை எழுத்து வடிவில் கொடுக்காதது இயக்குநரின் தவறே.. அடுத்தப் படத்தில் சரி செய்து கொள்வார் என்று நம்புகிறோம்..!

நிமிர்ந்து நில் சினிமா விமர்சனம்

13-03-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்றைய சமூகம் இருக்கின்ற நிலைமையைப் பார்த்து ஒரு சாமான்யனுக்குள் எழும் கோபத்தையும், அதனால் அவனுக்கு ஏற்படும் நிலைமையையும் இன்றைய அரசியல் சூழலுடன் பொருந்தி வரக்கூடிய அளவுக்கு ஒரு கதையாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.
ராமகிருஷ்ண மடம் மாதிரியான பள்ளிகளில் படித்து பள்ளியிறுதியில் மாநிலத்திலேயே முதலாவது மாணவனாக வந்த ஜெயம்ரவி கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு சந்தோஷமாகவே நாட்டிற்குள் வருகிறார். இதுவரையில் அவர் இருந்து வந்த உலகம் வேறு.. இப்போது இருக்கின்ற உலகம் வேறு என்பதை இயக்குநர் முதல் சில காட்சிகளியே புரிய வைத்துவிடுகிறார்..
சிக்னலில் காரில் அமர்ந்தபடியே திமிருடன் ஜெயம்ரவியின் டூவீலரை தள்ளிவிட்டு கதையை துவக்கி வைப்பதும் சாட்சாத் இயக்குநர் அண்ணன் சமுத்திரக்கனிதான்..! இங்கே துவங்கும் கதையின் போக்கு முதல் பாதியில் ஜெட் வேகத்திலும் பிற்பாதியில் சற்று குறைந்த வேகத்திலுமாகச் சென்று தனது இலக்கை அடைந்துள்ளது. ஆனால் பிற்பாதியில் பாதையும் மாறிவிட்டதால் கொஞ்சம் ரசிக்கவும் முடியவில்லை..
ஸ்பாட் பைனுக்கு கில்மா கொடுத்துவிட்டு சைடாக கட்டிங்கை கட்டத் தெரியாமல் ஹீரோயினிடம் பல்பு வாங்கிக் கொண்டு சட்டை கிழிந்த நிலையில் பரிதாபமாக நிற்கும் ஹீரோவை போல லட்சணக்கணக்கான ஹீரோக்கள் இன்னமும் இந்த நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் பயந்து போய் கொடுக்கின்ற அந்தச் சின்னத் தொகையில் ஆரம்பித்த்துதான் லஞ்சப் பேய். அது இப்போது 2ஜி லெவலில் போய் நிற்கிறது..
முதலில் நாம் மாற வேண்டும்.. மாற்றத்தை நம்மில் இருந்துதான் துவங்க வேண்டும் என்கிறார் இயக்குநர். நாம் யாருக்கும் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்பதை மட்டும் பாலோ செய்தால் போதும் என்கிறார் இயக்குநர். ஆனால் இந்த இயந்திரமயமான வாழ்க்கையில் அது சாத்தியமில்லை என்பதுதான் நிசமானது..!
போலீஸ் ஸ்டேஷனில் அனைத்து செக்சன் பெயர்களையும் சொல்லி மிரட்டுவது.. அதுகூட தெரியாமல் அப்பாவியாய் ஜெயம் ரவி இருப்பது.. சூரி வந்து காப்பாற்றுவது.. கோர்ட்டில் அதையும்விட அப்பாவியாய் அனைத்தையும் வெளிப்படையாச் சொல்லி மாட்டிக் கொள்வது.. என்று இந்த பகுதி முழுவதிலும் தனது அப்பாவித்தனத்தை அப்பட்டமாய் காட்டியிருக்கிறார் ஜெயம்ரவி. நல்ல நடிப்பு.
ஆனால் இதற்கடுத்து சிறைக்குச் சென்று திரும்பி வந்தவுடன் திடீரென்று அனைத்து அதிகாரிகள் மீதும் சம்பந்தப்பட்ட துறையின் மேலதிகாரிகளுக்கு புகார் அனுப்புகிறார். இந்தத் திடீர் மனமாற்றம் எப்படி அவருக்குள் ஏற்பட்டது என்பதற்கான காரணம்தான் தெரியவில்லை.. இப்போதும் அவர் அப்பாவியாகத்தான் இருக்கிறார்.
அவருடைய அம்மா சொன்ன பொண்ணை வீட்டுக்கு வரவழைத்து தான் போலீஸிடம் சிக்கிய கதையை சுவாரசியமாகச் சொல்கிறார்.. அமலாபாலின் காதலை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்.. இத்தனையும் செய்பவர்.. திடீரென்று அவர்களுக்கெதிராக புகார்களைத் தட்டிவிடுகிறார் என்பதையும் அது ஏன் என்பதையும் சொல்லாமல் போனாலும்.. கதையோட்டத்தில் அது சுத்தமாக மறக்கடிக்கப்பட்டுவிட்டது..
இந்தப் புகாரின் காரணமாய் மீண்டும் ஒரு முறை போலீஸிடம் பிடிபட்டு ரத்தச் சகதியாய் மீட்கப்படுபவர் இப்போதும் தன்னை மருத்துவமனையில் வந்து பார்க்கும் அதே இன்ஸ்பெக்டரிடம் நீங்கதான் என்னை கூட்டிட்டு போனது என்று திரும்பவும் அப்பாவியாய் கேட்கிறார்.. இந்த அப்பாவித்தனம் வீட்டுக்கு வந்தவுடன் மனசு மாறி சட்டென்று புயலாய் மாறியவுடன் கதையின் போக்கும், திரைக்கதையின் வேகமும் சூடுபிடிக்கிறது.. ஆனால் இந்த லாஜிக்தான் உதைக்கிறது..!
இந்தக் கதைக்கு இரட்டை வேடம்கூட தேவையில்லாதது.. பிற்பாதியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைவரும் அந்த வழக்கை எப்படி எதிர்கொள்கிறார்கள்..? அதை உடைப்பதற்கு என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை வன்முறை கலந்துகூட கொடுத்திருக்கலாம்.. ஆனால் ஏன் அந்த இன்னொரு ஜெயம்ரவியை ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்தார்கள் என்று தெரியவில்லை. அந்த ஜெயம்ரவியின் கேரக்டர் ஸ்கெட்ச்.. பின்பு அவர் கோர்ட்டிற்கு வந்து சாட்சி சொல்லி.. பின்பு பல்டி அடித்து, நீதியையும், தர்மத்தையும் பற்றி இரு நபர் டிவிஷன் பெஞ்ச்சுக்கு கிளாஸ் எடுக்க படம் இப்போது மிகச் சாதாரணமான கமர்ஷியல் படமாக ஆகிவிட்டது.. அந்த கிளைமாக்ஸ் டிவிஸ்ட்டை இத்தனை நல்ல படத்தில் ஏற்க முடியாமல் போய்விட்டது..
படத்திற்கு மிகப் பெரிய பலம் வசனங்கள்தான்.. அத்தனையும் கூர்மை.. இப்போதைய இளைஞர்களை உசுப்பிவிடும்படியான குத்தீட்டிகள்.. பல காட்சிகளில் வசனங்களால்தான் படமே நகர்கிறது.. ஹீரோயின் அமலாபாலுக்கு இருக்கின்ற பொது அறிவுகூட ஹீரோவுக்கு இல்லை என்று சொல்வது கொஞ்சமும் பொருந்துவதாக இல்லை.. ஹாஸ்டலிலேயே தங்கிப் படித்தவர்.. வெளியிலேயே வந்த்தில்லை. ஆகவே அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை என்று சொன்னாலும் புத்தகத்தில்கூடவா இதைப் படித்திருக்க மாட்டார்..? இது போன்ற ரொம்ப அப்பாவித்தனமே ஜெயம்ரவியின் கேரக்டரை நம்புவதற்கு மிகவும் தடையாகிவிட்டது.
கோர்ட்டில் பைன் கட்டி வண்டியை எடுத்துக் கொள்ளச் சொல்வது.. வண்டியின் என்ஜின் காணாமல் போயிருப்பது. போலீஸ்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினை.. அதிகாரப் பிரச்சினை.. லஞ்சம் எது, எதற்கெல்லாம் எப்படியெல்லாம் பயனாகிறது என்பதைக் காட்டுவது.. கோர்ட்டில் நீதிபதி சாமர்த்தியமாக லஞ்சம் வாங்குவது.. ஒரு ஆள் சைகை காட்டுவது.. இந்த 100 ரூபாயில் ஆரம்பித்து 1 லட்சத்தையும் தாண்டும் இந்தக் கூட்டணியின் ஆள், அம்பு, சேனைகளின் அதிரடியை வரிசையாகக் காட்டுவதில் இருந்த வேகம் பிற்பாதியில் புஸ்வாணமாகவும், கேலி, கிண்டலாகவும், காமெடியாகவும் போய்விட்டதால் முற்பாதியில் நம்மையறியாமலேயே உள்ளே இழுக்கப்பட்ட நாம்.. இடைவேளைக்கு பின்பு நம்மை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய உணர்வுக்கு தள்ளப்பட்டோம்.
இன்னுமொரு எல்லை மீறல்.. சரத்குமார் கேரக்டர்.. சிபிஐயில் பணியாற்றும் அவரது பணித் தகுதி என்ன என்பதுகூட பதிவு செய்யப்படவில்லை.. ஆனால் அவரே  சேனலின் உரிமையாளரை அழைத்து மிரட்டுகிறார். அவரே டெல்லியில் இருந்து நொடிப் பொழுதில் பறந்து பெங்களூருக்கு வந்து சண்டையிடுகிறார். சேனலின் நேரலை ஒளிபரப்பில் தான் சிக்கியிருக்கிறேன் என்பது தெரிந்தும் மீடியாவிடம் பகிரங்கமாகச் சண்டையிடும் அந்தக் காட்சிகள் எல்லாம் ரொம்பவே ஓவர்.. ஏற்றுக் கொள்ள முடியாத காட்சிகள்..
2-ஜி வழக்குகளில் ஜெயா டிவியையும், மற்ற இதர தனியார் தொலைக்காட்சிகளையும் யாரும், எதுவும் செய்துவிட முடியவில்லை.. அதேபோல் சொத்துக் குவிப்பு வழக்கு போன்ற கேஸ்களில் தி.மு.க. தரப்பு சேனல்களையும் அவர்களால் தடுக்க முடியவில்லை.. இதுவெல்லாம் நம்ப முடியாத விஷயம். இதனை சி.பி.ஐ.யை வைத்து உடனுக்குடன் முடிப்பதாக சொல்லியிருப்பது குழந்தைத்தனமான திரைக்கதையாக எனக்குப் படுகிறது.. திரைக்கதையின் மிகப் பெரிய ஓட்டை சரத்குமார் சம்பந்தப்பட்டதுதான்..!
லஞ்சப் பேயை கண்டறிய துவங்கி பிறப்புச் சான்றிதழில் துவங்கி இல்லாத ஒருவனுக்கு டெத் சர்பிடிகேட், பிடிவராண்டுவரையிலும் கொண்டு போய் காட்டியிருப்பது தமிழ்ச் சினிமாவுக்கு புதியதுதான்.. ஆனால் நாட்டுக்கு புதிதல்ல.. இந்த லஞ்ச பேரத்தில் சிக்கிக் கொண்டு தவித்த மோகன் என்றொரு கேரக்டர்தான் படத்தின் பிற்பாதியில் கொஞ்சமேனும் ஒரு உருக்கத்தை மனதில் ஏற்படுத்தியது. சஸ்பென்டான அனைவருமே கேலியும், கிண்டலுமாக இருக்க இவர் ஒருவரே அழுது கொண்டிருக்கிறார். லஞ்சம் வாங்கியதற்கான காரணத்தை அவர் எழுதி வைத்துவிட்டு தன் முடிவைத் தானே தேடிக் கொள்ளும் அந்தக் காட்சி உருக்கம்.. பிள்ளைகளை பள்ளியில் படிக்க வைக்க சம்பளம் போதவில்லை. லஞ்சம் தேவைப்பட்டது என்று அவர் சொல்வதே லஞ்சத்தை இன்னொரு பக்கம் நியாயப்படுத்தும் செயல்தான்.. இப்போது இதற்கு யார் காரணம்..? அரசுதானே..? அதையும் இந்தக் காட்சி சற்றே யோசிக்க வைத்தது. இவர் கேண்டிட் கேமிராவில் பிடிபடும் காட்சியின்போதே இவரது கேரக்டர் ஸ்கெட்ச் பிடிபட்டுவிட்டது. அந்த ஒரு நொடி காட்சியிலேயே மனதைத் தொட்டுவிட்டார் மோகன். கே.பி.மோகன் தன் கலையுலக வாழ்க்கையில் முதல்முறையாக மிகப் பெரிய காட்சியொன்றில் தனது பெயரை பொறித்து வைத்திருக்கிறார்.. வாழ்த்துகள் அண்ணனுக்கு..
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன், “இந்தப் படத்தின் கதையில் மாற்றம் செய்யும்படி ஜெயம்ரவியும், அவரது அப்பாவும் வற்புறுத்துவதாக சமுத்திரக்கனி என்னிடம் வந்து சொல்லி வருத்தப்பட்டார். நான்தான் அப்போது அவருக்கு அட்வைஸ் செய்து அதையும் செய்து கொள்ளுங்கள்.. என்று சமாதானம் செய்து இந்தப் படம் துவங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கிறேன்..” என்று பேசினார்.
இப்போது கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஜெயம்ரவி அண்ட் கோ செய்த திருத்தம் இடைவேளைக்கு பின்பு வரும் இன்னொரு ஜெயம் ரவி காட்சிகளும், ஹீரோயிஸத்தை நிலை நிறுத்தும் சண்டை காட்சிகளுமாகத்தான் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது.. ஒரு நல்ல படத்தின் கதையை இப்படி சிதைத்தது தவறு என்று சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் உணர்வார்கள்..
142 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு.. உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சின் நேரடி விசாரணையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது எத்தனை, எத்தனை காட்சிகளை வைத்திருக்கலாம்.. சமுத்திரக்கனி நிச்சயம் யோசித்திருப்பார் என்றே நினைக்கிறேன். ஆனால் அத்தனையும் மாற்றப்பட்டிருக்கும் என்றே நம்புகிறேன்..
இப்படத்தில் எனக்குப் பிடிக்காத.. கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.. ஓய்வு பெற்ற டிஜிபி வால்டர் தேவாரத்தை நினைவுபடுத்திய ஒரு கேரக்டர்தான்.. ரோஜா கம்பைன்ஸ் வி.ஞானவேலு இந்தக் கேரக்டரில் நடித்திருக்கிறார். முக்கியமான நேரத்தில் அமலாபாலை காப்பாற்றும் இந்த கேரக்டரை ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபியாக காட்டி மிகவும் நல்லவராக சித்தரித்திருக்கிறார். கதைக்குத் தேவைதான் என்றாலும் வால்டர் என்ற பெயர்தான் இடிக்கிறது..
வால்டர் தேவாரம் என்ற அந்த ஐ.பி.எஸ். அதிகாரி எந்த அளவுக்கு ஒரு கிரிமினல் குற்றவாளி என்பதை வீரப்பன் வேட்டையினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மலைவாழ் மக்கள் இன்றைக்கும் கூறுவார்கள். ஹிட்லரின் நாஜி வேட்டையை போல மக்களை சித்ரவதை செய்த குழுவுக்குத் தலைமை தாங்கிய ஒருவரை இப்படி நல்லவராக அடையாளம் காட்டித் தொலைத்திருக்க வேண்டாம்..!
ஜெயம் ரவியின் அப்பாவி நடிப்பும், இரண்டாம் பாதி ஜெயம்ரவியின் அலட்டல் நடிப்பும் ஓகே.. அப்பாவியைவிட வல்லவனே அசத்துகிறார்.. அந்த குதூகுலம்.. சந்தோஷம்.. துள்ளல்.. இதெல்லாம் நிறைய ஹீரோக்களுக்கு வராது.. அப்பாவியில் இருந்து வல்லவனுக்கு மாற நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்தது.. கேரக்டருக்காக இப்படி தங்களை உருமாற்றிக் கொண்டு உழைப்பதுதான் ஹீரோக்களுக்கு அழகு.. வெல்டன் ரவி ஸார்..
அமலாபால் முன்னைவிட இப்போது இன்னமும் அழகாக இருக்கிறார். இயக்கத் திறமையினால் நடிப்பும் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது.. இவருடைய அம்மாவுடன் சண்டையிடும் அந்த ஒரு காட்சியில் நடிப்பையும் நன்றாகவே கொட்டியிருக்கிறார். நடிகைக்கான ஸ்கோப் உள்ள படம் ஒன்று கிடைத்தால் போதும்.. இவர் போன்றவர்கள் மின்னுவார்கள்..! முற்பாதியில் சூரிதான் பாதி டயலாக்குளை வாரி வழங்கி நம்மை காப்பாற்றுகிறார்.. கடைசிவரையிலும் இருந்து குணச்சித்திர நடிகராக மாறியிருக்கிறார். டைட்டிலில் பட்டப் பெயர்கூட கிடைத்திருக்கிறது.. வாழ்த்துகள்..!
படத்தின் மிகப் பெரிய தடையே பாடல்கள்தான். இது மாதிரியான சென்சிட்டிவ் பிரச்சினைகளைச் சொல்கின்ற படங்களுக்கு பாடல்களே தேவையில்லை. அது இல்லாமலேயே ஏன்.. காதலும்தான் தேவையில்லை. சொல்லிவிடலாம்.. ஆனால் பெரிய ஹீரோக்கள்தான் தியாகம் செய்ய பயப்படுகிறார்கள்.. இதனாலேயே மிகச் சிறந்த படங்களைகூட நம்மால் பின்னாளில் அடையாளம் காட்ட முடியாமல் போய்விடும். இதுவும் அதற்கு விதிவிலக்கல்ல..!
இத்தனை போராட்டத்திற்கு பின்பும் கோர்ட் வாசலில் சண்டை காட்சிகளை வைத்து.. அதையும் சில நிமிடங்கள் கூட்டம் வேடிக்கை பார்த்து.. பின்பு திடீரென்று பொங்கி வந்து அடித்துத் துவைத்து.. ஒருவரை சாகடித்து.. இத்தனையும் செய்த பின்பு ஹீரோயிஸத்தை நிலை நிறுத்தி லஞ்சம் வாங்குவது, கொடுப்பதும் குற்றம் என்று சொல்லியிருப்பதே மிகப் பெரிய குற்றமாகத் தெரிகிறது..!
அதன் பின்பு வரும் டிவி செய்திகளில் வரும் சில தமாஷான செய்திகளைப் படிக்கின்றபோது சிரிப்புதான் வந்தது.. தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதானவர்கள் விசாரணையே இல்லாமல் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள்.. லஞ்சம் கொடுத்தவர்கள் கைது.. அரசு அதிகாரிகள் முறைகேடாகச் சொத்து வாங்கினால் நடவடிக்கை.. என்ற ரீதியில் அதிகாரிகளை குறி வைத்தே அனைத்தும் சொல்லி முடிக்கப்பட்டு ஒரு நல்ல ஜனநாயகமான தமிழகத்தை இயக்குநர் சமுத்திரக்கனி எதிர்பார்க்கிறார் என்பதை உணர்த்தியிருக்கிறார். அவருடைய ஆசை நிறைவேற வாழ்த்துகள்..
ஆனால் அதே சமயம்.. அதிகாரிகள்தான் அரசியல்வாதிகளை ஆட்டிப் படைக்கிறார்கள். அதிகாரிகள் சரியாக இருந்தாலே போதும்.. அரசியல்வாதிகள் அடங்கிவிடுவார்கள் என்றெல்லாம் இந்திய அரசியலை புரிந்து கொள்ளாதவர் போல சில இடங்களில் வசனம் எழுதியிருப்பதுதான் சங்கடமாக இருக்கிறது..! இந்த நாட்டின் இந்த அவலசட்சணமான நிலைமைக்கு முதல் காரணமே அரசியல்வியாதிகள்தான். உண்மையாக இந்தப் படம் தனது சாட்டையடி வசனங்களை அரசியல்வியாதிகளை நோக்கித்தான் பாய்ந்திருக்க வேண்டும்.
சொத்துக் குவிப்பு வழக்கும்.. 2-ஜி வழக்கும்தான் இந்த லஞ்சப் பேய் வழக்குகளில் உச்சக்கட்ட வழக்குகள்.. இவைகளைப் பற்றி ஜாடைமாடையாகக்கூட குறிப்பிடாமல் 100 ரூபாய், 5000 ரூபாய் லஞ்சம் வாங்குபவர்களை கொலை குற்றவாளிகளை போல குறிப்பிடுவது எந்தவித்த்திலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.. இது நிச்சயமாக ஓரவஞ்சனை..! அரசியல்வியாதிகளுக்கு சினிமாக்காரர்களால் கொடுக்கப்படும் இது போன்ற சில சலுகைகள்கூட லஞ்சத்தில் ஒரு வகைதான் என்பது எனது தாழ்மையான கருத்து..!
படம் பார்க்கும் ஒரு சாதாரண மனிதனின் மனதில் நாம் கொடுக்கும் லஞ்சம் நியாயமானதுதானா என்ற சின்ன கேள்வியை எழுப்பியிருக்கும்வகையில் இந்தப் படம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம்தான்.. வேறு வழியில்லை.. ஒத்துக் கொள்வோம்..!
எடுத்தவரையிலும் நன்றி சமுத்திரக்கனிக்கு..!

பனிவிழும் மலர்வனம் - சினிமா வி்மர்சனம்

03-03-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மிக மிக வித்தியாசமான கதை.. இப்படியொரு கதையில் படத்தைத் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர்களுக்குத்தான் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும்..!


இணையத்தில் பழகிய ஒரு மாதத்திலேயே காதல் கொள்கிறார்கள் ஹீரோவும், ஹீரோயினும். காதல் பற்றி அறிந்த இருவரின் வீட்டிலும் இதற்கு கடும் எதிர்ப்புகள்.. அடி, உதை என்று நிகழ்வுகள் பரவ.. கோபமடையும் காதலர்கள் இருவரும் வீட்டில் இருந்து தப்பிக்கிறார்கள்.

எங்கேயாவது சென்று கல்யாணம் செய்து கொண்டு வாழ விருப்ப்ப்பட்டு செல்பவர்கள் கொடைக்கானல் சென்றடைகிறார்கள். அங்கே இவர்கள் இயற்கைக் காட்சிகளை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் நிலையில் பேருந்தை தவற விடுகிறார்கள். அப்போது அங்கேயே இருக்கும் 3 ரவுடிகள் அவர்களை மிரட்ட.. அந்த ஊரில் இருக்கும் வர்ஷாவின் உதவியால் தப்பிக்கிறார்கள்.

வேறு வழியில்லாமல் வர்ஷாவின் வீட்டில் தங்கும் காதலர்களுக்கு அங்கேயிருந்த சூழல் மிகவும் பிடித்துப் போய்விடுகிறது.. ஆனால் ஒரு எதிரி இருக்கிறார் என்பதும் தெரியாமல் போகிறது.. அந்த எதிரி திருவாளர் புலி.. ஊருக்குள் ஒரு புலி இருக்கிறது என்பதைத் தெரிந்தும் யாரும் அந்தப் பக்கம் போகாமல் இத்தனை நாட்கள் இருந்ததாகச் சொல்கிறார் வர்ஷா. இவர்கள் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி வரும் வேளையில் புலி இவர்களை எதிர்கொள்கிறது.. இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் கதை..!

இடைவேளைவரையிலும் வழக்கமான காதலர்களின் கதையாகவே போய்க் கொண்டிருக்கும் சூழலில் திடீரென்று என்ட்ரியாகும் புலியால் திரைக்கதை பெரும் சுவாரசியமாகிறது.. அந்த ஊரில் இருந்தாக வேண்டிய சூழல்.. வர்ஷாவின் பையனுக்கு மெடிக்கல் செலவு.. ஹீரோ செய்யும் உதவிகள்.. எப்படியும் காப்பாத்தியாகணும் என்று அவர்கள் துடிக்கின்ற துடிப்பு.. புலிக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை உணர்த்தும்வகையில் இருக்கும் காட்சியமைப்புகள்.. அதன் நியாயத்தை அதுவாக இருந்து பார்த்தால்தான் புரியும் என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். கிளைமாக்ஸ் யாருமே ஊகிக்க முடியாதது..

ஹீரோ அபிலாஷ்.. அந்த பருவ வயது இளைஞரை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.. சானியாதாராவும் அப்படியே.. இயக்குநரின் இயக்கத் திறமையினால் இருவரின் நடிப்பிலும் குறை காண முடியவில்லை.. அனுராதா கிருஷ்ணமூர்த்தியின் கொஞ்ச நேர நடிப்புகூட இப்படிப்பட்ட அம்மாக்களின் பதற்றத்தை கண் முன்னே கொண்டு வந்துவிட்டது.. அவருடைய கணவராக நடித்திருப்பவரின் கோபம்.. அந்த ஆவேசப் பேச்சு.. எல்லாமே காதலிக்கப்படுபவர்களின் வீடுகளில் நடப்பதையே காட்டியது..

சந்தேகமில்லாமல் வர்ஷாவை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மிக இயல்பாக நடித்திருக்கிறார். கத்தியைக் காட்டி ரவுடிகளை மிரட்டுவதில் துவங்கி.. இவர்களை வீட்டில் வைத்து கவனிக்கவும் செய்யும் அந்த மென்மையையும் தனது நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். தனது பிள்ளைக்காக அவர் படும் பதட்டம்.. அதே பிள்ளை திருடி கொண்டு வந்திருப்தை அறிந்து அதே கோபத்துடன் கண்டிப்பது.. இந்த வர்ஷாவுக்கு இன்னும் நிறைய வாய்ப்பு கொடுத்தால் அவருக்கும் நல்லது.. கோடம்பாக்கத்துக்கும் நல்லதுதான்..!

கிளைமாக்ஸ் காட்சியில் அவர் எடுக்கின்ற அந்த முடிவு ஏற்படுத்தும் பதட்டம் தியேட்டரை கொஞ்சம் ஆட வைக்கும் என்றே நம்புகிறேன்.. தாய்ப் பாசத்தை வெளிக்காட்ட இதைவிட சிறந்த சந்தர்ப்பம் இயக்குநருக்குக் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். நச் என்று முடித்திருக்கிறார்..

அதற்குப் பின்பு காதலர்கள் எடுக்கும் அந்த டிவிஸ்ட் பலே.. இதையும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. எதையும் அனுபவப்பூர்வமாக அறிந்தவர்கள் மட்டுமே உண்மையை உணர்வார்கள். இதில் அந்தக் காதலர்கள் அதனை உணர்ந்துவிட்டார்கள் என்பதை காட்டியிருப்பது நன்று..!

படத்தின் ஒளிப்பதிவாளருக்கு தனியாக ஒரு ஷொட்டு.. கொடைக்கானலின் அந்த இயற்கைக் காட்சிகளை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ஹீரோ, ஹீரோயினைவிடவும் அழகு கேமிரா காட்டிய இயற்கைதான்..! அவ என்னவோ பாடல் என்னவோ செய்தது.. பாடலும், காட்சிகளும் ரசிக்க வைத்தன.. அம்மா அம்மா பாடலும், காடு பாடலும் அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை..!

அரசு இயந்திரங்கள் என்ன லட்சணத்தில் இருக்கிறார்கள் என்பதையும் கிடைத்த கேப்பில் மிகக் கச்சிதமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். துப்பாக்கியே இல்லாமல் புலி வேட்டைக்கு வந்திருக்கும் வனத்துறை.. காலம்காலமாக காட்டுக்குள் இருந்தாலும் இது தொடர்பான முன்னெச்சரிக்கையே இல்லாமல் இருந்து வரும் அரசு அதிகாரிகளை பளீச்சென அடையாளப்படுத்தியிருக்கிறார்.

நிஜ புலியைத்தான் சில காட்சிகளில் நடிக்க வைத்திருக்கிறார்கள். புளூமேட்டில் எடுத்து பின்பு படத்தில் மேட்ச்சிங் செய்திருக்கிறார்கள். இப்படித்தான் செய்ய முடியும்.. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி சினிமாக்களுக்கு கடிவாளம் போட்டுவிட்டதால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அதையும் மிக அழகாக கொஞ்சம் நம்பும்படியுமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் டேவிட். இதற்காக அவருக்கு எனது பாராட்டுக்கள்..

பார்த்தவுடன் காதலா..? பேசியவுடன் காதலா..? பெற்றவர்களின் பேச்சு கேட்கக் கூடாதா..? என்றெல்லாம் காதலின் எதிர்ப்பாளர்கள் பலரும் காலம் காலமாக கத்திக் கூப்பாடு போட்ட கதையை இந்த படத்தின் கிளைமாக்ஸில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். புரிந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள்.. புத்திசாலிகள்.. புண்ணியம் பெறுவார்கள்..!

அவசியம் பார்க்க வேண்டிய படம் பனிவிழும் மலர்வனம்..!

அமரா - சினிமா விமர்சனம்

03-03-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சின்ன பட்ஜெட் படம்.. புதுமுக நடிகர், நடிகையர்.. சொதப்பலான திரைக்கதை.. சுமாரான இயக்கம்.. அதைவிட சுமாரான நடிப்பு.. இப்படியிருந்தால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இந்தப் படமும்..!

3 வருடங்களுக்கு முன்பாகவே தயாரான படம். விற்க முடியாமல் தவியாய் தவித்துப் போய் கடைசியாக இப்போதுதான் சந்தைக்கு வந்திருக்கிறது. இதனால் இறந்து போய் 2 வருடங்கள் கழித்தும் திரையில் தெரிகிறார் நடிகர் அலெக்ஸ்..


அமரன் என்ற ஹீரோ ஊரில் வெட்டி ஆபீஸர். குடித்துவிட்டு கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார். தாய் திட்டியும் திருந்தியபாடில்லை. ஆனால் அனுபவம் திருந்த வைக்கிறது. அவருடைய நெருங்கிய நண்பன், பெண் பார்க்கச் செல்லும்போது அமரனை தவிர்க்கிறான். இது சட்டென்று அமரனை மனதை துன்புறுத்த உடனேயே ஏதாவது வேலைக்கு போயாக வேண்டும் என்று நினைக்கிறார்.

மதுரைக்கு வண்டியேறுகிறார். மதுரை சிம்மக்கல் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்திருக்கும் அத்தையிடம் வந்து அடைக்கலமாகிறார். காய்கறி தொழில் பிடித்துப் போகிறது.. கடையில் வியாபாரத்தில் இருக்கும்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று தெரியாமல் சம்பத்தை அடித்துவிடுகிறார். இதனால் கோபப்பட்ட சம்பத் அமரனை தூக்குவதற்கு வழிவகை செய்து கொண்டிருக்க.. அத்தை அமரனை பத்திரமாக சென்னைக்கு பேக் செய்கிறாள்..

சென்னைக்கு ரயிலில் செல்லும்போது ஹீரோயினை சந்திக்கிறார் ஹீரோ.. உடனேயே லவ்வு.. உடனேயே டூயட்டு.. ஏதோவொரு ஸ்டேஷனில் வண்டி நின்றிருக்கும்போது டிக்கெட் வாங்க இறங்கிய ஹீரோவை அப்படியே கட்டிக் கொள்கிறார் ஹீரோயின். அப்போது மயக்கத்தில் இருக்கிறார் ஹீரோயின். அவரை விட முடியாமல் தவித்த ஹீரோ, அவரையும் அழைத்துக் கொண்டு ஆற்றங்கரையில் வந்து டேரா போடுகிறார். மறுநாள் காலையில் இருவரும் ஒருவரையொருவர் யார் நீ என்று கேட்டு கதையை அடுத்த ரீலுக்கு நகர்த்துகிறார்கள்.

ஹீரோயின் தனது காதல் கதையைச் சொல்கிறாள். தமிழகத்திலேயே மிகப் பெரிய சாதிக்கட்சித் தலைவரான தனது அப்பா ஆஷீஷ் வித்யார்த்தி தனது காதலை எதிர்ப்பதாகவும், அதனால் பயந்து போய் வீட்டிலிருந்து தப்பித்ததாகவும் சொல்கிறார். இவர்கள் இருவரையும் சேர்ந்து பார்த்த ஒருத்தர் செல்போனில் புகைப்படம் எடுக்க.. அது மறுநாள் காலை அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகிறது..

ஆஷீஷ் வித்யார்த்தி ஹீரோவை ஹீரோயினின் ஒரிஜினல் காதலன் என்று நினைத்து அவரை வேட்டையாட நினைக்கிறார். ஹீரோயினை காப்பாற்ற நினைத்து ஹீரோ ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார். கடைசியில் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!

சுவாரசியமான கதை.. மிகப் பெரிய ஹீரோவை வைத்து.. திரைக்கதையை அழகாக படைத்து.. இயக்கத்தை சிறப்பாகச் செய்திருந்தால் இப்படம் நிச்சயம் ஹிட்டடித்திருக்கும்.. ஏதோ நமக்குக் கிடைத்த வாய்ப்பை செய்துவிடலாமே என்று நினைத்து இயக்குநர் செய்துவிட்டார். முடிந்தவரையிலும் செய்திருக்கும் இயக்குநர் ஜீவனுக்கு எனது பாராட்டுகள்..

அநேகமா ஹீரோதான் தயாரிப்பாளர் என்று நினைக்கிறேன். இல்லாவிடில் இவரை தேர்வு செய்திருக்கவே மாட்டார்கள். சுமாரான முகம்.. அதைவிட சுமாரான நடிப்பு.. ஹீரோயினும் அப்படியே..! ஆஷிஷ் வித்யார்த்தி மட்டுமே கொஞ்சூண்டு நடித்திருக்கிறார்..! இயக்கம் என்று பார்த்தால், காதலனின் அம்மா தனது மகனை ஹீரோயினின் அப்பா கொலை செய்துவிட்டதாக கதறுகின்ற அந்த ஒரு காட்சியில் மட்டுமே நிற்கிறது..! சம்பத் ஏதோ பெரிதாக சாதிக்கப் போவதாக நினைத்தோம். அப்படித்தான் பில்டப் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் கடைசியில் புஸ்வாணம்தான்.. கிளைமாக்ஸில் அம்பாசிடர் கார் பறந்து வர. அதிலிருந்து சம்பத் துப்பாக்கியால் சுடுகின்ற அந்தக் காட்சியை பார்த்தபோது ஏதோ 1980-களுக்கே போயிட்ட மாதிரி பீலிங் வந்தது..

டி.இமானின் இன்னிசையில் பாடல்களில் 2 ஓகே ரகம்.. அதிலும் குத்துப்பாட்டை குத்தோ குத்தோன்னு குத்தியிருக்காரு.. நிஷா ஆடும் நடனமும் அழகு.. பாடலும் அழகு..

இது மட்டும் இருந்தால் போதுமா..? படத்தை இறுதிவரையில் அமர்ந்து பார்க்க வைக்கத் தவறிவிட்டார் இயக்குநர்..!

அடுத்த முறையாவது ஜெயிக்கட்டும்..!

(போஸ்டரை பார்த்து ஏமாந்தால் கம்பெனி பொறுப்பல்ல..!)

தெகிடி - சினிமா விமர்சனம்

02-03-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘பீட்சா’ படத்திற்குப் பிறகு நிச்சயமாக செம திரில்லர் என்று இந்தப் படத்தைச் சொல்லலாம்..! குறும்பட இயக்குநர்களின் வெற்றி ஆரவாரத்தில் அடுத்த தலைப்பு இந்தப் படம்தான். இயக்கிய ரமேஷ் ஏற்கெனவே சில குறும்படங்களை எடுத்து அதற்காக விருதுகளைப் பெற்றிருப்பவர். இதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்த்துகள் ரமேஷ்..


‘தெகிடி’க்கு இலக்கணத் தமிழில் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. ஆளாளுக்கு ஒன்றை சொல்கிறார்கள். ‘பகடை’, ‘தாயம் உருட்டுதல்’, ‘பரமபதம்’ போன்ற விளையாட்டுக்களுக்கு தெகிடி என்றுதான் பெயராம். இங்கே தமிழுக்கு அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட இலக்கணப் புலிகள் யாருமில்லாததால் அவரவர்க்கு எது சரியென்று படுகிறதோ.. அதையே நினைத்துக் கொள்ளுங்கள்..! எனக்கு ‘பகடை’யே சரியென தோன்றுகிறது..!

எம்.ஏ. கிரிமினலாஜி முடித்துவிட்டு ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார் ஹீரோ வெற்றி. அவருக்கு சிலரை பாலோ செய்யும் வேலை தரப்படுகிறது. அடுத்தடுத்து கொடுத்த வேலைகளைக் கச்சிதமாகச் செய்கிறார். ஹீரோயினை யார் என்று தெரியாமலேயே பார்த்தவுடன் காதல் கொண்டுவிடுகிறார். அதே நேரம் ஹீரோயினையும் ஃபாலோ செய்ய வேண்டிய பணியும் கிடைக்கிறது. ஹீரோ இதற்கு முன்பு பாலோ செய்த 3 பேர் திடீரென்று மரணமடைய.. இதில் ஏதோ சூது இருப்பதாக வெற்றிக்கு சந்தேகம் வருகிறது. அந்தச் சந்தேகத்தைத் தேடி அவர் போக.. அதுவொரு பெரிய சதி வலை என்று தெரிகிறது.. இதற்கு மேல் சொன்னால் படம் பார்க்கும் உங்களுக்குச் சுவாரஸ்யம் கெட்டுவிடும். ‘பீட்சா’ போலவே கிளைமாக்ஸ் சஸ்பென்ஸ்தான் படமே என்பதால் இதற்கு மேல் வேண்டாம்.. தியேட்டருக்கு போய் பார்த்துக் கொள்ளுங்கள்..

படத்தின் துவக்கத்தில் சில நிமிடங்கள் படம் மெதுவாக நகரத் துவங்குவதும்.. ஹீரோவின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் இருக்கும் பய உணர்வு.. உண்மையைச் சொல்லாமல் தவிக்கும் உணர்வு போன்றவையெல்லாம் சில நேரங்களில் படத்தின் தொய்வுக்குக் காரணமாக இருந்தாலும் படத்தின் பிற்பாதியில் ஹைவேஸில் பறக்கும் ஆடி கார் போல திரைக்கதை வேகமெடுத்துச் செல்கிறது..

“கரெக்ட்டா அப்ஸர்வேஷன் பண்ற..?” என்று ஆரம்பித்து டிடெக்டிவ் ஏஜென்ஸியை ரெகமெண்ட் செய்யும் புரொபஸர். அலட்டலே இல்லாமல் அழகாக செய்யப் போகும் வேலையைப் பிரித்துக் கொடுக்கும் டிடெக்டிவ் ஆபீஸர்கள்.. ஹீரோயின் தனி மரம் என்பதை சில காட்சிகளில் அழுத்தமாகப் பதிவு செய்திருப்பது.. சந்தேகத்துடன் பார்த்துவிட்டு பின்பு ஹீரோ சொல்லும் பொய்யை நம்புவது.. சட்டென எழும் அந்தக் காதலைத்தான் நம்ப முடியலையே தவிர.. காதல் ஊடல்கள்.. காட்சிகள்.. ‘வாப்பா’.. ‘போப்பா’.. என்ற பேச்சுகள் ரசனை.

மரணங்களுக்குக் காரணம் எதுவாக இருக்கும் என்ற ஆவலை நாலா பக்கமும் இழுத்துவிட்டுச் செல்லும் திரைக்கதை.. அதற்கான முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் இடம் மிக சுவாரஸ்யம்.

இப்படியெல்லாம் ஒரு இன்ஸ்பெக்டர் சென்னைல கிடைப்பாரான்னு எதிர்பார்க்க வைச்சிருக்கு ஜெயபிரகாஷின் கேரக்டர். ஒரு கொலையை அணுகும்விதம்.. அதற்கான எவிடென்ஸை எங்கேயிருந்து பிடிப்பது.. அக்யூஸ்ட்டுகளை எப்படி ஹேண்டில் செய்வது.. கிடைத்த துப்புக்களை சர்ச் செய்வது.. பின்னாடியே விரட்டுவது என்று பல கேஸ் டயரிகளை இந்த ஒரே படத்தில் புரட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஹீரோவின் அப்ஸர்வேஷனே இடைவேளைக்கு பின்பு காட்சிகளை அடுத்தடுத்து நகர்த்திச் செல்வது அருமையான உத்தி.. ஹீரோ அசோக் செல்வனின் அலட்டலில்லாத நடிப்பு இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம்.. வேறு ஹீரோவை போட்டிருந்தால் அவருக்காக நான்கைந்து காட்சிகளை வைக்க வேண்டியிருந்திருக்கும். தப்பித்துவிட்டார் இயக்குநர்.. அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்படி அவர் நடிப்பு ஓகேதான் என்றாலும், சில காட்சிகளில் நமக்கே பொறுமையிழந்து போக வேண்டிய சூழல்.. தனியார் டிடெக்டிவ்வா இருப்பவன்.. இந்த அளவுக்கு கேர்லெஸ்ஸாக நிகழ்வை அணுகுவாரா என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது..!

அசோக்செல்வனிடம் குறை காண வாய்ப்பில்லை. இது போலவேதான் ஜனனி ஐயரிடமும். பொண்ணுக்கு வாய்ப்பே கிடைக்க மாட்டேங்குதாம்.. ரொம்ப வருத்தப்பட்டுச்சு.. ஆனா கிடைச்ச வாய்ப்புகளை விட்ராதம்மா என்றுதான் அட்வைஸ் செய்தேன்.. அந்தக் கண்களை வைத்து இன்னும் கொஞ்சம் காவியமே படைத்திருக்கலாம். படத்தின் தன்மை கெட்டுவிடும் என்பதால் பாடல் காட்சிகளிக்கூட கொஞ்சம் அடக்கமாகவே எடுத்திருக்கிறார் இயக்குநர்.

படத்திற்கு கொஞ்சம் ஸ்பீட் பிரேக்கராக இருந்தது பாடல் காட்சிகள்தான். அவைகளை மொத்தமாக வெட்டியிருந்தால்கூட படம் நன்றாகவே இருந்திருக்கும். பின்னணி இசைதான் பிற்பாதியில் ஆட் கொண்டிருக்கிறது.. இது படம் பார்க்கும்போது தெரியவில்லை. வெளியில் வந்த பின்புதான் தெரிகிறது.. இசையமைப்பாளரான அந்தச் சின்னத் தம்பிக்கு எனது வாழ்த்துகள்..!

இந்தப் படத்தின் கதை சொல்லும் ஒரு மிகப் பெரிய ஊழலை வெளிப்படையாக இங்கே பேச முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டாரே என்கிற சின்ன கோபம் தவிர, இந்த இயக்குநர் மீது வேறெதுவும் இல்லை.. இந்தப் படம் மட்டும் சஸ்பென்ஸ், திரில்லர் வகையில் இல்லாமல் சதாரணமான கமர்ஷியல் படங்களாக வந்திருந்தால் இந்த விமர்சனப் பதிவு 10 பக்கங்களை தாண்டியிருக்கும். அத்தனை விஷயங்கள் இருக்கின்றன இந்தக் கதையில்.. ஆனால் முடியலையே..?

காதல் இல்லாமலும் படம் எடுக்க முடியாததால் ஜனனி ஐயருடனான காதலை வளர்த்துவிட்டு பின்பு பாலோ செய்யப் போவதாக மாற்றியிருக்கிறார்கள். காதலே இல்லாமலும் இதனை எடுத்திருந்தாலும் நன்றாகத்தான் இருந்திருக்கும்..

தயாரிப்பாளர் சி.வி.குமார் அவருடைய கதை தேர்வில் மிக உறுதியாகவே இருக்கிறார்.. படத்துக்குப் படம் வித்தியாசமாக இருக்க வேண்டும். அதிக நேரமும் எடுக்கக் கூடாது.. குறைவான பட்ஜெட்டாகவும் இருக்க வேண்டும்.. விற்பனைக்கு எளிதாகவும் இருக்க வேண்டும் என்ற அவருடைய வியாபாரத் தந்திரம் இன்றைய புதிய தயாரிப்பாளர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..

அடுத்த பாகம் வந்தாலும் வரலாம் என்பது போல முடித்திருப்பதுதான் இது போன்ற திரில்லர் படங்களின் வழக்கம். இதிலும் அப்படியே..! ஆனால் பலரும் முன்பே கவனிக்கத் தவறியை ஒன்றை கிளைமாக்ஸில் லைட் போட்ட பின்பும் காட்டுகிறாரே இயக்குநர்.. எந்த அளவுக்கு நம்மை ஏமாற்றியிருக்கிறார் பாருங்கள்..! வெல்டன் இயக்குநர்..

அவசியம் பார்க்க வேண்டிய படம் தெகிடி.. மிஸ் பண்ணீராதீங்க..!