துப்பறிவாளன் - சினிமா விமர்சனம்

16-09-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை, விஷால் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ். ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கார்த்திக் வெங்கட்ராமன், படத் தொகுப்பு – அருண், இசை – அருண் கொரோல்லி, பாடல்கள் – மிஷ்கின், கலை இயக்கம் – அ.அமரன், சண்டை பயிற்சி – தினேஷ் காசி, உடைகள் – கவிதா, கதாபாத்திரத் தேர்வு – நித்யா ஸ்ரீராம், ஒப்பனை – பாலாஜி, ஸ்டில்ஸ் – ஹரி சங்கர், தயாரிப்பு நிர்வாகம் – ஜோயல் பென்னட், இணை தயாரிப்பு – எம்.எஸ்.முருகராஜ், தயாரிப்பு – விஷ்ணு விஷால் பேக்டரி, தயாரிப்பாளர் – விஷால், எழுத்து, இயக்கம் – மிஷ்கின்.
தமிழின் துப்பறியும் கதாபாத்திரங்களுக்கெல்லாம் முன்னோடியான ‘ஷெர்லாக் கோம்ஸின்’ தமிழ் பதிப்பாளன்தான் இந்தத் ‘துப்பறிவாளன்’. இவனது தமிழ்ப் பெயர் ‘கணியன் பூங்குன்றன்’.
புகழ் பெற்ற எழுத்தாளர் ‘ஆர்தர் கானன் டோயலின்’ இன்றைக்கும் மறக்க முடியாத அந்த துப்பறியும் கேரக்டரான ‘ஷெர்லாக் கோம்ஸின்’ கதைகளின் நீட்சிதான் இந்தப் படம் என்பதை படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே வெளிப்படையாக தெரிவித்ததோடு இல்லாமல் டைட்டிலிலும் அதற்கான கிரெடிட்டை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கியிருக்கும் இயக்குநர் மிஷ்கினின் நேர்மைக்கு முதற்கண் பாராட்டு..!

ஒரு பெரும் தொழிலதிபர் ஐம்பது லட்சம் ரூபாயை பீஸாகக் கொடுத்தும் காதல் கணவனுடன் ஓடிப் போன அவரது மகளைக் கண்டுபிடித்துத் தர மறுக்கிறார் துப்பறிவாளன் கணியன் பூங்குன்றன் என்னும் விஷால்.
ஆனால் சிறிது நேரம் கழித்து தனியே வரும் ஒரு சிறுவன், தனது நாய்க்குட்டியை யாரோ துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டதாகச் சொல்லி அந்தக் குற்றவாளியை கண்டுபிடித்துத் தரும்படி சொல்ல இதனை ஒரு வழக்காக ஏற்றுக் கொண்டு களத்தில் குதிக்கிறார் விஷால்.
இந்த வழக்குதான் பல்வேறு பரிமாணங்களைக் கடந்து பல பெரிய கொலை, கொள்ளைகளை அடையாளம் காட்டுகிறது. அது என்ன என்பதுதான் படத்தின் சுவையான திரைக்கதை.
ஒரு போலீஸ் உயரதிகாரி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவருடைய உடலில் ஏதோ ஒன்று செலுத்தப்பட்டு அதன் மூலமாக அவருக்கு மரணம் நிகழ்கிறது. தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் எதிர்பாராதவிதமாக மின்னல் அடித்து மரணிக்கிறார். இவர்களுடன் தொடர்புடைய இன்னொரு தொழிலதிபரும் திடீரென்று காணாமல் போயிருக்கிறார்.
காணாமல் போன தொழிலதிபரை தேடியலையும் விஷாலை சிலர் கொலை செய்ய முயற்சிக்க.. இப்போதுதான் தான் தேடியலையும் விஷயம் மிகப் பெரியது என்பதை உணரும் விஷால் இதன் பின்னர் முழு மூச்சாக இதில் குதிக்க.. நிறைய எதிர்பாராத திருப்பங்களையும், சுவாரஸ்யமான கதைகளையும் காட்டுகிறது இந்த ‘துப்பறிவாளன்’ திரைப்படம்.
தமிழ்ச் சினிமாவில் இருக்கின்ற இயக்குநர்களில் 100 பேர் எனில் அதில் தனித்துவம் வாய்ந்தவர் மிஷ்கின். மிஷ்கினின் இயக்கம் என்றாலே அது இப்படித்தான் என்பார்கள். அப்படியேதான் இந்தப் படத்திலும் இருக்கிறது.
கேமிரா கோணங்கள், காட்சியமைப்புகள், திரைக்கதையின் வேகம், கேரக்டர்களின் ஸ்கெட்ச், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராமல் கிடைக்கும் டிவிஸ்ட்டுகள், லைட்டிங்குகள், சிறப்பான இயக்கம்  – இப்படி எல்லாமே மிஷ்கின் சாம்ராஜ்யத்தில் வித்தியாசமாக இருக்கும். இந்த வித்தியாசங்கள்தான் இதுவரையிலும் வந்த அனைத்து துப்பறியும் படங்களில் இருந்து இந்தப் படத்தை மிக, மிக வித்தியாசமாக்கிக் காட்டியிருக்கிறது.
விஷாலின் நடிப்பு கேரியரில் இது மிக, மிக முக்கியமான படம். விஷால் தனது வழக்கமான நடிப்பில்லாமல் மிஷ்கினுக்கு தேவையானதை மட்டுமே திரையில் காண்பித்திருக்கிறார். வேகம், வேகம்.. வேகம்.. அத்தனை வேகத்தில் பரபரவென ஓடும் திரைக்கதையில் விஷாலும் கூடவே ஓடியிருக்கிறார்.
துப்பறிவாளனுக்கு ஐம்புலன்களும் எப்போதும் திறனுடன் இருக்க வேண்டும். அனைத்தையும் சந்தேகிக்க வேண்டும். சட்டென முடிவெடுத்தல் வேண்டும். தைரியத்துடன் அணுகுதல் வேண்டும் என்கிற அடிப்படை உண்மையுடன் விஷாலின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இது சாதாரண ஒரு சினிமா என்கிற பார்வையில் பார்த்தால் நிச்சயமாக விஷாலின் கேரக்டர் நகைப்புக்குரியதாகத்தான் இருக்கும். ஆனால் ஒரு துப்பறிவாளனின் படம் என்று பார்த்தால் விஷாலின் பெருமையும், அருமையும் புரியும்.. தெரியும்.
வந்தவர்களின் ஜாகத்தையே அலசி, ஆராய்ந்து சட்டென தெளிக்கும் அதி சூப்பர் துப்பறிவாளனாக விஷால் இருப்பது திரைக்கதையின் லாஜிக்படி எல்லை மீறலாகவே இருந்தாலும், இதுதான் துப்பறிவாளனின் குணம் என்று பார்த்தால் இதுவும் சரியே. இவர்களைப் பற்றியெல்லாம் ஏற்கெனவே நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் கணியன் என்று நினைத்துப் பாருங்கள். படம் புரியும்..!
இவருடைய தனிப்பட்ட இன்னொரு குணாதிசயம்தான் ஏன் என்பதற்கான காரணம் தெரியவில்லை. அது எதுக்கெடுத்தாலும் கோப்ப்படுவது.. மல்லிகாவிடம் வள், வள்ளென்று விழவது.. டீயை குதிரை மூத்திரம் போல உள்ளது என்று கொதிப்பது.. பெண்களிடம் இயல்பாக பேச முடியாமல் தவிப்பது..
மல்லிகாவின் கையில் விளக்கமாற்றைக் கொடுத்து வீட்டுக்குள் தள்ளிவிடுகின்ற காட்சி இதுவரையிலும் எந்தப் படத்திலும் வராத புதுமையான காதல் காட்சி. அதற்கு ஹீரோயின் அனு இம்மானுவேல் காட்டும் ரியாக்சன் சூப்பர்.. இதுவும் ஒரு வகையிலான காதல் என்பதைத்தான் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு பக்கம் தன்னை திருட வைத்திருக்கும் மாமா.. இன்னொரு பக்கம் தனது தம்பி, தங்கை.. இவர்களுக்கிடையில் தன்னை யார் என்று தெரிந்தும் மன்னித்து வேறு பாதைக்கு போ என்று திசை திருப்பிய இளைஞன்.. அந்த இளைஞனின் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்.. தான் நினைத்த்தை விரும்பியதை அடைந்துவிட்ட திருப்தியில் அந்த வீட்டுக்குள் வலம் வரும் காதலியாக அனுவின் கேரக்டர் ஸ்கெட்ச் தப்பேயில்லை.
மாலில் விஷாலை கொல்ல ஆண்ட்ரியா முயற்சிக்கும் தருணத்தில் அவரைக் காப்பாற்றிய பின்பு அந்த நேரத்திலும் ஒரு பெண்ணிடம் தனது நன்றியுணர்வை காட்டத் தெரியாத ‘துப்பறிவாளன்’ படும்பாடும், கடைசியாக கையைப் பிடித்திழுத்து முத்தம் கொடுத்து நன்றியைத் தெரிவிப்பதும் மிஷ்கின் டச்..
அனு இம்மானுவேல் மரிக்கும் தருவாயில்கூட அவருடைய திருட்டுத்தனம் ஒரு மிகப் பெரிய டிவிஸ்ட்டை கொடுப்பதில் இருந்து, எந்தக் கேரக்டரும் படத்தில் தேவையில்லாமல் இல்லை என்பதையே காட்டுகிறது.
பிரசன்னாவுக்கு பெரிய வேடமில்லை என்றாலும் ‘துப்பறிவாளனு’க்கு உதவியாளராக சில பல வேலைகளைச் செய்வதோடு அவரது கேரக்டர் முடிந்துவிட்டது. கிளைமாக்ஸில் பிரசன்னாவின் உதவியும், அந்த உதவிக்காக விஷால் பேசும் பேச்சும் பல கைதட்டல்களை ஒட்டு மொத்தமாய் வாங்கிய காட்சிகள்..! வெல்டன் இயக்குநர் ஸார்..!
கே.பாக்யராஜ் இதுவரையிலும் தான் செய்யாத ஒரு வில்லன் கேரக்டரை இதில் செய்திருக்கிறார். ஆனால் இப்படியொரு குடும்பச் சூழலில் இவர் ஏன் இந்த வேலையைச் செய்தார் என்பதற்கு சரியான விளக்கம் இல்லாததும் ஒரு பெரிய குறைதான்.
பாக்யராஜ் தனது மரணத்தின்போது கூடவே தான் இதுவரையிலும் பார்த்துக் கொண்டிருந்த மனைவியையும் சேர்த்தே இழுத்துக் கொண்டு போக நினைப்பது பரிதாப உணர்வை வரவழைக்கிறது.
வினய்யின் வில்லன் கேரக்டர் விஷாலுக்கு பின்பு படத்தில் அனைவரையும் கவர்ந்திழுத்த கேரக்டர். அறிமுகக் காட்சியில் நூடூல்ஸ் செய்து கொண்டே இந்த ஒட்டு மொத்த திருட்டுக் கும்பலின் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளையும் இயக்குநர் அறிமுகப்படுத்துவது இயக்குதலின் சிறப்பு.
தான் பட்ட தோல்வியைத் தாங்கிக் கொள்ளாமல் முட்டைகளை வரிசையாக உடைத்து, உடைத்துப் போட்டுவிட்டு பின்பு சட்டியையே தூக்கியெறிந்து தனது கோபத்தைக் காட்டும் வினய்யின் ஆவேசம் அடக்கமான வில்லனைக் காட்டியிருக்கிறது.
கிளைமாக்ஸில் அந்த சண்டை காட்சியை படமாக்கியவிதம் சிம்ப்ளி சூப்பர்ப். உச்சக்கட்ட சண்டையில் நான்கே நான்கு குத்துக்களில் வினய்யை சாய்ப்பதும், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அமர்ந்திருந்த நிலையில் வினய்யின் மரணம் நிகழ்வதும் ஒரு குறியீடுதான்..!
இந்தச் சண்டை மட்டுமில்லை.. சைனீஸ் ரெஸ்ட்டாரெண்ட்டில் விஷால் போடும் சண்டையே அமர்க்களம். கேமிராமேன், சண்டை பயிற்சியாளர், படத்தின் தொகுப்பாளர் என்று அனைவருமே திறமையாக வேலை பார்த்திருக்கிறார்கள் என்பதைக் காட்டியிருக்கிறது இந்த சண்டை பயிற்சி களம்.
மிஷ்கினின் ஆஸ்தான நடிகராக இருக்கும் ஷாஜியின் நடிப்பு கிளைமாக்ஸில்தான் தெரிகிறது. வினய்யின் உண்மையான பெயர் தெரிந்தவுடன் அதனை் சொல்லி ஷாஜி பேசும் வசனத்திற்கே தியேட்டர் அதிர்கிறது. இப்படி பல இடங்களில் சாதாரணமான காட்சிகளில்கூட இயல்பான நகைச்சுவையைத் தெறிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
சிம்ரன் இரண்டு காட்சிகள் என்றாலும் அசத்தல். “உங்க புருஷனை ஏன் கொன்னீங்க..? என்று விஷால் திரும்பத் திரும்ப கேட்க.. சிம்ரன் ஆவேசப்பட்டு மொட்டை மாடிக்கே அழைத்து வந்து நடந்தவைகளை சொல்ல.. விஷால் தெரிந்து கொண்டு கிளம்புவது ‘துப்பறிவாளனின்’ கதைக்கு ஓகேதான். ஆனால் நிஜமான லைஃபுக்கு மிகப் பெரிய லாஜிக் எல்லை மீறல்தான்..!
அநியாயமாய் செத்துப் போகும் போலீஸ் அதிகாரியாய் நரேன்.. கருப்பு ஆடாய் போலீஸ் துறைக்குள் இருக்கும் அபிஷேக்.. நாய்க்குட்டியின் வழக்கிற்கான 857 ரூபாயை பீஸாக கொடுக்க வந்த அந்தப் பையன்.. ஜாலிலோ ஜிம்கானாவாக வாழ்ந்து கொண்டிருக்கும் புரோக்கர் ஜான் விஜய், காண்ட்ராக்ட்டுக்காக கொலை செய்யவும் தயங்காத ஜெயப்பிரகாஷ் என்று பலரது கேரக்டர்களையும் மறக்க முடியாதபடிக்கு படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஜெயப்பிரகாஷின் மரணத்திற்காக கே.பாக்யராஜ் டீம் செய்யும் அந்த அதிரிபுதிரி வேலை செம.. சிரிப்பூட்டும் வாயுவை செலுத்தி காரை ஆக்ஸிடெண்ட்டாக்கி கொல்வதுகூட தமிழ்ச் சினிமாவில் புது ஸ்டைல்தான்.
பாக்யராஜ் டீமில் ஒரு அங்கமாக இருக்கும் ஆண்ட்ரியா.. அதிகமாக வசனமில்லாமல் குற்றச் செயல்களைச் செய்யும் கேரக்டர். ஜான் விஜய்யை படுகொலை செய்துவிட்டு தப்பித்துப் போகும் பரபரப்பு காட்சியில் ரசிகர்களுக்கு டென்ஷனை கூட்டியிருக்கிறார்.
இந்தக் காட்சியில் பிடிபடும் மொட்டைத் தலையன் தன் வயிற்றைத் தானே கிழித்துக் கொண்டு சாகும் காட்சியும், இந்தக் களேபரத்தில் ஆண்ட்ரியா தப்பிக்கும் காட்சியும்கூட மிஷ்கினின் டச்சுதான்..! ஆண்ட்ரியாவின் முடிவு என்ன என்பது சாதாரண ரசிகனுக்குத் தெரியாத அளவுக்கு செய்திருப்பதுதான் மிஷ்கின் செய்த மிகப் பெரிய தவறு எனலாம்.
ஒரு புல்லட் சைஸ் உலோகத்தின் உள்ளே உடல் உறுப்புகளைச் செயல் இழக்கச் செய்யும் விஷத்தை ஏற்றி வைத்து, அதன் வாய்ப்பகுதியை மெழுகால் பூசி அடைத்துவிட்டு இதனை இன்ஜெக்ட் மூலமாக மற்றவரின் உடலில் செலுத்துவது இந்தப் படத்தில் மிக முக்கியமான பகுதி.
உடலுக்குச் செல்லும் அந்த உலோகம்.. உடலுக்கள் இருக்கும் வெப்பத்தால் மெழுகு உருகி மூடியைத் திறக்கும். அதனுள் இருக்கும் விஷம் உடலுக்குள் இறங்கத் துவங்க.. சில நிமிடங்களில் அனைத்து உறுப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக செயல் இழக்க சாவு உறுதி. இதன்படிதான் நரேன் இறக்கிறார். பிரசன்னா காப்பாற்றப்படுகிறார்.
இதுவொன்றும் நவீன டெக்னிக் அல்ல. இதே போன்று ஏற்கெனவே பல காட்சியமைப்புகள் தமிழ்த் திரைப்படங்களில் வந்துவிட்டது என்றாலும் ஷெர்லாக் கோம்ஸின் அடையாளங்களில் இதுவும் ஒன்று என்பதால் இது மிஷ்கினால் புதுமையாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
கார்த்திக் வெங்கட்ராமின் ஒளிப்பதிவும், அரோல் கொரல்லியின் இசையும், அருணின் படத் தொகுப்பும், அமரனின் கலை இயக்கமும் படத்தின் சிறப்புக்குக் காரணங்களாக இருக்கின்றன.
விஷாலின் வீட்டின் உட்புறத்தில் எப்போதும் ஒரே மாதிரியான லைட்டிங்ஸ் வசதியோடு பிசிறு தட்டாமல் படமாக்கியிருக்கிறார்கள். சண்டை காட்சிகளில் கேமிராமேனின் உழைப்பு எப்படிப்பட்டது என்பதையும், படத் தொகுப்பாளரின் திறமை எப்படிப்பட்டது என்பதையும் உணர முடிகிறது.
அரோல் கொரல்லியின் இசையில் மெல்லிய வயலின் இசை படம் நெடுகிலும் ஓடிக் கொண்டேயிருப்பது படத்தை பெரிதும ரசிக்க வைத்திருக்கிறது. இந்த பின்னணி இசையின் மகத்துவம் அறிந்தவர் மிஷ்கின். நம்முடைய தமிழ்ச் சினிமாக்களில்தான் இன்னமும் பின்னணி இசையை பாடலுக்கான இசையாகவே கருதி காதைக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒட்டு மொத்தமாய் இந்தப் படம் சுட்டிக் காட்டுவது மிஷ்கின் என்னும் ஒரு இமாலய திறமைசாலியின் ஒட்டு மொத்த திறமையை. விஷால் என்னும் நடிகர் தன்னை மிஷ்கினிடம் ஒப்படைத்துவிட்டு நடிக்க மட்டுமே செய்திருப்பதால்தான் இந்தப் படத்திற்கு இத்தனை பாராட்டுக்களும், வெற்றிகளும் கிட்டியிருக்கின்றன.
‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாகமும் வரும் என்று விஷால் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. மிஷ்கின் போன்ற சிறந்த இயக்குநர்களால்தான் தமிழ்ச் சினிமாவுக்கு பெருமைகள் பல கிடைத்து வருகிறது..! இந்தப் படமும் அந்தப் பெருமையைப் பெற்றிருக்கிறது.
‘துப்பறிவாளன்’ பார்த்தே தீர வேண்டிய படம். மிஸ் பண்ணிராதீங்க..!

மகளிர் மட்டும் - சினிமா விமர்சனம்

15-09-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்த் திரையுலகில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ‘36 வயதினிலே’ படம் மூலமாகத் துவக்கிய நடிகை ஜோதிகா அடுத்து நடித்திருக்கும் படம் ‘மகளிர் மட்டும்’.
‘பசங்க-2’ படத்தைத் தயாரித்த நடிகர் சூர்யாவின் 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மாதான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், நாசர், லிவிங்ஸ்டன், பாவல், கோகுல்நாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒரு மிக முக்கியமான கெஸ்ட் ரோலில் மாதவன் நடித்துள்ளார்.
ஸ்டில்ஸ் – மேனக்சா, விளம்பர டிசைன்ஸ் – 24 A.M., டீஸர், டிரெயிலர் கட் – டி.சிவாநந்தேஸ்வரன், தயாரிப்பு வடிவமைப்பு – சி.எஸ்.பாலசந்தர், உடை வடிமைப்பு – பூர்ணிமா, ஒலி வடிவமைப்பு – அந்தோணி பி.ஜெயரூபன், நடனம் – பிருந்தா, ஒப்பனை – பட்டணம் ரஷீத், சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம், ஒளிப்பதிவு – எஸ்.மணிகண்டன், இசை – ஜிப்ரான், பாடல்கள் – தாமரை, விவேக், உமாதேவி, பிரம்மா, படத் தொகுப்பு – சி.எஸ்.பிரேம், தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.செல்லத்துரை, இணை தயாரிப்பு – கிறிஸ்டி சிலுவப்பன், ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், தயாரிப்பு நிறுவனம் – 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட், தயாரிப்பு – சூர்யா, எழுத்து, இயக்கம் – பிரம்மா.

பெண் சுதந்திரம் என்றால் என்ன..? அது எப்படிப்பட்டது..? அது யாரிடமிருந்து பெறப்பட வேண்டியது..? அதனை எப்படி பெற வேண்டும்..? பெற்ற சுதந்திரத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்..? எப்படி கொண்டாட வேண்டும்..? என்பதையெல்லாம் கமர்ஷியல் ரசிகர்களும் ரசிக்கும்வகையில் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா.
பிரபாவதி என்னும் ஜோதிகா ஆவணப்பட இயக்குநர். முற்போக்கு சிந்தனையுள்ளவர். காதல், கல்யாணம், வாழ்க்கை முறை என்று அனைத்திலுமே தன்னுடைய சுய சிந்தனைதான் செயல்படுத்த வேண்டும் என்கிற கொள்கையில் உறுதியாய் இருப்பவர்.
இப்போது இவர் காதலிக்கும் நபரான சுரேந்தர் கத்தாரில் பணியாற்றி வருகிறார். சுரேந்தரின் தாயாரான கோமாதா என்னும் ஊர்வசியுடன் மகள் போல பழகி அவருடனேயே தங்கியிருக்கிறார் ஜோதிகா.
கோமாதா வீட்டிலேயே சிறிய பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கோமாதாவின் கணவர் இறந்துவிட்டார். ஒரே மகன்தான் என்பதால் எந்த தொல்லையும் இல்லாமல் இருக்கிறார்.
கோமாதா வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் டியூஷன், வீடு, சமையல், சாப்பாடு என்றே சுற்றி வருவதால் அவருடைய வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்று நினைக்கிறார் வருங்கால மருமகளான ஜோதிகா.
தன்னுடைய கல்லூரி கால தோழிகளான ராணி அமிர்தகுமாரி மற்றும் சுபுலட்சுமி இருவரையும் அதற்குப் பின்னர் பார்க்கவே முடியவில்லை என்று வருத்தப்படுகிறார் ஊர்வசி. தனது வருங்கால மாமியாரின் தோழிகளை கண்டுபிடித்துக் கொடுத்து அவருக்கு ஒரு மகிழ்ச்சியை அளிக்க நினைக்கிறார் ஜோதிகா.
இதற்காக முதலில் முகநூல் மூலமாக ராணி அமிர்தகுமாரி என்னும் பானுப்பிரியாவை கண்டுபிடிக்கிறார் ஜோதிகா. பானுப்பிரியா இப்போது ஆக்ராவில் வசித்து வருகிறார். தோளுக்கு மேல் வளர்ந்த பையன்கள் இருவர், ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். இவருடைய கணவர் நாசர், உள்ளூர் அரசியல் பிரமுகர். மூத்த மகனும் அப்பாவின் அடியொற்றி அதே அரசியல் கட்சியில் தொண்டராக இணைந்து கட்சிப் பணியாற்றி வருகிறார்.
ஆணாதிக்கம் நிறைந்த வீடு. மனைவியை சமைக்கவும், வீட்டைப் பார்த்துக் கொள்ளவும், குழந்தைகளை வளர்க்கவும் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு இத்தனை சுமைகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறார் பானுப்பிரியா.
பானுப்பிரியாவின் மூத்த மருமகளுக்கு பெண் குழந்தை பிறந்து வீட்டுக்கு வரும் அதே நாளில் ஜோதிகா ஊர்வசியை ஆக்ராவுக்கு அழைத்து வருகிறார். அங்கே பானுப்பிரியாவை சந்திக்கிறார் ஊர்வசி. இருவரும் தாங்கள் படித்த கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.
இதையடுத்து இன்னொரு தோழியான சுபுலட்சுமி என்னும் சரண்யா பொன்வண்ணனை கண்டுபிடித்து தருகிறார் ஜோதிகா. சரண்யா இப்போது ஆந்திராவில் வசிக்கிறார். வயதான மாமியாருடன், குடிகார கணவருடன் குழந்தையில்லாத நிலையில் இருக்கிறார். வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் இருக்கும் இவருக்கு தனது கல்லூரி கால தோழிகள் திரும்பவும் கிடைக்க.. அவர்களை உடனேயே பார்க்க வேண்டும் என்று நினைத்து கணவரிடம் சொல்லிவிட்டு அவரும் ஆக்ராவுக்கு கிளம்பி வருகிறார்.
அங்கே மூன்று தோழிகளும் சந்தித்துக் கொள்கிறார்கள். ஆனாலும் தனிமையில் தங்கள் விருப்பப்படி பேசுவதற்கான சூழலே அந்த வீட்டில் இல்லாமல் இருப்பதால் இவர்களை தனியே அழைத்துக் கொண்டு போக நினைக்கிறார் ஜோதிகா. கூடவே இன்னொரு முக்கியமான காரணமும் அவருக்கு இருக்கிறது.
ஆனால் அந்த நேரத்தில் உள்ளூர் மாநகராட்சி தேர்தலில் பானுப்பிரியாவை கவுன்சிலர் பதவிக்கு நிற்க வைத்திருக்கிறார் நாசர். தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார் பானுப்பிரியா. இந்த நேரத்தில் தான் வெளியூர் வருவது முடியாது என்று மறுக்கிறார் பானுப்பிரியா. ஆனாலும் ஜோதிகா தன் முயற்சியில் உறுதியாய் இருக்கிறார். 
இதற்காக ஜோதிகா எடுக்கும் முயற்சி பானுப்பிரியாவின் குடும்பத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆனாலும் ஜோதிகா தன் விஷயத்தில் உறுதியாய் இருந்து மூன்று தோழிகளையும் அழைத்துக் கொண்டு சத்தீஷ்கர் கிளம்புகிறார். முடிவு என்னாகிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் பெண்களை மையப்படுத்தியே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நான்கு பேரின் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளும் வேறு வேறாக இருந்தாலும் மூன்று தோழிகளின் வாழ்க்கை அனுபவங்களும் ‘பெண் ஏன் அடிமையானாள்’ கதையைச் சொல்லும்விதமாகவே இருக்கிறது.
நிரம்ப சோகமான கதை சரண்யா பொன்வண்ணனுடையது. அவருடைய அறிமுகக் காட்சிக்கு பின்பு அவருடைய வாழ்க்கைக் கதையைக் காட்டும் காட்சியில் அவர் காட்டும் நடிப்பு அற்புதம். எந்த லச்சையும் இல்லாமல், எப்போதும் இப்படித்தான் என்பதுபோல அவருடைய இயற்கையான நடவடிக்கைகள் அப்படியே நம் வீட்டில் நடப்பது போலவே தெரிகிறது. நடிப்பில் முதலிடத்தைப் பிடித்திருப்பது சாட்சாத் சரண்யாதான்.
அதேபோல் குத்துச் சண்டைக்கு பயிற்சி பெறும் அந்த டம்மி தலகாணியை கும்மாங்குத்து குத்தும் காட்சியில்கூட தான் சுமந்த முதல் குழந்தை பெண்ணாக இருப்பதால் அதைக் கலைக்கும்படி கூறிய கணவனையும், அதன் பின் வயிற்றில் குழந்தை தங்காத்தால் தன்னை ஊரே சபித்த்தையும் சொல்லி கண் கலங்கும் காட்சியில் நிஜமாகவே ரசிகர்களையும் கண் கலங்க வைத்திருக்கிறார் சரண்யா.
அவருடைய கணவரான லிவிங்ஸ்டன் போனில் ‘விஷயத்தைச்’ சொன்னவுடன் கேட்டுக் கொண்டவர் முடிவாக ‘என் புருஷன் குடிக்கிறதை நிறுத்திட்டாராம்’ என்று தனக்கு எது தேவையோ, அதையே பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு சொல்லும் போக்கில் ஒரு உண்மையான பெண்ணை பிரதிபலிக்க வைத்திருக்கிறார் சரண்யா. வெல்டன் மேடம்..
இவருக்கு அடுத்து பானுப்பிரியா. நிறைய படிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்தவரை வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்து வைத்து ஆக்ராவுக்கு அனுப்பி வைக்க.. இங்கே வந்ததில் இருந்து வீட்டுக்கு வேலைக்காரியாக மட்டுமே தான் உழைத்து வருவதை புன்சிரிப்போடு மட்டுமே சொல்கிறார் பானுப்பிரியா. இந்த சிரிப்பு ஒன்றே இவரது வாழ்க்கையில் புதைந்திருக்கும் சோகத்தை ரசிகர்களால் உணர முடியாமல் செய்துவிட்டது.
இதேபோல் இவரது மகன் சத்தீஷ்கர் போலீஸாரிடம் காவலில் இருக்கும்போது அங்கிருக்கும் பெண் கமாண்டரால் அம்மா என்பவள் யார் என்பதை உணர வைக்கும்போது தெரிகிற உண்மை காட்சியில் அந்த கமாண்டர்கூட ஹீரோயினாகத்தான் தெரிகிறார்.
சாதாரண முடிதான்.. பெண்கள் சமையல் செய்யும்போது அவர்களுடைய தலைமுடி சோற்றிலோ, சாம்பாரிலோ இருப்பது சகஜம். ஆனால் இதற்காக பல குடும்பங்களில் பெண்கள் அடி வாங்குவார்கள்.. திட்டு வாங்குவார்கள்.. இதை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாத ஆணாதிக்கத்தை அந்த பெண் கமாண்டர் “சாதாரண முடிதானே.. தூக்கிப் போட்டுட்டு போக முடியல.. நீயெல்லாம் எதுக்கு உங்கம்மாவை தேடுற.. இந்த வயசுல உங்கம்மா உங்களைவிட்டுட்டு ஓடினா நீங்க அவளை என்ன பாடு படுத்தியிருப்பீங்க…?” என்றெல்லாம் கேட்பது நியாயமான கேள்வி..!
பானுப்பிரியாவின் மகன் பாவெல் இதனை நினைத்துப் பார்த்து அந்த ஒரேயொரு காட்சியிலேயே அம்மா என்பவள் யார் என்பதையும், பெண் என்பவள் எதனால் ஆனவள் என்பதையும் மகன் உணர்ந்து கொள்கிறார் என்று முடித்திருப்பது அழகானது.
ஒரு லட்சம் சம்பளம் வாங்கினாலும் பத்து லட்சம் ரூபாய்க்கு நடிப்பார் நடிப்பு ராட்சஸி ஊர்வசி. இதில் இதையேதான் செய்திருக்கிறார். படபடவென வசனத்தை பேசுவதில் இருந்து காமெடி வசனங்களுக்கு தனியே முக்கியத்துவம் கொடுத்து உச்சரித்திருப்பதுவரையிலும் அவர் டேக் இட் ஈஸி ஊர்வசிதான்..! நாசரின் முக அழகைப் பற்றி அவர் பானுப்பிரியாவிடம் ஒப்பிக்கும் காட்சி ஒன்று போதும் ஊர்வசியின் பெருமையைச் சொல்ல..!
பிரபாவதி என்னும் ஜோதிகா காட்சிக்கு காட்சி, பிரேமுக்கு பிரேம் திரை முழுவதிலும் தோன்றியிருக்கிறார். ஜோதிகாவை பில்டப் செய்வதற்காகவே இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்களோ, என்று சில சமயம் நினைக்கும் அளவுக்கு திரைக்கதை அவரைச் சுற்றியே அமைந்திருக்கிறது.
‘கோம்ஸ்’ என்று வருங்கால மாமியாரை செல்லமாக அழைப்பதில் இருந்து, பெண், பெண்ணியம், சுதந்திரம், ஆணாதிக்கம் என்று பலவற்றையும் இவர்களுக்கு கற்றுக் கொடுப்பதுவரையிலும் ஜோதிகாவின் ஆதிக்கம்தான் படத்தில் அதிகம்..!
இடையில் சந்தடிச்சாக்கில் இதுவரையில் எந்தப் படத்திலும் சொல்லாத அளவுக்கு தாஜ்மஹாலை கட்டிய ஷாஜகான்-மும்தாஜின் நிஜமான வாழ்க்கைக் கதையையும் சொல்லி, இதன் பின்னால் இருக்கும் இன்னொரு பார்வையையும் எடுத்துரைத்திருக்கிறார் இயக்குநர். இதற்காக இயக்குநருக்கு ஒரு பாராட்டு..!
இந்த மூன்று தோழிகளின் கல்லூரி கால கேரக்டர்களாக நடித்தவர்கள் மூவருமே நடிப்பில் பின்னியிருக்கிறார்கள். அந்தத் திரைக்கதை மிக மிக ரசனையானது. பாடல் காட்சிகளின் மாண்டேஜில் இவர்களது கல்லூரி கால வாழ்க்கையை பிட்டு, பிட்டு வைத்திருப்பது அழகு.
நாசர் வழக்கம்போல ஆணாதிக்கத்தின் உச்சக்கட்ட திமிர்த்தனத்தைக் காட்டியிருக்கிறார். லிவிங்ஸ்டன் தனது கையாலாகத்தனத்தை காட்ட பாட்டு பாடியபடியே இருப்பதும், கழிவிரக்கத்தில் “என்னை அடிச்சிரு சுப்பு…” என்று மனைவியிடம் கெஞ்சுவதும் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் ரசிக்க வைத்திருக்கிறது. கடைசியில் தன்னுடைய தாயார் இறந்துவிட்டபோதும் மனைவியின் டூரை கலைக்க வேண்டாம் என்றெண்ணி “அதை அவளிடம் சொல்லிராத…” என்று ஜோதிகாவிடம் சொல்லும்போது மனதில் இடம் பிடிக்கிறார் லிவிங்ஸ்டன்.
மூன்று தேவிகளின் காதல் கதைகளில் இருக்கும் உண்மைத்தன்மையும், அதன் நேட்டிவிட்டி சார்ந்த கதையும், அதைப் படமாக்கியிருக்கும்விதமும் ரசிக்க வைத்திருக்கிறது. ஊர்வசியின் காதலன்தான் சரண்யாவின் தற்போதைய கணவன் என்பதை சட்டென்று ஒரு நொடியில் கடந்து போகும் ஷாட்டில் வைத்திருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.
கடைசியாக கிளைமாக்ஸில் அனைவரையும் அழ வைக்கும்விதமான திரைக்கதையும், திடீர் சர்ப்ரைஸாக களத்தில் குதிக்கும் ஊர்வசியின் மகனான மேடியும் ஒரு புதிரான டிவிஸ்ட். கிளைமாக்ஸில் அம்மாவை புரிந்து கொண்ட மகன்.. மனைவியைப் புரிந்து கொண்ட கணவன்.. என்று பாஸிட்டிவ்வாக முடித்திருப்பது பாராட்டுக்குரியது..!
ஒளிப்பதிவாளர் எஸ்.மணிகண்டனின் வண்ணமயமான ஒளிப்பதிவில் முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் காட்சிகள் அழகுதான். சென்னையில் இருந்து ஆக்ரா, சத்தீஷ்கர் நீர்வீழ்ச்சி வரையிலும் ரசிகர்களை அழைத்துச் சென்று பார்க்க வைத்திருக்கிறார்கள். எதுவும் சலிக்கவில்லை.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தும், பின்னணி இசை அதிகம் தொந்தரவு செய்யாத நிலையில் இருப்பதால் நடிப்பை பெருமளவில் ரசிக்க முடிந்திருக்கிறது. ‘அடி வாடி திமிரா’ பாடலை படத்தின் லோகோவுக்கான பாடலாகவே அமைத்திருக்கிறார்கள். நன்று. இதேபோல் ‘கேரட்டு பொட்டழகா’ பாடலின் நடனக் காட்சிகள் அருமை.
படத்தை மகளிருக்கான பிரச்சாரப் படமாக ஆகக்கூடிய அளவுக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், அதனை அவ்வப்போது அடக்கி ஒடுக்கி மிக இயல்பான திரைக்கதையிலும், மிக எளிமையான, அதே சமயம் கருத்தான வசனங்களாலும் படத்தை மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா.. அவருக்கு எமது பாராட்டுக்கள்..!
நடுவில் சங்கர்-கவுசல்யா ஆணவக் கொலை பற்றிய உண்மைக் கதையையும் இணைத்திருக்கிறார் இயக்குநர். எத்தனை, எத்தனை விழிப்புணர்வு பிரச்சாரங்களும், கதைகளும் சொல்லப்பட்டாலும் ஜாதி என்னும் அரக்கனை அழிக்கவும், காதலை வாழ வைக்க வேண்டும் என்பதற்காகவும் பெண்கள் ஓரணியில் திரள வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இந்த மூன்று தோழிகளும் கல்லூரியில் இருந்து பிரிக்கப்படுவதற்கு காரணமான ‘அவள் அப்படித்தான்’ படம் வெளியான அதே தினத்தன்று மூவரையும் சத்தீஷ்கரில் சந்திக்க வைக்கும் ஜோதிகாவின் செயல் மிகப் பொருத்தமானது. இயக்குநர் பிரம்மாவுக்கு இதற்காகவே ஒரு ஸ்பெஷல் பாராட்டு..!
படம் பார்க்கும் ஒவ்வொரு ஆண் மகனையும் தங்களது வீட்டில் இருக்கும் தாய், தங்கை, அக்காள், பாட்டிகள் என்று தங்கள் குடும்பப் பெண்களுக்கு அவர்களுக்குரிய மரியாதையையும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் நாம் இதுவரையிலும் மதித்து நடந்து வந்திருக்கிறோமா என்று தங்களைத் தாங்களே கேள்வி கேட்க வைத்திருக்கிறது இந்தப் படம்..!
இதுவே இந்தப் படத்தின் வெற்றி எனலாம்..!

ஆறாம் வேற்றுமை - சினிமா விமர்சனம்

13-09-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

செவன்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் சக்திவேல் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் அஜய், கோபிகா, யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – அறிவழகன், இசை – கணேஷ் ராகவேந்திரா, நடனம் – பாபி ஆண்டனி, பாடல்கள் – யுகபாரதி, மோகன்ராஜ், தயாரிப்பு – சக்திவேல், எழுத்து, இயக்கம் – ஹரிகிருஷ்ணா.

தென் தமிழகத்தின் மலைப் பிரதேசமான வேலனூர் அருகில் இருப்பவை கூனிக்காடு  மற்றும் கோட்டைக்காடு கிராமங்கள். தரையில் இருந்து மிக உயரத்தில் இருக்கும் இந்தக் கிராமங்கள் நவீன நாகரிகத்தின் சிறு அடையாளம்கூட இல்லாமல் இப்போதும் பழமைக்கு உதாரணமாக இருப்பவை.
கோட்டைக்காடு கிராமத்திற்கு சரியான பாதை வசதிகூட இல்லை. ஒற்றையடிப் பாதையில் கழுதைகளை வைத்து,ம் நடந்தும் அடிவாரத்திற்கு வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள் அக்கிராமத்து மக்கள்.
பக்கத்தில் இருக்கும் கூனிக்காடு கிராமத்திற்கும், கோட்டைக்காடு கிராமத்திற்கும் ஆதி காலத்தில் மிக நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. ஒரு சிறிய பிரச்சினை காரணமாக இரண்டு கிராமங்களுக்கும் இடையில் தொடர்புகள் விடுபட்டுப் போக.. கூடவே பூகோள ரீதியாக இடையில் ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளத்தாக்கு அக்கிராமங்களை முற்றிலுமாக துண்டித்துவிட்டது.
கூனிக்காடு கிராமத்தில் இன்னமும் நர மாமிசம் சாப்பிடும் ஆதிவாசி மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் பகல் முழுவதிலும் குடிலில் இருந்து கொண்டு, இரவானால் வேட்டைக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடி சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள்.
கோட்டைக்காடு கிராமத்தில் திடீரென்று மர்மமான முறையில் மூன்று பேர் அடுத்தடுத்து மரணிக்கின்றனர். இந்த மரணம் வேலனூரில் இருக்கும் மாவட்ட வனத்துறை அதிகாரியான சேரன்ராஜின் காதுகளுக்கு வந்து சேர்கிறது.
அதேபோல் வனத்துறை மேலிடத்திற்கும் தகவல் செல்ல.. இது குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸாரை அனுப்பி வைக்கிறார்கள். வரும் போலீஸார் இது குறித்து விசாரிக்கத் துவங்க.. இடையில் சேரன்ராஜூம் அவரது துணை அதிகாரியும்கூட கொல்லப்படுகின்றனர்.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரியொருவர் மும்முரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார். கடைசியில் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் கதை.
‘அபோகலிப்டா’ என்கிற புகழ் பெற்ற ஹாலிவுட் படத்தின் பாதிப்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பினர் செய்தி வெளியிட்டிருந்தனர். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகத்தான் படம் இருக்கிறது.
அரதப் பழசான கதை.. திக்குத் தெரியாத திரைக்கதை.. மோசமான இயக்கம்.. சேரன்ராஜை தவிர மற்ற நடிகர்களிடத்தில் இருந்து வந்திருக்கும் நடிப்பே இல்லாத நடிப்பு.. அவ்வப்போது வந்து, வந்து காணாமல் போகும் ஒளிப்பதிவு.. தொடர்பே இல்லாத பல காட்சிகள்.. லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டிருக்கும் சில போலீஸ், வனத்துறை சம்பந்தமான காட்சிகள்.. இப்படி எல்லாமுமாக சேர்ந்து படத்தைக் கொத்து புரோட்டோ போட்டிருக்கின்றன.
கோட்டைக்காடு மக்களின் வாழ்க்கை முறை ஒரு பக்கம். கூனிக்காட்டில் வாழும் நாகரீகமே தெரியாத ஆதிவாசி மக்களின் வாழ்க்கை முறை இன்னொரு பக்கம்… என்று இரண்டையும் அடுத்தடுத்து காட்டியிருப்பது மட்டுமே படத்தின் திரைக்கதை.
கோட்டைக்காடு நாயகி பூரணியின் வாழ்க்கையில் கூனிக்காடு கிராமத்தின் ஆதிவாசி மனிதனான அஜய் பார்த்தவுடன் உள்ளே நுழைவதும், காதலில் பூரணி திளைப்பது சட்டென்று ஜீரணிக்க முடியாத விஷயம். ஆனாலும் காதலிக்க வைத்துவிட்டார்கள்.
இந்தக் காதல் கொடூரமாக முடியப் போய்.. இதற்கான பதிலடியாகத்தான் மர்ம மரணங்கள் நிகழ்கின்றன என்பதை கடைசி ரீலில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் போலீஸ் அதிகாரியாக நடித்தவரின் நடிப்பேயில்லாத நடிப்பால் எதுவும் மனதில் நிற்காமல் போய்விட்டது.
நாயகன் அஜய்க்கு படத்தில் வசனங்களே இல்லை. பல்லைக் கடித்து சலாமிய பாஷை பேசுகிறார். ஹீரோயினை பார்த்தவுடன் ஏதோ ஒரு உணர்வாகி பார்க்கத் துடித்து அடிக்கடி ஓடி வருவதோடு சரி.. கடைசியில் காதலிக்காக பொங்கியெழுந்து சம்ஹாரம் செய்யும் காட்சிகளில் இவரது நடிப்பையெல்லாம் ஆக்சனிலேயே காட்டியிருக்கிறார்கள்.
நாயகி பூரணியாக கோபிகா. இவரது தோழியாக உமாஸ்ரீ. ஓரளவு நடித்திருக்கிறார்கள். மற்றும் ஊர்ப் பெரியவர்களாக அழகு,  சூரியகாந்த்.. ஆதிவாசி நண்பனாக யோகிபாபு, சேரன்ராஜ் போன்றோர் கொஞ்சம் நடித்து இயக்குநருக்கு கொஞ்சம் உதவிகளை செய்திருக்கிறார்கள்.
கணேஷ் ராகவேந்திரா இசையில் ‘எட்டணா பொட்டழகி’ பாடல் தாளம் போடவ வைக்கிறது. ‘தரையில’, ‘வானமாய்’ பாடல்கள் கேட்கும் ரகம். அறிவழகனின் ஒளிப்பதிவில் சொல்லிக் கொள்ளும்படியில்லை. காட்சிக்கு காட்சி டல்லடித்தும் பட்டென்று வெயில் ஏறியும், இறங்குவதுமாக இருக்க.. படம் முழுக்கவே ஒளிப்பதிவு தள்ளாடுகிறது.
இது போன்ற பல படங்கள் மலையாள படவுலகத்தில் 1985-களில் வந்து கொண்டேயிருந்தன. ஆனால், அவைகள் அனைத்திலும் செக்ஸ்தான் பிரதானமாக இருக்கும். நல்லவேளையாக இதில் அந்த விஷயமே இல்லாமல் ஒரு வித்தியாசமான கதை, திரைக்கதையில் இப்படியொரு படம் செய்ய வேண்டும் என்று நினைத்து உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த எண்ணத்திற்கு மட்டும் நமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..!

மாய மோகினி - சினிமா விமர்சனம்

13-09-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை கண்ணன் கிரியேஷன்ஸ் சார்பில் கே.தங்கவேலு தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் அப்துல்லாக நாயகனாகவும், சாரிகா மற்றும் ஜோதிஷா இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.
மேலும் இமான் அண்ணாச்சி, கே.ஆர்.விஜயா, பூவிலங்கு மோகன், பாய்ஸ் ராஜன், மகாநதி சங்கர், ஆஷா, எஸ்.என்.பார்வதி, மாயா ஜாபர் போன்றோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கே.வி.ராஜன், நடனம் – ராம் முருகேஷ், சண்டை பயிற்சி – தீப்பொறி நித்யா, இசை – எம்.ஜெயராஜ், பாடல்கள் – பாவலர் சிவா, மோகன்ராஜன், பிறைசூடன், மக்கள் தொடர்பு – நெல்லை சுந்தர்ராஜன், படத் தொகுப்பு – லட்சுமணன், தயாரிப்பு – கே.தங்கவேலு, எழுத்து, இயக்கம் – ராசா விக்ரம்.

பேய் இருக்கா இல்லையா என்பதை சொல்ல வந்திருக்கும் அரதப் பழசான பேய்க் கதைகளில் ஒன்றுதான் இந்த மாய மோகினி.
ஒரு கிராமத்தில் இரவு வேளையில் ஒரு பெண்ணின் அழு குரல் கேட்பதாக அக்கிராமத்து மக்கள் பலரிடமும் புகார் சொல்லி வருகின்றனர். இந்த நேரத்தில் ஒரு தொலைக்காட்சியில் பேய் இருக்கிறதா. இல்லையா என்பது பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு போன் செய்யும் அந்த ஊர்க்காரர், தன் ஊரில் பேய் இருப்பதாகவும் நேரில் வந்தால் காட்டுவதாகவும் சொல்கிறார். இதனை நம்பி காம்பியரான ஜோதிஷா மற்றும் கேமிராமேனான நாயகன் சிவா என்னும் அப்துல்லாவும் அந்த ஊருக்கு வருகிறார்கள்.
அவர்களிடத்தில் அந்த மாய மோகினியை காட்டுகிறார்கள் கிராம மக்கள். அந்த மாய மோகினியான சாரிகா, தன்னுடைய காதலனான பிரகாஷின் இறந்து போன உடலை வைத்துக் கொண்டு அழுகிறது. சுற்றிச் சுற்றி வருகிறது.
இதற்கு காரணமாக போன ஜென்மத்துக் கதையொன்றை அந்தப் பேய் சொல்கிறது. இப்போது கேமிராமேனாக இருக்கும் சிவா, போன ஜென்மத்தில் பிரகாஷ் என்ற பெயரில் சாதாரணமான ஒரு துணி வியாபாரியாக இருக்கிறார்.
ஊர், ஊராக போய் துணி வியாபாரம் செய்ய வந்த பிரகாஷ், அந்த ஊரில் கண்ணில் பட்ட சாரிகாவை பார்த்தவுடன் காதலாகி கசிந்துருகுகிறார். அக்கிராமத்து மக்கள் பிரகாஷ் காதல் வேஷம் போட்டு தங்கள் ஊர்ப் பெண்களை மயக்குவதாக நினைத்து பிரகாஷை படுகொலை செய்கிறார்கள். கூடவே சாரிகாவும் இறக்கிறார்.
இப்போது இந்த சாரிகாதான் தனது காதலன் பிரகாஷின் பிணத்தை வைத்துக் கொண்டு நள்ளிரவில் அழுதபடியே இருக்கிறார்.
அந்த பிரகாஷ் இப்போது கேமிராமேன் சிவாவின் உருவத்தில் வந்திருப்பதாக நினைக்கும் சாரிகா ஆவி, இவர்களையே சுற்றிச் சுற்றி வருகிறது. இந்தப் பெண் பேயிடமிருந்து ஜோதிஷாவும், கேமிராமேன் சிவாவும் தப்பிக்க பார்க்கிறார்கள். அது முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை.
கிட்டத்தட்ட 45 வயதைத் தொட்டிருக்கும் நடிகை குஷ்பூவின் அண்ணனான அப்துல்லாதான் இதில் இரட்டை வேடம் கட்டியிருக்கிறார். ஏன்.. எதற்கு என்றுதான் தெரியவில்லை.
நடிப்பிற்கான முதிர்ச்சி முகத்திலேயே இல்லை. ஆனால் வயதுக்கேற்ற முதிர்ச்சிதான் தெரிகிறது. ஏதோ தனக்கு வந்த அளவுக்கு நடித்திருக்கிறார். தெரிந்த அளவுக்கு காட்டியிருக்கிறார்.
ஹீரோயின்களில் பேயாக நடித்திருக்கும் சாரிகா, காம்பியராக நடித்திருக்கும் ஜோதிஷா இருவருக்கும் பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லை. நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். சாரிகா கொஞ்சம் கிளாமரை கொட்டியிருக்கிறார். பேய் காட்சியில் மிரட்டுவார் என்று பார்த்தால்.. ம்ஹூம்.. இயக்கமே சரியில்லாமல் இருக்கும்போது இவரை மட்டும் சொல்லி என்ன புண்ணியம்..?
வீணடிக்கப்பட்டிருப்பவர் கே.ஆர்.விஜயா. வயதான காலத்தில் இத்தனை கொடுமைகள் இவருக்குத் தேவைதானா..? பாவம்.. அழுத்தமேயில்லாத கேரக்டர் ஸ்கெட்ச்சில் ஏனோ அழைத்த கடமைக்கு நடித்திருக்கிறார். அவ்வளவுதான்..!
ஜெயராஜ் இசையில் பாடல்கள் சுமார்தான். பின்னணி இசையை பயமுறுத்தும் அளவுக்குக் கொடுக்காமலும் சீரியல் டைப்பில் கொடுத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள். சின்ன பட்ஜெட் படங்களுக்கே உரித்தான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜன்.
பேய்ப் படம் என்றாலே பயமுறுத்தல் என்பதுதான் மிகப் பெரிய கடமை. இதில் யாரும், யாரையும் பயமுறுத்தவில்லை. ஆனாலும் பேய்ப் படம், மோகினி பிசாசு என்றெல்லாம் சொல்லிவிட்டார்கள். இப்போது இருக்கின்ற வசதிகளில், வந்து போகும் திரைப்படங்களை நினைத்துப் பார்த்தாவது ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுக்க முனைந்திருக்கலாம். இப்படி ஒப்புக்குச் சப்பாணியாய் நானும் ஒரு படத்தை இயக்கிவிட்டேன் என்ற அர்த்தத்தில் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநரை என்னவென்று சொல்வது..?
பழைய பேய்ப் படங்களுடன்கூட ஒப்பிட முடியாத அளவுக்கு தரத்தில் மொக்கையாய் இருக்கிறது இந்த ‘மாய மோகினி’.

காதல் கசக்குதய்யா - சினிமா விமர்சனம்

13-09-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எட்செட்ரா எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் துருவா, வெண்பா, சார்லி, மறைந்த நடிகை கல்பனா, லிங்கா, ஜெயகணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். துருவா, இதற்கு முன் ‘திலகர்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
வெண்பா ‘கற்றது தமிழ்’ படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரத்திற்கு   குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ‘அதே கண்கள்’  மற்றும் ‘சேதுபதி’ படத்தில் மூர்த்தியாக நடித்த லிங்கா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
‘போடா போடி’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்திற்கு இசையமைத்த தரண் இந்தப் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். புதுமுக இயக்குநரான துவாரக் ராஜா இயக்கியுள்ளார்.
இதுவரையிலும் சொல்லப்படாத ஒரு காதலை வேறொரு கோணத்தில் சொல்லியிருக்கிறார்கள்.


உயரம் அதிகமான ஒரு இளைஞன் உயரம் குறைவான ஒரு காதலியை நினைத்துக் கூட பார்க்க மாட்டான். ஆனால் இந்தப் படத்தின் நாயகனுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைக்கிறது. அதோடு அந்த காதலிக்கும், அவனுக்குமான வயது வித்தியாசம் 8. இதனாலேயே ஹீரோ காதலை புறந்தள்ளுகிறார். ஆனால் காதலி விடாப்பிடியாக தன் காதலை வற்புறுத்த.. முடிவில் என்னாகிறது என்பதுதான் இந்தக் ‘காதல் கசக்குதய்யா’ படத்தின் கதை.
ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் ஹீரோ. இவரது அப்பாவும், அம்மாவும் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்குகிறார்கள். அந்த விபத்தில் அப்பா இறந்துவிட அம்மா மட்டும் உயிர் தப்புகிறார். உயிர் மட்டுமே. இப்போதும் மருத்துவமனையில் கோமாவில் இருக்கிறார். விபத்து என்பதால் இவருக்குண்டான அனைத்து மருத்துவச் செலவுகளையும் அரசே ஏற்றிருக்கிறது.
பகலில் வேலைக்குச் செல்லும் ஹீரோ இரவில் தாயைப் பார்க்க வருகிறார். என்றாவது ஒரு நாள் தன் தாய் கண் முழிப்பாள் என்று கனவு காண்கிறார். தாய் மாமனோ இந்தக் கொடுமையை காணச் சகிக்காமல் பேசாமல் கருணைக் கொலை செய்துவிடலாம் என்கிறார். ஆனால் ஹீரோ இதனை ஏற்க மறுக்கிறார்.
இந்த நிலையில் அரசுப் பணியில் உயரதிகாரியாக வேலை செய்யும் சார்லியின் ஒரே மகளான ஹீரோயின் வெண்பா, பள்ளிக்கூடம் செல்லும் வழியில் ஹீரோவை பார்க்கிறார். ஹீரோ தனது மன அழுத்த்த்தைப் போக்கிக் கொள்ள செயின் ஸ்மோக்கராக இருக்கிறார். உடன் இரண்டு நண்பர்களும் இருக்கிறார்கள்.
ஏதோ ஒன்று.. ஹீரோவை ஹீரோயினுக்கு பிடித்துவிடுகிறது. அவளே தேடிப் போய் ‘ஐ லவ் யூ’ சொல்கிறாள். ஹீரோவுக்கு அதிர்ச்சியாகிறது. தன்னைவிட உயரம் குறைவு. கூடுதலாக 8 வயது குறைவு. அதுவும் ப்ளஸ் டூ மாணவி. எப்படி காதலிக்க முடியும் என்று நினைத்து காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்.
ஆனாலும் ஹீரோயின் அசரவில்லை. ஹீரோ பின்னாலேயே சுற்றிச் சுற்றி வந்து காதலில் வெற்றிக் கொடி நாட்டிவிடுகிறாள். இந்த நேரம் பார்த்து ஹீரோயினை ஒன் சைடாக லவ்விக் கொண்டிருந்த வேறொரு பள்ளி மாணவர்கள் இதனை சார்லியிடம் போட்டுக் கொடுக்க சார்லி காதலைப் பிரிக்கும் வேலையைச் செய்கிறார்.
காதல் கூடி வந்த வேளையில் ஏற்பட்ட இந்தப் பிரிவால் ஹீரோ மனமுடைந்து போகிறார். இன்னொரு பக்கம் அவரது அம்மாவின் நிலைமை.. ஹீரோயினோ மணந்தால் மகாதேவன் என்று உறுதியாய் இருக்கிறார். இறுதியில் என்னாகிறது என்பதே இந்தப் படத்தின் திரைக்கதை.
துருவாவுக்கு வயதுக்கேற்ற கேரக்டர். காதலை ஏற்க சட்டென மறுக்கும் புத்தியும், யோசிக்கும் அளவுக்கு அறிவும் உள்ளவராக இருக்கிறார். அவரது அம்மா மீதான அவரது பாசத்தைக் காட்டும் சில காட்சிகளில் உளமாற நடித்திருக்கிறார்.
சிறுக சிறுக அந்தக் காதல் வலையில் அவர் சிக்கும் காட்சிகள் ரசனையானவை. இயக்குநரின் இயக்கத் திறமையாலும், திரைக்கதையாலும் ஏற்க முடியாத ஒரு விஷயத்தைக்கூட ஏற்க வைத்திருக்கிறார்கள்.
அவருடைய தாயாரை திரும்பவும் நல்ல நிலைமையில் பார்த்தவுடன் அவர் காட்டும் நடிப்பும், காதலிக்காக படத்தின் பிற்பாதியில் அவர் படும்பாடும் குறைவில்லாத நடிப்பு என்றே சொல்லலாம்.
இவருடைய தாயாராக நடித்திருக்கும் மறைந்த நடிகை கல்பனாவின் அந்த 10 நிமிட நடிப்பே சிறப்பு. ஆனாலும் கோமாவில் இருந்து கண் முழித்தவர் அடுத்த நிமிடமே இது போல் சரளமாக பேசுவார். நடப்பார் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லியா இயக்குநரே..!?
படத்தின் மிகப் பெரிய பலம் ஹீரோயின்  வெண்பா. பள்ளிப் பருவ கேரக்டருக்கு மிக பொருத்தமான முகவெட்டு. அழகான தோற்றம். மிக அருமையாகவும் நடித்திருக்கிறார். அந்த வயதுக்கே உரித்தான துள்ளல்.. சிடுசிடுப்பு.. கோபம்.. எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறார்.
வீட்டில் எந்நேரமும் படிப்பு.. படிப்பு.. என்று அனத்திக் கொண்டேயிருப்பதால் எங்காவது ஒரு கிளை கிடைத்தால் அதைப் பற்றிக் கொண்டு தாவிவிடலாம் என்று தான் நினைத்ததை கடைசியாகத்தான் சொல்கிறார். இது பெற்றோர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டிய விஷயம்.
சார்லி தான் ஒரு பண்பட்ட நடிகர் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். மகளை மீட்டெடுக்கும் காட்சியிலும், போலீஸ் ஸ்டேஷன் காட்சியிலும் மனிதர் அசர வைத்திருக்கிறார் நடிப்பில்..! வெல்டன் ஸார்..!
ஹீரோவின் நண்பர்களாக நடித்தவர்களும், ஹீரோயினின் நண்பியாக நடித்தவரும்கூட சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.
ஹீரோ டென்ஷனாக இருக்கிறார் என்பதற்காக இத்தனை தூரம் சிகரெட்டுகளை பாக்கெட், பாக்கெட்டாக ஊதித் தள்ளுபவராக காட்டியிருக்க வேண்டாம். குறைத்திருக்கலாம் இயக்குநரே..!
பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. சி.சரண் குமாரின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். காட்சிகளை மிக எளிமையாகவும், அழகாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு கேரக்டர்கூட சோடை போகாத அளவுக்கு இயக்கம் சிறப்பாக இருக்கிறது. சின்ன பட்ஜெட்.. சின்ன நடிகர்கள் என்ற பிரச்சினைக்குள் இந்தப் படமும் சிக்கிக் கொண்டு ரசிக்கும்படியான திரைக்கதையும் இல்லாமல் இருப்பதால் படம் பேசப்படாமல் போய்விட்டது இவர்களது துரதிருஷ்டம்..!
ஆனால் காதலை மையப்படுத்திய படங்களில் இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க படமாகும்..!