பாலுமகேந்திரா கொடுத்த அதிர்ச்சி..!

24-06-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘முதல் தகவல் அறிக்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பாகிய பாடல் காட்சிகள் கொடுத்த அதிர்ச்சியைவிடவும், அதிக அதிர்ச்சியை அளித்தவர்கள் இரண்டு பேர். விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கலைப்புலி சேகரன், கடந்த 20-ம் தேதி காலமான பிரபல சினிமா தயாரிப்பாளர் கே.ராஜகோபால் என்னும் கே.ஆர்.ஜி.யை பற்றிச் சொன்ன தகவல்கள் ஒன்று.. இரண்டு, இதனைத் தொடர்ந்து காமிரா கவிஞர் பாலுமகேந்திரா பேசியது..!

“நேற்று காலமான தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. தனது கடைசிக் காலத்தில் பணத்திற்காக எத்தனை கஷ்டப்பட்டார் என்பது இங்கே இருப்பவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. கமல், ரஜினியை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.. 70-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர்.. தனது கடைசிக் காலத்தில் ஒரு கார்கூட இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா உங்களுக்கு..? எத்தனை மனத் துயரத்திற்கிடையில் அவர் இறந்து போனார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்..?” என்றார் சேகரன்..! கேட்டவர்களுக்கெல்லாம் அதிர்ச்சிதான்.. 


ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ இவருடைய கே.ஆர்.ஜி. பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது இன்றைய சினிமாக்காரர்களுக்கே தெரியாத ரகசியம்தான்..! சிவாஜி நடித்த ‘நேர்மை’, ‘திருப்பம்’, ரஜினி நடித்த ‘துடிக்கும் கரங்கள்’, ‘ஜானி’, கமல் நடித்த ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘கடல் மீன்கள்’, பிரபு நடித்த ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘மிடில்கிளாஸ் மாதவன்’, விஜய் நடித்த ‘மின்சாரக் கண்ணா’ என்று தமிழில் மட்டுமே 60-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்திருக்கிறார் கே.ஆர்.ஜி. அதே சமயம் மலையாளத்தில் மம்மூட்டி நடித்த ‘நீலகிரி’, ‘ஒளியம்புகள்’, மோகன்லால் நடித்த ‘லால் சலாம்’, ‘வரவேற்பு’, சீனிவாசனின் புகழ் பெற்ற படமான ‘வடக்கு நோக்கிய யந்திரம்’ ஆகியவையும் கே.ஆர்.ஜி.யின் தயாரிப்புதான்..! கடைசியாக 2009-ம் ஆண்டு மாதவன், அப்பாஸ் நடிப்பில் ‘குரு என் ஆளு’ படத்தைத் தயாரித்திருந்தார். இப்படம் தயாரித்து முடிக்கப்பட்டு 1 வருடம் கழித்தே திரைக்கு வந்தது. இந்தப் படத்தின் படு தோல்வி இவரையும் சினிமாவுலகத்தின் ஓரத்தில் தள்ளியது..! 

தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கெனவே 4 ஆண்டு காலம் தலைவராகப் பொறுப்பு வகித்திருந்ததால், ஊருக்கெல்லாம் படமெடுக்க அட்வைஸ் செய்தவரின் கடைசிக் காலம் அவரை விரக்தியடைய வைத்துவிட்டது என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். தயாரிப்பாளரும் இயக்குநரை போன்று டெக்னீஷியன்தான்.. ஒரு படம் தோல்வியடைந்தாலும், அடுத்த படத்தை தயாரிக்க வேண்டும். மீண்டும் வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். கே.ஆர்.ஜி. அப்படி நினைத்துத்தான் இன்றைய ஹீரோக்கள் பலரிடமும் கால்ஷீட் கேட்டபடியே இருந்திருக்கிறார்.

ஆனால் கே.ஆர்.ஜி. ஏற்கெனவே “சுத்தமாகி”விட்டார் என்பதை உணர்ந்து, தங்களது கெப்பாசிட்டுக்கு ஏற்றபடி அவரால் செலவு செய்ய முடியாதே என்று நினைத்து பல நடிகர்களும் ஜகா வாங்கிவிட நடிகர்கள் “தயாரிப்பாளர்களை மட்டுமல்ல.. தமிழ்ச் சினிமாவையும் சேர்த்தே அழித்துவிட்டார்கள்..” என்று கோபத்துடன் பேட்டியும் கொடுத்திருந்தார்.

நான் பார்த்தவரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் அம்பாசிடர் காரில் வந்து கொண்டிருந்த கே.ஆர்.ஜி., சில மாதங்களுக்கு முன்பெல்லாம் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் வாசலில் ஆட்டோவில் வந்து இறங்கியபோது சுற்றியிருப்பவர்கள் அவரைப் பார்த்த பார்வையே வேறு.. தன் நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் சொல்லாமல் சொல்லியது போல இருந்தது..! 

சினிமாவுலகில் உச்சம் என்பது பணத்தை பத்திரப்படுத்தி வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் காலம்..! இருப்பதையெல்லாம் தொலைத்துவிட்டு மீண்டும் தேடுதல் வேட்டை நடத்தும் காலமல்ல..! 40 ஆண்டு காலமாக தயாரிப்புப் பணியில் இருந்தவர் காலம் முழுக்க தனது பணத்தை எடுத்ததும் இந்தக் கோடம்பாக்கத்தில்தான்..! இழந்ததும் இந்த கோடம்பாக்கத்தில்தான்..! 

கே.ஆர்.ஜி.யின் ஒரே மகன் கங்காதரன் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே மறைந்துவிட்டதால், அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் பணியைத் தொடர அவரே தனி மனிதராக அலைய வேண்டிய சூழல்.. இப்படி குடும்பச் சூழலும் அவருக்கு எதிரியாகப் போய்விட, மனிதர் ரொம்பவே தளர்ந்து போயிருந்தார் தனது இறுதிக் காலத்தில்..!

அண்ணன் சேகரன், கே.ஆர்.ஜி.யின் இந்தச் சோகத்தை வெளிப்படையாகச் சொல்லி முடித்த கணத்தில் அரங்கம் நீண்ட மெளனம் காத்தது..  இதற்குப் பின்பும் அன்றைய தினம் காலையில் மரணமடைந்த சினிமா புகைப்படக் கலைஞர் சித்ரா சுவாமிநாதனை பற்றியும் பேசினார் சேகரன். 



சினிமாவில் ஒரு சந்தோஷமான நிகழ்ச்சிக்கு வந்திருக்க, சோகத்தை கொடுக்கிறாரே என்று சினிமாவுலகம் தவிர்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் இருக்க, அதைவிட எதிரில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த கேமிரா கவிஞர் பாலு மகேந்திராவின் முகம் இறுகிப் போய்க் கிடந்தது. இதற்கான காரணத்தை அவர் தன் பேச்சில் குறிப்பிட்ட போது பத்திரிகையாளர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியும் கிடைத்தது..

“இங்கே கலைப்புலி சேகரன் சொன்ன பின்புதான் எனதருமை நண்பர் கே.ஆர்.ஜி. காலமாகிவிட்டார் என்பதே எனக்குத் தெரிந்தது.. மேலும், புகைப்படக் கலைஞர் சித்ராவும் இறந்தது எனக்குத் தெரியாது.. இப்போதுதான் கேள்விப்படுகிறேன்..” என்றார்.

இதைக் கேட்டு சேகரனே அதிர்ச்சியாகிவிட்டார்..! இத்தனை தொலைத் தொடர்பு வசதிகள் இருந்தும், இது போன்ற முக்கியத் தகவல்கள் ஒருவரை சென்றடையாததை என்னவென்று சொல்வது..? இத்தனைக்கும் பாலுமகேந்திராவின் அலுவலகத்தில் எப்போதும் சினிமா துறை இளைஞர்கள் இருப்பார்கள். சினிமா பி.ஆர்.ஓ.க்களை கேட்டால் அவருக்கும் மெஸேஜ் அனுப்பினோம் என்கிறார்கள்..! எப்படி இவருக்குத் தெரியாமல் போனது என்று தெரியவில்லை..!

ஒருவருடைய கஷ்ட கால வாழ்க்கைகூட சக நண்பர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் இறப்புச் செய்தி கூட தெரியாமல் இருப்பது ரொம்பவே துரதிருஷ்டம்..! 

சகுனி - சினிமா விமர்சனம்

23-06-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையங்கத்திற்கு வருபவர்களை ஏமாற்றியனுப்புவது தமிழ்ச் சினிமாவுக்கு புதிதல்ல.. ஆனால் தோல்வியடையக் கூடாது என்று நினைக்கும் ரசிகர்கள் கூட்டத்தைக் கையில் வைத்திருக்கும் ஸ்டார் நடிகர் இப்படிச் செய்யலாமா என்று புலம்புகிறார்கள் சினிமா புள்ளிகள்..!


ரொம்பச் சின்னக் கதை. லாஜிக்படி பார்த்தா அதுவே மிகப் பெரிய ஓட்டை.. நாட்டரசன்கோட்டை செட்டி நாட்டு அரண்மனையை தனது பூர்வீக வீடாகக் காட்டும் கார்த்தி, அது ரயில்வே மேம்பாலத்துக்காக இடிபடப் போகிறது என்பதை அறிந்து முதல் அமைச்சரிடம் மனு கொடுத்து தனது வீட்டை காப்பாற்ற வேண்டி சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் சி.எம். அவரை அவமானப்படுத்திவிட பல சகுனித்தனங்கள் செய்து அவரை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் கதை. படத்தின் பிற்பாதி கதை 2 மாதங்களுக்கு முன்பு வெளிவந்த “மை” படத்தின் கதைதான்..! ஆனால் அதில் இருந்த அழுத்தம்கூட அதைவிட அதிக பட்ஜெட்டில் தயாராயிருக்கும் இப்படத்தில் இல்லை என்பது வருத்தத்திற்குரியது..!

“முடிச்சை அவுக்குறதே சுவாரஸ்யம்ன்னா அவிழ்க்க முடியாத முடிச்சு போடுறது அதைவிட சுவாரஸ்யம்”ன்னு இடைவேளை பிளாக்ல கார்த்தி சொல்லிட்டு நம்மளை டீ சாப்பிட வெளில தள்ளினாரு.. ஆனால் அந்த சுவாரஸ்யம் இதுதானா என்னும்போது நமக்குள்ளேயே அசுவாரஸ்யம்தான் ஏற்படுகிறது.. எதுக்கு இவ்வளவு பில்டப்பு..?

முதலில் கதையின் அடிப்படை லாஜிக்கே தப்பா இருக்கு..! ஊருக்கே சோறு போட்டு தன் சொத்துக்களை அழிச்ச குடும்பம்னா, அதே ஊருக்கு ரயில்வே பாலம் வரணும்னு தானாவே முன் வந்து வீட்டை கொடுத்திருக்க வேண்டாமா..? பின்ன எதுக்கு எங்களோட ஒரே சொத்து அதுதான். அதையும் இழந்திரக் கூடாதுன்னு சொல்லி சென்னைக்கு ஓடணும்..! 


இன்னொரு லாஜிக் ஓட்டை..! இப்போது எந்த மாநகராட்சியில் மேயரை, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். மேயர் பதவிக்கும் தனியாக தேர்தல் நடக்கிறதே..! நகராட்சித் தலைவர் பதவிக்குக் கூட தேர்தல்தான். கவுன்சிலர்கள் மாநகராட்சிகளில், நகராட்சிகளில் துணைத் தலைவரை மட்டுமே தேர்வு செய்கிறார்கள்..! இந்தக் கூத்தை என்னன்னு சொல்றது..? என்ன கொடுமை சரவணா இது..?

முதல் பாதியில் சந்தானம் இல்லையெனில் நமக்கு நாமே சூஸையிடிங் பார்ட்டாகத்தான் இருந்திருக்கும். கமல், ரஜினி, தேவி என்ற ஆரம்பக்கட்ட அறிமுகங்கள் ஜோராக இருந்தாலும், போகப் போக அவர்களின் அலும்பு அலுப்புத் தட்டி, நிஜமாகவே கமல், ரஜினியை கிண்டல் செய்கிறார்களோ என்று எண்ணவும் தோன்றுகிறது..! இந்த சலம்பலையும் சமாளிக்க வேண்டி அதற்காக சந்தானத்தை டயலாக் பேச வைத்து ஏதோ சமாளித்திருக்கிறார் இயக்குநர். இந்தக் கூத்தின் துவக்கத்தில் கார்த்தியின் அறிமுகமும், அதைத் தொடர்ந்த பாடலுமே படத்தின் கதியை நிர்ணயித்துவிட்டது எனலாம்.. என்னே ஒரு கிரியேட்டிவிட்டி..? 

படத்தின் பிற்பாதியில் சகுனித்தனமான ஆட்டம் என்று சொல்லி சப்பையான காட்சியமைப்புகளை வைத்து ரொம்பவே வெறுப்பேற்றியிருக்கிறார்கள். நம்ப முடியாத சப்பைகளுக்கு சகுனியாட்டம் என்று எவன் சொன்னான் என்று தெரியவில்லை..! பார்த்த மாத்திரத்தில் ராதிகா கார்த்தியின் பேச்சைக் கேட்பதும், ராதிகாவை போலவே கோட்டா சீனிவாசராவும், நாசரும் நடந்து கொள்கிறார்கள் என்பதும் திரைக்கதை எவ்வளவு சொத்தை என்பதைத்தான் காட்டுகிறது.. இயக்குநர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்..!

கொஞ்சம் கலைஞர், கொஞ்சம் வைகோ, கொஞ்சம் ஜெயலலிதா என்று மூவரையுமே படத்தின் பல இடங்களில் மறைமுகமாக சுட்டிக் காட்டிருக்கிறார் இயக்குநர். இந்த மறைமுகம் என்றைக்கு தமிழ்ச் சினிமாவில் மறைந்து, தைரியமாக முகம் காட்டி குற்றம்சாட்டப் போகிறார்களோ தெரியவில்லை.. அந்தத் தைரியமிக்க ஒரு இயக்குநரை நான் சாவதற்குள்ளாகவாவது பார்க்க விரும்புகிறேன்..!

கார்த்திக்கு இது 6-வது படம். ஆனால் பருத்தி வீரனில் பார்த்த அதே கார்த்திதான். இதுலேயும். நடிகர்கள் தங்களுக்கென்று தனியாக ஒரு நடிப்புப் பாதையை ஏற்படுத்திக் கொண்டால்தான், சினிமாவுலகில் நீடித்து நிலைக்க முடியும். இதை கார்த்தியண்ணேகிட்ட யார் போய்ச் சொல்றது..? இப்படியே நடிச்சாருண்ணா இன்னும் 2 படம்தான் அண்ணன் தாங்குவாருன்னு உறுதியா சொல்லிரலாம்..!

படத்தின் ஹீரோயினை போகிற போக்கில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். கண்ணு மட்டும்தான் பெரிசா இருக்கு..! இருந்தும் பிரயோசனமில்லை.. லவ் கெமிஸ்ட்ரி ஒட்டவேயில்லை என்பதுதான் உண்மை. காதலுக்கான ஒரு சின்ன பீலிங்கைகூட காட்ட முடியாமல் என்னவொரு காதல் காட்சிகள்..? பாடல்கள்..! வேஸ்ட்டு..

இன்னுமொரு மொக்கை வேஸ்ட்டு அனுஷ்கா.. இதே படத்தில் ஜோடியாகக்கூட நடிக்க வைத்திருக்கலாம். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டைவிடவும் கேவலமாக காட்டி முடித்திருக்கிறார்கள். ஒரு சின்ன ஷாட்டில் ஆண்ட்ரியாவும் வந்து போகிறார். பணம், செல்வாக்கை வைத்து இப்படியெல்லாம் செய்வதினால் எந்தப் படமும் ஜெயிக்கப் போவதில்லை..!

சந்தானம், பிரகாஷ்ராஜ், ராதிகா ஆகிய மூவர்தான் சகுனியை சனியாக்காமல் கொஞ்சம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே நடிகர் சலீம் கெளஸை, பிரகாஷ்ராஜின் கேரக்டரில் நடிக்க வைத்து முழு படத்தையும் எடுத்து ரஷ் போட்டு பார்த்திருக்கிறார்கள். படத்தில் சுத்தமாக ஈர்ப்பே இல்லை என்று விநியோகஸ்தர்கள் பேஸ்த்தடித்து விலகிய பின்பு, மீண்டும் ஒரு யோசனை வந்து அண்ணன் பிரகாஷ்ராஜை தேடிப் பிடித்து அழைத்து வந்து சலீம் கேரக்டரில் அவரை நடிக்க வைத்து மீண்டும் படத்தை எடுத்திருக்கிறார்கள். இதிலும் ஒரு வில்லங்கமாம்..! 

ஏற்கெனவே இப்படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு கோடி ரூபாயை பிரகாஷ்ராஜுக்கு கடனாகக் கொடுத்திருந்தாராம். இந்தப் படத்தில் நடித்ததற்காக 50 லட்சத்தை வைத்துக் கொண்டு மீதி 50-ஐ வெட்டுங்கள் என்று ஞானவேல்ராஜா கேட்டதற்கு, கூடுதலாக நீங்கள் 50 லட்சம் கொடுத்தால்தான் டப்பிங் என்று அடித்துச் சொல்லியிருக்கிறது செல்லம்..! பாவம்.. கடைசி நிமிடத்தில் தகராறு வேண்டாமே என்பதால் பணத்தை பைசல் செய்திருக்கிறார் ஞானவேல் என்பது சினிமாவுலகச்  செய்தி.

பிரகாஷ்ராஜ் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் நடித்துவிட்டுப் போயிருக்கிறார். அவர் வருகின்ற காட்சிகளிலெல்லாம் கார்த்தியே டம்மியாக இருப்பது இயல்பாகவே தெரிகிறது..! ரமணி ஆச்சியாக வரும் ராதிகாவின் அறிமுகக் காட்சியில் இருக்கும் அவரது கம்பீரம் அடு்ததடுத்த காட்சிகளில் அடங்கி, ஒடுங்கிப் போய்விட்டது..! எப்போதுமே சித்திக்கு கம்பீரம்தான் ஷூட்..! நல்ல கேரக்டர்.. பிற்பாதியில் சித்தியையும், பிரகாஷையும் மோத வைத்திருந்தால் திரைக்கதை நன்றாக இருந்திருக்கும். 

ரோஜா சரி.. ரோஜாவின் கணவராக வருபவர் யார் என்றே தெரியவில்லை. இப்படித்தான் கேஸ்டிங் செய்வதா..? கார்த்தியின் அத்தையாக அவர் பேசும் வசனங்களும், தனது மகளின் காதலை ஏற்க மாட்டேன் என்று சட்டென்று பேசி கார்த்தியை கட் செய்யும் காட்சியும் ரன் வேகத்தில் போக.. நமக்குத்தான் மண்டையில் ஏறவில்லை..!

சந்தானம் வழக்கம்போல அதேதான்.. நீள, நீள வசனங்களை கொஞ்சம் குறைத்துக் கொண்டு தனது உடல் மொழியை வைத்து இனிமேல் காமெடி நடிப்பைக் காண்பித்தால் நன்றாக இருக்கும்..! ஆனாலும் கதையைக் குழப்புறியே என்று அவர் கார்த்தியை கலாய்க்கும் இடத்தில்தான் அவரோடு சேர்ந்து நாமளும் காப்பாற்றப்படுகிறோம் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்..!

படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷுக்கு எது மாதிரி கதை சொல்லி பாட்டு வாங்கினார்கள் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இப்போதைய ஹாட்டான இயக்குநர்களின் முதல் பார்வையே இவர் மீதுதான் இருக்கிறது. அப்படியிருந்தும் இப்படியா..?

இப்படம் 36 கோடிக்கு விற்பனையாகியிருக்கிறது என்று 1 மாதமாக செய்தி பரப்பி பெப் ஏற்றியவர்கள், இந்தப் படத்தின் துவக்கத்தின்போதே இன்னும் கொஞ்சம் கூடுதலாக 36 நாட்கள் ஸ்டோரி டிஸ்கஷன் செய்திருந்தால் ஒருவேளை உருப்படியான கதை கிடைத்திருக்கலாம்..! 

இப்படத்தின் இயக்குநர் ஷங்கர் தயாள் பிரமிட் சாய்மீராவில் பல நாட்கள் கதை சொல்லி ஒரு வழியாக ஓகே பெற்று ஒரு திரைப்படத்தைத் துவக்கினார். அதுவும் புஸ்வானமாகி பாதியிலேயே நின்றுவிட, கடந்த சில வருடங்களாகவே முயற்சி மேல் முயற்சிகளை செய்து தனது முதல் படத்தையே மிகப் பெரிய ஹீரோவுடன் ஆரம்பித்திருக்கிறார். இந்த நல்ல வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. அடுத்த முறை ஜெயிக்கட்டும்..!

இப்படத்தின் ரிசல்ட் கேட்டு சினிமா துறையினர் வருத்தப்பட்டாலும், அஜீத் ரசிகர்கள் உள்ளுக்குள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். பில்லா-2 படத்துடன் போட்டி போட்டே தீருவது என்ற நோக்கத்தில் தியேட்டர்களை புக் செய்யும் சண்டையில் ஈடுபட்டு அது பெரிய சச்சரவு ஆன நேரத்தில்தான் சகுனியின் சில ஏரியாக்களை விலைக்கு வாங்கியிருக்கும் பில்லா-2-வின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி வேறு வழியில்லாமல் பில்லா-2-வை தள்ளிப் போடும் நிலைமைக்குப் போனார். இதனாலேயே அஜீத் ரசிகர்களின் கோபத்திற்குள்ளாகிவிட்டார் மிஸ்டர் சகுனியார்..!

இந்த ரிலீஸ் நேர யுத்தத்திற்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறார்கள் சினிமாக்காரர்கள். மங்காத்தா ரிலீஸின்போது அதன் ஒட்டு மொத்த விநியோகத்தையும் ஒரு நாளில் ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ஏற்றது. மறுநாளே மங்காத்தா விளம்பரப் போஸ்டர் மாற்றப்பட்டு ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வழங்கும் மங்காத்தா என்று பெயருடன் புதிய ஸ்டில்கள் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது. இந்த ஸ்டில்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட 4 மணி நேரத்தில் தல அஜீத்தின் உத்தரவால் மங்காத்தாவின் விநியோக உரிமை ஞானவேல்ராஜாவிடமிருந்து அதே நாளில் திரும்பப் பெறப்பட்டது. இந்தத் திடீர் திருப்பத்தை எதிர்பார்க்காத ஞானவேல்ராஜா இப்போது சமயம் பார்த்து இதற்கு பதிலடி கொடுக்கத்தான் பில்லா 2 வெளியாகும் அதே நாளில் சகுனியையும் வெளியிட வேண்டும் என்று அடம் பிடித்ததாகச் சொல்கிறார்கள். அதுக்குத்தான் இப்போ ஆப்பு கிடைச்சிரு்ககு என்று சொல்லி சிரிக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்..!

எது எப்படியோ ஒரு நல்ல எண்ட்டெர்டெயின்மெண்ட்டாக வந்திருக்க வேண்டிய படம் பாதி டெயின்மெண்ட்டாக வந்திருப்பதுதான் சோகம்..!

முரட்டுக்காளை - சினிமா விமர்சனம்

16-06-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதலில் இது போன்ற பழைய மசாலா ஹிட் படங்களை ரீமேக் செய்வதைத் தடை செய்ய வேண்டும். பழைய திரைப்படங்களின் வெற்றிக்கு அக்காலத்திய சமூகச் சூழலும், ரசிகர்களின் மனப்பான்மையும் ஒரு காரணமாக இருக்கும். அதே போன்ற சூழல்தான் இப்போதும் இருக்கும் என்று நினைத்து அவலை நினைத்து உரலை இடித்த கதையாக இப்படத்தை எவ்வளவுக்கு எவ்வளவு சுமாராக எடுக்க முடியுமோ அவ்வளவுக்கு எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள்.

ரஜினியாக சுந்தர்.சி. ஜெய்சங்கர் வேடத்தில் சுமன். சுமலதா வேடத்தில் சிந்து துலானி. ரதி வேடத்தில் சிநேகா. சுருளிராஜன் கேரக்டரில் விவேக். அசோகன் வேடத்தில் தேவன்.. என்று ஆர்ட்டிஸ்ட்டுகளை ஷிப்ட் செய்திருக்கிறார்கள். 

ஐங்கிரன் நிறுவனம் சார்பாக பர்ஸ்ட் காப்பி தயாரிப்பாளராக தாத்தாவின் மருமகன் அமிர்தத்தின் மகன் குணாநிதி அமிர்தம் தனது சூர்யா புரொடெக்சன்ஸ் சார்பில் 2008 டிசம்பரில் டெல்லி செங்கோட்டையில் ஷூட்டிங்குடன் துவங்கப்பட்ட படத்திற்கு இப்போதுதான் விடிவு காலம் பிறந்திருக்கிறது..! இதன் ஆடியோ ரிலீஸ் பங்ஷனில்கூட தாத்தா தனது பரிவாரங்களோடு கலந்து கொண்டு படத்தைப் பார்க்க தான் ரொம்ப ஆவலாக இருப்பதாகவெல்லாம் சொல்லியிருந்தார். ஆனாலும் 4 ஆண்டுகள் கழித்துதான் வெளியாகியிருக்கிறது..! ஐங்கிரனில் இப்போது பல்வேறு குழப்பங்கள். அதுதான் முக்கியக் காரணம்..!


அதே கதைதான்.. கொஞ்சம், கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள். தனது 4 தம்பிகளுடன் நிலபுலன்களுடன் வசதியாக வாழ்ந்துவரும் காளையன், பக்கத்து ஊரில் நடக்கும் ரேக்ளா ரேஸில் கலந்து கொண்டு ஜெயிக்கிறான். அந்த ஊரின் பெரும் பணக்காரரான சுமனின் தங்கை சிந்து துலானி காளையனை விரட்டி, விரட்டி காதலிக்கிறாள்.

சுமனின் தோட்டத்தில் வேலை செய்பவரின் கொழுந்தியாளான சிநேகாவை பார்த்த மாத்திரத்தில் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் சுமன்.  சிநேகா இதற்கு மறுப்புத் தெரிவிக்க.. சிநேகாவின் அக்கா கொல்லப்படுகிறாள். தன்னைத் தேடி வரும் சுமனின் அடியாட்களிடம் இருந்து தப்பிக்க காளையனின் வீட்டில் அடைக்கலமாகிறார் சிநேகா.

இதற்கிடையில் காளையன் சும்மாவே வைத்திருக்கும் நிலத்தில் கனிமம் இருப்பதை அறிந்து அதனை விலைக்கு கேட்கிறார் சுமன். காளையன் தர மறுக்கிறார். இடையில் தனது தங்கை காளையனை காதலிப்பதை அறிந்து, மச்சான் உறவுக்குள் வந்துவிட்டால் சொத்துக்களை ஆட்டைய போட்டுவிடலாம் என்று நினைத்து சிந்துவுக்கும், காளையனுக்கும் திருமண ஏற்பாடு செய்கிறார் சுமன். நிச்சயத்தார்த்த தினத்தன்று இந்த உண்மை தெரிந்து காளையன் திருமணத்திற்கு மறுத்துவிடுகிறார்.

சில, பல மோதல்கள், சவால்களுக்குப் பிறகு சிநேகாவை சுந்தர் திருமணம் நடக்கும் தினத்தன்று சுமனின் அடியாளை கொலை செய்த்தாகச் சொல்லி சுந்தரை கைது செய்கிறது போலீஸ். சுமனே கொலை செய்து தன்னை மாட்ட வைத்திருப்பது அறிந்து பாதி வழியிலேயே சுந்தர் போலீஸிடமிருந்து தப்பித்து ஓடுகிறார். அவரைத் தேடி மாவட்ட எஸ்.பி.யே காட்டுக்குள் வருகிறார். அங்கு எஸ்.பி.யை இன்ஸ்பெக்டர் சுட்டுவிட்டு சுந்தர் எஸ்.பி.யை போட்டுத் தள்ளிவிட்டதாகச் சொல்லி போலீஸ் படையை காட்டுக்குள் அனுப்புகிறார். காயமடைந்த எஸ்.பி.யை சுந்தர் காப்பாற்றி அழைத்துச் செல்ல.. சுமன் தனது அடியாட்களுடன் வந்து இவர்களைக் கொலை செய்ய முயல.. முடிவு முன்பே பார்த்ததுதான்..!

முதலில் இந்தப் படத்திற்கு யு சர்டிபிகேட் கொடுத்ததே தவறு.. ஏ சர்டிபிகேட்டுதான் கொடுத்திருக்க வேண்டும்..! அத்தனை டபுள், டிரிபுள் மீனிங் டயலாக்குகளை அள்ளித் தெளித்திருக்கிறார் விவேக். கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால்தான் புரியும் என்றாலும், இதெல்லாம் பெரிசுகளுக்கு ஓகே.. சிறிசுகளுக்கு மனக்குழப்பத்தைத்தான் கொடுக்கும். அதுவும் விவேக் ஏற்றுள்ள திருநங்கை கேரக்டர் அவ்வப்போது அவர்களது கஷ்டங்களை வெளிப்படுத்தினாலும், திருநங்கைகள் என்றாலே இப்படித்தான் பேசுவார்களோ என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. இது எதிர்மறை விபத்தாக போய்விட்டது என்பதை அண்ணன் விவேக் உணர வேண்டும்..!

சுந்தர் சி. வழக்கம்போலத்தான். அவர் ஒரு நல்ல இயக்குநர்.. நடிப்பு இனிமேல் வேண்டாம் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்துவிட்டார்..! சிந்து துலானி பாவம்.. இந்தப் படம் 2009-லேயே வெளிவந்திருந்தால் ஒரு ரவுண்டு வந்திருக்கலாம்.. அந்த அளவுக்கு கவர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார். இவருக்குச் சற்றும் குறைவில்லாமல் சிநேகாவும் அப்படியே. நல்லவேளை.. இந்தப் படத்திற்கு பிரஸ் மீட் எதையும் ஏற்பாடு செய்யாமல் விட்டுவிட்டார்கள். தப்பித்தார் சிநேகா. வந்திருந்தால் தர்மசங்கடமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்..!


அப்படி, இப்படியெல்லாம் இல்லாமல் ஸ்ட்ரெயிட்டாக போல்டாக சரோஜா கேரக்டரில் சுருளிராஜன் வேடத்தில், வாய்ஸில் கலாய்த்திருக்கிறார் விவேக். தனது கமெண்ட்ஸ்களை கொஞ்சம் குறைத்து, காட்சியின் விரசங்களையும் நீக்கச் செய்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். இவருக்கும் செல் முருகனுக்கும் இடையில் நடக்கும் அந்த 16 வயதினிலே காதலும். அதைத் தொடர்ந்த காட்சிகளும் கலகலப்பு என்றாலும், ஆத்து சீன் ரொம்ப டூ மச்சுதான்..! அதேபோல் வைக்கோல்போரில் சிநேகா ஒழிந்திருக்கும் நிலையில் சுந்தரும், அவர் தம்பிகளும் செய்யும் லூட்டியும் கண்றாவி.. எப்படி சிநேகா இதற்கு ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.. நல்ல இயக்குநர் செல்வபாரதி.. ஒரு கமர்ஷியல் வெற்றிக்காக இந்த அளவிற்கு இறங்கிப் போகணுமா என்ன..?


என்னதான் ஹீரோ, ஹீரோயின்களுக்கு மாற்று ஆட்கள் கிடைத்தாலும் இசைக்கு..???????????? ம்.. நோ சான்ஸ்.. ஒன்லி இசைஞானி  இசைஞானிதான்..! பொதுவாக எம் மனசு தங்கம் பாடலை மட்டும் ரீமிக்ஸ் செய்து கொலை செய்திருக்கிறார்கள். மற்றபடி சுந்தரபுருஷா பாடலும் கொஞ்சம் கேட்க வைக்கிறது. பாடல் காட்சியில் சிநேகா காட்டியிருக்கும் கவர்ச்சி பார்க்கவும் வைக்கிறது..! ஜோர்..!

ஏற்கெனவே பல முறை பார்த்து, பார்த்து திளைத்துப் போன படம் ரஜினியின் முரட்டுக்காளை என்பதால் இதனை ஒப்பீட்டு பார்ப்பதை தவிர்க்கவே முடியவில்லை. இதனாலேயே படத்தில் பெரும்பாலான நேரங்களில் ஒன்றியிருக்க முடியவில்லை..!

ரஜினி வேடத்தை ரஜினி மட்டுமே செய்ய முடியும் என்பதை எப்போதுதான் கோடம்பாக்கத்தின் சில்லுண்டுகள் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை..! இப்போது என்னுடைய கவலையெல்லாம், ரஜினி இந்தப் படத்தை பார்க்காமல் இருக்கணும் என்பதுதான்..!

சிநேகாவை பார்க்கணும்னா போயிட்டு வாங்க...!

கிருஷ்ணவேணி பஞ்சாலை - சினிமா விமர்சனம்

08-06-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


சினிமாவுக்கான இலக்கணத்தைத் தொடாமல் வித்தியாசமான களத்தில்,  முயற்சி செய்து பார்க்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது..!

உடுமலைப்பேட்டையில் 1950-களில் இருந்து இயங்கிவரும் கிருஷ்ணவேணி பஞ்சாலையின் வாழ்க்கைக் கதைதான் படம். ஒரு பஞ்சு மில்லின் வாழ்க்கை என்பது அதன் தொழிலாளர்களையும், அதனைச் சார்ந்த மக்களையும் உள்ளடக்கியதுதான்.. இந்த மூன்றையும் இப்படம் ஒரே தளத்தில் சொல்கிறது..!





மில்லின் நிர்வாகத்தில் மோசடி செய்ததற்காக தனது நெருங்கிய உறவினரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார் ஆலையின் முதலாளி. அவருக்குப் பின் அவரது மகன் ஆலையை பொறுப்பில் எடுத்து நடத்துகிறார். நன்றாகவே போகிறது..! கேட்கின்ற போனஸைவிடவும் அதிகமாகவே போனஸை கொடுத்து தொழிலாளர்களை சந்தோஷப்படுத்துகிறார். வீடு கட்டிக் கொடுக்கிறார். இன்னொரு பக்கம் அதே ஆலையில் வேலை செய்யும் ஹீரோவும், ஹீரோயினும் காதலிக்கிறார்கள். ஹீரோயினின் அக்காள் வேற்று ஜாதிக்காரனை திருமணம் செய்து கொள்ள.. இதனால் குடும்ப மானம் கப்பலேறிவிட்டதாகச் சொல்லி அந்த மகள் கொல்லப்படுகிறாள். இதனால் ஹீரோ, ஹீரோயின் காதல் அந்தரத்தில் நிற்க.. இன்னொரு பக்கம் மில்லும், கூடுதல் போனஸ் கேட்டு ஸ்டிரைக்கினால் மூடப்படுகிறது. இந்த வாழ்வாதாரத்தை நம்பியிருந்த மக்களின் வாழ்க்கை திசை திரும்ப.. இறுதியில் அந்த ஆலைக்கு என்ன ஆகிறது என்பதுதான் கதை..!

முழுக்க, முழுக்க மில்லின் உள்ளேயும், அதனைச் சுற்றியுமே கதை பின்னப்பட்டிருக்கிறது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மறுநாள் துவங்கும் கதை, 2007-ம் வருடம் முடிவடைகிறது.. இடையில் 1967, 75 என்று பயணித்து மெயின் கதை 1985-களில்தான் நடைபெறுவதாகக் காட்டப்படுகிறது. 

அந்தந்த வாழ்க்கைச் சூழலுக்கேற்ற கலை இயக்கம் சிறப்பாகவே செய்யப்பட்டுள்ளது. ஒளிப்பதிவும் அந்தந்த காலக்கட்டத்திற்கேற்பவே செய்யப்பட்டுள்ளதே மிகச் சிறப்பானது..! 85-களில் உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க.வின் குழந்தைவேலு, தி.மு.க.வின் சாதிக்பாட்சாவின் பெயர் முதற்கொண்டு அனைத்தையும் பார்த்து, பார்த்து செய்திருக்கிறார்கள்..!





ஹீரோ ஹேமச்சந்திரன் என்னும் புதுமுகம். அதிகமாக நடிக்க வாய்ப்பில்லை என்றாலும், இன்னும் 4, 5 படங்களுக்குப் பின்பு இவரைப் பற்றிப் பேசலாம். ஹீரோயின் நந்தனா.. ஒரு சாயலில் சினேகாவுக்கு தங்கை போல் இருக்கிறார். இதை நேரில் சொன்னபோது “நீங்க 10000-மாவது ஆள்..” என்றார். போட்டோஜெனிக் முகம். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஸ்கிரீனில் அழகாகத் தெரிகிறார். அந்த அழகுக்காகவே பாடல் காட்சிகளில் அதிக ஷாட்டுகள் மான்ட்டேஜ்களாக எடுத்துத் தள்ளியிருக்கிறார் இயக்குநர்..!





தமிழ்ப் படங்களிலேயே முதல் முறையாக கேஸ்டிங் டைரக்டர் என்ற பெருமையுடன் படத்திலும் உலா வரும் சண்முகராஜின் கேரக்டர்தான் கொஞ்சம் இடிக்கிறது. பார்ப்போரிடத்தில் எல்லாம் சாக்லேட்டை நீட்டி வழிவதும், இறுதியில் ஹீரோயினுக்காக காத்திருப்பதாகச் சொல்லி நடிப்பதும் கொஞ்சம் ஓவராகவே தெரிந்தது..! 

இவருக்கான களம் இதுவல்ல என்பது போல இன்னொரு பண்பட்ட நடிகர் பாலாசிங்கும் வீணாக்கப்பட்டிருக்கிறார். எம்.ஜி.ஆர். மேக்கப்பில் ஹீரோவுக்கு அப்பாவான அவர் படத்தில் என்ன செய்கிறார் என்பதே தெரியவில்லை. எம்.எஸ்.பாஸ்கரை காமெடிக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். கொஞ்சம்.. கொஞ்சமேதான்.. சிரிப்பு வருகிறது. இறுதியில் முதலாளிக்கு காபி கொடுக்கும் காட்சியில்தான் நிற்கிறார் பாஸ்கரண்ணே..!

முதலாளியாக ஆஹா ராஜீவ்கிருஷ்ணா..! சில முதலாளிகளின் கெத்து எப்படியிருக்கும் என்பதை சில காட்சிகளில் காட்டியிருக்கிறார். கூப்பிடு தூரத்தில் இருப்பவரை உதவியாளரைவிட்டு அழைப்பதும், பின்பு ஒரே வரியில் நலம் விசாரித்துவிட்டு சரி போ என்பதுமாக தன்னுடைய ஆளுமையை நிலை நிறுத்துவதாகச் சொல்லியிருப்பது எத்தனை பேருக்கு புரிகிறதோ தெரியவில்லை..!

முதலாளி நல்லவரா, கெட்டவரா என்றெல்லாம் ஆராய்ச்சியில் இறங்கும் அளவுக்கு காட்சிகளை வைத்துவிட்டு இறுதியில் செட்டில்மெண்ட் காட்சியில் “நல்லாயிருங்க..” ஒன்று ஒற்றை சொல்லில் சொல்லிவிட்டுப் போவதிலும், அப்போது பாலாசிங் உருகுவதிலும் ஒரு உருக்கம் இல்லாமல் இருப்பது ஏதோவொரு மிஸ்ஸிங் போல தோன்றுகிறது..!

இன்னொரு பக்கம் ஹீரோயினின் அக்கா மற்றும் அவரது குடும்பம். அவரது அம்மா ரேணுகாவின் வழக்கமான நடிப்பும், ஜாதிப் பிடிப்புள்ள வார்த்தைகளும் நம்மையும் படபட வைக்கின்றன..! இப்போதும் நாட்டில் இது போன்ற கவுரவக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. ஆனாலும் இவரது சோக முடிவு எதிர்பாராதது..!

படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார் அண்ணன் அஜயன்பாலா சித்தார். கிட்டு என்ற பெயரில் மார்க்சிய சிந்தனையாளராக உருவெடுத்து, அதன் தாக்கத்தில் எங்கோ மே.வங்கத்தில் இருந்து ஒரு அமைச்சரை வரவழைத்து அவரும் ஏதோ பேச, இவர்களும் ஏதோ புரிந்தது போல கை தட்டி, கொடியேற்றி புதிய தொழிற்சங்கத்தைத் துவக்குகிறார்களே அந்த ஒரு காட்சியிலும் நிஜம் நிழலாடுகிறது..!

மார்க்ஸூம், ஏங்கெல்ஸூம் கற்றுக் கொடுக்காததை காலம் கிட்டுவுக்கு கற்றுக் கொடுத்துவிடுகிறது.. ஊதிய உயர்வுக்காக மில்லை இழுத்து மூட வைத்து, வங்கிக் கடனுக்காக சீல் வைக்கப்பட்டு திறக்கவே முடியாது என்ற நிலையில் இந்த மார்க்சிய தோழர் மட்டும் தடம் புரண்டு சோலி குலுக்கிப் போட்டு ஜோசியம் சொல்லும் புரட்டுக்காரனாக உருமாறுவது காலத்தின் கட்டாயம் போல.. தியேட்டரே அதிர்கிறது இக்காட்சியில்..! இதேபோல் “நமது கட்சி வரலாற்றுத் தவறுகளைக்கூட மிக நாகரிகமாக ஒத்துக் கொண்ட கட்சி..” என்ற இடத்திலும் கை தட்டல் பலே..!

தொழிற்சங்கங்கள் எந்த இடத்தில் தவறுகின்றன..? தொழிலாளர்கள் எப்படியெல்லாம் மெஸ்மரிஸத்தில் மயங்குகிறார்கள் என்பதையும், தேன் தடவிய வார்த்தைகளால் அவர்களது வாழ்க்கை முடக்கப்படுகிறது என்பதையும் இயக்குநர் நாசூக்காக இதில் காட்டியிருக்கிறார். முடி வெட்டும் கடையில் கடனுக்கு இனிமேல் வெட்ட முடியாது என்பறு சொல்வதும், மளிகைக் கடையில் பணத்திற்காக அஜயனின் சட்டையைப் பிடிக்கும் காட்சியும் தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள்தான்..! ஆனால் இதில் ஜாதியும் வர்க்கமும் காணாமல் போய், பணமே பிரதானமாக இருப்பதை இயக்குநர் சுட்டிக் காட்டியிருப்பதை நாம் உணர வேண்டும். 

பக்கவாத நோயாளியான அப்பாவைக் காப்பாற்றத் துடிக்கும் மாரியம்மாள்.. அவளை டீஸ் செய்து அல்ப சந்தோஷத்தில் திளைக்கும் வாட்ச்மேன்.. லீவு கொடுக்க மறுத்து சண்டித்தனம் செய்யும் மேனேஜர்.. பால்காரனிடமே என்ன ஜாதி என்று கேட்கும் ரேணுகா.. ராஜீவ்விடம் போனஸ் விவகாரத்தில் கறாராக இருக்கும்படி சொல்லும் புதிய நிர்வாகி.. கவுரவம் போச்சு என்பதை ரிக்கார்டு பிளேயராக திருப்பித் திருப்பிச் சொல்லி ரேணுகாவின் மனதைக் கரைக்கும் அவரது தம்பி என்று சின்னச் சின்ன கேரக்டர்களையும் மனதில் பதிய வைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

ரகுந்தனின் தேனான இசையில் ஆத்தாடியும், ஆலைக்காரியும் சக்ஸஸ் ஆகியிருக்கின்றன.. இதில் மான்டேஜ் காட்சிகளை பாடல்கள் ஒலிபரப்படாமலேயே ஷூட் செய்திருக்கிறார் இயக்குநர்.. புதுமைதான்..! ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் ஒரு பீரியட் பிலிமிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படமும் உணர்த்தியிருக்கிறது..! துவக்கத்தில், செவர்லெட் கார் வயல்காட்டின் நடுவே பயணிக்கும் அந்த லாங் ஷாட்டிலேயே கவர்ந்துவிட்டார் ஒளிப்பதிவாளர்..! எடிட்டிங் காட்சியில் அண்ணன் காசிவிஸ்வநாதனின் கச்சித்ததில் பல இடர்பாடுகள்கூட நறுக்கப்பட்டு தவிர்க்கப்பட்டுள்ளது.. பாராட்டுக்கள்..!

தொடர்ச்சியாக மில், காதல், போனஸ், ஷண்முகராஜ் என்று சுற்றிச் சுற்றியே வருவதால் சில இடங்களில் அயர்ச்சி ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. அதே சமயம் சினிமாத்தனம் எதிலும் தென்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இயக்குநர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் என்பதும் புரிகிறது. இதனாலேயே பல காட்சிகள் நாடகத்தனமாக படமாக்கப்பட்டிருக்கிறதோ என்ற பீலிங் வருவதையும் தவிர்க்க முடியவில்லை..!  முழுக்க, முழுக்க சினிமாத்தனங்களையே பார்த்து பார்த்து மூளை மழுங்கடிக்கப்பட்டிருக்கும் சூழலில், இது போன்ற திரைப்படங்களும் தேவையாகத்தான் உள்ளன..! 

மிகக் குறைந்த பட்ஜெட்டில், டிஜிட்டல் கேமிராவில், அறிமுக ஹீரோ, ஹீரோயின்களோடு நல்ல அழுத்தமான, வித்தியாசமான கதையைச் சொல்ல முன் வந்திருக்கும் இயக்குநர் தனபால் பத்மநாபனுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்..! இதனை வரவேற்க வேண்டியது ரசிகர்களின் கடமையும்கூட..!


கண்டதும் காணாததும் - சினிமா விமர்சனம்

04-06-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


முற்காலத்தில் பிட்டுப் படங்கள் ஓடும் தியேட்டர்களில் எதிர்பார்த்து வந்த பிட்டுகள் காட்டப்படவில்லையெனில், படம் முடிந்து வெளியேறும்போது தங்களது வெறுப்பைக் காட்ட தியேட்டரின் சீட்டுகளை 'ஒரு வழி' செய்துவிட்டு கிளம்புவது ரசிகர்களின் பழக்கம்.. விரைவில் இது போன்று பிட்டு அல்லாத சினிமாக்கள் ஓடும்போதும் நிகழும் சாத்தியங்கள் உண்டு என்பதை இந்தப் படம் நமக்கு உணர்த்துகிறது..!





ஹீரோவும், ஹீரோயினும் ஒரே காலேஜ்லதான் படிக்கிறாங்களாம். ஷேர் ஆட்டோல வரும்போது வம்பு பண்ணும் ஒருத்தனை ஹீரோ புரட்டி எடுத்தர்றாரு.. இதைப் பார்த்தவுடனேயே ஹீரோயினுக்கு வழக்கம்போல லவ்வு வந்திருது.. 2 டூயட்டை தேத்திட்டாங்க..! 


திடீர்ன்னு ஒரு நாள் ஒரு மேட்டர் புத்தகம் ஹீரோ கைல சிக்குது. வாழ்க்கைலேயே அன்னிக்குத்தான் அந்த மாதிரி புத்தகத்தை படிக்கிறார் போலிருக்கு.. படிச்சவுடனே கிக்கு ஏறிருது ஹீரோவுக்கு.. அந்த நேரத்துல ஹீரோயினும் அவரைப் பார்க்க வீட்டுக்கு வர்றாங்க.. சூடாகிப் போன காமத்துல ஹீரோயினை கட்டிப் பிடிச்சு உருள்றாரு.. தப்பிச்சுப் போகும் ஹீரோயின் ஹீரோ முகத்துல காரித் துப்பிட்டு போயிர்றாங்க.. அத்தோட லவ்வும் கட்டு..!


ஹீரோ வழக்கம்போல தாடி வளர்த்து, சோக கீதம் பாடுறாரு. ஹீரோயினுக்கு வேற இடத்துல நிச்சயமாகி கல்யாணமாகப் போற நேரத்துல இடைல புகுந்த ஒரு பிரெண்டு சேர்த்து வைக்க டிரை பண்றாரு.. இதுக்கு முன்னாடியே ஹீரோ சூஸைடு.. இதை ஹீரோயின்கிட்ட சொல்லாம விட்டுட்டு அவ வாழ்க்கையை காப்பாத்துறாரு பிரெண்டு.. இம்புட்டுத்தான் கதை..! இதுக்கு இடைல பரோட்ட சூரி, ஆர்.சுந்தர்ராஜனை வைச்சு ஏதோ ஒப்பேத்துற மாதிரி ஒரு காமெடி..!


இந்தப் படத்தோட தயாரிப்பாளர் அமெரிக்கால இருந்து வந்திருக்காரு. பேரு சங்கரநாராயணன். வருஷத்துக்கு 10 படம் பண்ணப் போறேன்னு உறுதியா சொன்னாரு.. இந்த ஒரு படத்தோட ஓடுவாருன்னு நான் உறுதியா நம்புறேன்..


பல ஊர்ல 3, 4-வது நாள்லேயே படத்தைத் தூக்கிட்டாங்க.. படத்தோட இயக்குநரோ யாருமே சொல்லத் துணியாத ஒரு காதலை இதுல சொல்லியிருக்கேன்னு மார் தட்டிப் பேசினாரு.. ஆனால் எடுத்தக் கொடுமையை நாங்க எங்க போய்ச் சொல்றதுன்னு தெரியலை..!


படத்துல ஒளிப்பதிவுன்னு ஒண்ணு இருக்கான்னே தெரியலை.. அவ்வளவு மட்டம்.. குறும்படங்கள்கூட அழகா எடுத்திருக்காங்க.. ஏதோ முன்ன பின்ன கேமிராவையே பார்த்திருக்காத ஒரு ஆள்கிட்ட கேமிராவை நீட்டியிருக்காங்கன்னு நினைக்கிறேன்..! திடீர்ன்னு லைட் வருது.. திடீர்ன்னு போகுது..! எப்போ ஸ்கிரீன் கும்மிருட்டாகும்னு யாருக்குமே தெரியலை.. அந்தளவுக்கு பெர்பெக்ட் ஒளிப்பதிவு.. வாழ்த்துகள்..!


இளையராஜாவின் பாடல்களையே மீண்டும் கேட்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். சந்தோஷம்.. இசைஞானிக்கு இப்படியொரு சீடனாவது இருக்காரேன்னு சந்தோஷப்பட வேண்டியதுதான்..! இது கெட்ட கேட்டுக்கு குத்துப் பாட்டு வேற.. அது எதுக்கு வருதுன்னுகூட லீடிங் இல்லை. பாட்டு வேணும்னு தியேட்டர்ல இருந்து யாரோ போன் அடிச்சு கேட்டாங்க போலிருக்கு..! 


இயக்கம்.. சுத்தம்.. ஹீரோ பார்க்க நல்லாத்தான் இருக்காரு. ஆனா நடிக்க வைக்கத்தான் முடியலை.. ஹீரோயின் சுவாசிகா.. இதுக்கு முன்னாடி 3 படத்துல நடிச்சதுனால அவுக பேரை காப்பாத்திட்டுப் போயிட்டாக.. ஏதோ அந்தப் பொண்ணோட கெட்ட நேரம் இங்க வந்து மாட்டிருச்சு போலிருக்கு..!


அவனவன் ஆஸ்திரேலியா, அண்டார்டிகான்னு கண்ணுல காட்டி அசர வைச்சுக்கிட்டிருக்காங்க. இந்த நேரத்துல 2 மப்ளரையும், ஸ்வெட்டரையும் போட்டுட்டு கண்ணாடி கதவுக்கு முன்னாடி நின்னுட்டா அது அமெரிக்காவாம்..! இத்தனைக் கொடுமையையும் பார்க்கணும்னு நமக்குத் தலையெழுத்து..!


“சினிமா துறைல நான் பார்க்காத வேலையே இல்லை.. அம்புட்டு வேலையையும் செஞ்சிட்டுத்தான் இப்போ இயக்குநராயிருக்கேன்”னு பேட்டி கொடுத்தாரு இயக்குநரு..!  அதுல இயக்குநர் வேலையைத் தவிர வேற ஏதாவது ஒரு வேலையை பார்த்து போயிட்டாருன்னு புண்ணியமா போகும்..!


கிளம்புங்கப்பா.. காத்து வரட்டும்..!

தடையறத் தாக்க - சினிமா விமர்சனம்

02-06-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


மாமனாரின் பணத்தில், மச்சான் தயாரிக்க.. தன்னால் இயன்ற அளவுக்கு நடித்துக் காண்பித்திருக்கிறார் நடிகர் அருண்குமார். பாவம்.. இவரும்தான் எப்படி, எப்படியோ முயற்சி செய்து பார்த்தும் அதிர்ஷ்டம் என்னும் தேவதை மட்டும் கையில் சிக்கவே மறுக்கிறது..!





செல்வா டிராவல்ஸ் என்ற பெயரில் கால்டாக்சி ஓட்டும் அருண்குமார், மிச்சமிருக்கும் நேரத்தில் மம்தா மோகன்தாஸிடம் காதலை ஓட்டிக் கொண்டிருக்கிறார். கடனை அடைக்கவில்லை என்பதற்காக தனது நண்பனை கடத்திச் சென்ற கும்பலிடம் சமரசம் பேசப் போய், அது மோதலாக உருவெடுக்கிறது. போலீஸின் முழு ஆதரவுடன் திகழும் மகா என்னும் இந்த கேங்கின் தலைவன் கொலை செய்யப்பட அந்தப் பழி அருண் மீது விழுகிறது.. மகாவின் கும்பல் கொலை வெறியோடு அருணை துரத்தத் துவங்க.. தப்பித்தாரா இல்லையா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!


110 இடங்களில் கட் செய்ய வேண்டும். இல்லாவிடில் ஏ சர்டிபிகேட்டுதான் என்று சென்சாரில் உறுதியாகச் சொல்லியும் ஏ சர்டிபிகேட்டே கொடுங்க என்று வேண்டி விரும்பி வாங்கி வந்திருக்கிறார்கள்..! இதனால் அரசிடம் வரிவிலக்கும் கோர முடியாது. தொலைக்காட்சிகளிலும் காண்பிக்க முடியாது. இதனால் சேனல் ரைட்ஸும் ஜீரோ. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாகவும் இது இல்லை..! மிக அதிகப்படியான வயலன்ஸ் காட்சிகளில் மட்டுமல்ல.. வசனத்திலும் அப்படியே..! பல இடங்களில் மியூட் செய்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த வசனங்கள் புரிகின்றன.. ஒன்று மட்டும்தான் புரியவில்லை. இந்தப் படத்திற்கு, இந்த கதைக்கு எதற்காக இத்தனை வன்முறை காட்சிகளும், வரைமுறையற்ற ஆபாசப் பேச்சுக்களும்..?


இத்தனை பிரேக்கிங் பாயிண்ட்டுகளை வைத்துக் கொண்டும் இதனை திரைக்குக் கொண்டு வந்து 100 நாட்களாவது ஓட்டியாக வேண்டும் என்று முனைப்புக் காட்டும் இந்தத் தயாரிப்பாளருக்கு எனது சல்யூட்.. இருந்தாலும் இப்படித்தான் மாமனார்கள் அமைய வேண்டும்..! அருண்குமார் ஏதோ லக்கி செய்திருக்கிறார் போலும்..!


பட், நடிப்பில் அருண்குமாரை குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும். அமைதியான, அழுத்தமான நடிப்பு.. பாத்ரும் போயிட்டு வரேன் என்று மம்தாவிடம் சொல்லிவிட்டு ரவுடிகளை வேட்டையாட வரும், அந்த வேகத்திலும், நடிப்பிலும் எந்தக் குறையுமில்லை.. இறுதிவரையில் தனது கேரக்டரை யூகிக்க முடியாத அளவுக்கே நடித்திருக்கிறார். அமைதியாக, அலட்டலில்லாமல் லவ் செய்யவும் இவரால் முடிகிறது..! 


காதல் காட்சிகளில் இவரைவிடவும் ஸ்கோர் செய்திருப்பவர் மம்தாதான்..! நோயின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர் என்ற அறிகுறியே தெரியாமல், அருணை நினைத்து மருகுவது, உருகுவது, கெஞ்சுவது என்று பல வேடங்களில் ஜமாய்த்திருக்கிறார். என்ன குரல்தான் கொஞ்சம் உதைக்கிறது.. என்னடா என்று அருணை அழைக்கும்போது மட்டும்தான் குரல் பிடிக்கிறது..! சிவப்பதிகாரத்திற்குப் பிறகு இப்போதுதான் தமிழில் நடிக்கிறார் என்று நினைக்கிறேன். நல்ல நடிகைதான்.. ஆனால் நம்ம ஊர் இயக்குநர்களுக்கு இவரின் ஹோம்லி லுக் பிடிக்கவில்லை போலும்..!


“அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க. வர்றதுக்கு அரை மணி நேரமாகும். அதுக்குள்ள உனக்கு வேணும்னா என்னை என்ன வேண்ணாலும் செஞ்சுக்க..” என்ற இந்த வசனத்துக்காகவே இந்தப் படத்துக்கு ஏ சர்பிடிகேட் கிடைத்திருக்கிறது என்றால் அது தப்புமில்லை.. மிகையுமில்லை..! 


பிராவை வைத்து பல காமெடிகளும், காட்சிகளும் ஏற்கெனவே நிறைய வந்துவிட்டன. ஜட்டி மட்டும்தான் பெண்டிங்கில் இருந்தது.. இப்போது அதையும் செய்துவிட்டார் இயக்குநர். வாரத்தின் 7 நாட்களும் மம்தா பயன்படுத்திக் கொள்ள ஜட்டி வாங்கிக் கொடுக்கும் அருண்குமாரின் அந்தக் காட்சியை அனைத்து சேனல்களும் மீண்டும், மீண்டும் ஒளிபரப்பி இந்தப் படத்தின் வெற்றிக்கு உதவி செய்யலாம்..!


எழுதி, இயக்கிய மகிழ் திருமேனி கெளதம் வாசுதேவன் மேனனின் உதவியாளராம். முதற்பாதியில் இடைவேளை போர்டு மாட்டும்வரையிலும் படத்தின் மீதான ஒரு எதிர்பார்ப்பை கொண்டு சென்றவர்.. பின்புதான் கோட்டைவிட்டுவிட்டார்.. அதீதமான வன்முறைக் காட்சிகளாலும், ஒரேயொரு விஷயத்திலேயே கதை ராட்டினம் சுற்றுவதால் சிறிது அசதியும் ஏற்பட்டு கடைசியில் தலைவலியே வந்துவிட்டது..! ஆனாலும் சின்னச் சின்ன விஷயங்களால் சுவாரஸ்யப்பட வைத்துள்ளார். உதாரணமாக, மகாவின் சின்ன வீடு மேட்டரை பூடகமாகக் கொண்டு சென்று புதிரை விடுவித்ததைச் சொல்லலாம். 


ஆனால், அதற்கான கிளைக்கதையாக இறுதியில் அவர் காட்டுவது பெரிய லாஜிக் ஓட்டை என்றாலும் கதையே லாஜிக்கே இல்லாததுதான் என்பதால் இதையும் கண்டும் காணாமல் போக வேண்டியதுதான். இத்தனை கொலைகளை அலட்சியமாகச் செய்யும் இவர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்க போலீஸுக்கு எத்தனை கோடிகளை வாரி இறைத்தார்களோ தெரியவில்லை..! ஊரில் ஒரு நல்ல போலீஸ்கூடவா இல்லை. ஒருவேளை பத்திரிகைகளே இல்லாத ஊராக இருக்குமோ..?


இடைவேளைக்குப் பின்பு கிடைத்த ஒரேயொரு நிம்மதி.. பாடல்கள் இல்லை என்பதுதான். முற்பாதியிலேயே காதல் பாடல்களையும், குத்துப் பாடலையும் கச்சிதமாக வைத்துவிட்டு மங்களம் பாடிவிட்டார். பிற்பாதியில் பாடல் வைத்திருந்தால் கூடுதல் தலைவலிதான் வந்திருக்கும். நன்றி இயக்குநரே..!


பாடல்களில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பூந்தமல்லிதான் புஷ்பவள்ளிதான் பாடலை எஃப்.எம்.மிலும், சேனல்களிலும் போட்டு வாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாடல் காட்சி அடல்ட்ஸ் ஒன்லிதான்..!


மைனா சுகுமாரின் ஒளிப்பதிவு குறிப்பிட வேண்டியது. அதிலும் இரவு நேரக் காட்சிகளில் கண்ணை உறுத்தாமல் எடுத்திருக்கிறார்கள்..! பாடல் காட்சிகளில் மட்டுமே சோகை போனதுபோல் தெரிகிறது..! 


ஒரே ஆள் 50 பேரை அடித்து உதைப்பது.. 100 பேர் இருந்தாலும் ஸ்பாட்டில் இருந்து தப்புவிப்பது.. இதெல்லாம் சினிமா ரூல்ஸ்படி சரிதான் என்றாலும், இந்த அளவுக்கு கொண்டு போயிருக்கக் கூடாது..! ரத்தத்தைப் பார்த்து உறைந்து போய் உட்காரும் அளவுக்கான ரத்தச் சிதறல்களையும், அருணின் ஒரு நண்பனின் படுகொலையும் திகிலூட்டுகிறது..!


84 நாட்களில் படத்தை எடுத்து முடித்துவிட்டேன் என்று இயக்குநர் சொன்னாலும், ஒன்றரை ஆண்டுகளாகியும் படத்தை ரிலீஸ் செய்யாமல், செய்ய விடாமல் தடுத்தது. செய்ய முடியாதது.. ஏன்..? யார்..? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்தால் இன்னொரு சினிமாவே எடுக்கலாம் போலிருக்கிறது..!


ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியிலேயே இயக்குநருடன் மோதுகிற அளவுக்கு தயாரிப்பாளரின் கோபம் இருந்தது.. அது ஏன் என்று இந்தப் படத்தின் ரிசல்ட்டை பார்த்தே நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம்..! கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் செலவு என்றார் தயாரிப்பாளர். 8 கோடிக்கு இதில் அப்படியென்ன செலவு செய்தார்கள் என்று தெரியவில்லை..! யாராவது கேட்டுச் சொன்னால் புண்ணியமாக இருக்கும்..!