சோக்காலி - சினிமா விமர்சனம்

27-05-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த வாரம் வெளிவந்த படங்கள் எல்லாமே அடி வாங்கிருச்சு.. எதுவும் சரியில்லாமல் போக ‘சூது கவ்வும்’, ‘எதிர் நீச்சல்’ ரெண்டு படத்துக்கும் ரிப்பீட் ஆடியன்ஸ் கூட்டமும் கூட ஆரம்பிச்சிருக்காம்..! இந்த ரெண்டு படத்தையும் தூக்க மாட்டோம்ன்னு வேற பல ஊர் தியேட்டர்காரங்க சொல்லிட்டதால, கிடைச்ச தியேட்டர்கள்ல ரிலீஸ் பண்ணியிருக்காங்க. 

‘சோக்காலி’ன்னா சொகமா, சொகத்தை அனுபவிக்கிறவன்னு சொல்றாங்க.. அப்படி ஒருத்தனோட கதைதான்.. ‘சோக்காலி’ன்ற டைட்டிலுக்கு சென்சார் போர்டுல கடைசி நேரத்துல கட்டைய கொடுத்ததால ‘சொல்லா கதை’ன்னு பெயர் மாத்தி இந்தப் பெயர்லேயே சர்டிபிகேட் வாங்கியிருக்காங்க..!


ரோஜா டிவில காம்பியரிங்கா இருக்குற ஹீரோ, தன்னோட பிரபலத்தை பயன்படுத்தி கிடைக்கிற பெண்களை தள்ளிட்டுப் போற டைப். இது தெரியாத ஹீரோயின் பரமத்தி வேலூர்ல இருந்து அடிக்கடி போன் செஞ்சு அந்தப் பாட்டை போடு.. இந்தப் பாட்டை போடுன்னு ஹீரோகிட்ட அனத்தி அவனை ஒன்சைடா லவ் பண்ணுது.. ஒரு ஜவுளிக்கடையோட ஷூட்டிங்கிற்காக பரமத்திவேலூர் வரும் ஹீரோ, ஹீரோயின்கூடயும் ஷூட்டிங்கை முடிச்சிட்டு மெட்ராஸுக்கு ஓடிர்றாரு.. 

சென்னைல ஏற்கெனவே இவர் ஏமாத்தின ஒரு பெண் இவர் மேல சேனல்ல கம்ப்ளையிண்ட் கொடுக்க வேலை போகுது. அதே நேரம் ஹீரோயினுக்கு வயித்துல குழந்தை உண்டாயிருது.. ஹீரோயின் ஹீரோவைத் தேடுது.. அதே நேரம், தன்னோட தங்கச்சி சாவுக்குக் காரணமான ஹீரோவை கொல்ல சோனாவும், தன்னோட காதலியோட சாவுக்குக் காரணமான ஹீரோவை கொல்ல இன்னொருத்தரும் முயற்சி செஞ்ச மூணு பக்கமும் மாட்டிக்கிறாரு. கடைசியா எப்படி அடிபட்டு, மிதிபட்டு குண்டடிபட்டு சாகுறாருன்றதுதான் கதை..!

ஓல்டு மாடல் கதை.. சேனல், செல்போன், டாப் டியூன்ஸ்ன்னு புது ஆங்கிள்ன்னு சொல்லியிருக்கேன்னு இயக்குநர் சரணா சொன்னாலும் அழுத்தமில்லாத கதை, திரைக்கதை, முக்கியமா நடிப்பு.. இதுனால எல்லாம் ஏதோ தூர்தர்ஷன் நாடகம் பார்க்குற மாதிரியிருக்கு..! அதுலேயும் கஞ்சா கருப்புவை வைச்சு காமெடின்னு சொல்லி எடுத்திருக்கிற கொடுமைக்கு சேனல்கள்ல போடுற மொக்கைகளே பரவாயில்லை.. அவ்வளவு வேஸ்ட்டு.. 

ஒரே ஆறுதல்.. சில காட்சிகளில் சோனா காட்டியிருக்கும் ‘நடிப்பு’த் திறமை..! இன்னும் நல்லா நடிச்சிருந்தாங்களாம்.. சென்சார் போர்டு பாவிகள்.. திருப்பிப் போடுங்க பார்க்கணும்னு கேட்டு 3, 4 தடவை சோனா சீன்ஸ்களையெல்லாம் பார்த்து பெருமூச்சுவிட்டுட்டு இதையெல்லாம் சுத்தமா கட் செஞ்சாத்தான் சர்டிபிகேட்டுன்னு சொல்லிட்டாங்களாம்.. அவ்வளவு காசு கொடுத்து நடிக்க வைச்ச ஆண்ட்டியோட நடிப்பை கட் செஞ்சதால தயாரிப்பாளர், இயக்குநர் இவங்களையும் தாண்டி படம் பார்த்த ஆயிரம் ரசிகர்களுக்கும் பெரும் வருத்தம்தான்.. எப்படியாச்சும் சென்சார் போர்டு உறுப்பினராவாவது ஆயிரணும்னு இப்பத்தான் யோசனையே வந்திருக்கு..!


ஹீரோவா சைதன்யான்னு ஒருத்தர். ஹீரோயின் சுவாசிகா.. பேமிலி முகம்.. நடிப்பைப் பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்லை.. ஏதோ தன்னால முடிஞ்ச அளவுக்கு நடிச்சிருக்காங்க ரெண்டு பேரும்.. படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் யாராவது ஒருத்தர் சீனுக்கு சீன் டபுள் மீனிங்ல பேசிக்கிட்டே இருக்கிறதால ஏதோ நடுராத்திரி வள்ளி திருமணம் நாடகம் பார்த்த மாதிரி கொஞ்சம் பீலாச்சு..!

இதுக்கு நடுவுல நடிகை பாபிலோனாவும் ஒரு சீன்ல வர்றாங்க.. ஜவுளிக்கடை விளம்பரப் படத்துல ஆடுறதுக்காக வந்தவங்களை முதல் நாள் ராத்திரியே போய் கரெக்ட் செய்ய பார்க்குறாரு ஹீரோ. "குட்டை நடிகர்கள்ல இருந்து உயரமான நடிகர்வரைக்கும் என் கேரியர்ல பார்த்திருக்கேன்.. சின்ன தொழிலதிபர்ல இருந்து பெரிய தொழிலதிபர்வரைக்கும் பார்த்திருக்கேன்.. என்கிட்டயேவா..? நீ வளர்ற பையன்.. இதுல உன்னை அழிச்சுக்காத.. போ.. போ.. போய் வேலையை பாரு.."ன்னு அட்வைஸ் செஞ்சு அனுப்புறாங்க..! அடுத்த முறை நேர்ல பார்க்கும் அந்த உசரமான நடிகர், தொழிலதிபர் கதையெல்லாம் நிசம்தானான்னு கேக்கணும்..!  

கிளைமாக்ஸ்ல வர்ற அந்த ஒரு சீனையும் பார்த்தா இயக்குநர், காதலில் ரொம்பவே அடிபட்டிருப்பாரோன்னு சந்தேகமும் வருது.. தான் ஆசைப்பட்டவரைவிடவும், தன்னை ஆசைப்பட்டவரை திருமணம் செய்வது அவரவருக்கு நல்லதுன்னு சொல்வாங்க.. அதையேதான் இதுலேயும் ஒரு மெஸேஜா சொல்லியிருக்கிறார்.. அதுக்கு இத்தனை சுத்து சுத்து சுத்தணுமா..?

இசை எஸ்.ஏ.ராஜ்குமார்.. 'ஏய் சக்கரக்கட்டி', 'வாடி வாடி வைச்சுக்குறேன்' பாடல்களைவிடவும் 'வாராவதி ஓரம்' பாடல் செமையா இருக்கு.. பாடலை தனியா கேட்டுப் பாருங்க.. ஸ்கீரின்ல ஆடின ஆட்டமும் ஜோர்..!  எஸ்.ஏ.ராஜ்குமாரின் சமீபத்தில பாடல்கள் எல்லாமே கேட்கும்படியாகத்தான் இருக்கு. ஆனா அதிகம் விளம்பரமும் கிடைக்காமல், எஃப்.எம்.களில் கூட ஒளிபரப்பா இருக்கு.. அதான் மனுஷனுக்கு பேரும் வர மாட்டேங்குது.. 'வாராவதி ஓர'த்தை டவுன்லோடு செஞ்சாவது கேட்டுப் பாருங்கப்பா..!

ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடியே எடுத்து தயாரான படம். இதுல நடிச்ச அலெக்ஸ் இறந்துபோயே ஒன்றரை வருஷம் ஆச்சு.. இத்தனை கஷ்டப்பட்டு படத்தைக் கொண்டாந்திருக்காங்க.. ஏதோ சேனல் ரைட்ஸா கொஞ்சம் காசு கிடைச்சா தயாரிப்பாளர் லைட்டா சந்தோஷப்படுவார். அதாவது அவருக்குக் கிடைக்கட்டும்..!

நேரம் - சினிமா விமர்சனம்

17-05-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“ஆவீன மழைபொழிய இல்லம் வீழ 
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ 
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட 
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச் 
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத் 
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக் 
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் 
குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே..”

கி.பி. 1800-களில் இராமச்சந்திரக் கவிராயர் எழுதிய இந்த பாடலின் விளக்கம் இதுதான் :

“வீட்டில் பசு மாடு கன்று போட்டிருக்கிறது. கடும் மழையால் வீடு இடிந்து விழுந்திருக்கிறது.. வீட்டில் மனைவி நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கிறாள். வேலைக்காரன் திடீரென்று இறந்துவிட்டான்.. வயலில் ஈரம் காய்ந்துவிடும் என்று பயந்து நெல் விதை போட வயலுக்கு ஓடுகிறான். வழியிலேயே அந்த விதை வாங்க கடன் கொடுத்தவன் கொடுத்த கடனுக்கு பதில் சொல்லு அவன் வேட்டியை பிடித்திழுக்கிறான். அவனது நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாக சாவு செய்தி வருகிறது.. சம்பந்தி வீட்டில் இருந்து வீட்டுக்கு திடீரென்று ஆட்கள் வந்திருக்கிறார்கள். கடன்காரர்களை மல்லுக்கட்டி அகற்றிவிட்டு வயலுக்குள் ஓடியவனை பாம்பு கொத்துகிறது.. பாம்புக் கடிக்கு முதலுதவியைச் செய்துவிட்டு வயலுக்குள் ஓடியவனை அரசு அதிகாரிகள் வரி எங்கே என்று கேட்டு மடக்குகிறார்கள். அதே நேரம் ஊர்க் கோவிலின் அன்றைய கொடை அவனது குடும்பம் என்பதால் அதைக் கேட்டு குருக்கள் வீட்டுக்கு வந்து நிற்கிறார்..” 

- இத்தனை பிரச்சினைகளும் ஒருவனுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து தொடர்ந்து நடந்தால் அவன் என்ன ஆவான்..? செத்து சுண்ணாம்பாகிவிட மாட்டானா.. என்கிறார் கவிராயர். 

இதற்கெல்லாம் அடிப்படையான விஷயம் நேரம்தான்.. நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடந்தால் அது நல்ல நேரம்.. கெட்ட விஷயங்களே தொடர்ந்து நடந்தால் அது கெட்ட நேரம்.. ஒவ்வொரு நல்ல நேரம் முடிந்து கெட்ட நேரமும், கெட்ட நேரம் முடிவுக்கு வந்து நல்ல நேரமும் தொடங்கும் என்பது நமது வாழ்க்கையின் நியதி.. இதைப் புரிந்து கொண்டால் நமக்கு எப்போதுமே நல்ல நேரம்தான் என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர். கதையும் அதுதான்..!


மல்டி நேஷனல் கம்பெனியில் பணியாற்றும் ஹீரோ வெற்றிக்கு அமெரிக்காவில் நடக்கும் ஒரு அசம்பாவித பாதிப்பினால் தொடர் பாதிப்பாகி வேலை பறி போகிறது. இதனால் காதலியுடன் நடக்கவிருக்கும் திருமணம் நிற்கிறது.. தங்கையின் திருமணத்திற்கு பணமில்லாமல் வட்டிராஜா என்னும் கொடுமைக்கார வட்டிக்காரனிடம் கடன் வாங்க நேரிடுகிறது.. வட்டிப் பணத்தை குறித்த நேரத்தில் கட்டமுடியாமல் போகும் ஒரு நாளில் வெற்றிக்கு என்னென்ன தோல்விகள் பரிசாகக் கிடைக்கின்றன என்பதையும், அது எப்படி அதே நாளில் சால்வ் ஆகிறது என்பதையும் அருமையான திரைக்கதையால் அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். 

வட்டிராஜா.. அவனது கூட்டாளிகள்.. வெற்றி... ஹீரோயின் வேணி.. அவளது அப்பா, அம்மா, போலீஸ் இன்ஸ்பெக்டர், மாணிக்கம், அவரது அண்ணன்.. பிக்பாக்கெட் திருடர்கள்.. அவர்களது ஒற்றுமை.. அவர்கள் எடுக்கும் திடீர் முடிவு.. மாணிக்கம்-வேணி சந்திப்பு.. வெற்றி-மாணிக்கம் சந்திப்பு.. இடையில் குறுக்கிடும் வெற்றியின் மச்சான், வட்டிராஜா- ஆட்டோ டிரைவர் சந்திப்பு.. சார்லியின் அந்த வெறித்தனமான சிரிப்பு..! வாவ்.. வாவ்.. என்று சொல்ல வைக்கிறது திரைக்கதை..! நூல் பிடித்தாற்போல் அனைத்து கேரக்டர்களையும் அழகாகக் கொண்டு சென்று அனைவருக்கும் காட்சிகளை அடுத்தடுத்து வைத்து, வட்டிராஜாவின் திடீர் முடிவை சஸ்பென்ஸாக வைத்து அதன் பின் அதனை காண்பித்திருக்கும் அந்த உத்தி.. இயக்குநர் மூளையை கசக்கிப் பிழிந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..!

புதுமுகம் நிவின் ஹீரோவாக நடித்திருக்கிறார்.. புதுமுகம் என்றே சொல்ல முடியவில்லை.. அந்த வயதுக்கேற்ற கேரக்டர் என்பதால் உணர்ந்து நடித்திருக்கிறார்..! இந்த கேரக்டரில் வேறு தமிழ் பிரபலங்கள் நடித்திருந்தால் படம் இந்நேரம் ஹிட் என்றே செய்திகள் வந்திருக்கும்..! முதல் டூயட் பாடலின் மாண்டேஜ் ஷாட்டுகளில் ஹீரோவும், ஹீரோயினும் பேசாமலேயே நடித்திருக்கிறார்கள்.. அசத்தல் இயக்கம்..!


ஹீரோயின் நஸ்ரியா நஸீம். சிவப்பு குளோப்ஜாமூன்..! நல்லதொரு அறிமுகம் தமிழுக்கு. நாசியில் இருந்து உதட்டிற்கு கீழிறங்கும் அந்த பிரிவில் இருக்கும் இரட்டை வழிப் பாதையும், பொங்கி வரும் புனல் போன்ற அந்த அகண்ட விழிகளும் சொக்க வைக்கின்றன..! சின்னச் சின்ன ரொமான்ஸ்களிலும், “முகத்தையா பார்த்த..?” என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திருக்கும் அந்தச் சின்ன க்யூட் ஷாட்டிலும் மின்னுகிறார்.. இந்தப் பொண்ணை நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டால் ஒரு பெரிய ரவுண்டு வருவார்..! நடனம் எப்படி என்றுதான் தெரியவில்லை.. அடுத்தப் படத்தில் தெரிந்து கொள்ளலாம்..!

வட்டிராஜாதான் வாழ்ந்திருக்கிறார். என்ன மாடுலேஷன்..? பார்த்து பார்த்து சலித்துப் போன வில்லன் கேரக்டர்தான் என்றாலும் சின்னச் சின்ன ஆக்சன்களில் நம்மை கவர்கிறார். சாப்பிட்டுக் கொண்டே சார்லியை மிரட்டும் காட்சியில் அவரது அலட்சிய நடிப்பில் நம்மை உள்ளே இழுத்துவிட்டார்.. 'சூது கவ்வும்' படத்தில் அப்பாவியான கேரக்டரில் நடித்த சிம்ஹா, இந்த கேரக்டரில் கொடுத்திருக்கும் நடிப்பை நம்பவே முடியவில்லை..! இந்தப் பட வெற்றியின் முதல் ஓட்டு, இவருக்குத்தான்..! பீடியை குடித்துக் கொண்டே அன்னார் செய்து வரும் தொண்டினை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம். இவர் சம்பந்தப்பட்ட எந்தக் காட்சியிலும் லாஜிக் மீறாமல் பார்த்துக் கொண்டதற்காகவும் இயக்குநரை பாராட்ட வேண்டும்..! இந்த மாதிரியான தாதாக்களிடம் முட்டாள் அடியாட்கள்தான் இருப்பார்கள் என்பதை இந்தப் படத்திலும் சொல்லியிருக்கிறார்கள். கடைசியில் அந்த இருவரும் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் அந்த வாக்குவாதமே ஒரு அபத்தக் காமெடி.. ஆனாலும் ரசிக்க முடிகிறது..!

பிக்பாக்கெட்காரர்களின் திடீர் முடிவும், அதைத் தொடர்ந்த வட்டிராஜாவின் விரட்டலும் படத்தின் பிற்பாதியில் திரைக்கதையின் வேகத்தைக் கூட்டியிருக்கிறது..! சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டியாக பிக்பாக்கெட்டுகளில் ஒருவன் தேமே என்று போய்க் கொண்டிருக்கும் ஹீரோவை வழிச்சண்டைக்கு கூப்பிடும் அந்தக் காட்சி மகத்தான காமெடி.. ச்சும்மாவே முகத்தைக் காட்டியே காமெடியை வரவழைத்துவிட்டார் இயக்குநர்..! 'சூது கவ்வும்' படத்தில் தண்ணி பார்ட்டியாக நடித்திருக்கும் ரமேஷ் திலக்கும் இதில் ஒரு பிக்பாக்கெட்..!  வளர்ந்து வரும் நடிகர்கள் தொடர்ச்சியாக படங்களில் வலம் வருகிறார்கள்.. வாழ்த்துகள்..!

இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள் மூவர். இன்ஸ்பெக்டரான ஜான் விஜய்.. ஹீரோயின் அப்பாவான தம்பி இராமையா.. மாணிக்கத்தான் அண்ணனான நாசர்.. சளைக்காமல் மூவரும் விளையாடியிருக்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷனில் வெள்ளையடிக்கச் சொல்லிவிட்டு எப்போதுதான் முடியும் என்று அவ்வப்போது போலீஸ் அதட்டலோடு கேட்கும் ஜான் விஜய்யின்  நடிப்பை ரசிக்க முடிகிறது..! தொப்பியை மாட்டிக் கொண்டு ஸ்டைலாக கிளம்புங்க என்று சைகை காட்டியபடியே வரும் அந்த ஷாட்டை மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்..!

தம்பியின் தூக்கத்துக்காக பாட முனைந்து பாடல் வராமல் தவிக்கும் நாசர்.. தண்டம் டெக்னாலஜிஸ் என்ற பெயருக்கு அவர் சொல்லும் விளக்கம்.. வட்டிராஜா விஷயத்தில் தன் பெயரை கோர்த்துவிடும் டெக்னிக்.. தன்னிடமே கதை அளக்கும் இன்ஸ்பெக்டர் ஜான்விஜயிடம் பஞ்ச் டயலாக் சொல்லும் அழகு.. எல்லாமே நாசரால் பின்னப்பட்டிருக்கிறது.. வெல்டன் ஸார்..! 

இப்படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.. மிக இளம் வயதில் சினிமாவுக்குள் நுழைந்து பார்க்காத வேலையே இல்லை என்கிற அளவுக்கு பலதரப்பட்ட வேலைகளையும் பார்த்துவிட்டு பின்பு கடைசியாகத்தான் இயக்கத்திற்கு வந்திருக்கிறார். திருப்பூரைச் சேர்ந்த கோரல் விஸ்வநாதன் என்ற இப்படத்தின் தயாரிப்பாளரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.. இயக்குநர் கேரளா என்பதால் மலையாளத்திலும் அப்படியே எடுத்துவிடலாம் என்ற கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டு படமெடுக்க அனுமதித்திருக்கிறார்.படம் ஒரு வாரத்திற்கு முன்பே கேரளாவில் ரிலீஸா சூப்பர்ஹிட்டாகிவிட்டது..! 

கடவுள், நேரம், ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால் என்று ஆரம்பித்து கடைசியில் தியேட்டர் ஆபரேட்டர் வரையிலும் அனைவருக்கும் நன்றி கார்டு போட்டு தனது நன்றியினைத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர். இதுக்கே நாம தனியா ஒரு வாழ்த்து சொல்லணும் இயக்குநருக்கு.. படத்தின் எடிட்டரும் இயக்குநர்தான் என்பதால் எந்த இடத்திலும் தொய்வு வராமல், படத்தின் டெம்போ குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார்..! சிறந்த எடிட்டராகவும் வருவார் போலும்..!

இந்தப் படத்தில் எனக்கு இருக்கும் ஒரு குறை.. பின்னணி இசைதான்.. கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு இதைத்தாண்டி ஐந்தாவதாக நடிப்பைக் காட்ட உதவியிருக்க வேண்டிய பின்னணி இசை, இதில் பல இடங்களில் அனைவருக்கும் முந்திக் கொண்டு முகத்தைக் காட்டியிருப்பது பெரும் இரைச்சலைத்தான் தந்திருக்கிறது..! முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டிய விஷயம் இது..! 

புதிய இயக்குநர்கள் புதுமையாக சிந்திக்கிறார்கள்.. பட்ஜெட்டுக்குள் படமெடுக்கிறார்கள். சொன்ன சொல் தவறாது இருக்கிறார்கள். நல்ல திறமையோடு இயக்குகிறார்கள் என்றெல்லாம் பல பெரியவர்கள் மேடைதோறும் சொல்லிக் கொண்டே வருகிறார்கள். அந்த இளைய, புதிய இயக்குநர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இப்படி கூடிக் கொண்டே போவது தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு பெருமையளிக்கக் கூடிய விஷயம்..! பாராட்டுக்கள் வாழ்த்துகள் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும்..!

நேரம் - அவசியம் பார்க்க வேண்டிய படம்..! மிஸ் பண்ணிராதீங்க..!

டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய கதை..!


17-05-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உரிக்க உரிக்க ஒன்றுமேயில்லாத வெங்காயத்தைப் போலவேதான் என் வாழ்க்கையும்.. சிற்சில சமயங்களில் நடக்கும் காமெடிகளை நினைத்துப் பார்த்தால், நானெல்லாம் உலகத் தமிழர்களை இம்சை செய்யும் அளவுக்கு வளர்ந்திருப்பதே பெரிய விஷயம் என்றே எனக்குத் தோன்றுகிறது.. சோம்பேறித்தனம்.. அளவு கடந்த சோம்பேறித்தனம்.. ஆபீஸ் வேலையைத் தவிர மற்றவற்றில் ஏனோதானோவென்று பைத்தியக்காரனை போல திரியும் எனக்கு இது போன்ற அலைச்சல்கள் புதிதல்ல..!

அன்றைக்கும் வழக்கம்போல முருகனைத் திட்டிவிட்டுத்தான் வீட்டில் இருந்து கிளம்பினேன்..! அடிக்கிற வெயிலில் ஏசி காரில் போகிறவனை பார்த்து காரணமேயில்லாமல் கோபமெல்லாம் கொப்பளிக்கும் காலை நேரம்..! ஆங்காங்கே சாலைகளில் ஸ்பீடு பிரேக்கர் போட்டு வைத்து நமது வண்டியை பதம் பார்க்க வைத்திருப்பது வண்டியோட்டிகளின் நலனுக்காக அல்ல.. வசூல் வேட்டை நடத்தும் போலீஸாரின் வசதிக்காகவே என்று இப்போதுதான் சென்னைவாழ் வாகன ஓட்டிகளுக்குத் தெரிந்திருக்கிறது..!

மடுவன்கரை பாலம் தாண்டி வேளச்சேரி செல்லும் ரோட்டில் ரேஸ்கிளப் குதிரை லாயத்தின் வாசலில் ஒரு பெரிய ஸ்பீடு பிரேக்கர்.. எப்போதும் அங்கே வசூல் ராஜாக்கள் யூனிபார்மோடு நின்றிருப்பார்கள். பல நாட்கள் அவர்களை ஒரு புன்னகையுடன் கடந்து போயிருக்கிறேன்.. நாம போறதே TVS XL SUPER. இதுக்கெல்லாம் ஒரு லைசென்ஸ் தேவையான்னு, அவங்களே பீல் பண்ணித்தான் நம்மளை எதுவும் கேக்க மாட்டாங்கறாங்களோன்னு நானே நினைச்சுக்கிட்டு போயிட்டு வந்துக்கிட்டிருந்தேன்..!

அன்றைக்கு பார்த்து ஒரு கெடா மீசை இன்ஸ்பெக்டர் அங்கே வசூலில் மும்முரமாக இருந்தார். நிறைய ஹோண்டாக்கள் சிக்கியிருந்தன.. எப்பவும் துணைக்கு ஒரேயொரு டிராபிக் கான்ஸ்டபிள்தான் இருப்பார். இன்றைக்கு இரண்டு பேர் இருந்தார்கள். இவர்களும் போதாமல் பெண் கான்ஸ்டபிள் ஒருவரும் இருந்தார்..! 

இந்த டீமை பார்த்தவுடன் மெகா வேட்டை என்பதை புரிந்து கொண்டு சில இளைஞர்கள் தூரத்திலேயே வண்டியைத் திருப்பித் தப்பி ஓடிக் கொண்டிருந்தார்கள். நான்தான் “நம்மளை யார் கேக்கப் போறா..?” என்கிற அலட்சியத்துடன் வண்டியைவிட.. அந்த பெண் கான்ஸ்டபிள் என் வாழ்க்கையின் குறுக்கே.. ச்சே.. ச்சே.. என் வண்டியின் குறுக்கே வந்து நின்று கை காட்டினார்..

என்னடா இது அதிசயமா இருக்கு..? இந்த இனத்துல யாராச்சும் லிப்ட் கேக்க மாட்டாங்களான்னு ஆசையா இருக்கும்போது, இப்படி அநியாயமா போலீஸ் டிரெஸ்ல வந்து மடக்கினா எப்படின்னு நினைச்சுக்கிட்டே பக்கத்துல போயி கெத்தா “பிரஸ்” என்றேன்.. “ஓகே ஸார்.. கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க.. இன்ஸ்பெக்டர்கிட்ட பேசிக்குங்க..” என்றது அந்தத் தேன்குரல்..!(பெயர் தெரியும்.. சொல்ல மாட்டேன்) திரும்பவும் அழுத்தமாகச் சொன்னேன்.. “பிரஸ்ஸுங்க. ஆபீஸுக்கு போயிட்டிருக்கேன்..” என்றேன்.. வேகவேகமாக எனது ஐடி கார்டை எடுத்துக் காட்டினேன். அதற்குள் பக்கத்தில் வந்த டிராபிக் கான்ஸ்டபிள்.. “சரி ஸார்.. புது இன்ஸ்பெக்டர்.. எல்லாரையும் நிறுத்தச் சொல்றாரு.. லைசென்ஸை காட்டிட்டு போங்களேன்..” என்றார்.. என் கோபம் அந்த போலீஸ் மயில் மேல் பாய்ந்தது..! ஒரு முறைப்பை காண்பித்துவிட்டு வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினேன்..!

இது மாதிரி எத்தனை பேர் நேரத்தை வீணடிக்கிறானுகன்னு கோச்சுக்கிட்டே என் சட்டை பாக்கெட்டில் இருந்த டிரைவிங் லைசென்ஸை எடுத்து டிராபிக் கான்ஸ்டபிள்கிட்ட நீட்டினேன்..! அவசரமா வாங்கினவர் அதை பார்க்கக்கூட இல்லாம அப்படியே நேரா கெடா மீசை இன்ஸ்பெக்டர்கிட்ட கொண்டு போய் கொடுத்தார். நானோ கை காட்டி நிறுத்தின அந்த போலீஸ் மயிலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்..! அவ்வளவு அழகு..! அட்டக்கத்தி நந்திதாவை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருந்தது..! அதிலும் அந்த இறுக்கமான காக்கி டிரெஸ்ஸிலும் அசத்தலாக இருந்தார்.

திரும்பிப் பார்த்த என்னை இன்ஸ்பெக்டர் அங்கேயிருந்தபடியே முறைக்கிறார்.. பக்கத்துல இருந்த டிராபிக் கான்ஸ்டபிளும் என்னை முறைக்கிறார்.. இன்ஸ்பெக்டர் லைசென்ஸை கான்ஸ்டபிளிடம் கொடுத்துவிட்டு ஏதோ சொல்ல… கான்ஸ்டபிள் அதை வாங்கிக் கொண்டு நேராக என்னிடம் வந்தார்.. 

“ஏன் ஸார்.. என்னமோ பெரிசா பிரஸ்ஸுங்குறீங்க..? உங்களுக்கே பொறுப்பு வேணாமா..? இதுல உங்களுக்கு ஐடி கார்டு வேற..?” என்றார். நமக்கு ஒண்ணுமே புரியலை.. போலீஸ் மயிலும் பக்கத்தில் வந்து நின்று கொள்ள உள்ளுக்குள் ரோஷமும், தன்மானமும் தானாகவே எழுந்துவிட்டது..! “ஸார்.. இப்போ என்னாச்சு..? அதை மட்டும் சொல்லுங்க..” என்றேன். லைசென்ஸை என்னிடம் நீட்டி “டேட் பாருங்க..” என்றார் கான்ஸ்டபிள்.. வாங்கினேன்.. பார்த்தேன்.. “எக்ஸ்பயரி டேட் என்னிக்கு போட்டிருக்கு..?” என்றார் கான்ஸ்டபிள்.. அந்த இடத்தை உற்றுப் பார்த்தால் பகீரென்றது. கண்ணாடியை கழட்டியும் பார்த்தேன். தெளிவாகத் தெரிந்தது.. எனது லைசென்ஸ் காலாவதியாகி இரண்டு வருஷமாயிருச்சு..!

பக்கென்று நிமிர்ந்து பார்த்தேன். இப்போது கான்ஸ்டபிள் கூடுதல் முறைப்போடு, “என்ன ஸார் பிரஸ்ஸு..? லைசென்ஸ் முடிஞ்சு 2 வருஷமாச்சு.. அதுகூட தெரியாம இன்னும் வண்டியோட்டிக்கிட்டிருக்கீங்க..? ஆனா நாங்க மட்டும் ஒரு நிமிஷம் நில்லுங்கன்னு சொன்னா கோச்சுக்குறீங்க..?” என்றார்.. வாழைப்பழத்தை வாயில் வைத்துக் கொண்டு முழுங்குவதா வேண்டாமா என்கிற யோசனை எனக்கு..!

போலீஸ் மயில் ஒரு எகத்தாள பார்வை பார்க்க அதற்குமேல் சைட் அடிக்கும் எண்ணமே இல்லாமல் போய் “ஹி ஹி..” என்றேன்.. “ஸார்.. இந்த ரெண்டு வருஷமா நான் யார்கிட்டேயும் மாட்டலை. அதான் தெரியாம போச்சு..” என்று இழுத்தேன். “ஏன் நாங்க கேட்டாத்தான் நீங்க லைசென்ஸை பார்ப்பீங்களா..? நீங்களே செக் பண்ணிக்க மாட்டீங்களா..?” என்றார். தலையைச் சொறிந்து கொண்டே “இப்ப என்ன ஸார்.. பைன்தானே கட்டணும்.. எவ்வளவுன்னு சொல்லுங்க.. கொடுத்தர்றேன்..” என்று வேகவேகமாக பர்ஸை எடுத்தேன்..!

“ஹலோ.. நாங்க ஒண்ணும் கேஸ் பிடிக்குறதுக்காக அலையலை.. ‘அவர் இப்போவரைக்கும் கவனிக்காம இருந்திருக்காரு. அதுனாலதான் கேட்டவுடனே கெத்தா லைசென்ஸை எடுத்து நீட்டியிருக்காரு.. லைசென்ஸ் வாங்கிச் சொல்லி அனுப்பிரு’ன்னு இன்ஸ்பெக்டரே சொல்றாரு.. ஏன் ஸார் இப்படியே எங்களை நினைக்குறீங்க..? பிரஸ்.. பிரஸ்ஸுன்னு… மொதல்ல நீங்க நேர்மையா இருங்க.. அப்புறமா எங்களை சொல்லலாம். போங்க.. போங்க..” என்று சொல்லிவிட்டு அடுத்து வந்த டி.வி.எஸ். ஸ்கூட்டியை நிறுத்தப் போய்விட்டார்.

பக்கத்தில் இருந்த மயில் என்னை ஒரு பார்வை பார்க்க.. படாரென்று ஒரு சிரிப்பு சிரித்தேன்.. முதலில் சிரித்து.. பின்பு சுதாரித்து தான் போலீஸ் என்பதை உணர்ந்தோ என்னவோ முகத்தைத் திருப்பிக்கிச்சு..! இன்ஸ்பெக்டரின் அருகில் சென்று “ஸார்.. நிசமாவே நான் கவனிக்கலை ஸார்.. ஸாரி ஸார்.. சீக்கிரமா லைசென்ஸ் வாங்கிர்றேன்.. மிக்க நன்றி..” என்றேன்.. கெடா மீசை.. ஒரு வார்த்தைகூட பேசலை.. அப்படியே நம்பியார் மாதிரியே முறைச்சு பார்க்க.. ஓகே.. இந்த மரியாதையே போதுண்டா சாமின்னு கிளம்பிட்டேன்..!

மனசுக்குள் போலீஸ் மயிலுக்கு ஒரு பிளையிங் கிஸ் கொடுத்துவிட்டு, டாட்டா காட்டாமல் ஓரப்பார்வை பார்த்தபடியே வண்டியைக் கிளப்பிய எனக்கு இப்போதுவரையிலும் அந்த போலீஸ் மயிலின் ஓரக்கண் பார்வை மறக்கவில்லை..!

மறுநாளே கே.கே. நகர் ஆர்.டி.ஓ. ஆபீஸ்.. “டிரைவிங் லைசென்ஸ் நீங்க எந்த ஊர்ல, எந்த ஆபீஸ்ல வாங்கினீங்களோ, அங்கதான் போய் ரினீவல் பண்ணனும்.. இங்க செய்ய முடியாது..” என்றார்கள்.. “இப்போ மதுரைல அந்த அட்ரஸ்ல யாருமே இல்லை ஸார்.. போக, வர பணமும் செலவாகுமே..” என்று இழுத்தேன். “நாங்க என்ன பண்றது..? கவர்ன்மெண்ட் ரூல்ஸை கண்டிப்பா நாங்க பாலோ செஞ்சுத்தானே ஆகணும்.. இல்லைன்னா நீங்கதான இதுக்கும் எங்களைத் திட்டுவீங்க..?” என்று சைடாக ஒரு போடு போட்டார் டிராபிக் இன்ஸ்பெக்டர். உள்ளே நுழைஞ்சதும் ஐடி கார்டை காட்டியதன் விளைவு..!

“வேற வழியே இல்லையா ஸார்..?” என்றேன்.. “வேணும்னா சென்னை அட்ரஸை வைச்சு புதுசா லைசென்ஸ் அப்ளை பண்ணி வாங்கிக்குங்க” என்று மெல்லிய குரலில் அட்வைஸ் செய்தார்.. யோசித்தேன். “ஹலோ.. அது ஒண்ணுதான் ஒரே வழி.. டைமை வேஸ்ட் பண்ணாதீங்க..” என்றார்.. “ஓகே” சொல்லிவிட்டு புதுசுக்கு அப்ளிகேஷன் போட்டேன்..! 

டிரெயினர் சர்டிபிகேட் கொடுத்தார்கள். அது வெறும் ஏ-4 பேப்பரில் இருக்கும் ஒரு அத்தாட்சிதான்.. ஒரு மாசம் கழிச்சு வண்டியை ஓட்டி காமிச்சு லைசென்ஸ் வாங்கிக்கலாம்னு சொன்னாங்க..! ஆனா அந்த ஒரு மாசமும் வண்டியோட்டும்போது ‘L’ போர்டு மாட்டியிருக்கணுமாம்.. ஆபீஸ் போர்டுல எழுதியிருந்தாங்க.. நாம ஓட்டுற வண்டியே L போர்டு வண்டிதான். பிறகெதுக்கு L போர்டுன்னு விட்டுட்டேன்..! 

ஒரு நாள் ராத்திரி  தி.நகர்ல கண்ணதாசன் சிலையைத் தாண்டி பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷன் பின் பக்க ரோட்டுல வந்து வலது பக்கம் திரும்பும்போது போலீஸ் ஸார் ஒருத்தர்கிட்ட சிக்குனேன்.. 

“எல் போர்டு எங்க..?” 
“இந்த வண்டிக்கு எதுக்கு ஸார்..?” 
“ரூல்ஸ்ன்னு ஒண்ணு இருக்குல்ல..?” 
“எல்லாரும், எல்லா சமயமும் ரூல்ஸை அப்படியே கீப் அப் பண்றாங்களா..?”
“நல்லா பேசுங்க.. ஆனா அதை மட்டும் செஞ்சிராதீங்க..?”
“இந்த வண்டிக்கு எல் போர்டு மாட்டினா கேவலமா இருக்கும் ஸார்…?”
“இது கவர்ன்மெண்ட்டுக்கு தெரியலையே.. நாங்க என்ன செய்யறது..?”
“இப்போ என்ன செய்யணும்ன்றீங்க..?”
“பைன் 100 ரூபா.. இல்லாட்டி ஒரு 50 கொடுத்துட்டு போயிருங்க..”
“பைனையே கட்டிர்றேன்.. ரசீது கொடுங்க..”
“இதெல்லாம் விவரமா பேசுங்க.. ஆனா ஒரு போர்டு எழுத மட்டும் யோசிங்க..”
“அதெல்லாம் கவுரவப் பிரச்சினை ஸார்..” 
“சரி.. சரி.. போயிட்டு வாங்க.. நாளைக்கு போர்டு எழுதிருங்க..”
“பைன்.. ரசீது..” 
“இன்ஸ்பெக்டர் மெஷினை எடுத்திட்டுப் போயிட்டாரு. அவர்கிட்டதான் இருக்கு..”
“அப்போ இப்போ எதுக்கு இந்த என்கொயரி..?”
“அதெல்லாம் உங்களுக்கெதுக்கு..? கிளம்புங்க..”

அப்படியும் போர்டை மாட்டவில்லை.. தன்மானச் சிங்கமாக வலம்வரும் வேளையில் கேவலம் L போர்டு மாட்டி எனது பெருமையை குறைத்துக் கொள்ள விரும்பாததால் ஒரு மாத காலம் தமிழக அரசின் விதிமுறையை புறக்கணித்தேன் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..!

ஒரு மாதம் கழித்து கே.கே. பழைய பேருந்து நிலையத்தில் அன்றாடம் நடக்கும் வாகன ஓட்டிகளுக்கான டெஸ்ட்டுக்காக சென்றேன்.. வண்டியோட ஒரிஜினல் சர்டிபிகேட்டுகள், புகை பரிசோதனை சான்றிதழ், 3 புகைப்படங்கள், 300 ரூபாய் பணம் கட்டிய சலான் என்று அனைத்தையும் கையில் வைத்துக் கொண்டு எனது வண்டியுடன் தயாராகவே இருந்தேன்..!

டிரைவிங் இன்ஸ்டிடியூட் மூலமாக வருபவர்களுக்கே அங்கே முதலில் முன்னுரிமை. ஒரே வண்டியை பலரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கிறார்கள்.. எட்டு போடச் சொன்னால், ஒரு சிலர் ஒன்பது போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். கட்டாயம் ஹெல்மெட் அவசியம் என்றார்கள். சிலர் சரியாக வண்டி ஓட்டாதபோது இன்னொரு சான்ஸ் கொடுத்து அவர்களைக் காப்பாற்றினார் இன்ஸ்பெக்டர். நல்ல மனுஷன்யா. எனக்கு அலுவலகத்தில் அட்வைஸ் செய்த அதே ஆசாமி..!

எனது விண்ணப்பத்தைக் கொடுத்தேன். உதவியாளர் “எங்க உங்க வண்டி..?” என்றார். ஓடிச் சென்று எனது பி.எம்.டபிள்யூ.வை காட்டினேன்.. ஐஸ்வர்யாராயை பார்க்க வந்து பிந்துகோஷை பார்த்த அதிர்ச்சியில் உதவியாளர் வாய் பிளந்துவிட்டார்.. நானோ வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு தயாராக இருக்க.. உதவியாளர் இன்ஸ்பெக்டரிடம் எனது விண்ணப்பத்தைக் கொடுத்து ஏதோ சொல்ல.. இன்ஸ்பெக்டர் என்னை அழைத்தார்.

வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு அருகில் போனேன்.. “என்ன ஸார் இது..?” என்றார். “வண்டி ஸார்..” என்றேன்.. “அது தெரியுது.. வண்டி நம்பர் என்ன..?” என்றார். TN 07 Q 7803 என்றேன். “நான் அதைக் கேக்கலை.. வண்டில நம்பர் பிளேட் எங்கன்னு கேட்டேன்..?” என்றார். திக்கென்றானது. திரும்பிப் பார்த்தேன். அட நெசம்தான். என் காதல் வாகனத்தின் முன் பகுதியில் முந்தைய நாள்வரையிலும் பளிச்சென்று தெரிந்து கொண்டிருந்த நம்பர் பிளேட்டை காணவில்லை.. தேடு தேடு என்று தேடினேன்.. பின்னாடியெல்லாம் போய் தேடினேன்..

“ஹலோ.. முன்னாடி இருக்கற பிளேட்டைத்தான் கேட்டேன்..?” என்றார் மறுபடியும்.. “ஹி.. ஹி.. ஸாரி ஸார்.. எனக்குத் தெரியலை.. எங்கயாவது விழுந்துருச்சுன்னு நினைக்கிறேன்..” என்றேன்..! “ஏன் ஸார்.. இப்படி டிப்டாப்பா ஐடி கம்பெனி மாதிரி வேலைக்குப் போகத் தெரியுது.. கொஞ்சம் வண்டியை நல்லவிதமா பார்த்துக்கத் தெரியாதா..? இப்போ நாங்க என்ன செய்யணும்னு சொல்லுங்க..?” என்றார்...!

“இல்ல ஸார்.. நிஜமாவே நான் கவனிக்கலை. இல்லாட்டி நான் இன்னிக்கு வந்திருக்கவே மாட்டேன்..” என்றேன்.. “வண்டி ஓனர் யாரு..?” என்றார். “நான்தான் ஸார்..!” “வண்டிய வாங்கி 10 வருஷமாச்சே.. லைசென்ஸ் இல்லாமலேயே இதுவரைக்கும் வண்டி ஓட்டுனீங்களா..?” என்றார். கலவரமானது எனது வயிறு.. சுற்றி 20 பேர் நின்று கொண்டிருக்க மானம் போகுதேன்னு கவலை வேற..!

பக்கத்தில் போய் “ஸார்.. முன்னாடியே மதுரைல வாங்கினது.. தேதி முடிஞ்சு போச்சு.. சென்னை அட்ரஸை வைச்சு வேற புதுசு வாங்கிக்கன்னு நீங்கதான் சொன்னீங்க..!” என்றேன்.. சற்றுத் தள்ளி என் முகத்தை பார்த்துவிட்டு நியாபகம் வந்ததை போல தலையைத் தேய்த்துக் கொண்டார்..! ஒவ்வொரு திங்கள்கிழமை மட்டுமே நம்ம முகம் பளிச்சுன்னு இருக்கும்ன்றது அவருக்குத் தெரியாதுல்ல.. அதான் குழப்பமாயிருச்சு..!

இதுக்கு மேல எதுவுமே சொல்லாம அந்த பேப்பர்ல சிவப்பு மைல கையெழுத்த போட்டு அதை என் கைல கொடுத்திட்டு தூரத்தில் ஒரு இடத்தைக் கை காட்டி “அங்க போய் வெயிட் பண்ணுங்க..” என்றார்..! நம்ம வாய் சும்மா இருக்குமா..? “அப்போ ஓட்டிக் காட்ட வேணாமா ஸார்..?” என்றேன்.. இன்ஸ்பெக்டர் முறைத்த முறைப்பு இருக்கே..! புரிந்து கொண்டு நடையைக் கட்டினேன்..!

11 மணிக்கெல்லாம் பயிற்சி சோதனை முடிந்து அலுவலகத்திற்கு வரச் சொன்னார்கள். வரிசையாக போட்டிருந்த சேர்களில் ஆள் எழுந்து போகும்போதெல்லாம் கிடைத்த சீட்டுகளில் மாறி மாறி உட்கார்ந்தும் நம்மளை போட்டோ எடுக்க கூப்பிடலை.. ஆர்.டி.ஓ. ஆபீஸுக்குள்ள தரகர்களை ஒழித்துவிட்டோம்ன்னு என்னிக்கோ அமைச்சர்ன்னு சொல்லி ஒருத்தர் சட்டசபைல கூவுனாரு.. அவரை வந்து இங்க உக்காரச் சொல்லி பார்க்க வைக்கணும்..!

வெளில இருந்து வந்த ஒருத்தரே ஆபீஸ் பைலை திறந்து அதுல அப்ளிகேஷன் விவரங்களை பில்லப் செய்து கையெழுத்துக்கு மட்டும் காது குடைஞ்சுக்கிட்டிருந்த அலுவலரிடம் தள்ளிவிட்டார். அந்த ஒரு வேலையை செய்றதுக்கு அந்தாளு அவ்ளோ யோசிக்கிறாருய்யா.. இன்னும் சிலர் கொண்டு வரும் அப்ளிகேஷன்களுக்கு அவர்களே சீல் எடுத்து குத்திவிட்டு நம்பரை மட்டும் அலுவலரிடம் சொல்லிவிட்டு கையோடு எடுத்துக் கொண்டு உள்ளே ஓடினார்கள்.. ஓடிய வேகத்தில் திரும்பி வந்து விண்ணப்பதாரர்களை உள்ளே அழைத்துச் சென்று போட்டோ எடுக்க வைத்தார்கள்.. என்னைய மாதிரியான உண்மையான பொழப்பத்த, நாதியத்த தமிழர்கள் வாயில் விரல் வைத்துச் சப்பிக்கொண்டு இந்தக் கூத்துக்களையெல்லாம் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தோம்..!

ஒரு வழியாக புகைப்படம் எடுத்துக் கொடுத்தவுடன், “மதியம் 3 மணிக்கு வாங்க. ரெடியா இருக்கும். வாங்கிக்கலாம்..” என்றார்கள். அது போலவே அன்று மதியம் 4 மணிக்கு சென்று எனது லைசென்ஸை பெற்றுக் கொண்டேன்..!  ஆனாலும் என் அப்பன் முருகன் இதிலும் ஒரு ஆப்படித்துவிட்டான்..  ஒரிஜினல் சர்டிபிகேட்டுகள் தேவை என்று டிராபிக் இன்ஸ்பெக்டர் கேட்டதால் எனது வண்டியின் ஒரிஜினல் ஆர்.சி.பேப்பரையும் அதனுடன் இணைத்திருந்தேன். அதனை திருப்பிக் கேட்க மறந்துவிட்டேன்..!

எனது வண்டியின் இன்ஸூரன்ஸ் பாலிஸி முடிந்துவிட்டதால் அதை ரினீவல் செய்ய போன இடத்தில் தேதி முடிந்து வந்தால், ஒரிஜினல் ஆர்.சி.பேப்பர் இருந்தால்தான் செய்ய முடியும் என்றார்கள். வீட்டில் தேடிப் பார்த்து களைத்த பின்பே இதன் ஞாபகம் வந்தது.. மறுபடியும் ஆர்.டி.ஓ. ஆபீஸ் சென்று கெஞ்சி கூத்தாடி பார்த்தேன்.. அதில் ஜெராக்ஸ்தான் இருக்கிறது. ஒரிஜினல் இல்லை என்கிறார்கள். ஒருவேளை அன்றைக்கு ஜெராக்ஸ் எடுத்த இடத்தில் விட்டுவிட்டேனா என்றோ தெரியவில்லை..!  இல்லாவிடில் புதுசா அப்ளிகேஷன் போட்டு வாங்கணுமாம்.. அதுக்கு வேற தனியா அலையணுமா..? முருகா.. 

இதாவது பரவாயில்லை.. இன்னும் ஒரு பிரச்சினை இருக்கு பாருங்க..! இந்தியக் குடிமகன் என்ற அங்கீகாரம், பாஸ்போர்ட் நம்ம கையில் இருந்தால்தான் உண்மையாம்..!  வாங்கிய பாஸ்போர்ட்டும் காலாவதியாகி 1 வருஷமாச்சு.. அடுத்து அங்கேதான்..!

எடுறா வண்டியை..!

நாகராஜன் சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ. - அமைதிப்படை - 2-ம் பாகம் - சினிமா விமர்சனம்

11-05-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே...!

1994-ல் வெளியாகி தமிழக அரசியல் தொடர்பான படங்களில் முதலிடம் பிடித்து ஒரு டிரெண்ட் செட்டராக உருவான அமைதிப்படையின் இரண்டாம் பாகம், எதிர்பார்ப்புகளை சற்றே கூட்டியிருந்தாலும் முழு திருப்தியாக இல்லை என்பதுதான் உண்மை.

மணிவண்ணனின் இயக்கத்தில் இது 50-வது படம்.. சத்யராஜுக்கு நடிப்பில் இது 200-வது படமாம்.. இருவருக்கும் முதற்கண் எனது வாழ்த்துகள்..!


முதல் பாகத்தில் இறந்து போன நாகராஜசோழன் இந்த முறை எம்.எல்.ஏ.வாகவே இருக்கிறார். தனது அரசியலை ஒழிக்க நினைக்கும் தற்போதைய முதல்வரை, பிளாக்மெயில் செய்து துணை முதல்வர் பதவியில் அமர்கிறார். ஓமணாம்பாளையம் அருகேயிருக்கும் காட்டுப் பகுதியை அழித்து அங்கே ஒரு தொழிற்சாலையை கொண்டு வர விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தனது மகன் மூலமாக கூட்டணி வைக்கிறார். காட்டை அழித்து கமிஷன் சம்பாதிக்க நினைக்கும் அவரை மலைவாழ் மக்கள் கூட்டணி எதிர்க்கிறது. அதிகார, ஆள் பலத்தை வைத்து அவர்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் நாகராஜசோழனுக்கு எதிர்ப்புகள் கூடுகிறது. நாகராஜசோழனை எதிர்க்கும் வன இலாகா அதிகாரிகள் நடுரோட்டில் கொல்லப்படுகிறார்கள். சிபிஐ விசாரணையும் நடக்கிறது.. இறுதியில் மக்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் கதை.. முடிவில் இன்னொரு பாகமும் வரும் என்கிற பயமுறுத்தலையும் செய்திருக்கிறார் மணிவண்ணன்..!

இன்றைய தமிழக, இந்திய கேடு கெட்ட அரசியல்வியாதிகள் இருக்கின்றவரையில் மணிவண்ணன் மாதிரியான வசனகர்த்தாக்களுக்கு கொண்டாட்டம்தான்.. திரைக்கதைக்கும், நக்கலுக்கும் புதிய, புதிய செய்திகளை அவர்களே வாரி வழங்கியிருக்கிறார்கள்.  இலவசமாக அனைத்தையும் கொடுத்து ஏமாற்றும் அரசுகளில் ஆரம்பித்து “இலவசமாக கரெண்ட் கொடுக்க முடியாது.. அதுனால ஜெனரேட்டர் கொடுத்து நம்ம கமிஷனை ஆரம்பிப்போம்..” என்ற மணிவண்ணன் ஐடியாவில் துவங்கும் கிண்டல்கள் கடைசிவரையிலும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றன..!

கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த் என்று அனைத்து கட்சியினரையும் முடிந்த அளவுக்கு வாரியிருக்கும் மணிவண்ணன் அண்ட் கோ, கடைசி நேர மிரட்டலுக்கு பயந்து தி.மு.க. இளைஞரணி தொடர்பான வசனத்தை மட்டும் கட் செய்திருப்பது ஏனோ நெருடத்தான் செய்கிறது..!

புதுமுக ஹீரோயின்களில் கோமல்ஷர்மாதான் அசத்தியிருக்கிறார். சீமானின் முறைப்பெண்ணாக.. ஸ்கூல் டீச்சராக வரும் இவர் சத்யராஜின் கொலைப்படையினர் செய்யும் கொலையை நேரில் பார்க்கும் சாட்சியாக இருக்கிறார்.. அந்த நடிப்பை மட்டுமே சிறப்பாகச் செய்திருக்கிறார்..! மற்றபடி இவருடன் இணைந்து அறிமுகமாகியிருக்கும் மற்ற இருவரின் நடிப்பைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை..! 

சீமானுக்கு எதற்கு இத்தனை பில்டப் என்றும் தெரியவில்லை.. மலைவாழ் மக்கள் தாக்கப்படும்போதெல்லாம் முதலில் முன் வரிசைக்கு வராதவர், ஏதோ வெளியூரில் இருந்து வந்தவர் போல் செய்திகளக் கேள்விப்பட்டு பின்னர் அவர்களது போராட்டத்திற்குத் தலைமை தாங்குவதை போல ஜம்ப் செய்வது காட்சிகளில் அழுத்தம் கொடுக்காமல் போய்விட்டது..! போராட்டம் பிசுபிசுக்க போகிறது என்பது உணர்ந்து மேற்கொண்டு எந்த வழியில் செல்லும் என்பதைக்கூட சொல்லாமல் பிரபாகரன் பாணியில் ஆற்றில் குதித்து மறைவது எதைக் குறிக்கிறது என்பதை மணிவண்ணனும், சீமானும்தான் சொல்ல வேண்டும்..!

மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன் முதல்முறையாக ஒரு ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார்.. அப்பாவை போலவே நக்கல் நடிப்புக்குத்தான் வருவார் என்று நினைக்கிறேன்.. ஹீரோயிஸம் எதுவும் இல்லை.. அப்பாவிடம் அடக்கமாகவும், மனைவியிடம் பாசமாகவும் ரெண்டு டிராக்குகளில் செல்லும் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் குழப்புகிறது.. திடீரென்று சத்யராஜை எதிர்க்கும் அவரது மருமகள்.. ஒரே வீட்டிலேயே தனது மாமனாரின் செட்டப்புடன் வாழும் காட்சிகளெல்லாம் மனதில் ஒட்டவில்லை.. இந்த செட்டப்பே திடீரென்று நல்லவராக மாறுகிறாராம்..! 

வீட்டில் இருக்கும் பணம், நகைகளை பார்த்து வியப்பதும், பின்பு விசாரிப்பதும் மட்டுமே மருமகள் செய்கிறார். அடுத்த காட்சியிலேயே அவராகவே சத்யராஜிடம் விசாரணை கமிஷனே நடத்துகிறார்.. இந்தப் பணமெல்லாம் எங்கேயிருந்தது வந்தது என்று..! இது போன்று சீன்ஸ் ஜம்ப் ஆவதால் இந்தக் குழப்பத்துடனேயே கடைசிவரையிலும் பயணிக்க வேண்டியிருக்கிறது..


முதல் பாகத்தை போலவே இதிலும் ஒரு கொலை முயற்சி. முன்னதில் சுஜாதா. இதில் மருமகள்.. அதில் வரும் ஒரு வரி செண்டிமெண்ட் வசனம் இதிலும்.. “ரொம்ப வருஷமா என்கூட வாழ்ந்திட்டா.. ஒரே குத்துல.. போட்டிரு” என்ற வசனம்தான் இதில் கொஞ்சம் நீட்டமாகி மருமகள் மீது பாசத்தைக் கொட்டியிருக்கிறார்..!

எந்த சிபிஐ ஆபீஸர் போலீஸ் டிரெஸ்ஸில் விசாரிக்க வருகிறார் என்பதை சிபிஐ விசாரணை கமிஷன் வைத்துதான் கண்டு பிடிக்க வேண்டும்..! இத்தனை விஷயம் தெரிந்த மணிவண்ணனே இப்படிச் செய்யலாமா..? சத்யராஜ் துணை முதல்வர். இவருக்கே தெரியாமல் சிபிஐ விசாரணையாம்.. அதுவும் வேறொரு சத்யராஜ்.. டேபிள் டென்னிஸ் விளையாடும் துணை முதல்வரிடமே வந்து சவால் விட்டுவிட்டுப் போகிறார்.. நல்ல காமெடி இது..!

மூன்று கொலைகள் நடுரோட்டில் பட்டப் பகலில் நடக்கிறது.. அடுத்த சில நிமிடங்களிலேயே அங்கிருந்தே தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் சுடுகாட்டுக்கு.. இந்தக் காட்சிக்கு அடுத்து எத்தனையோ அரசியல் காட்சிகளை திரைக்கதையாக்கி அமைத்திருக்கலாம். மிஸ் செய்துவிட்டார் இயக்குநர்..! திரைக்கதை நொண்டியடிப்பது இங்கேயிருந்துதான்..!

இடையிடையே மணிவண்ணனின் இள வயது செட்டப், மற்றும் மகளிரணியினர் பற்றிய டபுள் மீனிங் டயலாக்குகள்.. மகளிரணிக்கு தலைவராக போக வேண்டுமென்ற சத்யராஜின் விருப்பம்.. சத்யராஜின் ஜட்டியை வைத்து ஒரு கண்றாவி டயலாக்.. இப்படி நக்கல் என்று சொல்லியே பிளாக் ஹியூமர் காமெடியை செய்திருக்கிறார்கள்..! 

ஆஸ்தான ஒளிப்பதிவாளர் டி.சங்கரின் கேமிரா சிற்சில காட்சிகளில் அசத்தல்.. அந்த ஓணாம்பாளையம் ஒத்தப் பாலம் காட்சியும், சத்யராஜின் வீடு தென்படும் காட்சிகளிலும் அழகாக படம் பிடித்திருக்கிறார். ஜேம்ஸ் வசந்தனின் இசை சத்யராஜ் அண்ட் மணிவண்ணன் லொள்ளுவில் கற்பூரமாக கரைந்துபோய்விட்டது.. இருக்கும் ஒரேயொரு குத்துப் பாடலும் கேட்க நன்றாக இருந்தும் டான்ஸ் பார்க்க நன்றாக இருந்ததால்  ரசிக்க முடியவில்லை.. இப்படி மொன்னையாக, மொக்கையாக பின்னணி இசை அமைக்க முடியுமென்றால், ஜேம்ஸ் வசந்தனுக்கு மட்டும் இது மிகப் பெரிய தோல்விப் படம்தான்..!

முதல் காட்சியில் முதலமைச்சர் மரங்களை வெட்ட அனுமதியில்லை என்கிறார். அடுத்தக் காட்சியில் துணை முதல்வர் வெட்டுவேன் என்கிறார்.. இதில் யாரிடம், யார் அனுமதி வாங்கியது என்றே தெரியவில்லை. முதல்வர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கத்திரிக்கோலை போட்டதில் சில காட்சிகள் அறவே நீக்கப்பட்டுவிட்டதால்தான் இந்தக் குழப்பம் என்று படம் முடிந்தவுடன் மணிவண்ணன் சொன்னார்..!

துணை முதல்வரை நீக்கும் முயற்சியில் முதல்வர் இறங்கும் காட்சி நீக்கப்பட்டதால் கொஞ்சம் குழப்பம் கூடிவிட்டது. இதனாலேயே சத்யராஜ் முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டு 17 எம்.எல்.ஏ.க்களுடன் இருக்கும் ஒரு கட்சியை தனது கட்சியுடன் இணைத்துவிட்டு அவர்களது ஆதரவில் முதல்வராகவே ஆகிவிடுகிறார். இதன் பின்பு துணிந்து காட்டுக்குள் படைகளை இறக்க.. மத்திய அரசு மேல் நடவடிக்கை எடுத்து முதல்வரை சி.பி.ஐ. மூலமாக கைது செய்கிறதாம்.. படத்தில் மிகப் பெரிய சறுக்கலே இதுதான்..! உண்மையாகவே மத்திய அரசுகள் இதை மட்டும் செய்ய முடிந்தால், நம்ம ஆத்தா இந்நேரம் கோட்டையிலா இருந்திருக்கும்..?

கிளைமாக்ஸ் டிவிஸ்ட் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அப்பன்-மகன் வெட்டுக் குத்து அடுத்த பாகத்திலும் தொடரும்போல தெரிகிறது.  அதிலாவது நாகராஜசோழனுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்கிறதா என்று பார்ப்போம்..! 

லாஜிக் பார்க்க மாட்டீங்கன்னா நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.. 

சூது கவ்வும் - சினிமா விமர்சனம்

06-05-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு காதல் கதை.. 4 டூயட்டுகள்.. ஒரு குத்துப் பாட்டு.. ஒரு சோகப் பாட்டு.. 3 பைட்டுகள்.. மொக்கை நடிகர்களை வைத்து மொக்கை நகைச்சுவை பிளாக்.. இப்படி ஒரு டெம்ப்ளேட் கதையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாவில் வெற்றி பெறுவது என்னவோ வித்தியாசமான கதைக்களன் கொண்ட சிறந்த இயக்கத்துடன் கூடிய படங்கள்தான்.. மற்றவைகளெல்லாம் தினசரிகளில் மட்டுமே வெற்றி என்று அவர்களே எழுதிய வாசகங்களுடன் விளம்பரமாக வந்து கொண்டிருக்கிறது..!

சமீப காலமாக புதிய இளம் இயக்குநர்களின் வருகை தமிழ்ச் சினிமாவுக்கு புத்துயிர் தந்து கொண்டேயிருக்கிறது.. மிகக் குறுகியக் காலக்கட்டத்தில், மிகக் குறைந்த பட்ஜெட்டில் வித்தியாசமாக, இன்றைய இளைஞர்களைக் கவருகின்றவகையில் இவர்கள் தரும் படைப்புகள் தியேட்டர்களில் கொண்டாடப்படுகின்றன..! 

இனி தமிழ்ச் சினிமா இயக்குநர்களின் பாடு பெரிதும் திண்டாட்டம்தான்.. எந்த மாதிரி படமெடுத்தால் ஓடும் என்பதற்கு ஒரேயொரு வழிதான் உள்ளது. அது முற்றிலும் புதுமையாக இருந்தாக வேண்டும். பார்வையாளனுக்கு அவன் அதுவரையில் பார்த்திராத வகையில் காட்சிகளைத்  தர வேண்டும்.. இது இருந்தால்தான் வசூல் கல்லா கட்டும். இல்லையெனில் எத்தனை பெரிய இயக்குநர் என்றாலும் பெப்பேதான் என்பதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது இந்தப் படம்..!




சற்றே மனம் பிறழ்ந்த நிலையில் இருக்கும் விஜய் சேதுபதி, ஒரு சின்ன டைப் கிரிமினல்.. ஆள் கடத்தல் தொழில் செய்யும் இவருடன் சந்தர்ப்பவசத்துடன் கூட்டணி சேரும் 3 இளைஞர்களும் ஒரு அமைச்சரின் மகனைக் கடத்துகிறார்கள். அமைச்சரின் மகனோ இவர்களுடனேயே கூட்டணி சேர்ந்து பணத்தை பங்கீட்டுக் கொள்ள விரும்ப.. அதற்கும் தலையசைக்கிறார்கள். வேன் விபத்துக்குள்ளானதில் அந்தத் திட்டம் பணால் ஆனாலும், நேர்மையான அமைச்சரின் தீவிர முனைப்பினால் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் இன்ஸ்பெக்டர் பிரம்மா சென்னைக்கு மாற்றலாகி வந்து இவர்களைத் தேட.. இவர்கள் தப்பித்து ஓட.. கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் கதை..!

வழக்கம்போல யதார்த்தத்தைக் காட்டுகிறேன் என்று படம் நெடுகிலும் தண்ணியடிக்கும் காட்சிகளும், சிகரெட் பிடிக்கும் காட்சிகளும் வலம் வருகின்றன.. கிரிமினல்களில் சின்ன, பெரிய என்றெல்லாம் வித்தியாசமில்லை.. அனைவருமே ஒன்றுதான் என்பதுபோல் காட்டியிருக்கிறார்கள்..!

படத்தில் பெரிய ரசிப்பே படத்தில் நடித்தவர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான்..! நயன்தாராவுக்கு கோவில் கட்டிவிட்டு சென்னைக்கு ஓடி வரும் இளைஞன்.. குளித்து முடித்து பவ்யமாக காலையிலேயே கட்டிங் போட அமரும் இன்னொரு இளைஞன்.. ஐடியில் பணியாற்றியும் வேலை கிடைக்காத தருணத்தில் இவர்களோடு கூட்டணி வைக்கும் ஒரு இளைஞன்.. இவர்களையும் தாண்டி மனதில் நிற்கிறார் விஜய் சேதுபதி.!

இவரது காதலி உயிருடன் இருப்பதுபோலவும், இவரது கண்ணுக்கு மட்டுமே தெரிவதும், பேசுவதும் GHOST படத்தின் கதை, திரைக்கதைதான்..!  ஆனால் சுவாரசியம் பேசுகின்ற வசனத்தில் இருக்கிறது.. சொதப்பிட்டியே மாமா என்ற வசனத்தை ஹீரோயின் உச்சரிக்கும் பாணியே பிடித்துப் போய்விடுகிறது.. நல்லவேளை இந்தக் கதையை அடுத்த ரீலிலேயே உடைத்து நம் மண்டை உடைந்துவிடாமல் காப்பாற்றிய இயக்குநருக்கு நன்றி..!

அசட்டுத்தனமான காமிக்ஸ் காட்சிகள் படம் முழுவதும் நிரவியிருக்கிறது..! புட்பால் பிளேயாரான ஒரு பெண்ணை கடத்த முயற்சித்து.. அது முடியாமல் போவது.. மூன்று இளைஞர்களும் முதன்முதலில் விஜய்யுடன் இணைவது.. அமைச்சரின் மகனைக் கடத்தச் சொல்லி ஆர்டர் கொடுக்கும் ஆளைக் கண்ணைக் கட்டி அழைத்து வருவது.. அந்தாள் வரும் வழியை தெரிந்து கொண்டு பேச்சுவார்த்தையின் முடிவில் அதனைச் சொல்வது.. கடத்தலை செய்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தை விஜய் சேதுபதிக்கு உண்டாக்குவது.. வேறொரு டீம் கடத்திய பின்பு போலீஸ் டிரெஸ்ஸில் மந்திரி மகனை இவர்கள் கடத்துவது.. இந்தக் காட்சிகளிலெல்லாம் வசனமே தேவையில்லாத அளவுக்கு காமெடியாகவே படமாக்கியிருக்கிறார்கள்..! 

இதற்கு முன்னதாகவே விஜய் சேதுபதி கடத்தல் தொழிலுக்கு தான் கடைப்பிடிக்கும் கொள்கைகளை விளக்கும் காட்சியும் சூப்பர். பெரிய ஆளுகளகிட்ட கை வைக்கக் கூடாது என்ற அந்த ஒரு கொள்கையே அவருடைய ஸ்மால் டைப் கிரிமினல் மைண்ட்டை காட்டுகிறது.  பணத்தைக் கைப்பற்ற இவர்கள் பயன்படுத்தும் ரோபா ஹெலிகாப்டர் காட்சி வித்தியாசமானது.. அசட்டுத்தனம் நிறைய இருந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்..!

பிரம்மா இவர்களை ஜீப்பில் துரத்தி ஒரு முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டவுடன் இவர்களைத் தப்பிக்க வைக்க துப்பாக்கி பயன்படுத்தும் ஒரு காட்சி மட்டுமே இவர்களின் புரொபஷனல் ஆக்ட்டிங்கை தெரிய வைத்திருக்கிறார் இயக்குநர்..! இறுதிக் காட்சியிலும் தப்பித்துப் போக அத்தனை வாய்ப்புகள் இருந்தும் அமைதியாக இவர்கள் எதிர்கொள்வதுகூட படம் பார்க்கும்போது நமக்குத் தோன்றாமல் இருக்கிறது..!

மந்திரி மகனின் ஐடியாவும், அப்பா எஸ்.எம்.பாஸ்கரின் கோபமும், ராதாரவியின் விறைப்பான பேச்சும் அந்த பிளாக்கிற்கே ஒரு சுவாரசியத்தைக் கூட்டுகிறது..! உட்கார்ந்த இடத்தில் இருந்தே தனது வாய்ஸின் மூலமாகவே அழுத்தமாக நடிப்பைப் பதிவு செய்யும் திறமை ராதாரவி போன்ற ஒரு சிலருக்கே உண்டு..! கடைசியாக மந்திரி மகனையே தேர்தலில் நிற்க வைக்கச் சொல்லும் அந்த ஐடியாவைச் சொல்லும்போது தியேட்டரே குலுங்கிவிட்டது கைதட்டலில்..! 

இதேபோல் இருட்டு  அறையில் சாத்து சாத்துவென்று சாத்துகின்ற காட்சியில் “இதைத்தான் இருட்டறையில் முரட்டுக் குத்துன்னு சொல்றாய்ங்களா..” என்று கேட்கும் வசனம் பெறும் கைதட்டலை பார்த்தால் ரசிகர்கள் நகைச்சுவைக்காக எத்தனை ஏக்கமாக இருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.. 

இது போன்ற இண்ட்ரஸ்ட்டிங்கான கதைகளுக்கு பெரும் தடையே பாடல் காட்சிகள்தான். இந்தப் படத்திலும் அதுதான் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது.. காசு, பணம், துட்டு பாடல் காட்சி எடுக்கப்பட்டவிதம் அருமை என்றாலும், படத்தின் வேகத்தை அது சற்றே குறைக்கத்தான் செய்திருக்கிறது..! காமிக்ஸ் படம் போல எடுத்திருப்பதாலோ என்னவோ, இசையும் சற்று அடங்கிப் போய்த்தான் இருக்கிறது..! பின்னணி இசை யூ டியூபில் வலம் வரும் பல காமிக்ஸ் கதைகளோடுதான் ஒத்துக் போகிறது.. இதுக்கு இதுவே போதுமென்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது..!

பிரம்மா வரும்வரையிலும் எப்படி முடிப்பார்கள் என்ற ஏக்கமும், பிரம்மா வந்த பிறகு சீக்கிரமா முடிய்யா என்ற பரிதவிப்பையும் ஏற்படுத்தும் அளவுக்கு நடித்திருக்கிறார். மனிதர் பேசாமலேயே தனது இறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு செய்யும் போலீஸ் சேட்டைகள்தான் அசத்தல்.. கோளாறான துப்பாக்கியால் குண்டடிபட்டு சிக்கிக் கொள்ளும் பிரம்மா, அதே இறுகிப் போன முகத்துடன் புதிய மந்திரியின் பதவிப் பிரமாண காட்சியைப் பார்க்கும் அந்தக் காட்சி செம நரேஷன்..! 

அறிமுக இயக்குநர் நலன் குமரசாமியின்  குறும்படங்களில் இயக்கத்தைவிடவும் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளையே அதிகம் அலட்டலாக வடிவமைத்திருந்தார்.. அதுபோலவே இதிலும்.. தனது முதல் படத்திலேயே ஹிட்டடித்திருக்கும் இவரது அடுத்தடுத்த படைப்புகளும் ஜெயிக்க வேண்டுமாய் வாழ்த்துகிறேன்..!

(படம் வெளியாகி ஆறு நாட்கள் கழித்து விமர்சனம் எழுதும் பாக்கியத்தைக் கொடுத்த தமிழக மின்சார வாரியத்திற்கும், என் அப்பன் முருகனுக்கும் நன்றி..!)

எதிர் நீச்சல் - சினிமா விமர்சனம்

04-05-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதல் பாதி முழுவதும் ஒரு கதை.. இரண்டாம் பாதி முழுவதிலும் அப்படியே வேறுபட்ட ஒரு கதை.. இரண்டுக்கும் இணைப்பாக ஒரு காதல் கதை.. திரைக்கதையை ரசிப்போடு பார்க்க கதையோடு கூடிய மெல்லிய நகைச்சுவை.. கேடி பில்லாவுக்கு அடுத்து மிகப் பெரிய ஹிட்டடித்திருக்கிறது இந்தப் படம்..!

3 படத்தில் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அவசரமாக இந்தப் படத்துக்கு பூஜை போட்டார் தனுஷ்.. ஆனால் படம் எடுத்து முடித்து பாஸிட்டிவ் பார்த்தவுடன் இதுவே இன்னொரு ஹிட்டாகும் சான்ஸ் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு விநியோகஸ்தர்களின் கடனை தனியாக அடைத்துவிட்டு இந்தப் படத்தை எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விற்பனை செய்து தானும் தப்பித்து, நெளிவு, சுழிவு தெரிந்த வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் உருமாறியிருக்கிறார் தனுஷ். அவருக்கு எனது வாழ்த்துகள்..!


பெயரில் என்ன இருக்கிறது என்று சிலர் நினைக்கலாம்..! ஆனால் பெரும்பாலோருக்கு சில பெயர்கள் அவமானத்தைத் தரும் என்று நம்புகிறார்கள். அப்படியொருவர்தான் இந்தப் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன். குஞ்சிதபாதம் என்ற தனது பெயரை குஞ்சு என்று சுருக்கிக் கூப்பிடுவதால் தனக்கு பெரிதும் கேவலமாகவும், அவமானமாகவும் இருப்பதாகக் கருதி, ஹரீஷ் என்று டீஸண்ட்டான பெயராக மாற்றிக் கொள்கிறார். 

இந்தப் பெயர் மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினையினால் காதலும், கல்யாணமும் அந்தரத்தில் தொங்க.. எதையாவது செய்துதான் தனது பெயரைக் காப்பாற்ற முடியும் என்கிற எண்ணத்திற்கு வருகிறார் சிவா. தன்னிடம் இருக்கும் ஓட்டத் திறமையை வைத்து மாரத்தான் ஓட்டத்தில் ஓடி ஜெயித்து புகழ் பெற திட்டமிடுகிறார். இது பலித்ததா இல்லையா என்பதுதான் மீதி படம்..!

கண்டிப்பாக சிவகார்த்திகேயன் படத்திற்கு படம் மெருகூட்டிக் கொண்டே போகிறார் நடிப்பில்..! பிரியா ஆனந்தை பார்க்க வேண்டி பையனை வேண்டுமென்றே பள்ளிக்கு இழுத்துக் கொண்டு போவது.. பிரியாவிடம் தான் அவரை எப்போது முதன்முதலாக பார்த்தேன் என்பதை விளக்கும் காட்சியில் அவர் முகத்தை பார்க்க வேண்டுமே..? பிரின்ஸ்பால் அறையில் பையனுக்கு அறிவுரை சொல்கிறேன் என்ற பெயரில் அளந்துவிடும் வசனங்கள் காதில் விழவேயில்லை. அந்த அளவுக்கு கை தட்டல்கள்..! 

பிரியாவிடம் எப்படியாவது காதலைச் சொல்லிவிட நினைத்து இவர் செய்யும் ஒன் மேன் ஷோக்கள்.. நந்திதாவின் கதையைக் கேட்டுவிட்டு  அடக்கமான ஸ்டூடண்ட்டாக மாறி அவரிடம் காட்டும் பணிவும், அன்பும்.. ஒரு சாதாரண காமெடி ஆக்டர் என்று நினைத்து போனால் சிறந்த ஹீரோவாகவே உருமாறிப் போயிருக்கிறார் சிவா..! வாழ்த்துகள்..! இன்னும் போக வேண்டிய உயரம் நிறையவே இருக்கிறது..!

பிரியா ஆனந்த் தனது காதலை சொல்லும் காட்சியிலும், அதனை எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த சிச்சுவேஷனிலும் சொல்லித் தொலையேண்டா என்று நம்மையே சொல்ல வைக்கிறார்.. ‘வெளிச்சப் பூவே’ பாடல் காட்சியில் இவ்வளவு அழகா என்று ஏங்கவும் வைக்கிறார். ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு.. அற்புதமான படப்பிடிப்பு..! இப்படியொரு மெச்சூர்டு கேரக்டரை இவரால் செய்ய முடியுமா என்றெல்லாம் நம்மை யோசிக்கவே விடாமல் நடித்திருக்கிறார் பிரியா.. 

நந்திதாவின் உருக்கமான நடிப்பில் ‘அட்டக்கத்தி’ மறந்து போயிருந்தது.. இறுதியில் இயக்குநரே அதனை காட்டி நியாபகப்படுத்தியிருக்கிறார்..! சில ஆண்டுகளுக்கு முன்பாக நாம் பேசி, விவாதம் செய்த சாந்தி என்ற தடகள வீராங்கனையின் கதையை அப்படியே எடுத்து கையாண்டிருக்கிறார் இயக்குநர். பெண்ணல்ல.. ஆண் என்ற அந்த பரிசோதனை முடிவு அந்த சாந்தியை எப்படி முடக்கிப் போட்டதோ அதேபோல் பாதிக்கப்பட்டவர் நந்திதா என்பதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். ஒரேயொரு வசனத்திலேயே இதனைக் கடந்து போயிருக்கிறார்கள். ஆனால் நந்திதா தேர்வு இதுக்குத்தானா என்ற சந்தேகமும், கோபமும் இயக்குநர் மேல் எழுகிறது..!

சிவா இருப்பதால் படத்தை முழுவதும் நகைச்சுவையாகவே நகர்த்துவது என்று முடிவெடுத்துதான் படத்தைத் துவக்கியிருக்கிறார்கள். இந்த ஒரு விஷயத்துக்காகவே இயக்குநரை இன்னமும் கொஞ்சம் பாராட்டலாம்..! சிவா நண்பன் சதீஷ் பேச்சுகள்.. ப்ரியா எல்.ஐ.சி. பாலிஸி போட அழைப்பது.. அதே பாலிஸியில் சதீஷையும் இழுத்துவிடுவது.. மதன்பாப் மற்றும் பாவாடை சாமியின் காமெடிகள்.. மனோபாலாவின் கேரக்டர் ஸ்கெட்ச்.. அவருடைய அந்த பாடி லாங்குவேஜ் அசத்தல். வடிவேலுவுக்கு பிறகு மனோபாலாதான் இந்த விஷயத்தில் மன்னர்..! நந்திதா சொல்லித் தரும் சில டிப்ஸ்களையே நகைச்சுவை வடிவத்தில் செய்திருக்கும் இயக்குநருக்கு மேலும் ஒரு ஷொட்டு..! 

இடைவேளைக்கு பின்பு மாரத்தான் ஓட்டம் கதைக்குள் நுழைந்த பிறகு சினிமா ஹீரோ ஜெயிக்கத்தான் செய்வார் என்பது உறுதியானாலும் எப்படி காட்டப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கடைசியில் எந்தவிதப் பரபரப்பும் இல்லாமல் போனதுதான் கொஞ்சம் ஏமாற்றம்..! 

அந்த வடக்கத்திய கோச், ஜெயப்பிரகாஷ்.. நந்திதாவின் சொந்தக் கதை.. அவருடைய அப்பாவின் கேரக்டர் ஸ்கெட்ச்.. மனிதர் யாரோ..? நன்றாகவே நடித்திருக்கிறார். அந்த அப்பாவி அப்பாவின் கேரக்டர் கச்சிதமாக அவருக்குப் பொருந்தியுள்ளது..! சோகத்துக்குள் சோகமாக இத்தனையையும் நந்திதாவுக்குள் திணித்திருக்க வேண்டுமா..? ஜெமினி ராஜேஸ்வரியை பாட்டி வேடத்தில் பார்த்ததில் ஒரு சின்ன சந்தோஷம்.. 

பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளருக்கு செம வேலை என்றாலும், நயன்தாரா பாடல் காட்சியில் ரெக்கை கட்டி பறந்திருக்கிறார்.. நயன்ஸ் முகத்தில் எப்போதும் இருக்கும் 2000 வாட்ஸ் சிரிப்பு இதிலும் அப்படியே..! எப்போதுதான் மெயின் ஹீரோயினாக மீண்டும் மார்க்கெட்டை பிடிக்கப் போகிறாரோ தெரியலை.. ஆனால் நயன்ஸின் இடம் அப்படியேதான் இருக்கிறது. அந்தக் கள்ளமில்லா சிரிப்பை காண கண் கோடி வேண்டும்.. இந்தப் புள்ளைக்கு ஏன் இம்புட்டு சோதனைன்னு தெரியலை..! ‘பூமி என்னை சுத்துதே’.. ‘வெளிச்சப் பூவே’ பாடல்கள் கேட்கவும் தெளிவாகவே இருக்கின்றன.. பார்க்கவும் பிடிக்கின்றன..!

மாரத்தான் போட்டி பற்றிய அந்த ஓப்பனிங் பில்டப்.. பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட தொகுப்பு காட்சிகளை கச்சிதமாக சென்னையில் நடப்பதுபோல் எடிட்டிங் செய்திருக்கும் விதத்தை பாராட்டித்தான் ஆக வேண்டும்..! தன்னிடம் இருக்கும் திறமையை வைத்து எதையாவது செய்து சாதித்துக் காட்டுவதுதான் அவரவர்க்கு பெருமை.. பெயரில் என்ன இருக்கிறது சிறுமை என்பதை இறுதிக் காட்சியிலும் ஒரு முறை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.!

எல்லாம் இருந்தும், எல்லாம் இருந்தும் கடைசியில் அட்டக்கத்தி ஹீரோவை கொண்டு வந்து ஒரு காட்சியைச் சொருகி, தேவையில்லாமல் படத்தை மிகப் பெரிய காமெடியாக்கியிருக்க வேண்டாம்.. இது தேவையில்லாதது.. மாரத்தானோடு முடிந்திருந்தால் படத்திற்கு பெருமையாகவே இருந்திருக்கும்..!

எதிர் நீச்சல் - நன்று..!