நவீன சரஸ்வதி சபதம் - சினிமா விமர்சனம்

30-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

குடியின் தீமையைப் பற்றி விளக்கப் படமாக எடுக்க வேண்டிய படம்..! பெரும் தயாரிப்பாளர் ஒருவர் கையில் சிக்கிவிட்டதால் பெரும் பாடமாகவே எடுத்துக் காண்பித்திருக்கிறார்கள்..!


ஹீரோவாகி அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பிடிக்கத் துடிக்கும் ராஜ்குமார்.. அடுத்த எம்.பி.யாகி இன்னமும் பணத்தை சம்பாதிக்கத் துடிக்கும் சத்யன்.. சொர்ணாக்கா மாதிரியான ஒரு மனைவியிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் விடிவி கணேஷ்.. ரகசிய வியாதி மருத்துவராக திகழும் ஜெய்.. இவர்கள் நால்வரும் நண்பர்கள்.. நால்வருக்கும் ஒரு ஒற்றுமை.. மெகா குடியர்கள்..! 

குடியின் தீமைகளைப் பற்றி இவர்களை வைத்தே ஒரு நாடகம் நடத்த ஆசைப்படுகிறாராம் சிவபெருமான். ஆகவே ஜெய்யின் கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு.. ராஜ்குமாரின் புதிய பட ஷூட்டிங் துவங்கும் ஒரு வாரத்திற்கு முன்பு.. பேச்சுலர்ஸ் பார்ட்டி கொண்டாட்டத்திற்காக பாங்காங் புறப்படுகிறார்கள் நண்பர்கள். 

அங்கே வைத்து அவர்களை கடத்தும் சிவபெருமான், ஆளில்லாத ஒரு தனித் தீவில் அவர்களை கொண்டு போய்ச் சேர்க்கிறார்..! மிதமிஞ்சிய குடியால் அந்த இடத்திற்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்பதுகூட தெரியாதவர்களாக இருக்கிறார்கள் அவர்கள்.. அங்கிருந்து தப்பிச் செல்ல அவர்களுக்கு 2 முறை வாய்ப்புகள் கொடுக்கிறார் சிவன்.. அவர்கள் அதனை மிஸ் செய்துவிட.. 6 மாதங்கள் கழிந்த நிலையில் அவர்கள் செய்த பாவம், புண்ணியத்தை சீர்தூக்கிப் பார்த்து.. கடைசியாகவும் ஒரு வாய்ப்பு தருகிறார். அதில் அவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தப்பி வருகிறாகள். இப்போது அவர்களது நிலைமை ஊரில் எப்படி என்பதுதான் கடைசி ரீல் கிளைமாக்ஸ்..!?

முதலில் கதையின் அடிப்படையே தவறானது.. குடிகாரர்களையே திட்டிக் கொண்டிருக்கும் இயக்குநர், குடியைத் திறந்து வைத்திருக்கும்.. அனுமதித்திருக்கும் அரசுகளை பற்றி ஒரு வார்த்தைகூட இதில் சொல்லவில்லை..! டாஸ்மாக் கடைகளே இல்லையெனில் இங்கே குடிகாரர்களே இருக்க மாட்டார்களே.. பிறகெதற்கு இந்த அறிவுரையெல்லாம்..? வீண்தானே..? அரசை நேரடியாக திட்டி படமெடுத்தால் படம் வெளியில் வந்துவிடுமா..? வராதே..? வரலைன்னா எப்படி போட்ட காசை எடுக்கிறது..? எப்படி இயக்குநருக்கு சான்ஸ் கிடைக்கிறது..? அதுனால.. இளிச்சவாயர்கள் யாரு குடிகார மட்டைகள்தான்.. அவர்களா வீடு தேடி வந்து கேக்கப் போறாங்க..? உதைக்கப் போறாங்க..? உன்னை இல்லடா.. அவன.. அவன இல்லடா.. இன்னொருத்தனை என்று கை காட்டிவிட்டுத் தப்பிக்கலாம் இல்லையா..? அப்படித்தான் ஏதோ குடிக்கு எதிரான கதையாக ஒரு பில்டப் விட்டு... கொஞ்சம், கொஞ்சம் காமெடிகளை வைத்து படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்..!


முற்பாதி முழுவதிலுமே இவர்களைப் பற்றிய அறிமுகத்திலேயே கழிந்துவிடுகிறது..! அதிலும் கொடுமையோ கொடுமை சிவலோகத்தின் தற்போதைய செட்டிங்ஸ்..! எடுத்திருப்பது நல்ல கருத்துள்ள, அறிவுரை சொல்லும் படமாம்..! ஆனால் காட்சியமைப்போ நகைச்சுவையாக இருக்கிறது.. எது மனதில் நிற்கும்..? 

சிவலோகத்தில் வரவேற்பு என்று பெயர் எழுதப்பட்ட பகுதி.. லேப்டாப்புடன் வரவேற்பு பெண்..! முருகன் ஐபாடில் பாட்டு கேட்கிறார். நாரதரை மொபைலில் கூப்பிடுகிறார் பார்வதி.. சிவன் ஆப்பிள் மேக் கம்ப்யூட்டர் முன் பேஸ்புக்கின் முதல் பக்கத்தை ஓப்பன் செய்த நிலையில் காத்திருக்கிறார்.. நாரதர் வெயிட் தூக்க முடியாததால் வீணையைத் தூக்கிக் கடாசிவிட்டு கிடாருடன் வருகிறார்..! இவர்களது பேச்சுக்கள் எல்லாம் பாதி ஆங்கிலமும், பாதி தமிழுமாக கலாய்க்கிறார்கள்..! இப்படி எல்லாமே காமெடியாகவே இருந்து தொலைக்க.. இவர்கள் சொல்வதை மட்டும் சீரியஸாக நாம் கேட்க வேண்டும் என்கிறார்கள்..? என்ன கொடுமை சரவணா இது..?

விடிவி கணேஷின் சின்னச் சின்ன கடிகள்தான் படத்தை பிற்பாதியில் காப்பாற்றுகின்றன. இப்படி தனித்தீவில் மாட்டிக் கொண்ட பின்பும் ஜாலியாகத்தான் பொழுதைக் கழிக்கிறார்கள்.. இங்கேயும் கள்ளைக் குடித்து ஆட்டமோ ஆட்டம் ஆடுகிறார்கள்..! குடியினால்தான் இப்படி தனித் தீவில் மாட்டிக் கொண்டு அல்ல்ல்படுகிறோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்யும் காட்சிகள் இல்லாததால் எல்லாமே திராபையாக தெளிவில்லாமல் தெரிகிறது..!

2-வதாக கிடைத்த வாய்ப்பை கணேஷ் விட்டுவிடும்போதுதான் திடீரென்று ஞானதோயம் வந்து டயலாக் பேசி இனிமேல் குடிக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து கொள்கிறார்கள்..! இதனால் என்ன ஆகிவிடப் போகிறது என்றுதான் தெரியவில்லை. படத்தை முடித்தாக வேண்டிய கட்டாயம் இருந்ததால் 3-வதாக ஒரு ஆப்ஷனை கொடுத்து அவர்களைக் காப்பாற்றிவிட்டார்கள்..!

சித்த மருத்துவர் கோவை காமராஜ் கேரக்டரில் நடித்திருக்கும் சித்ரா லஷ்மணனுக்கு மிகப் பொருத்தமான கேரக்டர். ஒருவகையில் இவரும் சேலம் சிவராஜ் போலவேதான் தெரிகிறார்..! அவருடைய டயலாக் டெலிவரியே சிரிப்பை மூட்டுகிறது..! அதிலும் கடைசியில் அவரது மனைவியை அறிமுகப்படுத்தும் காட்சி செம கலகலப்பு..! ஆனால் படத்தில் முதல் சிரிப்பு வந்த காட்சியே ஹீரோயின் வீட்டில் அனைவரும் ஜெய்யின் பேட்டியை பார்க்க டிவி முன் அமர்ந்திருப்பதுதான்..! 

அதேபோல் தலையில் தேங்காய் விழுந்து அடிபட்டவுடன் சரஸ்வதி சபதம் டயலாக்குகளை அள்ளி வீசும் கணேஷின் காமெடியும் சிரிப்பை மூட்டியது..! கணேஷ் இதற்கடுத்து செய்யும் அனைத்துமே சரவெடி.. தியேட்டரில் இவருக்காகவே ஒரு கூட்டம் வருகிறது போலும்..! மனுஷன் டயலாக்குகளையும் அள்ளி வீசுகிறார்.. "ஏழாம் அறிவு படத்துலேயே போதி தர்மனை பத்தி சொல்லியிருக்காங்க..." என்று சொல்வதற்கு "சூர்யா எனக்கு டிக்கெட் கொடுக்கலப்பா..." என்று சீரியஸாகவே பதில் சொல்லும் இடம் செம செம..! சித்தப்பா, மாமா கேரக்டருக்கு மிகப் பொருத்தமானவர்தான்..!

ஜெய் வழக்கம்போல.. துள்ளி விழுகும் காதலர்.. கண்டவுடன் காதலாக.. பாடலைக் கேட்டவுடன் காதலாக இதில் மலர்கிறது.. காதலியை பார்த்து பேசி.. ஒரு அக்ரிமெண்ட்படி 2 வருடமாக பின்னாடியே அலைந்து திரிந்து காதலை ஓகே செய்ய வைப்பதும்கூட காதலர்களுக்குப் பிடித்தமான காட்சிகள்தான்..! 


ஹீரோயின்தாம்பா அழகு.. கொஞ்ச நேரமே வந்தாலும் நிவேதா தாமஸ் அழகாக நடித்திருக்கிறார்.. சத்யன், அவரது அப்பாவான சுவாமிநாதன்.. நடிகராக ராஜ்குமார்.. சிவபெருமானாக சுப்பு பஞ்சு.. நாரதராக மனோபாலா.. பார்வதியாக தேவதர்ஷிணி என்று ஆர்ட்டிஸ்டுகளை கச்சிதமாக பொறுக்கியெடுத்து நடிக்க வைத்து  வேலை வாங்கியிருக்கிறார்.. இட்ஸ் ஓகேதான்..!

பிரேமின் இசையும், பாடல்களும் ஒலிக்கின்றன.. ஆனால் பாடல்கள்தான் மனதில் நிற்கவில்லை..! ஒளிப்பதிவாளர் ஆனந்திற்கு ஒரு தனி ஷொட்டு.. கடல் பகுதியை மிக அழகாக காட்டியதற்கு..!  ஒரு புறம் கடலைத் தாண்டி சென்று மறுபுறம் மீண்டும் கடலுக்கே திரும்பி வந்து நிற்கும் காட்சியில் ஒரு பயத்தை கேமிரா மட்டுமே காட்டியிருக்கிறது.. நடிகர்கள் காட்டவில்லை..! பாங்காங் போய்தான் எடுத்தார்களா என்று தெரியவில்லை..! விமான நிலையத்தின் உட்புறம் மற்றும் சாலையில் செல்லும் காட்சிகள் மட்டுமே இருந்தன.. கிளப் டான்ஸுகளை இங்கேயே எடுத்திருக்கும் வாய்ப்புகள் உண்டு. 

இதற்குப் பெயர் பொருத்தம்கூட இல்லை.. 'நவீன திருவிளையாடல்' என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும்..! ஆனால் அப்படியொரு படம் சமீபத்தில் வெளிவந்துவிட்டதால் 'சரஸ்வதி சபத'த்தை கையில் எடுத்தார்களாம்..! தலைப்புக்காகவே இடையில் திடீரென்று சரஸ்வதிக்கு கோபம் வந்து, சிவனுடன் மோதுவதைப் போல ஒரு சப்ஜெக்ட்டை திணித்திருக்கிறார்கள்..! வெட்டி வேலை..! வேறு பெயராவது வைத்துவிட்டுப் போயிருக்கலாம். இனிமேல் தயவு செய்து இது மாதிரியான நல்ல படங்களின் தலைப்புகளை, வேறு யாருக்கும் கொடுத்து பெயருக்கு இருக்கும் ஒரு மரியாதையைக் கூட கெடுக்காதீர்கள் என்று தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்..!

ஒரு சீரியஸான சப்ஜெக்ட்டை காமெடியாகவே சொல்ல முனைந்திருப்பதால் இது  மக்கள் மனதில் நிற்குமா என்பது சந்தேகமே..? ஏனெனில் 2 மணி 20 நிமிடங்கள் ஓடும் இதனைவிடவும், ஒவ்வொரு தியேட்டரிலும் இடைவேளையில் நுரையீரல் பஞ்சு போன்ற மென்மையானது என்ற கர்ண கொடூரக் குரலுடன் ஒலிக்கும் அந்த 1 நிமிட விளம்பரப் படமே மக்கள் மனதை பெரிதும் தொடுகிறது... 

தமிழ்ப் படம் படத்தில் அமுதனிடமும், பின்பு வெங்கட்பிரபுவிடமும் இணை இயக்குநராகப் பணியாற்றிய சந்துரு இயக்கியிருக்கிறார். காமெடிகளை இன்னமும் கொஞ்சம் மெருகேற்றி இயக்கியிருக்கலாம்.. முதல் படம் என்பதால் வாழ்த்தி வரவேற்போம்..! 

ஒரு முறை பார்க்கலாம்..! 

விடியும் முன் - சினிமா விமர்சனம்

28-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


பாலாஜி கே.குமார் என்னும் ஒரு இளைஞர், இன்னுமொரு புதிய நம்பிக்கையை தமிழ்ச் சினிமாவின் மாற்று சினிமா ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறார்..! தமிழ்ச் சினிமா கலைக்கானதா..? அல்லது சமூகத்திற்கானதா? என்ற விடை தெரியாத கேள்விகளுக்கிடையில் கலையின் எடுத்துக்காட்டாய் சிற்சில படங்களே வெளிவந்து கொண்டிருக்கின்றன.. பெருவாரியன திரைப்படங்கள் சமூக அக்கறையோடு வருவதாகச் சொல்லிக் கொண்டாலும், அந்த அடையாளத்தோடுதான் வலம் வருகின்றன..! ஆனாலும் புகழ் பெறுபவை சமூகம் சார்ந்த படைப்புகள்தான்.. 

கலை என்பதன் வெளிப்பாடாக வரும் சில படங்களும் அதனதன் குறியீடாக அப்படத்தில் இடம் பெறும் கதை அல்லது சம்பவங்களை வைத்து சமூகத்திற்கு கேடானது என்று ஒதுக்கப்படுகின்றன.. அந்த ஒதுக்கப்பட்ட படங்கள்தான் சினிமாவை ஒரு துறையாக ரசிப்பவர்களையும், அதனை நேசிப்பவர்களையும் ஒருசேர ஈர்க்கின்றன..! எந்தவிதத்திலும் கலை ஆர்வலர்களால், சினிமா ரசிகர்களால் புறம்தள்ள முடியாத படங்கள் சிலவையே தற்காலத்தில் வந்து கொண்டிருக்கின்றன.. அதில் அடுத்த இடத்தைப் பிடித்திருப்பது இந்த விடியும் முன்..! 


கதையாக பார்த்தால் நாம் பார்க்க விரும்பாததுதான்.. ஆனால் இதன் சிறப்பான இயக்கமும், செய்நேர்த்தியும் படத்தை இறுதிவரையிலும் பார்க்க வைக்கிறது.. சஸ்பென்ஸ் திரைப்படங்களின் வெற்றியே அதன் ரகசியத் தன்மை இறுதிவரையில் காப்பாற்றப்படுவதுதான்.. இதில் இறுதியில் சொல்லப்படும் கதைதான் படத்தின் சஸ்பென்ஸ்.. ஒரு படத்தின் சஸ்பென்ஸ்தான் கதை.. கதைதான் சஸ்பென்ஸ் என்பதே வித்தியாசமாக இருக்கிறதல்லவா..?

13 வயது சிறுமியை கொலை செய்யத் துடிக்கும் 3 பேர்களிடமிருந்து அவளைக் காப்பாற்றத் துடிக்கும் பாலியல் தொழிலாளி பூஜாவின் ஓட்டத்தில் இருந்துதான் கதை துவங்குகிறது..! ஒவ்வொரு ரீலுக்கும் ஒவ்வொரு கதையாக முடிச்சை அவிழ்த்துக் கொண்டே போய் இறுதியில்தான் அதற்கான விடை கிடைக்கிறது..!  


சிங்காரம், லங்கன், மணி, சின்னைய்யா, ரேகா, நந்தினி, தேவநாயகி என்று இந்தக் கதாபாத்திரங்களின் பெயர்கள், படம் பார்த்து 4 நாட்களாகியும் இன்னமும் உதட்டில் இருந்து தரையிறங்க மறுக்கிறது..!

வேறு வகை திரைப்படங்களில் முழுக் கதையையோ அல்லது விளக்கமான கதைச் சுருக்கத்தையோ சொல்லிவிட்டால் எந்த ஆபத்துமில்லைதான்.. அது பொழுது போக்குக்காகவும், கதை தெரிந்ததுதான் என்றாலும் எப்படி எடுத்திருக்கிறார்கள் என்றாவது பார்க்க முனைவார்கள். இதில் அப்படியெழுத முடியாத சூழல்..! 

படத்தின் கேரக்டர்களுக்கு அடுத்தபடியாக மனதில் நிற்பது லொகேஷன்கள்தான்..! காட்சிக்குக் காட்சி இப்படியொரு இடங்களை எப்படித்தான் தேடிப் பிடித்தார்கள் என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் இயக்குநர்களும் கலை இயக்குநரும்..!  

சமூகத்தின் இருண்ட பக்கங்களுக்குள் ஒளிந்திருக்கும் கதை மாந்தர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் படத்தின் உயிர்நாடி.. சிங்காரத்தின் அறிமுகத்தின்போதே படத்தின் தன்மை புரிந்துவிட்டது.. அந்த சலூன் கடையும். அதன் உட்புறத்தில் “படம்” எடுக்கப்படும் சூழலும் அதன் தன்மையைப் புரிய வைத்துவிட்டது..! 

சின்னைய்யாவின் தேடுதல் வேட்டையில் லங்கனின் அறிமுகம் கிடைத்த பின்பு படம் இன்னமும் வெகுவேகமாக மனதிற்குள் ஓடுகிறது..! சென்னையில் இருந்து மும்பைக்குத்தான் போகிறது என்றெல்லாம் நினைக்கும் சூழலில் அது இடம் மாறி போகும் இடம் தெரிந்தவுடன் அங்கேயும் ஒரு இனிய அதிர்ச்சி..!


இதுவரையிலும் கோவில் மாநகரமான திருவரங்கத்தை யாராவது இப்படி காட்டியிருக்கிறார்களா..? அந்த வீடும், வீட்டில் இருக்கும் தேவநாயகியும் அவரது பிள்ளைகளுமான அந்தக் களன் இன்னொரு பக்கம் வியப்பைத் தருகிறது..! லங்கனின் கொலைநோக்குப் பார்வையில் தெருவோரமாக இளநீர் விற்கும் பாட்டியிடம் ‘பொட்டலம்’ இருப்பதுகூட தெரிய வருவது இயக்குநரின்  கற்பனைத் திறமை..!

அடியாட்கள்.. சூழல்.. பெண் பிள்ளைகளை வைத்து தொழில்.. என்று அந்தச் சூழலுக்கும் ஒரு அழகான பேச்சிலேயே பயமுறுத்தும்வகையில் பின்னணி லொகேஷனை வளைத்துப் பிடித்து, அடியாட்கள் பாம்புகளுடன் விளையாடும்படியான குறியீட்டுடன் காட்டியிருப்பதெல்லாம் அந்தக் கேரக்டரையும், படத்தின் மீதான ஈர்ப்பையும் அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது..!

பூஜா, 'பரதேசி' படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை இந்தப் படத்திற்காகவே வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம்..! வெல்டன் என்கிறேன்..! "கதையும், கேரக்டரும் பிடித்துப் போனதால் இதில் மூழ்கிவிட்டேன்.." என்றார் பூஜா. தன்மையான நடிப்பு.. சின்ன சின்ன டயலாக்குகளை மாடுலேஷனுடன் அவர் வெளிப்படுத்தியிருக்கும்விதமே இயக்குநருக்கு மிகப் பெரிய உதவியாக இருந்திருக்கிறது..!

சிங்காரத்துடன் காரில் போகும்போதே அடுத்த 'டீலு'க்கு அடி போட்டு பேசி.. அதனை ஒத்துக் கொள்ள வைக்கும்படியான நடிப்பை இருவரிடத்திலும் அற்புதமாக கேட்டு வாங்கியிருக்கிறார் இயக்குநர்..! எனக்கு மிகவும் பிடித்த காட்சியாக அமைந்துவிட்டது அது..! 


திருவரங்கம் ரயில்வே ஸ்டேஷனில் குட்டிப் பொண்ணு மாளவிகாவுடன் வாக்குவாதம் செய்து முடியாமல் போகலாம் என்று சலித்த நிலையில் முடிவெடுக்கும் அந்த காட்சியிலும், சிங்காரத்திடம் நந்தினியை மட்டும் விட்டுவிடும்படி கேட்டு அடி வாங்கும் காட்சியிலும் அந்த கேரக்டராகவே பிரதிபலிக்கிறார் பூஜா..! இது போன்ற கேரக்டர்களை பல முன்னணி நடிகைகள் நிச்சயம் தவிர்க்கத்தான் செய்வார்கள்.. முனைந்து ஆர்வப்பட்டு நடித்து பெருமைப்படும் பூஜாவிற்கு குறுக்கே நிற்கும், அவரது இனத்தையும் தாண்டி பாராட்டத் தோன்றுகிறது..!

நந்தினியாக நடித்திருக்கும் மாளவிகா மணிக்குட்டன், கேரள பொண்ணு.. அங்கே மேடை நிகழ்ச்சிகளும், குறும்படங்களிலும் நடித்து பெயர் வாங்கியிருக்கிறாராம்.. நல்ல செலக்சன்.. துறுதுறு பேச்சை மிக இயல்பாகப் பேசுகிறார்.. திருவரங்க ரயில்வே ஸ்டேஷனில் அவர் பூஜாவை அலட்சியப்படுத்தி பேசும்பேச்சு.. அங்கே அவர்களை கவர் செய்யும் ஒரு ஆளை போய்யா என்று விரட்டியடிக்கும் அந்த இயல்பும்.. தனது தாய், தந்தையை பற்றி பேசுவதையே தவிர்க்கும்விதமாக பேச்சை மாற்றும் அந்த லாவக முகக் குறிப்பும்.. அசத்தல்..! பொண்ணு நல்லா வரும்..!


சிங்காரமாக நடித்த அமரேந்திரனும், லங்கனாக நடித்திருக்கும் ஜான் விஜய்யும்தான் இவர்களுக்கடுத்து படத்தை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள்..! சின்னய்யாவிடம் தொடையில் வாங்கிய காயத்தோடு உயிருக்குப் பயந்து பூஜாவைத் தேடத் துவங்கும் அந்த காட்சியில், இருந்து இறுதிவரையிலும் உயிருக்குப் பயந்த ஒரு கோழையாகவும், சமயத்தில் தான் மட்டும் புத்திசாலியாக தப்பிக்க நினைக்கும் குள்ள நரியாகவும் இரட்டை வேடத்தை காட்டுகிறார் அமரேந்திரன்..!

ஜான் விஜய்யின் கேரக்டர் ஸ்கெட்ச்சை அந்த வித்தியாசமான லொகேஷனே காட்டிவிட்டது.. போனில் தனது அடியாளுக்குக் கொடுக்கும் இன்ஸ்ட்ரக்சன்படியே ஆள் எப்படி என்பதையும் என்ன வேலை செய்கிறார் என்பதையும் அடையாளப்படுத்துகிறார் இயக்குநர். பூஜா போகுமிடத்தைக் கண்டு பிடிக்கும் அந்த சூட்சுமமும், சிங்காரத்தைவிடவும் தான் அதிபுத்திசாலி என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே வருவதும், தேவநாயகி வீட்டில் இவர் செய்யும் சின்னச் சின்ன ஆக்சன்கள் அந்த நிமிடத்து பதட்டத்தைக் கூட்டிக் கொண்டே சென்றதென்னவோ உண்மை..!


லஷ்மி ராமகிருஷ்ணின் திருவரங்கத்து வாழ்க்கையை மேலும் அலசி ஆராயாமல், அவர் இப்போது என்ன செய்கிறார் என்பதை மட்டும் காட்டிவிட்டு வெகு இயல்பாக பூஜாவுக்கும், அவருக்குமான நட்பை சொல்லிவிட்டு ஜம்ப் ஆகியிருக்கிறார் இயக்குநர். இருந்த சில காட்சிகளிலும் இவருடைய மகள், மகனுக்கும் மாளவிகாவுக்கும் ஏற்படும் பிரெண்ட்ஷிப்பை தொடுவதன் மூலமாக மாளவிகா அங்கே இருக்க விரும்பாதவளாக இருக்கிறாள் என்பதையும் காட்டிவிடுகிறார்..! 

தீக்காயத்துடன் உயிர் வாழும் டான்.. எப்போதும் இறுக்கமான முகத்துடன் சின்னய்யா.. யாரென்று சொல்லாமலேயே அவர் செய்யும் அக்கிரமச் செயல்கள்.. அதன் நியாய, தர்மங்களை கிளைமாக்ஸில் பிளாஷ்பேக்கில் சொல்லியிருக்கும் விதம்.. இயக்குநருக்கு ஒரே ஜே போட வைக்கிறது..!


படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் கச்சிதம்..! படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் பல காட்சிகள் இரவு நேரத்தில் இருந்தாலும் படத்தின் அந்த சஸ்பென்ஸை காப்பாற்ற வைப்பதில் ஒளிப்பதிவாளருக்கும் பெரும் பங்குண்டு..! சிவகுமார் விஜயன் என்ற அந்த ஒளி ஓவியர் யாரோ.. எவரோ..? குறை சொல்ல முடியாத அளவுக்கு கேமிராவை கையாண்டியிருக்கிறார்..!

பாடல்களை முழுமையாகவே நீக்கியிருக்கலாம்.. அதை நீக்கிவிட்டு செய்திருந்தால் இந்தப் படம் ஆரண்ய காண்டத்திற்கு சமமானது என்றே சொல்லலாம்..! பாழாய்ப் போன தமிழ்ச் சினிமாவின் இன்றைய சூழலுக்கேற்றாற்போல் பாடல்களை வைக்காவிட்டால் பிஸினஸிற்கு பாதிப்பாகுமே என்ற குழப்பத்திலும், ரசிகர்களுக்கு விருப்பமில்லாமல் போகுமே என்கிற பயத்திலும் பாதி, பாதி பாடல்களை ஒலிக்க வைத்திருக்கிறார்கள்..1  3 பாடல்களையும் தானே எழுதி தானே இசையமைத்திருக்கிறார் கிரீஷ் கோபாலகிருஷ்ணன்..!

இப்படத்தின் பின்னணி இசை பற்றி தனிப் பதிவே போடலாம்..! அந்த அளவுக்கு அதன் ஆதிக்கமும், படத்தின் ஓட்டத்திற்கு துணை நின்ற அதன் வேகமும், ஈர்ப்பும் வெல்டன் என்று சொல்ல வைக்கிறது..! சிலிர்க்க வைக்கவில்லை.. ஆனால் எதுவோ நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை கூட்ட வைத்திருக்கிறது..! 


ஒரு திரைப்படத்தின் வெற்றி ஜீரணிக்க முடியாத கதையாகவே இருந்தாலும், இறுதிவரையிலும் அது பற்றிய யோசனையே செய்ய முடியாத அளவுக்கு ரசிகனை  அதில் ஆழ்த்தியிருக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்..! இந்தப் படைப்பு இதைத்தான் செய்திருக்கிறது..! நிச்சயம் இது குழந்தைகளுக்கான படமில்லை. படத்தின் அடிப்படைக் கதைக் கரு அதனைத் தகர்த்திருக்கிறது.. யு-ஏ சர்பிடிகேட் பெற்றிருந்தாலும் குழந்தைகளைத் தவிர்த்துவிட்டுச் செல்லுங்கள்..! படத்தில் இறுதியில் சஸ்பென்ஸ் உடைபடும் சூழலிற்கு எதிரான கேள்விகள், நிறைய இருப்பினும் எதையும் கேட்கத் தோணவில்லை.. இதுவே இந்த இயக்குநருக்குக் கிடைத்திருக்கும் வெற்றிதான்..! 

முழுக் கதையையும் சொல்லத் துடிக்கும் என் போன்றோரை சொல்லவே கூடாது என்று தடைபோட்டு அணை போட்டு தடுத்திருக்கும் இந்த இயக்குநர் பாலாஜி கே.குமாருக்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்..! இன்னமும் சிறப்பான படைப்புகளை அவர் தமிழுக்குத் தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்..!

இந்தப் படம் கொஞ்சமும் மிஸ் செய்யக் கூடாத படம்..! எந்த வகையிலாவது இதனை அவசியம் பார்த்துவிடுங்கள்.. ஆரோ 3-டி வசதியுள்ள தியேட்டரில் பார்த்தீர்களேயானால் இன்னமும் சிறப்பாகவே இருக்கும்..!

இத்திரைப்படம் பற்றி வரவிருக்கும் கருத்துக்கோவைகள்.. மதிப்புரைகள்.. வாழ்த்துரைகள்.. பிரதி, எதிர்வாதங்கள்.. மாற்றுச் சினிமா ரசிகர்களின் புல்லரிப்பு கதைகள்.. ஹாலிவுட்டின் காப்பி கதைகள்.. பாராட்டுரைகள்.. இவையனைத்தும் அடுத்து இது போன்ற படங்கள் நமக்குக் கிடைக்கும்வரையிலும் நம்மை இந்தத் தமிழ்ச் சினிமா சூழலில் இருக்கவே வைக்கும்.  வாழவே வைக்கும்..!

நன்றிகள் இயக்குநர் பாலாஜி கே.குமாருக்கு..!

படத்தின் டிரெயிலர் :





மெய்யழகி - சினிமா விமர்சனம்

23-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது போன்ற படங்களை எப்போதாவது ஒரு முறைதான் தமிழ்ச் சினிமாவில் பார்க்க முடியும்..! அக்கா-தம்பி பாசம் பற்றி பல படங்கள் இதற்கு முன் வந்திருந்தாலும் இந்தப் படம் ஒரு ஸ்பெஷல். 

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு உடல் ஊனத்துடன் இருக்கும் ஒரு தம்பி.. குடிகாரத் தந்தை.. வாழை இலைகளை ஹோட்டல்களுக்கு விற்று அதில் நேர்மையாக உழைத்து சம்பாதித்து தனது தம்பியை இன்னொரு அம்மாவாக காப்பாற்றிவரும் அக்கா.. இவர்களைச் சுற்றியதுதான் கதை..!


அந்த ஊரின் பணக்காரனான பணம் என்னும் பண்ணையார் மெய்யழகியான அக்கா மீது ஆசைப்பட்டு அவளை எப்படியாவது திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். இத்தனைக்கும் அவனுக்குத் திருமணமாகி ஒரு பெண்ணும் உண்டு.. தனது மனைவியின் ஜோதிட நம்பிக்கையை வைத்து மனைவியை ஏமாற்றி.. "தன் ஜாதகத்தில் தோஷம்.. இப்போ நேரம் சரியில்லை.. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை கல்யாணம் செஞ்சா உயிர் பிழைப்பார்.." என்று அஞ்சுக்கும், பத்துக்கும் அலையும் ஜோதிடனை வைத்து பில்ட் அப் செய்கிறார் பண்ணையார். மனைவியும் தனது கணவனுக்காக மெய்யழகியிடம் பேச.. அவள் இதற்கு மறுக்கிறாள்.. 


பண்ணையாரிடமே கார் டிரைவராக இருக்கும் அர்ஜூனை மெய்யழகி விரும்ப.. இதை எதிர்பார்க்காத பண்ணையார் அதனை தடுக்க நினைக்க செய்யும் முயற்சிகள் கொலையில் போய் முடிகிறது.. முடிவில் அக்காவும், தம்பியும் என்னவானார்கள் என்பதைத்தான் இடைவேளைக்கு பின்பான மிக வேகமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்..!

இது போன்ற உடல் ஊனம் கொண்ட கேரக்டர்களாக நம் மனதில் இப்போதும் இருப்பது 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் 'அப்பு' கேரக்டரும், 'காசி' படத்தில் கண் பார்வையிழந்த விக்ரமின் கேரக்டரும், 'பேரழகன்' படத்தில் சூர்யாவின் கூன் விழுந்த அழகன் கேரக்டரும்தான்.. இப்போது நான்காவதாக இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞனாக பாலாஜி அசத்தியிருக்கிறார்..!

'பட்டாளம்', 'காதல் சொல்ல வந்தேன்' போன்ற படங்களில் நடித்திருக்கும் பாலாஜிக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு விருதை பெற்றுக் கொடுக்கும் என்றே நம்புகிறேன்..! கடைசிவரையிலும் வாயில் எச்சில் ஒழுகியபடியே கைகளை மடக்கி வைத்துக் கொண்டு.. கால்களை தேய்த்தபடியே நடந்து வருவதெல்லாம் நடிப்பு வெறி இருந்தால்தான் முடியும்.. ஒரு பிரேமில்கூட மாறுதலை காட்டாமல் நடித்திருக்கிறார்..! வெல்டன் பாலாஜி..! 


'ஆரோகணம்' படத்தில் நடித்த ஜெய்குஹானிதான் இதில் மெய்யழகி.. இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் படத்தின் தூண்.. எந்த இடத்திலும், எந்த விதத்திலும் யாரிடமும் ஐயோ பாவம் என்று எதையும் வாங்கக் கூடாது என்கிற கொள்கையுடையவர்..  உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் இவர் பண்ணையாரின் மனைவியிடம்(இவர் நடிகை மீரா ஜாஸ்மினின் அக்கா) "எச்சில் இலைல சாப்பிட கூப்பிடுறீங்களே.. இது உங்களுக்கே நியாயமாக்கா..?" என்ற அந்தக் கேள்வி அவருடைய கேரக்டருக்கே மிகப் பொருத்தமானது..!

எந்த மேக்கப்பும் இல்லாமல்.. கிராமத்து ஜாடையுடன்.. அதே அளவு கண்ணியமான உடையுடன் பாந்தமான நடிப்புடன் ஒரு நல்ல நடிகையை அடையாளம் காட்டுகிறது..! இருக்கும் ஒரேயொரு டூயட் பாடல் காட்சியிலும் கண்ணியமாகவே வந்து செல்கிறார்.. இதற்காக இயக்குநருக்கு எனது பாராட்டுக்கள்..!

பண்ணையாராக அருண்மொழி வர்மன் அறிமுகமாகியிருக்கிறார். அந்தக் கால ராஜேஷை ஞாபகப்படுத்துகிறார்.. கிராமத்து முகம்.. அச்சு அசல் பண்ணையாரின் நடிப்பு..! ஜெய்குஹானியின் அப்பாவாக வரும் ராமராஜின் சின்னச் சின்ன ஆக்சன்களையும் ரசிக்க முடிகிறது..!

அபிஷேக்கின் இசையில் 3 பாடல்களுமே எளிமையாக, கேட்கும்படியாகத்தான் இருக்கிறது. ஆனால் இதனையெல்லாம் பிரமோட் செய்ய எந்த பெரிய ஆடியோ நிறுவனமும் இல்லாததால்  ரேடியோக்களில் வெளிவர வாய்ப்பே இல்லை..! 


படத்தின் இடையிடையே இயக்குநர் ஜெயபாலே ஒரு காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார். இது தேவையில்லாததுதான்..  ஆனால் எதற்கும் இருக்கட்டுமே என்று வைத்திருக்கிறார்கள் போலும்.. "இப்பல்லாம் கல்யாணமான ஆம்பளைங்களைத்தான் பொம்பளைங்க விரும்புறாங்க.." என்று இவர் சொல்லும்போதே பின் சுவற்றில் 'வில்லு' படத்தின் போஸ்டர் தொங்குவது ஏதோ ஒரு குறியீடாகவே எனக்குத் தோன்றுகிறது..! 

படத்தின் கிளைமாக்ஸில் "மாமா வந்து கொன்னுட்டு ஓடிப் போச்சு.." என்ற வசனத்திற்கு நிச்சயம் கைதட்டல்கள் கிடைக்கும்.. அது சுத்தமான லாஜிக் ஓட்டை என்றாலும் அதனையும் மீறி ஒரு கவன ஈர்ப்பு கிடைக்கிறதென்றால், அது எப்படிப்பட்ட இயக்கத் திறமை என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்..!

இயக்குநர் ஆர்.டி.ஜெயவேலன்.. அகத்தியனிடம் பணியாற்றியவராம்.. மிகக் குறைந்த பட்ஜெட்டில் மிக நிறைவானதொரு ஒரு படத்தை வழங்கியிருக்கிறார்..! 'யு' சர்டிபிகேட்டும் வாங்கிவிட்டு.. வரிவிலக்கும் பெற்ற பின்பும் படத்தைத் திரையிட தியேட்டர்கள் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் இப்போது கிடைத்த தியேட்டர்களில் திரையிட்டிருக்கிறார்களாம்.. 

ஒண்ணுமே இல்லாத 'இரண்டாம் உலகம்' பெருவாரியான தியேட்டர்களை பிடித்திருக்க.. குறிப்பிடத்தக்க கதையம்சத்துடன் வந்திருக்கும் இப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காதது திரையுலகம் எப்படிப்பட்ட பண ஆசாமிகளிடம் சிக்கித் தவிக்கிறது என்பதற்கு ஒரு மிகப் பெரிய உதாரணமாகும்..!

ஒரு பக்கம் நல்ல படங்கள் வரலை.. வரலை என்று கூப்பாடு போடும் மக்கள்ஸ்.. இது போன்ற படங்களை வந்த பின்பு கண்டு கொள்ளாமல் போவதும் வாடிக்கையாகத்தான் இருக்கிறது....! நிச்சயம் இந்தப் படத்திற்கு திருட்டு விசிடி வரவே வராது..! ஆகவே ரசிகர்களே.. உங்களுக்கு அருகாமையில் இந்தப் படம் உங்களது கண்ணில் பட்டால் அவசியம் படத்தைப் பார்த்து ஆதரவு அளியுங்கள்..! 

படத்தில் பங்கு கொண்ட நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், மற்றும் படத்தின் இயக்குநருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும்..!

இரண்டாம் உலகம் - சினிமா விமர்சனம்

23-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பது போல, அது தமிழ்ச் சினிமாவுக்கும் ராசியில்லாதது என்பது மீண்டுமொருமுறை இந்தப் படத்தின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது..! 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் செல்வராகவன், தமிழில் தற்போது காமெடி என்ற பெயரில் எடுக்கப்படும் மொக்கை படங்களே, தமிழ்ச் சினிமாவை சீரழிக்கின்றன என்று சீறித் தள்ளினார். ஆனால் இப்போது அவர் எடுத்திருக்கும் இந்தப் படம்தான், உண்மையிலேயே தமிழ்ச் சினிமாவின் பெரும் வர்த்தகத்தை ஒரே நாளில் தகர்த்திருக்கிறது.. தமிழ்ச் சினிமா மீதான ரசிகர்களின் ஆர்வத்தில் 10 டன் மண்ணள்ளிப் போட்டுப் புதைத்திருக்கிறது..!


எனக்கும் செல்வராகவனுக்கும் இடையில் எந்த வாய்க்கால், வரப்புத் தகராறும் இதுவரையிலும் இல்லை..! ஆகவே காசு கொடுத்து படம் பார்த்த ஒரு சாதாரண பாமர ரசிகனாக கேட்கிறேன்.. இந்தப் படத்தின் கதை என்ன ஸார்..? உங்களுக்கு மட்டுமே கதை புரிஞ்சா.. தெரிஞ்சா.. போதுமா..? எங்களுக்குப் படம் புரிஞ்சாத்தானே நாங்க வெளில போய் நாலு பேர்கிட்ட இதைப் பத்திச் சொல்ல முடியும்..! ஒண்ணுமே புரியலைன்னா நாங்க என்ன சொல்றது..? 

புரியாதவகையிலேயே படத்தை எடுத்துவிட்டு இதைப் புரிந்து கொள்ளவும் ஒரு அறிவு வேண்டும்ன்னு மறைமுகமா சொல்றது எங்களையெல்லாம் அவமானப்படுத்துற மாதிரியில்லையா..? நான் புரிந்து கொண்ட வகையில் இது அந்தப் பாழாய்ப் போன காதலை, இன்னொரு கிரகத்துக்கே கொண்டு போய் கொடி பிடிக்குற படமா தெரியுது..? ஏன் ஸார்..? ஊர் உலகத்துல பிரச்சினையா இல்லை..!? இப்பத்தான் மங்கள்யான் கோளே, செவ்வாயை சோதனையிட போய்க்கிட்டிருக்கு.. நீங்க இந்த நேரத்துலயும் அந்த காதலைத்தான் இன்னொரு உலகத்துக்கு கொண்டு போய் காட்டணுமா..? என்னவோ போங்க..!

இரண்டாவது உலகத்துல இருக்கும் ஒரு பெண் தெய்வம்.. தன்னோட கிரகத்துல இருக்கிறவங்களை நல்வழிப்படுத்தணும்ன்னு நினைச்சு பூலோகத்துல இருக்குற காதலர்கள்ல, காதலியை கொன்னுட்டு.. காதலனை பேக்கப் பண்ணி கூப்பிட்டுக்குது.. அந்தக் காதலன் காதல்ன்னா என்னான்னு கேக்குற அந்த கெரகத்துக்குள்ள போயி.. அங்க இருக்கிறவங்களுக்கு காதல்ன்னா என்னன்னு சொல்லி புரிய வைச்சு ஒரு புதிய பாதையா அவங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்குறாராம்.. இந்தப் பின்னவீனத்துவமான சோகக் கதையை ஒரு பாமர ரசிகனுக்கு எளிமையா புரிய வைக்கணும்னா, சாலமன்பாப்பையா, ராஜா, ஞானசம்பந்தன் வகையறாக்காளால்கூட இப்போதும், எப்போதும் முடியாது..!

ஒரு உலகத்துல அனுஷ்கா டாக்டர். அவர்கூட வேலை பார்க்குற ஆர்யாவோட நல்ல குணங்களைப் பார்த்து அவரை கல்யாணம் செஞ்சுக்க பிரியப்படுறாங்க அனுஷ்கா. ஆர்யாகிட்ட பேசிப் பார்க்க அவர் மொதல்ல முடியாதுன்றார்.. அப்புறம் 3 ரீல் அந்து போனப்புறம் திரும்பி வந்து சரின்றாரு.. அதுக்குள்ள அனுஷ்காவுக்கு வேற இடத்துல மேரேஜ் நிச்சயமாகுது. ஆனா இப்ப ஆர்யா அதை ஏத்துக்காம கோவாவரைக்கும் அனுஷ்கா பின்னாடியே போய் வம்படியா ரகளை செஞ்சு அவரைக் காதலிக்க வைச்சர்றாரு.. ஆனா பாருங்க.. சோகம் பின்னாடியே வருது. 

மேல இரண்டாவது கெரகத்துல இருக்குற பெண் தெய்வம்.. திடீர்ன்னு வேலையைக் காட்டி அனுஷ்காவை சாகடிக்குது.. கோவால இருந்து சென்னைக்கு வராம ஆர்யா அங்கேயே இருந்து அனுஷ்காவை தேடோ தேடுன்னு தேடிக்கிட்டிருக்காரு..! ஒரு நல்ல மழை நாள்ல சாகப் போகும்போது இரண்டாவது கெரகத்துல இருக்குற வேறொரு ஆர்யா.. வந்து இந்த ஆர்யாவை கூட்டிட்டு தன்னோட கெரகத்துக்கு போறாரு..! 

அந்த கெரகத்துக்கு ஒரு மங்குனி ராஜா.. அந்த நாட்டு தளபதியோட பையன்தான் ஆர்யா. அங்கேயும் ஒரு அனுஷ்கா.. ரொம்ப தைரியசாலி. அதே சமயம் பிடிவாதக்காரி.. யாருக்கும் அடிமையா இருக்க மாட்டேன்னு நெஞ்சை நிமிர்த்தி சண்டை போடுற டைப்.. அந்த ஆர்யா அந்த  அனுஷ்காவை பார்த்து ஜொள்ளுவிட்டு பின்னாடியே திரியறாரு.. அந்த ஊர் ராஜா அனுஷ்காவை பார்த்து தன்னோட அந்தப்புரத்துக்குத் தூக்கிட்டுப் போய் வைச்சுக்குறாரு.. ஒரு சிங்கத்தை கொன்னு.. அதோட தோலை ரத்தம் சொட்டச் சொட்ட கொண்டு வந்தா அனுஷ்காவை திருப்பித் தர்றதா சொல்றாரு.. 

கெரகத்து ஆர்யாவும் ரொம்ப தைரியமா போயி சண்டை போட்டு ஒரு மிருகத்தைக் கொன்னு தோலை கொண்டு வந்து அனுஷ்காவை கல்யாணம் செஞ்சுக்குறாரு.. இது பிடிக்காத அனுஷ்கா கல்யாணத்தன்னிக்கு ராஜாவை கொல்லப் பார்க்க. அதுனால ராஜா அனுஷ்காவை நாட்டைவிட்டு துரத்திர்றாரு.. காட்டுக்குள்ளேயே இருக்குற அனுஷ்காவை பார்க்க புருஷன் ஆர்யா அப்ப்ப்போ போயிட்டு வந்திட்டிருக்காரு..!

இந்த நேரத்துல நம்ம ஆர்யாவும் அங்கே போக.. அங்கேயும் ஒரு அனுஷ்காவை பார்த்து திகைக்க.. அப்புறம் ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்த்து பேசிக்கிட்டிருக்க.. இதைப் பார்த்த அந்த ஆர்யா கோபப்பட்டு அவங்களை சந்தேகப்பட.. இந்த நேரத்துல அந்த ஊர் தெய்வத்தை இன்னொரு கெரகத்துக்காரன் வந்து தூக்கிட்டுப் போக.. 2 ஆர்யா.. 1 அனுஷ்கான்னு மூணு பேரும் சேர்ந்து என்ன பண்றாங்கன்றதுதான் கடைசி 3 ரீலோட கதை..!

அங்கே நடப்பதையும், இங்கே நடப்பதையும் மாற்றி மாற்றி காட்டி முதல் பாதியிலேயே போரடிக்க வைத்துவிட்டார்.. கொஞ்சம் சுவாரஸ்யமாக இருப்பதே ஆர்யா-அனுஷ்கா லவ் போர்ஷன் மட்டும்தான்.. அதிலும் அனுஷ்கா ஆர்யாவிடம் தனது விருப்பத்தைச் சொல்ல வரும் காட்சியில் அவருடைய தோழி, ஆர்யாவின் பாடி அனாடமியை பிட்டுப் பிட்டு வைக்கும் காட்சி.. அடுத்து அனுஷ்கா ஆர்யாவிடம் பேசும் காட்சி.. ஆர்யா மனசு மாறி அனுஷ்கா பின்னால் அலையும் காட்சிகள்.. கோவா பஸ்ஸில் இடம் பிடிக்கும் காட்சிகள்.. கோவாவில் மேடத்தை சைட் அடிக்கும் காட்சிகள் என்று முற்பாதியில் இவ்வுலக காட்சிகள் கொஞ்சம் கொஞ்சம் ரசிக்கத்தான் வைத்தன. ஆர்யா, சீனியர் டாக்டரை லவ்வும் காட்சிகளை சின்ன பட்ஜெட்டில் தெரியாத முகங்களை வைத்து எடுத்திருந்தால் கலாச்சாரம் கெட்டது என்று பலரும் கூக்குரல் இட்டிருப்பார்கள்.. ஆனால் இங்கே எடுத்திருப்பது கோடம்பாக்கத்து ரட்சகர் செல்வராகவனாச்சே..! யாரும் மூச்சுவிட மாட்டார்கள்..!

எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிருச்சு.. வீட்ல பார்த்த பையன்.. எனக்கும் பிடிச்சிருக்குன்னுதான் ஆர்யாகிட்ட அனுஷ்கா சொல்றாங்க. அப்புறம் கோவாவுக்கு வரும் அந்த பையன், எனக்கு வேற பொண்ணு பார்த்துட்டாங்கன்னு சொல்லிட்டுப் போயிடறாரு.. இவர் எஸ்கேப்பாகுறதால அனுஷ்கா, ஆர்யாவுக்கு ஓகே சொல்றாங்களாம்.. ஏதோ அவங்கவங்க சொந்த வாழ்க்கை மாதிரியே படத்தோட கதையையும் அனுபவிச்சு நடிச்சிருக்காங்க.. எடுத்திருக்காங்க..! இதுவரைக்கும்கூட ஓகேதான்.. ஆனால் இதுக்கப்புறம்தான் நமக்கு கெரகமே...?

படத்தோட இடைவேளை போர்ஷன்வரையிலும் பின்னணி இசையே இல்லை.. நம்ம ஆர்யாவுடனான காதலின் இறுதிக் கட்டத்தில் புல்வெளியில் நடந்துவரும்போதே பாடல் காட்சிகளின் ஊடே திடீர் திடீரென்று கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து தங்களது தீரா ஆர்வத்தைத் தணித்துக் கொள்ளும் அந்தக் காட்சி மட்டுமே அக்மார்க் செல்வராகவன் டைப் திரைக்கதை..!

இப்போது சாதாரண கேபிள் கனெக்சன்லேயே ஹாலிவுட் மூவி  சேனல்கள் வருகின்றன.. வீட்டுக்கு வீடு ஹாலிவுட் படங்களை பார்த்து திகைத்துப் போயிருக்கிறார்கள்.. அதில் வரும் கிராபிக்ஸ் அனிமேஷன் காட்சிகளை பார்த்து பார்த்து சலிப்படைந்த நிலையில் இருக்கும் மக்கள்.. இதில் இருக்கும் ஹாலிவுட்டுடன் ஒப்பிடுகையில் வெறும் 5 சதவிகித அனிமேஷன் காட்சிகளைப் பார்த்து பிரமித்துப் போவார்கள் என்று செல்வராகவன் எப்படி நம்பினார்..? 

ஹாலிவுட் தரத்துக்கு நம்மால் அனிமேஷனையும், கிராபிக்ஸையும் செய்யவே முடியாது.. அதுக்கே பட்ஜெட் 100 கோடியைத் தாண்டிவிடும்.. இந்த லட்சணத்தில் கிடைத்தவரையிலும் பார்ப்போம் என்றெண்ணி கலர் கிரேடிங் செய்தும், கிராபிக்ஸில் வண்ண வண்ணப் பூக்களை நிரப்பியும், கிஜினா தாள்களை பரப்பியும் ஒரு மெல்லிய செட்டப்பை செய்துவிட்டால் அது வேறொரு உலகமாக ஆகிவிடுமா..?

இரண்டாவது உலகம் எடுத்தது ஜார்ஜியாவிலாம்.. அந்த லொகேஷனை ஒளிப்பதிவாளர் ராம்ஜி தன்னால் முடிந்த அளவுக்கு அற்புதமாக படம் பிடித்திருக்கிறார். ஆனால் காட்சிக்கு காட்சி.. பிரேமுக்கு பிரேம் கிரேடிங் செய்தும், கிராபிக்ஸ் செய்தும் வைத்திருப்பதால் அதனையும் முழுமையாக ரசிக்க முடியாமல் போய்விட்டது..! 


படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் தனது தோளில் தூக்கிச் சுமந்திருக்கிறார் அனுஷ்கா.. வயதான தோற்றம் அவருக்கே மைனஸாகிவரும் நிலையில் ஹீரோயின் போஸ்ட்டில் இருந்து ரிட்டையர்டாகும் சூழலில் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.. டாக்டர் அனுஷ்காவைவிடவும், இரண்டாவது கெரகத்தில் இருக்கும் அனுஷ்கா கடுமையாகவே உழைத்திருக்கிறார். அவர் போடும் சண்டை காட்சிகளாவது பரவாயில்லை.. ஆனால் எப்பவும் முகத்தை கடு கடுவென்று வைத்திருக்கும் அந்தச் சூழல்தான் பிடிக்கவேயில்லை..! அந்த அழகு முகத்தின் கடுமையை திரையில் பார்க்கவே என்னை போன்ற ரசிகர்களுக்கு மனமில்லை..!

டாக்டர் ஆர்யாவைவிடவும், வேற்று கிரக ஆர்யாதான் ரசிக்க வைக்கிறார்..  அப்போதைய உலகத்தின் மிருகங்கள் என்று சொல்லி ஓநாய் வடிவத்தில் இருக்கும் 2 விலங்குகளைக் காட்டி தனது திறமையைக் காட்டியிருக்கிறார்கள் கலை வல்லுநர்கள். காட்சிப்படி ஆர்யா இதில்தான் உசிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.. அந்த சண்டை காட்சியில்..  இருப்பதை இல்லாததுபோல் நினைத்து நடிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பதை திரையுலகினர் அறிவார்கள்.  மிகச் சிறப்பாகவே தனது நடிப்பைக் கொட்டியிருக்கிறார் ஆர்யா.. 

பின்னணி இசை முற்பாதியில் இல்லாதது பெரும் சந்தோஷம்.. இரண்டாம் பாதியில் அதுவே கரைச்சலாகவும் இருக்கிறது..! பாடல்கள்தான் தமிழ்ச் சினிமாவின் பெரும் தடையென்று செல்வராகவனே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஆனால் தமிழ்ப் படங்களில் பாடல் காட்சிகளிலேயே பல கதைகளையும், திரைக்கதைகளையும் சொல்லும் வித்தைகள் இருப்பதினால் அது சாத்தியமாகமலேயே இருக்கிறது. இதில் செல்வராகவனும் பாடல் காட்சிகளின் மூலமாகவே திரைக்கதையை கொஞ்சம் நகர்த்தியிருக்கிறார்..!

Institute of Mathematics Science கிளாஸ் ரூமில் பாடத்துக்கு நடுவே தனது நண்பனுக்கு அட்வைஸ் செய்யும் அந்த நடிகர் கொஞ்சமே வந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார்..! அதேபோல் ஆர்யாவின் தந்தை கேரக்டரில் நடித்திருப்பவரும்.. புதுமுகம் போலவே தெரியவில்லை..! ஆர்யாவின் அந்த வீட்டுப் பிரச்சினையை எந்தவிதமான மனத் தாக்கமும் வராத அளவுக்கு படம் பிடித்திருப்பது ஏன் என்று என்னால் யூகிக்க முடியவில்லை.. 

அனுஷ்கா இறந்த பின்பு ஆர்யா கோவாவில் இருந்து கொண்டு கையில் அனுஷ்காவின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு ஏன் தேடுகிறார்.. ?அதுதான் சுடுகாட்டில் அவரை புதைக்கும்போது அருகில் இருப்பதாகவும் காட்டிவிட்டார்களே.. நாய் அழைத்துவரும்போது ஊரில் இருந்து போன்.. அப்பா இறந்துவிட்டார் என்று.. அதற்கும் பதில் இல்லை..! ஒருவேளை இந்தப் போர்ஷன் எனக்குத்தான் புரியலையோ..? கொஞ்சம் குழப்பமாகவேதான் இருக்கு..! 

கனிமொழியே பாடலும், என் காதல் தீ பாடலுக்கும் தியேட்டரில் கை தட்டல்கள் பறக்கின்றன..! ஆனால் வெளியில் வந்தவுடன் மறந்துபோய்விட்டது..! சிறந்த ஒளிப்பதிவு.. படத்தை 2 மணி 40 நிமிடங்கள் 9 வினாடிகள் அளவுக்கு கிரிப்பாக செதுக்கிக் கொடுத்திருக்கும் எடிட்டர் கோலா பாஸ்கர்.. ஹாரிஸ் ஜெயராஜின் இசை.. அனிருத்தின் பின்னணி இசை.. தமிழ், தெலுங்கு இரண்டிலுமே மார்க்கெட் செய்ய உதவியிருக்கும் அனுஷ்கா.. பெரிய ஓப்பனிங்கிற்காக ஆர்யா.. இது எல்லாவற்றையும் தாண்டி இயக்கம் செல்வராகவன் என்ற பெயர் திரையில் தோன்றியதுமே கை தட்டும் ரசிகர்கள் கூட்டம்.. இத்தனையையும் வைத்துக் கொண்டு இந்தப் படம் நிச்சயமாக  ஒரு மங்காத்தா ஆடியிருக்க வேண்டும்.. ஆனால் கதை என்ற வஸ்து இல்லாததால் ஆட முடியாமல் நொண்டியடித்துவிட்டது..!

ஜார்ஜியா மக்கள் அதிகம் பேரை நடிக்க வைத்ததும், கிராபிக்ஸ் காட்சிகளும்தான்.. படத்தின் பட்ஜெட்டை அவர்கள் சொல்லும் கணக்குப்படி 67 கோடியாக உயர்த்திவிட்டது என்கிறார்கள்.. இப்போது, இதில் பாதியாவது தேறுமா என்பது நிச்சயம் சந்தேகம்தான்..!  முதலிலேயே சொன்னதுபோல மவுத்டாக்கில் சொல்வதற்கு வார்த்தைகள் ஏதுமில்லை என்பதால் இனிமேல் செல்வராகவன் என்ற பிராண்ட் பெயருக்காக தியேட்டருக்கு வரும் கூட்டத்தினர் திரண்டு வந்தால்தான் படம் பிழைக்கும் என்ற நிலைமை..!

நேற்றைக்கு ரிலீஸ் ஆகியிருக்கும் மெய்யழகி என்ற படம் தரத்தில் நிச்சயம் இதைவிட உயர்வான படம்தான். ஆனால் அதன் ஆக்டர்ஸ் வேல்யூ மிக்க் குறைவாக இருப்பதால் தியேட்டர்கள் கிடைக்காமல் கிடைக்கின்ற தியேட்டர்களில் திரையிட்டிருக்கிறார்கள். இரண்டாவது உலகத்தின் கதையைவிடவும் மெய்யழகி படத்தின் கதை மிக மிக உயர்வானது..! அந்தப் படம் தமிழ்ச் சினிமா ரசிகனின் கண்ணில் பட வேண்டிய படம். ஆனால் இந்த பெருவணிகச் சூழலில் அந்த சின்ன பட்ஜெட் படம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது..! ஒரு ஊரில் 4 தியேட்டர்கள் இருந்தால் அந்த நான்கிலுமே இரண்டாவது உலகத்தையே திரையிட்டிருக்கிறார்கள். இதனால்தான் 2 நாட்களுக்கு முன்பாக அவர்கள் மீடியாக்களில் புலம்பித் தள்ளினார்கள். இப்படியிருந்தால் சின்ன பட்ஜெட் படங்கள் எப்படிப் பிழைக்குமென்று..?

67 கோடியை முழுங்கிவிட்டு வந்திருப்பதால் படம் நல்லாயிருக்கோ இல்லையோ.. முதல் மூன்று நாட்களில் விமர்சனத்தை எதிர்பார்க்காமல் வரும் கூட்டம் கொடுக்கிற பணத்தை அள்ளிவிட்டு தப்பித்துவிட நினைக்கும் பெரும் தயாரிப்பாளர் முன் மெய்யழகி போன்ற சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர் கை கட்டி நிற்கும் சூழல்.. தயாரிப்பாளர் சங்கம் கண்டும் காணாததுபோல இருப்பதினால், மெய்யழகி பெருவாரியான ரசிகர்களை சென்றடையப் போவதில்லை என்பதும் திண்ணம்..! 

ஒருவேளை ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திற்கு நேர்ந்த கதிபோல இரண்டாவது உலகத்தை உடனே தூக்க வேண்டும் என்ற சூழல் வந்தால்.. அதற்குப் பதிலாக மெய்யழகியை திரையிட்டு கொஞ்சம் புண்ணியத்தைக் கட்டிக் கொள்ள வேண்டுமாய் திரையரங்கு உரிமையாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்..!

காமெடி என்ற பெயரில் தமிழ்ச் சினிமாவின் வளர்ச்சிக்கு உதவாத படங்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று புகார் சொல்லும் செல்வராகவன், முதலில் இந்தப் படத்தை இன்னொரு முறை பார்த்துவிட்டு மனசாட்சியோடு பேசட்டும்..! ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பிரமோஷனின்போது "இதுதான் நான் எடுக்கும் முதல் தமிழ்ச் சினிமா..." என்றார். ஆனால் இப்போது, "ஆயிரத்தில் ஒருவன் படத்தை தீ வைத்துக் கொளுத்த வேண்டும்" என்று பயமுறுத்துகிறார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.. அடுத்த படம் செய்யும்போது இதே "இரண்டாம் உலகத்தை நான் எடுத்திருக்கவே கூடாது.. பொய்யான படம்.." என்று தனக்குத்தானே வாக்குமூலமும் கொடுப்பார்..!

எது நல்ல சினிமா.. எது கெட்ட சினிமா என்பது அவரவர் பார்வையிலும், அவரவர் ரசிப்புத் தன்மையிலும்தான் இருக்கிறது.. ஒருவரின் ரசனை அடுத்தவரையும் ஈர்த்துவிடாது. ஆனால் ஒரு வெற்றிப் பட இயக்குநரின் ரசனை, பல லட்சம் ரசிகர்களை ஒன்றிணைப்பதாலேயே அந்தப் படம் வெற்றிப் படமாகிறது..! அந்த வெற்றியை இதற்கு முன்னும் தமிழ்ச் சினிமாவில் ருசித்திருக்கிறார் செல்வராகவன். அப்போதெல்லாம் வராத அவரது கலையார்வம் இப்போது வருவதற்கு காரணங்களை கண்டுபிடிக்கத் தேவையே இல்லை. மைக் போபியா என்பதும், தன் முகத்தைப் பார்த்தவுடன் கை தட்டும் ரசிகனையும் பார்த்தவுடன் தான் பேசுவதெல்லாம் சரியாகவே இருப்பதாகத்தான் ஒவ்வொரு படைப்பாளிக்கும் தோன்றும்..! 

இந்த புகழ் போதையில் சிக்காதவர்களே கிடையாது.. இதில் இப்போது லேட்டஸ்ட் செல்வராகவன்தான்..! இவருடைய கணிப்புப்படி இந்த 67 கோடி கலையுலகத்திற்கு பிவிபி கம்பெனியினர் செய்த தியாகமாகவே கணக்கில் கொண்டு போய்விடலாம்..! போதாக்குறைக்கு இந்தப் படத்திற்கு அடுத்த பாகமும் வந்தாலும் வரலாம் என்று சொல்லி இப்போதே பயமுறுத்தியிருக்கிறார்..! அதுக்கு எந்த இளிச்சவாய தயாரிப்பாளர் சிக்கப் போகிறாரோ தெரியவில்லை..! 

ஆனாலும் இவ்வளவு காஸ்ட்லியாக ஒரு நஷ்டத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ்ச் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துவதற்குப் பதிலாக, இந்தப் பணத்தில் பல வீ.சேகர்களும், டி.பி.கஜேந்திரன்களும் தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைத்தால் அதுவே நிச்சயம் தமிழ்ச் சினிமாவிற்குக் கிடைத்த வளர்ச்சியாகத்தான் இருக்கும்..!  இதையும் செல்வராகவன் புரிந்து கொள்ள வேண்டும்..!

போறவங்க போய்க்குங்கப்பா..! 


வில்லா (பீட்சா-2) - சினிமா விமர்சனம்

16-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சஸ்பென்ஸ், திரில்லர் வகை கதைகளில் பேய்க்கதைகளுக்கு தனியிடம் உண்டு.. ஒரு வீட்டில் பேய் உலவுவதாகச் சொல்லி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழிலும் உண்டு. இந்திய மொழிகளிலும் உண்டு.. கடைசியாக பேய் வீடு என்றொரு படத்தைக்கூட நான் பார்த்துத் தொலைத்தேன்..! படம் பார்த்தவர்கள்தான் பேய்களாகத் தெரிந்தார்களே தவிர.. படத்தில் பேயை கடைசிவரையிலும் காட்டவேயில்லை..!


அது போன்ற படங்கள் உப்புமாவாகி காலாவதியான சூழலில் அதே கதைக்களத்துடன் மீண்டும் வந்துள்ளார் புதுமுக இயக்குநர் தீபன். அவரளவுக்கு மிகச் சிறந்த முறையில்தான் படத்தை எடுத்திருக்கிறார். ஆனால் இது போன்ற படங்களுக்குத் தேவையான திகிலும், திரில்லரும்தான் போதுமான அளவு படத்தில் இல்லை..!

பீட்சாவின் வெற்றியைத் தொடர்ந்து அதே வெற்றியை எப்பாடுபட்டாவது வசூலித்துவிட துடித்திருக்கும் தயாரிப்பாளர் தரப்பு.. இதனையே பீட்சா-2-வாக பாவித்தது.. அப்படீன்னா "பீட்சா படத்தோட இரண்டாம் பாகமா?" என்று கேட்டதற்கு துவக்கத்தில், 'இல்லை'ன்னும் சொல்லலை.. 'ஆமாம்'ன்னும் சொல்ல்லை.. ஆனா படத்தோட இசை வெளியீட்டு விழா.. பிரஸ் மீட் நிகழ்ச்சிகள்லதான் "இந்தப் படத்துக்கும் அந்தப் படத்துக்கும் துளிகூட சம்பந்தமில்லை"ன்னு சொன்னாங்க.. "அப்புறம் எதுக்கு அந்த பீட்சா-2 விளம்பரம்"ன்னு கேட்டதுக்கும் பதில் இல்லை. இப்போது அதற்கான பலனை அவர்களே அனுபவிக்கிறார்கள்..!

பீட்சா லெவலுக்கு கற்பனை செஞ்சு உள்ள வந்த கூட்டம் அது போன்ற திகிலையும், பரபரப்பும் கிடைக்காமல் படத்தை பொத்தாம் பொதுவாக மவுத் டாக்கில் விமர்சித்துவிட்டுப் போகிறது.. எல்லாம்.. இவர்களே இழுத்துக் கொண்டதுதான்..! என்னளவில் இது நல்லதொரு முயற்சிதான்.. 

சொந்த பிஸினஸ் செய்து தோல்வியடைந்து.. கதை எழுதி அதனை புத்தகமாக வெளியிட முயன்று தோற்றுப் போயிருக்கும் சூழலில் ஹீரோவின் அப்பா காலமாகிறார். அவருடைய மரணத்திற்குப் பின்புதான் பாண்டிச்சேரியில் ஒரு வீடு இருப்பதாக அவருடைய நெருங்கிய நண்பர் சொல்ல அந்த வீட்டைப் பார்க்கச் செல்கிறார் ஹீரோ. வீட்டின் பிரமாண்டம் அவருக்கு மகிழ்ச்சியளிக்க.. அந்த வீட்டை விற்றுவிட்டு கிடைக்கும் பணத்துடன் சென்னையில் செட்டிலாகலாம் என்று தனது காதலியுடன் திட்டம் போடுகிறார்..!

அந்த நேரத்தில் பூட்டிக் கிடக்கும் ஒரு அறையில் கிடைக்கின்ற சில ஓவியங்கள் ஹீரோவின் வாழ்க்கையில் சந்தித்த விஷயங்களையும், சந்திக்கப் போகும் விஷயங்களையும் சொல்வதாக இருக்க.. ஹீரோ மனம் குழம்புகிறார்.. அந்த ஓவியங்களின் மூலத்தைத் தேடத் துவங்குகிறார்.. அடுத்தடுத்து சில திருப்பங்கள் அவருக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்க.. அந்த வீடு என்ன ஆகிறது என்பதுதான் கதை..!

இது போன்று ஓவியத்தின் மூலம் கதை.. புத்தகத்தின் மூலம் நடந்துவிட்ட சம்பவங்களின் கதைகளையெல்லாம் படமாக பார்த்தாகிவிட்டது..! மலையாளத்தில்கூட சில படங்கள் வந்திருக்கின்றன..! தமிழில் இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்..! அளவுக்கதிகமாக காட்சிகளின் நேரத்தை இழுக்காமல், தேவையில்லாமல் வேறு காட்சிகளையும் சேர்க்காமல் படம் முழுவதுமே ஒருவித வேகத்துடன் ஓடுவதுதான் படத்தை கடைசிவரையிலும் இருந்து ரசிக்க வைக்கிறது..!

படத்தின் ஹீரோ அசோக் செல்வன்.. 'சூது கவ்வும்' படத்தில் நடித்தவர்..! திரில்லர் வகைகளில் நடிகர்களும் கொஞ்சம் பயமுறுத்தினால்தான் கதைக்கு ஆவும்..! ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி.. நடிப்புக்கு ஸ்கோப் இல்லை என்றாலும், கேமிராவுக்கு ஏற்ற முகம்..! இவர்களைவிட அந்த வீட்டை நாசருக்கு விற்ற ஓவியர் வீரசந்தானத்தின் மகனாக நடித்த பொன்ராஜ் கேரக்டர்தான் நிஜமாகவே நடித்திருக்கிறார்.. டயலாக் டெலிவரிகளில் நிறுத்தி, நிதானித்து.. கொஞ்சம் நடிப்பையும் கூடவே கொடுத்திருக்கிறார்.. வாழ்த்துகள்ண்ணே..!

படத்தின் துவக்கத்தில் இருந்தே இயக்குநருடன் பயணித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பெஸ்ட் போட்டோகிராபி.. வீட்டின் உள்புறம் முழுவதும் சிவப்பு கலரை வாரி இறைத்து... கண்ணை கவர்கிறது.. நாசர் மற்றும் வீரசந்தானத்தின் ரீஎன்ட்ரி காட்சிகள்.. எலெக்ட்ரிக் சர்க்யூட் வெடித்துச் சிதறும்போது அதனை படமாக்கியிருக்கும்விதத்தில்தான் கொஞ்சம் கொஞ்சம் பயமுறுத்தியிருக்கிறார்கள்..! அந்த வீட்டில் பேய் இருக்கு.. ஏற்கெனவே தற்கொலை செஞ்சிருக்காங்க என்றெல்லாம் பழைய பல்லவியை பாடாமல்.. நல்ல எண்ணங்கள்.. கெட்ட எண்ணங்கள் என்று பெயர் மாற்றி அதனைச் சொல்லியிருக்கும் விதம் ரசிக்க வைத்தது. ஆனாலும் இதனை போக்க அதே மாந்தரீக வழிதான் கிடைத்ததா..? 

நாய் செத்துக் கிடக்கிறது.. வீட்டின் கேட் உடைந்து விழுந்து நண்பனின் வாழ்க்கை வீல் சேர் என்றாகிறது.. வீட்டில் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கும் என்ற நிலைமை.. காதலியும், நண்பனும் சேர்ந்து பிரச்சனையை ஏற்றிவிட.. அது காதலனை தற்கொலை செய்யும் அளவுக்குப் போகிறது.. அந்தத் தற்கொலை காட்சிக்கு அத்தனை வலுவில்லாததால் படத்தின் முடிவு என்ன என்ற குழப்பத்தில்தான் ரசிகர்கள் வெளியேறுகிறார்கள்..! இது போன்ற சம்பவங்களை மர்மக்கதை எழுத்தாளர்கள் பலரும் எழுதி முடித்திருக்கிறார்கள். ஆனால் படமாக வந்ததில்லை. இதுதான் முதல் முறை..!

படத்தின் மிகப் பெரிய குறையே ஒலிப்பதிவும், வசனங்களும்தான்.. நான் எப்போதும் சொல்லி வருவது.. சென்னை போன்ற சிட்டிகளின் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களின் சவுண்ட் சிஸ்டத்தை அடிப்படையாக வைத்தே பல பெரிய இயக்குநர்களும் ஒலிப்பதிவை செய்து வருகிறார்கள். மல்டிபிளெக்ஸை தாண்டி மற்ற தியேட்டர்களில் ஸ்பீக்கர் அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமே கேட்கும் சூழலில் அவர்களால் படத்தில் ஒன்றிவிட முடியாது என்கிறேன்.. இப்போதும் அதேதான் நடந்திருக்கிறது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வசனங்கள் தியேட்டரில் முக்கால்வாசி பேருக்கு விளங்கவில்லை.. அப்படியொரு ஒலிப்பதிவு..! அதோடு படத்தின் மிக முக்கியமான வசனங்களில் அதிகமான ஆங்கில சொல்லாடல்கள்..! இது பி அண்ட் சி தியேட்டர்களுக்கு வருபவர்களுக்கு புரியுமா..? வசனமே புரியாமல் மனதில் எப்படி அதனை ஏற்றுவது..? 

பீட்சா அளவுக்கு இல்லையென்றாலும், படத்தின் மேக்கிங்கில் ஒரு வித்தியாசத்தைக் கொடுத்திருப்பதால் இந்தப் படமும் தமிழில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்துவிட்டது..!   

இயன்ற அளவு சிறப்பான படைப்பை வழங்க முனைந்திருக்கும் இயக்குநர் தீபனுக்கு எனது பாராட்டுக்கள்.. அடுத்தடுத்து வேறு படங்கள் அமைந்து இதைவிட சிறப்பாக தனது பெயரை கோடம்பாக்கத்தில் அவர் பதிவு செய்ய வாழ்த்துகிறேன்..!


ஆப்பிள் பெண்ணே..! - சினிமா விமர்சனம்

16-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

புதுமுக ஹீரோ, ஹீரோயின்கள்.. பெயர் தெரியாத தயாரிப்பாளர்.. இயக்குநர்.. நிச்சயம் படம் இப்படித்தான் இருக்கும் என்ற யூகத்தோடு போய் உட்கார்ந்தால், 99 சதவிகிதம் அதுபடியேதான் நடக்கும். 1 சதவிகிதம் மட்டுமே அட.. பரவாயில்லையே என்று சொல்ல வைக்கும்..! அப்படிச் சொல்ல வைத்திருக்கும் படம் இதுதான்.. கவனிக்கவும்.. “பரவாயில்லையே..” என்றுதான்..!


ஒரு அம்மாவுக்கும், மகளுக்குமான பாசப் போராட்டம்தான் படமே..! ஆனால் திரைக்கதையும், இயக்கமும்தான் படத்தின் பிற்பாதியில் மிகவும் ரசிக்க வைக்கிறது..!

ஊட்டி மலைக்கிராமம் அருகில் ஹோட்டல் நடத்துகிறார் ரோஜா. அவருடைய மகள் ஐஸ்வர்யா.. பள்ளி மாணவி. அவரை ஒருதலையாக்க் காதலிக்கும் ஒரு இளம் ஹீரோ.. காதலை ஏற்க மறுத்து தான் ஒரு கன்னியாஸ்திரியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஐஸ்வர்யா..!
இன்னொரு பக்கம் அம்மா ரோஜாவை பார்க்கவே கடைக்கு கூட்டம் கூடி வருவது மகளுக்குத் தெரிகிறது.. ரோஜாவின் உடை, நடை பாவனைகள்.. ஆண் கஸ்டமர்களை கிக் ஏற்றுவது போலவே இருப்பதாக மகள் குற்றம்சாட்டுகிறாள்.. அம்மா இதை ஏற்க மறுக்க.. மகளுக்கும், அம்மாவுக்கும் பிணக்கு..!

இன்னொரு பக்கம் அந்த ஊர் ஸ்டேஷனுக்கு மாற்றலாகி வருகிறார் ஏட்டு தம்பி ராமையா. ரொம்ப தன்மானச் சிங்கம். அவரை முதல் முறையாகவே அவமானப்படுத்தும் இன்ஸ்பெக்டரையே ஆபத்தில் உதவ மறுப்பவர்.. இவரை ஒரு சந்தர்ப்பத்தில் கிண்டலாக பார்த்து சிரிக்கும் ஐஸ்வர்யாவை அவமானப்படுத்த செல்போனில் வீடியோ எடுக்கிறார். இதனை ரோஜா பார்த்துவிட்டு தம்பி ராமையாவை அடித்து, உதைத்து அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்..

இதனால் ஊண், உறக்கம் இல்லாமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கும் தம்பி ராமையா அம்மாவையும், மகளையும் பலி வாங்கத் துடிக்கிறார். இதற்கேற்றாற்போல் ஐஸ்வர்யா ரோஜாவுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து தம்பி ராமையாவிடம் சிக்கிக் கொள்ள.. தம்பி ராமையா தனது சித்து வேலைகளைத் தொடர்கிறார்.. ரோஜா ஒரு பக்கம் தனது மகளைத் தேடி அலைய.. மகளோ தான் கன்னியாஸ்திரியாக வேண்டும் என்ற கனவோடு இருக்க.. தம்பி ராமையாவோ அம்மா, மகள் இருவரையும் ஒரே கல்லில் வீழ்த்த திட்டம் போட.. முடிவில் தமிழ்ச் சினிமாவுக்கேற்ற முடிவோடுதான் முடிகிறது என்றாலும், டிவிஸ்ட்டுகள் தொடர்ச்சியாக நடந்து முடிவதுதான் படத்தின் ஹைலைட்ஸ்..!

முதல் பாராட்டு ரோஜாவுக்கு..! இந்த வயதில் இந்தக் கேரக்டரில் இப்படி நடிப்பதற்கு வேறு யாரும் முன் வர மாட்டார்கள்..! நான் கூட படத்தின் துவக்கத்தில் என்னய்யா இது இப்படி காட்டுறாய்ங்க என்று ஜெர்க் ஆனதென்னவோ உண்மை..! ரோஜாவின் அழகை பார்க்கவே கூட்டம் வருகிறது என்பதையும், அவர் இப்போதும் இளமை துள்ளலுடன் இருக்கவே விரும்புகிறார் என்பதை காட்டும்விதமாகவும் காட்சிக்குக் காட்சி கேமிரா ரோஜாவின் இடுப்பையே கவர் செய்திருந்தது..! பின்பு கதை புரிந்தவுடன்.. இதுவும் புரிந்தது..! இயக்குநரும் இதே கதையைத்தான் சொன்னார்.. தேங்க்ஸ் டூ ரோஜா..!

புதுமுக ஹீரோயின் ஐஸ்வர்யா.. மலையாளத்துக்கே உரிய வாசம்.. படபடவென வசனங்களை கொட்டும் கேரக்டர்.. நச்சென்று நடித்திருக்கிறார்.. இவரை ஒப்பிடுகையில் ஹீரோவான  அந்தச் சின்னப் பையன் பாவம்தான்..! ஒட்டாமலேயே காதலை ஓட்டியிருக்கிறார்கள் கடைசிவரையிலும்.. காதலை ஏற்றுக் கொள்ள வைக்க ஹீரோ செய்யும் டார்ச்சரும், நாடகமும் முடிவுக்கு வரும் சூழலின் திரைக்கதை சூப்பர்..! அந்த்த் தங்கை கேரக்டரும் நன்றாகவே நடித்திருக்கிறார்..!

தம்பி ராமையாவுக்கு இதில் அழுத்தமான வில்லன் கேரக்டர்.. முகத்தில் வில்லத்தனம் தெரியாமல் நடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் போலும்..! கொஞ்சம், கொஞ்சம் மாறுதலோடு மாடலாடியிருக்கிறார்..! ஆனாலும் உடல் மொழியோடு, வாய் மொழியும் சேர மறுத்ததால்  வில்லத்தனத்தில் பாதியைத்தான் தாண்டியிருக்கிறார்.. ஆனாலும் இயக்கத்தின் வெற்றியால் இவரது பரிதவிப்புதான் படம் பார்க்கும் ரசிகனை பதட்டமடைய வைத்திருக்கிறது..!

எழுதி, இயக்கியிருக்கும் ஆர்.கே.கலைமணி ஏற்கெனவே 'தை பொறந்தாச்சு', 'சூப்பர் குடும்பம்', 'எங்கள் ஆசான்' ஆகிய படங்களை இயக்கியவர்..! சின்ன பட்ஜெட்டில் என்ன செய்துவிட முடியும் என்று கேட்கும் இயக்குநர்களுக்கு, ஒரு சின்ன நம்பிக்கையை இந்தப் படத்தின் மூலமாகச் சொல்லியிருக்கிறார்..! 

ரோஜாவின் கல்யாணம் பற்றிய பிளாஷ்பேக்.. ஐஸ்வர்யா யார் என்பதற்கான பிளாஷ்பேக்.. திருடன் ஒருவனை வைத்து ஐஸ்வர்யாவை பழி வாங்க பிளான் செய்யும் திட்டம்.. இத்திட்டம் சொதப்பலாகி அடுத்தடுத்து தம்பி ராமையாவை டென்ஷனாக்கும் காட்சிகள்.. ரோஜாவும் பதற்றத்தோடு மகளைத் தேடுவது.. மருத்துவமனையில் ரவுடி தப்பிப்பது.. இன்ஸ்பெக்டரின் மிரட்டல்கள்.. இத்தனையையும் இடைவேளைக்கு பின்பு கொஞ்சமும் டெம்போ குறையாமல் கொண்டு வந்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்..!

ஏதோ ஒரு படத்துக்கு போனோம் என்று உள்ளே போனால்.. கொஞ்சம் யோசிக்க வைத்துதான் அனுப்புகிறார்கள்.. இது ஒன்றே போதும் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு. இவரும் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் முனைப்போடு நடித்தால் அடுத்தவர்களின் படத்திலும் நடிக்கலாம்..!

சின்ன பட்ஜெட்.. குறுகிய நாட்கள் தயாரிப்பு என்பதால் சில காட்சிகளை ஒரே கோணத்தில் எடுத்திருக்கிறார்கள்.  ஆனாலும் ரசிக்க முடிகிறது..! லாஜிக்கையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு.. இந்தக் கால பிள்ளைகள், பெற்றவர்களுக்கே புத்தி சொல்லும் பொறுப்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற இந்த இயக்குநரின் வார்த்தையை மதிப்போம்..! 

இந்த மாச கோட்டா ஒரு படம்தான்னா அவசியம் இந்தப் படத்தைப் பார்த்திருங்க.. மத்த படங்களையெல்லாம் பின்னாடி டிவிலகூட போடுவாங்க. ஆனா இது டிவிக்கு வருமான்றது சந்தேகம்..! அதுக்காகச் சொல்றேன்..!

நன்றி..!

ராவண தேசம் - சினிமா விமர்சனம்

14-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ் ஈழப் போராட்டம் பற்றி இதற்கு முன் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மெட்ராஸ் கபே-யை தவிர மற்றவைகள் பெரிதாகப் பேசப்படவில்லை.. ஆனால் திரையிடுவதற்கே தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று. 'உச்சிதனை முகர்ந்தால்' படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளும், தடைகளும் அது போன்ற படங்களையே தயாரிக்கும் முடிவோடு யாரும் கோடம்பாக்கத்திற்குள் கால் வைக்க்க் கூடாது என்பதையே உணர்த்தியது. ஆனாலும் அதற்குப் பின்பும் 'மிதியடி' என்றொரு படம் வந்தது.. நீலிமாராணி நடித்தது.  யுத்தக்களத்தில் புதைக்கப்பட்ட கன்னிவெடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.. இயக்குநர் நண்பர் இகோர் இப்போது 'தேன்கூடு' என்றொரு படத்தை தயாரித்து இயக்கிவிட்டு சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்..! ஆனால் இந்தப் படத்தை எப்படி சுலபமாக யு/ஏ சர்டிபிகேட் வாங்கி வெளியிட்டார்கள் என்றால் அதற்கான காரணத்தை நீங்கள் படம் பார்த்துதான் தெரிந்து கொள்ள முடியும்..! 


சிங்கள அரசு, சிங்கள ராணுவம், விடுதலைப்புலிகள் இயக்கம், இந்திய அரசு, தமிழக அரசு என்று யாரையும் விட்டுவைக்காமல் அவ்வப்போது லேசுபாசாக விமர்சனம் செய்துவிட்டு அந்த விமர்சனத்தைக்கூட சில இடங்களில் காட்சிகளாக பதிவு செய்திருக்கிறார்கள்..  படம் முழுவதிலும் தமிழ் ஈழ மக்களின் பேச்சு ஸ்டைல்.. கேட்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கிறது.. புலிக்கொடி பறக்கும் காட்சிகள் ஒரு தமிழ்ச் சினிமாவில் காட்டப்பட்டு, அது இந்தியாவில் திரையிடப்படும் இந்தச் சூழலை நாம் மனப்பூர்வமாக வரவேற்க வேண்டும்..!


முல்லைத்தீவில் இருந்துதான் கதை துவங்குகிறது.. துவக்கத்தில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் வாழும் மக்கள்.. தமிழ்ச் சினிமா போல ஒரு காதல்.. என்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும், ஏக்கத்திலும் ஹீரோ அஜய்யை சுற்றிச் சுற்றி வரும் ஹீரோயின் ஜெனிபர்.. அங்கிருந்து தமிழகம் தப்பி வரும் மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அனுப்பி வைக்கும் புரோக்கர்.. வெளியூர் போய் பிஸ்கட், பிரட் பாக்கெட்டுகளை வாங்கி வந்து அதனை ரேஷன் முறையில் கொடுப்பதாகச் சொல்லி பாதியை பதுக்கி வைத்து அதையும் பிளாக்கில் விற்பனை செய்யும் அக்மார்க் தமிழன்.. எப்போதே காணாமல் போன தனது மகன் திரும்பி வருவான் என்றெண்ணி அவனுக்காகக் காத்திருக்கும் வயதான தம்பதிகள்.. தனது மகனை பெரிய படிப்பாளியாக உருவாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பாசக்கார அப்பா.. இப்படி அந்தக் கிராமத்தில் இருக்கும் ஒரு சிலரை மையப்படுத்தியே கதையை நகர்த்தியிருக்கிறார் புதுமுக இயக்குநரும், படத்தின் ஹீரோவாவுமான அஜெய் நூத்தகி. 

இதனூடே இன்னொரு சின்னப் பையன் கேரக்டர்.. இவரை வைத்துதான் அனைத்துவித விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறார் இயக்குநர். காணாமல் போன பையனைத் தேடியலையும் வயதானவரின் பெயர் வேலுப்பிள்ளை. இவரைக் குறி வைத்தே பல வசனங்கள் செல்கின்றன..!


சிங்கள ராணுவம் திடீரென்று அந்தப் பகுதியைத் தாக்கி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட.. தமிழர்கள் கொல்லப்பட்டு.. பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்குட்பட்டு கொல்லப்படும் சூழலில் மீண்டும் அடுத்த அதிரடியாக புலிகள் தாக்குதலில் மீண்டும் அப்பகுதியில் புலிக்கொடி பறக்கிறது..! வரும் தளபதியிடம் மக்கள் கேள்விகளை வீசுகிறார்கள்.. இந்தப் போராட்டத்தினால் யாருக்கு லாபம்..? இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகிறது..? என்றைக்கு இது நிற்கும்.. என்று கோப்படுகிறார்கள்..! 


மீண்டும் மீண்டும் விமான தாக்குதல்கள்.. சோத்துப் பிரச்சினை.. எத்தனை நாளைக்கு பிரெட்டையும், பிஸ்கட்டையும் சாப்பிடுவது.. இந்தியாவுக்கு போயாவது வாழலாம் என்று முடிவெடுத்தால், புலிகள் இயக்கம் அதனைத் தடை செய்கிறது.. அனுமதிக்க மறுக்கிறது.. ஒரு சூழலில் புலிகளை எதிர்த்து அனைவரும் ஒன்றாகவே படகில் அங்கிருந்து இந்தியா நோக்கி கிளம்பி வருகிறார்கள்.. இதற்கு மேல்தான் இந்தப் படம் நாடகத்தனமான, வழக்கமான தமிழ்ச் சினிமா என்பதிலிருந்து மாறி அழகியல் கலையாகவே மாறிவிட்டது..!

தப்பிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒன்று சேர்ந்து கிளம்பினாலும், அவர்களுக்கிடையில் இருக்கும் குரோதங்கள்.. கோபங்கள்.. என்று அனைத்தையும் அவ்வப்போது இடையிடையே வெளிப்படும் சூழலும் ஏற்படுகிறது.. வழி தவறிய நிலையில் அந்த தப்பித்து வரும் அகதி மக்களின் அவல நிலையை இதைவிடவும் வேறு யாரும் மிக எளிமையாக புரிய வைத்துவிட முடியாது..!   

இந்தப் படத்தின் இயக்குநர் அஜெய் தமிழர் அல்ல.. ஆந்திராக்காரர்..! அடிக்கடி காக்கிநாடா கடல் பகுதிக்கு வழி தவறி வந்து நிற்கும் தமிழர்களின் படகுகள் பற்றிய செய்தியைப் பார்த்தும், படித்தும் கேள்விப்பட்டும் அவர்களது அந்த அவலத்தை ஒரு படமாக எடுத்துப் பதிவு செய்ய நினைத்து இதனை எடுத்தாராம்..! இவரை எவ்வளவு வேண்டுமானாலும் வாழ்த்தலாம்..! 


படகு செல்லும் பாதையை எப்படி தீர்மானிப்பது.. கப்பல் படைகள் வந்தால் எப்படி தப்பிப்பது..? ஒன்றரை நாளில் இந்தியா வந்துவிட வேண்டிய இவர்கள் வழி தவறியதால், 10 நாட்களுக்கு மேல் கடலில் பயணித்து எதனை இழந்து எதனை பெற்றார்கள் என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

ஹீரோவாகவும், இயக்குநராகவும் அசத்தியிருக்கிறார் அஜெய்.. இவருக்கு ஜோடியாக ஜெனிபர்.. நந்திதா என்ற இயற்பெயரோடு இதற்கு முன்னரே பல படங்களில் நடித்திருக்கிறார். கல்யாணம் செஞ்சு, பிள்ளையும் பெத்த பின்பு இந்தப் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது.. பையனை தேடிக் கொண்டிருக்கும் முதியவர்களான அந்த வயதான பெண்மணியும், வேலுபிள்ளை கேரக்டரில் நடித்திருக்கும் கொண்டாவும் மனதை உருக வைத்துவிட்டார்கள்..! இப்படியெல்லாம் முடிவுகள் ஒரு அப்பனுக்கும், அம்மாவும் வருமெனில் எந்தப் பிள்ளையால் தாங்கிக் கொள்ள முடியும்..? அந்தச் சின்னப் பையன் படபடவென பேச்சில் பட்டாசாக வெடிக்கிறான்.. அனைவரையும் லெப்ட் அண்ட் ரைட்டாக வெளுத்துக் கட்டும் அவனது பரிதாப முடிவுதான் அந்தக் கேரக்டருக்கு கனம் சேர்க்கிறது..! அவனை வைத்து இயக்குநர் கேட்டிருக்கும் கேள்விகளைத்தான் சம்பந்தப்பட்ட பலரும் தமிழ்நாட்டில் தினம் தினம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்..! கைக்குழந்தையுடன் தனது மனைவியுடன் பயணிக்கும் சந்திரன்.. ஆஸ்துமா நோயாளியான அந்த முதிய பெண்மணி.. அவளைக் காப்பாற்றத் துடிக்கும் பெரியவர்.. மற்றவர்களுக்கு கொடுக்க நினைக்காமல் தானே சாப்பிட நினைக்கும் புரோக்கர்.. மனிதாபிமானம் நிறைந்த அவனது மனைவி என்று அனைவருக்குமான திரைக்கதையை அழகாக எழுதியிருக்கிறார் இயக்குநர்..!


இடைவேளைக்கு பின்பான பகுதி முழுவதும் கடலாக இருக்க.. அனைத்தையும் கண் முன்னே அழகாகக் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் ராம்ராஜ்.. கொஞ்சமும் பிசிறு தட்டாமல் நெய்திருக்கும் எடிட்டர் கார்த்திகா சீனிவாஸ் இருவரும் படத்திற்கு மிகப் பெரிய பலம்.. இந்தப் படம் சொல்லியிருக்கும் பாடமும்,  கேட்டிருக்கும் கேள்விகளும் தமிழ்த் திரையுலகில், "நாங்க என்ன செய்ய முடியும்..? அதான் மீட்டிங் போட்டு பேசியாச்சுல்ல.. பேட்டியெல்லாம் கொடுத்தாச்சுல்ல..." என்று சொல்லி தப்பிப் போயிருக்கும் தமிழ் இயக்குநர்களை நோக்கித்தான் வீசப்பட்டிருக்கிறது..!   அவர்கள்தானே இதனை முதலில் கேட்டிருக்க வேண்டும்.. இதற்கும் ஒரு ஆந்திராக்காரன்தான் வர வேண்டுமா..? 

"நாங்கள் இப்போது தோற்றவர்களாக இருக்கலாம். ஆனால் என்றோ ஒரு நாள்.. எங்களது வாரிசுகள் வெல்வார்கள்.." என்ற நம்பிக்கையையும் வார்த்தைகளால் இந்தப் படம் சொல்கிறது.. இந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்த சென்சார் போர்டுக்கு மீண்டும் எனது நன்றிகள்..! 

அவசியம் பார்க்க வேண்டிய படம் மக்களே..! தவற விடாதீர்கள்..!

11-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா - டிசம்பர் 12-19

07-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் நடத்தும் 11-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா வரும் டிசம்பர் 12-ம் தேதி முதல் 19-ம் தேதிவரையிலும் சென்னையில் நடக்கவிருக்கிறது..

தமிழ்ச் சினிமாவில் உள்ள பிரபல இயக்குநர்கள், கேமிராமேன்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோரை உறுப்பினராக்க் கொண்ட இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு கடந்த 2003-ம் ஆண்டு முதலே இந்த சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறது..! கடந்த 5 ஆண்டுகளாக சிறந்த தமிழ்ப் படங்களுக்கான விருதுகளும், சிறப்பு நடுவர் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.. 


இந்த ஆண்டும் வரும் டிசம்பர் 12-ம் தேதி சென்னையில் தொடங்கும் இந்த 11-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா போட்டியில் பங்கேற்கும் சிறந்த தமிழ்த் திரைப்படங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..!

இதற்கான விண்ணப்பங்களை இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன், எண் : 4, 2-வது மாடி, இ பிளாக், ஜெமினி பார்சன் குடியிருப்பு, சென்னை-600006 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.. தொலைபேசி : 044-2821652, 044-65163866. செல் : 9840151956 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்..!

2012-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி 2013-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதிவரையிலும் சென்சார் செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றவையாகும்..

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களோடு போட்டியில் பங்கேற்கும் தமிழ்ப் படங்கள் ஆங்கில சப்-டைட்டில்களுடன் கூடிய 2 டிவிடிகளையும் ஒப்படைக்கப்பட வேண்டும்.. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி நவம்பர் 10.


சென்சார் சர்டிபிகேட்டுக்கான கடைசி தேதியை அக்டோபர் 30 வரையிலும் நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் நிகழ்ச்சி நடத்தும் அமைப்பிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இதனை பரிசீலிப்பதாக அதன் செயலாளர் தங்கராஜும் கூறியிருக்கிறார்.. ஆக, இந்தத் தேதியும் தள்ளிப் போனாலும் இந்த வருடத்திய சிறந்த படத்திற்கான போட்டி மிகக் கடுமையாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்..!

கும்கி, நீர்ப்பறவை, விஸ்வரூபம், ஹரிதாஸ், பரதேசி, சென்னையில் ஒரு நாள், சூது கவ்வும், நேரம், ஆதலால் காதல் செய்வீர், தங்கமீன்கள், மூடர் கூடம், ஓநாயும் ஆட்டுக் குட்டியும் - இவைகள்தான் முதல், இரண்டாவது மற்றும் சிறப்புப் பரிசுகளுக்குப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கிறேன்..!

என்னுடைய சாய்ஸ் :

முதல் பரிசு : பரதேசி

இரண்டாவது பரிசு : ஆதலால் காதல் செய்வீர்

நடுவர்களின் சிறப்புப் பரிசு : தங்கமீன்கள்

இந்தப் பரிசுத் தொகையான 1 லட்சம் என்பதே மிகக் குறைவு என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார். இதனையும் பரிசீலிப்பதாகக் கூறியிருக்கிறார் செயலாளர் தங்கராஜ்..!

மேலும் இந்தாண்டு விழாவைத் துவக்கி வைக்க உலக நாயகன் கமல்ஹாசனை அழைக்க பெரும் முயற்சி எடுத்து வருவதாகக் கூறியிருக்கிறார். இது பற்றி இன்றைக்கு அவரைச் சந்தித்து உறுதி செய்யவிருப்பதாகவும் கூறினார்.. அவரையே அழையுங்கள்.. பொருத்தமாகத்தான் இருக்கும்..!

நிகழ்ச்சி சிறப்புற நடைபெற எனது வாழ்த்துகள்..!

ஆல் இன் ஆல் அழகுராஜா - சினிமா விமர்சனம்

06-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தொடர் வெற்றிகளைக் கொண்டவர்கள் அடுத்த வெற்றிக்கு இதுவரையிலும் காட்டிய முனைப்பையும், உழைப்பையும் காட்டத் தவறினால் அப்போதும் வெற்றி தொடராது என்பதற்கு இந்தப் படமும் ஒரு சான்று..!



கார்த்தியின் தொடர் தோல்விகளை தடுத்து நிறுத்த தொடர் வெற்றிகளைக் கொடுத்த இயக்குநர்தான் தேவை என்பதையறிந்து அவருடைய நெருங்கிய தயாரிப்பாளர் திட்டமிட்டுத்தான் இதனை ஒருங்கிணைத்துள்ளார். தவறுகள் முழுவதும் இயக்குநருடையதுதான்..!

சந்தானம் என்கிற ஒற்றை மனிதனின் தலையில் அனைத்தையும் தூக்கிச் சுமக்க வைத்துவிட்டதால் அந்த காமெடியனையே சீனுக்கு சீன் பார்க்க வேண்டிய கொடுமையிலும், பேசுவதையெல்லாம் காமெடி என்று நினைத்து அவர் பேசியிருப்பதைக் கேட்டு சிரிக்கக்கூட முடியாமல் போனதால் படம் காமெடி படமா அல்லது.. சீரியஸ் படமா என்கிற பீலிங்கைக்கூட தொட்டுவிட்டது..!

எப்போதும் ராஜேஷின் கதை தேர்வும், சீன்கள்  அமைப்பதிலுமே நகைச்சுவை இருக்கும். இதில் கதையில் நகைச்சுவை இருந்தும், சீன்களில் நகைச்சுவை காணாமல் போய்விட்டது.. வெறுமனே இயக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய..?

சிற்சில காட்சிகளில் மட்டுமே சிறிது நகைக்க முடிகிறது.. அதிலும் குறிப்பாக காஜல் அகர்வால் ஆண்ட்டி நடனம் கற்றுக் கொள்ளும் காட்சி.. எம்.எஸ்.பாஸ்கர் மாட்டிக் கொள்ளும் காட்சி.. என்று சிலவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு முழு படத்தையும் 2 மணி 54 நிமிடங்கள் பார்க்க வேண்டுமெனில் மனுஷன் எப்படிய்யா உக்காந்திருக்கிறது..!?

லோக்கல் சேனல் செட்டப்பெல்லாம் நல்லாத்தான் இருந்தது..! அதில் சந்தானத்தை திணித்து கரீனா கபூராக மாற்றி.. கோட்டி சீனிவாசராவை சபலத்தில் ஆழ்த்துவதும்.. அது தொடர்பான காட்சிகள் கடைசிவரையிலும் தொடர்வது உவ்வே ரகம்..!  இதுவே படத்திற்கு மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட் என்று நினைக்கிறேன்..!

சந்தானத்தின் இழுவை கமெண்ட்டுகளை இனிமேலும் மக்கள் நம்பி பார்ப்பார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம்.. இந்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா' அதனை பொய்யாக்கியிருக்கிறது..!  சந்தானம் பேசி பேசி பேசியே கொல்கிறார்.. இத்தனை பக்கம், பக்கமான டயலாக்குகள் கிடைத்துவிட்டால் ரீலை ஓட்டிவிடலாம்.. ஆனா சிரிக்க வைக்கணுமே..? யாரிடம் சரக்கு தீர்ந்துச்சுன்னு தெரியலை..?

காஜல் ஆண்ட்டி எப்போதும்போல் ஜில்லென்றே இருக்கிறார்.. கலைத்துறையில் சாதனை படைக்க நினைத்து அவர் எடுக்கும் முயற்சிகள் நகைப்புக்குரியதாக இருந்தாலும் இது போன்ற ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் இந்த அளவுக்காச்சும் நடிப்புக்கு ஸ்கோப் கொடுத்தாங்களேன்னு சந்தோஷப்பட்டுக்கலாம்..!

ராதிகா ஆப்தேவின் வருகை மட்டுமே ரசிகர்களுக்கு கொஞ்சம் ரிலீப் கொடுத்தது..  'ஓ மானே மானே' ஸ்டைலில் இருக்கும் 'உன்னைப் பார்த்த' பாடல் காட்சியை ரம்மியமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். தமனின் இசையும், பாடல் தேர்வும், லொகேஷனும் அருமை.. நடனமும் அசத்தல்தான்..! இங்கேதான் ராதிகாவை ரொம்பவே பிடிச்சுப் போகிறது..!

சென்டிமெண்ட் காட்சிகளில் ராஜேஷ் குறை வைக்க மாட்டார்.. நல்லா பாடுறேனாப்பா என்று சந்தேகத்துடன் காஜல் கேட்கும் கேள்விக்கு குடும்பமே பதில் சொல்லி அழுகும் காட்சி.. கார்த்தியை கல்யாணம் செய்ய சம்மதிக்க வைக்க பிரபு செய்யும் செட்டப்பு..  முதலாளி செத்துட்டாருன்னு தெரிஞ்சு அவசரத்தனமா அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைக்கும் காட்சி.. என்று எதிலும் குறையில்லை. ஆனால் மனதில் நிற்கவில்லை..! பிரபு-சரண்யா காட்சிகளுக்கு டிவி சீரியல்களே பெட்டர் போலத்தான் தோன்றுகிறது..!

கார்த்திக்கு சண்டை காட்சிகள் இல்லாததால் ஹாயாக நடித்திருக்கிறார்.. மற்றபடி நடிப்பில் எந்த வித்தியாசமும் இல்லை.. மேக்கப்பும் இதே மாதிரிதான்.. முன்னெல்லாம் ஒரு ஹீரோவின் மேக்கப்பை வைச்சே அது என்ன படம்ன்னு சொல்லுவோம்.. இப்போவெல்லாம்.. அது அந்தக் காலம்..? 

படம் வெளியாகி 3 நாட்கள் கழித்து படத்தின் பிற்பாதியில் 20 நிமிட காட்சிகளை குறைத்திருக்கிறார்களாம். அதனை முன்பேயே செய்திருக்கலாம்.. எடுத்ததையெல்லாம் மக்கள் பார்த்துவிடுவார்கள் என்கிற குருட்டு நம்பிக்கையில் செய்த பிழை இது..! 

எல்லாம் முடிஞ்சு வீட்டுக்குக் கிளம்பலாம்ன்னு எந்திரிக்கும்போது திரும்பவும் ஒரு கிளைமாக்ஸை வைச்சு கொன்னுட்டாங்க..! அந்த கடைசி டிரெயின் டிராக்  சீனும், கரீனா சோப்ரா என்ட்ரியும் தேவைதானா..? படத்தோட முடிவுல ஒலிக்கிற 'நிலா காயுது' பாடலின் 'ச்சீ' என்கிற இந்த வார்த்தைதான், இந்தப் படத்துக்கு கிடைச்ச கடைசி டிரேட் மார்க் கமெண்ட்டு..! அண்ணன் ராஜேஸுக்கு தேவையா இது..? 

இந்தப் படத்துக்கு இவ்ளோ விமர்சனம் போதும்ன்னு நினைக்கிறேன்..!

பாண்டிய நாடு - சினிமா விமர்சனம்

04-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கமான பழிவாங்கும் கதைதான்.. ஆனால் திரைக்கதையும், இயக்கமும் சேர்ந்து சிறந்த படம் என்று சொல்ல வைக்கின்றன..!



'பாண்டிய நாடு' என்று சொல்லி மதுரைக்குள் படமெடுத்தால் மட்டுமே போதாது.. மதுரை மண்ணின் கதையைத்தான் படமாக்க வேண்டும் என்று சுசீந்திரன் நினைத்துவிட்டார் போலும்..! சென்ற ஆட்சிக் காலத்தில் கொடி கட்டிப் பிறந்த அரசியல் தாதாக்களின் கதையோடு இணைத்து.. அந்த ஆட்சிக் காலத்தில் மதுரை எப்படி இருந்தது என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்..

கிரானைட் கற்களை வெட்டியெடுக்கும் பிஸினஸில் அரசியல்வியாதிகள் தங்களது அல்லக்கைகள் மூலமாக என்றைக்கு தலையிட்டார்களோ அன்றைக்கே அது வளம் கொழிக்கும் பிஸினஸாகிப்போனது.. அது சென்ற தி.மு.க. ஆட்சியில்தான் அமோகமாக வளர்ந்து ஆக்டோபஸாக உயர்ந்து மதுரையின் உயர் அரசு அதிகாரிகளை நியமிக்கும் அளவுக்கு சர்வசக்தி படைத்த விஷயமாக மாறியது..!

இந்த ஆட்சிக் காலத்தில் ஏதோ ஒப்புக்கு நடவடிக்கை எடுப்பதுபோல் எடுத்து சீன் போட்டு.. ஒரே நாளில் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கொடுத்து கொள்ளையர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. வாங்க வேண்டியதை வாங்கிவிட்டுத்தான் செய்திருக்கிறார்கள் என்பதை அரசியல் அறிந்தவர்கள் உள்ளம் சொல்கிறது..!

கனிமவளத் துறையின் உதவி இயக்குநராக வேலை செய்யும் விஷாலின் அண்ணன், வில்லனின் அரசு அனுமதியின்றி நடத்தப்படும் கிரானைட் பிஸினஸை இழுத்து மூட வைக்கிறார்.. கோபம் கொண்ட வில்லன் விஷாலின் அண்ணனை கொலை செய்து அதனை விபத்து என்று செட்டப் செய்துவிடுகிறார்..! அடிதடி என்றாலே பத்து முறை யோசிக்கும் விஷால், தனது அண்ணனின் மரணத்துக்குப் பதிலடி கொடுக்க நினைக்கிறார். ஆனால் அது அடிதடியாகிப் போய் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று யோசித்து வில்லனின் கதையை வேறு வழியில் முடிக்க எண்ணுகிறார். அதே நேரம் அவருடைய அப்பா பாரதிராஜா, தனது மகனின் கொலைக்கு பழி வாங்க தானும் ஒரு வழியில் முயல்கிறார்.. இதில் யாருடைய முயற்சி வெற்றி பெற்றது என்பதுதான் கதை..! இதற்கிடையில் தமிழ்ச் சினிமாவுக்கே உரித்தான ஒரு காதல்.. பாடல்கள் என்று இன்னொரு பக்கமும் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்..!

'நான் மகான் அல்ல' படம் போலவே இதிலும் திரைக்கதையை பிய்த்து பிய்த்து கொடுத்திருக்கிறார் என்றாலும் அதுவே சுவாரசியம்..! ஒரு பக்கம் வில்லனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லியபடியே இன்னொரு பக்கம் விஷாலின் குடும்பம், அவரது காதலின் தோற்றம், வளர்ச்சி பற்றியும் ஒன்றுக்கொன்று டச் செய்யாத விஷயமாகக் கொண்டு போயிருக்கிறார்..!

விஷாலின் கல்யாணப் பேச்சு நடக்கும் சமயமெல்லாம், வில்லன் மறுபுறத்தில் படுகொலைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்..! விஷாலின் காதல் துளிர்க்கும்போதுதான் அவரது அண்ணனின் குணம் வெளிப்படுகிறது..! ஒரு துர்மரணத்தை பார்த்து மனம் கேட்காமல் போய் சண்டையிட்டு அதன் விளைவாய் வில்லனின் குவாரிகளுக்கு சீல் வைக்கும் காட்சியில் மனம் ஒன்றிப்போய்தான் விட்டது.. காரணம்.. வெரி சிம்பிள்.. அந்த மார்ச்சுவரி காட்சியை அவ்வளவு யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இய்க்குநர்..!

தனது காதலுக்கு உதவிய நண்பனுக்கு ஒரு உதவியைச் செய்யப் போகும் அந்தக் காட்சியின் தொடர்ச்சி, விஷாலின் வீடு தேடி வரும் வில்லனின் அடியாளை வழியிலேயே போட்டுத் தள்ள முயல்கிறது..! இதற்கு அடுத்தடுத்த காட்சிகளாக மருத்துவமனையில் அடியாள்.. விஷால் அண்ணன் கதை முடியும் காட்சியும் தொடர்ச்சியாக வர திரைக்கதையின் ஓட்டத்தில் நம்மை ஆழ்த்துகிறது..!  இரண்டாம் பாதியில் திரைக்கதைதான் படத்தை தொய்வின்றி கொண்டு போயிருக்கிறது..! 

மிகச் சிறப்பான இயக்கம். ஒரு  பிரேமில்கூட தேவையில்லாமல் எவரும் சும்மா நிற்கவில்லை..! துவக்கத்தில் வரும் கேங் லீடர் இறப்பு காட்சியில்கூட அந்தப் பாடலை வைக்க எந்த இயக்குநருக்கும் மனசு வராது.. அதனை எடுக்க வேண்டியவிதத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார்..!

சும்மா சோபாவில் படுத்துத் தூங்குவது போன்ற காட்சி என்றாலும்கூட தானே படுத்துக் காண்பித்துவிட்டு நடிக, நடிகையரிடம் நடிப்பை வாங்கும் இயக்குநர் இமயம் இதில் ஒரு தகப்பனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.. பெஸ்ட் ஆக்ட்டிங் ஸார்..!(இங்கிலீஷ்ல சொன்னா ஸார் ரொம்ப சந்தோஷப்படுவார்..!) மகனின் மரணத்தைத் தொடர்ந்து இவர் காட்டுகின்ற நடிப்பு.. மருத்துமனையில்.. கையெழுத்திட மறுத்து பேசும் பேச்சு..! தனது நண்பரிடம் உதவி கேட்டுச் சென்று பேசுவது.. லோக்கல் ரவுடிகளை தேடிச் சென்று பேசுவது.. என்று அத்தனையிலும் ஒரு சராசரி தகப்பனை பிரதிபலித்திருக்கிறார் பாரதிராஜா. ஒருவேளை அவரது பண்பட்ட நடிப்பு இது முதல் முறை என்பதால் நமக்கு மிகவும் பிடிக்கிறதோ என்று தெரியவில்லை. ஆனால் ரொம்ப, ரொம்பப் பிடித்திருக்கிறது நடிகர் பாரதிராஜாவை..!

விஷாலுக்கு இதற்கு முன் கிடைத்ததெல்லாம் இயக்குநர்கள் அவருக்காக கொடுத்த வேடம்.. இது சொந்தப் படம் என்பதாலும், ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இப்போது இருப்பதாலும் இயக்குநரின் கைகளில் தன்னை ஒப்படைத்துவிட்டு தான் நினைத்ததை சாதித்திருக்கிறார்..! இதுபோலவே இனி வரும் வருடங்களிலும் செய்தால் ஒரு தயாரிப்பாளராகவும் இவர்  பெருமையுடன் கோடம்பாக்கத்தில் வலம் வரலாம்..!

லஷ்மி மேனன் படத்துக்கு படம் மின்னுகிறார்.. கும்கியில் காணாத அழகு இதில்..! படிப்பதோ 11-ம் வகுப்பு. ஆனால் இதில் டீச்சர் வேடம்.. சேலை அணிந்து வந்தால் எந்தப் பெண்ணும் பெரியவளாகத்தான் தெரிவார்கள்.. இதில் பார்த்தவுடன் காதல் வருவதை போல பாடலையும் வைத்து லஷ்மியையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.. அழகுதான்.. 'ஒத்தக்கடை' பாடலின் இடையில் கல்யாணத்தை ஜூலைக்கு அப்புறம் வைச்சுக்கலாமா என்று கேட்கும் அந்த ஷாட்டே கொள்ளை அழகு.. அப்புறம் ஏன் அப்படி டான்ஸ் ஆட மாட்டாங்க..?! 

லஷ்மியை டாவடிக்க விஷால் மேற்கொள்ளும் முயற்சிகளும்.. லைன்மேனை கரெக்ட் செய்து கரண்ட்டை கட் செய்து மொட்டை மாடியில் தனக்குத்தானே பில்டப் கொடுக்கும் காட்சிகளும்.. பிரதர்கூட புதருக்குள்ள என்னடி பேச்சு என்ற சூரியின் டைமிங்கான காமெடியும் அந்தக் காட்சியை பெரிதும் ரசிக்க வைக்கின்றன..! இந்தக் காதல் இல்லாமல் இருந்திருந்தால்கூட படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்..! ஆனாலும் தமிழ்ச் சினிமாவை பிடித்த வரமா, சாபமா என்றே தெரியாத இந்தக் காதலும், பாடல் காட்சிகளும் பல படங்களில் தொய்வை ஏற்படுத்துகின்றன என்பது மட்டும் உண்மை.. 

இதிலும் பிற்பாதியில் வரும் 'பை பை' பாடல் காட்சி திரைக்கதைக்கு மிகப் பெரிய இடையூறுதான்.. அந்தப் பாடல் இல்லாமல் இருந்தாலும் நன்றாகத்தான் இருந்திருக்கும்.. ஆனாலும் அந்தப் பாடலில் லஷ்மியின் குத்தாட்டமும், பாடலை படமாக்கியிருக்கும்விதமும் ரசிக்கத்தான் வைக்கிறது..! இமான் வழக்கம்போல ஏமாற்றவில்லை.. அவரே சொன்னதுபோல, ஒரு படத்தில் ஏதாவது ஒரு பாடலையாச்சும் ஹிட்டாக்கிரணும்னு நினைச்சு வேலை பார்த்தா ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்..! ஷோபியின் நடன அமைப்பு எல்லா பாடல்களிலுமே அசத்தியிருக்கிறது..! 'ஒத்தக்கடை' பாடலின் காட்சிகள் முழுவதும் தெற்குத் தெரு அருகில் படமாக்கப்பட்டிருப்பதுபோல தெரிகிறது. அங்குதான் இது போன்ற நெளிவு, சுளிவு தெருக்கள் அதிகம்..! ஆனாலும் பிரேமில் வெளியாள் ஒருத்தரைக்கூட காட்டாமல் எடுத்திருக்கிறார் பாருங்கள்.. இதுதான் ஆட்டம்..!

லாஜிக் மீறல்களும் இல்லாமல் இல்லை..! கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் விஷாலின் கோபம் மட்டுமே வெளிப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்து அனல் அரசு ஆக்சன் காட்சிகளை வைத்திருக்கிறார் போலும்.. சினிமா சண்டையாக நினைத்தும், வில்லன் வீழ்வது சினிமாவின் கட்டாயம் என்பதாலும் இதனை விமர்சிக்கவே முடியாது.. இப்படி பார்த்தால் தமிழ்ச் சினிமாவில் எல்லா படங்களும் ஓட்டைதான்..! யார் கொலைகளைச் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்கவே முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டிருப்பதாக இயக்குநர் இறுதியில் சொல்கிறார்..! பாரதிராஜா ஏற்பாடு செய்த ரவுடியின் செல்போன் நம்பர்களை ஆராய்ந்தாலே இதில் பாரதிராஜா பிடிபட வாய்ப்புண்டு.. அந்த போன் அழைப்புக்கு பின்புதானே படம் பரபர என்கிறது..! 

அனைத்துத் திரைப்படங்களும் சொல்வதை போலவே இந்தப் படமும் அடியாட்களை மட்டுமே வதம் செய்கிறது.. இந்த ஊழலுக்கும், அராஜகத்திற்கும் துணை நின்ற அரசியல்வியாதிகளை எதுவும் செய்யாமல் விட்டுவிடுகிறது.. இப்படித்தான் படத்தை எடுக்க முடியும்.. வேறு வழியில்லை என்பது தமிழக அரசியல் சூழல்..! 

அரசியல் ரவுடித்தனத்தில் விளையும் அனைத்துவித பயங்கரங்களுக்கும் பின்னணியில் மூளையாக இருப்பது அரசியல்வியாதிகள்..! ஆனால் அவர்களை கை வைப்பதுபோல எடுத்தால் சென்சார் பிரச்சினை.. கட்சிகள் பிரச்சினை என்று பலவும் வரும்.. அதனை எதிர்கொள்ளும் தைரியம் இங்கே இப்போது யாருக்கும் இல்லை.. போட்ட காசை எடுக்க வேண்டுமெனில் அரசியல்வியாதிகளை பகைத்துக் கொள்ளாமல் போய்விடுவதே நல்லது என்று நினைக்கிறார்கள் கோடம்பாக்கத்தார்..!

நட்ட நடு இரவில் பாரதிராஜா தனது நண்பரின் வீட்டுக்கு போய் கதவைத் தட்டி  "பணம் கொடுத்தா கொலை செய்வாங்களாமே.. அது மாதிரி ஆளுகளை உனக்குத் தெரியுமா..?" என்கிறார்.. "முடியலடா.. மறக்க முடியலடா.. மூத்த பிள்ளைடா.. தூங்கவே முடியல.. ஏதாவது செய்யணும்டா.. செஞ்சாத்தான் என் மனசு ஆறும்.." என்று அழுது அரற்றுகிறார்..! இந்த உணர்வுதான் அனைவருக்குமே..! 

இவங்களுக்கு எதிரா எதையாவது செய்யணும் பாஸ்..!