தேர்தல் ஸ்பெஷல்-07-03-2009

07-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதலில் லேட்டஸ்ட் நியூஸை பார்ப்போம்.

உத்தரப்பிரதேசத்தில் கண்ணா மூச்சி ஆடிக் கொண்டிருந்த காங்கிரஸும், சமாஜ்வாதிக் கட்சியும் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டன.

"24 தொகுதி கேட்டு காங்கிரஸ் அடம் பிடித்ததால்தான் இந்த கூட்டணி முறிவு" என்கிறார் அமர்சிங். காங்கிரஸோ "வெறும் 17-ஐ வாங்கிக் கொண்டு போக நாங்க என்ன உங்களைப் போல வந்தேறிகளா..? எங்க பரம்பரை என்ன..? எங்க அந்தஸ்து என்ன..? எங்க கெப்பாசிட்டி என்ன..?" என்று மீசையை முறுக்கிக் கொண்டு கிளம்பிவிட்டது.


ஆனாலும் "சோனியாவை எதிர்த்தோ, ராகுலை எதிர்த்தோ நாங்கள் ஆட்களை நிறுத்தவே மாட்டோம்" என்றும் சொல்லியிருக்கிறார் அமர்சிங். கூடவே நான்கைந்து தொகுதிகளைக் குறிப்பிட்டு அவைகளையும் சாய்ஸில் விடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். எல்லாம் ஒரு பயம்தான்..! நாளைக்கு ராகுல்காந்தி பிரதமரானால், முலாயமின் கதி..!

தேர்தல் கமிஷனுக்கு இதனால் ஒரு அனுகூலம். உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெபாசிட் காலியாகும் விஷயத்தில் நிறைய பணத்தைத் தேத்தலாம்.. வாழ்க காங்கிரஸ்..!

இனி நம்ம மாநிலத்துக்கு வருவோம்..

அம்மாவின் உண்ணாவிரதப் போராட்டம் தேதி மாற்றம்

போயஸ் அம்மா தனது ஈழத் தமிழர்களுக்கான உண்ணாவிரதப் போராட்டத்தின் தேதியை ஒரு நாள் முன்னதாக 9-ம் தேதிக்கு மாற்றியிருக்கிறார். ஒருவேளை திங்கள்கிழமை விரதம் இருக்கிறாரோ என்னவோ..! ஒரே நாள்ல பட்டினி கிடக்கும் ஒரு வேலையை, ரெண்டு காரணத்துக்காக முடிச்சுக்கலாம்னு நினைச்சிருக்கார் போலிருக்கு.. செவ்வாய்க்கிழமை உபவாசமாக இருந்திருக்கும்..! விட்ருவோம்.. கலைஞரே வரவேத்திருக்கிறாரு.. பிறகு நாம என்ன சொல்றது..?

தோழர்களால் அம்மாவுக்கு சங்கடம்..!

அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் இரண்டு கட்சிகளுமே தலா பத்து தொகுதிகள் கேட்டு தொகுதிகள் பட்டியலை கொடுத்திருக்காங்களாம்..

அதுல கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் ரெண்டு பேர் லிஸ்ட்லேயும் இருக்காம்.. யாருக்கு எது கிடைக்கும்னு தெரியலையாம்..

அதெல்லாம் அம்மா பார்த்து கொடுப்பாங்க..! சும்மா அழுவாதீங்கப்பா.. ஒரே மிட்டாயே ரெண்டு பேர் கேட்டா அம்மா என்ன பண்ணுவாங்க.. ஆளுக்கு ரெண்டு அடி போட்டுட்டு, அந்த மிட்டாயை அவங்களே எடுத்து தின்னுற மாட்டாங்களா..! இதுதான் நடக்கும்.. பார்க்கலாம்..

பாட்டாளி மக்கள் கட்சி நாளை முடிவு

பாட்டாளி மக்கள் கட்சி கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று செங்கல்பட்டு, அரக்கோணம், தர்மபுரி, திண்டிவனம், சிதம்பரம், புதுச்சேரி ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றது.

இந்த நிலையில் இந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எந்தக் கூட்டணியில் இடம் பெறப் போகிறது என்பதை இன்றுவரையில் அக்கட்சி சொல்லவில்லை.

நாளை(07-03-2009) கூடவிருக்கும் கட்சியின் இளைஞரணி மாநாட்டில் இது பற்றி பேசப்பட்டு பின்பு பொதுக்குழுவில்தான் முடிவெடுக்கப்படும் என்று அன்புமணி சொல்லியிருக்கிறார்.

ஆனாலும் ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இணைய முடிவு செய்துவிட்டதாகவே தெரிகிறது. 6 பாராளுமன்றத் தொகுதிகளும், 1 மேல் சபைத் தொகுதியும் தருவதாக அம்மா சொல்லியிருக்கிறாராம். அந்த 1 மேல் சபை பதவியைக் கொடுத்து மகனை கூல் செய்ய முயன்று வருகிறார் ராமதாஸ். முதலில் வீட்டுக்குள் நடக்கும் இந்த யுத்தத்தில் டாக்டர் ஜெயிப்பாரா என்று பார்ப்போம்..!

விஜயகாந்த் என்ன செய்யப் போகிறார்..?

விஜயகாந்த் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர விருப்பமாக இருந்தும், தி.மு.க.தான் மாநிலத்தில் கூட்டணித் தலைமையாக இருப்பதால் அதனை அவர் விரும்பவில்லையாம். விஜய்காந்திற்காக தி.மு.க. என்னும் சுறாமீனை விட்டுவிட காங்கிரஸும் தயாராக இல்லை. இன்னும் ஒரு முறை தனித்து நின்று முயற்சி செய்வோம் என்று திருமதி விஜய்காந்த் நினைத்திருக்கிறாராம். அண்ணி நினைப்புதானே கடைசியா ஜெயிக்கும்னு அவுங்க கட்சித் தொண்டனே சொல்றான்..

தி.மு.க.வில் தேர்தல் விண்ணப்பம் அமோக விற்பனை

அறிவாலயம் வெகு நாட்களுக்குப் பிறகு களை கட்டியிருக்கிறது.. தாசில்தார் ஆபீஸ் மாதிரி டேபிள் முழுக்க பணக்கட்டுக்கள் நிரம்பி வழிகின்றன. விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணத்தை ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தியும் உடன்பிறப்புகள் அடங்க மறுக்கிறார்களாம்.. தலைவரை நேரில் பார்த்து பேசுவதற்காகவே ஆயிரம் ரூபாயை செலவழித்து பலரும் விண்ணப்பப் படிவத்தை வாங்குகிறார்கள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள் அறிவாலயத் தூண்கள்.

தி.மு.க.வில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் விண்ணப்பித்துள்ளாராம். அதே போல் பவானி ராஜேந்திரன் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார். பெரும்புதூர் தொகுதியின் தற்போதைய எம்.பி. கிருஷ்ணசாமி, திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார். மதுரை தொகுதியில் மு.க. அழகிரி போட்டியிட வேண்டும் என்று சொல்லி இதுவரையில் மூன்று பேர் மனு தாக்கல் செய்துள்ளனராம். மதுரை தொகுதி கேட்டு இதுவரையில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதை நினைவில் வையுங்கள்.

கலைஞர்-திருமாவளவன் சந்திப்பு

திருமாவளவன் கலைஞரை இன்று மாலை சந்தித்துப் பேசியிருக்கிறார். பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகச் சொல்லியிருக்கிறார். அதான் வாரத்துக்கு ஒரு வாட்டி பார்த்துக்கிட்டேத்தான இருக்காங்க.. அதுக்கப்புறம் என்னங்கய்யா மரியாதை நிமித்தம்..?! கூடவே ஜெயலலிதாவின் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரதப் போராட்ட முடிவை பாராட்டியிருக்கிறார். எதுக்கும் போட்டு வைப்போம்னு நினைக்கிறாரோ..!

புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் ஆதரவு யாருக்கு..?

தமிழகத்தில் உள்ள அனைத்து முதலியார், வேளாளர் சமூகத்தில் உள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனை அமல்படுத்தினால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் புதிய நீதிக் கட்சி போட்டியிடாது என்றும் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இல்லாவிட்டால் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று முடிவு செய்திருக்கிறாராம்.. அதையும் வருகின்ற 15-ம் தேதி கூடும் பொதுக்குழுவில் முடிவு எடுத்து அறிவிப்பார்களாம். 15-க்குள்ள ஏதாவது சட்டுப்புட்டுன்னு முடிவெடுங்கப்பான்னு தி.மு.க. தலைவருக்கு சாடைமாடையா சொல்லியிருக்கிறதா பத்திரிகை வட்டாரத்தில் கிசுகிசு பேச்சு..

தொகுதி எல்லை.. தலைவலி பிரச்சினை..!

மறுசீரமைக்கப்பட்ட லோக்சபா தொகுதிகள் மாவட்டம் விட்டு வேறு மாவட்டத்திற்குள் வருவதால் தொகுதிகள் பற்றிய முழுமையான தகவல்களைப் பெறுவதற்கு அதிகாரிகள் மிகவும் சிரமப்படுகிறார்களாம்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் இடம் பெற்றிருக்கும் சட்டசபை தொகுதிகளில் சாத்தூர், சிவகாசி விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகள் விருதுநகர் மாவட்டத்திலேயே உள்ளன. ஆனால் திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகள் மதுரை மாவட்டத்தில் உள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி சட்டப் பேரவைத் தொகுதி தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், வில்லிப்புத்தூர் சட்டசபை தொகுதிகள் தென்காசி லோக்சபா தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

லோக்சபா தொகுதியின் தலைமையிடத்தில் உள்ள அதிகாரி தேர்தல் அதிகாரியாக உள்ளார். ஒரு லோக்சபா தொகுதியின் விவரங்கள் வேண்டுமென்றால், அடுத்த மாவட்டத்தில் உள்ள தேர்தல் பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறதாம்..

இப்படி மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று லோக்சபா தொகுதிக்கு இடம் சேர்த்தவர்களுக்கு, மறுசீரமைப்புக் குழுவினர் என்று ஏன் பெயர் வைத்தார்கள்..?

இனி தேசியத்திற்கு வருவோம்..

அதிகம் இழந்த பாரதீய ஜனதா

1999-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 23.75 சதவீத வாக்குகளை பெற்று 182 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலில் 22.16 சதவீத வாக்குகளைப் பெற்ற அக்கட்சிக்கு 138 இடங்கள்தான் கிடைத்தன. அதாவது வெறும் 1.59 சதவீத வாக்குகள் குறைந்ததால் அந்தக் கட்சி 44 இடங்களை இழக்க நேரிட்டது.

பாரதீய ஜனதா கட்சி 46 பெயர் கொண்ட வேட்பாளர் லிஸ்ட்டை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து இதுவரையிலும் மொத்தம் 166 வேட்பாளர்களின் பெயர்களை பாரதீய ஜனதா வெளியிட்டுள்ளது.

நேற்று வெளியான பட்டியலில் மூத்தத் தலைவர் சுஷ்மா சுவராஜ், கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த், மூத்தத் தலைவர் ஜஸ்வந்த்சிங்கின் மகன் மன்வேந்திராசிங் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 8 பேர்தான் பெண்களாம்.

பாரதீய ஜனதாவின் மூத்தத் தலைவர் வெங்கைய நாயுடு, அருண் ஜெட்லி, ஜஸ்வந்த்சிங் ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லையாம். கடந்த 2004-ம் தேர்தலில் காங்கிரஸைவிட 7 இடங்களை மட்டுமே பாரதீய ஜனதா குறைவாகப் பெற்றது. இதையடுத்து பாரதீய ஜனதாவின் மூத்தத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அத்வானி வலியுறுத்தினார். ஆனால் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வியூகங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட வேண்டியிருப்பதால் இந்த மூவரும் தேர்தலில் போட்டியிடவில்லையாம். டெல்லியில் இருந்தபடியே நாடு முழுவதுமான பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரச்சாரத்தை ஒருங்கிணைக்கும் பணியில் அருண் ஜெட்லி ஈடுபடுவாராம்.

அத்வானியின் முதல் தேர்தல் பிரச்சாரம்

அத்வானிஜி நாளை நாகர்கோவில் வருகிறார். பாரதீய ஜனதாவின் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். நாகர்கோவில் நாகராஜா திடல் மைதானத்தில்தான் இந்த விழா நடைபெறுகிறதாம். பா.ஜ. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், மாநிலத் தலைவர் இல.கணேசன், துணைத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்களாம்.

சிரஞ்சீவி கட்சியின் தேர்தல் அறிக்கை

ஆந்திராவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘பிரஜா ராஜ்ஜியம்' கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கட்சியின் மூத்தத் தலைவர் பி.சிவசங்கர் தலைமையிலான குழு, இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை நேற்று ஐதராபாத்தில் மற்றொரு மூத்தத் தலைவர் பி.உபேந்திரா வெளியிட்டுள்ளார்.

‘பிரஜா ராஜ்ஜியம்' கட்சி ஆட்சிக்கு வந்தால், நிலமற்ற விவசாயிகளுக்கு தலா இரண்டரை ஏக்கர் விளைநிலமும், தலா 5 ஏக்கர் தரிசு நிலமும் வழங்கப்படும்.

அனைத்துத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் காலனிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

பெண் குழந்தைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படும்.

மூத்தக் குடிமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படும். பழங்குடியினர் நலனுக்காக தனி ஆணையம் அமைக்கப்படும்.

பாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற பாடுபடுவோம்.

தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மேலும் சில சாதிகள் சேர்க்கப்பட்டவுடன் மகளிருக்கான இட ஒதுக்கீடு சதவிகிதத்தை அதிகரிக்க பாடுபடுவோம்.

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தை ரூ 200-ல் இருந்து 500 ரூபாயாக அதிகரிப்போம்.

நலிந்த பிரிவினருக்காக வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் அளிக்கப்படும் உதவி ஒரு லட்சமாக உயர்த்தப்படும்.

அரசு ஊழியர்களுக்கான இடைக்கால நிவாரணம் மேலும் 10 சதவிகிதம் அதிகரிக்கப்படும்.

மூத்தக் குடிமக்களின் குறைகளைக் கவனிக்க மாநில அளவில் தனிப்பிரிவு தொடங்கப்படும். மூத்தக் குடிமக்களுக்கு அரசு பஸ்களில் 50 சதவிகித கட்டணச் சலுகை அளிக்கப்படும்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு விவசாய விளைநிலங்களை ஒதுக்குவதை மறுபரிசீலனை செய்வோம்..

தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கை

சிரஞ்சீவிகாருக்கு மட்டும்தான் அறிக்கை தயாரிக்க முடியுமா? எங்களால் முடியாதா..? நாங்க எம்புட்டு தேர்தல் அறிக்கையைப் பார்த்திருப்போம் என்ற நினைப்பில் தெலுங்கு தேசம் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று வெளியிட்டார்.

ஏழைகளுக்கு இலவச கலர் டெலிவிஷன் வழங்கப்படும்.

அத்துடன் ஏழை குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை மாதந்தோறும் ரொக்கப் பணம் வழங்கப்படும்.

பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் இரண்டாயிரமும், ஏழைகளுக்கு ஆயிரத்து ஐநூறும், வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத் தலைவியின் பெயரிலும் இந்தப் பணம் வங்கியில் செலுத்தப்படும். ஏடிஎம் கார்டுகள் மூலம் மாதந்தோறும் அவர்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஏழை குடும்பத்தினரின் உணவு, மருத்துவம் மற்றும் கல்விச் செலவுகளுக்காக இந்தப் பணம் வழங்கப்படுகிறது.

ஏழைகளுக்கு ரொக்கப் பணம் வழங்கும் இத்திட்டம் சாத்தியமானதுதான். பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டினா, சிலி உட்பட 30 நாடுகளில் இது போன்ற திட்டம் நல்ல பயனை அளித்திருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஏழைக் குடும்பத்தினர் வீடுகளில் தலா 2 மின் விளக்குகள், ஒரு மின் விசிறிக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு களைத்து வரும் ஏழை மக்களுக்காக இலவச டிவி நல்ல பொழுது போக்காக இருப்பதுடன் அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கும் உதவும்.

அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் ஏற்கெனவே இத்திட்டம் அமலில் இருப்பதால், ஆந்திராவிலும் இலவச டிவி வழங்கும் திட்டம் சாத்தியமானதுதான். அத்துடன் மக்களின் மது பழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்..

மக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான பல்வேறு யோசனைகளை தனக்கு செல்போன் மூலமாகத் தெரியப்படுத்தலாம் என்றும் சொல்லியுள்ளார் நாயுடுகாரு.

இதில் எனக்கு சிலவைகள் புரியவில்லை..

ஏழைகள் யார்? பரம ஏழைகள் யார்..? வறுமைக் கோட்டுக்கு மேலே என்றால் என்ன..? வறுமைக் கோட்டுக்கு கீழே என்றால் என்ன..? வறுமைக் கோடு என்றால் என்ன..?

இதுக்கெல்லாம் சரியான பதிலைச் சொல்பவரின் கட்சிக்கு, ஆந்திராவில் இருக்கும் எனது நாயுடுகாரு நண்பனின் பொன்னான ஒரு ஓட்டை விழச் செய்வேன்..


ஹெலிகாப்டரில் பிரச்சாரம் - தலைவர்களுக்கு தேர்தல் கமிஷன் அனுமதி

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடப்பதால் அங்கு பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் தலைவர்களின் பலரது கோரிக்கைக்கு இணங்க தேர்தல் கமிஷன் சில தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்துள்ளது.

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகரராவ், இவரது மகன் கே.டி.ராமராவ், கட்சியின் பொதுச் செயலாளர் நடிகை விஜயசாந்தி உட்பட அக்கட்சியின் 10 தலைவர்களும் ஹெலிகாப்டரை பயன்படுத்தப் போகிறார்களாம்.

இதுக்கெல்லாம் எவ்ளோ செலவாகும்..? யார் காசு கட்டுறது அப்படீன்னு அப்பாவித்தனமால்லாம் கொஸ்டீன் கேக்கக்கூடாது.. சொல்லிட்டேன்..!


மேட்ச் பிக்ஸிங் அரசியலைப் பாதிக்காது

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாரூதின் காங்கிரஸ் கட்சியில் மிகச் சமீபத்தில்தான் இணைந்துள்ளார். ஆனாலும் அவருக்கு ஒரு சீட் உறுதி என்கிறது காங்கிரஸ் வட்டாரம். "கிரிக்கெட் சூதாட்டத்தில் எனது பெயரை தொடர்புப்படுத்தியதற்காக கிரிக்கெட் வாரியத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன். இதனால் அரசியலில் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.. என் மீது எந்த கிரிமினல் வழக்கும் இல்லை.. கட்சி எங்கே நிற்கச் சொன்னாலும் நிற்பேன்..” என்று நல்ல பிள்ளையாக பேட்டியளித்துள்ளார் அஸாரூதின். இதில் சிக்ஸரும், நான்கும் எப்படி அடிப்பார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

ரோஜா-செல்வமணி கூட்டுப் பிரச்சாரம்

ஆந்திரா சட்டப் பேரவைத் தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார் நடிகை ரோஜா. மனைவியின் வெற்றிக்காக கணவரும் இயக்குநருமான திரு.ஆர்.கே.செல்வமணியும் அந்தத் தொகுதியில் டேரா போட்டு உழைத்திருக்கிறார்.

திருப்பதியை அடுத்த பத்மாவதி தாயார் கோவில் அமைந்துள்ள திருச்சானூர், அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை உள்ளடக்கியது சந்திரகிரி சட்டப் பேரவைத் தொகுதி. இந்தத் தொகுதியில் திருச்சானூர், ராமச்சந்திரபுரம் பகுதிகளில் கடந்த 3 தினங்களாக ஓட்டு வேட்டையாடினார்கள் நட்சத்திர தம்பதிகள்.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய செல்வமணி, “சித்தூர் மாவட்டத்தில் பிறந்து திருப்பதியில் படித்த தெலுங்கு மொழிப் பெண்ணான உங்களது மகள் ரோஜாவை, கடந்த ஏழு வருடங்களுக்கு முன் திருச்சானூரில்தான் திருமணம் செய்து கொண்டேன். என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாகவும், ரோஜாவை மகளாகவும் ஏற்றுக் கொண்டு வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.. என்று பாச மழை பொழிந்திருக்கிறார் மருமகன்.

மகள் ரோஜாவோ, “20 ஆண்டுகளுக்கு முன் திரைப்படத்தில் நடிக்க சென்னைக்குச் சென்ற நான், தமிழகத்தின் மருமகளாக இருந்தாலும், நான் பிறந்த தாய் வீடான சந்திரகிரி தொகுதி மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் இங்கு வந்து போட்டியிடுகிறேன்.. என்னை வெற்றியடையச் செய்யுங்கள்..” என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அன்பான வலைப்பதிவர்களே.. தங்களுடைய சுற்றமும், நட்பும், சொந்தங்களும், பந்தங்களும் யாரேனும் சந்திரகிரி தொகுதியின் வாக்களராக இருந்தால் அவருக்கு போன் செய்து நமது ரோஜாவுக்காக ஓட்டுப் போடச் சொல்லுங்கள்.. பாவம்.. அவர் ஜெயிச்சா நாம ஜெயிச்ச மாதிரி..! நமக்காக எவ்வளவு நடிச்சிருக்காங்க..! யோசிங்கப்பா..

அதிகரிக்கும் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம்..!

1989-ம் ஆண்டில் இருந்து பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் மத்தியில் கூட்டணி ஆட்சி கலாச்சாரம் வந்தது. தேசியக் கட்சிகளின் பலம் கணிசமாகக் குறைந்து வரும் நிலையில், மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. 1991-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகளுக்கு 51 இடங்கள்தான் கிடைத்தன. ஆனால் கடந்த 2004-ம் தேர்தலில் மாநிலக் கட்சிகள் 154 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

சஞ்சய் தத் கோர்ட்டில் மனு

1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றுள்ள நடிகர் சஞ்சய்தத், 2009 பாராளுமன்றத் தேர்தலில் லக்னோ தொகுதியில் சமாஜ்வாதிக் கட்சி சார்பாக போட்டியிட விரும்புகிறார்.

இதற்காக தனக்கு வழங்கப்பட்ட ஜெயில் தண்டனையை சஸ்பெண்ட் செய்யும்படி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு மேல் ஜெயில் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதி. சஞ்சய்தத் ஆறு ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளதால் அவரால் இந்த விதிமுறைப்படி தேர்தல் போட்டியிட முடியாது.

ஆனால் மேல் கோர்ட்டுகளில் இறுதி விசாரணை முடியும்வரையில் தண்டனையை சஸ்பெண்ட் செய்யக் கோரி மனு செய்து கோர்ட் அனுமதித்தால் நிற்கலாம் என்ற சட்ட விதி முறையில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்திக் கொள்ளத்தான் சஞ்சய்தத் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார்.

ஆனால் 2 நாட்களுக்கு முன்னால் இதே போல் பப்லூ வத்சவா என்கிற பீகாரின் பிரபல அரசியல்வியாதி ஒருவர், சுப்ரீம் கோர்ட்டில் தன் மீதான ஆயுள்தண்டனைக்கு தடை கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடியாகிவிட்டது. இதே போல் சஞ்சய்தத்தின் மனுவும் தள்ளுபடியாக வாய்ப்புண்டு என்கிறார்கள் பார்வையாளர்கள். அப்படி ஏதாவது நடந்தால் சஞ்சய்தத்தின் மனைவி மான்யதா லக்னோ தொகுதியில் போட்டியிடுவார் என்று சமாஜ்வாதிக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு தண்ணி காட்டும் சரத்பவார்

பிரதமர் பதவியில் அன்னியர் அமரக்கூடாது என்று சொல்லி சோனியாவுக்கு எதிராக உட்கலகம் செய்து கட்சியிலிருந்து வெளியேறி தனிக்கட்சி கண்டு மீண்டும் தனது பதவி சுகத்துக்காக அன்னையிடம் சரணடைந்த சரத்பவார் இப்போது தனக்கு அதிக சீட்டுகள் வேண்டும் என்பதற்காக இல்லாத நாடகங்களை எல்லாம் மும்பையில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுடன் பல ஆண்டுகளாக சிநேகம் வைத்திருக்கும் சரத்பவார் இந்த முறை அதனை தனது அரசியல் விளையாட்டுக்கு நன்கு பயன்படுத்திக் கொண்டார். மும்பை வந்த ராகுல்காந்தியை சந்தித்து பேசியவர் அடுத்த பத்து நிமிடத்திற்குள் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பால்தாக்கரேவையும் சந்தித்திருக்கிறார். மீடியாக்கள் அலற ஆரம்பித்து ஐந்து நிமிடத்திற்குள் மாகாராஷ்டிரா துணை முதல்வர் புஜ்பாலையும் சந்தித்து மேலும் சவுண்ட்டை கூட்டியுள்ளார்.

ஒருவேளை பால் தாக்கரேவுடன் சென்றுவிடுவாரோ என்று டெல்லியை பயமுறுத்த பவார் செய்த நாடகம்தான் இது என்கிறார்கள். பவாருக்கு இது பலனளித்ததோ இல்லையோ.. சேனாவுக்கு உடனடி பயனைக் கொடுத்தவிட்டது. அதிகப்பட்சம் முணுமுணுப்புகூட இல்லாமல் சிவசேனா கேட்ட 22 தொகுதிகளை அப்படியே கொடுத்து அவர்களுடன் கூட்டணியை தக்க வைத்துக் கொண்டது பி.ஜே.பி.

இப்போது பவார் இன்னமும் தனது கூட்டணியை காங்கிரஸுடன் முடிவு செய்யவில்லை.. அவருடைய கவனம் முழுக்க ஒருவேளை 3-வது அணி ஆட்சிக்கு வந்துவிட்டால் தான் பிரதமராக அமர முடியுமா என்பதில்தான் இருக்கிறது.. மனுஷங்க துன்பத்துக்கு ஆசைதான் காரணம்னு சொல்றாங்க.. ஆனா பாருங்க.. அரசியல்வியாதிங்களோட ஆசைக்கு மக்கள்தான் துன்பப்படுறாங்க.. இதை எங்க போய் சொல்றது..?

வவ்வால்களுக்கு சரணாலயம் அமைத்தால்தான் ஓட்டு

பீகாரில் வைசாலி மாவட்டத்தில் சர்சாய் என்ற கிராமம் உள்ளது. பாட்னாவில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஊரில் பத்தாயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்தக் கிராமத்தில் சர்சாய் சரோவர் என்ற மிகப் பெரிய குளம் உள்ளது. இதைச் சுற்றியுள்ள மரங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் வாழ்கின்றன.

இந்த வவ்வால்களைக் காண தினமம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் கிராமத்து மக்களுக்கு பல்வேறு வகைகளில் வருமானம் வருகிறது. இந்தக் குளம் அமைந்துள்ள இடத்தில் வவ்வால்களுக்கு நிரந்தரமான சரணாலயம் அமைத்துவிட்டால் தங்களுக்கும் டப்புக்கு வழி பிறக்கும் என்று கிராம மக்கள் கருதுகின்றனர்.

அதனாலேயே இந்தத் தேர்தலில் எந்த வேட்பாளர் சரணாலயம் அமைத்துத் தருவாரோ, எந்தக் கட்சி முன் வருகிறதோ அவர்களுக்கே எங்களது ஓட்டுன்னு கிராம மக்கள் ஒட்டு மொத்தமா கொடி பிடிக்கிறாங்களாம்..!

துப்பாக்கியைக் காட்டிய எம்.பி.

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர் முகமது தாகிர்கான். இவர் சுல்தான்பூர் தொகுதியின் எம்.பி. இந்தத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதையொட்டி சுல்தான்பூரில் நேற்று முன்தினம் பிரச்சார ஊர்வலம் நடத்தினார். அப்போது முகமது தாகிர்கானும் அவரது ஆதரவாளர்களும் துப்பாக்கியை பகிரங்கமாக எடுத்துக் காண்பித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பாரதீய ஜனதாவுக்குத் தாவிய காங்கிரஸ் பிரமுகர்

மாஜி கர்நாடக மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் நிர்மலா வெங்கடேஷ் காங்கிரஸில் இருந்து பாரதீய ஜனதாவிற்குத் தாவிவிட்டார். மங்களூர் பப்பில் மப்பில் நடந்த கலவரத்தில் பெண்கள் தாக்கப்பட்டது குறித்து விசாரிக்கப் போய் “ஒண்ணுமே நடக்கல.. லேசா தள்ளுமுள்ளுதான்” என்று கர்நாடக மாநில அரசுக்குத் தோதான ஒரு அறிக்கையை சமர்ப்பித்ததற்காக மத்திய அமைச்சர் ரேணுகாவால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர் இவர். இப்போது கோபித்துக் கொண்டு தாவிவிட்டார். சீட்டு உறுதியாம்..

ஐயோ.. நானும் தாவுறதுக்குத் தயாரா இருக்கேம்பா.. எந்தக் கட்சியா இருந்தாலும் பரவாயில்லை.. சீட்டு உறுதியான்னு மட்டும் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்..!

இன்னிக்கு இத்தோட போதும்னு ஜக்கம்மா சொல்றா..! முடிச்சுக்கிறேன்..!

(தேர்தல் ஸ்பெஷல் தொடரும்)

12 comments:

ஜீவா said...

அட்டகாசமான பதிவுங்க

அம்மா என்ன பண்ணுவாங்க.. ஆளுக்கு ரெண்டு அடி போட்டுட்டு, அந்த மிட்டாயை அவங்களே எடுத்து தின்னுற மாட்டாங்களா..! இதுதான் நடக்கும்.

நினைச்சு நினைச்சு வயிறு வலிதான் போங்க :)

தோழமையுடன்
ஜீவா

Thamiz Priyan said...

நீளமான அப்டேட்! மிக்க நன்றி!

malar said...

உங்க பதிவை சாகவாசமாக தான் படிக்க வேண்டும் .கன்னியாகுமரி கழிந்த தடவை மர்க்ச்ட் கச்சிக்கு கிடைத்தது .அது எங்கள் தொகுதி தான் .இந்த தடவை யாருக்கு கிடைக்கிறது என்று பார்போம்?

ஆமா !ராமதாஸ் பெட்டிக்கு பேரம் பேசுகிறார் என்று சொன்னார்கள் .எப்படியும் அம்மா பெட்டி கொடுத்திருப்பார்கள் .

ஆமா !இவளவு பெரிய பதிவு எழுத எவளவு நேரம் ஆச்சு ?

malar said...

கன்னியாகுமரி மாவட்டத்தில் தலையாய பிரச்னை என்று மக்கள் கூறுவது மின்வெட்டை தான் .

Vidya Poshak said...

தெலுங்கு தேசம் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று வெளியிட்டார்.

ஏழைகளுக்கு இலவச கலர் டெலிவிஷன் வழங்கப்படும்.

அத்துடன் ஏழை குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை மாதந்தோறும் ரொக்கப் பணம் வழங்கப்படும்.

பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் இரண்டாயிரமும், ஏழைகளுக்கு ஆயிரத்து ஐநூறும், வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத் தலைவியின் பெயரிலும் இந்தப் பணம் வங்கியில் செலுத்தப்படும். ஏடிஎம் கார்டுகள் மூலம் மாதந்தோறும் அவர்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஏழை குடும்பத்தினரின் உணவு, மருத்துவம் மற்றும் கல்விச் செலவுகளுக்காக இந்தப் பணம் வழங்கப்படுகிறது.

ஏழைகளுக்கு ரொக்கப் பணம் வழங்கும் இத்திட்டம் சாத்தியமானதுதான். பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டினா, சிலி உட்பட 30 நாடுகளில் இது போன்ற திட்டம் நல்ல பயனை அளித்திருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஏழைக் குடும்பத்தினர் வீடுகளில் தலா 2 மின் விளக்குகள், ஒரு மின் விசிறிக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு களைத்து வரும் ஏழை மக்களுக்காக இலவச டிவி நல்ல பொழுது போக்காக இருப்பதுடன் அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கும் உதவும்.

அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் ஏற்கெனவே இத்திட்டம் அமலில் இருப்பதால், ஆந்திராவிலும் இலவச டிவி வழங்கும் திட்டம் சாத்தியமானதுதான். அத்துடன் மக்களின் மது பழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்..

juper... I am also poorest of Poor... I will relocate to Hyderabad from next month...

உண்மைத்தமிழன் said...

//ஜீவா said...
அட்டகாசமான பதிவுங்க.

அம்மா என்ன பண்ணுவாங்க.. ஆளுக்கு ரெண்டு அடி போட்டுட்டு, அந்த மிட்டாயை அவங்களே எடுத்து தின்னுற மாட்டாங்களா..! இதுதான் நடக்கும்.

நினைச்சு நினைச்சு வயிறு வலிதான் போங்க :)
தோழமையுடன்
ஜீவா//

நன்றி ஜீவா ஸார்..

அம்மாவைப் பத்தி நல்லாத் தெரிஞ்சிருந்தும் அவங்களோட கூட்டணி வைக்குற மூட்ல இருக்கும் தோழர்களின் தைரியத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

//தமிழ் பிரியன் said...
நீளமான அப்டேட்! மிக்க நன்றி!//

நீங்கதான சாமி போடச் சொன்னீங்க.. அப்புறம் நீளம்ங்குறிங்க..!

உண்மைத்தமிழன் said...

//malar said...
உங்க பதிவை சாகவாசமாகதான் படிக்க வேண்டும். கன்னியாகுமரி கழிந்த தடவை மர்க்ச்ட் கச்சிக்கு கிடைத்தது. அது எங்கள் தொகுதிதான். இந்த தடவை யாருக்கு கிடைக்கிறது என்று பார்போம்?//

கண்டிப்பா கம்யூனிஸ்ட்களுக்குத்தான்.. சந்தேகம் வேண்டாம்..

//ஆமா! ராமதாஸ் பெட்டிக்கு பேரம் பேசுகிறார் என்று சொன்னார்கள். எப்படியும் அம்மா பெட்டி கொடுத்திருப்பார்கள்.//

சந்தோஷம் மலரு.. இன்றைய அரசியலைப் பற்றி இவ்ளோ தூரம் உண்மையா தெரிஞ்சு வைச்சிருக்கிறதுக்கு..

//ஆமா! இவளவு பெரிய பதிவு எழுத எவளவு நேரம் ஆச்சு?//

பெரிய பதிவா..? சும்மா இரும்மா.. கொஞ்சம்தான் எழுதியிருக்கேன்..

உண்மைத்தமிழன் said...

//malar said...
கன்னியாகுமரி மாவட்டத்தில் தலையாய பிரச்னை என்று மக்கள் கூறுவது மின்வெட்டைதான்.//

எனக்குத் தெரிந்து ஈவ்டீஸிங்தான் என்பேன்..

மின் வெட்டு எல்லா ஊர்லேயும் இருக்கும்மா..

உண்மைத்தமிழன் said...

///Venky said...

//தெலுங்கு தேசம் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று வெளியிட்டார்.

ஏழைகளுக்கு இலவச கலர் டெலிவிஷன் வழங்கப்படும்.

அத்துடன் ஏழை குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை மாதந்தோறும் ரொக்கப் பணம் வழங்கப்படும்.

பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் இரண்டாயிரமும், ஏழைகளுக்கு ஆயிரத்து ஐநூறும், வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத் தலைவியின் பெயரிலும் இந்தப் பணம் வங்கியில் செலுத்தப்படும். ஏடிஎம் கார்டுகள் மூலம் மாதந்தோறும் அவர்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஏழை குடும்பத்தினரின் உணவு, மருத்துவம் மற்றும் கல்விச் செலவுகளுக்காக இந்தப் பணம் வழங்கப்படுகிறது.

ஏழைகளுக்கு ரொக்கப் பணம் வழங்கும் இத்திட்டம் சாத்தியமானதுதான். பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டினா, சிலி உட்பட 30 நாடுகளில் இது போன்ற திட்டம் நல்ல பயனை அளித்திருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஏழைக் குடும்பத்தினர் வீடுகளில் தலா 2 மின் விளக்குகள், ஒரு மின் விசிறிக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு களைத்து வரும் ஏழை மக்களுக்காக இலவச டிவி நல்ல பொழுது போக்காக இருப்பதுடன் அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கும் உதவும்.

அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் ஏற்கெனவே இத்திட்டம் அமலில் இருப்பதால், ஆந்திராவிலும் இலவச டிவி வழங்கும் திட்டம் சாத்தியமானதுதான். அத்துடன் மக்களின் மது பழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்..//

juper... I am also poorest of Poor... I will relocate to Hyderabad from next month...///

வெங்கி.. பரம ஏழையோ..? அதுக்கெதுக்கு ஹைதராபாத் போய் பொழைக்கணும்.. இங்கேயே தமிழ்நாட்டுலேயே பொழைக்கலாமே..? நம்ம நிலைமையும் அப்படித்தான இருக்கு..!

என்ன! மாசத்துக்கு ரெண்டு வாட்டி மழை பெஞ்சு வெள்ளம் வரணும்னு வேண்டிக்குங்க.. மாசம் சுளையா 3000 ரூபா கிடைக்கும்.. உட்கார்ந்துக்கிட்டே சாப்பிடலாம்..

butterfly Surya said...

தொடரட்டும்.

வாழ்த்துகள்

உண்மைத்தமிழன் said...

//வண்ணத்துபூச்சியார் said...
தொடரட்டும். வாழ்த்துகள்//

பூச்சியாரே..

வாழ்த்து கிடக்கட்டும்.. நள்ளிரவு 2.30 மணிக்கு இணையத்தின் முன்பு உட்கார்ந்திருந்தால் எப்படி..?

உடம்பை பார்த்துக்குங்க சாமி..!