எங்கே செல்கிறார்கள் மாணவர்கள்..?

25-08-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ஒரு நாள் நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது எனது வீடு இருந்த தெரு முழுவதும் வீட்டு வாசலில் அந்தந்த வீட்டுப் பெண்கள் குசுகுசுவென்று பேசியபடியே நின்று கொண்டிருந்தார்கள்.

வீட்டு வாசலில் நின்று அட்டெண்டெண்ஸ் கொடுத்துக் கொண்டிருந்த எனது அக்காவிடம் என்ன விஷயம் என்று கேட்டேன். "நம்ம கெளரியம்மா வீடு இருக்குல்லே. அதுல ஒரு டாக்டர் குடி வந்திருக்கார்.. இப்பத்தான் சாமான்லாம் வந்து இறங்குச்சு.." என்றார். அப்போதைய எனது வயதில் அது சாதாரண ஒரு விஷயம் என்றாலும், அதன் பின் அந்தத் தெருவிலும், என் வீட்டிலும் அந்த வீட்டைப் பற்றியும், அந்த டாக்டரைப் பற்றியும் பேசப்பட்ட பேச்சுக்கள் ஏதோ வானத்திலிருந்து வந்த ஒருவர்தான் அந்த டாக்டர் என்பதைப் போல் இருந்தது.

நாளாக, நாளாக அந்த டாக்டர் தொழில் மீதும், டாக்டர்கள் மீதும் சமூகத்தின் மிடில் கிளாஸ் மன்னர்களுக்கு இருக்கின்ற மரியாதையும், மதிப்பும் தெரிந்தது. ஒரு மருத்துவரை நாடி வருகின்ற சாமான்யனுக்கு அம்மருத்துவரே தெய்வம். அப்படித்தான் அவனும் நினைக்கின்றான். அரசு பொது மருத்துவமனைகளுக்குச் சென்று பாருங்கள்.. கண் கூடாகப் பார்க்கலாம்..

அந்த வெள்ளை கோட்டுக்கு இருக்கின்ற மரியாதையை மருத்துவமனைகளில் பார்த்தால், இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் நம் மனதில் தோன்றும்..

தெய்வத்திற்கு அடுத்த நிலை தெய்வமாகத் திகழும் மருத்துவத் தொழிலுக்கு இப்போது என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. வருங்கால இந்திய இளைஞர்கள் அதைப் புறக்கணிக்கவும் செய்கிறார்கள் என்பதை நினைத்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

இன்றோ, நாளையோ சாகக்கூடிய நிலையில் இருப்பவர்கள்கூட இன்றைக்கும் தனக்கு மெடிக்கல் சீட் கிடைக்காமல் போய்விட்டதை அங்கலாய்க்காமல் இருப்பதில்லை. அவ்வளவு தூரம் நுழையவே கடினமான கல்லூரி மருத்துவக் கல்லூரி.. முடியவே முடியாது என்று கையில் காசில்லாமல் சத்தியம் செய்தவர்களே, இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு இன்றைக்கு அதே கையால் வாயைப் பொத்திக் கொண்டு ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார்கள்.

இந்தாண்டு ப்ளஸ்டூ முடித்து மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வான மாணவர்களில் 58 பேர் டாக்டர் சீட் வேண்டாம் என்று மறுத்துவிட்டு பொறியியல் கல்லூரிகளுக்குத் தாவியிருக்கிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றபோது இதை நம்பலாமா வேண்டாமா என்று என் மனது பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறது.

அப்படியென்ன மருத்துவப் படிப்புக்கு மவுசு குறைவு என்று பார்த்தால், கரன்ஸி நோட்டை மையமாக வைத்துத்தான் இந்த இடப்பெயர்ச்சி என்பது தெரிகிறது.

டாக்டர் படிப்பு ஐந்தரை வருடங்கள். முடித்துவிட்டு ஏதாவது ஒரு மருத்துவனையில் உதவி மருத்துவராகச் சேர வேண்டும். அல்லது தனியாக மருத்துவமனை வைக்கலாம். தனியாக வைத்தால் இப்போது தெருவுக்குத் தெரு மருத்துவர்களைப் போல், தெருவுக்குத் தெரு மருந்து கடைகளும் வந்துவிட்டன.

முன்பெல்லாம் மருந்துகளை மட்டுமே விற்றுக் கொண்டிருந்த மருந்து கடைகள் இப்போது மருத்துவர்களுக்கு கஷ்டம் வைக்காமல் தாங்களே பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் மருத்துவம் பார்க்கத் தொடங்கிவிட்டன. மருந்து கடைகளிலேயே தன் நோயைச் சொல்லி ஒரு மாத்திரையையோ, டானிக்கையோ வாங்கிக் கொண்டு வீடு செல்கிறது இன்றைய இளைய சமுதாயம். நேரத்திற்கும் நேரம் மிச்சம். பணத்திற்கு பணமும் மிச்சம் என்று இதற்கும் காரணம் சொல்கிறது அவசர யுகம்.

தனியாக மருத்துவமனை வைத்தால் மெட்ரோபாலிட்டன் நகர்களின் மத்தியப் பகுதிகளில் அதிகப்பட்சம் 50 முதல் 150 வரை கன்ஸல்டிங் பீஸ் வாங்கலாம். கிடைக்கும். கொஞ்சம் ஒதுக்குப்புறமாகச் சென்றால் 50 ரூபாயை டாக்டர்தான் கொடுத்து தன் மருத்துவமனைக்கு ஆள் பிடிக்க வேண்டும். ஆங்காங்கே 10, 20, 30 என்று புடவை கடை வியாபாரம் போல் ரேட்டைக் குறைத்துக் கொண்டு ஸ்டதெஸ்கோப்பைக் கையில் எடுத்தும் மருத்துவர்கள் அதிகம் உள்ளனர்.

இவர்களுக்கு ஈடு கொடுத்து மருத்துவம் பார்க்க வேண்டுமெனில் 5 ரூபாய் கொடுத்தால்கூட அதை கோடியாக நினைத்து வாங்கினால்தான் அடுத்த நாளும் அந்த நோயாளி வருவார். இல்லையெனில் அந்த நோயாளியின் காம்பவுண்டில் குடியிருக்கும் ஒருவரும் வர மாட்டார்கள். பற்ற வைப்பதில் இந்த விஷயத்தில் மட்டும் மக்கள் ஒருவருக்கொருவர் வஞ்சகம் செய்வதில்லை.

ஒரு நாளைக்கு 10 பேர் வந்தாலும் அதிகபட்சம் 200 அல்லது 300 ரூபாய் தேறும். சில நாட்கள் அதுவும் இல்லை எனும்பட்சத்தில் ஒரு சாதாரண சராசரி மருத்துவரின் மாத வருமானம் அதிகபட்சம் 7000 ரூபாயிலிருந்து 9000 ரூபாய் வரைக்கும் வரும்.

அரசு மருத்துவமனை மருத்துவர் தேர்வுக்கு நுழைவுத் தேர்வு உண்டு. இதில் மதிப்பெண்ணே பிரதானம் என்பதால் போட்டிகள் அதிகம். தேர்வானாலும் சம்பளம் என்னவோ 15,000 ரூபாய்தான். மாலை வேளைகளில் இந்த மருத்துவர்களும் கிளினீக் வைத்தாலும்கூட ஒரு 9000 ரூபாய் சேர்த்து மொத்தம் 24000 என்று வைத்துக் கொள்ளலாம்..

அது சரி.. எத்தனையோ மருத்துவர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்களே? அது எப்படி? அவர்கள் மேற்படிப்பை முடிக்கிறார்கள். மேலும், மேலும் ஒரு குறிப்பிட்டத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சிறப்பு நிபுணர்களாக மாறுகிறார்கள். மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான இடங்களும் மருத்துவக் கல்லூரிகளில் குறைவு. இதற்கும் பலத்த போட்டிகள் உண்டு. நுழைவுத் தேர்வும் உண்டு. ஜெயிக்க வேண்டுமே.. ஈஸியாக ஜெயிக்கலாம் என்பதற்கு அதென்ன கந்த சஷ்டி கவசமா.. தினமும் காலை எழுந்து மனப்பாடம் செய்து ஒப்பிப்பதற்கு..

ஒவ்வொரு புத்தகமும் தலைக்கு வைத்துத் தூங்கலாம் என்பதைப் போல் அத்தனை கனமாக உள்ளன. எப்படி படிக்கிறார்களோ என்பதைவிட எப்படித் தூக்குகிறார்கள் என்றே நான் நினைத்துள்ளேன்.

சில மருத்துவமனைகளில் கூட்டம் அலை பாய.. சிலவற்றில் காத்தாடும். எல்லாவற்றிற்கும் ஒரு ராசி உண்டு என்பார்கள். இந்த மருத்துவத் தொழிலில் மட்டுமே கைராசி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எனது இளம் பிராயத்தில் எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர் வீரமணியும் அதே வகைப்பாட்டில் வந்தவர்தான். இவரிடம் சிகிச்சை பெற 15 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் கிராமத்தில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.

இந்த ராசிக்காரர் என்ற பெயர் அனைவருக்கும் கிடைத்துவிடாதே.. "ஏதோ எமதர்மராஜனுக்கு இந்த டாக்டர் மச்சான் போல இருக்கு. இவர்கிட்ட வந்தா எமன் இப்போதைக்கு பக்கத்துலேயே வர மாட்டான்.." என்று நினைத்துத்தான் அனைவரும் தத்தமது கைராசி மருத்துவர்களிடம் ஓடுகிறார்கள். ஒரு நாள் அந்த கைராசிக்காரரே தனது மச்சானிடம் 'போய் சேர்ந்த' பிறகு 'ஏதோ சொத்து தகராறு ஆயிருச்சாம். எமன் முந்திக்கிட்டான்'னு என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு அடுத்த கைராசி பட்டத்தை யாருக்குக் கொடுப்பது என்று யோசிக்க ஆரம்பிக்கிறது பொதுஜனம். இதுதான் நம் தமிழகத்தின் எல்லா ஊரிலும் நடக்கும் சாதாரண விஷயம்.

இன்னும் சில பணக்கார மருத்துவர்கள், பரம்பரை மருத்துவர்கள் பைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி ஆஸ்பத்திரியை கட்டி வைத்துக் கொண்டு சாதாரண ஊசிக்கே முன்னூறு ரூபாய் கலெக்ஷன் செய்து கல்லாப் பெட்டியை நிரப்பிவிடுவார்கள். இன்னும் சிலர் உலகத்திலேயே என்னை மாதிரி பத்து பேர்தான் இருக்கோம். எல்லாருமே சிவனின் நேரடிப் பார்வையில் பிறந்தவர்கள் என்ற தோற்றத்தில் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே சிகிச்சையளிப்பார்கள். தினமும் ஊர், ஊராகப் பறந்து சிகிச்சையளித்துக் கொண்டிருப்பார்கள்.

இவர்களைப் போல் அனைத்து மருத்துவர்களாலும் பறக்கவும் முடியாது. 'கைராசிக்காரன்' என்ற பெயரையும் பெற முடியாது.. ஆனாலும் சமூகத்தில் டாக்டர் என்ற சோஷியல் ஹீரோ பட்டத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் அவர்கள் படும்பாடு அவர்களுக்குத்தான் தெரியும்.

ஆனால் பொறியியல் துறை அப்படியல்லவே. தெளிவாகத் தெரிந்துவிட்டது. அருமைப் புதல்வன் கேம்பஸ் இண்டர்வியூவில் பாஸ் செய்து விட்டாலே போதும், கம்பெனிக்காரனே நேரில் வந்து தூக்கிப் போய் தலையில் வைத்துக் கொள்வான். நாம் அவன் தலையில் உட்கார்ந்து கொள்வதற்கு, அவனே லம்பமாக 40000 ரூபாய் முதல் 50000 ரூபாய்வரைக்கும் எடுத்த எடுப்பிலேயே கொட்டுவான்.. நாமும் மகனை படிக்க வைக்கச் செய்யும் செலவை சீக்கிரத்திலேயே எடுத்துவிடலாம் என்று அனைத்து தகப்பனார்களும் கணக்குப் போட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

அதுதான் இந்தக் கட்சித் தாவலுக்குக் காரணம்..

ஒரு பக்கம் அப்பாவி மாணவர்கள், கல்விக் கட்டணம் என்ற அரக்கனைக் கையில் வைத்து பூச்சாண்டி காட்டும் கல்லூரிகள்.. கோடீஸ்வரர்களுக்கு ஒரு போன் தகவலை வைத்தே, கோடிகளை கடனாக கொட்டும் வங்கிகள், ஏழை மாணவர்களின் படிப்புக்கு 68 விதிமுறைகளையும், உத்தரவாதங்களையும் கேட்டுக் கழுத்தைப் பிடிக்கின்றன. அவர்கள் என்ன செய்வார்கள்? போட்ட காசை எடுக்க வேண்டாமா? சாதாரண மக்களை குற்றம் சொல்லி என்ன புண்ணியம்..?

ஆக மருத்துவம் என்பது உயிர் காக்கும் புனிதமான துறை என்பதிலிருந்து மெல்ல, மெல்ல நழுவி காசு சம்பாதிப்பதில் இரண்டாம் இடம் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. இதனால் யாருக்கு என்ன லாபம்?

ஏற்கெனவே தமிழகத்தின் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கிராமப்புறங்களில் பணியாற்றுவதையே மருத்துவர்கள் முதலில் வெறுக்கிறார்கள். அங்கே தனியாக கிளினீக் வைத்தால் காசு அதிகம் பார்க்க முடியாது என்பது அவர்களது கருத்து.

தமிழகம் என்பது வெறும் மெட்ரோபாலிட்டன் நகரங்கள் மட்டுமல்லவே.. வருசநாட்டின் மலை மீது பத்து கிலோ மீட்டர் கழுதை மீது கற்பாதையில் நடந்து சென்றால்தான் ஒரு கிராமத்தையே அடைய முடியும். அந்த ஊரில் யாருக்கு என்னவோ என்றாலும் தொட்டில் கட்டி அவர்களை பத்து கிலோ மீட்டர் தூரம் தூக்கித்தான் மருத்துவமனைக்குக் கொண்டு வருகிறார்கள்.

அவர்களைக் கேட்டால், "இது நாங்கள் பிறந்த மண். எதற்காக மலையிலிருந்து இறங்கி இங்கே வர வேண்டும். இங்கே வந்தாலும் நாங்கள் என்ன தொழில் செய்ய முடியும்? எங்களது நிலம் மலையில் அல்லவா இருக்கிறது.." என்பார்கள். மருத்துவர்களைக் கேட்டால், "எங்களைப் போல் எங்களது பிள்ளைகளும் மருத்துவர்களாக வேண்டாமா? அதற்காக நன்கு படிக்க வேண்டாமா? அந்தப் படிப்பைக் கற்றுக் கொடுக்கும் நல்ல பள்ளிகளில் சேர்க்க வேண்டாமா? அந்தப் பள்ளிகள் உள்ள ஊர்களில்தானே நான் பணியாற்ற முடியும்.." என்பார்கள். இது சுவாசம் மாதிரி சுழற்சியான ஒரு பதிலாகிவிட்டது. யாரையும் குற்றம் சொல்ல இயல்வதில்லை.

மருத்துவம் என்பது முதலில் ஒரு தொழில் அல்ல.. அது ஒரு தவம் என்று நாம் மட்டும் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். மருத்துவம் படிக்கும் மாணவர்களின் முதலாமாண்டில் முதல் வகுப்பே மருத்துவம் சார்ந்த அறிவைப் புகட்டுவதுதானாம். எடுத்த எடுப்பிலேயே நாம் போற்றும் தவத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுத்துவிடுவதால், ஐந்தாண்டுகள்வரை அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்களா என்ன..?

இப்போது நாடும், அரசும், மக்களும் என்ன செய்ய வேண்டும்? ஏற்கெனவே பல ஊர்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் பற்றாக்குறை. இருப்பவர்களும் ராஜினாமா செய்துவிட்டு தனியார் மருத்துவமனைகளுக்குத் தாவிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் பெருத்த சம்பளம்.

இந்த ரீதியில் இன்றைய வருடத்தில் ஆரம்பித்த இந்த தாவல் சம்பவம் தமிழகத்தில் மேலும் தொடருமேயானால், நாடு முழுவதும் மருந்து கடைகள்தான் ஏழை மக்களுக்கு மருத்துவமனைகளாக இருக்கும்.

இதைத் தடுக்க வேண்டுமெனில் முதலில் மாணவப் பருவத்திலிருந்தே மருத்துவத் தொழிலை ஒரு சமூக அக்கறையுள்ள தொழில் என்ற எண்ணத்தை இளைஞர்களுக்குப் புகட்ட வேண்டும். இந்தத் தொழிலில் பணம் கிடைக்காமல் போனாலும், மனிதர்களின் பாராட்டுக்களும், ஆசிகளும் மருத்துவர்களின் குடும்பத்திற்கு கிடைக்கும் நல்வாய்ப்பை அவர்களுக்கு விளக்க வேண்டும்.

இந்தச் சமூகம் நல்வழி காண மருத்துவர்கள்தான் பெரும் பங்கு ஆற்றப் போகிறார்கள். அவர்கள்தான் ஏழை மக்களின் நிகழ் கால கடவுள்கள். அந்த வாய்ப்பை ஒரு போதும் நழுவவிடக்கூடாது..

மருத்துவர்கள் செய்வது தொழில் அல்ல. ஒரு கடமை.. அதிலும் இந்தத் தேசத்திற்கு அவர்கள் ஆற்றுகின்ற ஒரு கடமை..

ஆசாத் காஷ்மீரின் நுழைவாயிலில் பனிப்புயலில் காவல் காக்கும் ராணுவ வீரனும், இங்கே ஆண்டிப்பட்டியில் ஒரு ஏழையின் உயிரைக் காப்பாற்ற அவன் வீடு நோக்கி டூவிலரில் பயணிக்கும் ஒரு மருத்துவனும் ஒன்றுதான் என்கின்ற உண்மையை பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும்.

தங்களது பிள்ளைகளை மருத்துவப் படிப்பில் சேர்ப்பது நாட்டிற்கு நாம் செய்கின்ற மிகப் பெரும் பெரும் உதவி என்று பெற்றோர்களும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பது, நூறு கோவில்களை ஆண்டாண்டு காலமாகச் சுற்றினாலும் கிடைக்காத புண்ணியத்தைத் தானே தேடி கொள்வது என்ற உண்மையை அம்மருத்துவரும் உணரும் காலம் வந்தால்..

பணமே பிரதானம் என்ற எண்ணமும், உயர்வான வாழ்வே நிசமான வாழ்க்கை என்ற கானல் நீரும் அடுத்து வரும் சுபிட்சம் என்னும் பெரும் மழையில் நிச்சயம் காணாமல் போகும்..

ஆகஸ்ட்-5 - வலைப்பதிவர் பட்டறை - எனது டைரி குறிப்புகள்-5

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அறிமுகம்

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

இடையில் வரவணையான் என் கையில் சிக்காமல் எஸ்கேப்பாகிக் கொண்டேயிருந்தார். மனுஷன் பின்னாடியே போய் பேச வேண்டியிருந்துச்சு.. இதுக்குத்தான் ஒத்த கருத்துள்ள மனுஷங்களையா பிரெண்ட்ஷிப் பிடிக்கணும்ன்றது..

மிதக்கும் வெளி போய்விட்டார் என்று வரவணையான் என்னிடம் சொல்ல வெளியில் மரத்தடியில், ரிப்போர்ட்டர்கள், லிவிங்ஸ்மைலுடன் ஒரு மினி கான்ப்ரன்ஸ் நடத்திக் கொண்டிருந்தார் மிதக்கும்வெளி.

வண்டியைக் கிளப்பிக் கொண்டு போகும்போது அவரை வழி மறித்து "என்னை மறந்திராதீங்க ஸார்.." என்றேன். "உங்களைப் போய் மறப்பனா..? நாளைக்கே உங்க பேர்ல நாலு கமெண்ட் நானே போட்டுடறேன். ஓகேவா..?" என்று அன்பாகச் சொல்லிவிட்டு எஸ்கேப்பானார் சுகுணா. ம்.. எம்புட்டு நக்கலு..?

இந்த போலி கமெண்ட்டு மேட்டருக்கு, நான் எத்தனை கஷ்டப்பட்டு பதிவு போட்டு, அழுதிருக்கேன்னு எனக்குத்தான தெரியும்..

தம்பி செந்தழல் ரவி ஒரு நேரத்தில் ஒழுக்கமாக அரங்கத்தில் அமர்ந்து கருத்தரங்கை கேட்டுக் கொண்டிருந்தார். பக்கத்தில் சென்று அமர்ந்தேன்.

"வாங்க ராயல் பாருக்குப் போயிட்டு வரலாம்.." என்றார். சரி.. ஏதோ சாப்பிடத்தான் சொல்றாரோ என்று நினைத்து "சரி போகலாம்.." என்றேன்.. வெளியில் வந்தோம்..

வரவனையான், லக்கிலுக், ரவி என்று கிளம்பும்போது ரவி சொன்னார்.. "அண்ணே நீங்க ஒரு half-ஆவது அடிப்பீங்கள்லே.." என்று.. "தம்பி நீ இதுக்குத்தான் கூப்பிட்டியா ராசா.." என்றேன். "பின்ன பாருக்கு எதுக்கு கூப்பிடுவாங்க..? டீ குடிக்கவா..?" என்றார். "இல்லப்பா.. ஒரு சிப் குடிச்சாலும் நான் அங்கேயே மட்டைய போட்டிருவேன். என் உடம்புக்கு அது ஒத்துக்காது. நீ கிளம்பு.." என்று சொல்லிவிட்டு திரும்பி உள்ளே வந்துவிட்டேன்.

ஆனாலும் எல்லா இடத்திலும்தான் ஒற்றர்கள் இருக்கிறார்களே. இப்படி ஒரு டீம் வெளில கிளம்புதுன்னு யாரோ உள்ள போய் யார்கிட்டயோ பத்த வைச்சிட்டாங்க போலிருக்கு..

வரவணையான், ரவி - அவரவர் காரிலும் லக்கிலுக் பைக்கிலும் கிளம்பி நின்னுக்கிட்டிருக்காங்க.. வாசல்லேயே செல்போன்ல மடக்கிட்டாங்க.. என்ன சொன்னாங்களோ தெரியலே.. ரெண்டு காரும் திரும்பி உள்ளே வந்து.. தொங்கிப் போன முகத்தோடு புள்ள ரவி, முனங்கிக்கிட்டே முன்னாடி வந்து உக்காந்துச்சு..

அப்புறம் தெரிஞ்சது, உள்ள ஒரு மேட்டரு ரவிக்கு இருக்குன்னு.. "வலைத்தளத்தில் வேலை வாய்ப்புகள்" அப்படின்ற தலைப்புல ரவி பேசுச்சு.. பேசுச்சு.. பேசி முடிச்சுச்சு.. அவ்வளவுதான்.. லக்கிலுக்கை பார்த்து ஒரு லேசா லுக்குவிட்டுட்டு அப்படியே நைஸா நழுவிக்கின்னு எஸ்கேப்பு..

இந்தப் பக்கம் நம்ம ஓசை செல்லா ஒலி, ஒளி பத்தி பேசப் போறேன்னு ஆரம்பிக்க.. குறைந்த நேரம்தான் என்று பத்ரி ஸார் இழுத்தார். விக்கியும் குறித்த நேரத்தில் முடித்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க..

செல்லாவுக்கு மனம் கொள்ளாத வருத்தம், அஞ்சு நிமிஷத்துல முடிக்க வேண்டியதாகிப் போச்சேன்னு.. சரி விடு சாமி.. அதான் டெய்லி நாலு போட்டோ, ரெண்டு வீடியோன்னு ஏத்திக்கிட்டே இருக்கியே.. அது போதும் உனக்கு..

மாடியில் அனைத்து செய்முறைப் பயிற்சிகளையும் முடித்துவிட்டு தம்பி வினையூக்கியும், பொன்ஸ¤ம் கீழ்த் தளத்திற்கு வந்து கலந்து கொண்டனர்.

பொன்ஸ் வலைத்தளத்தில் உலா வரும் ஒளிக்கதிர்களான மங்கையர்களின் பங்கு குறித்து பேசினார். நேரமின்மையால் அவசரம், அவசரமாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பேசினது எனக்கு வருத்தம்தான்.. பாவம்.. நிறைய பேசணும்னு இருந்தார்.. கெடுத்தது மா.சி.தான்..

அவர்தாம்பா பட்டறைலேயே நிறைய நேரம் மைக்கை யார்கிட்டேயும் தராம வைச்சிருந்து அவரே பேசிக்கிட்டாரு.. அடுத்தப் பட்டறைல அவர்கிட்ட நன்றி உரையையும், பாலபாரதிகிட்ட கட்டி மேய்க்கிற வேலையையும் விடணும்.. (எத்தனை தடவை 'ங்கொய்யால'ன்னு சொல்றதை எண்ணுறதுக்கு ஒரு ஆளையும் போட்டிரலாம்)

சொல்லி வைத்தாற்போல் நன்றியுரை நிகழ்த்த வந்த பாலபாரதி, "நான்... பாலபாரதி.." என்றவுடன் சட்டமன்றத்தில் நடக்கும் மேசை தட்டுதல்களைப் போன்ற ஓசை எழும்பியதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். பொய் சொன்னா நல்லாயிருக்காது பாருங்க..

அதையும் பத்தே பத்து வரில சொல்லி முடிச்சு பட்டறைக்காக இரண்டு மாத காலமாக உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களையும் ஊர், உலகத்துக்கு காண்பித்துவிட்டு விடைபெற்றார்.

இது எப்படா முடியும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த தம்பி லக்கிலுக் விட்டால் போதும் என்று ராயல் பாருக்கு உடனேயே கிளம்பிவிட்டார். அங்கேயும் ஒரு பதிவர் பட்டறையை ரவி, வரவணையான், முகுந்த் ஆகியோரோடு லக்கிலுக் நடத்தியதாக பின்னாளில் கேள்விப்பட்டேன்.

பத்ரி ஸார் முதலில் கிளம்பி 'ஹாய்', 'பை..' சொல்லி வெளியேறினார்.

இதற்காகவே காத்திருந்தார்போல் தம்பி நந்தா நேற்று இரவு வாங்கியிருந்த அந்த ஸ்வீட் பாக்ஸை திறக்க, நிமிடத்தில் காலி.

இந்த நேரத்தில்தான் ஒரு மடிக்கணினி எனக்கு முன்பாக ஆசை காட்டிக் கொண்டே சும்மா கிடந்தது. எடுத்து "யாருடையது..?" என்று கேட்டேன். செல்லா "தெரியாது.." என்றார். நந்தா "தெரியாது.." என்றார். ஜே.கே. "தெரியாது.." என்றார்.

சரி.. கைல வைச்சுக்குவோம். அப்பால பார்த்துக்கலாம் என்று சொல்லி வெளியே கொண்டு வந்து டேபிளில் வைத்து பக்கத்தில் பாதுகாவலாக நின்றிருந்தபோது, என் அருகில் அமர்ந்திருந்த சிவஞானம்ஜியிடம் வந்த தருமி ஐயா, "உங்களை எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே.. யார் ஸார் நீங்க..?" என்றார். இதே கேள்வியை கிட்டத்தட்ட ஒரு பதினைஞ்சு பேர்கிட்டயாச்சும் கேட்டிருக்கும் இந்த பெரிசு. எல்லாம் மதுரை ரவுசு..

சிவஞானம்ஜி ஐயா தான் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகப் பணியாற்றிய சம்பவத்தைச் சொன்னார். பெருமையாக இருந்தது.

பொன்ஸ் வந்து மடிக்கணினி என்னுடையது என்று சொன்னபோது எனக்கு சப்பென்று ஆனது.. தெரிந்திருந்தால் அப்படியே தூக்கிட்டு எஸ்கேப்பாயிருப்பேனே.. யாருமே சொல்லலைப்பா..

லிவிங்ஸ்மைல் வித்யா அம்மணி இப்போதும் அடக்கமாக அமைதியாக காட்சியளித்தார். நான் விடைபெற்றபோதும் ஒரு சின்ன தலையசைப்பு. அவ்ளோதான்.. 'கோடம்பாக்கம்' எப்படியெல்லாம் மாத்துது பாருங்க..

குசும்பன் என்ற கோவி கண்ணன் என்ற நாமக்கல் சிபி கடைசிவரைக்கும் என் உடன் இருந்து பார்ப்பவர்களிடமெல்லாம் என்னைக் காட்டி இவர்தான், "உண்மையான உண்மைத்தமிழன்.." என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஒண்ணும் சொல்ல முடியலப்பா..

இதுல வெண்குழல் பத்த வைக்க துணைக்கு செல்லாவையும் அழைத்துக் கொண்டு ஓரமாக ஒதுங்கியபோது நான் கேட்டேன், "யோவ் இது உனக்கே நல்லாயிருக்கா.. நான் சிகரெட்டை விட்டுட்டேன்னு பதிவே போட்டியே.. இப்ப இழுத்து இழுத்து விடுற.. அப்ப அந்தப் பதிவைப் படிச்ச நாங்கள்லாம்.." என்று சொல்லி முடிப்பதற்குள்ளாக பதில் வந்தது.. "சந்தேகமேயில்லை.. லூஸ¤கதான்.. யார் உங்களைப் படிக்கச் சொன்னா.." என்றார் சிபி. துணைக்கு நம்ம செல்லாவும் சேர்ந்து கொள்ள அருகில் நின்று புகையைப் பிடிக்கத்தான் முடிந்தது என்னால்.

இதில் எனக்கு பெரிய வருத்தம் தந்த விஷயம் என்னவெனில், சக பதிவர் திரு.பாலராஜன்கீதா அவர்கள் 3, 4 முறை என்னுடன் பேசுவதற்கு முயன்றும் என்னால் அவருடன் தொடர்ந்து பேச முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. கடைசியில் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தபோது, அவர் சென்றுவிட.. ஸாரி ஸார்.. வெரி வெரி ஸாரி..

நண்பர் முத்துக்குமார் திடீரென்று வந்து அறிமுகம் செய்து கொண்டார். புகைப்படத்தில் பார்ப்பதைவிடவும் மிக இளமையாக இருந்தார். எனக்கு அடையாளம் தெரியவில்லை.

"காலையிலேயே சென்னைக்கு வந்துவிட்டாலும், வேலை இருந்ததால் கடைசி நேரத்தில்தான் வந்தேன்.." என்று பத்து தடவையாச்சும் வருத்தப்பட்டுச் சொன்னார். "சரி விடுங்க.. அடுத்த பட்டறை உங்க ஊர்லதான் இருக்கும்.. அப்ப பார்த்துக்கலாம்.." என்றேன்.

இதே நேரம் தருமி ஐயா, மதுரை பட்டறை குறித்து பாலபாரதியிடம் குசுகுசுவென கிசுகிசு பாணியில் பேசிக் கொண்டிருந்தார்.

ஆக மொத்தம், உண்மைத்தமிழனுக்கு இன்னொரு 6 பதிவுக்கு மேட்டர் வருது.. வாழ்க பாலபாரதியும், பெருசு தருமியும்..

நண்பர் காசி ஆறுமுகத்திடமும் தனியே பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். காசி ஸார் எப்போதும் நான்கு, ஐந்து பேர் இருக்கும் கூட்ட ஜோதியுடனேயே இருக்க.. முடியவே இல்லை..

கிளம்புகின்றபோது நண்பர் கிருபாசங்கரும், ஹாய் கோபியும் என்னிடம் சிக்கினார்கள்.

கிருபாசங்கரிடம் பேசினேன்..

"நீங்கதான் இட்லிவடையா..?

இல்லையே..

அப்ப நீங்க யாரு?

கிருபாசங்கர்..

நீங்கதான் இட்லிவடைன்னு எல்லாரும் சொல்றாங்களே..

அது வேற கிருபாசங்கர்..

அப்ப அவர்தான் இட்லிவடைன்னு நீங்க சொல்றீங்களா..?

இல்ல.. இல்ல.. எனக்குத் தெரியாது..

இப்பத்தான் தெரியும்னீங்க..

அவர் பேர் கிருபாசங்கர்ன்னு தெரியும்னு சொன்னேன்..

உங்களைத்தான எல்லாரும் கை காட்டுறாங்க..

தப்பா சொல்லிருப்பாங்க.. நான் விருகம்பாக்கம்.. அவர் சைதாப்பேட்டை..

அப்ப சைதாப்பேட்டைதான் இட்லிவடையா..?

நோ கமெண்ட்ஸ்..

ஒத்துக்கவே மாட்டீங்களா..?

எழுதினாத்தான ஒத்துக்குறது..?

நீங்க கிழக்கு பதிப்பகத்துல வேலை பார்க்குறதா சொன்னாங்களே..?

அது சைதாப்பேட்டை..

அப்ப நீங்க..?

நான் விருகம்பாக்கம்..

அப்ப இட்லிவடை..

அது நான் இல்லே.."

சத்தியமா எனக்குப் புரியலை சாமிகளா..

இதுனால நான் என்ன சொல்றேன்னா.. அடுத்த கூட்டமோ, பட்டறையோ எங்க நடந்தாலும் சரி.. யார் மடிக்கணினியைப் பயன்படுத்தினாலும் அவரோட பிளாக்கர் அட்ரஸ் கேட்டுட்டு, கூட ஒரு ஆளையும் காவலுக்குப் போட்டிரணும்.. அப்பத்தான் இந்த இட்லி வடை யாருன்னு கண்டுபிடிக்க முடியும்..

அந்த நேரத்திலும் பாலபாரதியும், மா.சி.யும் மிகவும் பரபரப்பாகவே இருந்தார்கள். காபி மெஷினை ஆட்டோவில் ஏற்றி அனுப்பியதில் இருந்து தண்ணீர் கேன்களை அனுப்புவதுவரை ஒரு கல்யாணத்தை நடத்தி முடித்த திருப்தி அவர்களுக்கு.

தருமி ஐயா, சிவஞானம்ஜி, பொன்ஸ், லிவிங்ஸ்மைல், தம்பி வினையூக்கி, தம்பி சிபி, நண்பர் அதியமான் ஆகியோரிடமெல்லாம் சொல்லிவிட்டு மா.சி.க்கும், பாலபாரதிக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிவிட்டு, செல்லாவுடன் அவருடைய ஹோட்டலுக்குக் கிளம்பினேன்.

ஹோட்டல் அறையில் பாட்டில் கையில் இல்லாமலேயே செல்லா தள்ளாட்டத்துடனேயே இருந்தார். எனக்கும் அப்படித்தான் இருந்தது. அவ்வளவு டயர்டான சூழ்நிலையிலும் பேசினோம்.. பேசினோம்.. பேசிக் கொண்டேயிருந்தோம்..

இரவு டிபனை அவருடனேயே சாப்பிட்டுவிட்டு செல்லா சொன்ன 'அட்வைஸ்கள்' அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டு, இரவு 9 மணிக்கு அங்கிருந்து கிளம்பினேன்..

செல்லா அறைக் கதவைச் சாத்துவதற்கு முன் கடைசியாக எனக்கு சொன்ன அட்வைஸ், "முதல்ல பொழப்ப பாருங்க.. அப்புறமா பிளாக்ல எழுதலாம்.." என்பதுதான்..

எனக்குத் தேவையான அட்வைஸ்தான்..!

ஆகஸ்ட்-5 - வலைப்பதிவர் பட்டறை - எனது டைரி குறிப்புகள்-4

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

அறிமுகம்

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

கீழே லன்ச்சுக்கு முன்பு ஒரு காமெடி.

தம்பி லக்கிலுக் 'இணையத்தில் பாதுகாப்பு' என்கிற தலைப்பில் பேசத் துவங்கினார். "யாரும் அவரவர் சொந்த விஷயங்களை பிளாக்கில் எழுதாதீர்கள். வெளிப்படுத்தாதீர்கள்.. யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.." என்றெல்லாம் பேசப் பேச எனக்கு கோபமான கோபம்.

மூணு மாசத்துக்கு முன்னாடி இப்படியெல்லாம் ஒளிவுமறைவில்லாம என்கிட்டேயும் சொல்லியிருந்தா, இப்படி ஒரு மாசத்துக்கு 'மெடிக்கல் லீவ்' போட வேண்டிய கட்டாயம் எனக்கு வந்திருக்குமா என்று என் மனதுக்குள் மட்டும் நான் கேட்டுக் கொண்டேன். என்ன நான் சொல்றது..?

தொடர்ந்து நாகூர் இஸ்மாயில் பேசத் துவங்கியவர் பேச்சுவாக்கில் "நான் இப்பல்லாம் பிளாக்ல எழுதறதே இல்லை.. கமெண்ட்ஸ்கூட போடுறதில்ல.." என்றெல்லாம் சொல்ல மடிக்கனிணியில் தலையைக் கவிழ்த்து வைத்திருந்த பத்ரி திடுக்கிட்டு நிமிர்ந்தார்.

மேலும் காலம் கடத்தாமல் எழுந்து வந்து "நீங்க மொதல்ல பதிவு போடுங்க.. கமெண்ட்ஸ் போடுங்க.. அப்புறமா நிறைய பேசலாம்.." என்று சொல்லி மேட்டருக்கு மங்களம் பாடிவிட்டார்.

திடீரென்று எங்கிருந்தோ வந்து ஆஜராகியிருந்த 'மப்பு மாப்ளை' வரவணையானை கையில் தயிர் சாதத்துடன் பார்த்தேன்.. "என்னண்ணே.." என்றார். நேத்து ராத்திரி உள்ளே தள்ளியிருந்த 'சரக்கு' இன்னும் இறங்காதது அவர் பக்கத்தில் வந்த போது தெளிவாகத் தெரிந்தது. "சாப்பிட்டுட்டு வந்து பேசுறேண்ணேன்..." என்று சொல்லிவிட்டு, லக்கிலுக்கை இழுத்துக் கொண்டு ஓடினார் வரவனையான்.

மேலே சென்றால் அனைவருமே வரிசையில் நின்று லன்ச் பாக்ஸை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

கொடுத்துக் கொண்டிருந்தவர் அருமைத் தம்பி பாலாதான்.. குனிந்து, நிமிர்ந்து, குனிந்து, நிமிர்ந்து.. ஆட்டோவில் வரும்போது சிதறிவிட்ட தயிர் சாதத்தை அவ்வளவு பொறுப்பாக எடுத்து டப்பாக்களில் அடைத்து கொடுத்தபடியே இருந்தார். எவ்வளவுதான் வார்த்தைகளை கொட்டினாலும் இதை எப்படி எழுதுவது என்பது எனக்குத் தெரியவில்லை.

எவ்வளவுதான் பொறுப்புக்களை சுமக்கிறானே என்று அடுத்தவன் சொன்னாலும், சுமந்தவன் அனுபவிக்கும் சுகத்தை எவராலும் உணர முடியாது.

தம்பி பாலா.. நீ என்னதான் என் அப்பன் முருகனிடமிருந்து விலகி, விலகி ஓடினாலும் அவன் விடாமல் உன்னை அவன் பக்கம் இழுக்கத்தான் செய்கிறான் என்பதை நான் உணர்கிறேன். முருகனருள் என்றும் உனக்குண்டு..

திடீரென்று நாமக்கல் சிபி என்று சொல்லிக் கொண்டு ஆறு மாத கர்ப்பிணியைப் போல் வயிற்றை தள்ளிக் கொண்டு வந்த ஒருவர் பார்க்கின்ற சிலரிடம் "நான்தான் கோவி கண்ணன்.." என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். "அப்படியா..?" என்று சிலர் ஆச்சரியத்துடன் பேசத் துவங்க.. கேக்குறவனுக்கு நேரம் சரியில்லை என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் கிரகமே சரியில்லை என்பதை மெயின் கேட் பக்கம் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.

மெரீனா பீச்சில் காதலியின் மடியில் படுத்துக் கடலை போட்டுக் கொண்டிருந்தவனெல்லாம், நம்ம பக்கம் திரும்பித் திரும்பிப் பார்க்கிறானேன்னு வாசல் பக்கம் போனா அங்க வெள்ளை டீ ஷர்ட் போட்ட ஒரு ஆறு பேர் டீம் அட்டகாசமா சிரியோ சிரின்னு சிரிச்சிட்டிருந்தாங்கப்பா.. வ.வா.சங்கத்துக்காரங்களாம்..

நானும், முகுந்தும், கோபியும் காபி குடிக்க வெளியில் சென்றபோது அவர்களையும் பார்த்தோம்.

சரி அறிமுகமாகிக் கொள்ளலாமே என்று அருகில் சென்று கேட்க ஆளாளுக்கு ஒரு பெயரைச் சொல்லிக் கொண்டார்கள். என்ன பேர் சொன்னாலும் கேட்டுத்தான ஆகணும்..

கடைசியா பேசின மோகன்ராஜ்ங்கிறவரு இந்தப் பேரை சத்தமா சொல்லிட்டு 'கப்பிபய' என்ற தன்னுடைய பட்டப் பெயரை மட்டும் முனங்கிக்கிட்டு சொன்னது தமாஷ்.. நொடிக்கு ஒரு தடவை அப்படி சிரிக்குறாங்கப்பா.. எப்படித்தான் வருதோ தெரியல.... முருகா..

தம்பிமார்கள் முகுந்தும், ஹாய் கோபியும் டீ வாங்கித் தருவதாகச் சொல்லி என்னை வெளியே அழைத்துச் சென்றார்கள். ரோட்டின் இடது புறம் சிறிது நேரம் சென்றவுடன் ரயில்வே ஸ்டேஷன்தான் வந்தது. டீக்கடையைக் காணவில்லை. சரி.. பீச் பக்கம் போய் பார்ப்போம் என்று சொல்லி பீச் பக்கம் நடையைக் கட்டினோம்.

கலர், கலரான கூல் டிரிங்க்ஸ்தான் இருந்ததே ஒழிய தமிழனின் சோமபானம் டீக்கடை ஒன்றுகூட இல்லை. தம்பி முகுந்த் ரொம்பவே அலுத்துக் கொண்டார். "கூல்டிரிங்க்ஸ் குடிக்கலாம்.." என்றேன்.

ஏதோ அண்டார்டிகாவில் பொறந்து, அலாஸ்காவில் வளர்ந்த புள்ளைக மாதிரி ரெண்டு பேருமே சொல்லி வைச்சாப்புல சொன்ன வார்த்தை, "ஏதாவது கலப்படமா இருந்துட்டா வம்பாயிரும்ணேன்.." அப்ப நம்பி குடிக்கிற சென்னைக்காரங்கள்லாம்..?

"இவ்ளோ தூரம் வந்துட்டோம். எதையாவது குடிச்சிட்டாவது போலாம் சாமி"ன்னு என்னுடைய அனத்தலுக்குப் பிறகு இளநீர் கடைக்கு அழைத்துச் சென்றார்கள் தம்பிமார்கள். இளநீரும் போலியாக இருக்குமோ என்ற கவலை முகுந்திற்கு.. எல்லாரும் 'போலி'யைக் கண்டு இப்படி பயப்படுறாங்கப்பா..

முகுந்திடம் "எனது inscript typing file எப்ப கிடைக்கும்..?" என்றேன். "நாடு, நாடா சுத்தப் போயிட்டேங்க.. அதான் உக்காரவே முடியல.. எப்படியும் நாளைக்கு ஊருக்குப் போனவுடனேயே முதல் வேலை உங்க வேலைதான்.." என்றார். ஆனாலும் இந்தப் பதிவை எழுதுகின்ற வரையிலும் வரவில்லை. ரொம்ப வேலையா இருக்கும் போலிருக்கு..

திரும்பி வந்தபோது கோட்டைச் சுவரில் ஏறி அமர்ந்து 'தீராநதி' படித்துக் கொண்டிருந்தார் 'அறிவுத்திலகம்' மிதக்கும் வெளி சுகுணாதிவாகர். ('எல்லாம்' முத்திப் போச்சுன்னா கோட்டைச் சுவத்துல போயிதான் முட்டிக்கணும்னு சொல்வாங்க. கேள்விப்பட்டிருக்கீங்களா..?.) "என்ன ஸார்? எப்படி இருக்கீங்க..?" என்று எனது அறிமுகப் படலத்தை ஆரம்பிக்க.. எடுத்த எடுப்பிலேயே டாப் கியருக்கு சென்றார் சுகுணா.

இவரும் சீரியஸ் டைப்புன்னு நினைச்சிராதீங்க கண்ணுகளா... சுகுணாவும் குணத்தில் வளர்மதி போலத்தான். என்ன கொஞ்சம் சிரிப்புதான் வராது... இவர் அறிவுத்திலகம் மட்டுமல்ல; நக்கல் திலகமும்கூட..

"ஏங்க யாருங்க இவுங்கள்லாம்.. எனக்கு யாரையுமே தெரியல.. எதுக்கு வந்திருக்காங்க.. என்ன நடக்குது இங்க..?"

- இப்படியெல்லாம் கேட்டா என்னத்தங்க சொல்றது..?

நானும் சொன்னேன்.. "நீங்க அவ்ளோ லேசுல யாருக்கும் பின்னூட்டம் போட மாட்டீங்க.. எல்லாரும் வந்து படிக்கிற மாதிரியும் எழுத மாட்டீங்க.. அப்புறம் எப்படி உங்களை எல்லாருக்கும் தெரியும்.." என்றேன்.. "எனக்குத்தாங்க பின்னூட்டமே வர மாட்டேங்குது.. ஆமா இவ்ளோ பேருமா எழுதுறாங்க..?" என்றார். என்ன பேசுவீங்க..?


"மாடிக்குப் போய் பார்க்கலாம்.. வாங்க.." என்று அழைத்துக் கொண்டு சென்றேன்.. பட்டறை அறைகளைச் சுத்திப் பார்த்துக் கொண்டிருக்க சுகுணா காபி மிஷினை பார்த்தவுடன் "காபி.." என்றார்.

அருகில் சென்று பார்க்க.. 'பின் நவீனம்' வந்திருக்கிறது என்பதை எப்படியோ கண்டு கொண்ட காபி மிஷின், மக்கர் செய்ய ஆரம்பித்தது..

"காபி வென்டர் எங்கய்யா..?" என்று பலரும் கூப்பாடு போட்ட பின்பு, இட்லி-வடைக்கு இணையத்தில் 'ஒத்தாசை' செய்து கொண்டிருந்த நா.ஜெய்சங்கர் 'வேலை'யை பாதியில் விட்டுவிட்டு ஓடி வந்து காபி போட்டுக் கொடுத்தார்..

அந்த நேரம்தான் வரவணையான், லக்கிலுக்குடன் வந்தார். சுகுணாவைப் பார்த்து குசலம் விசாரித்த போது 'மண்டையடி' ஓசை செல்லா அங்கே வந்துவிட்டார்.

வரவணையான் முதல் நாள் இரவு செல்லா, ரவியுடன் இணைந்து 'சரக்கு' அடித்தது, அதை செல்லா தனது பதிவில் புகைப்படத்துடன் போட்டுவிட்டது பற்றியெல்லாம் சொன்னார்.

உடனே சுகுணா, "நல்ல வேளை.. நான் வரலை. தப்பிச்சேன்.. உங்களுக்கு பொண்ணு தேடிக்கிட்டிருக்கீங்க.. இப்ப போய் கைல கிளாஸோட 'வசந்தமாளிகை சிவாஜி' மாதிரி போஸ் கொடுத்தா எவங்க பொண்ணு தருவான்...?" என்று அக்கறையாக வரவணையானிடம் கேட்ட சுகுணாவின் அடுத்த கேள்வியில் எனக்குத் தலையே சுற்றியது.. "ஆமா.. ஏங்க இப்படி குடிக்கிறீங்க. கெட்டப் பழக்கம்ல...?" என்றார் சுகுணா.

சாமி.. எனக்கு காதுல அப்படியே ஈயத்தை காய்ச்சி ஊத்தின மாதிரியிருந்துச்சு.. யாரு.. எதைப் பத்தி அட்வைஸ் பண்றதுன்னே விவஸ்தையே இல்லாம போச்சுய்யா நாட்டுல..

இந்த மயக்கத்தில் நின்றபோது செல்லா எங்களை செல்பேசியில் சுட்டுக் கொண்டார். சரி இவராவது போட்டோ எடுத்தாரே என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டேன். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அதை வலையேற்றிய ஓசை செல்லாவிற்கு தேங்க்ஸ்..

நம்ம தருமி ஐயா அவ்வப்போது பார்க்கும் இடங்களிலெல்லாம் என்னிடம் மட்டை போட்டுக் கொண்டிருந்தார்.

"என்னாச்சு உங்க short film? எப்படியும் நான் சினிமா படம் டைரக்ட் பண்றதுக்குள்ள நீங்க இதை எடுத்திரணும் என்ன..?" என்று நக்கல் செய்யவும் தவறவில்லை.

அவரே தன் அருகில் நின்றிருந்தவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்து "இவர்தான் புதுவை இரா.சுகுமாரன்" என்றார். அவரிடமும் பேசினேன். அவரும், "நிறைய பள்ளிகளில் கேட்டுப் பாருங்கள். கண்டிப்பாகக் கிடைக்கும்.." என்றார். நம்பிக்கையோடு வாழ்த்துவதற்கு நமக்கும் ஆள் இருக்கிறார்களே என்று எனக்குள் ஒரு சின்ன சந்தோஷம்..

சகோதரி பொன்ஸின் தாயார் கூட்டத்திற்கு மதியவாக்கில் வந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்த பொன்ஸ் ஏதோ.. ஏதோ.. ஏதோ.. ஏதோ.. சொல்லிக் கொண்டேயிருந்தார்.

அந்தச் சமயத்தில் பொன்ஸ் என்ன சொன்னார் என்பதே எனக்குக் கேட்காத அளவுக்கு என் காது மந்தமாகிவிட்டது என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

பொன்ஸின் தாயாரிடம் மாலை நேரத்தில் பேசும் சூழல் வந்தது. "நிகழ்ச்சி எப்போ முடியும்..?" என்றார். "எப்படியும் 6, 7 ஆயிரும்.." என்றேன்.. "அவ்ளோ நேரம் ஆகுமா..?" என்றார் சந்தேகமாக..

பின்பு அவரே, "பீச்சுக்குப் போகலாம்னு நினைச்சேன்.." என்றார். "சரி போயிட்டு வாங்களேன்.." என்றேன். "இல்ல.. இல்ல.. பூர்ணாவோட போகணும்னு நினைச்சுத்தான் வந்தேன்.." என்றார். "மேடம் அவ்வளவு சீக்கிரம் வர மாட்டாங்களே.." என்றேன்..

'மேடம்' என்று பொன்ஸை குறிப்பிட்டு நான் சொன்னவுடன் பொன்ஸின் தாயார் முகத்தில் ஒரு சிறிய மகிழ்ச்சி. பூரிப்பு. இருக்காதா பின்ன..? லேசான சிரிப்போடு, "இல்ல வருவா.. அவளுக்கு என்ன வேலை இருக்கு..?" என்றார். "என்ன வேலையா? கடைசியா எங்களையெல்லாம் வெளில தள்ளி கதவைப் பூட்டி சாவியைக் கொடுத்துட்டுத்தான் கிளம்புவாங்க.." என்றேன்..

இப்போதும் அவரிடத்தில் ஒரு பெருமித சிரிப்பு.

இப்படியொரு சூழ்நிலையைத் தன் தாயாருக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்காக பொன்ஸ், நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

ஐந்தாம் பாகம்

ஆகஸ்ட்-5 - வலைப்பதிவர் பட்டறை - எனது டைரி குறிப்புகள்-3

என் இனிய வலைத் தமிழ் மக்களே..!

அறிமுகம்

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

கீழே கூட்ட அரங்கம் பரபரப்பாகவே இருந்தது. நான் உள்ளே நுழைந்தபோது மாலன் ஸார் பேசிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு அமர்வின்போதும் அவரும் பத்ரி ஸாரும் கலந்து பேசி துவக்கி வைப்பதும், கருத்து சொல்வதுமாக இருந்தார்கள்.

அன்றைக்கு அனைவராலும் உச்சரிக்கப்பட்ட ஒரே வார்த்தை 'கட்டற்ற ஊடகத் தளம்' என்பதுதான். மாலன் ஸாரே, நூறு முறையாவது அதை உச்சரித்திருப்பார் என்று நினைக்கிறேன். பின்பு அதுவே மெகா பிரச்சனையானது.

அமெரிக்க நாராயணன் நம்மை சோதனைக்குள்ளாக்க வேண்டும் என்பதற்காகவே வேஷ்டி அணிந்து வந்திருந்தார். டிரவுசர் போட்டு வந்திருந்தாலும் தூக்கிக் கொண்டு போய் உள்ளே அமர்த்திருயிருப்போம் என்பது அவருக்குத் தெரியாது.

'ஏதாவது' நடக்கும் என்று எதிர்பார்த்து வந்திருந்தவருக்கு 'எதுவுமே' நடக்காததால் லேசான ஏமாற்றம் அவருக்கு..

வலைப்பதிவுகளில் அரசியல், ஆட்சியாளர்களின் கவனக்குறைவால் தமிழ் டைப்பிங் முறைகள் குழப்படி என்று நாராயணன் பேச ஆரம்பிக்க, மாலன் தடுத்து "தேவையற்ற பேச்சுக்களில் நமது கவனத்தைச் செலுத்த வேண்டாம்" என்று தடை போட.. நாராயணன் அதை மறுக்க.. காங்கிரஸ்காரராச்சே.. பேசுறதுக்கா சொல்லித் தரணும்.. அரங்கில் இதனால் ஒரு சிறிய சலசலப்பு. இது கூட இல்லேன்னா கூட்டம் நடந்ததா அர்த்தமே இல்லையே.. ஆக, தேங்க்ஸ் டூ அமெரிக்கா நாராயணன்.

CNN-IBN சேனலில் இருந்து ரிப்போர்ட்டரும், கேமராமேனும் வந்தார்கள். முதலில் மாடியில் படமெடுக்க வந்தவர்கள் கண்ணில் பட்டார் ஒரு பெரியவர். தனது மனைவியுடன் வந்திருந்த மனிதர், அவ்ளோ வெறியில் இருந்தார்.

எப்படியும் இங்கேயே பிளாக் ஓப்பன் பண்ணி இங்கேயே டைப் செய்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தவரை தொலைக்காட்சிக் குழுவினரிடம் அறிமுகப்படுத்தி வைத்து பேட்டி எடுக்க வைத்தேன்.

தொடர்ந்து தனியாக மாட்டிய பொன்ஸை இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்றெல்லாம் ஆங்கிள் பார்த்து அமர வைத்து சுட்டுத் தள்ளினார்கள் டிவிகாரர்கள்.

சரி.. நாம ஏதாச்சும் ஹெல்ப் பண்ணலாமேன்னு நினைத்து நாலு வார்த்தை.. நாலே வார்த்தைதான்.. ஆங்கிலத்தில் அந்த பெண் ரிப்போர்ட்டரிடம் பேசினேன்.. அவ்ளோதான்.. காபிகூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கேமிராமேனை இழுத்துக் கொண்டு கீழே இறங்கி ஓடிவிட்டார்கள்.

நானும் அதைத்தான் சொல்ல வந்தேன். கீழே அரங்கையும் படம் பிடிங்களேன் என்பதை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னேன். அவ்ளோதான்.. இது தப்பா..? என்ன கொடுமைடா சாமி..

அதற்குள் ஒரு வதந்தி பட்டறையில் பெரும் தீயாகப் பரவியது. அது இட்லி வடை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறார் என்று. என்னடா இது? புது கதையா இருக்கே என்று பதற்றத்துடன் கீழே இறங்கப் போக, அங்கே காபி மெஷின் அருகே நா.ஜெய்சங்கரும், இட்லி வடையும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தார்கள்.

இட்லிவடை கீழே இறங்கியதுதான் தாமதம். நா.ஜெ. காபி வேலையை விட்டு விட்டு அவசரம் அவசரமாக தனியறைக்குள் ஓடி லேப்டாப்பில் பதிவு போட ஆரம்பித்தார்.

"என்ன ஸார்.." என்றேன்.. "இட்லி வடை பதிவு போட்டுட்டாருங்க.. நம்ம விடலாமா.. அதான்..." என்றார். உடனுக்குடன் பதிவு போடுவதில் சூடானவரான ஓசை செல்லா காலையில் போட்டோ எடுத்து ஆரம்பித்து வைத்த இந்த பதிவு வேட்டையில், இட்லி வடை, நா.ஜெ. தொடர்ந்து பொன்ஸ் என்று ஆளாளுக்கு லேப்டாப்பை கையில் வைத்து பிலிம் காட்டிய கொடுமை சாயந்தரம் வரையிலும் நடந்தது..

நா.ஜெ.யும், பொன்ஸ¤ம் சென்னபட்டினத்திலும், ஓசை செல்லா தன்னுடைய செல்லா ஆன் லைனிலும், இட்லிவடை தனது பதிவிலும் ஸ்பீடு காட்டியது வலைப்பதிவுலகில் ஒரு ஆரோக்கியமான போட்டிக்கு வழி வகுத்து சென்னையைத் தவிர மற்ற ஊர் தமிழ்மண ரசிகர்களுக்கு பேதியைக் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அதிலும் நண்பர் இட்லிவடை, ஒவ்வொரு சீஸன் முடிந்தவுடனேயும் வேகவேகமாக வெளியே வந்து கடகடவென செல்போனில் எதையோ ஒப்பிப்பதும், பின்பு உள்ளே செல்வதுமாக இருந்தார். இட்லி வடை பதிவும் ஏறிக் கொண்டே இருந்தது..

இந்த நேரத்தில் ஜெயா டிவியில் இருந்து படம் எடுக்க ஆட்கள் வர.. அந்த நேரம் பார்த்து கீழ் அரங்கில் மாலன் ஸார் பேசிக் கொண்டிருந்ததால் மாடிக்கு இழுத்துக் கொண்டு போகப்பட்டார்கள்.

மாடியில் இவர்கள் நுழைந்த நேரம் கரண்ட் கட். புழுக்கத்தால் அனைவரும் காபி மெஷின் அருகே இருக்க.. காபி வென்டர் நா.ஜெ. அனைவருக்கும் முகம் சுழிக்காமல் காபி பிடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள்.. ஒரு நாளாச்சும் இப்படி சிரிச்சுக்கிட்டே அவர் வீட்ல காபி போட்டிருப்பாரான்றது சந்தேகம்.. யாராவது அவர் வீட்ல போய் கொஞ்சம் போட்டுக் கொடுங்கப்பா..

அருமையாக வகுப்பெடுத்துக் கொண்டிருந்த தமிழி ஸாரிடம், கிடைத்த வெளிச்சத்தில் பேட்டி எடுத்தார்கள் ஜெயா டிவியினர். சில நிமிடத்தில் கரண்ட் வந்துவிட.. அதற்குள் கீழே மாலன் ஸார் பேசி முடிக்க.. ஜெயா டிவியினர் கீழே வந்து படம் பிடித்தனர். மறுபடியும் அவர்களை மாடிக்கு அழைத்து வந்து மா.சி.யை பேட்டி எடுக்க வைத்தேன். இந்த நேரத்தில் தம்பி பாலபாரதி சாப்பாடு வாங்க சென்றுவிட்டதால் அவரிடம் பேட்டி எடுக்க முடியவில்லை. எனக்கும் கொள்ள வருத்தம்தான்.. என்ன செய்ய..?

இடையில் மாலன் ஸார் எதற்கோ வெளியே வந்தபோது அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.. "ரொம்ப சந்தோஷம்.. சாயந்தரம் நிறைய பேசுவோம்.." என்றார். ஆனால் அதற்கு முன்பாகவே எஸ்கேப்பாகிவிட்டார்.

மீண்டும் மாடிக்குச் சென்றபோது வழிமறித்தார் டோண்டு ஸார்.. பேசத் துவங்குவதற்குள் காசி ஸார் வந்துவிட.. இருவரும் அப்போதுதான் நேரில் சந்திக்கிறார்களாம்.. உணர்வுப்பூர்வமாக இருவரும் பேசத் துவங்க.. இடையில் நுழைந்து கட் செய்த நான் டோண்டு ஸாரை காட்டி, "வலையுலகத்துல நிம்மதியா இருக்குற ஒரே ஆளு இவர்தான் ஸார்.. ஆனா இவரைத் தவிர மத்தவங்க எல்லாம் இவரால பாடா படுறாங்க.." என்று 'எதை'யோ மனதில் வைத்து காசி ஸாரிடம் சொன்னேன்.. புரிந்து கொண்டு சிரித்தார் அவர். டோண்டு ஸார் அதைவிட அதிகமாகச் சிரித்தார். ச்சே..ச்சே.. ஒருத்தருக்குக்கூட கோபம் வரலப்பா அன்னிக்கு..

தினகரன் ரிப்போர்ட்டர் திடீரென்று வந்து நின்றார். அவரிடம் பேசி, அறை, அறையாக அழைத்துச் சென்று காட்டிக் கொண்டிருந்தபோது, அமெரிக்கா நாராயணன் எதிரில் வந்து நின்றார்.

அவரிடம் "என்ன ஸார் ஆச்சு அந்த வேஷ்டி மேட்டர்..?" என்றேன். "ஒண்ணும் ஆகலே.. "CM-ஐ பார்க்க டைம் கேட்டிருக்கேன். இன்னும் கிடைக்கல.." என்றார் வருத்தத்துடன்.. "அந்த வேஷ்டி மேட்டரை பத்தி பிளாக்ல நிறைய பேர் எழுதினோம் ஸார்.." என்றேன்.. "அப்படியா.. எனக்குத் தெரியாதே.." என்றார்.

அட்ரஸையெல்லாம் சொன்னேன்.. மிக, மிக சந்தோஷப்பட்டார். "வெளியில் பத்திரிகையாளர்கள்கூட அதிகம் கண்டு கொள்ளவில்லை. முகமறியாத பதிவர்கள் எழுதியிருக்கிறார்களே.. நன்றி.." என்றார்.

மாலன் ஸார் எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தேன். அப்போது ஒருவர் எழுந்து மைக் கேட்டபோதுதான் பார்த்தேன். அது நம்ம 'பின்நவீனம்-3' வளர்மதி. மைக்கை வாங்கியதுதான் தெரியும்..

பேச ஆரம்பித்தார்.. பேசினார்.. பேசினார்.. பேசிக் கொண்டேயிருந்தார்.. முன்னால் இருந்தவர்களெல்லாம் பின்புறம் திரும்பி "யாருய்யா அது.. இம்புட்டு நேரம் சவுண்டு விடுறது..?" என்று முகத்தைப் பார்க்கும் ஆவலில் எழுந்து நிற்கும் அளவுக்கு ஆர்வத்தை உண்டு பண்ணினார்.

அவ்வப்போது மட்டுறுத்தல் வேலையை செய்து கொண்டிருந்த மா.சி.க்கு பொறுக்கவில்லை. வளர்மதியின் அருகில் வந்து நிற்க.. நான் மா.சி.யிடம், "பேசுறது வளர்மதி.." என்றேன். "யாரா இருந்தா என்னங்க.. நேரமாகுதுல்ல. அடுத்தவங்களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா?" என்றவர் மைக்கை பிடுங்குவதில் குறியாக இருக்க..(ஆனால் மா.சி. மட்டும் இடை இடையே தொடர்ந்து 15 நிமிடங்கள்லாம் பேசினார். இதை யார் கேக்குறது?) வளர்மதியோ அப்போதுதான் கால்வாசியை முடித்திருந்தார்.

கொஞ்சம் பொறுத்துப் பார்த்த பத்ரி ஸாரும் இப்போது வளர்மதியின் அருகில் வர எனக்கு ஒன்று புரிந்தது. இன்று பின்நவீனத்தின் கட்டுக்கோப்பான கட்டுக்களை இருவரில் ஒருவர் உடைக்கப் போகிறார் என்று. அந்தக் கொடுமையை அருகில் இருந்து பார்க்கப் பிடிக்காமல் பட்டென்று வெளியேறினேன்.. எல்லாம் முடிந்தது..

சிறிது நேரம் கழித்து வளர்மதி களைப்போடு வெளியே வந்தார். என்னிடம் சிக்கினார். "இவ்ளோ நேரம் என்ன ஸார் பேசினீங்க..?" என்று நிஜமான(!) ஆர்வத்தோடு விசாரித்தேன். மனிதர் சிரித்தாரே பாருங்கள் ஒரு சிரிப்பு.. நான் எதிர்பார்க்கவேயில்லை அவருடைய இந்த ரியாக்ஷனை..

அதன் பின் வளர்மதியும் நானும் கால் மணி நேரம் பேசினோம். நான் நிறைய பேசினேன். அவர் நிறைய சிரித்தார். நல்ல கவர்ச்சியான சிரிப்பு மனுஷனுக்கு.

நான் சொன்னேன்.. "ஏற்கெனவே இங்க சுகுணா, அய்யனார்னு ரெண்டு பேரோட 'அன்புத் தொல்லை' தாங்கலையேன்னு இருந்தோம். இப்ப நீங்களும் வந்து ஐக்கியமாயிருக்கீங்க.. எப்பங்க நாங்கள்லாம் படிக்கிற மாதிரி எழுதுவீங்க.. இப்படி பதிமூணு பக்கம் எழுதி நீங்களே படிச்சுக்கிறது உங்களுக்கே நியாயமா இருக்கா..?" என்றேன்.

இதைக் கேட்டவுடனே, வளர்மதிக்கு கொஞ்சம்கூட கோபம் வரலேன்னா பார்த்துக்குங்க..

"அதெல்லாம் இல்ல ஸார்.. எளிமையாத்தான்(!) எழுதுறேன்.. நீங்க தொடர்ந்து என் பதிவைப் படிச்சுக்கிட்டே வாங்க.. என் எழுத்து உங்களுக்குப் பிடிபட்டுவிடும்..." என்றார் சிரிப்புடன்.

மக்களே.. புரியாத வார்த்தைகளை அடுக்கி வைத்துக் கொண்டு 'நவீனம்' என்று எழுதுபவர்கள் எல்லாம் சீரியஸானவர்கள் என்று நினைக்க வேண்டாம்.

ஸோ, கும்மியடிக்கும் திம்மிகளே.. நீங்கள்லாம் பயப்படாம அண்ணன் வளர்மதி அடுத்து எது எழுதினாலும் தாராளமா உங்க கும்மியை அவர்கிட்ட பெர்மிஷன் கேக்காமலேயே குத்தலாம். 'எதுவும்' நடக்காது என்பதற்கு நான் கியாரண்டி.

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆகஸ்ட்-5 - வலைப்பதிவர் பட்டறை - எனது டைரி குறிப்புகள்-2

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அறிமுகம்

முதல் பாகம்

சொன்னது போலவே அதிகாலை 5.30 மணிக்கு மா.சி.யின் போனில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் அழைத்தது தம்பி வினையூக்கி. "எழுந்துட்டீங்களா பிரதர்.." என்றார். "குட்பாய்" என்று சொல்லி போனை வைத்தேன்.

7.30 மணி சுமாருக்கு அரங்கத்தில் நுழைந்தபோது வினையூக்கி மட்டுமே மாடியில் இருந்தார். அவருடைய வழிகாட்டுதலில் அனைத்து கம்ப்யூட்டர்களுக்கு power connection-ஐ கொடுக்கத் துவங்கினேன்.

திடீரென்று பளீரென்ற சிரிப்புடன் நடிகர் 'ரோஜா' அரவிந்த்சாமி தோற்றத்தில் வந்த ஒருவர் கை கொடுத்து நான்தான் "ஹாய் கோபி.." என்றார். முதலில் புரியவில்லை. பின்பு புரிந்ததுபோல் தலையாட்டி வைத்தேன். எதுக்குப் போய் நம்ம அறிவை வெட்டவெளிச்சமாக்கணும். அதான்.. "உங்க பதிவெல்லாம் படிச்சிருக்கேன். ஆனா பின்னூட்டம் மட்டும் போட்டதில்ல.." என்றார். இந்த வார்த்தை இப்ப வலையுலகத்துல ரொம்ப பேமஸாயிருச்சுப்பா.. பட்டறை அன்னிக்கு மட்டும் கண்டிப்பா ஒரு பத்து பேராச்சும் யார்கிட்டயாவது இப்படி சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. கோபி தம்பி நல்லாயிருப்பூ..

தொடர்ந்து தம்பி ஜேகேயும், அருள்குமாரும், ஜெயாவும் வந்து சேர்ந்தார்கள். வந்த வேகத்தில் எங்களது கம்ப்யூட்டர்களுக்கு கரண்ட் connection கொடுக்கும் பணிகள் துரிதமாக நடந்தன. அப்போது மா.சி வந்து "டிபன் வேண்டுமா..?" என்றார். "வேணுமாவா...?" என்று நாங்கள் கோரஸாக கேட்க நொடியில் எஸ்கேப்பானார் மா.சி.

பத்ரி ஸார் வந்தார். மாடியின் முதல் அறையில் Projector-ஐ வைத்து டெஸ்ட் செய்தார். பரபரப்பாக தனது பணியை ஆரம்பித்த பத்ரி நிகழ்ச்சி முடியும் வரையிலும் பரபரப்பாகவே இருந்தார். அவரது வெற்றியின் ரகசியம் என்னவென்று அவருடைய உழைப்பில் இருந்தே புரிந்தது.

"டிபன் வந்திருச்சு.. சாப்பிட வாங்க ஸார்.." என்று 'அகமும், புறமும்' ஜெயா பத்து முறையாவது என்னை அழைத்திருப்பார். அருமைத் தங்கைக்கு எனது பாசமான நன்றிகள்.

வேகமாகச் சென்றால் ஒரு வடையும், அரை கிண்ணம் பொங்கலும் இருந்தது. வடைக்குத்தான் முதலில் ஆள் வரும் என்பது தெரியுமாதலால், முதலில் அதை முழுங்கினேன்.

சொல்லி வைத்தாற்போல் 'அமாவாசை' கலரில் ஒரு முரட்டு உருவம் வந்து, "வடை எங்க..? வடை எங்க..?" என்று பரபரத்தது. 'இல்லை.. காலி..' என்றதும், "ங்கொய்யால.. அதுக்குள்ள வெட்டிட்டீங்களாய்யா. நல்லாயிருங்கய்யா." என்று வாழ்த்திவிட்டு வெறும் வயிற்றைத் தடவிக் கொண்டே வெளியேறியது.. ஏதோ நம்மளால முடிஞ்சது.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே லிவிங்ஸ்மைல் வித்யா அமைதியாக, அடக்கமாக அறையினுள் வந்து அமர்ந்தார். "சாப்பிடுறீங்களா மேடம்.."னு கேட்டப்ப, "இல்ல வேணாம்.. சாப்பிட்டுட்டேன்.." என்று சொல்லிவிட்டு தான் கொண்டு வந்த பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து 'சாப்பிட' ஆரம்பித்தார். பொண்ணுன்னா இவுகல்ல..? (வேணாம்டா உண்மைத்தமிழா.. ரொம்ப நாள் கழிச்சு எழுதுற.. வம்பை விலைக்கு வாங்காத.) ஆனா உண்மையான விஷயமே வேற.. அம்மணி சினிமா ஸ்டாராயிட்டாங்கப்பூ.. அதுனால இனிமே இப்படித்தானாம். அம்மணி.. உங்ககிட்ட மேனேஜர் போஸ்ட் காலியா இருக்குன்னு கோடம்பாக்கம் பட்சி சொல்லுச்சு.. என்னையும் கொஞ்சம் ஞாபகத்துல வைச்சுக்குங்க..

"கீழே பேட்ஜ் கொடுக்குறாங்க.. முதல்ல அதைப் போய் வாங்குங்க" என்றார் ஒருவர். "நீங்க..?" என்றவுடன் "நான்தான் கரூர் கே.ஆர்.அதியமான்.." என்றார். "ஓ.. உங்களைத்தான 'நாலு' பேர் தேடிக்கிட்டிருக்காங்க" என்றேன்.. "ஆமா ஸார்.." என்று சற்று சங்கடத்தோடு சொன்னார். "இதுக்கு எதுக்கு சங்கடம்..? இப்ப நீங்களும் பிளாக்ல ஒரு வி.ஐ.பி.தான்.." என்று 'ஆறுதல்' சொன்னேன்.. 'பாதிக்கப்பட்டவங்க' ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் சொல்லலைன்னா எப்படி?

பேட்ஜ் கொடுக்கும் இடத்தில் தனது வழக்கமான 'யூனிபார்மில்' நின்று கொண்டிருந்த அருமை உடன்பிறப்பு லக்கிலுக் பேட்ஜில் 'உண்மைத்தமிழன்' என்று எழுதிவிட்டு "உங்க பிளாக் அட்ரஸ் என்னண்ணா..?" என்று கேட்டு எனக்கு நெஞ்சு வலியையே வரவழைத்துவிட்டார். "அப்பா சாமி.. உனக்கே இது அடுக்குமாய்யா..?" என்று வாய்விட்டே கேட்டுவிட்டேன். "நிசமாவே தெரியாதுண்ணேன்.." என்று ஒரே போடாகப் போட்டார்.. ம்ஹ¤ம்.. 'தலைவரை'யே மிஞ்சிட்டாரு 'தொண்டர்'..

'காசி ஆறுமுகம்' என்ற பேட்ஜோடு வந்த ஒருவர், என் பேட்ஜை படித்துவிட்டு "உண்மைத்தமிழன்றது நீங்கதானா.. ஏங்க இப்படி கொஞ்சமா எழுதுறீங்க.. எங்களை பார்த்தா பாவமா இல்லையா..?" என்றார். முதலில் அவர் முகத்தைப் பார்த்தவுடனேயே எனக்குத் தெரிந்த இரண்டு நண்பர்களின் ஞாபகம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. அச்சு அசலாக அவர்களைப் போலவே இருந்தார் காசி ஸார்..

"ரொம்ப இல்ல ஸார்.. கொஞ்சம்தான்.. ரெண்டு ரெண்டு பாராலதான் எழுதுறேன்.. எல்லாரும் பெரிசா இருக்குன்றாங்க ஸார்.." என்றேன் நான். "பரவாயில்லை.. இதையே பாலோ பண்ணுங்க.. அப்பத்தான் உங்களுக்கு opponent-ஆ யாரும் வர மாட்டாங்க. ஏன்னா யாருமே படிக்க மாட்டாங்களே.." என்று வஞ்சப் புகழ்ச்சியோடு சொன்னபோது நிஜமாகவே எனக்குத் தலை சுத்தியது. யார், எப்படி பேசுவாங்கன்னு யாரால சொல்ல முடியும்...?

அடுத்து வந்தார் இனமானப் பேராசிரியர் தருமி.. "உங்களை எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே உண்மைத்தமிழன்.." என்றார். இது எப்படி இருக்கு..? இந்த குசும்பு புடிச்ச பெருசுகளையெல்லாம்...

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே விக்கி இது ஒரு unconference என்று சொல்லிவிட அடுத்த பாராவை மா.சி. எழுந்து சொல்ல ஐந்து நிமிடத்தில் அதை நிரூபித்த இருவரையும் பாராட்டத்தான் வேண்டும்.

எனக்கென்று சில வேலைகளை மா.சி. கொடுத்துவிட்டதால் அடுத்த அரை மணி நேரம் போனும், கையுமாகவே வெளியில் சுற்றிக் கொண்டிருந்தேன்.

'அகமும், புறமும்' ஜெயா வரவேற்பு வேலையை சளைக்காமல் இறுதிவரை புன்னகையோடு செய்து கொண்டிருந்தார்.

வெளியில் வரவேற்பு மேசையில் அமர்ந்திருந்த பதிவுலக நண்பர்களும் "அவர்தான் இவர்.. இவர்தான் அவர்.." என்று தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டே ரசனையோடு அடையாளம் கண்டு கொண்டது பார்ப்பதற்கு வேடிக்கையாகத்தான் இருந்தது.

டோண்டு ஸார் சொல்லி வைத்த மாதிரி கரெக்ட்டா 9.29.59-க்கு வாசலில் வந்து இறங்கினார். அவரை நான் சந்திப்பது இதுவே முதல் முறை என்பதால்('ஏன்யா உனக்கு இவ்ளோ கிறுக்கு..?' அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது) தேடிச் சென்று கை குலுக்கினேன்..

இப்போது டோண்டு ஸாருடன் உள்ளே சென்றபோது பத்ரி ஸார் பேச ஆரம்பித்திருந்தார். டோண்டு ஸார் உடனே அதைக் குறிப்பெடுக்க ஆரம்பித்தார். மனுஷன் ஏன் இந்தப் போடு போடுறாருன்னு பார்த்த உடனேயே தெரியுது.. அரங்கில் குறிப்பெடுத்த வலைப்பதிவர் எனக்குத் தெரிந்து இவர்தான்..

'பெங்களூரு மைனரு' செந்தழல் ரவி தன் காரில் வந்திறங்கிய வேகத்திலேயே புகை பிடிக்க கிளம்பினார். கூடவே நானும் அவர் விடுகின்ற புகையைப் பிடிக்கச் சென்றேன்..

"ராத்திரி மப்பு கொஞ்சம் கூட ஏறுனதால எந்திரிக்க லேட்டாயிருச்சு.." என்றார் ரவி. "சரிப்பூ.. அதையெல்லாம் யார் கேக்கப் போறா..?" என்றேன். கொரியாவில் இருந்து ipod மாதிரி ஒரு சிஸ்டத்தை வாங்கி வந்திருந்தார் ரவி. அது முதலில் லக்கிலுக், பின்பு என்னிடம், மதியம் வரவனையான் என்று பலரது கையிலும் புழங்கிக் கொண்டிருந்தது.

டெல்பின் மேடத்திடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் பாலா. "என்னங்க? யாருங்க அந்த போலி உண்மைத்தமிழன்.. எனக்கு ஒண்ணுமே புரியல.. அதுனாலதான் நீங்க இப்ப எழுதுறதே இல்லையா.." என்று அக்கறையாக விசாரித்தார். உடன் வந்த தருமி ஐயாவும் அதையே விசாரித்தார். அப்படியே கார் பக்கம் போன டெல்பின் மேடம், காலை 11 மணிக்கெல்லாம் பதிவு போட்டு அசத்தியது ஒரு தனிக்கதை.

தொடர்ந்து ஆசீப் மீரான் அண்ணாச்சியை அறிமுகம் செய்து வைத்தார் பாலா. அண்ணாச்சியை நான் நேரில் சந்திப்பது இதுதான் முதல் முறை. கடந்து போன துக்கங்களை மிக இலகுவாகத் தாங்கிக் கொண்டு அவர் கூட்டத்திற்கு வந்திருந்தது எங்களுக்கே ஆறுதல் தந்த விஷயமாக இருந்தது.

அதிலும் மதிய வாக்கில் அண்ணாச்சி விடைபெறும்போது உடன் இருந்த இன்னொரு பதிவரிடம், "இவர்தான் உண்மைத்தமிழன். அப்படின்னு இவரே சொல்லிக்கிறாரு.. ஆனா, உண்மை எனக்குத் தெரியாது.." என்று இதுவரையிலும் இல்லாத புது மாதிரியாக அறிமுகப்படுத்தி வைத்தபோது கொஞ்சம் நொந்துதான் போனேன்.. எனக்குத்தான் சாமி இந்த மாதிரி பேச்செல்லாம் வர மாட்டேங்குது.. அண்ணாச்சி.. வாங்க.. பழைய அண்ணாச்சியாக சீக்கிரமா வந்திருங்க..

அரங்கில் வலைப்பதிவு பற்றிய அறிமுகப் படலம் முடிந்தவுடன் மாடியில் டிரெயினிங் என்று சொல்ல.. மாணவ, மாணவிகள் மாடிக்குப் படையெடுத்தார்கள். கூட்டம் மொத்தமாக வந்துவிட.. பலரும் நிற்க வேண்டி வந்தது.

பொன்ஸ், கீழே செல்வோர் ஒவ்வொருவரிடமும் "யாரையும் இனிமேல் மேல அனுப்பாதீங்க. அடுத்த சீஸனுக்கு அனுப்புங்க.." என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நேரத்திற்கு மாடிக்குச் சென்ற என்னிடம் அந்தப் பணியை ஒப்படைத்தார் பொன்ஸ்.

சரி.. ஒரு வேலையாச்சும் செய்யலாம் என்ற நினைப்போடு மாடிப்படியருகே சிறிது நேரம் காவல் காத்தேன். அதற்குள்.. நா.ஜெய்சங்கர் காபி கொடுக்கும் மிஷினை குத்தகைக்கு எடுத்து ஐந்து நிமிடத்திற்கு மூன்று காபி கொடுத்து என்னை 'கரெக்ட்' செய்ததால், நான் காபி மிஷன் அருகேயே சிலையாய் நின்றுவிட.. தொடர்ந்து தடுப்பாரே இல்லாமல் நிறைய ஆர்வலர்கள் இரண்டு அறைகளிலும் நுழைந்துவிட..

பொன்ஸ் என்னை தும்பிக்கையால் தூக்கிப் போட்டு மிதிப்பதற்குத் தேடுவதாக, தங்கை ஜெயா ஒரு ஸ்கூப் நியூஸை என்னிடம் தட்டிவிட மாடியிலிருந்து எஸ்கேப்.

கீழே தம்பி மோகன்தாஸ் அரங்கத்தை வளைத்து, வளைத்து கை தேர்ந்த புகைப்படக்காரரைப் போல் புகைப்படம் எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். என்னை மட்டும்தான் எடுக்கவில்லை. "சாயந்தரம் போகும்போது எடுக்குறேன்" என்றார். சாயந்தரம் அவர் போகும்போது நான் பார்க்க முடியவில்லை. ஆக.. ஒரு அருமையான விலை மதிக்க முடியாத புகைப்படத்தை, தம்பி மோகன்தாஸ் இழந்துவிட்டார் என்றே சொல்லலாம்.

பெங்களூரிலிருந்து வந்திருந்த ஒரு பதிவரை செந்தழல் ரவி எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சர்ச்சைக்குள்ளான பல வலையுலக விஷயங்களையும், என் வேலை தொடர்பானவைகளையும் நிறைய பேசினார் அவர். ஆனால் அவர் பெயரைத்தான் என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. அன்று நான் தெரிந்து கொண்ட விஷயங்களை வைத்து ஒரு பத்து பதிவுகளாவது போடலாம். ஆனால் இப்போதைக்கு முடியாது என்பதை அந்தப் பதிவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவஞானம்ஜி இளைஞர்களோடு போட்டி போட்டுக் கொண்டு பதிவுகள் போட்டார். இட்லி, வடைக்குப் பிறகு உடனேயே பதிவு போட்டு அதற்கு வந்த கமெண்ட்ஸை ரிலீஸ் செய்ய வினையூக்கியின் உதவியை நாடி அதையும் செய்தார்.

தம்பி வினையூக்கி எப்போதும் மூன்று, நான்கு பேர் படை சூழ கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். பொறுமையின் சிகரம்தான்..

பினாத்தல் சுரேஷ் என்று சொல்லி ஒருவர் கை நீட்டினார். நான் முதலில் நம்பவில்லை. தலையில் சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னதால், "சரி.. சரி.. நீங்கதான் பினாத்தல் சுரேஷ்.." என்றேன். அதற்குப் பிறகுதான் பேசவே ஆரம்பித்தார்.

"ஏன் ஸார் பதிவு போட மாட்டேங்குறீங்க.. சீக்கிரமா போடுங்க ஸார்.." என்றெல்லாம் பாசமாகப் பேசியவர், "கும்மிப் பதிவுகளுக்கான மேட்டர்லாம் எப்படி ஸார் இவ்ளோ ஈஸியா உங்களுக்கு சிக்குது.." என்ற எனது கேள்விக்கு மட்டும் நேரடியாகப் பதில் சொல்லாமல் "ஏதோ ஒண்ணு ஸார்.. அது அப்படித்தான்.." என்று சொல்லிச் சொல்லியே சிரித்துக் கொண்டிருந்தார். இவருக்கும் டிரேட் மார்க் சிரிப்புதான்..

பினாத்தலாரைப் போலவே அவருடைய கிளாஸ¤ம் கலகலப்பாகவே இருந்தது. எப்பவும், யாருக்கும், எதற்கும் அடங்காத 'தல' பாலபாரதி பினாத்தலாரின் பிளாஷ் வகுப்பில் கையை, காலை கட்டிக் கொண்டு அடக்கமாக தரையில் அமர்ந்திருந்தது பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. கல்வியின் சிறப்பு அப்படி..

காலையில் தமிழி ஸார் ஒரு மணி நேரம் வகுப்பு எடுத்தபோதும் சரி, மதியம் ரவி கிளாஸ் எடுத்தபோதும் சரி.. ஒரு பத்து நிமிடம் மட்டுமே நான் அருகே இருந்து கேட்க நேர்ந்தது.

சொல்லித் தருவதில் இருக்கின்ற இன்பமே தனிதான் என்றாலும், பிரதிபலன் பாராமல் கற்றவர்கள் பிறருக்கு கற்பிக்கும் வித்தையை ஒரு வகையில் அன்னதானம் என்றே சொல்லலாம்.

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆகஸ்ட்-5-பட்டறை-எனது டைரி குறிப்பு-1

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அறிமுகம்

ஆகஸ்ட் 4.

மதியம் ஆபீஸில் ஆணி பிடுங்கிக் கொண்டிருந்தபோது உலக அதிசயமாக கூகிள் டாக்கில் வந்தார் தம்பி பாலபாரதி.

"அண்ணே.. பட்டறை வேலைக்குத் தன்னார்வத் தொண்டர்கள் உடனடியா தேவை.." என்றார். என் நிலைமையைச் சொன்னேன்.. "ரெண்டு நாளா குளிர் காய்ச்சல் வந்து லீவு. அதுக்கப்புறம் ரெண்டு நாள் பெர்மிஷன் வேற எடுத்திருக்கேன். இன்னிக்கு சீக்கிரம் கிளம்ப முடியாது"ன்ணேன்.. "சரி. அப்ப... சாயந்தரமா பல்கலைக்கழகத்துக்கு வந்திருங்க என்றார் பாலா. "நான் நேரா வித்லோகாவே வந்தர்றேன்.. அங்க இருந்து ரெண்டு பேரும் சேர்ந்தே போயிரலாம்.." என்றேன்.

அலுவலகத்திலிருந்து மாலை 6 மணிக்கு கிளம்பி வித்லோகா சென்றேன். உள்ளே ஆன்மிகச் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. "நல்ல விஷயம்.. இதுக்கெல்லாம் கொடுத்து வைச்சிருக்கணும் தம்பி.." என்று பாலாவை வாழ்த்தினேன்.. "ங்கொய்யால.." என்று தன் கண்களாலேயே என்னைத் திட்டிவிட்டு, "நீங்க முன்னாடி போங்கண்ணேன்.. நான் கடையை மூடிட்டு வர்றதுக்கு லேட்டாகும்.." என்றார். அதுவும் சரிதான் என்று நினைத்து பல்கலைக்கழகம் வந்தேன்.

அங்கே காலேஜ் புரொபஸர் ஒருவர் கையில் மார்க்கர் ஒன்றை வைத்துக் கொண்டு போர்டில் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது அது 'ஓசை செல்லா' என்று.

உடன் தன் உடன்பிறவா சகோதரனான மடிக்கணினியை மடியில் அமர்த்திக் கொண்டு அமர்ந்திருந்தார் மா.சி. அருகில் ஒரு இளைஞி. பின்புறம் தம்பி வினையூக்கி. அவரருகில் ஜே.கே. செல்லாவின் அருகில் விக்கி. உடன் அருள்குமார்.

அறிமுகம் முடிந்ததும் அவர்களுடைய பேச்சு வார்த்தை தொடர்ந்தது. யார், யாருக்கு எந்தப் பொறுப்பைக் கொடுக்கலாம் என்று பேசத் துவங்கினார்கள்.

இடையில் அந்த இளைஞியிடம் "நீங்கதான் கவிதாவா..?" என்றேன்.. "இல்ல ஸார்.. எனக்கு கவிதா யாருண்ணே தெரியாது.." என்றார். "அப்புறம்..?" என்றேன்.. "நான் ஜெயா.." என்றார். "ஜெயாவா..? கேள்விப்பட்டதே இல்லையேம்மா.." என்றேன். "நான் ரொம்ப rare-ஆகத்தான் பதிவு போடுவேன். 'அகமும் புறமும்' என்பது எனது வலைப்பூவின் தலைப்பு.." என்றார். "நான் பார்த்ததே இல்லம்மா..." என்றேன்.

தம்பி வினையூக்கி பின்னால் வந்து அமரும்படி சொன்னார். அருகில் போனேன். அமர்ந்தவுடனேயே "போன வாரம் போன் பண்ணி நான் என்ன சொன்னேன்? ஏதாவது பதிவு போடுங்கன்னு சொன்னேன்ல.. ஏன் போடலை..?" என்றார் கோபத்துடன். என்னத்த சொல்றது? "இல்லப்பா.. நேரமில்லை.." என்றேன். "அப்ப கமெண்ட்ஸாவது போடலாம்ல.." என்றார். "அதுக்கும் நேரமில்லப்பா.." என்று சொல்லிச் சிரித்தேன். 'ஐய்ய. அழகு வடியுது..' என்ற தோரணையில் நொந்து கொண்டார் தம்பி வினையூக்கி.

அதற்குள் செல்லாவும், மா.சி.யும் அவரவர் மடிக்கணினிகளை சோதனை செய்து முடிக்க.. மாடிக்குப் போகலாம் என்று அழைத்தார்கள். அங்கே சென்றோம். இரண்டு அறைகளிலும் கம்ப்யூட்டர்களை பரப்பி வைத்திருந்தார்கள். வினையூக்கி அனைத்தையும் ஆர்வமாகப் பார்த்துவிட்டு "நாளைக்கு நானே எல்லாத்தையும் பார்த்துக்குறேன்.." என்று மா.சி.யின் தலையில் சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னார்.

செல்லா என்னையும், வினையூக்கியையும் அமர வைத்து தன் செல்பேசியில் பதிவு செய்து கொண்டார். இடையில் திடீரென்று உள்ளே பிரவேசித்தார் அருமை உடன்பிறப்பு லக்கிலுக். அவருடன் அவருடைய நண்பர் ஒருவரும் வந்திருந்தார். "ஹாய்" என்றேன்.. "ஹலோ.." என்றார் லக்கி.. அவ்வளவுதான். தொடர்ந்து நா.ஜெய்சங்கர் வந்து கட்டியணைத்துக் கொண்டார். நா.ஜெ. ஏதோ பெரிய திட்டத்தோடுதான் வந்திருக்கிறார் என்பது எனக்கு மறுநாள்தான் தெரிந்தது.

மறுபடியும் கீழே வந்தோம். "வருபவர்களுக்கு கொடுப்பதற்கான கிப்ட் பைகளை நிரப்ப வேண்டும்.." என்றார் மா.சி. இந்த நேரத்தில் தம்பி நந்தா எங்கோ வெளியில் சென்று அலைந்து, திரிந்த களைப்புடன் வந்து சேர்ந்தார். "உங்களை எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே.." என்று நந்தாவிடமே கேட்டேன். தம்பி ரொம்ப டிஸ்டர்ப்பாகிவிட்டார். "என்னையும் மறந்திட்டீங்களா.." என்றார் தம்பி.

தொடர்ந்து நான், மா.சி., நா.ஜெய்சங்கர், அருள்குமார், நந்தா நால்வரும் தரையில் அமர்ந்து கிப்ட் பையை நிரப்ப ஆரம்பித்தோம். இடையில் 'சரக்கு' அடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் ஓசை செல்லா நழுவப் பார்த்தார். மா.சி. அவரையும் இழுத்துப் பிடித்து அமர வைத்துவிட்டார்.

இடையில் ஜெயா தனது அம்மாவுக்கு போன் செய்து, "இப்ப வந்தர்றேம்மா.. பத்து நிமிஷத்துல கிளம்பிருவேம்மா.." என்று பொறுப்பாகப் பதில் சொன்னவர், பட்டறைக்கான பேனரை இந்த இடத்தில் சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஒரு போன் நம்பரை எழுதிக் கொடுத்தார். கூடவே, "பணம் கொடுக்க வேண்டாம்.." என்று பத்து முறை அழுத்தி, அழுத்திச் சொல்லிவிட்டு விடைபெற்றார்.

கிப்ட்களை நாங்கள் நிரப்பிக் கொண்டிருக்க.. அந்த நேரம் புயலாய் உள்ளே நுழைந்தார் பொன்ஸ். கை நிறைய பைகளோடு ஷாப்பிங் போய்விட்டு வந்தவர் என்னைப் பார்த்ததும் "வாங்க.. வணக்கம்.." என்று கொங்கு பாஷையில் வரவேற்றார்.

"ஏன் நீங்க பதிவே போட மாட்டேங்குறீங்க.. எல்லாரும் எங்களையே கேக்குறாங்க..." என்றார். வழக்கம்போல எல்லாவித பொய்களையும் சேர்த்துச் சொல்லி அப்போதைக்கு தப்பித்தேன்..?

இடையில் மா.சி. பேனர் வாங்க வேண்டும் என்று ஞாபகப்படுத்த செல்பேசியில் அட்ரஸ் கேட்டுக் கொண்டு நானும், நந்தாவும் என்னுடைய வண்டியில் ஆழ்வார்பேட்டை கிளம்பினோம்.

வழி தவறி வேறொரு ரோட்டிற்குச் சென்று அங்கிருந்து போன் செய்து, மீண்டும் வேறொரு ரோட்டிற்குச் சென்று அங்கிருந்து போன் செய்தோம். இருந்த இடத்தைச் சொன்னதால், "அங்கேயே இருங்க.. கடைப் பையனை வரச் சொல்றேன்.." என்றார் கடைக்காரர்.

கடைப் பையனை நாங்கள் கண்டுபிடித்து "அப்பாடா கண்டுபிடிச்சாச்சுடா ராசா.." என்று நிம்மதியோடு வண்டியில் ஏறி உட்கார.. எனது வண்டியின் பின் டயர் பஞ்சர்.

'சரி.. முருகன் காலைல இருந்தே நம்மகிட்ட பேசலையே.. வந்துட்டானா..' என்று நினைத்துவிட்டு நந்தாவை கடைப் பையனோடு அனுப்பிவிட்டு நான் வண்டியைத் தள்ளிக் கொண்டே சென்று டூவீலர் கடையைத் தேடினேன்.

ஒரு பத்து நிமிடம் வண்டியைத் தள்ளியவுடன் ஒரு கடை இருந்தது. அங்கேயோ கடைப் பையன்கள் "முடிஞ்சிருச்சுங்க.. நாளைக்குத்தான்.." என்றார்கள் ஒரே போடாக.. "நூறு ரூபா தர்றேன்பா.." என்றேன்.. அலட்சியமாக, "வேணாம் ஸார்.. நாங்க வீட்டுக்குப் போகணும்.." என்றார்கள். "ரொம்ப தூரம் போகணும்பா.." என்றேன்.. "வேற இடம் பாருங்க ஸார்.." என்று தீட்சண்யமாகச் சொல்லிவிட மீண்டும் தள்ளு வண்டிதான்..

இந்த முனையில் இருந்து அந்த முனைவரை வியர்வையில் குளித்தபடியே தள்ளிக் கொண்டு வந்தவன் நேரத்தைப் பார்த்தேன். மணி 10. இனி அவ்வளவுதான்.. ஆட்டோ புடிச்சு 500 ரூபாவுக்கு செலவுதான் என்று நினைத்து காளியப்பா மருத்துவமனை அருகே வந்து சோர்வாக நின்றேன்.

அங்கேயிருந்த பிளாட்பாரத்தில் தன் கையைத் தலகாணியாய் பாவித்து படுத்தபடியே என் பரிதவிப்பை பார்த்துக் கொண்டிருந்த ஒரு மனநோயாளி(என்று நினைக்கிறேன். காரணம், அவ்வளவு துணி மூட்டைகளை சுமந்து கொண்டிருந்தார்) வேகமாக எழுந்தவர் என் அருகில் வந்து, "இப்படியே திரும்பிப் போய்கிட்டே இரு. ஒரு போலீஸ் பூத் வரும். அது பக்கத்துல ஒரு கடை இருக்கு.. Twenty four hour-non stop workshop. இப்ப இருக்கும். சீக்கிரமா போ.." என்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் மீண்டும் அதே பிளாட்பாரத்தில் போய் படுத்துக் கொண்டு போர்வையால் தன்னை போர்த்திக் கொண்டு எதையோ சொல்லி பிதற்ற ஆரம்பித்தார்.

என்னுடைய உள்ளுணர்வு எனது 10 ஆண்டு கால அனுபவத்தால் 'அவன் சொன்ன இடத்திற்குப் போ' என்றது. 10 நிமிட தள்ளுதலுக்குப் பிறகு அங்கு சென்று பார்த்தால், நிஜமாகவே அங்கே ஒரு கடை இருந்தது. கடைக்காரர் என்னைத்தான் எதிர்பார்த்திருந்திருப்பாரோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் ரெடியாகவே இருந்தார். மெய்சிலிர்த்துப் போனேன் அந்த மனநோயாளியை நினைத்து...

முருகன் அவ்வப்போது என்னைச் சோதிப்பான். ஆனால் கைவிட மாட்டான். சோதனையைக் கொடுத்து உடன் தீர்வையும் அவனே சொல்லுவான். இது எனது வாழ்க்கையில் அன்றாடம் நான் சந்திக்கும் நிகழ்வு. முருகன் இன்னிக்கு இந்தக் 'கோலத்துக்கு' இறங்கிட்டானே என்று நினைத்து என் கண்ல தண்ணியே வந்திருச்சு.. முருகா..

பஞ்சர் ஒட்டிக் கொண்டிருக்க.. அதற்குள் நந்தா பேனரை வாங்கிக் கொண்டு ஒரு கிலோமீட்டர் நடந்து போயே போய்விட்டார். மறுபடியும் போனில் அழைத்து இடத்தைச் சொல்லி வரவழைத்தேன்.

கையில் பேனருடன் கூடவே அரங்கத்தில் இருப்பவர்கள் சாப்பிடுவதற்கென்று ஸ்நாக்ஸையும் சேர்த்தே வாங்கி வந்திருந்தார் நந்தா. பாசம் ரொம்ப ஜாஸ்தியாயிருச்சு..

பசி கொஞ்சமாக வயிற்றைக் கிள்ளியிருந்ததால் எதிர்க் கடையில் ஒரு பால் குடித்துக் கொண்டிருக்கும்போது நந்தாவின் போனில் மா.சி. "நாங்க வீட்டுக்குப் போறோம். நீங்க வந்து பேனரை வைச்சுட்டு கிளம்பிருங்க.." என்றார். நந்தா பார்சலை கையில் வைத்துக் கொண்டு பரிதாபமாகப் பார்த்தார்.

வேறொரு சமயம் என்றால் நானே சுட்டிருப்பேன். இப்போது அந்த பழி பாவம் எனக்கு வேண்டாம் என்பதால் "வீட்டுக்குக் கொண்டு போய் சாப்பிடுங்க.." என்றேன். இதைத்தான் மறுநாள் பட்டறை முடிந்த பிறகு நான், நந்தா, மா.சி. செல்லா, ஜே.கே. என்று சிலர் மட்டும் வெட்டினோம்..

மறுபடியும் நந்தாவை ஏற்றிக்கொண்டு பல்கலைக்கழகம் வந்தேன். அங்கே தம்பி ஜேகே மட்டுமே இருந்தார். கம்ப்யூட்டர்களை பொருத்திக் கொண்டிருந்தார். "இன்னும் கொஞ்ச நேரம் வேலையிருக்கு. முடிச்சிட்டு கிளம்பிருவேன். நீங்க போங்க.." என்றார் ஜேகே. அங்கே பேனரை வைத்துவிட்டு நந்தாவும், நானும் அவரவர் வண்டிகளில் வீட்டிற்குக் கிளம்பினோம்.

வீடு வந்து சேர்ந்தவுடன் முதல் வேலையாக மா.சி.க்கு போன் செய்து "நாளைக்கு காலைல 5.30 மணிக்கு மறக்காம எழுப்பி விட்ருங்க.." என்று கேட்டுக் கொண்டேன். "அதுக்குத்தான அவதாரம் எடுத்திருக்கேன் நான். செய்றேன்.." என்று பொறுப்பான பொறுப்பாளராகப் பதில் சொன்னார்.

இவரன்றோ பொறுப்பாளர்..?

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆகஸ்ட்-5-வலைப்பதிவு பட்டறை-எனது டைரி குறிப்பு-அறிமுகம்

17-08-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

வலைப்பதிவர் பட்டறை முடிந்து 10 நாட்களுக்கு மேலானாலும் வந்திருந்த பதிவர்களில் 30 பேருக்கும் குறையாமல் பட்டறை குறித்த தங்களது அனுபவங்களை எழுதியிருந்தாலும் அவரவர் அனுபவங்கள் அவரவருக்கு என்ற பார்வையில் "பட்டறையில் நான்" என்ற எனது டைரி குறிப்புகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

காலதாமதத்திற்கு காரணம் எனது 'நேரம்'தான்.. வேறொன்றுமில்லை. அலுவலகத்தில் ஆணி பிடுங்கும் வேலை அதிகமாகியது. ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருக்கும் மற்ற வேலைகளையும் முடித்துக் கொடுத்த தினமும் இரவு 11 மணியாகிவிட்டது. இடையில் எனது கணினி தனது ஆயுளை தற்காலிகமாக முடித்துக் கொண்டது. அதனைத் தட்டி எழுப்பி, தாஜா செய்து மீண்டும் பணியாற்ற வைப்பதற்குள் 7 நாட்கள் ஓடிவிட்டன.

பட்டறை நிகழ்வுகள் மறந்து போய்விடுமோ என்ற பயத்தில் எப்போதெல்லாம் எனக்கு நேரம் கிடைத்ததோ, அப்போதெல்லாம் பேப்பரில் எழுதி வைத்தபடியே இருந்தேன். பின்பு அதனை கொஞ்சம், கொஞ்சமாக எடிட்டிங் செய்துதான் இங்கே கொடுத்துள்ளேன்... பயப்பட வேண்டாம்; 5 பதிவுகள்தான்..

இது முழுக்க, முழுக்க உண்மைத்தமிழன் என்ற சரவணனாகிய என்னுடைய டைரி குறிப்புகள்தான். பின்னாளில் எனக்கு நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கை எனக்கிருப்பதால் நினைவில் இருந்தவைகளையெல்லாம் குறிப்பெடுத்து உள்ளேன்.

இதனை இப்படி என் கண்ணோட்டத்தில் எழுதியிருப்பதால்,

இந்தப் பதிவினால்,

தி.மு.க.வினருக்கு என்ன லாபம்?

அ.தி.மு.க.வினருக்கு என்ன நஷ்டம்..?

பா.ம.க.வுக்கு எவ்வளவு கஷ்டம்..?

தே.தி.மு.க.வினருக்கு எவ்வளவு பாராட்டு..?

பா.க.ச.வினருக்கு என்ன வாழ்த்து?

அ.மு.க.வினருக்கு என்ன கண்டனம்?

வ.வா.சங்கத்தினருக்கு என்ன எதிர்ப்பு?

ப.பா.சங்கத்தினருக்கு என்ன ஆதரவு?

பாட்டாளிகளுக்கு என்ன புண்ணியம்?

பரங்கிக்காய்க்கு என்ன பாவம்..?

தொழிலாளர்களுக்கு என்ன லாபம்?

தொண்டரடிப் பொடியாழ்வார்களுக்கு என்ன நஷ்டம்..?

தலித்களுக்கு என்ன உதவி..?

தகர டப்பாக்களுக்கு ஏன் உதவி இல்லை..?

பார்ப்பனீயத்திற்கு என்ன பெருமை..?

பக்கோடாக்களுக்கு என்ன சிறுமை..?

ம.க.இ.க. தொண்டர்களுக்கு என்ன செய்தி..?

பெரியாரியத் தொண்டர்களுக்கு என்ன கெடுதி..?

பாமரனுக்கு என்ன சொல்கிறீர்கள்..?

கோவை பாமரனுக்கு என்ன சொல்லவில்லை..?

கம்யூனிஸ்ட்களுக்கு என்ன பதில்..?

கம்னாட்டிகளுக்கு என்ன பதில்..?

- இப்படியெல்லாம் ஓவராக கற்பனை செய்து கொண்டு படிக்க வர வேண்டாம்.

இது முழுக்க, முழுக்க வலைப்பதிவர் பட்டறையில் எனது ரவுண்ட்-அப்தான்.

படிக்க நேரமிருப்பவர்கள், இதைப் படிப்பதற்காக காசு, பணம் செலவழிக்க தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தாராளமாகப் படிக்கலாம்.

நேரத்தை செலவழிக்க முடியாத நிலையில் இருப்பவர்கள், எப்போது முடியுமோ அப்போது வந்து படித்தால் போதும்.

எதையுமே டார்வினின் தத்துவப்படி சிந்திப்பவர்களாகவும், சிந்தாத்தத்தின்படி நடப்பவர்களுமாக இருந்தால் தயவு செய்து விலகி விடுங்கள்.

இது உங்களுக்கான இடமல்ல..

பாராட்டுக்கள்.. இதைப் படித்தவுடனேயே எஸ்கேப்பானவர்களுக்கு..

படித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி படிக்க முனைபவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

நன்றி..

வணக்கம்.

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

வலைப்பதிவுகளில் வைரஸ்கள்-அபாயம்-எச்சரிக்கை

14-08-2007

என் இனிய வலைத் தமிழ் மக்களே..!

அதிசயத்திலும், அதிசயமாக 'கதை' எழுதப் போன நம்ம 'மவராசன்' திடீரென்று ஒரு பாட்டில் பினாயிலை ஒரே மூச்சில் குடித்தவரைப் போல் இன்று பதிவுகளைப் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார். என்னவென்று தெரியவில்லை. தலைப்புகளைப் பார்த்தால் படித்தவுடனேயே ராயல் பாருக்கு ஓடிப் போய் ரெண்டு ஸ்மால் கட்டிங் சாப்பிட வேண்டும் போல் தெரிகிறது..

ஆனா.. என் கம்ப்யூட்டர்ல அந்த 'மவராசனோட' http://blog.balabharathi.net இந்த வீடு ஓப்பனே ஆக மாட்டேங்குது.. காரணம் கேட்டா, ஏதோ web filter-ஆமே.. அதை போட்டு என்னையும், என் கம்ப்யூட்டரையும் சில 'வைரஸ்கள்'கிட்ட இருந்து காப்பாத்திருக்கிங்களாம்..

அது 'மவராசன்யா.. வைரஸ் இல்லே'ன்னு 'தல, தல'யா அடிச்சுச் சொல்லிப் பார்த்தேன்.. ம்ஹ¤ம்.. கேக்க மாட்டேங்குறாங்க.. 'மவராசன் மாதிரிதான் தெரியும்.. ஆனா உள்ள விட்டீங்கன்னு வைச்சுக்குங்க.. அப்புறம் உங்க மூளையைக் கழட்டிப் போடுற வைரஸாக கூட மாறலாம்.. எல்லாம் நல்லதுக்கேன்னு நினைச்சுக்குங்க'ன்னு சொல்லிட்டாங்க..

கூடவே நம்ம மா.சிவக்குமார் www.tamilbloggers.org-ன்ற இந்த வீட்ல எதையோ எழுதி விட்டிருக்காரு. ஒருவேளை நம்மளை பத்தி ஏதாவது சொல்லியிருப்பாரோ.. பார்க்கலாம்னு போனா.. அதுவும் ஓப்பன் ஆகலே.. கேட்டா.. அதுவும் தடை செய்யப்பட்ட கொடுமையான வைரஸ்களில் ஒன்றாக இருக்கலாம் என்று எங்களது அலுவலக வைரஸ் எதிர்ப்புக் குழுவினர் கருதுகின்றனர்.

இப்ப நான் என்ன செய்யறது? இந்த 'ரெண்டு வைரஸ்களும்' என்ன எழுதிருக்காங்கன்னு படிச்சுப்போட்டு, யாராச்சும் நம்ம 'வீட்டுல' அதையே ஒரு காப்பி பதிவு போட்டு அனுப்பினீங்கன்னா நல்லாயிருக்கும்..

இல்ல வேண்டாம்.. நீயாச்சும் நல்லபடியா, சூதானமா, புத்திசாலித்தனமா இருந்துக்க ராசான்னு சொன்னீங்கன்னா..

சரீங்க சாமிகளா.. அப்படியே இருந்துக்குறேன்..

அந்த ரெண்டு 'வைரஸ்கள்'கிட்டேயும் இதை மட்டும் சொல்லிருங்க..

"உண்மைத்தமிழனுக்கு Anti Virus கிடைச்ச பின்னாடி இந்த வைரஸ்களை உள்ள விட்டு, படிச்சுப் பார்த்துட்டு அப்புறமா பதில் போடுவாருன்னு.."

படிச்சதுக்கு நன்றிங்கோ..

துணை ஜனாதிபதி தேர்தல்-ஒரு கண்ணோட்டம்


11-08-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சப்தமில்லாமல், ஆரவாரமில்லாமல் துணை ஜனாதிபதி பதவிக்கு ஓட்டெடுப்பு நடத்தி ஆளையும் தேர்ந்தெடுத்துவிட்டார்கள்.


அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் என்ற பூதாகாரப் பிரச்சினையின் பின்னால், இந்நிகழ்ச்சியின் ஆரவாரம் சற்று மங்கிப் போனது என்னவோ நிஜம்தான்..


இந்த துணை ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற இரு அவைகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் ஓட்டுப் போட்டனர். இரு அவைகளிலும் உள்ள மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 788.


சிறையில் இருந்த எம்.பி.க்களான ராஜேஷ் ரங்கன் என்கிற பப்புயாதவ், அப்சல் அன்சாரி, முகமது சகாபுதீன், பாபுபாய் கதாரா ஆகிய எம்.பி.க்கள் உட்பட 762 பேர் ஓட்டுப் போட்டனர். இதில் 10 ஓட்டுக்கள் இந்திய அரசியல் பாரம்பரியத்தின்படி செல்லாததாகிவிட்டதால் மொத்த செல்லுபடியான ஓட்டுக்கள் 752.


இதில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரிக்கு 455 ஓட்டுக்களும், பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர் திருமதி நஜ்மா ஹெப்துல்லாவுக்கு 222 ஓட்டுக்களும், மூன்றாவது அணி வேட்பாளர் ரஷீத் மசூத்துக்கு 75 ஓட்டுக்களும் கிடைத்தன.

ஒரு வேட்பாளர் வெற்றி பெற 377 எம்.பி.க்களின் ஓட்டுக்களே போதுமானது.


பாராளுமன்றத்தில் தற்போதைய காங்கிரஸ் கூட்டணியில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், அன்சாரிக்கு 424 ஓட்டுக்கள்தான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு 31 ஓட்டுக்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளது.

இது பாரதீய ஜனதா கூட்டணி மற்றும் மூன்றாவது அணி எம்.பி.க்கள் அன்சாரிக்கு ஆதரவாக கட்சி மாறி ஓட்டுப் போட்டதால் கிடைத்ததாகத் தெரிய வந்துள்ளது.

10 செல்லாத ஓட்டுக்களில் 6 ஓட்டுக்கள் நஜ்மா ஹெப்துல்லாவுக்கு ஆதரவாக விழுந்தவை. 3 ஓட்டு அன்சாரிக்கு ஆதரவாக விழுந்தவை. 1 ஓட்டு ரஷீத் மசூத்திற்கு ஆதரவானது.

இது குறித்து பேசிய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி, "நாங்கள் 463 ஓட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 5 பேர் ஓட்டு போட வரவில்லை. 3 ஓட்டுக்கள் செல்லாததாகிவிட்டது. பாரதீய ஜனதாவிடம் இருந்துதான் எங்களுக்கு கூடுதல் ஓட்டு வந்தது. இதற்கான காரணத்தை வெளியே கூற முடியாது. அது எங்களது தேர்தல் வியூகத்தின் ரகசியமாகும்.." என்று சொல்லியிருக்கிறார்.

பாரதீய ஜனதா எம்.பி. நாராயணசாமி கூறுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்ற ஓட்டுக்களைவிட இந்த முறை 10 ஓட்டு குறைவாகப் பெற்றுள்ளது(!). ஜனாதிபதி தேர்தலின்போது சிவசேனையும், திரிணாமூல் காங்கிரஸ¤ம் அவர்கள் பக்கம் இல்லை. இப்போது அவர்கள் ஆதரித்த பிறகும்கூட குறைந்த ஓட்டுக்களே வாங்கியுள்ளனர்.." என்று குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதவிதமாக சொல்லியுள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தலில் 3 அணியினருமே முஸ்லீம் வேட்பாளர்களையே நிறுத்தியிருந்தனர். முதலில் காங்கிரஸ் கூட்டணியும், மூன்றாவது அணியும் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியதால், வேறு வழியில்லாமல் பாரதீய ஜனதாவும் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது.

இது அந்தக் கட்சியில் உள்ள தீவிர இந்துத்துவா ஆதரவாளர்களுக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியதாம். இதன் காரணமாகவே வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்து யோகி தித்தியநாத் உட்பட 2 எம்.பி.க்கள் ஓட்டுப் போட வராமல் புறக்கணிப்பும் நடத்தியிருக்கிறார்கள்.

ஓட்டுப் போடாதவர்கள் பட்டியலில் திரைப்பட நடிகர்கள் கோவிந்தா, தர்மேந்திரா, தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி முன்னாள் மத்திய அமைச்சர் சிபுசோரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அஜீத்பாஷா கியோர் இடம் பெறுகிறார்கள்.

அரசு சலுகையைப் பயன்படுத்தி தலைநகருக்கு வந்து செல்லாத ஓட்டுக்களாகப் போடுவதற்குப் பதிலாக, வராமலேயே இருந்துவிட்டால் அந்தச் சலுகைக்குரிய பணமாவது மிச்சமாகுமே..

இதற்காகவே, ஓட்டுப் போட வராத எம்.பி.க்களுக்கு ஒரு 'ஓ' போடுவோம்..!

துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி - அறிமுகம்

11-08-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் திரு.ஹமீத் அன்சாரி, ஒரு பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குடும்பத்தில் உ.பி. மாநிலத்தில் உள்ள காசியாப்பூரில் 1937-ம் ண்டு ஏப்ரல் 1-ம் தேதி பிறந்தவர்.


உத்திரப்பிரதேசத்தில் பிறந்தாலும், வளர்ந்தது எல்லாமே பிற மாநிலங்களில்தான். சிம்லாவில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார்.

1961-ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி (IFS) தேர்வில் வெற்றி பெற்று வெளியுறவுத் துறையில் சேர்ந்தார். ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியாக பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.

ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு குடியரசு, ஈரான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றியுள்ளார்.

இவரது சிறந்த சேவைகளைப் பாராட்டி 1984-ம் ஆண்டில் 'பத்மஸ்ரீ' பட்டம் அவருக்குக் கிடைத்தது.

கடந்த 2000-வது ஆண்டு மே மாதம் முதல் 2002 மார்ச் மாதம் வரை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணியாற்றினார்.

சிறந்த ராஜதந்திரியும் கல்வியாளருமான ஹமீத் அன்சாரி ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஈரான், ஈராக் உள்ளிட்ட மேற்காசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி என்பது பற்றியும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

2006-ம் ஆண்டில் காஷ்மீர் தொடர்பான 2-வது வட்டமேஜை மாநாடு டெல்லியில் நடந்தது. இதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் இவர்தான். 2007-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த காஷ்மீர் தொடர்பான 3-வது வட்ட மேஜை மாநாட்டின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களும், இவரது லோசனைப்படிதான் இயற்றப்பட்டனவாம்.

மேலும், காஷ்மீர் இந்துக்களை மீண்டும் அங்கு குடியமர்த்தவும் பெருமுயற்சி செய்து வந்த ஹமீத் அன்சாரி, கடந்தாண்டு மார்ச் 6-ம் தேதி முதல் தற்போது வரையிலும் தேசிய சிறுபான்மைக் கமிஷன் தலைவராக பணியாற்றி வந்தவர்.

தற்போது மாநிலங்களவைத் தலைவராகவும், இந்தியத் துணை ஜனாதிபதியாகவும் பதவியேற்க உள்ளார்.

வாழ்த்துவோம்..

ஜெயா டிவியில் தமிழ் வலைப்பதிவர் பட்டறை ஒளிபரப்பு

11-08-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கோலாகலமாக நடந்து முடிந்த ஆகஸ்ட்-5 தமிழ் வலைப்பதிவர் பட்டறையின் நிகழ்ச்சித் தொகுப்பு, ஜெயா டிவியில் வரும் திங்கள்கிழமை(13-08-2007) காலை 8.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள்ளாக 'விழாக்கோலம்' என்கிற செய்தியின் கீழ் ஒளிபரப்பாக உள்ளது. காணத் தவறாதீர்கள்.


பின்குறிப்பு : தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ரிலே செய்யப்படும் நேரம் நாளுக்கு நாள் வித்தியாசப்படும் என்பதால் மிகச் சரியான நேரத்தைச் சொல்ல முடியாமைக்கு வருந்துவதாக நிகழ்ச்சி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
புகைப்படம் உதவி : திரு.அண்ணாகண்ணன்

அல்லா காப்பாற்றாமல் இருப்பாராக..



10-08-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எப்போதும் போலத்தான் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து டிவியை ஆன் செய்தேன். எப்போதும் விரும்பிப் பார்ப்பது நியூஸ் சேனல்கள்தான் என்பதால் நியூஸ் சேனலுக்கு வந்தேன்.

ஒரு மேடையில் கலவரம் ஒன்று நடப்பது போல காட்சிகள் தெரிந்தன. சரி ஏதோ ஒரு அரசியல் மேடையாக இருக்குமோ என்று நினைத்தால் அது ஒரு இலக்கிய மேடை. தாக்கப்படுபவர் வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் என்று செய்தியில் சொல்லப்பட்டது. இது முதல் அதிர்ச்சி.

இரண்டாவது, பூந்தொட்டிகளை எடுத்து வீசியது. சேர்களை தூக்கி எறிந்தது, 'வெளில வாடி' என்று தெலுங்கில் மாடலாடி ரவுடித்தனம் செய்தவர்கள் ஆந்திரா சட்டப் பேரவையின் எம்.எல்.ஏ.க்கள் என்பது இரண்டாவது அதிர்ச்சி.

அரசியல்வாதிகளின் தூண்டுதலால் உட்கார்ந்த இடத்திலிருந்தே அடிக்க ள் அனுப்புவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சட்டமன்றத்தில் தாவித் தாவி அடிப்பதும், மைக்கை உடைப்பதுமாக தங்களது பராக்கிரமத்தைக் காட்டிய சட்டமன்ற உறுப்பினர்களையும் பார்த்திருக்கிறேன்.

ஆனால் இங்கே அதுவும் ஹைதராபாத்தின் பிரஸ் கிளப்பில், பத்திரிகையாளர்களுக்குச் சொந்தமான ஒரு அரங்கினுள் நுழைந்து ஒரு பெண்ணை, அதுவும் உலகறிந்த ஒரு எழுத்தாளரை கொலை செய்தாவது பரவாயில்லை என்ற நோக்கில் எம்.எல்.ஏ.க்களே செயல்பட்டது நமது ஜனநாயகம் எந்த அளவிற்கு தனி மனிதர்களுக்கு சுதந்திரம் அளித்துள்ளது என்பதை பறை சாற்றுகிறது.

தஸ்லிமா எழுதிய 'ஷோத்' நூலின் தெலுங்கு பதிப்பான 'செல்லு கு செல்லு' என்ற நூலின் வெளியீட்டு விழாவில்தான் இந்த ஜனநாயக அசிங்கங்கள் அரங்கேறியுள்ளது.

விழா முடியும் நேரத்தில் கூட்டரங்கில் அமர்ந்திருந்த மஜ்லிஸ் அதேஹதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரும் அவர்களது தரவாளர்களும் திடீரென தஸ்லிமாவைத் தாக்க ஓடி வந்துள்ளனர். அவர்கள் கையில் சிக்கிய சேர்கள், டேபிள்கள், பூங்கொத்துகளை எடுத்து தஸ்லிமா மீது எறிய..

எதிர்பார்க்காத இந்தத் திடீர் 'மரியாதையால்' தஸ்லிமா நிலைகுலைந்து போனது தொலைக்காட்சிப் பதிவுகளில் தெளிவாகவே தெரிந்தது. அவரை மறைத்து காப்பாற்ற நினைத்த தெலுங்கு எழுத்தாளர் என்.இன்னையா, தஸ்லிமாவை நோக்கி வந்த பல 'பரிசு'களை தன் உடம்பில் வாங்கிக் கொண்டது ஆந்திராவிற்கே அவமானம்.

கலவரக்காரர்களான முஸ்லீம் அமைப்பினர் தஸ்லிமாவை வெளியேற்றக் கோரி ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த அறை கண்ணாடிகளையும், பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து கூட்டத்தினரை விரட்டியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகளான மஜ்லிஸ் இதேஹதுல் முஸ்லீமின்(MIF) அமைப்பின் எம்.எல்.ஏ.க்கள் அ•ப்சர்கான், அகமது பாஷா மற்றும் மெளஸம்கான் உள்பட 7 பேரை பஞ்சாராஹில்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்படியென்ன தஸ்லிமா மீது முஸ்லீம் அமைப்பினருக்கு கோபம்?

அவர் பெண்களை அடிமைப்படுத்தும் முஸ்லீம் அடிப்படைவாதத்தை கேள்விக்குள்ளாக்கியவர். இவர் பிறந்து வளர்ந்த வங்காளதேசத்தில் முஸ்லீம் பெண்களின் நிலைமை சமூகத்தில் எந்த அளவுக்கு கீழான நிலையில் உள்ளது என்பதை தனது புத்தகத்தில் பதிவு செய்தவர்.

இந்த ஒரே காரணத்திற்காகவே தன் தாய் நாட்டில் இருந்து உயிருக்குப் பயந்து ஓட ஆரம்பித்து, இப்போது இந்தியாவில் கொல்கத்தாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இந்தியாவில் உள்ள முஸ்லீம் பழமைவாதிகளுக்கும் இந்த ஒரு விஷயத்துக்காகவே தஸ்லிமா மீது கோபம். அவருடைய 'லஜ்ஜா' புத்தகம் ஒரு முஸ்லீம் பெண் எந்த அளவிற்குத்தான் சமுதாயத்தில் உயர முடியும். அதற்கு அவள் எதிர்கொள்ளும் மத தடைகள் என்னென்ன என்பதைப் பற்றி எழுதியிருந்தார்.

அது நம்முடைய ஜமாத் தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. முக்காடு அணிந்து வீட்டில் உட்கார வேண்டிய ஒரு பெண் நடுத்தெருவிற்கு வந்து கொடி பிடிக்கிறாளே என்ற அடிப்படைவாதமற்ற மத வெறி. அதுவே இன்றைக்கு தஸ்லிமாவை தாக்குகின்ற அளவுக்கு சென்றிருக்கிறது.

இது பங்களாதேஷில் சரி.. ஒப்புக்குக்கூட சொல்லலாம். ஆனால் இந்தியாவில். ந்திராவில் ஏன் நடக்க வேண்டும்? அதிலும் முஸ்லீம் சார்புள்ள கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களே நேரடியாக வந்து தாக்குதல் கொடுத்துள்ளார்கள் எனில் இவர்கள் முஸ்லீம் அடிப்படைவாதத்தை முன் வைத்துத்தான் இந்திய அரசியல் சட்டத்திற்குட்பட்ட தேர்தலில் நின்று ஜெயித்தார்களா என்பது கேள்விக்குறியான ஒன்று.

"என் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதற்காக அவர்களுக்கு அடிபணிய மாட்டேன். எனது கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிடுவேன்.." என்று இந்தச் சம்பவத்திற்குப் பின்பு தஸ்லிமா கூறியுள்ளார்.

தஸ்லிமா தாக்கப்பட்டதை கண்டித்து அதில் ஈடுபட்ட முஸ்லீம் அமைப்புகளை எதிர்த்து பத்திரிகையாளர்கள்தான் ஹைதராபாத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்திற்குக் காரணமான முஸ்லீம் அடிப்படைவாதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பி.ஜே.பியும் கோரியுள்ளன.

ஆனால் இந்த அடிப்படைவாதிகளை வளர்த்து விடுகின்ற சந்தர்ப்பவாத அரசியலுக்குச் சொந்தக்காரர்களே மற்றைய அரசியல் கட்சிகள்தான். பெரும்பாலான முஸ்லீம் பெண்கள் ஜமாத் என்ன முடிவு சொல்கிறதோ, செய்கிறதோ அதற்கே தேர்தல் நேரத்தில் கட்டுப்படக்கூடியவர்கள் என்பதால் தேர்தல் ஓட்டு என்பதைக் கணக்கில் கொண்டு நிச்சயம் இந்தச் சம்பவமும் நூற்றில் ஒன்றாக போய்விடும் அபாயம் உண்டு.

முஸ்லீம் அடிப்படைவாதம் என்பது, 2-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து முடித்து கார் குண்டு வைக்கும் தொழிலுக்குப் போன ஒரு தீவிரவாதியிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் வரைக்கும் ஒரே மாதிரிதான் என்பது இதிலிருந்தே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.


மதமா, மனிதமா என்ற சொற்போரை முதலில் மதங்களுக்கிடையில்தான் நாம் நடத்த வேண்டும் போலிருக்கிறது.


குற்றவாளிகளை அல்லா காப்பாற்றாமல் இருப்பாராக..

பெண்மையே நீ வாழ்க!

10-08-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே!

திரைப்படங்கள் பெரும்பாலும் மக்களை மகிழ்விக்கத்தான் என்ற கூற்றை ஊடகங்கள் நுணுக்கமாக தங்களுடைய தொழில் தர்மத்திற்காக, ஊடகப் பார்வையாளர்கள் மனதில் வடித்துக் கட்டிய கஞ்சியாகக் கொட்டி வைத்திருக்கின்றன.

மக்களை மகிழ்வித்த காலம்போய் மக்களிடம் தூங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் காலமும் போய், நிஜத்தை அப்படியே உள்ளங்கையில் வைத்துக் காட்டுகிறோம்.. பார் என்று ஐயந்திரிபுற ஒருவனது வாழ்க்கையை அவனே பார்க்கும்படியாக வடிவமைத்து வருகின்ற திரைப்படங்கள்தான் அதிகமாகி வருகின்றன.

போராகட்டும், நோயாகட்டும், வேதனையாகட்டும், கஷ்டமாகட்டும், பெருங்கடல் கொண்ட ஆழிப் பேரலையாகட்டும்.. முதலில் இதில் தாக்குண்டு போய் செயல் இழந்து போவது பெண்கள்தான். முன்னேறிய நாடுகளாக இருந்தாலும் சரி.. முக்கி, முக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளாக இருந்தாலும் சரி.. ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் ஒரு பெண்ணின் கஷ்டப் பெருமூச்சு தன் கனலை பரப்பி எங்கெங்கும் வியாபித்திருக்கும். இதில் யாருக்கும், எந்த நாட்டுக்கும் விதிவிலக்கு அளிக்க முடியாது.

அப்படியரு துன்பத்தை அனுபவிக்கும் அபலைப் பெண் ஒருத்தியின் மனதை ரம்மியமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் UDAYAKANTHA WARNASURIYA. இவர் இயக்கிய 'SHOWER OF GOLD' என்கின்ற சிங்கள மொழித் திரைப்படத்தை சமீபத்தில் காண நேர்ந்தது.

நோய் தாக்கினால் மரணம் ஒரு ஆண்டோ, இரண்டாண்டுகளோ.. நொடியில் மரணம் என்றால் அனைவருக்கும் சந்தோஷம்தான்.. ஆனால் 50 ஆண்டுகளாக ஒரு நாட்டையே பிணியில் தள்ளி எட்ட நின்று கை கட்டி வேடிக்கை பார்க்கிறது விதி. இந்த விதியின் விளையாட்டில் உருட்டப்பட்ட சோழிகளாக சில சமயம் வானம் பார்த்தும், பல சமயங்கள் கவிழ்ந்தும் பரிதாபப்பட்டுப் போய் நிற்கிறார்கள் இரு தரப்பையும் சேர்ந்த பெண்கள்.

சூழ்நிலைதான் ஒரு மனிதனை குற்றவாளியாக்குகிறது. இதை உலகின் எந்தவொரு நாட்டின் சட்ட மாமேதையும் ஒத்துக் கொள்வான். அந்தச் சூழ்நிலைக்கு அவனைத் தள்ளுவது அவன் சார்ந்த சமூகம்தானே ஒழிய அவனல்ல.. அந்தச் சமூகத்தின் குற்றச் செயலுக்கு யாரும் பொறுப்பேற்க முன் வருவதில்லை என்பதுதான் துரதிருஷ்டவசமான செயல்.

அப்படிப்பட்ட சூழ்நிலை கைதியான ஒரு பெண்ணின் கதைதான் இந்தப் படம். அமெலி என்ற அந்த சிங்களப் பெண்ணுக்கு 4 வயதில் ஒரு மகன் உண்டு. கணவன் என்ற பெயரில் காதலன் உண்டு. ஆனால் இன்னமும் அவளை முறைப்படி திருமணம் செய்து கொள்ள மறுக்கிறான். காரணம், அவனுக்கு சட்ட ரீதியான மனைவி ஒருத்தி ஏற்கெனவே இருக்கிறாள்.

அமெலியின் காதலன் அடியாள் வேலையை செய்து கொண்டிருக்கிறான். அவ்வப்போது தனது உடல் பசிக்கும், களைப்புக்கும் அமெலியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். அமெலிக்கு திருமண வயதில் ஒரு தங்கையும், வயதான தாயாரும் உண்டு.

எங்கோ ஓரிடத்தில் புலிகளின் தாக்குதலில் உயிரிழந்த சிங்கள ராணுவ வீரர்களின் உடல்கள் கொழும்புக்கு கொண்டு வரப்படுகின்றன. அந்த உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனை பொறுப்பாளரிடம் பிணங்கள் ஒப்படைக்கப்பட்டு, தூக்கி வந்த ராணுவ அதிகாரிகளின் தலை மறைந்தவுடன் ஒரு புரோக்கரின் தலை தென்படுகிறது. மருத்துவமனையின் மார்ச்சுவரி அறையின் பொறுப்பாளரும், புரோக்கரும் ஏற்கெனவே ஒரு 'தொழில்' காரணமாக நெருக்கமாகத்தான் இருக்கிறார்கள்.

போரில் இறந்து, அடையாளம் காணாத ராணுவ வீரர்களின் உடல்கள் மருத்துவமனையில் சில காலம் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். அப்படி உரிமை கோராத வீரர்களின் உடலுக்கு உடனடியாக ஒரு சொந்தத்தை உருவாக்கி, அவர்களின் மூலம் வீர சொர்க்கம் அடைந்ததற்காக அரசு நிதியுதவியாக கொடுக்கும் பணத்தை வாங்கி அதில் ஒரு பங்கை தான் எடுத்துக் கொண்டு இன்னொரு பங்கை அரசுத் தரப்பு உயரதிகாரிகளுக்கு கொடுத்துவிட்டு இரண்டு பங்கை போனால் போகிறதென்று திடீர் சொந்தக்காரர்களுக்குப் பிரித்துக் கொடுத்து 'தேச சேவை' செய்வதுதான் அந்த புரோக்கரின் வேலை.

இந்தப் பக்கம் அமெலி தன்னைத் திருமணம் செய்து கொள் என்று தனது காதலனை நச்சரிக்கிறாள். அவனோ முடியாது என்று மறுக்க.. வீட்டிற்கு மூத்தவள்; கல்யாணம் ஆகாமலேயே பிள்ளை வேறு இருக்கிறான். இங்கே இருந்தால் அவமானமும், பரிகாசமும் தொடரும். வெளிநாட்டுக்காவது சென்று பிழைக்கலாம் என்ற எண்ணத்தில் சைப்ரஸ் நாட்டுக்குச் செல்ல ஆயத்தமாகிறாள் அமெலி. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அந்த புரோக்கரின் கண்ணில் படுகிறாள் அமெலி.

சைப்ரஸ் நாட்டுக்கு கூலி வேலைக்கு ஆளனுப்பும் நிறுவனம் 80,000 ரூபாய் பணம் கேட்க, அந்தப் பணத்துக்கு தான் என்ன செய்வது என்ற குழப்பத்தில் அமெலி இருக்கும்போது, புரோக்கர் அவளிடத்தில் நெருங்கி விடுகிறான்.

சாதாரணமாக உதவுவதைப் போல் ஆரம்பித்து வலையை விரிக்கிறான் புரோக்கர். "ஒரே ஒரு முறை செய்யும் வேலைதான்.. நீ தேடிக் கொண்டிருக்கும் பணம் கையில் கிடைக்கும். பணம் கைக்கு வந்த அடுத்த நாளே நீ வெளிநாட்டுக்கு ஓடிவிடலாம்.. உன்னை யார் கேட்கப் போறா..? தேடப் போறா..?" என்று புறா கூண்டை விரித்து வைக்கிறான் புரோக்கர். அமெலியின் அரை பாதி மனசு, "இப்ப நான் என்ன செய்யணும்?" என்று கேட்கிறது.. "ஒண்ணும் வேணாம்.. ஒரு அனாதை பொணத்துக்கு நீ மனைவியா நடிக்கணும்.. அவ்ளோதான்.. சிம்பிள்.. கை மேல காசு.." என்கிறான் புரோக்கர்.

இரவெல்லாம் யோசிக்கிறாள் அமெலி. தான் இறுக்கி அணைத்திருக்கும் தன் மகனின் எதிர்கால வாழ்க்கைக்காவது தான் உழைத்தாக வேண்டுமே என்று எண்ணுகிறாள். உடன்படுகிறாள் விதியின் விளையாட்டுக்கு..

போட்டோ ஸ்டூடியோவில் ஒரு வாலிபனின் அருகில் மணமகள் உடையில் அமர்ந்து போஸ் கொடுக்கிறாள் அமெலி. படம் எடுத்தவுடன் உயிரோடு போஸ் கொடுத்தவனின் தலை, கம்ப்யூட்டரின் உதவியால் வெட்டப்பட்டு, மார்ச்சுவரியில் பிணமாக இருக்கும் ஒரு ராணுவ வீரனின் தலை கனகச்சிதமாகப் பொருத்தப்பட, புரோக்கர் புல்லரித்துப் போகிறான். கூடவே, இருவருக்கும் திருமணம் நடந்ததாக ஒரு பொய் சர்டிபிகேட்டும் பெறப்படுகிறது.

மிக, மிக கண்டிப்பான தோற்றமுள்ள ஒரு கர்னலின் முன்னால் சென்று நிறுத்தப்படுகிறாள் அமெலி. அவர் தீவிரமாக விசாரித்துவிட்டுத்தான் பணம் தருவேன் என்கிறார். புரோக்கரின் ஆலோசனைப்படியே அங்கேயே மயக்கம் போட்டு விழுந்து, கண்ணீர் விட்டு கதறி அழுது தீர்க்கிறாள் அமெலி. இந்த நடிப்பை அப்படியே நம்பி விடுகிறார்கள் கர்னலும், அவருடைய சக அலுவலரான ஒரு மேஜரும். இறந்துபோன சமந்தா என்ற அந்த வீரனின் பெற்றோருடன் வந்தால், பணத்தை உடனே தருவதாகச் சொல்கிறார் கர்னல்.

தாமதமே இல்லாமல் புரோக்கர் அமெலியையும் அவளது மகனையும் அழைத்துக் கொண்டு கொழும்புவில் இருந்து ரயிலில் பயணமாகிறான். தொலைதூர கிராமத்தில் இருக்கும் சமந்தாவின் வீட்டிற்குச் சென்று தன்னுடைய தங்கையான இந்த அமெலியை உங்கள் பையன் காந்தர்வ திருமணம் செய்து கொண்டான். அதன் விளைவாகத்தான் இந்தப் பையன் பிறந்தான்.. என்று அறிமுகம் செய்து வைக்கிறான் புரோக்கர்.

நம்ப முடியவில்லை சமந்தாவின் பெற்றோரால். ஆனால் நாகரிகமாக அவர்களை நடத்துகிறார்கள். இவர்களும் விட்டுப் பிடிக்க வேண்டும் என்பதால் கொட்டும் மழையில் அந்த இரவிலேயே கொழும்பு திரும்புவதாகச் சொல்லிக் கிளம்ப.. அது பாதுகாப்பில்லை என்று சொல்லி பையனையும், அவளையும் இரவில் அங்கேயே தங்கிவிட்டு காலையில் போகச் சொல்கிறார் சமந்தாவின் அப்பா. அப்படியே செய்கிறார்கள் திடீர் உடன்பிறப்புக்களான புரோக்கரும், அமெலியும்.

அங்கே அமெலியின் காதலன் அவளைத் தேடி வீட்டிற்கு வருகிறான். அவள் இல்லை என்றதும் எங்கே என்று தேடிவிட்டுச் செல்கிறான். அமெலியின் தங்கையைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்க அந்நேரத்தில் குடித்துவிட்டு வந்து குடிபோதையில் கலாட்டா செய்ய மாப்பிள்ளை குடும்பத்துடன் எஸ்கேப்பாகிறான். கோபமான அமெலி அவனைத் திட்ட அவன் இன்னும் கோபமாகி, அவளுடைய பாஸ்போர்ட் புத்தகத்தை எடுத்துக் கிழித்துப் போடுகிறான்.

மறுபடியும் அமெலி தன் பையனுடன் அந்தக் கிராமத்திற்கு படையெடுக்கிறாள். முதல் பையனை ஜே.வி.பி.யின் இயக்கத்திற்காக பலி கொடுத்து, அடுத்த பையனை விடுதலைப்புலிகளிடம் பலி கொடுத்து அவ்வளவு பெரிய வெறிச்சோடிக் கிடக்கும் வீட்டில் அடைபட்டு கிடந்த முதியவர்களுக்கு அந்தச் சிறுவனின் வருகை ஒரு நம்பிக்கையைத் தருகிறது.

அரசு கொடுக்கும் நிதியுதவியை அவளுடன் பகிர்ந்து கொள்ள ஒத்துக் கொள்கிறார்கள் சமந்தாவின் பெற்றோர். அமெலியின் கையில் செக் கிடைக்கிறது. புரோக்கரின் பங்கை அவனுக்குத் தருகிறாள் அமெலி. அவனோ, "உடனே கிளம்பு.. என்னுடன் வா. ஓடிப் போய் விடலாம்.." என்கிறான். இப்போதுதான் அமெலி ஒரு தீர்மானமாகச் சொல்கிறாள். "இனிமேல் நான் கொழும்புக்கு வர மாட்டேன். இங்கேயே இவர்களுடனேயே இவர்களுடைய மருமகளாகவே இருக்கப் போகிறேன்.." என்கிறாள். புரோக்கர் கத்துகிறான். ஆனால் மருமகள் பித்தம் அமெலிக்கு தலைக்கேறியிருப்பதால் அவள் உதாசீனப்படுத்துகிறாள். "எக்கேடும் கெட்டுப் போ.." என்று சொல்லிவிட்டு புரோக்கர் செல்கிறான்.

களையிழந்து போயிருந்த வீட்டை அமெலி அழகுபடுத்துகிறாள். இனி தனக்கு வாழ்க்கை இங்கேதான் என்று அவள் நினைத்திருக்க.. திடீரென்று ஒரு நாள் கர்னல் அழைத்து வரச் சொன்னதாகச் சொல்லி ராணுவ வீரர்கள் வந்து நிற்கிறார்கள்.

என்னவோ ஏதோ என்ற பய உணர்வுடன் அமெலி தன் மகன், மாமியாருடன் கர்னல் முன்னால் போய் நிற்க.. கர்னல் வாய் கொள்ளாச் சிரிப்புடன் "உங்கள் கணவன் கேப்டன் சமந்தா சாகவில்லை. உயிருடன்தான் இருக்கிறார்.." என்று ஒரு வெடிகுண்டைத் தூக்கி அமெலியின் தலையில் போடுகிறார்.

அதன்பின் அமெலி நடைப்பிணமாகவே அவருடன் மருத்துவமனைக்குச் செல்கிறாள். அங்கே தன் அம்மாவையே அடையாளம் காண முடியாத அளவுக்கு மனச்சிதைவுக்குள்ளாகி மனநோயாளியாக கிடக்கிறான் கேப்டன் சமந்தா. பெண் புலிகளின் கையில் சிக்கி அவர்கள் செய்த சித்ரவதையால் இப்படி ஆகிவிட்டதாகவும், மருத்துவச் சிகிச்சையை முறைப்படி செய்தால் சமந்தாவை குணப்படுத்த முடியும் என்றும் சொல்கிறார் கர்னல்.

தாய்மை உணர்வு மேலோங்க சமந்தாவின் அருகில் சென்று அவனது தலையைக் கோதி, கண்ணீர் விட்டு தன் அன்பைத் தெரிவிக்கிறாள் அமெலி. மருத்துவரும், ராணுவ உயர் அதிகாரிகளும் அவளை அங்கேயே உடன் இருந்து கவனித்துக் கொள்ளும்படி சொல்ல மறுக்க முடியாமல் தவிக்கிறாள் அமெலி.

அன்றிலிருந்து தினமும் அவளுடைய டூட்டி மருத்துவமனையில். வீட்டிலிருந்தே உணவு எடுத்து வந்து தனது கணவனாக இருக்கும் சமந்தாவுக்கு ஊட்டிவிடுகிறாள். அங்கே இருக்கும் போரில் காயமடைந்த மற்ற ராணுவ வீரர்களைப் பற்றி மேஜர் பட்டியலிட்டுச் சொல்லும்போது அமெலிக்கு தன் மீதே ஒரு வெறுப்பு ஏற்படுகிறது.

"இவர்கள் அனைவரும் தங்கள் நாட்டுக்காக போரிடச் சென்று இப்போது தனது குடும்பத்திற்கே பாரமாக இருக்கிறார்கள். உண்மையான தியாகி இவர்கள்தான்" என்கிறார் மேஜர். அதுவரையிலும் தான் உழைத்துத்தான் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருவதால், தன்னைவிட பெரிய தியாகி யாருமில்லை என்ற தோரணையிலேயே உலா வந்த அமெலிக்கு, இது மிகப் பெரிய தோல்வியைத் தருகிறது.

அந்தத் தோல்வியை அவள் ஏற்றுக் கொள்ளும் முன் இவள் மருத்துவமனைக்கு வந்து செல்வது அவளுடைய காதலனின் கூட்டாளி மூலம் காதலனுக்குத் தெரிகிறது. அவன் வீட்டுக்கு வந்து அவளை அடித்து, உதைத்துவிட்டுச் செல்கிறான். அந்தக் கணம்.. அந்தக் கணம்தான்.. அவளை மருத்துவமனைக்கு திரும்பவும் வேகமாக ஓடச் செய்கிறது. இனி தான் மனைவியாக நடிப்பதில்லை. நிஜ மனைவியாகவே ஆக விரும்புகிறேன் என்று உறுதி எடுக்கிறாள்.

சமந்தா ஓரளவுக்கு குணமடைந்ததும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். தன் மகனுடன் அந்தக் கிராமத்துக்கே சென்றுவிடுகிறாள் அமெலி. சமந்தாவைக் குளிப்பாட்டுவதில் இருந்து அவனுக்கு சோறு ஊட்டி, பணிவிடை செய்வதுவரையிலும் முகம் சுழிக்காமல் செய்யத் துவங்குகிறாள் அமெலி.

அந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரையில் அமெலி நிஜமாகவே தங்களது மருமகள்தான் என்று நம்புகிறார்கள். சமந்தாவோ அவளது அனுசரணையால் அவளது பேச்சுக்கே கட்டுப்படுகிறான். தனக்கு தாயாகவோ, தெய்வமாகவோ இவள்தான் இருக்கிறாள் என்பதை உணர்ந்து, பேச முடியாத நிலையிலும் அவளை விட்டுப் பிரிய முடியாத நிலைக்கு ஆளாகிறான் சமந்தா.

ஏற்கெனவே மனம் சார்ந்து தன் கணவன் என்று தான் பொய் சொன்ன சமந்தாவுடன் நெருங்கிப் போன அமெலி, மெல்ல மெல்ல அவனுடைய படுக்கையிலேயே படுத்துறங்கும் நிலைமைக்கு வருகிறாள். இதைப் பார்க்கும் மாமியார் மகன் பழைய நிலைமைக்கு வந்துவிட்டான் என்ற ஒரு சிறிய சந்தோஷத்தை அடையும்போது..

அங்கே கொழும்புவில் அமெலியின் காதலன், மேஜரின் முன்னால் உட்கார்ந்து அமெலி கேப்டன் சமந்தாவின் மனைவி அல்ல. தன்னுடைய மனைவி என்கிறான். மேஜர் அதிர்ந்து போய் கர்னலிடம் சொல்ல.. கர்னலின் உத்தரவில் ஒரு ராணுவ டீம் அமெலியை அழைத்துப் போக கிராமத்துக்கு வருகிறது.

வீட்டில் அனைவரும் இருக்கும் சூழ்நிலையில் ராணுவ வீரர்கள் அமெலியிடம் "உங்களுடைய கணவர் என்று சொல்லி ஒருவர் கர்னல் முன்னிலையில் உள்ளார். அதனால் நீங்கள் அங்கு அழைக்கப்பட்டுள்ளீர்கள்.." என்கிறான். கட்டையின் துணையுடன் ஊன்றி நடக்கும் அளவுக்கு தயாராகிவிட்ட சமந்தா, தன்னுடைய துணையான அமெலிக்கு என்னவோ என்று நினைத்து அவளை அனுப்ப முடியாது என்று மன நோயாளியாகவே கத்துகிறான். அவனுடைய பரிதாப நிலையைக் கண்டு பரிதாபப்படும் ராணுவ அதிகாரி செய்வதறியாமல் திரும்பிப் போகிறான்.

கர்னலிடமும், மேஜரிடமும் நடந்ததைச் சொல்லி.. "இதில் ஏதோ விஷயம் உள்ளது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. ஆனால் சமந்தா தன் மனைவி என்கிறானே.. விட மறுக்கிறானே.." என்று சொல்ல.. கர்னல் அதுதான் நிஜமோ என்று நினைத்து உணர்ச்சிவசப்பட்டு வெளியே காத்திருக்கும் காதலனை அழைக்கும்படி சொல்கிறார். அதற்குள் காதலன் கிராமத்திற்கு எஸ்கேப்பாகிறான்.

மாமியாரும், மாமனாரும் வெளியே சென்றிருக்க.. காதலன் அமெலியைத் தேடி கிராமத்து வீட்டிற்கு வருகிறான். அவளைத் தன்னுடன் வரும்படி கட்டாயப்படுத்துகிறான். அமெலி அவனுடன் வர முடியாது என்கிறாள். அவள் தலைமுடியைப் பிடித்தபடியே வெளியே காருக்கு இழுத்து வருகிறான் காதலன். சமந்தா தட்டுத் தடுமாறி நடந்து வந்தவன் தான் ஊன்றி நடக்கும் கட்டையால் அவனது பின்னந்தலையில் அடித்துவிடுகிறான்.

ரத்தம் சொட்டுச் சொட்டாக வடியத் துவங்க, தடுமாறி விழும் காதலன் மிகப் பிரயாசைப்பட்டு எழுகிறான். தன் மகனைத் தூக்கித் தன் காரில் வைத்து கிளம்ப எத்தனிக்க.. மகன் உடன் வர மாட்டேன் என்று சொல்லித் தன் தாயை நோக்கி ஓடிவிட.. காதலன் அதற்கு மேல் அங்கு இருந்து பிரயோசனமில்லை என்பதால் காரை எடுத்துக் கொண்டு திரும்பிச் செல்கிறான்.. வழியில் மாமியாரும், மாமனாரும் யார் இவன் என்பது புரியாமல் பார்க்க..

தன் அமெலி இனி தனக்குத்தான் என்று சமந்தா சந்தோஷமாக அவளை அணைத்துக் கொள்ள.. அமெலியின் முகத்தில் அவளுடைய திருமணத்தை எதிர்பார்த்திருந்தபோது இருந்த சந்தோஷத்தைவிட பெரிய சந்தோஷம் தென்பட...

இதற்கு மூன்று மாதங்கள் கழித்து ஒரு என்கவுன்ட்டரில் அந்தக் காதலன் கொல்லப்பட்டான் என்ற தகவலோடு படம் நிறைவடைகிறது.

படம் முழுவதும் நிரம்பியிருக்கும் இயற்கையான காட்சியமைப்புகள் படத்தை நிரம்ப சுவாரசியமாக கொண்டு செல்கின்றன.

பெண் என்றாலும் அவளுடைய சோதனையை அவளேதான் இழுத்துக் கொள்கிறாள் என்பதை திருமணமாகமலேயே காதலனுடன் இணைந்து ஒரு பையனை பெற்றுக் கொள்வதைக் காட்டி, இன்னமும் அவனுடன் தாலி கட்டாமல் வாழ்ந்து வருவதை அந்தப் பெண் வேறு வழியில்லாமல் ஏற்று வருவதை நிஜத்துடன் ஒத்த கருத்தியல் அமைப்புடன் சொல்கிறார் இயக்குநர்.

கூடி முயங்கி முடித்த நேரத்தில் களைப்புடன் காதலன் படுக்கையில் அமர்ந்திருக்க, அமெலி தன் காலால் அவன் முதுகைத் தேய்த்தபடியே தன்னைத் திருமணம் செய்து கொள் என்று கேட்க அவன் அதை மறுக்க கோபத்துடன் அவனை காலால் உதைத்து தள்ளிவிடுகின்ற காட்சியில், எவ்வளவுதான் புத்திசாலியான பெண்களாக இருந்தாலும், உணர்வுப்பூர்வமாக மாறும்போது எப்படியெல்லாம் காட்சிப் பதுமைகளாக மாற வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

அதே போல் போலியான நபருடன் போட்டோ ஸ்டூடியோவில் திருமண புகைப்படம் எடுத்துக் கொண்டு வெள்ளை கவுனை கழட்ட முற்படும்போது, அந்த உடையின் மீது திருமணமாகாத பெண்களுக்கு இருக்கும் சின்னஞ்சிறிய கனவோடையில் கனவு கண்டு கொண்டே கண்ணாடி முன் நின்று அந்த உடையைத் தடவிக் கொடுக்கின்ற காட்சி ஒரு சிறிய கவிதை உணர்வை எனக்குத் தந்தது.

சமந்தாவுடன் உடல் சார்ந்து இணைந்த நிலையில் அவனைக் குளிப்பாட்டும் போதும், சோறு ஊட்டும்போதும், ஷேவிங் செய்துவிடும்போதும் அவன் தன்னையறியாமல் அவளை நெருக்கும்போது அமெலி காட்டும் போலித்தனமில்லாத வெட்கம் இதுவரையிலும் தன் காதலனான கயவனிடம்கூட காட்டியிருக்க மாட்டாள். அமெலியாக நடித்தவர் பரிபூரணமான, சுதந்திரமான ஒரு நடிப்பு வேட்கையுள்ள நடிகைபோல் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்திருப்பதைப் போல் எனக்குத் தோன்றுகிறது.

கதை என்னவோ நிஜமாகவே நடந்த கதை என்று சொல்லியிருந்தாலும், சிங்கள ராணுவ வீரர்களின் தேசபக்தியை வெளிச்சம் போட்டுக் காட்ட எடுக்கப்பட்ட படமா அல்லது அறியாப் பருவத்தில் செய்த தவறில் இருந்து விடுபட முடியாமல் திக்குத் தெரியாமல் தவிக்கும் அமெலி போன்ற பெண்களின் அபலை நிலைமையை வெளிப்படுத்த உருவானத் திரைப்படமா என்கிற சந்தேக வித்தியாசத்திற்கு கொஞ்சம் அதிகமாகவே இடம் கொடுத்திருப்பது போல் எனக்குத் தெரிகிறது.

பெண்ணிய மொழியில் அம்மா என்ற ஸ்தானமும், மனைவி என்ற பதவியும் ஒரே நேர்க்கோட்டில்தான் இருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லும்படமாக இது அமைந்துள்ளது.

வாய்ப்பு கிடைத்தால் காணத் தவறாதீர்கள்..