பேரன்களின் பிடியில் தமிழ்ச் சினிமா..!

16-03-2011
 
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 
தமிழ்ச் சினிமாவுலகத்தில் கோபாலபுரத்து பேரன்களின் ஆதிக்கம் பற்றி இன்றைய ஜூனியர் விகடனில் வந்திருக்கும் ஒரு சிறப்புக் கட்டுரை இது :
 
காலங்காலமாக தி.மு.க-வுக்கும், அதன் தலைவருக்கும் அனுதாபிகள் திரை உலகப் படைப்பாளிகள். ஆனால், இப்போது அவர்கள் உதடுகள் மூடிக் கிடக்கின்றன. புதிய படங்களுக்கு பூஜை போடுவது தொடங்கி, முடிப்பதுவரை,  'அவசரம் வேண்டாம்... தேர்தல் முடியட்டும்’ என்ற வார்த்தைகளைத்தான் தயாரிப்பாளர்கள் வாயில் இருந்து கேட்க முடிகிறது!

 கடந்த மூன்றரை வருடங்களாகத் திரையரங்கு​களைக் கைப்பற்றி வைத்திருந்த பெரிய குடும்பத்தின் சினிமாப் படைத் தளபதிகளும் போர் நிறுத்தம் போன்றதொரு அமைதியில் இருக்கிறார்கள். மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் தேர்வு மற்றும் தேர்தல் காலம் என்பதால்தான் இத்​தனை அமைதி!

புகழ் பெற்ற நிறுவனங்கள் படத் தயாரிப்பை நிறுத்திவிட்டன. புதியவர்கள் உள்ளே நுழைய பயப்படுகிறார்கள். கனவுத் தொழிற்​​சாலையில் அப்படி என்னதான் நடக்கிறது..?

கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும்... தியேட்டர்களுக்கு முழு வரி விலக்கு, படப்பிடிப்பு நடத்த கட்டணக் குறைப்பு, படப்பிடிப்புக்கு ஒரு முனை அனுமதி என்றெல்லாம் சலுகைகளை வாரி இறைத்தார். ஆனால், இந்த சலுகைகளை சினிமா உலகம் அனுபவிக்கத் தொடங்கும் முன்பே, ஆட்சியாளர்களின் ஆசை, தமிழ்த் திரையை நோக்கிப் பாய்ந்தது. முதலில் படங்​களை வாங்கி வெளியிட ஆரம்பித்தவர்கள், தடாலடியாக மொத்த சினிமா உலகத்தையும் வளைத்தனர்.


சன் பிக்சர்ஸ், உதயநிதி ஸ்டாலினின் 'ரெட்ஜெயன்ட்', தயாநிதி அழகிரியின் 'கிளவுட் நைன்' மற்றும் கலைஞர் டி.வி. போன்றவை சினிமா வியாபாரத்துக்குள் குதித்தன; படத் தயாரிப்பிலும் இறங்கின. ஆட்சி அதிகாரம், பண பலம் இருந்ததால் ஒட்டு மொத்தத் திரையுலகமும் இவர்கள் கட்டளைக்கும், கட்டுப்பாட்டுக்கும் விழுந்தன.

''சன் நிறுவனம் 1992-ம் ஆண்டு தொடங்கப்​பட்டது. பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக வளர்ந்தது. அடுத்ததாக சன் பிக்சர்ஸைத் தொடங்கியது. ஆனால், 'ரெட் ஜெயன்ட்', 'கிளவுட் நைன்', கலைஞர் டி.வி. ஆகிய மூன்றும், மூன்று ஆண்டுகளுக்குள் முளைத்தவை.

கோடிக்கணக்கில் பணம் போட்டு படங்களைத் தயாரிக்கவும், அல்லது தயாரித்த படங்களை கோடிகளைக் கொட்டி வாங்கவும் இவர்களுக்குப் பணம் எங்கே இருந்து வருகிறது..? அவை முறைப்படியானதுதானா..?

இந்தத் தொழிலில் முப்பது நாற்பது வருடங்களாக வலம் வரும் தயாரிப்பாளர்கள்கூட இரண்டு மூன்று தோல்விகளுக்குப் பிறகு அமைதியாகிவிடும்போது, இவர்​களால் மட்டும் அடுத்தடுத்து எப்படிப் படங்கள் எடுத்து வெளியிட முடிகிறது..?'' என்ற கேள்வி கோடம்பாக்கம் வட்டாரத்தில் சுழன்றடிக்கிறது.

''கூந்தல் உள்ளவள் அள்ளி முடிகிறாள் என்பது மாதிரி, பணம் வைத்திருப்பவர்கள் படம் எடுக்​கிறார்கள். அதை நாங்கள் தவறு சொல்லவில்லை. ஆனால், தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடுத்தவர்​களைப் படம் எடுக்கவிடாமலும், எடுத்த படத்தை ஓட விடாமலும், தங்கள் படத்தில்தான் முக்கிய ஹீரோக்​கள் நடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் எந்த வகை​யில் நியாயம்...?'' என்றும் இவர்கள் கேட்கிறார்கள்.

கடந்த வருடம் 150 நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகின. இதில் 10 படங்கள் மட்டுமே வசூல் ரீ​தியாகத் தயாரிப்பாளர்களை சந்தோஷப்​படுத்தின. கிட்டத்தட்ட 100 படங்கள் வந்ததும்... போனதும் தெரியவில்லை. சில படங்கள் நன்றாக இருந்தும், திரையரங்குகளில் மூன்று நாட்கள் தாண்டும் முன்பே எடுக்கப்பட்டன. அத்தனை படங்​களின் தயாரிப்பாளர்களும் முக்காடு போட்டுக் கொண்டார்கள்.

இது பற்றி வேதனையோடு பேசும் தயாரிப்பாளர் ஒருவர், ''முன்பெல்லாம் ஒரு படம் பூஜை போடப்பட்ட அன்றே வியாபாரம் ஆகிற நிலை இருந்தது. தயாரிப்பாளர் முதல் ஷெட்யூல் முடிப்பார். எடுத்தவற்றை ஸ்டில்களாக பிரின்ட் போட்டு ஆல்பமாகத் தயாரிப்பார். மீடியேட்டர்கள் அலுவலகத்துக்கு வந்து ஆல்பம் பார்ப்பார்கள். விநியோகஸ்தர்களை அழைத்து வருவார்கள். ஹீரோ வேல்யூ பொறுத்து, வியாபாரம் பேசி ஒரு தொகையை முன் பணமாகக் கொடுப்பார்கள். இப்படியே சில ஏரியாக்கள் வியாபாரமாகிவிடும்.
 
தியேட்டர்காரர்களிடம் இருந்து வாங்கியும், விநியோகஸ்​தர்கள் தங்களது பங்காகவும் கொடுக்கும் பணத்திலேயே, தயாரிப்பாளர் படத்தை முடித்துவிடுவார். வியாபார முடிவில் விநியோகஸ்தர்களிடம் பேசிய தொகைக்கும் படத்துக்கு ஆன செலவுக்கும் இடையே நிற்கும் தொகை 'டெபிசிட்’ எனவும் 'லாபம்’ எனவும் பார்க்கப்படும். இதுதான் காலம் காலமாக தமிழ் சினிமாவில் நிலவிய வியாபார முறை. எல்லாப் படங்களுக்கும் வியாபாரம் இருந்தது.

ஆனால், இதுவரை நிலவி வந்த வியாபாரக் கட்டமைப்புக்குள் வராமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, விநியோகஸ்தர்களைப் புறக்கணித்து நேரடியாக அரசியல் குடும்பங்கள் தமிழகத் திரையரங்குகளைப் பங்கு போட்டுக் கொண்டதில் தொடங்கியது பிரச்னை. சம்பாவும் அவர்களே... குறுவையும் அவர்களே என்றாக... மற்ற தயாரிப்பாளர்கள் ஊடுபயிர் ஆனார்கள்.

ஓர் ஊரில் நான்கு நல்ல தியேட்டர்கள் இருந்தால், அவற்றை ஆளுக்கு ஒருவர் தங்களது ஆளுமைக்குள் கொண்டுவந்தார்கள். '10-ம் தேதி எனது படம், 15 நாட்கள் கழித்து 25-ம் தேதி உனது படம்’ என தங்களுக்குள் செனட் அமைத்துக் கொண்டு படங்களை ரிலீஸ் செய்து தள்ளினார்கள். தடாலடியான விளம்பரங்களால், இவர்கள் ரிலீஸ் செய்யும் படங்களுக்கு ஓப்பனிங் எகிறிவிட... தியேட்டர்காரர்கள் காட்டில் மழையோ மழை!

விநியோகஸ்தர்கள் ஓரங்கட்டப்பட, பெரிய பட்ஜெட் படங்கள் பாதுகாப்பாக இவர்கள் கையில் வந்து விழ, சின்ன மற்றும் மீடியம் பட்ஜெட்டில் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் நிலைமை பரிதாபமானது. எடுத்த படத்தை தியேட்டர்களுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை!

இதில் உச்சபட்சக் கொடுமை என்னவென்றால், அரசியல் குடும்பங்களது படங்களை 15 நாட்களுக்குக் குறையாமல் ஓட்டும் தியேட்டர் அதிபர்கள் (ரசிகர்​களைப் பெரிய அளவில் கவராத 'தூங்கா நகரம்’ இன்னும் ஏராளமான தியேட்டர்களில் ஓடுகிறது!) மற்ற படங்களை ஓரிரு நாட்களில் தூக்கி எறிவதுதான்.

இவர்கள் தவிர்த்து வேறு யார் படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்களை புக் செய்யச் சென்றாலும், ''சார், 20-ம் தேதி அந்தப் படம் வருகிறது. உங்கள் படத்துக்கு ஒரு வாரம்தான்...'' என்று தயாரிப்பாளரின் 25 நாள் கனவை(?!) ஆரம்பத்திலேயே நசுக்கிவிடுவார்கள்.

தயாரிப்பாளர் தயங்கி நிற்கையில்... வரிசையாக அதிகார மையம் தயாரிக்கும் படங்களின் ரிலீஸ் தேதிகளை விளக்கி, 'ஆகஸ்ட் கடைசியில் நாங்கள் சொல்கிறபோது, உங்கள் படத்தை ரிலீஸ் செய்யலாம்’ என ஜனவரி மாதம் பேசுகிறார்கள். அதாவது எட்டு மாதங்கள் பொறுமையாக இரு என்பார்கள்.

இதுகூடப் பரவாயில்லை. கோடிகளைக் கொட்டிப் படமெடுத்த தயாரிப்பாளர், 'சரி, நீங்கள் சொல்லும் தேதியில் ரிலீஸ் செய்கிறேன்... ஏதாவது, அட்வான்ஸ் கொடுங்கள், வட்டி கட்ட வேண்டும்’ என்று தியேட்டர்​களிடம் கேட்டால். நமுட்டுச் சிரிப்பும் நக்கல் பார்வையுமே பதிலாகக் கிடைக்கும். ''படத்தை ரிலீஸ் செய்கிறோமே, அது போதாதா..?'' என்கிற பஞ்ச் டயலாக் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு மயக்கம் வராத குறைதான்.

தியேட்டர்காரர்களிடம் கமிட்மென்ட் இல்லாத நிலையில் படத்தை ரிலீஸ் செய்தால், வெள்ளிக்கிழமை வெளியாகும் படம் திங்கள் அன்றுகூட திரையில் இருப்பதில்லை. இராம.நாராயணனின் டப்பிங் படங்களையோ, ராஜ கன்னிகளின் குளியல் படங்​களையோ போட்டு அடுத்த வியாழக்கிழமைவரை காலம் தள்ளுகிறார்கள். வெள்ளியன்று ரெட் ஜெயன்ட்டோ, கிளவுட் நைனோ!

நல்ல படங்களை தியேட்டரில் போய்ப் பார்க்க விரும்பும் ரசிகர்கள், 'எது நல்ல படம்?’ என்பதற்கு அளவுகோலாக, ஊடக விமர்சனங்களையும், படம் பார்த்தவர்களின் கமென்ட்டுகளையும்தான் எடுத்துக் கொள்வார்கள். விமர்சனம் படித்துவிட்டு அல்லது படம் பார்த்தவர்கள் கூறுவதைக் கேட்டு, ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவதற்குக்கூட இப்போ​தெல்லாம் அவகாசம் கொடுக்காமல் படத்தை எடுத்து ​விடுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று’, வெளியான மூன்றாவது நாளே பல திரையரங்குகளில் காணாமல் போனது. பத்திரிகை விமர்சனங்கள் வெளியாகி படம் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் தியேட்டருக்குப் போனபோது, பல ஊர்களில் படம் இல்லை!
 
அதேபோல், 'களவாணி’ திரைப்படத்தை ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஓட விடாமல் விரட்டி விரட்டி அடித்தது.  'மதராசபட்டினம்’ மற்றும் 'தில்லாலங்கடி’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக, களவாணியை 15 நாட்களிலேயே திரையரங்குகளில் இருந்து களவாடினார்கள். 'பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துக்காக 'எந்திரன்’ ரிலீஸை ஒரு வாரம் தள்ளிவைத்தார்கள்.

வேறு படங்களை ஒப்பந்த ரீதியில் ரிலீஸ் செய்திருந்தால்கூட, அந்த ஒப்பந்தத்தை அலட்சியம் செய்துவிட்டு அதிகார மையத்தின் படங்களை ரிலீஸ் செய்தார்கள். இப்படியாக கழகத்தார் மட்டுமே வாசிக்கும் 'முரசொலி’போல ஆகிவிட்டது தமிழ்த் திரை!

கிட்டத்தட்ட 80 படங்கள் சென்ஸார் முடிந்து காத்திருக்கின்றன. நூற்றுக்கணக்கான படங்கள், சென்ஸாருக்குத் தயாராக இருக்கின்றன.
 
விலைவாசி உயர்வைப் பற்றி குறிப்பிடும்போதெல்லாம் முதல்வர் கருணாநிதி அண்டை மாநிலங்களை மேற்கோள் காட்டுவது உண்டு. இது பற்றி பேசும் தயாரிப்பாளர் ஒருவர், ''ஆந்திராவில் ஒரு படம் ஃபிளாப் என்றாலும் மூன்று வாரங்கள் ஓடும். கன்னடம் மற்றும் மலையாளப் பட உலகிலும் இதுதான் சூழ்நிலை. 100 நாட்கள் வெள்ளி விழா எல்லாம் இந்த மாநிலங்களில் சாத்தியம், சகஜம். ஆனால், தமிழ் சினிமாவின் தலை எழுத்துதான் தாறுமாறாகப் போய்விட்டது. படம் நன்றாக இல்லை என்றால்... ஒரு நாள், சுமார் என்றால்... மூன்று நாள், வெற்றிப் படம்  என்றால்... ஒரு வாரம். அவ்வளவுதான்.

ஏன், அண்டை மாநிலங்களில் ஆளும் கட்சிக்காரர்கள் படம் எடுக்கவில்லையா? அல்லது அவர்களது வாரிசுகள் பட வியாபாரத்தில் இல்லையா? இருக்கிறார்கள். அங்கெல்லாம் மனசாட்சியோடு, நேர்மையோடு சினிமா வியாபாரம் நடக்கிறது. இங்கு, 'தடி எடுத்தவன் தண்டல்காரன், வல்லவன் வகுத்ததே வாய்க்கால்’ என்கிற பழமொழியை நினைவூட்டுவதுபோல முதல்வர் குடும்பத்தினர் தமிழ் சினிமாவை மேலாதிக்கம் செய்கிறார்கள்...'' என்கிறார்.

இதோ தேர்தல் நெருங்கிவிட்டது. முதல்வருக்குக் கூடிக் கூடி விழா எடுத்து அதன் பலனை அனுபவித்​தவர்கள் ஒருபுறம் இருக்க... பணத்தைக் கொட்டிப் படம் எடுத்து, அதை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்களும், சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் தவிக்கும் படைப்பாளிகளும் இன்னொரு புறம். இவர்கள்தான், 'தேர்தல் முடியட்டும்...’ என்று நம்பிக்கையோடு காத்துக் கிடக்கிறார்கள்.
 
''தேர்தலுக்குப் பிறகும் இதே நிலைமை தொடருமானால், அண்டை மாநிலங்களுக்கு ஓடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்...?'' என்று சில தயாரிப்பாளர்கள் கேட்கிறார்கள். சொல்லுங்கள்!

ஐம்பது நாள் ஓட்டணும்?

ரெட் ஜெயன்ட் முதலில் தயாரித்த 'குருவி’ எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. அடுத்த படம் 'ஆதவன்.’ அதன் ரிசல்ட்டும் சரியாக இல்லை. ஒரு வாரத்தில் தியேட்டர்கள் காத்தாட... படத்தை எடுப்பதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்தார்கள். இந்தத் தகவல் கிடைத்​தவுடன், அதிகார மையத்தைச் சேர்ந்தவர் எடுத்தார் போனை... பிடித்தார் திரையரங்குகளை!

'தியேட்டர் நடத்தணும்ல...’ என்கிற ரீதியில் எகிற... வடிவேலு பாணியில் பல்டி அடித்தார்கள் திரையரங்க ஓனர்கள். இப்ப, '50 நாள்தானே ஓட்டணும்... பாருங்க...’ என்றபடி அதிகார மையத்தின் படங்களை பிரின்ட் தேயத் தேய ஓட்டுகிறார்கள்!

தீர்மானம் என்னாச்சு?

கடந்த ஜனவரியில் தயாரிப்பாளர்கள் சங்கம் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது. 'வாரத்துக்கு இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் செய்ய அனுமதி வழங்கப்படும். அதோடு, இனி எந்த சேனலும் ஒரு படத்தின் விளம்பரத்தை ஒரு நாளைக்கு ஐந்து தடவைக்கு மேல் போடக் கூடாது, திரையரங்கங்கள் அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தைக் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். பெரிய படங்கள் 100 பிரின்ட்டுகளுக்குள் திரையிடப்பட்டால் மட்டுமே வரி விலக்கு, மான்யம்...’ என்றெல்லாம் தீர்மானம் போட்டுப் பரபரப்பு ஏற்படுத்தினார்கள்.

விஜய் நடித்த 'காவலன்’ படத்தையும், கார்த்தி நடித்த 'சிறுத்தை’யும் முடக்கப் போடப்படுகிற திட்டம் என்பதை விவரமானவர்​கள் அறிந்து கொண்டார்​கள். அவர்கள் எதிர்பார்த்தது மாதிரியே, போதுமான விளம்பரம் இல்லை என்பதால், பெரிய விலை கொடுத்து காவலனை வாங்குவதற்கு விநியோகஸ்​தர்கள் தயங்க, நடிகர் விஜய் கிட்டத்தட்ட சொந்தமாக ரிலீஸ் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அதைப் போலவே, 'சிறுத்தை’யும் சொந்தமாக வெளியிடப்​பட்டது. ஆனால் இதே நேரத்தில்,  'இளைஞன்’ படம் தமிழ்நாட்டில் உள்ள நம்பர் ஒன் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

அதே நேரம், கவுன்சில் போட்ட தீர்மானத்தின்படி விளம்பரத்திலும் கட்டுப்பாடு வரவில்லை. பிரின்ட் போடுவதிலும், டிக்கெட் விலையிலும் கட்டுப்பாடு இல்லை.

தடாலடி விளம்பரம்

சேனல்களில் செய்யப்படும் விளம்பரம்தான் ஒரு படத்துக்கான ஓப்பனிங்கை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதிகார மையம் வாங்கியோ அல்லது தயாரித்தோ ரிலீஸ் செய்யும் படங்களுக்கான விளம்பரம், ரிலீஸுக்கு முந்தைய ஒரு வாரத்தில் இருந்து ரிலீஸாகி, குறைந்தபட்சம் ஆறு வாரங்கள்வரை செய்யப்படுகிறது.

டி.வி-யில் 10  நிமிடங்களுக்கு ஒரு முறை என 24 மணி நேரமும் கலங்கடிக்கும் விளம்பரங்களின் மொத்த மதிப்பு 30 கோடியைத் தாண்டுமாம். இந்த விலை கொடுத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் தனது படத்துக்கு விளம்பரம் செய்ய முடியாது!

நன்றி : ஜூனியர்விகடன்

இது கொஞ்சம் ஓரவஞ்சனையான கட்டுரைதான்..! நேரடி பேரன்களான உதநிதியையும், தயாநிதியையும் தாக்கிய அளவுக்கு, ஒண்ணுவிட்ட பேரன்களான மாறன் பிரதர்ஸை இக்கட்டுரையில் குற்றம் சொல்லவில்லை..! மறைமுகமாகவே சொல்லியிருக்கிறார்கள்..!

பேரன்களின் கைகளில் பெரிய படங்கள் சிக்குவதற்கு முதல் காரணமே அவர்களிடத்தில் படத்தைக் கொடுத்துவிட்டால் தியேட்டர்கள் கிடைப்பது மிக எளிது என்பதுதான்.. இரண்டாவது காரணம், பணம் மொத்தமாக ஒரே பேமெண்ட்டில் கிடைத்துவிடும் என்பது. மூன்றாவது இலவசமாக படங்களுக்கு அவர்களே தினத்துக்கு நூற்றியெட்டு விளம்பரங்களை கொடுத்துவிடுவார்கள் என்பதினாலும்தான்..!

இப்போது பேரன்களை தேடி வந்து படங்களை கொடுக்க முன் வரும் தயாரிப்பாளர்களை ஒரு காலத்தில் விநியோகஸ்தர்களும், மீடியேட்டர்களும், தியேட்டர்காரர்களும்தான் காப்பாற்றியிருப்பார்கள். காப்பாற்றியிருக்கிறார்கள். அவர்கள் 70, 80, 90 சதவிகிதம் என்று பணத்தினை கொடுத்துவிட்டு மீதியை படத்தின் ரிலீஸுக்கு பின்பு தருகிறோம் என்று சொல்லி பெட்டியை வாங்கிச் செல்வார்கள்.

படம் நன்றாக ஓடினால் சிலர் சொன்னது போலவே திருப்பித் தருவார்கள். பலர் வசூல் குறைவு என்று பொய் சொல்லி குறைத்துத் தருவார்கள். வசூல் அதிகம் என்பது தயாரிப்பாளருக்குத் தெரியும் என்றாலும் அவரால் பகைத்துக் கொள்ள முடியாத நிலை. ஏனெனில் சினிமாவில் யாருக்கு எங்கே சுழி உண்டு. பள்ளம் உண்டு, கப்பல் கவிழும் என்பதெல்லாம் தெரியவே தெரியாது. இதனால் எதற்கும் தயாராகவே இருப்பார்கள்.

அடுத்தப் படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அன்போடு சொல்லி, சிலர் குறைந்த பணத்தைக் கொடுத்து செட்டில் செய்துவிடுவார்கள். சரி வந்தவரையிலும் லாபம் என்று சொல்லி தயாரிப்பாளர் திருப்திபட்டுக் கொள்வார்.

ஆனால் இந்த பேரன்மார்கள் வந்தவுடன் செய்த வேலை.. ஒரு படம் பிடித்துவிட்டது என்றால்.. மொத்தமாக ஒரு தொகை பேசி அப்படியே செக்கை கையில் கொடுத்துவிட்டுப் போவதுதான். இதனால் விநியோகஸ்தர், தியேட்டர்காரர்கள் கூட்டணியில் முன்பு இருந்த மிச்சப் பணம் வருமா? வராதா என்ற டென்ஷன் இப்போது இல்லை.. “அதான் மொத்தமும் வந்திருச்சுல்ல.. விட்டு்ட்டு அடுத்த வேலையை பார்ப்போம்..” என்று ஓடி விடுவார்கள்..!

அத்தோடு சொந்த டிவிக்களில் ஓசி விளம்பரமும், சிறந்த தியேட்டர்கள் கிடைத்து இதனால் கூடுதலாக பண வசூலுடன் படத்திற்கு பெயரும் கிடைப்பதால் ஹீரோக்களுக்கும் அடுத்தக் கட்டத்தில் கல்லா கட்டும் வாய்ப்பு நிறையவே கிடைத்தது. இதனாலேயே இந்தப் பேரன்களிடம் படத்தைக் கொடுத்துவிட்டால் படமும் ஓடும். நாமளும் இதை வைச்சே அடுத்த படத்தில் சம்பளத்தை உயர்த்தலாம் என்று பெரிய ஹீரோக்களும் கணக்குப் போட்டு இவர்களை ஆதரித்தார்கள். இதனாலேயேதான் பேரன்கள் ஜொலித்தார்கள்.

இதற்கு காரணம் பேரன்கள் கை காட்டும் படங்களைத் திரையிட திரையங்குகள் தயாராக இருந்ததுதான். இதற்கு அடிப்படையான விஷயம்... இவர்கள் மேலிடத்தின், ஆட்சி அதிகாரத்தின் நேரடி வாரிசுகள்.. பேரன்கள் என்பதுதான். இவர்கள் ஆட்சியாளர்களாக இல்லாமல் இருந்திருந்தால் தியேட்டர்காரர்கள் ஏன் ஓடாத படத்தை 25 நாட்களாக ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.?

இப்போதைக்கு தியேட்டர் வாடகைக்கு மேல் 50 சதவிகிதம் வசூல் வராத படங்களை உடனுக்குடன் தியேட்டரை விட்டு தூக்கிவிடுகிறார்கள் தியேட்டர்காரர்கள். இந்த பாச்சா இந்த பேரன்களிடம் மட்டும் நடப்பதில்லை. 'இளைஞன்' படமும், 'தூங்கா நகரமும்' இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதே இதற்குச் சாட்சி..!

'தென்மேற்குப் பருவக் காற்று' படம் தூக்கப்பட்டபோது அதன் ஓப்பனிங்கில் எப்போதும்போல் கூட்டம் இல்லை. இதனாலேயே 3-வது நாளே சில திரையரங்குகளில் தூக்கிவிட்டார்கள். ஆனால் அதன் பின்பு படத்தின் ரிசல்ட் பரவலாக பல இடங்களிலும் பேசப்பட்ட பின்புதான் நிலைத்து ஓடத் துவங்கியது. அதையும் பாதியோடு நிறுத்திவிட்டு, அதாவது தியேட்டர்காரர்கள் வசூலில் திருப்திபட்டுக் கொண்டிருந்த நேரத்திலேயே பேரன்களின் படங்களுக்காக அந்தப் படம் தூக்கப்பட்டது என்பதுதான் உண்மையான கதை. இதைத்தான் அதிகாரத் துஷ்பிரயோகம் என்கிறார்கள் சினிமாவுலகில்..!

அதேபோல் டிவிக்களில் விளம்பரங்கள் செய்யக் கூடிய அளவுக்கு சத்துள்ள தயாரிப்பாளர்கள் இன்றைய சினிமாவில் மூன்றே பேர்கள்தான். அதுவும் இந்த மூன்று பேரன்கள்தான்..! இவர்களைத் தவிர லட்சணக்கணக்கில், கோடிக்கணக்கில் விளம்பரங்களை வாரி வழங்கி தியேட்டர்களுக்கு ரசிகர்களை ஈர்க்கும் வித்தையை மற்றவர்களால் செய்யவே முடியாது..!

சன் தொலைக்காட்சி விநியோகம் செய்த அத்தனை திரைப்படங்களுக்கும் அது கொடுத்த விளம்பரத்திற்கு உண்மையாக கட்டணம் செலுத்தியிருந்தால் அது அந்தப் படத்தின் தயாரிப்புச் செலவுகளைக்கூட அதிகமாகவே இருந்திருக்கும். அந்த அளவுக்கு தனது சக்தியை சகலவிதத்திலும் பயன்படுத்தியது சன் தொலைக்காட்சி..!

இதனாலேயே ஏதோ மாசத்துக்கு ஒரு படத்துக்குப் போனால் போதும் என்கிற மனநிலையில் இருக்கும் ரசிகனைக்கூட மெதுவாக தனது படத்தினை பார்க்க வைத்தது..! அதற்குத் தோதாக இவர்களுடைய திரையரங்குகளில் அத்திரைப்படம் டிவியில் விளம்பரம் ஓடும்வரையிலும் ஓடிக் கொண்டுதான் இருந்தது..!

இந்த அளவுக்கு மற்ற தயாரிப்பாளர்களால் விளம்பரங்கள் செய்ய முடியுமா..? முடியாது..? தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் கூட்டமே குறைந்து கொண்டே போய்க் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் ரசிகனின் கண் பார்வையிலும், காதுகளிலும் அதிகம் பேசப்படும் திரைப்படங்களே அதிகம் பார்க்கப்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்டது லோ பட்ஜெட் படங்களே..! அந்தத் திரைப்படங்கள் சுமாரான, நல்லவைகளாக இருந்தும்கூட பாடாவதி தியேட்டர்கள் மட்டுமே கிடைத்த காரணத்தால் அந்தத் தியேட்டர்களைப் புறக்கணிக்கும் ரசிகர்களால் பார்க்க முடியாமல் போய்விட்டது..! இவர்களையும் மீறி விதிவிலக்காக முன்பு 'களவாணி' அபாரமாகவும் தற்போது 'யுத்தம் செய்' சுமாராகவும் ஓடின என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

தற்போது டிவி விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலும், கலைஞர் டிவியில் 'தூங்கா நகர'த்திற்கும், 'இளைஞனு'க்கும் நடந்த விளம்பர யுத்தங்களை யாராலும் கணக்கில் எடுக்க முடியாது. அத்தனை விளம்பரங்கள். கூட்டம் போனதா என்பதில்லை இங்கே பிரச்சினை.. ஒரு அமைப்பு கட்டுப்பாடு ஒன்று விதிக்கிறது. ஆனால் அதே அமைப்பின் சில உறுப்பினர்கள் மட்டும் அதனை மீறுகிறார்கள். மற்றவர்களால் அதனை மீற முடியவில்லை என்றால் இது அராஜகம்தானே..!

பணம் இருக்கு. செலவு செய்கிறார்கள் என்று சொன்னால்கூட திரையரங்கு அதிபர்களின் முதுகு வளையும் தன்மையினால் அவர்களையும் அதிகாரத்தைக் காட்டி மடக்கி வைத்திருக்கிறார்களே... இதற்கென்ன பதில்..?

இதில் குற்றத்தை சுமப்பவர்களும் திரையுலகத்தில்தான் உள்ளார்கள். குற்றம் சாட்டுபவர்களும் திரையுலகத்தில்தான் உள்ளார்கள். ஆனால் குரலை எழுப்பாமலேயே தங்களுக்குள்ளேயே கிசுகிசுவாக பேசிக் கொள்கிறார்கள். இவ்வளவுதான் இவர்களது தைரியம்..! ஆட்சி மாற்றம் நடந்தால் மட்டுமே இவர்களது குரல் ஒலிக்கும்...!

44 comments:

G.Ganapathi said...

ethuvum sila kaalam

Unknown said...

நல்ல விரிவான அலசல் சார், பார்ப்போம் என்ன நடக்கிறது என்று ..

Unknown said...

அலசலுக்கு நன்றி தலைவரே

கோவை நேரம் said...

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ...

ramalingam said...

இதுவும் கடந்து போகும்.

தமிழா தமிழா said...

இவர்கள் படம் தயாரிப்பதின் முதல் நோக்கம் லஞ்ச பணத்தை வெள்ளை ஆக்குவதுதான். ஒரு படத்தின் வசூல் 5 கோடி என்றால் 25 கோடி என்று கணக்கு காட்டலாம்.
25 கோடி என்று கணக்கு காட்டினால் தமிழ் நாடு கேளிக்கை வரி 55 % கட்ட வேண்டும்.
தமிழில் படத்துக்கு பெயர் வைத்தால் வரி இல்லை என்று அறிவித்ததால் வருமான வரி மட்டும் கட்டினால் போதும்.
லஞ்ச பணம் கணக்கில் வந்துவிடும். தமிழின தலைவர் என்ற பெயரும் கிடைக்கும்.

YESRAMESH said...

என்னவோ போடா மாதவா..........

Jegan said...

உண்மைகளை துகிளுரிக்கிறீர்கள். நன்றி. இந்த தேர்தலில் ஜெயலலிதா ஜெயுக்கும் பட்சத்தில் சோ, விகடன், வரிசையில் உங்களுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.

Unknown said...

You can sahare how to vote thiraimanam?

raja said...

முன்று பேரன்களும் முன்று வாரத்திற்கு ஒருவர் என்று தமிழக திரைஅரங்குகளை பிரித்துக்கொண்டார்கள். இதில் அதிக அராஜகம் செய்தது சன்பிக்சர்ஸ் தான். அவர்களுக்கென்று 150 அரங்குகளை முன்கூட்டியே பணம் கொடுத்து வளைத்துவிட்டார்கள் இன்னும் எந்திரன் சில தியேட்டர்களில் வெற்று பீத்தல் 100 நாட்கள் எனும் காரணத்திற்க்காக ஒடுகிறது. தென்மேற்கு பருவகாற்று,களவாணி,போன்ற படங்கள் அப்பட்டமாக இவர்களாலே பாதிக்கபட்டது. எல்லாவற்றையும் விட தயாநிதியும், கலாநிதியும் ஒருமுறை தாத்தாவை சந்தித்து 100 திரையங்கை வாடகை எடுத்து படங்களை தயாரிக்க தாத்தாவிடம் ஆலோசனை கேட்டார்களாம்.... அவர் சொன்னராம்.. சற்று பொறுங்கள் நான் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தமிழ்திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கிறேன் பிறருக்கு போகமால் முழுப்பணமும் உங்களிடமே திரும்ப வரும் நட்டம் ஏற்படாது. என்று சொன்னாராம் அது தான் திரைப்படங்களுக்கு தமிழ் பெயர் வைத்தால் தரப்படும் வரிவிலக்கு. எவ்வளவு மலினமான கிரிமினல்கள் இவர்கள் என்று யோசித்து பாருங்கள்...? சன் டிவியில் தொடர்ந்து விளம்பரம் செய்யும் சமயம் நீங்கள் அந்த ஒடாத மொக்கை படத்தை பெரும் வெற்றிபடமாக விளம்பரதாரர்களுக்கு காட்டி உடனடியாக பண்டிகைநாட்களில் போடப்படும் வெற்றிபடமாக அந்த 30 கோடியை மிக எளிதாக மீட்டுவிடலாம். இதை மற்றத் தயாரிப்பாளர்கள் கனவிலும் நிணைக்க முடியாது. என் அபிப்ராயத்தில் சன் டிவி எனும் திமிங்கலத்தை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. அவர்களுக்கு திமுக, தாத்தா எனப்படுபவர்கள் எல்லாம் வெறும் வட்டார நாட்டான்மைகள்தான். டெல்லியை வளைத்துப்போட்டு கையில் வைத்திருக்கிறது. சன் டிவியை ஒழிக்காமல் ஒரு மாநிலமொழியில் வரும் சினிமாத்தொழிலை (அ) நல்லதமிழ்சினிமாவை நீங்கள் காப்பாற்றவே முடியாது.. அந்த திமிங்கலத்தை ஒழிப்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை... ஜெயலலிதா எனும் அரக்கத்தனம் அதன் மேல் திரும்பாதவரை.....

பொ.முருகன் said...

படத்த,ரசிகர்கள் பார்க்கத்தேவையில்லை,அந்தகுடும்ப உறுப்பினர்கள்மட்டும் பார்த்தாலே போதும் பத்து நாள் எல்லா தியேட்டர்லையும் ஹவுஸ்புல்லா ஓடும்.

geethappriyan said...

good one
thanks for u and vikadan

shabi said...

THA PADATHAI PATRIYUM KURIPPITTURUKKALAM

Unmai said...

karunaanidhi thaan meendum varanum. Appaththaan cinema oliyum.

தமிழ்வாசி பிரகாஷ் said...

நம்ம கையல எதுவுமே இல்லை....


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

மு.சரவணக்குமார் said...

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்...ஆனால் ஒரு ஊரில் நாலு ரிலீஸ் தியேட்டர்கள் இருந்தால் நாலு ஷிஃப்டிங் தியேட்டர்களும் இருக்கும்.கலைஞர் குடும்பத்தார் ரிலீஸ் செண்டர்களை கைகளில் வைத்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் பதிவில் குறிப்பிட்டபடி படங்களுக்கு தியேட்டரே கிடைக்காத மாதிரியான நிலமை நிதர்சனத்தில் இல்லை என்பதும் உண்மை.

நூறு படத்திற்கு மேல் வந்தது உண்மைதான் அதில் எத்தனை தரமான படம்?....ஒரே ஒரு தென்மேற்கு பருவக்காற்றும், களவாணியும் மட்டும்தான் உங்களால் சுட்டிக்காட்ட முடிகிறது.

Anonymous said...

// இந்தக் குடும்பம் தமிழ் சினிமாவை கபளீகரம் செய்தது உண்மைதான்.. ஆனால் இது நீடிக்காது, நீடிக்கக் கூடாது .. அப்படி நீடித்தால் கோலிவுட்டை பெங்களூருவுக்கோ, திருவனந்தபுரத்துக்கோ இல்லாக்காட்டி கொழும்புக்கோ புலம்பெயர்ந்து போகும் சூழல் ஏற்படலாம் //

கோடம்பாக்கத்தை விட்டால் பெங்களூருவு தான் சரியான இடம்.. கன்னட வார்த்தைகள் ஒன்றிரண்டை இடையில் சொருகிவிட்டு தமிழ்படம் எடுக்க அவர்கள் அனுமதி தரோணும் சார் !!!

R.Gopi said...

சூப்பர் கட்டுரை...

அதிகார வர்க்கத்தின் ஆக்டோபஸ் வளர்ச்சியையும், திரையுலகையே கபளீகரம் செய்யும் வித்தையையும் அழகாக சொல்லியுள்ளது...

ஒரு பெரிய நடிகர் கூட ஜெயலலிதாவிடம் இவர்களின் அராஜகத்தை பற்றி புலம்பியதாக ஜெயலலிதாவே பகிரங்கமாக மேடையில் சொல்லுமளவு “தல” குடும்பத்தின் அராஜகம் கட்டவிழ்த்து ஆடியது...ஆடுகிறது...

இதை அப்படியே அடித்து தூக்க ஜெ.ஜெ. ஆட்சி வந்தால் மட்டுமே முடியும்...

கமலஹாசனை வைத்து 50 கோடியில் படமெடுக்க உதயநிதி ஸ்டாலினுக்கு ஏது காசு?

Rafeek said...

இந்த கட்டுரை எழுத ஜூனியர் விகடனுக்கு இப்போதுதான் தைரியம் வந்து இருக்கிறது. இன்னும் காட்டமாக எழுத வாய்ப்பிருந்தும் அவர்கள் அடக்கி வாசிப்பதற்கு காரணம்..அவர்களின் சீரியல்கள் சூரிய தொலக்காட்சியில் வந்து கொண்டிருக்கும் காரணம்தான்.இதில் மிக முக்கியமான சேனல் பாலிடிக்ஸ் பற்றியும் அதனால் திரைப்படங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி விளக்கப்படவில்லை. ஒரு சின்ன உதாரணம்.. கலைஞரின் பட விரிசை பத்தில் காவலன் 9வது இடம்.. தென்மேற்கு பருவகாற்று 4வது இடம்... சன் டிவியில் யுத்தம் செய்..8வது இடம் சிங்கம் புலி 2வது இடம்.

உண்மைத்தமிழன் said...

[[[G.Ganapathi said...

ethuvum sila kaalam]]]

மேலே ஏறியவன் கீழே இறங்கித்தான் ஆக வேண்டும். இது வாழ்க்கை நியதி..!

உண்மைத்தமிழன் said...

[[[இரவு வானம் said...
நல்ல விரிவான அலசல் சார், பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.]]]

ஒன்றும் நடக்காது..! இதே புலம்பல் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாகும். அவ்வளவுதான்.. பணத்தின் செல்வாக்கு அப்படி..!

உண்மைத்தமிழன் said...

[[[விக்கி உலகம் said...

அலசலுக்கு நன்றி தலைவரே.]]]

வருகைக்கு நன்றி தலைவரே..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே]]]

இன்னும் எத்தனை காலம்தான் இதே பாடலை பாடுவார் இந்த நாட்டிலே..!?

உண்மைத்தமிழன் said...

[[[ramalingam said...

இதுவும் கடந்து போகும்.]]]

எவ்வளவுதான் ஸார் பொறுமையா கடக்குறது..?

உண்மைத்தமிழன் said...

[[[தமிழா தமிழா said...

இவர்கள் படம் தயாரிப்பதின் முதல் நோக்கம் லஞ்ச பணத்தை வெள்ளை ஆக்குவதுதான். ஒரு படத்தின் வசூல் 5 கோடி என்றால் 25 கோடி என்று கணக்கு காட்டலாம். 25 கோடி என்று கணக்கு காட்டினால் தமிழ்நாடு கேளிக்கை வரி 55% கட்ட வேண்டும். தமிழில் படத்துக்கு பெயர் வைத்தால் வரி இல்லை என்று அறிவித்ததால் வருமான வரி மட்டும் கட்டினால் போதும். லஞ்ச பணம் கணக்கில் வந்துவிடும். தமிழின தலைவர் என்ற பெயரும் கிடைக்கும்.]]]

இப்படியும் நடக்கத்தான் செய்கிறது. இது திரையுலகத்தினருக்கும் தெரியும். ஆனாலும் எதுவும் சொல்ல முடியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[YESRAMESH said...

என்னவோ போடா மாதவா.]]]

ஒண்ணுமே புரியலை.. உலகத்துல..! என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..!

உண்மைத்தமிழன் said...

[[[Jegan said...

உண்மைகளை துகிளுரிக்கிறீர்கள். நன்றி. இந்த தேர்தலில் ஜெயலலிதா ஜெயுக்கும் பட்சத்தில் சோ, விகடன், வரிசையில் உங்களுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.]]]

ஐயா சாமிகளா.. தி.மு.க.வை எதிர்ப்பதால் நான் அ.தி.மு.க. என்று நினைத்துவிட்டீர்களா..? அவ்வ்வ்வ்..!

உண்மைத்தமிழன் said...

[[[TMB said...
You can sahare how to vote thiraimanam?]]]

தமிழ்மணத்திலேயே இதற்கு கைட்லைன்ஸ் கொடுத்திருக்கிறார்கள். படித்துப் பாருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[raja said...

முன்று பேரன்களும் முன்று வாரத்திற்கு ஒருவர் என்று தமிழக திரை அரங்குகளை பிரித்துக் கொண்டார்கள். இதில் அதிக அராஜகம் செய்தது சன் பிக்சர்ஸ் தான். அவர்களுக்கென்று 150 அரங்குகளை முன் கூட்டியே பணம் கொடுத்து வளைத்துவிட்டார்கள். இன்னும் எந்திரன் சில தியேட்டர்களில் வெற்று பீத்தல் 100 நாட்கள் எனும் காரணத்திற்க்காக ஒடுகிறது. தென்மேற்கு பருவகாற்று, களவாணி,போன்ற படங்கள் அப்பட்டமாக இவர்களாலே பாதிக்கபட்டது. எல்லாவற்றையும்விட தயாநிதியும், கலாநிதியும் ஒரு முறை தாத்தாவை சந்தித்து 100 திரையங்கை வாடகை எடுத்து படங்களை தயாரிக்க தாத்தாவிடம் ஆலோசனை கேட்டார்களாம். அவர் சொன்னராம்.. சற்று பொறுங்கள். நான் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தமிழ் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கிறேன். பிறருக்கு போகமால் முழுப் பணமும் உங்களிடமே திரும்ப வரும் நட்டம் ஏற்படாது. என்று சொன்னாராம் அதுதான் திரைப்படங்களுக்கு தமிழ் பெயர் வைத்தால் தரப்படும் வரிவிலக்கு. எவ்வளவு மலினமான கிரிமினல்கள் இவர்கள் என்று யோசித்து பாருங்கள்? சன் டிவியில் தொடர்ந்து விளம்பரம் செய்யும் சமயம் நீங்கள் அந்த ஒடாத மொக்கை படத்தை பெரும் வெற்றி படமாக விளம்பரதாரர்களுக்கு காட்டி உடனடியாக பண்டிகை நாட்களில் போடப்படும் வெற்றி படமாக அந்த 30 கோடியை மிக எளிதாக மீட்டு விடலாம். இதை மற்றத் தயாரிப்பாளர்கள் கனவிலும் நிணைக்க முடியாது. என் அபிப்ராயத்தில் சன் டிவி எனும் திமிங்கலத்தை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. அவர்களுக்கு திமுக, தாத்தா எனப்படுபவர்கள் எல்லாம் வெறும் வட்டார நாட்டான்மைகள்தான். டெல்லியை வளைத்துப்போட்டு கையில் வைத்திருக்கிறது. சன் டிவியை ஒழிக்காமல் ஒரு மாநில மொழியில் வரும் சினிமாத் தொழிலை (அ) நல்ல தமிழ் சினிமாவை நீங்கள் காப்பாற்றவே முடியாது. அந்த திமிங்கலத்தை ஒழிப்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. ஜெயலலிதா எனும் அரக்கத்தனம் அதன் மேல் திரும்பாதவரை.]]]

ஜெயலலிதாவின் அரக்கத்தனம் இதற்குத் தேவையில்லை.. நல்லதொரு மக்கள் தொண்டரின் உண்மையான, ஜனநாயகமான செயல்பாடுகளே போதும்..

அந்த உன்னதமான மக்கள் தொண்டரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[B.MURUGAN said...
படத்த, ரசிகர்கள் பார்க்கத் தேவையில்லை,அந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பார்த்தாலே போதும் பத்து நாள் எல்லா தியேட்டர்லையும் ஹவுஸ்புல்லா ஓடும்.]]]

-))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

good one
thanks for u and vikadan.]]]

வருகைக்கு நன்றி கீதப்பிரியன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[shabi said...
THA PADATHAI PATRIYUM KURIPPITTURUKKALAM.]]]

ம்.. மறந்துவிட்டேன். மன்னிக்கவும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Unmai said...

karunaanidhi thaan meendum varanum. Appaththaan cinema oliyum.]]]

சினிமாவை ஒழிக்க இப்படியும் ஒரு வழியா..?

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ்வாசி - Prakash said...

நம்ம கையல எதுவுமே இல்லை.]]]

வோட்டு இருக்குண்ணே.. அதை மறந்திராதீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு ஊரில் நாலு ரிலீஸ் தியேட்டர்கள் இருந்தால் நாலு ஷிஃப்டிங் தியேட்டர்களும் இருக்கும். கலைஞர் குடும்பத்தார் ரிலீஸ் செண்டர்களை கைகளில் வைத்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் பதிவில் குறிப்பிட்டபடி படங்களுக்கு தியேட்டரே கிடைக்காத மாதிரியான நிலமை நிதர்சனத்தில் இல்லை என்பதும் உண்மை. நூறு படத்திற்கு மேல் வந்தது உண்மைதான். அதில் எத்தனை தரமான படம்? ஒரே ஒரு தென்மேற்கு பருவக் காற்றும், களவாணியும் மட்டும்தான் உங்களால் சுட்டிக் காட்ட முடிகிறது.]]]

நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றுதான் சொல்கிறேன். பிட் படம் ஓடிய தியேட்டர்களில் நல்ல படங்களைத் திரையிட்டால் மக்கள் கூட்டம் எப்படி வரும்..?

உண்மைத்தமிழன் said...

[[[இக்பால் செல்வன் said...

// இந்தக் குடும்பம் தமிழ் சினிமாவை கபளீகரம் செய்தது உண்மைதான்.. ஆனால் இது நீடிக்காது, நீடிக்கக் கூடாது .. அப்படி நீடித்தால் கோலிவுட்டை பெங்களூருவுக்கோ, திருவனந்தபுரத்துக்கோ இல்லாக்காட்டி கொழும்புக்கோ புலம்பெயர்ந்து போகும் சூழல் ஏற்படலாம் //

கோடம்பாக்கத்தை விட்டால் பெங்களூருவுதான் சரியான இடம்.. கன்னட வார்த்தைகள் ஒன்றிரண்டை இடையில் சொருகிவிட்டு தமிழ் படம் எடுக்க அவர்கள் அனுமதி தரோணும் சார் !!!]]]

கன்னடத்துக்காரர்கள் தூக்கிப் போட்டு மிதிப்பார்கள். அவர்கள் தமிழர்களைப் போல சொரணை கெட்டவர்கள் அல்ல..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

சூப்பர் கட்டுரை. அதிகார வர்க்கத்தின் ஆக்டோபஸ் வளர்ச்சியையும், திரையுலகையே கபளீகரம் செய்யும் வித்தையையும் அழகாக சொல்லியுள்ளது. ஒரு பெரிய நடிகர்கூட ஜெயலலிதாவிடம் இவர்களின் அராஜகத்தை பற்றி புலம்பியதாக ஜெயலலிதாவே பகிரங்கமாக மேடையில் சொல்லுமளவு “தல” குடும்பத்தின் அராஜகம் கட்டவிழ்த்து ஆடியது. ஆடுகிறது. இதை அப்படியே அடித்து தூக்க ஜெ.ஜெ. ஆட்சி வந்தால் மட்டுமே முடியும். கமலஹாசனை வைத்து 50 கோடியில் படமெடுக்க உதயநிதி ஸ்டாலினுக்கு ஏது காசு?]]]

ஜெயலலிதா ஆட்சி வருமா என்றே இப்போது சந்தேகம் வந்துவிட்டது.. அட போங்க ஸார்.. இவனுகளும் இவனுக அரசியலும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Rafeek said...

இந்த கட்டுரை எழுத ஜூனியர் விகடனுக்கு இப்போதுதான் தைரியம் வந்து இருக்கிறது. இன்னும் காட்டமாக எழுத வாய்ப்பிருந்தும் அவர்கள் அடக்கி வாசிப்பதற்கு காரணம். அவர்களின் சீரியல்கள் சூரிய தொலக்காட்சியில் வந்து கொண்டிருக்கும் காரணம்தான்.]]]

மிகச் சரியானதுதான்..!

[[[இதில் மிக முக்கியமான சேனல் பாலிடிக்ஸ் பற்றியும் அதனால் திரைப்படங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி விளக்கப்படவில்லை. ஒரு சின்ன உதாரணம். கலைஞரின் பட விரிசை பத்தில் காவலன் 9வது இடம்.. தென்மேற்கு பருவகாற்று 4வது இடம். சன் டிவியில் யுத்தம் செய். 8வது இடம் சிங்கம் புலி 2வது இடம்.]]]

எல்லாம் அரசியல்தான்.. வியாபாரம்தான்.. விளம்பரம்தான்..!

Rafeek said...

"ஜெயலலிதா ஆட்சி வருமா என்றே இப்போது சந்தேகம் வந்துவிட்டது.. அட போங்க ஸார்.. இவனுகளும் இவனுக அரசியலும்..!"

விஜயகாந்தின்-பேராசை,
அம்மாவின்-திமிர்,
கம்யூ-கைப்புள்ளைதனம்,
எல்லாம் சேர்ந்து..தாத்தாவ..மீண்டும் கொண்டுவரத்தான் போகிறார்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[Rafeek said...

"ஜெயலலிதா ஆட்சி வருமா என்றே இப்போது சந்தேகம் வந்துவிட்டது.. அட போங்க ஸார்.. இவனுகளும் இவனுக அரசியலும்..!"
விஜயகாந்தின்-பேராசை,
அம்மாவின்-திமிர்,
கம்யூ-கைப்புள்ளைதனம்,
எல்லாம் சேர்ந்து தாத்தாவ மீண்டும் கொண்டு வரத்தான் போகிறார்கள்.]]]

ம்.. வருத்தம்தான் மிஞ்சுகிறது..! நமக்கு வேறு நாதியில்லை..!

ரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்) said...

என்ன செய்ய?
டிவி, சினிமா, பத்திரிக்கை, எல்லா மீடியாக்களும் ஏதோ மந்திரத்திற்கு கட்டுபட்டதாகவே உள்ளன.. அரசியல் ஆட்டங்களின் அசைவுகளில் தமிழகம் மக்களின் நிலை?...

உண்மைத்தமிழன் said...

[[[ஆர்.இளங்கோவன் said...
என்ன செய்ய? டிவி, சினிமா, பத்திரிக்கை, எல்லா மீடியாக்களும் ஏதோ மந்திரத்திற்கு கட்டுபட்டதாகவே உள்ளன. அரசியல் ஆட்டங்களின் அசைவுகளில் தமிழகம் மக்களின் நிலை?]]]

அதிகாரத்திற்கு பயந்தவர்களே இங்கே அத்தனையிலும் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதுதான் நமது சோகம்..! தைரியசாலிகள் எல்லாம் எங்கே போய் ஒளிந்தார்கள் என்று தெரியவில்லை..! அவரவர்க்கு காரியம் நடந்தால் போதும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்..!

Archana said...

thavarugal andha naadalum kudumbathil mattumillai, nam meedum dhaan ulladhu. Avargalai thittuvadhai vida avargalai patri (thiti) eluduvadai vida, nammai thitti dhaan eludha vendum..... kollai adichukko nu naatai kuduthutu vaedikkai paatha evanum kollai adikkama irukka maatan, en kaadhu chumma thaan irukku nu kaamicha kuthitu dhaan povanunga.... Idhu ellathayum paathutu adha pathi padichutu "kali kaalam..", "enna panna?" nu salichutu adhutha velaiya poye paakura kootama irukura varaikkum nam kaadhu kuthapada dhaan seiyum, adhil mixi ya yum grinder a maatika ready a irukalam.... :)

உண்மைத்தமிழன் said...

[[[Archana said...

thavarugal andha naadalum kudumbathil mattumillai, nam meedumdhaan ulladhu. Avargalai thittuvadhaivida avargalai patri (thiti) eluduvadai vida, nammai thittidhaan eludha vendum. kollai adichukkonu naatai kuduthutu vaedikkai paatha evanum kollai adikkama irukka maatan, en kaadhu chummathaan irukkunu kaamicha kuthitudhaan povanunga. Idhu ellathayum paathutu adha pathi padichutu "kali kaalam", "enna panna?" nu salichutu adhutha velaiya poye paakura kootama irukura varaikkum nam kaadhu kuthapadadhaan seiyum, adhil mixiyayum grinder a maatika ready a irukalam.:)]]]

அர்ச்சனா.. நியாயமான உணர்வைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..! நன்றி..!

நீங்கள் தமிழில் தட்டச்சு செய்து பழகலாமே..? முயற்சி செய்யுங்கள்..!