மத்திய பட்ஜெட் - ஒரு பார்வை..!


01-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தொழிலதிபர்களும், லட்சாதிபதிகளும், கோடீஸ்வரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2011-2012-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

வழக்கம்போல நமக்கில்லை.. நமக்கு அதில் ஒன்றுமில்லை. நாம் தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை என்கிற மனநிலையிலேயே இந்தியாவின் நடுத்தர வர்க்கமும், தொழிலாளர், ஏழை வர்க்கங்களும் இருந்து வருகின்றன.

பத்திரிகைகள் அவரவர் கொண்டிருக்கும் கொள்கையின்படி பட்ஜெட்டுகளை அலசி செய்திகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டுமே நான் இங்கே தொகுத்தளித்துள்ளேன்.

மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், பெரிதாக ஒன்றும் இல்லை. பெரிய அளவில் சலுகைகளை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு, சொற்பமாக, 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக, பிரத்தியேக சலுகைகள் எதுவும் இல்லை. விவசாய இயந்திரங்கள் மீதான சுங்கவரியும், மிகக் குறைந்த அளவே குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த தேவையான அறிவிப்புகளும் இடம் பெறவில்லை.

தமிழகம் உட்பட, ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் உள்ளதால், பட்ஜெட்டில் பல சலுகைகள் அறிவிக்கப்படலாம். குறிப்பாக, விவசாயிகளைக் கவரும் வகையிலான அறிவிப்புகள் இடம் பெறலாம். அதேபோல், மாதச் சம்பளம் பெறுவோரை திருப்திபடுத்தும் வகையில், வருமான வரி விலக்கு வரம்பு கணிசமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட், அதற்கு மாறாகவே இருந்தது. பெரிதாக, எந்த விதமான அறிவிப்புகளும், சலுகைகளும் இடம் பெறவில்லை.

நிதிப் பற்றாக்குறையை குறைத்து, வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகள் அதிகளவில் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், "3ஜி' ஸ்பெக்ட்ரம் விற்றதில், அரசுக்கு அதிகளவு நிதி சேர உதவியது. புதிதாக, 130 அயிட்டங்கள், கலால் வரித்துறையின் வரி வரம்பிற்குள்  கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன் உள் நாட்டு, வெளி நாட்டு விமான கட்டணங்கள் உயரும் வகையில், சேவை வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் துறையினர் வளர்ச்சி அடையும் வகையில், குறைந்த வருமானம் உள்ளவர்கள், எளிதாக வீடு வாங்கும் வகையிலும், 15 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு, 1 சதவீத வட்டி மானியம் தரப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த தேவையான அறிவிப்புகள் இல்லை. தற்போது, மத்திய கிழக்கில் உள்ள நிலவரத்தில், கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்காது என, உலக நாடுகள் அஞ்சுகின்றன. அதை. எப்படி சமாளிப்பது என்ற வழிவகை பட்ஜெட்டில் கோடிட்டு காட்டப்படவில்லை. வேலைவாய்ப்பு தரும் திட்டங்கள் பற்றி அதிக குறிப்புகள் இல்லை.

மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் உரங்களுக்காக வழங்கப்படும் மானியம், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களை நேரடியாக சென்று சேரும் வகையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதற்கான தனி அடையாள அட்டை, அதை நிறைவேற்ற உரிய நிர்வாக நடவடிக்கை, அதற்குப் பின் சில மாவட்டங்களில் அமல் செய்து குறைநிறைகளை அறிதல் அதற்குப் பின் அமலாக்கம் என, பல தடைகள் உள்ளன. இதன் மூலம், இவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தை குறைக்க மத்திய அரசு மறைமுகமாக முற்பட்டுள்ளது.

விவசாயிகளுக்காக புதிய சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விவசாயக் கடன்களை அதிகளவில் வழங்குவதற்காக, கூடுதலாக, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு பயன்படும் இயந்திரங்கள் மீதான சுங்கவரி, 5 சதவீதத்தில் இருந்து, மிகக் குறைந்த அளவாக, 0.5 சதவீதம் குறைக்கப்பட்டு, 4.5 சதவீதமாகியுள்ளது. மொத்தத்தில், இந்த பட்ஜெட், யாரையும் திருப்திபடுத்தாத ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது என்று தொழில் துறையினர் சொல்கின்றனர்.

2011-2012-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் :

* தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு தற்போதுள்ள 1.60 லட்சத்தில் ரூபாய் இருந்து, 1.80 லட்சமாக ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

* மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 65-லிருந்து 60 ஆக குறைக்கப்பட்டதோடு 80 வயதிற்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது.

* கம்பெனிகளுக்கான கூடுதல் வரி 7.5 சதவீதத்தில் இருந்து, ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* சேவை வரி 10 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும்.

* நேரடி வரிகளில் அளிக்கப்பட்ட சலுகைகள் மூலம், அரசுக்கு ஒரு ஆண்டுக்கு 11,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

* கலால் வரி மற்றும் சுங்க வரிகள் மூலம், அரசுக்கு 7,300 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

* மத்திய கலால் வரி வீதம் 10 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும். சென்வாட் வரி வீதத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை.

* வழக்கமான ஒரு சதவீத கலால் வரி வரம்பில், 130 அயிட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உணவு, எரிபொருட்கள், விலை மதிப்புமிக்க கற்கள், தங்கம், வெள்ளி நகைகள் போன்றவற்றுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

* விவசாயத்திற்கு பயன்படும் இயந்திரங்கள் மீதான சுங்கவரி. ஐந்து சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

* நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்தப்படும் ஓட்டல் வாடகைகள், ஏசி ரெஸ்டாரன்ட்களில் வழங்கப்படும் மதுபானம், சில வகை மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள் போன்றவற்றுக்கும் சேவை வரி நீட்டிக்கப்பட்டுள்ளது.

* உள்நாட்டு விமான பயணத்திற்கான சேவை வரி 50 ரூபாய் ஆகவும், சர்வதேச பயணத்திற்கான சேவை வரி 250 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உயர் வகுப்புகளுக்கு, விமான கட்டணத்தில் 10 சதவீதம் என்ற அளவில் சேவை வரி இருக்கும்.

* வரும் 2011 - 12ம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு 4.6 சதவீதம். நடப்பு நிதியாண்டின் மதிப்பீடான 5.1 சதவீதத்தை விட குறைவாகும்.

* நடப்பு நிதியாண்டில் மொத்த செலவு மதிப்பீடு 12 லட்சத்து 57 ஆயிரத்து 729 கோடி ரூபாய். வரிகள் மூலம் மொத்த வருவாய் 9.3 லட்சம் கோடி ரூபாய்.

* முன்னுரிமை துறைக்கான வீட்டு வசதி கடன் வரம்பு 20 லட்சத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மேலும், 15 லட்சம் வரை பெறப்படும் வீட்டு வசதி கடன்களுக்கு ஒரு சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.

* உள் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி இல்லாத கடன் பத்திரங்கள் வெளியிடப்படும்.

* விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் அளவு 3.75 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 4.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

* விவசாயிகளுக்கு ஏழு சதவீத வட்டியில் வழங்கப்படும், குறுகிய கால பண்ணை கடன்களுக்கான, வட்டி மானியம் தொடரும்.

* ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனாவிற்கான ஒதுக்கீடு 6,755 கோடி ரூபாயில் இருந்து 7,860 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

* மழை வளம் நிறைந்த பகுதிகளில், பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க 300 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. பண்ணை உற்பத்தி சாகுபடியை மேம்படுத்தவும் மற்றொரு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* நபார்டின் மூலதன ஆதாரம் மேம்படுத்தப்படும். குறுகிய கால கடன் நிதிக்காக அந்த அமைப்புக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும்.

* ஊரக வீட்டு வசதி நிதியத்திற்கான ஒதுக்கீடு 3 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

* பெண்கள் சுய உதவிக் குழு மேம்பாட்டு நிதியத்தை உருவாக்க தொகுப்பு நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும்.

* அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஊதியம் மாதம் .1,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

* 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

* நிரந்தர ஊனம் அடைந்து பணியில் இருந்து விடுவிக்கப்படும் ராணுவத்தினர் மற்றும் மத்திய துணை ராணுவப்படையினருக்கு இழப்பீட்டுத் தொகையாக 9 லட்சம் ரூபாய் தரப்படும்.

* சந்தைகளில் இருந்து 3.43 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு திரட்டும்.

* சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்திற்கு, 20 கோடி ரூபாயும், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் காமர்ஸ் நிறுவனத்திற்கு, 10 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.

மொபைல் போன் விலை குறையும்

சலவை சோப், சோலார் விளக்கு, இறக்குமதி நூல், மொபைல் போன், இங்க்ஜெட் பிரின்டர், மின் உற்பத்தி நிலைய உதிரி பாகங்கள், பிரின்ட்டிங் பிரஸ் சாதனங்கள், சினிமா பிலிம், ஆம்புலன்ஸ், அகர்பத்தி, ஓமியோபதி, சானிடரி நாப்கின் போன்றவற்றின் விலை குறையும். ஸ்டெயின்லஸ் ஸ்டீல், பட்டு, இரும்புத் தாது, ஜிப்சம் ஆகியவற்றிற்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலைகளும் குறையும்.

மனிதவள மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு..!

அடுத்த 10 ஆண்டுகளில், தொழில் திறமை வாய்ந்த நான்கு கோடி பேரை உருவாக்க தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் திட்டமிட்டுள்ளது. இந்த மனிதவள மேம்பாட்டிற்காக அடுத்த நிதியாண்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த நிதியாண்டிற்கு தேசிய திறன் மேம்பாட்டு நிதிக்கு கூடுதலாக 500 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில், 658 கோடி ரூபாய் மொத்த நிதியில், 26 திட்டங்களை ஏற்கனவே அனுமதித்துள்ளது. இத்திட்டங்கள் மூலம் மட்டும் அடுத்த 10 ஆண்டுகளில், தொழில் திறமை வாய்ந்த நான்கு கோடிக்கும் மேற்பட்டோர் உருவாக்கப்படுவர்.

தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் கடந்தாண்டு அமைக்கப்பட்டது. தொழில் திறமை வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, அரசும், தொழில் நிறுவனங்கள் சங்கமும் இணைந்து இவற்றை உருவாக்கின.

இந்த கவுன்சில் அமைக்கப்பட்டபோது, முதல்கட்டமாக 1,000 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டது. இந்த கவுன்சில் மூலம் நடப்பு நிதியாண்டில் 20 ஆயிரம் பேருக்கு தொழில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களில் 75 சதவீதம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

வருமான வரி விலக்கு உயர்ந்தது..!

வருமான வரி விலக்கு உச்சவரம்பு, தற்போதுள்ள, 1.60 லட்சம் ரூபாயில் இருந்து, 1.80 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 5 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு, எவ்விதமான வரியும் செலுத்த வேண்டியதில்லை.

வருமான வரி செலுத்துவோருக்கான, விலக்கு உச்சவரம்பு, ஆண்டுக்கு, 1.60 லட்சம் ரூபாய் என, தற்போது உள்ளது. அது, இனி, 1.80 லட்சம் ரூபாயாக உயரும். இதுவரை, 65 வயதிற்கு மேற்பட்டவர்களே மூத்த குடிமக்களாக கருதப்பட்டனர். இனி, 60 வயதிற்கு மேற்பட்டவர்களே மூத்த குடிமக்களாக கருதப்படுவர். அதனால் வரிச்சலுகை கிடைக்கும்.

மூத்த குடிமக்கள், 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. இதுவரை, இந்த அளவு, 2.4 லட்சம் ரூபாயாக இருந்தது. வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டதன் மூலம், வரி செலுத்துவோர் ஒவ்வொருவரும், 2,000 ரூபாய் வரை ஆதாயம் பெறலாம்.

அதேநேரத்தில், 80 மற்றும் அதற்கு மேலான வயதை உடைய மிக மூத்த குடிமக்கள், ஆண்டுக்கு, 5 லட்சம்வரை பெறும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. 5 லட்சம் முதல், 8 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு, 20 சதவீத வரியும், 8 லட்சத்திற்கு மேலான வருமானத்திற்கு, 30 சதவீத வரியும் செலுத்த வேண்டும்.

வருமான வரி செலுத்தும் மற்றவர்கள், 1.8 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு, 10 சதவீத வரியும், 5 முதல், 8 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு, 20 சதவீத வரியும், 8 லட்சத்திற்கு மேலான வருமானத்திற்கு, 30 சதவீத வரியும் செலுத்த வேண்டும்.
மூத்த குடிமக்கள் (60 முதல் 80 வயதிற்கு உட்பட்டவர்கள்) 2.5 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு, 10 சதவீதமும், 5 லட்சம் முதல், 8 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு, 20 சதவீதமும், 8 லட்சத்திற்கு மேலான வருமானத்திற்கு, 30 சதவீத வரியும் செலுத்த வேண்டும்.  ஆனால், பெண்களுக்கு என, கூடுதலாக சிறப்பு சலுகை எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

வீட்டுக் கடன்களுக்கு மான்யம்..!

வீட்டு வசதித் துறையின் வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில், வீட்டுக் கடன்களுக்கு வழங்கப்படும் 1 சதவீத வட்டி மானியத் திட்டம், 15 லட்சம் ரூபாய்வரை பெறப்படும் வீட்டுக் கடன்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இந்த வகை வட்டி மானியத்தில் வீட்டுக் கடன் பெறுவோர், வாங்கும் வீட்டின் விலை 25 லட்சம் ரூபாயைத் தாண்டக் கூடாது.

தற்போது 10 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 1 சதவீத வட்டி மானியம் அளிக்கப்படுகிறது. 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடுகள் வாங்கினால் மட்டுமே இந்த வட்டி மானியம் கிடைக்கும். சென்னை போன்ற நகரங்களில் இல்லாமல் கிராமப் பகுதிகளில் வீடு வாங்குவோருக்கும் இது பயன் தரும்.

பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு கடன் பெறுவது என்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது. இந்தப் பிரச்னையை கையாள, ராஜிவ் அவாஸ் யோஜனாவின் கீழ், அடமான அபாய உத்தரவாத நிதி ஒன்று உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினரும், குறைந்த வருவாய் பிரிவினரும் எளிதில் வீட்டுக் கடன் பெற முடியும். அவர்களின் கடன் வாங்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

கிராமப்புறங்களில் வீட்டு வசதி அளிப்பதற்காக, நியாயமான வட்டியில் கடன் வழங்க, ஊரக வீட்டு வசதி நிதிக்கான ஒதுக்கீடு தற்போது 2 ஆயிரம் கோடியில் இருந்து 3 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

"மத்திய அரசு அறிவித்துள்ள இந்த 1 சதவீத வட்டி மானியத்தால், குறைந்த வருவாய் பிரிவினர் பலன் அடைவர்' என ரியல் எஸ்டேட் துறையினர் கூறியுள்ளனர்.

ராணுவத்துக்கு கூடுதல் தொகை ஒதுக்கீடு..!

இந்தாண்டுக்கான பொது பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 1.64 லட்சத்து 415 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டு ஒதுக்கீட்டைவிட 11.6 சதவீதம் அதிகம்.

நாட்டின் பாதுகாப்பு கருதி, நவீன ஆயுதங்களை வாங்கவும், ராணுவத்துக்கு புதிய தளவாடங்களை கொள்முதல் செய்யவும் வசதியாக, இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இதில், முதலீட்டு செலவுக்காக 69 ஆயிரத்து 199 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டை விட 12 சதவீதம் அதிகம். பல்முனை தாக்குதலை நடத்தும் 126 புதிய போர் விமானங்கள், 197 இலகு ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த நிதி ஒதுக்கீடு, அதற்கு பெரிதும் பயன் அளிக்கும்.

"ராணுவத்துக்கு மேலும் அதிகமாக நிதி தேவைப்பட்டால், அரசு ஒதுக்கீடு செய்யும்” என்றும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இது குறித்து ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜு கூறுகையில், "தற்போது ராணுவத்துக்கு கணிசமான அளவில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றார்

சி.பி.ஐ.க்கு நிதி ஒதுக்கீடு குறைப்பு..!.

சி.பி.ஐ.க்கு நிதி ஒதுக்கீடு, கடந்தாண்டைவிட, தற்போது 9 சதவீதம் குறைந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருப்போர், அரசின் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள், லஞ்ச ஊழலில் சிக்கும்போது, அது பற்றி விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிவது மற்றும் முக்கிய குற்றங்கள் நடக்கும்போது அதன் பின்னணியில் உள்ள நிலைமையை கண்டறியும் பொறுப்பு, மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.,) பணியாகும்.

இது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இந்த அமைப்புக்கு, மத்திய பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கப்படும். இந்த நிதி முழுவதும், நிர்வாகப் பணிகளுக்கே பெரும் பகுதி ஒதுக்கப்படும். இந்த வகையில், நடப்பு நிதியாண்டில் சி.பி.ஐ.,க்கு, 350 கோடியே 14 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. வரும் ஆண்டில், 318 கோடியே 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுடன் ஒப்பிடும் போது, இது 9 சதவீதம் குறைவு.

விளையாட்டுத் துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பு..!

விளையாட்டுத் துறைக்கான ஒதுக்கீடு, கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு பட்ஜெட்டில், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துக்காக 3,315 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 3,670 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.  ஆனால் இந்தாண்டு 1,121 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட தொகையில், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே.

இதில், திட்டமிட்டப் பணிகளுக்காக 1,000 கோடி ரூபாயும், திட்டமிடாத பணிகளுக்காக 121 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு 287 கோடி ரூபாயும், தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கு 100 கோடி ரூபாயும் கிடைக்கும். தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியகத்துக்கு இந்த பட்ஜெட்டில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

ஜனாதிபதி மாளிகையின் செலவு 20 சதவிகிதம் குறைப்பு..!

ஜனாதிபதி மாளிகையில் பணி புரியும் ஊழியர்கள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவுக்காக கடந்தாண்டு 22 கோடியே 61 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் 17 கோடியே 94 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டைவிட 20 சதவிகிதம் குறைவாகும்.

ஜனாதிபதியின் தற்போதைய மாதச் சம்பளம் 18 லட்சம் ரூபாய். இதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஜனாதிபதியின் செயலகத்துக்குக் கூடுதலாக 27 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவனைகளில் சேவை வரி விதிப்பு..!

தனியார் மருத்துவமனைகளில் பெறப்படும் சிகிச்சைக்கு 5 சதவீத சேவை வரி செலுத்த வேண்டும். இதை சிகிச்சை பெறும் தனிப்பட்ட நபரோ, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அல்லது கம்பெனிகள் செலுத்த வேண்டும்.

கடந்தாண்டு பட்ஜெட்டில், பல துறைகளில் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் ஒருவர் மற்றும் மெடிக்கல் பாலிசிதாரர்கள் மற்றும் கம்பெனி சார்பில் சிகிச்சை பெறுபவர்கள் அனைவரும் 5 சதவீத சேவை வரி செலுத்த வேண்டும்.

இதில், 25 படுக்கை வசதிகளுக்கும் மேலான குளிர் சாதன வசதி செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு 5 சதவீத சேவை வரி விதிக்கப்படும். இதேபோல், மருத்துவ ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவச் சோதனைகளுக்கும் சேவை வரி பொருந்தும். அரசு மருத்துவமனைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

சேவை வரி விதிக்கப்பட்டது குறித்து, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சங்கீதா ரெட்டி கூறுகையில், "சேவை வரி வரம்பிற்குள் மருத்துவமனையையும் கொண்டு வந்ததன் மூலம், சிகிச்சை பெற வரும் நோயாளிகளே இந்த சுமையை ஏற்க வேண்டியிருக்கும். மருத்துவ இன்சூரன்ஸ் வசதியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் 14 சதவீதம் மட்டுமே என்பதால் நோயாளிகளுக்கு இது கூடுதல் சுமையாகும்' என்றார்.

பெட்ரோல் மானியம் குறைப்பு - விலை நிச்சயம் உயரும்..!

இந்தியாவில் தற்போது, பெட்ரோலுக்கு, 14.35 ரூபாயும், டீசலுக்கு, 4.60 ரூபாயும் கலால் வரி விதிக்கப்படுகிறது. இந்தியா, 75 சதவீதம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைத்தான் நம்பியிருக்கிறது. நடப்பு பட்ஜெட்டில், 23 ஆயிரத்து 640 கோடி ரூபாயைத்தான், மானியத்திற்கென பிரணாப் முகர்ஜி ஒதுக்கியுள்ளார். நடப்பாண்டில், 38 ஆயிரத்து 386 கோடியாக இருந்த மானியத்தைவிட, 15 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த  விலை உயர்வை பொதுமக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும் போல தெரிகிறது.

இதே நேரத்தில் தமிழகத்தில், பெட்ரோல் மீதான விற்பனை வரியை 3 சதவீதம் குறைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் தமிழகத்தில் தற்போது பெட்ரோல் விற்பனை வரி 30 சதவீதமாக உள்ளது. இது 3 சதவீதம் குறைக்கப்பட்டு 27 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதை‌யொட்டி, இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் பிரணாப் முகர்ஜி கூறியது :

உணவுப் பண வீக்கம், 20.2 சதவீதத்தில் இருந்து, 9.3 சதவீதமாக குறைந்தாலும்கூட, நமக்கு அது சவாலாகத்தான் இருக்கிறது. இதை சமாளித்து, பொருளாதார சீர்த்திருத்தங்களை கொண்டு வருவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க முடியுமே தவிர, பரபரப்பான அறிவிப்புகளை வெளியிடுவது இயலாத காரியம்.

விலைவாசி உயர்வு பிரச்னையை சமாளிக்க, குறிப்பாக, உணவுப் பொருட்கள் சப்ளையில் உள்ள தடைகளை களைய, முன்னுரிமை கொடுத்துள்ளோம். விவசாய விளை பொருட்கள் சரியான முறையில் சப்ளையாவதற்குரிய வழிவகைகளை மேம்படுத்த வேண்டும்.தகவல் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, வருமான வரி வசூலில் பல புரட்சிகர மாறுதல்களை கொண்டு வர முடியும்.

நிதி பற்றாக்குறை, நடப்பாண்டில், 5.1 சதவீதமாக உள்ளது. அடுத்தாண்டு, 4.6 சதவீதமாக குறையும்.மாநிலங்களின் ஒத்துழைப்புடன், சரக்கு மற்றும் சேவை வரி திருத்த சட்டத்தை அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

மேலும் "கறுப்புப் பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும், அதை மீட்கவும், ஐந்து அம்ச திட்டத்தை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. கறுப்புப் பண பெருக்கம் மற்றும் புழக்கம், மிகவும் கவலை தரும் விஷயம். இப்பிரச்னையை திறமையான வகையில் கையாள, கறுப்புப் பணத்திற்கு எதிரான உலகளாவிய அறப்போரில் இணைதல் உட்பட, ஐந்து அம்ச திட்டங்களை மத்திய அரசு பின்பற்றுகிறது.

கறுப்புப் பண பெருக்கத்திற்கு போதைப் பொருள் கடத்தலும் முக்கிய காரணமாக உள்ளது. அதனால், இது தொடர்பாக, தேசிய கொள்கை ஒன்றை விரைவில் அறிவிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில், 11 வரித் தகவல் ஒப்பந்த பரிமாற்றங்கள் குறித்து அரசு ஆலோசனை நடத்தி முடிவெடுத்துள்ளது. 13 இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில், விதிமுறைகளை மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மத்திய நேர்முக வரிகள் ஆணையத்தின் வெளிநாட்டு வரிப் பிரிவு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கறுப்புப் பண விவகாரம் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக, பிரத்தியேக பிரிவு ஒன்றும் அமைக்கப்படும். சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டம் 2009-ல் திருத்தப்பட்டுள்ளது. அதனால், இச்சட்டத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஜனவரியில் 1,200 ஆக உயர்ந்துள்ளது.
2005 முதல், 2008 வரையிலான காலகட்டத்தில், இச்சட்டத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை, 50 மட்டுமே. மேலும், அமலாக்கத் துறை இயக்குனரகத்தில் அதிகாரிகள் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, வேறு பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.” என்றும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட் பற்றி தலைவர்களின் கருத்து :

பிரதமர் மன்மோகன்சிங் :

நிதி பற்றாக்குறையை சமாளிக்கவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதத்திலும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளார். பாராட்டுக்குரிய இந்த பட்ஜெட் மூலம் அனைத்து பொருளாதார சவால்களையும் சந்திக்க முடியும். விலைவாசி குறையவும், மொத்த நிதி பற்றாக்குறை அளவை குறைப்பதிலும் இந்த பட்ஜெட் வழிகாட்டுகிறது. இருந்தபோதும் சமூக நலத்துறைகள் மற்றும் விவசாயத்தில் காட்டும் அக்கறையின் மூலம் இதை சமாளிக்கலாம். கறுப்புப் பணத்தைக் கொண்டு வர புதிதாக, "பொது மன்னிப்பு திட்டங்கள்' கொண்டு வந்தால் பயன் தராது.

உள்துறை அமைச்சர் சிதம்பரம் :

வருவாயை அதிகரிக்க வகை செய்யும் நல்ல பட்ஜெட். கூடுதல் நிதியை கல்வி, சுகாதாரம், பாதுகாப்புத் துறைக்கு பயன்படுத்த முடியும். பணவீக்கத்தைக் குறைக்கும் வழியையும் காட்டியிருக்கிறார். நடுநிலையான பட்ஜெட் சமர்ப்பித்துள்ள பிரணாப் முகர்ஜிக்கு பாராட்டுக்கள்.

மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் :

கல்வித் துறைக்கு 52 ஆயிரம் கோடி ரூபாயும், தொலைத்தொடர்புத் துறைக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது, ஏழைகளுக்கான பட்ஜெட்.

விவசாய அமைச்சர் சரத்பவார் :

இது, விவசாயிகளுக்கு நண்பனாக அமைந்த பட்ஜெட். விவசாயிக்கு 4 சதவீத வட்டியில் கடன் கிடைக்க வழி செய்திருப்பது, நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட செயலாகும்.

பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் :

அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்ட ஒன்றுதான் நியாயமானதாக உள்ளது. விலை உயர்வை குறைப்பதற்கோ, வேலைவாய்ப்பின்மையை போக்குவதற்கோ இந்த பட்ஜெட் வழி செய்யவில்லை. பொதுமக்களுக்கோ, பெண்களுக்கோ பலன் தராத இந்த பட்ஜெட், மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா :

வசதி படைத்தவர்கள் மேலும் வசதியாகிக் கொண்டிருக்கும் வேளையில் கூடுதல் வரி, நடுத்தர வர்க்கத்தினருக்கு எந்த விதத்தில் பலனளிக்கும் என்பதை நிதியமைச்சர் விளக்கவில்லை. ஐந்து மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா:

இந்த பட்ஜெட்டினால் எந்த சீர்திருத்தமும் ஏற்படாது.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் :

உரம், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கு மானியம் அளித்துள்ளதால் இந்த பட்ஜெட் மகிழ்ச்சியளிக்கிறது.

பீகார் முதல்வர் நிதிஷ் :

அதிருப்தி தரும் பட்ஜெட். தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சலுகையும், பின்தங்கிய மாநிலங்களுக்கு ஒன்றும் தரவில்லை. விலை உயர்வைக் கட்டுப்படுத்த வழிகாட்டவில்லை.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் :

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இளைஞர், வேலையற்றோர் ஆகியோருக்கு பட்ஜெட்டில் வழி காணோம்.

தமிழக முதல்வர் கருணாநிதி  :

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவின் ஒட்டு மொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்த பட்ஜெட் திட்டத்தை வகுத்துள்ளார்.

உலகளவில் பொருளாதார தேக்க நிலையின் பாதிப்பு இந்திய பொருளாதாரத்தை அதிகளவில் தாக்காத வகையில் பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் ஒரு சீரான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லக் கூடியதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

முதன்மைத் துறைகளில் முக்கியமான விவசாயத் துறையின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், விளைபொருட்களின் சேதாரத்தைக் குறைக்கவும், உணவுப் பதப்படுத்துவதை ஊக்குவிக்கவும், விவசாயப் பணிகளுக்கு கடனுதவி தடையின்றி கிடைக்கவும் பல்வேறு சிறப்பான திட்டங்கள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசின் நெடுநாள் கோரிக்கையான, ஜாதி வாரி கணக்கெடுப்பை, வரும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது.

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா :

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு சேவை வரி விதித்துள்ளதால், சுற்றுலாத் துறை கடுமையாக பாதிக்கும். வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கவும், மின் உற்பத்தியைப் பெருக்கவும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. உணவு பணவீக்கம் அதிகரிப்பு, கறுப்பு பணம், ஊழல், தீவிரவாதம் என, நாடு பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. எரிபொருட்கள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள மத்திய பொது பட்ஜெட்டில், சாமான்ய மக்களின் பிரச்னைகளுக்கான எந்த தீர்வும் இடம் பெறவில்லை.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு :

வரிகள் ஏதுமின்றி வரலாறு போற்றும் வகையில் மத்திய பட்ஜெட், நாட்டின் ஒட்டுமொத்த மேம்பாட்டையும், ஏழைகளின் பொருளாதார வளர்ச்சியையும், மேன்மேலும் மேம்படுத்தும் வகையில் உள்ளது.இரண்டாவது பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில், விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு வளம் சேர்க்கும் அபரிமிதமான திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி உதவிக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது, சென்னை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் :

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் நீடிக்கும் என்பதையே வலியுறுத்துவதாக பட்ஜெட் உள்ளது. நேர்முக வரியை 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு குறைத்து, மறைமுக வரிகளை 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு உயர்த்தியுள்ளது. இந்திய அரசு, பண முதலைகளின் பக்கம்தான் என்று நிரூபிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், லஞ்ச ஊழல் போன்ற சமுதாய பிரச்னைகளுக்கு எத்தகைய திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டின் நகல்தான் இது.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ :

விலைவாசி உயர்வுக்கு காரணமான, இணையதள வர்த்தகம், முன்பேர வர்த்தகம் மற்றும் சேவை வரி குறித்து பட்ஜெட்டில் மறு ஆய்வு செய்யப்படவில்லை. விவசாயக் கடனை திரும்பிச் செலுத்தினால், 3 சதவீத வட்டி குறைப்பு என்பது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது. சுகாதாரத் துறைக்கு 5 சதவீதம் சேவை வரி விதித்திருப்பது, அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும். கடந்த ஆண்டு பட்ஜெட்டின் நகலைப் போல் உள்ள மத்திய பொது பட்ஜெட், மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது.


நன்றி : பல்வேறு பத்திரிகைகள்

16 comments:

settaikkaran said...

அண்ணே, பல மாநிலங்களில் தேர்தல் வரப்போகிற இத்தருணத்தில் பெரிய சீர்திருத்த பட்ஜெட்டை எதிர்பார்க்க வாய்ப்பில்லை. இதுவும் திருவிளையாடல்களில் ஒன்றே! :-)

Unknown said...

அண்ணா பட்ஜெட்டை விட உங்க பதிவு பெரிசா இருக்கு

Indian Share Market said...

லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிச்சிட்டா கறுப்பு பணம் தானா ஒழிஞ்சிடும்!

Unknown said...

இப்ப அறிவிச்சு இருக்கிற திட்டம் எல்லாத்தியும் குறிச்சு வச்சுகுங்க..

அடுத்த வருடமே இதுல என்னென்ன ஊழல் நடந்துச்சுன்னு எழுத வேண்டிவரும்..

செங்கோவி said...

நல்ல தொகுப்பு நன்றிண்ணே!

நிலவு said...

பட்டது போதுமா ! பழ நெடுமாறா ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post.html - OK

Franklin said...

Somebody saying paper rate have been decreased... but my supplier says, paper rates are increased.... which is correct sir ??

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...
அண்ணே, பல மாநிலங்களில் தேர்தல் வரப் போகிற இத்தருணத்தில் பெரிய சீர்திருத்த பட்ஜெட்டை எதிர்பார்க்க வாய்ப்பில்லை. இதுவும் திருவிளையாடல்களில் ஒன்றே! :-)]]]

எல்லாம் தலைக்கு மேல போகும்போது அந்தக் கொடுமையை யார் அனுபவிக்கிறது..? காரணமான இவங்களே மேல போய்ச் சேர்ந்திருப்பாங்களே..?!

உண்மைத்தமிழன் said...

[[[jaisankar jaganathan said...
அண்ணா பட்ஜெட்டை விட உங்க பதிவு பெரிசா இருக்கு.]]]

அடப் போங்கப்பா.. கேட்டு கேட்டு சலிச்சுப் போச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...

லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிச்சிட்டா கறுப்பு பணம்தானா ஒழிஞ்சிடும்!]]]

அதுக்கு முதல் வழி, நம்ம அரசியல்வியாதிகளை ஒழிக்கிறதுதான்..! முடியுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
இப்ப அறிவிச்சு இருக்கிற திட்டம் எல்லாத்தியும் குறிச்சு வச்சுகுங்க.
அடுத்த வருடமே இதுல என்னென்ன ஊழல் நடந்துச்சுன்னு எழுத வேண்டிவரும்.]]]

ஹா.. ஹா.. செந்திலு.. பொழைப்புல மண்ணையள்ளிப் போடுறியே..? எத்தனை நாளைக்குத்தான் இவங்களோட மல்லு கட்டுறது..? எனக்கே போரடிக்குதுப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...

நல்ல தொகுப்பு நன்றிண்ணே!]]]

வருகைக்கு நன்றி செங்கோவி..!

உண்மைத்தமிழன் said...

[[[நிலவு said...
பட்டது போதுமா ! பழ நெடுமாறா ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post.html - OK]]]

இப்போதைக்கு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கொஞ்சூண்டு உண்மை பேசி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருபவர் நெடுமாறன் ஐயாதான்.. இதுவும் உங்களுக்குப் பிடிக்கலையா..?

உண்மைத்தமிழன் said...

[[[Franklin said...
Somebody saying paper rate have been decreased. but my supplier says, paper rates are increased. which is correct sir ??]]]

நிஜமா தெரியலை ஸார். தேடித்தான் சொல்லணும்..!

middleclassmadhavi said...

பட்ஜெட் பற்றி மட்டும் தான்னு நினைத்தேன்; தலைவர்களின் கமென்ட்சும் போட்டிருக்கீங்க! சூப்பர்!

உண்மைத்தமிழன் said...

[[[middleclassmadhavi said...

பட்ஜெட் பற்றி மட்டும்தான்னு நினைத்தேன்; தலைவர்களின் கமென்ட்சும் போட்டிருக்கீங்க! சூப்பர்!]]]

காப்பி அண்ட் பேஸ்ட்தான..? கை நோவாம எடுத்துப் போட்டுட்டேன்.. அவ்ளோதான்..!