கமலஹாசனின் நான்கு நண்பர்கள்(Four Friends) - மலையாள சினிமா விமர்சனம்

04-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1989-ம் ஆண்டு 'சாணக்யன்' என்னும் மலையாளத் திரைப்படத்தில்தான் அண்ணன் கமலஹாசன் கடைசியாகத் திறமை காட்டியிருந்தார் என்று நினைக்கிறேன். அதன் பிறகு இத்தனை ஆண்டு காலம் கழித்து இந்தப் படத்தில் நடிக்கிறார் என்கிற செய்திகள் வந்தபோதே படத்தைப் பார்த்தே தீர வேண்டும் என்ற ஆசையுடன், கொஞ்சம் வெறியும் சேர்ந்தே இருந்தது.

இந்தத் தீபாவளிக்கு எனக்குக் கிடைத்த மிகப் பெரிய புஸ்வாணமாக இந்தப் படத்தையே எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவு பெரிய ஏமாற்றம்.


கமல் அண்ணன் சாதாரணமாக தனது பொன்னான நேரத்தை வீணாக்க மாட்டாரே.. நல்ல படமாகத்தானே இருக்கும் என்று நினைத்தேன். கைக்குட்டைகள் நனையும் அளவுக்கு பிழியப் பிழிய சோக ரசத்தைப் பிழிந்தெடுத்து, நமது சீரியல்களுக்கே சவால் விடும்வகையில் இருக்கிறது படம்.

கமல் இதில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு பிரதானமான காரணம் ஒன்று உண்டு. படத்தில் அமீராக நடித்திருக்கும் நடிகர் ஜெயசூர்யா, கமலஹாசனின் வெறி பிடித்த ரசிகர். அவருடைய வீட்டில் பல இடங்களிலும் கமல்ஹாசனின் விதவிதமான புகைப்படங்கள்.

எடுப்பது மலையாளத் திரைப்படம். நடிக்கவிருப்பதோ மலையாள திரைக்கலைஞர்கள். “கமலஹாசனைவிடவும் சிறந்த நடிகர்கள் மலையாள திரையுலகில் இருக்கிறார்கள்..” என்று மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தலைவர் இன்னசெண்ட் சமீபத்தில்தான் தெரிவித்திருக்கிறார்.

அப்படியிருக்கும்போது கேரளாவில் கமலஹாசனின் தசவாதாரம் படத்தை வெறி கொண்டு பார்க்கும் ஒரு ரசிகன் கேரக்டரில் மலையாள நடிகரே நடிப்பது கமலுக்குச் சிறப்பானதுதானே.. வருகின்ற வாய்ப்பை விட வேண்டாம் என்று கமல் நினைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.

ஆனால் அந்த அளவுக்கு பில்டப்பை கொடுத்துவிட்டு இந்த அளவுக்கு ஏமாற்றியிருக்க வேண்டாம். ஒரேயொரு காட்சியில்தான் கமல்ஹாசன் தோன்றுகிறார். அதுவும் நடிகர் கமல்ஹாசனாகவே. கமல் அண்ணனின் முகம் தெரிந்தவுடன் இடைவேளை விட்டுவிடுகிறார்கள்..


அதற்கு முன்பு கதை என்னவென்று பார்த்துவிடுவோம். நான்கு கேன்சர் நோயாளிகள்.. தாங்கள் இறக்கப் போவது உறுதியென்றாலும், தங்கள் மரணத்தின்போது சந்தோஷமாகவே இருக்கப் போவதாகச் சொல்லிவிட்டு மலேசியாவுக்கு பயணமாகிறார்கள். கேன்சர் நோயாளிகளில் ஒருவரான குஞ்சக்கோ போபனின் ஒருதலைக் காதலி மலேசியாவில் படிப்பதால் அவளையும் பார்க்கலாம். தாங்களும் டூரை கொண்டாடலாம் என்று நினைத்து செல்கிறார்கள். போன இடத்தில் நடக்கும் எதிர்பாராத விஷயத்தினால் குஞ்சக்கோ போபன் மட்டும் இறந்துவிட.. மிச்சமிருக்கும் 3 நோயாளிகளின் கதி என்ன என்பதைத்தான் மிச்ச, சொச்சம் கதை சொல்கிறது.

இந்தப் படம் Jack Nikolson மற்றும் Morgan Freeman நடித்த Bucket List  படத்தின் காப்பி என்கிறார்கள் மலையாளப் பத்திரிகையாளர்கள். நான் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை என்பதால் என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இதில் இவர்கள் கமல்ஹாசனை சந்திப்பது கொச்சி ஏர்போர்ட்டில். மலேசியாவுக்குப் பயணமாவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில் லவுஞ்சில் அமர்ந்திருக்கும் கமல்ஹாசனை நோயாளிகளில் சீனியரான ஜெயராம், மற்ற  நோயாளிகளான போபன், ஜெயசூர்யா, மீரா ஜாஸ்மின் மூவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

தனது ஆதர்ச நாயகனைச் சந்தித்த அதிர்ச்சியில் இருக்கும் ஜெயசூர்யாவின் அந்த ஆக்ஷன் இது மலையாளத் திரைப்படம்தான் என்பதை உணர்த்தியது. இதே இடத்தில் குசேலன் படத்தில் ரஜினியை பார்த்துவிட்டு வடிவேலு செய்யும் அதகளமும் ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தது.

அப்போது கமல்ஹாசன் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும்விதத்தில், இதுவரையில் கேன்சரால் உயிரிழந்த தனது திரையுலக நண்பர்கள் பலரது பெயரைப் பட்டியலிட்டுச் சொல்கிறார். "என்னோட பெஸ்ட் பிரெண்ட்" என்று நடிகை ஸ்ரீவித்யாவைப் பற்றிச் சொல்கிறார். கடைசியாக “இப்போ என்னில் பாதியாக(Best half) இருக்கும் கவுதமிக்கும் கேன்சர்தான்” என்கிறார். “கேன்சர் ஒரு சத்ரு. அதை எதிர்த்து போராடணும்.. மடங்கிப் போகக் கூடாது..” என்று அட்வைஸும் செய்கிறார்.

இந்த ஒரு காட்சியில் அண்ணனின் தரிசனம் என்றாலும் அண்ணன் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மலையாள நடிகர்களுக்கு கொஞ்சம் ஆப்பை சொருகியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஏன் இதே இடத்தில் மம்முட்டியையும், மோகன்லாலையும் தேர்வு செய்திருக்கலாமே..? எதற்காக கமலஹாசன்..?

உடன் ஜெயராமும் இன்னொரு நோயாளியாக நடிப்பதால் அவரும் வாய் பிளந்து நிற்கும் நடிகராக இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் கமலை தேர்வு செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த வகையில் தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அண்ணன் கமல்ஹாசனை பாராட்டுகிறேன்.

கேரளா முழுவதிலுமே 70 தியேட்டர்களில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், படத்தின் ரிசல்ட் கேரளாவிலேயே சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை. அனைவரும் சொல்கின்ற குற்றச்சாட்டு படம் மிகவும் சோகத்தைத் தருகிறது, மெலோ டிராமாவை போல் உள்ளது என்பதுதான்.


உண்மைதான். எம்.பி.பி.எஸ். மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே கேன்சர் நோய் தாக்கியது அறிந்து படிப்பை பாதியில் விட்டுவிட்டு சிகிச்சைக்காக வந்திருக்கிறார் மீரா ஜாஸ்மின். கமல்ஹாசனின் வெறியனாகவும் தியேட்டரில் பிளாக்கில் டிக்கெட் விற்கும் ரவுடியாகவும் ஜெயசூர்யா, பணக்கார வீட்டில் ஒரே மகனான சூர்யா என்ற குஞ்சக்கோ போபன்.. வாரத்துக்கு ஒரு வெளிநாட்டுக்கு பறந்தபடியே இருக்கும் மெகா பிஸினஸ்மேன் ஜெயராம்.. இந்த நால்வரும் சிகிச்சைக்காக ஒரே மருத்துவரிடம் வந்து அடைக்கலமாகிறார்கள். இவர்களையே சுற்றிச் சுற்றி கதை பின்னப்பட்டிருப்பதால் மரணத்தை எதிர்நோக்கியவனிடம் பார்க்கின்ற பரிதாபப் பார்வையை மட்டுமே நம்மால் உணர முடிகிறது.


மருத்துவமனை காட்சிகளில் சலீம்குமார் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் சிரிப்பிற்குப் பதிலாக அலுப்பையே தருகின்றன. கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தையின் கதையும் உருக்கத்தைக் கொடுத்து மனதைப் பிசைகிறது. சோகக் காவியத்தையும் மனதோடு ஒன்றுவிடும் அளவுக்கு உருக வைக்கும் டெக்னிக் மலையாளத் திரையுலகில் நான் இதுவரையில் பார்த்ததில் சிபிமலயில் மற்றும் சத்யன் அந்திக்காடு இருவருக்குமே மட்டுமே உண்டு.

சிபிமலயிலின் அத்தனை திரைப்படங்களிலும் சோகத்தின் சுவடுகள் ஒவ்வொரு காட்சியிலும் தென்படும். ஆனால் அதற்காக அவர் கிளிசரினை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தும் அளவுக்கு மெனக்கெட மாட்டார். வசனத்திலோ, பின்னணி இசையிலோ, காட்சியமைப்பிலோ மனதைப் பிசைந்துவிடுவார். உதாரணம் தனம் படத்தில் முரளியை மடியில் போட்டுக் கொண்டு மோகன்லால் கதறுகின்ற கதறல்.. இப்போது நினைத்தாலும் என் கண்கள் சட்டென கலங்கி விடுகின்றன.


அது போன்ற மனதை ஊடுறுவும் காட்சிகள் அமையாமல் போனதால் சீரியல்களில் வரும் அழுகைக் காட்சிகளாகவே இருப்பதால் பெருவாரியான ரசிகர்களால் இப்படத்தினை ரசிக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன்.

போதாக்குறைக்கு சாதாரண திரைப்படங்களைப் போல மலேசியாவில் ஒரு சண்டைக் காட்சியையும் வலுக்கட்டாயமாகத் திணித்துவிட அங்கே சோகத்தின் உச்சியில் இருந்த டெம்போ சடாரென்று நழுவி விழுந்துவிட்டது. மறுபடியும் போபன் இறக்கின்றபோதுதான் இது சோகக் காவியம் என்பதே நினைவுக்கு வருகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒரு கிளைக்கதை என்று வைத்துக் கொண்டு கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர். ஜெயசூர்யாவின் குடும்பம் தவிர, மீரா ஜாஸ்மின், போபன் குடும்பத்தினரின் தாக்கம் ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது. சீமா சேச்சியை இப்படி ஸ்கிரீனில் பார்த்து பல காலமாச்சு. ஆனாலும் அழுகை.. அழுகை.. அழுகை.. தாங்க முடியவில்லை.


போபனின் மரணத்திற்குப் பிறகு சடாரென்று மாறுதலடையும் ஜெயராம், ஜெயசூர்யாவையும், மீராவையும் ஊருக்கு அனுப்பும் அந்த டிவிஸ்ட் நன்று என்றாலும், அதைவிட ட்விஸ்ட்டாக விமான நிலையத்தில் ஜெயசூர்யாவும், மீரா ஜாஸ்மினும் எடுக்கும் ஓட்டம் சூப்பர்.
 
மலேசியாவின் லங்காவி பிரதேசம் முழுவதையும் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்று இயக்குநரின் ஆசையோ என்னவோ? ரோப் கார், அந்த மலைகளுக்கு இடையேயான தற்கொலைப் பாலம் என்று அனைத்தையும் கனஜோராகக் காட்டி அசத்தியிருக்கிறார். அதேபோல் கேரளாவில் அந்த மருத்துவமனையின் இருப்பிடம். அசத்தல்ய்யா.. எந்த ஊருன்னு தெரியலை. இப்படியொரு இடத்துல பத்து நாளாவது இருந்து வரலாம். அந்தப் படகு வீடுகளை எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் அற்புதமாக இருக்கின்றன.

என்ன இருந்து என்ன புண்ணியம்..? நான் பார்த்த பத்மம் திரையரங்கில் 30 பேர் வந்திருந்து  அதிர்ச்சியாக்கினார்கள். படம் முடிந்தபோது அதிலும் 10 பேர் காணாமல் போயிருந்தது சுவாரஸ்யம்.

இது போன்ற படங்களை மலையாளத்தில் மட்டும்தான் தைரியமாக எடுக்க முடியும்.. தமிழில் நினைத்துக்கூட பார்க்க முடியாது.. கமல்ஹாசன் தலைகாட்டிய ஒரு திரைப்படம் என்ற வகையில் மட்டுமே இந்தப் படத்தைக் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். ஆனாலும் அடுத்தாண்டு கேரள அரசின் பல விருதுகளை இப்படம் அள்ளப் போவதும் உறுதி. அதிலும் சந்தேகமில்லை.

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : kerala9.com

29 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

முடிந்தால் கமல்ஹாசனின் டேய்சி (Daisy) மலையாள படம் விமர்சனம் எழுதவும்

தீபாவளி வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

ஏனோ இந்த விமர்சனம் படிக்கும்பொழுது ஆனந்தாபாபு நடித்த இதேபோல் நான்கு கேன்சர் நோயாளிகள் கதை நினைவுக்கு வருகிறது.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நசரேயன் said...

மலையாளம் என்றாலே அந்தகால படம் தான் ஞாபகம் வருது என்ன செய்ய ?

Unmaivirumpi said...

அண்ணே படிச்சாச்சி, படத்தில் இருக்கும் சோகத்தை அப்படியே உங்க எழுத்திலேயே இறக்கிட்டீங்க ! அதனாலேயே என்னோவோ நானும் சோகமா விமர்சனத்தை படிச்சேன், விமர்சனம் பண்றதில உங்க பாணி தனி !! அருமை !! தொடருங்கள்

அகில் பூங்குன்றன் said...

தீபாவளி வாழ்த்துக்கள்

raja said...

நான் கமலின் ரசிகன் அல்ல.. ஆனால் அவரது நெருக்கடியான தருணங்களில் எடுக்கபடும் முடிவுகள் அவர் மீது மரியாதையை இன்னும் தக்கவைத்துக்கொண்டேயிருக்கிற....உ.ம்."என்னோட பெஸ்ட் பிரெண்ட்" என்று நடிகை ஸ்ரீவித்யாவைப் பற்றிச் சொல்கிறார். கடைசியாக “இப்போ என்னில் பாதியாக(Best half) இருக்கும் கவுதமிக்கும் கேன்சர்தான்” என்கிறார்.

பின்பு எயட்ஸ் விளம்பர படத்தில் தன் பங்கை வெளிப்படுத்தியது கமல் என்கிற மனிதனின் மேல் மரியாதையை அதிகப்படுத்திக்கொண்டேயிருக்கிறது

மின்னுது மின்னல் said...

Jack Nikolson மற்றும் Morgan Freeman நடித்த Bucker List படத்தின் காப்பி என்கிறார்கள் மலையாளப் பத்திரிகையாளர்கள்.

///

அது bucket list சரியா அண்ணே !

a said...

அண்ணே : தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

சரி சரி விடுங்க ....,இந்தா புடிங்க என் தீபாவளி வாழ்த்துகல

Thomas Ruban said...

விமர்சனம் அருமை.

உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த தீப திருநாள் நல்வாழ்த்துகள் அண்ணே. .

VANDHIYAN said...

You are totally wrong , this film is running well and your critics same like front seat person.

You have to come out this type of critic

Its very nice film, The treatment of film is very comedy way . if you know malayalm well you can understand.

i hope your next critic should be in right view

உண்மைத்தமிழன் said...

[[[THOPPITHOPPI said...
தீபாவளி வாழ்த்துக்கள்]]]

நன்றிங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...
பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
முடிந்தால் கமல்ஹாசனின் டேய்சி (Daisy) மலையாள படம் விமர்சனம் எழுதவும். தீபாவளி வாழ்த்துக்கள்]]]

செஞ்சிருவோம்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
ஏனோ இந்த விமர்சனம் படிக்கும்பொழுது ஆனந்தாபாபு நடித்த இதேபோல் நான்கு கேன்சர் நோயாளிகள் கதை நினைவுக்கு வருகிறது.]]]

ஆமாம் ஸார். எனக்கும் நினைவுக்கு வருகிறது.. உடன் விவேக்கும், சார்லியும் நடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...
மலையாளம் என்றாலே அந்த கால படம்தான் ஞாபகம் வருது என்ன செய்ய?]]]

அந்தக் கால மலையாளப் படங்களுக்கும் நல்லப் படங்கள்தான் நசரேயன்..

அந்த மாதிரி படங்களை மட்டுமே நமது தமிழக விநியோகஸ்தர்கள் வாங்கி விற்பனை செய்ததால் வந்த வினை இது..!

உண்மைத்தமிழன் said...

[[[Unmaivirumpi said...
அண்ணே படிச்சாச்சி, படத்தில் இருக்கும் சோகத்தை அப்படியே உங்க எழுத்திலேயே இறக்கிட்டீங்க ! அதனாலேயே என்னோவோ நானும் சோகமா விமர்சனத்தை படிச்சேன், விமர்சனம் பண்றதில உங்க பாணி தனி!! அருமை !! தொடருங்கள்]]]

நன்றி அண்ணாச்சி.. உங்களை மாதிரி ஊக்குவிப்பதற்கு நான்கு பேர் இருந்தாலே எனக்குப் போதும்..!

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...
தீபாவளி வாழ்த்துக்கள்.]]]

நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[raja said...

நான் கமலின் ரசிகன் அல்ல.. ஆனால் அவரது நெருக்கடியான தருணங்களில் எடுக்கபடும் முடிவுகள் அவர் மீது மரியாதையை இன்னும் தக்க வைத்துக் கொண்டேயிருக்கிற....

பின்பு எயட்ஸ் விளம்பர படத்தில் தன் பங்கை வெளிப்படுத்தியது கமல் என்கிற மனிதனின் மேல் மரியாதையை அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது]]]

பழமைக்கும், புதுமைக்கும் இடையிலான உறவுப் பாலத்தில் முன்னணியில் நடந்து செல்வது கமல்ஹாசன்தான்.. அதுதான் பிரச்சினை..!

உண்மைத்தமிழன் said...

[[[மின்னுது மின்னல் said...
Jack Nikolson மற்றும் Morgan Freeman நடித்த Bucker List படத்தின் காப்பி என்கிறார்கள் மலையாளப் பத்திரிகையாளர்கள்.//

அது bucket list சரியா அண்ணே !]]]

நீங்க சொன்னா சரிதாண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
அண்ணே : தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!]]]

நன்றி தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

சரி சரி விடுங்க ...., இந்தா புடிங்க என் தீபாவளி வாழ்த்துகல]]]

நல்லாப் புடிச்சிட்டேன். நன்றிங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...
விமர்சனம் அருமை. உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த தீப திருநாள் நல்வாழ்த்துகள் அண்ணே.]]]

நன்றி ரூபன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[VANDHIYAN said...

You are totally wrong, this film is running well and your critics same like front seat person.

You have to come out this type of critic. Its very nice film, The treatment of film is very comedy way . if you know malayalm well you can understand.

i hope your next critic should be in right view.]]]

படம் நன்றாக ஓடினால் எனக்கும் சந்தோஷம்தான் ஸார்..

நானும் நிறைய மலையாளப் படங்களை பார்த்திருக்கிறேன். இதன் ட்ரீட்மெண்ட் என்னைப் பொறுத்தவரையில் சாதாரணமானது.. ஒரு சிலருக்குப் பிடிக்கலாம்.! தப்பில்லை..!

தங்களுடைய வெளிப்படையான பேச்சுக்கு எனது நன்றிகள்..!

Arun Kumar said...

அண்ணே தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!
தோற்று போன அதுவும் எதுவும் தெரியாமல் காப்பி அடித்தே பிழைப்பை ஓட்டும் கமல் படத்துக்கு எல்லாம் விமர்சனம் தேவையா??

Unknown said...

சானக்யனுக்கு இது ஈடாகாது என்றாலும்.. ஒரு நல்ல விசயத்துக்காக கமல் ஒத்துகொண்டிருப்பார் என நினைக்கிறேன் ..

உண்மைத்தமிழன் said...

[[[Arun Kumar said...

அண்ணே தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

தோற்று போன அதுவும் எதுவும் தெரியாமல் காப்பி அடித்தே பிழைப்பை ஓட்டும் கமல் படத்துக்கு எல்லாம் விமர்சனம் தேவையா??]]]

எவ்வளவோ பார்த்தாச்சு.. இதையும் பார்த்திருவோமே..? என்ன குறைஞ்சு போச்சு..?

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
சாணக்யனுக்கு இது ஈடாகாது என்றாலும் ஒரு நல்ல விசயத்துக்காக கமல் ஒத்துக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன்.]]]

இதையேதான் நானும் நினைக்கிறேன் செந்தில்..!

சதீஷ் said...
This comment has been removed by a blog administrator.
உண்மைத்தமிழன் said...

சதீஷ் ஸார்..

உங்களுடைய பி்ன்னூட்டத்தில் சில வார்த்தைகள் எனக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே நீக்கி விட்டேன்..!