ஹெல்மெட் அவசியமா..?

30-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 28-ம் தேதி முதல் சென்னையில் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது மீண்டும் நடைமுறைக்கு வந்துவிட்டது..!

சென்ற 2007-ம் ஆண்டு இதே மாதத்தில்தான் இந்த ஹெல்மெட் சட்டம் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டது. அப்போது பின் சீட்டில் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டியது அவசியம் என்று உணர்த்தப்பட்டது. ஹெல்மெட் விற்பனையும் சூடு பிடிக்கத் துவங்கியது..! கிட்டத்தட்ட சென்னையில் இருக்கும் வாகன ஓட்டிகளில் முக்கால்வாசி பேர் ஹெல்மெட்டை வாங்கிவிட்டார்கள்..! ஹெல்மெட் விற்பனையாளர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டுதான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் அப்போது பேச்சு வந்தது. இப்போது அம்மா ஆட்சி என்பதால் யாரும் இப்படியொரு கோணத்தில் யோசிக்காமல் கள்ள மெளனம் சாதிக்கிறார்கள்..!

அப்போது முதல் ஒரு மாத காலத்திற்கு கட்டாயமாக்கியவர்கள் பின்பு வர வர மாமியார் கழுதையானாள் என்ற கதையாக கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்..! பொதுமக்களின் சீற்றம், எரிச்சல்.. பிள்ளைகள், பைகள், இவற்றுடன் கூடுதலாக ஹெல்மெட்டையும் சுமக்க வேண்டியிருக்கிறதே என்று நடுத்தர வர்க்கம் நற, நறவென பற்களைக் கடித்தது கோபாலபுரத்தை எட்டியதால், கொஞ்சம் நீக்குப் போக்குடன் நடந்து கொள்ளும்படி காவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் மாமூல் கிடைக்காத போலீஸார் மட்டும்தான் வேறு வழியில்லாமல் இதில் கேஸ் போட்டு தற்போதுவரையிலும் காசை தேற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் கோவையில் கமிஷனர் சைலேந்திரபாபு போட்ட போட்டில், கோவைவாசிகளில் 90 சதவிகிதம்பேர் ஹெல்மெட்டுடன்தான் அலைந்து கொண்டிருந்தார்கள் என்று கேள்விப்பட்டேன்..! அப்படியொரு கமிஷனர் சென்னைக்கு கிடைக்காததற்காக தாத்தாவுக்கு எனது நன்றிகள்..!

இப்போது ஆத்தா வந்து திரிபாதி சென்னை கமிஷனராகப் பதவியேற்றவுடன் யாரிடம் நல்ல பெயர் எடுக்க நினைத்தாரோ தெரியவில்லை.. அமுங்கிக் கிடந்த ஹெல்மெட் சட்டத்தைத் தூசி தட்டி கையில் எடுத்துவிட்டார்.


 
முதல் நாளான சனிக்கிழமையன்று ஹெல்மெட் அணியாதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.  அக்கறையோடு ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி அனுப்பி வைத்தார்கள். இன்று முதல் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். முதலில் 100 ரூபாய் அபராதம் என்றார்கள். இப்போது வெறும் 50 ரூபாய்தானாம்..! இரண்டாவது முறை பிடிபட்டால் லைசென்ஸ் ரத்து என்றார்கள் முன்பு.. இப்போது அந்தர்பல்டி.. “யார் அப்படிச் சொன்னது..? தப்பான நியூஸ்..” என்கிறார்கள்..! மக்களிடையே எரிச்சலை சம்பாதிக்கக் கூடாது என்பதில் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கிறார்கள் போலும்..!

இந்த ஹெல்மெட் அணியும் கட்டாயச் சட்டத்தைப் பற்றிய எனது கருத்தினை 2007-ம் வருடம் மே மாதம் 29-ம் தேதியே வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவாக, "என் சாவைத் தடுக்க இவர்கள் யார்..?" என்கிற தலைப்பில் எனது தளத்தில் வெளியிட்டிருந்தேன். 

அதன் லின்க் இது  : http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_29.html 

அதன் மறுபதிப்பு மீண்டும் உங்களுக்காக இங்கே :

May-29, 2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே,

சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் அனைவரும் தவறாமல் கேட்கின்ற கேள்வி 1. கலைஞர் டிவி எப்ப வரும்? 2. ஹெல்மெட் வாங்கிட்டீங்களா? என்பதுதான்.

இதில் முதல் கேள்விக்கான பதிலாக சேனல் துவங்கப்படும் தேதியை சொல்லிவிட்டாலும், அது எந்த ரூபத்தில் வரும் என்பது தெரியாததால் இது தொடர்பான துணைக் கேள்விகள் எழத்தான் செய்யும். அதை இப்போதைக்கு விட்டுவிடுவோம். அடுத்த கேள்வியான ஹெல்மெட்டை பார்ப்போம்.

'இனிமேல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மட் அணிய வேண்டும்..' என்ற உத்தரவின் மூலம் தமிழக அரசும், காவல்துறையும் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. "விபத்தில் இறப்பவர்கள் பலரும் பின்னந்தலையில் அடிபட்டுத்தான் இறக்கின்றனர். தலையில் ஹெல்மட் அணிந்திருந்தால் இந்தச் சாவிலிருந்து தப்பிக்கலாம்.." என்கிறார்கள் காவல்துறையினர்.

பைக்கில் செல்லும்போது விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் மிக அதிகமாக தலையில்தான் அடிபடுகிறார்கள் என்கிறார்கள். காரணம் என்ன? பின்னால் வரும் வண்டி மோதினாலோ அல்லது இடித்துக் கொண்டு சென்றாலோ விழும் போது, உடல் பின்நோக்கித்தான் செல்லும். அது உடல் இயல்பு. அறிவியல் உண்மை. இதற்கு எந்த மருத்துவரிடமும் ஆலோசனை கேட்க வேண்டாம்.

கீழே விழுகிறான். தலையில் அடிபடுகிறது. ரத்தம் தலைக்குள்ளேயே சிந்தி உறைந்து போகிறது. இதன் விளைவாய் கோமா ஸ்டேஜுக்கு சென்று சில நாட்கள் 'இழு, இழு..' என்று இழுத்துவிட்டு அவன் குடும்பம் கையில் வைத்திருக்கின்ற பணம் முழுவதையும் கரைத்த பிறகு, சப்தமில்லாமல் 'விதியின் வெற்றி'யுடன் இறந்து போகிறார்கள். சிலர் பிழைத்துக் கொள்கிறார்கள். சிலர் வருடக்கணக்காக படுக்கையில் படுக்கிறார்கள்.

இவையெல்லாம் எப்படி நிகழ்ந்தது என்று சொல்லி யாரும் உண்மையை வெளிக்கொணர முடியாது. அந்தச் சமயத்தில் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கும் போல.. நடந்துவிட்டது. அவ்வளவுதான்.. இது நம்மை நாமே தேற்றிக் கொண்டு, துக்கத்தை மறக்க நாம் பயன்படுத்தும் வாக்கியங்கள்.

தமிழ்நாட்டில் சென்ற ஐந்து வருட காலத்தில் நடந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்தோரில் தலையில் அடிபட்டு இறந்தவர்கள் 5 சதவிகிதத்தினருக்கும் குறைவுதான். இப்படித்தான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட காவல்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிகமான விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் பெரும்பான்மையானவை.. கார் மற்றும் வேன்கள், பஸ், லாரி மோதல், ரயில்வே கிராஸிங்கை கடக்க முயலும்போது ரயில்களுடன் பிற நான்கு சக்கர வாகனங்கள் மோதுதல்.. இவற்றின் மூலம் மொத்தமாக ஜனங்களை 'மேலே' அனுப்புவது... இப்படித்தான் கொத்து, கொத்தாக மரணங்கள் நிகழ்கின்றன. நிகழ்ந்திருக்கின்றன.

இவற்றில் புதிய கண்டுபிடிப்பாக சென்ற ஆண்டு டாடாசுமோ வேன் மற்றும் மாருதி காரில் பயணம் செய்யும்போதுதான் நிறைய விபத்துக்களும், மரணங்களும் நேரிடுகின்றன என்று அந்தக் கார்களைத் தயாரிப்பு நிர்வாகத்தினருக்கு கண்டன அறிக்கையெல்லாம் வழங்கினார்கள் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடிய காவல்துறையினர்..

இந்த சாலை பாதுகாப்பு வாரத்தை சென்னையின் மூலை, முடுக்கெல்லாம் தெருத்தெருவாகக் கொண்டாடியபோது இதை பேச்சுக்கு பேச்சு சொன்னவர்கள், இப்போது திடீரென்று 'ஹெல்மெட்' என்ற பேச்சு வந்தவுடன் அந்த புள்ளிவிவரத்தையே மறந்துவிட்டார்கள். அல்லது மறைத்துவிட்டார்கள்.

ஹெல்மெட் அணியாமல் வண்டியோட்டுபவர் முதல் முறை பிடிபட்டால் 100 ரூபாய் அபராதம் என்றும், அடுத்தடுத்த முறைகள் என்றால் 300 ரூபாய் அபராதம் என்றும், தொடர்ந்தால் ஓட்டுநர் உரிமை ரத்தாகும் என்றும் காவல்துறை உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது.

அதோடு வண்டியின் பின்னால் அமர்ந்து செல்பவரும், கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டுமாம். 4 வயது குழந்தைக்கு மேற்பட்டவர்களுக்கும் கட்டாயம் ஹெல்மெட் அவசியம் என்று 'இந்த தேவாதி தேவர்கள்' சொல்லிவிட்டார்கள். "இனி எந்தக் காலனும் உங்களை அணுகமாட்டான். நாங்கள் உங்களைக் குடும்பத்தோடு காப்பாற்றுவோம்.." என்கிறார்கள் காவல்துறையினர்.

எல்லாம் சரி.. விபத்துக்கள் நடப்பதற்கு யார் காரணம்? மனிதத் தவறுகள்தானே. விபத்தில் பாதிக்கப்படும் இருவரில் ஒருவர்தான் அந்த மீறலைச் செய்திருப்பார். அவரிடம் கேட்டால் "போய்விடுவார் என்றுதான் நான் நினைத்தேன்.." என்பார். அடிபட்டவரிடம் கேட்டால் "அவன்தான் நான் கிராஸ் செய்வதற்குள் மோதி விட்டான்.." என்பார்.

இது முதல் வகை விபத்துக்கள்.. இரண்டாம் வகை விபத்துக்கள்.. ரோடு. சாலைகள் சரியில்லாமல் பல்லை இளித்துக் கொண்டிருப்பதற்கு யார் காரணம்?

ரோட்டோரமாக இருக்கின்ற கடைகளை 'விரிவுபடுத்துகிறோம்' என்று சொல்லி நாள்கணக்கில் மணலையும், செங்கல்லையும் ரோட்டோரமாக கொட்டி வைக்கிறார்கள். சாப்பிடக்கூட நேரமில்லாமல் அரக்கப் பரக்க ஓடிக் கொண்டிருப்பவனுக்கு கல்லும், மண்ணுமா ஒரு விஷயம்.. ஒடித்து, ஒடித்து திரும்பும்போது ஸ்லிப்பாகி கீழே விழுகிறான்.. அடிபடுகிறான். 'ஆயுசு கெட்டியாக' இருந்தால் பிழைப்பான். இல்லையெனில் 'டிக்கெட்டு'தான்..

ஆனால் இதற்கான வழியை ஏற்படுத்தி வைத்திருப்பது யார்? இந்த இடத்தில் விபத்து ஏற்பட்டது எதனால்? மணல் கொட்டியிருப்பதினால்தானே.. அதை தடுத்தால்தான் என்ன?

அரசியல்வாதிகளுக்கு கை அரித்தால் எப்படியெல்லாம் காசு பார்க்க வேண்டுமோ அப்படியெல்லாம் பணம் பண்ணத் தயங்க மாட்டார்கள். வானமும், பூமியும் சும்மாதான கிடக்குது.. ஆண்டவனோட இடம்தானே.. மக்களோடது இல்லையே..? மக்களுடைய இடத்தையே நம்ம 'மாமியார் வீட்டு இடம்'ன்னு சொல்றோம்.. கண்ணுக்குத் தெரியாத ஆண்டவனைப் பத்தி யாருக்கு என்ன கவலை..? 'ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே' என்பதைச் சொல்லாமல் சொல்லி அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும், அள்ள ஆரம்பித்ததுதான் ஆற்று மணல் கொள்ளை.

ஒரு நாளைக்கு ஒரு மணல் லாரி கண்டிப்பாக இருபத்தைந்து டிரிப் அடிக்க வேண்டும். மணல் அள்ளும் இடத்திலிருந்து மணலை கொட்டப் போகும் இடம்வரைக்கும் உள்ள இடம் எத்தனை கிலோ மீட்டராக இருந்தாலும், டிரிப்ஷீட் புல்லாக வேண்டும். அப்போதுதான் கட்சிக்காரர்கள், ஆட்சியாளர்கள், காண்ட்ராக்ட் எடுத்தவர்கள்.. என அனைவருமே பணம் பார்க்க முடியும்.

இந்த மணல் அள்ளும் விஷயத்தில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தமிழகத்தையே சுரண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள். இதில் இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்றில்லை.. எல்லாக் கட்சி அரசியல் நாய்களும், ஒன்றாகவே கூட்டணி வைத்து கொள்ளையடித்து வருகிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் சாலை விபத்துக்களில் இறந்து போனவர்கள் பட்டியலை எடுத்துப் பாருங்கள். அதில் 80 சதவிகிதம் பேர் இந்த மணல் லாரிகளால் தாக்கப்பட்டு இறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இதற்கு என்ன தீர்வு சொல்வார்கள் காவலர் திலகங்கள்.

"அவர்கள் பணக்காரர்கள், ஆட்சியாளர்கள். ஆளுவதற்காகவும், வாழ்வதற்காகவுமே அவதாரம் எடுத்தவர்கள். நீ சாதாரண மிடில் கிளாஸ்.. எங்களைச் சந்தோஷப்படுத்த மட்டுமே உனக்கு அனுமதி.. நீ சந்தோஷப்படுவதை பற்றி நினைத்துக்கூடப் பார்க்காதே..." என்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

இன்றுவரை ஆட்சி மாறி, வேறு ஆட்சி வந்தாலும்கூட மணல் கொள்ளையும் இதன் விளைவாய் மணல் லாரி மோதி விபத்துக்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை எந்தக் கனவான் வந்து தடுப்பானாம்..?

இப்போது ஹெல்மெட்டை கொடுத்துவிட்டு போலீஸ் சொல்வது இதைத்தான்.. "அவர்கள் இடிப்பார்கள். அடிப்பார்கள். உன் தலையில் ஹெல்மெட் இருக்கு. உயிர் போகும் அபாயம் இல்லை. காயத்தோடு பிழைத்துக் கொள்வாய்.. பொழைச்சுப் போ.. போ.." இதுதான் காவல்துறை நமக்குச் சொல்லும் செய்தி..

அடுத்தது நம் ஊர் சாலைகள் இருக்கும் லட்சணம். ஒரு வருடத்திற்கு சாலைப் பராமரிப்பில் மட்டும்தான் நமது அரசியல்வாதிகள் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். இல்லாத இடத்தில் ரோடு போட்டதாக பில் போடுவார்கள். பணம் சாங்ஷன் ஆகிவிடும்.. அந்த ரோடு எங்கே இருக்கிறது என்று நீங்கள் 'நாஸா'விடம் சொல்லித்தான் தேட வேண்டும்.

இருக்கின்ற நல்ல சாலைகளிலும் மேற்கொண்டு 'பராமரித்தோம்' என்று சொல்லி பில் போடுவார்கள். இதற்கான செங்கல்லும், மணலும் அவரவர் வீடுகளுக்குப் போய்விடும். பணத்தையும் பங்கு போட்டுக் கொள்வார்கள். நாமும் எதுவும் தெரியாதது போல் அதே சாலையில் நடப்போம்.

ஒரே சாலைக்கு ஒரே ஆண்டில் மூன்று முறை பராமரிப்பு செய்ததாக பில் போடுவார்கள். தொலைந்தது.. அடுத்த பத்து வருட சம்பாத்தியத்தை இந்த ஒரே பில்லில் சாப்பிட்டுவிடுவார்கள் நமது அரசியல் நாய்கள்.. நாம் அதே குண்டும், குழியுமான ரோட்டில் வயிறு கலங்கிப் போய் நடக்கத்தான் வேண்டும்.

இப்போதும் சென்னை, கிண்டி தொழிற்பேட்டை சாலையைச் சென்று பாருங்கள்.. எத்தனை முறை ரோடு போடுவார்களோ தெரியாது.. அத்தனையும் ஒரு அரை மணி நேர மழைக்குக்கூடத் தாங்காது.. அடுத்த நாளே பெரிய, பெரிய பள்ளமாக உங்கள் முகம் தெளிவாகத் தெரியும் அளவுக்கு தண்ணீர் தேங்கிப் போய் தெரியும். மறுபடியும் இன்னொரு முறை கான்ட்ராக்ட், பில்.. கமிஷன்.. அப்பப்பா.. பொழைக்கத் தெரியாத நம்மை மாதிரி மனிதர்கள் மட்டுமே அதில் வண்டியை ஓட்டி சிலர் காயம்படுகிறோம்.. பலர் 'மேலே' போய்ச் சேர்கிறார்கள். இவர்களை யார் கேட்பது?

தங்களது வீடு, உறவினர்கள் வீடுகள், அமைச்சர்கள் வீடுகள் இருக்கின்ற இடங்களில் மட்டும் சாலைகளை அலங்கரித்து வைத்துக் கொள்கிறார்கள். சென்னையின் மத்திய பகுதியை மட்டும் பளபளவென்று வைத்து என்ன புண்ணியம்? மேடவாக்கம் சென்று பார்த்திருக்கிறீர்களா? ஏன் விருகம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு செல்கின்ற ரோட்டில் போய் பாருங்கள்.. குடலே கலங்கிவிடும்.. அந்த அளவிற்கு 'அற்புதமாக' உள்ளது.

வெளிநாடுகளில் இருக்கும் சாலைகளைப் பற்றி கேட்கும்போதும், திரைப்படங்களில் அவற்றைப் பார்க்கும்போதும் நமக்கு கொடுத்து வைச்சது அவ்ளோதான் என்றுதான் தோன்றுகிறது. அங்கேயும் அரசியல் இருக்கிறதே.. ஆட்சிதானே நடக்கிறது.. அங்கு மட்டும் எப்படி? முகமே தெரியுமளவுக்கு பளாபளா என்று ரோடு..? பாவம் அவர்கள்.. கமிஷன் வாங்கத் தெரியாத 'பகுத்தறிவில்லாத' முட்டாள் அரசியல்வாதிகள்.. என்று பளிச்சென்று சொல்லிவிடலாம்.

ரோடு பராமரிப்பு, சாலை வசதி, உள் கட்டமைப்பு முறையாக இல்லாமை இப்படி அடுக்கடுக்கான வசதிக் குறைவுகளை ஏற்படுத்தி வைத்துக் கொண்டு "விபத்தினால் காயம் ஏற்படாமல் தவிர்த்து விடுங்கள்.." என்று வெட்கம்கெட்டத்தனமாக கூவுகிறார்களே கேடுகெட்ட அரசியல்வாதிகள்... இவர்களையெல்லாம் என்ன செய்வது?

முதலில் விபத்தே ஏற்படாமல் இருக்க என்ன வழி என்று யோசிக்கலாமே..? யாருக்குமே கமிஷன் கொடுக்காமல், கமிஷன் வாங்காமல் நல்லதொரு சாலை வசதிகளை மக்களுக்கு செய்து கொடுப்போம் என்ற அக்கறை இந்த மானங்கெட்ட அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் உண்டா?

"இதெல்லாம் எதற்கு? அந்த அக்கிரமக்காரர்கள் என்றைக்குத் திருந்தியிருக்கிறார்கள்? நீங்கள் என்ன எழுதினாலும் அவர்களுக்கு உரைக்காது.. நீங்க உங்க வாழ்க்கையைப் பாருங்க.. வாழ்க்கைல ஒரு முறைதானே.. வாங்கிருங்களேன்.." என்கிறார்கள் சிலர்.

சரி வாங்கிக் கொள்கிறேன். தலையில் மாட்டிக் கொள்கிறேன்.. சாவே வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்..?

ஒரு மனிதன் இறப்பே வராமல் வாழ்ந்தே தீர வேண்டும் என்று எண்ணினால் முதலில் சாவு தன்னை நெருங்கிவிடாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் எப்படி..? முதலில் சாவு அவனை எப்போது நெருங்கும் என்பது அவனுக்குத் தெரியுமா..? பிறகு எப்படி அவனது சாவை அவனே தள்ளிப் போடுவது..? தடுப்பது..?

சாவு எப்படியிருந்தாலும் எந்தவொரு ஜீவராசிக்கும் வந்தே தீரும். அதைத் தடுக்க யாருக்கும் சக்தி இல்லை என்னும் 'பகுத்தறிவு' உள்ள மனிதன், காலம் காட்டும் திசையில் அது போகும்போக்கிலேயே போய்க் கொண்டிருப்பான். சாவின் மீது பயமில்லாமல், தைரியமாக அதனைச் சந்திக்கும் துணிச்சலுள்ளவன், அது எப்போது வேண்டுமானாலும் வரட்டும் என்பான்.

பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருந்தாலும், காலன் அழைக்காமல்விடப் போவதில்லை. 80 வயதில் இமயமலையில் ஏறினாலும், அழைக்கின்ற காலம் இல்லையெனில், அப்போதும் அழைக்க மாட்டான் காலன். அது அவரவர் வினைப்பயன் என்பது இறை நம்பிக்கையுள்ள அனைவருக்கும் தெரியும்.

சாதாரணமாக சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது தவறி கீழே விழுந்து செத்தவனும் இருக்கிறான். 80-வது மாடியிலிருந்து தவறி விழுந்து, உயிர் பிழைத்தவனையும் காண்கிறோம். இரண்டுமே அதிசயம்தான்.. ஆச்சரியம்தான். ஆனால் நடந்திருக்கிறதே..

நிற்க.. விபத்துக்கள் ஏற்படுவதும் வாழ்க்கையில் சகஜம்தானே. விபத்து என்பதே தற்செயலாக நடப்பதுதான். இந்த விபத்தால் ஒருவன் வாழ்க்கை கதை முடிகிறது என்றால் அவன் காலன் வசம் போய்விட்டான் என்று பொருள்.

"இல்லை. இல்லை.. காலனை வெல்வோம்.. காப்பாற்ற ஆயுதம் உண்டு. அணிந்து கொள்ளுவோம்.." என்று மனிதர்களாகிய நாம் அவ்வப்போது கூக்குரலிடுகிறோம். காரணம், நமக்குள் இருக்கும் வாழ்க்கையின் மீதான ஆசை. அப்படி ஒரு ஆசைதான் இந்த ஹெல்மெட் மேட்டர்.

அதிலும், வாழ்ந்து கிழித்தது போதும். போய்ச் சேரத் தயாராக இருக்கிறேன் என்ற நினைப்பில் வெறும் பூதஉடலை மட்டுமே வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கும் இந்த 'உண்மைத்தமிழனைப்' போல பல கோடி பேர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் காப்பாற்றி வைத்து யாரிடம் நல்ல பெயர் எடுக்கப் போகிறார்கள்?

கடைசியாக,

இதைப் போட்டுக் கொண்டு வண்டியில் செல்கிறோம். விபத்து ஏற்பட்டால் சாவே வரக்கூடாது. வந்தால் அதற்கு முழுப் பொறுப்பையும் காவல்துறையினர் ஏற்றுக் கொள்வார்களா? அப்போது வந்து, "இது அவன் விதி.. கதை முடிஞ்சிருச்சு.. எமதர்மன் பின்னாடியே 'ஒளி வேகத்துல' வந்து தூக்கிட்டான்.." அப்படி.. இப்படின்னு கதை விடக்கூடாது..

என்ன செய்வார்கள்-சொல்வார்கள் காவல்துறையினர்..?

39 comments:

ரிஷி said...

:-)

புதிய பாமரன் said...

கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல், குறுக்கே பாயும் ஆட்டோக்கள், சைக்கிள்கள், திடுமென ஓடும் பாத சாரிகள், தடாலெனத் திரும்பும் மா நகர பேருந்துகள், முண்டும் குழியுமான சாலைகள், திறந்து கிடக்கும் சாக்கடைகள்....

இத்தனையும் சமாளித்து இருசக்கன வாகன ஓட்டுனர் தப்பித்து தப்பித்து ஓட்ட வேண்டும். இவ்வாறு ஓட்டுவதற்கு தனித் திறமை வேண்டும். 'ரியர் வியூ மிர்ரர்' வழியாக பின்னால் வருபவர்களைப் பார்ப்பது, சப்தம், எஞ்சின் இறைச்சல் ஆகியவற்றை வைத்து, இடம் வலம் எனத் திரும்பிப் பார்த்து ஓட்டுவது...

இவ்வாறு ஓட்டினால் தான் நம் உயிருக்கு ஆபத்தில்லாமல் சேரவேண்டிய இடம் போய்ச் சேரலாம்.

இந்த இலட்சணத்தில் ஹெல்மெட் என்பது வாகன ஓட்டுனரின் கவனத்தை சிதைப்பதாகவே உள்ளது. ஹெல்மெட் போட்டுக்கொண்டவரின் 40% 'வியூ' மறைக்கப்பட்டு விடுகிறது. சத்தம் சரியாகக் கேட்க முடியாததால், இடமும் வலமும் திரும்பிப் பார்க்க முடியாமல் விபத்து...

இந்த ஹெல்மெட் விவகாரமெல்லாம் 'ஹை-வே' பிரயாணத்துக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம். அல்லது வெளினாட்டு போக்குவரத்து விதிகளுக்கு மிகஸ் சரியாய்ப் பொருந்திவரலாம்.

இந்திய நகரப் போக்குவரத்து நிலைமைகளுக்கு, ஹெல்மெட் என்பது என்னைப் பொருத்தவரை 'நமது தலைமேலேயே எமனைக் கூட்டிக்கொண்டு போவதுதான்!'

ஹெல்மெட் விவகாரத்தில் மறு பரிசீலனை செய்வதுதான் மக்களின் உயிருக்கு பாதுகாப்புத் தருவதாக அமையும்!

Anonymous said...

2009- ம் ஆண்டு ஒரு விபத்து நடந்தது.
இடம்:கோடம்பாக்கம் பாலம்(மாநகராட்சிக்கு சொந்தம்)
பலியானவர்:ஹெல்மெட் அணிந் திருந்த இருசக்கர வாகன ஓட்டி(மாநகராட்சி மேற்பார்வையாளர்)
பலிவாங்கியது:லாரி(மாநகராட்சி ஒப்பந்தத்தில் பணியாற்றும் நீல்மெட்டல் நிறுவனத்தின் லாரி)
ஒரே ஒற்று
மை-மாநகராட்சி.

Nimal said...

ஹெல்மெட் போடுவது வழக்கமாக உள்ள ஒரு நாட்டில் இருப்பதால் எனக்கு உங்கள் பிரச்சினையை புரிந்து கொள்ள முடியவில்லை.

//இதைப் போட்டுக் கொண்டு வண்டியில் செல்கிறோம். விபத்து ஏற்பட்டால் சாவே வரக்கூடாது. வந்தால் அதற்கு முழுப் பொறுப்பையும் காவல்துறையினர் ஏற்றுக் கொள்வார்களா?//

எங்கள் ஊரில் பொது விபத்து மருத்துவசேவை அரசாலேயே இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் அவ்வாறான விபத்துக்களால் ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் நோக்கம் அரசுக்கு இருப்பது எமக்கு நியாயமாகவே படுகிறது. அதனால் இங்கு யாரும் ஹெல்மெட் போடுவதை இடையூறாக கருதுவதில்லை.

ஆனாலும் உங்கள் ஊர் நிலைமையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

Adriean said...

நிமல்-NiMaL said..
உங்கள் ஊர் நிலைமையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

தமிழ் நாட்டுகாரர்கள் விளையாட்டுதனமானவர்கள். (உண்மைத்தமிழனை தவிர்த்து) உண்மை நிலவரங்களை ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டார்கள். உங்களால் ஒரு போதும் அவர்களை புரிந்து கொள்ள முடியாது. இதற்க்கு ஒரு உதாரணம் மட்டுமே ஹெல்மெட் விடயம்.

அருள் said...

உண்மைத்தமிழனின் உளறல் - ஹெல்மெட் அவசியமா?

http://arulgreen.blogspot.com/2011/05/blog-post_301.html

ராஜ நடராஜன் said...

அருள் கிட்ட பத்த வைச்சதை இங்கேயும் சொல்லாட்டி தலைக்கு ஹெல்மெட் போடாத மாதிரியே ஒரு பீலிங்:)


//அருள்!உண்மைத் தமிழனின் கருத்து அரசு செயல்படும் முறையில் வந்த விரக்தி என நினைக்கிறேன்.ஆனால் அவர் வாதத்தில் நியாயமில்லை என உங்களால் கூற முடியுமா?

அவரது பதிவின் பின்னூட்டத்தில் ஹெல்மெட் அணிவதால் சாலையின் வாகன சப்தம்,பார்க்கும் நிலையின் கோணங்கள் மறைக்கப்படுவது போன்றவையும்,முக்கியமாக தமிழக தட்ப வெட்ப நிலைக்கு ஹெல்மெட் முகமூடி சரிப்பட்டு வராது என்பதோடு இந்தக் குறைகளுக்கு மாற்று வழிகளைக் கண்டு பிடித்து ஹெல்மெட் அணிவது அவசியம்.//

ஒரு வாசகன் said...

மஹதீரா - மாவீரன் விமர்சனம் எப்போ????? வழமைபோல் உங்கள் விமர்சனத்திற்க்காகவே படம் பார்க்காமல் காத்திருக்கின்றேன்

Anonymous said...

தலைக் கவசம் என்பது மிகவும் அவசியம் என்பேன். வாகனம் செலுத்துவோர் மட்டுமல்ல, வாகனத்தில் செல்வோர் அனைவருக்கும் தலைக் கவசம் மிகவும் அவசியம். தலைக் கவசம் ஏன் ? விபத்து ஏற்படும் போது CRITICAL HEAD COLLISION-ஐத் தவிர்க்கவே .... !!!

அடுத்தது - மிதிவண்டியில் செல்வோரும் கூட தலைக் கவசம் அணிதல் மிகவும் அவசியமானது .. குறிப்பாக மெயின் ரோடுகளில் செல்லும் மிதிவண்டி ஓட்டுநர்கள் கூட தலைக் கவசம் போடுவது அவசியம் என்பேன்.

நமது நகரங்களில் குறைவுப் பாடே.. சீரற்ற சாலைகளும், உச்சக்கட்ட நெருக்கடியுமே ஆகும்.. இதனையும் சீர் செய்தால் வாகன விபத்துக்கள் பெரிதளவுக் குறையும்.

சில முக்கிய சாலைகளை கட்டண சாலைகளாக மாற்றும் பட்சத்தில் வாகன நெருக்கடிகளை மேலும் குறைக்கலாம் .. சீரற்ற சாலைகளை சீர் படுத்துதலும் அவசியம்...

எது எப்படியானாலும் - தலைக் கவசம் என்பது மிகவும் அவசியமான ஒன்று .. அது சிறுக் குழந்தைக்கு கூட புரியும் .. நம்மவர்களுக்கு மட்டும் புரியாது இருப்பது வியப்பே !

ConverZ stupidity said...

true tamilan உங்க ப்ளாக் இப்போல்லாம் லோட் ஆவதுக்கு தாமதமாகுது

ConverZ stupidity said...

நானும் வாழ்கைய வெறுத்துட்டேன் true tamilan. தீங்கு எனக்கு விளைவிக்கும்றது தெரிஞ்சும் சிலவற்றை செஞ்சிருக்கேன்; அதே சமயம் மத்தவங்கள செய்யுரதிலேர்ந்து தடுத்திருக்குறேன். நீங்க என்னடானா பொறுப்பே இல்லாம இந்த மாதிரி அந்த வெறுப்புக்கு கட்டுரை வடிவம் குடுக்குறீங்க. Didn't expect such a behaviour from you.

துளசி கோபால் said...

இரு சக்கர வாகனத்தில் கைக்குழந்தை, சின்னப்பிள்ளைகள் ரெண்டு பேர், கணவன் மனைவி இப்படி முழுக்குடும்பமும் போறதை உடனே நிறுத்தணும்.

ரெண்டு அடல்ட் போனால் பரவாயில்லை. ரெண்டு பேரும் தலைக்கவசம் கட்டாயம் அணியணும்.

அதெப்படி..... என் உயிர் நான் போக்கிக்குவேன்னு இருப்பீங்களா? அப்படிப் போக்கிக்க விரும்புவர்கள் சாலைக்கு ஏன் வர்றீங்க? உங்க சாவுக்கு அடுத்தவன் மேல் பழி போடவா?

:(

ram said...

சரி நான் போட்டு கொள்கிறேன் ஆனால் நாளை நான் கோயில் செல்கிறேன் என்றால் ஹெல்மெட் ஐ எங்கு கொண்டு
வைப்பது
நான் கொள்ளிடம் சென்று குளிக்க செல்லும் போது யார் அதை பாதுகாப்பார்
இது மிக கொடுமை யானது
இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஹெல்மெட் வாங்க யார் ஆல் முடியும்
ஆர்டர் போட்டுபவர்கள் கார்களில் செல்பவர்கள் அவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் தெரியாது
காய்கறி வாங்கிகொண்டு அதை பிடிபதா அல்லது ஹெல்மெட்டை பிடிபடா
நடுதர மக்களிளின் கஷ்டகளை உணருங்கள்
இதை எல்லாம் உணர வேண்டும்

ஸ்ரீநாராயணன் said...

Apologies for the strong words..

"Enakku ennamo inda post loosu thanama theriyudu".

more than 50% of road accident deaths are due to head injury(2 wheeler) and that can be avoided simply by wearing helmet.

I know it will be very uncomfortable in summer and heat. But if we are able to bear the heat and go out why cant we bear helmet for the safety.

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

:-)]]]

அப்பாடா.. முதல் முறையா எதுவுமே பேசாம போறாரு அண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[புதிய பாமரன் said...

'ரியர் வியூ மிர்ரர்' வழியாக பின்னால் வருபவர்களைப் பார்ப்பது, சப்தம், எஞ்சின் இறைச்சல் ஆகியவற்றை வைத்து, இடம் வலம் எனத் திரும்பிப் பார்த்து ஓட்டுவது...

இவ்வாறு ஓட்டினால்தான் நம் உயிருக்கு ஆபத்தில்லாமல் சேர வேண்டிய இடம் போய்ச் சேரலாம்.
இந்த இலட்சணத்தில் ஹெல்மெட் என்பது வாகன ஓட்டுனரின் கவனத்தை சிதைப்பதாகவே உள்ளது. ஹெல்மெட் போட்டுக்கொண்டவரின் 40% 'வியூ' மறைக்கப்பட்டு விடுகிறது. சத்தம் சரியாகக் கேட்க முடியாததால், இடமும் வலமும் திரும்பிப் பார்க்க முடியாமல் விபத்து...

இந்த ஹெல்மெட் விவகாரமெல்லாம் 'ஹை-வே' பிரயாணத்துக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம். அல்லது வெளினாட்டு போக்குவரத்து விதிகளுக்கு மிகஸ் சரியாய்ப் பொருந்தி வரலாம்.

இந்திய நகரப் போக்குவரத்து நிலைமைகளுக்கு, ஹெல்மெட் என்பது என்னைப் பொருத்தவரை 'நமது தலை மேலேயே எமனைக் கூட்டிக் கொண்டு போவதுதான்!'

ஹெல்மெட் விவகாரத்தில் மறு பரிசீலனை செய்வதுதான் மக்களின் உயிருக்கு பாதுகாப்புத் தருவதாக அமையும்!]]]

மிக்க நன்றி நண்பரே..! உமது கருத்துக்கள் நடுநிலையான கருத்துக்கள். ஏற்றுக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[suji said...

2009- ம் ஆண்டு ஒரு விபத்து நடந்தது.

இடம்: கோடம்பாக்கம் பாலம் (மாநகராட்சிக்கு சொந்தம்)

பலியானவர் : ஹெல்மெட் அணிந்திருந்த இரு சக்கர வாகன ஓட்டி (மாநகராட்சி மேற்பார்வையாளர்)

பலி வாங்கியது : லாரி(மாநகராட்சி ஒப்பந்தத்தில் பணியாற்றும் நீல்மெட்டல் நிறுவனத்தின் லாரி)

ஒரே ஒற்றுமை - மாநகராட்சி.]]]

தூக்கணும்னு முடிவாயிருச்சுன்னா அவன் எலி பொந்துல போய் ஒளிஞ்சிருந்தால்கூட தப்பிக்க முடியாது.. இதெல்லாம் ஜூஜூபி சுஜி..!

உண்மைத்தமிழன் said...

நிமல்-NiMaL said...

ஹெல்மெட் போடுவது வழக்கமாக உள்ள ஒரு நாட்டில் இருப்பதால் எனக்கு உங்கள் பிரச்சினையை புரிந்து கொள்ள முடியவில்லை.

எங்கள் ஊரில் பொது விபத்து மருத்துவ சேவை அரசாலேயே இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் அவ்வாறான விபத்துக்களால் ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் நோக்கம் அரசுக்கு இருப்பது எமக்கு நியாயமாகவே படுகிறது. அதனால் இங்கு யாரும் ஹெல்மெட் போடுவதை இடையூறாக கருதுவதில்லை. ஆனாலும் உங்கள் ஊர் நிலைமையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.]]]

சாதக, பாதகங்கள் நிறையவே இருக்கு. குடும்பத்தோடு செல்பவர்களுக்கு இதுவொரு கூடுதல் சுமை. அத்தோடு விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க என்ன வழியோ அதைச் செய்யாமல், விபத்து ஏற்பட்டால் நீங்கள் எப்படி தப்பிப்பது என்று சொல்லிக் கொடுப்பது நியாயமில்லை என்பது பெருவாரியான மக்களின் கருத்து..!

உண்மைத்தமிழன் said...

[[[Chandran said...

தமிழ்நாட்டுகாரர்கள் விளையாட்டுதனமானவர்கள். உண்மைத்தமிழனை தவிர்த்து)

உண்மை நிலவரங்களை ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டார்கள். உங்களால் ஒரு போதும் அவர்களை புரிந்து கொள்ள முடியாது. இதற்கு ஒரு உதாரணம் மட்டுமே ஹெல்மெட் விடயம்.]]]

சாலை விதிகளை மதிக்கவே நமது மக்களுக்கு இன்னமும் மனமில்லை. இதுவே பல விபத்துக்களுக்கு முதல் காரணம்..! இதனைச் செய்தாலே போதும்..! அப்புறம் மேல்நாடுகளில் இருப்பது போன்ற முழுமையான சாலை வசதிகள்.. இவை இரண்டும் சரியானால் ஹெல்மெட்டே தேவையில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[அருள் said...

உண்மைத்தமிழனின் உளறல் - ஹெல்மெட் அவசியமா?

http://arulgreen.blogspot.com/2011/05/blog-post_301.html]]]

மிக்க நன்றி அருள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

அருள்கிட்ட பத்த வைச்சதை இங்கேயும் சொல்லாட்டி தலைக்கு ஹெல்மெட் போடாத மாதிரியே ஒரு பீலிங்:)


//அருள்! உண்மைத் தமிழனின் கருத்து அரசு செயல்படும் முறையில் வந்த விரக்தி என நினைக்கிறேன். ஆனால் அவர் வாதத்தில் நியாயமில்லை என உங்களால் கூற முடியுமா?

அவரது பதிவின் பின்னூட்டத்தில் ஹெல்மெட் அணிவதால் சாலையின் வாகன சப்தம், பார்க்கும் நிலையின் கோணங்கள் மறைக்கப்படுவது போன்றவையும், முக்கியமாக தமிழக தட்ப வெட்ப நிலைக்கு ஹெல்மெட் முகமூடி சரிப்பட்டு வராது என்பதோடு இந்தக் குறைகளுக்கு மாற்று வழிகளைக் கண்டு பிடித்து ஹெல்மெட் அணிவது அவசியம்.//]]]

தோள் கொடுத்து உதவியமைக்கு மிக்க நன்றிகள் நடராஜன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு வாசகன் said...

மஹதீரா - மாவீரன் விமர்சனம் எப்போ????? வழமைபோல் உங்கள் விமர்சனத்திற்க்காகவே படம் பார்க்காமல் காத்திருக்கின்றேன்.]]]

விமர்சனத்திற்காக காத்திருக்க வேண்டாம். அவசியம் சென்று பாருங்க. நன்றாகத்தான் உள்ளது..!

உண்மைத்தமிழன் said...

[[[இக்பால் செல்வன் said...
நமது நகரங்களில் குறைபாடே.. சீரற்ற சாலைகளும், உச்சக்கட்ட நெருக்கடியுமே ஆகும்.. இதனையும் சீர் செய்தால் வாகன விபத்துக்கள் பெரிதளவுக் குறையும். சில முக்கிய சாலைகளை கட்டண சாலைகளாக மாற்றும் பட்சத்தில் வாகன நெருக்கடிகளை மேலும் குறைக்கலாம். சீரற்ற சாலைகளை சீர்படுத்துதலும் அவசியம்...]]]

இதை மொதல்ல சரி செய்யச் சொல்லுங்க..! அப்புறமா தலைக்கவசத்தைப் பத்தி யோசிக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ConverZ stupidity said...

true tamilan உங்க ப்ளாக் இப்போல்லாம் லோட் ஆவதுக்கு தாமதமாகுது.]]]

விளம்பரம் போட்டிருக்கேண்ணே. அதுனால இருக்கும்.. கொஞ்சம் பொறுத்துக்குங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ConverZ stupidity said...

நானும் வாழ்கைய வெறுத்துட்டேன் true tamilan. தீங்கு எனக்கு விளைவிக்கும்றது தெரிஞ்சும் சிலவற்றை செஞ்சிருக்கேன்; அதே சமயம் மத்தவங்கள செய்யுரதிலேர்ந்து தடுத்திருக்குறேன். நீங்க என்னடானா பொறுப்பே இல்லாம இந்த மாதிரி அந்த வெறுப்புக்கு கட்டுரை வடிவம் குடுக்குறீங்க. Didn't expect such a behaviour from you.]]]

தலைக்கவசம் அணியச் செய்வதோடு அரசு தனது பொறுப்புகளில் இருந்து நழுவிவிடக் கூடாது.. ரோடு அப்படித்தான் இருக்கும். நீதான் பார்த்து ஓட்டணும்னு சொல்றது நியாயமில்லை ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

இரு சக்கர வாகனத்தில் கைக் குழந்தை, சின்னப் பிள்ளைகள் ரெண்டு பேர், கணவன் மனைவி இப்படி முழுக் குடும்பமும் போறதை உடனே நிறுத்தணும்.]]]

டீச்சர்.. இது முடியற காரியமா..?
எங்க போனாலும் குடும்பத்தை ஆட்டோல கூட்டிட்டுப் போனா பட்ஜெட் தாங்காது..! நம்ம மக்கள்ஸ் பாவமில்லையா..?

[[[ரெண்டு அடல்ட் போனால் பரவாயில்லை. ரெண்டு பேரும் தலைக்கவசம் கட்டாயம் அணியணும்.
அதெப்படி..... என் உயிர் நான் போக்கிக்குவேன்னு இருப்பீங்களா? அப்படிப் போக்கிக்க விரும்புவர்கள் சாலைக்கு ஏன் வர்றீங்க? உங்க சாவுக்கு அடுத்தவன் மேல் பழி போடவா..? :(]]]

ஹி.. ஹி.. ரோடு நல்லாயிருந்தா பாதி விபத்துகள் குறையும்.. பொதுமக்கள் மனம் வைத்து டிராபிக் ரூல்ஸ்களை பின்பற்றினாலும் மிச்சம், மீதியும் குறையும்..! இதையெல்லாம் செய்யாம என் தலைல கவசத்தை ஏத்தி வைச்சுட்டு போடான்னா எப்படி டீச்சர்..?

உண்மைத்தமிழன் said...

[[[ram said...

சரி நான் போட்டு கொள்கிறேன் ஆனால் நாளை நான் கோயில் செல்கிறேன் என்றால் ஹெல்மெட் ஐ எங்கு கொண்டு வைப்பது
நான் கொள்ளிடம் சென்று குளிக்க செல்லும் போது யார் அதை பாதுகாப்பார். இது மிக கொடுமையானது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஹெல்மெட் வாங்க யார் ஆல் முடியும்
ஆர்டர் போட்டுபவர்கள் கார்களில் செல்பவர்கள் அவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் தெரியாது
காய்கறி வாங்கிகொண்டு அதை பிடிபதா அல்லது ஹெல்மெட்டை பிடிபடா நடுதர மக்களிளின் கஷ்டகளை உணருங்கள். இதை எல்லாம் உணர வேண்டும்.]]]

சட்டம் போடுறவங்க யாரும் மிடில் கிளாஸ் இல்லையே..? அவங்கள்லாம் அப்பர் கிளாஸ்.. கார்ல பறக்குறவங்க.. அதுனால அவங்க அப்படித்தான் செய்வாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீநாராயணன் said...

Apologies for the strong words..
"Enakku ennamo inda post loosu thanama theriyudu".
more than 50% of road accident deaths are due to head injury(2 wheeler) and that can be avoided simply by wearing helmet.
I know it will be very uncomfortable in summer and heat. But if we are able to bear the heat and go out why cant we bear helmet for the safety.]]]

சரி.. சரி.. நீண்ட நாள் உசிரோட இருந்து இந்த நாட்டை வாழ வைக்கணும்னு நினைக்கிறவங்க எல்லாம் ஹெல்மெட்டை போட்டுக்கிட்டு அலைங்கப்பா..!

துளசி கோபால் said...

ஊஹூம்.... முதல்லெ அவனை நிறுத்தச் சொல்லு அப்புறம் நான் நிறுத்தறேன் மாதிரியா? சரிப்படாது.


அந்தச் சாலைகள் சீரில்லாம இருப்பதாலும் யாரும் விதிகளைக் கடைப்பிடிக்காததாலும்தான்..... இந்த தலைக்கவசம் இன்னும் அவசியமாகுது.

விபத்து ஏற்பட்டால்.... இது தலையைக் காக்கும்தானே? இல்லே செஞ்ச 'தருமம் தலை காக்கும்' என்று விடப்போறீங்களா?

நியூஸியில் சாலைகள் அருமை. மக்களும் சாலை விதிகளை மீறுவதில்லை. ஆனால் சைக்கிள் ஓட்டிகள் கூடக் கட்டாயம் தலைக்கவசம் போடணும். சின்னப்பிஞ்சுகள் மூணு சக்கர சைக்கிள் ஓட்டி விளையாடும்போதுகூட தலைக்கவசம் போடுதுன்னா பாருங்க.

Anonymous said...

https://docs.google.com/document/d/129woQgQzpc6l6WuwOKdgqG7lb370Pn9b3fXqYoIfjJ4/edit?hl=en_US#

i like these 67 murphy's laws out of total 1000 murphy's laws....d....

Anonymous said...

என்ன பாஸ் ! இவ்ளோ தான் உங்க அறிவா எனப் படுகின்றது. ரோடு நல்லாருக்கும் போதே ஹெல்மெட் அவசியம் என்கின்றோம்... ரோடு நல்லா இல்லை - அதனால் ஹெல்மெட் அணிய மாட்டோம் என சொல்வது உச்சக்கட்ட நகைச்சுவையாக இருக்கின்றது. ரோடு மோசமாக இருந்தால் தான் ஹெல்மெட் மேலும் அவசியப்படும். HEAD COLLISION-ஆல் தான் பாதி மரணங்கள் விபத்து ஏற்படும் போது நிகழ்கின்றன...

ரோடு சரி செய்வது தேவை தான் - அதற்காக ஹெல்மெட்டேப் போட மாட்டேன் என சொல்லுவது முட்டாள் தனமாகப் படுகின்றது .... !!!

அடுத்தத் தலைமுறை இளையவரிடம் இதுக் குறித்துப் பேசிப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்குப் புரிய வைப்பார்கள் !!!

ஆபாசமாக இருந்தாலும் இந்த உவமையைக் கூறிவிட்டுப் போகின்றேன்

'' AIDS நோய்க்கு மருந்தைக் கண்டுப் பிடியுங்கள் - அப்புறம் ஆணுறை போடுகின்றோம் என்பது போலிருக்கு - ரோடுகளை சரி செய்யுங்கள் ஹெல்மெட் போடுவோம் என்றக் '' கூற்று ....

Anonymous said...

//'' AIDS நோய்க்கு மருந்தைக் கண்டுப் பிடியுங்கள் - அப்புறம் ஆணுறை போடுகின்றோம் என்பது போலிருக்கு - ரோடுகளை சரி செய்யுங்கள் ஹெல்மெட் போடுவோம் என்றக் '' கூற்று ....//
ஹல்லோ இப்படி எல்லாம் சொன்னால் அப்புறம் உங்களுக்கு ஃபான் கிளப் ஆரம்பிக்க வேண்டிய நிலை வந்திடும். நெத்தி அடி.

இந்தப் பதிவை பார்த்திட்டு எனக்கு செம கடுப்பு அங்கிள். உங்கள எப்படி திட்டறதுன்னு தெரியல்ல. வர வர உங்க போக்கு சரியில்லை. சொல்லிட்டேன்.

அப்புறம் பதில் எழுதினேன். பதிவாகப் போடவே அது பெரிசு. இங்க போட முடியல்ல. பதிவில போட்டுட்டு லிங்க் கொடுக்கறேம். ஒழுங்கா படிச்சிடுங்க.

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

ஊஹூம்.... முதல்லெ அவனை நிறுத்தச் சொல்லு அப்புறம் நான் நிறுத்தறேன் மாதிரியா? சரிப்படாது.

அந்தச் சாலைகள் சீரில்லாம இருப்பதாலும் யாரும் விதிகளைக் கடைப்பிடிக்காததாலும்தான் இந்த தலைக்கவசம் இன்னும் அவசியமாகுது.

விபத்து ஏற்பட்டால் இது தலையைக் காக்கும்தானே? இல்லே செஞ்ச 'தருமம் தலை காக்கும்' என்று விடப் போறீங்களா?

நியூஸியில் சாலைகள் அருமை. மக்களும் சாலை விதிகளை மீறுவதில்லை. ஆனால் சைக்கிள் ஓட்டிகள் கூடக் கட்டாயம் தலைக்கவசம் போடணும். சின்னப்பிஞ்சுகள் மூணு சக்கர சைக்கிள் ஓட்டி விளையாடும்போதுகூட தலைக்கவசம் போடுதுன்னா பாருங்க.]]]

டீச்சர் உங்க ஊரோட இதை ஒப்பிடாதீங்க.. ஹெல்மெட் போட்டா சவுண்டு பாதிக்குப் பாதி காணாமல் போயிருது. பின்னாடி வர்றவங்களை வாட்ச் பண்ண முடியலை.. சட்டுன்னு திரும்பும்போதுதான் நிறைய விபத்துக்கள் நடக்குது. இதனால பல அசெளகரியங்கள்தான் மிச்சமே ஒழிய.. சவுகரியம் அது ஒண்ணே ஒண்ணுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[d said...

https://docs.google.com/document/d/129woQgQzpc6l6WuwOKdgqG7lb370Pn9b3fXqYoIfjJ4/edit?hl=en_US#

i like these 67 murphy's laws out of total 1000 murphy's laws....d....]]]

வாழ்க வளர்க..

உண்மைத்தமிழன் said...

[[[இக்பால் செல்வன் said...

என்ன பாஸ்! இவ்ளோதான் உங்க அறிவா எனப் படுகின்றது. ரோடு நல்லாருக்கும் போதே ஹெல்மெட் அவசியம் என்கின்றோம். ரோடு நல்லா இல்லை - அதனால் ஹெல்மெட் அணிய மாட்டோம் என சொல்வது உச்சக்கட்ட நகைச்சுவையாக இருக்கின்றது. ரோடு மோசமாக இருந்தால்தான் ஹெல்மெட் மேலும் அவசியப்படும். HEAD COLLISION-ஆல் தான் பாதி மரணங்கள் விபத்து ஏற்படும்போது நிகழ்கின்றன.

ரோடு சரி செய்வது தேவைதான் - அதற்காக ஹெல்மெட்டே போட மாட்டேன் என சொல்லுவது முட்டாள்தனமாகப் படுகின்றது!

அடுத்தத் தலைமுறை இளையவரிடம் இதுக் குறித்துப் பேசிப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்குப் புரிய வைப்பார்கள் !!!

ஆபாசமாக இருந்தாலும் இந்த உவமையைக் கூறிவிட்டுப் போகின்றேன்

''AIDS நோய்க்கு மருந்தைக் கண்டுப் பிடியுங்கள் - அப்புறம் ஆணுறை போடுகின்றோம் என்பது போலிருக்கு - ரோடுகளை சரி செய்யுங்கள் ஹெல்மெட் போடுவோம் என்ற கூற்று.]]]

சந்தோஷம்.. நன்றி.. புரிந்தது.. மிக்க மகிழ்ச்சி..!

உண்மைத்தமிழன் said...

[[[அனாமிகா துவாரகன் said...

//'' AIDS நோய்க்கு மருந்தைக் கண்டுப் பிடியுங்கள் - அப்புறம் ஆணுறை போடுகின்றோம் என்பது போலிருக்கு - ரோடுகளை சரி செய்யுங்கள் ஹெல்மெட் போடுவோம் என்றக் '' கூற்று ....//

ஹல்லோ இப்படி எல்லாம் சொன்னால் அப்புறம் உங்களுக்கு ஃபான் கிளப் ஆரம்பிக்க வேண்டிய நிலை வந்திடும். நெத்தி அடி.

இந்தப் பதிவை பார்த்திட்டு எனக்கு செம கடுப்பு அங்கிள். உங்கள எப்படி திட்டறதுன்னு தெரியல்ல. வர வர உங்க போக்கு சரியில்லை. சொல்லிட்டேன்.

அப்புறம் பதில் எழுதினேன். பதிவாகப் போடவே அது பெரிசு. இங்க போட முடியல்ல. பதிவில போட்டுட்டு லிங்க் கொடுக்கறேம். ஒழுங்கா படிச்சிடுங்க.]]]

போடும்மா.. வந்து பார்க்குறேன்..! எப்படி எழுதினாலும் எனது கருத்தை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை..!

abeer ahmed said...

See who owns mwsl.org.cn or any other website:
http://whois.domaintasks.com/mwsl.org.cn

abeer ahmed said...

See who owns a-stat.org or any other website.

abeer ahmed said...

See DNS records for blogspot.com
http://dns.domaintasks.com/blogspot.com