கலைஞர் டி.வி-க்குப் பணம் வந்த பாதை...!

04-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கலைஞர் டி.வி-க்கு பணம் கை மாறியதை 'ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தை விசாரிக்கும் சி.பி.ஐ. மிக சீரியஸ் கண்ணோட்டத்தில் பார்க்கிறது…!
 
'கடனாக வாங்கினோம். கடனை அடைத்துவிட்டோம்.’ என்று முதல்வர் கருணாநிதியும் கலைஞர் டி.வி-யும் சொல்லி வந்தாலும், இந்தப் பணம் வந்த வழிமுறைகள் அத்தனையையும் அம்பலப்படுத்தி உள்ளது சி.பி.ஐ.


இந்த விவகாரம் வெளியில் வந்ததுமே கலைஞர் டி.வி-யின் இயக்குநர் சரத்குமார் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

'2007-08 ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறையால் ஒதுக்கப்பட்ட 2-ஜி அலைக்கற்றை விவகாரத்துக்கும், 2009-ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியுக் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.

கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 2009-ம் ஆண்டு சினியுக் என்ற நிறுவனம், பங்குகள் பரிவர்த்தனைக்காக முன் பணம் கொடுத்து இருந்தது.

ஆனால், இரண்டு நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2009 ஆகஸ்ட்வரை பெறப்பட்ட 200 கோடி ரூபாயைக் கடனாகப் பாவித்து, மொத்தப் பணமும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தால் திருப்பித் தரப்பட்டுவிட்டது. அந்தத் தொகைக்கான வட்டியாக 31 கோடி ரூபாய் தரப்பட்டது.

இந்தப் பரிவர்த்தனை வருமான வரித் துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் செலுத்தப்பட்டது. இந்த மொத்தப் பரிவர்த்தனையும் சட்டத்துக்கு உட்பட்டு, உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகமே!’ - இதுதான் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்!

இதற்கிடையே, 'சன் டி.வி-யில் இருந்த தனது பங்குகளைப் பிரித்து வாங்கிய வகையில், 100 கோடி ரூபாய் என் மனைவி தயாளுவுக்குக் கிடைத்தது. அதைத்தான் கலைஞர் டி.வி-யில் அவர் முதலீடு செய்தார்.' என்று பணத்தின் ஒரு பகுதிக்கு முதல்வர் கருணாநிதி திடீரென்று ஒரு கணக்கு சொல்லியிருக்கிறார்.

மாறாக, 'கலைஞர் டி.வி-க்குப் பணம் வந்த விவகாரத்தில் நிச்சயமாக முறைகேடு நடந்து உள்ளது' என்று ஆதாரங்களுடன் சி.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையில் கூறியுள்ளது!

'அதாவது, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில், 2008 டிசம்பர் மாத இறுதியில், ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த எட்டிஸாலட் நிறுவனம் ரூபாய் 3,228 கோடியும் ஜெனெக்ஸ் எக்ஸிம் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூபாய் 381 கோடியும் முதலீடு செய்து பங்குகளை வாங்கின.

ஆ.ராசாவிடம் இருந்த செல்வாக்கின் மூலம் ஸ்பெக்ட்ரம் உரிமங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, மேற்கண்ட நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்றதற்கு நன்றிக் கடனாக, ஸ்வான் நிறுவனம் பணத்தை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்தது!’ என்கிறது சி.பி.ஐ.

ஸ்வான் டெலிகாமை சேர்ந்த ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா இருவரும் நடத்தும் மற்றொரு நிறுவனம்தான் டிபி ரியாலிட்டி. இது, பங்குச் சந்தையில் பதிவு பெற்ற நிறுவனம். இந்த டிபி ரியாலிட்டி, டைனமிக்ஸ் ரியாலிட்டி என்ற மற்றொரு நிறுவனத்திலும் பங்குதாரராக இருக்கிறது. இந்த டைனமிக்ஸ் நிறுவனத்துக்கு, கட்டுமானத்தில் ஈடுபடும் இரண்டு துணை நிறுவனங்களும் உண்டு.

இப்படி சிலந்தி வலையாகப் பரவி இருக்கும் நிறுவனங்களில், ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசீப் பால்வா, ராஜீவ் அகர்வால் போன்றவர்கள் இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். இப்படிப் பல பெயர்களில் நிறுவனங்கள் தொடங்கி... அதன் பெயர்களில் கடன்கள் வாங்கி, அந்தப் பணத்தை வேறு காரணங்களுக்குத் திசை திருப்பிவிடுவார்கள்.

இதில் டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம்தான் 200 கோடி ரூபாயை கலைஞர் டி.வி-க்கு வெவ்வேறு தேதிகளில் வழங்கியது என்று சொல்லும் சி.பி.ஐ., இந்தப் பணமும் நேரடியாகச் செல்லவில்லை என்​கிறது.

'இந்த டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம், 209 கோடியை குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனத்துக்குக் கடனாகக் கொடுக்கிறது. 2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட்வரை வெவ்வேறு தவணைகளில் இந்த பணத்தைக் கொடுத்து உள்ளார்கள் (இது பற்றி தனியாக ஒரு பெட்டிச் செய்தி).

ஷாகித் பால்வாவின் சகோதரர் ஆசிப் பால்வாவும் ராஜீவ் அகர்வாலும் இதில் இயக்குநர்கள். இந்த நிறுவனம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வியாபாரங்களுக்காகப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் தனது பெயரை குஸேகான் ரியாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்று மாற்றிக் கொண்டு, கடன் வாங்குவதும் மற்ற கம்பெனி​களுக்கு கடன் கொடுப்பதுமான பணிகளைச் செய்தது.

இதன்படி, டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 209 கோடியில், 200 கோடியை சினியுக் நிறுவனத்துக்கு குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனம் கொடுத்தது.

அதே 2008 டிசம்பர் 23 முதல் 2009 ஆகஸ்ட் 7 வரையிலான கால கட்டங்களில் கிட்டத்தட்ட ஏழு தவணைகளில் டைனமிக்ஸ் மாதிரியே குஸேகானும் கொடுத்தது.

இதையடுத்து சினியுக் நிறுவனம் இதே காலகட்டத்தில் (23.12.2008 முதல் 7.8.2009) ஆறு தவணைகளில் இந்த 200 கோடியை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்து உள்ளது...’ என்கிறது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை. பணம் நேரடியாகக் கொடுக்கப்படாமல்,  சுற்றி வளைத்து கணக்குக் காட்டப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. பல்வேறு ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

1. குஸேகான் நிறுவனம், சினியுக் நிறுவனத்துக்குக் கொடுத்த 200 கோடியை, அப்படியே 2009 ஆகஸ்ட் மாதத்துக்குள் கலைஞர் டி.விக்கு, சினியுக் மீடியா நிறுவனம் கொடுத்துவிடுகிறது. இதே 2009 அக்டோபர் மாதம்தான், 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். போட்டு விசாரணையும் தொடங்கியது.

அதனால், சினியுக் மற்றும் குஸேகான் நிறுவனங்கள் சுதாரித்துக்கொண்டு அவசரமாக சில ஒப்பந்தங்கள் போட்டன. 27.1.2010 அன்று குஸேகான் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசீப் பால்வாவும் ராஜீவ் அகர்வாலும், சினியுக் இயக்குநர் கரீம் முரானியோடு ஒப்பந்தம் போடுகின்றனர்.

இதன்படி, சினியுக் நிறுவனத்தில் டி.பி. குரூப்பைச் சேர்ந்த குஸேகான் நிறுவனம் 49 சதவிகிதப் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததுடன் (ஒரு பங்கு 510 என்ற விலையில் 1,22,000 பங்குகளை வாங்கியது), 200 கோடியை கடனாக மாற்றிக் கொள்ளவும் ஓர் ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் போட்டுள்ளன.

முரானி குடும்பத்தினர் பல ஹிந்திப் படங்களை எடுத்தவர்கள். 'சினிமாத் தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத குஸேகான் நிறுவனம் சினியுக் நிறுவனத்துக்கு ஏன் கடன் கொடுக்க வேண்டும்?’ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது சி.பி.ஐ. 

2. சினியுக் நிறுவனத்துக்கும் கலைஞர் டி.வி-க்கும் இடையே உருவான ஒப்பந்தங்கள் 'வேடிக்கை'யாக இருப்பதையும் சி.பி.ஐ. குறிப்பிடுகிறது.

கலைஞர் டி.வி. ஒரு தனியார் லிமிடெட் நிறுவனம். இந்த நிறுவனம் 2009 மார்ச் 31 அன்று தாக்கல் செய்யப்பட்ட இருப்பு நிலை தொகைக் குறிப்பில் 31,82,21,171 பணத்தை உதிரி மற்றும் இதரக் கடன்கள் மூலம் வந்தவை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த 31 கோடியில் 25 கோடி சினியுக் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. ஆனால், சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததற்கு அடுத்த ஆண்டு (31.3.2010) கலைஞர் டி.வி. தாக்கல் செய்த இருப்பு நிலைத் தொகைக் குறிப்பில் சினியுக் நிறுவனம் கொடுத்த பணத்தைக் கழித்துவிட்டு, மீதி உள்ள சுமார் 6 கோடி மட்டுமே காட்டப்பட்டது.

இதே ஆண்டில் மேலும் பல கோடிகளை சினியுக் நிறுவனம் கலைஞர் டி.வி-க்கு கொடுத்து இருக்க, இதே பேலன்ஸ் ஷீட்டில் பழைய 25 கோடியையும் சேர்த்து உதிரி மற்றும் கடன்கள் மூலம் 214,86,54,109 வந்ததாகக் காட்டி உள்ளனர்.

அதாவது யார் பணம் கொடுத்தார்கள், இந்த 214 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் இல்லை. கலைஞர் டி.வி. இயக்குநர்களான கனிமொழியும் சரத்குமாரும் திட்டமிட்டு இந்த மாற்றங்களை மேற்கொண்டனர் என்று சி.பி.ஐ. சொல்கிறது.

3. மேலும், கொடுத்த பணத்துக்கும் வாங்கிய பணத்துக்கும் கணக்குக் காட்ட, ஒரு சில ஒப்பந்த வளையங்களுக்குள் இரு நிறுவனங்களும் வலுக்கட்டாயமாக வந்தன.

19.12.2008 அன்று சினியுக் நிறுவனமும் கலைஞர் டி.வி-யும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டதாம். அதன்படி, சினியுக் நிறுவனம் அளித்துள்ள நிதியினைக் கொண்டு, கலைஞர் டி.வி-யின் பங்குகளை சுமார் 35 சதவிகிதம்வரை வாங்கிக் கொள்ளும் என்றும், ஒருவேளை இந்த பங்குப் பரிவர்த்தனை திட்டப்படி நிறைவேறவில்லை என்றால், இதைக் கடனாக மாற்றிக் கொள்ளும் என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த ஒப்பந்தங்களைப் போட்டுள்ள சரத்குமார், மற்ற இயக்குநர்களின் சார்பிலும், அவரே முடிவு எடுத்துள்ளார். ஆனால் சி.பி.ஐ., 'சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஒப்பந்தத்தைக்கூட இவர்கள் போடவில்லை. குறைந்தபட்சம் முத்திரைத் தாளில்கூட இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. வாங்கிய பணத்துக்கு நியாயம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, இப்படி ஓர் ஒப்பந்தத்தை தயாரித்து, வழக்கின் புலனாய்வைத் திசை திருப்புகிறார்கள்.

இது 2008-ல் போடப்பட்ட உண்மையான ஒப்பந்தம் என்றால், 2009-ம் ஆண்டு அறிக்கையில் இதையும் சொல்லியிருக்க வேண்டும். 2009 மார்ச் மாதம்வரை சினியுக் நிறுவனத்திடம் இருந்து 25 கோடியை கலைஞர் டி.வி. வாங்கி இருந்தது. இந்தத் தொகையைப் பங்குத் தொகையாகவோ அல்லது பங்கு விண்ணப்பத் தொகையாகவோ காட்டியிருக்கலாம். ஆனால், அந்த ஆண்டு அறிக்கையில் கடன் கணக்கில்தான் இந்த 25 கோடி வரவு வைக்கப்பட்டு உள்ளது. 2-ஜி விசாரணை தொடங்கப்பட்ட பின்னரே 2010-ம் ஆண்டு அறிக்கையில், தப்பித்துக் கொள்ளும் வகையில் கணக்குகளை  மாற்றினார்கள்...’ என்கிறது.

4. பணத்தைத் திருப்பிக் கொடுத்த விவகாரத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் சி.பி.ஐ., 'கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்ட பணம் ஒரு வருடமாக அப்படியே இருந்தது. ஆ.ராசாவை நாங்கள் அழைத்து விசாரிக்கத் தொடங்கியவுடன், 200 கோடியை கலைஞர் டி.வி. அவசரம் அவசரமாகத் திருப்பிக் கொடுத்ததாகச் சொல்கிறது.

2010 டிசம்பர் 24 அன்று ஆ.ராசா சி.பி.ஐ. முன்பு ஆஜராகி விசாரணைக்கு உட்பட்ட தினத்தில்தான், கலைஞர் டி.வி. வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தொடங்கியது. டிசம்பர் 24 முதல் 2011 பிப்ரவரி 3 வரை எட்டு தவணைகளில் 200 கோடியை கலைஞர் டி.வி. கொடுத்துவிட்டது.

ஆ.ராசாவை பல முறை அழைத்து விசாரித்து பின்னர், பிப்ரவரி 2 அன்று கைது செய்தோம். இந்த சமயத்தில் பணத்தை முழுமையாகத் திருப்பிக் கொடுத்துவிட்டது கலைஞர் தொலைக்காட்சி.

பணத்தைக் கொடுத்த அதே தேதிகளில், சினியுக் நிறுவனமும் குஸேகான் நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்து இருக்கிறது. இறுதியில் குஸேகானும் இந்த 200 கோடியை வட்டியோடு டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்தது. இரண்டு நிறுவனங்களைத் தாண்டி பணம் வருவதும் போவதும் பலவிதமான தொடர்புகளை உறுதிப்படுத்துகிறது!’ என்கிறது.

இந்த விவகாரத்தில், கலைஞர் டி.வி. சுமார் 30 கோடியை வட்டியாக சினியுக் நிறுவனத்துக்கும், சினியுக் நிறுவனம் சுமார் 25 கோடியை குஸேகான் நிறுவனத்துக்கும், குஸேகான் சுமார் 23 கோடியை டைனமிக்ஸ் நிறுவனத்துக்கும் வட்டியாகக் கொடுத்து உள்ளன.

கடனைத் திருப்பிக் கொடுக்க கலைஞர் டி.வி. தனது விளம்பர வருமானத்திலும் மற்றும் அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் (70 கோடி) இந்தியன் வங்கியில் ஓ.டி-யாக கடன் வாங்கியும் சமாளித்ததாகக் கூறப்படுவதை குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. மிக விவரமாக ஆராய்ந்து இருக்கிறது.


''கிரிமினல் வழக்குகளைப் பொறுத்தவரை, தவறான வழிகளில் ஆதாயம் அடைந்ததற்கான முகாந்திரங்கள் இருப்பதைக் காட்டினாலே, குற்றம் நிரூபணம் ஆகிவிடும். ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் ஆகியோர் தவறான வழிகளில் ஆதாயம் அடைந்ததற்கான சாட்சியங்கள் ஏராளமாக உள்ளன!'' என்கிறார் வழக்கின் விசாரணை அதிகாரி விவேக் பிரியதர்ஷினி.

வரும் மே 6 அன்று, செம்மொழி விருது வழங்கும் நிகழ்ச்சி ராஷ்டிரபதி பவனில் நடக்கிறது. அதே தினம் கோர்ட்டில் ஆஜராகப் போகும் கனிமொழிக்கு சி.பி.ஐ. கொடுக்க இருக்கும் விருது எப்படி இருக்கும் என்பதை இந்தியாவே எதிர்பார்க்கிறது!


நன்றி : ஜூனியர்விகடன்-மே 8, 2011

20 comments:

அகில் பூங்குன்றன் said...

ME THE FIRST///

சக்தி பிரகாஷ் said...

ஹலோ அகில் நான் ஏற்கனவே துண்டு போட்டாச்சுங்க.. நீங்க என் சீட் ல உக்காந்திருக்கீங்க. எந்திரிங்க சார்.

pichaikaaran said...

பேரங்கள் எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும்

IKrishs said...

பக்கம் பக்கமாய் சிறப்பாய் சொந்தமாய் எழுதும் நீங்கள் தொடர்ந்து ஜூனியர் விகடனை காபி-பேஸ்ட் செய்வது ஏனோ!
மற்ற விகடன் காபி -பேஸ்ட் பதிவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் ,யாரேனும் உங்களை பாராட்டினால் அதை மறுத்து சம்பந்தப்பட்ட பத்திரிக்கையை குறிப்பிடுவது ![மற்ற இடங்களில் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் ஹி ஹி என ஏற்று கொள்கிறார்கள்!]
உரிமையுடன் - வோட்டும், "இதை நிறுத்துங்க " ன்னும் சொல்லிகிறேன்!

அகில் பூங்குன்றன் said...

200 cr matterla thundu ellam ennanga.... perisa etachum pottinganna elunthukkalam

IKrishs said...

முந்தய வோட்டும் ,கருத்தும் உங்கள் பதிவின் தொடர் வாசகன் என்கிற உரிமையில்! :)

ராஜ நடராஜன் said...

//உரிமையுடன் - வோட்டும், "இதை நிறுத்துங்க " ன்னும் சொல்லிகிறேன்!//

ஓட்டு வேணுமின்னா சரி!

”அவங்களை” நிறுத்தச் சொல்லுங்க!நான் இதை நிறுத்தறேன்னு சொல்லுங்கண்ணே:)

Unknown said...

//உரிமையுடன் - வோட்டும், "இதை நிறுத்துங்க " ன்னும் சொல்லிகிறேன்!
//
நானும் சொல்லிகிறேன்!

சுதா SJ said...

அம்மா ஆட்சிக்கு வந்ததன் தி மு கா விசயத்தில் எல்லாம் நல்ல தீர்ப்பு கிடைக்கும்,

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...

ME THE FIRST///]]]

ஓகே.. இந்தக் கொடுமைக்கு தனியா போஸ்ட் போடணும் போலிருக்கே..!

உண்மைத்தமிழன் said...

[[[Sakthi Prakash N said...

ஹலோ அகில் நான் ஏற்கனவே துண்டு போட்டாச்சுங்க.. நீங்க என் சீட்ல உக்காந்திருக்கீங்க. எந்திரிங்க சார்.]]]

சக்தி.. அகில் ஸார் பின்னூட்டத்தை போட்டுட்டு அப்புறமாத்தான் படிக்க ஆரம்பிப்பாரு. நீங்க தலைகீழ்.. அதான் பிரச்சினை..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

பேரங்கள் எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும்.]]]

ஆரம்பித்துவிட்டது பார்வையாளன். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இதில் கை தேர்ந்தவர்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்குமார் said...

பக்கம் பக்கமாய் சிறப்பாய் சொந்தமாய் எழுதும் நீங்கள் தொடர்ந்து ஜூனியர் விகடனை காபி-பேஸ்ட் செய்வது ஏனோ!
மற்ற விகடன் காபி -பேஸ்ட் பதிவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம், யாரேனும் உங்களை பாராட்டினால் அதை மறுத்து சம்பந்தப்பட்ட பத்திரிக்கையை குறிப்பிடுவது !

[மற்ற இடங்களில் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் ஹி ஹி என ஏற்று கொள்கிறார்கள்!]

உரிமையுடன் - வோட்டும், "இதை நிறுத்துங்க " ன்னும் சொல்லிகிறேன்!]]]

உங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி கிருஷ்..!

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு என்பது தேசம் சம்பந்தப்பட்டது. நம் அனைவருக்கும் பொதுவானது. அந்த வழக்கு சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் எனது பதிவில் பதிந்து வைக்க வேண்டும் என்பது எனது ஆசை..! வரும் காலங்களில் படிக்க விரும்புவர்கள் தொடர்ந்து படித்துத் தெரிந்து கொள்ளலாமே என்பதால்தான்..! புரிந்து கொள்ளுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...

200 cr matterla thundu ellam ennanga.... perisa etachum pottinganna elunthukkalam.]]]

ஹா.. ஹா.. அதுக்கெல்லாம் நமக்குக் கொடுப்பினை கிடையாது அகில்..!

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்குமார் said...

முந்தய வோட்டும், கருத்தும் உங்கள் பதிவின் தொடர் வாசகன் என்கிற உரிமையில்! :)]]]

வருகைக்கு மிக்க நன்றி கிருஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//உரிமையுடன் - வோட்டும், "இதை நிறுத்துங்க " ன்னும் சொல்லிகிறேன்!//

ஓட்டு வேணுமின்னா சரி! ”அவங்களை” நிறுத்தச் சொல்லுங்க! நான் இதை நிறுத்தறேன்னு சொல்லுங்கண்ணே:)]]]

ஆகட்டும் ராஜநடராஜன்.. இப்படியே சொல்லிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[கெக்கே பிக்குணி said...

//உரிமையுடன் - வோட்டும், "இதை நிறுத்துங்க " ன்னும் சொல்லிகிறேன்!//

நானும் சொல்லிகிறேன்!]]]

கிருஷுக்கு நான் ஏற்கெனவே பதில் சொல்லியிருக்கேன்க்கா.. ஆனாலும் தங்களுடைய அன்புக்கு மிக்க நன்றிக்கா..!

உண்மைத்தமிழன் said...

[[[துஷ்யந்தனின் பக்கங்கள் said...

அம்மா ஆட்சிக்கு வந்ததன் தி மு கா விசயத்தில் எல்லாம் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.]]]

-)))))))))))

a said...

:)....

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

:)....]]]

ஏன்..? ஒண்ணும் சொல்ல முடியலையாக்கும்..!? அதுக்குள்ள ஸ்பெக்ட்ரம் உங்களுக்கெல்லாம் போரடிச்சிருச்சா..?