கோபாலண்ணே..! ஏண்ணே.. இப்படி..?

27-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சினிமா கதாசிரியர்,  இணை இயக்குநர், அண்ணன் காந்தி கோபால் இந்த நேரத்தில் உயிரற்ற சடலமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் மார்ச்சுவரியில் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார்..!

எப்போதும் சிரித்த முகம்.. வாயைத் திறந்தால் கொட்டுகின்ற காமெடி ஷொட்டுகள்.. “இவருக்கெல்லாம் முருகன் கஷ்டத்தையே கொடுக்க மாட்டானா..? எப்படி நக்கல் விட்டுக்கிட்டே இருக்காரு..” என்று எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்திய குணமுடையவர்..

"சரவணா.. உம்முன்னு இருக்காத மூதேவி..! கொஞ்சம் சிரிச்சுத் தொலை.. கஷ்டம் வந்தாலும் தூசி தட்டினாப்புல லேசுல விடுடா.. மனசு விட்டுச் சிரி.. எல்லாம் சரியாப் போயிரும்.." என்று பார்க்கும்போதெல்லாம் அட்வைஸை அள்ளி வீசுவார்..!

எப்போதும் முரட்டு கதரில் வெள்ளை சட்டை. ஆனால் இதற்குக் கொஞ்சமும் பொருந்தா ஜீன்ஸ் பேண்ட். இதுதான் அண்ணனின் இத்தனை வருட கால யூனிபார்ம்..! தமிழ்ச் சினிமாவுலகில் 20 வருட அனுபவமுள்ளவர். பல 'பகீர்' கதைகளையும், சில 'சிலிர்ப்பான' உண்மைக் கதைகளையும் இவர் சொல்கின்றவிதமே நம்மைக் கொன்றெடுக்கும்.

தமிழ்ச் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்களின் தொடர்ச்சியான வால் போல் இருந்த காரணத்தினால், பல பிரிவுகளுக்கும், சேர்க்கைகளுக்கும் இவரே சாட்சியாக இருந்திருக்கிறார்.. அத்தனையையும் இவர் மூலமாகக் கேட்டதில் இருந்தே அண்ணனின் மேல் ஒரு மிகப் பெரும் மரியாதை..!

“ஏண்ணே.. இதையெல்லாம் புத்தகமா எழுதினா என்ன அண்ணே..? இல்லாட்டி ஏதாவது ஒரு பத்திரிகைல தொடர் கட்டுரையா எழுதலாமே?” என்று எத்தனையோ முறை கேட்டுவிட்டேன்.. “இல்ல சரவணா.. அது ரொம்பத் தப்பு.. எல்லா இடத்துலேயும் இது மாதிரி அத்தனையும் நடக்கத்தான் செய்யும். நம்மளை நம்பி கூப்பிட்டு சோறு போட்டு, தொழில் கத்துக் கொடுத்து, கூடவே வைச்சிருந்து பார்த்துக்குறாங்கன்னா அந்த நம்பிக்கையை மனிதர்களின் பலவீனத்துக்காக கெடுக்கக் கூடாது. அப்புறம் நம்மளை கெடுக்க ஒருத்தன் தானா வந்து சேருவான்.. வேணாம் விட்ரு..” என்று அலட்சியமாகச் சொல்லுவார்..!

கே.பாக்யராஜிடம் பல வருடங்கள் அசோஸியட் இயக்குநர்..! அவருடைய கடைசிப் படத்துக்குப் பின்பு கேப்டன் விஜயகாந்தின் கடைக்கண் பார்வையில் இருந்தவர். தொடர்ந்து 'மின்பிம்பங்களி்ன்' 'நையாண்டி தர்பாரு'க்கு காமெடி டிராக் எழுதினார். அப்படியே  'வீட்டுக்கு வீடு லூட்டி'க்கும் எழுத்தாளர் கூடவே இயக்குநரும் ஆனார். சின்னி ஜெயந்தை வைத்து ஒரு வருடத்திற்கு ராஜ் டிவியில் 'காமெடி தர்பார்' நடத்தினார்..! கடைசியாக தற்போதுவரையிலும் ஹலோ எஃப்.எம்.மின் அசைக்க முடியாத கதாநாயகனாக இருந்தவர். அங்கே 'அஞ்சலி அபார்ட்மெண்ட்டின்' நாடகத்திற்கு கதை, திரைக்கதை, இயக்கம் செய்து அதில் மேனேஜர் மாதவனாக நடித்தும் கொண்டிருந்தார்..!

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'மகாதீரா' என்ற திரைப்படத்தின் உண்மையான கதாசிரியர் இவர்தான்..! சினிமா பாணியில் இவரிடம் கதையை வாங்கிவிட்டு, வழக்கம்போல பட்டை நாமம் போட்டுவிட்டார்கள். திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும், பெப்ஸியிலும் புகார் கொடுத்து 3 வருடங்களாகக் காத்துக் கொண்டிருந்தார். ஒன்றும் நடக்கவில்லை..!

"விதி விட்டது போன்னு போக வேண்டியதுதான் சரவணா..! வாழ்க்கை முழுக்க பிச்சை போட வேண்டியவன்.. மொத்தமா ஒரே நாள்ல ஒருத்தனுக்குப் போட்டேன்னு நினைச்சுக்குறேன்.." என்று சென்ற மாதம் என் அலுவலகத்திற்கு வந்திருந்தபோது எனக்கே ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்..! இதோ இன்றைக்கு அந்தத் திரைப்படம் 'மாவீரன்' என்ற பெயரில் தமிழில் வெளியாகும் அதே தினத்தில், தனது உயிரை முடித்துக் கொண்டிருக்கிறார்..!

தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் நமக்கே இத்தனை கோபம் வரும்போது, அவருடைய குருநாதர் பாக்யராஜே, அதே 'மகாதீரா' படத்தின் தமிழ் டப்பிங் படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்திருக்கிறார் என்பதையும் மிக இயல்பாக தாங்கிக் கொண்டார். “மனுஷங்க அப்படித்தான் சரவணா.. விடு.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்ல்ல. எனக்கு என் பிரச்சினை.. அவருக்கு அவர் பிரச்சினை.. எல்லாரும் வாழ்க்கைல எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க..” என்று கேஷூவலாக அதனைத் தாண்டிச் சென்றவர்..!

இப்போதும் ஹலோ எஃப்.எம். வானொலி ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்கள். “அவரா ஸார்..? ஏன் ஸார்..? அவர் புரோகிராம்தான் ஸார் இங்க டாப்பு. அந்த நகைச்சுவையை விரும்பும் வானொலி நேயர்களின் எண்ணிக்கை மாதாமாதம் எகிறிக் கொண்டே போகிறது என்று சந்தோஷத்தில் இருக்கிறோம்.. அவர் ஏன் இப்படி..?” என்கிறார்கள்..!

எப்போதும் ஹாஸ்ய உணர்வுடன் வாழ்க்கையை உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தவர், இன்றைக்கு என்ன நினைத்தாரோ.. தனது மனைவியுடன் நீண்ட காலமாக இருந்த மனஸ்தாபத்தில் இப்படிச் செய்துவிட்டார்..!

அந்த நிமிடத்திற்கு முன்பாக தனது ஈமச்சடங்கிற்கு வேண்டிய பணத்தினை தனது நண்பர் ஒருவரிடத்தில் கொடுத்து வைத்திருக்கிறார். தனது மகள்கள் பெயரில் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்திருக்கிறார்.. தனது மகள்களுக்கான அடுத்த வருடத்துக்கான ஸ்கூல் பீஸ் முழுவதையும் இப்போதே கொண்டு போய் கட்டியிருக்கிறார்..! இத்தனைக்கும் மூத்த மகளின் வயது 7. இரண்டாவது மகளின் வயது 3. இளம் தளிர்கள்..! எப்படி விட்டுவிட்டுப் போக மனது வந்ததோ தெரியவில்லை..!

மனைவியை வெளியே அனுப்பிவிட்டு அவர் திரும்பி வருவதற்குள் தன் உயிரைத் தானே தூக்கிட்டு போக்கியிருக்கிறார். இதை இன்னமும் நிறைய கோடம்பாக்க நண்பர்கள் நம்ப முடியாத அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.. “அவனாவது தொங்கறதாவது..?” என்கிறார்கள்..! ஆனால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருக்கும் அவரது உடல் அதுதான் உண்மை என்கிறது..!

கோபாலண்ணே.. ஏண்ணே இப்படி..?

24 comments:

கானா பிரபா said...

:( என்னைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. நேற்று வரை அஞ்சலி அபார்ட்மெண்ட் இல் இவரின் நகைச்சுவையை ரசித்துவந்தேன்

Shankar said...

very sad to hear about the untimely end of a talented person.Though I do not know him or heard about him, I am able to relate to the manager's voice in Anjali apartmentment.
It is ironical that a comedian's end should be so tragic.
I have often observed that an extrovert's personal life is so compicated. A person who can earn a thousand friends at work and elsewhere cannot earn the spouse's appreciatuion and recognition.

They way you have written the euology to your friend is very touching.May his soul rest in peace.At least there.

காலப் பறவை said...

அன்னாரது ஆன்மா இளைப்பாரட்டும்

ohedasindia said...

கரகரப்பான குரல் “ யாருடா இது என் கேட்கவைத்தது... நேற்றுக்கூட... இந்த செய்தியோடுதான் தெரிந்துகொண்டேன்... வருந்துகிறேன் :(

M.Rishan Shareef said...

திரையில் நகைச்சுவையை வாரியிறைத்து, நேயர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குபவர்களின் வாழ்க்கை பெரிதும் மகிழ்வானதில்லை என்பதற்கு இன்னுமொரு உதாரணம் இது. அண்மையில் நடிகை ஷோபனாவின் தற்கொலையும் பெரிதும் பாதித்தது. இப்பொழுது இவர். மனதுக்கு சிரமமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

செ.சரவணக்குமார் said...

வருத்தமான செய்தி. என்னுடைய அஞ்சலிகள்.

கானா பிரபா said...

நான் வானொலி நிகழ்ச்சி செய்யும் போது உங்க பதிவைக் கண்டேன். அதிர்ச்சியோடு வீட்டுக்குச் சென்று என் மனதில் இருந்ததைக் கொட்டினேன்

மானேஜர் மாதவன் இல்லாத அஞ்சலி அப்பார்ட்மெண்ட்ஸ் http://radiospathy.blogspot.com/2011/05/blog-post_28.html

துளசி கோபால் said...

அட ராமா..........

வருத்தமா இருக்கு.

அன்னாரின் ஆன்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறேன்.

Guru said...

இன்னிக்கு கூட அஞ்சலி அபார்ட்மெண்ட் கேட்டேன்.இந்த மானேஜர் மாதவன் இண்ட்ரஸ்டிங் கேரக்டரா இருக்கணும்னு எப்பவும் நினைப்பேன். நல்லவங்களுக்கு காலம் இல்லண்ணே!!!

அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..
இனிமே மானேஜர் மாதவனின் இயல்பான நக்கல் இருக்காதே!! வருத்தங்கள்..

சசிகுமார் said...

ஆன்மா சாந்தி அடையட்டும்.

அபி அப்பா said...

அந்த ஒரு வினாடி எடுத்த மட்டமான முடிவு அந்த பிஞ்சுகளின் வாழ்கையை புரட்டி போட்டதை அவர் ஆன்மா அறியுமா? என்ன ஒரு பைத்தியகாரத்தனமான முடிவு:-(. சினி பீல்டில் இருந்தா மட்டும் போதாது. சிவாஜி நடிச்ச முதல் தேதி படம் பார்க்கனும் எல்லோரும் ஒரு முறை!

thamizhparavai said...

:(((((((((((((((

ப்ரியமுடன் வசந்த் said...

:( ஆழ்ந்த இரங்கல்கள்..!

ராஜ நடராஜன் said...

கோபால் என்பவரின் மொத்த பதிவின் சாரமும் எனக்கு புதிது.

குடும்பஸ்தன் தற்கொலைக்கு மனைவியின் மனஸ்தாபம் எனபது வாழ்வின் கொடுமை.

எனது இரங்கலும் வளரும் குழந்தைகளுக்கு அனுதாபமும்.

Anonymous said...

நையாண்டி தர்பார் மற்றும் வீட்டுக்கு வீடு லூட்டி என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சிகள் சார். அதற்குப்பின் இந்த மனிதர் இருந்தார் என்பது இப்போதுதான் தெரிந்தது. மகள்களை விட்டுச்சென்றது மிகப்பெரிய தவறு. ஆனால் அவர் மனநிலை என்னவாக இருந்திருக்குமோ. பல மர்ம மரணங்கள் தொடர்ந்து நிகழ திரை உலக கொடூரங்கள் காரணமாக இருப்பது வேதனை.

Kannan.S said...

May god give his soul peace and rest.

CS. Mohan Kumar said...

மிக வருத்தமாக உள்ளது. அவருக்கு அஞ்சலிகள்

இராஜ ப்ரியன் said...

ரொம்ப கஷ்டமா இருக்கு சார்.......
அண்ணனின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.......

khaleel said...

சிறிது குட பொறுப்பு இல்லாமல் இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு சுயநலமாக தற்கொலை செய்த மனிதனுக்கு ஏன் அனுதாபம் படுகிறிர்கள்?அவர்கள் குழந்தைகளை நினைத்து தான் வருத்தப்பட வேண்டும். என்னை கேட்டால் அப்படியே சடலத்தை ராயபெட்டா மருத்தவமனையில் விட்டு விட சொல்லுவேன்.

i recollect a dialogue from an english movie. 'crazy government. they insist on a valid license to drive a car. but they dont care whether parents are matured enough to raise a child' how true.

Muthukumara Rajan said...

All the Decisions are made in a seconds only whether good or bad.

we dont know what mad him to tokk this wrose decision.

As per blog he seems to positive person.

I think issue on maaveeran movie(professional) and his family issue(or disunderstanding)(personal) made him took this decision.

My advise is that if your are well settled and ready for the marriage then get married. Dont get married for others.

I feel very sad for him and to his young kids.

Trails of a Traveler said...

பாவம் நல்ல கலகலப்பான மனிதர்.
நீங்கள் சொன்னதைப்போல் எப்போதும் வெள்ளை கதர் சட்டை தான் அணிவார். ஒரே ஒரு நாள் மட்டும் மின்பிம்பங்களுக்கு நீல சட்டை அணித்து வந்தார், அன்று நான் அவரை செய்த நையாண்டியை எல்லோரிடமும் சொல்லி சிரித்துகொண்டிருந்தார்.

ஏன் இப்படிச்செய்தார் என்று தெரியவில்லை!!

abeer ahmed said...

See who owns web.id or any other website:
http://whois.domaintasks.com/web.id

abeer ahmed said...

See who owns referentie.nl or any other website.

abeer ahmed said...

See DNS records for blogspot.com
http://dns.domaintasks.com/blogspot.com